மருதநில மங்கை/ஊடலும் கூடலும்

விக்கிமூலம் இலிருந்து



10


ஊடலும் கூடலும்

னையற மாண்புணர்ந்த ஒரு மருத நிலப் பெண், தன் மனம் விரும்பும் நெய்தல் நிலத்து இளைஞன் ஒருவனை மணந்து, அவனோடு கூடி இல்வாழ்க்கை மேற்கொண்டு இன்புற்று வாழ்ந்திருந்தாள். வந்த விருந்தினரை வரவேற்றுப் பேணுதல் இல்லறத்தார்க்குப் பேரறமாம். தாம் பொய் உரையாதும், பொய்யுரைப்பாரைக் காணின் அஞ்சுவதும், அறங்களில் தலையாய அறமாம். தன்னை மணந்த கணவன் துயர்க்குத் தான் காரணமாகாமை மனையறத்தின் மங்கலமாம் எனக் கருதும் உயர்ந்த உள்ளம் உடையவள் அவள். அத்தகையாள், அறிவே உருவாய் வந்த தன் ஆருயிர்த் தோழி துணை செய்ய, இல்லற நெறியில் இம்மியளவும் பிழை நேராவாறு பெருவாழ்வு வாழ்ந்திருந்தாள். இவ்வின்பச் சூழ்நிலையில், அவர்கள் வாழ்க்கையில் ஒரு சில ஆண்டுகள் கழிந்தன. அவர்களுக்கு ஓர் ஆண் மகனும் பிறந்தான். தாம் பெற்ற அச் செல்வத்திற்குக் கணவன், அவன் தந்தை பெயரையே இட்டுப் போற்றி வளர்த்தான்.

இந் நிலையில், அவனுக்குப் பரத்தையர் தொடர்பு எவ்வாறோ உண்டாயிற்று. நாள் ஆக ஆக, அவன் அவ்வொழுக்கத்தில் ஆழ்ந்து போனான். நாள்தோறும் ஒரு புதுப் பரத்தையை மணந்து மகிழ்ந்து வாழத் தொடங்கினான். கணவன் இவ்வாறு தன்னையும், தன் மகனையும், தங்கள் மனையறத்தையும் மறந்து திரியவும், அவள் அவன் மீது சினம் கொண்டாளல்லள். பரத்தை வீடு சென்று வாழ்பவன், இடையிடையே, ஒரு திங்களுக்கு ஒருமுறை, பல திங்களுக்கு ஒருமுறை எனத் தன் மனைக்கு வருவன். அவ்வாறு வருவானை அவள் ஏதும் கூறுவது இல்லை. மாறாக மகிழ்ந்து வரவேற்று வழிபடுவள்.

