மருத்துவ விஞ்ஞானிகள்/சர். ரொனால்டு ரோஸ்

விக்கிமூலம் இலிருந்து



சர். ரொனால்டு ரோஸ்
(1857 - 1932)



4
மலேரியா மர்ம நோய் அல்ல;
அதற்கு மூல காரணம் கண்டவர்!


மனிதனுடைய இன்றைய நாகரிக வளர்ச்சிக் காலத்திலும் கூட, எண்னற்றக் கொடிய நோய்கள் அவனைத் தாக்கிக் கொன்று கொண்டேதான் இருக்கின்றன.

இந்தக் கொடிய நோய்களை ஒழித்துக் கட்டிட மனித குலம் இன்று வரைப் போராடிக் கொண்டேதான் இருக்கின்றது. எத்தனையோ அறிஞர் பெருமக்கள் தோன்றி அந்த நோய்களை ஆணிவேரோடு அழித்திட போராடியே வருகிறார்கள்.

அத்தகைய மருத்துவ விஞ்ஞானிகளுள் சர்.ரொனால்டு ரோஸ் என்பவரும் ஒருவர். அவர் மலேரியா என்னும் மிகக் கோரமான காய்ச்சல் வியாதியை ஒழித்து மனித சமுதாயத்தைக் காப்பாற்றிய மருத்துவ மன்னராகத் திகழ்ந்துள்ளார்.

மலேரியா என்ற கொடிய காய்ச்சல்; பெரும்பாலும் வெப்பம் அதிகமான நாட்டில்தான் தோன்றுகிறது. குளிர் அதிகமான இடங்களில் மலேரியா பெரும்பாலும் அதிகமாக வருவதில்லை. இந்திய நாட்டை அடிமையாக்கி ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்கள்; இந்தியாவிலே தோன்றும் காலரா, பிளேக் மலேரியா, அம்மை நோய்கள் ஆகியவற்றைக் கேள்விப்பட்டு, அதன் தாக்குதல்களைக் கண்டு அஞ்சியே வாழ்ந்து. அதற்கான மருத்துவ சிகிச்சைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி, தங்களையும் இந்திய மக்களையும் காப்பாற்றியவர்கள் ஆவர்.

படைபலம் கொண்ட நாட்டார் கூட மலேரியா காய்ச்சலைக் கண்டு நடுங்கியே வாழ்ந்திருக்கிறார்கள் என்றால், அந்த நோய் எவ்வளவு கடுமையாக இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய நோய்களுள் ஒன்று.

கிரேக்கர்களும், ரோமானியர்களும், ஆப்பிரிக்க நாட்டினரும், இங்கிலாந்துக்காரர்களும், பிரெஞ்சு நாட்டினரும் மலேரியா, காலரா, அம்மை போன்ற நோய்களால் அவதிப்பட்டு வாழ்ந்திருக்கிறார்கள்.

மஞ்சள் காமாலை நோய், சீனர்களையும், ஜப்பானியர் களையும் எரிமலை போல பூகம்பம் போல பயமுறுத்திக் கொண்டே இருந்தது.

மலேரியா, காலரா, போன்ற நோய்கள், ஈக்களாலும், கொசுக்களாலும் தான் நாட்டில் தோன்றிப் பரவுகின்றன. கொசுக்கள் எங்கே அதிகமாக வாழ்கின்றதோ, அங்கே எல்லாம் மலேரியா என்ற கடுங் காய்ச்சல் தோன்றும் என்ற உண்மையை முதன் முதலாகக் கண்டறிந்தவர் டேவிட் லிவிங்ஸ்டன் என்பவரே ஆவார்.

சாக்கடை நீர்த் தேக்கங்களிலும், அசுத்த தண்ணீரிலும், ஏரிக் கரையிலும், ஆற்று முகத்துவாரங்களிலும், கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகும் என்பதையும்; லிவிங்ஸ்டன் தான் கண்டுபிடித்தார். எனவே, பெரும்பாலும் சதுப்பு நிலப்பகுதிகளில் தான் கொசுக்கள் பிறக்கும் - வாழும் என்றும் அவர் கூறினார்.

மூட நம்பிக்கைகளை அதிகமாகப் பின்பற்றி வந்த மக்கள், மலேரியா நோயை ஒரு மாய நோய், தெய்வக் குற்றத்தால் வரும் தொற்றுநோய் என்று நம்பி, அதற்கான தெய்வ வழிபாடுகளையும் செய்து வந்த ஒரு காலமும் இருந்தது. குறிப்பாகக் கூறுவதானால் காலரா, அம்மை நோய்கள் தெய்வ கோபத்தால் மனித சமுதாயத்தில் தோன்றி; மக்களைக் கொன்று வருகிறது என்ற நம்பிக்கை இன்றும் தமிழ் நாட்டில் இருந்து வருகிறது.

அந்த தெய்வக் கோபத்தின் சீற்றத்தைத் தணிக்க; ஆடி மாதங்களில் மாரியம்மன் வழிபாடுகளைச் செய்து, கருவாட்டுக் குழம்பையும் கூழ்வகை உணவுகளையும் படையலிட்டு, அம்மன் சடங்குகளையும் பய பக்தியோடு செய்து, ஏழை மக்களுக்கு கூழ் வார்த்தல் என்ற விழாவையே நடத்தி கூத்துக்களையும் வருகின்றோம். இந்த தெய்வக் கோபத் தணிப்பு விழாவைத் தமிழ்நாட்டில் இன்றும் அதிகமான அளவில் நாம் மட்டும்தான் நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.

அதற்கேற்ப, சித்திரை, வைகாசி, ஆணி, ஆடி மாதங்களான வெப்பம் அதிகமான மாதங்களில், ஈக்கள், கொசுக்கள் கூட்டம்; ஒவ்வொரு அசுத்த இடங்களில் அதிகமாக, கூட்டம், கூட்டமாக மொய்த்துக் கொண்டிருப்பதையும் நம் பார்க்கின்றோம். அந்தக் கூட்டங்களை ஒழிக்க வேப்பம் இலைகளையும், மஞ்சள் நீரில் நனைத்து வீடு முழுவதையும் தெளித்துச் சுத்தப்படுத்து கின்றோம்.

