உள்ளடக்கத்துக்குச் செல்

மருதநில மங்கை/செயல்பாலது என்கொலோ!

விக்கிமூலம் இலிருந்து

11


செயற்பாலது என்கொலோ!

ருத நிலத்து இளம் பெண்கள் பலர், தம் நிலத்தை அடுத்திருந்த நெய்தல் நிலத்துக் கடற்கரைக்குச் சென்று, விளையாடி மகிழும் வழக்கம் மேற்கொண்டிருந்தனர். அவ்வாறு செல்வாருள் அவ்வூர்த் தலைவன் மகளும் ஒருத்தி. ஒரு நாள், தன் தோழியரோடு ஆங்கு ஆடச் சென்றவள், அத்தோழியர் தாம் தாம் விரும்பும் ஒவ்வொரு ஆடலை விரும்பி, அங்கங்கே, தங்கி விட்டனராக, அவள் மட்டும் பாவை பண்ணும் கருத்துடையவளாய்த், தனியே சென்று, கடல் நீர் வந்து பாயும் கழியை அடைந்து, அங்கு வளர்ந்திருக்கும் தண்டாங்கோரையைப் பறித்துக் கொண்டிருந்தாள். நீண்ட நேரம் நின்று பறித்தாள். அவள் கைவிரல்களும் சிவந்து விட்டன. ஆயினும், பாவை பண்ணுவதற்கு வேண்டுமளவு பறிக்க முடியவில்லை. அவளும் சோர்ந்து போனாள். அந் நிலையில் ஆங்கு வந்தான் ஓர் அழகிய இளைஞன். அவன் அவளைக் கண்டான். அவள் கைவிரல் சிவந்திருப்பதைப் பார்த்தான். உடனே கழியில் இறங்கிக், கணப் பொழுதில் அவளுக்கு வேண்டும் கோரைகளைப் பறித்துத் தந்தான். அவன் செய்த நல்ல துணைக்கு நன்றி தெரிவிக்கும் கருத்தோடு அவனைத் தலை நிமிர்ந்து நோக்கினாள். அவன் பேரழகைக் கண்டாள். காதல் கொண்டாள். அவன் நிலையும் அஃதே.

மற்றொரு நாள், அவளும் அவள் தோழியரும் மலர் பறிக்கச் சென்றனர். கோட்பூ, கொடிப்பூ முதலிய மலர்களைப் பறித்தனர். அல்லி தாமரை முதலாம் நீர்ப் பூக்களைப் பறிக்க விரும்பினர். ஆனால், அப்பூக்கள் ஆழமான இடத்தில் மலர்ந்திருக்கக் கண்டு அஞ்சிக் கரையேறினர். அவ்வூர்த் தலைவன் மகளைக் கண்டு காதல் கொண்ட அந்நாள் முதலாக, அம்மகளிரைப் பின் தொடர்ந்து திரியும் அவ்விளைஞன், அதைக் கண்டான். உடனே நீரில் இறங்கினான். நீந்திச் சென்று, அம்மலர்களைப் பறித்துக் கொடுத்தான். வேறு ஒருநாள், அப்பெண் தனித்து ஓரிடத்தில் அமர்ந்திருந்தாள். அவள் அருகில் தொய்யிற் குழம்பும் அது தீட்டும் கோலும் இருந்தன. அந்நிலையில், ஆங்கு வந்த அவன், அவளையும், அவள் அருகிற் கிடக்கும் தொய்யிற் குழம்பையும் கண்டான். அவள் தோள், தொய்யில் எழுதப் பெறாமல், வறிதே இருப்பதையும் அறிந்தான்். உடனே, அவள் அருகில் அமர்ந்தான். அவள் முன் கையைப் பற்றி, அவள் தோளில் கரும்பு போலும் ஒவியங்களைத் தீட்டி மகிழ்ந்தான். இவ்வாறு வளர்ந்தது அவர் காதல்.

அவர் காதலை, அவ்வூர் வாழும் சிலர் அறிந்தனர். அவருள்ளும் சிலர், ஊர்வம்பு பேசுவதையே வழக்கமாகக் கொண்டவர். அது பேசாதிருந்தால், அவருக்குப் பொழுதே போகாது. அவர் இயல்பு அறிந்த அவ்வூரினர். அவர்களைப் பொருட் படுத்துவதுமில்லை. அவர்களுக்குத் தெரிந்து விட்டது இவர்கள் காதல், அவர்கள் அதைக் கூட்டியும் குறைத்தும், அழித்தும் பழித்தும் பலவாறு கூறித் தூற்றத் தொடங்கினர்.