இதைக் கண்டாள் அவள் தோழி. அவளுக்கு அவன் செயலின் கொடுமை புலப்பட்டது. ‘அவன் இத்துணைக் கொடியனாகவும், இவள் அவனை வெறுத்திலளே, என்னே இவள் மடமை!’ என எண்ணி வருந்தினாள். வருந்தியதோடு நில்லாது, “அவ்வாறு வாய்மூடிக் கிடப்பது உன் வாழ்வைக் கெடுக்கும். அவன் கொடுமையைக் காட்டி அவனை மறுத்தல் வேண்டும். அவன் ஒழுக்கக் கேட்டை, அவனுக்கு வேண்டியவர்.பால் உரைத்தல் வேண்டும்!” என உணர்த்தினாள். கணவன் செய்யும் தவறுகளை அவன் தாய் தந்தையர்க்கு அறிவிப்பதில் இழுக்கில்லை. அது அவள் கடமையுமாகும். இயற்கையோடியைந்த இனிய அறநெறியுமாம் என்பதை அவளுக்கு அறிவிக்க விரும்பிய தோழி, “பெண்ணே உன் கணவனுக்குரிய நெய்தல் நில நாட்டில் வாழும் ஆடும் பருவத்து இளமகளிர், வயலில் மலர்ந்து கிடக்கும் நெய்தலையும், ஆம்பலையும் பறிக்கும் ஆர்வத்தால், ஆரவாரம் செய்து கொண்டே, ஒருவரை ஒருவர் முந்த ஒடுவாராக, அவ்வயலை அடுத்த உப்பங்கழிகளில் ஆரல் மீனைத் தேடித் திரிந்து கொண்டிருக்கும் நாரைகள், அம்மகளிர் ஓடும் பொழுது எழும் ஆரவாரப் பேரொலி கேட்டு அஞ்சித், தம் தொழிலை மறந்து, அம்மகளிர் எளிதில் ஏறித் துயர் செய்ய மாட்டா மரங்களின் உயர்ந்த கிளைகளில் சென்று அமர்ந்து, அம் மகளிர் செய்த கொடுமையை, அம் மகளிரின் பெற்றோர்க்கு அறிவிப்பனபோல், உரத்த குரல் எடுத்து, ஓயாது கூவும்” நிகழ்ச்சியை தினைப்பூட்டிப், “பெண்ணே! நாரைகளுக்குக் கேடு செய்ய வேண்டும் எனும் மனக் கருத்து இன்றி, அம்மகளிர், அறியாது செய்த கொடுமையையும், நாரைகள் எடுத்துக் கூறுகின்றன. ஆனால் நீயோ, உன் கணவன் பல கொடுமைகளை அறிந்தே செய்யவும் வாய் மூடிக் கிடக்கின்றனையே, என்னே உன் அறியாமை!” எனக் கூறாமல் கூறிக் கண்டித்தாள்.

தோழி கூறியன கேட்டாள் அப் பெண். தன் தோழியின் அருகில் அமர்ந்தாள். “தோழி! நானும் ஒரு பெண்தான். கணவனைப் பரத்தை வீடு செல்ல விடுத்துக் கலங்காதிருக்கும் கல்மனம் உடையேளல்லள் நான். அவன் கொடுமை கண்டு நானும் கலங்குகிறேன். பரத்தையர் சேரி சென்று, ஆங்குள்ள இளமகளிர் பலரோடு தொடர்பு கொண்டு, அவர் நலத்தைக்கெடுத்து, அவர்பால் தான் பெற்ற புணர்ச்சிக் குறிகளோடு வரும் அவனைக் கண்டு, அழுது அழுது, கண்ணிர் விட்ட நாட்கள் கணக்கில, ஆயினும், தோழி! அவனை வெறுத்து ஒதுக்க முடியவில்லையே! என் இல்வாழ்க்கை குறுக்கிடுகிறதே! என் செய்வேன்? ஒருநாள் பரத்தையர் சேரியினின்றும் நம் வீட்டிற்கு வந்தான். வந்தவனை, வாயிற்கண் நிறுத்தி வைத்து, “இவ்வாறு, மணமகன் போல் கோலம் கொண்டு மகளிர் பின் திரியும் உன்பால் மக்கட்டன்மை சிறிதும் இல்லையோ? இவ்வாறு திரியும் உன் உள்ளக் கருத்துத்தான் யாதோ? என்று கூறி வெகுண்டேன். பின்னர் வந்தான்பால் வாய் திறந்து எதுவும் பேசாது; உள்ளே வந்து விட்டேன். ஆனால் என்ன செய்வேன்? வந்தவன் தனித்து வந்திலன். விருந்தினர் சிலரையும் தேரேற்றிக் கொண்டு வந்திருந்தான். அவர்களைப் பார்த்து விட்டேன். கடமை கண்முன் நின்றது. என் ஊடலுணர்வு எங்கோ சென்று மறைந்தது. விருந்தினர் முன், அவனைக் கண்டித்ததற்கு மனம் நொந்தேன். அவரை வரவேற்க அவன் துணை வேண்டினேன். அவன் கொடுமை மறந்து அவனோடு குலாவினேன்.