அம்மை நோய், காலரா, எனப்படும் வாந்தி பேதி, மலேரியா காய்ச்சல் போன்ற நோய்கள், சதுப்பு நில விஷக் காற்றின் மூலமும், ஈரக் காற்றின் மூலமும், அசுத்தமான சாக்கடை நீர் நிலைத் தேக்கங்களின் மூலமும் வருகின்ற நோய்கள் தான்் என்று சுகாதாரம் அறிந்த அறிஞர்கள் கூறுகிறார்கள். நாம் அவர்கள் கூற்றை நம்பாததால், அவற்றை எல்லாம் தெய்வக் கோபங்களால் உண்டாகும் நோய்களே என்று நம்பி, ஆயிரக் கணக்கான மக்கள் உயிர்கள் பலியாகிக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம்.

மலேரியா அறிகுறிகள்

குறிப்பாக, மலேரியா எனும் கடுங்காய்ச்சல் நோய் அறிகுறிகளை மக்கள் உணர்வதில்லை. மலேரியா காய்ச்சல் வந்தால் உடம்பு நடுங்கிக் கொண்டிருக்கும்; உடம்பில் சூடு பிடிக்க முடியாது; சிறிது நேரமானதும் காய்ச்சல் தோன்றும்; வெப்பம் அளவு அதிகமாகக் காணப்படும், திடீரென்று காய்ச்சல் மாறி, வியர்வை அதிகமாக வியர்க்கும்; பிறகு காய்ச்சல் நின்று விடும். ஆனால் நோய் தணியாது. இரண்டு மூன்று நாட்களானதும் மீண்டும் காய்ச்சல் விட்டு விட்டுத் தோன்றும்; இந்த அறிகுறிகளுக்குப் பிறகு நோய் கண்டவன் இறந்து விடவும் கூடும். அவ்வளவு சுலபத்தில் மலேரியா நோய் குணமடையாது.

சிங்கோனா: கொய்னா!

மலேரியா எனும் கடும் காய்ச்சல் நோய்க்கு மருந்து கொய்னா என்ற மருந்து, இந்த மருந்து சிங்கோனா என்ற மரப் பட்டைகளிலே இருந்து தயார் செய்கிறார்கள்.

மலேரியா காய்ச்சலுக்கு மருந்து கொய்னா. என்றாலும், அந்த நோய்க்குரிய மூல காரணம் என்ன என்பதைக் கண்டறிய முடியாமலே இருந்தது. ஒரு மர்ம நோய் என்றே மக்கள் அதை நினைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த மர்ம நோயை விவரமாகக் கண்டறிந்தவர்தான் சர். ரொனால்டு ரோஸ் என்ற மருத்துவ விஞ்ஞான மேதை. அந்த வரலாற்றை சற்று விவரமாகவே காண்போம்!.

சர். ரொனால்டு ரோஸ் என்று மருத்துவ விஞ்ஞானி 1857 - ஆம் ஆண்டு மே மாதம் 13 - ஆம் நாள், இந்திய நாட்டிலுள்ள அல்மோரா என்ற ஊரில் பிறந்தார்.

ரோஸ் இளமையும் - கல்வியும் !

ரொனால்டு ரோஸ் தந்தை 1857-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து நடைபெற்ற சிப்பாய் கலகம் எனும் போரில், இந்திய சுதேச மன்னர்களை அடக்குவதற்காக அனுப்பப்ப்ட்ட ஆங்கிலேயர் படை ஒன்றுக்குப் புகழ் பெற்றத் தளபதி பொறுப்புை ஏற்று இந்தியா வந்த ஓர் ஆங்கிலேயர் ஆவார்.

ரோஸ் முன்னோர்களில் சிலர் சிப்பாய்களாகவும், வணிகர் பெருமக்களாகவும் இருந்தவர்கள் மட்டுமல்ல; இந்தியாவின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர்களும் ஆவர்; ரோசுடன் பிறந்தவர்கள் பத்துபேர், அவர்களுள் இவர்தான் மூத்தவர்.

இந்தியாவில் பிறந்தவர் ரோஸ் என்பதால், அவர் குழந்தைப் பருவத்தில் இந்தியாவிலேயே வளர்ந்தார். அதற்குக் காரணம், அவரது தந்தையார் இந்தியாவில் ராணுவ தளபதியாகப் பணியாற்றியதுதான்.

பள்ளியில் சேர்க்கும் வயது வந்ததும்; ரோஸ் இங்கிலாந்துக்குச் சென்று இலண்டனில் உள்ள ஓர் ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டுக் கல்வி கற்றார்.

ரோசை ஒரு புகழ்பெற்ற மருத்துவராக்க வேண்டும் என்று அவர் தந்தை கருதினார். ஆனால், ரோஸ் மருத்துவப் படிப்பில் நாட்டமற்றவராகவே கல்வி பயின்று வந்தார்.

ரோஸ் ஓர் இலக்கியப் பிரியர், கவிதை, கதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ளவராகத் திகழ்ந்து வந்தார். தந்தை படைத் தளபதி அல்லவா? அவர் மூத்த மகன் விவகாரத்தில் சற்றுக் கண்டிப்பானவராகவே இருந்தார். அதனால், தனது தந்தையின் கண்டிப்புக்கு அஞ்சி மருத்துவர் கல்வியையே அவர் பயின்று வந்தார்.

இலண்டனில் உள்ள செயிண்ட் பார்தலோ மியஸ் கல்லூரியில் 1874-ஆம் ஆண்டு மருத்துவ மாணவனாகச் சேர்ந்தார். காரணம், தந்தையின் கண்டிப்பான கல்வி முறைதான். இருந்தாலும், தந்தையார் எண்ணத்தைத் தட்டமுடியாமல், அவர் மருத்துவ மாணவராகப் படித்து வந்தார். மருத்துவர் பட்டமும் பெற்றுவிட்டார்.

ரோஸின் சிந்தனைகள்

மருத்துவக் கல்வியில் விருப்பமற்றவராக ரோஸ் இருந்தது போலவே, அவர் மருத்துவராகவும் பணியாற்றிட விருப்பம் அற்றவராகவே விளங்கினார்.

