மருதநில மங்கை/நகாமை வேண்டுவல்

விக்கிமூலம் இலிருந்து

29


நகாமை வேண்டுவல்

ரண்மனை ஒன்றில் ஒரு கூனியும் ஒரு குறளனும் குற்றேவல் புரிந்து வந்தனர். அக் கூனிக்குக் குறளன் மீது காதல். குறளனுக்குக் கூனிமீது காதல். ஆனால் கூனி தன் மீது காதல் கொள்வதைக் குறளன் அறியான். குறளன் தன்மீது காதல் கொள்வதைக் கூனி அறியாள். அவர்கள் காதல், அவர்கள் மனத்திற்குள்ளேயே மறைந்து கிடந்தது.

ஒருநாள் குறளன், அரண்மனையின் ஒதுக்கிடத்தே தனித்து இருந்தான். அவ்வழியே, ஏதோ பணிமேற்கொண்டு வந்தாள்போல் வந்து சேர்ந்தாள் கூனி. கூனியைப் பார்த்து விட்டான் குறளன். நெடுநாட்களாக எதிர்நோக்கியிருந்த நன்னாள் வந்து வாய்த்ததாக எண்ணி மகிழ்ந்தான். கூனியை அணுகி, “நீரில் தெரியும் நிழல் போன்ற தெளிந்த சாயலும், கூனிக் குறுகி வேறுபட்ட வடிவம் கொண்டு செல்லும் ஏ, கூனி! உன்னோடு சிறிது பேச வேண்டும். சற்றே நில், உன்னோடு நான் பேச, நீ என்ன புண்ணியம் பண்ணினையோ?” எனக் கூறி வழி மறித்தான்,

‘இவன் ஒரு குறளன். அதை மறந்து என்னைக் கூனி எனக் கூறிப் பழிக்கின்றான். என்னே இவன் அறியாமை!’ என எண்ணிய அக்கூனி, எதிரில் வழிமறித்து நிற்கும் அக் குறளனைப் பார்த்து, “ஐயே!” என ஒலித்து இகழ்ந்துவிட்டு, “கண்ணால் காண ஒவ்வாத கட்டழகனே! குறளாய்ப் பிறத்தற்குரிய வாய்ப்பு அமைந்த நாழிகையில், ஆண்தலை கொண்டு வாழும் பறவைக்குப் பிள்ளையாய் வந்து பிறந்தவனே! நீ, ‘உன்னை விரும்புகிறேன்!’ என்று கூறி, என்னை எதிர் நின்று விலக்கினாய். உன்னைப் போலும் குறளர், என்னைத் தீண்டுதற்கும் உரியரோ? வழி விட்டு விலகி நில்!” எனக் கூறி, அவனைக் கடந்து செல்ல முற்பட்டாள்.

“உனக்கு என்னைத் தொடுதற்கும் உரிமை இல்லை!” என்று கூனி கூறக் கேட்ட குறளன் உள்ளம் குன்றிற்று. அந்நிலையே, கூனிக்கும் இத்தனை ஏற்றமோ எனவும் அவன் எண்ணினான். அதனால் அவளை நோக்கிக், “கூனி! கலப்பையில் கோக்கும் கொழுப்போல், ஓரிடத்தே கூன் போன்ற, ஓரிடம் முன்னே. வளைந்து முறித்துப் போட்டது போல் தோன்றும் உன் பேரழகால், நான் பொறுக்கலாகாக் காமநோயுற்றேன். அந்நோயைத் தாங்கி, உயிர் வாழும் ஆற்றலை நான் இழந்துவிட்டேன். என்மீது அன்பு கொண்டு அளித்தால் என் உயிர் வாழும். இன்றேல், அது இன்றே அழியும். ஆகவே, என்னை வாழ வைப்பதும், வாழாமற் செய்வதும் உன்பாடு!” என்று கூறி இரங்கி நின்றான்.

