உள்ளடக்கத்துக்குச் செல்

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 02

விக்கிமூலம் இலிருந்து

மனோன்மணீயம்

[தொகு]

அங்கம் நான்கு

[தொகு]

இரண்டாம் களம்

[தொகு]
இடம்: கோட்டை வாசல்.
காலம்: காலை.
நடர்: கோட்டை காக்கும் படைஞர்
(நேரிசை ஆசிரியப்பா)
முதற் படைஞன்
இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?
எப்படி இருந்த திராஜன் பேச்சு!
கல்லும் உருகிக் கண்ணீர் விடுமிப்
புல்லும் கேட்கிற் புறப்படும் போருக்கு.
இரண்டாம் படைஞன்
முற்றும் கேட்டைகொல்?
முதற்படைஞன்
.... .... முற்றும் கேட்டேன்.
சற்றும் மனமிலை திரும்புதற் கெனக்கு.
சரியல ஆணையில் தவறுதல் என்றே
வெருவிதான் மீண்டேன். இலையேல் உடன்சென்
றொருகை பார்ப்பேன். ஓகோ! சும்மா
விடுவனோ? பார்க்கலாம் விளையாட் டப்போது (10)
என்செய! என்செய! எத்தனை பேரையான்
பஞ்சாய்ப் பறத்துவன்! துரத்துவன்! பாண்டியில்
வஞ்சவிவ் வஞ்சியர் என்செய வந்தார்?
நெஞ்சகம் பிளந்திந் நெடுவாள் தனக்குக்
கொஞ்சமோ காட்டுவன் குருதி! என்செய!
நினைதொறும் உடலெலாம் தின்பது தினவே!
பாக்கியம் இல்லையென் கைக்கும் வாட்கும்!
இரண்டாம் படைஞன்
பாக்கியம் அன்றது, பறைப்பயல் பாவி
குடிலனோ டுலாவும் கோணவாய்க் கொடியன்,
சடையன், தலைவனோ டெதுவோ சாற்றித் (20)
தடுத்தே நமையெலாம் விடுத்தான் இப்பால்.
மூன்றாம் படைஞன்
கெடுத்தான் அவனே என்னையும். அன்றேல்
முடித்தே விடுவனென் சபதம் முற்றும்.
சண்டிஅச் சங்கரன் வந்துளான் சமர்க்கு
கண்டேன் கையிற் கிடைக்கிற் பண்டென் (25)
தாயையும் என்னையும் சந்தையிற் பழித்த
வாயினை வகிர்ந்து மார்பினைப் பிளந்து...

(வாய்மடித்துப் பற்கடிக்க)

நான்காம் படைஞன்
வஞ்சியர் அனைவரும் மானமில் மாக்கள்,
பிஞ்சிற் பழுத்த பேச்சினர். யானெலாம்
நன்றா யறிவன். ஒன்றார் என்னுடன் (30)
சென்றுளேன் சனார்த்தனம். கண்டுளேன் வைக்கம்.
மூன்றாம் படைஞன்
விடுவேன் அல்லேன், அடுபோர் முடியினும்
நடுநிசி ஆயினும் அடுகள முழுதும்
தேடுவன், சங்கரன் செத்தான் ஆயினும்
நாடி யவன்தலை நசுக்கி மிதித்து (35)
வாயிடை நெடுவேல் இறக்கி...
முதற் படைஞன்
... ... ... சீ!சீ!
சேவ கனாநீ! செப்பிய தென்னை!
யாவரே பிணத்தோ டாண்மைபா ராட்டுவர்?
பிணமோ பிணத்தோ டெதிர்க்க!
மூன்றாம் படைஞன்
பெருமைநீ பேசேல். பெற்றவுன் தாயேல்
அருமைநீ அறிகுவை.
முதற்படைஞன்
... ... யாரா யினுமென்?
பிணத்தொடு பிணக்கெது? சீ!சீ! அன்றியும்
ஒருவன் தனக்கா உண்டாம் குரோதம்
கருதியிங் கெவன்வாள் உருவினன்? நமக்கெலாம்
மாதா இவ்வயின் மகாநா டிதுவே. (45)
ஏதோ அவளையும் நம்மையும் இகழ்ந்திவ்
வஞ்சியர் வஞ்சமாய் வந்தனர். அதனால்
நெஞ்சகம் கொதித்து நெடியநம் சுதந்தரம்
தனக்கா உயிரையும் உவப்போ டளிக்கத்
துணிந்தே நம்மையும் மறந்தே நின்றோம். (50)
என்னில் அவரவர் இழுக்குஆர் கருதுவர்?
உன்னுதி நன்றாய். ஒருவன் தனக்கா
வந்தபோர் அன்றிஃ தூர்ப்போர். அதனால்
இதோஅங் கெய்தினோர் யாரே ஆயினும்,
சுதேசாநு ராகத் தொடர்பால் அன்றிப் (51)
பலவாம் தமது பழம்பழி மீட்போர்,
கொலைபா தகஞ்செயும் கொடுமைய ரேயாம்!