தந்தையின் கண்டிப்புக்கேற்ப, ரோஸ் 1881-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியா வந்து சேர்ந்தார்; மருத்துவராகவும் பணியாற்றினார். மருத்துவத் தொழிலில் பற்றற்று இருந்த ரோஸ், எப்போதும், எதையாவது ஒன்றை எண்ணியபடியே இருந்தார். இருந்தாலும்; வேலையின்றி வீண்பொழுதைக் கழிக்கமாட்டார். அலைபாய்ந்த எண்ணத்தோடு நேரத்துக்கொரு பணியைச் செய்து கொண்டே இருப்பார். மருத்துவத் துறையும் அதற்கேற்றார் போலவே அமைந்திருந்தது.

இளம் வயதில் கவிதை, கதை கட்டுரைகளை எழுதிப் பழக்கப்பட்டிருந்த ரோஸ், அப்போது அதே சிந்தனையில் கவிதை, சங்கீதம், கதை, கட்டுரைகளை எழுதுவதிலே தனது ஒய்வுக் காலத்தைச் செலவிட்டார்.

பிரெஞ்சு, ரோமன், இத்தாலி, ஜெர்மன் போன்ற மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார். தனக்குரிய சங்கீதக் கலையையும் கற்றார். ரோஸ் போகும் இடங்களுக்கு எல்லாம் பியானோ சங்கீதக் கருவியையும், இலக்கிய நூல் வகைகளையும் எடுத்துக் கொண்டே போவார்.

மனப் பயிற்சியில் பெற்ற அநுபவம் போலவே, உடற் பயிற்சியிலும் மனதைச் செலுத்திச் சிறப்புப் பெற்றார் ரோஸ். பொழுது போக்குக்காக, போலோ, டென்னிஸ் விளையாட்டுக் களை விளையாடுவார். மீன் பிடிக்கும் தொழிலில் விருப்பம் உடையவரானார்.

இவ்வாறு தனக்கு விருப்பப்பட்ட கலைகளிலே எல்லாம் ரோஸ் கவனம் செலுத்தி வந்ததால், அவருக்கு மருத்துவத் தொழில் வேலைகள் அதிகரித்தன. இதைப் பற்றி அவர் கூறும்போது, “நான் இனிமேல் வேலை செய்ய முடியாது. ஏனென்றால், குதிரைகள் சேணம் கட்டி பல நாட்கள் ஆயின” என்றார். ‘நான் புத்தகங்களைப் படிக்க முடியாதவனாக இருக்கின்றனே’ என்றும் கவலை அடைந்தார்.

இவற்றை எல்லாம் நாம் பார்க்கும்போது, ரோசுக்கு மொழித் துறையிலேதான் அதிக விருப்பமும் - அக்கறையும் இருந்ததாகத் தெரிகிறது. மருத்துவத்தை இரண்டாம் துறையாகத்தான் எண்ணி தொழில் செய்யலானார்.
ரோஸ் செய்த : மலேரியா ஆய்வு

நல்ல காலமாக, ரோஸ் புலமையாளராக மாறியிருந்தால், மருத்துவத் துறை பெரும் தொழில் நுட்ப நட்டத்தைத்தான் பெற்றிருக்கும். மலேரியா நோய் இவரால் ஒழிக்கப்பட்டது என்ற நிலை ஏற்பட்டிருக்காது அல்லவா?

ரோஸ் மனசாட்சி உடையவராக விளங்கினார். அதனால் தான், தந்தை விரும்பிய மருத்துவத் துறைக்கு அரும்பாடுபட்டார் எனலாம். அந்தத் துறைக்கே முழு நேர ஆராய்ச்சியாளராகவும் அவர் பயன்பட்டார்.

தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட தொழிலை அவர் வெற்றிகரமாக முடிக்கும் மனோதிடமும், ஊக்கமும், ஆக்கமும் உடையவராகவே உழைத்தார் ரோஸ் என்றால் - அது மிகையுமன்று.

மனித இனத்திற்குப் பெரும் பகையாக விளங்குவது நோய். அது எந்த நோயாக இருந்தாலும் பகை பகைதானே என்ற சிந்தனை உடையவராகவே ரோஸ் இருந்தார். அதற்காக, நோய்களின் காரணங்களை, அதன் பொருளை ஆழமாக உணர்ந்து, புரிந்து செயல்பட்டால் நோய்களை ஒழித்துவிட முடியும் என்ற பொதுவானக் கருத்து அவர் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. அதனால் தான், இந்திய மக்களை வாட்டி வதைத்துக் கொன்றொழிக்கும் மலேரியா நோயின் உற்பத்திக் காரணங்களைக் கண்டறிய முனைந்தார் ரோஸ்.

ரோஸ் குடியிருந்த வீடு ஒரு பெரிய மாளிகை போன்ற தாகும். அதைச் சுற்றிப் பூந்தோட்டம் உண்டு. அந்த மாளிகையின் பலகணி விளிம்புகளில் பூந்தொட்டிகள் அதிகமாக வைக்கப் பட்டிருந்தன. அவை அழகுக் காட்சிக்காக அடுக்கடுக்காகப் பரப்பப்பட்டு இருந்தன.

அவற்றை ரோஸ் தினந்தோறும் பார்த்து, அந்த மலர்களின் அழகுகளை ரசிக்கும்போது, பூந்தொட்டிகளில் ஏராளமான கொசுக்கள் செடிகள் மீதும் பூக்கம் மேலும் மொய்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தார்.
கொசு விரட்டியின் ஆராய்ச்சி!

கொஞ்சம் கொஞ்சமாகப் பூந்தொட்டிகள் மேல் பறந்து பறந்து மொய்த்துக் கொண்டிருந்த கொசுக்கள், நாளடைவில் வீட்டிற்குள்ளும் புகுந்து கடிக்க ஆரம்பித்து விட்டன. அதனால் அவரது பெற்றோர்களுக்கும், சகோதரர்களுக்கும் இரவு உறக்கமே கெட்டுவிட்டது. கொசுக்களை விரட்டுவதுவே அவர்களது இரவு வேலைகளாகிவிட்டது.

இந்தக் கொசுக்களை எப்படி விரட்டுவது என்று ரோஸ் அப்போதுதான் சிந்திக்க ஆரம்பித்தார். அதனால் சன்னல்களிலே வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை அப்புறப்படுத்தினார் ரோஸ்.

