மருத்துவ களஞ்சியப் பேரகராதி/ஆய்வுரை

விக்கிமூலம் இலிருந்து


ஆய்வுரை

தமிழில் பேச்சு வழக்கில் "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" என்று பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். திரு. மணவை முஸ்தபா அவர்கள் படைத்திருக்கும் இந்த நூல் அடிப்படையில் ஒரு கலைச்சொல் அகராதியாக மட்டுமின்றி, மருத்துவக் கலைக்களஞ்சியமாகவும் உருப்பெற்றிருக்கிறது. ஆனால், இரண்டு மாங்காய்களுடன் ஆசிரியர் நின்றுவிடவில்லை. மூன்றாவது ஒரு மாங்காய் விழுந்தாலும் விழட்டுமே என்ற கருத்தும் மறைவாக மிளிர்கிறது. அகராதியைப் பயன்படுத்துவோர் சிந்தனைக்கு ஒரு துண்டுகோலாகவும் இந்நூல் இயங்க வாய்ப்பிருக்கிறது. இந்த மருத்துவ அகராதிக் கலைக்களஞ்சியத் தொகுப்பினை பயன்படுத்துவோர், இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலைச்சொற்களை விட சிறந்த வேறு பொருத்தமான சொற்களைப் புனைய முன்வரின் மூன்றாவது குறிக்கோளும் நிறைவுப்பெறும்.

இன்றைய மருத்துவ அறிவியல் சொற்களுக்கெல்லாம் தனித் தமிழ்ச் சொற்களை உருவாக்கி, அவைகளைப் பயன் படுத்தி, மருத்துவ நூலாக்கத்தை இயக்கி மருத்துவம் சார்ந்த கல்வி - மற்றும் பயிற்சி அரங்குகள் அனைத்தும் தமிழில் வர வேண்டும் என்று காத்திருந்தோமானால் அது அண்மைக் காலத்திற்குள் நிறைவேறக்கூடிய கனவாக இருக்காது.

லண்டன் மாநகரத்தில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து சில காலம் "அறிவியல் ருசிய மொழி" பயிற்சி பெற்றேன். நான் ஏற்கெனவே ஆங்கிலத்தில் பழகியிருந்த பல மருத்துவச் சொற்கள் ருசிய மொழி அறிவியல் கட்டுரைகளில் பயன் படுத்தப்படுவதைப் பார்த்தேன். ஆசிரியையாக இருந்த ருசியப் பெண்மணியிடம் இதுபற்றிப் பேசினேன். அவர்கள் சொன்ன கருத்தை எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியம் கருதி கீழே தருகிறேன்: "உலகில் பல பகுதிகளும் ஒரளவு நாகரிகம் வளர்ச்சியடைந்திருந்த காலத்தில் கருத்துப் புரட்சி, சமுதாயப் புரட்சி இவை ஐரோப்பாக் கண்டத்தில் தோன்றி, அறிவியல் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் வித்திட்டன.

பலவாறான ஆராய்ச்சிகள் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன. பல புதிய கண்டுபிடிப்புகள் உலகுக்கு அறிமுகமாயின. இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று, புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் பல அறிவியல் சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டு, உலகுக்கு அறிமுகமாயின. இவைகளை ஆங்கிலச் சொல் என்றோ, ஜெர்மானியச் சொல் என்றோ, ஜப்பானியச் சொல் என்றோ சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு புதிய கண்டு பிடிப்பையும் யார் முதலில் உலகுக்கு வழங்குகிறார்களோ அவர்கள் அவைகளை விளக்க உருவாக்கிய சொற்களை உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். கண்டுபிடிப்புக்களுக்கு எப்படி அவர்களைச் சொந்தக்காரர்கள் என்று சொல்கிறோமோ அதைப் போலவே அவர்கள் உருவாக்கிய சொற்களும் அவர்களுடைய படைப்புக்களே. அந்தச் சொற்களை அறிவியல் மக்கள் சமுதாயம் - உலகப் பொதுச் சொற்களாகத் தான் கருத வேண்டும்" என்பதே அந்த அம்மையார் தந்த விளக்கம். இந்த முறையில் "வைரஸ்", "லேசர்", "பெனிசிலின்", "மார்ஃபின்" போன்ற பல சொற்களை நாம் அப்படியே பயன்படுத்தினாலும்கூட ஒரு அறிவியல் மருத்துவக் களஞ்சியத்தில் அந்த சொற்கள் உருவாகிய அடிப்படை வரலாற்றையும் குறிப்பிட்டு எழுதும்போதுதான் அதன் பொருளும் விளக்கமும் முழுமையாகக் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

