மருதநில மங்கை/யானே தவறுடையேன்

விக்கிமூலம் இலிருந்து

19


யானே தவறுடையேன்!

தெருவுதோறும் தேவ கோட்டம் எனக் கூறுமாறு கோயில்கள் மலிந்த ஒரு மாநகரின் செல்வக் குடியில் வாழ்ந்திருந்தாள் ஒரு பெண். பால் மனம் மாறாப் பருவம் வாய்ந்த தன் மகனோடு மகிழ்ந்து வாழ்ந்திருந்தாள். மகனின் மலர்ந்த முகம் கண்டும், அவன் மழலை மொழி கேட்டும் மகிழ்ந்திருந்தாளேனும், தன்னைக் கைவிட்டுக் கணிகையர் பின் திரியும் தன் கணவன் நிலைகுறித்துக் கண்ணwர் உகுத்துக் கலங்கிக் கிடந்தாள். அவள் ஒருநாள் தன் மகனை அழகு செய்து, சேடி ஒருத்திபால் அளித்து, ஊரில் உள்ள கோயில்களுக்கெல்லாம் சென்று வழிபாடாற்றி வருமாறு அனுப்பினாள். குடை விரித்து, அதன் நிழலில் செல்லும் தன் மகனின் தோற்றம், ஒரு இலை ஓங்கி உயர்ந்து நிற்க, அவ்விலையடியில் மலர்ந்திருக்கும் தாமரை மலர் போல் தோன்றக் கண்டு, மகிழ்ந்து, அவன் மறையும் வரை பார்த்திருந்துவிட்டு, உள்ளே சென்றாள்.

மகனை அழைத்துச் சென்ற சேடி, தாய் கூறியவாறே, கோயில்கட்கு எல்லாம் போய்க் கடவுளரை வணங்கினாள். பின்னர் அவனோடு வீடு திரும்பினாள். அவர்கள் மீண்டு வரும் வழி ஒரு பரத்தையர் தெரு. அத் தெருவில், அவன் தந்தையின் அன்பைப் பெற்ற பரத்தையர் பலர் வாழ்ந்திருந்தனர். அவர்கள், சேடியோடு செல்லும் அவனைக் கண்டனர். அவன் தந்தை ஒரு காலத்தில் தம்மைக் காலித்துத், தம்மோடு வாழ்ந்து, தம் நலத்தை நுகர்ந்துவிட்டு, இப்போது தம்மை அறவே மறந்து கைவிட்டுச் சென்ற கொடியோனாயினும், அவன்பால் அவர் கொண்ட காதல் குறையாமையால், அவன் மகனைக் கண்டவுடனே, அக்காதல் உணர்வு உயிர்பெற்று ஓங்க, அம்மகன்பால் பேராசை கொண்டனர். அவ்வாசை மிகுதியால், தம் வீடுகளை விடுத்து வெளியே ஓடிவந்தனர். அவனைச் சூழ்ந்து நின்று, தந்தை அழகே தன் அழகாகக் கொண்ட அவன் பேரழகைக் கண்டு மகிழ்ந்தனர். பின்னர்த் தாம் அணிந்த அணிகளுள் சிறந்தனவும், அவனுக்கு ஏற்றனவுமாய அணிகளை ஆராய்ந்து, அவனுக்கு அணிவித்து அகம் மகிழ்ந்தனர்.

மகன் சென்று நேரமாகி விட்டது. காலம் கடக்கக் கடக்க அவள் கவலை பெரிதாயிற்று. மேலும் அவன் பால் உண்ணும் நேரமும் போய்விட்டது. பால் தாராமையால், பால் அவள் மார்பில் குடம் போல் கட்டி விட்டது. அதைப் பிறர் பாராவாறு பலமுறை தன் கைகளால் அழுத்தித் தேய்த்து விட்டாள். அப்படியும் அது அடங்கவில்லை. இவ்வாறு வருந்தி, அவள் மகனை எதிர்நோக்கி இருந்தாள். அந்நிலையில், பரத்தையர் அணிவித்த அணியோடு, அவள் மகன் வந்து சேர்ந்தான். மகனைக் காலங் கடந்து அழைத்து வந்து சேடியைச் சினந்தாள் தாய். “கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வர இத்தனை காலம் வேண்டியதில்லை. கோயிலுக்குச் செல்லும் வழியில், இவள் தந்தை செல்லும் பரத்தையர் வீடுகள் உள என்பதை அறிவேன். நீ இவனை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கே சென்று வந்துளாய். என் கட்டளையை நீ மீறிவிட்டாய். அப்பரத்தையருள் எவள் வீட்டிற்கு இவனைக் கூட்டிச் சென்றாய்? அதை ஒளியாமல் உரை!” எனச் சினந்து வினவினாள்.

