மணி பல்லவம் 5/11. பரிவு பெருகியது

விக்கிமூலம் இலிருந்து

11. பரிவு பெருகியது

கார்காலத்து மலைச் சிகரத்தின் இரு புறமும் மேகங்கள் படிந்தாற்போல் சுரமஞ்சரியின் நெற்றியின் மேல் இரு புறமும் சுருண்டு குழன்று சரிந்திருந்த கருங்கூந்தல் கவர்ச்சி மிகுந்த அவள் முகத்துக்குச் சோகமயமானதோர் அழகைத் தந்து கொண்டிருந்தது. ஊற்றுக் கண்களைப் போல் அவளுடைய விழிகளில் நீர் பெருகிற்று. பட்டின் மென்மையும் பவழத்தின் செம்மையும் பொருந்திய அவள் இதழ்கள் அப்போது அவனிடம் பேசுவதற்குச் சொற்களைத் தேடித் துடிப்பது போல் துடித்துக் கொண்டிருந்தன. நிலாவிலிருந்து தளிர்த்த தளிர்கள்போல் மென்மையாகவும் பொன்னிற் கொழுந்து முளைத்தாற்போல் கவரும் நிறமுடையனவாகவும் இருந்த அவள் கைவிரல்கள் வணங்குகிற பாவனையில் அவனை நோக்கிக் குவிந்தன. அந்த ஆற்றாமையை, அந்தத் தவிப்பைக் கண்டும் காணாததுபோல எப்படிக் கடந்து மேலே தன் வழியில் போவதென்று புரியாமல் இளங்குமரன் தயங்கி நின்றான். உலகத்திலுள்ள பரிசுத்தமான பூக்கள் எல்லாம் எதிரே வந்து நிற்கும் அவளுடைய உடம்பிலிருந்து மனப்பது போல் ஒரு நறுமணம் சூழ்ந்து கொண்டு கிளர்வதை இளங்குமரன் உணர்ந்தான். அந்தப் பரிமள நறுமணம் வலையைப்போல் தன்னைப் பிணித்து விட முயன்ற வேளைகளை ஒவ்வொன்றாய் நினைத்துக் கொண்டு நன்றாகத் தலைநிமிர்ந்து நிர்ப்பயமாக அவள் கண்களைச் சந்தித்தான். பின்பு வேண்டினான்.

“என்னுடைய வழியை எனக்கு விடு.”

“விட்டுவிடுகிறேன். ஆனால் அப்படி விடுவதற்குமுன் எனக்கு உங்களிடமிருந்து ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும். இந்த வழியில் நானும் உங்களோடு சேர்ந்து நடந்து வர அனுமதி அளியுங்கள். அதற்கு மனம் இல்லா விட்டால் இதே வழியில் விழுந்து சாவதற்காவது ஒப்புக் கொள்ளுங்கள். இப்படி இந்த வழியில் விழுந்து இறந்து போனால் அடுத்த பிறவியிலாவது நீங்கள் நடந்து போகிற பாதையில் புல்லாக முளைத்து உங்கள் பாதங்களில் மிதிபடுவேன். இல்லை; இல்லை. புல்லாக முளைத்தாலும் யாராவது வேரோடு பறித்து எறிந்துவிடுவார்கள். கல்லாகவே கிடந்து உங்கள் கால்களில் மிதிபட வேண்டும் நான். உங்கள் கால்கள் என்மீது மிதிபடுகிற ஒவ்வொரு முறையும் அகலிகை மேல் இராமன் திருவடி பட்டதும் நிகழ்ந்ததுபோல் எனக்கு உயிர் வரவேண்டும். உங்கள் பாதங்கள் என்மேல் படாத நேரங்களில் மறுபடி நான் உயிரற்ற கல்லாகிவிட வேண்டும்.”

“உன் ஆசை விநோதமானதாயிருக்கிறது. சாவதைவிட உயர்ந்த இலட்சியம் ஏதாவது உன் வாழ்க்கையில் உனக்கு இருக்க வேண்டும்.”