கொசு விரட்டியாகவே நாம் இருந்தால், மருத்துவப் பணி கெட்டு விடுமே என்று எண்ணிய ரோஸ், கொசுக்களை விரட்டுவதற்காகவும், அது சம்பந்தப்பட்ட பூந்தொட்டிகளைக் கண்காணிப்பதற்காகவும் ஒரு பணியாளை நியமித்தார். அவரையும் பயன்படுத்திக் கொண்டு இரவு நேரங்களில் கொசுக்களை விரட்டிக் கொண்டே இருந்தார். எவ்வளவு நேரம் தான் இப்படியே கண்விழித்து விரட்டிக் கொண்டிருக்க முடியும் கொசுக் கும்பல்களை?

கொசுவைக் கொல்வது : ஹிம்சை தொழில்!

வேலைக்கு அமர்த்தப்பட்ட பணியாள் சற்று இரக்க சுபாவம் உடையவனாக இருந்தான். அவனுக்கு இந்த கொசு விரட்டும் வேலை அறவே பிடிக்கவில்லை. காரணம், ஓர் உயிரை அடித்துக் கொல்வது பாவம் என்று அவன் எண்ணினான்.

ஒரு நாள் அந்த வேலைக்காரன் ரோசிடம், ‘ஐயா, நாம் இயற்கையை எதிர்க்கக் கூடாது. கொசு படைப்பு இயற்கையின் உற்பத்தி! அதை அடித்துத் துன்புறுத்துவது மகா பாவம்! கொசுவால் ஏற்படும் துன்பங்களை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டுமே ஒழிய, அவற்றைக் கொல்லக் கூடாது என்று அகிம்சை உபதேசம் செய்வது போல பேசினான். அதைக் கேட்டுக் கொண்ட ரோஸ், கொசுக்களை அடித்துக் கொல்லும் பாவத்தை நான் சுமந்துக் கொள்கிறேன் என்று கூறியபடியே, அவன் எதிரிலேயே கொசுக்களைத் தனது கைகளால் தட்டித்தட்டிக் கொன்றார், விரட்டிக் கொண்டே இருந்தார் ரோஸ்.

மறுபடியும் அதே வேலையாள், “கொசுக்களை அழிப்பது இயற்கையை நாம் அழிப்பதற்குச் சமம். இயற்கை கொடுக்கும் துன்பங்களைப் பொறுப்பது நமது கடமை” என்றான்.

ரோஸ் பெருங்கோபம் கொண்டார். “மனிதனைத் துங்கவிடாமல் தொல்லைகளைத் தரும் கொசுக்கள், மூட்டைப் பூச்சிகள் முதலியவற்றை அழித்துத்தான் ஆக வேண்டும். உன்னைப் போன்ற முட்டாள்களை நான் கண்டதில்லை. போ, உனது மற்ற வேலைகளைப் போய் கவனி” என்று கூறிய ரோஸ், கொசுக்களை அடித்துக் கொண்டே இருந்தார்! ஓசைகள் கேட்டன; ஒன்றிரண்டு கொசுக்களும் அடிபட்டு தரையில் வீழ்ந்தன.

கொசுவை அழிப்பது எப்படி?

அடித்து அடித்து ஓய்ந்து போன கைகளோடு ரோஸ், சற்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டார். எவ்வளவு நேரத்துக்கு இப்படி அடித்துக் கொண்டே இருப்பது? இரவு முழுவதுமா? உறக்கம் கெட்டா? என்றவாறு கொசுக்களை ஒழித்துக்கட்ட என்ன வழி என்று சிந்திக்க ஆரம்பித்தார்!

எப்படி இந்தக் கொசுக்கள் தோன்றுகின்றன? எங்கிருந்து உற்பத்தியாகின்றன? அந்தக் கொசுக்கள் மக்களைக் கடிப்பதால் வருகின்ற தீமைகள் எவை? கொசுக்களில் எத்தனை வகை இருக்கின்றன? அவை ஒன்றா? பலவா? என்றெல்லாம் ஆராயத் துவங்கினார் ரோஸ்!

கொசுக் கூட்டத்தை அடித்து விரட்டிக் கொண்டிருந்த ரோஸ், இப்போது அந்தக் கொசுக்களை ‘சார்வர்’ கொடுத்து வளர்க்க ஆரம்பித்துவிட்டார். இந்த எண்ணம் ரோசுக்கு வந்ததின் காரணமே, அவருடைய நெடு நாட்கள் சிந்தனையால்தான்! எனவே, தனது ஆராய்ச்சியினால், கொசுக்களில் ‘கிரே சலர்’ கொசு என்றும், ‘கடி வாளம்’ உள்ள கொசு ஒரு வகை என்றும், இரு வகையான கொசுக்கள் உயிர் வாழ்வதாக உணர்ந்தார் ரோஸ்!

கொசுக்களைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்த ரோஸ், அதனுடன் தொடர்பான, கொசுக் கடிகளால் உருவாகும் ‘மலேரியா’ என்ற கடும் காய்ச்சல் நோயையும் கண்டுபிடித்தார் அவர். மருத்துவத் துறையை வெறுத்து வந்த ரோஸ், தனது தந்தையின் கண்டிப்பால் மருத்துவத் துறையில் ஈடுபட்ட ரோஸ், இப்போது தனது முழு உணர்ச்சியால் அவரே கொசு அழிப்பு வேலையில் மும்முரமாக இறங்கி விட்டார்.

கொசு உடலில் கரும்புள்ளிகள்!

பிரெஞ்சு இராணுவ மருத்துவராக அப்போது இருந்த ‘அல்போன்சேலாவன்’ என்பவர், 1878-ஆம் ஆண்டில், ‘மலேரியா நோய் கண்ட மனிதனுடைய ரத்தத்தில் சில கரும்புள்ளிகள் இருக்கின்றன. இந்தக் கரும்புள்ளிகளே மலேரியா நோய்க்குக் காரணம்’ என்பதைக் கண்டுபிடித்துக் கூறியிருந்தார்.

