உள்ளடக்கத்துக்குச் செல்

மருதநில மங்கை/கடவுளைக் கண்டாயோ

விக்கிமூலம் இலிருந்து

28


கடவுளைக் கண்டாயோ?

காலையில் சென்ற கணவன், இரவில் நாழிகை பல கழித்து வந்து சேர்ந்தான். வந்தானை மனைவி உற்று நோக்கினாள். அவன் மார்பில் பூசிய சந்தனம் புலராமலே இருந்தது. அதைப் பார்த்து விட்டாள் அவள். இந்நேரத்தில், இவனுக்குச் சந்தனம் பூசி அனுப்பியவர் யார் என எண்ணினாள். அவ்வெண்ணத்தைத் தொடர்ந்து, அவன் சில நாட்களாகவே, தன்னோடு பண்டுபோல் பழகாது, இவ்வாறு இரவில் நாழிகை கழித்துப் புதிய பொலிவோடு வருவது நினைவிற்கு வரவே, அவன் யாரோ ஒரு பரத்தை பால் தொடர்பு கொண்டுளான் எனத் துணிந்தாள். அதனால், பண்டு தழுவத்தழுவ வற்றாப் பேரின்பம் தந்த அவன் மார்பு, இப்போது பரத்தைமை யுற்றுப் பாழ்பட்டதாக எண்ணி வெறுத்தாள். அவ்வெறுப்பு மிகுதியால், “ஏடா! சந்தனம் பூசிய வடு விளங்க வந்து நிற்கின்றாய், இரவில் நாழிகை பல கழித்து வரும் வழக்கம் மேற்கொண்டுள்ளாய். பண்டெல்லாம், நீ இவ்வாறு நெறிகெட்டுத் திரியவில்லை. நீ இவ்வாறு ஒழுக்கம் கெட்டுவரப், போன இடத்தில் நீ எதைக் கண்டுவிட்டாய்? அதை நான் அறியக் கூறு,” என்றாள்.

தன் களவு வாழ்க்கையைத் தன் மனைவி அறிந்து கொண்டது கண்டு கலங்கிய இளைஞன், அவளுக்கு ஏற்ப எதையேனும் கூறி, அவளை ஏமாற்றத் துணிந்தான், “நான் சென்று தங்கிய இடத்தைக் கேட்டறியத் துடிக்கும் தோளாய்! கூறுகிறேன் கேள். நாம் இப்போது மேற்கொண்டிருக்கும் இல்வாழ்க்கை நிலையை அடுத்து, நாம் மேற்கொள்ள வேண்டிய துறவு வாழ்க்கையில், நம் கடமைகள் இன்னின்ன என்பதை அறநூற் சான்று காட்டி அறிவிக்க வல்ல கடவுளராகிய முனிவர் சிலரைக் கண்டேன். அவர்பால் அவ்வறம் கேட்க, ஆங்குத் தங்கினேன். அதனால் வரக் காலம் கடந்துவிட்டது!” என்று கூறினான்.

கணவன், கடவுளரைக் கண்டு அவர்பால் தங்கி வந்தேன் என்று கூறினானாயினும், அவன் கடவுளரைக் கண்டிலன்; இல்லறக் கடமைகளையே கடைப்பிடிக்காத அவன், அதற்கு அடுத்த நிலையாய வானப்பிரத்த நிலைக்கு வழிதேட மாட்டான்; அவன் யாரோ சில பரத்தையர்பாலே தங்கி வந்துளான் என உறுதியாக நம்பிய அவள், “அன்ப! உன்னால் கடவுட்டன்மை உடையாராகக் கருதப்பட்டு, உன்னால் வணங்கத்தக்கவர், சோலையில் அலரும் மலர் அணிந்து, பெண்மான் போலும் பார்வை வாய்ந்த பரத்தையர் பலராவர். அப் பரத்தையருள் நீ கூறிய பரத்தை யாவள்? அடியாளுக்கு அதை அறிவிப்பாயாக!” என நையாண்டி கூறி வேண்டிக் கொண்டாள்.

