உள்ளடக்கத்துக்குச் செல்

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 01

விக்கிமூலம் இலிருந்து

மனோன்மணீயம்

[தொகு]

அங்கம் நான்கு

[தொகு]

முதற் களம்

[தொகு]
இடம்: படைபயில் களம்.
காலம்: காலை.

(பலதேவன் படையணி வகுக்க, குடிலன், அரசனை எதிர்பார்த்தொருபுறம் நிற்க.)

(நேரிசை ஆசிரியப்பா)
குடிலன்
பருதியும் எழுந்தது; பொருதலும் வந்தது...

(பெருமூச்செறிந்து) (தனிமொழி)

கருதுதற் கென்னுள, காணுதும். ஆஆ!
ஒருவன தாசைப் பெருக்கால் உலகில்
வருதுயர் கடலிற் பெரிதே! வானின்
எழுந்தவிவ் இரவி விழுந்திடு முன்னர்
ஈண்டணி வகுக்குமிக் காண்டகும் இளைஞரில்
மாண்டிடு மவர்தொகை மதிப்பார் யாரே!
மாண்டிடல் அன்றே வலிது, மடுவுள்
இட்டகல் லாலெழும் வட்டமாம் விரிதிரை
வரவரப் பெரிதாய்க் கரைவரை வரல்போல் (10)
நின்றவில் வீரரை ஒன்றிய மனைவியர்
உற்றார் பெற்றார் நட்டார் என்றிப்
படியே பரவும் படியெலாம் துயரம்!...

(சற்று நிற்க)

என்னை என்மதி இங்ஙனம் அடிக்கடி
என்னையும் எடுத்தெறிந் தேகுதல்? சீச்சீ!
மன்னவர்க் காக மாள்வ திவர்கடன்,
மன்னவன் என்போன் மதியில் வலியோன்,
அன்றியும் பலநா ளாகநம் அன்னம்
தின்றிங் கிருந்தவர் செய்ததென்? அவர்தம்
உடன்பா டிதுவே. கடம்பா டாற்றும் (20)
காலம் விடுவதார்? மேலும் இயல்பாப்
பலபெயர் துக்கப் பட்டால் அன்றி
உலகில் எவரே ஒருசுகம் அணைவார்?
இயல்பிது வாயின் இரங்கல் என்பயன்?
வயலுழும் உழவோர் வருத்தமும், குனிந்திருந்து
ஆடை நெய்வோர் பீடையும், வாகனம்
தாங்குவோர் தமக்குள தீங்கும் நோக்கி
உலகிடை வாழா தோடுவ ரோபிறர்?
அலகிலா மானிடர் யாவரும் அவரவர்
நலமே யாண்டும் நாடுவர், மதிவலோர் (30)
களத்தொடு காலமும் கண்டுமீன் உண்ணக்
குளக்கரை இருக்கும் கொக்கென அடங்கிச்
சம்பவம் சங்கதி என்பவை நோக்கி
இருப்பர், நலம்வரிற் பொருக்கெனக் கொள்வர்.
நண்ணார் இதுபோல் நலமிலா ஐயம்.
எண்ணார் துணிந்தபின் பண்ணார் தாமதம்!
ஏழையர் அலரோ இரங்குவர் இங்ஙனம்?
கோழையர்! எங்ஙனம் கூடுவார் இன்பம்?
வந்தனன் அஃதோ மன்னனும். .... (சீவகன் வர)
வந்தனம் வந்தனம் உன்திரு வடிக்கே! (40) (பா-1)

(நிலைமண்டில ஆசிரியப்பா)

சீவகன்
குடிலா! நமது குறைவிலாப் படைகள்
அடையவும் அணிவகுத் தனவோ? ....
குடிலன்
.... .... .... அடியேன்
நாரணர்க் கன்றோ நீளரண் காப்பு?
சொன்னதப் படியென உன்னினன். ....
சீவகன்
.... .... .... ஆமாம்!
அதற்கேன் ஐயம்?
குடிலன்
.... .... அவர்க்கது முற்றும்
இதக்கே டென்றனர். ஆயினும் போயினர்.

