உள்ளடக்கத்துக்குச் செல்

மருத்துவ விஞ்ஞானிகள்/லூயி பாஸ்டியர்

விக்கிமூலம் இலிருந்து





லூயி பாஸ்டியர்
(1822 - 1892)


5

பட்டுப் பூச்சி நோய்க் கிருமிகளை அழித்தார்

உலக வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டு மிகச் சிறந்த, ஒரு குறிப்பிடத்தக்க நூற்றாண்டாகும். அந்த நூற்றாண்டில், பல்வேறு நாடுகளில், பல்வேறு துறைகளில், பல்வேறு பெருமைமிக்கப் பெரியார்கள், அறிஞர்கள், புரட்சியாளர்கள், சிந்தனையாளர்கள் தோன்றி, உலகுக்குப் புதுப் புது புதுமைகளைக் கண்டறிந்து கூறியுள்ளார்கள்.

புவி வாழ்வில் மகத்தான் மாறுதல்களை உருவாக்கி, மனித இனத்திலே மறுமலர்ச்சி எண்ணங்களைப் புகுத்திப் பெருமை பெற்ற நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு.

அந்த நூற்றாண்டில் ஐரோப்பா கண்டத்தின் மணி மகுடமாகத் திகழ்ந்து கொண்டிருந்தது ஃபிரான்ஸ் நாடு. அந்த நாடு மற்ற நாடுகளின் பாராட்டுதலுக்கும், பின்பற்றுதலுக்கு உரிய வழிகாட்டும் நாடாகவும் விளங்கியது.

உலகத்தின் பழைய மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சாக்சேனியம், சீனம், தமிழ், மொழிகளைப் போல ஃபிரெஞ்சு மொழியும் அந்த நேரத்தில் உரை நடைத் தெளிவிலும், எழிலிலும் தன்னிகரற்று விளங்கியதோடு அல்லாமல், மற்ற நாட்டினர்களும் வியந்து போற்றுமளவுக்கு வளமுடையதாக வளர்ந்திருந்தது.

அதனால் அந்த மொழி ஃபிரெஞ்சு நாட்டு மக்களின் உயர் குடியினர் மொழியாகவும், கற்றோர் போற்றும் இலக்கிய மொழியாகவும், வெளிநாட்டார் தொடர்பு மொழியாகவும் பெருமை பெற்றிருந்தது! இவைதானே ஒரு செம்மொழிக்குரிய தகுதிகள், சிறப்புக்கள்? அவற்றை ஃபிரெஞ்சு மொழி பெற்றிருந்ததால், உலகம் போற்றும் இலக்கியங்கள், விஞ்ஞான ஆராய்ச்சிகள், புரட்சிக் கருத்துக்கள் அனைத்தும் அந்த மொழியிலே தோன்றி, வளர்ந்து அந்த நாட்டுக்கு மேலும் புகழைச் சேர்த்துக் கொண்டிருந்தது.

அத்தகைய பிரான்சு நாட்டிற்குப் பாரீஸ் என்ற நவநாகரிக நகரம் தலை நகரமாக விளங்கியதை நாம் நன்கு அறிவோம். அது வரலாற்றுப் பெருமை பெற்ற நகரமாகும்.

அந்த நகரம்தான், உலகப் புகழ் பெற்ற ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட நகரம். அந்தப் புரட்சியிலே தோன்றிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முப் பொரும் தத்துவங்களைத் தோற்றுவித்த நகரமும் பாரீஸ்தான்! இது உலகறிந்த வரலாறாகும்.

இத்தகைய உலகப் புகழ் பெற்ற ஃபிரெஞ்சு ஆட்சியில் பல தொழில்கள், அதன் வருவாய் பெருக்கத்துக்காக வளர்ந்து நடைபெற்று வந்தன. அவற்றுள் ஒன்று உயிர் குடியினர் ஆடைகளாக அணிந்து கொள்ளும் பட்டுத் தொழிலுமாகும்.

பிரெஞ்சு அரசுக்கு, இந்தப் பட்டுத் தொழிலால் வருமானம் மிக அதிகமாக வந்தது. பட்டுத் தொழிலில் ஆயிரக் கணக்கான நெசவாளர்கள் பணியாற்றினார்கள்.

பட்டுத் தொழில் இயந்திர ஆலைகள் மூலமாகவும், குடும்பங்கள் குடும்பங்களாக, குடும்பத் தொழிலாகவும் அது பெருகியிருந்தது.

பிரான்ஸ் நாட்டுக்கு, உலக அளவில் பட்டுத் தொழில் மூலமாகப் பெயரும் - புகழும்; அதே நேரத்தில் ‘பிரான்ஸ் பட்டு’ என்றால், இன்று நம்மிடையே ‘காஞ்சிபுரம் பட்டுக்கு எவ்வளவு மரியாதையோ, அதே மரியாதையையும், அதே மதிப்பையும் பிரான்ஸ் நாடு பெற்றிருந்தது.

ஆயிரக் கணக்கான பிரான்ஸ் மக்கள் வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், அதன் வாயிலாக வணிகப் பெருமக்கள் அந்தந்த நாடுகளிலே பிரான்ஸ் பட்டுத் துணிவகைகளை நம்பி, வியாபாரம் செய்து செல்வந்தர்களாக வாழ்ந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.

உலக நாடுகள் இடையே தொடர்ந்து பெற்று வந்த நீடித்த பட்டுத் தொழிலின் செல்வாக்கு நிலை, பிரான்சில் திடீரெனத் தடைப்பட்டு நின்றது. அதனால், ஆயிரக் கணக்கான பிரெஞ்சு நெசவாளர்கள் வேலை வாய்ப்புக்களை இழந்தார்கள்.

நடக்கும் அற்ப சொற்ப பட்டுத் தொழில் துறைத் தொழிலாளர்கள், ‘ஷிப்டு சிஸ்டம்’ என்ற முறையில், அதாவது ஒரே நேரத்தில் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை, ஆட்குறைப்பு செய்து, அவர்களுள் சிலருக்கு வேலை கொடுப்பதும், வேலையில்லாத் திண்டாட்டமும் போன்ற நெருக்கடி முறைகள் மக்களிடையே உருவாயின.

இந்த பட்டுப் பணிகள் பூச்சித் தொல்லைகள் தரும் நெருக்கடிகளால் எண்ணற்ற பட்டாலைகள் மூடப்பட்டு விட்டன: குடும்பங்கள் நடத்தி வந்த பட்டு நெசவுக் குடும்பத் துறைத் தொழில்களும் நசிந்து விட்டன.

நூற்றுக் கணக்கான தொழிற் கூடங்கள் மூடப்பட்டு விட்டதால், பிரான்ஸ் நாடு முழுவதும் பரவலாக உள்ள ஆயிரக் கணக்கான பட்டுத் தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் தொழில்களை இழந்ததுடன், அதன் எதிரொலியான பசி, பட்டினிகளால் வேதனையடைந்து, சிலர் வறுமைக்கும், புதை குழிக்கும் பலியானார்கள்.

பிரெஞ்சு அரசு, இந்த பட்டுத் தொழில் நலிவைக் கண்டு மருண்டது என்ன காரணம் இதற்கு என்று பிரெஞ்சு ஆட்சி ஆராய்ந்ததில், பட்டு நூலைத் தரும் பட்டுப் பூச்சிகளுக்கு ஏதோ ஒரு வித நோய் உருவானதால், பெரும்பாலான பட்டுப் பூச்சிகள் அழிந்தன; செத்தன என்று தெரிந்தன அந்த அரசுக்கு!

இந்தப் பட்டுப் பூச்சி அழிவைத் தடுப்பது எப்படி என்று பிரெஞ்சு அமைச்சரவை கூடி ஆராய்ந்தது! யாரைக் கொண்டு இந்த நோயைத் தீர்ப்பது என்று அப்போது அந்த அரசு திணறிக் கொண்டிருந்தது.

நாட்டின் வருமானப் பாதிப்பு ஒரு புறம் ஏற்பட்டிருந்தாலும், தொழிலாளர் வேதனைகள், பரதவிப்புகள், பசித் துடிப்புகளால் உண்டாகும் பட்டினிக் கொடுமைகள், அதனால் தினந்தோறும் ஏற்படும் பட்டினிச் சாவுகளின் எண்ணிக்கைப் பெருக்கங்கள் ஆகியவற்றைக் கண்டு பிரான்ஸ் திகைத்துத் திண்டாடியது.

எல்லாச் செயல்களையும், எல்லாரிடமும் செய்து முடியுங்கள் என்று விட்டுவிட முடியுமா? அல்லது கேட்கத்தான் இயலுமா? அதற்கென ஒரு தகுதிவாய்ந்த குழுவை உருவாக்க வேண்டாமா?

ஒருவரை, இதற்கு இவர்தான் தகுதியானவர் என்று தீர்மானித்த பின்பு, அந்த முடிவை அடிக்கடி மாற்றமுடியுமா? அவ்வாறு மாற்றினால் அந்தச் செயல்கள்தான் பலன் தருமா?

‘தேரான் தெளிவும், தெளிந்தான் கண் ஐயுறவும், தீரா இடும்பை தரும்’ என்ற திருவள்ளுவர் பெருமானின் கருத்தையே பிரதிபலித்த அப்போதைய பிரெஞ்சு அரசு, பட்டுப் பூச்சி நோயை முழுவதுமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துக் கூறும் தகுதியுடைய ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தது.

அறிவியல் அறிஞர் லூயி பாஸ்டியர், இளம் விஞ்ஞானியாக அந்த நேரத்தில் அறிவியல் துறையில் வளர்ந்துக் கொண்டிருந்தார்.

அந்த விஞ்ஞான வித்தகருக்குரிய தகுதி, தரம், திறமை, விடா முயற்சி, துணிவான செயல்கள் ஆகியன மூலமாக பாஸ்டியர் புகழ் பிரான்ஸ் நாடு முழுவதும் ஒருவித செல்வாக்கை உருவாக்கிக் கொண்டிருந்ததையும் பிரெஞ்சு அரசு உணர்ந்தது.

லூயி பாஸ்டியருடைய திறமைகளை நன்றாக உணர்ந்த பிரெஞ்சு ஆட்சி, அவரை அழைத்து பட்டுப் பூச்சிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நோய் என்ன? ஏன் அந்த நோய் வந்தது? அதற்கான காரணங்கள் யாவை? என்பதைக் கண்டுபிடித்து அந்த நோயைப் போக்குவதற்கான வழிவகைகள் என்ன என்று ஆராயுமாறு கேட்டுக் கொண்டது.

அறிவியல் இளம் விஞ்ஞானியான லூயி பாஸ்டியர், பிரெஞ்சு அரசு தன்னை நம்பி ஒப்படைத்தப் பணியை ஏற்றுக் கொண்டார்.

அன்று முதல் எங்கெங்கே பட்டுப் பூச்சிகள் பண்ணை உருவாகி இயங்கி வந்தனவோ, அங்கங்கே எல்லாம் சென்று தனது ஆராய்ச்சியைத் துவக்கினார்.

பட்டுப் பூச்சிகளுக்கு ஏன் இந்த நோய் வருகிறது? என்ன காரணத்தால் அந்த நோய் வருகிறது? அதை மற்ற பட்டுப் பூச்சி பண்ணைகளுக்குப் பரவாமல் தடுக்க வழிகள் என்ன? அந்த நோயின் பெயர் என்ன? இதற்கு முன்பு பட்டுப் பூச்சிகளுக்கு இத்தகைய ஒரு கொடிய நோய் பரவிப் பூச்சி இனங்களை அழியுமாறு செய்ததுண்டா? என்ற கேள்விகளுக்குரிய காரணங்களை அவர் சென்று சோதனையிட்ட பண்ணைகளிலே பாஸ்டியர் ஆராய்ச்சி செய்தார்.

ஒரு பட்டுப் பூச்சி பண்ணைக்குச் சென்றார், அங்கே சில நூறு பட்டுப்பூச்சிகளை ஆராய்ச்சி செய்தார். பண்ணையிலே உள்ள பூச்சிகளில் நோய் பிடித்தவை எவை? நோயில்லாதவை எவை என்பதைக் கண்டறிந்தார்.

நோயுற்ற பட்டுப் பூச்சிகளை ஒரு குழுவாகவும், நோயற்ற பூச்சிகளை மற்றொரு கூட்டமாகவும் பிரித்து இரு வகைப் படுத்தினார்.

பிரிக்கப்பட்ட பூச்சி இனங்கள் ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்கினார். இதனால், பாஸ்டியருக்கு ஏற்பட்ட ஆராய்ச்சி பலன் என்னவென்றால், நோயுள்ள பூச்சிகள் பார்ப்பதற்கு பளபளப்பாகவும், மிக நேர்த்தியாகவும், சுறு சுறுப்பாகவும் அவை செயல் பட்டதைக் கண்டார்.

நோய் இல்லாத பட்டுப் பூச்சிகள் உடல் மேல், சிறுசிறு புள்ளிகள் ஏராளமாகத் தென்பட்டன. அதனால், லூயி பாஸ்டியருக்கு, இந்த இரண்டு விதமான பூச்சிகளின் செயல் பாடுகளது வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

விளங்கிக் கொள்ள முடியாததற்கு என்ன காரணம்? இதற்கு முன்பு லூயி பாஸ்டியர் பட்டுப் பூச்சியையே பார்த்தது இல்லை.

அந்தப் பூச்சி இனத்தின் பழக்க வழக்க வரலாறோ; அல்லது, அதன் பயன்பாடுகளோ எதுவும் புரியாது அவருக்கு.

பிரெஞ்சு ஆட்சி, அவர்தான் பட்டுப்பூச்சி நோயை ஆராயத் தகுதியுடையவர் என்று நம்பி, லூயி பாஸ்டியரிடம் அரசு பொறுப்பையே ஒப்படைத்தது.

அவரும், தனது திறமையை மட்டுமே நம்பி அரசு கேட்டுக் கொண்ட பணியை ஆய்வு செய்திட ஏற்றுக் கொண்டார். ஆனால், தான் ஒப்புக் கொண்ட பணியின் அறிவோ அனுபவமோ எள்மூக்களவாவது அவருக்கும் தெரிந்திருக்க வேண்டுமல்லவா?

தனது அறிவு, ஊக்கம், விடாமுயற்சி, ஆராய்ச்சித் திறன், அயராத உழைப்பு போன்றவைகளை நம்பியே லூயி பாஸ்டியர் அந்த அரசு பணித்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்றால், அவற்றின் மேல் அவருக்கிருந்த அசையா நம்பிக்கைதான் காரணமாகும்! அவர் திறமைகள் மீது அவருக்குள்ள சந்தேகமின்மையே ஆகும்.

எனவே, பாஸ்டியர் தனது ஆராய்ச்சிப் பணியைச் சிறிது காலம் நிறுத்தி வைத்துவிட்டு, பட்டுப் பூச்சிகளைப் பற்றித் தனக்கு முன்பு யார்? யார் ஆய்வு செய்து புத்தகங்கள் எழுதியுள்ளனரோ, அவற்றையெல்லாம் வாங்கிப் படித்து, பூச்சி வகைகளது வரலாற்றைத் தெளிவாகவே உணர்ந்தார்.

‘பட்டுப் பூச்சிகளை வளர்ப்பதெப்படி?’ என்ற ஆராய்ச்சி நூல் அவருக்குப் பெரிய உதவியாக அமைந்தது. அதனால், அந்தப் பூச்சிகளை வளர்க்கும் முறைகளை அவர் நன்றாகத் தெரிந்து கொண்டார்.

பட்டுப் பூச்சிகளைப் பற்றிய வரலாறுகளை அவர் புரிந்து கொண்ட பின்பு, மீண்டும் பாஸ்டியர் தனது பூச்சிகள் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தார்.

இந்த நேரத்தில், லூயி பாஸ்டியரின் அருமைத் தந்தையாருக்கு உடல் நலம் சரியில்லை என்ற செய்தி வந்தது. அதனால் அவர், தனது ஆராய்ச்சியை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டு, தந்தையைப் பார்க்கச் சொந்த ஊரான ஆர்பாய் நகருக்குச் சென்று விட்டார்.

தந்தை இருப்பிடத்திற்கு லூயி செல்வதற்கு முன்பாகவே அவரது அன்புத் தந்தையாரான ஜோசப் பாஸ்டியர் இறந்து விட்டார். பிறகு, இறந்து போன தந்தைக்குரிய இறுதிச் சடங்குகளைப் செய்து, அவர் மீளா சோகத்தில் ஆழ்ந்தார் பாவம் தனது அருமை மகன் லூயி பாஸ்டியர் சிறந்த ஒரு டாக்டராக ஆக வேண்டும் என்பதிலே கடைசி வரை கண்ணும் கருத்துமாக இருந்து உழைத்தவரல்லரா அவரது தந்தையார்?

அதனால், தந்தையின் இழப்பிலே இருந்து மகனால் அவ்வளவு விரைவாக மீள முடியவில்லை. இருந்தாலும், பிறப்பவர் இறப்பது பிறவியின் கடமை என்பதை உணர்ந்து ஓரளவு தனது தந்தை வருத்தத்திலே இருந்து ஒருவாறு மீண்டார். இந்த இக்கட்டான நேரத்தில், லூயி பாஸ்டியருக்கு மற்றுமோர் அதிரடியான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. என்ன அந்த சம்பவம்?

லூயி பாஸ்டியருடைய மகள் ஒருத்தி, நீண்ட நாட்களாகவே நோயிலிருந்து வந்தார். அந்தப் பெண் அவரது முதல் மகள். அதனால் அவள் மீது அவர் அதிகப்படியான அன்பை வைத்திருந்தார்:

தனது மகன் உடல் நலமாக, பாஸ்டியர் அருகே இருந்த படியே அவளைக் கவனித்து வந்தார். ஆனால், அவள் பெற்ற சிகிச்சைப் பலனின்றியே அந்தப் பெண் மரணமடைந்தாள்.

முதலில் தந்தையின் இழப்பு, இரண்டாவதாக தனது மகள் மரணம், இந்த இறப்புத் துயரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரவே, பாஸ்டியருடைய மெழுகு போன்ற உள்ளம் உருகிவிட்டது. அதனால் அவர் மனமுடைந்தார்!

தந்தையை நோய்க்குப் பலி கொடுத்துவிட்ட சோகம், தனது மகளை தொடர் நோய்களுக்குப் பறி கொடுத்த சம்பவம், இவைகளை நினைத்து நினைத்து நெஞ்சம் வெந்து கொண்டிருந்த போதுதான், அவருடைய முழு நேரக் கருத்தும்; கவனமும் மனிதனுக்கு வருகின்ற நோய்களின் தன்மைகளைப் பற்றி ஆராயும் ஒரு மன வைராக்கியத்தை வழங்கியது என்று கூறலாம்.

எனவே, லூயி பாஸ்டியர் தனது வீட்டு இறப்புகளது இழப்புக்குப் பின்பு, தனது மனத்தை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு, மறுபடியும் தனது ஆராய்ச்சி வேலைகளிலே தொடர்ந்து ஈடுபட்டார்.

இந்த நேரத்தில், லூயி பாஸ்டியரின் இரண்டாவது மகள் ஒருத்தியையும் சாவு பலி கொண்டது! அதற்கான சடங்கு களையும் அவர் செய்து முடித்தார்.

மறுபடியும் பூச்சி இன ஆராய்ச்சியை எங்கே அவர் அரை குறையாக விட்டாரோ, அதே இடத்திலிருந்து மீண்டும் தனது சோதனைகளைச் செய்யத் துவங்கினார் பாஸ்டியர்!

சாவு மேல் சாவு, மரணம் மேல் மரணம் என்று தொடர் இழப்புக்கள் ஏற்பட்டு வந்த லூயி பாஸ்டியர் வீட்டில், நான்காவதாக ஒரு மரணமும் ஏற்பட்டுவிட்டது.

