மருத்துவ விஞ்ஞானிகள்/ஜோசப் லிஸ்டர்

விக்கிமூலம் இலிருந்து



ஜோசப் லிஸ்டர்!
(1827 - 1912)


2

அறுவை சிகிச்சை கசாப்புக் கடையில்;
மனிதனை மீட்டவர் ஜோசப் லிஸ்டர்!

யார் இந்த ஜோசப் லிஸ்டர்? மருத்துவ விஞ்ஞானத் துறையில் இவர் செய்த மகத்தான் சேவை என்ன? இவர் பெயர் ஜோசப் லிஸ்டரா. அல்லது லார்டு லிஸ்டரா? என்ற கேள்விகள் மருத்துவ உலகில் நடமாடின. “THE HUNDRED” என்ற நூல் இவரை ஜோசப் லிஸ்டர் என்றே சுட்டிக் காட்டிக் குறிப்பிட்டுள்ளது.

ஜோசப் லிஸ்டருடைய ‘ஆண்டிசெப்டிக் சர்ஜரி’ என்ற ‘நச்சுத் தடை அறுவை’ என்ற நூல் 1867ஆம் ஆண்டில் வெளிவந்தது.

அந்த நூலும் அவரை ஜோசப் லிஸ்டர் என்றே அடையாளம் காட்டி இருக்கிறது. எனவே, நாமும் அந்த மருத்துவ உலக மறு மலர்ச்சியாளரான டாக்டரை ஜோசப் லிஸ்டர் என்றே அழைக்கின்றோம். 

ஜோசப் லிஸ்டர் இங்கிலாந்து நாட்டில் உள்ள அப்டோன் என்ற நகரில் 1827-ஆம் ஆண்டில் ஏப்ரல் 5-ஆம் நாள் பிறந்தார். அவர் தந்தையின் பெயர் ஜோசப் சாக்சன் லிஸ்டர். அவரது நான்காவது செல்வன் நாம் போற்றும் ஜோசப் லிஸ்டர்.

ஜோசப் லிஸ்டரின் தந்தையான ஜோசப் சாக்சன் லிஸ்டர் சிறந்த, புகழ் பெற்ற மருத்துவ விஞ்ஞானி. இவர்தான் நுண்பெருக்கி ஆடிகள் என்பனவற்றைக் கண்டுபிடித்தவர். தனது தந்தை புகழ் வாய்ந்த விஞ்ஞானியாக இருந்ததால், ஜோசப் லிஸ்டருக்கும் வாழையடி வாழையென வந்த விஞ்ஞானிகள் கூட்டத்திலே தானும் ஒருவனாகச் சிறந்து விளங்க விரும்பினார்.

ஆனால், ஜோசப் லிஸ்டருடைய குடும்பம் மதக் கோட்பாடுகள் என்ற சிறைச் சுவர்க்குள் சிக்கிவிட்டக் குடும்பம். லிஸ்டரும் அவரது உடன் பிறப்புகளும், பரந்த மதக் கட்டுப் பாட்டுடனும், மத பாசத்துடனும் வளர்க்கப்பட்டவர்கள் ஆவர்.

கர்த்தர் இயேசு கிறிஸ்துக் கடவுளால், வாழ்க்கை அருட்கொடையாக வழங்கப்பட்ட வரம் என்றே கருதி ஒழுகிய குடும்பம் - லிஸ்டரின் குடும்பம். ஆனால், கடவுளுக்கும் அவரை வழிபடும் அடியார்களுக்கும் தொண்டு செய்வது ஒன்றே இறை பேறு என்று இளம் பருவம் முதலே நம்பி வளர்ந்த கிறித்துவ ஆன்மீகக் குடும்பம் அது.

இந்தப் பழக்க வழக்கம் தொட்டிலில் இருந்தே பண்பாடாக வளர்ந்ததால், மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதே மனிதப் பிறவியின் மாண்பு என கருதி, மக்களது இன்ப - துன்பங்களிலே சரி சம பங்கேற்று வாழ்ந்து வந்தக் குடும்பத்தினர். ஆதலால், அதே பழக்க வழக்கங்கள் கல்லறை வரை தொடர்ந்து, அதற்கேற்பவே அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

தந்தை ஜோசப் சாக்சன் லிஸ்டர், தனது மக்களுக்குரிய அனைத்து வசதிகளையும் ஒழுங்காகச் செய்து கொடுத்தார். பள்ளியில் படிக்கும்போதே லிஸ்டர் விலங்குகள் தோல்களை உரித்து அவற்றை ஆய்வு செய்து பார்க்கும் அக்கறை கொண்டவர்.

எதையும் ஆராயும் அறிவு லிஸ்டர்க்கு இளம் பருவத்திலேயே இருந்து வந்ததால், அவரது கல்வியிலும், விஞ்ஞான ஆராய்ச்சியிலும், அதே பழக்கம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுவது தானே?

எந்த விலங்குகளின் தோலை உரித்தாலும், அந்த விலங்கின் வரை படத்தை லிஸ்டர் ஓவியமாக வரைந்து கொள்வார். அவற்றை அறுவை செய்து பார்த்து, அதன் ஒவ்வொரு பாகங்களையும் பார்த்தது பார்த்தவாறே படம் வரைந்து கொண்டு, அவற்றை அடிக்கடி ஆராய்ச்சி செய்வார்.

கிறித்துவ நெறிப்படி, பிற உயிர்களின் உடலை அறுப்பதும், ஆய்வதும் அக்காலத்தில் பாவச் செயலாகக் கருதப்பட்டது.

இயற்கைக்கு மாறுபட்டது இச்செயல் எனவும் நம்பினார்கள் லிஸ்டர் குடும்பத்தினர்கள்.

ஆனால், லிஸ்டரின் தந்தையார் மகனுடைய ஆராய்ச்சிக்கு மறுப்பேதும் கூறாதது மட்டுமன்று, அதற்கு ஊக்கமும் ஆக்கமும் காட்டி வந்தார்.

