மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 01

விக்கிமூலம் இலிருந்து

மனோன்மணீயம்[தொகு]

அங்கம் ஒன்று[தொகு]

முதற்களம்[தொகு]

முதற்களத்தின் கதைச்சுருக்கம்:

சீவகன் என்னும் பாண்டிய அரசன் திருநெல்வேலியில் புதிதாக அமைந்த கோட்டையைப் பார்ப்பதற்காக, அரசகுருவாகிய சுந்தரமுனிவர் எழுந்தருளுகிறார். அவரை வரவேற்க, அரண்மனையில் அரசன் முதலியோர் ஆயத்தமாக இருக்கின்றனர். எழுந்தருளிய சுந்தரமுனிவரை, அரசன் வரவேற்று, அமரச்செய்து வணங்குகிறான். முனிவர் வாழ்த்தி ஆசி கூறுகிறார். பிறகு, அரசன் மனோன்மணி நகரமக்கள் முதலியவர்களின் சேமங்களை விசாரிக்கிறார். அரசன் ஏற்றவாறு விடைகூறியபின், தான் புதிதாக அமைத்த கோட்டையைப் புகழ்ந்து பேசிக் கோட்டையை முனிவருக்குக் காட்டும்படி தன் அமைச்சனான குடிலனுக்குக் கூறுகிறான். பாண்டிநாட்டையும், பொதிகை மலையையும், தாமிரவரணி ஆற்றையும், திருநெல்வேலியில் புதிதாக அமைந்துள்ள கோட்டையின் சிறப்புகளையும், கோட்டையைக் காட்டியபின், குடிலன் புகழ்ந்து பேசுகிறான். இவற்றையெல்லாம் கண்டும் கேட்டும் தெளிந்த முனிவர், குடிலன்மீது ஐயங்கொண்டு, அரசனுக்கு ஏதோ ஆபத்து வரவிருக்கிறது என்பதை உணர்கிறார். தனது ஐயத்தை முனிவர் அரசனிடம் குறிப்பாகக் கூறுகிறார். பிறகு, அரசகுமரி மனோன்மணியைக் கண்டு ஆசிகூறக் கன்னிமாடத்துக்குச் செல்கிறார். இவற்றையெல்லாம் கண்டும் கேட்டும் நின்ற நகரமக்கள், தமக்குள் உரையாடிக் கொள்கின்றனர். அமைச்சன், கோட்டையைப் புகழ்ந்து பேசியதைப் பற்றியும், முனிவர் குறிப்பாகக் கூறியதைக் கேட்ட அரசனும் அமைச்சனும் முகம் மாறியதைப் பற்றியும் அரசகுமரி மனோன்மணியின் சிறந்த குணங்களைப்பற்றியும் நகரமக்கள் பேசிக்கொள்கின்றனர். (மயிலை சீனிவேங்கடசாமி அவர்களின் பதிப்பில்உள்ளபடி.)

இடம்: பாண்டியன் கொலுமண்டபம்.

காலம்: காலை.

(சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க)
(நேரிசை ஆசிரியப்பா)

(வரிகள்:01-50)[தொகு]

முதற் சேவகன்:

புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந்
திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே.

இரண்டாம் சேவகன்:

அடியிணை அருச்சனைக் காகுங் கடிமலர்
எவ்விடம் வைத்தனை? .....

மூன்றாம் சேவகன்:

.... .... ஈதோ! நோக்குதி

நான்காம் சேவகன்:

அவ்விடத் திருப்பதென்? ..... .....

மூன்றாம் சேவகன்:

..... ...... ஆரம், பொறு!பொறு!
விழவறா வீதியில் மழையொலி யென்னக்
கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும்
கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும்
மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச்
'சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்'
எனுமொலி யேசிறந் தெழுந்தது கேண்மின்!

இரண்டாம் சேவகன்

முனிவரர் என்றிடிற் கனிவுறுங் கல்லும்!

நான்காம் சேவகன்:

எத்தனை பக்தி! எத்தனைக் கூட்டம்!
எள்விழற் கிடமிலை யான்போய்க் கண்டேன்!

மூன்றாம் சேவகன்:

உனக்கென் கவலை! நினைக்குமுன் ஓடலாம்!

முதற்சேவகன்:

அரசனும் ஈதோ அனைந்தனன், காணீர்!
ஒருசார் ஒதுங்குமின், ஒருபுறம், ஒருபுறம் (சீவகன் வர)

யாவரும்: (தொழுது)

ஜய!ஜய! விஜயீ பவ!ரா ஜேந்திரா!!

(சுந்தரமுனிவர், கருணாகரர், குடிலன், நகரவாசிகள் முதலியோர் வர)

ஜய!ஜய! விஜயீ பவ!ரா ஜேந்திரா!!

