மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 01

விக்கிமூலம் இலிருந்து

மனோன்மணீயம்- நாடகம்[தொகு]

மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 01[தொகு]

மூன்றாம் அங்கம்- முதற்களம்: கதைச்சுருக்கம்[தொகு]

அரண்மனை மண்டபத்தில் காலை வேளையில், பாண்டியன அமைச்சனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறான். “அமைச்சரே! தூது போன உமது மகன், கல்வியும், அறிவும் உடையவன். அவனுக்கு அபாயம் வரும் என்று ஐயுற வேண்டாம்” என்றான், அரசன். அதற்கு அமைச்சன், “பலதேவனால் காரியம் கெடும் என்று நான் ஐயுறவில்லை. உலக இயற்கை அறியாத, சிறுவனானாலும், முயற்சியிலும், அறிவிலும் முதிர்ந்தவன் என்று கூறுகிறார்கள். ஆனால், வஞ்சிநாட்டார், வஞ்சனைக்கு அஞ்சாதவர். ‘மிஞ்சினால் கெஞ்சுவர், கெஞ்சினால் மிஞ்சுவர்’ என்னும் பழமொழி. அவர்களுக்கே தகும். அதனால்தான் என்மனம் மருள்கிறது. மேலும், சேரவேந்தன், இயற்கையில், கடுஞ்சினம் உடையவன் என்று கூறுகிறார்கள்” என்று கூறினான். “சேரன் சினமுள்ளவனானால் என்ன?தேவர்களும் விரும்புகிற நமது மனோன்மணி, இலக்குமி போன்ற அழகும், அன்பு நிறைந்த மனமும், தெளிவான அறிவும் உள்ளவள் என்று முன்னமே முனிவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறான். அவனிடம் திருமணம்பற்றிக் குறிப்பாகக் கூறினால், கரையை உடைத்து ஓடுகிற வெள்ளம்போல, அடங்கா மகிழ்ச்சியுடன், இங்கு ஓடிவருவான். உமக்கு மனக்கவலை வேண்டாம்” என்றான், அரசன்.
அதற்கு அமைச்சன் கூறுகிறான்: “முனிவர்கள், குமரியின் அழகைக்கூறியிருப்பார்கள் என்று நினைப்பதற்கில்லை. துறவிகள், பெண்களின் அழகைப் பேசமாட்டார்கள். கல்விப்புலமையும், தெளிந்த மனமும் உடையவர்கள்தாம் அதனைக் கூறமுடியும். இப்போது தூதுவன் மூலமாகப் புருடோத்தமன், குமரியின் அழகு, இயல்பு முதலியவற்றை யெல்லாம் அறிந்திருப்பான். பலதேவன், தன்னந் தனியே அரசகுமாரியைப் பற்றிப் பெருமையாகப் புகழ்ந்து பேசியதைக் கேட்டிருக்கிறேன். அவன், குமரியின் உறுப்புகளின் அழகைப் புகழ்ந்து பேசி, ‘இக்குமரிக்குப் பணிவிடை செய்யத் தேவர்களுக்கும் வாய்க்காது. அவள் அருகில் இருந்து பணிவிடை செய்யப்பெற்றது, எனது பாக்கியம். என்றென்றும் இப்படியே பணிவிடை செய்து கொண்டிருந்து உயிர்விடுவது அல்லவா நல்லது!’ என்று அவன் பலமுறை சொல்லிக் கொண்டதை நான் கேட்டிருக்கிறேன்.” இதைக் கேட்ட அரசன், “அதற்கென்ன ஐயம் குடிலரே! உண்மையான அரச பக்தியுள்ள பலதேவன், குமரியிடம் வாஞ்சையும் பரிவும் காட்டுவது இயல்புதானே” என்று கூறினான். “அதற்கல்ல நான் சொன்னது. அரசே! மனோன்மணி அம்மையின் சிறப்பையெல்லாம் சேரன் அறிந்திருந்தாலும், அவன் வெறியனாதலால், திருமணத்துக்கு இசைவானோ என்றுதான் என் மனம் ஐயுறுகின்றது. அவன் உறுதியான உள்ளம் உடையவன் அல்லன். மனம்போனபடியெல்லாம் நடப்பவன் என்று தாங்களும் கேட்டிருக்கிறீர்கள்” என்றான் அமைச்சன்.