(படைகள் வணங்கி)

படைகள்
ஜயஜய! ஜீவக வேந்த! விஜயே!
குடிலன்
அதிர்கழல் வீரரும் அரசரும் ஈதோ
எதிர்பார்த் திருந்தனர் இறைவ!நின் வரவே.
நாற்றிசை தோறும் பாற்றினம் சுழல (50)
நிணப்புலால் நாறிப் பணைத்தொளி பரப்பும்
நெய்வழி பருதி வைவேல் ஏந்திக்
கூற்றின்நா என்னக் குருதிகொப் புளித்து
மாற்றலர்ப் பருகியும் ஆற்றா தலையும்
உறையுறு குறுவாள் ஒருபுறம் அசைத்துக்
காற்றினும் மிகவும் கடுகிக் கூற்றின்
பல்லினும் கூரிய பகழி மல்கிய
தூணி தோளில் தூக்கி, நாண்நின்று
எழுமொலி உருமுபோன் றெழுப்பி ஆர்த்தவர்
கடிபுரி காக்குநின் காற்படை யாளர். (60)
இருப்புக் கலினம் நெரித்துச் சுவைத்துக்
கருத்தும் விரைவு கற்கும் குரத்தால்
பொடியெழப் புடைக்கும் புரவிகள், போர்க்கு
விடைகேட் டுதடு துடித்தலும் வியப்பே!
நிணங்கமழ் கூன்பிறைத் துணைமருப் பசைத்து
மம்மர் வண்டினம் அரற்ற மும்மதம்
பொழியும் வாரணப் புயலினம், தத்தம்
நிழலொடு கறுவி நிற்பதும் அழகே.
முன்னொரு வழுதிக்கு வெந்நிட் டோடிய
புரந்தரன் கைப்படாப் பொருப்புகள் போன்ற (70)
கொடிஞ்சி நெடுந்தேர் இருஞ்சிறை விரித்து
“வம்மின்! வம்மின்! வீரரே! நாமினி
இம்மெனும் முன்னமவ் விந்திர லோகமும்
செல்லுவம்! ஏறுமின்! வெல்லுவம்!” எனப்பல
கொடிக்கரம் காட்டி யழைப்பதும் காண்டி...
சீவகன்
கண்டோம், கண்டோம், களித்தோம் மிகவும்!
உண்டோ இவர்க்கெதிர்? உனக்கெதிர்? ஓஓ!

(படைகளை நோக்கி)