தன்னை எள்ளி நகைக்குங்கால், முத்தையொத்த அவள் வெண்பற்களைக் கண்டு மகிழ்ந்த அவன், முதலில் அவள் பல்லழகைப் பாராட்டிவிட்டுப், “பெண்ணே ! நாம் மணம் செய்து கொண்ட காலத்தில், மணம் செய்து கோடற்குரிய காலம் இது என மணநாள் வைத்துக் கொடுத்த அக்கடவுளரே, நான் கண்ட கடவுளராகும். அவரிடத்திலேயே நான் தங்கி வந்தேன்,” என்று கூறினான்.

தான், அவன் தங்கியது பரத்தையர் சேரியில் என அறிவிக்கவும், அவன் அதை மறைத்து, மண நாள் வைத்துத் தந்த முனிவர் மனையில் தங்கிவந்தேன் எனக் கூறக்கேட்ட அவள், அதை ஏற்றுக் கொள்ளாத தன் நிலையை, “அன்ப! நீ கூறியது ஒக்கும்! ஒக்கும்!” என உடன்பாட்டு வாய்பாட்டால் கூறிவிட்டு, “எல்லா! கடவுளரைக் கண்டேன் எனக் கூறும் நீ, தலைநடுங்க, நாக்குழற நிற்கின்றனை, உன் தடுமாற்ற நிலையே, நீ கூறுவது பொய் என்பதைக் காட்டி விட்டது. உன் களவு வெளிப்பட்டு விட்டது, நீ கண்ட கடவுளர் யாவர் என்பதை, நான் உண்மையாகக் கூறுகிறேன், கேள்,” எனத் தோற்றுவாய் செய்து கொண்டு கூறத் தொடங்கினாள்.

கணவன் கண்டு தங்கிய கடவுளர் யார் என்பதை அவனுக்குக் காட்டத் தொடங்கியவள், “காதல! பார்த்தவர் உயிரைப் பறிக்கும் பேரழகுமிக்க வடிவோடும், விழுந்து முளைத்த பற்களைக் கொண்ட இளமையோடும் வந்து, உன்னைப் பெற்றுப் பேரின்பம் நுகரும் வேட்கையால், நீ செய்த குறியிடத்தே உன்னைக் கண்டு, உன்னோடு உன் மலை புகுந்த, பரத்தையராகிய கடவுளரைக் கண்டாயோ?” என்று வினாவ விரும்பியவள், அதை அவ்வாறே வெளிப்பட வினவாது, “அன்ப! பொருள் மீது கொண்ட ஆசையால், உன் மனம் விரும்பியதை யெல்லாம் வழங்கி ஆட்கொள்ளும் கடவுள், ஆசையை அடக்கும் ஆற்றலைப் பெற்றுத் தன்னைக் கண்டு வணங்கி வழிபடுவார்க்குப் பிறவிப் பெருநோயைப் போக்கும் அருட்டிருவோடு உன் இல்லம் புகுந்ததைக் கண்டாயோ?” எனப் பிறிதொன்றை வினாவுவாள் போல், வினாவினாள்.

“அன்ப! பார்த்தாரைத் தன் வயமாக்க வல்ல பார்வையோடு சென்று, நல்ல மணம் மிக்க குளிர்ந்த மயிர்ச் சாந்தமும், புழுகும் தடவி வாரி முடித்த கூந்தலில் காலையில் அணியும் அணிகளுக்கு ஏற்றவாறு நீ பறித்து அளித்த மலர்களைச் சூடி மகிழும் பரத்தையரைக் கண்டாயோ?” என்று கேட்கத் துணிந்தவள், “அன்ப! சாந்தும் புழுகும் சேர்ந்து நறுமணம் நாறும் மகளிர் கூந்தலில், அவர் நாளணிக்கேற்ற மலர் சூட்டி மகிழக் கருதும் உன் மனத்தை, அம்மலர் மாலைகளை, அருட்பார்வையால் அன்பர்களின் பிறவி நோயைப் போக்கும் தமக்குச் சூட்டுமாறு மாற்றிய கடவுளரைக் கண்டாயோ?” என்று கேட்டுத் தன் உட்கருத்தை உணர்த்தினாள்.

