மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 02

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மனோன்மணீயம்-நாடகம்[தொகு]

அங்கம் 01[தொகு]

இரண்டாம் களம்[தொகு]

இடம்: கன்னிமாடம்.

காலம்: எற்பாடு.(கதிரவன் மறையும்நேரம்)

(மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடியிருக்க)

(ஆசிரியத் தாழிசை)
மனோன்மணி
துணையறு மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன்
அணைகிலன் அரன்முன்என்(று) ஆடாய் கழல்
அணைத்துநீ றானான்என்(று) ஆடாய் கழல். (01)
வாணி
நீறாயி னால்என்னை நேர்மலர் பட்டபுண்
ஆறா வடுவேஎன் றாடாய் கழல்
அழலாடுந் தேவர்க்கென்(று) ஆடாய் கழல். (02)
மனோன்மணி
இருளில் தனித்துறை ஏழையர் தங்கள்மேற்
பொருதலோ வீரமென் றாடாய் கழல்
போயெரிந்தான் பண்டென்(று) ஆடாய் கழல். (03)
வாணி
எரிந்தன னாயிலென் என்றென்றுந் தம்முடல்
கரிந்தது பாதியென் றாடாய் கழல்
கடுவுண்ட கண்ணர்க்கென் றாடாய் கழல். (04)
மனோன்மணி
தெருவில் பலிகொண்டு திரிதரும் அம்பலத்
தொருவர்க்(கு) உடைந்தான்என் றாடாய் கழல்
உருவங் கரந்தானென் றாடாய் கழல். (05)
வாணி
உருவங் கரந்தாலென் ஓர்மல ரம்பினால்
அரையுரு வானாரென் றாடாய் கழல்
அந்நட ராஜரென் றாடாய் கழல். (06)
(பெருமூச்செறிய)
(நேரிசை ஆசிரியப்பா)
மனோன்மணி
(சிரித்து)
ஏதடி வாணி! ஓதிய பாட்டில்
ஒருபெயர் ஒளித்தனை பெருமூச் செறிந்து?
நன்று! நன்று! நின் நாணம்
மன்றலும் ஆனது போலும்வார் குழலே! (பா-1)
வாணி
ஏதம் மாநீ சூது நினைத்தனை?
ஒருபொரு ளும்யான் கருதினே னல்லேன்.
இச்சகத் தெவரே பாடினும்,
உச்சத் தொனியில் உயிர்ப்பெழல் இயல்பே. (பா-2)
மனோன்மணி
மறையேல்! மறையேல்! பிறைபழி நுதலாய்!
திங்கள் கண்டு பொங்கிய கடலெனச் (10)
செம்புனல் பரக்கச் செந்தா மரைபோற்
சிவந்தவுன் கபோல நுவன்று, நின்மனக்
களவெலாம் வெளியாக் கக்கிய பின்னர்
ஏதுநீ ஒளிக்குதல்? இயம்பாய்
காதலன் நேற்றுனக்(கு) ஓதிய(து) எனக்கே. (பா-3)
வாணி
ஐயோ! கொடுமை! அம்மா அதிசயம்!
எருதீன்ற(து) எனுமுனம் என்னகன்(று) என்று
திரிபவர் ஒப்பநீ செப்பினை?
நான்கண் டேநாள் நாலைந் தாமே. (பா-4)
மனோன்மணி
ஏதடி! நுமது காதல் கழிந்ததோ? (20)
'காணா(து) ஒருபோதும் இரோம்'எனும் கட்டுரை
வீணா யினதோ? பிழைத்தவர் யாவர்?
காதள வோடிய கண்ணாய்
ஓதுவாய் என்பால் உரைக்கற் பாற்றே. (பா-5)
வாணி
எதனையான் இயம்புகோ? என்றலை விதியே.
(கண்ணீர் சிந்தி)
வா!விளை யாடுவோம் வாராய்
யார்முறை ஆடுதல்? வார்குழல் திருவே! (பா-6)
மனோன்மணி
ஏனிது! ஏனிது வாணீ! எட்பூ
ஏசிய நாசியாய்! இயம்புக
மனத்திடை அடக்கலை! வழங்குதி வகுத்தே. (30) (பா-7)
வாணி
எப்படி உனக்கியான் செப்புவே னம்மா!
தலைவிதி தடுக்கற் பாற்றோ? தொலைய
அனுபவித் தன்றோ அகலும்? மனையில்
தந்தையுங் கொடியன்; தாயுங் கொடியள்!
சிந்தியார் சிறிதும் யான்படும் இடும்பை,
என்னுயிர்க் குயிராம் என்கா தலர்க்கும்