ஜோசப் லிஸ்டர் தனது 18-வது வயதில், இலண்டனில் உள்ள யூனிவர்சிட்டி கல்லூரியில் சேர்ந்து, மருத்துவத் துறைக்கு உள்ள பாட போதனைகளை நன்கு அறிய, அதற்குரிய மொழிப் பிரிவு என்னவோ, அவற்றை விரும்பி எடுத்துப் படித்தார் - தேர்ச்சிப் பெற்றார். பிறகே மருத்துவக் கல்லூரியின் படிப்பில் சேர்ந்து படித்தார்.

மருத்துவக் கல்வியை ஐயம் திரிபறக் கற்ற லிஸ்டர், கல்லூரிப் பாடங்களையும் மீறி, அதற்கான சம்பந்தப்பட்ட, வேறு சில நூற்களையும் தேர்ந்தெடுத்துப் படித்தார்.

திருவள்ளுவர் பெருமானது பொய்யாமொழிக்கு ஏற்றவாறு, எந்தெந்த நூற்களைப் படித்தாலும், “எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்; அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது தானே அறிவு? அதற்கேற்றபடி நூலாசிரியர் கருத்து முழுவதையும் லிஸ்டர் அப்படியே ஏற்க மாட்டார்.

படிக்கும் நூலை அவரது அறிவு நிர்வாணமாக்கி, அச்சு வேறு - ஆணி வேறாகப் பகுத்துப் பிரித்து ஆய்வுச் செய்த பின்பு, நல்லவைகளை ஏற்பார்; அல்லவைகளை அகற்றிடுவார் லிஸ்டர். இது அருமையான பண்பாக அவரிடம் அமைந்திருந்தது.

கல்லூரி கடைசி ஆண்டுத் தேர்வில் லிஸ்டர் நோயாளி ஆனார்! இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் நன்றாகப் படித்து தேர்விலும் வெற்றி பெற்று 1848-ஆம் ஆண்டில் மருத்துவத் துறை பட்டம் பெற்றார். படித்த அதே கல்லூரியில் 1850-ஆம் ஆண்டில் மருத்துவர் ஆனார்:

பணி புரிந்து வந்த கல்லூரியில் லிஸ்டருடைய ஆராய்ச்சிக் கேற்றவாறு எல்லா வசதிகளும் அமைந்திருந்தது. அந்த வசதிகளோடு ஆய்வு செய்ய அறிவாளிகள் பலர் அங்கே அமர்ந்து ஆராய்ந்தார்கள்.

அவர்களுடைய பழக்க வழக்கம், நட்பு லிஸ்டருக்கும் வாய்த்தது. அதனால் ஒருவருக்கு ஒருவர் ஏற்பட்ட சந்தேகங்களைக் கலந்துரையாடி நீக்கிக் கொள்ளும் சமயமும் உருவான.

அறுவை சிகிச்சைக்குப் பின்பு, எண்ணற்ற உயிர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவது எப்படி என்பதிலேயே ஊன்றிக் கண்டறிந்து வந்த லிஸ்டரின் அறிவையும், ஆராய்ச்சியின் பயன்களையும் புரிந்து கொண்ட கல்லூரி நிர்வாகம் 1852-ஆம் ஆண்டில் Fellow of Royal College of Surgen's Association என்ற சங்கத்தில் லிஸ்டரை வலிய உறுப்பினராக்கிக் கொண்டு அவரைப் பெருமைப் படுத்தியது.

இந்தப் பெருமையை ஏற்றுக் கொண்ட பின்பு ஜோசப் லிஸ்டர், எடின்பர்க் சென்று தனது மேல் படிப்பைத் துவக்கினார். ஏழாண்டுகள் அதே கல்லூரியில் தொடர்ந்து கல்வி கற்று வந்த அவருக்கு, அந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் சைமி என்பவரின் நட்பும், அறிவுரைகளும், ஆய்வுக் குறிப்புகளை வழங்கும் சூழ்நிலைகளும் உருவாயின.

எடின் பர்க்கில் படித்த ஆண்டுகள் ஏழு போக, மேலும் ஏழு ஆண்டுகள் அங்கேயே தங்கி, பேராசிரியர் சைமியின் நட்பால் லிஸ்டர் மிகச் சிறந்த மருத்துவர் ஆனார்.

இராயல் இன்பெர்மரி - இல் ரெசிடெஸ்ட் ஹவுஸ் என்ற கிளாஸ்கோ நகரிலுள்ள மருத்துவ மனைக்கு ஹவுஸ் உதவி சர்ஜனாகவும், பிறகு சர்ஜனாகவும் லிஸ்டர் நியமிக்கப்பட்டு பதவி உயர்வு பெற்றார். இந்தப் பதவிகள் எல்லாம் ஜோசப் லிஸ்டரின் அறிவுத் தகுதிக்கு வழங்கப்பட்ட பதவிகள் ஆகும்.

ஜோசப் லிஸ்டரின் திறமைகளை நன்குணர்ந்த பேராசிரியர் சைமி, தனது அருமைச் செல்வி ஜென்ஸ் சைமி என்பவரை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். கி.பி. 1856-ஆம் ஆண்டில் அவர்களுக்குத் திருமணமாயிற்றே தவிர, அந்த தம்பதிகளுக்குக் குழந்தைப்பேறு ஏதுமில்லை.

இருந்தாலும் 37 ஆண்டுகளாக அவர்கள் மகிழ்ச்சியோடும், லிஸ்டருக்கு விஞ்ஞானித் துறையில் உதவியாக இருக்கும் அளவுக்கு ஜென்சும் இணைந்து அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தி வந்தார்கள். லிஸ்டரின் விஞ்ஞானத் துறை எழுத்துப் பணிகளை ஜென்ஸ் சைமியே கவனித்து வந்தார். வளர்பிறைப் போல் குடும்பம் வளர்ந்து வந்தது.

ஜோசப் லிஸ்டரது திறமையைக் கேள்விப்பட்ட இங்கிலாந்து பேரரசி விக்டோரியா, கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக அவரை நியமித்தார்.

இந்த அரசு பல்கலைக் கழகத்தில் அவர் சேர்ந்த பிறகுதான் அறுவை சிகிச்சைத் துறையில் பல வழிமுறைகளை ஆராய்ந்து வெளியிட்டார்.