லூயி பாஸ்டியர், இரண்டு மகள்களைத் தொடர்ந்து சாவுக்குப் பலிகொடுத்துவிட்ட நேரத்தில், மூன்றாவது மகளையும் அவர் திடீரென ஏற்பட்ட நோய்க்குப் பலி கொடுத்து விட்டாரென்றால், அடுத்தடுத்து சொல்லி வைத்தார் போல குடும்பத்து உயிர்களைச் சாவு பலியாக்கிக் கொண்டே வருகிறதென்றால், யார் மனம்தான் அமைதியாக, நிம்மதியாக இருக்கமுடியும் ? எண்ணிப் பாருங்கள்.

எனவே, லூயி பாஸ்டியர் உள்ளம் வெந்தும் - நொந்தும் கிடந்தது. உலக விஞ்ஞானிகள் எவர் வீடுகளிலும், பாஸ்டியர் இல்லத்து இழவுகளைப் போல, அடுத்தடுத்து எவர் குடும்பங்களிலும் இவ்வாறு நடைபெற்றதாக ஒரு சம்பவமும் அறிவியல் அறிஞர்கள் வரலாறுகளிலே காணப்படவில்லை எனலாம்.

அடுத்தடுத்து நடைபெற்று வந்த பாஸ்டியர் வீட்டுச் சாவுகளால் பட்டுப் பூச்சி ஆராய்ச்சியும், அந்த நோய் தடுப்புக்கான வசதி வாய்ப்புகளும் ஏற்படாமல் தடைமேல் தடைகளாகவே சம்பவங்கள் நடந்து வந்தன.

ஆராய்ச்சியில் மறுபடியும் ஈடுபட்டால், ஓரளவு மன நிம்மதியாவது கிடைக்குமென்று அவர் கருதினாலும், அவரால் அவ்வாறு செய்ய முடியாத சூழ்நிலைகளே அவரைச் சூழ்ந்து கொண்டிருந்தன.

ஏனென்றால், மனிதனுக்கு வரும் நோய்; ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மெல்ல மனிதனையும் கடிக்க வருவதைப் போல, திடீரென்று லூயி பாஸ்டியரே, நோய் என்ற வெந்தணலில் வீழ்ந்தார். அதனால் அவர், பல மாதங்களாக எதனையும் செய்ய முடியாமல் இருந்தார்.

இந்த நேரத்தில், லூயி பாஸ்டியர் தனது ஆராய்ச்சிக்குரிய சோதனை நிலையம் ஒன்றை, எல்லா வசதிகளும் அமைந்த விதத்தில் அமைத்துக் கொண்டார்.

இந்த அறிவியல் ஆய்வுக் கூடத்தை அமைக்க, பிரான்ஸ் மன்னர் உதவியும், பிரெஞ்சு அரசு உதவியும் அவருக்கு சேர்ந்தார் போல கிடைத்தன.

பிரான்ஸ் மன்னர், லூயி பாஸ்டியர் அறிவு மீதும், ஆய்வு மீதும் முழு நம்பிக்கை உடையவர் மட்டுமல்லர், அவர்மீது அளவிற்கும் மேலான அன்பும், பற்றும் உடையவர்.

எனவே, லூயி பாஸ்டியர் தனக்கோர் ஆய்வுச் சாலை தேவை என்று மன்னருக்கு எழுதிய கடிதத்தைக் கண்டதும், பிரான்ஸ் மன்னர் அதிகாரமும், அரசு அதிகாரமும் இணைந்து, அவருக்குரிய உதவிகளைத் தாராளமாகச் செய்து கொடுத்தன!

அந்த அறிவியல் சோதனைச் சாலை, லூயி பாஸ்டியருக்கு மன நிறைவைக் கொடுத்ததுடன், மறுபடியும் சோக, துன்ப மூட்டைகளைச் சுமையென்று எண்ணாமல், அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, மறுபடியும் தீவிரமான ஆராய்ச்சி எண்ணங்களிலே அவர் ஈடுபட்டார்.

சில மாதங்கள் சென்றன. பாஸ்டியர், தனது மனைவி, மகள், உதவியாளர்கள் சிலர் துணையுடன் தனது ஆராய்ச்சியை ஆரம்பித்தார். இப்போதுள்ள உடல் நலக் குறைவாலும், உடல் வளம் குன்றியமையாலும், லூயி பாஸ்டியரால் நடக்க முடியாத நிலை உருவானது.

இருந்தாலும், அந்த குறையை அவர் ஒரு பலவீனமாகக் கருதவில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே தனது உதவி யாளர்கள் துணையோடு ஆராய்ச்சியில் ஈடுபட்டார் லூயி பாஸ்டியர்.

தனது ஆராய்ச்சியின் விளைவாக, லூயி என்னென்ன கண்டாரோ, அந்த விவரங்களை எல்லாம் அவர் கூறக் கூற, பாஸ்டியர் மனைவி, மகள், உதவியாளர்கள் அனைவரும் அப்படியே தவறாமல் எழுதிக் கொண்டார்கள்.

ஆராய்ச்சிகளும், இந்த முறைகளாலே நாளுக்கு நாள் தொடர்ந்து நடைபெற்று வந்ததின் பயனாக, லூயி பாஸ்டியரது சிந்தனை வெற்றி பெற்றது.

இவ்வளவு இடைவிடா இடையூறுகளுக்குப் பிறகும் கூட, அறிவியல் துறையில் அவர் பெற்றிட்ட வெற்றி என்னவென கேட்கிறீர்களா? இதோ அந்த சாதனை!

‘நோயுள்ள பூச்சிகளிடமிருக்கும் நோய்க் கிருமிகள், நோயில்லாத பூச்சிகளுக்கும் நோயைப் பரப்புகின்றன., நோய் தொற்றுகின்றது’.

நோயில்லாமல் இருந்த பூச்சிகளும் நோய்க்குப் பலியாகின்றன. அதைத் தடுக்க வேண்டுமானால், ஆரோக்கியமாக வாழ்கின்ற பூச்சிகளை நோயுற்றவைகளிடம் இருந்து பிரித்து வைக்க வேண்டும். என்பதுதான் லூயி பாஸ்டியர் கண்ட சாதனையாகும்.

நோய்க் கிருமிகள் தொற்றும் தன்மை உடையவை, பிறவிடத்தில் நோயைப் பரப்பும் குணமுடையவை என்பதை, முதன் முதலாக அறிவியல் உலகத்திலேயும், அறிஞர் களிடையேயும் கண்டுபிடித்துக் கூறிய முதல் சாதனையாளரே லூயி பாஸ்டியர்தான்.

பாஸ்டியருக்கு முன்பு, எந்த அறிவியல் சாதனையாளரும் பாஸ்டியர் கண்டுபிடித்த நோய்க் கிருமிகள் தன்மையை கண்டுபிடித்துக் கூறியவர்களல்லர் என்பதே உண்மையாகும்.

எனவே, லூயி பாஸ்டியரின் அறிவியல் அறிவுரையின் படி, நோயுள்ள பட்டுப் பூச்சிகள் எவையெவை என்பதைப் பிரித்தெடுக்கப்பட்டன.

நல்ல, வளமுள்ள பட்டுப் பூச்சிகள், வரும் பூச்சி நோயிலே இருந்து காப்பாற்றப்பட்டன. பட்டுத் தொழிற் சாலைகளில் இந்த பாஸ்டியர் முறையைக் கையாண்டார்கள் - பண்ணையாளர்கள்.

அறிவியல் அறிஞர் லூயி பாஸ்டியரின் ஆய்வுச் சாதனைக் கேற்றவாறு, வியாதியுள்ள பட்டுப் பூச்சிகள் பிரித்து எடுக்கப் பட்டன. நல்ல பட்டுப் பூச்சிகள் நோயிலே இருந்து காப்பாற்றப் பட்டதுடன், ஆரோக்கியமாகவும் அவை பாதுகாக்கப்பட்டன.

பட்டுத் தொழிலாளர்களின் பசி, பட்டினி, வறுமை - சிறுமைகள், துன்பங்கள் - வேதனைகள் எல்லாம் ஒழிந்தன. பட்டுத் தொழில் பிரான்ஸ் நாட்டில் பழைய நிலையிலே ஓங்கி வளர்ந்தது. பிரான்ஸ் நாட்டுப் பொருளாதார நிலை வளமானது; பட்டுத் தொழில் துறை விரிவானது; வளர்ந்தது. அந்நாட்டு நெசவாளர்களை அரசு கஞ்சித் தொட்டிகளைச் சந்திக்கும் நிலையை லூயி பாஸ்டியர் அறிவியல் அறிவு தவிர்த்தது.

எனவே, இத்தகைய ஓர் அற்புதமான அறிவியல் அறிஞரின் வரலாற்றுச் சாதனைகளால் உருவான மருத்துவ விவரங்களைத் தொடர்ந்து படிப்போம் வாரீர்.

லூயி பாஸ்டியர் பாரீஸ் கல்வி -
கரை மோதிய நீர்க் குமிழ் ஆனது!

இத்தாலி நாட்டுக்கு அருகே உள்ள ஒரு சிறு தீவான அஜாஜியோவில், 1769-ஆம் ஆண்டு, மாவீரன் நெப்போலியன், 1821-ஆம் ஆண்டுவரை, செயிண்ட் எலினா என்ற ஒர் ஒதுக்குப் புறத் தீவிலே வாழ்ந்து, மறைந்து, ஏறக்குறைய தனது ஐம்பத்தொன்றே முக்கால் ஆண்டுகளாக, வெல்வாரும், வீழ்த்துவாரும் இல்லாத ஒரு சரித்திர நாயகனாக வாழ்ந்தான் என்கிறான் கே.எம். தாம்சன் என்கிற வரலாற்றாசிரியன் தனது “நெப்போலியனின் எழுச்சியும் - வீழ்ச்சியும்” என்ற நூலில்!

இதற்கு என்ன காரணம் தெரியுமா? நெப்போலியன் தனது போர் வீரர்களிடம் பழகும்போது, மனிதாபிமானியாகவும், கண்ணியமாகவும் பரோபகாரியாகவும், கம்பீரமாகவும் நடந்து கொண்ட பண்பாடுகள்தான் என்றால், எல்லாரும் வியந்து போற்றுவார்கள்.

அந்தப் படை வீரர்களுக்கு என்னென்ன வசதிகள் தேவைகளோ, அவை அனைத்தையும் பொறுப்போடு அவனே உத்தரவிட்டு செய்து கொடுத்தான். அவனது உத்தரவுகள் நடந்துள்ளனவா என்று மேற்பார்வையும் பார்த்தான்.

இந்த அரிய பண்புகளைக் கண்ட பிரான்ஸ் நாட்டு வீரர் பெருமக்கள், மாவீரன் நெப்போலியனுக்காக, எப்படிப்பட்ட தியாகத்தையும், ஏன் அவரவர்கள் உயிர்களையே கூடத் தியாகம் செய்யத் தயாராக இருந்தார்கள்.

படை வீரர்களிடம் நெப்போலியன் அவ்வாறு நடந்து கொண்டதற்கும் ஓர் அடிப்படைக் காரணம் இருந்தது. என்ன தெரியுமா அது?

‘அறிவு, திறமை, வலிமை இந்த மூன்றும்தான் உலகத்தை ஆட்சி புரிகிறதே அல்லாமல், படிப்பறிவற்ற, பாமரக் கூட்டத்தின் பெரும்பான்மை பலத்தால் ஆள முடியாது’ என்பது அந்த உலகப் பெருவீரனான நெப்போலியனது அரசியல் சித்தாந்தமாகும்.

அந்த பாமரக் கூட்டத்தை அழிவுத் துறையிலோ - ஆக்கப் பாதையிலோ செலுத்துவது, திறமையும் - வலிமையும் ஆகும். எனவே, படிப்பறிவற்ற பொது மக்களை அலட்சியமாகக் கருதி, தனிப்பட்ட மனித நேயத்தோடும், கம்பீரமாக, கண்ணியமாக, கடமையாற்றும் கருணையோடும் அவர்களிடம் நடந்து கொண்டான் நெப்போலியன்!

இத்தகைய ஒர் அற்புத பெருமை, மதிப்பு, எந்த சரித்திர நாயகனுக்கும் அன்று வரை, ஏன், இன்றுவரையும் கூட எவருக்கும் உருவானதில்லை என்பதை, நாம் வரலாற்று ஏடுகளிலே இன்றும் காண்கின்றோம்.

அத்தகைய ஓர் உலக மாவீரன் போர்ப் படையிலே ஒரு வீரனாகப் பணியாற்றியவர் லூயி பாஸ்டியரின் தந்தையான ஜோசப் பாஸ்டியர் என்பவர்.

இந்த ரணகளச் சூரர் தனது வீரத்தாலும், திறமையாலும், படை வீரர்களுக்குள்ளே சுடர்விட்டு எரியும் தியாக உணர்வுகளாலும் இந்த பாஸ்டியர், நெப்போலியனுடைய அன்பைப் பெற்ற நேர்முகத் தளபதிகளில் ஒருவரானார்!

எதற்கெடுத்தாலும் பாஸ்டியரை அழைத்து யோசனை கேட்குமளவுக்கு நெருக்கமான தளபதிகளுள் ஒருவராக விளங்கினார் ஜோசப் பாஸ்டியர் என்ற படை தளபதி.

நெப்போலியனது அரசியல் தோல்விகளுக்குப் பிறகு, அதாவது, அந்த மாவீரனுடைய மரணத்திற்குப் பிறகு, யார் யார் அவருடன் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தார்களோ, அவர்கள் அனைவரும் வறுமைக் கடலிலே தள்ளப்பட்டுத் தத்தளித்தார்கள்.

வாழ்க்கை ஆதாரத்தின் நம்பிக்கைக்குரிய ஆதரவு என்ற துரும்புகள், பிடிப்புகள், எதுவுமற்ற பயங்கரச் சுழல்களிலே சிக்கி வாழ்க்கையில் ரத்தக் கண்ணிரைச் சிந்திக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பயங்கர வாழ்க்கையின் வேதனைக் கொடுமை களை அனுபவித்தவர்களில் ஜோசப் பாஸ்டியர் என்ற தளபதியும் ஒருவராவார்.

இறுதியாக, நிர்கதியாக நிலை தடுமாறி அலைந்த அந்த ஜோசப் என்ற படைவீரர் தளபதி, தனது குடும்பத் தொழிலான தோல் பதனிடும் தொழிலை, தனது குடும்பத்தினர் வயிற்றை வளர்க்கச் செய்யத் துவங்கினார்.

ஜோசப் பாஸ்டியருக்கு அந்தத் தோல் தொழிலில் போதிய வருமானமும் வரவில்லை. இருந்தாலும், அதை விட்டால் வேறு வழியில்லை என்பதால் அந்தக் குறை வருமான வாழ்க்கை யோடுப் போராடிக் கொண்டே காலம் தள்ளினார்.

ஃபிரான்ஸ் நாட்டிலே ஜூரா என்பது ஒரு மாநிலம். அது ஃபிரான்சுக்குக் கிழக்குப் பகுதியிலே உள்ளது. அந்த மாநிலத்தில் ‘டோல்’ என்பது ஒரு சிற்றுர்.

இந்தச் சிறு கிராமத்தில்தான் ஜோசப் பாஸ்டியர் தனது தோல் பதனிடும் தொழிலை ஆரம்பித்து நடத்தி வந்தார்.

அந்தச் சிறு ஊரிலே பிறந்தவர்தான், நீங்கள் படிக்கப் போகும் அறிவியல் அறிஞரான லூயி பாஸ்டியர் என்பவர். அவர் ஜோசப் பாஸ்டியரின் முதல் மகன் ஆவார். தாயார் பெயர் ஜூன் எடினட் ரோக்யீ என்பதாகும்.

ஜோசப் பாஸ்டியர், நெப்போலியன் படைத் தளபதியாகப் பணியாற்றியவரே தவிர, எந்தப் பள்ளியிலும் சேர்ந்து அவள் முறையாகக் கல்வி கற்றவரல்லர்.

தனது முயற்சிகளால் சில அரிய நூல்களைப் படித்துக் கல்வி அறிவு பெற்றார். போர்க்களம் பற்றிய நூல்களாக இருந்தால் போதும், அதைப் படித்து முடித்துவிட்ட பின்புதான், மற்ற வேலைகளையே செய்வார்.

அந்த அளவுக்கு அவர் சிறுவயதிலேயே போர்க் கலை நூற்களைப் படிப்பதிலே மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். ஜோசப் பாஸ்டியர் சிறந்த வீரராக விளங்கியவரே தவிர, வீண்பேச்சுப் பேசிக் காலம் கழிக்க மாட்டார். மாவீரன் நெப்போலியன் எப்படி எந்தப் பிரச்சனையானாலும் அதை யோசித்து, ஆழ்ந்து, சிந்தித்து, பிறகு செயலாற்ற முனைவாரோ, அதேபோல ஜோசப் பாஸ்டியரும் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர யோசித்து, சிந்தித்த பிறகே அதற்கான வேலைகளில் இறங்கி ஈடுபடுவார்.

அத்தகையத் திறமையும், துணிவும், சுறுசுறுப்பும், பரபரப்பும் கொண்டு பணியாற்றி வருவதைக் கண்ட அந்தச் சிற்றுார் மக்கள் அவரிடம் நெருங்கிய நண்பர்களாகப் பழகலானார்கள்.

ஜோசப் பாஸ்டியர் துணைவியாரான ஜீன் எடினட் ரோக்யீ, பெண்களுக்கே உரிய சிக்கன வாழ்க்கை, சீரான வாழ்க்கை வாழ்ந்து, கணவன் செய்யும் தோல் பதனிடும் பணிக்கு உறுதுணை புரிந்து வந்தார்.

கணவனும், மனைவியும் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும், சிறுவன் பாஸ்டரையும், மற்றக் குழந்தைகளையும் சிரமப்பட்டுக் காப்பாற்றும் நிலையிலேயே திண்டாடினார்கள்.

‘டோல்’ ஒரு சிறிய ஊர்தானே! அந்தக் கிராமத்தில் ஜோசப் பாஸ்டியர் தனது தோல் பதனிடும் தொழிலைச் செய்து வந்தார். ஆனாலும், போதிய வருவாயில்லாமல் சிரமம் பட்டுக் கொண்டே வாழ்ந்தார்.

இதற்கு மேல் இந்தச் சிற்றுாரில் என்னதான் மாடாய் உழைத்தாலும் போதிய வருவாய் வாராது என்பதை உணர்ந்த ஜோசப் பாஸ்டியர், தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு எங்கு சென்றால் போதிய வருவாய் வரும் என்று சிந்தித்தார்.

தனது மனைவி ஜீன் எடினட் ரோக்யீயுடன் சிறுவன் லூயி பாஸ்டியருடன், ‘ஆர்பாய்’ எனும் வேறோர் சிறு நகருக்குச் சென்றார்.

அந்த நகரத்துச் சூழலுக்கு ஏற்றவாறு, சிறு வீட்டொன்றை அமைத்துக் கொண்டு, அங்கேயும் தனது பரம்பரைத் தொழிலான தோல் பதனிடும் தொழிலையே செய்து வந்தார். அவருக்கு உறுதுணையாக மனைவி ரோக்யீ கடுமையாக உழைப்பதுடன் இல்லாமல், சிறு குழந்தையான லூயி பாஸ்டியரையும், கணவன்மனைவி இருவரும் எந்தவிதக் குறைபாடுகளும் நேராதவாறு வளர்த்து வந்தார்கள்.