(நாராயணன் படைக்கோலமாகிக்
குதிரையின் மேல்வர)

இரண்டாம் படைஞன்
பாரும்! பாரும்! நாரா யணரிதோ...
நாராயணன்
உன்பெயர் முருக னன்றோ?
முதற்படைஞன்
.... .... .... அடியேன்.
நாலாம்படைஞன்
என்பெயர் சாத்தன், சுவாமி!
நாராயணன்
... ... ... ஓகோ!
எத்தனை பேருளர் இவ்வா யிலின்கண்?
முதற்படைஞன்
பத்தைஞ் ஞூறுளர், மெத்தவும் உத்தமர்
மிகுதிறத் தார்!போர் விரும்பினர்! இவர்தம்
தகுதிக் கேற்ப தன்றிக் காவல்.
நாராயணன்
பொறுபொறு! முருகா! புரையற் றோர்க்குமற் (65)
றுறுபணி, இன்னதென் றுண்டோ? எதிலும்
சிறுமையும் பெருமையும் செய்பவர்க் கன்றிச்
செய்வினை தனக்கெது? மெய்ம்மையில் யாவும்
திருத்தமாச் செய்தலே பொருத்தமுத் தமர்க்கு!
இரண்டாம்படைஞன்
வேணுமென் றாயினும் எங்களை விடுத்தல் (70)
நாணமும் நோவுமாம் நாரா யணரே!
நாராயணன்
வேண்டுமென் றாரே விடுப்பர். சீச்சீ!
அப்படி யேதான் ஆயினும் நமக்குக்
கைப்படு கடமையே கடமை...முருகா!
எத்தனை பேரால் ஏலுமிக் காவல்? (75)
முதற்படைஞன்
நாலிலொன் றாயின் சாலவும் மிகுதி.
நாராயணன்
அத்தனை வல்லவர் கொல்லோ? ஆயின்
இத்தனை பேர்க்குள தொழிலெலாம் தம்மேல்
ஏற்றிட வல்லரை மாற்றிநீ நிறுத்திக்
காட்டுதி எனக்கு.
முதற்படைஞன்
.... .... காட்டுவன் ஈதோ!

(அணிவகுத்துக் காட்ட)

நாராயணன்
(தனதுள்)
நல்லனித் தலைவன், வல்லவர் இவரும்.
முதற்படைஞன்
ஈதோ நின்றனர்!

(காவற்படைகளை நிறுத்திக் காட்டி)

நாராயணன்
.... .... போதுமோ இவர்கள்?
முதற்படைஞன்
போதும், போதும்!
காவற் படைகள்
.... .... போதுமே யாங்கள்...
நாராயணன்
எண்ணுமின் நன்றா யேற்குமுன்! பின்புநீர்
பண்ணும் தவறுநம் பாலாய் முடியும். (85)
காவற்படைகள்
தவிர்கிலம் கடமையில், சத்தியம் தலைவ!
நாராயணன்
தகுதியன் றெனச்சிலர் சாற்றிய தொக்க
மிகுபழி நீவிரும் மொழிவிரோ என்மேல்?
காவற்படைகள்
மொழியோம் ஒன்றும். மொழியோம் நும்மேல்.
நாராயணன்
சரிசரி! ஆயின் தாங்குமின் காவல், (90)
பரிமற் றையர்க்கெலாம் உளவோ?
மூன்றாம்படைஞன்
.... .... .... ஓகோ!
நாலாம் படைஞன்
பெரியதென் பரிபோற் பிறிதிலை.
நாராயணன்
.... .... .... காணுதும்
அணிவகுத் திவ்வயின் அமர்மின்! முருகா!
மற்றைவா யிலிலும் மாற்றியிவ் விதம்யான்
வைத்துள படையும் அழைத்திப் புறநீ (95)
நொடியினில் வருதி.
முதற்படைஞன்
.... .... அடியேன், அடியேன்.

