மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 02

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மனோன்மணீயம்[தொகு]

அங்கம் ஐந்து[தொகு]

இரண்டாம் களம்[தொகு]

இடம்
கன்னிமாடத் தொருசார்.
காலம்
யாமம்.
(சில தோழிப்பெண்களும், ஒரு கிழவியும் அளவளாவியிருக்க).
(நிலைமண்டில ஆசிரியப்பா)


கிழவி:

எதுக்குமிவ் விளக்கும் இச்சிறு செம்பும்
ஒதுக்கிவை அம்மா! உதவும் வழியில்.

முதற்றோழி:

என்னடி கிழவி சொன்னால் அறிகிலை.
போம்வழி அறியோம்! போமிடம் அறியோம்!
மந்திரக் குளிகையோ! அந்தர மார்க்கமோ!
மூட்டையேன்? முடிச்சேன்? கேட்டியோ தோழி?
காது மில்லை! கண்ணு மில்லை!
ஏது மில்லை! ஏனுயிர் இருப்பதோ?

கிழவி:

கிழவிபேச் சேற்குமோ கின்னரக் காரிக்கு!
படும்போ தறிவை!இப் படியே பண்டு
முன்னொரு சண்டையில் உன்னைப் பெறுமுன்
ஓடினோம்....

முதற்றோழி:

.... போடீ! உன்கதை அறிவோம்.

(கிழவி போக)

சிரிக்கவா? என்செய? சிவனே! சிவனே!

(நகைக்க)

இரண்டாம்தோழி:

அம்மணி என்செய்தாள்? அக்காள்! அதன்பின்
’அப்படி அரசன் மீண்டான்’. செப்பாய்!

முதற்றோழி:

எப்படிச் செப்பயான்? ஏந்திழை பட்டபாடு,
அய்யோ! அத்துயர் தெய்வமே அறியும்!
மன்னவன் வாசல் கடந்தான் எனுமுனம்
தன்னிலை தளர்ந்தாள், சாய்ந்தாள்; வாணியும்
அருகுள செவிலியும் யானுமாய் விரைவில்
தாங்கினோம், பாங்குள் அமளியிற் சேர்த்தோம்.
மூச்சிலை, பேச்சிலை; முகமெலாம் வெயர்வை
இட்டகை இட்டகால் இட்டவப் படியே
இப்படி முடிந்ததே! இனியென் செய்வோம்?
தப்புமோ இவ்வொரு தத்துமென் றெண்ணி
ஏங்கினோம், தியங்கினோம், பாங்கிருந் தழுதோம்.

இரண்டாம்தோழி:

ஐயோ தெய்வமே! அப்போ தவளுயிர்
பட்டபா டெதுவோ! கட்டம் கட்டம்!

முதற்றோழி:

விதியிது! அலதிது கதையிலும் உளதோ?
நொந்தபுண் அதனிலே வந்திடும் நூறிடி.
தந்தை தேறிடத் தன்துயர் மறைத்து
மகிழ்ச்சி காட்டினள், வந்ததித் தளர்ச்சி.
மூடிடில் தீயும் மூளுமும் மடங்காய்.

இரண்டாம் தோழி:

எத்தனை வேதனை? எத்தனை சோதனை?
யாது மறியாட் கேதித் துணிபு?
ஓதிய கட்டுரை ஒருமுறை இனியும்
நவிலுதி அக்காள்!

முதற்றோழி:

.... .... நங்கைநன் மொழியென்
செவியிடை இனியும் மணிபோல் திகழும்
அரசனை அடிபணிந் தொருசார் ஒதுங்கி
நீக்கமில் அன்பும் ஊக்கமும் களிப்பும்
காட்டிய மதிமுகம் கோட்டியே நின்ற
தோற்றமென் கண்ணின் மாற்றுதல் அரிதே!
“என்னோ இதற்கும் யோசனை எந்தாய்!
கொன்னே வருந்தலை! கொள்கையில் பிறழா
நீதிநம் பாலெனில் நேர்வது ஜயமே!
ஏததற் கையம்? இதுவிட் டடிமை
பெயர்வது பெரிதல, பேருல கதற்குத்
துயர்வரும் எல்லைநம் துயர்நோக் குதலோ
பெருமை! அண்ணிதே முனியிடம்; கருதிய
பிரிவோ ஒருதினம்! குருவும் தந்தையும் (50)
சமமெனிற் சுந்தர விமலன் தன்திருப்
பாதா தரவே போதா தோதுணை?
ஆயினும், அத்தனை அவசிகம் ஆயின்
ஆகுக ஆஞ்ஞைப் படியே! தடையிலை.
அன்னையும் நின்னை அன்றிவே றறியேன்,
உன்னதே இவ்வுடல். உன்திரு வுள்ளம்
உன்னிய படியெலாம் உவப்பச் செய்குவன்.
அடிமையின் கவலையால் அரசர்க் கியல்பாம்
கடமையிற் பிறழும் கலக்கம் விலக்குவை!
அன்பாம் உன்பால் ஐய! உன்மகள்
வேண்டும் வரமெலாம் யாண்டுமிவ் வொன்றே.

