மருதநில மங்கை/யாரேம் நினக்கு யாம்

விக்கிமூலம் இலிருந்து

17


யரேம் நினக்கு யாம்

ணவன் பரத்தை வீடு சென்று வாழ்ந்தான். பெற்ற மகனோடு பெருமனைக் கிழத்தியாய் வாழ்ந்தாள் மனைவி. ஒருநாள் மாலை, மகனுக்கு அழகிய ஆடை உடுத்து, அணி பல பூட்டி, ஏவல் மகள் ஒருத்தியை அழைத்து, “ஏடி! இவனை எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபட்டு வருக!” எனப் பணித்து அனுப்பினாள். அவளும், அவனோடே சென்று, கோயிலை வலம் வந்து வணங்கி வெளியே வந்தாள். வந்த அவளையும் அவள் கையில் தவழும் அம்மகனையும் கண்டாள் ஓர் அழகி. அவள் ஒரு பரத்தை. அம்மகனைப் பெற்ற தந்தை முதன் முதலாகக் காதலித்துக் கைப்பிடித்த பரத்தை. மிகவும் இளமைப்பருவம். தக்க இன்ன, தகாதன இன்ன என்று எண்ணிப் பார்க்கும் அறிவு வாய்க்காத அத்துணை இளம் பருவம். செல்லக் கூடிய இடம் இது, செல்லலாகா இடம் இது எனப் பாராது, வேண்டிய இடமெங்கும் திரிந்து விளையாடும் பருவம். அவள், தன் போலும் பருவம் வாய்க்கப் பெற்ற மகளிர் சிலரோடு கூடி, மணல் வீடு கட்டியும், மரப்பாவைக்கு மனம் செய்தும் விளையாடிக் கொண்டிருந்தாள் ஒருநாள். அவளை அந்நிலையில் கண்டு காதல் கொண்டான் அம்மகனைப் பெற்ற அவ்விளைஞன். அவளை வதுவை அயர்ந்து அவளோடு சிலநாள் மகிழ்ந்து வாழ்ந்தான். பின்னர் அவளையும் கைவிட்டுச் சென்றான். அன்றுமுதல் அவள் அவன் நினைவால் வருந்திக் கிடந்தாள். இவ்வகையால், அம்மகனுக்கு அவளும் ஒரு தாயானாள். அதிலும் முதல் தாயாம் முறைமை உற்றாள். அவள் ஏவல் மகள் ஏந்திச் சென்ற அம்மகனைக் கண்டாள். அவன் பால் அன்பு சுரந்தது. அவனைத் தன் கையில் வாங்கிக் கொண்டாள். அவள் இன்னள் என்பதை, அப்பணிப் பெண் அறிவாளாதலின், மறுக்காது அளித்து அவள் பின் சென்றாள். மகனைப் பெற்ற பரத்தை, வீட்டிற்குச் சென்றாள். அழகிய அணிபல பூட்டிப் பாராட்டினாள். தன் முன்னிறுத்தி, ‘மகனே! நான் கண்டு மகிழச், சிறிதே உன் நகைமுகம் காட்டு!’ என்றாள். அவனும் அவ்வாறே நகைத்து மகிழ்ச்சியூட்டினன். அவனையும், அவன் நகை முகத்தையும் கண்ட அவள் கண்முன், அவன் தந்தையே நேர் வந்து நிற்பதுபோல் தோன்ற, அவன் நினைவால், கயிறு அறுந்து முத்து உதிரும் காட்சிபோல், அவள் கண்கள் நீரைச் சொரிந்தன. மேலும் அம்மகன் ஈங்கு இருந்தால், தன் கவலையும் கண்ணீரும் பெருகும் எனக் கருதினாள். உடனே மகனை எடுத்து, ஏவல் மகள்பால் அளித்து “எடுத்துச் செல்க!” என விடுத்தாள்.