அரசன் கூறினான்: “ஆமாம்! அறிவோம். எதைப்புகழ்வது, எதை இகழ்வது என்பது அவனுக்குத் தெரியாது. வேதவியாசன் வந்து புகழ்ந்தாலும் அவன் அதனைப் பொருட்படுத்தவே மாட்டான். யாரேனும் புலையன் வந்து புகழ்ந்தால், மகிழ்வான். யாரேனும் வந்து, அவன் அடியை வணங்கினால், இறுமாந்திருப்பான். செருப்புக் காலால் யாரேனும் மிதித்தால், அதனை விரும்பி உவப்பான். மலர் சூட்டினால் சினம் அடைவான்; கல்லால் அடித்தால், மகிழ்வான். பெரியார், சிறியார், பேதையர், அறிஞர், உற்றார், அயலார் என்பதைக் கருதமாட்டான். ஆனால், குடிலரே! இவையெல்லாம் பிரபுத்துவத்திற்கு அடையாளம் அல்லவா?” இதைக்கேட்டு அமைச்சன் கூறினான்: அடியேனுக்கு அதில் ஐயம் ஒன்று உண்டு. முடிசூடிய அரசர்களிலே, கோட்டையின் பலமும், சேனைப்பலமும், நிறைந்த செல்வமும், உறுதியான எண்ணமும், பணியாத வலிமையும் தங்களுக்கு அல்லாமல், வேறு யாருக்கு உள்ளன? தங்களிடம் இல்லாத ஒரு குணத்தைப் பிரபுத்துவம் என்று யார் கூறுவார்கள்? இது எப்படிப் பொருந்தும்? சேரன், தாய்தந்தையருக்குக் கீழ் அடங்கி வளர்ந்தவன் அல்லன் என்பதைத் தாங்கள் கருதவில்லை போலும்! நல்லது, கெட்டது என்பதை அவன் அறியவில்லையானால், நாம் கூறும் நல்லதை அவன் எப்படி ஏற்றுக்கொள்வான் என்றுதான் என்மனம் நினைக்கிறது.”
“நீர்சொல்வது சரி! நமது குருநாதர் சொல்லை மீறக்கூடாது என்பதற்காகத்தானே, நாம் பலதேவனைத் தூது அனுப்பினோம்? நான் கூறுவதை அவன் விரும்பாவிட்டால், அது அவன் விதி, நமக்கென்ன? மனோன்மணிக்கு மணவாளர்களா கிடையாது?” என்றான், அரசன். “அதற்கென்ன? ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். அதுவல்ல, அரசே! தூது சென்றவனுக்குச் சேரன் என்ன தீங்கு செய்வானோ என்று என்மனம் பதறுகிறது. அப்பொழுதே சொல்ல எண்ணினேன். அரசர்பெருமானின் கட்டளைக்கு எதிர்பேசக்கூடாது என்று சும்மா இருந்தேன்” என்று கூறினான், குடிலன். அரசன், “பதறாதீர், குடிலரே! நமது தூதனுக்கு அவன் இழிவுசெய்யத் துணிந்தால், அப்போதல்லவா பார்க்கப் போகிறீர்? அவனுடைய செருக்கும், வலிமையும், செல்வமும் எல்லாம் என்னவாகும்! கொஞ்சத்தில் விடுவேனோ? குடிலரே! தூது சென்ற உம்மகனுக்கு, அவன் தினைத்துணைத் தீங்கு செய்தால், நமது குமரிக்குப் பனைத்துணை தீங்கு செய்ததாகக் கருதிப் பழிவாங்குவேன்” என்று கூறினான்.
இந்தச்சமயத்தில், ஒற்றன் ஒருவன் வந்து வணங்கி, திருமுகம் ஒன்றை, அரசனிடம் கொடுத்துச் சென்றான். ஒற்றனுடைய முகத்தோற்றத்தைக் கண்ட அமைச்சன், தனக்குள்ளே நாம் கருதிய காரியம் முழுதும் முடிந்தது. போர் மூண்டது; அரசனுக்கு இறுதியும், நமக்கு உறுதியும் வாய்க்கும் என்று சொல்லிக்கொண்டான்.