சோதனைக் குழாய், புதை சாக்கடை, கட்டி, கரப்பான், புற்று, காசம், ஈளை, இருமல் போன்ற பல சொற்கள் ஏற்கெனவே தமிழ் வழக்கில் இருக்கின்றன. இப்படி ஏற்கனவே வழக்கில் இருக்கும் சொற்களை இன்றும் அறிவியல் கருத்துக்களை எடுத்தியம்பும்போது பயன்படுத்துகிறோம். இவை தவிர, முன் பழக்கத்தில் இருந்து, மறைந்து போன சில தமிழ் அறிவியல் சொற்களைக் கண்டுபிடித்து மறுபடியும் அவற்றிற்குப் புத்துயிரூட்டி பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். திரு. மணவை முஸ்தபா அவர்கள் இந்த முயற்சியில் கணிசமான அளவு வெற்றியடைந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். "Slough" என்றால் "பொருக்கு", "Desquamation" என்றால் "செதிளுதிர்வு" என்று மிகத் தெளிவாக விளங்கும் வகையில் சொற்களைப் பயன்படுத்தும் முறையைச் சுட்டியிருக்கிறார்கள்.

இது தவிர பழைய சித்த மருத்துவ நூல்களில் உடலுறுப்புகளையும் நோய் வகை மருத்துவ முறைகள் போன்றவற்றைச் சுட்டுவதற்கும் பல சொற்கள் பயன் படுத்தப்பட்டிருக்க வேண்டும். நாடி, நரம்பு, நாளம், நோய் என்று பல சொற்களை நாம் எடுத்தாள்கிறோம். அதைப் போலவே இன்னும் பல சொற்கள் இருக்கக் கூடும். சித்த மருத்துவர்களும், தமிழறிஞர்களும் கூட்டாகச் சேர்ந்து ஒரு தமிழ்-ஆங்கில (சித்த) மருத்துவ அகராதியைத் தயாரித்தால் அது நமக்குப் பெரும் பயனளிக்கும். மறைந்த தமிழ் மருத்துவ அறிவியல் சொற்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

ஆங்கில மருத்துவச் சொற்கள் எப்படி உருவாக்கப்பட்டன என்று அறியும்போது சில சொற்கள் காரணப் பெயர்களாக இருக்கக் காண்கிறோம். அதே காரணங்களுக்கு ஈடான தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்து அவற்றில் இருந்து புதுத் தமிழ் மருத்துவச் சொற்களை உருவாக்கும் வழியும் கடைப்பிடிக்கப்பட்டு, அப்படி சில நல்ல சொற்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. "Thyroid" என்பதற்கு கேடயச் சுரப்பி என்றும் "Adrenal" என்பதற்கு அண்ணீரகச் சுரப்பி என்றும் சொற்கள் உருவாக்கப்பட்டு அவை தமிழில் பழக்கத்தில் வந்துவிட்டன. இவைகளை எல்லாம் கூடியவரை ஆசிரியர் அகராதிக்குள் இணைத்திருக்கிறார்.

நாட்டுப்புற மக்கள் சில சமயங்களில் பட்டறிவு அடிப்படையில் அவர்களாகவே சில சொற்களை உருவாக்கி விடுவார்கள். மலேரியா காய்ச்சலை 'முறைக் காய்ச்சல்' என்றும் தூரத்துப் பார்வையை 'வெள்ளை முத்து' என்றும் 'wrist' என்பதற்கு மணிக்கட்டு என்றும் தமிழ்ச் சமுதாயம் ஏற்கனவே உருவாக்கிவிட்ட சொற்களையும் நாம் தள்ளி விட முடியாது. அவைகளை நம்முடைய சொற்களஞ்சிய தொகுப்புகளில் சேர்க்கத்தான் வேண்டும்.

ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளில் பல புதுச் சொற்களை உருவாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழியில் தொடர்புடைய பொருள் தரும் சொற்களில் வேர்ச் சொற்களை ஆராய்ந்து எடுத்து அவற்றில் இருந்து புதுச் சொற்களை உருவாக்கி யிருக்கிறார்கள். மார்ஃபின் (morphine) என்னும் மருந்து தூக்கத்தை உண்டாக்கும். கிரேக்கப் புராணத்தில் கனவுக்கு (dreams) பொறுப்பான கடவுள் மார்ஃபியா. அதனால் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதற்கு மார்ஃபின் என்று பெயர் சூட்டினர். அதைக் கண்டுபிடித்த வேதியல் நிபுணர், அப்படிப்பட்ட சொற்கள் அனைத்தையும் காரணச் சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல்லையும் அதன் வேர்ச் சொல்லையும் கண்டுபிடித்து அதிலிருந்து புதிய தமிழ்ச் சொல்லை உருவாக்கலாம் என்று நினைத்தோமானால் அது முடிவே இல்லாத பணியாகிவிடும். அப்படிப்பட்ட பல சொற்களை நாம் அப்படியே தமிழில் எழுதி பயன்படுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில்தான் இருக்கிறோம். வேறு புதுச் சொற்களை உருவாக்க முடியாத இத்தகு சூழ்நிலைகளில் இன்று ஆங்கிலத்தில் இருக்கும் சொற்களை எடுத்துத் தேவைக்கேற்றபடி பகுதி, விகுதி மாற்றங்களை மட்டும் செய்துகொண்டு, தமிழ்ப் பழக்கத்திற்கு அவைகளை கொண்டு வரலாம் என்று, நாம் உணரும் வகையில் திரு. மணவை முஸ்தபா அவர்கள் பல சொற்களை கலைச்சொல் அகராதிக் களஞ்சியத்தில் சேர்த்திருப்பது பாராட்டுதற்குரியது.

இந்த அகராதி களஞ்சியத் தொகுப்பைப் பயன்படுத்துவதில் பல அரிய வாய்ப்புகளும் சிந்தனைகளும் உருவாக வழியுண்டு.

1. தமிழில் மருத்துவ நூல்கள் எழுத வேண்டும் என்று நினைப்போர் பொருத்தமான தமிழ் மருத்துவக் கலைச் சொற்களைத் தேடி பல அகராதிகளை வைத்துக் கொண்டு நேரம் அனைத்தும் வீணாகாமல் இந்த நூலை அருகில் வைத்துக் கொண்டு விரைவாகக் கருத்துக்களுக்கு உரிய எழுத்து வடிவம் கொடுக்கமுடியும்.

சாதாரண அகராதிகளைப் போல் தமிழில் ஆங்கிலச் சொல்லுக்கு நேர்ச்சொல் மட்டும் தந்து பொறுப்பை முடித்து விடாமல், அதன் பொருள் விளக்கத்தையும் சுருக்கமாகத் தந்திருக்கிறார் ஆசிரியர். மருத்துவத் தமிழ்ச் சொல்லைத் தெரிந்து கொள்வதுடன் சாதாரண மக்கள் அறிவியல் செய்திகளையும் தெரிந்து கொள்ளப் பயன்படும் வகையில் தொகுத்திருக்கிறார். எ.கா. "Version" என்ற சொல்லுக்கு 'நிலை திருப்பம்' என்று மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல், "மகப்பேற்று மருத்துவத்தில் குழந்தை எளிதாக வெளிவரும் பொருட்டு கருப்பைக்குள் குழந்தை கிடக்கும் நிலையை மாற்றி தலைப்பாகம் முதலில் வெளியேறுமாறு செய்தல்" என்று விளக்கம் தந்திருக்கும் பாங்கு மக்கள் எளிதில் தெரிந்துகொண்டு பொருளுடன், செய்தியையும் உணர்ந்து கொள்ள ஒரு கருவியாய் அமைகிறது. இந்நூல் இப்படி ஆசிரியர் விளக்கி இருப்பதால் எதிர்காலத்தில் சில நல்ல விளைவுகளை எதிர்பார்க்கலாம். இப்படி தரப்பட்டிருக்கும் பல விளக்கங்களை படிக்கும் யாருக்காவது இதைவிட சிறப்பான ஒரு தமிழ்ச் சொல்லை உருவாக்கக்கூடிய கற்பனை தோன்றும்போது தமிழுக்குப் புதுச் சொற்கள் சேரும்; தமிழ் வளம் பெறும்.

2. அகராதியைப் பயன்படுத்தும்போது அதில் தரப் பெற்றிருக்கும் சொல் பொருத்தமானதாக இல்லை என்று ஒருவருக்குத் தோன்றினாலும் இருக்கும் சொற்களில் சிறு மாற்றங்கள் செய்து வலிமை தந்து, சொல்லை ஏற்றம் பெறச் செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

3. முழுவதுமாகவே ஒரு சொல் பொருத்தமற்றது என்று அதைத் தள்ளிவிட்டு சிறந்த ஒரு புதுச்சொல்லை உருவாக்க ஒரு சிலராவது முயல்வர். அதனாலும் தமிழுக்கு வளம் சேரும்.