அடிகள்:62-104[தொகு]

இரண்டாம்தோழி:

மொழியோ இதுவும்? ஆஆ! ஆஆ!
இதுவெலாம் காணவோ எழுதினன் பிரமன்?

முதற்றோழி:

எதுவெலாம் காணவோ இருப்பது இக்கண்!

இரண்டாம் தோழி:

என்செய் கின்றனள் இப்போது ஏழை? (65)

முதற்றோழி:

வஞ்சியிவ் வறையே வருவள் வல்லை!
ஏதோ எழுது கின்றனள். வாணி
கோதிநின் றாற்று கின்றனள் கூந்தல்.

இரண்டாம் தோழி:

நீரா டினளோ இந்நிசி?

முதற்றோழி:

.... .... .... ஆம்ஆம்!
எழுந்து வாசநீ ராடி முன்சுரத் (70)
தழுந்திய அன்றுதான் அணிந்தவெண் பட்டினைக்
கொடுவரப் பணித்தங் கதுவே தரித்து
நெடுநுதல் திலகமும் நேர்படத் தீட்டி,
அன்றிரா அணிந்தமுத் தாரமும் அணிந்து,
நின்றுதன் நிலையெலாம் ஆடியில் நோக்கி, (75)
‘நன்றோ நங்காய்! வாணி! நவிலுதி!
அன்றுபோல அஃன்றோ இன்றென் நிலைமை!’
என்று சிறுமுறு வலித்தனள், என்சொல?
உருவமும் உடையும் உரையும் நடையும்
சருவமும் பாவனை பண்ணியும்... (80)

(அழ) (மனோன்மணியும், வாணியும் வர)

இரண்டாம்தோழி:

.... .... .... அஃதோ!
வந்தனள் காணுதி. வாணியும் பின்னுளள்.
மறைகுவம் அவ்வறை. வருகஇவ் வழியே!

(தோழிமார் போக)

மனோன்மணி:

எந்தைபோல் தயாநிதி எங்கணும் இல்லை.
வந்தனம் வழங்கவும் வாய்கூ சுவதே!
ஏதோ ஒருவிதம் எழுதினேன் என்க! (85)
வாணிஉன் மணத்திற் கிசைந்தான் மன்னன்.
காணா யீதோ அதற்குள கட்டளை.

(திருமுகங் காட்ட, வாணி வாசிக்க)

சொன்னேன் அன்றோ வாணீ! முன்னமே
அன்னை தந்தையர் அன்பறி யார்சிறார்.

வாணி:

இத்தரு ணத்தில் இதுவென்? அம்மணீ! (90)
சத்தியம். எனக்கிது சம்மதம் அன்று.
நினைப்பருந் துயரினில் நீயிவண் வருந்த
எனக்கிது தகுந்தகும்! ஏதிது தாயே!
உன்மனப் படியெலாம் உறுங்காற் காண்குவம்.

மனோன்மணி:

என்மனப் படியெது? எனக்கொரு மனதோ? (95)
எந்தையின் மனப்படி என்மனப் படியே.
வந்தவிச் சுரத்திடை மாண்டதென் சித்தம்.

வாணி:

ஆயினும் அம்மா யாரிஃ தறியார்?
பாயிருள் தொகுதியும் பரிதியும் கொடிய
வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும் (100)
பொருந்தினும் பொருந்தீர், ஐயோ! இத்தகைப்
பெருந்துயர்க் கெங்ஙனம் இசைந்தனை என்க.
என்னையுன் நினைவோ! என்னையுன் துணிபோ!
இன்னன மகிழ்ச்சியில் என்மண மேகுறை! (அழ)

அடிகள்: 105-167[தொகு]

மனோன்மணி:

வருந்தலை வாணி! வாவா, இன்னும் (105)
தெரிந்திலை. ஐயோ! சிறுமியோ நீயும்
உண்மையான் உரைத்தேன், உணருதி உறுதி.
என்மனம் ஆரவே இசைந்தேன், மெய்ம்மை.
ஏதென எண்ணினை இவ்வுயிர் வாழ்க்கை?
தீதற இன்பம்நீ துய்க்க எண்ணில் (110)
ஈதல இதற்காம் உலகம், இமையவர்
வாழ்க்கையி லுந்துயர் வந்துறும் எனிலிவ்
யாக்கையில் அமையுமோ நீக்கமில் இன்பம்?
எனக்கெனக் கென்றெழும் இச்சையா திகளெனும்
மனக்களங் கங்களாம் மாசுகள் அனைத்தும் (115)
தேய்த்தவை மாற்றித் திகழொளி யேற்றி
மண்ணிய மணியாப் பண்ணிட என்றே
வைத்தவிக் கடிய வாழ்க்கையாம் சாணையைப்
பைத்தபூஞ் சேக்கையாப் பாவித் துறங்க
யத்தனஞ் செய்திடும் ஏழையர் போல (120)
என்னைநீ எண்ணினை! வாணி! இந்தச்
சுகவிருப் பேநமைத் தொழும்புசெய் பந்தம்
தவமே சுபகரம். தவமென்? உணருவை?
உடுப்பவை உண்பவை விடுத்தரண் அடைந்து
செந்தீ ஐந்திடைச் செறிந்தமைந் துறைதல் (125)
ஆதியா ஓதுப அல்ல, அவற்றைத்
தீதறு தவமெனச் செப்பிடார் மேலோர்.
இவ்வுயிர் வாழ்க்கையில் இயைந்திடும் துயரம்
ஐயோ! போதா தென்றோ அன்னோர்
போனகம் துறந்து கானகம் புகுந்து (130)
தீயிடை நின்று சாவடை கின்றார்?
தந்தைதா யாதியா வந்ததன் குடும்ப
பந்தபா ரத்தினைப் பேணித் தனது
சொந்தமாம் இச்சைகள் துறந்து மற்றவர்க்
கெந்தநா ளுஞ்சுகம் இயைந்திடக் கடமையின் (135)
முந்துகின் றவரே முதற்றவ முனிவர்.

வாணி:

அத்தகைத் தவமிங் கடியேன் தனக்கும்
ஒத்ததே அன்றோ?

.... .... ஒத்ததே யார்க்கும்.
மேம்படக் கருதில் ஓம்புதி நீயும்.
அடுத்தவர் துயர்கெடுத் தளித்தலே யானிங்கு (140)
எடுத்தநற் றவத்தின் இலக்கணம் ஆதலின்
நடேசனை நச்சுநின் நன்மணம் அதுவும்
விடாதெனை அடுத்த வீரநா ரணன்றன்
கடுஞ்சிறை தவிர்த்தலும் கடனெனக் கருதி
எழுதினேன் இஃதோ! வழுதியும் இசைந்தான். (145)
என்கடன் இதுவரை, இனியுன் இச்சை.

வாணி:

ஆயிடிற் கேட்குதி அம்மணீ! என்சூள்,
கண்டவர்க் கெல்லாம் பண்டைய வடிவாய்
நீயிவண் இருக்க நின்னுளம் வாரி
வெள்ளிலா மெள்ள விழுங்கி இங்ஙனம் (150)
வேதகம் செய்த போதக யூதபம்
பேரிலா ஊரிலாப் பெரியோன் அவன்றான்
யாரே ஆயினும் ஆகுக, அவனைநீ
அணையுநாள் அடியேன் மணநாள், அன்றேல்
இணையிலா உன்னடிக் கின்றுபோல் என்றும் (155)
பணிசெயப் பெறுவதே பாக்கியம் எனக்கு.
கடமையும் பிறவும் கற்றறி யேன்விடை
மடமையே ஆயினும் மறுக்கலை மணியே!

மனோன்மணி:

பேதைமை அன்றோ ஓதிய சபதம்!
ஏதிது வாணி! என்மனம் தனக்கோ (160)
இனியரை நாழிகை. இதற்குள் ஆவதென்?
அன்பின் பெருக்கால் அறைந்தனை போலும்.
மன்பதை உலகம் வாஞ்சா வசமே.

வாணி:

உடலலால் உயிரும், விழியலால் உணர்வும்
கடபட சடமலாற் கடவுளும் இலையேல் (165)
வேண்டிய விளைக! விசனமென்? அன்றேற்
காண்டியவ் வேளை கருணையின் இயல்பே.

(இருவரும் போக)

ஐந்தாம் அங்கம், இரண்டாம்களம் முற்றிற்று.[தொகு]

V[தொகு]

மனோன்மணீயம்: ஐந்தாம்அங்கம், இரண்டாங்களத்தின் கதைச்சுருக்கம்

மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 01

மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 03

மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 04

மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 05

மனோன்மணீயம் மூலம்(முதல்அங்கம்-பாயிரம்)

பார்க்க:[தொகு]

மனோன்மணீயம்(ஆசிரியமுகவுரை, கதைச்சுருக்கம்.)
மனோன்மணீயம்/மூலம்(முதலங்கம் பாயிரம்.)

I

I:1- I:2- I:3- I:4- I:5*

II

II:1/ II:2/ II:3/

III

III:1 III:2 III:3 III:4

IV

IV:1 IV:2 IV:3 IV:4 V:5