லூயி பாஸ்டியரின் தந்தையும் அவரது மனைவி ஜீன் எடினட் ரோக்யீயும் மிகக் கஷ்டப்பட்டுத் தனது மகனைப் படிக்க வைக்க, இரவும் பகலும் தங்களது குலத் தொழிலான தோல் பதனிடும் தொழிலோடுப் போராடி உழைத்துப் பணம் பெற்றுப் படிக்க வைத்தார்கள் - தங்களது மகனான லூயி பாஸ்டியரை

அவர்கள் அவ்வாறு படிக்க வைத்ததற்கு என்ன காரணம் தெரியுமா? லூயி பாஸ்டியர் தந்தை ஜோசப் பாஸ்டியர் மாவீரன் நெப்போலியனது போர் படையிலே தளபதியாக இருந்தாரே தவிர, அதற்குத் தனது கல்வி பலமல்ல காரணம்! வீரம், தீரம், திறமை, போர்த் தந்திர சுபாவங்களே காரணமாக அமைந்திருந்தன.

எனவே, லூயி பாஸ்டியர் பெற்றோர்கள் கல்வி கற்றவர்கள் அல்லர்! ஆனாலும், தனது குலத் தொழிலிலே சிரமமப்பட்டு தேடிய பணத்தைக் கொண்டு அவர்கள் தனது மகனை ஆர்பாய் என்ற நகரிலே உள்ள பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார்கள்.

கல்வியில் லூயி பாஸ்டியர் மிகச் சிரத்தைக் காட்டிச் சுமாரான மதிப்பெண்களைப் பெற்று நடுத்தரமான ஒரு மாணவனாக அவர் திகழ்ந்து வந்தார்.

இந்த மதிப்பெண்களையும் அவர் இரவும் - பகலும் அரும்பாடுபட்டே படித்துப் பெற்று வந்தார். பரிசுகள் சில பெற்றார். என்றாலும், அவர் எதையும் மெதுவாகவே புரிந்து கொள்ளும் சுபாவமுடையவராகவே இருந்தார்.

ஆனால், பாஸ்டியரிடம் இருந்த சிறப்பு என்னவென்றால், ஒரு பாடத்தைக் குற்றமறப் படித்து, நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே, அடுத்தப் பாடத்தைக் அவர் படிக்க ஆரம்பிப்பார். அதற்காக இது புரியாத பாடம், என்று எதையும் ஒதுக்கி வைத்து விடும் குணம் அவரிடம் எப்போதுமில்லை.

தனக்குப் பாடம் போதிக்கும் ஆசான்களிடம், எந்தப் பாடம் புரியவில்லையோ, அதைத் திருப்பித் திருப்பிக் கேட்டு, உரிய விடைகளைப் பெற்றுத் தெரிந்து கொண்ட பிறகே - மறுபாடம் படிக்க முயற்சிப்பார். எதையும் அவசரம் அவசரமாகப் படித்துக் கொள்ள மனமில்லாதவர் மிகச் சிறந்த பொறுமைசாலி எனலாம் பாஸ்டியரின் கல்வித் தரத்தை!

ஜோசப் பாஸ்டியர் மாவீரன் நெப்போலியனிடம் போர் பயிற்சி பெற்றவரல்லரா? அதற்கேற்ப பாஸ்டியர் தனது மகனை காலை, மாலை இரு வேளைகளிலும் அழைத்து, தம்மருகே உட்கார வைத்து, மாவீரன் நெப்போலியனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள், கல்வி முறைகள், மனிதாபி மானங்கள், விடாமுயற்சிகள், சுறுசுறுப்பான பணிகள் ஆக்க நோக்கங்கள், ஃபிரான்ஸ் நாட்டின்மீது அவருக்கிருந்த நாட்டாபிமானம், தாய் தந்தையர் மீது அவர் வைத்திருந்த பெற்றோர் பாசம் ஆகியவற்றை எல்லாம் ஒவ்வொரு சம்பவங்களாக எளிய முறையிலே, மகன் புரிந்து கொள்ளும் உணர்வுகளோடு விளக்கிக் கூறிக் கூறி, தனது மகன் லூயி பாஸ்டியரையும் நெப்போலியனுடைய நகல் போலாக்கினார்.

கல்வியில் பெற்றோர் கவனிப்பு தேவை என்று இப்போதல்லவா நாம் பேசுகிறோம்? இந்தப் பணியை மிகச் சிறந்த முறையில் தனது மகனிடம் அன்றே செய்து கண்காணித்து வந்தவர் ஜோசப் பாஸ்டியர்!

அன்றாடம் தனது மகனுக்கு என்ன பாடங்களை ஆசான் போதித்தாரோ, அதே பாடத்தை மீண்டும் தனது மகனைப் படிக்க வைத்து அதை அவரும் கேட்டுக் கவனிப்பார்.

ஜோசப் பாஸ்டியரின் இந்தக் கண்காணிப்புக் கல்விப் பணிகள், அவர் தனது மகனைக் கற்றோர் அவையில் முன் நிறுத்தும் சிறப்பை நாளும் வழங்கி வந்து கொண்டிருந்தது. இதனால் லூயிக்கு கல்வியில் பெரும் நாட்டமும், ஊக்கமும் உருவாக்கியது. சிறந்த மாணவராக அவர் விளங்கி வரும் நிலையேற்பட்டது.

லூயி பாஸ்டியர் கல்வியில் சராசரி மாணவராக இருந்தாலும், பார்க்கும் படங்களையெல்லாம் அப்படியே திருப்பி எழுதுவதில் மிகச் சிறந்த ஓவிய ஆற்றல் பெற்றவராகவும் இருந்தார். அவர் படிக்கும் போதே எழுதிய ஓவியங்கள் எல்லாமே பள்ளி ஆசிரியர்களால் பாராட்டப்பட்டன.

ஆனால், தகப்பனார் ஜோசப் பாஸ்டியர் தனது மகன் வரையும் படங்களைத் தனது மனதுக்குள்ளேயே அவரே பாராட்டி மகிழ்ந்து கொள்வாரேயன்றி, தனது மகன் எதிரே யாரிடமும் பாராட்டிப் பேச மாட்டார். காரணம், தனது மகன் கல்வி எந்த வழியிலும் பாழ்பட்டுப் போகக் கூடாது என்ற கவலைதான். அதற்காகவே தினந்தோறும் லூயி பாஸ்டியரின் கல்வியில் அக்கறை காட்டுவார்.

லூயி பாஸ்டியர் பள்ளியின் தலைமை ஆசிரியரான ரொமானெட் என்பவர், ஒவ்வாரு மாணவனையும் அன்றாடம் கவனித்து வருபவர். தனது பள்ளி மாணவர்களிலே யார் நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள், யார் சோர்வடைந்துக் குறைவான மதிப்பெண்களைப் பெற்துள்ளார்கள் என்ற மதிப்பெண் பட்டியலைப் பார்த்து, அவிர்வர்களது குறை நிறைகளைக் கூறி ஊக்கமளிக்கும் குணமுடையவர்.

மாணவர்கள் திறமைகளை நன்கு புரிந்து கொண்டு, அவர்களைத் தனது அலுவலக அறைக்குள் அழைத்து, தக்க அறிவுரைகளை வழங்கி, நல்ல மதிப்பெண்களைப் பெற்றிட ஓய்வு நேர வகுப்பு களையும் நடத்துமாறு மற்ற ஆசிரியர்களுக்கு உத்தர விடுவார்.

ஒரு நாள் லூயி பாஸ்டியரைத் தனது அறைக்கு அழைத்து, அந்த மாணவரிடம் உள்ள நல்ல ஒழுக்கங்களைப் பாராட்டியது டன், அந்த மாணவருடைய ஓவியத் திறமையை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்.

அவரசப்படாமல், ஆத்திரப்படாமல், மிகப் பொறுமையாக, பாடங்களின் சந்தேகங்களை மீண்டும் மீண்டும் வகுப்பு ஆசிரியரிடம் கேட்டு, தனது சந்தேகங்களைத் தெளிவுப்படுத்திக் கொள்ளும் முறை அந்த தலைமையாசிரியருக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஒரு பாடத்தை குறையறத் தெளிவு பெற்ற பின்னரே, மறு பாடத்தைப் படிக்கப் புகும் செயல் அவருக்கு மாணவன்மீது மேலும் அதிகப் பற்றையூட்டியது.

இவற்றையெல்லாம் நன்கு கவனித்த தலைமை ஆசிரியர், லூயி பாஸ்டியரிடம் ஒரு தனித் திறமை, ஏதோ ஓர் உள்ளுணர்வுப் பொறி சுடர்விடுகிறது என்பதை உணர்ந்தார். எதிர்காலத்தில் லூயியிடம் மிகப் பெரிய அறிஞனாக மதிக்கப் படும் அறிவு இருப்பதைக் கண்டார்.

மறுமுறை லூயி பாஸ்டியரைத் தனது அறைக்குள்ளே அழைத்துச் சென்று, தட்டிக் கொடுத்து, ‘லூயி, உன்னிடம் ஏதோ ஒரு திறமையுள்ளது. அதை நீ வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே, நீ பாரீஸ் நகருக்குச் சென்று, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலே சேருவது நல்லது. அப்போதுதான் எதிர்காலத்தில் நீ அரசு பள்ளி ஆசிரியனாகப் பணியாற்ற முடியும். அதற்கான தகுதிகள் உன்னிடத்தில் உள்ளதாக நான் உணர்கிறேன். உனது தந்தையிடம் இதைக் கூறு’ என்றார்.

தலைமை ஆசிரியரே தனது தகுதியைப் பாராட்டி ஊக்கம் கொடுத்ததை உணர்ந்த லூயி பாஸ்டியர், வீட்டுக்குச் சென்றதும் தனது தந்தையிடம் அதை மகிழ்ச்சிப் பொங்கக் கூறினார். தனக்கும், ஆசிரியர் பணிபுரிய ஆர்வமிருப்பதாகத் தந்தையிடம் பணிவோடு உரைத்தார்.

ஜோசப் பாஸ்டியர் மாவீரன் நெப்போலியனைப் போல எதையும் சிந்தித்து, திட்டமிட்டுச் செயல் புரியும் பயிற்சி யுடையவரல்லரா? அதனால், மகனை அனுப்பி விட்டு ஜோசப் சிந்திக்கலானார்.

தான் குடியிருந்து தொழில் புரியும் ஆர்பாய் நகரிலே இருந்து - பாரிஸ் மாநகர் முன்னூறு மைல் தூரம் உள்ளது. அங்கே போனால், லூயி கவனமாகக் கல்வியில் முன்னேறுவானா? பணமும் அதிகம் செலவாகுமே!

அதைவிட, தனது ஊருக்கு அருகே உள்ள வெசன்கான் நகருக்குச் சென்று படிக்கலாமே! நாமும் நமது தொழில் விவகாரமாக அடிக்கடி அங்கு செல்ல வேண்டி யிருக்கிறதே! அப்போதெல்லாம் லூயியின் கல்வி நடத்தையைக் கவனிக்க முடியுமே! என்றெல்லாம் ஜோசப் பாஸ்டியர் சிந்தனை செய்தார்.

பாரிஸ் நகருக்கு லூயி பாஸ்டியர் சென்று படிப்பதை தந்தை விரும்பவில்லை. அதனால், மகனுக்குரிய அனுமதியை ஜோசப் வழங்காமல், ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்றே கூறி வந்தார் லூயியிடம்!

பாரிஸ் நகருக்கு எப்படியாவது என்னை அனுப்புங்கள் தந்தையே, என்று லூயி பல முறைத் தந்தையைக் கேட்டு அலுத்துப் போனார். ஜோசப் மகன் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் திணறினார்.

அந்தவேளையில், ஜோசப் பாஸ்டியரின் நண்பரான பேர்பையர் என்பவர், பாரீஸ் நகரிலிருந்து தனது சொந்த ஊரான ஆர்பாய் நகருக்கு வந்தார். அவர் பாரிஸ் நகரத்தில் காவல்துறைப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். லூயி பாஸ்டியரை அவர் சிறுவயது முதலே நன்கு அறிவார்.

பேர்பையர், ஜோசப் பாஸ்டியரைச் சந்தித்தார். அப்போது, பேர்பையரிடம் ஜோசப் பேசும்போது, ‘பேர்பையர், நமது லூயி கல்வியில் மிக ஆர்வமுடையவனாக இருக்கிறான். பாரீஸ் நகரிலே இருக்கும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலே சேர்ந்து கல்வி பெற விரும்புகிறான். இப்போது அவன் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பரிந்துரை செய்கின்றார். எப்படியும் லூயியை அரசுப் பள்ளி ஆசிரியராக்கிட முயற்சி செய்யுங்கள் என்கிறான். ஆனால், எனக்கென்னமோ லூயி அவ்வளவு தூரமுள்ள பாரீஸ் நகருக்குச் சென்று படிப்பதில் விருப்ப மில்லை. நீ என்ன சொல்கிறாய் பேர்பையர் என்று பேச்சோடு பேச்சாக ஜோசப் பாஸ்டியர் தனது எண்ணத்தை அவரிடம் எடுத்துரைத்தார்.

உடனே பேர்பையர், “ஜோசப், லூயி பாரீஸ் வந்து படிப்பதை நான் ஆதரிக்கின்றேன். நான் அவருக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து தரத் தயார்” என்றார்.

பாரீஸ் நகரில் உன்னைத் தவிர வேறு யார் அவனுக்கு உதவி செய்வார்கள்? ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் யாரும் எனக்குத் தெரியாதே! உனக்கு யாரையாவது தெரியுமா? என்று கேட்டார் ஜோசப்.

எதற்கும் நீ கவலைப்படாதே. அதற்கெல்லாம் நான் பொறுப்பு ஏற்கிறேன். பாரிஸ் நகர் கல்வித் துறையில், பார்பட் என்ற ஒரு நண்பர் இருக்கிறார். அவரை நான் நன்கு அறிவேன். அவரும் நமது ஜூரா மாநிலத்தைச் சேர்ந்தவர்தான். அவர் கல்வித் துறையில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். பிறருக்கு உதவி செய்வதில் அவர் சிறந்த மனிதர், பாடம் போதிப்பதிலும் வல்லவர், மாணவர்கள் கல்வியில் அக்கறையுடையவர், எல்லா மாணவர்களிடமும் அன்போடு பழகுபவர், அவர் பணியாற்றும் பள்ளியில் சம்பளமும் குறைவு. தயங்காமல் லூயியைப் பாரிஸ் நகருக்கு அனுப்பு ஜோசப், மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றார் பேர்பையர்!

பாரீஸ் நகருக்குச் சென்று தனது மகன் கல்வி கற்பதில் விருப்பமில்லாமல் இருந்த ஜோசப் பாஸ்டியர், நண்பர் கூறிய அறிவுரைகளைக் கேட்டதற்குப் பின்பு தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

அதே நேரத்தில் லூயி பாஸ்டியர் படித்துக் கொண்டிருந்த ஆர்பாய் பள்ளித் தலைமை ஆசிரியர் ரொமானெட்டும் ஜோசப் பாஸ்டியரைச் சந்தித்து, லூயியை பாரிசுக்கு அனுப்புவதால் உண்டாகும் நன்மைகளை விளக்கியுரைத்தார்.

எதிர்காலத்தில் லூயி பாஸ்டியர் அறிவாழமிக்க ஓர் ஆசிரியனாகவும், மேதையாகவும் திகழ்வார் என்று ஆர்பாய் பள்ளி ஆசான் கூறிய ஆர்வத்தை புறக்கணிக்காமல், மகன் லூயி யின் ஆசையையும் மறுக்காமல், பாரீஸ் நகர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்க்க ஜோசப் பாஸ்டியர் அனுப்பி வைத்தார்.

பாரீஸ் நகர் சென்றார் லூயி பார்பட் என்ற பள்ளி ஆசிரியரைப் பார்த்தார். ஏற்கனவே பார்பட்டிடம் பேர்பையர் பரிந்துரைத் திருந்ததால், லூயியை அவர் உடனே சேர்த்துக் கொண்டார்.

என்னென்ன வசதிகளைப் புதிய மாணவன் ஒருவனுக்குச் செய்து தரவேண்டுமோ, அனைத்தையும் ஏற்பாடு செய்தார். அத்துடன் லூயி மீது பார்பட் தனி அக்கறையும் காட்டி ஆதரித்தார்.

எப்போதுமே, லூயி பாஸ்டியருக்குப் பெற்றோர் பாசம் அதிகம். அதிலும், குறிப்பாகத் தனது தாயை விட்டு அவர் ஒருபோதும் அன்றுவரை பிரிந்திருந்ததில்லை.

இப்போது அருமைத் தந்தையின் முகமும், அன்புத் தாயின் அரவணைப்பும் லூயியிக்குப் பெரும் பிரிவுக் கவலையை உருவாக்கி விட்டது. வயதிலும் சிறுவன்தானே! போகுமா பாசம்?

எவ்வளவோ ஆறுதல்களை பார்பட் கூறினார். எல்லா வசதிகளையும் லூயி மனம் கோணாதபடி செய்து கொடுத்தார். எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது. வீட்டு நினைவுகளே லூயியை வாட்டியது.

எப்போதும் அதே நினைப்பில் இருந்த லூயி, கல்வி மீதும் கவனம் செலுத்துவதில்லை. வேளா வேளைக்கு உணவின் மீதும் நாட்டமில்லை. ஏதோ ஒன்றை இழந்து விட்டவன் நிலைபோல. லூயிக்கு வீட்டுக் கவனம் அடிக்கடி துன்புறுத்தியது.

பார்பட் முயற்சிகள் எல்லாம் பலன் தரவில்லை. லூயியின் மன நிலையைப் புரிந்து கொண்ட அவர், பெற்றோர், பாசத்தால் மீளா நோய்க்கு ஆளாகிவிடுவானோ என்று அச்சப்பட்டு, ஜோசப் பாஸ்டியருக்கு லூயியின் நிலையை தந்தி மூலம் பார்பட் தெரிவித்தார்.

பார்பட், தனது நண்பர் பேர்பையரையும் வரவழைத்து, நேரிடையாகவே ஆறுதல் கூற வைத்தார். எந்தத் தேறுதலும், ஆறுதலும் லூயியின் வீட்டுக் கவனத்தை வீழ்த்தவில்லை! நாளுக்கு நாள் உணவும் கொள்ளாமல், உறக்கமும் இல்லாமல் அவர் சோர்வடைந்தவரானார்.

தந்தியைப் பெற்ற ஜோசப் பாஸ்டியர் பாரீஸ் நகர் வந்தார். மகனிடம் எதுவும் பேசவில்லை. ஏனென்றும் கேட்கவில்லை லூயியை பார்பட் ஆசிரியருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, லூயி பாஸ்டியரை அழைத்துக் கொண்டு ஆர்பாய் நகர் திரும்பினார்.

ஜோசப் பாஸ்டியர் தனது ஆற்ற முடியாத கோபத்தை மகனிடம் காட்டிக் கொள்ளவில்லை. மகனுடைய உள்ளத்தைப் புரிந்து கொண்டார். என்றாலும், அவரது மனம் அலைமோதும் கடலாகவே இருந்தது: ஏமாற்ற அலைகளின் குமிழ்கள் அடிக்கடி உருவாவதும், கரையிலே அலைமோதி உடைவதுமான மனச் சூழ்நிலையிலே ஜோசப் இருந்தார்.

கல்வி கற்றபடியே பிறர்க்கு;
ஆசானாகவும் புகழ் பெற்றார்!