“மற்றொரு நாள் அவன் வந்தான். அவன் மாலை வாடியிருப்பதைக் கண்டு, இவ்வாறு பரத்தையர் பின் திரிந்து, அவரால் உன் பேரழகு சிதைய வந்து என் முன் நிற்காதே! என்று ஊடினேன். என் கோபம் கண்டு கலங்கிய அவன், என் கோபத்தைத் தணிக்க வேண்டிப், ‘பரத்தை மகளிர் எவரையும் நான் இதுகாறும் பார்த்ததும் இல்லை!’ எனத் துணிந்து ஒரு பொய் கூறினான். பொய் கூறியதோடு நில்லாது, அதை உறுதி செய்ய ஆணையும் வைத்தான். தோழி! அவன் கூறியது பொய் என்பதை அறிவேன். பொய் பொல்லாங்கு தருவது. அதுவே ஒருவர் வாழ்வைப் பாழாக்கும். அப்பொய் உரைப்பதற்கு மேலும், பொய்ச் சூளும் கூறின் கூறுவார் வாழ்வரோ? தோழி! நான் ஊடியதால் அன்றோ, அவன் இவ்வாறு பொய்யும் பொய்ச் சூளும் கூறினான். என்னால், அவன் பொய்ச் சூள் உரைத்துப் பொல்லாங்கு அடைதல் பொருந்துமோ? அது அவனையும், அவனோடு தொடர்பு கொண்ட என்னையும் அழித்துவிடுமே எனும் அச்சம், என் உள்ளத்தில் எழ, அவன்மீது கொண்ட கோபம் என்னை விட்டு அகன்றது. ஊடலைக் கைவிட்டேன். உவந்து ஏற்றுக் கொண்டேன்.

“தோழி! ஒரு நாள் இரவு அவன் வந்து சேர்ந்தான். ‘பகற் காலமெல்லாம் பரத்தையர் பின் திரிந்துவிட்டு, இப்பொழுது ஏன் இங்கு வந்தாய்?’ என இடித்துக் கூறி வெறுத்து, அவனோடு மேலும் வாய் திறவாது வந்து விட்டேன். என் ஊடல் கண்டு உள்ளம் நொந்த அவன், உடனே என் அருகில் ஆடிக் கொண்டிருந்த தன் மகனை எடுத்துக் கொண்டு சென்றான். அவனைத் தன் மார்பில் அனைத்தவாறே படுத்துக் கொண்டான். ஆனால், உறக்கம் கொண்டிலன். பொய்யாக உறங்குவான்போல் கண்மூடி வருந்திக் கிடந்தான். அந் நிலையில் அவன் வருந்திக் கிடப்பதைக் கண்டு கலங்காதிருக்க முடியவில்லை என்னால், கலங்கினேன். மேலும் மகன் முன் நாங்கள் மாறுபட்டிருப்பது, அம்மகனின் இளம் தூய உள்ளத்தைப் பாழ்படுத்துமே எனும் நினைவும் எழுந்தது. அவன் கொடுமையை மறந்தேன். அவனை ஏற்றுக் கொண்டேன்.

“தோழி! இவ்வாறு, விருந்தோம்பும் இல்லறக் கடமையும், பொய்ச்சூள் பெருங்கேடாம் என அறமல்லன. கண்டு அஞ்சும் அச்சமும், மகனைத் தழுவிக் கிடக்கும் மாண்பும் அவனை ஏற்றுக் கொள்ளச் செய்து விடுகின்றன. அதனால் அவனை ஏற்றுக் கொள்கிறேன். கொடுமை புரியினும், இல்லறக் கடமை கருதி, அவனை ஏற்றுக் கொள்ளும் நான், அவன் பரத்தமைக் கொடுமை கண்டு கலங்காதிருக்கவில்லை. கலங்கி, நாள்தோறும் கண்ணீர் விடுகிறேன். ஆயினும், கடமை கருதி அவனை வெறுத்திலேன் !” என்று கூறித் தன் மனையற மாண்பையும், மனத் துயர்க் கொடுமையையும் ஒருங்கே புலப் படுத்தினாள். வாழ்க அவள் உள்ளம் !