[தொகு]

திருமுகத்தைப் படித்துப் பார்த்த அரசன், சினங்கொண்டு தனக்குள் கூறிக்கொண்டான்: துடுக்கன் நமது தூதனை ஏசினான்; திருமணத்தை இகழ்ந்து பேசினான். அடியை வணங்கினால் விடுவானாம்! போர்செய்ய வருவானாம்; முடிபறித்திடுவானாம். துடுக்குப் பயல் என்று கடிந்து பேசி, அமைச்சனைப் பார்த்துக் “குடிலரே! நீர் கூறியபடியே ஆயிற்று. இக்கடிதத்தைப் படித்துப் பாரும்” என்று சொல்லித் திருமுகத்தைக் கொடுத்தான். குடிலன், அதனைப் படித்துப்பார்த்து, “என்ன சொல்வது! உண்ணவா என்றால், குத்தவா என்கிறான். அவன், போருக்கு வந்ததைப்பற்றி அஞ்சவில்லை. குமரியைக் கூறிய குற்றமும் இழிவும் கருதியே, என்மனம் அழிகின்றது” என்று கூறினான், அரசன். “பொறு, பொறு, குடிலரே! நம்மைக் குற்றம் கூறிய அவன் குலத்தை, வேரோடு அழித்துவிடுகிறேன், பாரும்” என்று சினந்து கூறினான்.
“அரசர் பெருமான் போர்க்களஞ் சென்றால், அச்சிறுவன் பிழைப்பனோ? ஏதோ மயக்கங் கொண்டு போருக்கு வருகிறான். நாம் வெற்றி பெறுவது உறுதி. ஆனாலும், மதுரையிலிருந்து சேனையை அழைப்பது நல்லது. காலந்தான் போதாது” என்றான், அமைச்சன்.
“மதுரை சேனையின் உதவி, நமக்குத் தேவையில்ல. ஒரே நாள் போரில், அவன், அஞ்சி ஓடிப்போவான். புலிவேட்டைக்கு இசைவான பறையொலி, எலிவேட்டைக்குப் பொருந்துமா?” என்று அரசன்கூற, அமைச்சன், “மேலும், அவன் உடனே புறப்பட்டுவருகிற படியால், அவனிடம் போதிய சேனை இராது” என்றான்.
“பெரிய சேனையுட்ன் வந்தால்தான் என்ன? குடிலரே! நீர் போய்ப் போருக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்யும். நாமும் இதோ வருகிறோம்” என்று சொல்லி, அரசன் போய்விட்டான்.
அப்போது தனியே இருந்த குடிலனிடம், வாயிலண்டை இருந்த சேவகன் வந்து வணங்கி, “தங்களைப்போன்ற சூழ்ச்சிமிக்க அமைச்சர் யார் உண்டு? தாங்கள் கருதிய எல்லாம் நிறைவேறும்” என்று கூறினான். அதைக்கேட்டுக் குடிலன் திடுக்கிட்டான். ஆனாலும், வெளிக்குக் காட்டாமல், “நல்லது. நீ போய்க்கொள்” என்று கூற, அவன் போய்விட்டான். குற்றமுள்ள நெஞ்சினனாகிய குடிலனுடைய மனத்திலே சேவகன் கூறிய சொற்கள் கலக்கத்தை உண்டாக்கின.
அவன், தனக்குள்ளே கூறிக்கொள்கிறான்: “அவன் சொல்லியது என்ன? கள்ளப்பயல். என்கருத்தை, அவன் அறிந்திருப்பனோ? அரசனிடம் கூறுவனோ? நமது அந்தரங்க சூழ்ச்சிகள், இவனுக்கு எப்படித்தெரியும்? ஒருவேளை, நாராயணன் சொல்லியிருப்பானா? அவன் சொல்லியிருக்கக் காரணம் இல்லை. ஓகோ! அன்று, இவனுக்குத்தானே, மாலையைப் பரிசாகக் கொடுத்தோம்? அதற்காக வாழ்த்துக் கூறினான் போலும்! ‘கள்ளமனம் துள்ளும்’ என்றும், ‘தன் உள்ளம் தன்னையே சுடும்’ என்றும், ‘குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்’ என்றும் உலகோர் கூறும் பழமொழிகள் எவ்வளவு உண்மை! அவற்றின் உண்மையை, இப்போது, நம்மிடத்திலேயே கண்டோம். அவன் வந்து கூறினபோது, என்மனம் விதிர்விதிர்த்துப் படபடத்துப் பட்டபாடு என்னே! சீச்சீ! எவ்வளவு அச்சம்! வஞ்சித்து வாழ்வு பெறுவது எவ்வளவு கொடியது! நஞ்சுபோல நெஞ்சு கொதிக்க, இரவும் பகலும் பலப்பல எண்ணங்கள் நச்சரிக்க, அடிக்கடி செத்துச்செத்துப் பிழைத்துக் கொண்டு, பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ளும் பேதைமை, வேறு உண்டோ! ஓகோ! மனமே! நில்நில், ஓடாதே. என்ன தருமோபதேசம் செய்கிறாய்! பளபள; என்ன இது? ஏன், என்மனம், இப்படி எண்ணுகிறது! முதலைகள், தம் கொன்ற உயிரிகளைத் தின்னும்போதல்லவா கண்ணீர்விடும் என்பார்கள்? மனமே, வா. வீண்காலம் போக்காதே. நீதிநியாயங்களைக் கருதுவதற்கு இது காலம் அல்ல” என்று தனக்குள் எண்ணிக்கொண்டே, குடிலன் சென்றான்.