இன்னல் இழைத்தனர், எண்ணிய வெண்ணம்
முதலையின் பிடிபோல் முடிக்கத் துணிந்தனர்
யாரொடு நோவேன்? யார்க்கெடுத் துரைப்பேன்?
வார்கடல் உலகில் வாழ்கிலன் (40)
மாளுவன் திண்ணம், மாளுவன் வறிதே? (பா-8)
மனோன்மணி
முல்லையின் முகையும் முருக்கின் இதழும்
காட்டுங் கைரவ வாயாய்! உனக்கும்
முரண்டேன்? பலதே வனுக்கே மாலை
சூடிடிற் கேடென்? காதால்
வள்ளையின் அழகெலாங் கொள்ளைகொள் அணங்கே! (பா-9)
வாணி
அம்மொழி வெம்மொழி அம்ம! ஒழிதி
நஞ்சும் அஞ்சிலேன், நின்சொல் அஞ்சினேன்
இறக்கினும் இசையேன். தாமே துறக்கினும்
மறப்பனோ என்னுளம் மன்னிய ஒருவரை? (50)
ஆடவ ராகமற் றெவரையும்
நாடுமோ நானுள வளவுமென் உளமே? (பா-10)
மனோன்மணி
வலம்புரி புறத்தெழு நலந்திகழ் மதியென
வதியும் வதன மங்காய்! வாணீ!
பேய்கொண் டனையோ? பித்தே றினையோ?
நீயென் நினைத்தனை? நிகரில் குடிலன்
தன்மக னாகிச் சாலவும் வலியனாய்
மன்னனுக் கினியனாய் மன்பல தேவனும்
உன்னுளம் கவர்ந்த ஒருவனும் ஒப்போ?
பேய்கொண் டனையோ? பேதாய் (60)
வேய்கொள் தோளி! விளம்பா யெனக்கே. (பா-11)
வாணி
அறியாய் ஒன்றும், அம்ம! அரிவையர்
நிறையழி காதல் நேருந் தன்மை
ஒன்றுங் கருதி யன்(று)அவர் உள்ளஞ்
சென்று பாய்ந்து சேருதல். திரியும்
காற்றும் பெட்பும் காரணம் இன்மையில்
ஆற்றவும் ஒக்குமென்(று) அறைவர்
மாற்றமென்? நீயே மதிமனோன் மணியே! (பா-12)
மனோன்மணி
புதுமைநீ புகன்றது. பூவைமார் காதல்
இதுவே யாம்எனில் இகழ்தற் பாற்றே! (70)
காதல் கொள்ளுதற்(கு) ஏதுவும் இல்லையாம்
தானறி யாப்,பே யாட்டந் தானாம்!
ஆயினும் அமைந்துநீ ஆய்ந்துணர்ந் தோதுதி.
உண்டோ இவர்தமில் ஒப்பு?
கண்டோ எனுமொழிக் காரிகை அணங்கே! (பா-13)
வாணி
ஒப்புயான் எப்படிச் செப்புவன்? அம்ம!
என்னுளம் போயிறந் ததுவே
மன்னிய ஒருவன் வடிவுடன் பண்டே. (பா-14)
மனோன்மணி
பித்தே பிதற்றினை, எத்திற மாயினும்
தாந்தம் உளத்தைத் தடைசெயில் எங்ஙனம், (80)
காந்தள் காட்டும் கையாய்!
தவிர்ந்தது சாடி யோடிடும் வகையே? (பா-15)
வாணி
ஈதெல்லாம் உனக்குயார் ஓதுதற் கறிவர்
மாதர்க் குரியதிக் காதல்
என்பதொன் றறியும் மன்பதை யுலகே. (பா-16)
மனோன்மணி
மின்புரை இடையாய்! என்கருத்(து) உண்மையில்
வனத்தில் எய்தி வற்கலை புனைந்து
மனத்தை அடக்கி மாதவம் செயற்கே.
சுந்தர முனிவன் சிந்துர வடியும்
வாரிசம் போல மலர்ந்த வதனமும் (90)
கருணை யலையெறிந் தொழுகுங் கண்ணும்
பரிவுடன் முகிழ்க்கு முறுவலும், பால்போல்
நரைதரு தலையும், புரையறும் உரையும்
சாந்தமுந் தயையும் தங்கிய உடலும்,
மாந்தளிர் வாட்டு மேனி வாணி!
எண்ணுந் தோறுங் குதித்து
நண்ணும் என்னுளம் மன்னிய தவத்தே. (பா-17)
வாணி
சின்னாட் செலுமுனந் தேர்குவன் நீசொல்
கட்டுரைத் திண்ணம். மட்டள வின்றிக்
காதல் கதுவுங் காலை (100)
ஓதுவை நீயே உறுமதன் சுவையே. (பா-18)
மனோன்மணி
வேண்டுமேற் காண்டி, அவையெல்லாம் வீண்வீண்?
காதலென் பதுவென்? பூதமோ? பேயோ?
வெருட்டினால் நாய்போல் ஓடிடும்; வெருவில்
