மருதநில மங்கை/வருகென்றார் யாரோ?

விக்கிமூலம் இலிருந்து

20


வருகென்றார் யாரோ?

தெருவில் நடைதேர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தான் ஓர் இளம் சிறுவன். விளையாட்டின் பால் கொண்ட விருப்ப மிகுதியால், பால் உண்ணும் நினைப்பையும் இழந்திருந்தான் அவன். காலம் அறிந்து பால் குடிக்கும் கருத்து அவனுக்கு இல்லையாயினும், அவன் தாய், அவன் பால் உண்ணும் காலம் இது என உணர்ந்து உண்பிக்கும் உயர்ந்த அன்புடையளாய் விளங்கினாள். மேலும், காதலித்துக் கடிமணம் புரிந்து கொண்ட கணவன், மகன் பிறந்த பின்னர், மனையற மாண்பை மறந்து, பரத்தையர் பின் திரியும் பழிநிறை வாழ்வுடையனானமையால், தன் உள்ளம் கொள்ளும் துயரை, அவள், தன் மகனைப் பேணி வளர்க்கும் பெரும்பணியால் ஒரு சிறிது மறந்து வாழ்ந்தாள். அதனால், அவள் அவனை, ஆடை. அணிகளால் அழகு செய்து ஆடவிடுப்பதும், அவன் விரும்பும் பால் உணவை, அவன் உண்ணும் காலம் அறிந்து, உவந்து உண்ணும் வகையில் . இனிய உரை பல வழங்கி உண்பிப்பதும் ஆகிய கடமை மேற்கொண்டு காலங் கழித்தாள்.

ஒருநாள், அச்சிறுவன் தெருவில் ஆடிக்கொண்டிருந்தான். பால் உண்டு நெடிது பொழுது ஆகவே, அவனுக்குப் பாலூட்ட விரும்பிய அவன் தாய், பொற் கிண்ணத்தில், தேனும் சீனியும் கலந்த தீம்பால் ஏந்தித் தெருவிற்கு வந்தாள். வந்தவள் மகனின் அழகிய திருக்கோலத்தைக் கண்டாள். பசும்பொன்னை உருக்கி வார்த்து, வளைத்து இரட்டையாகப் பண்ணிய பாதசரம் அணிந்து, நெருப்பில் இட்டு நிறம் ஊட்டிச் செய்த சதங்கை ஒலிக்கும் கால்களின் கவினைக் கண்டாள். பண்ணுவோன், தன் கைத்திறம் எல்லாம் காட்டிப் பண்ணிய பொன்மணிகளை வரிசையாகக் கோத்த மணி வடமும், அம் மணிவடத்தின் மேலே பவழ வடமும் கிடக்க, அவை இரண்டினுக்கும் மேலாக, உள்ளே உள்ள அவற்றின் உருவைப் புறத்தே தெள்ளெனத் தெரிவிக்கும் மெல்லிய பூந்துகில் உடுத்த இடையின் இனிய தோற்றத்தைக் கண்டாள். நண்டின் கண்களை நெருங்க வைத்தாற் போன்ற அறுப்புத் தொழில்கள் அழகாக அமையப் பண்ணிய, பேரொளி வீசும் பொற்றொடி அணிந்த கைகளின் கவினைக் கண்டாள். மழை பெய்த நிலத்தில் ஊர்ந்து திரியும் இந்திர கோபத்தின் அழகிய செந்நிறம் வாய்ந்த இரு பெரும் பவழங்கள் இருபால் கிடக்க, இடையே, இளம் சிறுவர்களை இன்னல் இன்றிக் காப்பீராக!’ என இறைவனை வேண்டும் கருத்தால், அவன் படையாம் வாள் போலவும், மழுப் போலவும் பண்ணிய அணிகள் தொங்க, அவ்விரண்டிற்கும் இடையே, அவ்விறைவன் ஏறும் ஆனேற்றின் உருவம் பொறித்த அணி கிடந்தசையும் அழகிய ஆரம் விளங்கும் கண்டத்தைக் கண்டாள். கடலில் கண்டெடுக்கும் முத்து முதலாம் அரிய மணிகள் பலவும் கலந்து கோக்கப் பெற்ற கவின்மிக்க மாலையும், தேன் உண்டு வாழும் வண்டுகள் வந்து மொய்க்குமாறு புதுப்புது மலர்களால் தொடுக்கப் பெற்ற தலைமாலையை, நிறத்தாலும் வடிவாலும் நிகர்ப்பதும், நீரில் மலரும் நீலம்தானோ எனக் காண்பார் கண்டு மருளுமாறு, அம்மலரின் நிறம் ஊட்டிப் பண்ணியதுமாய நீலமணி மாலையும் விளங்கும் மார்பைக் கண்டாள். இளமையால், தன் இனிய உறுப்பு நலத்தால், இயல்பாகவே அழகனான தன் மகனை, அவ்வணியும், பிறவும் மேலும் அழகனாக்கிக் காட்டும் காட்சியைக் கண்டு களித்தாள்.

