மருத்துவ விஞ்ஞானிகள்/சர். வில்லியம் ஆஸ்லர்
சர். வில்லியம் ஆஸ்லர்!
(1849 - 1919)
3
உலகம் கண்ணீர் விடும் மருத்துவரானார்!
வட அமெரிக்காவில், கனடா நாட்டின் மேல் பகுதியில் டன்டாஸ் என்றோர் நகர் இருக்கிறது. அந்த நகரில் காமன் பள்ளி, கிராமர் பள்ளி என்ற இரண்டு பள்ளிக் கூடங்கள் இருந்தன. இதில் என்ன சிறப்பு என்றால், மேற்கண்ட இரு பள்ளிகளும் ஒரே கட்டிடத்தில் நடைபெற்று வந்தன என்பதுதான்.
இரண்டு பள்ளிக் கூடங்கள் ஒரே கட்டிடத்தில் இயங்கி வந்தால், அவை சுமூகமாகவோ, அமைதியாகவோ, பிரச்னைகள் அற்ற நிலையிலோ இயங்க முடியும் என்றா நினைக்கிறீர்கள்?
இந்த இரு பள்ளி மாணவர்கள் இடையே எப்போது பார்த்தாலும் ஒரே தகராறுகள் எழுந்தபடியே இருக்கும்! ஆசிரியர்கள் இடையே அடிக்கடி என்ன காரணத்தாலோ மோதல்கள் தோன்றிக் கொண்டே இருந்தன.
காமன் பள்ளி ஆசிரியர்களுக்கு, கிராமர் பள்ளி மாணவர்களைக் கண்டால் கசப்பாக இருக்கும், கிராமர் பள்ளி மாணவர்கள் காமன் பள்ளி ஆசிரியர்களைக் கண்டால் வேம்புக் குச்சியாகவே கருதுவார்கள்!
காமன் பள்ளி, கிராமர் பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்தால், டன்டாஸ் நகரையே சேறும் சகதியுமாகக் கலக்கி வருவார்கள். இறுதியாக இரு பள்ளி மாணவர்களும் மோதிக் கொண்டு ஆசிரியர்கள் மேலே பழிகளைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளும் வாடிக்கைச் சம்பவங்கள் அங்கே அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருப்பது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த பள்ளிகளிலே ஒரு சிறப்பு என்ன வென்றால், காமன் பள்ளித் தலைமை ஆசிரியரே கிராமர் பள்ளி மாணவர்களை வசை பாட ஏசல் களம் அமைத்துக் கொள்வார், எங்கே தெரியுமா அவரது வியூகம் அமைவது? கிராமர் பள்ளித் தலைமை ஆசிரியர் அறையில்தான் அவரது வசைக் களம் அமையும்! கண்டபடி வாய்க்கு வந்தவாறு வசைக் கணைகளை எய்தான் பின்பு சோர்ந்து தனது அறைக்கு வந்து அமருவார்.
ஆஸ்லரா! அடேயப்பா! மிக மோசமானவன்; குறும்பன்; போக்கிரி, கல் வீச்சாளன், சாக்கடைச் சேற்றை வாரி இறைப்பவன்; பள்ளிப் படிப்புக்கே தகுதியற்றவன்; ஆசிரியர்களிடமே அடிக்கடி மோதுபவன்; அவன் ஒருவனைக் கட்டி மேய்ப்பதை விட, ஆயிரம் பிள்ளைகளை அடக்கிப் பாடம் போதிக்கலாம். அவனுக்கு ஆசிரியனாக இருப்பதைவிட முடி வெட்டியாவது சம்பாதிக்கலாம் என்றெல்லாம் கிராமர் பள்ளி மாணவர்களுன் ஒருவனான ஆஸ்லரை இரு பள்ளி ஆசிரியர்களும் விமரிசனம் செய்வார்கள். அத்தகைய ஒரு மாணவன் ஆஸ்லர் என்பவன்!
ஆஸ்லர் என்ற மாணவனைப் பற்றிய மேற்கண்ட விமரிசனத்தில் ஒரு வார்த்தை கூட மிகையன்று நூற்றுக்கு நூறு அப்படியே உண்மையான விமர்சனங்களாகும்.
ஆஸ்லர் பள்ளியில் படிக்கும்போது மிகப் பெரிய குறும்பராகவே இருப்பார். முரடராகவும், முர்க்கராகவும், பிடிவாதக்காரராகவும், தான் பிடித்த முயலுக்கு முன்றே கால் என்று சாதிப்பவராகவும், இருப்பவர் ஆஸ்லர்! பள்ளி ஆசிரியர்களுக்கும் அவர் அடங்க மாட்டார். ஏதாவது ஒரு வம்பை நாள் தோறும் விலைக்கு வாங்கி வரும் குணமுடையவராக இருந்தார் ஆஸ்லர்!
காமன் பள்ளி தலைமை ஆசிரியர் 1860-ஆம் ஆண்டில் பள்ளி வேலை செய்யும் நாளொன்றின்போது, தனது வகுப்பறைக் குள்ளே நுழைந்தார். வகுப்பில் மாணவர்கள் ஒருவரையும் காணவில்லை, பதிலாக, ஏறக்குறைய நூறு வாத்துக்களைக் கொண்ட ஒரு வாத்து மந்தைதான் கண்டபடி கத்திக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக நடை பயின்று கொண்டிருப்பதை அந்த வகுப்பு ஆசிரியர் கண்டார்!
கோவைப் பழம் போல ஆசிரியர் கண்கள் சிவந்தன! கொந்தளிக்கும் கோபத்தால் உடலும் உதடுகளும் பட படத்தன! வகுப்பறையில் வாத்துக் கூட்டமா? எனது மாணவர்கள் வாத்துக்களா? நான் வாத்து மேய்ப்பவனா? என்னை மட்டுமா இந்த நிகழ்ச்சி அவமானப் படுத்தியது? எனது மாணவர்களை, இங்கே பணியாற்றும் ஆசிரியர்களை, ஏன் இந்த காமன் பள்ளியையே அவமானப் படுத்திவிட்ட சம்பவம் அல்லவா இது? என்று பொறிந்து தள்ளினார் அந்த வகுப்பு ஆசிரியர்-கிராமர் பள்ளித் தலைமை ஆசிரியரிடம்!
இந்த சம்பவத்தை கிராமர் பள்ளியின் பிற ஆசிரியர்களும், மாணவர்களும் வேடிக்கைப் பார்த்து வியப்படைந்து விட்டார்கள். காமன் பள்ளித் தலைமை ஆசிரியரின் உறுமலை - கர்ஜனையை அன்றுதான் இரு பள்ளிகளும் கண்டன; கேட்டன; பிரமித்தன!
கிராமர் பள்ளி ஆசிரியர்கள் வாளா விருப்பார்களா? பதிலுக்குப் பதிலாக, கிராமர் பள்ளி ஆசிரியர், கர்ஜனை செய்த ஆசிரியரைப் பார்த்து, ‘எங்கள் மாணவர்கள்தான் இந்த அடாத செயலைச் செய்தார்கள் என்பதை எந்த ஆதாரத்தைக் கொண்டு கூறுகின்றீர்? என்றார் இடி முழக்கம் கோபத்தோடு!