நோயாளிகளுக்கு வரும் வியாதிகள் மிகக் கொடியவைகளாகவும், நோயாளிகளையே பயமுறுத்துவதாகவும், ஏன் டாக்டர்களே நோயைக் கண்டு பயப்படக் கூடியவர்களாகவும் இருந்தன.

ஏனென்றால், அக்கால வசதி வாய்ப்புகள் வேறு, இக்கால வசதி வாய்ப்புகள் வேறுவேறு வகைகளாக இருந்தன. பல வகையான வியாதிகள் மனிதனைக் கடுமையாகத் தாக்கி, அவர்களது உயிர்களைப் பறிக்கும் எமன் தூதுவர்களாக அவை விளங்கின எனலாம்.

உயிர்களைப் பறிக்கும் இந்த நோய்கள், நோயாளிகட்கு மட்டுமா சிக்கல்கைள உருவாக்கின? டாக்டர்களையும் சிக்கலில் சிக்க வைக்கும் சிக்கல் சங்கிலிப் பொறி வளையங்களாக இருந்தன. எப்படி?

அறுவை சிகிச்சை முடிந்த பின்பு நோயாளிகளின் இரத்தம் விஷமாக, மாறி விடுகின்றது. அதனால் நோயாளி மரணமடைந்து விடுகிறான். என்ன காரணம் இந்த நஞ்சு மாற்றத்துக்கு?

டாக்டர்கள் இந்த ஆராய்ச்சி வளையமெனும் குகைக் குள்ளே போனவர்கள், லிஸ்டர் காலம் வரை அவர்கள் எவரும் திரும்பி வந்ததில்லை.

நாம் கூட விளையாட்டுக்காகச் சில நேரங்களில் கூறுவோமே, ஆப்பரேஷன் சக்சஸ், ஆனால் நோயாளிகள் அவுட் அதாவது ஆள் காலி என்று கிண்டலடிப்போம் அல்லவா? அது சாதாரண விஷயமன்று! நூற்றுக்கு நூறு வேதனை தரும் உண்மை ஆகும்!

பெரும் டாக்டர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, இந்த நோயின் காரணத்தைக் கண்டறிய முயன்றும், அவர்களால் முடியவில்லை. நோயாளிகள் இறந்ததுதான் மிச்சம்! யாருக்கும், எந்த டாக்டருக்கும் ஒன்றும் விளங்காத, புரியாத, மாயமாக, மந்திரமாக, சூன்யமாக, இறை குற்றமாக இந்த நோய்கள் இருப்பனவோ என்னவோ என்று, மருத்துவர்கள் திணறித் தவித்தார்கள்.

நோயாளியும் சாகிறான். அதே நேரத்தில் திறமையான டாக்டருக்கும் கெட்ட பெயர்; மருத்துவமனைக்கும் நோயாளிகள் புதிதாக சேர்ந்திடப் பெருத்த பயம் உண்டாகி வந்தது.

மனிதனுக்குள் நடக்கும் அறுவை சிகிச்சையின் ரத்த வெளியேற்றம், ஆவியாக உறைந்து போவது, கெட்ட ஆவிகளின் கெட்டச் செயல் என்றும் மக்கள் நம்பினார்கள்.

இது கடவுள் மனிதனுக்குத் தரும் தண்டனை என்று அதை விமரிசனம் செய்தார்கள்; ஆதாம் - ஏவாள் செய்த பாவம்தான் மக்களை இவ்வாறு பலி வாங்குகின்றது என்றும் கிறிஸ்துவ மத மூட நம்பிக்கைகளும் முகாரி பாடின!

நம் நாட்டில் மருத்துவமனைப் படுக்கையிலே நோயாளியாகப் படுத்துக் குணமாகி வந்தவன் மீண்டு வீட்டுக்கு வந்தால், முழுப் பூசனியை மஞ்சள் குங்குமத்தால் விகாரமாக்கி, நோயாளியின் தலையைச் சுற்றி அதை நடு வீதியிலே போட்டு உடைக்கின்றார்கள் அல்லவா? - கண்ணேறு கழிய!

அதைப் போல, அயல் நாடுகளில் வாழும் கிறித்தவர்களிடமும் இருந்தது - சில மூடக் குணங்கள்.

இதையெல்லாம் ஏற்குமா விஞ்ஞானம்? எனவே, மேலும் மேலும் ஆராய்ந்து கொண்டே மனிதன் விஞ்ஞானியாக விளங்கினான் அதன் எதிரொலிதான் லிஸ்டர்கள் தோற்றும் ஆகும்.

பண்டையக் காலத்தில் மனிதனுக்கு எவ்வாறு நடந்தது அறுவை சிகிச்சை தெரியுமா? அவற்றைக் கேட்டால் நமது நாடி நரம்புகள் எல்லாமே நடுங்கிக் கண்ணி சிந்தும்.

மனிதன் கட்டிலில் வந்து அறுவை சிகிச்சைக்காக படுப்பான். அதற்குப் பிறகு, கையிலே கொடுவாள், ரம்பம், உளி, கிடுக்கி, கொறடா, கத்திரி, ஊசி, நரம்பு நூல், கோப்பைக் கலயம், கந்தைத் துணிகளோடு நாவிதன் வருவான்.

அறுக்க வேண்டிய உடற் பகுதிகளை டாக்டர்கள் நாவிதர்களிடம் காட்டுவார்கள். மரத்தை அறுப்பதைப் போல மேல் கீழ் இரு பாகங்களிலும் இருவர் நின்று கொண்டு, கால், கைகளாக இருந்தால் வாளால் அறுப்பார்கள்; கத்தியால் வெட்டுவார்கள்! இரம்பத்தாலும் அறுப்பார்கள். 

நாவிதன் அறுத்து முடிந்த பிறகு, மறுபடியும் மருத்துவர்கள் வருவார்கள். சிகிச்சை செய்வார்கள்.இதுதான் அக் காலத்து ஆப்பரேஷன் எனப்படும் அறுவை சிகிச்சை!