“அப்படி ஓர் இலட்சியம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அந்த இலட்சியத்திற்குப் பொருளானவருக்கு என்னைக் காண்பதற்கே அலட்சியமாயிருக்கும் போது நான் வாழ்ந்துதான் என் பயன்? உலகத்திற்கெல்லாம் அநுதாப மழை பொழிகிற அந்தக் கருணைமுகில் என்னுடைய விருப்பத்திற்கு மட்டும் வறண்டுபோகக் காரணமென்னவென்று புரியாமல் தவிக்கிறேன் நான்.”

“உனக்குப் புரியாமல் நீ தவிப்பதற்கெல்லாம் நான் எப்படி மறுமொழி கூற முடியும்?”

“இந்தத் தவிப்பு உங்களிடமிருந்து பிறந்தது. உங்களோடு இணைந்து நிறைந்துவிடக் காத்திருப்பது. உங்களுடைய புறக்கணிப்புக்கு அப்பால் சாவைத் தவிர இந்தத் தவிப்புக்கு வேறு மருந்தில்லை.”

“நான் யாரையும் புறக்கணிக்கவில்லை! என் வழியில் தடையாக நிற்க வேண்டாமென்று மட்டும் சொல்கிறேன்”

“அவனோடு மேலே பேசுவதற்குச் சொற்கள் கிடைக்காமல் கண்ணீர் பெருகும் விழிகளோடும் வணங்குவதற்காகக் கூப்பிய கைகளோடும் நின்றாள் சுரமஞ்சரி. எதிரே போவதற்கு முந்திக்கொண்டு நிற்கிற அவனுடைய கண்களையும் தோள்களையும் பார்த்து இத்தனை காலமாக அவற்றை எண்ணி அவற்றுக்காகவே தவம் செய்து வந்த தன் மனத்தின் நம்பிக்கைகள் தளரப் பெரு மூச்செறிந்தாள். கப்பல் கரப்புத் தீவில் இருண்ட மழை நாள் ஒன்றில் இந்தக் காவிய நாயகனின் பொன்நிறத் தோள்கள் மீது தலைசாய்த்து உறங்க முயன்ற வேளை நினைவு வந்தது அவளுக்கு அந்த விநாடியை வாழ்த்திக் கொண்டுதான் இத்தனை காலமாக அவள் வாழ்ந்திருக்கிறாள்.

ஒவ்வொன்றாய்த் தளர்ந்துகொண்டிருந்த தன் நம்பிக்கைகளை விட்டு விடாமல் இளங்குமரனுடைய பாதங்களுக்கு முன் பூமாலை சரிவதுபோல் முழந்தாளிட்டு அமர்ந்து கொண்டு அவள் பேசலானாள்:

“இப்போது இந்த உணர்ச்சிமயமான வேளையில் உங்கள் பாதங்களில் இடுவதற்கு வேறு பூக்கள் என்னிடம் இல்லை. என் உயிரையே பூவாகக் கருதிக் கொண்டு உங்கள் பாதங்களில் அர்ப்பணம் செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. உங்களோடு இணைந்துவிடும் ஒரே இலட்சியத்திறக்காகத்தான் இந்த உயிரும் இதன் நினைவுகளும் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. உங்களோடு இணைவதற்கு முடியாத உயிர் வாழ்க்கை எனக்கு இனி வேண்டியதில்லை. என்னுடைய இந்த உயிரைப் போக்கிக் கொள்ளுமுன் மனத்தில் இந்தக் கணத்தில் தவிக்கிற தவிப்பு ஒன்றை உங்களிடம் வெளிப் படையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டுவிட வேண்டும்.”