குறளன் உறுதிப்பாட்டையும், உள்ளக் காத்லையும் உணர்ந்த கூனி, “இவன் மனத் துணிவின் மாண்பைக் காண் !” எனத் தனக்குள்ளே கூறி வியந்து கொண்டாள். ஆனால், “அகத்தே இத்தகைய உயர்ந்த காதலையுடைய இவன், அதை விரும்பும் வகையில் எடுத்துக் கூறும் வகையற்றுச், சினம் பிறக்கும் வகையில் வெறுப்புக் கூறுகின்றனனே!” என எண்ணி வெகுண்டாள். அதனால், “சூதாடு கருவிகளை வைத்தற்கெனக் குடைந்தெடுத்த வல்லுப் பலகையை எடுத்து நிறுத்தியதுபோல் தோன்றும் ஏ, குறளா! மகளிரை மனம் மகிழப் பண்ணிப் பின்னரே கூடுதல் வேண்டும் என்ற காதல் முறையினைக் கல்லாதவனே!” என்றெல்லாம் விளித்து இழித்துரைத்தாள். பின்னர், “ஏடா! எவரும் இயங்காத இங்கே இந்நேரத்தில், என் கையைப் பிடித்து, இல்லத்திற்கு வந்து இன்பம் தருக! என்று கூறி இழுக்கும் கொடியவனே! பெண்டிர் எவரும் உன்னோடு பிறக்கவில்லையோ?” என்று கூறிச் சினந்தாள்.

கூனி கோபிப்பது கண்டும், குறளன் எள்ளி நகையாடலைக் கைவிட்டிலன். அதனால், “கூன் தலைக்கு மேலே உயர்ந்து தோன்ற, கொக்கை உரித்து வைத்தாற் போல், வளைந்த வடிவோடு வந்து நிற்பவளே! நான் கூறுவதைக் கேள். உன்னை நான் மார்போடணைத்துக் கொள்வேனாயின், உன் முதுகின் கூன் என் நெஞ்சிலே குத்தும். உன்னை உன் முதுகின் பின்புறமாக அனைத்துக் கொள்வேனாயின், நீண்டு நிற்கும் உன் கூன், என்னைக் கிச்சுகிச்சு மூட்டும். ஆதலின், உன்னை அணைத்துக் கொள்வது என்னால் இயலாது. உன்னைக் கூடி மகிழ்வதொன்றே இயலும், ஆகவே, நம் கூட்டத்திற்கு உன் கூன் இடையூறு ஆகாவாறு, சிறிதே புணர்தற்கு என் பக்கத்தே வருக!” எனக் கூறி அழைத்தான்.

குறளன், மேலும் மேலும் தன் கூனைப் பழிக்கவே, அவளுக்குச் சினம் மிகுந்தது. “சீ கேடு கெட்டவனே! என்னைவிட்டு அப்பால் நட!” என்று கூறி, அவனை விலகி நின்றாள். விலக்கவும் விலகாது, விலகவும் விடாது, அவன் தன்னை அணுகுவது கண்ட கூனி, “மக்கள் வடிவில் ஒரு பாதியைக் கொண்ட உருவத்தாய்! இவ் இழிவொழுக்கத்தை இனிக் கைவிட்டொழிக!” என அறிவுறுத்தி விட்டு, மீண்டும் பேச்செடுத்து, “ஏடா! நான் கூனிதான். ஆயினும் கூனிய என் உடலை அணைத்து, அன்பு காட்டி, என்னை என்வாழ்நாள் உள்ளளவும் வைத்துக் காப்பவர் ஆயிரவர் உளர். அவ்வாறாகவும், பரத்தைக் குணம் படைத்த இக்குறைளன், தழுவ உன் பக்கத்தைத் தாராய்! எனக்கூறி, எள்ளி நகைக்கின்றான். இவன் இவ்வாறு எள்ளி நகைக்க, எனக்குற்ற குறைதான் யாதோ?” என்று அவன் கேட்பத் தனக்குள்ளே கூறிக் கொண்டாள். அவ்வாறு கூறியும் அவள் சினம் அடங்கவில்லை. அதனால், “உளுந்து பல ஒன்றுகூடிப் பண்ணிய பணியாரத்தைக் காட்டினும், உருவால் உயர்ந்திராத ஏ, குறளா! உன் பிறப்பினும், கூன் பிறப்பு இழிந்ததோ!” என்று கேட்டுவிட்டு, அப்பாற் சென்றாள்.