எந்த வகையில் பார்த்தாலும் இதைப் பாராட்டுவோர் தொண்டாலும், குறைகூறுவோர் முயற்சியாலும் இறுதியில் மேலும் பல புதிய சொற்கள் உருவாகித் தமிழ் வளர வாய்ப்பாகும் என்ற ஒரு காரணத்திற்காகவே ஆசிரியரைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பழைய இலக்கியத் தமிழ், இன்றைய பழகு தமிழ்-இவை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்போருக்கிடையே, புதிய தமிழ், நாளையத் தமிழ், அறிவியல் தமிழ் என்றெல்லாம் சிந்திப்போரும் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் திரு. மணவை முஸ்தபா அவர்களை முதன்மையானவராகத் திகழ்கிறார் எனத் தயக்கமின்றிச் சொல்லலாம்.

மருத்துவச் சொற்களை திட்பநுட்பத்துடன் தமிழில் சொல்ல முடியும் எனக் காட்டியிருப்பதுடன், சொற் செட்டுடன் பொருட்செறிவும் ஒருசேர அவற்றுடன் இலக்கிய மெருகும் ஏற்றி சுவைபட அறிவியல் செய்திகளைத் தமிழில் சொல்லலாம் என்பதற்கு இந்நூல் ஒரு எடுத்துக்காட்டு. மொழிக்கு மட்டும் முதன்மை தராமல் மருத்துவப் பொருளறிவை விளக்கவல்ல துணைக் கருவியாக மொழியைக் கையாளும் பாங்கால், மருத்துவச் செய்திகளை ஆற்றலுடன் ஆசிரியரால் விளக்க முடிகிறது. இதற்காகத் தவிர்க்க முடியாத இடங்களில் ஆசிரியர் தனித் தமிழ் போக்கினைக் கூட நழுவ விடவேண்டிய நிலை உருவாகிறது.

மருத்துவப் பல்கலைக் கழகங்களும் வல்லுநர் குழுவும் செயல்பட்டு உருவாக்கப்பட வேண்டிய ஒரு கலைச் சொல் தொகுப்பு நூலை' தனியொருவராக முயன்று, பாராட்டத்தக்க முறையில் நிறைவேற்றியிருப்பது தமிழர் அனைவர்க்கும் மகிழ்ச்சி தரக்கூடியது. துறை வல்லுநர்கள் கூட அவரவர் துறைகளில்தான் சிந்தனையாளராகத் திகழ முடியும். ஆனால் பல மருத்துவப் பிரிவுகளுக்கும் உரிய கலைச்சொல்லாக்கங்களை கண்டிருப்பதன்மூலம் இம் முயற்சியில் திரு. மணவை முஸ்தபா அவர்கள் தமிழறிவுடன் மருத்துவ அறிவையும் எவ்வளவு ஆழ்ந்து நுணுகிக் கற்றுத் தேர்வுபெற்றுள்ளார் என்பது அனைவரையும் வியக்க வைக்கும்.

ஆங்கிலத்தில் இவ்வகையான அகராதி-களஞ்சிய நூல்கள் பல இருப்பினும் இந்திய மொழிகளுள் இதுவே முதலாவதான முயற்சியாய் இருக்கக்கூடும் என்று நம்புகிறேன். ஒரு சொல் மூலம், ஒரு மருத்துவச் செய்தியைக் கூறுவதன் மூலம் சாதாரணப் படிப்பறிவு உள்ளவர்களும் மருத்துவ அறிவு பெறவும் அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் துணை செய்வதாகும்.

இந்நூலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சம் பல இடங்களில் தெளிவான படங்களையும், பட விளக்கங்களையும் கொண்டமைந்திருப்பதாகும். எல்லா வகையிலும் நூல் சிறப்பாக அமைய வேண்டும் என்னும் ஆசிரியரின் வேட்கையை இது புலப்படுத்துகிறது. இந்நூல்வழி மேலும் தொடர்ந்து வளம் பெற்று அவர் வழியில் இன்னும் பலர் மருத்துவத் தமிழ் நூல்களை இயற்றித் தமிழ் மொழி ஏற்றத்தை விரைவில் எய்த வேண்டும் என்பதே அனைவரின் ஆவலாகவும் இருக்கும். அவர் முயற்சியும் அவரால் தூண்டப்பட்டு மேலும் பலர் செய்யப்போகும் முயற்சிகளும் வெற்றி பெற வேண்டி வாழ்த்துவோம்.

பேராசிரியர் டாக்டர் லலிதா காமேசுவரன்
(மேனாள் துணைவேந்தர்,
ஸ்ரீராமச்சந்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)