மருதநில மங்கை/மனைவி துயர் காணாமையும் மன்னர்க்கு ஏற்றதோ?

விக்கிமூலம் இலிருந்து

34


மனைவி துயர் காணாமையும் மன்னர்க்கு ஏற்றதோ?

ரசியல் நெறி அறிந்து ஆளும் நல்லரசன் அவன். அமரர்க்கும், அரக்கர்க்கும் ஆசிரியராய் அமர்ந்து அரசியல் வழிகாட்டிய வியாழனும், வெள்ளியும் ஆக்கி அளித்த இரு பெரும் அரசியல் நூல்களையும், ஐயம் திரிபு அறக்கற்று, அவை கூறும் நெறி நின்று நாடாண்டிருந்தான். குழந்தையைப் பார்த்து இன்புறும் தாய், அக் குழந்தை விரும்பும் பாலை, அது விரும்பும் காலம் அறிந்து, சுரந்து அளித்து வளர்த்தல் போல், மழை, தன் நாட்டு மக்கள் விரும்பும் காலத்தில், அவர் விரும்பும் அளவு அறிந்து, தப்பாது பெய்து காக்கும் நல்லாட்சி, தன் நாட்டில் வாழ்வார் அனைவர்க்கும் வாய்க்குமாறு, நடுவு நிலைமை முதலாம் நல்லியல்புகளின் நிலைக் களமாய் நின்று நாடாண்டிருந்தான். நெடிய பல தேர்களையும், நிறைந்த யானைகளையும் கொண்டிருந்தது அவன் நாற்படை.

நல்லரசன் என நாடு போற்றும் அவனிடத்துப், பரத்தையர் உறவு எனும் பொல்லா வொழுக்கம் புகுந்து விட்டது. தன் மனைவியை மறந்து, பரத்தையர் மனை புகுந்து வாழத் தொடங்கினான். அவன் ஒழுக்கக் கேடு கண்டு, உள்ளம் நொந்தாள் அவன் மனைவி. பிறைத் திங்கள்போல் பேரழகுடைய அவள் நெற்றி பசலை படர்ந்து ஒளி இழந்து போகப் பெரிதும் நடுக்கம் கொண்டாள். தன்னைப் பற்றி வருத்தும் காமநோயின் கொடுமை தாங்க மாட்டாத அவள், அந் நோயோடு வாழ்தலை, கணவனைப் பிரிந்து காதல் நோய் வருத்த வாழும்நாளை வெறுத்தாள். உள்ளக் கவலையால் அவள் உடல் நலம் இழந்தது. மூங்கில் போலும் அழகுடையவளாய் விளங்கிய அவள் தோள்கள் தளர்ந்து தம் வனப்பிழத்தன. இவ்வாறு வருந்திக் கிடந்தாள் அவள்.

அவள் துயர்க் கொடுமையைக் கண்டாள் அவள் தோழி. அரசன் இன்னும் சில நாள், இவ்வாறே பிரிந்து வாழின், இவள் வாழாள் என அறிந்தாள். அதனால் அரசன்பால் சென்று, அவனுக்கு இவள் நிலையைக் கூறி அழைத்து வருதல் வேண்டும் எனத் துணிந்தாள். உடனே அவனிருக்கும் இடம் சென்று அவனைக் கண்டாள். அரசியல் நூல்கள் பல கற்று, அவை கூறும் அறநெறி பிறழாது ஆளும் அவன் ஆட்சிச் சிறப்பைப் பாராட்டி வணங்கிய பின்னர், “அரசே! நீ ‘என் ஆட்சிக்கீழ் வாழ்வார் அனைவர்க்கும் அறமே வழங்குவேன். என் குடைநிழல், அனைவர்க்கும் அறமே வழங்கும். ஆகவே, உலகீர்! என் குடைக் கீழ், எல்லோரும் வந்தடைக!’ என விளங்கக் கூறி, வெண்கொற்றக் குடையினை விரித்து நிற்கின்றனை உன் வரவேற்பை ஏற்று வந்தடைந்த உலக மக்கள் அனைவரும், அக்குடை நிழற்கீழ் இருந்து இன்புற்றுவாழ இவள் ஒருத்தி மட்டும், அக்குடையின் அறநிழற்கீழ் அகப்படாது, புறத்தே நின்று விட்டனளோ? இவள் புறத்தே நின்றவள் அல்லள். இவளும் உன் குடைநிழற்கீழ் வாழ்பவளே. உன் குடைநிழற் கீழ் வாழ்வாளொருத்தி, இவ்வாறு, நெற்றி பசலைபாய ஒளிகெட்டு உளம் குன்றி வாடுவதை நீ கண்டிலையோ? இதுகாறும் கண்டிலையாயின், இப்போதாயினும் கண்டு, இவள் துயர் துடைப்பாயாக!