செல்லும் அவள் பின்புறத்தைக் கண்டான் குறளன் காமநோய் அவனை அலைத்தது. அதனால், அவளை எள்ளி நகைப்பதை விடுத்தான். “நெஞ்சே! ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்!’ என்று கூறி இவள் பின் திரிகிறேன். நான் அவ்வாறு திரியவும், அதைப் பொருட்படுத்தாது, என்னை விட்டு அப்பாற் செல்லும் அவள், தளர் நடையிட்டு அசைந்து அசைந்து செல்லும் அவ்வழகைப் பார்!” என்று அவள் கேட்டு மகிழுமாறு, சில கூறிக் கொண்டே, அவளைப் பின் தொடர்ந்தாள்.

குறளன் கூறியன கேட்டாள் கூனி. அவள் சினமும் சிறிதே தணிந்தது. ஆயினும், அவன், தன்னை எள்ளி நகையாடிக் கூறிய சொற்கள், அவள் உள்ளத்தை அரித்துக் கொண்டேயிருந்தன. திரும்பி அவனை நோக்கினாள். அவன் நடையழகைக் கண்டு மகிழ்ந்தாள். மகிழ்ந்ததோடு நில்லாது, நெஞ்சொடு கூறுவாள்போல், ‘நெஞ்சே! நிலத்தில் ஊர்ந்து செல்லும் யாமையை எடுத்து நேரே நிறுத்தினாற் போன்ற தோற்றம் வாய்க்கப் பெற்ற இவன், குறுகிய தன் இரு கைகளையும் தன் விலாவிற்குள்ளே வீசியவாறே, ‘நான் உன்னை விரும்பேன்!’ என்று கூறி விலக்கவும், விடாது, நம்பின் வருவதைப் பார். காமன் நடந்து வருவது போலும் இவன் நடை அழகையும் காண்!” எனக் கூறி நகையாடினாள்.

குறளன் கூனிமீது கொண்ட காதல் மிகுதியால், அவள் யாமையை எடுத்து நிறுத்தியது போன்ற வடிவம் எனத் தன் வடிவையும், காமன் நடையெனத் தன் நடையையும் பழிக்கவும், அதைப் பொருட்படுத்தாதே, “பெண்ணே ! நாம் ஒருவரை யொருவர் காதலிப்பதற்குக் காரணமாய மலர்க்கணையேந்தி நிற்கும் மாரன் நடையை நீ கண்டதில்லையே. இதுகாறும் கண்டிலையேல், இப்போது காண்!” எனக் கூறிக் கொண்டே, தன் இரு கைகளையும் வீசி நடந்து அவளுக்கு மகிழ்ச்சி ஊட்டினான்.

குறளன் நடை கண்டு மகிழ்ந்தாள் கூனி, கூனி, தன்மீது கொண்ட கோபத்தை மறந்தாள் என்பதை அறிந்து கொண்ட குறளன். உடனே அவளை அணுகி, “அன்பே! இனி உன்னை இகழ்ந்து கூறேன். இது உறுதி. அரசன் மீது ஆணை. இனி நம் பகை மறந்து மகிழ்ந்து வாழ்வோமாக. நாம் ஒருவரை யொருவர் தொட்டுக் கூடி மகிழ்தற்கேற்ற குறியிடம் எது என்பதை ஆராய்ந்து கூறுவாயாக!” என்று கூறி வேண்டி நின்றான்.

