உள்ளடக்கத்துக்குச் செல்

மருதநில மங்கை/நீ ஆடியது குமரிப் புதுப்புனல்

விக்கிமூலம் இலிருந்து

33


நீ ஆடியது குமரிப் புதுப் புனல்

வையை ஆற்றின் வளம் மிகுந்த மதுரைமா நகரில் இளங்காதலர் இருவர், இல்லற வாழ்க்கை மேற்கொண்டு இன்புற்று வாழ்ந்திருந்தனர். ஆற்றில் புது வெள்ளம் வரக் கண்டு, ஊரார் புனல் விழாக் கொண்டாடும் காலம் வந்தது. அந்நிலையில், நாள்தோறும் பாற்சோறே உண்டு வந்தான் ஒருவன், அதில் சிறிது வெறுப்புத் தட்டவே, இடையில் சிலநாள் புளிச்சோறு உண்பதுபோல், மனைவி தரும் பேரின்ப வாழ்வைப் பெருகச் சுவைத்தமையால் சிறிதே வெறுத்த இளைஞன், இடையே சிலநாள், ஒருசில பரத்தையரோடு உறவு கொண்டு, அவர் சேரி சென்று வாழ்ந்திருந்தான். அவன் ஒழுக்கக் கேடறிந்து வருந்தினாள் அவன் மனைவி.

புதிய புதிய மலர்களைத் தேடிச் சென்று, அவற்றில் உள்ள தேனைக் குடித்துத் திரியும் தேனீக்கள் போல், நாள் தோறும் புதிய புதிய பரத்தையரைத் தேடிப்பெற்று இன்பம் நுகர விரும்பும் அவன் ஆசை அறிந்த தேர்ப் பாகன், தன் தலைவன் விரும்பும் பரத்தையரைத் தேடிப் பிடித்து அவன் விரும்பும் காலத்தில், அவன் இருக்கும் இடத்திற்கு அழைத்து வரும் விரைவு கருதித் தேரைப் பூட்டுவிடாதே நிறுத்தி வைத்திருப்பதையும், அத்தேர் இரவுபகல் ஓயாது, ஊரைச் சுற்றிச் சுற்றி வருவதையும் கண்ட அவ்வூரார் ஒவ்வொருவர் வாயிலும், அவன் பரத்தையர் ஒழுக்கம் பற்றிய பேச்சே எழுந்தது. ஆற்றின் கரையிலும், உண்ணுநீர்த் துறையிலும், ஊர் மன்றிலும், அங்காடித் தெருவிலும் எங்கும் அப்பேச்சே பேசப்பட்டது. அவன் ஒழுக்கக் கேடு அறிந்த ஊரார் ஒவ்வொருவரும், அதை அவன் மனைவிபால் சென்று அறிவிக்க அறிவிக்க, அவள் துயர் மிகுந்தது. அதனால், அவன்மீது கடுஞ்சினம் கொண்டு வாழ்ந்திருந்தாள்.

அந் நிலையில் புனல் விழாவும் முடிவுற்றது. இளைஞனும் வீட்டிற்கு வந்தான். ஆனால், வந்தானுக்கு வழிவிட மறுத்தாள் அவன் மனைவி. வருக என வரவேற்காது, வழிமறித்து நின்றவாறே, “ஐய! ஈண்டு வந்து, என் மனைக்குள் புகும் நீ யார்? இங்கு வர உனக்கு என்ன உரிமை உன் ஒழுக்கக் கேட்டை ஊரார் உரைக்க முன்னரே அறிவேன். பரத்தையர் பின் திரியும் நீ, நாள் தோறும், உன்னை எவ்வாறு ஒப்பனை செய்து கொண்டு, அவர் முன் சென்று நிற்பாய் என்பதை, இப்போது, ஈங்கு வந்து என் முன் நிற்கும் கோலத்தால் அறிந்து உன் கள வொழுக்கத்தைக் கண்ணெதிரில் கண்டும் கொண்டேன். நீ என்னோடு உறவுடையன் அல்லை. உன் வருகை எனக்கு மன நிறைவைத் தாராது. மனை புகாது இதுகாறும் சென்றிருந்த இடத்திற்கே மீண்டு செல்க!” எனக் கூறி வழியடைத்தாள்.