ஏவல் மகள், மகனை எடுத்துக் கொண்டு, வெளியே வந்தாள். தன் மனை நோக்கிச் செல்லத் தொடங்கினாள். சில வீடுகளைக் கடந்து வந்ததும், தன் வீட்டின் வாயிற்கண் நின்று, யாரையோ எதிர்பார்த்திருந்த ஓர் இளம்பெண், அம்மகனைப் பார்த்து விட்டாள். அவளும் ஒரு பரத்தையே. அம்மகனைப் பெற்ற இளைஞன் உறவை ஒரு காலத்தே பெற்று, இப்போது இழந்து வருந்தியிருப்பவள். அக்காதல் நோய் அலைக்க அழுது வாழ்பவள். என்றும் அவன் நினைவால் இனைபவள். அவள் தன் காதலன் பெற்ற மகனைத் தன் தெருவில் கண்டதும், பாய்ந்தோடி வந்து ஏந்திக் கொண்டாள். தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். அவன் வாயில் பலமுறை முத்தங் கொண்டாள். மகிழ்ச்சி தாங்கவில்லை. மகனோடு தன் மனையுள் புகுந்தாள். குழந்தைகளுக்கு அணியும் அணி வகைகளுள் சிறந்த பல அணிகளை ஆராய்ந்து எடுத்து அவனுக்கு அணிவித்தாள். திடுமென அவள் சிந்தனையில் ஒரு கலக்கம். “இத்தனையும் செய்கிறோமே, இவனொடு நமக்கு என்ன உறவு? இவனுக்குத் தாயாம் தகுதி எனக்கு ஒருகாலத்தே இருந்தது. அன்று இவன் தந்தை என்னோடு உறவு கொண்டிருந்தான். அவன் இன்று என்னை மறந்துவிட்டான். இந்நிலையில், அவன் பெற்ற இவனொடு எனக்கு உறவு ஏது?” என்று எண்ணி வருந்தினாள். மகன் மாண்புடையனாதல் கண்டு மகிழ்ந்தாள். ஆனால், அவன் தந்தையின் குணம் இவன் பாலும் அமைந்து விடுதல் கூடாதே என்ற எண்ணம் எழ மனங் கலங்கினாள். காலம் கடந்தது. மகனை மீண்டும் எடுத்து முத்தங் கொண்டாள். “மகனே! என் கண்கள் சிவக்க அழுது வருந்துமாறு என்னைக் கைவிட்டுப் போன கொடியோனாய உன் தந்தைபோல், நீயும் ஆகிவிடாதே! உன்னைக் காதலிக்கும் மகளிரை வருந்த விடும் வழக்கத்தை அவன் பால் கற்றுக் கொள்ளாதே!” எனக் கண்ணீர் மல்கக் கூறி, அவனை அவ்ஏவல் மகள்பால் கொடுத்து அனுப்பினாள்.

மகனோடு, அவன் மனை நோக்கிச் செல்லும் அவளைக் கண்டாள் மற்றோர் இளம் பரத்தை. அம் மகனைப் பெற்ற தந்தையோடு அப்போது உறவுடையாள் அவள். அச்செருக்கால், அம்மகன் தாயை வெறுப்பவள். அவன் தாய், தன் காதலன் மனைவி, அவன் தன்னோடு உறவு கொள்வதைப் பொறாது காய்பவள் என்ற கருத்தால், அவன் தாயொடு பகை கொண்டு வாழ்பவளேனும், அவன் தன் காதலன் பெற்ற கண்மணியாதலின், அவனைத் தன் மனைக்கு அழைத்துச் சென்று, அவனொடு சிறிது நேரம் மகிழ்ந்திருந்து, அவனை அனுப்பினாள். இறுதியில் அவனை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் பணிப்பெண்.

மகனைக் கோயிலுக்கு அனுப்பிய தாய், அவன் நெடிது நேரம் கழியவும் வாரானாகவே வருந்தினாள். வாயிற்கண் சென்று அவன் வருகையை எதிர்நோக்கிக் காத்துக்கிடந்தாள். இறுதியில் அவனோடு வந்து சேர்ந்தாள் ஏவல் மகள். அவள்மீது மாறாச்சினம் கொண்டாள் தாய். “ஏடி! கோயிலுக்குச் சென்று வர இத்தனை நாழிகை ஆகாது. நீ கோயிலுக்கு மட்டும் சென்று வரவில்லை. இவனொடு நீ எங்கெங்கோ சென்று திரிந்து வந்துளாய். அதனாலேயே இத்தனை நாழிகை. இவனைக் கூட்டிச் சென்ற இடம் எதையும் ஒளியாமல் என்னிடம் கூறு,” எனக் கடிந்துரைத்தாள்.