அவர்கள் கூறும் அப்பழி உரையை, அப்பெண்ணின் உயிர்த் தோழி கேட்டாள். அவர்கள் காதலை அவளும் குறிப்பால் அறிந்திருந்தாள். நாள்தோறும், அவளும் தானும் பிற தோழியரும் ஒன்று கூடி ஆடும் இடந்தோறும் அவர்களை விடாது, இளைஞன் ஒருவன் தொடர்ந்து வருவதையும், வந்து அவர்கள் ஆட்டத்தைப் பார்த்திருப்பவன், ஆட்டத்தில் அப்பெண்ணின் அணியும் ஆடையும் நிலைபிறழக் கண்டு, அவற்றை ஒழுங்கு செய்து விட்டதையும், அம்மகளிர் புனலாடுங்கால், அவர்க்கு அப்புனலாற் கேடு ஏதும் நேராவாறு, அவ்விடத்தைச் சுற்றிச் சுற்றி வந்து காவல் புரிந்ததையும், அப்பெண் விரும்பும் தொய்யில் எழுதியும், மகளிர் மணல் வீடுகட்டி விளையாடப் புகுங்கால், அவர்க்குத் துணையாய், அவர் விடும் குற்றேவல்களை விரும்பிச் செய்தும், அவர் நட்பைப் பெற விரும்பியதையும், அது எளிதில் கிடைக்கப் பெறாமையால் பெரிதும் வருந்திச் சென்றதையும், அவள் அறிந்திருந்தாள். அதனால், அவனுக்கும் அவளுக்குமிடையே காதல் தோன்றி வளர்கிறது என்பதை அறிந்திருந்தாளாயினும், அப்பெண், அது குறித்து எதுவும் கூறாமையால், அவளும், அவளை ஏதும் கேட்டிலள்.

ஆனால், இப்பொழுது நிலைமை வேறாயிற்று. அவர் காதலை ஊரார் உணர்ந்து கொண்டனர். ஊரில் அலர் எழுந்து விட்டது. இனியும் அவ்வாறே விட்டால், அதனால் அவர்க்கு ஏதேனும் சேதம் உண்டாயின் என்னாவது என எண்ணிக் கலங்கினாள். உண்மையறிந்து உற்ற துணைபுரிய விரும்பினாள். உடனே, தனித்திருக்கும் அப்பெண்ணின்பால் சென்று, “தோழி! நாள்தோறும், நாம் ஆடும் இடத்திற்குத் தவறாது வந்து போகும் அவ்விளைஞனையும், உன்னையும் தொடர்பு படுத்தி, இவ்வூரார் ஏதேதோ கூறுகின்றனர். அவர் கூறுவதில் ஏதேனும் உண்மை உளதோ? அவர் கூறுவது போல், நீ அவனோடு உறவு கொண்டிருப்பது உண்மைதானோ?” என்று கேட்டாள்.

அப்பெண், தன் காதல் ஒழுக்கத்தைத் தோழிக்குத் தானே உணர்த்த விரும்பினாள். ஆனால், நாணம் தடுத்தமையால் உணர்த்திலள். இப்பொழுது அத்தோழி, தானே அறிந்து வினவுகிறாள். உண்மையை ஒப்புக்கொள் என்றது அவள் உள்ளம். ஆனால் அவள் பெண்மை, அதை ஒப்புக் கொள்ளத் தயங்கிற்று. அதனால், தோழியை நோக்கித், “தோழி! ஒரு நாள், அவ்விளைஞன் பஞ்சாய்க் கோரை பறித்துத் தந்தான். மற்றொரு நாள், மலர் பறித்துக் கொடுத்தான். பிறிதொரு நாள், என் தோளில் தொய்யில் வரைந்தான். அவன் செய்தன. இவ்வளவே. இதை வைத்துக் கொண்டு, இவ்வூரில் வாழும் வாயாடிப் பெண்கள் சிலர், வம்பு பேசுகின்றனர். என்னோடு பழகி, என் இயல்பு அறிந்த நீ, அவர் கூறுவதில் உண்மையில்லை என்பதை உணர்ந்து, அவரைக் கடிவதை விடுத்து, என்பால் வந்து, அதில் உண்மை யிருப்பது போல் வினவுகின்றனை. தோழியர் பலர் என்னை இடைவிடாது சூழ்ந்திருந்து காவல் புரிகின்றனர். அதை நீ அறிவாய். அவர்கள் காவலும் பயனற்றதாகி விட்டது எனக் கருதி என்னை வந்து வினவுகின்றாய். உன்னை என்னென்பது?” என்று கூறி மறுத்தாள்.