அவ்வழகிளம் சிறுவன், தன் சின்னஞ்சிறு கால்கள் சிவக்குமாறு தளர் நடையிட்டுச் சிறுதேர் உருட்டும் இடத்தை அணுகினாள். “என் அருமை மகனே! ஓயாது ஆடித் திரியின் உன் சின்னஞ்சிறு கால்களின் மெல்லிய விரல்கள் வருந்தும். ஆட்டத்தை மறந்து அடிமேல் அடி வைத்து, உன் தேரைப் பைய உருட்டிக் கொண்டே என் பால் வந்து, உனக்கென்று உறுசுவை ஊட்டிக் கொணர்ந்த இப்பாலை உண்டு பசியாறிச் செல்க!” என்பன போலும் இனிய உரைகளைக் கூறிக் கொண்டே, பால் ஊட்டத் தொடங்கினாள்.

பாலும் சுவை மிகுந்துளது. ஊட்டும் காலமும் அவன் பாலுண்ணும் காலம். இன்முகம் காட்டி, இன்னுரை வழங்கி, ஊட்டுகிறாள் தாய். ஆயினும், ஆடல் பால் உள்ள வேட்கை மிகுதியால், அவன் வயிறார உண்டிலன். வேண்டுமளவு உண்ணானாயின், விரைவில் பசியால் வருந்துவன் என அறிந்த தாய், அவன் ஆட்டத்தை மறந்து பால் உண்ணும் வகையில் அவன் கருத்தினை ஈர்ப்பாரையும், ஈர்க்கும் நிகழ்ச்சிகளையும் எடுத்துக் கூறியாவது பாலூட்ட வேண்டும் எனக் கருதினாள். மக்கள், தாயின் முகத்தை அடுத்துக் காணக் கூடிய முகம், தந்தை முகமே. தாயை அடுத்துத் தந்தையையும், அவன் செயலையுமே மக்கள் அறிவராதலின், மகனுக்கு அவன் தந்தையை நினைப்பூட்டி, “அத்தந்தைக்காக வேண்டி, ஒரு பங்குப்பால் பருகுக!” எனக் கூற வாயெடுத்தாள்.

அந்நிலையில் அவன் தந்தை ஆங்கு இல்லை. பரத்தை வீடு சென்றிருந்தான். அந்நினைவு எழ வருந்திய அவள், “மகனே! பாடிப் பிழைக்கும் உரிமையால் எவரிடமும் எளிதிற் சென்று பழகும் தன் பாண் தொழிலால், தான் செய்யும் தவறுகளை மறைத்து வாழும் துறையில் வல்லனாய பாணனை, மீனை அகப்படுத்தும் தூண்டில் போல் தூதாக விடுத்துத் தான் விரும்பும் மகளிர் மனத்தைத் தன் வயமாக்கித், திரிவதையே தொழிலாகக் கொண்ட உன் தந்தைக்குரிய கூறு இது. இதை உண்!” எனக் கூறி ஒரு சிறிது ஊட்டினாள்.

கணவன் நினைவை அடுத்து, அவனால் காதலிக்கப்பட்டுச் சிறிது பொழுது அவன்பால் நலம் நுகர்ந்து, பின்னர் அவனால் கைவிடப்பட்ட மகளிர் நினைவும் எழவே, “மகனே! உன் தந்தை, காணும் புதிதில், ‘உன்னைக் கைவிடேன், கலங்கற்க!’ எனக் கூறும் ஆணையை உண்மை என உளம் கொண்டு நம்பி, அவனால் தம் நலம் இழந்து, பின்னர் அவன் தன் ஆணை மறந்து கைவிட்டுச் சென்றானாகத், தம் கண்கள், நீலமலர் போன்ற நிறைந்த அழகு அழிய, நீர் ஆறெனப் பெருக அழுது அழுது, உறக்கம் கொள்ளாது உறுதுயர் கொண்டு, உள்ளம் நொந்து கிடக்கும் உன் தாய்மார்களுக்காக ஒரு சிறிது உண் !” என்று கூறி, ஒரு கூறு ஊட்டினாள்.