அதற்குக் காமன் பள்ளி ஆசிரியர், உங்களது பள்ளி மாணவன் ஆஸ்லர்தான் செய்தான்! அவனைத் தவிர வேறு எவருக்கும் இந்த அக்ரமத்தைச் செய்ய தைரியம் இருக்காது. அவன்தான் என்பதிலே எந்தவித சந்தேகமும் இல்லை என்று அடித்துப் பேசி வாதாடினார்-காமன் பள்ளி ஆசிரியர்.
உடனே ஆஸ்லரை அழைத்தார் கிராமர் பள்ளி ஆசிரியர் ஆஸ்லர் வந்ததும் அவன் அதை நான்தான் செய்தேன் என்று நெஞ்சு நிமிர்ந்துக் கூறினான்.
உடனே காமன் பள்ளி ஆசிரியர், ஆஸ்லர் உங்கள் பள்ளியில் இருக்கும் வரை இரண்டு பள்ளிகளுமே ஒழுங்காக நடைபெறாது. பள்ளியை விட்டு அவனைத் துரத்துங்கள், என்று விடாப் பிடியாக அந்தத் தலைமை ஆசிரியர் வற்புறுத்தினார்.
இருந்தாலும், கிராமர் பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி பிளைனி என்பவர் அவரை அமைதிப் படுத்தி, இனிமேல் இது போன்ற செயல்கள் நடக்காதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்; சிறுவன்தானே மன்னித்து விடுங்கள் என்று சமாதான்ம் செய்து அனுப்பி வைத்து விட்டார்.
அதற்குப் பிறகு பிளைனி, ஆஸ்லரையும் மற்ற மாணவர்களையும் அழைத்து, இவ்வாறு மீண்டும் நடக்கக் கூடாது நடந்தால் பள்ளியை விட்டு விலக்கி வீட்டுக்கு அனுப்பி விடுவேன், என்று எச்சரித்து, ஆஸ்லரை வகுப்புக்குள் போகச் சொல்லிவிட்டார்.
குறும்புக்காரன் ஆஸ்லரும், அவனது நண்பர்களும் வகுப்பறைக்குச் சென்று அமர்ந்து கொண்டார்கள்.
காமன் பள்ளியிலும் - கிராமர் பள்ளியிலும் கல்வி பயின்ற மாணவர்களும், ஆசிரியர்களும் ஓரிரு மாதங்கள் எந்தவிதச் சச்சரவோ, சண்டைகளோ, பிணக்குகளோ ஏதுமில்லாமல், ஏதோ ஓர் இணக்கமுடன் இருப்பதைப் போல குழப்பங்களற்ற நிலையைக் படித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நான் திடீரென்று காமன் பள்ளியிலே புயல் ஒன்று எழுந்தது. அப் புயல் கிராமர் பள்ளியிலும் புகுந்து ஆட்டிப்
படைத்து அலைக் கழித்து நிலை தடுமாறும் நிலையை உருவாக்கியது.
காமன் பள்ளி வகுப்பிலே இருந்த மேசைகள், நாற்காலிகள், பெஞ்சுகள், அனைத்திற்கும் இறக்கைகள் முளைத்து வீதிகளுக்குப் பறந்து வந்தன. அதே போல வகுப்பறையிலே இருந்த புத்தகங்கள், ஆவணங்கள் எல்லாமே வகுப்பறைக்குள் ருத்ர தாண்டவமாடி ஓய்ந்துக் கிடந்தன. மற்றும் சில பொருட்கள் எங்கோ ஓடிப்போய் மூலை முடுக்குகளுக்குள் முடங்கிக் கிடந்தன.
காமன் பள்ளித் தலைமை ஆசிரியர் வகுப்புக்குள்ளே நடந்த வாத்து உலாக்களைக் கண்டே குவாக் குவாக் என்று ஒலி எழுப்பியவர், இப்போது தனது வகுப்பறைப் புயலைப் பார்த்து ஆமையாகவா இருப்பார்?
பள்ளியில் அடித்த மாணவர்களது புயலில், குறுப்புக்தார மாணவனான ஆஸ்லாரையும் அடித்துச் சென்றது. அதாவது, கிராமர் பள்ளி மாணவர்களுடன் ஆஸ்லரும் வெளியேற்றப் பட்டார், பாவம்...! பதினைந்து வயது மாணவனான ஆஸ்லர் வெளியேற்றப் பட்ட செய்தி, காமன் பள்ளியையும், அதன் தலைமை ஆசிரியரையும் களிப்புக் கடலிலே மூழ்கடித்தது.
பள்ளியிலே இருந்து மாணவர்கள் வெளியேற்றப் பட்டதைக் கேள்விப்பட பெற்றறோர்கள் மனவேதனை அடைந்தார்கள். ஆனால், அந்தப் பள்ளிகளில் அடித்தது புயற்காற்று அல்லவா?
அதனால் மாணவர்களது தாய்தந்தையர்களால் ஏதும் கூறிட வாய் திறக்க முடியவில்லை. என்றாலும், அவரவர் பிள்ளைகளைக் குற்றவாளிகள் என்று கூறிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை மாதா பிதா இயல்பும் இதுதானே!
கிராமர் பள்ளியிலே இருந்து பலாத்காரமாக வெளியேற்றப் பட்ட ஆஸ்லர், பர்ரீ என்ற இடத்திலே இருக்கும் உணவு, தங்கும் விடுதி, வசதியுள்ள பள்ளியிலே சேர்க்கப்படடான். அங்கேயும் ஆஸ்லர் தனது குறும்புக் கொடியை பள்ளியளாவப் பறக்க விட்டான். அதனால் சுட்டிகள் தலைவன் என்ற பெயரை மிகச் சுலபமாகப் பெற்றான். அங்கே தங்கி அவன் கல்விக் கற்றபோது தனது வீரத்தை எல்லாம் காட்டினான்.
ஆஸ்லர் செய்கின்ற குறும்புகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருந்தன. அந்தப் பள்ளி அருகே ஸ்மித் எனபவருக்கு ஒரு தோட்டம் இருந்தது. பழங்கள் கனிந்து குலையாகத் தொங்கிக் கொண்டிருக்கும் தோட்டம். பார்ப்பவர் கண்களைப் பறித்திழுக்கும் தோட்டம் அது. அப்படிப்பட்டத் தோட்டத்திலே யாரும் நுழைவதில்லை. இது எல்லாம் ஆஸ்லர் அந்தப் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு முன்பு இருந்த நிலை.
ஆஸ்லர் அந்தப் பள்ளியில் சேர்ந்தவுடன் அத் தோட்டத்தின் நிலை மாறி விட்டது. அவனை அந்தத் தோட்டத்துக் கனிகள் கவர்ந்து இழுத்தன. பழங்கள் திருடு போயின.
தோட்டத்துக்கு உரிமையாளரான ஷெரீப் காவலைப் பலப்படுத்தினார். ஆஸ்லரும் அவனைச் சார்ந்த சுட்டி மாணவர்களும் தோட்டத்துப் பழங்களைத் திருடினார்கள். ஒரு நாள் அந்தத் திருட்டு மாணவர்கள் ஷெரீப்பிடம் பிடிப்பட்டார்கள். கடுமையான தண்டனை தருமாறு பள்ளி நிர்வாகிகளை ஷெரீப் கேட்டுக் கொண்டார்.
ஆஸ்லரும் மற்ற மாணவர்களும் தண்டிக்கப்பட்டார்கள். அதாவது, அவனும் - அவனது நண்பர்களும் பள்ளியை விட்டு நீக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பட்டார்கள். பெற்றோர்கள் என்ன செய்வார்கள் மனம் வருந்தினார்கள்.