அவளுடைய தவிப்பு, கண்ணீர், வேதனை எல்லாவற்றையும் கண்டு தயங்கி நின்றான் இளங்குமரன். முதல் முதலாக இந்தப் பெண்ணிடமிருந்து ஓவியன் மணிமார்பன் மடல் கொண்டு வந்தபோதும், கப்பல் கரப்புத் தீவில் நெகிழ்ந்த உணர்ச்சிகளோடு இவள் நெருங்கி நின்றபோதும் தன் மனத்தில் தாழம்பூ மணம் பரப்பிய வேளைகளை நினைத்துக் கொண்டான். தன்னையே அந்தப் பெண்ணுக்கு ஆளக் கொடுப்பதைத் தவிர வேறு எந்த மருந்தினாலும் தணிக்க முடியாத அவள் வேதனையைக் கண்டு அவன் மனமும் அனுதாபப்பட்டது. ஆனால் இத்தனை காலம் வளர்த்த மனத்தை ஒரு பெண்ணின் அழகுக்கு விட்டுக் கொடுப்பதா என்று ஒர் எண்ணம் தயங்கியது. தடுத்தது. அவனுள்ளே இப்படி இந்த மனப்போராட்டம் நடந்து கொண்டிருந்த போது அவள் அவனைக் கேட்டாள்: "உங்களைச் சந்தித்த நாளிலிருந்து, நான் உங்களுக்காகச் சிறிது சிறிதாகத் தோற்றுப்போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்களா?”

“இருக்கலாம். ஆனால் உன்னை வெற்றிகொள்ள முயன்றதாகவோ வென்றதாகவோ எனக்கு நினைவில்லையே!”

“இது ஒரு விசித்திரமான தோல்வி! இந்தத் தோல்வியை எப்படி நிரூபிப்பதென்று எனக்குத் தெரியவில்லை. நான் பெண், பேதைத் தன்மை நீங்காதவள். அநுதாபத்திற்குரியவள். பிறர்மேல் அநுதாபப்படும் மனம்தான் பெரிய செல்வம் என்று நீண்ட நாட்களுக்கு முன்பு நாளங்காடிக் கூட்டத்தில் அந்தத் தொழுநோய் முதியவளைக் காப்பாற்றும்போது நீங்களே கூறினர்களே, அந்த விதமான அநுதாபத்திற்கு நான் மட்டும் பாத்திரமாக முடியாதவளா? நானும் ஒரு நோயாளிதான். எனக்கு வந்திருக்கிற நோய்க்குப் பெயர் ஆசை, வேட்கை, காதல் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். இந்த நோய்க்கு மருந்தாவதற்குக் கூசிக்கொண்டு நீங்கள் மேலே நடந்து போகத்தான் விரும்புகிறீர்களானால், உங்களைத் தடுக்கும் ஆற்றல் எனக்கில்லை. ஆனால் இந்தக் கடைசி விநாடியிலும் நான் துணிவாக இன்னொரு காரியம் செய்ய முடியும். வேறொரு விதத்தில் முயன்று உங்கள் அநுதாபத்திற்கு நானும் பாத்திரம்தான் என்பதை நிரூபிக்க முடியும்!” -

“அது எப்படியோ?”

“சொல்கிறேன், உலகத்தில் மிகவும் துன்பமான முயற்சி நம்மிடம் அன்பு செலுத்தாதவர்மேல் நாம் உயிரையே வைத்து அன்பு செய்து தவிப்பதுதான். நீங்கள் அந்தக் கூடத்தில் என் தந்தையோடு பேசிக்கொண்டிருந்தவற்றையெல்லாம் கதவோரமாக ஒதுங்கி நின்று நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். இறுதியாக நீங்கள் அவரிடம் சொல்லிய வார்த்தைகளை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். யாரை அதிகமாக வெறுக்கிறோமோ அவர்கள்மேல்கூட அன்பு செய்யத் துணிய வேண்டும். அதுதான் கருணையின் இறுதி எல்லை என்று கூறினர்களா, இல்லையா?”

“கூறினேன். ஆனால் உன்னை நான் வெறுக்கவும் இல்லை; விரும்பவும் இல்லை. உன்னைப்போல் பேரழகு வாய்ந்த பெண்கள் இந்த உலகத்தில் பலர் இருக்கிறார்கள். இந்த அழகிலும் நான் உன் பெருமையைக் காணவில்லை. உன்னைப் படைத்த கடவுளின் பெருந்தன்மையைத்தான் காண்கிறேன். ஒரே உடம்பில் இவ்வளவு அழகையும் நிறைத்து அனுப்பியவனுடைய பெருந்தன்மை சிறந்தது தான். இந்த அழகை உன் செல்வமாகக் கருதி இதற்காக நான் என்னை இழந்துவிட வேண்டும் என்று நீ எதிர் பார்ப்பது பேராசையல்லவா?”

