மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 03
Appearance
மனோன்மணீயம் நாடகம்
[தொகு]அங்கம் 01- மூன்றாம்களம்
[தொகு]இடம்: கொலுமண்டபம்.
காலம்: காலை.
(சீவகன், குடிலன், நாராயணன் உரையாடியிருக்க)
- (நிலைமண்டில ஆசிரியப்பா)
- சீவகன்
- நமக்கத னாலென்? நன்றே யாமெனத்
- தமக்குச் சரியாம் இடத்தில் தங்குக.
- எங்கே யாகினுந் தங்குக, நமக்கென்?
- ஆவலோ டமைத்தநம் புரிசையை அவர்மிகக்
- கேவலம் ஆக்கினர், அதற்குள கேடென்?
- குறைவென்? குடில! கூறாய் குறித்தே.
- குடிலன்
- குறையான் ஒன்றுங் கண்டிலன் கொற்றவ!
- நறையார் வேப்பந் தாராய்! நமதிடங்
- கூடல் அன்றெனுங் குறையொன் றுளது.
- நாடில் அஃதலால் நானொன் றறியேன் (வரி: 10)
- மேலும் தவசிகள் வேடந் தாங்கினோர்
- ஆலயம் ஒன்றையே அறிவர். முன்னொரு
- கோவில் அமைத்ததிற் குறைவிலா உற்சவம்
- ஓவ லிலாதே உஞற்றுமின் என்றவர்
- ஏவினர் அஃதொழித் தியற்றினம் இப்புரி
- ஆதலால் இங்ஙனம் ஓதினர், அதனை
- அழுக்கா றென்றுநா மையமற் றறைதல்
- ஒழுக்க மன்றே, குருவன் றோவவர்?
- சீவகன்
- ஐயரும் அழுக்காறடைந்தார், மெய்ம்மை
- கோவில் தானா காவலர் கடமை? (20)
- கேவலம், கேவலம், முனிவரும் ஆ!ஆ!
- குடிலன்
- அதிசய மன்றுபூ பதியே! இதுவும்.
- துறந்தார் முற்றும் துறந்தவ ரல்லர்.
- மறந்தார் சிற்சில. வறிதே தமக்கு
- மனோகர மாகிய சினகரம் ஒன்றில்
- உலகுள பொருளெலாம் உய்ப்பினும் பின்னும்
- நிலைபெற நிரம்பா தவர்க்குள வாசை.
- வசிட்டர் முன்னர் வாளாப் புகைத்தனர்
- முசிப்பிலா மன்னர் திரவிய முற்றும்.
- கௌசிகன் இரக்கவோர் மௌலி வேந்தன் (30)
- பட்டபா டுலகில் யாவரே பட்டுளர்?
- சிட்ட முனிவர்கள் செயலாற் பலகால்
- புரந்தரன் தனதுருக் கரந்து திரிந்தனன்.
- முனிவரே யாயினும் மனிதரே மீண்டும்.
- இச்சை யற்றவர் இச்சகத்து யாவர்?
- சீவகன்
- ஒவ்வும், ஒவ்வும்நீ உரைத்தது முற்றும்.
- நாராயணன்
- (தனதுள்)
- ஐயோ!பாவி! அருந்தவ முனிவரைப்
- பொய்யன் ஆக்குவன், புரவல னோவெனில்
- எடுப்பார் கைப்பிள்ளை, தடுப்பார் யாரே?
- (நேரிசை வெண்பா)
- நாராயணன்
- (அரசனை நோக்கி)
- கொல்லாய் எனப்பகைஞர் கோற்றொடியார் கும்பிட்டுப்
- பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபனே- பொல்லா
- வெறும்எலும்பை நாய்கௌவும் வேளைநீ செல்ல
- உறுமுவதென் நீயே உரை. (சேவகன் வர)
- (நிலைமண்டில ஆசிரியப்பா--- ---தொடர்ச்சி)
- சேவகன்
- மன்னிய கலைதேர் சகடர் வந்தனர்.
- சீவகன்
- (நாராயணனை நோக்கி)
- வரச்சொல் சேவக! உரைத்தநின் உவமையிற்
- சற்றே குற்ற முள்ளது நாரணா!
- குடிலன்
- (தனதுள்)
- அரசன் மாறாய்ப் பொருள்கிர கித்தனன்
- (அரசனை நோக்கி)
- வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற்
- குற்றங் காணக் குறுகுதல், முற்றும்
- மணற்சோற் றில்கல் தேடுதல் மானும். (சகடர் வர)
[தொகு]
- சீவகன்
- (சகடரை நோக்கி)
- சுகமோ யாவரும் முதிய சகடரே!
- மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள்
- ஆயின தன்றே? --- ----
- சகடர்
- --- ---- ஆம்! ஆம்! அடியேன்.
- சீவகன்
- மேயின விசேடமென்? விளம்புதிர், என்குறை?
- சகடன்
- அறத்தா றகலா(து) அகலிடங் காத்துப்
- பொறுத்ததோட் புரவல! உன்குடை நீழற்
- பொருந்தும் எங்கட்(கு) அரந்தையும் உளதோ?
- சுகமிது காறும். அகமகிழ் வுற்றுன்
- மந்திரத் தலைவன் குடிலன் மகற்கே
- எந்தன் புதல்வி வாணியை வதுவையிற்
- கொடுக்கவோ ராசை, கொற்றவ! மற்றது
- முடிக்கநின் கருணையே முற்றும்வேண் டுவனே.
- சீவகன்
- சீலஞ் சிந்தை கோல மனைத்துஞ்
- சாலவும் பொருந்தும் சகடரே! அதனால் (60)
- களித்தோம் மெத்த ஏ!ஏ! குடில!
- ஒளித்த தென்நீ உரையா தெமக்கே?
- குடிலன்
- ஆவ தாயின் அறிவியா தொழிவனோ?
- சீவகன்
- இடையூ றென்கொல்? இடியே றன்ன
- படையடு பலதே வன்றான் ஏதோ
- விரும்பினன் போலும், வேறோர் கரும்பே!
- குடிலன்
- இல்லையெம் இறைவ! எங்ஙனம் உரைக்கேன்!
- சொல்லிற் பழிப்பாம். சகடரே சொல்லுக.
- சீவகன்
- என்னை? சகடரே! இடையூ றென்னை?
- சகடர்
- பரம்பரை யாய்உன் தொழும்புபூண் டொழுகும் (70)
- அடியனேன் சொல்பழு தாயின தில்லை.
- முடிவிலாப் பரிவுடன் வளர்த்தவென் மொய்குழல்
- ஒருத்தியே யென்சொல் வியர்த்தம் ஆக்குவள்.
- ஒருதலை யாயிம் மணத்திற் குடன்படாள்.
- விரிதலைப் பேய்போல், வேண்டிய விளம்பியும்
- ஓராள் ஒன்றும்! உணராள் தன்னயம்;
- நேராள் ஒருவழி, பாராள் நெறிமுறை;
- என்னயான் செய்கேன்? இதன்மே லெனக்கும்
- இன்னல் தருவதொன் றில்லை, தாதையர்
- மாற்றங் கேளா மக்கள் கூற்றுவர் (80)
- எனுமொழி யெனக்கே அனுபவம் இறைவ!
- உரைத்தவென் கட்டுரை பிழைத்திடப் பின்னுயிர்
- தரித்திருந் தென்பயன்? சாவோ சமீபம்
- நரைத்த தென்சிரம், திரைத்த தென்னுடல்
- தள்ளருங் காலம், பிள்ளையும் வேறிலை.
- என்னுரை காத்துநீ யிம்மண முடிக்க
- மன்னவ! கிருபையேல் வாழ்தும் இவ்வயின்,
- இல்லையேல் முதியவென் னில்லா ளுடன்இனிச்
- (கண்ணீர் துளிக்க)
- செல்ல விடையளி, செல்லுதுங் காசி.
- சீவகன்
- ஏனிது சகடரே! என்கா ரியமிது! (90)
- தேன்மொழி வாணி செவ்விய குணத்தாள்.
- காணி லுரைப்பாம், வீணிவ் வழுகை.
- நாராயணன்
- (தனதுள்)
- பாதகன் கிழவன் பணத்திற் காக
- ஏதுஞ் செய்வன், இறைவனோ அறியான்
- ஓதுவங் குறிப்பாய், உணரில் உணர்க.
- (அரசனை நோக்கி)
- (நேரிசை வெண்பா)
- மாற்றலர்தம் மங்கையர்க்கு மங்கலநா ணங்கவிழ
- ஏற்றியநாண் விற்பூட்டு மேந்தலே- சோற்றதற்காய்த்
- தன்மகவை விற்றவரிச் சந்திரனு முன்னவையில்
- என்மகிமை யுள்ளா னினி.
- (நிலைமண்டில ஆசிரியப்பா, --- தொடர்ச்சி)
- சீவகன்
- தனிமொழி என்னை? -- ---
- நாராயணன்
- --- --- சற்றும் பிசகிலை
- நீட்டல் விகாரமாய் நினையினும் அமையும்.
- சீவகன்
- காட்டுவ தெல்லாம் விகாரமே, காணாய்
- கிழவரின் அழுகை --- ---
- நாராயணன்
- --- ---- சிலவரு டந்தான்
- நெடுநாள் நிற்கும் இளையவர் அழுகை (100)
- சீவகன்
- விடுவிடு! நின்மொழி யெல்லாம் விகடம்.
