மனோன்மணீயம்
Appearance
மனோன்மணீயம்- நாடகம்
[தொகு]- (ஐந்தங்கத் தமிழ்க் கவிதைநாடகம்)
ஆசிரியர்: சுந்தரம்பிள்ளை
[தொகு]நூலாசிரியர் எழுதிய முகவுரை
[தொகு]- "மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி
- இறைவர்தம் பெயரை நாட்டி இலக்கணஞ் செய்யப் பெற்றே
- அறைகடல் வரைப்பிற் பாடை அனைத்தும்வென் றாரி யத்தோ
- டுறழ்தரு தமிழ்த்தெய்வத்தை உண்ணினைந் தேத்தல் செய்வாம்."
- "இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப
- இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும்
- இருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றாலிவ்
- விருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ."
- "கண்ணுதற் பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
- பண்ணுறத் தெரிந்தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
- மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
- எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ."
- - என்றெடுத்த ஆன்றோர் வசனங்கள் உபசாரமல்ல, உண்மையே யென்பது, பரத கண்டம் என்னும் இந்தியா தேசத்திலுள்ள பற்பல பாஷைகளைச் சற்றேனும் ஆராய்ந்து ஒப்பிட்டு நோக்கும் யாவர்க்கும் திண்ணிதிற் றுணியத் தக்கதே. பழமையிலும், இலக்கண நுண்மையிலும், இலக்கிய விரிவிலும், ஏனைய சிறப்புக்களிலும் மற்றக் கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ்மொழி சிறிதும் தலைகவிழ்க்கும் தன்மையதன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமை சான்ற இத்தமிழ்மொழி, பற்பல காரணச் செறிவால், சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலைதளர்ந்து, நேற்றுதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்குச் சமமோ, தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி, அபிவிருத்தியற்று நிற்கின்றது. இக்குறைவு நீங்கத் தங்களுக்கியன்ற வழி முயற்சிப்பது, தங்களை மேம்படுத்தும் தமிழ் மொழியைத் தம் மொழியாக வழங்கும் தமிழர் யாவரும் தலைக்கொள்ளத் தவறாக் கடன்பாடன்றோ!
சுந்தரன் பாமாலை
அறிஞர் பெருந்தகையும், பேராசிரியருமாகிய ராவ் பகதூர் சுந்தரம் பிள்ளை அவர்கள் இகவாழ்வை நீத்து, 1947 ஏப்பிரல் மாதத்தோடு ஐம்பது ஆண்டுகள் நிறைந்தன. இந்நிறைவு நாளின் நினைவுக்குறியாகப் பின்வரும் கவிதைகள் பாடப்பெற்றன.
|
- மேற்கூறிய முயற்சிக்கேற்ற வழிகள் பலவுளவேனும், அவற்றுள் இரண்டு தலைமையானவை. முதலாவது, முன்னோராற் பொருட்சுவையும் சொற்சுவையும் பொலிய இயற்றப்பட்டிருக்கிற அருமையான நூல்களுள் இறந்தவையொழிய, இனியும் இறவாது மறைந்து கிடப்பனவற்றை வெளிக்கொணர்ந்து நிலைபெறச் செய்தலேயாம். இவ்வழியில் பெரிதும் உழைத்துப் பெரும்புகழ் படைத்த ம-ரா-ரா-ஸ்ரீ தாமோதரம் பிள்ளையவர்கள், பிரமஸ்ரீ சாமிநாத அய்யர் அவர்கள் முதலிய வித்துவசிரோமணிகளுடைய நன்முயற்சிக்கு ஈடுகூறத்தக்கது யாது? தம் மக்கட்கு எய்ப்பில் வைப்பாக இலக்கற்ற திரவியங்களைப் பூர்விகர்கள் வருந்திச் சம்பாதித்து வைத்திருக்க, அம்மக்கள், அவை இருக்குமிடந் தேடி எடுத்தநுபவியாது இரந்துண்ணும் ஏழைமை போலன்றோ ஆகும், ஈடும்எடுப்புமற்ற நுண்ணிய மதியும் புண்ணிய சரிதமுமுடைய நம் முனனோர் ஆயிரக்கணக்கான ஆண்டு உழைத்து ஏற்படுத்தியிருக்கும் அரிய பெரிய நூல்களை நாம் ஆராய்ந்து அறிந்து அநுபவியாது வாளா நொந்து காலம் போக்கல்! ஆதலால், முற்கூறிய உத்தம வித்துவான்களைப் பின்றொடர்ந்து, நம் முன்னோர் ஈட்டிய பொக்கிஷங்களைச் சோதனை செய்து, தமிழராகப் பிறந்த யார்க்கும் உரிய பூர்வார்ஜித கல்விப்பொருளை க்ஷேமப்படுத்தி யநுபவிக்க முயல்வது முக்கியமான முதற்கடமையாகும்.