“நீரார் செறுவில் நெய்தலொடு நீடிய
நேர்இதழ் ஆம்பல் நிரைஇதழ் கொண்மார்,
சீரார் சேயிழை ஒலிப்ப ஓடும்
ஓரைமகளிர் ஓதை வெரீஇ எழுந்து,

ஆரல்ஆர்கை அம்சிறைத் தொழுதி 5
உயர்ந்த பொங்கர் உயர்மரம் ஏறி,
அமர்க்கண் மகளிர் அலப்பிய அந்நோய்,
தமர்க்கு உரைப்பனபோல் பல்குரல் பயிற்றும்
உயர்ந்த போரின் ஒலிநல் ஊரன்,

புதுவோர்ப் புணர்தல் வெய்யன் ஆயின், 10
வதுவை நாளால் வைகலும், அஃதுயான்
நோவேன் தோழி! நோவாய்நீ என
எற்பார்த்து உறுவோய் சேர்இனித் தெற்றென,

‘எல்லினை வருதி, எவன்குறித்தனை?’ எனச்
சொல்லா திருப்பேனாயின், ஒல்லென 15
விரிஉளைக் கலிமான் தேரொடுவந்த
விருந்து எதிர்கோடலின் மறப்பல் என்றும்;

‘வாடிய பூவொடுவாரல் எம்மனை’ என
ஊடி இருப்பேனாயின், நீடாது,
அச்சு ஆறாக உணரிய வருபவன் 20
பொய்ச்சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்;

‘பகல்ஆண்டு அல்கினை பரத்த!’ என்றுயான்,
இகலி இருப்பேனாயின், தான்தன்
முதல்வன் பெரும்பெயர் முறையுளிப் பெற்ற
புதல்வன் புல்லிப் பொய்த்துயில் துஞ்சும், 25

ஆங்க,
விருந்து எதிர்கொள்ளவும், பொய்ச்சூள் அஞ்சவும்,
அரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவும்
ஆங்கு அவிந்து ஒழியும் என்புலவி; தாங்காது

அவ்வவ் இடந்தான் அவை அவை காணப் 30
பூங்கண் மகளிர் புனைநலம் சிதைக்கும்
மாய மகிழ்நன் பரத்தைமை
நோவேன் தோழி! கடன் நமக்கு எனவே.”

‘பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனை விடாதே ஏற்றுக் கொள்கின்றாய்; அதை நான் பொறேன்!’ எனத் தோழி கூறத் தலைவி அதற்குக் காரணம் கூறியது. இது.

1. ஆர்–நிறைந்த, செறு–வயல்; 2. கொண்மார்–கொண்டு வருதற் பொருட்டு, 3. இழை–ஈண்டுச் சிலம்பு; 4. ஓரை மகளிர்–விளையாட்டுப் பெண்கள்; ஓதை– ஆரவாரம்; வெரீஇ–அஞ்சி; 5. ஆர்கை–உண்ணும் தொழில் மேற்கொண்ட; அம்சிறைத் தொழுதி–அழகிய இறகுகளை உடைய நாரைக் கூட்டம்; 6. பொங்கர்–சோலை; 7. அலப்பிய–அலைத்த; 10. வெய்யன்–விருப்பம் உடையன்; 11. வதுவை நாள்–திருமண நாள்; நாள்தோறும் திருமணநாளே ஆயினன் என்க. 13. உறுவோய்–துன்புறுவோய்; 14. எல்லினை–அழகாகக் கோலங் கொண்டுள்ளாய்; எவன்–என்ன; என–என்று கூறிக் கண்டித்து; 16. கலிமான்–ஊக்கமிக்கு ஓடும் குதிரை; 20. அச்சுஆறாக–நான்கொள்ளும் அச்சமே, ஊடல் தீர்க்கும் வழியாக உணரிய–உணர்த்துவதற்கு; 22 அல்கினை–தங்கினை; பரத்த–பரத்தைமை உடையாய்; 23. இகலி–ஊடி; 24. தன் முதல்வன்–தன் தந்தை; முறையுளி–முறைப்படி; 28, முயங்க–அணைத்துக் கொள்ள; 29. அவிந்து–அழிந்து.