வெஸ்டன் என்ற இடத்திலே உள்ள பள்ளிக்குக் கல்வி கற்றிட ஆஸ்லர் அனுப்பப்பட்டான். அந்தப் பள்ளி மாணவர்கள் ஆசிரியரைவிட விடுதிக் காவலனிடம் அன்பு கொண்டிருந் தார்கள். விடுதிக் காப்பாளரான ரெவரெண்ட் டபிள்யூ. ஏ. ஜான்சனும் மாணவர்களிடம் மிகுந்த அன்புடையவராக இருந்தார்.
ஜான்சனும் அவரது நண்பருமான ஜான் பவலும் நெருங்கிய நண்பர்கள். டோரொண்டாவில் உள்ள கல்லூரியில் பவல் மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். நண்பர்கள் இருவரும் தொலைநோக்கிக் கண்ணாடி மூலமாக தோட்டத்தின் இயற்கைக் காட்சிகளைக் கண்டுக் களிப்பார்கள்.
ஆஸ்லர் செய்த குறும்புகளை அந்த நண்பர்கள் கண்டு இரசிப்பார்கள். அதனால், ஆஸ்லருக்கும் அவர்கள் நண்பர்கள் ஆனார்கள். ஆராய்ச்சிக்காக பவலும் - ஜான்சனும் வெளியே செல்லும் இடங்களுக்கெல்லாம் ஆஸ்லரையும் அவர்கள் அழைத்துச் செல்வார்கள்.
எனவே, ஆஸ்லர் பள்ளி வாழ்க்கை இங்கே சற்று அமைதியாகவே காணப்பட்டது. தனது குறும்புகளை கொஞ்சம் கொஞ்சமாக அவன் குறைத்துக் கொண்டே வந்தான். ஆஸ்லர் கல்லூரி வாழ்க்கையில் ஏதோ ஒரு மாறுதலும் ஏற்பட்டது.
ஆஸ்லர் நுண்ணறிவினைப் பவல் பாராட்டுவதோடு இராமல், தான் செய்யும் ஆராய்ச்சிகளையும் ஆஸ்லரை விட்டே செய்யச் செய்வார். இவரும் அந்த ஆராய்ச்சி வேலைகளைப் பொறுப்புடன் செய்து வந்தார்.
அறிவுள்ள பையன்கள்தான் எப்போதும் குறும்பர்களாக இருப்பார்கள். அன்பினால் அவர்களைத் திருத்திவிட முடியும் என்பதற்கு அடையாளமாக ஆஸ்லரிடம் அந்த இரு நண்பர்கள் பழகி வந்தார்கள். உளநூல் விதியும் இதுதானே! அதற்கு எடுத்துக் காட்டானான் ஆஸ்லர்.
ஜான்சன், பவல் நட்பால் ஆஸ்லர் ஓர் உயர்ந்த மனிதனாக எதிர்காலத்தில் திகழ்வான் என்பதற்குச் சான்றானான் ஆஸ்லர். அதற்கேற்ப அவனது ஆராய்ச்சிப் பணிகளும் விளங்கின. எனவே, விஞ்ஞான ஆராய்ச்சி முறைகளில் அவன் தேர்ச்சி பெற்று வந்தான்.
அந்தக் கல்லூரிக்கு ஒரு புதிய பெண் வார்டனை நியமித்தது கல்லூரி நிர்வாகம். அவள் மாணவர்களை அடக்கி ஆள்வதில் திறமையானவள். அதனால் மாணவர்களுக்குப் பெண் வார்டன் போக்குப் பிடிக்கவில்லை. காரணம், அவள் சிறு தவறுகளை மாணவர்களிடம் கண்டுவிட்டால்கூட, உடனே பெரிய தண்டனைகளை வழங்கும் சுபாவமுடையவளாக இருந்தாள். அதனால் அந்தப் பெண் வார்டனுக்குத் தக்கப் பாடம் கற்பிக்க மாணவர்கள் திட்டமிட்டார்கள்.
அந்தத் திட்டத்தை மற்ற மாணவர்கள் ஆஸ்லரிடம் ஒப்படைத்தார்கள். இவருக்கும் சில நாட்கள் குறும்புகளைச் செய்யாமல் இருந்த போக்கு, என்னமோ போல இருந்தது. அதனால் வார்டனுக்குப் பாடம் கற்பிக்கும் திட்டத்தை ஆஸ்லர் ஏற்றுக் கொண்டார்.
மாணவர்களின் சிலரை அழைத்துப் புகையிலை, மிளகு முதலிய பொருட்களை கொண்டு வரச் சொன்னார் ஆஸ்லர். அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டார். கொஞ்சம் நெருப்புத் துண்டங்களைப் பாத்திரத்திலிட்டு ஊதினார். பெரிய வார்டனான ஜான்சன் மகன்களையும் உதவிக்கு அழைத்துக் கொண்டார்.
அவர்கள் உதவியால் பெண் வார்டரை ஓர் அறையில் தள்ளிப் பூட்டி விட்டார். ஏற்கனவே தயாரக வைத்திருந்த நெடி கிளப்பும் புகையிலைப் புகையை, பூட்டப்பட்ட அறையிலுள்ள ஒரு துவாரம் வழியாக ஆஸ்லர் செலுத்தினார். புகை அறைக்குள் வட்ட மிட்டது. மேலும் மேலும் அந்தப் புகையை அறைக்குள் அடர்த்தி யாகப் போக வைத்தனர் ஆஸ்லரும் - அவரது மாணவ நண்பர்களும்.
அந்தப் பெண் வார்டன் புகை வந்த துவாரத்தை ஒரு துணியால் அடைத்துப் புகை அறைக்குள் வராதவாறு தடுத்தார். உடனே மாணவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் துவராத்தைக் குத்திக் குத்தி அடைக்கப்பட்ட துணியைக் கீழே தள்ளி விட்டார்கள். ஆனால், புகை அறைக்குள் ஏராளமாகப் புகுந்து விட்டது. அந்தப் பெண் மூச்சு திணறலுக்குள் சிக்கிப் பெரிதும் துன்பப்பட்டாள்.
திக்கு முக்காடிய அந்தப் பெண் இருமி இருமி, குய்யோ முறையோ என்று ஓலமிட்டுத் தன்னைக் காப்பாற்றும்படிக் கூச்சலிட்டாள்.
பெண் வார்டனது கூச்சல் ஓசையைக் கேட்ட தலைமை ஆசிரியர் ஓடோடி வந்து பெண் வார்டனைக் காப்பாற்றியபோது அவள் மயங்கி அறைக்குள்ளே விழுந்து கிடந்தாள்.
மாணவர்களது இந்தச் செயல் டிரினிடாட் கல்லூரிப் பொறுப்பாளர்களுக்குப் பெருத்த வேதனையைக் கொடுத்தது. ஆஸ்லர் தான் இதற்குக் காரணம் என்பதை அறிந்த நிர்வாகம் அவரைக் கடுமையாகத் தண்டித்தது. ஆனால், பள்ளியை விட்டு நீக்காமல் ஜான்சன் ஆஸ்லரைக் காப்பாற்றி விட்டார். இதனால் ஜான்சனும் - பவலும் அவரிடம் பழகுவதை நிறுத்திக் கொண்டார்கள்.
