உள்ளடக்கத்துக்குச் செல்

மருதநில மங்கை/வேழம் வனப்புடைத்து

விக்கிமூலம் இலிருந்து

32


வேழம் வனப்புடைத்து

ருவனும் ஒருத்தியும் உள்ளம் ஒன்றுபட்ட உயர்ந்து அன்புடையராய் இன்புற்று வாழ்ந்திருந்தனர். ஒரு நாள் ஊர்க் காவல் குறித்தோ, பொருள் ஈட்டல் கருதியோ மனைவியை வீட்டில் விட்டுப்போன இளைஞன், போன இடத்தில் பரத்தையர் உறவு கொண்டு, மனைவியை மறந்து வாழ்ந்திருந்தான். அவன் மனைவி, கணவன், காவல் முதலாம் கடமை மேற்கொண்டு சென்றிருப்ப தாகவே கருதியிருந்தாள்.

ஒரு நாள் உண்மை வெளிப்பட்டுவிட்டது. பரத்தையர் உறவு கொண்ட அவன், ஆங்குத் தன் உள்ளம் விரும்பும் ஒருத்தியோடு மட்டும் உறவு கொண்டானல்லன். பரத்தையர் பலரோடும் தொடர்பு கொண்டு வாழ்ந்தான். ஒரு நாள், அவன், ‘நான் இன்ன இடத்தில் இருப்பேன், ஆங்கு வருக!’ என ஒருத்திக்கு இடம் குறித்து அனுப்பி யிருந்தான். அவளும் அவ்வாறே ஆங்குச் சென்றாள். ஆனால் அங்கு அவனைக் கண்டிலள். தன்னை ஆங்குவரப் பணித்து, அவன் அவன் வீட்டிற்குச் சென்றிருப்பான் எனக் கருதினாள். கடுஞ்சினம் கொண்டாள். பொழுது புலர்க என வீடடைந்தாள். பொழுதும் புலர்ந்தது. புறப்பட்டு அவன் வீட்டிற்குச் சென்றாள். தெருவில் இருந்தவாறே வன்சொல் பல வழங்கிப் பழித்து மீண்டாள். அவள் செயல், அவன் சென்று வாழும் இடம் இது, அவன் மேற்கொண்டிருக்கும் ஒழுக்கம் இத்தகைத்து என்பதை அவன் மனைவிக்கு உணர்த்திவிட்டது. அதனால், அவள் வருந்திக் கிடந்தாள்.

அந்நிலையில் அவனும் வந்து சேர்ந்தான். வந்து ஏதும் அறியாதவன்போல் நடந்து கொள்ளும் கணவனைக் கண் கலங்க நின்று வரவேற்று, “அன்ப! என்னையும், பரத்தையையும் ஒன்றாக மதிக்கும் உன் செயல் கண்டு வருந்துகிறேன். அவ்வாறு இழிநிலையுற்றும் உயிர் வாழும் இவ்வாழ்வை வெறுக்கிறது என் தூய உள்ளம். இன்று மட்டுமன்று. என்றுமே, நீ இழிசெயல் உடையையாதல் உணர்ந்து உறுதுயர் கொள்கிறது என் உள்ளம் !” என்று கூறி வருந்தினாள்.