‘இந்தக் கரும்புள்ளிகளால் உற்பத்தியாகி, உடல் முழுவதும் பரவி மலேரியா என்ற நோய் உற்பத்தியாக்குகிறது’ என்றும் - அந்த பிரெஞ்சு மருத்துவர் கூறியதையும் ரோஸ் படித்தார்.

இந்தக் கரும்புள்ளிகள் மனித உடலில் எப்படி உருவாகிறது? உண்ணும் உணவின் நேரத்திலா? அல்லது தண்ணீரைக் குடிக்கும் பொழுதா? என்று சர்ச்சை ஏற்பட்டது. மலேரியா நோய் வந்தவன் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுவதை, மற்றவர்கள் சுவாசிப்பதால் உடலின் உள்ளே பரவுகிறதா?

கொசுப் பூச்சிகளின் கடியினால், ரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் பரவுகின்றதா? போன்ற மருத்துவ உலகின் கேள்விகளுக்கு ரோஸ் விடை காண விரும்பி, அவற்றை ஆராய்ச்சி செய்ய உழைத்தார்.

கொசுவை அறுத்தார்! சோதனை செய்தார்!
கொடிய மலேரியா நோயை விரட்டினார்!

மனிதன் உறங்கும் போதும், உண்ணும் போதும், நீர் குடிக்கும் போதும், விளையாடும் போதும், குளிக்கும் போதும், மற்றவர்களிடம் உரையாடி மகிழும் போதும் - ரோஸ் மலேரியா நோய் சிந்தனையிலேயே இருப்பார்.

மனம் என்னமோ மலேரியா நோய் ஆராய்ச்சியிலேதான் மிதக்கும், ஆனால் அதே நேரத்தில் பிறர் செயல்களில் ஏதாவது மலேரியா அறிகுறிகள் புலப்படுகின்றனவா? என்பதிலும் தனது மனத்தைச் செலுத்துவார்.

ஒரு நேரத்தில் மருத்துவத் தொழிலையே வெறுத்தவர் அல்லரா ரோஸ்? அப்படிப்பட்டவர்தான் இப்போது ஒரு நிமிடத்தையும் வீணடிக்காமல் எந்த நேரமும் மலேரியா ஒழிப்புக் கவனத்திலேயே ஈடுபட்டார்!

ஒரு நாள், மலோரியா நோயால் தாக்கப்பட்ட தனது நண்பன் ஒருவனைக் கண்டார். அவனுடனேயே தங்கினார். அன்றிரவு அவனுடனே உறங்கினார்; ரோஸ் கொசு வலைக்குள் உறங்கினார்; அவரது நோயாளி நண்பர் கொசு வலை இல்லாமல் துங்கினார்.

இதில் என்ன ஆய்வுக்குரிய பிரச்னை என்றால், இரண்டு பேர்களும், ஒரே அறையில் ஒரே காற்றை சுவாசித்துக் கொண்டே தூங்கினார்கள்; ஒரே உணவு; ஒரே குடிநீர்; இவற்றுடனே இருவரும் அந்த அறையில் தூங்கினார்கள்.

கொசுக் கடியால் மலேரியா நோய்!

என்ன முடிவு உருவானது தெரியுமா? காலையில் ரோஸ் நண்பருக்கு மலேரியா நோய் தோன்றியது. ரோசுக்கு எந்த வித நோயும் வரவில்லை. இதிலிருந்து மலேரியா நோய் வருவதற்குக் காரணம்; கொசுக் கடிகள்தான் என்று புரிந்து கொண்டார் ரோஸ்.

தங்கும் அறை, சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, பருகும் நீர், இடம், பொருள் எல்லாமே ஒன்றாக இருக்க, தனக்கு மலேரியா வரவில்லை; நண்பனுக்கு மட்டும் அந்த நோய் வந்ததேன்? என்பதை ரோஸ் புரிந்து கொண்டார் எனவே, மலேரியா நோய்க்கு மூல காரணம் கொசுக்கள்தான் என்பதில் சந்தேகம் இல்லை என்பதை ரோஸ் உணர்ந்தார்.

உணவு, காற்று, தண்ணி மூலமாக மலேரியா நோய் வரவில்லை; கொசுக்கடி மூலம்தான் அது தோன்றுகிறது என்பதைத் தீர்க்கமாக ரோஸ் அறிந்தார். எனவே, மலேரியா நோய் வருவதற்கு மூலம் எது? கொசு என்பதைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொண்டார் அவர்.

ஏற்கனவே ரோஸ் நடத்திய கொசுக்கடி ஆராய்ச்சிக்குரிய கருப்பொருள் கொசு என்பதை உணர்ந்து விட்டரோஸ்,மீண்டும் தனது கொசு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

ரோஸ் அன்று முதல் கொசுக்கடி ஆராய்ச்சியை மேலும் தீவிரப்படுத்தினார். வீண் பொழுதுப் போக்கை வெறுத்தார்; முழுக் கவனத்தையும் தனது ஆய்விலேயே ஈடுபடுத்தினார்.

பாட்ரிக் மான்சனும் : ரொனால்டு ரோசும்!

அந்த ஆராய்ச்சி தீவிரப்பட்டபோது, ரோசுக்கு பாட்ரிக் மான்சன் என்பவருடைய நட்பு 1891-ஆம் ஆண்டில் கிடைத்தது. அவர் மலேரியா நோய் பரவுவதற்குக் காரணமே கொசுதான் என்ற முடிவை உடையவர். இங்கிலாந்து நாட்டு மருத்துவ மனையில் அவர் பணி செய்து கொண்டிருந்தார்.

கொசு மூலம்தான் மலேரியா நோய் பரவுகின்றது என்றால் எப்படி? என்பதைக் கண்டறிய முனைந்த ரோஸ், நாம் உண்ணும் உணவில் கொசு தனது நச்சுத் தன்மையைச் செலுத்துவதால், அது உடலுக்குள் சென்றவர்க்கு நோயை உண்டாக்கும், என்ற காரணத்தையும் அவர் கண்டறிந்தார். உணவின் மூலமாகத்தான் மலேரியா நோய் உண்டா கின்றதை ரோஸ், முதலில் ஒப்புக் கொண்டார். என்றாலும், முழுமையாக அதேதான் சரியான காரணம் என்பதை அவர் நம்ப மறுத்தார். எனவே, மலேரியா நோய் வருவதற்கு எது முழு முதல் காரணமாக இருக்கும் என்ற சிந்தனையிலே ரோஸ் மீண்டும் உழன்று கொண்டே இருந்தார்.

