மருதநில மங்கை/வெந்த புண்ணில் வேல்
18
அரண்போல் பெரிய மனை. அளந்து காண மாட்டாப் பெருஞ்செல்வம். வருவார்க்கு வாரி வாரி வழங்கவும் வற்றாத பெரிய சோற்று மலை. இன்பத்தின் ஊற்று என விளங்கும் ஓர் இளமகன். வளமும் வனப்பும் மிக்க இவ்வாழ்வு வாய்க்கப் பெற்றும் வருந்திக் கிடந்தாள் ஒருத்தி, அவள் கணவன், அவளோடு அவ்வீட்டில் வாழும் விருப்பம் இலனாய்ப் பரத்தை ஒருத்திபால் ஆசை கொண்டு, அவளோடு அவள் மனையில் வாழ்ந்திருந்தான். அதனால் மனம் நொந்த அவன் மனைவி, தன் மகன் முகம் காணும் மகிழ்ச்சியால் ஒருவாறு உயிர் தாங்கி யிருந்தாள்.
ஒருநாள் மாலை, தன் மகனை நன்கு அலங்கரித்துச், சேடி ஒருத்திபால் அளித்து, “இவனோடும் தேர் ஏறிச் சென்று, ஊர்ப் பொது இடத்தே, இளஞ்சிறுவர்கள் ஆடுதற்கு என அமைந்துள்ள ஆடிடத்தே, இவனைச் சிறிது பொழுது ஆடவிட்டு அழைத்து வருக!” எனப்பணித்துப் போக்கினாள். அவள் அவனை அழைத்துக் கொண்டு ஆடிடம் அடைந்தாள். ஆங்கு பரப்பிய புது மணலில் அவன் சிறிது பொழுது ஆடி மகிழ்ந்தான். சிறிது ஆண்டு முதிர்ந்த இளம் சிறுவர், பனங்காய்களைப் பறித்துக் கொணர்ந்து, அவற்றைக் கொடிகளை முறுக்கிப் பண்ணிய கயிற்றில் பிணைத்து, ஈர்த்து ஆடி மகிழ்ந்தனர். அதையும் கண்டு மகிழ்ந்தான் அவ்விளமகன், பொழுதும் மறைந்தது. மேலும் இருந்தால் தாய் சினப்பள் எனக் கருதி, அவனைத் தேரில் ஏற்றிக் கொண்டு வீடு திரும்பினாள் சேடி.
அவன் தேர் ஊர்ந்து செல்லும் காட்சியைச் சாளரத்தின் அகத்தே இருந்து காணும் அத் தெருவாழ் மக்கள், “ஆலமர் செல்வனின் இளைய மகனாம் முருக வேளுக்கு, ஊரார் விழா எடுக்கும் நாள் வந்துவிட்டதோ! விழாவின் முதல் நாள் அன்று அவன் உலாவரும் காட்சிதானோ இது!” எனக் கருதிக் களித்தனர். அவ்வாறு அவனைப் பார்த்து மகிழ்ந்தாருள் ஒரு பரத்தையும் இருந்தாள். அண்மையில் வந்த அவன் தேரைக் கண்ட அவள், அத் தேரில் இருப்போன் இன்னான் என்பதை அறிந்து கொண்டாள். அவன், தன் காதலன் ஈன்ற கான்முளை என்பதைக் கண்டு கொண்டவுடனே, தன் காலில் கட்டிய சிலம்பொலிக்க ஓடி, அவன் தேரை அடைந்தாள். அவள் வருகைகண்டு தேரும் நின்றது. அவள் அவனை எடுத்து அணைத்து முத்தம் கொண்டு, “என் செல்வ மகனே! உன் கண்ணழகைக் கண்டும், நெற்றியைத் துடைத்தும், கன்னத்தைக் கைகளால் தடவியும் களிக்கும் உன் தாய் முன், அவர் மனம் மகிழுமாறு, நீ உன் கைகளால் செய்யும் சிறு குறும்புகளை, நான் காணச் செய்து என்னைக் களிப்பூட்ட, இன்று இரவு என் இல்லில் தங்கிச் செல்வையோ? நீ அவ்வாறு தங்குவையாயின், என் புது நலம் விரும்பி என்னைக் காதலித்து வந்து, அந் நலத்தை யுண்டு, பின்னர் என்னை மறந்து பிரிந்து வாழும் நாணற்ற நல்லோனாய உன் தந்தையால் நான் உற்ற நோயை மறந்து மகிழ்வேன். ஆகவே, மகனே! என் இல் வந்து வாழ வருக!” எனக்கூறி வழிமறித்து நின்றாள். அவளை மதியாது, அவள் கூறுவனவற்றைக் கேளாது வந்து விடுதல் அம்மகனால் இயலாது போயிற்று. அதனால், அங்குத் தங்கி, அவள் கூறுவன கேட்டுப் புறப்பட்டான். அதனால் சிறிது காலம் கடந்தது.