வேற்படைத் தலைவரே! நாற்படை யாளரே!
கேட்பீர் ஒருசொல்! கிளர்போர்க் கோலம்
நோக்கியாம் மகிழ்ந்தோம்! நுமதுபாக் கியமே (80)
பாக்கியம்! ஆஆ! யார்க்கிது வாய்க்கும்?
யாக்கையின் அரும்பயன் வாய்த்ததிங் குமக்கே!
தாயினும் சிறந்த தயைபூண் டிருந்தநும்
தேயமாம் தேவிக்குத் தீவினை யிழைக்கத்
துணிந்தவிவ் வஞ்சரை எணுந்தொறும் எணுந்தொறும்
அகந்தனில் அடக்கியும் அடங்கா தெழுந்து
புகைந்துயிர்ப் பெறியப் பொறிகண் பொரிய
நெடுந்திரட் புருவம் கொடுந்தொழில் குறிப்ப
வளங்கெழு மீசையும் கிளர்ந்தெழந் தாடக்
களங்கமில் நும்முகம் காட்டுமிச் சினத்தீ (90)
கண்டுஅப் பாண்டியே கொண்டனள் உவகை.
அலையெறிந் தீதோ ஆர்த்தனள், கேண்மின்!
முலைசுரந் தூட்டிய முதுநதி மாதா!
படைகள்
தாம்பிர பன்னிக்கு ஜே! ஜே!
சீவகன்
ஒருதுளி யேனும்நீர் உண்டுளீர் ஆயின்
கருதுவீர் தாம்பிர பன்னியின் கட்டுரை
“மாக்கள்! அருந்தி வளர்மின்! நுமக்கு
மிக்கோர் இல்லா வீரமாய்ப் பரந்து
முதுசுதந் திரத்தின் முத்திரை ஆகி,
இதுபரி ணமித்துஉம் இதயத் துறைக!
அன்னியன் கைப்படா இந்நீர் கற்பிற்கு (100)
இழிவுறின் மாரிபினின் றிதுவே சோரியாய்ப்
பொழிகநீர் பொன்றிடும் அளவும்!” என்றன்றோ
வாழ்த்தி நுந்தமை வளர்த்தினள்? அவளுரை
தாழ்த்தா தீவணீர் போர்த்தபோர்க் கோலம்
பார்த்தாள்! ஆர்த்தவள் வாழ்த்தாதென் செய்வள்? (105)
படைகள்
ஜே! ஜே!
சீவகன்
விந்தம் அடக்கினோன் தந்தநற் றமிழ்மொழி
தற்சுதந் தரமறும் அற்பர் வாய்ப் படுமோ?
படைகள்
தமிழ்மொழிக்கு ஜே!ஜே!
சீவகன்
பழையோர் பெருமையும் கிழமையும் கீர்த்தியும்
மன்னிய அன்பின்நும் அன்னையர் பாடி
நித்திரை வரும்வகை ஒத்தறுத் துமது (110)
தொட்டில்தா லாட்டஅவ் இட்டமாம் முன்னோர்
தீரமும் செய்கையும் வீரமும் பரிவும்
எண்ணி இருகணும் கண்ணீர் நிறையக்
கண்துயி லாதுநீர் கனிவுடன் கேட்ட
வண்தமிழ் மொழியால் மறித்திக் காலம் (115)
“ஆற்றிலம்; ஆண்மையும் உரிமையும் ஒருங்கே
தோற்றனம்” எனச்சொலத் துணிபவர் யாவர்?
படைகள்
சிச்சீ!
சீவகன்
பொதியமா மலையிற் புறப்பட் டிங்குதன்
படியே உலாவுமிச் சிறுகால், பணிந்துமற்று
“அடியேம்” எனத்திரி பவர்க்கோ உயிர்ப்பு! (120)
படைகள்
ஹே! ஹே!
சீவகன்
கோட்டமில் உயிர்ப்போ கூறீர், அன்ன
நாட்டபி மானமில் நடைப்பிண மூச்சும்?
படைகள்
சிச்சீ! சிச்சீ!
சீவகன்
சேனையோ டிவ்வழி திரிந்துநேற் றிரவில்நும்
திருவனை யார்களும் சேய்களும் கொண்ட
வெருவரு நித்திரைக் குறுகண் விளைத்துநும் (125)
பாசாபி மானமும், தேசாபி மானமும்
பொருளெனக் கருதா தருணிறை நுமது
தாய்முலைப் பாலுடன் வாய்மடுத் துண்டநல்
ஆண்மையும் சுதந்திரக் கேண்மையும் ஒருங்கே
நிந்தை வஞ்சியர்செய வந்தநும் கோபம் (130)
முற்றும் இயல்பே. மற்றுதன் குகையுள்
உற்றரி முகமயிர் பற்றிடின் அதற்கக்
குறும்பால் எழுஞ்சினம் இறும்பூ தன்றே!
உரிமைமேல் ஆண்மைபா ராட்டார் சாந்தம்,
பெருமையில் பிணத்திற் பிறந்ததோர் சீதம். (135)
அந்தணர் வளர்க்கும் செந்தழல் தன்னிலும்
நாட்டபி மானமுள் மூட்டிய சினத்தீ
அன்றோ வானோர்க் கென்றுமே உவப்பு!
வந்தவிக் கயவர்நும் சிந்தையிற் கொளுத்திய
வெந்தழற் கவரே இந்தனம் ஆகுக! (140)
படைகள்
ஆகுக! ஆகுக!
சீவகன்
இன்றுநீர் சிந்தும் இரத்தமோர் துளியும்
நின்றுகம் பலவும் நிகழ்த்துமே “இந்தப்