நண்பர்கள் இருவரும் ஆஸ்லரிடம் நட்புக் கொள்ளாமல் நிறுத்திக் கொண்டதைக் கண்டு ஆஸ்லர் மன வருத்தமடைந்தார். பேராசிரியரும் ஜான்சனும் ஆஸ்லர் தவறை மன்னித்து முன்பு போலவே அவர்கள் இருவரும் ஆஸ்லரிடம் பழக ஆரம்பித்தார்கள். ஆஸ்லர் மனமும் மாறியது.
மனம் திருந்திய ஆஸ்லர், எந்த மாணவருடனும் பேசாமல், தானுண்டு - கல்வியுண்டு என்ற நிலையில் நடந்து வந்த மனமாற்றம், ஜான்சனுக்கும் - பவலுக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கியது.
ஆஸ்லர் முன்பைவிட மாணவ ஒழுக்கத்தில் மனம் மாறி இருந்தாலும், குறும்புகள் செய்தாலும் அதைத் திறமையோடு செய்பவராக இருப்பதையும் கண்ட மற்ற மாணவர்கள், ஆஸ்லரிடம் மரியாதை காட்டி மதிக்க ஆரம்பித்தார்கள்.
குறும்பு செய்தாலும் சரி, படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி, விஞ்ஞான ஆராய்ச்சியிலும் சரி, ஆஸ்லர் ஓர் அறிவாளியாகவே திகழ்ந்தார். இவர் வட அமெரிக்காவில் கனடா என்ற நாட்டில், டன்டாஸ் நகரில் 1849-ஆம் ஆண்டு பிறந்தார்.
ஆஸ்லர் குடும்பம் வசதியான குடும்பமும் அன்று; சாதாரணமான ஒரு குடும்பத்தில்தான் அவர் பிறந்தார். அவரது தந்தை தனது மகனை எதிர்காலத்தில் ஒரு சிறந்த மனிதனாக்கி, அவர் மூலமாகத் தனது குடும்பத்தை முன்னேறச் செய்ய வேண்டும் என்ற எண்ணமுடையவராக இருந்தார்.
ஆனால், தனது மகன் குறும்பனாக இருந்தாலும் அதை அவர் பொறுத்துக் கொண்டு, கல்வியில் முன்னேறிட தன்னால் இயன்ற எல்லா வசதிகளையும் செய்து வந்தார்.
ஆஸ்லர் சிறு பருவத்திலேயே கிறிஸ்த்துவ வேதமான பைபிளை விரும்பிப் படிப்பார். பைபிளைப் படிக்காமல் தூங்கவே மாட்டார். அவ்வளவு மதப் பற்றாளராக அவர் திகழ்ந்தார்.
குறும்புத்தனங்களால் அடிக்கடி அவர் பள்ளிகள் மாறினாலும், பைபிளைப் படிப்பதில் மட்டும் மாற மாட்டார். வார்டர் ஜான்சன் ஆஸ்லர் செய்த குறும்புத்தனத்தை மன்னித்து கல்லூரியை விட்டு வெளியேற்றாமல் தடுத்தார் என்றால், அது ஆஸ்லரது பைபிள் ஞானத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்திருந்ததால்தான்.
ஆஸ்லரிடம் இருந்த பைபிள் பற்றைக் கண்ட ஜான்சன், இவன் எதிர்காலத்தில் ஒரு பைபிள் போதிக்கும் கிறித்துவப் பாதிரியாராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அதனால், மத சம்பந்தமான கல்வியைக் கற்கச் சொல்லி அவரை ஜான்சன் வற்புறுத்துவார். டொரோண்டோ பல்கலைக் கழகத்தின் மதப் பிரிவுத் துறையில் சேர்ந்து படிக்குமாறு அவர் அறிவுறுத்தி வந்தார். ஆஸ்லர் தனது 18-வது வயதில் டொரோண்டோ பல்கலைக் கழக்ததில் சேர்ந்தார். அங்கேதான் ஜேம்ஸ் பவல் பேராசிரியராகப் பணி புரிந்தார்.
ஆஸ்லர் 1867-ஆம் ஆண்டில், டொரோண்டா பல்கலைக் கழகத்தில் கிறித்துவ மதப் போதனை சம்பந்தப்பட்ட சமயத் துறை பிரிவில் சேர்ந்து படித்து வந்தார்.
ஜேம்ஸ் பவல் என்ற மருத்துவப் பேராசிரியருடைய தொடர்பு அவருக்குக் கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்டதாலும், மருத்துவ, விஞ்ஞான ஆராய்ச்சியைப் பவலுடன் சேர்ந்து செய்து வந்த பழக்கத்தாலும், ஆஸ்லருக்கு மதத் துறைக் கல்வி மீது அவ்வளவாக விருப்பம் உண்டாகவில்லை.
பல்கலைக் கழக நேரத்தின் பெரும்பகுதியை ஜேம்ஸ் பவல் என்ற பேராசிரியருடன் சேர்ந்து விஞ்ஞான ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டு வந்தார் ஆஸ்லர்!
பேராசிரியர் ஜேம்ஸ் பவல் ஆராய்ச்சித் துணையோடு, நுண்பெருக்கி ஆடியில் பொருளை வைத்து ஆராய்ந்து கண்ட உண்மைகளைப் பேராசிரியரிடம் கூறுவார்.
அவர் மதக் கல்வி மீது நாட்டம் கொள்ளாமல், விஞ்ஞானத் துறையில், அதிலும் மருத்துவ விஞ்ஞானத் துறையில் - தனது அறிவைச் செலுத்தி, அதற்கான கல்வியை ஏற்றுக் கற்று வந்தார்.
ஜேம்ஸ் பவலும், ஆஸ்லரை மருத்துவ விஞ்ஞானத்தையே படிக்குமாறு துண்டி விட்டார். அதனால் ஆஸ்லர் மதத் துறைக் கல்வியை விட்டு வெளியேறி, மருத்துவ விஞ்ஞானத்தில் சேர்ந்து படித்தார்.
★★★
மருந்து முறைகளை கண்டு பிடித்தார்
மதப் படிப்பில் விருப்பம் இல்லாமல் வெளியேறிய ஆஸ்லர், 1870-ஆம் ஆண்டில் எவரெஸ்ட் இண்டிக்கா என்ற நகர் சென்றார். அப்போது அவருடைய அன்பு நண்பர் பேராசிரியர் பவல் இல்லை. தனிமையிலே இருந்தார்.
எப்படியாவது மருத்துவத் துறைக் கல்வியைக் கற்றாக வேண்டும் என்ற எண்ணத்திலேயே தனது சிந்தனை முழுவதையும் செலவழித்தார். பிறகு எப்படியோ தந்தை விரும்பியவாறு மாண்ட்ரி என்ற நகரருகே உள்ள மக்கில் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மருத்துவக் கல்வி பெற்றார்.
மருத்துவப் படிப்புக்கு அக்காலத்தில் பலத்த எதிர்ப்பும் இருந்தது; மதிப்பும் இருந்தது. மாணவர்கள் அதிகமாக மருத்துவக் கல்வியிலேதான் சேர்ந்தார்கள். எண்ணிக்கையில் மாணவர்கள் அதிகம்தான். என்றாலும், மாக்மிலன் கல்லூரி செய்து கொடுத்திருந்த வசதிகள்தான் அதற்குக் காரணமாகும். மக்கில் கல்லூரி மாணவர்கள் நடைமுறைகளைக் கற்பதற்காக ஒரு மருத்துவ மனையும் இருந்தது. அத்துடன் ஆய்வுச் சாலை ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.