இன்றைக்கு நாம் ஆடுகளை வெட்டும் தொட்டிக்கோ, அல்லது ஆட்டுக் கறி வெட்டும் கசாப்புக் கடைக்கோ சென்றால் சில உண்மைகளை நாம் நேரிலேயே காணலாம்! அதாவது, கசாப்புக் கடையைப் போலவே எல்லா வெட்டுக்களையும் கடைக்காரன் கத்திகள் நடத்தும்.

கசாப்புக் கடைக்கும் - ஆப்பரேஷன் செய்யும் மருத்துவ மனைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன தெரியுமா?

கசாப்புக் கடைகளில் கறி வெட்டும் முஸ்லிம் பாய் இருப்பார்; ஆப்பரேஷன் நடக்கும் இடத்தில் நாவிதர்கள் இருப்பார்கள்.

அங்கே ஆடு, மாடு, எருமை போன்ற விலங்குகள் அறுக்கப்படும்! மருத்துவ மனையில் மனிதர்கள் அறுக்கப் படுவார்கள்!

கசாப்புக் கடைகளில் ஆடு, மாடு, கோழிகள் கத்தும்; கதறும், துடிக்கும்; துள்ளும்; ரத்தம் பீறிட்டடிக்கும். திட்டுத் திட்டாக ரத்தம் தேங்கி நின்று காய்ந்து விடும்.

இதே வேலையைத்தான் மருத்துவ மனைகளில் மனிதர்களைத் துள்ளத் துடிக்க, ஐய்யோ குய்யோ என்ற வேதனைக் கதறலோடு கூப்பாடும் கூக்குரலும் போடுமளவுக்கு நாவிதர்கள்.

இக் காலத்தில் ஆப்பரேஷன் நேரத்தில் ‘குளோரபாம்’ கொடுக்கிறார்கள். அக் காலத்தில் நாவிதனிடமோ, மருத்துவர் களிடமோ அந்த ‘குளோரபாம்’ என்ற மயக்க மருந்தும் கிடையாது.

இரத்தம் கொப்புளிக்கக் கொப்புளிக்க, நோயாளிகள் எதிரிலேயே அவனது வியாதி உறுப்புக்களை நாவிதர்கள் அறுப்பார்கள்.

கொஞ்சம் கற்பனைக் கண்ணோட்டத்தோடு இந்தக் காட்சியைச் சிந்தித்துப் பாருங்கள். அவற்றின் கொடுமைகள், கோரங்கள், கொடுரங்கள், துள்ளல் - துடிப்புகள் உயிரீனும் காட்சிகளாகத் தெரியும். ஆனால், ஐய்யோ என்று அலறி விடாதீர்கள்!

அரை குறை நோயாளிகள் அறுவை சிகிச்சை அறைக்குள் சென்றாலே போதும். ஐயோ அறுவையே வேண்டாம் என்று எழுந்து அலறி ஓடி விடுவார்கள் - நோயாளிகள்!

கொஞ்சம் நல்வினை புரிந்தவன் ஆப்பரேஷனுக்குப் பிறகு சாவான்; தீவினைகள் செய்தவன் பதை பதைத்துக் கண்ணிர் விட்டுக் கதறி அலறி அறுவை அறுப்பது நடக்கும் போதே சாவான் இதற்குப் பெயர்தான் “ஆப்பரேஷன் சக்சஸ் பேஷண்ட் அவுட்” என்ற அறுவை கவுரமாகும்.

தான் தருமங்கள் செய்தவர்கள், அறநெறிகளோடு வாழ் பவர்கள். தெய்வ அருள் பெற்றவர்கள்தான், நாவிதர் அறுவைக்குப் பிறகும் உயிர் வாழ்வார்கள்.

சுருக்கமாகக் கூறுவதானால், பிரசவித்த பெண்ணை எவ்வாறு மறு பிறவி என்று மக்கள் வியப்பார்களோ, அதேபோல நாவிதன் அறுவை சிகிச்சையும் மறுபிறவிதான் நாவிதன் என்ன? டாக்டர்களின் தற்கால பெரிய அறுவை சிகிச்சைகளும் மறு பிறவிதானே!

அறுவை சிகிச்சை செய்து கொள்ள வருபவர்களுக்காக, லிஸ்டர் காலத்துக்கு முன்பு - தனியான உடைகள் கிடையாது; கருவிகள் எல்லாமே தூய்மையாக, சுத்தமாக இருக்கிறதா என்றும் பார்ப்பதில்லை. கசாப்புக் கடைக்காரன் இதை எல்லாம் பார்த்தா கடாக்களை வெட்டினான் - அக் காலத்தில்?

எனவே, அக்கால மருத்துவர்கள் கை கழுவிக் கொண்டு அறுவையில் இறங்குவதும் இல்லை; கத்தி போன்ற மற்ற கருவிகளைச் சுத்தமாகக் கழுவியதற்குப் பின்பு அறுவையைப் பயன்படுத்துவதும் இல்லை. 

அறுவை செய்வோர் ஆடைகளிலே எவ்வளவு அதிகமான ரத்தக் கறைகள் இருக்கின்றனவோ, அவ்வளவுக்கும் அவன் திறமையாளன் என்று பாராட்டப்பட்டக் காலம் அது. ஒவ்வொரு ரத்தக் கறையும் அவன் பெற்ற அறுவைப் பரிசாகவே நினைத்த நேரம் அது.

மேற்கண்ட கொடுமை அறுவைகளை, கோர அறுவைக் கொலைகளை,கொடூர ஆப்பரேஷன் வேதனைகளை, துள்ளத் துடிக்க அறுக்கும் மனித உறுப்புகளின் துயரங்களிலே இருந்து கடவுள் போலக் காப்பாற்றிய கருணையாளர்தான்், புதிய - புதுமைகளைப் புகுத்தி மனித இனத்தை மீட்டவர்தான்் - ஜோசப் லிஸ்டர் என்ற தெய்வத் தொண்டர்:

இந்த அருள் மேதையை, கருணை மிக்கவரை: எல்லா உயிர்களிடமும் அன்பைக் காண விரும்பிய இரக்கமுள்ள ஞானியை - நாம் என்ன சொல்லிப் புகழ்வது? எப்படிப் பாராட்டுவது? எவ்வாறு ஏற்றிப் போற்றி வழிபடுவதோ, நமக்கு புரியவில்லை!