மலேரியா நோய் கண்ட சிலரைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார் ரோஸ். அப்படியும் அவருக்கு அதன் முழுக் காரணமும் நம்பும்படிப் புலப்படவில்லை.

கொசுதான் காரணம் என்பதோடு மட்டும் ரோஸ் இராமல், மலேரியா நோய் கண்ட ஒருவனது உடலைக் கடித்தக் கொசுவைப் பிடித்து, அதை உருப்பெருக்கிக் கண்ணாடிக் கருவி மூலமாக ஆராய்ந்தார்.

அப்போதுதான், மலேரியா நோய்க் கிருமிகள் கொசுவின் வயிற்றில் இருப்பதை அந்த டெலஸ்கோப் கண்ணாடி மூலம் உணர்ந்தார். ஆனால், ரோஸ் இந்த நோய்க் கிருமிகள் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்க்கு, நோய் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து கொண்டு செல்லப்படுகின்றது என்ற மர்மம் அவருக்குப் புரியாமலே இருந்தது.

இந்த உண்மையை உணர்வதற்காக ரோஸ் மிகவும் சிரமப்பட்டார். அதற்காக பல வகையான கொசுக்களைப் பிடித்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார். கஷ்டத்தின்மேல் கஷ்டங்களைக் கண்டார் அவர்.

இந்தியாவிலே உள்ள ‘பேகம்பேட்’ என்னும் ஆராய்ச்சிச் சாலைக்குச் சென்று நீண்ட நாட்கள் தங்கி ஆராய்ச்சி செய்தார் ரோஸ்!

கொசுக்கள் : கண்காட்சிகள்!

அந்த ஆராய்ச்சிச் சாலையில் பல வகையான கொசுக்கள் பறப்பதைக் கண்டு ரோஸ் மகிழ்வார். கொசுக்கள் அதன் இடத்தை விட்டு வெளியே பறந்து போய் விடுமோ என்று பயந்த ரோஸ், தனது தலைக்கு மேலே ஒடும் மின் விசிறி போன்ற பங்காக்களையும் நிறுத்தி விட்டார். கோடை காலம்தான் என்றாலும், வெயில் வெப்பத்தைக் தாங்கிக் கொண்டே அவர் ஆராய்ச்சி செய்தார்.

கொட்டும் வியர்வை அவரது உடலை நனைப்பதைக் கூட அவர் பொருட்படுத்தாமல், மெய் மறந்து கொசுவகைகளைக் கண்டறிந்தார். எவ்வளவு நேரம் ஈடுபட முடியுமோ அவ்வளவு நேரமும் வெயிலையும் அவர் கவனியாமலே வேலையில் ஈடுபட்டிருந்தார்.

பங்காவைப் ஓட்டலாம் என்றால், பணியாட்களுக்குப் பயம்! ரோஸ்தானே கொசுக்கள் ஓடிவிடப் போகிறது என்று பங்காவை நிறுத்தச்-சொன்னவர்! அதனால், பணியாட்களும் வெயிலால் வேதனைப் பட்டார்கள். பாவம்! இந்த நேரத்தில் நுண் பெருக்கிக் கண்ணாடிமேல் ரோஸ் நெற்றியின் வியர்வைத் துளிகள் சிதறிச் சிந்திக் கொண்டே இருந்தன. இவ்வாறு வியர்வைத் துளிகள் பல நாட்கள் விழுந்ததால், நுண்பெருக்கிக் கருவி துருப்பிடித்து விட்டது. அதனால், அவை தெரித்து உடைந்து விட்டன. இந்தச் சிரமங்களை எல்லாம் ரோஸ் பொருட்படுத்தவில்லை. எல்லா இடுக்கண்களையும் அவர் பொறுத்துக் கொண்டார் கருமமே கண்ணாக இருந்தார்.

அநோபில்ஸ் என்றால் என்ன?

ஒரு நாள் காலை, ரோஸ் ஆராய்ச்சி சாலையில், ஏதோ சிந்துத்துக் கொண்டே இருக்கும் போது, கொசுக்கள் பாடும் ராகங்களும், அவை பறக்கின்ற அழகுக் காட்சிகளையும் அவரது கண்கள் ரசித்துக் கொண்டே இருந்தன.

அப்போது ஒரு புதுமையான கொசு ஒன்று பறந்து வந்து அங்கே இருந்த சுவரில் அமர்ந்திருந்தது. அதை ரோஸ் கண்டு, அருகே சென்று பிடித்துவிட்டார். ஆராய்ச்சி செய்தார். அதைப்போல நூற்றுக் கணக்கான கொசுக்களைப் பிடித்துப் பார்ப்பதே வேலையாக இருக்கிறது, பிடித்து ஒவ்வொரு வகையான ஆராய்ச்சிளைச் செய்தார் அவர்.

புது வகையான கொசுக்கள் வால் உயர்ந்து மேல் நோக்கி இருக்கும் கொசுக்கள். நீண்ட வாலுடைய கொசுக்கள்; சிறகில் மூன்று கருப்புக் கோடுகள் உள்ள கொசுக்கள், போன்ற பல வகைத் தோற்றங்களை உடைய கொசுக்களைப் பார்த்து பரவசப் பட்டார். அந்த மாதிரியான கொசுவுக்கு அநோபில்ஸ் என்ற பெயரிட்டார்.

அநோபில்ஸ் என்றால் புள்ளிகளை உடைய இறக்கைகள் கொண்ட கொசுக்கள் என்று பொருள் ஆகும்.

ஆராய்ச்சி : தோல்வி!

மலேரியா நோய் கண்டவரை அநோபில்ஸ் கொசுக்களைக் கொண்டு கடிக்கச் செய்து ஆராய்ந்தார். இவ் வகையில் ரோஸ் செய்த ஆராய்ச்சி தோல்வி அடைந்தது. அதனால் அவர், தனது ஆராய்ச்சியைக் கைவிட்டு விட்டார்.