“ஐய! நடுவு நிலைமை பிறழாத உன் செங்கோல் சிறப்பை, உலகம் பாராட்டிப் புகழ்கிறது. அச்செங்கோலாட்சியாலாம் சிறந்த பயனை உன் நாட்டில் உள்ளார் அனைவரும் அனுபவித்து அகம் மகிழ்கின்றனர். இவ்வாறு உன் ஆட்சியில் வாழ்வார் அனைவரும், உன் ஆட்சியின் நலங்களை நுகர்ந்து நன்கு வாழ, இவள் ஒருத்தி மட்டும், அவ்வாட்சி நலங்களுக்கு அப்பாற்பட்ட கொடுமைகளை அனுபவிக்கப் பிறந்தவளாவளோ? கொடுமை அனுபவிக்க வந்தவள் இவள் என என் உள்ளம் கொள்ளவில்லை. உன் நல்லாட்சியின் நற்பயனை அனுபவிக்க வந்தவளே இவளும். அவ்வாறாகவும், உன் ஆட்சிக்குட் பட்டா ளொருத்தி மட்டும், இவ்வாறு காதல் நோயால் கலங்கி, வாழ்வை வெறுத்து வருந்திக் கிடப்பதை நீ கண்டி லையோ? இதுகாறும் கண்டிலையாயின், இனியேனும் கண்டு, இவள் துயர் போக்குவாயாக!

“ஐய! “எங்கள் வேந்தன் ஆட்சிக் கீழ் வாழ்வார் எவரும் எத்தகைய இடையூறும் இல்லாமல் வாழ்வர். அவரை அவ்வாறு நின்று காப்பன் எங்கள் அரசன் !’ என உரைப்பதுபோல் ஒலிக்கிறது உன் முரசு. அம்முரசொலி கேட்கும் மக்களும், ‘இம்முரசொலி முழங்கும் நாடு, நமக்கு நல்ல புகலிடமாம்!’ என எண்ணி, உன்னை வந்து அடைகின்றனர். இவ்வாறு உலகமெல்லாம் உன் முரசொலி கேட்டு, அதைத் தம்மைக் காக்கும் காவல் முரசு எனக் கொண்டு கவலையற்று வாழ, இவள் ஒருத்திக்கு மட்டும், அது காவலாய் அமையாது கழிந்ததோ ? அம்முரசொலியைத் தன்னைக் காக்கும் ஒலியாகக் கருத, இவள் தவறி விட்டனளோ? இவள் அவ்வாறு தவறி விட்டவளல்லள். இவளுக்குக் காவலாய் அமையும் கடப்பாட்டில், உன் முரசு தவறியதாக நான் கருதவில்லை. உன் முரசொலி, உலகோர் அனைவர்க்கும், துயர் ஒழித்து உய்விக்கும் உறுதுணையாக, இவள் ஒருத்தி மட்டும் அதன் ஒலி கேட்டு வருந்தித், தன் தோள்கள் வனப்பிழக்க வாடிக் கிடத்தலை நீ கண்டிலையோ? இதுகாறும் கண்டிலையாயின், இனியேனும் கண்டு, இவள் துயர் ஒழிப்பாயாக!

