மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 03-கதைச்சுருக்கம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மனோன்மணீயம்[தொகு]

அங்கம் ஐந்து[தொகு]

மூன்றாங்களம்- கதைச் சுருக்கம்[தொகு]

அரண்மனையில், மணமண்டபத்தில், நள்ளிரவில், பட்டப்பகல் போல விளக்குகள் வெளிச்சந் தருகின்றன. மண்டபம் அலங்கரிக்கப் பட்டு, அழகாகக் காணப்படுகிறது. வீரர்களும் முக்கியர்களும் கூடியிருக்கின்றனர். மண்டபத்தில் இரண்டு திரைகள் காணப்படுகின்றன. ஒருதிரை, மணமகளுக்காக! மற்றொரு திரை, சுரங்கவாயிலை மறைப்பதற்காக. பாண்டியன் மண்டபத்தில் நுழைகிறான். அவனைப் பின்தொடர்ந்து, சுந்தரமுனிவர், கருணாகரர், நிட்டாபரர், பலதேவன், நடராசன், நாராயணன் முதலியோர் வருகின்றனர். அரசன், இருக்கையில் அமர்ந்து, எல்லோரையும் அமரும்படி கூறுகிறான். அமைச்சனாகிய குடிலன் அங்கு இல்லாதது கண்டு, “உம்முடைய தந்தையார், இன்னும் இங்கு வராதது என்ன?” என்று வியப்புடன் பலதேவனைக் கேட்கிறான்.
“மாலையில், அவரைப் பார்த்தேன். தனியே போனார் என்று கூறுகிறார்கள்” என்றான், பலதேவன்.
“பாருங்கள், குடிலர் படும்பாடு! எப்பொழுதும், நம் காரியமே கண்ணாயிருக்கிறார். நமது காரியமாகத்தான், அவர் போயிருப்பார். இப்படி உழைப்பவர் எந்த உலகத்திலும் இல்லை” என்று அரசன் கூறி, முனிவரைப் பார்த்து, “அடிகாள்! முழுத்தவேளை வந்ததோ? தொடங்கலாமோ?” என்று கேட்கிறான்.
அவ்வேளையில், சுரங்கவழியாக அருள்வரதன் முதலியவருடன், புருடோத்தமன், அங்கு வருகிறான். குடிலனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சுரங்கத்தில் சேவகரிடம் விட்டுப், புருடோத்தமனும் சேனாபதியும், அறையில் நுழைகின்றனர். திரைமறைவில் இருந்தபடியே, திரைக்கப்பால் காணப்படும் காட்சிகளை, விளக்கு வெளிச்சத்தில், நன்றாகக் காண்கின்றனர். புருடோத்தமன், சுந்தர முனிவரும், நடராசனும் மண்டபத்தில் இருப்பதைக்கண்டு வியப்படைகிறான். ‘இதென்ன! மந்திராலோசனை நடைபெறுகிறதோ!... அலங்காரங்களும், மாலைகளும் இருப்பதைப் பார்த்தால், மணவறைபோல இருக்கிறது. நல்லது; இந்தத் திரைமறைவில் நின்று நடப்பதைப் பார்ப்போம்!’ என்று தனக்குள் எண்ணிக்கொள்கிறான்.
அந்தச் சமயத்தில், பாண்டியன் கூறுகிறான்: “அடிகளே! அமைச்சர்களே! வீரர்களே! கேளுங்கள். நமது இளவரசியைக் காப்பதற்காக இங்குக் கூடியிருக்கிறோம். இன்று காலை! போர்க்களத்தில், நமக்கு ஓர் இழுக்கு நேர்ந்தது. அந்த இழுக்கை, நாளைக் காலையில், போர்க்களத்தில் வெற்றிகொண்டாவது, உயிர்கொடுத்தாவது நீக்குவோம். அதற்குமுன் நம் இளவரசிக்குச் செய்யவேண்டிய கடைமையைச் செய்து முடிக்க வேண்டும்.
“குடிலரை அறியாதவர் யார்? அவரைப்போல அறிவும் சூழ்ச்சியும், உண்மையும் உறுதியும், பக்தியும் சத்தியமும் உடையவர், வேறு யார் உள்ளனர்! தன்னலம் இல்லாமல், நமக்காக உழைக்கின்றார். பாருங்கள்; இப்போதுங்கூட, இந்த நள்ளிரவில், அவர், எங்கேயோ சென்று, நமக்காகப் பாடுபடுகிறார். இப்படிப்பட்ட அமைச்சரைப் பெற்றது, நமது பாக்கியமே!

(திரைமறைவிலிருந்து இதனைக்கேட்ட புருடோத்தமன், “ஐயோ! துன்பம் துன்பம்! இவ்வரசன் களங்கமில்லாதவன்! குடிலனின் துரோகத்தை அறியாதவன்!” என்று தனக்குள் கூறிக்கொள்கிறான்.)