குறளன், தன் பிழை உணர்ந்து, சூளுரைத்து அடங்கவே, அவளுக்கும், அவன் மீது ஆராக் காதல் பிறந்தது. அதனால், அவன் மார்பு பண்டுபோலாது, மென்மையும் இனிமையும் வாய்ந்ததாகப் புலப்பட்டது. அவன் மார்பின் மாண்பைப் பாராட்டிவிட்டு, “அன்ப! உன்னை இகழ்வதை நானும் கைவிட்டேன். நீ விரும்பிய வாறே, இனிக் கூடி வாழ்வோம். ஆனால், அதற்கு இது ஏற்ற இடமன்று. நம்மைக் காணும் இவ்வரண்மனை வாழ்வார், “பேயும் பேயும் கூடிய காட்சிபோல் இக்கூனும் குறளும் கலந்த காட்சியைக் காண்மின்!” எனக் கூறி நகைப்பர். அவ்வாறு நகைத்தலை நான் பொறேன். ஆகவே, பொற்றகடு போலும் பேரழகு மிக்க உருவத்தாய்! அரண்மனைக்கு அப்பால், அயலார் புகாத ஒரு பூஞ்சோலை உளது. ஆண்டு வருக, ஆங்கு, ஆன்றோர்கள் தம் அரிய ஓலைச்சுவடியின் தலையைக் கட்டி, அதன்மீது இட்ட அரக்கிலச்சினை போல், ஆரத்தழுவி அகம் மகிழ்வோமாக!” என்று இனிக்கக் கூறி இசைந்து சென்றாள்.

"என் நோற்றனை கொல்லோ?
நீருள் நிழல்போல் நுடங்கிய மென்சாயல்;
ஈங்கு உருச் சுருங்கி
இயலுவாய்! நின்னோடு உசாவுவேன்; நின்றித்தை.

அன்னையோ! காண்தகை இல்லாக், குறள்நாழிப் போழ்தினான் 5

ஆண்டலைக்கு ஈன்ற பறழ்மகனே! நீ எம்மை
வேண்டுவல் என்று விலக்கினை; நின்போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று.

மாண்ட, எறித்த படைபோல் முடங்கி, மடங்கி
நெறித்துவிட்டன்ன நிறை ஏரால், என்னைப் 10
பொறுக்கல்லா நோய்செய்தாய் போறிஇ, நிறுக்கல்லேன்;
நீ நல்கின் உண்டு என்உயிர்.

குறிப்புக்காண்; வல்லுப் பல்கை எடுத்து நிறுத்தன்ன
கல்லாக்குறள! கடும்பகல்வந்து, எம்மை
இல்லத்துவா என மெய்கொளீஇ எல்லா! நின் 15
பெண்டிர் உளர்மன்னோ? கூறு.

நால்லாய்கேள்! உக்கத்து மேலும் நடு உயர்ந்து, வாள்வாய
கொக்கு உரித்தன்ன கொடுமடாய் ! நின்னையான்
புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும், புறம்புல்லின்,
அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன், அருளிமோ! 20
பக்கத்துப் புல்லச் சிறிது.

போ; சீத்தை, மக்கள் முரியே! நீ மாறு: இனித்தொக்க,
மரக்கோட்டம் சேர்ந்தெழுந்த பூங்கொடிபோல
நிரப்பமில் யாக்கை தழிஇயினர் எம்மைப்
புரப்பேம் என்பாரும் பலரால்; பரத்தை, என் 25

பக்கத்துப் புல்லீயாய் என்னுமால்; தொக்க

உழுத்தினும் துவ்வாக் குறுவட்டா! நின்னின் இழிந்ததோ கூனின் பிறப்பு? கழிந்தாங்கே, யாம் வீழ்தும் என்று தன்பின்செலவு முற்றீயாக் கூனிகுழையும் குழைவு காண்; 30

யாமை எடுத்து நிறுத்தற்றால்; தோள் இரண்டும் வீசி, யாம்வேண்டேம் என்று விலக்கவும், எம்வீழும் காமர் நடக்கும் நடைகாண்; கவர்கணைச் சாமனார் தம்முன் செலவு காண்க.