அந்நிலையில், பரத்தை வீடு சென்ற கணவன், பாணன் முதலாம் தன் தோழர்களோடு ஆங்கு வந்து, அவளறியாவாறு, அவள் பின் நின்றான். ஆனால், அவன் வருகையை அறிந்து கொண்டான் அம்மகன். அதனால், பால் உண்பதை விடுத்துத், தந்தையை நோக்கத் தொடங்கினன். மகன் செயலால், கணவன் வருகையைக் கண்டு கொண்டாள் அவள். கணவன் ஒழுக்கக் கேட்டால் கலங்கியிருக்கும் அவள், அவனை அவன் தோழரோடு ஆங்குக் காணவே கடுங்கோபம் கொண்டாள். அதனால், “என் மகனை நான் பாராட்டிக் கொண்டிருக்கும் ஈங்கு, இந்நிலையில், தன் தோழர்களோடு வந்து நிற்கும் இவனை ‘வருக’ என அழைத்தவர் யாரோ?” என வெறுத்துரைத்தாள். பின்னர் மகனை நோக்கி, “நான் கூறும் பாராட்டுரை கேட்டு மகிழும் மகனே! நான் தரும் என் பங்குப் பாலை முதலில் பருகுக. ஈங்கு வந்து நிற்கும் வீணரை வேடிக்கை பார்ப்பதைப் பிறகு மேற்கொள்!” என்று கூறிப் பாலூட்டத் தொடங்கினாள்.

ஆனால், தந்தையைக் கண்ட மகிழ்ச்சியால், அம்மகன் தாய் ஏது கூறி ஊட்டவும் உண்ணாது மறுத்துவிட்டுத் தந்தையின் முகத்தையே நோக்கி நின்றான். தான் இன்னுரை வழங்கி, இனிய பால் ஊட்டவும், அதை உண்ணாது, பரத்தைவீடு சென்ற பழியோடு வந்து நிற்கும் அவன்பால் பரிவு காட்டுகின்றனனே என்ற எண்ணத்தால் சினம் மிகவே மகனைக் கடிந்தாள். ஆனால், அம்மகனோ, தாய் கடிவது கண்டு கலங்காது, ஆடியும், பாடியும் அவள் கோபத்தைத் தனித்து மகிழ்ச்சி ஊட்டினான். ஆடல் பாடல்களால் தன்னை மெய்ம்மறக்கச் செய்யும் மகன் செயல் கண்டு மகிழ்ந்த அவள், “மகனே! உன் செயலால், உன்மீது பேரன்பு கொண்டு உன்னைப் பாராட்டும், என் பாராட்டுப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே, உன்னை ஈன்ற யான், உனக்கு உவந்தளிக்கும் இப்பாலை உண்ணுவாயாக. இப்பாலை உனக்கு ஊட்டினாலல்லது என் உள்ளம் அமைதி கொள்ளாது. உனக்கு ஊட்டாது யானும் விடேன்!” என்று கூறி, மகனுக்குப் பாலுட்டும் பணியினை மேற்கொண்டு, வாயிற்கண் நிற்கும் கணவனை வரவேற்கும் கருத்திழந்து கிடந்தாள்.

“காலவை, சுடுபொன் வளைஇய ஈரமை சுற்றொடு
பொடியழல் புறம்தந்த செய்வுறு கிண்கிணி;
உடுத்தவை, கைவினைப் பொலிந்த காசமை பொலங் காழ்மேல்
மையில் செந்துகிர்க் கோவை, அவற்றின்மேல்

தைஇய பூந்துகில் ஐதுகழல் ஒருதிரை; 5
கையதை, அலவன் கண்பெற அடங்கச் சுற்றிய
பலவுறு கண்ணுள் சிலகோல் அவிர்தொடி;
பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்
செறியக் கட்டி ஈரிடைத் தாழ்ந்த

பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிளின் 10
மையற விளங்கிய ஆனேற்று அவிர்பூண்,
சூடின, இருங்கடல் முத்தமும், பன்மணி பிறவும் ஆங்கு
ஒருங்குடன் கோத்த உருளமை முக்காழ் மேல்
கரும்பார் கண்ணிக்குச் சூழ் நூலாக,