“ஆண்டி செப்டிக் சர்ஜரி” அறுவை முறை சிகிச்சையில் புகழ் பெற்றார்!

ஜோசப் லிஸ்டர், ஆண்டி செப்டிக் சர்ஜரி என்ற நச்சுத் தடை அறுவை சிகிச்சையை முறையைக் கண்டுபிடித்தார்.

ஆயிரக் கணக்கான மனித உயிர்கள் அதனால் எந்த வித ஆபத்துக்களும் இல்லாமல் காப்பாற்றப்பட்டு வந்ததைக் கண்டு மருத்துவ உலகம் வியப்படைந்து பாராட்டியது.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் லிஸ்டருக்கு பாராட்டு

இதற்கிடையில் லிஸ்டர் லண்டனில் உள்ள கிளாஸ்கோ நகர் சென்று, அங்குள்ள மருத்துவ மனைகளைச் சுத்தம் செய்யுமாறு கேட்டுக் கொண்டர்.

இராயல் இன்பர்மெரி மருத்துவமனை லிஸ்டர் மேற்பார்வையில் இருந்ததல்லவா? அதை முதலில் அவர் பொறுப் பேற்றுச் சுத்தப்படுத்திச் சீர்படுத்தினார்.

ஜோசப் லிஸ்டர் கூறிய திட்டத்தின்படி, அதற்குப் பிறகு உருவாக்கப்பட்ட மருத்துவமனைகள் கட்டப்பட்டன.

மருத்துவ மனைகளை திறந்த வெளிகளில், நல்ல காற்றோட்டமுள்ள இடங்களில் அமைக்கப்ட்டன. அந்தக் கட்டடங்கள் அழகானத் தோற்றத்தோடும் கட்டப்பட்டன.

நோயாளிகள் கூட்டம் தினந்தோறும் அதிகமாகக் கூடுவதை, அவர் கட்டுப்பாட்டோடு நிர்வகித்தார்.

நோயாளிகளைப் பார்க்க வரும் விசிட்டர் என்ற கூட்டத்தை அவர் அளவோடு அனுமதித்தார்.

அப்போது பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற அம்மையார் நோயாளிகளைப் பராமரிப்பதில் லிஸ்டரைப் போலவே பல சீர்த்திருத்தங்களை செய்து புகழ் பெற்றிருந்தார்.

அவரும் ஜோசப் லிஸ்டரின் சுகாதார நோக்கப்படி நடக்கும் சீர்த்திருத்தப் பணிகளை வரவேற்று ஆதரித்தார்.

பழமையான, பழுதடைந்த, பேய் மனைகள் போல இருண்டு கிடந்த மருத்துவ மனைகள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன.

புதிய மருத்துவ மனைகள் பொலிவுடன் கட்டப்பட்டன. இவை எல்லாம் லிஸ்டர் ஆலோசனைப்படியே நடந்து வந்தன.

ஈதர் முறை சிகிச்சை

புதிதாக அமைந்த மருத்துவ மனைகளுக்கு வருகின்ற நோயளிகளுக்கு, புதுமையான மருத்துவ சிகிச்சை முறைகளிலே சிகிச்சைகள் நடந்தன. அவற்றுள் ஒன்று ஈதர்முறை சிகிச்சை.

அறுவை சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு ஈதர்முறை என்ற ஓர் அதிசய முறை சிகிச்சை வழங்கப்பட்டது. அதாவது,  அறுவை சிகிச்சை முடிந்ததும் – ஈதர் என்ற ஒரு புதிய மருந்தை அறுவை சிகிச்சைக்கு முன்னும், அறுவை நடந்ததிற்குப் பிறகும் கொடுத்து, நோயாளிகளை நன்றாகத் தூங்க வைத்தார்கள்.

அப்போது இருந்து நோயாளிகளுக்கு ஈதர் மருந்து கொடுப்பது என்ற ஒரு புதிய முறை அமுலுக்கு வந்து பரவ ஆரம்பித்தது.

இந்த ஈதர் முறையால், அறுவை செய்யப்பட்ட நோயாளிகள் அறுவை வலி தெரியாமல், நன்றாகத் தூங்கவும் அந்த முறை பயன்பட்டது.

இருந்தாலும், நோயாளிகள் பழையபடி அறுவை சிகிச்சைக்குப் பிறகு இறக்கும் நிலையும் ஏற்பட்டுக் கொண்டேதான் இருந்தது.

ஜோசப் லிஸ்டர் ஆலோசனைக்கு ஏற்றவாறு மருத்துவ மனைகள் கட்டப்பட்டாலும், நல்ல காற்றோட்ட வசதிகள் இருந்தாலும், மருத்துவ மனைகளை நல்ல முறையில் சுத்தம் செய்து வைக்கப்பட்டிருந்தாலும், திறமையான மருத்துவர்கள் சிகிச்சைகள் செய்திருந்தாலும், அறுவைக்குப் பிறகு மரண மடைவோர் எண்ணிக்கை மேலும் அதிகமாகவே வளர்ந்தது.

என்ன காரணம் இதற்கு? என்று ஜோசப் லிஸ்டர் சிந்தித்தார். அதற்குரிய காரணத்தை அறிந்து கொள்ள மீண்டும் அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இந்தக் காரணத்தை அறிய லண்டன் நகரத்திற்கும், எடின்பரோ நகரத்திற்கும் லிஸ்டர் சென்றார். அங்கேயும் இதே ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு காயங்களைச் சுற்றி வீக்கம் ஏற்படுவதை லிஸ்டர் கண்டார். இந்தக் காயங்களின்மேல் காற்று படாமல் இறுக்கமாகக் கட்டுக்களைக் கட்டியும் அவர் சோதனைச் செய்தார். இதில் ஓரளவு அவருக்கு வெற்றியும் புலப்பட்டது.

அப்போது ஒரு பத்திரிகையில் லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பாக்டீரியா என்ற கிருமிகளை ஆராய்ச்சி செய்து அழித்த விவரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதை லிஸ்டர் படித்தார்.