‘இரும்பு பிடித்த கை சும்மா இராது’ என்பார்கள் அல்லவா? அதற்கேற்ப ரோஸ், தனது ஆராய்ச்சியைக் கை விட்டதான்து ஏதோ ஓர் இழப்பை இழந்தது போன்ற மந்த நிலை அவருக்குத் தோன்றிற்று. மீண்டும் ஆராய்த் தலைப்பட்டார். ஆயிரக் கணக்கான கொசுக் களது வயிற்றினை அறுத்து, நுண் பெருக்கிக் கண்ணாடி மூலமாக அவற்றை ஆராய்ச்சி செய்தார்.

கொசுக்களது வயிற்றை அறுவை செய்து நுண் பெருக்கிக் கண்ணாடி மூலம் கண்டபோது, பிரெஞ்சு மருத்துவர் அல்போன் சேலாவன் கூறியதுபோல; கொசு வயிறுகளில் கரும் புள்ளிகள் இருப்பதை ரோஸ் கண்டார். அந்தக் கரும் புள்ளிகளைத்தானே சேலாவன் மலேரியா நோய்க் கிருமிகள் என்றார்! அந்தக் கிருமிகளைத்தான் ரோசும் தனது ஆய்வில் பார்த்தார்.

இந்த ஆராய்ச்சியால், நோயுள்ளவரின் உடலில் இருந்து நோயுற்றவருக்கு அநோபில்ஸ் கொசுக்கள் வழியாக மலேரியா பரவுவதை உணர்ந்தார்.

அது சரி, நோயுற்றவரின் உடலில் இருந்து அந்த அணுக்கள் எப்படி கொசுக்களால் எடுக்கப்படுகின்றன. அவை எவ்வாறு நோயுற்றவரின் உடலில் உட்புகுகின்றன என்பது இப்போதும் புதிராகவே புலப்பட்டது.

இந்தப் புதிரை அகற்ற ரோஸ் மீண்டும் முயற்சித்தார். அவருடைய தொடர்பான ஆராய்ச்சி மூலமாக அந்தப் புதிர் விலகியது. எப்படி அகன்றது?

கொசு பரப்பும் : நோய் திரவம்

ஒருவரது இரத்தத்தைக் கொசு உறிஞ்சும்போது, தன் உடலில் இருந்து ஒரு வகைத் திரவத்தை வெளியேற்றுகிறது. பிறகு ரத்தம் உறிஞ்சப் படுகிறது. இப்படிக் கொசு செய்யும் போது, தனது உடலிலுள்ள கிருமிகள், அவர் உடலில் செல்லவும், அவர் திரேகத்தில் உள்ள நோய்க் கிருமிகள் ரத்தத்துடன் கலந்து கொசுவின் உடலில் செல்லவும் செய்கிறது.

இவ்வாறு கொசு செய்வதால்தான், மலேரியா நோய் பரவுகிறது என்பதை, ரோஸ் கண்டு பிடித்து மருத்துவ உலகுக்கு நிரூபணம் செய்து காட்டினார். எனவே, மலேரியா நோயை ஒழிப்பதென்றால், முதலில் அழிக்கப் பட வேண்டியவை கொசுக்கள்தான் என்பதைத் தனது ஆராய்ச்சி மூலமாக அவர் மெய்ப்பித்துக் காட்டுனார்.

மலேரியா கொசுக்கள், சதுப்பு நிலத்திலும், ஈரம் மிகுந்த வேறு இடங்களிலும், சாக்கடை, கால்வாய்கள், குட்டைகள், ஏரி, குளங்கள், ஆறுகளின் முகத்துவாரங்கள், ஆகியவற்றில்தான் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின்றன.

கொசு, ஒழிய வழிகள் என்ன?

எனவே, உற்பத்தியாகும் இடங்களைச் சுத்தப்படுத்தினால், மலேரியா என்ற நோயே வராது; கொசுக்கள் உற்பத்தி ஆகாது. என்பதைத் தெளிவாக முடிவுகட்டி, அதற்கான காரணங்களையும் விளக்கி, மலேரியா என்ற நோய்க்கு மரணப்படுகுழி தோண்டும் செயற்கரிய செயலைக் கண்டு பிடித்து மருத்துவ உலகுக்கு அறிவுக் கொடையாக அளித்தார் சர் ரொனால்டு ரோஸ் என்ற மருத்துவ விஞ்ஞானி!

மருத்துவ உலகம் ரெனால்டு ரோசைப் பெருமையோடு பாராட்டி யதோடு நில்லாமல், அதற்கான வாழ்த்துக்களையும், பரிசுகளையும், பதவிகளையும் வழங்கியது. அந்த மருத்துவ விஞ்ஞானி கண்டறிந்த மலேரியா கொசுவின் பெயர்தான் அநோபில்ஸ் என்ற மருத்துவத் துறையின் புதிய கண்டு பிடிப்பு ஆகும்.

சர். ரொனால்டு ரோஸ் செய்த மலேரியா ஆராய்ச்சி அவருக்கு உலக அளவில் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. அதனால், அரும் பெரும் மருத்துவ விஞ்ஞானிகள் பட்டியலில் இந்த மேதையும் இடம் பெற்றார்.

பேட்ரிக் மான்சன் என்ற மருத்துவச் சான்றோன் ரொனால்டு ரோஸ் என்ற மருத்துவ ஞானிக்கு நண்பரானார்! பாட்ரிக் மான்சன்; தான் கண்டறிந்த ஆய்வுப் புதையல் உண்மைகளை, மருந்து சம்பந்தமான கட்டுரைக் கருவூலங்களை, வேறு சில ஆராய்ச்சிகளின் அரிய கருத்துக்களை ரொனால்டு ரோசுக்கு வழங்கி, அவரைப் பாராட்டிப் போற்றினார்.

பேட்ரிக் மான்சனின் அரிய நட்பால் ரோஸ் புகழ் மருத்துவ உலகுக்கு வளர்பிறையானது. அதனால், மருத்துவத் துறை வட்டத்தில், மேதையெனும் புள்ளியாய் இணைப்பையும் பெற்றார் ரோஸ்.