துரத்தும் குரைக்கும் தொடரும் வெகுதொலை.
அடிக்கடி முனிவரிங் கணுகுவர், அஃதோ
அடுத்தஅவ் வறையில் யாதோ சக்கரம்
இருத்திடத் திறவுகோல் வாங்கினர், கண்டனை?
படர்சுழி யோடு பாய்திரை காட்டும்
வடதள வுதர வாணீ! மங்காய்! (110)
வரும்பொழு தரும்பொருள் கேட்போம்
வாசிட் டாதிவை ராக்கிய நூற்கே. (பா-19)
வாணி
நூறாக் கேட்கினும் நூலறி வென்செயும்?
நீறாகின் றதென் நெஞ்சம், நாளை
என்னுயிர் தாங்குவ தெவ்விதம்?
மன்னவன் கட்டளை மறுப்பதெவ் விதமே! (பா-20)
மனோன்மணி
உன்றன் சிந்தையும் உந்தைதன் கருத்தும்,
மன்றல் வழுதிக் குரைக்க வருவதும்,
ஆமையின் புறச்சார்(பு) அலவன் ஒதுங்குவது
ஏயும் எழிற்கால் வாணீ! (120)
நீயுரைத் தனையோ நின்னே சனுக்கே? (பா-21)
வாணி
அதுவே அம்ம!என் உளநின்(று) அறுப்பது
வதுவையும் வேண்டிலர், வாழ்க்கையும் வேண்டிலர்!
ஒருமொழி வேண்டினர், உரைத்திலேன் பாவி!
நச்சினேன் எனுமொழிக் கேயவர்க் கிச்சை.
பிச்சியான், ஓகோ! பேசினேன் இலையே!
இனியென் செய்வேன், என்நினைப் பாரோ?
மனைவரா வண்ணமென் னனையும் உரைத்தாள்.
ஊர்வரா வண்ணங் குடிலனும் ஓட்டினன்.
யார்பால் உரைப்பன்? யார்போய் உரைப்பர்? (130)
உயிரே எனக்கிங் கொருதுணை
அயிரா வதத்தனும் அறியா வமுதே! (அழ) (பா-22)
மனோன்மணி
அழுங்கலை! அழுங்கலை! அனிச்சமும் நெருஞ்சிலா
அஞ்சிய அடியாய்! அழுங்கலை! அழுதுகண்
அஞ்சனம் கரைந்துநின் கஞ்சனக் கதுப்புங்
கருத்ததே! ஏனிது! கருணைக் கடவுள்நி்ன்
கருத்தே முடிப்பக் காண்டி, அஃதோ!
மணங்கமழ் கோதையர் வந்தனர்,
அணங்குறல் பொன்னிகர் சுணங்கார் அணங்கே! (பா-23)
(செவிலியும் தோழிப்பெண்களும் வர)
செவிலி
தாயே வந்துபார் நீயே வளர்த்த (140)
முல்லையு நறுமுகை முகிழ்த்தது. வல்லை
காதலிற் கவிழ்வை போலும்!
போதுநீத் தெம்மனை புகுந்தநற் றிருவே! (பா-24)
மனோன்மணி
போடி!நீ யாது புகன்றனை? தவத்தை
நாடிநான் இருக்க நணுகுமோ என்மனந்
துச்சமாம் இச்சையாற் சோர்வு?
நெருப்பையுங் கறையான் அரிக்குமோ நேர்ந்தே! (பா-25)
முதல்தோழி
பொய்யன் றம்ம! மையுண் கண்ணால்
வந்துநீ நோக்கு, சந்தமார் முல்லை
நிரம்ப அரும்பி நிற்குந் தன்மை. (150)
இன்றிரா அலரும் எல்லாம்,
துன்றிரா நிகர்குழல் தோகாய்! வருகவே.
(எல்லாரும் போக)

முதல் அங்கம் இரண்டாம் களம் முற்றிற்று[தொகு]

பார்க்க

I. முதல் அங்கம்[தொகு]

மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 01
மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 03
மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 04
மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 05
மனோன்மணீயம்(ஆசிரிய முகவுரை, கதைச்சுருக்கம்.)
மனோன்மணீயம்/மூலம் (அங்கம் 01- பாயிரம்)

II[தொகு]

II:01 ^ II:02 ^ II:03

III[தொகு]

III:01 ^ III:02 ^ III:03 ^ III:04

IV[தொகு]

IV:01 ^ IV:02 ^ IV:03 ^ IV:04 ^ IV:05

V[தொகு]

V:01 ^ V:02 ^ V:03