மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 01
Appearance
மனோன்மணீயம்
[தொகு]அங்கம் ஐந்து
[தொகு]முதற் களம்
[தொகு]- இடம்: கோட்டைக்கும், வஞ்சியர் பாசறைக்கும் நடுவிலுள்ள வெளி.
- காலம்: யாமம்.
(குடிலன் தனியே நடக்க)
- (நேரிசை ஆசிரியப்பா)
குடிலன்:
- திருமணம் கெடினும் தீங்கிலை ஈங்கினி
- இருசரம் இன்றி எப்போ ரிடையும்
- ஏகார் மதியோர், இதில்வரு கேடென்?
- ஆகா வழியும் அன்றிது, சேரனை
- அணைந்தவன் மனக்கோள் உணர்ந்ததன் பின்னர்
- சுருங்கையின் தன்மை சொல்லுதும் ஒருங்கே.
- இசைவனேற் காட்டுதும், இன்றேல் மீள்குதும்.
- பசையிலா மனத்தன்! பணிதலே விரும்புவன்!
- பாண்டிநா டாளவோ படையெடுத் தானிவன்?
- தூண்டிடு சினத்தன், தொழுதிடில் மீள்வன்.
- வேண்டிய நீரும் விழைந்ததோர் தாரும்
- பாண்டில் பாண்டிலா யாண்டுகள் தோறும்
- அனுப்புதும், குறைவென் அதனில்? இதுவே
- மனக்குறை நீக்கு மார்க்கம். வதுவை
- போயினென்? ஆயினென்? பேயன் நம்மகன்
- எடுத்தெறிந் திடுவனிப் போதே நம்மொழி.
- அடுத்தநம் படைஞரோ பகைவர்; அவர்நமைக்
- கெடுத்தநா ரணற்கே கேளொடு கிளைஞர்
- ஆதலின் இஃதே திதறு முறுதி...
- என்னைநம் ஊகம்! என்னைநம் ஊக்கம்!
- முன்னர்யாம் அறியா இன்னநற் சுருங்கையில்
- துன்னிருள் வழிதனி தொடர்ந்திவண் சேர்ந்தோம்.
- ஊக்கமே பாக்கியம். உணர்விலார் வேறு
- பாக்கியம் ஊழெனப் பகர்வதெல் லாம்பாழ்.
- சாக்கியம் வேறென்? சாத்தியா சாத்தியம்
- அறிகுறி பலவால் ஆய்ந்தறிந் தாற்றும்
- திறமுள ஊகமே யோகம்; அன்றி
- வான்கா டதனில் வறிதே சுழலும்
- மீன்காள்! வேறும் உளதோ விளம்பீர்?
- மதியிலா மாக்கள் விதியென நும்மேற்
- சுமத்தும் சுமையும் தூற்றும் சும்மையும்
- உமக்கிடு பெயரும் உருவமும் தொழிலும்
- அமைக்கும் குணமும் அதில்வரு வாதமும்
- யுக்தியும் ஊகமும் பக்தியும் பகைமையும்
- ஒன்றையும் நீவிர் உணரீர்! அஃதென்?
- வென்றவர் பாசறை விளங்குவ தஃதோ!
- இங்குமற் றுலாவுவன் யாவன்? பொங்குகால்
- வருந்தொறும் சிலமொழி வருவ. அஃதோ
- திரும்பினன்! ஒதுங்குவம், தெரிந்துமேற் செல்குவம்.
புருடோத்தமன்:
(பாட)
(குறள் வெண்செந்துறை) உண்ணினைவில் ஒருபோதும் ஓய்வின்றிக் கலந்திருந்தும் உயிரே என்றன் கண்ணிணைகள் ஒருபோதும் கண்டிலவே நின்னுருவம் காட்டாய் காட்டாய்! அவத்தை பல அடையுமனம் அனவரதம் புசித்திடினும் அமிர்தே என்றன் செவித்துளைகள் அறிந்திலவே தித்திக்கும் நின்னாமம் செப்பாய் செப்பாய்! பொறிகளறி யாதுள்ளே புகும்பொருள்கள் இலையென்பர், பொருளே உன்னை அறியவவா வியகரணம் அலமாக்க அகத்திருந்தாய் அச்சோ அச்சோ! (புருடோத்தமன் சற்றே அகல)
குடிலன்:
(தனிமொழி)
- மனிதன் அலனிவன்! புனிதகந் தருவன்!