தலைவியின் சினங்கண்டு நடுங்கிய சேடி, பரத்தையர் தெருவில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒன்று விடாது உரைத்தாள். தன் மகன், பரத்தையர் அளித்த, அதிலும், தன்பால் அன்பற்றுத் திரியும் தன் கணவன் காதலிக்கும் பரத்தையர் அளித்த அணிபூண்டு வந்துளான் என்பது கேட்டு வெறுப்பும் வேதனையும் கொண்டாள். “பரத்தையர் அளித்த அணி பூண்டு வந்த இவனும் ஒரு மகனா? சீ! இவன் மகன் அல்லன்! வெறுத்து ஒதுக்கத்தக்க வீணன் இவன்!” என்று தனக்குள்ளே கூறிக் கலங்கினாள்.

பின்னர், மகனைப் பிடித்து ஈர்த்துத் தன்முன் நிறத்தினாள். “நாடோடிப் பயலே! நடுத்தெருவில், ஊர்ப் பெண்கள், என்னை எள்ளி நகைக்கும் கருத்தோடு, உன் கைவிரலில் இட்ட மோதிரம் எது? அதை எனக்குக் காட்டு!” என்று கடிந்துரைத்தவாறே, அவன் கைவிரலைப் பற்றி, அதில் அணிந்திருந்த மோதிரத்தை நோக்கினாள். நறுமலரின் அழகிய செவ்விதழ்போல் சிவந்த விரலுக்குப் பொருந்துமாறு செறிக்கப் பெற்ற மோதிரத்தைக் கண்டாள். சுறாமீன் உருவம் பொறித்த அம்மோதிரத்தைக் கண்ட அவள், “சுறா காமன் கொடி. அதைப் பொறித்த மோதிரத்தை இவன் கையில் அணிவித்துவிட்ட அப்பரத்தை, ‘இவன் தந்தையை, உன் கணவனை, நான் என் வயமாக்கிக் கொள்வேன். அவன் மார்பில் காமன் கொடியைப் பொறித்து, அவனை என் அடிமையாக்கிக் கொள்வேன்!’ என்று கூறி, எனக்குவிட்ட எச்சரிக்கையன்றோ இது! நான் கண்டு கலங்க வேண்டியவற்றுள் இதுவும் ஒன்று போலும்!” எனக் கூறிக் கண்ணீர் சொரிந்தாள்.

சுறா பொறித்த சிறுவிரல் மோதிரம் கண்டு சினந்தவள், மகன் கையில் புதிய தொடி ஒன்றிருக்கக் கண்டாள். அதைப் பற்றி நோக்கினாள். அது அவள் கணவனுக்குரியது. கணவன் கையில் இருந்த காலத்தில், தான் கண்டு மகிழ்ந்த தொடி, இன்று, அதை அவன் தான் விரும்பும் பரத்தைக்கு அளிக்க, அவள் அதைத் தன் மகன் கையில் அணிவித்து அனுப்பியுள்ளாள் என்பதை அறிய, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாற் போலாயிற்று அவள் நிலை. “நான் கண்டு வருந்த எனக்கு நேர்ந்த இழிநிலைகளுள் இதுவும் ஒன்று,” என நினைத்து வருந்தினாள். தன் காதலன் தன்னை விரும்பித் தனக்கு அளித்த இத்தொடியை, அப்பரத்தை இவன் கையில் சூட்டி அனுப்புவானேன்? அனுப்பிய அவள் கருத்து யாதாம்? என்று சிந்தித்து நின்றாள். “தன்னினும் நான் குறையுடையேன். தன் கணவனைக் காதலிக்கும் தகுதி எனக்கு இல்லை என, என்னை இழித்துப் பேசி இறுமாந்து திரியும் அவள் உணர்ந்து கொள்ளட்டும், அவள் கணவனைக் காதலிக்கும் தகுதி எனக்கும் உண்டு; அவளுக்கு எந்நிலையிலும் நான் தாழ்வுடையளல்லேன் !’ என்பதைக் கூறாமல் கூறி, என்னை எள்ளி இகழும் கருத்தினாலேயே அவள் இதை இவனுக்கு அணிவித்து என்பால் அனுப்பியுள்ளாள். இதுவும் எனக்கு ஏற்பட்ட ஓர் இழிவு போலும்!’ என்று கூறிக் கலங்கினாள்.

தாயின் சொல்லும் செயலும் கண்டு அஞ்சினான் அவ் இளம் மகன். அஞ்ச வேண்டாத காலத்தே அவன் அஞ்சியது காண அவள் வருந்தினாள். தந்தை செய்த தவறினுக்கு மகனைக் காயும் என் மடமையை என்னென்பேன் எனத் தன்னை நொந்து கொண்டாள். உடனே, அஞ்சி அகன்று நிற்கும் மகனை அருகழைத்து அனைத்துக் கொண்டாள்.