“பேராசையாகவே இருக்கட்டும்! நான்தான் பேதைப் பெண். கல்வியின் பலமோ, தத்துவங்களால் தெளிந்த மனமோ, வைராக்கியங்களோ இல்லாதவள். நீங்கள் ஞான வீரர். வெற்றிக்குக்கூட ஆசைப்படாதவர். வெற்றியைக்கூட விட்டுக் கொடுக்கவும், தோல்வியைச் சிரித்த முகத்தோடு அங்கீகரித்துக் கொள்ளவும் முடியுமென்று பெருமைப் படுகிறவர். அப்படி இருந்தும் எனக்காக விட்டுக் கொடுப்பதற்கு மட்டும் உங்கள் மனம் துணியத் தயங்குகிறது. இந்த உலகத்தில் சுரமஞ்சிரயைத் தவிர எல்லா உயிர்களின் மேலும் அன்பு செலுத்த உங்களால் முடியும். அப்படித் தானே? உங்களைப் போல் அன்பு செலுத்துவதில்கூட பட்சதாபம் வைத்துக் கொண்டிருக்கிறவரை நான் எப்படித் துறவியாக ஏற்றுக் கொள்ள முடியும்?”

“இதைக் கேட்டு இளங்குமரன் சிரித்தான்.”

“நீ என் வழியை விடமாட்டாய் போலிருக்கிறது. உன் பேச்சு முடிவில்லாத வாதமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இதழ்கள் துடிக்க, கண்கள் கலங்கிப் பெருக நீ வந்து நிற்கிற கோலத்தைப் பார்த்தாலும் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது. உன் வழியும் உனக்குக் கிடைக்காமல், என் வழியும் எனக்குக் கிடைக்காமல், இரண்டு பேரும் இப்படி ஒருவருடைய வழியை மற்றொருவர் மறித்துக்கொண்டு எவ்வளவு நேரம் தவிக்க முடியும்? இந்தத் தவிப்புக்கு முடிவு இருவருக்குமே தெரிய வேண்டும். அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது பெண்ணே! நீ எதைக் கேட்க வந்தாயோ. அதையே பொருளாகக் கொண்டு என்னிடம் வாதத்தைத் தொடங்கு. பல்லூழி காலத்துக்கு முன்பு ஆயிரம் பிரம்ம ஞானிகள் கூடியிருந்த பெருஞ்சபையில் ஞானமலையாகிய யாக்ஞவல்கியரைத் தன்னோடு பிரம்ம வாதம் புரிய முன்வருமாறு கார்க்கி என்ற பெண்மணி தனியாய் நின்று அழைத்திருக்கிறாள். அப்படி நீயும் என்னை அழைக்க முடியும்.”

“ஐயா! நீங்கள் என்னை ஏளனம் செய்கிறீர்கள் போலும். வெறுங்கையோடு வந்திருக்கிற எதிரியை வாட் போருக்கு வா என்றழைப்பது போலிருக்கிறது உங்கள் செயல். மைத்திரேயி, கார்க்கி போன்ற வேத காலத்துப் பெண்கள் எங்கே? பேதைத் தன்மையைத் தவிர வேறொன்றும் தெரியாத நான் எங்கே? எனக்கு அவ்வளவு அறிவு வலிமை இருந்தால் உங்கள்மேல் வைத்த மனத்தை மீட்டுக் கொண்டு நான் துறவியாகப் போய்விட முடியும். ஆனால் இப்போதுள்ள நிலையில் நான் பெரும் பேதை, உங்களை அடைய முடியாவிட்டால் சாவதைத் தவிர வேறெதுவும் நோக்கமில்லாதவள்.”

“பேதைகள் கூடச் சில சமயங்களில் வெற்றி பெற முடியும். விதிமட்டும் நல்லதாக இருக்க வேண்டும்....”

“எதை வெற்றி பெற முடியுமென்கிறீர்கள்.”