மனைவியின் அத்துயர் நிலையிலும், அவள் முத்துப் பல் காட்டும் முறுவலையும், முழுமதிக்கு ஒத்த முகத்தையும் கண்டு மகிழ்ந்த இளைஞன், அவற்றைப் பாராட்டி விட்டு, அவளை நோக்கிப், “பெண்ணே! என் வலையுள் இன்று, அறிவு நிறைந்த ஒரு யானை வந்தகப்பட்டது. அதைக் கண்டு மகிழும் நினைவால் உன்னை மறந்து விட்டேன். ஆதலின், என்னைச் சினவாது ஏற்றுக் கொள்க!” என்று இரங்கிக் கூறி வேண்டிக் கொண்டான். "யானை ஒன்று கிடைத்தது. அதைக் கண்டு நின்றதால் காலம் கடந்துவிட்டது!” என்று கணவன் கூறக் கேட்ட அவள், “அன்ப! உன் வலையுள் வீழ்ந்த அந்த வேழம், நெற்றியில் அணிந்த திலகமாகிய பட்டத்தினையும், தொய்யில் வரைந்து வனப்புற்றுத் தோன்றும் கொங்கைகளாகிய கோடுகளையும், தொய்யகம் என்ற பெயருடைய தலையணியாகிய அங்குசத்தையும், காதில் கிடந்து தொங்கும் மகரக் குழைகளாகிய மணிகளையும், திருமகள் உருவம் பொறித்த தலைக்கோலமாகிய கழுத்து மெத்தையினையும் கொண்டு, அவ்வகையால் அது வனப்பு வாய்ந்து தோன்றும் எனக் கூறக் கேட்டுளேன். அந்த யானை, நல்ல மணம் வீசும் சுண்ணப் பொடியாகிய நீறு பூசி, நறுமணம் நாறும் நல்ல மதுவாகிய நீர் குடித்து, மனை வாயிலை அடைந்து, கதவாகிய கட்டுத்தறியைச் சார்ந்து, அக் கதவோடு, சங்கிலியால் சேரப் பிணித்தாற் போல், தழுவி நின்று, தெரு வழியே போவோர் எவரும், தன் அழகைக் கண்டு, ஆசை கொண்டு, மயங்கி அறிவிழக்குமாறு தன் அழகைக் காட்டி, அவர் அப்பால் செல்லாவாறு அவர் கால்களைத் தடுத்து வீழ்க்கும் எனவும், கண்டார்க்குத் துயர் விளைக்கும் பேரழகு வாய்ந்த மெல்லிய தோளாகிய பெரிய கையால், தன்னைக் காண்பார்பால் உள்ள நல்ல பண்புகளை யெல்லாம் கவளம் கவளமாக உண்டு பாழாக்கும் எனவும் கூறக் கேட்டுளேன். அன்ப! அத்தகைய வேழத்தை, இன்றுதான் கண்டதுபோல் கூறி, ஏன் பொய்யன் ஆகின்றாய்? அன்ப! அவ்வேழத்தின் தொடியணிந்த தோளாகிய மருமத்தைத் தழுவிப், பின்னர் அதன் மீது தத்தி ஏறி உலாவரும் வழக்கம் உடையவன் நீ உன்பால் காதல் கொண்டு, உன்னைக் கூடி, மேலும் அக் கூட்டமே விரும்பி, உன் வரவை எதிர்நோக்கிக் கிடக்கும் பரத்தை மகளிரின் வீடுகளின் வழியாக, அவர்கள் பார்த்து வருந்த, இளையாளாகிய அப்புதிய வேழத்தின்மீது ஏறித் திரியும் இயல்புடையவன் நீ. அன்ப! உன் ஆணைக்கு மீறிவிடாது, ஓர் அளவில் நிற்பதற்குத் தேவையான மதம்பட, அவ்வி யானையை, இடையே சிறிது பொழுது நீர்க்கு விட்டு, மீண்டும் ஏறித் திரியும் இயல்புடையவன் நீ உன்பால் பேரின்பம் நுகரமாட்டாது, சிறிதே நுகர்ந்தாள் ஓர் இளம் பரத்தையை, அவள் கண்மை கரையக் கண்ணீர் சொரிந்து அழியுமாறு சிலநாள் கைவிட்டுப் பின்னர்க் கூடி மகிழ்பவன் நீ அத்தகைய நீ இன்று என் மனை வந்தடைந்தாய். இவ்வருகையும் என்பால் அன்பு கொண்டு வந்த வருகை யன்று. உன்பால் உறவுகொண்ட இவ்வூர்வாழ் பரத்தையர், நீ, புதியாளொருத்தியின் பின் திரியக் கண்டு சினப்பதைத் தவிர்த்தற் பொருட்டே, நீ இன்று, இங்கு வந்து நிற்கின்றாய். நீ வேறு ஒருத்தியின் பின் சென்றிலை, உன் மனைக்கே சென்றுளாய் எனக் கருதி அவர்கள் ஏமாறுக என எண்ணியே நீ இங்கு வந்துளாய். அதை அப் புதியாள் அறியின், பாகன் ஏறி ஊராவாறு மதம்பட்டுத் திரியும் யானைபோல், அவள் உன் ஆனைக்கு அடங்காது கடுஞ்சினம் கொள்வள். அவ்வாறு சினம் கொண்டு செல்வாளை அடக்கி ஆளுதற்காம் வழிவகை யாது என ஆராய்ந்து கொள்ள ஆங்குச் செல்க! ஈண்டு நில்லற்க!” எனப் புலந்து கூறினாள்.