மூன்றாம் அங்கம் முதற்களம் கதைச்சுருக்கம் முற்றிற்று[தொகு]

மூன்றாம் அங்கம்[தொகு]

முதற் களம்[தொகு]

இடம்: பாண்டியன் அரண்மனை.
காலம்: காலை.
(சீவகனும் குடிலனும் மந்திராலோசனை)

(நிலைமண்டில ஆசிரியப்பா)

சீவகன்
ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச!நின் தனையன்
பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக்
குரியன முற்றும் ஒருங்கே முடித்து
வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும்
உபாயமும் யாவும் உடையான்; அதனால்
அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்!வீண்!
குடிலன்
பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக்
கிலையிலை அய்யம் சிறிதும். உலகத்து
இயற்கை அறியா இளையோ னாகிலும்
முயற்சியின் மதியின் முதியோன் எனவே (10)
மொழிகுவர். அவனாற் பழுதிலை. கொற்றவ!
வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார்
நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர்தாம்
கெஞ்சிடின் மிஞ்சுவர், மிஞ்சிடிற் கெஞ்சுவர்;
என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால்
மன்னவ! சற்றே மருளுமென் னுள்ளம்
அன்றியும் புருடோத் தமனெனும் அரசன்
கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும்.
சீவகன்
சினத்தோன் ஆயினென்? தேவரும் தத்தம்
மனத்தே அவாவி மயங்குநம் மனோன்மணி (20)
திருவும் வெருவும் உருவும், பெருகும்
அருளுறை யகமும், மருளறு முணர்வும்,
முன்னமே இருடிகள் மொழியக் கேட்டுளன்.
அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக்
குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில் (25)
செறித்திடும் சிறையினை யுடைத்திடும் புனல்போல்
தாங்கா மகிழ்ச்சியுள் தாழ்ந்தவன் இப்பால்
தலையா லோடி வருவன். உனக்கு
மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே!
குடிலன்
முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர் (30)
எனநாம் நினைப்பதற் கில்லை,நம் அமுதின்
எழிலெலாம் எங்ஙனம் முனிவோர் மொழிவர்?
துறந்தார்க் கவைதாம் தோற்றுமோ மறந்தும்?
சிறந்தநூல் உணர்வும் தெளிந்ததோர் உளமும்
செப்பினர் என்றிடில் ஒப்பலாந் தகைத்தே. (35)
ஆயினும், மலையநாட் டரசன் நமது
தாயின் தன்மை சகலமும் இப்போது
அறியா தொழியான்; அயிர்ப்பொன் றில்லை
நெறிமுறை சிறிதும் பிறழா நினது
தூதுவன் யாவும் ஓதுவன் திண்ணம். (40)
அம்ம! தனியே அவன்பல பொழுதும்
மம்மர் உழன்றவன் போன்று, மனோன்மணி
அவயவத் தழகெலா மாறா தறைந்தறைந்து,
“இமையவர் தமக்கும் இசையுமோ இவளது
பணிவிடை? நமது பாக்கிய மன்றோ
அணிதாய் இருந்திவட் காம்பணி யாற்றுதும்?
என்றுமிப் படியே இவள்பணி விடையில்
நன்றுநம் உயிர்விடில் அன்றோ நன்றாம்?”
என்றவன் பலமுறை யியம்பிக்கேட் டுளனே.
சீவகன்
ஐயமோ? குடிலா! மெய்ம்மையும் இராஜ (50)
பக்தியு நிறைந்த பலதே வன்றன்
சித்த மென்குல திலகமாந் திருவுடன்
பரிவுறல் இயல்பே. அரிதாம் நினது
புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு
ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிதும்? (55)
குடிலன்
அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ!
மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம்
அறியினும், சேரன் வெறிகொளும் சிந்தையன்
ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ,
யாதோ வெனவென் மனந்தான் அயிர்க்கும் (60)
அவன்குணம் ஒருபடித் தன்றே; அவனுளம்
உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே
நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும்.
சீவகன்
ஆம்!ஆம்! அறிந்துளேம் ஏமாப் படைந்த
தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை.
வேதம் வகுத்த வியாசன் வியந்து
போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையன்
சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவன்;
ஒருவன் தனதடி யிணையடைந் துறவே
பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன்; (70)
மற்றோர் மனிதன் சற்றுமெண் ணாதே
செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்;
மலரிடிற் காய்வன்; பரலிடின் மகிழ்வன்;
பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர்
உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும்
உன்னான் ஆயினும் இன்னவை யாவும்
பிரபுத் துவமலாற் பிறவல குடிலா!
குடிலன்
அடியேற் கவ்விடத் தையமொன் றுளது.
முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும்
இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந் (80)
துணிவறா உளனும் பணிகிலா உரனும்
உனைவிட எவர்க்குள? ஒதுவாய். உன்வயின்
தினையள வேனும் சேரா தாகும்
ஒருகுணம், பிரபுத் துவமென யாரே
உரைதர உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்?
மலையன் தந்தைக்கீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன்
அலனெனும் தன்மைநீ ஆய்ந்திலை போலும்.
நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான்
என்றிடில், நாம்சொலும் நன்மையும் எங்ஙனம்
நாடுவன்? எனவெனக்கு ஓடுமோர் நினைவே. (90)