ஒரு மாணவனுடைய பெற்றோர்கள் பணம் இல்லாதவர்களாக இருக்கலாம்; கல்வி கற்காதவர்களாகவும் இருக்கலாம். அதற்காக, பெற்ற பிள்ளையை எந்தத் தகப்பனும் தன்னைப் போலவே அறியாமையாளனாக இருக்கவிட எண்ண மாட்டான். எந்த வேலையைச் செய்தாவது தனது கல்லாமை என்ற இழி பெயரைப் போக்கிக் கொள்ளவும். பெற்ற மகனைக் கற்றோர் அவையிலே முன் நிறுத்தும் பெறும் பேற்றைப் பெறு பவனாகவுமே இருப்பான் - வாழ்வான் - அதற்காக உயிரையும் தியாகம் புரியத் தயங்கமாட்டான்! அந்தக் காட்சிகளை நாம் இன்றும் நமது நடைமுறை வாழ்க்கையிலே காண்கிறோம்.

எனவே, ஜோசப் பாஸ்டியரும், அவரது இல்லத்தரசி ஜீன் எடினட் ரோக்யீயும் படிக்காத பாமரர்களாக இருந்தனர் என்பதென்னமோ உண்மைதான்! ஆனால், அத்தகைய வறுமை யாளர்கள் தாம், குலத் தொழிலைச் செய்து சேர்த்த பணத்தைக் கொண்டு லூயி பாஸ்டியரை பாரீஸ் நகருக்கு அனுப்பிப் படிக்க வைததாாகள.

லூயி பாஸ்டியர் மீதும் தவறில்லை. தாய் - தந்தை பாசமுடைய சிறுவன்! அதனால், பாரீஸ் நகரில் பெற்றோர் பாசத்தைவிட கல்வி பெரிதல்ல என்ற சிறுபிள்ளை பாச நேசத்துக்குப் பலியாகி, மீண்டும் தந்தை ஊரான ஆர்பாய் நகருக்கே திரும்பி விட்டான்

ஆனாலும், அன்றாடம் தோல் பதனிடும் கூலியைப் பெற்று வந்த அந்தத் தாயும் - தந்தையும், மகன் படிப்புக்குப் பாரீஸ் நகர் காரணத்தைக் காட்டி நிறுத்தி விடவில்லை. மனிதனுக்கு எண்ணற்ற ஆசைகள் தோன்றலாம்; பிறகு அதுவே அழியலாம் அல்லது முடங்கி விடலாம்! அதற்காக, தோன்றும் எண்ணங்கள் எல்லாமே நடந்து விடும் என்று நினைப்பது இயற்கையான தவறே ஆகும்.

ஆசை நிறைவேறா விட்டால், அதை எண்ணிக் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பது கடைந் தெடுத்தக் கோழைத்தனம். வெற்றி பெறவில்லையே நமது ஆசை தோல்வி கண்டு விட்டதே, என்று அனல் மூச்சு விட்டுக் கொண்டு இருக்கவும் கூடாது.

‘ முயற்சி திருவினை ஆக்கும் ‘ என்பது பொய்யா மொழி என்று கருதிய ஜோசப் பாஸ்டியரும், அவரது துணைவியாரும், தங்களது கவலையை மகனுக்கும் காட்டாமல், மற்றவர்களுக்கும் வெளிப்படுத்தாமல், மறுபடியும் ஆர்பாய் நகரிலுள்ள, லூயி பாஸ்டியர் முன்பு படித்த பள்ளியிலேயே சேர்த்துக் படிக்க வைத்தார்கள்.

- லூயி பாஸ்டியர், தனது பாரீஸ் நகர் கல்வியால் பெற்றோர்கள் அடைந்த கவலைகளையும், ஏமாற்றத்தையும் நன்றாகவே புரிந்து கொண்டிருந்தார். என்றாலும், அவர்கள் அதை வெளியே காட்டிக் கொள்ளவே இல்லையே என்பதை அறிந்து. பெற்றோர்களது பெருந்தன்மையை லூயி போற்றிக் கொண்டார்!

தனது அன்பு தாயையும், அருமை தந்தையையும், உடன் பிறந்த தங்கை, தம்பிகளையும், உற்ற நண்பர்களையும் கண்ட பிறகு, பாரிஸ் நகர் கல்வி நிலை அவருக்குக் கனவாய் மறைந்து போனது! அதை லூயி மீண்டும் நினைப்பதையே மறந்தார்!

ஆர்பாய் நகர் பள்ளியிலே சேர்ந்த லூயி பாஸ்டியர், தனது பழைய தலைமையாசிரியரைக் கண்டு மகிழ்ந்தார்; நண்பர்களோடு இணைந்து விளையாடினார்; பெற்றோர்களுடன் சேர்ந்து தோல் பதனிடும் தொழிற்சாலைக்குச் செல்வார்; வழக்கம் போல, தனது சித்திரம் எழுதும் பழக்கத்தையும் செய்தார். இவ்வாறு ஆர்பாய் பள்ளி வாழ்க்கையின் மகிழ்ச்சியை மீண்டும் புதுப்பித்துக் கொண்டார்.

ஆர்பாய் பள்ளித் தலைவர் ரொமானெட், லூயியின் முயற்சி வினானதைக் கண்டு வருந்தினார். இருப்பினும் சந்திக்கும் போதெல்லாம், மீண்டும் பாரீசுக்குப் போ, படி ஆசிரியராக, முன்னேறு என்று அடிக்கடி லூயியின் கல்வி ஆசையைத் துண்டிவிட்டுக் கொண்டே இருந்தார்.

பள்ளித் தலைமையாசிரியர் இவ்வாறு தூண்டி விட்டுக் கொண்டே இருப்பதை, லூயி அடிக்கடி சிந்திப்பார் ஒரு நாள், தான் பாரீஸ் நகரக் கல்வியை விட்டு விட்டு வந்தது தவறுதான் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தார்!

மறுபடியும் தனது பெற்றோரிடம், நயமாக, பணிவாக, கனிவாக, தழ தழத்தக் குரலிலே, மெதுவாக, பாரீஸ் நகரத்தில் மீண்டும் கல்வி பெறவேண்டும் என்று கேட்டார். தகப்பனார் கோபப்படாமல், சம்மதம் தரவே இல்லை. மெளனமாக இருந்தார்.

அடிமேலடி அடித்தால் அம்மியும் நகருமல்லவா? அந்த எண்ணத்திலே தந்தையிடம் கெஞ்சி, கொஞ்சி தமது விருப்பத்தை வாழைப் பழத்தில் ஏற்றும் ஊசியைப் போல வற்புறுத்திக் கொண்டே வந்தார் லூயி பாஸ்டியர்!

இறுதியாக ஒருநாள் தந்தை ஒப்புதல் தந்தார். மேல் படிப்புக்கு லூயியை அனுப்பிட சம்மதித்தார். பாரீஸ் நகருக்கு அனுப்பவா? அதுதானில்லை. ஆர்பாய் நகருக்கு அருகே உள்ள ‘பெசன்கான்’ நகரில் உள்ள பள்ளிக்கு அனுப்பினார்!

ஜோசப் பாஸ்டியர் இருக்கும் இடத்திலே இருந்து இருபது மைல் துரத்தில் ‘பெசன்கான்’ உள்ளது. அங்கே அடிக்கடி தனது தொழில் சம்பந்தமாக அவர் செல்வார். போகும் நேரமெல்லாம் மகனைப் பார்க்க முடியுமல்லவா?

அதனால், லூயிக்குப் பெற்றோர் பாசம் அடிக்கடி ஏற்படாது. ஒரு வேளை அந்த ஆசை வருமானால், போய் பார்த்து விட்டுத் திரும்பிவிட வாய்ப்பு இருக்கிறதல்லவா? அந்தத் தைரியத்தால் லூயியை பெசன்கான் நகர் பள்ளியிலேயே சேர்த்தார். ஜோசப் பாஸ்டியர்!

ஏதோ ஒரு பள்ளியில் சேர்ந்தாலும் பரவாயில்லை, கல்விதான் முக்கியமானது என்ற மனமாற்றம் லூயி பாஸ்டியருக்கு ஏற்பட்டு விட்டது. அதனால், கல்வியும் - அவரும் இரண்டற ஒன்றி விட்டார்கள்.

பள்ளித் தலைமையாசிரியர், மற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் லூயியின் தனித் தன்மையான திறமை களைக் கண்டு அன்போடு பழகினார்கள். கல்வி கற்பதிலும், தேர்வுகள் எழுதுவதிலும் அவர் கவனமாக இருக்கின்றார் என்பதின் அறிகுறியாக நிறைய மதிப்பெண்களைப் பெற்று வந்தார்.

ஆண்டு இறுதித் தேர்வு வந்தது. அதில் லூயி நிறைய மதிப்பெண்கள் பெற்றார்! எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களை எடுத்திருந்தார். அவர் ஒரு மாணவராக மட்டுமல்லர்; மற்ற மாணவர்களுக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர் விருப்பப்படி பாடம் சொல்லிக் கொடுத்தார்! எடுத்துக் காட்டாக;

சென்னை மாநகரிலே இன்றுள்ள லயோலா கல்லூரியில் எஃப்.ஏ.வகுப்பில் நெல்லை மாவட்டம், முள்ளிப் பள்ளம் என்ற ஊரைச் சேர்ந்த எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை என்பவர் படித்துக் கொண்டிருந்தார்.

அவர் ஆங்கில மொழியிலே வல்லவர்; திறமையான அறிவாழம் பெற்றவர். ஆனால், நடுத்தரமான வாழ்க்கை பெற்ற மாணவர். அவர் எஃப்.ஏ. வகுப்புக்குரிய ஆங்கில பாடம் துணை நூலாக சேக்ஷ்பியரின் நாடகங்களில் ஒத்தெல்லோ, ஜூலியஸ் சீசர், கிளியோபாட்ரா, மெர்ச்செண்ட் ஆஃப் வெனிஸ் என்ற நாடகங்கள் பாடங்களாக இருந்தன.

அந்த நாடகங்களையும், அதற்குரிய ஆங்கில நோட்சு களையும் உரையாக எழுதி, நூலாக அச்சிட்டு மாணவர்கள் இடையே விற்பனை செய்திருந்தார் அந்த எஃப்.ஏ. மாணவர் .

மறுநாள் பாடம் நடத்த வகுப்புக்கு வந்தார் ஆங்கில் துணை பாடம் போதிக்கும் பேராசிரியர். ஒவ்வொருவர் கையிலும் சேக்ஷ்பியர் நாடகங்களது கெய்டு இருப்பதை பார்த்த அந்த போராசிரியர், அந்த வழிகாட்டி நூலைப் படித்துவிட்டு, அற்புதமான ஆங்கில மொழியின் அந்த விரிவுரையைக் கண்டு பாராட்டினார்! தனக்குள்ள சந்தேகம் அப் பாடங்களில் ஏற்பட்ட போது, அந்த நோட்சைப் புரட்டிப் பார்த்து பாடம் போதித்தார்!

இதில் என்ன சிறப்பு என்றால், சேக்ஸ்பியர் நாடகக் கெய்டின் ஆசிரியர் யார் தெரியுமா ‘மேக்னிலான் ரூப்’ என்று பெயர் அச்சிடப்பட்டிருந்தது. யார் இந்த மேக்னிலான் ரூப் என்ற விசாரணை வகுப்பில் நடந்தது. மாணவர்கள் யாரும் அந்த பெயர் யாருடையது என்ற உண்மையைக் கூறவில்லை. அவர் யார் என்ற அடையாளமும் தெரியவில்லை. நோட்சிலுள்ள ஆங்கில மொழிப் புலமை நயத்துக்காக மாணவர்கள் அதைப் பணம் கொடுத்து வாங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள்.

இறுதியாக, விசாரணை அப்போதிருந்த லையோலா கல்லூரி பிரின்ஸ்பால் மில்லர் வரை சென்ற பின்பு உண்மை தெரிந்தது. அதாவது, எம்.எஸ். பூரணலிங்கம் என்ற எஃப்.ஏ. மாணவர் அந்த நோட்சை எழுதி அச்சிட்டு, அவரே அந்த வகுப்பு மாணவர்கட் கெல்லாம் அதை விற்று, பிறகு அவரே அந்த கெய்டை விரித்து வைத்துக் கொண்டு, பேராசிரியர் நடத்துவதையும் கவனித்தபடியே அமர்ந்திருந்தார்.

பிரின்ஸ்பால் மில்லர், எஃப்.ஏ. வகுப்புக்கு வந்து, யார் இந்த மேக்னிலான் ரூப் என்று கேட்டார்? அதற்கு கெய்டு எழுதிய மாணவர் எழுந்து ‘நான் தான்’ என்றார்!

உனது பெயர் எம்.எஸ். பூரணலிங்கம் அல்லவா? என்று பிரின்ஸ்பால் கேட்க, அதற்கு கெய்டு ஆசிரியர் ‘ஆம்’ என்றுரைக்க, பிறகு எப்படி ஆள் மாறாட்டப் பெயரிலே நோட்சை அச்சிடலாம் என்று பிரின்ஸ்பால் கேட்க, அதற்கு நோட்ஸ் ஆசிரியர் எனது பெயர் POORNALINGAM என்றிருப்பதை, தலை கீழாக எழுதினால் “MAGNILAN ROOP” என்று வரும். அந்த பெயர்தான் இது என்று எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை கூறினார்!

ஏன் இவ்வாறு தனது பெயரை அவர் தலைகீழாக அச்சிட்டார்?

பூரணலிங்கம் என்று அச்சிட்டால் நேரடியாகக் கல்லூரியில் விற்க முடியாது, அட நம்ம பூரணலிங்கம் தானே என்ற அலட்சிய மனோபாவம் உருவாகி, இந்தக் கெய்டு இவ்வளவு மாணவர்கள் இடையே இருந்திராது; எல்லா எஃப்.ஏ. வகுப்பு பிரிவுகளும் வாங்கியிராது யாரோ ஒரு வெள்ளைக்காரர் எழுதிய கெய்டு இது என்ற பெயரைப் பெற்று, கல்லூரி பிரின்ஸ்பால் வரை விசாரணைக்குச் சென்று வியப்பை விளைவித்திருக்காது அல்லவா? என்று பதில் கூறினார் பூரணலிங்கம் கல்லூரி முதல்வர் மில்லரிடம்!

இது போல, சற்ற மாறாக, நமது லூயிக்குப் பள்ளித் தலைவரே மற்ற மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கு மாறு பரிந்துரைத்தார் என்றால், லூயி பாஸ்டியர் திறமையை பள்ளித் தலைமை ஆசிரியர் எப்படி மதித்திருந்தால் மாணவர்களுக்குப் பாடம் போதிக்குமாறு கூறியிருந்திருப்பார்? யோசித்துப் பார்த்தால் லூயியின் அமோகத் திறமை புரியுமல்லவா?

தமிழர் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை என்ற எஃப்.ஏ. மாணவர் ஏழைமையானவர்; அதனால், அவரது அற்புத ஆங்கிலப் புலமையை நேரடியாகக் கூற முடியாமல், தனது பெயரையே தலைகீழாக மாற்றி, யாரோ ஓர் ஆங்கிலேயன் எழுதும் மொழி நடையிலே எழுதிக் கல்லூரி மாணவர்களிடையே விற்று, அது பிரின்ஸ்பால் விசாரணை வரை அகன்று உண்மை புலப்பட்டது. திரு, எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளையின், ஆங்கில விரிவுரை, அற்புதமான ஆங்கிலேயர் நயத் தோடமைந்த மொழிப் புலமையோடு இருந்ததால், மேக்னிலான் ரூப் என்பவர் தப்பினார்! இல்லையா?

ஆனால், லூயி பாஸ்டியரை மற்ற மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்படி பெசன்கான் நகர் பள்ளித் தலைமையாசிரியர் நேரிடையாகக் கூறியதோடு நிற்கவில்லை.

லூயி பாஸ்டியர் ஏழ்மையானவர் என்பதை உணர்ந்த அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர். அவருக்குரிய உணவு, உடை களை இலவசமாக வழங்கினார். ஓராண்டுக்கு லூயி பாஸ்டியருக்கு 300 பிராங்குகளை உதவித் தொகையாக வழங்க உத்தரவிட்டார்:

பள்ளித் தலைமை ஆசிரியரின் பரந்த மனத்தால், பல மாணவர்கள் லூயியிடம் பாடம் கேட்டு அபாரமான பயனைப் பெற்றார்கள். அத்துடனில்லாமல் அந்த தலைமையாசிரியரின் அன்புக்கு நன்றி செலுத்தும் வகையில் லூயி நேரில் சென்று தலைவரை வணங்கினார், மாணவர்கள் பலனடைந்தார்கள்; அதே நேரத்தில் லூயியும் தனது கவனத்தை பணத்தில் சிதற விடாமல், படிப்பில் ஆழ்ந்தும், ஊன்றியும் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த இடத்திலே தமிழ்நாட்டு மேக்னிலான் ரூப் பையும் பிரான்ஸ் நாட்டின் லூயி பாஸ்டரையும் ஏன் ஒப்பிட்டோம் என்றால், மாணவராக இருந்து கொண்டே பேராசியர் அறிவுடையவராக இருக்குமளவுக்கு அறிவுப் பொறி அவரவர் திறமைகளில் சுடருதறியதால், இருவேறு நாடுகளில் இருந்த அறிவு வரவேற்பு, வாழ்த்து, உதவிகள், பாராட்டுகள் எவ்வாறிருந்தன என்பதை உணர்ந்திடவே ஒப்பிட்டோம்.

ஜோசப் பாஸ்டியருக்கு, தனது மகன் பள்ளி நிருவாகத் திடம் பணம் பெற்று, மற்ற மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, எங்கே தனது அருமை மகன் பண போதை யினால் கல்விப் படிக்கட்டுகளிலே இருந்து தவறி விழுந்து விடுவானோ என்று பயந்தார். ஏனென்றால் பணம் வருமானம் பெறவா மகனைப் பள்ளிக்கு அனுப்பினார்? அறிவு வருமானத் திற்காகவல்லவா?

‘மகனே! பண வருவாயல்ல பெரிது; அதற்காக நான் உன்னை அங்கே அனுப்பவில்லை. நீ உதவித் தொகை பெற்றுக் கொடுத்தா நாங்கள் வாழவேண்டும்? ஏழைக்கு என்றும் இருப்பது உழைப்பு அல்லவா? எனவே, பண ஆசையால் படிப்பில் தவறி விடாதே. எச்சரிக்கையோடு இரு பாடத்தில் கவனம் வைத்து தேர்வில் முதல்வனாக வா!’ என்று ஜோசப், லூயியிக்கு கடிதம் எழுதினார்.

‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பதை அறியாதவறா என்ன லூயி? படிப்பில் இரவும் - பகலும் கவனமாக இருந்தார். மாணவர்களுக்குப் பாடம் சொல்வது மூலம் தனது மறதியை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் அறிவொளியைப் பெற்றார்.

லூயி பாஸ்டியருக்கு பெசன்கான் பள்ளி கொடுத்து வந்த 300 பிராங்குகளையும் தனக்கு வேண்டியது போக, மிகுதி பிராங்குகளை பெற்றோர்களுக்கு உதவினார்.

நாளாகவே அவர் தனது படிப்புப் பொறுப்பை மட்டும் உணர்ந்தவராக இல்லை. பெற்றோர்களது ஏழ்மையைப் போக்கும் குடும்பப் பொறுப்பாளராகவும் திகழ்ந்தார். இப்போது தனது மனத்தை அடக்கியாளும் புலன் வீரனாகவும் லூயி விளங்கினார். பாரிஸ் நகர் சென்று பழையபடி பார்பட், பேர்பையர் ஆகியவர்களைச் சந்தித்து ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலோ வேறு எந்தக் கல்விக் கோட்டத்திலோ சேர்ந்து கற்க வேண்டும் என்ற தீராத ஆசையுடையவராக அவர் மாறினார்.