- பூர்வார்ஜித தனம் எவ்வளவு பெரிதாக இருப்பினும், அதனைப் பாதுகாப்பதோடு, ஒவ்வொருவரும் தமக்கியன்ற அளவு உழைத்துச் சொற்பமாயினும், புதுவரும்படியைச் சம்பாதித்துக்கொள்ளவேண்டும் என்பது பொதுவான உலகநோக்கமாக இருப்பதால், முற்கூறிய முயற்சியோடு இரண்டாவதொரு கடன்பாடும் தமிழர் யாவர்க்கும் விட்டுவிலகத் தகாததாகவே ஏற்படும். பூர்வார்ஜிதச் சிறப்பெல்லாம் பூர்வீகர்கள் சிறப்பு. அந்தஅந்தத் தலைமுறையார்களுக்கு, அவரவர்கள் தாமே ஈட்டிய பொருளளவும் சிறப்பேயொழிய வேறி்ல்லை. அத்தலைமுறையாரைப் பின் சந்ததியார் பேணுவதற்கும் அதுவே யொழிய, வேறு குறியுமில்லை. ஆனதினால், எக்காலத்திலும், எவ்விஷயத்திலும் பூர்வீகர்களால் தங்களுக்குச் சித்தித்திருப்பவற்றை, ஒவ்வொரு தலைமுறையாரும் பாதுகாப்பதுமின்றித் தங்களாற்கூடிய அளவும் அபிவிருத்தி பண்ணவும் கடமை பூண்டவர்களாகின்றார்கள். பூர்வார்ஜிதம் மிகவும் பெரிதா யிருக்கின்றதே! நம்முயற்சியால் எத்தனைதான் சம்பாதிப்பினும்நமது பூர்வார்ஜிதத்தின்முன் அஃது ஒருபொருளாகத் தோன்றுமா? என மனந்தளர்ந்து கைசோர்வார்க்கு, அவர் பூர்வார்ஜிதப்பெருமை கேடு விளைவிப்பதாகவன்றோ முடியும். அந்தோ! இக்கேட்டிற்கோ, நம்முன்னோர், நமக்காக வருந்தி யுழைத்துப் பொருளீட்டி வைக்கின்றார்கள்! பிதிர்களாய் நிற்கும் அம்முன்னோர், இவ்விபரீத விளைவைக் கண்டால், நம்மை எங்ஙனம் வாழ்த்துவர்? இக்கூறிய உண்மை, செல்வப்பொருளுக்கன்றிக் கல்விப் பொருளுக்கும், ஒரு குடும்பத்துள் வந்த ஒருவனுக்கன்றி ஒரு தேசத்திற் பிறந்த ஒவ்வொரு தலைமுறையார்க்கும் ஒன்று போலவே பொருத்தமுடையதாதலால்,
- "குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
- மடிதற்றுத் தான்முந் துறும்."
- -என்னும் திருக்குறளை நம்பிநம் முன்னோர் யாதேனும் ஒருவழியில் அபரிமிதமான சிறப்படைந்தாராயின், நாமும் அவர்போலவே இயன்ற அளவும் முயன்று பெருமை பெறக்கருதுவதன்றோ, அம்முன்னோர்க்குரிய மக்கள்நாமென முன்னிற்றற்கேற்ற முறைமை!
- தீங்கரும்பீன்ற திரள்கால் உளையலரி
- தேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு- ஓங்கும்
- உயர்குடி யுட்பிறப்பின் என்னாம், பெயர்பொறிக்கும்
- பேராண்மை இல்லாக் கடை.
- ஆதலால், அருமையாகிய பூர்வ நூல்களைப் பாதுகாத்துப் பயின்று வருதலாகிய முதற்கடமையோடு, அவ்வழியே முயன்று அந்த அந்தக் காலநிலைக்கேற்றவாறு புது நூல்களை இயற்றமுயலுதல், தமிழ்நாடென்னும் உயர்குடியிற் பிறக்கும் ஒவ்வொரு தலைமுறையாருக்கும் உரித்தான இரண்டாம் கடமையாய் ஏற்படுகின்றது.
- மேற்கூறிய இரண்டாம் கடமையைச் சிரமேற் கொண்டு, தமிழோர் என்னும் பெரிய குடும்பத்துள்ளே தற்காலத்துள்ள தலைமுறையாருட் கல்வி கேள்வி அறிவு முதலிய யாவற்றுள்ளும் கனிஷ்டனாகிய சிறியேன்,
- இசையா தெனினும், இயற்றியோ ராற்றல்
- அசையாது நிற்பதாம் ஆண்மை"
- என்னும் முதுமொழியைக் கடைப்பிடித்து, நவீனமான பலவழிகளுள்ளும் என் சிறுமதிக்கேற்றதோர் சிறுவழியிற் சிலகாலம் முயன்று, வடமொழி முதலிய பாஷைகளிலுள்ள நாடகரீதியைப் பின்றொடர்ந்து இயற்றிய மனோன்மணீயம் என்னும் இந்நாடகம், பூர்வீக இலக்கியங்களுடன் சற்றேனும் உவமிக்க இயையாதெனினும், ஆஞ்சனேயராதி வானர வீரர்கள் சேதுபந்தனஞ் செய்யுங் காலத்தில் கடனீரிலே தோய்ந்து மணலிற் புரண்டு அம்மணலைக் கடலில் உகுத்த சிறு அணிற்பிள்ளையின் நன்முயற்சி அங்கீகரிக்கப் பட்டவாறே, கல்வி கேள்வியால் நிறைந்த இத்தலைமுறைச் சிரேஷ்டர் அங்கீகரித்து, எனது இச்சிறு முயற்சியும் தமிழ் மாதாவுக்கு அற்பிதமாம்படி அருள்புரியாதொழியார் என நம்பிப் பிரகடனம் செய்யப்படுகின்றது.
- இந்நாடகம் வடமொழி, ஆங்கிலேயம் முதலிய பாஷைகளில் உள்ள நாடக வழக்கிற்கிசையச் செய்திருப்பதால், இதனுள்ளடங்கிய கதை, அங்கங்கே நடந்தேறும் சம்பாஷணைகளாலும், அவாய்நிலைகளாலும் கோவைப்படுத்தி அறிந்து கொள்ளவேண்டியதாயிருக்கின்றது. இக்கதை புதிதாக இருப்பதினால், அவ்விதம் கோவைப்படுத்தி அறிந்து கொள்ளுவோர்க்கு அநுகூலமாகச் சுருக்கி ஈண்டுக் கூறப்படுகின்றது.