“ஐய! கண் நெடுந்தொலைவில் உள்ள பொருள்களையும் காண வல்லதே. எனினும், அது, தான் உற்ற வடுவைப் பிறர் எடுத்துக் காட்டிய விடத்தும் காண அறியாது. அதுபோல், உலகில் வாழ்வார் அனைவர் துயரையும் அறிந்து போக்கும் ஆற்றல் வாய்ந்த நீ, உன் மனைவியாய், உன்னிற் பாதியாய் வாழ்வாள் துயரை மட்டும் அறிந்திலை. அவள் தோள்வளை கழன்று ஓடுமாறு தளர்ந்து கலங்கவும், அக்கொடுமையை நீ கண்டிலை நின் செயல் எனக்குப் பெரிதும் வியப்பாகிறது. ஐய! அரசர்கள் காணக் கூடாதன, அறியக் கூடாதன, செய்யக் கூடாதன என ஆன்றோர் விலக்கிய அறமல்லாக் கொடுமைகளுள், உன் காதலி கண் கலங்கி வாடவும், அக் கொடுமையைக் காணாதிருத்தலும் ஒன்றோ?” என்று வினாவி இடித்துக் கூறினாள்.

“நறவினை வரைந்தார்க்கும், வரையார்க்கும் அவைஎடுத்து
அறவினை இன்புறுஉம் அந்தணர் இருவரும்
திறம்வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது,
குழவியைப் பார்த்து உறுTஉம் தாய்போல் உலகத்து
மழை கரந்து அளித்து ஒம்பும் நல்லூழி யாவர்க்கும் 5
பிழையாது வருதல்நின் செம்மையில் தரவாய்ந்த
இழைஅணி கொடித்திண்தேர் இனமணி யானையாய்!

அறன் நிழல்எனக் கொண்டாய் ஆய்குடை; அக்குடைப்
புறநிழற்கீழ்ப் பட்டாளோ இவள்? இவள் காண்டிகா,
பிறைநுதல் பசப்பு ஊரப் பெருவிதுப்பு உற்றாளை. 10

பொய்யாமை நுவலும் நின்செங்கோல், அச்செங்கோலின்
செய்தொழிற்கீழ்ப் பட்டாளோ இவள்? இவள் காண்டிகா,
காமநோய் கடைக்கூட்ட வாழும்நாள் முனிந்தாளை.

ஏமம் என்று இரங்கும் நின் எறிமுரசம், அம்முரசின்
ஏமத்து இகழ்தாளோ இவள்? இவள் காண்டிகா, 15
வேய்நலம் இழந்ததோள் கவின்வாட உழப்பாளை;
ஆங்கு,
நெடிது சேண் இகந்தவை காணினும், தான் உற்ற
வடுக் காட்டக், கண் காணதற்காக, என் தோழி
தொடிகொட்ப நீத்த கொடுமையைக் 20
கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே?”

தலைவன் பரத்தையிற் பிரிய, வருந்திய தலைவியின் துயர் நிலை கண்ட. தோழி, தலைவனை அடுத்து அறிவுரைத்தது இது.

1. நறவு – கள்; வரைந்தார் – வெறுத்த தேவர், வரையார் – விரும்பிய அரக்கர்; 2. அந்தணர் இருவர் – அமரர்க்கும், அரக்கர்க்கும் முறையே ஆசிரியர்களாய் வாழ்ந்த வியாழனும், வெள்ளியும்; 5. நல்ஊழி – நல்ல முறைமை; 6. செம்மையில் – நடுவு நிலைமை முதலாம் நல்ல குணங்களால்; 8. அறன் நிழல் – அறத்தைச் செய்யும் நிழல்; ஆய்குடை – அழகிய குடை; 9. காண்டிகா – காண்பாயாக; 10.. ஊர – பரவ; விதுப்பு – மனநடுக்கம்; 12. செங்கோலின் செய்தொழிற் கீழாவது; அச்செங்கோலுக்குப் புறம்பான கொடுங்கோலின் செயலாகிய கொடுமை; 13. கடைக்கூட்ட – இறுதிநாளைக் கொண்டு வந்து தர; 14. ஏமம் – பாதுகாவல்; இரங்கும் – ஒலிக்கும்; 15. இகந்தாள் – கடந்து அப்பாற்பட்டாள்; 16. உழப்பாள் – துன்புறுவாள்; 18. இகந்தவை – கடந்த பொருள்களை; 19. காணாதற்று – காணாத தன்மைத்துபோல்; 20. கொட்ப – கழன்று ஓட; 21. கடிது – கொடிய செயல்; கடிந்தது – அரசர்க்கு ஆகாதன என அறநூல்களால் விலக்கப்பட்டது.