அந்த நூலை லிஸ்டர் வாங்கிப் படித்தார். அந்த நூலில் பாஸ்டியர் செய்த ஆராய்ச்சி இருந்தது. கிருமிகளைக் கொல்லும் லூயி பாஸ்டியர் சிகிச்சை முறையில் லிஸ்டருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. என்ன அந்த லூயி பாஸ்டியர் முறை?

அறுவை சிகிச்சை செய்த பிறகு, காற்றினாலும், வேறு சில பொருட்களாலும் கிருமிகள் காயத்தில் படுவதால் அந்த விஷக் கிருமிகள் நோயாளியின் காயங்கள் மூலமாக உடலில் சென்று மரணத்தை உண்டாக்கி விடுகின்றன என்பது தான் லூயி பாஸ்டிய முறை. இந்த முறையைப் படித்த லிஸ்டர் அதை மேலும் ஆராய்ச்சி செய்தார்.

நீண்ட சோதனைக்குப் பிறகு லிஸ்டர், லூயி முறையிலிருந்து வேறு ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்தார்.

கார்பாலிக் ஆசிட் பயன்

அதாவது அறுவை சிகிச்சைக்குப் பிறகு, காயத்தைக் கார்பாலிக் ஆசிட் தோய்ந்த துணிகளால் கட்டினால், காயத்திலே படிந்து விட்டக் கிருமிகள் கொல்லப்படுவதுடன், வெளியிலே உள்ள கிருமிகள் காயத்தின் உள்ள நுழையாமல் தடுக்கப்படும் என்பதுதான் ஜோசப் லிஸ்டர் கண்டுபிடித்த புதிய முறை ஆகும். இந்த சிகிச்சை முறையை லிஸ்டர் தனது பராமரிப்பில் உள்ள நோயாளிக்குச் செய்தார். அதனால், நோயாளி விரைவாகக் குணமடைந்ததுடன், மரண விகிதமும் குறையலாயிற்று.

ஒரு சிறுவன் கால்கள் மீது வண்டி ஏறியதால் அந்தச் சிறுவனுடைய கால் ஒன்று முறிந்து விட்டது. இப்படிப்பட்ட நோயாளிக்கு என்னதான் சிகிச்சையை எவ்வளவு சிரமப்பட்டுச் செய்தாலும் அவன் இறந்துதான் போவான்.

அந்தச் சிறுவனுக்கு ஜோசப் லிஸ்டர் தனது புதிய கண்டுபிடிப்பின்படி சிகிச்சை செய்தார். அவனுடைய கால் முறிவு குணமானது. எழுந்து நடக்க ஆரம்பித்தான் அவன். 

எண்ணற்ற நோயாளிகள் லிஸ்டரின் இதுபோன்ற புதிய சிகிச்சையால் உயிர் பெற்று, மரணத்திலே இருந்து மீண்டார்கள்.

இந்த முறைக்கு லிஸ்டர் வைத்த பெயர் என்ன தெரியுமா? ‘ஆண்டிசெப்டிக் சர்ஜரி’ என்று பெயரிட்டார்.

அதாவது ‘நச்சுத்தடை அறுவை’ முறை என்று அதற்குத் தமிழில் பெயரிடப்பட்டது. இந்த சிகிச்சை முறை ஆயிரக் கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றும் சக்தியைப் பெற்றிருந்தது.

மருத்துவ மனைகள் மூடப்பட்டன

கிளாஸ்கோ நகரிலுள்ள இன்பெர்மரி மருத்துவ மனையில்; லிஸ்டர் தனது புதிய முறைப்படியே நோயாளிகளுக்குச் சிகிச்சை கொடுத்து வந்தார்.

மற்ற மருத்துவ மனைகளில் உள்ள மருத்துவர்கள் தங்களது பழைய முறையிலேயே சிகிச்சையைச் செய்து வந்ததால், நோயாளிகளின் இறப்பு முறை சதவிகிதம் அதிகமாகவே இருந்தது.

ஜோசப் லிஸ்டரிடம் வரும் நோயாளிகள் உயிர் பிழைத்து நடந்து போகிறார்கள். ஆனால், மற்ற மருத்துவ மனைகளின் நோயாளிகள் இறப்பு அதிகரித்துக் கொண்டே போகின்றன என்ற காரணத்தால் மற்ற மனைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன.

லிஸ்டரின் இந்தப் புதிய ஆண்டிசெப்டிக் சர்ஜரி முறையை, மற்ற மருத்துவ மனைகளும் வேகமாகப் பின்பற்ற ஆரம்பித்து விட்டன. அதனால் மரண சதவிகிதமும் குறைந்தது; மக்கள் உயிர்களும் மீட்கப்பட்டன.

மற்ற மருத்துவ மனைகளில் மட்டும் நோயாளிகள் அதிகமாக இறந்து போவதற்கு என்ன காரணம்? என்று மருத்துவர்கள் சோதனை செய்தார்கள். அதற்கான விசாரணைக் குழுக்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டு விசாரணைகளும் நடந்தன.

முடிவு என்ன தெரியுமா? மருத்துவ மனைகள் கட்டப் பட்டுள்ள இடங்கள் சுகாதாரமற்ற இடங்கள் என்றும், மருத்துவ மனையின் அடியில் காலரா நோய் கண்டவர்கள், குஷ்டரோகிகள், ஏழை தரித்திரர்கள், வயதான்வர்கள் ஆகியோர் மரணமடைந்த பின்பு புதைக்கப்பட்ட சவங்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமென்றும், மருத்துவமனை அருகே காய்ச்சல் நோய் மருத்துவ மனைகள் இருக்கின்றமையால் நச்சுக் காற்றுகள் தாக்கி நோயாளிகள் சாகின்றார்கள் என்றும் விசாரணையின் முடிவில் காரணங்கள் கூறப்பட்டன.

லிஸ்டர் ஓர் அதிர்ஷ்டக்காரர்!