பாண்டியர் உரிமைபா ராட்டும் பண்பினர்;
தீண்டன்மின் திருந்தலீர்! அவர்தம் செருக்கு
சுதந்திரம் அவர்க்குயிர் சுவாசமற் றன்று. (145)
நினையுமின் நன்றாய்க் கனவினும் இதனை”...
எனமுர சறையுமே எத்திசை யார்க்கும்.
இத்தனிப் போரில்நீர் ஏற்றிடும் காயம்
சித்தங் களித்துச் சயமா துமக்கு
முத்தமிட் டளித்த முத்திரை ஆகி (150)
எத்தனை தலைமுறைக் கிலக்காய் நிற்கும்!
படைகள்
ஜே! ஜே!
சீவகன்
போர்க்குறிக் காயமே புகழின் காயம்
யார்க்கது வாய்க்கும்! ஆ!ஆ! நோக்குமின்!
அனந்தம் தலைமுறை வருந்தனி மாக்கள்,
தினந்தினம் தாமனு பவிக்குஞ் சுதந்திரம் (155)
தந்ததம் முன்னோர் நொந்தபுண் எண்ணிச்
சிந்தையன் புருகிச் சிந்துவர் கண்ணீர்,
என்றால் அப்புண் ‘இரந்துகோட் டக்கது’
அன்றோ? அறைவீர், ஐயோ! அதுவும்
புண்ணோ? புகழின் கண்ணே, எவரே (160)
புண்படா துலகிற் புகழுடம் படைந்தார்?
புகழுடம் பன்றியிவ் விகழுடம் போமெய்?
கணங்கணம் தோன்றிக் கணங்கணம் மறையும்
பிணம்பல, இவரெலாம் பிறந்தார் என்பவோ!
உதும்பர தருவில் ஒருதனி அதனுட் (165)
பிறந்திறும் அசகம் இவரினும் கோடி!
பிறந்தார் என்போர் புகழுடன் சிறந்தோர்
அப்பெரும் புகழுடம் பிப்படி இன்றிதோ!
சுலபமாய் நுமக்கெதிர் அணுகலால் துதித்துப்
பலமுறை நுமது பாக்கியம் வியந்தோம் (170)
ஒழுக்கமற் றன்றது எனினும், உம்மேல்
அழுக்கா றுஞ்சிறி தடைந்தோம். நும்மொடு
இத்தினம் அடையும் இணையிலாப் பெரும்புகழ்
எத்தனை ஆயிரம் ஆயிரம் கூறிட்
டொத்ததோர் பங்கே கூறுமெனக் கெனவே (175)
ஓடுமோர் நினைவிங் கதனால், வீரர்காள்!
நீடுபோர் குறித்திவண் நின்றோர் தம்முள்
யாரே ஆயினும் சீராம் தங்கள்
உயிருடம் பாதிகட் குறுமயர் வுன்னிச்
சஞ்சலம் எய்துவோர் உண்டெனிற் சாற்றுமின், (180)
வஞ்சகம் இல்லை!என் வார்த்தையீ துண்மை.
மானமோ டவரையிம் மாநக ரதனுட்
சேமமாய் இன்றிருத் திடுவம் திண்ணம்.
உத்தம மாதர்கள் உண்டுமற் றாங்கே
எத்தனை யோபேர், இவர்க்கவர் துணையாம். (185)
படைகள்
இல்லை, இல்லையிங் கத்தகைப் புல்லியர்!
சீவகன்
குறைவெனக் கருதன்மின், எம்புகழ்க் கூறு
சிறிதாம் எனவுனிச் செப்பினோம் அதனாற்
பிறிதுநீர் நினையீர், பேசுமின் உண்மை.
படைத்தலைவர்
இல்லையெம் இறைவ! இந்நா டதனுள் (190)
இல்லையத் தகையர்.
யாவரும்
... .... இலையிலை! இலையே!
சீவகன்
நல்லதப் படியேல், நாமே நுஞ்சுய
நாட்டில்நல் உரிமைபா ராட்டும் பெரிய
மேன்மையும் அதனால் விளைபுகழ் அதுவும்
மறுக்கிலம் பொறுக்குமின் வம்மின்! விஜய (195)
இலக்குமி காத்திருக் கின்றாள்! அன்றியும்
ஒலிக்குதும் ஜயபே ரிகைகேட் டலதுமற்று
ஓய்கிலள் தோன்புநம் தாய்மனோன் மணியே.-------(பா-2)
படைவீரர்
மனோன்மணிக்கு ஜே! ஜே! ஜே!
யாவரும்
இளவரசிக்கு ஜே! ஜே! ஜே!
(குறளடி வஞ்சிப்பா)
சீவகன்
நந்தாய்தமர் நங்காதலர்
நஞ்சேய்பிறர் நந்தாவுறை
நந்தேயமேல் வந்தேநனி
நொந்தாள்துயர் தந்தேயிவண்
நிந்தாநெறி நின்றாரிவர்
தந்தாவளி சிந்தாவிழ
அடிப்போமடல் கெடுப்போமுகத்
திடிப்போங்குட லெடுப்போமிடுப்
பொடிப்போஞ்சிர முடைப்போம்பொடி
பொடிப்போம்வசை துடைப்போமுயிர்
குடிப்போம்வழி தடுப்போம்பழி
முடிப்போமினி நடப்போம்நொடி,
எனவாங்கு,
பெருமுர சதிரப் பெயருமின்
கருமுகில் ஈர்த்தெழும் உருமுவென ஆர்த்தே. (வஞ்சிப்பா-1)