கதாசங்கிரகம்(கதைச்சுருக்கம்)
[தொகு]- முற்காலத்தில் மதுரைமாநகரில், சீவகன் என ஒருபாண்டியன் அரசுபுரிந்து வந்தான். அவன், பளிங்குபோலக் களங்கமில்லாத நெஞ்சினன். அவன் மந்திரி குடிலன் என்பவன், ஒப்பற்ற சூழ்ச்சித் திறமை யுடையவனாயினும், முற்றும் தன்னயமொன்றே கருதும் தன்மையனாயிருந்தான். அதனால், அரசனுக்கு மிகவும் உண்மையுடையவன்போல நடித்து, அவனை எளிதிலே தன் வசப்படுத்திக்கொண்டான். அங்ஙனம் சுவாதீனப்படுத்திய பின்பு, தன்மனம் போனபடி யெல்லாம் அரசனையாட்டித் தன்செல்வமும் வளர்த்துக் கொள்ளத் தொன்னகராகிய மதுரை இடங்கொடாதென உட்கொண்டு, அந்நகரின்மேற் பாண்டியனுக்கு வெறுப்புப் பிறப்பித்து, திருநெல்வேலி என்னும் பதியிற் கோட்டை கொத்தளம் முதலிய இயற்றுவித்து, அவ்விடமே தலைநகராக அரசன் இருந்து அரசாளும்படி செய்தான். முதுநகராகிய மதுரை துறந்து, கெடுமதியாளனாகிய குடிலன் கைப்பட்டு நிற்கும் நிலைமையால் சீவகனுக்கு யாது விளையுமோ என இரக்கமுற்று, அவனுடைய குலகுருவாகிய சுந்தரமுனிவர், அவனுக்குத் தோன்றாத் துணையாயிருந்து ஆதரிக்க எண்ணித் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஓர் ஆச்சிரமம் வந்தமர்ந்தருளினர். முனிவர் வந்து சேர்ந்தபின் நிகழ்ந்த கதையே, இந்நாடகத்துட் கூறப்படுவது.
முக்கிய நாடகப் பாத்திரங்கள்
|
- முனிவர் எழுந்தருளியிருப்பதை உணர்ந்து, சீவகன், அவரைத் தன் சபைக்கழைப்பித்து. தனது அரண்மனை கோட்டை முதலியவற்றைக் காட்டி, அவை சாசுவதம் என மதித்து வியந்துகொள்ள, அவ்விறுமாப்பைக் கணணுற்ற முனிவர், அவற்றின் நிலையாமையைக் குறிப்பாகக் கூறியும் அறியாதொழிய, அவன் குடும்பத்திற்கும் கோட்டை முதலியவற்றுக்கும் க்ஷேமகரமாகச் சில கிரியா விசேஷம் செய்யும்பொருட்டு, அவன் அரண்மனையில் ஓரறை தம் சுவாதீனத்து விடும்படி கேட்டு, அதன் திறவுகோலை வாங்கிக்கொண்டு, தம் ஆச்சிரமம் போயினர். ஜீவக வழுதிக்குச் சந்ததியாக, மனோன்மணி என்னும் ஒரே புத்திரிதான் இருந்தனள். அவள், அழகிலும் நற்குண நற்செய்கைகளிலும் ஒப்புயர்வற்றவள். அவளுக்கு அப்போது பதினாறாக இருந்தும், அவள் உள்ளம் குழந்தையர் கருத்தும் துறந்தோர் நெஞ்சமும்போல, யாதொரு பற்றும் களங்கமுமற்று நின்மலமாகவே யிருந்தது. அவளுக்கு உற்ற தோழியாக இருந்தவள், வாணி. இவள், ஒழுக்கம் தவறா உள்ளத்தள்;தனக்கு நன்றெனத் தெள்ளிதின் தெளிந்தவற்றையே நம்புந் திறத்தள்; அல்லவற்றை அகற்றும் துணிபுமுடையள். இவ்வாணி, நடராஜனென்ற ஓர் அழகமைந்த ஆனந்த புருஷனை யிறிய, அவர்களிருவர் உள்ளமும் ஒருவழிப்படர்ந்து காதல் நேர்ந்தது. அதற்கு மாறாக, இவ்வாணியினது பிதா மிகப் பொருளாசை யுடையோனாதலால், குடிலனுடைய மகன் பலதேவன் என்னும் ஒரு துன்மார்க்கனுக்குந் தன் மகளை மணம்புரியின் தனக்குச் செல்வமும் கௌரவமும் உண்டாமென்ற பேராசை கொண்டு, அவ்வாறே அரசன் அநுமதிபெற்று விவாகம் நடத்தத் துணிந்தனன். அதனால் வாணிக்கு விளைந்த சோகம் அளவற்றதாயிருந்தது. இச்சோகம் நீங்க, மனோன்மணி, பலவாறு ஆறுதல் கூறும் வழக்கமுடையவளாயிருந்தாள். இவ்வாறிருக்கும்போது, முனிவர் கோட்டை காண வந்த நாள் இரவில், ஈடும் எடுப்புமற்ற சேரதேசத்தரசனாகிய புருடோத்தவர்மனைப் பூருவ கருமபரிபாகத்தால் மனோன்மணி கனாக்கண்டு மோஹம் கொள்ள, அவட்குக் காமசுரம் நிகழ்ந்தது. அச்சுரம் இன்ன தன்மையதென்றுணராது வருந்தும் சீவகனுக்குத் தெய்வகதியாய்த் தம் அறைக்கு மறுநாட் காலமே வந்த முனிவர், மனோன்மணி நிலைமை காமசுரமே எனக் குறிப்பாலுணர்ந்து அவள்நோய் நீங்கு மருந்து மணவினையே எனவும், அதற்கு எவ்விதத்திலும் பொருத்தமுடையோன் சேரதேசத்துப் புருடோத்தமனே எனவும், அவ்வரசனது கருத்தினை நன்குணர்ந்து அம்மணவினை எளிதில் முடிக்கவல்லோன் நடராஜனே யெனவும் உபதேசித்தகன்றார். வாணியினது காதலனாகிய நடராஜன்மேல் அவள் பிதா ஆரோபித்திருந்த அபராதங்களால் வெறுப்புக் கொண்டிருந்த பாண்டியன், அக்குருமொழியை உட்கொள்ளாதவனாய்க் குடிலனுடைய துன்மந்திரத்தை விரும்பினன். குடிலனோ, தன்னயமே கருதுவோனாதலால், சேரதேசத்தரசன் மருமகனாக வருங்காலத்தில் தன் சுவாதந்திரியத்திற்கு எங்ஙனம் கெடுதிவருமோ என்ற அச்சத்தாலும், ஒருகால் தன்மகனாகிய பலதேவனுக்கே மனோன்மணியும், அவட்குரிய அரசாட்சியும் சித்திக்கலாகாதா என்ற பேராசையாலும், முனிவர் மனத்தைத்தடுப்பதற்குத் துணிந்து தொடக்கத்திற் பெண்வீட்டார் மணம்பேசப் போதல் இழிவென்னும் வழக்கத்தைப் பாராட்டிப் புருடோத்தமன் மனக்கோள் அறிந்தே அதற்கு யத்தனிக்க வேண்டுமென்றும், அப்படியறிதற்குப் பழைய சில விவாதங்களை மேற்கொண்டு ஒரு தூது அனுப்பவேண்டுமென்றும், அப்போது கலியாணத்திற்குரிய சங்கதிகளையும் விசாரித்துவிடலாமென்றும் ஒரு சூதுகூற, அதனை அரசன் நம்பி, குடிலன் மகன் பலதேவனையே, இவ்விஷயத்திற்குத் தூதனாக அனுப்பினான்.