மனைவியின் சினம் கண்ட இளைஞன் சிறிதும் மருளாதே, “ஆராய்ந்தெடுத்த மலர் கொண்டு தொடுத்த மாலையணிந்து அழகின் வடிவாய் என்முன் வந்து நிற்கும் மங்கை நல்லாய்!” எனப் பாராட்டி, அப்பாராட்டைக் கேட்டு, அவள் மனம் சிறிதே நெகிழ்ந்து நிற்கும் நிலை நோக்கிப், “பெண்னே! நான் செய்யாத எதை யெதையோ கூறி என்னைச் சினப்பது ஏனோ? உதிர்ந்து, படிந்த மலர்கள் தன்னை முழுவதும் மறைத்துக் கொள்ள இரு கரைகளையும் அழித்துப் பாய்ந்து வரும் வையை யாற்றில், புதுவெள்ளம் பெருக்கெடுத்தோடக் கண்டேன். அதில் ஆடி மகிழ ஆசை கொண்டது என் உள்ளம். அவ்வாசை தீர அதில் ஆடி மகிழ்ந்தேன். அதனால் என் வருகை தடைப்பட்டது. அதுவல்லது வேறு எதையும் அறியேன். நான் கூறுவது உண்மை. இதை உன் உள்ளம் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்!” என்று கூறினான்.

“புனலாடி வந்தேன்!” எனக் கணவன் கூறக்கேட்ட அவள், “ஓ! அப்படியா !” எனத் தலையாட்டி வியப்பாள் போல் வினாவி, ‘அன்ப போன இடத்தில் நீ புனலாடினாய் என ஊரார் சிலர் வந்து உரைத்ததை நானும் கேட்டேன். ஆங்கு நீ ஆடிய புனல் எது என்பதையும் நான் அறிவேன். அடர்ந்தும், நீண்டும் அலை அலையாய்த் தொங்கும் அழகிய கூந்தலை, அறல் ஒழுகும் மணலாகவும், காண்பார் மனத்தை மருட்டும் மாட்சிமை மிக்க, மை தீட்டிய கண்களை, நீரில் நீந்தி விளையாடும் மீன்களாகவும், மலர்ந்த மலர்கள் உதிர்ந்து படிந்து மணம் வீசும் மலர்ச் சோலையில், மகளிரின் மானத்தைக் காக்கும் நாண் எனும் நல்ல வேலியை அழித்து நண்பகற் காலத்திலேயே பெருக்கெடுத் தோடி வந்த அப் புது வெள்ளத்தில், நீ விரும்பும் பரத்தையரைத் தேடிப்பிடித்து வந்து தந்து மகிழ்விக்கும் பாணனாகிய தெப்பம் துணையாக ஆடி மகிழ்ந்தாய் என ஊரார் உரைக்க அறிந்தேன்.

“மேலும், அப்புனலாட்டத்தில், உன் ஆசை குறையாமையால், மேலும் மேலும் ஆர்வம் மிகுமாறு ஆடும் ஆட்டத்தைக் காண்பவர், ஊருள் புகுந்து உரைக்கும் அலரை நான் அறிந்து கொள்வனோ எனும் அச்சம் உன் உள்ளத்தை அலைக் கழித்தமையால், உன் புனலாட்டத்தை அவ்வூரார் அறிந்து கொள்ளாவாறு, சிறிதே நீ மறைந்து நிற்க, அது கண்டு பொறாத அப்பரத்தைப் புனல், உன்மீது சினம்கொண்டு, அச்சினத்தால் வளைந்த புருவமாகிய அலையை வீசி, காற்சிலம்பினின்றும் எழும் ஆரவாரத்தால் உன்னை அச்சுறுத்தி, உன் உள்ளுணர்வு உணர்த்த, நீ மேற்கொள்ள விரும்பும் நல்லொழுக்கத்தைத் தடைசெய்து தளைத்து நிற்க, அந் நிலையில் சினந்து மேல்வந்த பிறிதொரு புது வெள்ளம், உன்னை அடித்துக் கொண்டே அனைத்துச் சென்றது. அக் காட்சியைக் கண்டு வந்து கூறினாரும் உளர். அங்ஙனம் அடித்துச் சென்ற அப் புது வெள்ளம், நல்லொழுக்க வுணர்வு மிக்க உன் நல்ல வுள்ளத்தைத் தன் வயமாக்கிக் கொண்டமையால், நீ அப்புது வெள்ளத்தினின்றும் வெளியேறிக் கரை காணும் கருத்திழந்து கலங்குகின்றாய்!” என, அவன் ஆடிய புனலாட்ட நிலையினைக் கூறுவாள் போல், "அன்ப! பாணன் துணையாக, ஒரு பரத்தையைப் பெற்றுப் பேரின்பம் நுகர்ந்தாய். பின்னர், அப்பரத்தையர் ஒழுக்கத்தின் பழியுணர்ந்து, அதனின்றும் மீளக் கருதியிருக்குமளவில், பேரழகுமிக்க புதிய பரத்தை யொருத்தி தோன்றித், தன் பேரழகால் உன்னைத் தன்வயமாக்கிக் கொண்டாள். பரத்தையர் ஒழுக்கம் பழி உடைத்து என உணரும் உன் உள்ளமும் அவள் அழகிற்கு அடிமைப்பட்டு விட்டது. நீ அவளை விட மறந்து வாழ்கின்றாய்!” என அவன் மேற்கொண்ட பரத்தைய ரொழுக்கத்தினை எடுத்துக் காட்டி இடித்துக் கூறிக் கண்டித்தாள்.