- தேவரும் உளரோழ யாதோ? அறியேன்
- இருளெலாம் ஒளிவிட இலங்கிய உருவம்
- மருள்தரு மதனன் வடிவே! மதனற்கு
- உருவிலை என்பர், ஓசையும் உருவும்!
- பாடிய பாட்டின் பயனென்! அஃதோ!
- நாடி அறிகுதும் நன்று நன்று!
(புருடோத்தமன் திரும்பி வர)
புருடோத்தமன்:
(பாட)
(குறள் வெண்செந்துறை- தொடர்ச்சி) புலனாரக் காண்பதுவே பொருளென்னும் போதமிலாப் புன்மை யோர்க்கிங் குலவாதென் உளநிறையும் உனதுண்மை உணர்த்தும்வகை உண்டே உண்டே பெத்தமனக் கற்பிதமே பிறங்கு நினைவெனப் பிதற்றும் பேதை யர்க்கோர் யத்தனமற் றிருக்கவென்னுள் எழுமுனது நிலையுரைப்ப தென்னே யென்னே. தேர்விடத்தென் உள்ளநிறை தெள்ளமுதே உன்னிலைமை தேரா திங்ஙன் ஊர்விடுத்தும் போர்தொடுத்தும் உனையகல நினைத்ததுமென் ஊழேஊழே!
(ஆசிரியப்பாவின் தொடர்ச்சி)
குடிலன்:
- சேரனே யாமிது செப்பினோன், போரில்
- ஒருபுறம் ஒதுங்கி அரசனை அகற்றி
- நின்றதாற் கண்டிலேன். நிறைந்த காமுகன்,
- ஒன்றநு கூலம் உரைத்தான், நன்றே
- ஊரிவன் விடுத்ததும் போரிவண் தொடுத்ததும்
- எண்ணிய கொள்கைக் கிசையும் புகன்றவை.
- நண்ணுதும் நெருங்கி நல்லது! திரும்பினன்.
(புருடோத்தமன் திரும்பி வர)
புருடோத்தமன்:
(தனிமொழி)
- என்றும் கண்டிலம் இன்றுகண் டதுபோல்
- எத்தனை முகத்திடை தத்துறு துயரம்!
- இவ்வயின் யான்வந் திறுத்தநாள் முதலாக
- கௌவையின் ஆழ்ந்தனை போலும்! ஐயோ!
(குடிலன் எதிர்வர) (குடிலனை நோக்கி)
- ஜடிதி! பெயரென்? சாற்றுதி! தத்க்ஷணம்!
குடிலன்:
- அடியேன் அடியேன்! குடிலன்! அடிமை!
அடிகள்: 60-111
[தொகு]புருடோத்தமன்:
- வந்ததென் இருள்வயின்? வாளிடென் அடியில்! (60)
குடிலன்:
- வெந்திறல் வேந்தநின் வென்றிகொள் பாசறை
- சேர்ந்துன் அமையம் தேர்ந்து தொழுதுஓர்
- வார்த்தைநின் திருச்செவி சேர்த்திடக் கருதி
- வந்தனன் அடியேன், தந்தது தெய்வம்
- உன்றன் திருவடி தரிசனம் உடனே! (65)
- சிந்தையெப் படியோ அப்படி என்செயல்!
புருடோத்தமன்:
- செப்புதி விரைவில், செப்புதி வந்தமை!
குடிலன்:
- ஒப்பிலா வீர! எப்புவ னுமுநின்
- மெய்ப்புகழ் போர்த்துள ததனால், இப்புவி
- நீவரு முனமே நின்வசப் பட்டுத் (70)
- தாவரும் இன்பம் தடையறத் துய்ப்பப்
- பாக்கியம் பெற்றிலம் பண்டே என்றுனி
- ஏக்கமுற் றிருந்தமை யானெடு நாளாய்
- அறிந்துளன். இன்றுதீ ஆற்றிய போரிற்
- செறிந்திரு படையும் சேர்தரு முனமே (75)
- முறிந்தியாம் ஓடிய முறைமையும் சிந்தையிற்
- களிப்படை யாமலே கைகலந் தமையும்
- வெளிப்படை யன்றோ? வேந்த!இப் புவியோர்
- வெல்லிட மும்வெலா இடமும் யாவும்
- நல்லவா றறிவர், நாயினேன் சொல்வதென்? (80)
- வேசையர் தங்கள் ஆசையில் முயக்கம்
- அன்றோ இன்றவர் ஆற்றிய போர்முறை?