வீட்டில் மகனை விளையாட அனுப்பிய தாய்க்கு, அவனைக் காணாதிருக்க முடியவில்லை. அவன் வருகையை விரைவில் எதிர் நோக்கினாள். ஆனால் நாழிகை பல கழியவும் அவன் வந்திலன். பலமுறை வெளியே வந்து வீதியை நோக்கினாள். இறுதியில் வாயிற் கதவில் சாய்ந்து அங்கேயே நின்று அவனை எதிர் நோக்கியிருந்தாள். மேலும் மகன் பால் உண்டு நாழிகை பல கழியவே, அவள் மார்பு முலையில் பால் மிகுந்து துன்புறுத்திற்று. இவ்வாறு அவன் வருகையைக் காணாது துடிதுடித்துக் கிடந்தாள். இறுதியில் தேர் வந்து நின்றது. மகனை இறக்கி அழைத்துக் கொண்டு மனையுள் புகுந்தாள் சேடி.
தாய் சேடியைப் பிடித்து நிறுத்தினாள். “ஏடி, நான் வழிமேல் விழி வைத்து வருந்திக் கிடக்கிறேன். நான் இத்தனை நேரம் வாடிவருந்த, நீ வரத் தாமதித்தது ஏன்?" எனக் கேட்டுச் சினந்தாள். தாயின் சினங்கண்டு அஞ்சிய சேடி, “தாயே! அதற்குக் காரணம் இதோ நிற்கும் இக்கள்வனே!” என்று மகனைச் சுட்டிக் காட்டிவிட்டு, நடந்ததை நடந்தவாறே உரைத்து, “இவன் அங்கு அத்தனை நேரம் தங்கியதால் காலங் கடந்ததல்லது என்னால் நேர்ந்த தவறு எதுவும் இல்லை!” என்று கூறி உட்சென்றாள்.
சேடி கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தான் அவ் வீட்டின் தலைவன். கணவனை அந்நிலையில் காணவே, அவள் சினம் அளவு கடந்து பெருகிற்று. மகன் தலையில் புதிய மலர் சூட்டியிருப்பதைக் கண்டாள். அது அப் பரத்தை சூட்டிய மலர் என அறிந்து, அதை எடுத்து எறிந்தாள். “மகனே! இனி, இவ்வாறு உனக்கும், உன் தந்தைக்கும் உறவுடையளாய அவள் சூட்டும் மலர் அணிந்து ஈண்டு வாரற்க!” என்று கூறி வருந்தினாள், அந்நிலையில், தம் காதலியர் பண்ணிய புணர்ச்சிக் குறிகள் விளங்கும் மேனியோடு வந்து நிற்கும் காதலனைக் காணவே, அவள் கோபம் கொடிய துயராக மாறிற்று. “மகனே! தன் காதலியின் மனை புகுந்து, அவள் சூட்டிய மாலையோடு வந்து தந்த நோயினும், அவன் தந்தை அக்காதலியைக் கூடிய கோலத்தோடே வந்து நின்று தரும் நோய் பெரிதாம். அது வெந்த புண்ணில் வேல் எறிந்தாற் போல் வருத்துகிறது என்னை!” என வெறுத்துக் கூறி வாயடைத்துக் கிடந்தாள். -
“பெருந்திரு நிலைஇய, வீங்குசோற்று அகன்மனைப்,
பொருந்து நோன்கதவுஒற்றிப், புலம்பி, யாம் உலமர
இளையவர் தழுஉஆடும் எக்கர்வாய் வியன் தெருவின்
விளையாட்டிக் கொண்டு வரற்கு எனச் சென்றாய்.