“அன்ப! புனலாடி, அதற்கேற்ற புத்தாடை அணிந்து, அழியா விரதம் மேற்கொண்டு, சென்று, சூரனைக் கொன்ற செவ்வேல் முருகனைப் பாடிப் பரவிப், பின்னர்த் தாம் உற்ற பெருங்காதலால், உன்னோடு, அம்முருகன் உறையும் திருப்பரங்குன்றத்தில், மாரிக்காலத்தில் பலநாள் தங்கி மகிழ்ந்த பரத்தையரைக் கண்டாயோ?” எனக் கேட்க எண்ணியவள், அப்பொருள் தோன்றுமாறு, “அன்ப! நீர் பலகால் மூழ்கித், தூய ஆடை அணிந்து, அழியா நோன்பு மேற்கொண்டு சூரனைக் கொன்ற செவ்வேல் முருகனை வீடு பேற்றில் கொண்ட பேராசையால், பல நாளும் பரவி வழிபட்டு, அவன் உறையும் பரங்குன்றத்தில், மாரிக் காலத்தும் அகலாது, உன்னோடு இருந்து தவவொழுக்கம் மேற்கொண்ட கடவுளரைக் கண்டாயோ?” எனப் பிறிதொன்றை வினாவினாள்.

இறுதியாக, “அன்ப! நீ கண்ட பரத்தையர் பலருள், மணம் நிறை மலர் மாலைகளை பணிந்தும், சந்தனம் பூசியும் மணம்நாறும் உன் மார்பை, அது தன் பண்டைத் தூய்மை கெட்டுப் பாழாகுமாறு, தன் பல்லாலும், நகத்தாலும் வடுப்பல செய்த அப்பரத்தை யாவள்? அதை நான் அறியக் கூறு. பெரியோரால் வெறுக்கத் தக்க பழியுடையாய்! நீ ஈங்குச் சிறிது பொழுது தங்கினும், அப்பரத்தையர் உன்னைச் சினப்பர். உன் ஒழுக்கக் கேட்டை. உணர்ந்து, உன்னைப் பிரிந்து வாழும் வன்மையில் நான் தேறிவிட்டேன். ஆகவே ஈண்டு நில்லாது ஆண்டுச் செல்க, செல்லாயாயின், நல்ல மாலை அணிந்து மலர்ந்து தோன்றும் உன் மார்பின் மீது பெருங்காதல் கொண்ட, நீண்ட கரிய கூந்தலையுடைய அப்பரத்தையர்க்கு முட்டுப் பாடு உண்டாம். ஆகவே, அவர்பால் விரைந்து செல்க!” எனக் கூறி விரட்டினாள்.

ஆனால், அதை வெளிப்படைச் சொற்களால் விளங்கக் கூறாது, இதையும் குறிப்பு மொழிகளால் கூறத்தொடங்கி, “அன்ப! நீ கண்ட கடவுளர் பலருள் உன்னை வானப்பிரத்த வாழ்வில் விருப்பம் கொள்ளுமாறு உன் மனத்தை மாற்றிய கடவுளர் யாவர்? அக்கடவுளர்பால் நீ செல்லாதொழிவையேல், பிற சமயவாதிகள் விடுக்கும் நல்ல கடாக்களுக்கு அளிக்க வல்ல நல்ல விடைகளையும், நீர் பலகால் மூழ்குதலால், ஈரம் நிறைந்து நீண்ட கரிய சடாமுடியினையும் உடைய அக்கடவுளர் எல்லோர்க்கும், நல்லோன் ஒருவனை வானப்பிரத்த வாழ்வில் வாழ வைக்குமாறு அறமுறைக்கும் வாய்ப்பற்றுப் போக ஒரு குறைபாடுண்டாம். ஆகவே, அன்ப! அவர்க்கு அக்குறைபாடு நேராவாறு, அவண் விரைந்து செல்க!” எனக்கூறித் துரத்தினாள்.

"வண்டூது சாந்தம் வடுக்கொள நீவிய
தண்டாத் தீம்சாயல், பரத்தை வியன் மார்ப!
பண்டு இன்னை பல்லைமன்; ஈங்கு எல்லி வந்தீயக்
கண்டது எவன்? மற்று உரை.