- என்செய் வாரவர்? என்செய்வார்? ஏழைகள்!
- நின்புகழ் மயக்கா மன்பதை உலகம்
- யாண்டும் இன்றெனில், அணிதாம் இந்தப் (85)
- பாண்டியும் நின்பாற் பகைகொளத் தகுமே!
- ஒருவா றறமே யாயினும் மருவாக்
- கொற்றவர் பிழைக்காக் குற்றமில் மாக்களை
- மற்றவர் மனநிலை முற்ற அறிந்தபின்
- கருணையோ காய்தல், தருமநல் லுருவே! (90)
புருடோத்தமன்:
(தனதுள்)
- யாதோ சூதொன் றெண்ணினன், அறிகுவம்.
(குடிலனை நோக்கி)
- வேண்டிய தென்னை அதனால்? விளம்புதி.
குடிலன்:
- ஆண்டகை யறியா ததுவென்? இன்று
- மாண்டவர் போக மீண்டவ ரேனும்
- மாளா வழிநீ ஆளாய் என்னக் (95)
- கைகுவிப் பதேயலாற் செய்வகை அறியா
- அடியேன் என்சொல? ஆஆ! விடியல்
- வாளா மாளும் மனிதர் தொகுதி
- எண்ணி எண்ணி எரிகிற தென்னுளம்.
- எண்ணுதி கருணை! இவர்க்குள் தாய்க்கொரு (100)
- புதல்வராய் வந்த பொருநரெத் தனையோ?
- வதுவை முற்றுறா வயவரெத் தனையோ?
- புதுமணம் புரிந்த புருடரெத் தனையோ?
- நொந்த சூலினர் நோவு பாராது
- வந்திவண் அடைந்த மள்ளரெத் தனையோ? (105)
- தாய்முகம் வருந்தல் கண்டெழுந் தன்சிறு
- சேய்முகம் மறவாச் செருநரெத் தனையோ?
- செயிருற முழந்தாள் சேர்ந்தழு பாலரைத்
- துயிலிடைத் துறந்த சூரரெத் தனையோ?
புருடோத்தமன்:
- சரி,சரி! இவையுன் அரசர்க் காங்கு (110)
- சாற்றா தொழிந்ததென்?
அடிகள்:111-169
[தொகு]குடிலன்:
- .... .... சாற்றிலென்!
- போற்றான் யார்சொலும் புந்தியும் சற்றும்
- அன்பிலன், பிறர்படும் துன்பம் சிறிதும்
- அறியா வெறியன், அன்பொ டிம்மாலை
- குறியா நீவிடு தூதையும் கொண்டிலன், (115)
- அண்டிய சீவ ராசிகள் அனைத்தையும்
- மண்டமர் இதில்நின் வைவாள் தனக்கே
- இரையிடல் ஒன்றே விரதமாக் கொண்டனன்.
- பித்தன் ஒருவன் தன்னால் இத்தமிழ்
- நாடெலாம் வெறுஞ்சுடு காடாய் விடுமே. (120)
- ஆவ! இப்பெரும் பாவமும் பழியும்
- அஞ்சினேன், அஞ்சினேன்! எஞ்சலில் கருணை
- யுருவே! அடியேற் கொருமொழி தருவையேல்
- ஒருவர்க் கேனு முறுதுய ரின்றி
- அரசனும் புரிசையும் அரைநொடிப் போதிலுன் (125)
- கரதல மாமொரு கௌசலம்,
- காட்டுகே னடியேன் கேட்டரு ளரசே!
- (நிலைமண்டில ஆசிரியப்பா)
புருடோத்தமன்:
(தனதுள்)
- பாதகா! விசுவாச காதகா! ஆ!ஹா!