- சேரதேசத்திலோ, புருடோத்தமன் தனக்குச் சிலநாளாக நிகழ்ந்துவரும் கனாக்களில் மனோன்மணியைக் கண்டு காமுற்று, அவள் இன்னாளென வெளிப்படாமையால் மனம் புழுங்கி, யாருடனேனும் போர் நேர்ந்தால் அவ் ஆரவாரத்திலாயினும் தன்மனத்தைக் கொள்ளை கொள்ளும் கனாவொழியாதா என்ற நோக்கமுடன் இருக்கும் சந்தியாக இருந்தது. அதனாற், பலதேவன் சென்று தன்பிதா தனக்கு இரகசியமாகக் கற்பித்தனுப்பியபடி சேரன் சபையில் அகௌரவமான துர்வாதம் சொல்லவே, புருடோத்தமன் கோபம் கொண்டு போர்க்கோலம் பூண்டு, பாண்டிநாட்டின்மேற் படையெடுத்துப் புறப்பட்டான். அச்செய்தி அறிந்து சீவகனும், போருக்கு ஆயத்தமாகவே, இருபடையும் திருநெல்வேலிக்கு எதிரிலே கைகலந்தன. அப்படிப் போர்நடக்கும்போது, பாண்டியன் சேனையின் ஒரு வியூகத்திற்குத் தலைவனாக இருந்த பலதேவனை, அவன் கீழிருந்த ஒரு சேவகன் தன்வேலாலே தாக்க, அதனால் அவன் மூர்ச்சிக்கவும், படை முழுதும் குழம்பவும் சங்கதி ஆயிற்று. அப்படித் தாக்க நேரிட்ட காரணம் ஏதென்றால், பலதேவன் களவுவழிக் காமம் துய்க்கும் துன்மார்க்கனாதலால், அப்படைஞனது சகோதரியைக் கற்பழித்துக் கெடுத்துவிட்டது பற்றி உண்டான வைரமே என்பது, படைஞன் வேலாற் பலதேவனைத் தாக்கியபொழுது கூறிய வன்மொழியாலும், அவன் தங்கைக்கு அரண்மனையினின்றும் பலதேவன் திருடிப் பரிசாக அளித்த பொற்றொடி அவன் கையில் அக்காலம் இருந்தமையாலும் வெளிப்படுகின்றது. படை நியதிகடந்த அச்சேவகனை, அருகுநின்ற வீரர், அக்கணமே கொன்றுவிட்டார்கள். பலதேவனும் மூர்ச்சை தெளிந்துகொண்டான். ஆயினும், படையிற் பிறந்த குழப்பம் தணியாது பெருகிவிட்டதனால், பாண்டியன் சேனை சின்னபின்னப்பட்டுச் சிதறுண்டு, ஜீவகன் உயிர்தப்புவதும் அரிதாகும்படி தோல்வி நேர்ந்தது. சத்தியவாதியாகிய நாராயணன் என்னும் ஒரு சுத்தவீரன், அக்காலம் வந்து உதவி செய்யாவிடில் போர்ககளத்தில் ஜீவகன் மாண்டேயிருப்பான்.