(படைகள் முரசடித்து நடக்க, படைப்பாணர் பாட)

(கலித்தாழிசை)
படைப்பாணர்
தந்நகரமே காக்கச் சமைந்தெழுவோர் ஊதுமிந்தச்
சின்னமதி சயிக்குமெமன் செருக்கொழிமின் தெவ்வீர்காள்!
சின்னமதி! சயிக்குமெமன் எனச்செருக்கி நிற்பீரேல்
இன்னுணவிங் குமக்கினிமேல் எண்ணீரே எண்ணீரே இசைத்துளோமே. ....(தாழிசை-1)
படைகள்
ஜே! ஜே
பாணர்
மறுகுறுதம் ஊர்காக்கும் வயவர்புய மேவிசயை
உறைவிடமா இவர்வாளென் றோடிடுமின் தெவ்வீர்காள்!
உறைவிடமா? இவர்வாளென் றோடிடீர் ஆயினினி
மறலிதிசை ஒருபோதும் மறவீரே மறவீரே வழங்கினோமே. ....(தாழிசை-2)
படைகள்
ஜே! ஜே!
பாணர்
ஒல்லுமனை தான்காக்க உருவியகை வாளதற்குச்
செல்லுமுறை பின்னரிலை திரும்பிடுமின் தெவ்வீர்காள்!
செல்லுமுறை பின்னரிலை எனத்திரும்பீர் ஆயினுங்கள்
இல்லவர்க்கு மங்கலநாண் இற்றதுவே இற்றதுவே இயம்பினோமே. .....(தாழிசை-3)
படைகள்
ஜே! ஜே!

(படைகளும் சீவகன் முதலியோரும் போர்க்களம் நோக்கிப் போக)

நான்காம் அங்கம் முதற்களம் முற்றிற்று

[தொகு]

பார்க்க:

[தொகு]

மனோன்மணீயம்: நான்காம் அங்கம், முதற்களத்தின் கதைச்சுருக்கம்

அங்கம் IV- களம்02

அங்கம் IV- களம்03

அங்கம் IV- களம்04

அங்கம் IV- களம்05

மனோன்மணீயம்- ஆசிரியமுகவுரை, கதைச்சுருக்கம்.

I:01 * I:02 * I:03 * I:04 * I:05

II:01 * :II:02 * :II:03

III:01 * III:02 * III:03 * III:04

V:01 * V:02 * V:03