நானும், பெண்மையும் தடை செய்ய, இவ்வாறு மறுத்துரைத்தாளைனும், அத் தோழியின் துணை பெற்றாலன்றித் தன் காதல் நிறைவேறாது என்பதை உணர்ந்து, அதை ஒப்புக் கொள்ள உறுதி கொண்டாள். அதனால், தோழியை நோக்கித், ‘தோழி, இனி, நான் எதைக் கூறினும், இவ்வூரார் அதை ஏற்றுக் கொள்ளார். ஆகவே, என் திருமணக் காலத்தில், இவ்வூரார் ஒன்று கூடி, அன்று எதைச் செய்ய விரும்புகின்றனரோ, அதை, இன்றே செய்து முடிக்கட்டும். அவ்வாறு செய்யும் இவ்வூரார்க்கு, நாம் செய்யக் கூடியது என்ன? அதை நீ ஆராய்ந்து கூறு!” என வல்லமையாய்க் கூறித், தன் காதல் ஒழுக்கத்தை ஒருவாறு ஒப்புக் கொண்டு உண்மை உரைத்தாள். <poem> “புனைஇழை நோக்கியும், புனல்ஆடப் புறம்சூழ்ந்தும், அணிவரி தைஇயும், நம்இல்வந்து வணங்கியும், நினையுபு வருந்தும் இந்நெடுந்தகை திறத்து, ‘இவ்வூர், இனையள்என்று எடுத்துஒதற்கு அனையையோ நீ!’ என வினவுதி ஆயின், விளங்கிழாய்! கேள்இனி; 5

செவ்விரல் சிவப்புஊரச், சேட்சென்றாய் என்றுஅவன், பெளவநீர்ச் சாய்க்கொழுதிப் பாவைதந்தனைத்தற்கோ, கெளவைநோய் உற்றவர், காணாது கடுத்தசொல் ஒவ்வா என்று உணராய்நீ, ஒருநிலையே உரைத்ததை!

ஒடுங்கி யாம்புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு 10 நெடும் கயமலர் வாங்கி நெறித்துத் தந்தனைத்தற்கோ, விடுத்தவர் விரகுஇன்றி எடுத்தசொல் பொய்யாகக் கடிந்ததும் இலையாய் நீ கழறிய வந்ததை

வரிதுஎற்றாய்நீ என வணங்குஇறை அவன்பற்றித் தெரிவேய்த்தோள் கரும்புஎழுதித் தொய்யில் செய்தனைத் புரிபு நம்ஆயத்தார் பொய்யாக, எடுத்த சொல் [தற்கோ 15 உரிதுஎன, உணராய்நீ உலமந்தாய் போன்றதை?

என வாங்கு, அரிது.இனி, ஆய்இழாய் ! அதுதேற்றல்; புரிபுஒருங்கு அன்றுநம் வதுவையுள் நமர்செய்வது இன்று ஈங்கே 20 தான் நயந்து இருந்தது இவ்வூராயின், என்கொலோ நாம் செயற்பாலது இனி?” </poem> தலைவி, தோழிக்கு அறத்தோடு நின்றது. இது. திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே (தொல்பொருள்; 128) என்னும் விதியால், மருதத்தில் குறிஞ்சி வந்தது.

1. நோக்கியும்–திருத்தியும் 2. வரி–தொய்யில்; இல்–மணல் வீடு; 3. நினையு–காதலை நினைந்து; 4. இணையள்–இன்ன உறவு உடையள்; அணையையோ–அவ்வியல்யுபு உடையையோ; 6. சேட் சென்றாய்–நெடும் பொழுது நின்றாய்; 7. பௌவம்–கடல்; சாய்–தண்டான் கோரை கொழுதி–பறித்துக் கோத; 8. கௌவை நோய் உற்றவர்–அலர் உரைக்கும் நோயுடையவர்; காணாது–பொருந்தாது என்று உணராது; 9. ஒருநிலையே–அவர்கள் கருதியவாறே; 10. ஒடுங்கி–அஞ்சி; 12. விடுத்தவர்–ஊராரால் வெறுத்து விடப்பட்டவர்; விரகு–அறிவு; 13. கழறிய–கோபித்தற்கு; 14. இறை–முன் கை; 15. தெரிவேய்–ஆராய்ந்த அழகிய மூங்கில் போலும்; 16. புரிபு–காவல் புரியும்; 17. உணராய்–உரிது என மாற்றுக–உணராது, அது ஒக்கும் எனப் பொருள் கொள்க; உலமந்தாய்–வருந்தினாய்; 19. புரிபுஒருங்கு–ஒருங்கே விரும்பி.