அந்த நேரத்தில் பேராசிரியர் பவல் கற்றுக் கொடுத்திருந்த ஆராய்ச்சித் திறன் இப்போது ஆஸ்லருக்குப் பெரிதும் பயன்பட்டது; உதவியாகவும் அமைந்தது. தன்னோடு படிக்கும் மாணவர்களைவிட ஆராய்ச்சித் துறையில் ஆஸ்லர் வல்லவராக இருந்ததைக் கண்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்களே வியந்தார்கள்.
ஆஸ்லர் ஆராய்ச்சித் திறன் வளர்வதற்குரிய காரணம், மருத்துவத் துறையிலே இருந்த எல்லாவித வசதிகளும் ஆகும்.
ஆஸ்லரின் மருத்துவக் கல்லூரி வாழ்க்கை, முன்பிருந்த அவரது கல்வித் துறையைவிட எல்லா வகையிலும் முற்றிலும் மாறுபட்டிருந்தது. பழையக் குறும்புக்கார மாணவான இந்த மருத்துவத் துறை மாணவன் என்று ஆஸ்லரைக் காண்பவர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தார்கள்? அந்த அளவுக்கு அவரது சுபாவங்கள் எல்லாமே மாறி விட்டன.
எந்த மாணவனுடனும் ஆஸ்லர் சேர்வதில்லை. தனித்தே உண்ணல், தனித்தே உறங்கல், தனித்தே படித்தல், தனித்தே சிந்தித்தல், தனித்தே பொழுது போக்கல் என்ற வகைகளிலே ஆஸ்லர் தனிமையை வளர்த்துக் கொண்டார். இவையே ஒரு பெரிய மனம் மாற்றம்தானே!
மருத்துவம் சம்பந்தப்பட்ட தொடர்பான நூல்களை அவர் படிப்பார்; அதில் கூறப்பட்ட அடிப்படைக் கருத்துக்களோடு உழல்வார்; இவ்வாறு பொறுப்பற்ற பருவத்தில் பொறுப்புடைய மருத்துவச் சிந்தனையாளராகச் சிறந்தார்.
தந்தையார் கண்ட கனவு கொஞ்சம் கொஞ்சமாக நனவாகி வந்தது ஆஸ்லருக்கு. யாராவது அவருடைய பழைய மாணவர்கள் அவரைப் பார்க்க வருவார்களானால், ‘புத்தக நிலையத்திற்குப் போய் பாருங்கள், மாணவர்கள் இல்லாத நேரத்தில் ஆராய்ச்சி சாலைக்குள்ளே சென்று பாருங்கள், மருத்துவ மனைக்குப் போங்கள் - நோயாளிகளிடம் பேசிக் கொண்டிருப்பார் என்று குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு ஆஸ்லர் தன்னை பழக்க வழக்கப்படுத்திக் கொண்டார்.
கற்ற மருத்துவக் கல்வியும், நோயாளிகளைக் கவனிக்கும் முறையும், மருத்துவத் துறைப் பேராசிரியர்களிடம் பெற்றுக் கொண்ட மருத்துவ அறிவும், ஒவ்வொரு நோய்களது வரலாறும் அதனதன் மருந்து முறைகளும், நோய்த் தடுப்பு நுட்பங்களும் ஆஸ்லருக்கு ஏராளமாகக் கை வந்துவிட்டதன் அனுபவப் பலன்களால் 1872-ஆம் ஆண்டில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார்!
இலண்டன் நகரத்தில் - குறும்புக்காரன், காலித்தனம் செய்பவன், கடைவீதி வணிகர்களிடம் எப்பேதும் மல்லுக் கட்டிக் கொண்டு, சண்டையும் - சச்சரவும் போட்டுக் கொண்டே தகராறுகளைச் செய்பவன்; வீதிகளிலுள்ள சாக்கடைச் சேறுகளை வருவோர் போவோர் மேல் வாரி வீசி வம்பு செய்பவன் என்றெல்லாம் பெயர் எடுத்தவன் இராபர்ட் கிளைவ் என்ற போக்கிரிக் குறும்பன்.
அவன் வாலிபன் ஆனான்; கிழக்கு இந்தியக் கம்பெனி என்ற வணிக நிறுவன ராணுவப் படைகள் தளபதியானான்! அவனை அந்த நிறுவனம் இந்திய நிறுவனத்துக்கு அனுப்பியது. தமிழ்நாடு வந்தான் - பிரிட்டிஷாரின் கிழக்கு இந்தியக் கம்பெனியின் தளபதிகளுள் ஒருவனாக, அவன் கீழ் ஓர் இராணுவப் படை பலமும் இருந்தது.
சாக்கடைச் சேற்றை இலண்டன் வீதியின் சாக்கடைகளிலே இருந்து வாரிவாரி வீசிய அந்தக் குறும்புக்காரன்தான், போக்கிரிதான்; முரடன்தான்; மூர்க்கன்தான்; இந்தியாவிலே பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தை உருவாக்கிட கால்கோள் விழா நடத்திக் கோட்டைக் கொத்தளங்களைச் சென்னை நகரில் உருவாக்கி, பிரெஞ்சு, டேனிஷ், போர்ச்சுகல் படைகள எல்லாம் விரட்டி விரட்டி அடித்து, சூரியன் மறையாத ஆங்கிலேயேர் சாம்ராச்சியத்துக்கு அடிப்படையிட்ட மாவீரனானான் - இராபர்ட் கிளைவ், பிரிட்டிஷ் வரலாறு இன்றும் அவனை வாழ்த்திக் கொண்டிருக்கின்றதைச் சரித்திரத்தில் படிக்கின்றோம்.
அந்த மாவீரன் இராபர்ட் கிளைவ் போலவே, இந்த ஆஸ்லரும் இளம் வயதிலே முரடனாக, மூர்க்கனாக, குறும்பனாக, போக்கிரியாக, வம்பனாக வாழ்ந்து நாள்தோறும் சண்டைச் சச்சரவுகளைச் செய்து கொண்டிருந்தான் - வட அமெரிக்காவின் மேல் பகுதியில் உள்ள கனடா நாட்டின் டன்டாஸ் என்ற நகரில்.
அந்தக் குறும்பன், சுட்டிப் பயல்களின் தலைவன், வம்பு சண்டைகளை வரவேற்று தண்டனைகளை அனுபவித்தவன் தான் வில்லியம் ஆஸ்லர் அவன் இப்போது மருத்துவ படிப்பின் மேதையாக டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறான் என்றால் இது என்ன சாதாரணமான சம்பவம் ஆகுமா?
டைபாய்டு, இதய நோய், காலார போன்ற நோய்களை அழிப்பதற்கான மருந்துகள், தடுப்பு முறைகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து உலகுக்கு மருத்துவக் கொடையாக வழங்கினான் என்றால் - இது என்ன வேடிக்கை செயலா? விளையாட்டு வினைகளா? சற்றே எண்ணிப் பார்ப்போருக்குத்தான் வில்லியம் ஆஸ்லரின் மருத்துவத் திறமையை, வாழ்க்கை முன்னேற்றத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
வில்லியம் ஆஸ்லர் மருத்துவ விஞ்ஞானத்தில் பட்டம் பெற்று மருத்துவரானது மட்டுமன்று; அதற்கு மேலும் என்ன கல்வி கற்கலாம் என்று சிந்தனை செய்தார். தொட்டனைத்துறும் மணற்கேணி தானே கல்வி? அதனைக் கற்றனைத்துறும் போதெல்லாம் அறிவு சுரக்கத்தானே செய்யும்? அதற்கேற்றவாறு, இலண்டன், பாரீஸ், பெர்லின், வியன்னா போன்ற பெரும் நகரங்களுக்கு எல்லாம் ஆஸ்லர் சென்றார்.