(சிரித்து)
குடிலன்:
- அரசன் கைப்படில் ஆங்குளார் யாருமென்
- உரைவத றாதுன் குடைக்கீ ழொதுங்குவர்
- மங்கல மதுரையு மிங்கிவர் வழியே
- உன்னா ணைக்கீழ் ஒதுங்குதல் திண்ணம்
- தொல்புவி தோற்றியது தொட்டர சுரிமை
- மல்கிய புவியிஃ ததனால், “மன்னவன்”
- என்றபே ரொன்றுநீ யீவையே லென்றும்
- நின்னா ணையின்கீழ் நின்றுநீ முன்னர்
- வேண்டிய தாரொடு நீருமே யன்றிமற்
- றீண்டுள எவேயே யாயினும் வேண்டிடில்
- சிரமேற் சுமந்துன் முரசா ரனந்தைக்
- கோயில் வாயிலிற் கொணர்ந்துன் திருவடி
- கண்டுமீள் வதுவே கதியடி யேற்காம்
- பண்டிரா கவன்றன் பழம்பகை செற்று
- வென்றதோ ரிலங்கை விபீடணன் காத்தவா
- றின்றுநீ வென்றநா டினிதுகாத் திடுவேன்.
புருடோத்தமன்:
- சமர்த்தன் மெத்தவும்! அமைத்ததந் திரமென்?
குடிலன்:
- அரசன தந்தப்புரமது சேர
- யாவரு மறியா மேவருஞ் சுருங்கை
- ஒன்றுளது. அவ்வழி சென்றிடி லக்கணங்
- கைதவன் கைதியா யெய்துவ னுன்னடி.
புருடோத்தமன்:
- உண்மை?(சேவகரை நோக்கி)
- .... யாரது?
குடிலன்:
- .... .... உதியன் கணமுன்
- மெய்ம்மை யலாதெவர் விளம்புவர்?
(அருள்வரதன் வர)
அருள்வரதன்:
- .... .... .... அடியேன்!
புருடோத்தமன்:
- கைத்தளை காற்றளை கொடுவா நொடியில்.
(அருள்வரதன் போக) (குடிலனை நோக்கி)
- எத்திசை யுளதுநீ யியம்பிய சுருங்கை?
குடிலன்:
- அணிதே! அஃதோ! சரணம் புகுந்த
- எளியேற் கபய மியம்புதி இறைவ!
புருடோத்தமன்:
- அவ்வழி யோநீ யணைந்தனை?
குடிலன்:
- .... .... .... ஆம்ஆம்!
- செவ்விதி னொருமொழி செப்பிடி னுடனே
- காட்டுவ னடியேன்,
(அருள்வரதனும் சேவகரும் விலங்கு கொண்டுவர)
(குடிலனைச் சுட்டிக்காட்டி)
- .... .... ஐயோ! ஐயோ! ஓஹோ! செய்ததென்?
- மெய்யே முற்றும் பொய்யிலை! பொய்யிலை!
(அருள்வரதன் விலங்கு பூட்ட)
புருடோத்தமன்:
- எத்திசை யுளதச் சுருங்கை? ஏகாய்!
- சித்திர வதையே செய்வேன் பிழைப்பின்!
குடிலன்:
(அழுது)
- தேடியே வந்து செப்பிய வடியேன்
- ஓடியோ போவேன்? ஓஹோ! உறுதி
- முந்தியே தந்திடில்...
புருடோத்தமன்:
- சேரன், விஜயமுந் திருடான்! அறிகுதி.
(சேவகரை நோக்கி)
- சூரர் பதின்மர் சூழுக விருபுறம்!
(குடிலனை நோக்கி)
- நடவாய் உயிர்நீ நச்சிடின், கெடுவாய்!
- எத்திறம் பிழைப்பினுஞ் சித்திர வதையே!
(யாவரும் சுருங்கை நோக்கிப் போக)
ஐந்தாம் அங்கம், முதற்களம் முற்றிற்று.
[தொகு]பார்க்க:
[தொகு]V
[தொகு]மனோன்மணீயம்: ஐந்தாம்அங்கம், முதற்களத்தின் கதைச்சுருக்கம்
- மனோன்மணீயம் மூலம்(முதல்அங்கம்-பாயிரம்)
I
[தொகு]II
[தொகு]III
[தொகு]III:01 /\ III:02 /\ III:03 /\ III:04