“புனலாடினேன்” எனக் கூறவும், அதை ஏற்றுக் கொள்ளாது, தன்மீது பரத்தையர் ஒழுக்கம் எனும் பழி சூட்டும் மனைவி கருத்தைத் தன் வாய்ச்சொல் மாற்றாது, அவள் தன் வெறும் சொல் கேட்டு மனம் இரங்காள் என அறிந்த இளைஞன், “பெண்ணே ! வையை யாற்று வெள்ளத்தில் ஆடி மகிழவே, நான் அங்குத் தங்கினேன். அதுவே உண்மை என்பதை, வேண்டுமானால், தெய்வத்தின் மீது ஆணையிட்டுக் கூறுவேன். உண்மை அதுவாகவும், நான் செய்யாத ஒரு குற்றத்தை என்மீது ஏற்றிச் சினவாதே. அவ்வாறு வீண்பழி கூறுவதால் உனக்கு உண்டாம் பயன் யாது?’ என்று கூறிப் பணிந்து நின்றான்.

கணவன், “கடவுளைக் காட்டிச் சூள் உரைப்பேன்!” எனக் கூறியும், அவள் அவன் சொல்லை ஏற்றுக் கொள்ள மறுத்தாள். “அன்ப! நீ ஆடிய அவ் வையை யாறு, தன் புறத்தை மலர்கள் மறைக்க, காண்பார் கண்ணிற்கு மகிழ்ச்சி தருமேனும், அதன்கீழ்த், தன்னை அடைந்தாரின் கால்களை ஈர்த்துக் கொள்ளும் கொடிய புனல் உண்டு என்பதை மறவாதே. தன் கொடுமை மறைத்து வந்து பாயும் அவ் வெள்ளத்தில் புகுந்து ஆட, உன் ஆசை அட்ங்கவில்லையாயின், மீண்டும் ஆண்டே செல்க ஆனால் ஒன்று. சென்று ஆடுங்கால், ஆங்குள்ள இள மணலுள் உன் கால்கள் சிக்கிக் கொள்ளுதலும் உண்டாம் அவ்வாறு சிக்குண்ட உன்னை, எவரும் கரை சேர்க்க மாட்டார். சேற்றில் சிக்கிச் சீரழியும் உன்னைக் காண்பவர், எள்ளி நகைப்பர். ஆகவே, புனலாடுங்கால் சிறிது விழிப்போடிருப்பாயாக!” என்று கூறுவாள் போல் “அன்ப! பரத்தையர் இன்பம் நுகரத் தேர் ஏறி அவர் சேரிக்குச் செல்க. செல்லும் நீ, ஆங்கே, உன்னைத் தம் வயப்படுத்தி, மீண்டு வாராவாறு தடுத்து நிறுத்தவல்ல பேரழகு மிக்க இளம் பரத்தையர் பலர் உளர். அவர் வலையுள் அகப்பட்டு விடுவையேல், பின்னர், அவரை விடுத்து வருதல் உன்னால் இயலாது. பரத்தையர் ஒழுக்கத்திற்கு அடிமையாகும் உன்னை ஊரார் கை கொட்டிச் சிரிப்பர். ஆகவே, விழிப்பாயிருப்பாயாக!” என அவன் ஒழுக்கக் கேட்டை உணர்த்தி வாயில் மறுத்தாள்.