விசாரணையின் முடிவைக் கண்ட அதிகாரிகளில் சிலர், ‘லிஸ்டர் செய்த அறுவைச் சிகிச்சை நோயாளிகள் இறக்க வில்லையே, ஏன்? அந்த நோயாளிகளும் இதே மருத்துவ மனையில்தானே அறுவை செய்து கொண்டு நடந்து சென்றார்கள். இதற்குக் காரணம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பினார்கள்.

அதற்கு அந்த மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்கள் கூறிய பதில் என்ன தெரியுமா? ஜோசப் லிஸ்டர் ஓர் அதிர்ஷ்டக்காரன் என்றார்கள் - மருத்துவர்கள்!

டாக்டர் லிஸ்டர் அதிர்ஷ்டக்காரன் என்றால் நோயாளிகள் பிழைத்துக் கொள்வர். ஆனால், நாங்கள் துரதிருஷ்டக்காரர்கள்; என்ன செய்வது? எல்லாவற்றையும் லிஸ்டரே அனுபவிக்கின்றான்; என்றும் மருத்துவர்கள் கூறினார்கள்!

ஆனால், ஜோசப் லிஸ்டர் அதற்குப் பதில் என்ன சொன்னார் தெரியுமா? ‘நான் மிகவும் கஷ்டப்பட்டு ஆண்டி செப்டிக் சர்ஜரி முறையைக் கண்டுபிடித்தேன். அந்த நச்சுத் தடை அறுவைதான் எனது நோயாளிகள் உயிர்களைக் காப்பாறியது’ என்று விளக்கிக் கூறினார்.

ஜோசப் லிஸ்டர் கூறியதை எந்த மருத்துவர்களும் காது கொடுத்துக் கூட கேட்கவில்லை; அலட்சியம் செய்தார்கள். உண்மை ஒரு நாள் வெளி உலகுக்குத் தெரியத்தானே வேண்டும்? 

எந்த ஓர் உண்மைக்கும் எதிர்ப்பு ஏற்படத்தானே செய்யும்? ஏனென்றால், தனக்குத் தெரியாததை எவன்தான் தெரியாது என்று வெளிப்படையாகக் கூறுவான்?

வக்கிர குண மருத்துவர்கள்

நாளாகவாக, மருத்துவர்கள் மனம் மாறினார்கள். ஜோசப் லிஸ்டரின் முறையைப் பின் பற்றினார்கள். அவ்வாறிருந்தும், அழுக்காறு குணமுடைய ஒரு சிலர் மட்டும் லிஸ்டரின் சிகிச்சை முறையைக் கிண்டலும் - கேலியும் செய்து பின்பற்ற மறுத்து விட்டார்கள்.

லிஸ்டரின் ஆராய்ச்சித் திறமை உலகெலாம் பரவிப் புகழை உருவாக்கியது. உலக மருத்துவர்களில் பெரும்பாலோர், ஜோசப் லிஸ்டரின் அறுவை சிகிச்சையைப் பின்பற்றி எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றினார்கள்.

ஆனால், சிலர் லிஸ்டர் திட்டத்தை எதிர்த்துக் கொண்டே வாழ்ந்தார்கள். புகழில் தோற்றார்கள்!

எடின்பர்க் மருத்துவத் துறையில் ஜோசப் லிஸ்டர் 1867-ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அதற்குத் தகுதியானவர் அவர்தான் என்பதை அன்றைய மருத்துவ உலகமும் உறுதிப்படுத்தியது

அரசு மருத்துவர் பதவி நியமனம்

எடின்பர்க் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பேராசிரியராக லிஸ்டர் நியமனமான பின்பு, அவருடன் பணியாற்றிட பலர் விரும்பினார்கள். அவர்களுள் லிஸ்டருடன் படித்தவர்களே அதிகம் பேர் இருந்தார்கள்.

இங்கிலாந்து அரசியார் ஜோசப் லிஸ்டரை அழைத்து அரசு மருத்துவர் பதவியை வழங்கியதோடு, அரசியின் நேர்முக மருத்துவராகவும் அமர்த்தப்பட்டார்.

இவ்வளவு மதிப்பும், மரியாதையும் உருவானதற்குப் பிறகும் கூட, லிஸ்டரின் மருத்துவ முறைக்கு எதிர்ப்பு ஊமைக் கனலாகவே இருந்தது. இலண்டன் நகரிலும் அந்த எதிர்ப்புகள் வளர்ந்திருந்தன.

இலண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் ஜோசப் லிஸ்டர் மருத்துவப் பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டார். அங்கே பணியாற்றும்போது, தனது கண்டுபிடிப்பு முறையைப் பற்றி விளக்கமாகச் சொற்பொழிவாற்றி வந்தார்.

இலண்டன் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தாங்கள் படித்து தேர்வாக வேண்டும் என்றும், பட்டம் பெற வேண்டும் என்றும் விரும்பினார்களே தவிர, ஜோசப் லிஸ்டரின் சிகிச்சை முறையை எவரும் பின்பற்ற விரும்பவில்லை. அங்குள்ள நோயாளிகள் அறுவை சிகிச்சையால் வருந்துவதைக் கண்டு லிஸ்டர் மன வேதனைப்பட்டார்.

என்ன செய்வது, அவரவர்கள் நோயாளிகளை அவரவர் மருத்துவர்கள் தானே கவனிக்க வேண்டும். மற்றவர்களது நோயாளிகளை வலிய போய் சிகிச்சைப் பார்ப்பது தவறு என்று கருதிய லிஸ்டர், மனம் வருந்தாமல் வேறு என்ன செய்வார்?

ஜோசப் லிஸ்டரின் அறுவை சிகிச்சை முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் இலண்டனில் நிறைய பேர்கள் இருந்தார்கள். என்ன செய்வது? முதலையும் - மூர்க்கமும் பிடித்தப் பிடியை விடாதல்லவா?

இந்த மருத்துவ மனையிலிருந்த டாக்டர்கள் ரத்தக் கறை படிந்த ஆடைகளை உடுத்திக் கொள்வதிலே அதிக ஆர்வமாக இருந்தார்கள். ஏன் தெரியுமா? இந்த ஆடைக் கறைகள்தான் அவர்களுக்குரிய திறமையின் அடையாளம் என்ற நினைப்பு அவர்களுக்கு!