“எதை விரும்புகிறார்களோ அதைத்தான். விரும்பியதை விரும்பியபடியே அடைவதைவிடப் பெரிய வெற்றி ஏதும் பேதைகளுக்கு இருக்க முடியாது.”

“அப்படியானால் உங்கள் மேல் ஆசைப்படுவதைத் தவிர வேறெதையும் கற்காத பேதையான என்னோடு வாதிடவும் நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?”

“மறுக்கவில்லை...” "ஒருவரிடம் கைகூப்பி ஒரு பொருளை ஈயென இரத்தல் இழிந்ததுதானே?”

“ஆமாம்! இழிந்ததுதான்.”

“இரப்பவருக்கு ஈயமாட்டேனென்று மறுப்பது?”

“அதைவிட இழிந்தது.”

“இழிந்த செயலைச் செய்ய விரும்புவது உயர்ந்த மனிதர்களுக்குத் தகுமா ?”

“தகாது! தகாது!”

“அப்படியானால் நான் கேட்கும் ஒன்றை நீங்கள் எனக்கு ஈந்தருள வேண்டும்...”

“நான் துறவி. என்னிடம் ஈவதற்கு ஒன்றுமில்லை. நானே கொடுப்பவர்களைத் தேடிக் கொண்டிருப்பவன்.”

“பொய்! இது பெரிய பொய்! முதன் முதலாக உங்களை மற்போரில் வென்ற வீரராகப் பூம்புகார் கடற்கரையில் சந்தித்தபோது நான் கொடுக்கிறவளாக இருந்தேன். நீங்கள் நான் கொடுத்ததை வாங்கிக் கொள்ள மறுக்கும் அளவு மானத்தின் எல்லையில் போய் நின்று கொண்டு என் பரிசைப் புறக்கணித்தீர்கள். இப்போது நான் உங்களிடமிருந்து பிச்சை கேட்கிறவளாக இருக்கிறேன். கேட்கிற பிச்சையும் அன்புப் பிச்சை. கொடுக்க முடிந்த பிச்சையைத்தான் மண்டியிட்டுப் பணிந்து கேட்கிறேன். இந்தப் பிச்சையையும் கொடுக்க முடியாதென நீங்கள் மறுக்கிறீர்கள். நான் கொடுக்க முடிந்தவளாக இருந்த காலத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ள மறுத்தீர்கள். நான் கையேந்திப் பிச்சை கேட்டுக் கொண்டு நிற்கிற காலத்தில் நீங்கள் கொடுக்க மறுக்கிறீர்கள். நிறைந்த மனமுடையவர்களுக்குக் கொடுக்க மறுப்பதும் இழிவு அல்லவா!”

“ஒன்றுமே இல்லாதவன் எதைக் கொடுக்க முடியும் பெண்ணே ?”

“பொய் சொல்லாதீர்கள். நீங்கள் கொடுக்க முடிந்தவர். கொடுப்பதற்கு உங்களிடம் வள்ளன்மை இருக்கிறது."

"இருந்தால் கேள். அப்படி இருப்பது எதுவானாலும் தருகிறேன்” இந்த வார்த்தைகளைச் சொல்லும்போதே தான் மெல்ல மெல்ல அவளுக்குத் தோற்றுக் கொண்டிருப்பது போன்ற தளர்ச்சியை இளங்குமரன் அடைந்து விட்டான். அந்தப் பெண்ணின் தந்திரமான கேள்விக்கு முன்னால் தான் பேதையாகிவிட்டாற் போலவும், அவள் தன்னை வீழ்த்தும் புத்திக் கூர்மையைப் படிப்படியாகப் பெற்றுவிட்டாற்போலவும் உணர்ந்து சோர்ந்தான் அவன்.

அதுவரை அழுதுகொண்டிருந்த சுரமஞ்சரி தன் கண்களைத் துடைத்துக்கொண்டு சிரித்தாள். அவள் கண்களில் நளினமான உணர்வுகள் பிறந்தன. அவனுடைய மனத்தின் தளர்ச்சி அவளுக்குப் புரிந்தது.