தாயின் கோபத்தைக் கண்டாள் அவ்வேவல் மகள். நாழிகை கடந்தது என்பதற்கே இவ்வாறு சினப்பவள், இவனை அழைத்துச் சென்ற இடங்களைக் கூறினால் நம்மை உயிரோடு விடாள் என அஞ்சினாள். ஆயினும் உண்மையை மறைப்பதும் ஆகாது என எண்ணினாள். அதனால், “தாயே! சென்ற இடங்களைக் கூறகிறேன். சினவாது அமைதியாகக் கேட்பாயாக என வேண்டிக் கொள்கிறேன்.” என அஞ்சி அஞ்சிக் கூறினாள். அவள் அச்சம் கண்ட தாய், “உன்னைக் கோபித்து ஒன்றும் செய்யேன். உண்மையைக் கூறு,” என்றாள்.

அப்பெண் கோயிலுக்குச் சென்றது முதல் நடந்த நிகழ்ச்சிகளை முறையாகக் கூறிக் கொண்டே வந்தாள். அவள் கூறுவனவற்றை அமைதியாகக் கேட்டுவந்த தாய், அவள் மகன் புதுப்பரத்தை இல்லுள் புகுந்தான் என்று கூறக்கேட்ட உடனே கடுங்கோபம் கொண்டாள். அவள் கண்கள் சிவந்தன. புருவங்கள் வளைந்து நிமிர்ந்தன. மகனைப் பிடித்து இழுத்து முன் நிறத்தினாள். “ஏடி! ஓடி ஒரு கோல் கொண்டுவா!” என அவளை விரட்டினாள். தாயின் செயல்கண்டு நடுங்கி நிற்கும் அம்மகனை, “ஏடா! அவள் யார்? உனக்கு என்ன உறவு? அவள்பால் நீ செல்லலாமோ? பார்த்த உணவைப் பருந்தடித்துச் செல்வது போல், நான் இங்கு வருந்தி வாடுமாறு, உன் தந்தையைக் கைப்பற்றித் தன் வயத்தளாக்கிக் கொண்ட கொடியவள் அவள். அவனை இமைப் பொழுதும் பிரியாது, அவனோடு எப்போதும் புணர்ந்து, அவன் மார்பிலும், தோளிலும், எள்ளிருக்கும் இடமும் விடாமல், தன் வளையாலும், தொடியாலும் வடுக்கள் பல ஆக்கியவள் அக் கொடியாள். அவள் அத்தகையள் என அறியாது ஆங்குச் சென்ற உன்னை அலைப்பேன், அறக்கொடியவனே!” என்று கூறிக் கோலை ஓச்சினாள்.

தாயின் கடிய கோபத்தையும், அவள் கைக் கோலையும் கண்டு, அஞ்சி நடுநடுங்கிப் போனான் அம்மகன். கண்கள் நீர் மல்க, வாய் திறந்து அழத் தொடங்கினான். மகன் அஞ்சிய நிலைகண்டாள் தாய். கணவன் மீது கொண்ட கோபத்தால், இவனைக் கடிந்து கொண்டேனே என எண்ணி வருந்தினாள். உடனே மகனை வாரி எடுத்தாள். கண்ணீரைத் துடைத்தாள். களிப்பூட்டினாள். அழுகை ஓய்ந்தான் அவனும். அவனை அழைத்துச் சென்று அவனோடு ஒருபால் அமர்ந்தாள். அவனை நோக்கி, “மகனே! நடந்ததை மறந்துவிடு. அதுபோலும் இடங்களுக்கு இனிச் செல்லாதே. உன் தந்தையை இழந்து, நம்போல் வருந்தி வாடுவார் வீட்டிற்கு வேண்டுமானால் செல். இனி, உன்னை நானும் வீட்டை விட்டு வெளியே அனுப்பேன். நீயும் போதல் கூடாது!” என்று அறிவுரை கூறி அணைத்துக் கொண்டாள்.