“யாரை நீ? எம்இல் புகுதர்வாய்! ஒரும்,
புதுவ மலர்தேரும் வண்டேபோல், யாழி,
வதுவை விழவணி வைகலும் காட்டினையாய்;
மாட்டு மாட்டுஓடி மகளிர்த் தரத்தரப்

பூட்டுமான் திண்தேர் புடைத்த மறுகு எல்லாம் 5
பாட்டாதல் சான்ற நின்மாயப் பரத்தைமை
காட்டிய வந்தமை கைப்படுத்தேன்; பண்டெலாம்
கேட்டும் அறிவேன் மன் யான்,

தெரிகோதை அந்நல்லாய் ! தேறியல் வேண்டும்;
பொருகரை வாய்சூழ்ந்த பூமலி வையை 10
வருபுனல் ஆடத் தவிர்ந்தேன்; பெரிது என்னைச்
செய்யா மொழிவது எவன்?
ஒஒ! புனலாடினாய் எனவும் கேட்டேன்; புனல், ஆங்கே,
நீள்நீர்நெறி கதுப்பு, வாரும் அறலாக,

மாண் எழில் உண்கண், பிறழும் கயலாகக், 15
கார்மலர் வேய்ந்த கமழ்பூம் பரப்பாக,
நாணுச் சிறை அழித்து, நண்பகல் வந்த அவ் வியாணர்ப் புதுப்புனல் ஆடினாய், முன்மாலைப் பாணன் புணையாகப் புக்கு;

ஆனாது, அளித்து அமர்காதலோடு அப்புனல் ஆடி 20
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சிக்,
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன், குளித்து ஆங்கே,
போர்த்த சினத்தால் புருவத் திரையிடா
ஆர்க்கும் ஞெகிழத்தால் நன்னீர் நடை தட்பச்
சீர்த்தக வந்த புதுப்புனல் நின்னைக் கொண்டு 25
ஈர்த்துய்ப்பக் கண்டார் உளர்;

ஈர்த்தது, உரைசால் சிறப்பின்நின் நீருள்ளம் வாங்கப்
புரைநீர் புதுப்புனல் வெள்ளத்தின் இன்னும்
கரை கண்டது.உம் இலை;

நிரைதொடீஇ ! பொய்யா வாள்தானைப் புனைகழற்கால் தென்னவன் 30
வையைப் புதுப்புனல் ஆடத் தவிர்ந்ததைத்
தெய்வத்தின் தேற்றித் தெளிப்பேன்; பெரிது என்னைச்
செய்யா .மொழிவது எவன்?

மெய்யதை; மல்கு மலர் வேய்ந்த மாயப் புதுப்புனல்,
பல்காலும் ஆடிய செல்வுழி ஒல்கிக் 35
களைஞரும் இல்வழிக் கால் ஆழ்ந்து, தேரோடு
இளமணலுள் படல் ஓம்பு; முணைநேர்
முறுவலார்க்கு ஓர் ஈகை செய்து.”

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனைத், தலைவி, தாழ்த்த காரணம் என் எனப் புனலாடினேன் என்று அவன் கூற, “நீ ஆடியது பரத்தைப் புனலே!” எனக் கூறி, அவள் அவனை நெருக்கியது இது.

1. ஓரும் – அசை; 2. யாழ – அசை; 3. வதுவை விழவு – திரு மணவிழா; 4. மாட்டு மாட்டு – இடந்தோறும் இடந்தோறும்; 5. பூட்டு மான்–பூட்டிக்கிடக்கும் குதிரைகளைக் கொண்ட; 5. புடைத்த – ஆர வாரித்த; மறுகு – தெருவு; 6. பாட்டாதல் சான்ற – பெரும் அளவில் பேசப்பட்டது; 7. காட்டிய – காட்ட; 9. தேறியல் வேண்டும் – தெளிய வேண்டும்; 10. பொருகரை – அழியும்வரை; 12. செய்யாமொழிவது – செய்யாத தப்பிற்குக் கண்டித்தல்; 14 கதுப்பு – கூந்தல்; வாரும் – நீர் ஒழுகும்; 16. பரப்பாக – பரப்பின்கண்; 17. சிறை – அணை ; 18. யாணர் – புது வருவாய்; 20. ஆனாது – ஆசை அடங்காது; 21. கவ்வை – அலர்; 22. குளித்து – மறைத்து; 24. ஞெகிழ் – சிலம்பு; நடை – நல்லொழுக்கத்தை; தட்ப – தடுக்க; 27. நீருள்ளம் – நல்லொழுக்கம் மிக்க உள்ளம்; வாங்க – தன்வயமாக்கிக் கொள்ள; 31. தவிர்ந்ததை – – தங்கியதை; 34. மல்பு – பெருகிய; 34. ஆடிய – ஆட: ஒல்கி – தளர்ந்து; 37. ஓம்பு – காத்துக் கொள்.