மலேரியா கொசுவின் அநோபில்ஸ் கண்டு பிடிப்பிற்குப் பிறகு, இந்திய மருத்துவத் துறையை விட்டு விலகி, இங்கிலாந்து சென்றார் சர்.ரொனால்டு ரோஸ்!

அப்போதுதான் லிவர்பூல் எனும் பெரு நகரில், ‘ஸ்கூல் ஆஃப் டிரோபிக்கல் மெடிசன்ஸ்’ எனும் ஒரு மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டிருந்தது. அந்தக் கல்லூரியின் முதல் விரிவுரை யாளராக ஓர் இந்திய மண்ணில் பிறந்த விஞ்ஞான மேதை நியமிக்கப்பட்டப் புகழுக்கு ஆளானார்! இது இந்திய மருத்துவ விஞ்ஞானத்துக்குக் கிடைத்த பெருமைதானே! இந்தக் கல்லூரியின் வசதிகளைப் பயன்படுத்திக் கொண்ட ரோஸ், மலேரியாவைச் சிக்கனமான முறையில் குணப்படுத்தும் தடுப்பு முறைகளைக் கண்டு பிடித்தார். கோடையின் கடுமை மிகுந்த வெப்ப நாடுகளில் மலேரியா என்ற காய்ச்சல் நோய் தடுத்து நிறுத்தப்பட்டது.

மலேரிய நோய் ஒழிப்பை உலகெலாம் பரப்பிட, உலக நாடுகள் ஒவ்வொன்றும் அவருக்கு அழைப்பு விடுத்து அழைத்தன. அவற்றை ஏற்ற அந்த மருத்துவ விஞ்ஞானி, உலக சுற்றுப் பயணம் சென்றார்.

சென்றபோது, வெள்ளைக்காரர்களின் கல்லறை என்று பெயர் பெற்ற சீயராவியோன், என்ற நகரத்திற்குச் சென்றார். அங்கு மலேரியா நோய் ஒழிப்பு பற்றியும், கொசுக்கள் அழிப்புப் பற்றியும் சொற்பொழிவாற்றி மருத்துவ அறிஞர்களது பாராட்டுதல்களைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தார்.

அந்த நகரின் ஆளுநரை அழைத்து மலேரியா நோய் ஒழிப்பு முறைகளை விளக்கினார். இதன் பயனாக, ஈக்கள், கொசுக்கள் உற்பத்திள் ஒழிக்கப்பட்டன.

வீதிகளிலும், தெருக்களின் சந்து பொந்துகளிலும் உள்ள சாக்கடைகள் சுத்த மாக்கப்பட்டன: சதுப்பு நிலங்கள் ஈரமில்லா நிலங்களாக்கப்பட்டன! தேங்கிக் கிடக்கும் அசுத்த நீரில் எண்ணெய் தெளிக்கப்பட்டது. அதனால், கொசுக்களின் உற்பத்தி நிலையங்கள் தடை செய்யப்பட்டன!

கொசு உற்பத்தி அழிப்புப் பணி

பொது இடங்களிலே உள்ள பயனற்றப் பொருட்கள்; குப்பைக் கூளங்கள்; பழக் கூடைகளின் அசுத்தங்கள் எல்லாமே அகற்றப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டன! கொசு உற்பத்தி அழிக்கப்பட்டது.

தெருக்கள் பள்ளங்கள் நிரப்பப்பட்டன; உடைந்த சாக்கடைகள் எல்லாம் சீர் செய்யப்பட்டன; இதன் பயனாக கொசு உற்பத்தி இடங்கள் அழிக்கப்பட்டன. வெள்ளைக்காரர்களின் கல்லறை என்ற பெயர் ரோஸ் பெயரால் புதுப்பிக்கப்பட்டு. அழகு இடமானது. அந் நகர மக்கள் ரொனால் ரோசைத் தெய்வமாக மதித்தார்கள் ரோஸ் புகழ் மேலும் மேலும் பரவியது.

போர்ட் சைத்’ க்கும், சூயஸ் கால்வாய்க்கும் இடையிலுள்ள ‘இஸ்மைலியா’ என்ற நகரத்தில், 1900-ஆம் ஆண்டில் மலேரியா நோய் கண்டதால், ஆயிரக் கணக்கான மக்கள் இறந்தார்கள். அதனால் சூயஸ் கால்வாய் தலைவர் ரோசுக்கு வரவேற்பு வழங்கினார். அங்கே சென்ற ரோஸ் கொசு உற்பத்தி இடங்களைப் புதுப்பித்து,மலேரியா வரும் அறிகுறிகளே இல்லாமல், அதை எழில் நகரமாக்கினார்.

உலக நாடுகள் ஒவ்வொன்றும் ரோசின் மலேரியா ஒழிப்புத் திட்டத்தை எற்று மலேரியா நோயை ஒழித்தார்கள்! மக்கள் சமுதாயத்தை விட்டு மலேரியா கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.

மக்களுக்கு ரொனால்டு ரோஸ் ஆற்றிய மலேரியா ஒழிப்பு சேவையின் சார்பாக, ரோஸ் இன்ஸ்டியூட் அண்டு ஹாஸ்பிட்டல் பார் டிராபிக்கல் டிசீஸ் என்ற கல்லூரி 1926-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இதே கல்லூரி நாளடைவில் வளர்ந்து இலண்டன் ஸ்கூல் ஆஃப் ஹஜின் அண்டு டிராபிக்கல் மெடிசன்ஸ் என்று மாற்றப்பட்டது.

மலேரியா நோயை உலகத்தில் வேரறுத்து, கொசுக்கள் உற்பத்தி இடங்களை அழித்து, மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்திட அரும்பாடுபட்ட மருத்துவ விஞ்ஞானி சர்.ரொனால்டு ரோசஸ் 16.10.1932 ஆம் ஆண்டு அன்று காலம் ஆனார்!

டாக்டர் சர்.ரொனால்டு. ரோஸ், தான் இறக்கும் வரை மருத்துவ விஞ்ஞானத்தை ஆராய்ச்சி செய்து, தான் கண்டுபிடித்த மலேரியா கொசுவின் ‘அநோபில்ஸ்’ திட்டம் உலகமெலாம் பரவிட அரும்பாடுபட்ட மருத்துவ ஞானியாகவே வாழ்ந்து மறைந்தார்.