நன்றும், தடைஇய மென்தோளாய்! கேட்டிவாயாயின், 5
உடனுறை வாழ்க்கைக்கு உதவி உறையும்
கடவுளர்கண் தங்கினேன்,
சோலை மலர்வேய்ந்த மான்பிணை யன்னார்பலர், நீ
கடவுண்மை கொண்டொழுகுவார்;
அவருள், எக்கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன்; 10

முத்தேர் முறுவலாய்! நாம் பணம்புக்கக்கால்
‘இப்போழ்து போழ்து’ என்று அது வாய்ப்பக் கூறிய,

அக்கடவுள், மற்று அக்கடவுள், அது ஒக்கும்,
நாவுள் அழுந்து தலைசாய்த்து நீகூறும்

மாயமோ கைப்படுக்கப் பட்டாய்; நீ கண்டாரை 15
வாயாக யாம்கூற வேட்டீவாய் கேளினி

பெறல்நசை வேட்கையின் நின்குறி வாய்ப்பப்
பறிமுறை நேர்ந்த நகாராகக்; கண்டார்க்கு
இறுமுறை செய்யும் உருவொடு நும்இல்
செறிமுறை வந்த கடவுளைக் கண்டாயோ? 20

நறும்தண் தகரமும், நானமும் நாறும்
நெறிந்த குரல்கூந்தல் நாளணிக்கு ஒப்ப
நோக்கிற் பிணிகொள்ளும் கண்ணெடு மேனாள்நீ,
பூப்பலிவிட்ட கடவுளைக் கண்டாயோ?

ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச் 25
சூர்கொன்ற செவ்வேலான் பாடிப் பலநாளும்
ஆராக் கனைகாமம் குன்றத்து நின்னொடு
மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ?

கண்டகடவுளர் தம்முளும், நின்னை
வெறிகொள் வியன்மார்பு வேறாகச் செய்து 30
குறிகொளச் செய்தார்யார்? செப்பு; மற்று, யாரும்
சிறுவரைத் தங்கின் வெகுள்வர்; செறுதக்காய்!
தேறினேன்; சென்றீநீ; செல்லாவிடுவாயேல்,

நற்றார் அகலத்துக்கு ஓர்சார மேவிய
நெட்டு இரும்கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் 35
முட்டுப்பாடு ஆகலும் உண்டு.”

பரத்தை வீடு சென்று வந்த தலைவன், தலைவிக்கு அஞ்சிக் கடவுளரைக் கண்டு வந்தேன் எனக் கூற, அதற்கு அவள் கூறி ஊடியது.

1. நீவிய–பூசிய; 2. தண்டா–குறையாத; தீம்–இனிமை. வியன்–அகன்ற; 3. இன்னை –இத்தன்மை உடையை; எல்லி–இரவு; வந்திய–வர; 5. தடைஇய–பருத்த; கேட்டவாய் – கேட்பாய்; 6. உடனுறை வாழ்க்கை – காட்டில் சென்று மனைவியோடு வாழும் வானப்பிரத்த நிலை; 10. செப்பீமன்–சொல்லுக; 11. முத்தேர்–முத்தை ஒத்த; 12. போழ்து காலம்; 14. நாஉள் அழுந்தலாவது – சொற்கள் தடைப்படுதல்; 16. வாயாக–உண்மையாக; வேட்டவாய்–விரும்பினவளே! 17. நசை–ஆசை; 18. பறிமுறை நேர்ந்த நகார் – வீழ்ந்து முளைத்த பற்களை உடைய இளைய மகளிர்; 19. இறுமுறை–அழிவுப்பாட்டை; 20. செறிமுறை – சேர்ந்து வரும் உரிமையால்; 21. தகரம்–மயிர்ச்சாந்தம்; நானம்– புழுகு; 22. நெறிந்த–அடர்ந்த; 23, நோக்கில்–பார்வையால்; 25. ஈரணி–புனலாடற்கேற்ற அணிவகை; ஒடியா–கெடாத; படிவம்–விரதம்; 27. ஆரா–நிறையாத; கனைகாமம் – மிக்க காமம்; 28, மாரி – மாரிக்காலம்; இறுத்த–தங்கிய; 30. வெறி–மணம்; 31. குறி–வடு; 32. சிறுவரை–சிறிதுகாலம்; செறுதக்காய் – வெறுக்கத்தக்கவனே; 33. அகலம்–மார்பு; கேள்விக்குத் தரும் விடை; ஓர்சார–ஒருசேர.