- இந்நாராயணன் யாரென்றால், நடராஜனுடைய நண்பன். இவன் குடிலனுடைய சூதுகள் தெரிந்தவன். அரசன் நிந்தித்துத் தள்ளினும், அவனைக் காப்பாற்றும்பொருட்டு அவனை விட்டு நீங்காது, மதுரையினின்றும் அவனோடு தொடர்ந்துவந்த பரோபகாரி. குடிலன், இவன் திறமும் மெய்ம்மையும் அறிந்துள்ளானாதலால், இந்நாராயணன் போர் முகத்திருக்கின் தான் எண்ணியபடி ஜீவகன் ஆருயிருக்குக் கேடு வரவொட்டான் எனக்கருதிச் சண்டை ஆரம்பிக்கும் முன்னமே, அவனைக் கோட்டைக் காவலுக்காக நியமித்தனுப்பினான். ஆயினும், போர்க்களமே கண்ணாக இருந்த நாராயணன், சேனையிற் குழப்பம் பிறந்தது கண்டு, சில குதிரைப்படைகளைத் திரட்டிக்கொண்டு திடீரென்று பாய்ந்து சென்று, அரசனையும் எஞ்சின சேவகரையும் காப்பாற்றிக் கோட்டைக்குட் கொண்டுவந்து விடுத்தான். சுத்தவீரனாகிய அரசன், இங்ஙனம் தான் பகைவருக்கு முதுகிட்ட இழிவை நினைந்துநினைந்து துக்கமும் வெட்கமும் தூண்டவே தற்கொலை புரிய எத்தனிக்கும் எல்லை, நாராயணன் மனோன்மணியினது ஆதரவின்மையை அரசனுக்கு நினைப்பூட்டி, அக்கொடுந் தொழிலிருந்து விலக்கிக் காத்தான். அவனது நயவுரையால் அரசன் ஒருவாறு தெளிவடைந்திருக்கும்போது, சேரன் விடுத்த ஒருதூதுவன் வந்து, ஒருகுடம் தாமிரவர்ணி நீரும் ஓர் வேப்பந்தாரும் போரிலே தோற்றதற்கு அறிகுறியாகக் கொடுத்தால் சமர்நிறுத்துவதாகவும், அன்றேல் மறுநாட் காலையிற் கொட்டை முதலிய யாவும் வெற்றிடமாம்படி தும்பை சூடிப் போர்முடிப்பதாகவும் கூறினான். போரில் ஒருமுறை புறங்கொடுத்த புகழ்க்கெடுதியை- உயிர்விடுத்தேனும் நீக்கத் துணிவு கொண்ட ஜீவகன் அதற்கு உடன்படாமல் மறுத்துவிட்டு, பின்னும் சமருக்கே யத்தனித்துத் தன் அரண்களைச் சோதித்து நோக்குங்கால், அவை ஒருநாள் முற்றுகைக்கேனும் தகுதியற்று அழிந்திருப்பதைக் கண்ணுற்று, அவ்வளவாகத்தன்படை முற்றும் தோற்க நேரிட்டகாரணம் வினவலாயினான். தன் கருத்திற்கெதிராக அரசனைக் காப்பாற்றி வரும் நாராயணன் மேற்றனக்குள்ள பழம்பகை முடிக்க இதுவே தருணம் எனக்கண்டு, அரண்காவலுக்கு நியமிக்கப்பட்ட நாராயணன் காவல் விடுத்துக் கடமை மீறி யுத்தகளம் வந்ததே காரணமாகக் கூட்டிக் கோபமூட்டிப் படையிற் பிறந்த குழப்பத்திற்கு ஏதுவாகப் பலதேவனை ஒருசேவகன் வேலாற்றாக்கினதும் தெரிவித்து, அதுவும் வியூகத் தலைவனாக ஆக்கப்பெறாத பொறாமையால் நாராயணன் ஏவிவிட்ட காரியமே எனவும், அத்தொழிலுக்குப் பரிசாக அவன் அரண்மனையினின்றும் திருடிககொடுத்ததே அவன் கையிலிருந்த அரண்மனை முத்திரை பொறித்த பொற்றொடி எனவும், குடிலன் ஒரு பொய்க்கதை கட்டி, அதனை அரசன் நம்பும்படி செய்தான். அவ்வாறே, களவு கொலை ஆஞ்ஞாலங் கனம் முதலிய குற்றங்களை நாராயணன் மேற்சுமத்தி, அவற்றிற்காக அவனைக் கழுவேற்றும்படி விதியும் பிறந்தது.
- இத்தருணத்தில், சுந்தரமுனிவர், அத்தியந்த ஆவசிகமான ஓர் இரகசிய ஆலோசனைக்கு அரசனை அழைப்பதாகச் செய்திவந்தமையால், நாராயணனை, அவ்விதிப்படி கழுவேற்றவில்லை. முனிவர் இப்போது வந்தகாரணம் என்னவென்றால், ஜீவகன், குடிலன் வசத்தனாய்,நெல்வேலிக்கோட்டையே சாசுவதமென இறுமாந்திருந்தமை கண்டு பரிதாபங்கொண்டு, தமக்கென இரந்துவேண்டிக்கொண்ட அறைமுதல், தமதாச்சிரம வெளிவரையும் ஆபத்கால உபயோகமாக அதிரகசியமான ஒரு சுருங்கை உழைத்துச் சமைத்துக்கொண்டு, பற்றுக்கோடற்று நின்ற ஜீவகனையும் அவன் மகளையும், கேடுற்ற கோட்டையினின்றும் தமது ஆச்சிரமத்திற்கு அச்சுருங்கைவழி அழைத்துச் செல்ல உன்னியே, சுந்தரர் இத்தருணம் எழுந்தருளினர். கோட்டையின் நிலையாமை உணர்ந்தும், அதின்மேல் வைத்த அபிமானம் ஒழியாமையால், அத்துடன் தான்முடியினும் இன்னும் ஒருமுறை போருக்கஞ்சிப் புறங்கொடுத்தல் தகாதென ஜீவகன் துணிந்து மறுக்க, மனோன்மணி, பாண்டியர்குலத்திற்கு ஏகசந்ததியாக இருப்பதனால், மற்றையர் எக்கேடுறினும் அவளையேனும் காப்பாற்றுதல் தம் கடமையென ஒருதலையா உறுத்து முனிவர்கூற, மன்னவன், அங்ஙனம் இயைந்து நடுநிசியில் முனிவரோடு தன்மகளை ஆச்சிரமம் அனுப்புவதாக ஒப்புக்கொண்டான். முனிவரும் சம்மதித்து அகன்றார். உடனே நிசாமுகம் தோன்றியது. தன் அருமைமகளைப் பிரியும் வருத்தம் ஒருபுறமும், பிரியாதிருக்கின் அவட்குண்டாகும் கெடுதியைக் குறித்த அச்சம் மற்றொரு புறமுமாக ஜீவகன் சித்தத்தைப் பிடித்தலைக்கக் கலக்கமுற்று, குருமொழியிலும் ஐயம் பிறந்து, குடிலனை வரவழைத்து, முனிவர் அதிரகசியமாகக் கூறிய சுருங்கைமுதல் சகல சங்கதியும் தெரிவித்து, அவனது அபிப்பிராயம் உசாவுவானாயினன். அதற்கு அப்பாதகன், இதுவே தன்மனக்கோள் நிறைவேற்றற்குரிய காலமெனத் துணிந்துகொண்டு, மனோன்மணியை இடம்பெயர்ப்பது தற்கால நிலைமைக்கு எவ்விஷயத்திலும் உத்தமம் எனவும், ஆயினும் மணவினை முடியாமுன்னம் அனுப்புவதால், கன்னியாகிய அவளுக்குப் பழிப்புரைக்கு இடமாவதேயல்லால், அரசனுக்குச் சற்றும் சித்தசமாதானத்திற்கு இடமில்லை எனவும், அவன் நெஞ்சில் சஞ்சலம் விளைவித்து, ஜீவகன் தானாகவே பலதேவனுக்கு மனோன்மணியை அன்றிரவே கலியாணம் செய்துகொடுத்து, முனிவர் ஆச்சிரமத்திற்கு மகளையும் மருமகனையும் சேர்த்து அனுப்புவதாகத் துணியும்படி தூண்டிவிட்டுத் தான் நெடுங்காலமாகக் கொண்டிருந்த அபிலாஷத்தைப் பூர்த்திப்படுத்திக்கொண்டான்.