அவருடைய மகன் பலதேவன், வீரம் அறிவு ஆற்றல் ஊக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்குகிறதை, எல்லோரும் அறிவீர்கள். நமக்கு நேர்ந்திருக்கிற போர்நெருக்கடியைக் கருதியும், குடிலருடைய குடும்பத்துக்கு நாம் கடமைப்பட்டிருப்பது கருதியும், நமது இளவரசியைப் பலதேவருக்குத் திருமணம் செய்விக்க இசைந்துள்ளோம். திருமணம் முடிந்தவுடன், மணமக்கள், முனிவர் ஆசிரமத்திற் சென்று தங்குவார்கள். அதற்காகவே, அடிகள், இங்கிருந்து, சுரங்கவழியொன்றை அமைத்துள்ளார். இளவரசி மனோன்மணியைப் பற்றிய கவலை தீர்ந்தபிறகு, நாளைக்காலை, போர்க்களம் சென்று, போர்செய்து, நமது மானத்தைக் காப்போம்!” என்று கூறிச்சகடரை நோக்கி, “உமது கருத்தைக் கூறும்” என்று கூறினான்.
“எல்லாம் சரிதான்; மணமகன் அரசகுலம் அல்ல... அதுதான்!...” என்று இழுத்தார், சகடர். “குலத்தைப் பற்றி யோசிப்பதைவிடக் குணத்தைப் பற்றித்தான் கருதவேண்டும்” என்றான், அரசன். “அரசே! மனிதரால் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் ஈசன் செயல்” என்றான், நாராயணன்.
சகடரும் மற்றவர்களும், ‘சரிசரி’ என்றுகூறி ஒப்புதல் தெரிவித்தனர். அரசன், இளவரசியை, மணமண்டபத்தின் திரைக்குள் வரும்படி அழைப்பித்தான். மனோன்மணி, வாணி முதலிய தோழிமாருடன் வந்து, திரைமறைவில் நின்றாள். வாணி, கடவுள் வாழ்த்துப் பாடினாள்.
சுந்தரமுனிவர், “மனோன்மணீ! இங்கு வருக! மாலையைக் கையில் எடு. உன்மனத்தை, இறைவன் அறிவான். அவன் திருவருள், இன்னமும் உன்னைக் காக்கும்!” என்று கூறினார். மனோன்மணி, மணமாலையைக் கையில் ஏந்தி, வாடிய முகத்துடன், உயிரில்லாப் பாவைபோலத் திரைக்கு வெளியே வருகிறாள். அதேசமயம், எதிரிலிருந்த திரைச்சீலையிலிருந்து, புருடோத்தமன், திரைக்கு வெளியே வருகிறான். தான் கனவில் கண்டு காதலித்த உருவமே அது என்று அறிந்து, வியப்பும் மகிழ்ச்சியும் பொங்க, மனோன்மணி, அங்கு விரைந்து சென்று, மாலையைப் புருடோத்தமன் கழுத்தில் இடுகிறான். புருடோத்தமனும், தான் கனவில் கண்டுவரும் பெண்இவள் என்று அறிந்து வியப்படைகிறான்.
எதிர்பாராத இந்நிகழ்ச்சியைக் கண்டு, எல்லோரும் அதிசயிக்கின்றனர்.
சுந்தரமுனிவர், “மங்கலம் உண்டாகுக!” என்று மணமக்களை வாழ்த்துகிறார்.
பலதேவன், “பிடியுங்கள் அவனை! கொல்லுங்கள்!” என்று கூவுகிறான். சுந்தரமுனிவர், அவர்களைத் தடுத்து அமைதி யுண்டாக்குகிறார். சேரன் சேனாதிபதி அருள்வரதனும், அவனுடைய வீரர்களும், புருடோத்தமனையும் மனோன்மணியையும் சூழ்ந்து நின்று காவல்புரிகின்றனர். எல்லோரும், “பாதகன்! படையுடன் இங்கேயும் வந்தான்!” என்கின்றனர். அருள்வரதன், விலங்குடன் தலைகுனிந்து நிற்கும் குடிலனைச் சுட்டிக்காட்டிக் கம்பீரமாக, “இதோ! உங்கள் பாதகன்!” என்று கூறினான்.
சீவகன், “குடிலரே! என்ன இது! அடிகாள்! இது என்ன சூது?” என்றான்.
“பொறு, பொறு! விரைவில் அறிவோம்” என்றார், முனிவர்.
புருடோத்தமன் பேசுகிறான்: “நாம், சூது ஒன்றும் செய்யவில்லை. சூதுசெய்தவன், உம்முடைய அமைச்சன்! சுரங்கவழி இருப்பதை என்னிடம் கூறி, இவ்வழியாக வந்து உமது நகரத்தைப் பிடிக்கும்படி, எம்மை அழைத்தான். உம் அரசையும் நாட்டையும், தனக்குக் கொடுக்கும்படி, என்னைக் கேட்டான். இவனுடைய சூதையும் துரோகத்தையும் உமக்குச் சொல்லி, உம்மைத் தெளிவிக்கவே, இவனைச் சுரங்கவழியாக, நாம் அழைத்துவந்தோம். வந்த இடத்தில், மணநிகழ்ச்சியைக் கண்டோம். இளவரசியை எதிர்பாராத விதமாகப் பெற்றோம்! இனி, உமது விருப்பம். சென்று வருகிறேன். உமக்கு விருப்பமானால், போர்க்களத்தில் சந்திப்போம்!”
சீவகன், “குடிலரே! இது உண்மையா? சொல்லும்!” என்றான். குடிலன், பேசாமல், தலைகுனிந்து நிற்கிறான்.
“ஏன் மோனம்? குடிலரே! உண்மையைக் கூறும்!” என்றான், நாராயணன். குடிலனைப் பார்த்து, எல்லோரும், “அட!பாவீ!” என்றனர்.
சுந்தரர், “விடுங்கள்! இப்பொழுது ஏன் விசாரணை? எல்லாம் கடவுள் திருவருள்...! அரசே! மகளையும், மருமகனையும் வாழ்த்தும்!” என்றார். எல்லோரும் மணமக்களை வாழ்த்துகின்றனர்!

ஐந்தாம் அங்கம் மூன்றாம் களத்தின் கதைச்சுருக்கம் முற்றியது[தொகு]