அங்கங்கே இரண்டாண்டுகள் தங்கிப் படித்து, தனது மருத்துவத் துறை அறிவுக்கு அனுபவம் தேடிக் கொண்டதோடு, அந்தந்த நாடுகளிலே வாழும் புகழ்பெற்ற மருத்துவ ஞானிகளைச் சந்தித்துக் கலந்துரையாடி தலைசிறந்த மருத்துவத் துறை டாக்டர் என்ற பெயரையும் - புகழையும் அவர் பெற்றார்.
அனுபவக் கல்வியும், ஏட்டுக் கல்வியும் ஒரு சேரப் பெற்ற வில்லியம் ஆஸ்லர்; இறுதியாக இங்கிலாந்து நாடு வந்து இலண்டன் நகரிலே தங்கி, மருத்துவத் துறையிலே ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
இலண்டன் நகரில் ஆஸ்லர் தங்கி இருக்கும்போது, இரத்தத் தின் இயற்கை தன்மை என்ன? என்பதை, ஆராய்ச்சி செய்து ஒரு புதிய தத்துவத்தை 1874-ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.
உடனே மக்கில் பல்கலைக் கழகம் வில்லியம் ஆஸ்லரைக் கனடாவுக்கு அழைத்தது. தனது பல்கலைக் கழகத்து மருத்துவத் துறையிலேயே ஒரு விரிவுரையாளராக நியமித்துக் கொண்டது. ஆஸ்லர் அந்தப் பணியை தனது முயற்சிக்குரிய வெற்றிப் படிக்கட்டாகக் கருதி ஏற்றுக் கொண்டு உழைத்தார்.
விரிவுரையாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஆஸ்லர், மருத்துவத் துறையில் மாணவர்கள் மென்மேலும் முன்னேற வேண்டும் என்ற அக்கறையால், தாம் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்ற விஞ்ஞான வேட்கை வளர்ச்சியோடு, மாணவர்களுக்கு வகுப்பில் பாட போதனைகளைச் செய்து - அவர்களது அன்பைப் பெற்று வந்தார். அதனால் ஆஸ்லரிடம் பயிற்சி பெற்ற மருத்துவ மாணவர்களிடம் அவர் ஓர் அபூர்வ பிறவி என்ற புகழைப் பெற்றார்.
மருத்துவ விரிவுரையாளர் பணியில் ஆஸ்லருக்குப் போதிய வருமானம் வரவில்லை. என்றாலும், மேலும் சில புதிய ஆராய்ச்சிகளைச் செம்மையாகச் செய்ய முடியாததை உணர்ந்த ஆஸ்லர், தனியாக, சொந்தமாகத் தனது தொழிலைச் சில மாதம் நடத்திப் பார்த்தார்.
அதுவும் அவருக்கு மன நிறைவை அளிக்காததால், ஏழைகளுக்கு இலவசமாக ஏதாவது சிகிச்சை அளிக்கலாம் என்ற முயற்சியில் முனைந்தார்.
எந்தத் தொழிலிலும் அவருக்குரிய வருவாயும் வரவில்லை. புதியன எதுவும் கண்டுபிடிக்கவும் வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொண்ட ஆஸ்லருக்கு, மருத்துவத் தொழிலைச் செய்வதைவிட, மருத்துவ ஆராய்ச்சிகளைச் செய்யலாம் என்ற ஆர்வம் வந்தது. அதனால் செய்து கொண்டிருந்த மருத்துவத் தொழிலையும் அவர் கை விட்டார்.
மருத்துவ ஆராய்ச்சியில் ஆஸ்லர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, நோயாளிகள் அவரிடம் சிகிச்சைக்காக வந்தால், அவர் உடனடியாக அவர்களைக் கவனிப்பதும் இல்லை. அதனால் சலிப்படைந்த நோயாளிகள் சிகிச்சைக்காக ஆஸ்லரிடம் வருவதில்லை. இந்த மாதிரியான சம்பவங்களால் அவரிடம் வரும் வாடிக்கையாளர்கள் வேறு மருத்துவகளிடம் சென்றுவிடும் காரணத்தால், அவருக்குரிய பண வருவாயும் குறைந்து விட்டது.
ஒருவனுக்கு வந்துள்ள நோய்கள், அதன் தன்மைகள், நோய் ஏன் வந்தது? என்ன காரணம்? அதைத் தடுக்க முதல் வழி என்ன? மருந்துகள் என்னென்ன? தடுப்பு முறைகள் எவை யெவை? அதற்கான உணவு முறைகள் யாவை? என்பவற்றை எல்லாம் நோயாளிகளின் உடல்களிலே உள்ள நோயைக் கொண்டே ஆஸ்லர் ஆய்ந்து அறிவார்.
அதே போலவே, இறந்தவனின் உடலை எடுத்து, உடலின் திசுக்களை நுண்பெருக்கிக் கண்ணாடி மூலம் ஆராய்ச்சி செய்வார். உடல் இறப்பது ஏன்? இறப்பு உண்டாவது எப்படி? என்றும் அறிவதற்காக ஆராய்ச்சியில் தன்னையும் மறந்து ஈடுபடுவார்.
இந்த ஆய்வில் ஊனை மறப்பார்; உறக்கத்தை இழப்பார்; எதையும் பொருட்படுத்தாமல் அதே சிந்தனையிலேயே சிலை போலாகி விடுவார்.
ஆஸ்லர் குறும்புக்காரர்தான், வம்படி வழக்காடுபவர்தான், எதிலும் சுறுசுறுப்பும் பரபரப்பும் கொண்ட சுபாவிதான். என்றாலும், ஆராய்ச்சியிலே ஆஸ்லர் ஈடுபட்டால், அவர் பொறுமை பூமிக்குக்கூட இருக்காது! அவ்வளவு பொறுப்புடைய பொறுமையாளராக ஆராய்ச்சி செய்பவர் அவர்.
அதனால்தான், டைபாய்டு, ஜூரம், காலரா எனப்படும் வாந்திபேதி, இதயம் சம்பந்தப்பட்ட வலிகள், நோய்கள் அதன் கொடுமைகள், தடுப்பதற்கான மருந்துகள், தடுப்பு மருத்துவ முறைகள் ஆகியவற்றை எல்லாம் வில்லியம் ஆஸ்லர் கண்டுபிடித்து வெற்றி பெற்றார்!
மருத்துவ உலகத்தில் அவருக்கென ஒரு தனியான தகுதியான மரியாதை மதிப்பு, புகழ், கைராசி மருத்துவர் என்ற வாழ்த்துக்கள் எல்லாம் தானாகவே அவரைத் தேடி நாடி வந்தன.
மனசாட்சிக்கு விரோதமில்லாத தனது ஆராய்ச்சித் திறமையால்,நோய்கள் வந்தால் அதை விரைவாகக் குணப்படுத்தும் முறையினைக் கையாள்வார் ஆஸ்லர். இந்த முறையை முதன் முதலாகக் கண்டுபிடித்தவரும் வில்லியம் ஆஸ்லர்தான்.