"அன்னை, கடுஞ்சொல் அறியாதாய் போல நீ
என்னைப் புலப்பது ஒறுக்குவேன் மன்யான்;
சிறுகாலை இற்கடை வந்து, ‘குறிசெய்த

அவ்வழி என்றும் யான் காணேன் திரிதர,
எவ்வழிப்பட்டாய் சமனாக, இவ்வெள்ளல்; 5
முத்தேர் முறுவலாய் ! நம்வலைப் பட்டதோர்
புத்தியானை வந்தது காண்பான் யான் தங்கினேன்.

ஒக்கும்;
அவ்வியானை, வனப்புடைத் தாகலும் கேட்டேன்;
அவ்வியானைதான் சுண்ண நீறுஆடி, நறுநறா நீர்உண்டு, 10

ஒண்ணுதல் யாத்த திலக அவிர் ஒடைத்,
தொய்யில் பொறித்த வனமுலை வான்கோட்டுத்,
தொய்யகத் தோட்டிக், குழை தாழ்வடிமணி,
உத்தி பொறித்த புனைபூண் பருமத்து,

முத்து ஏய்க்கும் வெண்பல் நகைதிறந்து, 15
நன்னகர் வாயில் கதவவெளில் சார்ந்து,
தன் நலம்காட்டித், தகையினால் கால்தட்டி வீழ்க்கும்;
தொடர் தொடராக வலந்து படர்செய்யும்;
மென்தோள் தடக்கையின் வாங்கித் தற்கண்டார்

நலம் கவளம் கொள்ளும், நகைமுக வேழத்தை 20
இன்று கண்டாய்போல் எவன் எம்மைப் பொய்ப்பது நீ?
எல்லா! கெழீஇத், தொடிசெறித்த தோளிணை தத்தித்
தழிஇக் கொண்டு ஊர்ந்தாயும் நீ;
குழிஇ, அவாவினால் தேம்புவார் இற்கடை ஆறா
உவா அணி ஊர்ந்தாயும் நீ! 25
மிகாஅது, சீர்ப்படஉண்ட சிறுகளி ஏர்உண்கண்
நீர்க்குவிட்டு ஊர்ந்தாயும் நீ;

சார்ச் சார் நெறிதாழ் இருங்கூந்தல் நின்பெண்டிர் எல்லாம்
சிறுபாகராகச் சிரற்றாது மெல்ல
விடாஅது, நீ எம் இல்வந்தாய்; அவ்வியானை 30
கடாம்அம் படும் இடத்து ஓம்பு.”

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனைத், தலைவி தாழ்த்த காரணம் என் என, யானை ஊர்ந்தேன் என அவன் கூற, “நீ ஊர்ந்த யானை பரத்தையே!” எனப் புலந்து கூறி, அவனை அவள் நெருக்கியது இது.

1. அன்னை - அத்தகைய; 2. ஒறுக்குவேன் —வருந்துவேன்; 3. சிறுகாலை - விடியற்காலம்; 5. சமனாக - இருவரையும் ஒன்றாக மதிக்கும்; 10. நீறு - பொடி; ஆடி - பூசி; நறா - கள்; 11. அவிர் - ஒளிவீசும்; ஓடை - நெற்றிப்பட்டம்; 12. கோடு - தந்தம்; 13. தோட்டி - அங்குசம்: குழை - மகரக்குழை; 14. உத்தி - திருமகள் உருவம் பொறித்த தலையணி; பருபம் - கழுத்தில் இடும் மெத்தை; 15. ஏய்க்கும் ஒக்கும்; 16. நகர்-வீடு; வெளில் யானை கட்டும் இடம்; 17. தகை-அழகு; தட்டி-தடுத்து; 18. தொடர்-சங்கிலி; வலந்து - கட்டுண்டு; படர் செய்யும் துன்பம் தரும்; 20. நலம்-நல்ல பண்பு களை; கவளம் கொள்ளும்-கவளமாக உண்ணும்; 22. கெழீஇ - சேர்ந்து; 24. தேம்புவார் வருந்துவார்; ஆறா-வழியாகக் கொண்டு; 25. உவா-யானை; இளைய மகளிர் எனும் இரு பொருள் உடைத்து; 26. சிறுகளி சிறிய மதம்; ஏர்உண் கண் அழகிய மை தீட்டிய கண்; நீர்க்குவிட்டு யானைக்கு ஆம் கால் நீராடவிட்டு; மகளிர்க்கு ஆம் கால் - அவள் கண் நீர் சிந்தவிட்டு; 28, பெண்டிர்-பரத்தையர்; 29. சிறு பாகராக-பாகர் ஏற மாட்டாது தொழில் குறையுடையராம்படி மதம்பட; சிரற்றாது சினங்கொள்ளாவாறு.