- ஆயினும் அவ்வளவோடு நி்ல்லாமல், தன்னையறியாமல் முனிவர் வகுத்த கள்ளவழியைக் கண்டறிய வேண்டுமென்று விருப்புற்று, அது அவர்வந்த அன்றே தமக்காகப் பெற்றுக்கொண்ட அறைக்குச் சம்பந்தப்பட்டிருப்பதே இயல்பென ஊகித்து, அவ்வறையிற் சென்று நோக்கி அச்சுருங்கையைக் கண்டுபிடித்து, அவ்வழியே போய் வெளியேறிப் பார்க்குங்கால், சத்துரு பாசறை அருகே தோன்றிற்று. அன்று பகலில் தன்மகனுக்குச் சண்டையில் நேரிட்ட மோசடிபோலத் தனக்கும் இனிவரக்கிடக்கும் போரில் உட்பகையாலோ வெளிப்பகையாலோ யாதேனும் அபாயம் நேரிட்டுவிடலாம் என்ற பயத்தாலும், மனோன்மணி விவாகம் எப்படியும் அன்றிரவே நடந்தேறுமென்ற துணிவாலும், நடந்தேறின் ஜீவகனது பிரீதியால் சிந்திக்கத் தக்கது வேறொன்றுமில்லை எனற் உறுதியாலும், கோட்டைக்குத் திரும்பவேண்டும்என்ற எண்ணம் விடுபட, தான வருந்திக் கண்டுபிடித்த கற்படையைச் சேரனுக்குக் காட்டி அவ்வழியே அழைத்துச்சென்று, யாதொரு உயிர்ச்சேதத்திற்கும் இடமில்லாமல், பாண்டியனையும் அவன் கோட்டையினையும் சுலபமாகப் பகைவன் கையில் ஒப்பித்துவிட்டால், ஒருகுடம் ஜலத்திற்கும் ஒருபூமாலைக்குமாகச் சமரைநிறுத்தித் தன்னூருக்குத் திரும்ப எண்ணின சேரன், தன்னையே முடிசூட்டிச் சிங்காதனம் சேர்க்காதொழிவனோ என்ற பேராசை பிடர்பிடித்துந்தவும், ஊழ்வலி யொத்து நிற்கவும் செய்ததினால், அத்துரோகியாகிய குடிலன் மெள்ளமெள்ளப் பாசறைநோக்கிப் போகவே, கனாவில் மனோன்மணியின் உருவங்கண்டு காமுற்ற நாள்முதலாக யாதொன்றிலும் மனஞ் செல்லாதவனாய் இரவெல்லாம் நித்திரையற்றுத் தனியே திரிந்துவருந்தும் புருடோத்தமனை, நடுவழியிற் சந்தித்துக் கொண்டான். அதுவும் தனது பாக்கியக் குறியாகவே மதித்து மகிழ்ந்த குடிலன், எதிர்ப்பட்ட சேரனிடம், தனது துரோக சிந்தனையை வெளிப்படுத்த, தன்னயம் கருதாச் சதுரனாகிய புருடோத்தமன், தன் சேவகரைக்கூவிக் குடிலன் காலிலும் கையிலும் விலங்கிடுவித்து, "வீரமே உயிராகவுடைய வஞ்சிவேந்தருக்கு வென்றியன்று விருப்பு; இவ்வித ராஜ துரோகிகளைக் காட்டிக்கொடுத்து, மாற்றலராகிய மன்னவரையும் இரட்சித்துப் பின்பு வேண்டுமேற் பொருது தமது வீரம் நாட்டலேயாம்" என அவனுக்கு விடைகூறி, அவன் கூறிய சுருங்கை வழியே ஜீவகன் சபைக்கு வழிகாட்டி வரும்படி கட்டளையிட்டான். இம்மொழி கேட்ட பாவி இடியொலி கேட்ட பாம்புபோலத் திடுக்கிட்டுத் திகைத்துநின்றான். ஆயினும் தானி்ட்ட கட்டளை மீறின் சித்ரவதையே சிக்ஷையாமென்று சேரன் சினந்துகூற, அதற்கு அஞ்சி, அவ்வாறே கற்படைக்கு வழிகாட்டி நடப்பானாயினான்.