(முதற்படைஞன் போக)

நாராயணன்
ஆம்பொழு தழைப்போம், வாம்பரி அமர்மின்.

(கோட்டைமேல் உலாவி நின்று) (தனதுள்)

அரும்படை இரண்டும் அதோ!கை கலந்தன,
வரும்பழி யாதோ? மன்னவர்க் கேதோ?
ஆவதிங் கறியேன்! சீவக! சீவகா! (100)
முற்றுநான் அறிவன்நின் குற்றமும் குணமும்
குற்றமற் றென்னுள கூறற் குன்வயின்?
வித்தையும் உன்பெருஞ் சத்திய விருப்பமும்
உத்தம ஒழுக்கமும் எத்துணைத் தையோ!
வறிதாக் கினையே வாளா அனைத்தும் (105)
அறியா தொருவனை யமைச்சா நம்பி!
இன்னதொன் றன்றிமற் றென்பிழை உன்னுழை?
மன்னவன் நல்லனா வாய்க்குதல் போல
என்னுள தரியவற் றரியதிவ் வுலகில்?
வாய்த்துமிங் குனைப்போல் வாணாள் வறிதாத் (110)
தீத்திறல் ஒருவன் சேர்க்கையால் வீதல்
மண்ணுளோர் பண்ணிய புண்ணியக் குறைவே!
சுதந்தரம் அறுவோர்க்(கு) இதந்தீங் குண்டோ?
கூறுவோர் அறிவின் குறைவே, வேறென்?
அன்றியும் உன்மிசை நின்றிடும் பெரும்பிழை (115)
ஆயிரம் ஆயினும், தாய்மனோன் மணிநிலை
கருதுவர் உன்னலம் கருதா தென்செய்வர்?
வருவது வருக! புரிகுவம் நன்மை.

(இரண்டாம் படைஞனை நோக்கி)

முருகன் வரவிலை?
இரண்டாம் படைஞன்
.... .... வருவன் விரைவில்.
நாராயணன்
அதுவென் ஆஆ! (120)
இரண்டாம் படைஞன்
.... .... ஆஆ! அறியேம்!
நாராயணன்
பலதே வன்படை அலவோ!
இரண்டாம் படைஞன்
.... .... .... ஆம்ஆம்!
நாராயணன்
மன்னவன்!
இரண்டாம் படைஞன்
.... நடுவே.
நாராயணன்
.... .... வலப்புறம்?
இரண்டாம் படைஞன்
.... .... .... குடிலன்.
நாராயணன்
என்னயிக் குழப்பம் இடப்புறம்?
இரண்டாம் படைஞன்
.... .... .... ஏதோ!
நாராயணன்
வருவது முருகன் போலும், முருகா!

(முருகன் வர)

வயப்பரி வீரரே! மன்னவர்க் கபசயம், (125)

(படைவீரரை நோக்கி)

இமைப்பள வின்கண் எய்தினும் எய்தும்
இம்மெனும் முன்னநாம் எய்துவோம் வம்மின்!
முதற்படைஞன்
வந்தனர் ஈதோ மற்றைய வீரரும்.
நாராயணன்
தந்தனம் உனக்கவர் தலைமை. நொடியில்
வலப்புறம் செலுத்துதி, மன்னவன் பத்திரம். (130)
இருபுறம் காக்குதும் வருகவென் அருகே!

(முருகன் காதில்)

குடிலனை நம்பலை.
முதற்படைஞன்
.... .... அடியேன், அறிவேன்!
நாராயணன்
அறிந்தவா றாற்றுதி! மறந்திடேல் மெய்ம்மை!
வம்மின் வீரரே! வம்மின்!
உம்வயின் உளதுநம் செம்மல துயிரே. (135)

(யாவரும் விரைவாய்க் குதிரைமேற் செல்ல)

நான்காம் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று.

[தொகு]

பார்க்க:

[தொகு]

மனோன்மணீயம்: நான்காம்அங்கம், இரண்டாங்களத்தின் கதைச்சுருக்கம்

IV:01

IV:03

IV:04

IV:05

மனோன்மணீயம்- ஆசிரியமுகவுரை, கதைச்சுருக்கம்.

I:01 * I:02 * I:03 * V:04 * V:05

II:01 * II:02 * II:03

III:01 * III:02 * III:03 * III:04

V:01 * V:02 * V:03