லூயி பாஸ்டியர், எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றார். என்றாலும், குறிப்பாக அறிவியல் பாடத்தில் நிறைய மதிப்பெண்களைப் பெற்றுவந்தார். சில தேர்வுகளில் அந்தப் பள்ளியிலேயே லூயி பாஸ்டியர்தான் முதல் மாணவனாக வெற்றி பெறுவார்.

இறுதித் தேர்வு வந்தது. லூயி பாஸ்டியர் அந்த தேர்வின் எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றார்! தேர்வில் வெற்றிபெற்று தனது சொந்த ஊரான ஆர்பாய் வந்து சேர்ந்தார்.

தனது பெற்றோரிடம் லூயி பாஸ்டியர் தேர்வில் பெற்ற வெற்றியைக் கூறி, அவர்களது பாதங்களைத தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.

பெற்றோர்கள், லூயி பாஸ்டியரை பாரிஸ் நகரில் கல்வி கற்பதற்குரிய எல்லா வசதிகளையும் செய்து கொண்டிருந்தார்கள்.

பாரிஸ் புயல் தென்றலானது!
லூயிஸ் அறிவியல் டாக்டரானார்!

‘ஒரு மரம் விளைந்திருக்கிறது, என்று நாம் ஏன் முணு முணுக்க வேண்டும்?:

- நமது தெருக்களிலே வளைந்திருக்கும் மனிதர்களிலே சிலர் காணப்படும் போது!

பிறைச் சந்திரன் ஏன் சாய்ந்திருக்கிறது? என்று நாம் குறை கூற வேண்டும்?

யாராவது வானத்தை எட்டிப்பிடித்து அதை நிமிர்த்த முடியுமா?

நாம் பார்ப்பதில்லையா? சில சேவல்களுக்குத தலையில் கொண்டையிருந்தும், வால்களில் தோகையில்லாமல் இருப்பதை?

சிலவற்றுக்கு காலில் நகம் இருக்கும். கூவும் ஆற்றல் அவற்றுக்கு இருக்காது.

தலையுள்ளவனுக்குத் தலைமீது அணிந்து கொள்ள குல்லாயில்லை

குல்லாயிருப்பவனுக்கோ அதை அணிந்து கொள்ளத் தலையில்லை.’

‘வாழ்க்கை பலவிதம்’ என்ற தலைப்பில் நைஜீரியப் பழங்குடி மக்கள் இடையே பாடப்பட்டு வரும் பாடலிற்கேற்ப, லூயிபாஸ்டர் வாழ்க்கையும் பலவிதமாக அமைந்திருந்தது.

எடுத்துக் காட்டாக, லூயி பாரீஸ் நகர் சென்றார். ஆசிரியர் பயிற்சிக் கல்வி பெற! ஆனால், பாசத்தின் இறுக்கம் அவரைப் பாதியில் திரும்ப வைத்து விட்டதைக் கண்ட அவரது பெற்றோர்கள் மனம் வேக்காடனாது.

மகனது பொறுப்பற்ற தன்மைக்காக, பாடுபட்டுத் தேடி ஆசையால் சேர்த்த பணம் வீணாகி விட்டதே என்று அவர்கள் மனம் பொறும்பினார்கள்.

அதே லூயி பாஸ்டியர்ஸ், இரண்டாண்டுகளுக்குப் பிறகு பொறுப்புணர்ந்த - கடமையறிந்த மகனாக மாறிய குணத்தைக் கண்டு - அவரது பெற்றோர் குதூகலமடைந்தார்கள்.

மறுபடியும் மகனைப் பாரிஸ் நகருக்கு அனுப்பி வைத்தார்கள் - அதே பெற்றோர்கள். இப்போது, வாழ்க்கையைப் பற்றிய தங்களது அனுபவங்களை விளக்கமாக விளக்கியுரைத்து அதற்கேற்ப படிப்பில் அதிகக் கவனம் செலுத்துமாறு மகனையே அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

‘அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி, எடுத்த கருமங்கள் ஆகா’ என்ற ஒளவைப் பெருமாட்டி அனுபவ வாழ்க்கை அறிவுரைக்கேற்ப, லூயி தனது பாரிஸ் நகரக் கல்விப் பயணம் மீண்டும் தனக்கு கிடைத்ததை எண்ணி பேருவகை பெற்றார்.

தனது ஆர்பாய் தலைமை ஆசிரியர் ரொமானெட் வாழ்த்துடனும், பெற்றோர்கள், தந்தை ஜோசபைன், மற்ற குடும்பத்தினர்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு லூயி பாரிஸ் நகரம் சென்றார்.

பாரிஸ் சென்ற லூயி, தனது அன்பு ஆசிரியரான பார்பட்டைப் பார்த்தார். அவருடன் பேர்பையரும் வந்திருந்ததைக் கண்ட ஆசிரியர் பார்பட், இரண்டாண்டுகளுக்குப் பிறகு லூயியின் மனமாற்ற உணர்வுகளையும், பேச்சுக்களையும் கண்டு வியந்து, பள்ளியில் சேர்வதற்கான எல்லா உதவிகளையும் செய்தார்.

இந்த முறை லூயிக்கு தனது வீட்டுக் கவனமே எதிரொலிக்கவில்லை. முழுக்க முழுக்க கல்வியிலேயே கவனத்தைச் செலுத்தினார். இப்போது அவருக்கு உண்ண, உறங்க நேரமில்லை. அவ்வளவு கல்விப் பணிகள் அவருக்கு வந்து சேர்ந்தன.

லூயி பாஸ்டியர், பல்கலைக் கழகம் செல்வார். அங்கு அறிஞர்கள் ஆற்றும் அறிவியலுரைகளைக் கேட்பார்; குறிப் பெடுப்பார்; அவற்றை மீண்டும் மீண்டும் படித்துக் கவனத்தில் நிறுத்துவார்.

லூயியின் கல்விப் பொறுப்புணர்ச்சிகளைப் பார்பட் தொடர்ந்து கவனித்துக் கொண்ட வந்தார். அதனால் அவரை அழைத்து - பார்பட், ஒரு பொறுப்பை ஒப்படைத்தார். அதாவது, தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு ட்யூஷன் எடுக்கும் பணியை, அதாவது ஓய்வு நேரத்தில் பாடம் நடத்தும் பொறுப்பை அவர் லூயிடமே ஒப்படைத்தார்.

இதைக் கண்ட லூயி, ஆர்பாய் தலைமையாசிரியரைப் போல, பெசன்கான் தலைமை ஆசிரியரான பார்பட்டும் ஓர் ஒப்பற்ற பணியைத் தன்னிடம் ஒப்படைத் திருப்பதைக் கண்டு பேருவகைப் பெற்று, அவரை நேரில் கண்டு நன்றி கூறினார்.

பென்சான்கான் பள்ளிக் கல்வித்துறை, லூயிக்குரிய ஊதியமாக, அவர் பள்ளிக்கு மாதந்தோறும் கட்டம் சம்பளப் பணத்தில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்துக் கட்டுமாறு தலைமையாசிரியர் உத்தரவிட்டார்.

பார்பட் செய்த உதவியும், பள்ளி நிருவாகம் செய்த உதவியையும் கண்டு லூயி உவகையடைந்தார். இதனால், தமது ஏழைப் பெற்றோரது கல்விக்குரிய செலவினச் சுமை ஓரளவுக் குறைந்ததைக் கண்டு மகிழ்ச்சி பெற்றாலும், அதே நேரத்தில் அவர் தனது கல்வியில் மேலும் ஊக்கம் செலுத்தினார்.

தன்னுடன் கல்வி கற்கும் சக மாணவர்களுக்குரிய பாடப் பயிற்சியை மேலும் ஊக்கப்படுத்தினார். உழைப்பு உயர்வினைத் தருமல்லவா? அதற்கேற்ப லூயியின் ஓய்வில்லா உழைப்பைக் கண்டு பள்ளி நிருவாகம் மன நிறைவு பெற்று, லூயி தனது கல்விக்கான சம்பளத்தை அறவே கட்ட வேண்டாம் என்று கூறிவிட்டது.

தனது மகனுக்குரிய கல்விச் செலவுகள் மிகவும் குறைந்து விட்டதைக் கண்ட லூயி பெற்றோர்கள், தங்களது கல்வி சம்பளத்துக்கான உழைப்பு குறைந்தது கண்டு மகிழ்ந்தார்.

லூயி பாஸ்டியர் தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு பாடபோதனை செய்வதோடு நின்றுவிட வில்லை. அதே நேரத்தில் கல்வி கொடுத்தாலும் நிறைவின்றிக் குறைவுராது என்பதற்கு ஏற்றவாறு அவரது பாடங்களையும் ஐயந்திரிபெறத் தெரிந்து தெளிவுப் பெற்றுக் கொண்டார்.

அந்த ஆண்டின் இறுதித் தேர்வு வந்தது. லூயி பெளதிகப் பாடத்தில் முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். அதற்காக பள்ளி நிருவாகம் அவருக்குரிய பரிசு ஒன்றையும் வழங்கியது.

தாம் அறிவியல் துறையில் படித்த சோதனைகளை எல்லாம் தாமே செய்தார். அதில் சில உண்மைகளைக் கண்டறிவதில் அவருக்கு ஆர்வம் அதிகமாக வளர்ந்தது. வழக்கம்போல அறிவியல் பாடங்களை மிக மெதுவாகவே அறிந்தார்; ஆனால், அதைத் தெளிவாகவே புரிந்து கொண்டார்.

அறிவியல் பாடங்களில் பட்டப் படிப்பிற்காகப் படித்த போதும் கூட, லூயி வழக்கமான தனது சுபாவங்களுக்கேற்ப அவற்றை மெதுவாகவே அறிந்து வந்தார்; ஆனால், நுனிப்புல் மேயும் மேடக அல்லாமல் தெளிவாகவே பாடங்களைத் தெரிந்து வந்தார். இதனால் லூயி பாஸ்டியருடைய முன்னேற்றம் வேண்டுமானால் சிறிது தாமதப்படலாமே தவிர, அவரைப் போல் ஒவ்வொரு நுணுக்கங்களையும் ஆழ்ந்து தெரிந்தவர்கள் அந்த மாணவர்களிலே யாருமில்லை என்று பள்ளிப் பேராசிரியர்கள் எண்ணி வியந்தார்கள். அவர்களுள் குறிப்பிடத் தக்கப் பேராசிரியர்கள் டுமாஸ் என்பவர் ஒருவர்; மற்றொருவர் பாலார்டு ஆவார்.

லூயி பாஸ்டியர் தனது கல்விப் பயிற்சியில், இராசயனத்தையும். பெளதிகத்தையும் இரு கண்களைப் போல போற்றிப் படித்துப் பயிற்சி பெற்று வந்தார். குறிபபிட்ட வடிவத்தை அடைகின்ற படிகங்கள் அவருடைய உள்ளத்தைக் கவர்ந்தன.

திரவ நிலையிலிருந்து திடப்பொருளாகும்போது படிகங்கள் அடையும் வடிவங்கள் லூயிக்கு ஆச்சர்யத்தை அளித்தன. அவற்றை ஒரு முறைக்குப் பன்முறை தொடர்ந்து சோதனை செய்து வந்தார்.

குறிப்பாக, மயில்துத்தம், உப்பு, சர்க்கரை, வைரம் போன்ற திடப் பொருட்களின் வடிவங்களைப் பார்த்து வியப்பார்! அவற்றினுள்ளே ஒளி செல்லும்போது உண்டாகும் மாற்றங் களைக் காண்பதில் அவர் தனியொரு புத்துணர்ச்சி பெறுவார்.

பேராசிரியர் பாலார்டு, லூயி மேற்கண்ட சோதனைகளை எல்லாம் பார்த்து, அவரது தனித் திறமைக்காகவே நட்பாடிப் பழகினார். இத்தகைய ஓர் ஆய்வாளன் எதிர்காலத்தில் நல்ல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பான். அவருக்கு உதவியாக இருப்பது நல்லது என்று பாலார்டு எண்ணி லூயியிடம் தோழமை கொண்டார்.

பட்டம் பெறுவதற்கான கல்வியில் அதிகக் கவனம் செலுத்தினார். அதற்காகத் தனது ஆராய்ச்சிகளைச் சிறிது காலம் நிறுத்தி வைத்தார். பட்டம் பெறுவதற்கான இறுதித் தேர்வும் வந்தது. அதை எழுதி, பட்டமும் அவர் பெற்றார்.

லூயி பட்டம் பெற்றாரே தவிர, ஏதோ சிறப்பு மாணவராகவோ, முதல் தர மாணவராகவோ அவர் தேர்வு பெறவில்லை. வகுப்பில் ஒரு சாதாரண மாணவன் தேர்வில் வெற்றி பெறுவதைப் போலவே, அவர் தேர்வில் தேறினார்.

குறிப்பிட்டு அவர் தகுதியைக் கூறுவதானால் பல்கலைக் கழக மாணவர்களுக்குள்ளே அவர் ஏழாவது தகுதியில் பட்டம் பெற்றார்.

ஆர்பாய் நகரத்துப் பள்ளியின் தலைமையாசிரியர் லூயியிடம் குறிப்பிட்டுக் கூறியதற்கேற்ப, அரசு பள்ளி ஆசிரியருக்குரிய தேர்வை எழுதி வெற்றியும் பெற்றார். இதனால், அவர் ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும் என்ற அவாவுக்குரிய அரசுத் தகுதியைப் பெற்று விட்டதே - ஒரு வெற்றிதானே!

ஆசிரியாரகும் தகுதி பெற்றுவிட்ட தனது மகனுடைய கல்வி வெற்றியைக் கடிதம் மூலமாக அறிந்த லூயியின் பெற்றோர்களுக்கு, பழம் நழுவிப் பாலில் விழுந்த சுவை போல மகிழ்ந்தார்கள்.

பேராசிரியர் பாலார்டும், லூயி பட்டம் பெற்று விட்டதை அறிந்து உவகை பெற்றார். எதிர்காலத்தில் அறிவியல் சாதனை களைக் கண்டுபிடிக்குமளவிற்கு லூயி அறிவு பெற்றவர் என்பதை உணர்ந்த இரசாயனப் பேராசிரியர் பாலார்டு, அவருக்கேற்ற பயிற்சியை அளிப்பதற்காக, தன்னிடமே அவரை உதவியாளராக அமைத்துக் கொண்டார்.

ஆனால் பிரெஞ்சு அரசு, லூயியை வேறோர் இடத்தில் அரசு ஆசிரியராக நியமனம் செய்தது. பேராசிரியர் பாலார்டுக்கு அரசாங்கத்திலிருந்த செல்வாக்கைப் பயன்படுத்திட எண்ணி, கல்வி அமைச்சரை அவர் சென்று சந்தித்தார்.

லூயி பாஸ்டியர் சிறந்த அறிவியல் அறிஞரென்றும், அறிவியல் துறையில் டாக்டர் பட்டம் பெறும் வரையிலாவது அவர் பாரிஸ் நகரத்தில் பணியாற்றுவது நல்லது என்றும், கல்வி அமைச்சரைச் சந்தித்துப் பேசியபோது பேராசிரிய பாலார்டு கூறினார்.

ஆசிரியர் ஒருவரே தனது மாணவன் திறமையை வெகுவாகப் பாராட்டிப் பேசுவதைக் கண்ட கல்வி அமைச்சர் மகிழ்ந்தார் கல்வி அமைச்சகம் போட்ட அரசு உத்தரவை ரத்து செய்தார். உடனே, பாலார்டு அப்போதே அமைச்சருக்கு நன்றி கூறி திரும்பினார்.

தொலை தூரத்தில் அரசு தன்னை ஆசிரியராக நியமனம் செய்த ஆணையை, உடனடியாக பேராசிரியர் பாலார்டு ரத்து செய்துவிட்ட செயலுக்கு எப்படி கைம்மாறு செய்யப் போகிறோம் என்று எண்ணிய லூயி, பேராசிரியர் பாலார்டுக்கு உதவியாளராக அமர்ந்து அவரது ஆய்வுக்கூடத்தில் பல சோதனைகளைச் செய்து வந்தார்.

பாலார்டுக்கு உதவியாளராக பணிபுரிந்தபோது, படிகங்களைப் பற்றிய ஆராய்ச்சி லூயி தொடர்ந்து நடத்தி வந்தார். ஆய்வில் கிடைத்த உண்மைகளை எல்லாம் முறைப்படுத்தி, தொகுத்து, கட்டுரைகளாக எழுதி, பல்கலைக் கழகத்திற்கு அனுப்பினார். பல்கலைக் கழகம் அதை ஏற்று ஆய்ந்து லூயியிக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.



‘டார்டாரிக்’கை - ரேசமிக்; அமிலமாக்கி
உலகப் புகழ் பெற்றார் லூயி!

‘ஒரு நெல்மணி நிலத்தில் விழுந்தால், அது பத்து நெல்மணிக் கதிராக மாறுகிறது.

‘காலணிகளைத் தைக்கும் தொழிலாளி, நாளடைவில் ஒரு நாட்டிற்கே அதிபராகி விடுகிறார்!’

விறகு வெட்டியின் மகன், ஓர் இனத்தின் மனித உரிமைகளுக்கு விடிவெள்ளியாகி, இறுதியில் குடியரசுத் தலைவராகிறார்:

சட்டிப் பானைகளைச் செய்பவன் மகன், காலச் சுழற்சிக் கேற்ப அறிவு பெற்று உலக வரலாற்றை எழுதும் ஆசானாகின்றார்.

மனிதனுக்கு மிகவும் வேண்டியது எது? என்று சிந்தித்த சிந்தனையாளன், சித்தாந்தி - வேதாந்தியாகி, இறுதியில் சைபர் ஆகிறான்; அல்லது மூச்சடக்கும் துறவியாகிறான்!.

‘எறும்புக்கு ஆயுள் எவ்வளவு?’ என்று ஒருவன் வினா எழுப்பினால், அவனிடமே ‘சாவுக்கு முன்பு நாய் ஏன் ஊளையிடுகிறது?’ என்ற எதிர் கேள்வியைக் கேட்டுக் குழப்புகிறார்கள் - குவலயத்தை! என்று கூறும் போலந்துக் கவிஞர் ஜிபிக்னியூஹெர்பர்ட் எண்ண ஒவியங்களுக்கேற்ப, மனித வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் ஏராளமாக நடக்கின்றன.

தானுண்ட நீரைத் தலையாலே தரும் மரம்-பூக்கும், காய்க்கும் என்று நம்பினால், அது எப்படியோ பட்ட மரமாகின்றது! புல்வெளியில் தானாக முளைக்கும் அருகம்புல் - சித்த மருத்துவமாவது மட்டுமன்று தெய்வீகப் பலனாகிப் புகழ் பெறுகின்றது.

எனவே, திட்டம் போடுபவன் மனிதன்; அதை நடத்தி வைப்பது இயற்கையின் திரட்சி. அதனால்தான், சாதாரண மனிதானாக மதிக்கப்படுபவன் எல்லாம், காலவேக மாறுதலில் உயர்ந்த மனிதனாக மாறுகிறான். ஏன், வாழ்வாங்கு வாழ்ந்த பின்பு தெய்வத்துள் வைக்கப்படுகிறான்.

இல்லையானால், ஓர் எளிய தோல் பதனிடும் ஜோசப் பாஸ்டியர் என்ற தொழிலாளி, நெப்போலியன் படையில் தளபதி ஆக முடியுமா? ஜோசப் பாஸ்டியரின் மகனான லூயி பாஸ்டியர் என்ற இளம் விஞ்ஞானி, உலக அறிவியல் அறிஞர்கள் இதயத்தில் இடம் பிடிப்பானா? யோசித்துப் பாருங்கள்.