சீவகன்:

வருக வருக குருகிரு பாநிதே!
திருவடி தீ்ண்டப் பெற்றவிச் சிறுகுடில்
அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ
குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ
யாதென ஓதுவன் தீதற வாதனத்து
இருந்தருள் இறைவ என்பவ பாசம்
இரிந்திட நின்பதம் இறைஞ்சுவல் அடியேன்! (சீவகன் பாதபூசை செய்ய)

சுந்தரமுனிவர்:

வாழ்க! வாழ்க! மன்னவ! வருதுயர்
சூழ்பிணி யாவுந் தொலைந்து வாழ்க!
சுகமே போலும் மனோன்மணி! .....

சீவகன்:

..... சுகம்சுகம்!

சுந்தரமுனிவர்:

இந்நக ருளாரும் யாவரும் க்ஷேமம்?

சீவகன்:

உன்னரு ளுடையோர்க் கென்குறை? க்ஷேமம்
கூடல் மாநகர் குடிவிட் டிப்பால்
பீடுயர் நெல்லையில் வந்தபின் பேணி
அமைத்தன னிவ்வரண்! இமைப்பறு தேவரும்
கடக்கரும் இதன்றிறம் கடைக்கண் சாத்தி
ஆசிநீ யருள நேசித் தேன்நனி.
எத்தனை புரிதான் இருக்கினும் எமக்கெலாம்
அத்தநின் அருள்போல் அரணெது! குடில!
இவ்வழி யெழுந்தநம் இறைவர், கடிபுரி
செவ்விதின் நோக்கக் காட்டுக தெரிந்தே. (40)

குடிலன்:

ஊன்வரு பெருநோய் தான்விட அடைந்த
அன்பரின் புறஇவ் வருளுருத் தாங்கி
வந்தருள் கிருபா சுந்தர மூர்த்தி!
நீயறி யாததொன் றில்லை, ஆயினும்
உன்னடி பரவி யுரைப்பது கேண்மோ,
தென்பாண்டி நாடே சிவலோக மாமென
முன்வாத வூரர் மொழிந்தனர். அன்றியுந்
தரணியே பசுவெனச் சாற்றலும் மற்றதிற்
பரதமே மடியெனப் பகர்வதும் சரதமேல்,
பால்சொரி சுரைதென் பாண்டி யென்பது (50)

(வரிகள்:51-100)[தொகு]

மேல்விளம் பாதே விளங்கும் ஒருகால்
எல்லா மாகிய கண்ணுதல் இறைவனும்
பல்லா யிரத்த தேவரும் பிறரும்
நிலைபெற நின்ற பனிவரைத் துலையின்
ஒருதலை யாக, உருவஞ் சிறிய
குறுமுனி தனியா யுறுமலை மற்றோர்
தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில்
மலையமோ அலதுபொன் வரையோ பெரிது?
சந்நு செவிவழித் தந்த கங்கையும்
பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும் (60)
வருந்திய தேவரோ டருந்தவர் வேண்ட,
அமிழ்திலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த
மலையம்நின் றிழி்ந்து, விலையுயர் முத்தும்
வேழவெண் மருப்பும் வீசி்க் காழகிற்
சந்தனா டவியுஞ் சாடி, வந்துயர்
குங்கும முறித்துச் சங்கின மலறுந்
தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில்
வளம்பொழில் கடந்து, குளம்பல நிரப்பி
இருகரை வாரமுந் திருமக ளுறையுளாப்
பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும் (70)
எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ?
இந்நதி வலம்வர விருந்தநம் தொன்னகர்
பொன்னகர் தன்னிலும் ப? கண்டனை
தொடுகட லோவெனத் துணுக்குறும் அடையலர்
கலக்கத் தெல்லையும் கட்செவிச் சுடிகையும்
புலப்பட வகன்றாழ் புதுவக ழுடுத்த
மஞ்சுகண் துஞ்சுநம் இஞ்சி யுரிஞ்சி
உதயனு முடல்சிவந் தனனே! அதன்புறம்
நாட்டிய பதாகையி்ல் தீட்டிய மீனம்,
உவாமதிக் குறுமா சவாவொடு நக்கும். (80)
வெயில்விரி யெயிலினங் காக்க இயற்றிய
எந்திரப் படைகளுந் தந்திரக் கருவியும்
பொறிகளும் வெறிகொளுங் கிறிகளு மெண்ணில;

சுந்தரமுனிவர்:

(எழுந்து)
சம்போ! சங்கர! அம்பிகாபதே! பதேஎ!
நன்று மன்னவ உன்றன் றொல்குலங்
காக்கநீ யாக்கிய இவையெலாம் கண்டுளேம்
அல்லா துறுதி யுளதோ? சொல்லுதி!

சீவகன்:

என்னை! யென்னை! எமக்கருள் குரவ!
இன்னும் வேண்டிய தியாதோ? துன்னலர்
வெருவுவர் கேட்கினும்; பொருதிவை வென்றுகைக் (90)
கொள்ளுவ ரென்பதும் உள்ளற் பாற்றோ?
ஆயினும் அரணி லுளபுரை நோக்கி
நீயினி இயம்பிடில் நீக்குவன் நொடியே.