உளைவுஇலை; ஊட்டல் என் தீம்பால் பெருகும் அளவெல்லாம் 5
நீட்டித்த காரணம் என்?
கேட்டி:
பெருமடல் பெண்ணைப் பினர்தோட்டுப் பைங்குரும்பைக்
குடவாய்க் கொடிப்பின்னல் வாங்கித் தளரும்
பெருமணித் திண்தேர்க் குறுமக்கள் நாப்பண் 10
அகன்நகர் மீள்தரு வானாகப், புரிஞெகிழ்பு,
நீல நிரைப்போது உறுகாற்கு உலைவன போல்
சாலகத்து ஒல்கிய கண்ணர், உயர்சீர்த்தி
ஆல்அமர் செல்வன் அணிசால் மகன் விழாக்
கால்கோள் என்று ஊக்கிக், கதும் என நோக்கித் 15
திருந்தடி நூபுரம் ஆர்ப்ப இயலி, விருப்பினால்,
கண்ணும் நுதலும் கவுளும் கவ்வியார்க்கு
ஒண்மை எதிரிய அங்கையும் தண்ணெனச்
செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து, ‘இவ்இரா
எம்மொடு சேர்ந்து சென்றிவாயால்; செம்மால்! 20
நலம் புதிதுஉண்டு உள்ளா நாண்இலி செய்த
புலம் எலாம் தீர்க்குவேம்மன்!’ என்று இரங்குபு
வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள, மாற்றாத
கள்வனால் தங்கியது அல்லால், கதியாதி
ஒள்இழாய்! யான் தீது இலேன், 25
எள்ளலான், அம்மென் பணைத்தோள் நூமர் வேய்ந்த கண்ணியோடு
எம்இல் வருதியோ? எல்லா! நீ தன்மெய்க்கண்
அம்தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி,
முந்தை இருந்து மகன்செய்த நோய்த்தலை,
வெந்த புண் வேல் எறிந்தற்றால், வடுவொடு 30
தந்தையும் வந்து நிலை.
விளையாடப் போன மகன், மீண்டு வருங்கால், அவன் தந்தை காதலியின் மனைபுகுந்து வந்தான் என்பதறிந்து, தலைவி அவனைக் கண்டிக்கும்போது, தலைவனும் வரக்கண்டு, அவள் வருந்திக் கூறியது இது.
1. வீங்கு–பெரிய; 2. நோன்கதவு–வலியகதவு; உலமரவருந்த; 5. உளைவிலை–கவலையின்றி; ஊட்டல் – ஊட்டப்பெறாமல்; தோடு – இலை; குரும்பை–பனங்காய்; 9. குடவாய்–குடம் போன்ற வாயுடைய (காய்); வாங்கி–இழுத்து; 10, நாப்பண்–நடுவே; 11. புரிநெகிழ்பு–மலர்ந்து ; 12. நீல நிரைப்போது–வரிசையாக நிற்கும் நீல மலர்கள்; உறுகாற்று–வீசும் காற்றிற்கு; உலைவன போல்–அசைவனபோல்; 13. சாலகம்சாளரம்; ஒல்கிய–தளர்ந்த; சாளரத்திற்கு அப்பால் நிற்கும் மகளிரின் சுழலும் கண்கள், காற்றால் அசையும் நீலப்போதுகளின் வரிசை போல் தோன்றும். 15. கால்கோள் தொடக்கம்; 16. நூபுரம் சிலம்பு; இயலி நடந்து; 21. உள்ளா – நிலையாத; மறந்துபோன; 23. வேற்று ஆனாத்தாயர்–வேற்றுத்தாய், ஆனால் அன்பு குறையாத தாய்; 25. கதியாதி–சினவாதே; 26. எள்ளலான்–இகழ்தலால்; அம்–அழகிய தீம்–இனிய; கலம்–அணிகலன்கள் அழுத்திச் செய்த வடு; 29. நோய்த்தலை–நோய்க்கு மேலும்.