லூயி பாஸ்டியரிடம் இயற்கையாகவே ஓர் அரிய ஆற்றல் அறிவு பொறி ஊடுருவியிருந்தது. ஆனால், பலர் பார்வைக்கு அவன் சாதாரணமாக் காணப்பட்டவன், இயற்கையின் திரட்ச அவனை ஒரு தலைசிறந்த விஞ்ஞானியாக விளக்கியது - வியனுலகத்தின் முன்பு.

படிகங்களைப் பற்றிய ஆராய்ச்சியை லூயி, விரும்பி செய்தார். அதன் பலனை அறிவியல் உலகு முன்பு வைத்தார். அதனால், மூத்த விஞ்ஞானிகள் எல்லாம் தங்கள் ஆய்வகமான இதயத்தின் நட்பு புள்ளியாக ஏற்றனர். அத்தகைய அறிவியல் மேதைகளுள் ஒருவர் ‘பியோட்’ என்பவர்.

‘பியோட்’ இரசாயனப் பேராசிரியர். தலைசிறந்த விஞ்ஞானி என்பது மட்டுமன்று; அவர் ஏறக்குறைய முப்பது ஆண்டு காலமாக லூயி செய்து வந்த படிகங்களையே தொடர்ந்து சோதனை செய்து வருபவர்.

இத்தகையதோர் ஆற்றலுடைய பியோட், லூயி பாஸ்டியர் செய்த படிக ஆய்வுகளைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்; பாராட்டினார்; லுயி வளர்ச்சியில் நாட்டம் கொண்டார் என்றால், அது என்ன சாமான்யமான செயலாகுமா?

இந்த நேரத்தில், லூயி பாஸ்டியரின் அன்பு தாயான ஜுன் எடினட் ரோக்யீ திடீரென்று காலமானார்! இந்த மரணச் செய்தியைக் கேள்விப்பட்டு, மலை குலைந்தாலும் மனம் குலையாத லூயி, ஆர்பாய் நகரம் ஓடினார்.

சவமாகக் கிடந்த தனது அன்னையின் சடலத்தைக் கண்டு லூயி பதறினார்; கதறி அழுதார்; தாயாருக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்த பின்பும்கூட சில மாதங்கள் தந்தை யுடனும், தம்பி தங்கைகளுடனும் தங்கி, அவர்களுக்குரிய ஆறுதல்களைக் கூறினார். பிறகு அவர் பாரீஸ் நகரம் திரும்பினார்.

பிரெஞ்சு அரசு லூயியை, டிஷான் எனும் ஓர் ஊரிலுள்ள சின்னஞ்சிறிய பள்ளியில் ஆசிரியராக நியமனம் செய்தது. இந்த பணி நியமனத்தைக் கண்ட விஞ்ஞானிகள் சிலர், அரசு நியமனத்தை எதிர்த்துக் கண்டனம் தெரிவித்தார்கள்.

விஞ்ஞானிகளது கண்டனத்தை அரசு அலட்சியப்படுத்தி வந்ததால், அந்த அறிவியல் அறிஞர்கள் இடைவிடாமல் அரசை வற்புறுத்தி கண்டனக் கடிதங்களை எழுதி வந்ததைக் கண்ட பிரெஞ்சு அரசு, இறுதியல் லூயியின் அறிவாற்றல்களை முழுமையாக உணர்ந்ததால், அவர் ஸ்டிராஸ்பர்க் என்ற பல்கலைக் கழகத்தில் ஓர் இரசாயனப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்; இதை அறிந்த அந்தக் கண்டனக் கடித விஞ்ஞானிகளான பாலார்டும், பியோட்டும் மற்றும் லூயின் நண்பர்களும் மகிழ்ந்தார்கள்.

லூயி பாஸ்டியர் தனக்காக உழைத்த அறிவு ஜீவிகளுக் கெல்லாம் தனது நன்றியை, வணக்கத்தை நேரிடையாகவும், கடிதம் மூலமாகவும் தெரிவித்தார். அப்போது அவருக்கு வயது என்ன தெரியுமா? இருபத்தாறு! திருமணம் நடைபெறவில்லை.

ஸ்டிராஸ்பர்க் என்ற நகரம் லூயிக்குப் புதிய நகர். உணவுக்கு அவர் கஷ்டப்பட்டார். ஆர்பாய் நகரிலே இருந்து அவர் பணிபுரியும் பல்கலைக் கழக நகருக்கு தினந்தோறும் வந்து போகலாம் என்றாலோ, அது மிகத் தொலைவாக இருந்தது. நேரடிப் போக்குவரத்தும் சரியாக இல்லை.

தந்தையாருக்கு லூயி கடிதம் எழுதினார். உணவுத் தட்டுப்பாடு உண்டாவதைக் குறிப்பிட்டார். தனது தங்கையை சமையல் செய்துபோட அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார் தந்தையும் அதற்கு சம்மதித்து உடனே அழைத்துக் கொண்டு போகுமாறு கடிதம் எழுதினார். ஆனால், லூயி தனது தங்கையை சமையலுக்காக அழைத்துவரத் தயங்கினார். பிறகு, நிறுத்திவிட்டார்.

ஸ்டிராஸ்பர்க் நகர பல்கலைக் கழகத்தின் தலைவராக லாரண்ட் என்பவர் இருந்தார். அவரை லூயி பாஸ்டியர் நேர் காணச் சென்றார். வயதில் இளையவராகவும் இளம் விஞ்ஞானி யாகவும், இளம் பேராசிரியராகவும் வந்துள்ள லூயியை, பல்கழகத் தலைவரான லாரண்ட் மகிழ்ச்சியோடு வரவேற்றார்!

அவரது நிலையை நன்கு விசாரித்து தெரிந்த பின்பு, பல்கலைக் கழகத் தலைவருக்கு லூயியை மிகவும் பிடித்து விட்டது. இருவரும் நண்பர்களானார்கள்.

தலைவர் லாரண்ட் அடிக்கடி லூயி பாஸ்டியரைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்வார்; உரையாடுவார்; விருந்து கொடுப்பார். லூயியின் அறிவியல் ஆய்வுகளைக் கேட்டு வியப்பார்; தொடர்ந்து ஆய்வு செய்திட ஊக்கங்களை வழங்குவார்.

இத்தகைய தொடர்புகளால், லாரண்ட் குடும்பத்திற்கும் அவருக்கும் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. அதனால் தனது தங்கையை ஆர்பாய் நகரிலே இருந்து பாரிஸ் நகருக்கு சயைமலுக்காக அழைத்துவரத் தயங்கினார்.

லாரண்ட் குடும்பத்தினருக்கும் லூயி தொடர்பு மிகவும் பிடித்திருந்தது. லாரண்டுக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் மரீ! அழகே உருவான அந்தப் பெண்ணின் நடவடிக்கை, பழக்க வழக்கப் பண்புகள்; லூயி பாஸ்டியரை ஈர்த்தன. அதனால், மரீயை மணந்து கொள்ளத் திட்டமிட்டார்.

இந்த எண்ணத்தை லூயி தனது தந்தை ஜோசப்புக்கு எழுதி ஒப்புதல் பெற்ற பின்பு, ஒரு நாள் லூயி லாரண்டை அணுகி, மரீயைத் தனக்கு மணம் செய்து தரவேண்டும் என்றும், தனது தந்தை அதற்கு ஒப்புதலளித்து விட்டார் என்றும் கூறினார்.

அதற்குள் மகன் மனமல்லவா? தீடிரென்று ஜோசப் லூயியைத் தேடிக் கொண்டு லாரண்ட் வீட்டுக்கே வந்து விட்டார்.

பெரியவர்கள் இருவரும் சந்தித்துப் பேசினார்கள். இரு குடும்பங்களுக்கும் - மரீ, லூயி மணம் நடைபெற சம்மதம் உருவானது. உடனே லூயிக்கும் - மரீக்கும் திருமணம் நடைபெற்றது. இப்போது லூயிக்கு வயது இருபத்தாறு, மரீக்கு வயது இருபத்திரண்டு.

திருமணம் முடிந்த பின்பு, மரீ கணவருடைய அறிவியல் ஆய்வுகளுக்கு உறுதுணையாக இருந்தார். ஒரு மனிதன் முன்னேற்றத்தின் பின் ஒரு பெண் துணையாக இருப்பாள் என்ற வாழ்க்கைத் துணை நல தத்துவத்துக்கேற்ப, தம் கணவர் ஆராய்ச்சிக்கு முழு மூச்சுடன் மரீ உதவி செய்தார்.

லூயிக்கு எந்த விதக் குடும்பத் தொல்லைகளையும் கொடுக்காமல், ஆராய்ச்சியிலேயே தனது கணவர் முழுவீச்சோடு ஈடுபடவேண்டுமென்ற எண்ணத்தால், அவரை ஊக்குவித்தும், காலை-மாலை வேளைகள்தோறும் தனது கணவன் செய்த சோதனைகளை அவர் சொல்லச் சொல்ல - மரீ குறிப்பெடுத்து வகைப்படுத்தி எழுதிக் கொண்டும், அவற்றைச் சிறுசிறு கட்டுரைகளாகவும் எழுதினார்.

படிகங்களை ஆய்வு செய்வதில் லூயிக்கு எவ்வளவு ஆர்வமும் பற்றுமுண்டோ, அவ்வளவு அக்கறையும் ஆர்வமும் மரீக்கும் இருந்தது. அதனால், படிகங்களைப் பற்றிய ஆய்வறிவும், புதுப்புது செய்திகளும் அவருக்கு உண்டாயின.

ஆய்வு என்றால் சந்தைக் கடை இரைச்சலா என்ன? எனவே, ஆராய்ச்சி புரிவோருக்கு குண்டூசி விழும் ஒசைகூட எழக்கூடாது என்பதை மரீ அறிந்திருந்ததால், லூயி சோதனைக் கூடத்தை அமைதியோடு பாதுகாத்து வந்தார். அவர் கண் பார்வைக்கு ஒர் எறும்புகூட லூயி அறையில் நுழைய முடியாதபடி மரீகட்டுக் காவலோடு இருந்தார்.

லூயி பாஸ்டியர் எந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டாலும் சரி, அந்தச் சோதனையின் ஆழத்திலேயே சென்று கொண்டிருப்பார். மெய் மறந்து போவார்; எந்த முக்கிய நிகழ்ச்சியானாலும் சரி, ஆராய்ச்சிக்கு முன்புதான் நினைப்பார்; பிறகு ஆய்வில் ஈடுபட்டதும் சோதனை அவரை மறக்கடித்து விடும்.

ஒரு முறை ஸ்டிராஸ்பர்க் நகருக்கு ஃபிரான்ஸ் நாட்டு இளவரசர் வருகை தரும் நிகழ்ச்சி ஒன்றிருந்தது. இரசாயனப் பேராசிரியராகப் பணியாற்றும் லூயிஸ் அந்தப் பல்கலைக் கழகம் வழங்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்றாக வேண்டுமல்லவா?

எனவே, தனது துணைவி மரீயிடம் பல்கலை தரும் இளவரசர் வரவேற்புக்குத் தானும் மனைவியும் போக வேண்டு மென்று முடிவெடுத்தனர். பிறகு மரீயை அதற்குத் தயாராக இருக்குமாறு லூயி கேட்டுக் கொண்டார். அதற்கேற்ப மரீயும் இளவரசர் நிகழ்ச்சிக்கு போய் கலந்து கொள்ளத் தயராக இருந்தார்.

விழா நடைபெறுதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு லூயி தனது ஆராய்ச்சி சாலையில் புகுந்தார். ஆய்வில் மூழ்கினார். அவ்வளவு தான் விழா நினைவே இல்லாமல் அப்படியே மூழ்கி விட்டார்.

மனைவியை அழைத்துச் செல்வதாக கூறி சோதனைக் கூடத்துக்குள்ளே புகுந்தவரை அழைக்கவோ, எழுப்பவோ, அரைகுறையாக அந்த ஆய்வை விட்டுவிட்டு வரச் செய்யவோ, மரீக்கு மனமில்லை. லூயிக்கும் விழாவுக்குப் போகும் எண்ணம் எழாமல் மெய் மறந்து உட்கார்ந்து விட்டார்.

விழாவுக்குச் செல்லும் அலங்காரத்தோடே மரீ இருந்து விட்டார். லூயியும் விழாவை மறந்து விட்டார். விழா முடிந்த பிறகு லூயி எழுந்து வந்தார். என்ன பயன் அதனால்? மரீயும் முகம் சுளிக்கவில்லை; லூயியும் மறந்துவிட்டோமே என்று வருந்தவும் இல்லை! இருவரும் ஊமைகளாகவே இருந்து விட்டார்கள். மரீக்கு விழாவைவிட மணாளனது ஆய்வுதான் பெரிதாகத் தெரிந்தது. அத்தகைய மாதரசி மரீ!

தனது கணவர் தொடர்ந்து விஞ்ஞான சோதனைகளைச் செய்ய வேண்டும் அதனால் புதுப்புது கண்டுபிடிப்புகளை உலகு பெற வேண்டும்: பேரும் புகழும் லூயியைத் தேடி வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் மரீ.

சோதனைக் கூடமே கதி என்று கருதி, உடல் நலன்களை லூயி உதாசினப்படுத்த விடமாட்டார். லூயியின் உடல் நலம் ஏதாவது கெடும்போல் தெரிந்தால், உடனே அதற்கு முன் நடவடிக்கையாக கணவனது உடல் நலம் வளம் பெறுவதற்கான சத்துணவுகளை எல்லாம் மரீ தயார் செய்து கொடுப்பார்; கணவனது உடல்தான் அந்த அம்மையாருக்கு தேவாலயம்; அவ்வளவு பயபக்தியோடு அந்த ஆலயக் காவலராக விளங்கியவர் மரீ!

இத்தகைய ஒர் அருமையான இல்லத்தரசியை லூயி பெற்றதால், அவருக்கு ஆய்வுப் பணிகளுக்கான உதவிகள் எளிதாகக் கிடைத்தன. அதனால்தான் அவரால் தொடர்ந்து அமர்ந்து ஆய்வுப் பணிகளை ஆற்ற முடிந்தது.

ஒரு முறை லூயி பாஸ்டியர் அமிலத்தைப் பற்றி ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். ‘டார் டாரிக்’ என்பது ஓர் அமிலம். அந்த அமிலத்தில் இருந்து ‘ரேசமிக்’ அமிலம் என்ற ஒர் அமிலத்தை எப்படித் தயார் செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் கடுமையாக ஈடுபட்டார். இறுதியில் அவரது ஆய்வு வெற்றி பெற்றுவிட்டது.

இந்த அறிவியல் கண்டுபிடிப்பு ஒரு சிறந்த ஆய்வுக் கண்டுபிடிப்பு. இதற்கு முன்பு இப்படியொரு சாதனையை விஞ்ஞான உலகம் காணவில்லை என்பதால் டார்டாரிக் அமிலத்தை ரேசமிக் அமிலமாக மாற்ற முடியும் என்ற லூயி பாஸ்டியர் கண்டுபிடித்து முதன் முதலாக உலகுக்கு அவர் அறிவித்தபோது, அதை எவருமே நம்பவில்லை.

லூயி, அந்த விஞ்ஞான வித்தர்களுக்கு செயலில் சோதனை செய்து காட்டிய பிறகுதான் லூயி பாஸ்டியரை உலகம் உற்று நோக்கி உணர ஆரம்பித்தது.

விஞ்ஞான உலகமே லூயி பாஸ்டியரே விண்முட்ட புகழ்ந்தது. எல்லா விஞ்ஞான அறிஞர்கள் இதயங்களிலும் அவர் ஒர் இளம் விஞ்ஞானி லூயி என்ற பெயரோடு இடம் பிடித்து விட்டார்.

பாரீஸ் நகருக்கு அன்று வரை லூயி பாஸ்டியர் என்றால் யார் என்று தெரியாது. ஆனால், இந்த டார்டாரிக் அமிலத்தை ரேசமிக் அமிலமாக மாற்ற முடியும் என்பதனைச் சோதனை மூலம் செய்து காட்டிய பிறகுதான் - ‘லூயி யார்?’ என்ற கேள்வி பாரிஸ் நகரில் எழுந்தது!

பாரிஸ் நகர இரசாயனக் கழகம் லூயி பாஸ்டியரின் செயற்கரிய விஞ்ஞானச் செயலைக் கண்டுபிடித்ததைக் கண்டு, பாராட்டி, 1500 பிராங்குகளை பரிசாக அளித்தது.

பிரெஞ்சு ஆட்சி, வளரும் இளம் விஞ்ஞானியான லூயி பாஸ்டியரைப் பாராட்டிப் பரிசுகளை வழங்கியதோடு நில்லாமல் பாராட்டு சான்றிதழ்களையும் கொடுத்து மகிழ்ந்தது.

பரிசுத் தொகையைப் பெற்ற லூயி, தனது ஆய்வுக் கூடத்தை சிறப்பாக மேம்படுத்தினார். ஆர்பாய் நகரத்து மக்களும், தலைமையாசிரியரான ரொமானெட்டும் லூயியை பாராட்டினார்கள்.

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, அவன் தந்தை என்ன தவம் செய்து லூயி பாஸ்டியரைப் பெற்றானோ என்று ஃபிரான்ஸ் நாட்டு மக்கள் ஜோசப் லிஸ்டியரைப் பாராட்டினார்கள்.

பீர், ஒயின், பால் கெடாமலிருக்க
பாஸ்டியர் முறையே பாதுகாப்பு!

அழுது கொண்ட பிறக்கின்ற குழந்தை ஒரு நாள் சிரித்துக் கொண்டே சாகும் என்பதுதான் மரண சாசனம்

பிறக்கும் சிலர், அந்த நாட்டின் மண்ணிலே பிறந்ததற் காகவும், அந்த மண்ணின் தானிய உணவு வகைகளை உண்ட தற்காகவும், அந்த வான்வெளியின் காற்றை சுவாசித்ததற்காகவும், அந்த பூமியின் ஊற்றுக் கண்களில் சுரந்த நீரைப் பருகிய தற்காகவும், நாளை இதே மண்ணைத் தாங்கிக் கொள்ள மரண மடையப் போகிறோம் என்பதற்காகவும் ஒவ்வொருவரும் ஒவ்வோர் சமுதாய அடையாளங்களை நிலைநாட்டினாலும்; இத்தகைய அற்புதப் பிறவிகள் ஒரு சிலர்தான் தோன்றுகிறார்கள். அவர்கள் பிறந்த நாட்டுக்குப் பெருமைத் தேடி தந்து மறைகிறார்கள்.

பிறந்த மண்ணுக்காகத் தொண்டு செய்யும் அவர்களின் லட்சியம் முழுவதும் அவர்கள் ஈடுபட்ட செயற்கரிய செயல்கள் மீதே இருக்கும்.

தங்களது குறிக்கோள்களைக் சீர்குலைக்கும் பட்டங்களையோ, பதவிகளையோ அவர்கள் எதிர்பார்ப்பது இல்லை. ஒரு வேளை அவை, அவர்களைத் தேடி நாடி வந்தாலும் பொருட் படுத்த மாட்டார்கள் - உண்மையான சமுதாயச் சிற்பிகள்.

ஆனால், அந்த பதவிகளும் - பட்டங்களும் என்னென்ன சாதனைகளைச் செய்து வாகை சூடுமோ, அந்தப் பணிகளை, சேவைகளை, தொண்டுகளைச் செம்மையாகச் செய்து முடித்து மண்ணுக்கே மண்ணாகி மறைகின்றார்கள். அத்தகைய மனிதர்களில் ஒருவராக விளங்கியவர் லூயி பாஸ்டியர் என்பவர்.

ஃபிரான்ஸ் நாட்டில் லில் என்பது ஒரு பெரு நகரம். அங்கே மதுபான வகைகளான பீர், ஒயின் ஆகியவைகள் பெருமளவு தயாராவதுண்டு. ஃபிரான்ஸ் நாட்டிலேயே லீல் நகர வட்டாரம் தான் அந்த மதுபான வகைத் தயாரிப்புகளுக்குப் பெயர் பெற்றது.