ஓஒகாண்; நம்முள் நகுதல் தொடீஇயர் நம்முள்நாம் 35 உசாவுவம்; கோன் அடி தொட்டேன்.

ஆங்காக, சாயல் இன்மார்ப! அடங்கினேன்; ‘ஏஎ பேயும் பேயும் துள்ளல் உறும்’ எனக் கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல்!

தண்டாத் தகடுருவ! வேறாகக் காவின்கீழ்ப் போதர் அகடு ஆரப் புல்லி முயங்குவேம்; துகள்தபு காட்சி அவையத்தார் ஓலை முகடு காப்பு யாத்து விட்டாங்கு.”

குற்றேவல் புரியும் கூனும் குறளும் ஊடிப் பின்னர்க் கூடியது.

1. நோற்றனை–தவம் செய்தனை; 2. நுடங்கிய – நெளிந்த; 4. உசாவுவேன்–வினாவுவேன்; நின்றீத்தை–நிற்பாயாக; 5. காண் தகை–காணத்தக்க அழகு; குறள் நாழிப்போழ்து–குறளாய்ப் பிறப்பதற்குரிய வாய்ப்பமைந்த காலம்; 6. பறழ்–இளமையைக் குறிக்கும் பெயர்; 9. மாண்ட–மாட்சிமைப்பட்ட; எறித்தபடை–கலப் பையில் கோக்கும் கொழு; 10, நெறித்து விட்டன்ன–முறித்துவிட்டாற் போன்ற; நிறை ஏரால் நிறைந்த அழகால் (இகழ்ச்சிக் குறிப்பு) 11. பொறீஇ–தாங்கிக் கொண்டு; நிறுக்கல்லேன்–வாழமாட்டேன்; 13. வல்லுப்பலகை–சூதாடும் பலகை; 15, மெய்கொளீஇ–என் கைகளைப் பற்றி; 17. உக்கம்–தலை; இடையுமாம்; வாள்வாய–வாள் போலும் வாயை உடைய; 18. கொடுமடாய்–வளைந்த கூனியே; 19. அகலம்–மார்பு; 20, அக்குளுத்து– கிச்சுக்கிச்சுற்று; 22. சீத்தை –சீ கெட்டவனே; முரி–பாதி அதாவதுகுள்ளன்; 24. நிரப்பமில்யாக்கை–முழுதும் வளராத உடல்; அதாவது கூன்; 25. பரத்தை –கீழ்மைக் குணங்கள் உடையவள்; 26. புல்லீயால்–தழுவுவாயாக; என்னு மால்–என்று கூறும்; 27. துவ்வா –வளராத; நிரம்பாத; அதாவது, உளுந்தின் அளவினும், உருவால் சிறியவன் என்பது; 29. வீழ்தும் – விரும்புகின்றேம்; முற்றீயா–இசையாத; 30. குழைவு–நெளிவு அசைவு; 33. கவர்கணை–காதலர் உள்ளங்களைக் கவரும் மலர்க் கணை; 34. சாமனார்–காமன் தம்பி; தம்முன்–அவன் முன் பிறந்தோன் (காமன்); 35. தொடீஇயர் நகுதல் என மாற்றித், தொட்டு மகிழ்தற்கு எனப் பொருள் கொள்க; 36. உசாவுவம்–ஆராய்வோம்; கோன்–அரசன்; அடிதொட்டேன்–அடி தொட்டு ஆணையிட்டேன்; 38. துள்ளல்–துள்ளிக் கூத்தாடல்; உறும்– ஒக்கும்; 39. கோயில்–அரண்மனை; 40. தகடு–பொன், தகடு; 42. துகள்தபு–குற்றமற்ற; காட்சி–அறிவு; 43. முகடு–தலை; காப்பு யாத்து–கட்டு அரக்கிலச் சினையிட்டு.