[தொகு]

சீவகன்
ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும்.
குலகுரு கூறுதல் கொண்டில மென்னில்
நலமன் றென்றே நாடி யனுப்பினோம்.
நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்?
இயைந்த கணவர்வே றாயிரம், காண்குதும்.
குடிலன்
அதற்கேன் ஐயம்? ஆயிரம், ஆயிரம்!
இதுமாத் திரமன் றிறைவ! சேரன்!
சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ?
என்றே யென்மனம் பதறும். ஏவுமுன்
உரைக்க உன்னினேன், எனினும் உன்றன் (100)
திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன்.
சீவகன்
வெருவலை குடிலா? அரிதாம் நமது
தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும்
போதலோ காணுதி, பொருநைத் துறைவன்
செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்!
விடுவனோ சிறிதில்? குடில!உன் மகற்குத்
தினைத்துணை தீங்கவன் செய்யின்,என் மகட்குப்
பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன்.

(ஒற்றன் வர)

ஒற்றன்
மங்கலம்! மங்கலம்! மதிகுல மன்னவா!
சீவகன்
எங்குளார் நமது தூதுவர்?
ஒற்றன்
.... .... .... இதோ!இம் (110)
மாலையில் வருவர். வாய்ந்தவை முற்றுமிவ்
ஓலையில் விளங்கும், ஒன்னல ரேறே!


(ஒற்றன் போக, சீவகன் ஓலை வாசிக்க)

குடிலன்

(தனதுள்)

ஒற்றன் முகக்குறி ஓரிலெம் எண்ணம்
முற்றும் முடிந்ததற் கற்றமொன் றில்லை.
போரும் வந்தது. நேரும் புரவலற்
கிறுதியும் எமக்குநல் லுறுதியும் நேர்ந்தன.
சீவகன்
துட்டன்! கெட்டான்! விட்டநந் தூதனை
ஏசினான், இகழ்ந்தான் பேசி வதுவையும்.
அடியில் முடிவைத் தவனா ணையிற்கீழ்ப்
படியில் விடுவனாம்; படைகொடு வருவனாம்; (120)
முடிபறித் திடுவானாம். முடிபறித் திடுவன்!

(குடிலனை நோக்கி)

குடிலா! உனைப்போற் கூரிய மதியோர்
கிடையார், கிடையார். அடையவும் நோக்காய்
கடையவன் விடுத்த விடையதி வியப்பே!