அரும்பவிழ் நீலத்து ஆயிதழ் நாணச் 15
சுரும்பாற்றுப் படுத்த மணிமருள் மாலை,

ஆங்க, அவ்வும் பிறவும் அணிக்கு அணியாக, நின்
செல்வுறு திண்தேர்க் கொடுஞ்சினை கைப்பற்றிப்
பைபயத் துரங்கும் நின்மெல்விரல் சீறடி

நோதலும் உண்டு, ஈங்கு என்கை வந்தீ; 20
செம்மால் ! நின்பால் உண்ணிய,

பொய்போர்த்துப், பாண்தலையிட்ட பலவல் புலையனைத்
தூண்டிலா விட்டுத் துடக்கித் தான்வேண்டியார்
நெஞ்சம் பிணித்தல் தொழிலாகத் திரிதரும்

நுந்தையால் உண்டி சில. 25
நுந்தைவாய், மாயச்சூள் தேறி மயங்குநோய் கைமிகப்
பூவெழில் உண்கண் பனிபரப்பக், கண்படா
ஞாயர்பால் உண்டி சில.

அன்னையோ! யாம்எம்மகனைப் பாராட்டக் கதுமெனத்
தாம் வந்தார் தம்பா லவரொடு; தம்மை 30
வருகென்றார் யார்கொலோ ஈங்கு?

என்பாலல், பாராட்டு உவந்தோய்! குடியுண்டீத்தை, என்
பாராட்டைப் பாலோ சில.
செருக்குறித்தாரை உலகைக் கூத்தாட்டும்

வரிசைப் பெரும்பாட்டொ டெல்லாம் பருகீத்தை; 35
தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால்.”

தலைவி, தன் மகனுக்குப் பாலுட்டுகின்ற வழிப், பரத்தையர் வீடு சென்ற கணவன் வந்து சிறைபுறத் தானாகத், தன்னுள்ளே புலந்து கூறியது.

1. ஈரமை–இரண்டாய் அமைந்த; சுற்று பாதசரம்; 2. புறம் தந்த–புறத்தே நிறம் விளங்கப் பண்ணிய; 3. காசு–மணிகள்; பொலங்காழ்–பொன்மாலை; 4. மை இல்–அழுக்கு இல்லாத; துகிர்–பவளம்; 5. தை இய–உடுத்த; ஐதுகழல்–நழுவிநழுவி விழுகின்ற; 6. அலவன்–நண்டு; 7. கோல்–அறுப்புத் தொழில்; அவிர்தொடி–ஒளி வீசும் தொடி; 8. எறியாவாள் எற்றா மழு–சிவனுக்குரிய; படைக்கலங்களாயவாளும், மழுவும் போலப் பண்ணிய அணிகள்; 10. பொய்புல மூதாய்– மழை பெய்த நிலத்தில் மொய்க்கும் இந்திர கோபம் அல்லது தம்பளப் பூச்சி எனப்படும் பட்டுப்பூச்சி; அதன் மேற்புறம் அழகிய செந்நிறம் வாய்ந்தது. 13. முக்காழ்–மூன்றுவடம், 16. சுரும்பாற்றுப்படுத்த மாலை–வண்டுகள் மொய்க்காத மணிமாலை; 19. தூங்கும்–அசையும்; 20. வந்தீ–வருக; 21, உண்ணிய–உண்ணற் பொருட்டு; உண்ணிய வந்தீ; 22. பலவல் பல தொழில்வல்ல; 23. துடக்கி வலிதிற் கைப்பற்றி; 26. மாயச்சூள்–பொய்ச்சூள்; தேறி–நம்பி; 27. பனிபரப்பு–நீர் நிறைய; கண்படா– உறக்கம் இல்லாத; 28. ஞாயர்–தாய்மார்கள்; 29. கதுமென–திடுமென; 30. தம்பாலவர்–தம்முடைய நண்பர்; 32. குடியுண்டீத்தை–குடிப்பாயாக; 34. செருக்குறித்தாரை சினந்து போர் கருதி வந்தாரை; உவகைக் கூத்தாட்டும்–மகிழ்ச்சி செய்யும்; 35. வரிசைப் பெரும்பாட்டு – பெரிதும் பாராட்டுதல்; பருகீத்தை–குடிப்பாயாக; 36. தண்டு வென்–மனம் அமைதி கொள்வேன்; ஞாயர் மாட்டைப் பால்–தாயர்க்கு உரிய பால்.