‘லீல்’ நகரில் ஓர் அறிவியல் கழகம் இயங்கி வந்தது. அக் கல்விக் கழகத்தில் ஒரு தலைவர் இடம் காலியாக இருந்தது. அதற்கு யாரை நியமிக்கலாம் என்று அரசு யோசனை செய்தபோது, இறுதியாக லூயி பாஸ்டியர்தான் தகுதி பெற்றவரென்று தீர்மானித்து, அவரை நியமித்தது.

லூயி பாஸ்டியர், லீல் நகரம் சென்று அக் கல்விக் கழகத்தின் தலைவர் பதவியை ஏற்றார். பதவியை அவர் ஏற்றுக் கொண்ட பின்பு, அறிவியல் வளர்ச்சியும், அதன் பயன்களும் பற்றி ஒரு சொற்பொழிவை அந்த விஞ்ஞான அரங்கத்திலே ஆற்றினார்: அங்கே கூடியிருந்த முதிர்ச்சியாளர்களான விஞ்ஞானிகள் எல்லாம், லூயி உரையை வரவேற்றுப் பாராட்டினார்கள்.

ஒயின், பீர் உற்பத்தி தொழிற்சாலைகளோடு, வேறு வகையான தொழிற்சாலைகளும் நிறைந்த இடம் லீல் நகரம். அதனால், அங்கே எப்போதும் வேலை வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கும்.

லீல் நகரில் விஞ்ஞானக் கல்வியும் நன்றாக வளர்ந்திருந்தது. அதற்குரிய ஒரு சிகரமாய் லூயி பாஸ்டியர் தலைமையால் உருவான உரையரங்குகளும், சோதனைக் கூடங்களும் அமைந்தன. பாஸ்டியர் நடத்தும் விஞ்ஞான வகுப்புகளும் ஒரு தூண்டுகோலாகவே திகழ்ந்தன.

லூயி பாஸ்டியரின் வகுப்பில் நடைபெறும் தெளிவான விளக்கங்கள், மெதுவான சோதனை முறைகள், அவர் போதிக்கும் அறிவியல் முறைகள் ஆகியன எல்லாமே அங்குள்ள மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தன.

இதனால் பாஸ்டியர் புகழ், லீல் நகர வட்டாரத்தில் பெரிதும் பரவியது. அவரைப் பொறுத்தவரையில் நல்ல பெயரோடு அவர் வாழ்ந்து வந்தார். புதுப் புது மாணவர்கள் அக் கழகத்தில் சேர்ந்து பயன் பெற்றார்கள்.

இந்த நிலையில் லூயி மாணவர்களுள் ஒருவர், தனது தந்தையின் ஆலோசனைக்கு ஏற்ப, தனது தந்தையின் தொழிற்சாலைக்கு லூயியை வருமாறு அழைத்தார். அதற்கு அவரும் இணங்கினார்.

இருவரும் குறிப்பிட்ட தொழிற்சாலைக்குச் சென்றபோது, மாணவனின் தந்தை எழுந்தோடி வந்து இரு கைகூப்பி, குலுக்கி மகிழ்ச்சியோடு வரவேற்றார்; அதே நேரத்தில் தொழிற்சாலைக்கு வருகை தந்த விருந்தினரை அங்கு பணி புரிவோரும் கூடி வரவேற்றார்கள்.

தன்னை அழைத்து வருமாறு ஏன் கூறினீர்கள்? என்று லூயி தொழிற்சாலை உரிமையாளரைக் கேட்டார்.

‘ஐயா, பீர் தயாரிப்பது எனது தொழில். என்னை நம்பி ஆயிரம் பேர்களுக்கு மேல் பணியாற்றுகிறார்கள். சில காலமாக எனது இந்த தொழிலில் பலத்த நாட்டம் ஏற்பட்டு வருகிறது என்றார்!

அதற்கு லூயி என்ன காரணம்? என்று விளக்கம் கேட்டார்.

‘பீர் தயாரிக்கும்போது கலவை நொதித்து பீராக மாறுவதில்லை. கலவை அழுகி வீணாகி விடுகின்றது. இதுதான் எனக்கு நட்டமேற்படக் காரணம்! ஆனால், என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை ஐயா!

நீங்கள் ஒரு சிறந்த விஞ்ஞானி என்று நாடும் - நகரமும் புகழ்ந்து பாராட்டுகின்றது. விஞ்ஞானியாக நீங்கள் விளங்கு வதற்கு, ஒரு வழி கண்டுபிடிப்பீர்கள் என்பதற்காக எனது மகனிடம் தங்களை அழைத்து வருமாறு கூறினேன்.

எனக்கு நீங்கள்தான் ஏதாவது வழி காட்ட வேண்டும் என்று அந்தத் தொழிலுரிமையாளர் பணிவோடும், பரிவோடும் கேட்டுக் கொண்டார் - லூயியை!

சிந்தனை செய்தவாறே லூயி சிறிது நேரம் அமர்ந்திருந்தார். உடனே அந்த தொழிலதிபருடன் சென்று நன்றாக இருந்த கலவை பீரில் கொஞ்சமும், கெட்டுப்போன கலவை பீரில் கொஞ்சமும் பாட்டிலில் எடுத்துக் கொண்டார்.

இந்த இரு பீர் கலவைகளை நான் சோதனை செய்து பார்த்து விட்டுப் பதில் கூறுகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தார்.

இல்லம் வந்த லூயி, தான் கொண்டு வந்த பீர் வகை இரண்டையும் “மைக்ராஸ் கோப்” உதவியால் கலவைகளை ஆராய்ந்தார். அந்த இரண்டு வகை பீர் கலவைகளிலும் இரண்டு வகையான நுண்ணுயிர்கள் இருப்பதைக் கண்டார்.

அந்த இருவகை நுண்ணுயிர்களில் ஒருவகை பீர் கலவையில் வட்ட வடிவமான நுண்ணுயிர்களாக இருந்தன, இந்த நுண்ணுயிர்கள்தான் கலவையைப் புளிக்க வைத்து, பீராக மாற்றுகின்றன என்பதை அறிந்தார் லூயி.

அடுத்து மற்றொரு வகை பீர் கலவையிலுள்ள நுண்ணுயிர்கள் நீளமாக இருந்தன. இவைதான் கலவையை அழுகவைத்து வீணாக்குகின்றன என்பதை லூயி உணர்ந்தார்.

ஆனால், இரண்டாவது வகையான நீண்ட நுண்ணுயிர்கள் எவ்வாறு கலவைக்குள் வந்தன? என்று லூயி சிந்தித்தார்.

காற்றின் மூலமாகவே அந்த நீண்ட வடிவமான நுண்ணுயிர் கள் கலவையில் விழுந்து அழுகச் செய்து விடுகின்றன என்று அவர் தனது சோதனை வாயிலாகக் கண்டார். இத்துடன் ஆய்வை நிறுத்திவிடாமல் தொடர்ந்து செய்ய முடிவெடுத்தார்.

இந்த சோதனை முடியவில்லை, அதற்குள் பிரெஞ்சு அரசு பாரிஸ் நகருக்கு அவரை இடமாற்றம் செய்துவிட்டது. அங்கே அவருக்கு அதிக அளவு வேலைகள் இருந்தன. அத்துடன் சோதனை செய்வதற்குரிய நல்ல ஆராய்ச்சிக் கூடமும் அங்கில்லை; போதுமான மற்ற துணைக் கருவிகளுமில்லை. ஆனாலும், தொடர்ந்து அதற்குரிய ஆராய்ச்சிகளை லூயி செய்து வந்தார்.

இந்த நேரத்தில் லூயி பாஸ்டியரின் மூத்தமகள் இறந்து விட்டாள். மகளை இழந்து துயரத்தினாலே, தொடர்ந்து அந்த ஆராய்ச்சியை அவர் நடத்தவில்லை : இவ்வாறு சில மாதங்கள் சென்றன.

ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கலவை அழுகல்களால் நட்டங்கள் ஏற்பட்டன. வியாபாரங்களும் சரியாக நடைபெறவில்லை. அழுகிப்போன கலவை பீர்களால் ஆண்டுக்கு நாற்பது லட்சம் ரூபாய நட்டம் ஏற்பட்டதால் அரசுக்கும் வருவாய் தடை உண்டானது.

ஒயின் தயாரிப்புக்குப் புகழ் பெற்ற ஃபிரான்ஸ் நாட்டின் புகழ், மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது. தொழிலாளர்களும் போதிய வேலைகள் இல்லாமல் வறுமையால் தவித்தார்கள். தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பு உருவானது; சில தொழிலகங்களும் மூடப்பட்டுவிட்டன.

லூயி பாஸ்டியர் பாரிஸ் நகரின் தொழிற் சிக்கலையும், தொழிலாளர்கள் படும் வேதனைகளையும் அறிந்தார். மறுபடியும் தனது ஒயின் ஆராய்ச்சியினைத் தொடர்ந்தார். இரவும் பகலுமாகத் தனது சோதனைகளில் கடுமையாக ஈடுபட்டார் லூயி.

காற்றின் மூலம் பரவுகின்ற நீண்ட உருவமுடைய நுண்ணுயிர்கள்தான், மதுபானக் கலவைகளைச் சரியாகப் புளிக்கவிடாமல் அழுகச் செய்கின்றன என்ற அவரது பழைய முடிவை மீண்டும் உறுதிப்படுத்தித் தெரிந்துகொண்டார். அதை அப்போதைய அறிவியல் துறைக்கும் அறிவித்தார்.

லூயி பாஸ்டியர் சோதனை முடிவை அன்றைய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். ஏனென்றால், நுண்ணுயிர்கள் காற்றின் மூலம் பரவவில்லை. அந்தக் கிருமிகள் தாமாகத்தான் உற்பத்தியாகின்றன என்று லூயி கருத்தைப் பலமாக மறுத்தார்கள்.

மேலும் ஒருபடி மேலே சென்று அதிகமான காரணங்கள் அந்த விஞ்ஞானிகள் கூறும்போது, நுண்ணுயிர்கள் காற்றின் மூலம் பரவாதது மட்டுமன்று, எலிகள், பறவைகள் போன்ற உயிர்ப் பிராணிகள் கூடத் தாமகத்தான் தோன்றுகின்றன என்ற அவர்களது நம்பிக்கையைத் தெரிவித்தார்கள். அதற்கான சில புராணக் கதைகளையும் ஆதாரமாகக் காட்டினார்கள்.

பாமரர்கள்தான் இவ்வாறு பழமை விரும்பிகளாக இருந்தார்கள் என்பதன்று. படித்தவர்கள் கூட, நுண்ணுயிர்கள் முதலில் இல்லாமல், திடீரென்றுதான், தாமாகத்தான், உற்பத்தியாகின்றன. காற்றுக்கு - இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று உரத்தக்குரலிலே எதிர்வாதம் செய்தார்கள்.

எதிர்வாதமிடும் துறையினர்களுக்கு பதில் கூறும் வகையில், “ஏற்கனவே நுண்ணுயிர்கள் இருந்தவைதான். அவற்றிலிருந்தே புதிய நுண்ணுயிர்கள் உற்பத்தியாகின்றன. அந்த நுண்ணுயிர்கள் காற்றிலேயும் கலந்துவிடுகின்றன. அந்தக் காற்றில் கலந்த நுண்ணுயிர்கள்தான் காற்றின் மூலமே பிற இடங்களுக்குப் பரவுகின்றன” என்பதை மீண்டும் லூயி உறுதியாகக் கூறினார்.

அந்த ஆராய்ச்சியை லூயி, சோதனை மூலம் நிரூபிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வநதாா.

பல கண்ணாடிக் குழாய்களைத் தயார் செய்தார் லூயி. சில குழாய்களில் நகர் புறம் பக்கமாக வீசும் காற்றை நிரப்பினார். ஆய்வுக் கூடத்திற்கு அவற்றை எடுத்து வந்து சோதனை செய்தார். அந்தக் கண்ணாடிக் குழாய் காற்றிலே ஏராளமான நுண்ணுயிர்கள் இருந்ததைக் கண்டுபிடித்தார்.

அடுத்தமுறை, வேறொரு கண்ணாடிக் குழாயை எடுத்துக் கொண்டு கிராமப் புறங்களுக்குச் சென்று, முன்பு போலவே கிராமப்புறக் காற்றை, அந்தக் கண்ணாடிக் குழாயில் நிரப்பிக் கொண்டு சோதனைக் கூடத்துக்கு வந்து சோதனை செய்தார்.

கிராமப் புறக் காற்றில் நகர்ப் புறக் காற்றைவிட நுண்ணுயிர்கள் மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தார். இந்த சோதனை அவரது மனத்துக்கு நிறைவையூட்டியது.

அடுத்த முறையாக, சில கண்ணாடிக் குழாய்களுடன் மலை உச்சிக்கு ஏறிச்சென்றார். மலை ஏறும்போது அவரடைந்த சிரமங்களை அவர் பொருட்படுத்தவில்லை. கருமமே கண்ணாக இருந்த லூயி, மிகக் கஷ்டப்பட்டு மலையேறி அதன் உச்சிக்குச் சென்றடைந்தார்.

மலை உச்சியிலே சில மணி நேரங்கள் தங்கி, பல கண்ணாடிக் குழாய்களில் மலைக் காற்றை நிரப்பி எடுத்துக் கொண்டு சோதனைக் கூடம் வந்து, மைக்ரோஸ்கோப் கருவி மூலம் அக் காற்றை ஆராய்ந்தார் என்ன முடிவு தெரியுமா?.

சில கண்ணாடிக் குழாய்க் காற்றில் நுண்ணுயிர்களே இல்லை என்பதைக் கண்ட பின்பு, லூயி எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெற்றார். இந்த ஆய்வுகளிலே இருந்து அவர் கண்ட கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? இதோ அந்த வெற்றி முடிவு.

“உயிரற்றவைகளில் இருந்து நுண்ணுயிர்களோ - உயிர்களோ, தோன்றுவதில்லை. ஏற்கனவே இருக்கும் நுண்ணுயிர்களில் இருந்தே புதிய நுண்ணுயிர்கள் தோன்று கின்றன. முன்பு இல்லாமலே திடீரென்று தாமாகவே நுண்ணுயிர் கள் தோன்றுவது என்பது தவறு. காற்றில் நுண்ணுயிர்கள் கலந்திருக்கின்றன என்பதே உண்மை” என்று எதிர்வாதம் செய்த அறிவியல் நிபுணர்களுக்கும், படித்த சில கல்விமான்களுக்கும் சம்மட்டி அடி கொடுத்தார் போன்ற தனது ஆய்வு உண்மையால் ஓங்கியடித்தார்.

எந்தெந்த விஞ்ஞானிகள் தனது கருத்தை ஆரம்பத்தில் நம் மறுத்து, விதண்டா வாதம் செய்து வந்தார்களோ, அவர்கள் எல்லாம்; இப்போது லூயி பாஸ்டியரின் ஆய்வுண்மையைக் கண்டு ஊமைகளைப்போல இருந்து விட்டார்கள்.

அந்த விஞ்ஞானிகளை எல்லாம் லூயி அழைத்து, சோதனை அரங்கத்திலே தனது ஆய்வுகளைச் செய்துகாட்டி நிரூபித்தார். இதனால் அந்த அறிவியலார்கள் மேலும் மெளனி களானார்கள்.

அதற்கு அடுத்து, பாரிஸ் நகரத்திலிருக்கும் சார்போன் பல்கலைக் கழகத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதற்கு அமைச்சர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகை நிருபர்கள், எழுத்தாளர்கள், பாரிஸ் நகரப் பிரமுகர்கள் எல்லாரும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அந்த மிகப்பெரிய கூட்டத்தில், லூயி பாஸ்டியர் தான் செய்த ஆராய்ச்சிக் கருவிகளையும் - அதற்குரிய கண்ணாடிக் குழாய்கள் பொருட்களையும், அவற்றுள் நிரப்பப்பட்ட காற்றின் விவரங்களையும், விளக்கமாக ஒரு பேருரை மூலமாக எடுத்துரைத்தார். அக்கூட்டத்திலே அதை நிரூபித்தும் காட்டினார் லூயி பாஸ்டியர்.

கூட்டத்தில் கூடியிருந்த எல்லாத் துறை அறிவாளர்களும், லூயி பாஸ்டியரின் விளக்க உரையைக் கேட்டும், அவர் நிரூபித்துக் காட்டிய சோதனைப் பொருட்களைப் பார்த்தும், அவரை வியந்து பாராட்டி மகிழ்ந்து கையொலிகள் எழுப்பினார்கள்.

❖ ‘ஏற்கனவே இல்லாமல், தாமாகவே நுண்ணுயிர்கள் தோன்றும்’ என்று மக்களாலும், விஞ்ஞானிகளாலும் நம்பப்பட்டு வந்த மூட நம்பிக்கைக் கருத்து - தகர்தெறியப்பட்டது. இதனால் ஃபிரான்சு அரசுக்கும், மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஏற்பட்ட நன்மைகள் என்ன?

❖ பாரீஸ் நகர், பீர், ஒயின் போன்ற மது பானங்கள் கலவை கெட்டு அழுகிப் போவதற்குக் காரணம், விஞ்ஞான ரீதியாகக் கண்டுபிடித்தவர் லூயி பாஸ்டியர் என்ற விஞ்ஞானிதான் என்ற பெயர் நிலை நாட்டப்பட்டது.

❖ பீர், ஒயின் போன்ற கெட்டுப்போன கலவைகளைக் கெடாமல் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய விஞ்ஞானப் புதுமைச் சாதனைகள் கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டன.

❖ பாரிஸ் நகரத்திலிருந்த பீர், ஒயின் தொழிற்சாலைகள் நட்டத்தில் நடப்பதைத் தடுக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு வேலைப் பெருக்கம் ஏற்பட்டு, அவர்களது வறுமை வாழ்க்கை ஒழிந்து வளமாக்கப்பட்டது.

❖ஒயின் தயாரிப்பதிலே உலகப் புகழ்பெற்றிருந்த ஃபிரான்ஸ் நாடு, இடையில் அதன் புகழ் மங்கியதைத் தடுக்கப்பட்டு, மீண்டும் பழைய புகழே ஃபிரான்சுக்கு ஏற்பட்டது!

❖ ஃபிரான்ஸ் ஆட்சியின் பொருளாதாரச் சீரழிவு, ஒயின், பீர் கலவை அழுகல்களால் ஏற்பட்டன அல்லவா? அந்தச் சீரழிவு தடுக்கப்பட்டு, ஃபிரான்ஸ் நாட்டுப் பொருளாதார வளர்ச்சி முன்பைவிட இப்போது பெருகி வளர்ந்தது.

❖ லூயி பாஸ்டியர் தனது பீர், ஒயின் கலவை கெடாம லிருக்கும் பாதுகாப்பு முறையை, ஒரு குழுவை உருவாக்கி அதற்கு விளக்கம் தந்தார். என்ன அந்த விளக்கம்?

❖ பீர், ஒயின் போன்ற பொருள்களாலும் சரி, அல்லது அதுபோன்ற வேறு எந்த பொருளானாலும் சரி, அவை அழுகி வீணாகாமலிருக்க வேண்டுமானால், அதற்குக் காரணமான நுண்ணுயிர்களைக் கொன்று ஒழிக்க வேண்டும்.

❖ அதே நேரத்தில், பீர், ஒயினுக்குரிய சுவை, குணம், மணம் அழியக்கூடாது என்பதிலேயும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது பீர், ஒயின் போன்றவை தயாரிக்கப் பட்டவுடன், அவைகளைச் சூடாக்க வேண்டும்.