சுந்தரமுனிவர்

காலம் என்பது கறங்குபோற் சுழன்று
மேலது கீழாக் கீழது மேலா
மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை
வினைதெரிந் தாற்றும் வேந்தன் முனமுனம்
ஆயற் பாற்ற தழிவும் அஃதொழி
வாயிலு மாமென வையகம் புகலும்
உன்னையு முன்குலத் துதித்தநம் மனோன்மணி (100)
(வரிகள்:101-)[தொகு]
தன்னையுஞ் சங்கரன் காக்க! தயாநிதே!
அன்பும் அறனும் யாக்கையாக் கொண்ட
நின்புதல் வியையான் காணநே சித்தேன்
அத்திரு வுறையும் அப்புறம் போதற்
கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய்.

சீவகன்:

ஆம்!ஆம்! சேவக! அறைதி சென்று
தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு
நங்குல முனிவர் இங்குள ரெனவே,

(அரசனும் முனிவரும் சீடரும் அப்புறம் போக)

குடிலன்:

(தனதுள்)
நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல! (சேவகனை நோக்கி)
சேவகா! முனிவர் சிவிகையுஞ் சின்னமும் (110)
யாவுமவ் வாயிலிற் கொணர்தி. .....

சேவகன்:

.... ..... ..... சுவாமி!

(குடிலன் முதலியோர் போக)

முதல் நகரவாசி:

கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய
நயப்புரை! ஆ!ஆ! வியப்பே மிகவும்!
நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ?

இரண்டாம் நகரவாசி:

கேட்டோம் கேட்டோம் நாட்டிற் கென்குறை
விடு!விடு! புராணம் விளம்பினன் வீணாய்.

மூன்றாம் நகரவாசி:

குடிலன் செய்யும் படிறுகள் முனிவர்
அறியா தவரோ? சிறிதா யினுமவன்
உரைத்தது கருத்தில் கொண்டிலர் உவர்த்தே.

முதல் நகரவாசி

ஆம்ஆம்! அவன்முகம் ஏமா றினதே. (120)
விரசமா யரசனும் வியர்த்தனன் கண்டேன்.

இரண்டாம் நகரவாசி:

முனிவரங் கோதிய தென்னை? முற்றும்
துனிபடு நெருக்கிற் கேட்டிலன். .....

மூன்றாம் நகரவாசி:

..... ..... ...... யாதோ,
‘மனோன்மணி’ யெனப்பெயர் வழங்கினர், அறிவைகொல்?

நான்காம் நகரவாசி:

வாழ்த்தினர் போலும், மற்றென்? .....

முதல் நகரவாசி:

.... ..... ...... பாழ்த்தஇத்
தந்தையிற் பரிவுளர், மனோன்மணி தன்மேல்.

இரண்டாம் நகரவாசி:

ஐயமற் றதற்கென்? யார்பரி வுறார்கள்?
வையகத் தவள்போல் மங்கைய ருளரோ?
அன்பே உயிரா, அழகே யாக்கையா
மன்பே ருலகுசெய் மாதவம் அதனான் (130)
மலைமகள் கருணையுங் கலைமக ளுணர்வுங்
கமலையி னெழிலும் அமையவோ ருருவாய்ப்
பாண்டியன் தொல்குல மாகிய பாற்கடல்
கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த
மனோன்மணி யன்னையை வாழ்த்தார் யாரே?

மூன்றாம் நகரவாசி:

அன்றியும் முனிகட் கவள்மேல் வாஞ்சை
இன்றுமற் றன்றே, இமையவர்க் காக
முன்னொரு வேள்வி முயன்றுழி வன்னி
தவசிகள் தனித்தனி அவிசு சொரிந்துந்
தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து (140)
மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும்
வெய்துயிர்த் திருக்க, விளையாட் டாக
மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி
நெய்பெய் போழ்தில் நெடுஞ்சுழி சுழித்து
மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப்
புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது முதலா
முனிவர் யாவரும் மணியென மொழியில்
தங்கள் தலைமிசைக் கொள்வர்! தரணியில்
எங்குள தவட்கொப் பியம்புதற் கென்றே.

நான்காம் நகரவாசி:

ஒக்கும்! ஒக்கும்! இக்குங் கைக்கு (150)
மென்னும் இன்மொழிக் கன்னிக் கெங்கே
ஒப்புள துரைக்க! ஓ!ஓ! முனிவர்
அவ்வழி யேகுநர் போலும்
இவ்வழி வம்மின் காண்குதும் இனிதே.

(நகரவாசிகள் போக)

முதல் அங்கம் முதற்களம் முற்றிற்று[தொகு]

பார்க்க:[தொகு]

I.முதல் அங்கம்[தொகு]

மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 02
மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 03
மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 04
மனோன்மணீயம்/அங்கம் 01/களம் 05
மனோன்மணீயம்(ஆசிரியமுகவுரை, கதைச்சுருக்கம்.)
மனோன்மணீயம்/மூலம்(முதலங்கம் பாயிரம்.)

II

II:1 * II:2 * II:3

III

III:1 * III:2 * III:3 * III:4

IV

IV:1 IV:2 IV:3 IV:4 IV:5

V

V:1 V:2 V:3 V:4 V:5