அவர்கள் மருத்துவம் செய்யும் மனைகள் கூட ஒரே இருட்டாகவும், அசுத்தமாகவும், பேய் மாளிகை போலவும் இருந்தன. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கேற்றவாறு ஜோசப் லிஸ்டர் நிர்வாகிகளிடம் பேசி, மருத்துவ மனையைப் புதுப்பித்தார். அந்த மருத்துவர்களையும் தங்களது ஆடைகளையும் ரத்தக்கறை இல்லாமல் அணியுமாறு வேண்டினார். 

லிஸ்டரின் இந்த முயற்சி வெற்றி பெற்று. நாளாகவாக, அவர்களும் - நிர்வாகமும் லிஸ்டரைப் பின்பற்ற ஆரம்பித்தனர். நற் பெயர் பெற்று நோயாளிகளை மரணத்திலே இருந்து மீட்டார்கள். பழைமை விரும்பிகள், மன கர்விகள், மூர்க்கத்தன மானவர்கள் எல்லோரும் மாறி விட்டார்கள். லிஸ்டர் வழிகளையே அவர்கள் பின்பற்றி வந்தார்கள்.

உலகம் முழுவதும் உள்ள எல்லா மருத்துவர்களும், மருத்துவ மனைகளும், எந்த வித எதிர்ப்புகளையும் எழுப்பாமல், ஜோசப் லிஸ்டரின் ஆண்டி செப்டிக் சர்ஜரி முறையைப் பின்பற்றினார்கள். அதனால் அவரது புகழ் அவனியெல்லாம் பரவியது.

அமெரிக்க விருது

ஜோசப் லிஸ்டர் தனது அறுவை சிகிச்சைக்குரிய புதிய புதிய ஆராய்ச்சிளை மேலும் மேலும் செய்துகொண்டே இருந்தார்.

அமெரிக்க அரசு லிஸ்டரை அழைத்தது. சிறப்பு விருந்தினராக லிஸ்டர் அமெரிக்கா சென்றார். அவரை அந்த அரசு அமோகமாக வரவேற்றுக் கவுரவித்தது.

1883-ஆம் ஆண்டில், இங்கிலாந்து ராணி, திறமையில் உயர்ந்தவர்களுக்கு வழங்கும் “பரோனெட்” என்ற பட்டத்தை கொடுத்துப் பாராட்டினார். ஜோசப் லிஸ்டர் தனது மனைவியுடன் 1893-ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டுக்குச் சென்றார். சென்ற இடத்திலே எதிர்பாராத நோய் அவரது மனைவியைத் தாக்கியதால் அவர் மரணம் அடைந்தார்.

வாழ்க்கைத் துணை நலமாக நடமாடிய ஜென்ஸ் சைமி என்ற மாதரசியை இழந்த ஜோசப் லிஸ்டர் மனம் தளர்ந்தார். வாழ்வே அவுருக்குக் கசந்தது. சூன்யமாகிவிட்ட தனது வாழ்க்கையை எண்ணி எண்ணி அவர் அனுபவித்த வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. அதனால், தனது ஆராய்ச்சி மீதே வெறுப்பானார். எதிலும் ஈடுபடாமல் நொந்த மனத்தோடுக் காலம் தள்ளினார். காரணம், அவருடைய மனைவி ஜென்ஸ் சைமி லிஸ்டரின் புகழ் வாழ்வெனும் மாளிகைக்குரிய அருந் தூணாக நின்று கொண்டிருந்ததுதான்.

அவருடைய மனத்தை மகிழ்ச்சிப் படுத்த எண்ணிய அரசு பிரசிடெண்ட் ஆஃப் ராயல் சொசைட்டிக்கு 1897-ஆம் ஆண்டில் லிஸ்டரைத் தலைவராகத் தேர்வு செய்தது. இந்தப் பதவி சாதாரணமானதன்று. உலக மக்களால் மதிக்கப்படும் மிகப் பெரிய பதவியாகும். குறிப்பாக இங்கிலாந்து மக்களாலும், அரசாலும் போற்றப்படும் முக்கியமான பதவியாகும்.

எனவே, அந்தப் பதவியை ஏற்று அதன் முன்னேற்ற பொறுப்புகளிலேயே அவருக்கு கவனம் திரும்பியது. அதற்காகத்தான் லிஸ்டருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது. இல்லையென்றால் மனைவி இழப்பிலேயே ஏக்கமாகி அவர் மாண்டு போயிருக்கக் கூடும்.

இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்டு அவர்களால் 1903-ஆம் ஆண்டில் தலைசிறந்த மருத்துவர்கள் பனிரெண்டு பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களுள் ஜோசப் லிஸ்டர் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜோசப் லிஸ்டரின் பிறந்த நாள் விழா, மிகச் சிறப்பாக இங்கிலாந்தில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவிற்கு உலக மருத்துவர்களில் பெரும்பான்மையோர் வருகை தந்து கலந்து கொண்டார்கள். விழா மிகக் கோலாகலமாக நடந்தது.

எதிர்பாரத நிலையில், ஜோசப் லிஸ்டர் என்ற அறுவை சிகிச்சை மேதை, தனது 85-ஆம் வயதில்; 1912-ஆம் ஆண்டில் மறைந்தார். அறுவை சிகிச்சை விஞ்ஞானியான ஜோசப் லிஸ்டர் உலகையே சோகத்தில் மூழ்கடித்து விட்டுக் காலமாகி விட்டார்!

ஜோசப் லிஸ்டரின் ஆண்டிசெப்டிக் சர்ஜரி எனப்படும் புதிய அறுவை சிகிச்சை முறையால் பயன் பெற்ற இலட்சக் கணக்கான நோயாளிகள், ஒவ்வொரு நாட்டிலும் கண்ணிர் சிந்தினார்கள். வாழ்க, ‘நச்சுத்தடை அறுவை’ சிகிச்சை முறை என்று மருத்துவ உலகம் இன்றும் தலை வணங்கி - அந்த மருத்துவ விஞ்ஞானியை வாழ்த்திக் கொண்டே இருக்கிறது!