- (நாராயணன் போக)
- (சகடரை நோக்கி)
- அறிவிர்கொல் அவளுளம்? --- ----
- சகடர்
- --- ---- சிறிதியா னறிவன்,
- திருநட ராசனென் றொருவனிங் குள்ளான்.
- பொருவரும் புருடன்மற் றவனே யென்றவள்
- சொல்வது கேட்டுளர் சிற்சில தோழியர்.
- குடிலன்
- (அரசனை நோக்கி)
- நல்லதப் படியே நடக்கிலென்? இவர்க்கும்
- பொல்லா முரண்டேன்? --- ---
- சகடர்
- (குடிலனை நோக்கி)
- --- --- போம்!போம்! உமது
- குழந்தையேல் இங்ஙனம் கூறீர்! முற்றும்,
- இழந்திட வோவெனக் கித்தனை பாடு?
- பூவையை வளர்த்துப் பூனைக் கீயவோ? (110)
- (அரசனை நோக்கி)
- காவலா! அவனைப் போலயான் கண்டிலன்;
- சுத்தமே பித்தன், சொல்லுக் கடங்கான்,
- தனியே யுரைப்பன், தனியே சிரிப்பன்;
- எங்கேனு மொருபூ இலைகனி அகப்படில்
- அங்கங் கதனையே நோக்கி நோக்கித்
- தங்கா மகிழ்ச்சியில் தலைதடு மாறுவன்.
- பரற்கலும் அவனுக் ககப்படாத் திரவியம்!
- ஆயிரந் தடவை யாயினும் நோக்குவன்,
- பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை?
- சீவகன்
- ஆமாம் யாமும் கண்டுளேஞ் சிலகால் (120)
- நின்றால் நின்ற படியே; அன்றி
- இருக்கினும் இருப்பன் எண்ணிலாக் காலம்.
- சிரிக்கினும் விழிக்கினும் நலமிலை தீயதே.
- அவனன் றோமுன் அஞ்சைக் களத்தில் ....
- குடிலன்
- அவன்றான்! அவன்றான்! அழகன்! ஆனந்தன்
- சீவகன்
- அழகிருந் தென்பயன்? தொழிலெலாம் அழிவே
- எங்கவன் இப்போது? --- ---
- குடிலன்
- --- --- இங்குளன் என்றனர்.
- சிதம்பரத் தனுப்பினேன்; சென்றிலன், நின்றான்.
- இதந்தரு நின்கட் டளையெப் படியோ?
- சீவகன்
- மெத்தவும் நன்மை; அப்படி யேசெய். (130)
- குடிலன்
- சித்தம், ஆயினும் செல்கிலன். முனிவர்
- பிரியனா தலினாற் பெயர்ந்திலன் போலும்!
- சரியல, இராச்சிய தந்திரத் தவர்க்கென்?
- சீவகன்
- (சகடரை நோக்கி)
- நல்லது சகடரே! சொல்லிய படியே
- மொழிகுவம் வாணிபால்! மொய்குழற் சிறுமி
- அழகினில் மயங்கினள்; அதற்கென்? நும்மனப்
- படியிது நடத்துவம். விடுமினித் துயரம்.
- சகடர்
- இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி
- திவ்விய திருவடி வாழுக சிறந்தே!
- (சகடர் போக, செவிலி வர)
[தொகு]
- சீவகன்
- (செவிலியின் முக நோக்கி)
- என்னை இவள்முகம் இப்படி யிருப்பது?
- தோற்றம்நன் றன்றே! --- ----
- செவிலி
- --- --- நேற்றிரா முதலா
- சீவகன்
- பிணியோ என்கண் மணிக்கு? ---
- செவிலி
- -- -- -- பிணியா
- யாதுமொன் றி்ல்லை, ஏதோ சிறுசுரம்.
- சீவகன்
- சுரம்!சுரம்! ஓ!ஓ! சொல்லுதி யாவும்
- அரந்தையொன் றறியாள்! ஐயோ! விளைந்தவை
- உரையாய் விரைவில், ஒளிக்கலை ஒன்றும்
- வந்தவா றென்னை? நடந்தவா றென்னை?