இவ்வாறு ஆஸ்லர் கண்டுபிடித்ததின் பயனால், மருத்துவ விஞ்ஞானத்தில் பண்டைய மருத்துவ முறையைக் கையாளாமல், புதிய முறைகளைப் புகுத்தினார். இதனாலும், ஆஸ்லர் புகழ் பெற்றார். இந்தப் புகழும் - பேரும் மருத்துவத் துறை முழுவதும் பரவியது.
மாண்ட்ரியல் பொது மருத்துவமனையில் பயிற்சி பெற்றவர் அல்லரா ஆஸ்லர்? அதனால் அந்த மருத்துவமனையிலே அந்த நிர்வாகம் அவரை மருத்துவராக நியமித்தது.
ஆஸ்லர் அந்த மருத்துவமனையில் மருத்துவராக நியமனம் செய்யப்பட்ட பின்புதான், அந்த மருத்துவமனை மக்களிடம் பெரும் புகழ் பெற்று விளங்கியது. இவர் வந்த பிறகுதான் அங்கே புதுப் புது மருத்துவ முறைகள் கையாளப்பட்டன. மக்கள் நல்வாழ்வு வாழ்வதற்கான சிகிச்சை முறைகள் புகுத்தப்பட்டன. பொது மருத்துவமனையில் அன்று வரைக் கையாளப்பட்ட பழைய மருத்துவ முறைகள் எல்லாம் அகற்றப்பட்டு நவீன முறைகள் நடமாடின.
மருத்துவ மனைகளைப் பற்றி மக்களிடம் உலாவிய வெறுப்புகள், அருவருப்புகள், நோயாளிகளிடம் குடி கொண்டு இருந்த பய உணர்வுகள் அனைத்தும் அகற்றப்பட்டவை மட்டுமல்ல; நோயாளிகள் தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதையும், வீடுகளில் இருந்து கொண்டே சிகிச்சை பெறலாம் என்ற எண்ணத்தையும் - ஆஸ்லர் மக்களிடமிருந்து அகற்றினார்.
மருத்துவ மனைகளை அதற்கேற்றவாறு மாற்றி அமைத்தார். நோய் கண்டவர்கள் சிறிது அளவு மருந்து உண்டாலே போதும் என்ற மனநிறைவை உருவாக்கியது மட்டுமன்று வந்த நோயும் வந்த வழி தெரியாமல் ஒட வைக்கும் மருத்துவத்தையும் ஆஸ்லர் கையாண்டார்.
அதனால் வருகின்ற நோயை விரைவாகக் குணப்படுத்தும் ஆஸ்லர் மருத்துவ நிர்வாகத்தைக் கண்ட பொதுமக்கள், பெரிதும் ஆச்சரியப்பட்டு அவரது திட்டத்தை வரவேற்றார்கள்! வாழ்த்தினார்கள்:
எல்லாவற்றையும் விட, வில்லியம் ஆஸ்லர் மருத்துவத் துறையில் பொது மக்களுக்காகச் சாதித்திட்ட அக்கறையும், அருமையும் என்ன தெரியுமா?
நோயாளர்களுக்கு வந்துவிட்ட நோயை விரைவாகக் குணமாக்குவதோடு, அந்த நோய் எக் காரணத்தைக் கொண்டும் அதே நோயாளியிடம் திரும்பி வரக்கூடாது என்ற திட்டத்தோடு தனது மருத்துவ முறையை ஆஸ்லர் இயக்கினார்.
இந்தத் திட்டத்தின் நுட்பத்தையும், மக்கள் சேவையின் மாண்பையும் கண்ட, மருத்துவத் துறையின் மற்ற டாக்டர்கள் எல்லாம் - வில்லியம் ஆஸ்லரை வாயாரா, மனமார, வாழ்த்தி மரியாதை காட்டினார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
வில்லியம் ஆஸ்லரின் பொது மக்களது மருத்துவ சேவை களை அமெரிக்கக் கண்டம் மட்டுமா வரவேற்றது? வாழ்த்தியது? உலகமே அவரது அறிவுக்குத் தலை வணங்கி வரவேற்றது.
எனவே, ஆஸ்லரின் உலகப் பாராட்டுதல்களையும், வரவேற்பையும் பார்த்த இங்கிலாந்து நாடு, அவரது அறிவைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பியது.
இலண்டன் மாநகரிஸ் அமைந்துள்ள “ஃபெல்லோ ஆஃப் தி ராயல் காலேஜ் பிஷிசியென்ஸ்” என்ற நிறுவனம் உலகத்திலே புகழ் பெற்றதாகும்.
ஆஸ்லரின் மருத்துவ விஞ்ஞானப் புதுமைக் கண்டு பிடிப்புக்களுக்குப் பெருமை செய்வதின் அடையாளமாக, வில்லியம் ஆஸ்லரை நிறுவனத்தின் உறுப்பினராக 1892-ஆம் ஆண்டு பதிவு செய்து பாராட்டி மகிழ்ந்தது. அதனால் அவரது புகழ், மேதினியளவில் மேலும் மேன்மையானது.
மிக்கிங் பல்கலைக் கழகத்திலே இருந்த தனது விரிவுரையாளர் பதவியை ஆஸ்லர் 1894-ஆம் ஆண்டில் துறந்தார். பிலடெல்பியாவில் பென்சில்வேனியா என்ற பல்கலைக் கழகம் உலகப் பிரசித்திப் பெற்ற ஒன்று.
அதில் பேராசிரியர் பதவி பெற்றிட ஆஸ்லர் பிலடெல்பியா சென்றார். பேராசிரியர் பதவியைப் பெற்று மருத்துவ விஞ்ஞானத்துக்காக அரும்பாடு பட்டார். அங்கே ஆராய்ச்சியிலே அயராது உழைத்தார்.
வில்லியம் ஆஸ்லர் கண்டுபிடித்த புதுமைகளாலும், மருத்துவ விஞ்ஞானத்தில் அவர் புதிய முறைகளோடு சிகிச்சைகளைச் செய்து வந்ததாலும், சிறிதளவே மருந்தளித்து, நோயை விரைவாகக் குணப்படுத்தும் மருத்துவத் திறமையாலும், ஒரு தரம் ஒருவனுக்கு வந்த நோய் மறுமுறை வராமல் தடுக்கப்படும் மருத்துவ உயர்நிலை சிகிச்சை முறைகளாலும், மலேரியா, டைபாய்டு, இதய நோய் ஆகிய நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளைக் கண்டுபிடித்து உலகுக்கு வழங்கியதாலும், நோய்களைத் தடுப்பதற்குரிய மருந்துகளையும், மருத்துவ முறைகளையும் கண்டுபிடித்தக் காரணத்தாலும், அவர் வகித்த பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் பதவி மூலமாகச் செய்திட்ட மக்களுக்குரிய மருத்துவத் தொண்டுகளாலும், மருத்துவத் துறையில் வில்லியம் ஆஸ்லர் தமக்கனெ ஓரிடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இதற்கிடையில் அமெரிக்காவில் புதியதோர் பல்கலைக் கழகம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதற்கு ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் என்று பெயர். அதில் மருத்துவப் பணி புரிய உலகத்தில் புகழ் பெற்ற மருத்துவ பேராசிரியர்கள் தேவைப் பட்டார்கள்.