“ஞாலம் வறம்தீரப் பெய்யக் குணக்குஏர்பு
காலத்தில் தோன்றிய கொண்மூப்போல் எம்முலை
பாலொடு, வீங்கத் தவநெடிது ஆயினை;
புத்தேளிர் கோட்டம் வலம்செய்து இவனொடு
புக்கவழி எல்லாம் கூறு 5

கூறுவேன்; மேயாயே போலவினவி வழிமுறைக்
காயாமை வேண்டுவல்யான்.
காயேம்,

மடக்குறு மாக்களோடு ஒரை அயரும்
அடக்கம்இல் போழ்தின்கண் தந்தை காமுற்ற 10
தொடக்கத்துத் தாய்உழைப் புக்காற்கு, அவளும்
மருப்புப்பூண் கையுறை யாக அணிந்து
‘பெருமான்! கமுகம் காட்டு!’ என்பாள், கண்ணீர் சொரிமுத்தம் காழ்சோர்வ போன்றன; மற்றும்,

வழிமுறைத் தாய்உழைப் புக்காற்கு அவளும், 15
மயங்கு நோய் தாங்கி, மகன்எதிர் வந்து
முயங்கினள்; முத்தினள் நோக்கி நினைந்தே
“நினக்கு யாம் யாரேம் ஆகுதும்?” என்று

வனப்புறக் கொள்வன நாடி அணிந்தனள்;
ஆங்கே, “அரிமதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் 20
பெருமான் பரத்தைமை ஒவ்வாதி!” என்றாள்,
அவட்கு இனிதாகி விடுத்தனன், போகித்
தலைக்கொண்டு நம்மொடு காயும் மற்றிதோர்
புலத்தகைப் புத்தேள்இல் புக்கான், அலைக்குஒரு

கோல்தா, நினக்கு அவள் யாராகும்? எல்லா! 25
வருந்தியான் நோய்கூர, நுந்தையை என்றும்
பருந்து எறிந்தற்றாகக் கொள்ளும்; கொண்டாங்கே,
தொடியும் உகிரும் படையாக, நுந்தை
கடியுடை மார்பில் சிறுகண்ணும் உட்காள்

வடுவும் குறித்தாங்கே செய்யும், விடு இனி? 30
அன்ன பிறவும்; பெருமான்! அவள்வயின்
துன்னுதல் ஒம்பித் திறவதின் முன்னிநீ
ஐயம் இல்லாதவர் இல்ஒழிய, எம்போலக்

கையாறு உடையவர் இல்அல்லால் செல்லல்;
அமைந்தது இனி நின் தொழில்.” 35

பூத்தேளிர் கோட்டம் வழிபடச் சேடியரோடு சென்ற மகன், கணவன் காதலிக்கும் பரத்தையர் இல்லிற்குச் சென்று வந்தமை அறிந்த தாய் அவனைச் சினந்து கூறியது இது.

1. ஞாலம்–உலகம்; வறம்தீர–வறுமை நீங்க; குணக்கு–கிழக்கு; 2. கொண்மூ–மேகம்; 3. தவநெடிது ஆயினை–மிகவும்– நீட்டித்தாய்; 4. புத்தேளிர் கோட்டம் – கோயில்; 6. மேயாயே போல–விரும்பினவள் போல்; 10. மடக்குறுமாக்கள்–மடப்பம் பொருந்திய இளமகளிர்; 13. தொடக்கத்துத் தாய்–தந்தையின் முதற் காதலி; 16. மயங்குநோய்–காதலால் மயங்கும் நோய்; 17. முயங்கினள்–தழுவினள்; 23, தலைக்கொண்டு–நம்மோடு மாறுபாடு கொண்டு; காயும்–சினக்கும்; 24. புலத்தகை–புலக்கும் இயல்புடைய; புத்தேள்–புதியாள்; 29. சிறுகண்ணும்–சிறிய இடமும்; உட்காள்– அஞ்சாது. 32. துன்னுதல் – நெருங்குதல்; 33. ஐயம் இல்லாதவர்–காதலன் வருவானோ வாரானோ எனும் ஐயம் கொள்ளாது வருவான் என உறுதியாக நம்பும் பரத்தையர்; 34. கையாறு உடையவர்–காதலனை இழந்து துன்புறுவார்; 35. அமைந்தது முடிந்தது.