- செவிலி
- அறியேம் யாங்கள், ஐய!அம் மாயம்
- நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப
- நம்மனை புகுந்த செல்வி, எம்முடன் (150)
- மாலையி லீலைச் சோலை யுலாவி
- அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு
- நயவுரை பலவுங் குயிலின் மிழற்றி
- மலைய மாருதம் வந்துவந் துந்த
- நிலவொளி நீந்திநந் நெடுமுற் றத்துப்
- பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே
- துணைபுண ரன்னத் தூவி யணைமிசைக்
- கண்படு மெல்லை - கனவோ நினைவோ-
- 'நண்ப என்னுயிர் நாத'வென் றேங்கிப்
- புண்படு மவள்போற் புலம்புறல் கேட்டுத் (160)
- துண்ணென யாந்துயி லகற்றிப் புக்குழி,
- குழலுஞ் சரியும், கழலும் வளையும்
- மாலையும் கரியும், நாலியும் பொரியும்;
- விழியும் பிறழும்; மொழியுங் குழறும்;
- கட்டழ லெரியும், நெட்டுயிர்ப் பெறியும்
- நயனநீர் மல்கும், சயனமே லொல்கும்
- இவ்வழி யவ்வயிற் கண்டுகை நெரியா;
- தெய்வம் நோந்தேம் செய்கட னேர்ந்தேம்
- அயினிநீர் சுழற்றி அணிந்தேம் பூதி
- மயிலினை மற்றோ ரமளியிற் சேர்த்துப் (170)
- பனிநீர் சொரிந்து நனிசேர் சாந்தம்
- பூசினேம்; சாமரை வீசினேம்; அவையெலாம்
- எரிமே லிட்ட இழுதாய் அவட்கு
- வரவர மம்மர் வளர்க்கக் கண்டு
- நொந்தியா மிருக்க, வந்தன வாயசம்
- 'காகா' இவளைக் காவெனக் கரைந்த
- சேவலுந் திகைத்துத் திசைதிசை கூவின
- கங்குல் விடிந்தும் அங்கவள் துயரஞ்
- சற்றும் சாந்த முற்றில ததனால்
- அரசநீ அறியிலெஞ் சிரசிரா தென்றே (180)
- வெருவி யாங்கள் விளைவ துரைக்கும்
- நிமித்திகர்க் கூஉய்க் கேட்டோம் நிமித்தம்
- பெண்ணை யந்தார் சூடிட நுந்தம்
- பெண்ணை யந்தார் சூட்டெனப் பேசினர்
- எண்ணம் மற்றவர்க் கியாதோ அறியேம்
- பனம்பூச் சூடியும் முனம்போ லவேசுரம்
- ஏது மறியாப் பேதை! நேற்றுத்
- தவஞ்செய ஆசை யென்றவள் தனக்குக்
- காதனோய் காணவோ ரேதுவு மில்லை.
- எந்தாய் இருக்கு நிலைமை இனிநீ (190)
- வந்தே காண்குதி மன்னவ ரேறே!
- சீவகன்
- ஆ!ஆ! நோவிது காறுமொன் றறிகிலன்
- இதுவென் புதுமை? என்செய் கோயான்?
- குடிலன்
- தவஞ்செய ஆசை யென்றுதாய் நவின்ற
- வாக்கு நோக்கின் முனிவர் மந்திரச்
- செய்கையோ என்றோர் ஐயம் ஜனிக்கும்
- நேற்றங் கவட்கவர் சாற்றிய மாற்றம்
- அறியலாந் தகைத்தோ? --- ---
- சீவகன்
- --- --- வறிதவ் வையம்
- மொழியொரு சிறிதும் மொழிந்திலர், கண்டுழி
- அழுதனர், அழுதாள் உடன்நம் அமுதும் (200)
- ஆசி பேசியங் ககலுங் காலை
- ஏதோ யந்திரம் எழுதிவைத் திடவோர்
- அறையுட னங்கணந் திறவுகோ லோடு
- தமக்கென வேண்டினர், அளித்தன முடனே
- நமக்கதி னாலென்? நாமறி யாததோ?
- என்னோ அறியேன் இந்நோய் விளைவு?
(சீவகனும் செவிலியும் போக)
- குடிலன்
- யந்திரத் தாபன மோஅவர் எண்ணினர்?
- அவ்வள வறிவி லாரோ முனிவர்?
- அவ்வள வேதான்; அன்றியென்? ஆயினும்
- எத்தனை பித்தனிவ் வரசன்! பேதையின் (210)
- இத்திறங் காமம் என்பதிங் கறியான்
- உரைக்குமுன் கருதுவம் நமக்குறு நலமே.
(குடிலன் போக)
முதல் அங்கம் மூன்றாம் களம் முற்றிற்று
[தொகு]பார்க்க:
[தொகு]I. முதல் அங்கம்
[தொகு]- மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 01
- மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 02
- மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 04
- மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 05
- மனோன்மணீயம்(ஆசிரிய முகவுரை, கதைச்சுருக்கம்.)
- மனோன்மணீயம் மூலம் (அங்கம் 01- பாயிரம்)