மருத்துவ களஞ்சியப் பேரகராதி/வாழ்த்துரை
வாழ்த்துரை
"நேற்று, இன்று, நாளை; நடப்பவை, நடக்க வேண்டியவை அனைத்தையும் கவனித்து தொடர்ச்சியாக, தேவையான முறையில்தான் தமிழ் வளர்ச்சியடைய வேண்டும்.
பல்வேறு தமிழ்க் கவிஞர்களாலும் தமிழ் வல்லுநர்களாலும் இன்றைய தமிழ் மணக்கிறது. பழங்காலத் தமிழ் மணம் மட்டும் போதாது. புதிய மணமும் வேண்டும். காலத்திற்கேற்ற கருத்துக்கள் அனைத்தும் தமிழில் எடுத்துக்கூறும் உண்மையைத் தமிழ் வளர வேண்டும். வேகமாக முன்னேறிவரும் புதுப்புது எண்ணங்கள், கருத்துக்கள் யாவையும் எழுத்தில் வடித்துத் தருவதற்குத் தமிழால் முடியும் என்ற அளவிற்கு தமிழ் வளர்ந்தால்தான் தமிழ் வளர்ச்சி அடைந்திருப்பதாகக் கொள்ள முடியும். எனவே, தமிழ்நாட்டில் இத்தகைய சக்தியும் ஆர்வமும் கொண்ட பல்வேறு தமிழ் மேதைகள் தோன்ற வேண்டும்.
எல்லாம் தமிழால் முடியும் என்ற நிலைதான் தமிழின் வளர்ச்சி, தமிழனின் வளர்ச்சி. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பதை நாம் எல்லோரும் உணரவேண்டும். அதே எண்ணம் நம் தமிழ் பெருமக்களிடையே எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாக உறுதியாகப் பதிகின்றதோ அதே அளவுக்கு தமிழ்நாடு எல்லா வகையிலும் சிறக்கும், மணக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தமிழகம் தழைத்தோங்க தமிழால் முடியும் என்ற அந்த நம்பிக்கை எல்லோரிடத்திலும் வளர வேண்டும் என்பதே எனது விருப்பம் வேண்டுகோள்" என 25-1-62 இல் வெளியிட்ட "தமிழால் முடியும்" என்ற நூலில் குறிப்பிட்டிருந்தேன்.
கடந்த 35 ஆண்டுகளில் பல தமிழன்பர்கள் நான் அன்று கண்ட கனவை நனவாக்க முயற்சி எடுத்து சிலர் வெற்றியும் கண்டுள்ளனர். அவர்களில் முதன்மை பெற்று விளங்குபவர் திரு. மணவை முஸ்தபா அவர்கள். பல நுண்ணிய நவீன கருத்துக்களையும் தமிழில் கூற முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். இதன் மூலமாகப் புதிய தமிழ்ப் பதங்களையும் உருவாக்கித் தமிழின் வளத்தைப் பெருக்கி வருகிறார் திரு. மணவை முஸ்தபா.
இதோடு திருப்தியடையாமல் தமிழில் அறிவியல், தொழில்நுட்ப நூல்களை பலர் எழுதுவதற்கு உதவும் முறையில் பல கலைச்சொல் களஞ்சியங்களைப் பெருமுயற்சியுடன் சிறந்த முறையில் வெளியிட்டு வருகிறார். தற்போது மருத்துவக் களஞ்சிய அகராதியை வெளியிட்டுள்ளார். இக்களஞ்சிய அகராதி தமிழில் பல மருத்துவ நூல்கள் வெளிவர உதவும் என நம்புகிறேன்.
திரு. மணவை முஸ்தபா அவர்கட்கு எனது நல்வாழ்த்துக்கள்.
சி. சுப்பிரமணியம்
(மருத்துவக் கலைச்சொல்
களஞ்சிய அகராதி
நூல் வாழ்த்துரை)