(குடிலன் ஓலை நோக்க)

குடிலன்
நண்ணலர் கூற்றே! எண்ணுதற் கென்னே!
உண்ணவா என்றியாம் உறவுபா ராட்டிற்
குத்தவா எனும்உன் மத்தனன் றேயிவன்!
யுத்தந் தனக்கெள் ளத்தனை யேனும்
வெருவினோம் அல்லோம். திருவினுஞ் சீரிய
உருவினாள் தனக்கிங் குரைத்ததோர் குற்றமும் (130)
இழிவையும் எண்ணியே அழியும் என்னுளம்!
சீவகன்
பொறு பொறு! குடில! மறுவிலா நமக்கும்
ஒருமறுக் கூறினோன் குலம்வே ரோடுங்
கருவறுத் திடலுன் கண்ணாற் காண்டி.
குடிலன்
செருமுகத் தெதிர்க்கிற் பிழைப்பனோ சிறுவன்?
ஒறாமயக் கதனாற் பொருவதற் கெழுந்தான்.
வெற்றியாம் முற்றிலுங் கொள்வேம் எனினும்,
ஆலவா யுள்ள படைகளை யழைக்கில்
சாலவும் நன்றாம்; காலமிங் கிலையே.
சீவகன்
வேண்டிய தில்லை யீண்டவர் உதவி (140)
தகாதே யந்தநி காதர்தஞ் சகாயம்.
ஒருநாட் பொருதிடில் வெருவி யோடுவன்.
பின்னழைத் திடுவோம்; அதுவே நன்மை.
புலிவேட் டைக்குப் பொருந்தும் தவிலடி
எலிவேட் டைக்கும் இசையுமோ? இயம்பாய். (145)
குடிலன்
அன்றியு முடனே அவன்புறப் படலால்,
வென்றிகொள் சேனை மிகஇரா தவன்பால்.
சீவகன்
இருக்கினென்? குடிலா! பயமோ இவற்கும்?
பொருக்கெனச் சென்றுநீ போர்க்குவேண் டியவெலாம்
ஆயத்த மாக்குதி யாமிதோ வந்தனம். (150)

(சீவகன் போக, வாயிற்காத்த சேவகன் வந்து வணங்கி)

சேவகன்
விழுமிய மதியின் மிக்கோய்! நினைப்போற்
பழுதிலாச் சூழ்ச்சியர் யாவர்? நின்மனம்
நினைத்தவை யனைத்தும், நிகழுக வொழுங்கே.
குடிலன்
நல்லது! நல்லது! செல்லா யப்பால்.

(சேவகன் போக) (தனதுள்)

சொல்லிய தென்னை? சோரன் நமது
நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ?
இனையவன் எங்ஙனம் உணருவன்? வினையறி?
நாரண னோர்ந்து நவின்றனன் போலும்...
காரணம் அதற்கும் கண்டிலம். ஆ!ஆ!
மாலைக் காக வாழ்த்தினன் இவனும்! (160)
புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல.
“கள்ள மனந்தான் துள்ளு” மென்பதும்,
“தன்னுளம் தன்னையே தின்னு” மென்பதும்
“குற்றம் உள்ளோர் கோழையர்” என்பதும்
சற்றும் பொய்யல. சான்றுநம் மிடத்தே
கண்டனம். அவனெம் அண்டையில் அம்மொழி
விளம்பிய காலை, விதிர்விதிர்ப் பெய்தி
உளம்படத் படத்தென் னூக்கமும் போனதே
சீச்சீ! இச்சைசெய் அச்சஞ் சிறிதோ!
வஞ்சனை யாற்பெறும் வாழ்வி தென்னே! (170)
நஞ்சுபோல் தனது நெஞ்சங் கொதிக்கக்
கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத்
தன்னுளே பன்முறை சாவடைந் தடைந்து
பிறர்பொருள் வௌவும் பேதையிற் பேதை
எறிகடல் உலகில் இலையிலை. நில்நில்!
நீதியை நினைத்தோ நின்றேன்? பளபள!
ஏதிது? என்மனம் இங்ஙனந் திரிந்தது!
கொன்றபின் அன்றோ முதலை நின்றழும்?
வாவா, காலம் வறிதாக் கினையே.
ஓவா திவையெலாம் உளறுதற் குரிய (180)
காலம் வரும்வரும் சாலவும் இனிதே!

(குடிலன் போக)

மூன்றாம் அங்கம்: முதற்களம் முற்றிற்று.

பார்க்க[தொகு]

III.மூன்றாம் அங்கம்[தொகு]

அங்கம்03/களம்02
அங்கம்03/களம்03
அங்கம்03/களம்04
மனோன்மணீயம்- ஆசிரியமுகவுரை, கதைச்சுருக்கம்.

I.[தொகு]

I:1 * I:2 * I:3 * I:4 * I:5

II[தொகு]

II:1 * II:2 * II:3

IV[தொகு]

IV:1 * IV:2 * IV:3 * IV:4 * IV:5

V[தொகு]

V:1 * V:2 * V:3