- இப்பால் ஜீவகன், தன்மகளைப் பலதேவனுக்கு மணஞ்செய்வித்து, இருவரையும் முனிவர் ஆச்சிரமம் அனுப்புவதே தகுதியெனத் தெளிந்தவாறே, அச்செய்தியை மனோன்மணிக்கு அறிவிக்க, அது அவள் செவிக்குக் காய்ச்சின நாராசம் போலிருந்ததாயினும், தன் பிதாவுக்குநேர்ந்த ஆபத்துக்காலத்தை நன்குணர்ந்து, அவனுக்கேற்றபடி நடந்து அவனைத் தேற்றுவதே தற்கால நிலைக்கேற்ற தனது கடமைப்பாடெனத் தெளிந்து அங்ஙனம் ஒப்புக்கொண்டதுமன்றி, தன்பாடு எங்ஙனம் ஆயினும், தன்னைச் சார்ந்தவர் சுகத்தைப் பாராட்டும் பெருங்குணத்தால், காதல்கொண்டிருக்கும் வாணி, தன்கருத்துக்கிசைய நடராஜனை மணஞ்செய்து கொள்ளவும், நெடுங்காலமாகத் தன் குடும்பஊழியம் தலைக்கொண்டு நின்ற நாராயணன் செய்த தவறு யாதேயாயினும் அதனைப் பொறுத்து அவனைச் சிறைவிடவும், தன்பிதாவினிடம் விரும்பிக் கேட்டுக் கொண்டனள். அப்படியே ஜீவகன் அனுமதிகொடுத்து அகமகிழ்ந்து மணவினைக்கு ஆயத்தம் செய்யவே, நடுநிசி சமீபிக்க முனிவரும் நடராஜனும் வந்துசேர்ந்தார்கள். தாம்போய் மீளுவதற்காகக் குடிலன்செய்த துராலோசனையும், அதற்குடன்பட்ட மன்னவனுடைய ஏழைமையையு்ம், கருணாவிலாசம் இருந்தமையையும் கண்டு வியந்து, அரசன் நி்ச்சயித்தவண்ணமே நடத்தச் சுந்தரர் இசைந்தார்.
- கற்படைக்கருகில் உள்ள மணவறையை விவாகமுகூர்த்தத்திற்கு இசைந்தவாறு அலங்கரித்து, அதில் குடிலன்ஒழிய மந்திரிப் பிரதானிகளுடன் முனிவர், ஜீவகன், நடராஜன், பலதேவன், நாராயணன் முதலிய அனைவரும்கூடிக் குடிலன் வரவிற்குச் சற்று எதிர்பார்த்திருந்தும் வரக்காணாமையால் மணவினைச் சடஙகுகள் தொடங்கிப் பலதேவனுக்கு மாலை சூட்ட மனோன்மணியை வரவழைக்கும் எல்லை, குடிலன் வழிகாட்ட, கற்படை வழிவந்த புருடோத்தமனும், முனிவர்அறையில் வந்துசேர்ந்து, அடுத்தஅறையாகிய மணவறையில் நடக்கும் ஆகோஷம் என்னவென்று நோக்கவே தன்திரைவிட்டு வெளிவந்து பலதேவன் எதிரே மணமாலையும் கையுமாய்ச்சித்திரப் பிரதிமைபோல உணர்வற்றுச் செயலற்று நின்றதன்காதலியாகிய மனோன்மணியைக் கண்ணிரண்டும் களிக்கக் காணலும், பள்ளத்துட் பாயும் பெருவெள்ளம்போல் அவாப் பெருகியீர்த்தெழ, திடீரென்று கடிதிற் குதித்து யாரும் அறியாது சபையுட்புகுந்து, கையற்ற சோகத்தால் மனமிறந்து நின்ற மனோன்மணிதன் கண்முன் நின்றனன். தன்னுள்ளத்திருந்த தலைவன் இங்ஙனம் பிரத்தியக்ஷப்படலும், அக்கணமே ஆனந்த பரவசப்பட்டு, மனோன்மணி, தான் கைக்கொண்ட மாலையை அவன்கழுத்தோடு சேர்த்துத் தற்போதமிழந்து, அவன்தோள்மேல் வீழ்ந்து மூர்ச்சையாயினள். இங்ஙனம் அயலான் ஒருவன் சபையுட் புகுந்ததும், மனோன்மணி அவனுக்கு மாலையிட்டு மூர்ச்சித்ததும் கண்டு ஜீவகனாதியர் திடுக்கிட்டுச் சூதெனக்கருதிப் பொருதற்கெழுங்கால், சுந்தரமுனிவர் கையமைத்துச் சமாதனம் பிறப்பிக்கப் புருடோத்தமன், குடிலன் தன்னிடத்தில் வந்து கூறிய துரோகச் சிந்தனையையும், தான் அதற்கிசையாது அவனையே கால்யாப்பிட்டு ஜீவகனுடன் ஒப்புவிக்கக் கொணர்ந்தமையையும் கூறிக் குடிலனை விலங்கும் காலுமாகச் சபைமுன் நிறுத்திவிட்டு, தனக்குயிர் நிலையாநின்ற மனோன்மணியுடன், தன் பாசறைக்கு மீளயத்தினிக்குமளவில், சுந்தரமுனிவர் ஆக்ஞையால் ஜீவகன் மனந்தெளிந்து மகளையும் மருமகனையும் வாழ்த்த அதுகண்ட யாவரும், கண்படைத்த பெரும்பயன் அடைந்து அருட்டிறம் புகழ்ந்து ஆனந்தம் அடைந்தனர்.
- இதுவே இந்நாடகத்துள்வரும் கதையின் சுருக்கம். இக்கதையை வேண்டுழிவேண்டுழி விரித்து, ஆங்கிலேய நாடகரீதியாக ஜீவகனாதியராகிய கதாபுருஷர்களுடைய குணாதிசயங்கள் அவர்அவர் வாய்மொழிகளால் வெளிப்படுத்தும்படி செய்திருப்பதுமன்றி, வாழ்த்து, வணக்கத்துடன் தொடங்கி, நாற்பொருள் பயக்கும் நடையினைக் கூடியஅளவும் தழுவி, தன்னிகரில்லாத் தலைவனையும் தலைவியையும் உடைத்தாய், மலைகட னாடு வளநகர் பருவம் இருசுடர்த்தோற்றம் என்றின்னவும், பிறவும் ஏற்புழிப்புனைந்து, நன்மணம் புணர்தலே முடிவாகக் கொண்டு, மந்திரம் தூது செலவிகல் வென்றி எனத் சந்தியிற் றொடர்ந்து, அங்கம் களம் என்னும் பாகுபாடுடைத்தாய் நிற்கும் இந் நாடகத்தில் தமிழ்க் காவியவுறுப்புகள் பற்பல ஆங்காங்கு வருவித்திருப்பதும் அன்போடு பார்ப்பார் கண்ணுக்குப் புலப்படலாம்.