‘மகனே! அஞ்சாதே. குற்றம் செய்தவன் நீ அல்லை. இவ் அணிகளை உனக்குத் தந்த அப்பரத்தையரும் தவறு செய்தவர் அல்லர். தவறு உன் தந்தை உடையதோ என்றால், அதுவுமில்லை. இளவேனிற் காலத்தில், ஆற்றில் தெளிந்தோடும் தண்ணீர் போன்றவன் உன் தந்தை அவன் எல்லோர்க்கும் இனியன். அவன் யாருக்கும் எதை வேண்டுமாயினும் அளிக்கும் உரிமை உடையான். ஆகவே, அப்பரத்தையர்க்கு இத்தொடி அளித்த அவன் செயலும், குற்றம் உடைத்தன்று. ‘இதை இவனுக்கு அளித்தவர் யார்?’ என்று கேட்டு, அதனால் இத்தனையும் அறிந்து, வருந்தும் நானே தவறுடையள். நான் அதைக் கேட்டதே தவறு. ஆகவே, மகனே! அது குறித்து நீ அஞ்சாதே!” என்று கூறி, . அவன் அச்சத்தை அகற்றி அணைத்துக் கொண்டு அழுது கிடந்தாள்.

“உறுவளி தூக்கும் உயர்சினை மாவின்
நறுவடி ஆர்இற் றவைபோல் அழியக்
கரந்துயான் அரக்கவும், கைநில்லா விங்கிச்,
சுரந்தஎன் மென்முலைப்பால்பழு தாக, நீ

நல்வாயில் போத்தந்த பொழுதினான், எல்லா! 5
கடவுட் கடிநகர் தோறும் இவனை
வலங்கொளீஇ வாஎனச் சென்றாய், விலங்கினை;
ஈரம்இலாத இவன் தந்தை பெண்டிருள்
யார்இல் தவிர்ந்தனை? கூறு.

நீருள், அடைமறை ஆய்இதழ்ப் போதுபோல் கொண்ட 10
குடைநிழல் தோன்றும் நின் செம்மலைக் காணூஉ,
‘இவன் மன்ற, யான்நோவ உள்ளம் கொண்டு, உள்ளா
மகன்அல்லான் பெற்ற மகன்’ என்று அகன் நகர்
வாயில் வரை இறந்து போத்தந்து, தாயர்

தெருவில் தவிர்ப்பத், தவிர்ந்தனன், மற்று அவர் 15
தத்தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு
ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார்; பிறன்பெண்டிர்
ஈத்தவை கொள்வானாம் இஃது ஒத்தன்’ சீத்தை!
செறுத்தக்கான் மன்ற பெரிது.

சிறுபட்டி! ஏதிலார் கை எம்மை எள்ளுபுநீ தொட்ட 20
மோதிரம் யாவோ? யாம் கான்கு.
அவற்றுள், நறாவிதழ் கண்டன்ன செவ்விரற்கு ஏற்பச்
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்;
செறியாப் பரத்தை இவள் தந்தை மார்பில்
பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல் என்பது தன்னை 25
அறிஇயச் செய்த வினை.

அன்னையோ! இஃது ஒன்று,
முந்தைய கண்டும் எழுகல்லாது என்முன்னர்

வெந்த புண்வேல் எறிந்தற்றா; இஃது ஒன்று!
தந்தை இறைத்தொடி மற்று இவன் தன்கைக்கண் 30
தந்தார் யார் எல்லாஅ! இது?
இஃது ஒன்று; எனஒத்துக் காண்க பிறரும் இவற்கு என்னும்
தன்னலம் பாடுவி தந்தாளா? நின்னை
இது தொடுகு என்றவர் யார்?

அஞ்சாதி; நீயும் தவறிலை; நின்கை இதுதந்த 35
பூ எழில் உண்க ண் அவளும் தவறிலள்;
வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார்?
மேல்நின்றும் எள்ளி, இது இவன் கைத்தந்தாள்

தான் யாரோ என்று வினவிய, நோய்ப்பாலேன்
யானே தவறுடையேன்,” 40

கோயில் வலம் செய்து வரச் சேடியொடு சென்ற மகன், வழியில் பரத்தையர் சூட்டிய அணியோடு வரக்கண்ட தலைவி, தனக்குள்ளே நொந்து கூறியது இது.

1. உறுவளி பெருங்காற்று; தூக்கும்–அசைக்கும்; 2. வடி–பிஞ்சு: ஆர் இற்று–காம்பற்று; 3. அரக்கவும்–அழுத்தித் தேய்க்கவும்; 5. போத்தந்த–போன; 6. கடவுள் கடிநகர்–கோயில்; 7. விலங்கினை–தவறிவிட்டோம்; 8. ஈரம்–அன்பு; 9. தவிர்ந்தனை–தங்கினாய்; 10. அடைமறை– இலையால் மறைந்த; 14. வாயில் வரை இறந்து– வாயிலைக்கடந்து; 18. இஃது ஒத்தன்–இவன் ஒருவன்; 18. சீத்தை–கைவிடத் தக்கவன்; 19. செறுத்தக்கான்–கோபிக்கத் தக்கவன்: 20. எள்ளுபு–இகழ; 23. சுறாஏறு–சுறாமீன்; 31. இறைத்தொடி– முன்கைத்தொடி; 34. தன்னலம் பாடுவி– தன்புகழ் பாடுவாள்; 40. நோய்ப்பாலேன்–துன்பத்திற்குள்ளான நான்.