பால்டிமோர் என்ற இடத்திலே தோற்றுவிக்கப்பட்ட அந்த பல்கலைக் கழகத்தின் தலைமைப் பதவிக்கு வில்லியம் ஆஸ்லர்தான் தகுதியானவர் என்று அந்த நிர்வாகம் நினைத்ததால் அவரையே நியமித்தது. பல்கலைக் கழகத் தலைமைப் பொறுப்பிலே இருந்த ஆஸ்லர், எல்லாவித வசதிகளையும் கொண்டதோர் மருத்துவ மனையினைப் பல்கலைக் கழகம் அருகிலேயே கட்டி முடித்து மக்களுக்கான மருத்துவ உதவிகளையும் செய்தார்.
அன்றுவரை அவர் ஆராய்ச்சி செய்த கருத்துக்களை, அந்தப் பல்கலைக் கழக மருத்துவ மாணவர்கள் கற்கும் வகையில் நூற்களாக வெளியிட்டார். அந்த நூல்கள் அவரது அருமை பெருமைகளை இன்றும் உலகுக்கு அறிவித்துக் கொண்டே இருக்கின்றன.
பல துறைகளில் அந்தப் பல்கலைக் கழகம் உயர, ஆஸ்லர் இரவும் - பகலுமாக உழைத்து வந்ததுடன் நில்லாமல், தனித்த முறையில் நோயாளிகளுக்குரிய சிகிச்சைகளையும் செய்து வந்தார். சுருக்கமாகக் கூறுவதானால், ஆஸ்லர் ஒரு தேனீ போலத் தனது மருத்துவப் பணிகளை ஆற்றினார்.
தன்னலம் கருதாத இவரது உழைப்பையும், மனப்பான்மை யும், பணியாற்றும் ஆர்வமும் மற்ற மருத்துவர்களுக்கு ஒரு பொதுப் பாடமாகத் திகழ்ந்து வந்தது.
பதினாறு ஆண்டுகளாக அந்தப் பல்கலைக் கழக வளர்ச்சிக்காக ஆஸ்லர் அரும்பாடு பட்டதால், அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டாலும், அந்தப் பல்கலைக் கழகத்தை உலகில் உயர்ந்த பல்கலைக் கழகமாக உயர்த்திக் காட்டி விட்டார்.
பால்டிமோர் பல்கலைக் கழகத்தைச் சிறப்பாக முன்னேற்றி காட்டிவிட்டப் பிறகு, அங்கே இருந்து புறப்பட்டு ஆக்ஸ்ஃபோர்டு வந்து சேர்ந்தார். பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், நிர்வாகமும், கல்வி கற்கும் மாணவர்களும் வில்லியம் ஆஸ்லரைக் கண் கலங்கிப் பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்த காட்சிகள். அவரது உழைப்புக்கு எடுத்துக் காட்டாக அமைந்தன.
இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திற்கு வில்லியம் ஆஸ்லர் வந்தபோது, ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடைய முடி சூட்டு விழா நடைபெற்றது.
அந்த விழாவின்போது வில்லியம் ஆஸ்லருக்கு, இங்கிலாந்து பிரபுக்களுக்கு வழங்கப்படும் ‘பாரனெட்’ என்ற விருதை ஐந்தாம் ஜார்ஜ் கொடுத்தார்.
1914-ஆம் ஆண்டில் உலகப் பெரும் போர் ஆரம்ப மானதால், திருமதி ஆஸ்லரும் தனது கணவனுடன் சேர்ந்து போர்க் கால மருத்துவப் பணிகளை இருவரும் செய்து வந்தார்கள்.
அப்போது வில்லியம் ஆஸ்லருடைய 70-வது பிறந்த நாள் விழாவை இங்கிலாந்து அரசு கொண்டாடி மகிழ்வித்தது. அன்றை பத்திரிக்கைகள் ஆஸ்லர் வாழ்க்கை வரலாற்றை எழுதிப் பாராட்டின.
ஆஸ்லர் பிறந்த நாள் விழா நடைபெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, மருத்துவ விஞ்ஞான மேதை சர். வில்லியம் ஆஸ்லர் கி.பி. 1919-ஆம் ஆண்டில் எதிர்பாராமல் திடீரெனக் காலமானார். உலகமே துக்கத்தில் மூழ்கியது.
சாதாரண ஒரு குடும்பத்திலே பிறந்து, வளர்ந்து, குறும்பராக, வம்பராக, அரட்டை அடிக்கும் மாணவராக விளங்கிய வில்லியம் ஆஸ்லர், உலகப் புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானி என்ற சிகரத்தை அடைந்து - ஈடில்லாத மருத்துவ மன்னர் என்ற புகழைப் பெற்று மறைந்தார். அந்த மருத்துவ ஞானியின் உழைப்பு நமக்கெல்லாம் ஒரு பாடம் அல்லவா?
வில்லியம் ஆஸ்லரின் மருத்துவ சேவைகளை உலக மருத்துவர்களால் இன்றும் புகழப்படும் அளவிற்கு நிலைத்து நின்று கொண்டிருக்கின்றது. ஆஸ்லர் கண்டுபிடிப்புகள் மூலம்தான் புதிய மருத்துவ உலகம் தோற்றுவிக்கப்பட்டது. அவரது புதிய மருத்துவ முறைகள்தான் இன்றும் மருத்துவ உலகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது. மருத்துவ உலகின் மாற்றத்திற்கு, மறுமலர்ச்சிக்கு வில்லியம் ஆஸ்லர்தான் இன்றும் மகானாக காட்சி தருகிறார்.
மருத்துவ விஞ்ஞானியாக விளங்கிய வில்லியம் ஆஸ்லர்; தனது சொந்த பணத்தில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்தவர்; எவரையும் சுடு சொல்லால் சுடமாட்டார்; இரக்க குணம் உடையவர்; குடிகாரர்கள் அவரிடம் குடிக்கக்கூட பணம் கேட்பார்கள். குடியை விட்டுவிட்டால் பணம் கொடுக்கிறேன் என்ற ஆணையைப் பெற்ற பின்பே, குடியர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பும் குணம் உடையவராக இருந்தார்.
இவ்வாறு பணம் பெற்ற ஒரு குடிகாரன், “தான் இறந்த பின்பு தனது ஈரலை ஆஸ்லருக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்யச் சொல்லுங்கள்” என்று எழுதிக் கொடுத்து விட்டே மருத்துவ மனையில் உயிர் நீத்தான் என்றால், ஆஸ்லரின் ஆராய்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தது பாருங்கள். அவ்வாறு குடிக்காரர்களுக்கும் இரக்கம் காட்டியவர்.
வில்லியம் ஆஸ்லர் தனது இறுதிக் காலத்தில் எல்லாரிடமும் அன்போடும், மனித நேயத்தோடும் பழகினார். பிறருக்குத் தொல்லைகளையே கொடுத்து வாழ்ந்த அந்த மனிதகுல மேதை அவர் சாகும்போது மக்களைக் கண்ணிவிட வைத்த மகிழ்ச்சியை உண்டாக்கி விட்டே மறைந்தார்.
மருத்துவ மேதைகளில் இப்படிப்பட்ட உழைப்பாளரை, மறுமலர்ச்சி சுபாவம் உடையவரை, புதுமையான மருத்துவ முறைகளால் மக்கள் இதயத்தைக் கவர்ந்து பாராட்டு பெற்ற ஒரு கடமைக் கருணையாளரை, எதைச் செய்தாலும் அது தெய்வத் தொண்டு என்று போற்றிய கண்ணியமான மக்கள் மருத்துவச் சீலரை, உலகமே போற்றி புகழுமளவுக்கு மருத்துவஞானியாக உழைத்தவரை நாமும் போற்றிப் புகழ்வதுதானே மனிதநேயம்?