சுந்தரனார் வாழ்க்கைக் குறிப்பு
|
- இல்லறம், துறவறம், பக்தி, ஞானி முதலிய மோக்ஷசாதனங்கள் பொருத்தமுடைய சந்திகளில் வெளிப்படையாக அமைந்திருப்பதுமல்லாமல், இக்கதையினையே ரூபகமாலாலங்காரமாகக் கருதின், தத்துவ சோதனை செய்யும் முமுக்ஷுகளுக்கு அனுகூலமாகப் பாவிக்கவும் கூடும். அப்படி உருவகமாலையாகக் கொள்ளுங்கால், ஜீவகனைச் சார்போதமான ஜீவாத்மா ஆகவும், அவனைத் தன்வசப்படுத்தி யாட்டுவித்த குடிலனை மாயாசக்தியாகவும், மனோன்மணியை ஜீவாத்மாவின் பரிபக்குவ காலத்துதிக்கமு முத்திக்குரிய உத்தமபாகமான சுத்தத்தத்துவமாகவும், அவள் தோழிவாணியைப் புத்தி தத்துவமாகவும், அவள் காதலனாகிய நடராஜனை ஞானதாதாவான உபாசனா மூர்த்தியாகவும், புருடோத்துமனை அனுக்கிரக சத்தியாகவும், சுந்தரமுனிவரைக் கருணாநிதியாகிய ஞானாசாரியராகவும், ஜீவகனுக்குத் தலைநகராகக் கூறிய முத்திபுரம் என்னும் மதுரையை ஜீவாத்மா உதித்தொடுங்கும் மூலத்தானமாகவும், அவனும் குடிலனும் சேர்ந்து கட்டிய நெல்வேலிக்கோட்டையை மாயாகாரியமான அன்னமயாதி பஞ்சகோசத்தால் அமைந்த சரீரமாகவும், அதிலிருந்து மனோன்மணி கண்ட கனாவைச் சுத்தாந்தக் கரண ஜநிதமான பரோக்ஷ ஞானமாகவும், சேரதேசத்தில் புருடோத்தமன் கண்டகனாவைப் பரம பசுபதியான ஈசுவரனது அருளின் ஸ்புரணமாகவும், மனோன்மணியும் புருடோத்தமனும் சந்திக்கக் காரணமாக முடிந்த முனிவர்கட்டிய சுருங்கையைப் பிரத்தியக்ஷாநுபூதிக்கு ஏதுவான பாச விமோசன பந்தாவாகவும், பிறவும் இம்முறையே பாவித்து உய்த்துணர்ந்து கொள்ளவேண்டியது.
- ஏறக்குறைய வாசகநடைக்குச் சமமான அகவற்பாவால் இந்நாடகம் பெரும்பாலும் ஆக்கப்பட்டிருக்கிறதினால், ஒருவர் மொழியாக வரும் ஒருவரியில், அகவல்அடி முடியாவிடங்களில், அடுத்தவரியில் வரும் சீரோடு சேர்த்து, ஆசிரிய அளவடியாக்கி முடித்துக்கொள்க.
- பலவேறு தொழில்களிடையிலும், பிணி கவலையாதிகள் நடுவிலும் ஆங்காங்கு அகப்பட்ட அவகாசங்களிற் செய்யப்பட்டமையால், இந் நாடகத்துட் பலபாகங்கள், என் சிற்றறிவிற்கே திருப்தி தருவனஅல்ல. பலகாரணங்களால், ஆங்காங்குப் பல வழுக்களும் வந்திருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றைத் திருத்தி, அனுபந்தத்துள் சேர்த்திருக்கிறேன். இவைபோன்றன பிறவும் உளவேல், கண்டுணர்த்தும் அன்புடையார்க்கு, எப்போதும் நன்றியறிதல் உடையனாய் இருப்பேன். கல்விகேள்விகளிற் சிறந்த கனவான்கள், இக்கூறிய குறைவுகளைப் பாராட்டாது, என்னை இம்முயற்சிக்குத் தூண்டிவிட்ட நன்னோக்கத்தையே கருதி, இந்நவீன நாடகத்தை அநாதரவு செய்யாது கடைக்கணித்து அருள்புரியப் பலமுறை பிரார்த்திருக்கின்றேன்.
- "பொறியின்மை யார்க்கும் பழியன்(று);அறிவறிந்
- தாள்வினை யின்மை பழி."
- குருசுந்தர சரணாயலயம்.
மனோன்மணீயம்/மூலம்(முதல்அங்கம்-பாயிரம்)
I
[தொகு]II
[தொகு]III
[தொகு]III:01 * III:02 * III:03 * III:04
IV
[தொகு]IV:01 * IV:02 * IV:03 * IV:04 * IV:05
V
[தொகு]V:01 * V:02 *மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 03-கதைச்சுருக்கம்* V:03
ஐக்கிய அமெரிக்காவிலும், பதிப்புரிமைக்கு உட்படக் கூடியக் காலம் ஆசிரியரின் வாழ் நாளுக்குப் பின் 100 ஆண்டுகளுக்கு மேற்படாதவாறுள்ள நாடுகளிலும், இப்படைப்பின் பதிப்புரிமைக் காலம் கடந்து விட்டதால் இப்படைப்பு பொது உரிமைப் பரப்பிலுள்ளது.