❖ சூடான பீர், ஒயின் பொருட்களுள், காற்று அவற்றில் கலந்துவிடாதபடி பாட்டில்களில் அடைத்து விடவேண்டும். அவ்வாறு அடைத்தால் காற்றால் பரவும் நுண்ணுயிர்கள் பாட்டில் உள்ளே புகாது. அதனால், பீர், ஒயின் திரவங்கள் கெடாமல் பாதுகாப்பாக இருக்கும்!

❖ பீர், ஒயின் சூடாக்கப்படும்போது, அதிலுள்ள நுண்ணுயிர்கள் கொல்லப்படுகின்றன. அதே பீர், ஒயின் காற்று புகாதபடி பாட்டிலில் அடைத்த பின்பு, கெட்ட நுண்ணுயிர்கள் உள்ளே புக முடியாது என்று லூயி பாஸ்டியர் அந்தக் குழுவுக்கு விளக்கம் கொடுத்தார்.

❖ இந்தக் குழுவினர், ஒவ்வொரு பீர், ஒயின் தொழிற் கூடங்களுக்கும் சென்று, பாஸ்டியர் கண்டுபிடிப்பை அந்தநத் உரிமையாளர்களுக்கு விளக்கியதோடு நில்லாமல், ஒவ்வொரு தொழிற்சாலையிலும் அவர்கள் பாதுகாப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்ட வேண்டும். இவ்வாறு, பணியாற்றும் அதிகாரி களுக்கு ‘பாஸ்டியர் முறை’ பாதுகாப்பு அதிகாரிகள் என்று பெயரிடப்பட்டார்.

❖ பீர், ஒயின் போன்ற பொருள்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படும் முறையை, கறந்த பாலையும் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கு பிரெஞ்சு அரசு பாஸ்டியர் முறையையே பயன்படுத்தியது, வெற்றியும் பெற்றது.

❖ லூயி பாஸ்டிர் தாம் கண்டுபிடித்த முறையை நூலாக வெளியிட்டார். அந்த நூலைப் படித்த சிலர், ஒயினைப் போன்ற பொருட்களைச் சூடாக்கும்போது அதன் சுவை, மனம் கெட்டுப்போகும். அதனால் விற்பனை பாதிக்கும் என்ற எதிர்ப்பைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் சிலர் எழுப்பினார்கள்.

❖ அதற்கு பதிலளித்த லுயி, ஒயின் போன்ற திரவப் பொருட் களைச் சூடாக்கினால், அவற்றின் மணம் சுவை கெடாது, மாறாக, சுவையும் மணமும் அதிகமாகும் என்பதைச் சோதனை மூலம் நிரூபணம் செய்துகாட்டினார்.

❖ அந்தச் சோதனைக்குப் பிறகுதான் ‘பாஸ்டியர் முறை’ என்ற அந்த முறையை தொழிலக உரிமையாளர்கள் பின்பற்றி, பெருத்த லாபம் அடைந்தார்கள்.

❖ இப்போது பால் பண்ணைகளில் தயாராகும் பாலுக்கும் பாஸ்டியர் முறையையே ஒவ்வொரு நாடும் பின்பற்றிக் கொண்டு வாழ்கின்றது.

❖ பாட்டில்களில் அடைக்கப்படும் பொருட்களுக்கு எல்லாம் பாஸ்டியர் முறையே தற்போது பாதுகாப்பு உணவாக நடமாடிட பயன்படுகின்றன.

❖ இந்த முறை உலகமெலாம் இன்று பரவி, பெரும்புகழ் பெற்றுள்ளது. பெரும்பொருளை வணிகத் துறையில் ஈட்டித் தருகின்றது. வாணிகமும் முன்னேறி வருகின்றது.

‘லூயி பாஸ்டியர் முறை’ என்ற முறையைப் பற்றி அவர் எழுதிய நூல் பிரெஞ்சு விஞ்ஞானக் கழகத்தவர்களால் பாராட்டப்பட்டு தங்கப் பதக்கம் பரிசும் வழங்கப்பட்டது.

லூயி பாஸ்டியர் அந்த பரிசை பெற்றபோது அவருக்கு என்ன வயது தெரியுமா? நாற்பத்தைந்து! அதற்குப் பிறகே லூயி பாஸ்டியரை பிரெஞ்சு விஞ்ஞானக் கழகம் உறுப்பினராக்கிப் பெருமைப்படுத்தியது.

லூயி பாஸ்டியர் பிரெஞ்சு விஞ்ஞானக் கழகத்தின் உறுப்பினரான பின்பு, ஃபிரான்ஸ் நாட்டில் பட்டு நூல்களைத் தரும் பட்டுப் பூச்சிகளுக்கு ஒருவித நோய் ஏற்பட்டுவிட்டது. பட்டுப்பூச்சிகள் இலட்சக் கணக்கில் அந்த நோயால் செத்தன. அதனால் ஃபிரான்ஸ் நாட்டில் பட்டுத்தொழில் நலிவடைந்தன. பட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டன, ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள வாழ்க்கை - கொடுமையாக, கொடுரமாக இருந்தது.

இந்தப் பட்டுப்பூச்சிகள் நோயை லூயி பாஸ்டியர் எவ்வாறு கண்டுபிடித்தார்? அதற்காக அவரது விஞ்ஞானக் கண்டுபிடிப்புச் சாதனை அந்நாட்டு மக்களுக்கு மட்டுமன்று: உலகுக்கு எப்படிப் பயன்பட்டது என்ற விவரத்தை இதே நூலின் முதல் அதிகாரத்திலே படித்தீர்கள்!

கவனத்திலிருத்த வேண்டுமானால், மறுமுறையும் அதைப் படிப்பது நல்லது. அதற்குப் பிறகே லூயி பாஸ்டியர் நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.

ஆடு, மாடு, கோழி, பன்றிக்கு வந்த
‘ஆந்தராக்ஸ்’ நோய்க்கு மருந்து!

பட்டுப் பூச்சிகள் நோயைக் கண்டறிந்து, அதற்குரிய அறிவியல் வழி முறைகளை லூயி பாஸ்டியர் சோதனைகளால் நிரூபித்துக் காட்டிய பின்பு, அந்த நடவடிக்கைகளை ஃபிரான்ஸ் நாடு பின்பற்றியதால் பட்டுப்பூச்சிகள் நோய் நீங்கி, அந்தத் தொழில் மீண்டும் புதுவாழ்வு பெற்றது. இதனால் பட்டு வணிகத் துறையினர் பாராட்டினர்! பிரெஞ்சு அரசும் லூயியைப் பாராட்டி பரிசுகள் வழங்கியது.

அதற்குப் பிறகு லூயி பாஸ்டியருக்கு இடது - காலும், இடது - கையும் செயலற்றுப்போய் விட்டன. தொழிற்களுக்கும், தொழிலாளர்களுக்கும் புதுவழிகளைத் தனது விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களின் மூலமாகக் கைகாட்டி மறவாழ்வளித்தவர் லூயி. அத்தகை ஒரு பரோபகாரிக்கு கைகால் வீழ்ச்சி என்றால், மனம் வேக்காடாகாமலா இருக்கும்?

இந்த நேரத்தில் ஃபிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் போர் மூண்டது. பாஸ்டியரின் ஒரே மகன் தாய் நாட்டின் மானத்தைக் காக்க போர் முனைக்குச் சென்றான்.

லூயி பாஸ்டியர், பாரிஸ் நகரைவிட்டு தனது சொந்த ஊரான ஆர்பாய் சென்று, அங்கேயே தங்கினார்! போரில் நாளுக்கு நாள் ஜெர்மனியே வெற்றிபெற்று வந்ததால், லூயிக்கு மனக் கவலை அதிகரித்தது.

ஜெர்மனியின் வெற்றி வெறுப்பும் - பிரான்ஸ் தோல்வி கவலை யும் லூயிக்கு தந்ததால், முன்பு ஒரு முறை லூயியின் விஞ்ஞானக் கண்டுபிடிப்பைப் பாராட்டி ஜெர்மன் நாடு வழங்கியிருந்த டாக்டர் பட்டத்தை, அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்டார்.

‘இந்தப் பட்டம் மனித நேயமற்ற பட்டம். பார்த்தாலே எனக்கு வெறுப்பு தோன்றுகின்றது என்று கடிதம் எழுதி - அந்தப் பட்டச் சான்றிதழுடன் இணைத்து, முகத்திலடித்தார்போல அதை திருப்பி அனுப்பிவிட்டார்.

அதே நேரத்தில், இத்தாலி நாடு லூயி பாஸ்டியருக்கு ஓர் அழைப்பைச் செய்தியாக அனுப்பியது. அந்த செய்தி இது:

லூயி அவர்களே! உங்களுக்கு எல்லா ஆய்வு வசதிகளும் கொண்ட ஒர் விஞ்ஞானக் கூடத்தை வழங்குகிறோம். ஒரு பட்டுப் பூச்சிப் பண்ணை நிறுவனத்தை கொடுக்கிறோம். நீங்கள் விரும்பினால் இத்தாலிக்கு வரலாம்’ என்பதே அந்த நாட்டு அரசு அனுப்பிய செய்தியாகும்.

இத்தாலியர் பல்கலைக் கழகமும் லூயி பாஸ்டியருக்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தது. என்ன தெரியுமா அது?

‘உங்களை எங்கள் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக நியமிக்கின்றோம், என்ன சம்பளம் எதிர்பார்க்கின்றீர்களோ - அதைக் கொடுக்கவும் தயாராக உள்ளோம். பதவியை நீங்கள் வந்து ஏற்றுக் கொண்டால் போதும்.’ என்பதுதான் அந்தச் செய்தி.

லூயி பாஸ்டியர் சிறந்த தேச பக்தர், ஃபிரான்ஸ் நாட்டுப் போர் முனைக்குத் தனது ஒரே மகனைப் போராட அனுப்பியவர்; ஜெர்மன் தனது தாய் நாடு மீது போர் தொடுத்த வெறுப்பால், அது தன்னைப் பாராட்டிக் கொடுத்த டாக்டர் பட்டத்தையே தூக்கி எறிந்தவர். அவரா இத்தாலிப் பதவிகளையும், பரிசுகளையும் கெளரவங்களையும் ஏற்பார்?

அதனால் இத்தாலி நாட்டு அரசும் - அதனைச் சார்ந்த பல்கலைக் கழகமும் வழங்கிய பரிசுகள், பதவிகள், விருதுகள் எல்லாவற்றையும் ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டார் - லூயி பாஸ்டியர்! ஜெர்மன் நாடு பீர், ஒயின் என்ற மதுபானம் தயாரிப்பதில் ஃபிரான்சை விடப் புகழ்பெற்றிருந்தது. அதனால், ஜெர்மனி யுடைய ஒயின் தயாரிப்புப் புகழைத் தகர்த்தெறிந்து, அந்த பெயரையும் மதிப்பையும் ஃபிரான்ஸ் பெறவேண்டும் என்ற எண்ணத்தில், மணமும் - சுவையுமிக்க பீர் தயாரிப்புக்கான ஆராய்ச்சியில் லூயி ஈடுபட்டார்.

இலண்டன் மாநகர் சென்றார். பீர் தயாரிக்கும் செய்திகளை அறிந்தர்! தயாரிக்கும் செய்திகளை அறிந்தார்! திரும்பி ஃபிரான்ஸ் வந்து ஜெர்மனியை விடச் சிறந்த பீர் தயாரிக்கும் திட்டத்தை ஆய்வு செய்தார். ஃபிரான்ஸ் - ஜெர்மன் போர் முடிந்தது. அதனால் லூயி பாஸ்டரும் அமைதி பெற்றார். மீண்டும் தனது ஆராய்ச்சிக் கூட்டத்திலே அமர்ந்து கால் நடைகளைப் பற்றி நோய்கள் என்ன என்பதைக் கண்டறியத் திட்டமிட்டார்.

அதற்கேற்றார் போல, லூயி பாஸ்டியரின் இரண்டு பெண்கள் அடுத்தடுத்த ‘டைபாயிடு’ என்று கூறப்படும் காய்ச்சலிலே மாண்டார்கள். தீராத மனவேதனையை மகள்களது நோய் அவருக்கு உண்டாக்கி விட்டதால், பாஸ்டியர் கவனம் நோய்கள் மேல் வெறுப்பை உண்டாக்கி விட்டது.

நோய்கள் உண்டாவதற்கு நோய்க் கிருமிகளே காரணம்; அந்தக் கிருமிகள் மற்றவர்கள் மேலும் தொற்றுகின்றன. அதனால் வியாதிகள் பரவுகின்றன என்ற வியாதிகளின் அடிப்படை உண்மைகளை உணர்ந்தார். வியாதிகள் பரவும் இந்தக் காரணத்தை, லூயி பாஸ்டியர் வெளியே கூறினாரோ - இல்லையோ, வழக்கம் போல சில அறிவியல் ஆய்வாளர்கள் சிரித்தார்கள்! சிரித்தார்கள் என்றால் கேலிக் கூத்தாடினார்கள்.

லூயி பாஸ்டியர் அன்று அறிவித்த அந்தக் கருத்தை ஃபிரான்ஸ் நாடு ஏற்கவில்லை. ஆனால், மற்ற நாடுகளிலே உள்ள அறிஞர்களிலே பலர் ஏற்றுக்கொண்டு, அவர் கூறிய யோசனையின்படி மருத்துவத்தைச் செய்து வந்தார்கள்.

லூயி பாஸ்டியர் கூறிய கருத்தில் எப்போதும் உண்மை இருக்கும் என்று நம்பிய ஒரு மருத்துவர், அவர் கூறியதை ஊசி முனையளவு கூடத் தவறாமல் சிகிச்சை செய்து வந்தார். என்ன அந்த சிகிச்சை என்கிறீர்களா? இதோ அந்த சிகிச்சை முறை:

ஒரு நோயாளி காலில் காயம்பட்டு வந்தார். அவர் காயத்தை அந்த மருத்துவர் கார்போலிக் அமிலத்தால் கழுவிச் சுத்தம் செய்தார். அதன் மேல் பஞ்சு வைத்துக் கட்டுக் கட்டினார் அந்த மருத்துவர் அவ்வாறு செய்ததால், காயத்திலே உள்ள நோய்க் கிருமிகள் எல்லாம் செத்தன. செத்தது மட்டுமல்ல; அக் கிருமிகள் வேறோர் இடத்துக்குத் தொடர்ந்து சென்று நோயைப் பரவாமல் தடுக்கப்பட்டன. காயமும் சீக்கிரமாக ஆறிவிட்டது. நோயாளி சுகமாக வீடுசென்றார்.

இதுதான் அந்த மருத்துவர் கையாண்ட லூயி பாஸ்டியர் சிகிச்சை முறை; இதே முறையைக் கையாண்டே அந்த மருத்துவர் பல நோயாளிகளைக் காப்பாற்றினார்.

அந்த மருத்துவர், தான் கையாண்டு வெற்றி பெற்ற பாஸ்டியர் சிகிச்சை முறை வெற்றியை, லூயி பாஸ்டியருக்கே எழுதி, தங்களது முறை எனது நோயாளிகளுக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

அக் கடிதத்தைப் படித்த லூயி பாஸ்டியர், தனது கருத்து உண்மையானது சரியானது என்று நிரூபிக்க அந்த மருத்துவர் எழுதிய கடிதமே தனக்குச் சான்றாக இருந்தது என்பதைக் கண்டு மகிழ்ந்தார். அதற்கு அடுத்து எடின்பர்க் நகரைச் சேர்ந்த லிஸ்டர் என்ற ஒரு மருத்துவர், லூயி பாஸ்டியர் கருத்துக்களை நம்பி, அவரது சிகிச்சை முறையைப் பின்பற்றி, நோயாளிகளின் காயங்களை கார்போலிக் அமிலத்தால் சுத்தம் செய்து கழுவினார். மருந்தும் வைத்துக் கட்டினார்.

காயங்களில் காற்றுப் புகாதபடியும், கிருமிகள் வேறோரி டத்தில் பரவாமலும் தடுத்தார். அந்த சிகிச்சை முறையில் லிஸ்டர் வெற்றி பெற்றார். வெற்றிபெற்ற லிஸ்டர் தனது சிகிச்சை முறையைப் பற்றி கட்டுரை ஒன்று எழுதினார். அந்தக் கட்டுரையில் தனது மருத்துவ வெற்றிக்குக் காரணம், தான் கண்டுபிடித்த சிகிச்சைமுறைதான் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு அயல் நாட்டு மருத்துவர் பலர் அறிக்கை விடுத்தும், அஞ்சல் மூலமாகவும், கட்டுரை வாயிலாகவும் சான்றளித்த பிறகும் கூட, ஃபிரான்ஸ் அறிஞர்கள் பாஸ்டியர் ஆய்வுக் கருத்தின் முடிவை நம்பவில்லை. இவை அனைத்தையும் கண்ட பிறகு லூயி மனம் இரும்பானது. என்றாவது ஒரு நாள் ஃபிரான்சின் தெளிவில்லா நெஞ்சம் தெளியும் என்ற மனோ பலத்தோடு இருந்தார்.

இடைவிடாத ஆராய்ச்சிகள் ஓர் புறம், எதிர்வாதமிடு வோருக்கு பதில்கள் அளிப்பது இன்னோர் புறம்; சோர்விலாமல் நிரூபணக் கருவிகளைச் சுமந்து கொண்டோடும் அலைச்சல்கள் மற்றோர் புறம் என்று - இவ்வாறு அவர் சுற்றிச் சுற்றியதால் - லூயி பாஸ்டியர் உடல் நிலை உருக்குலை அடைந்தது.

சார்போன் பல்கலைக் கழகத்தின் இரசாயனப் பேராசிரியர் பணியிலே இருந்து லூயி விலகிவிட்டார். அதைக் கண்ட பிரெஞ்சு அரசு அவருக்குரிய சேவைகளுக்காக உதவித் தொகை உதவ முன் வந்தது.

லூயி பாஸ்டியர் உயிரோடு இருக்கும் வரை அவர் பெற்றிருந்த முழுச் சம்பளத்தையே, அவர் விலகிய பிறகும் வழங்கியது. லூயி மறைந்த பிறகு அவருடைய மனைவிக்கு; லூயி பெற்றதில் பாதி தொகையை வழங்கத் தீர்மானித்த அரசு முடிவை ஃபிரான்ஸ் மக்கள் அனைவரும் ஒரு மனதுடன் வரவேற்றார்கள்!

பிரெஞ்சு அரசு முடிவுக்குப் பிறகாவது, அல்லது - சார்போன் பல்கலைக் கழகப் பதவியை விட்டு விலகி விட்ட பிறகாவது, லூயி பாஸ்டியர் விஞ்ஞானத் துறை ஆய்வை விட்டு விலகிக் கொண்டாரா - என்றால் இல்லை.

அதற்கு மேல் தான் தனது ஆய்வில் அவர் தீவிரவாதியானார். அதாவது, மக்களுக்காக தனது ஆராய்ச்சியை நடத்திக் கொண்டிருந்த லூயி பாஸ்டியர், இப்போது கால்நடை பிராணிகளான மாடு, ஆடு, பன்றி, கோழி போன்ற இனங்களுக்கு வரும் நோய் பற்றியும் ஆராய முற்பட்டார்!

ஆந்தராக்ஸ் என்பது ஒரு பயங்கரமான நோய்! அந்த நோய்க்கு அப்போது கணக்கற்ற ஆடு, மாடுகள், இறந்து கொண்டே இருந்தன. அந்த வியாதிவந்த எந்த மாடும், ஆடும் உயிர் பிழைப்பதில்லை என்ற முடிவுக்கே அரசும் வந்தது; சிகிச்சை முறையும் திணறியது.

ஆந்தராக்ஸ் நோய் என்றால் என்ன? அன்றுவரை அந்த கால்நடை வியாதிக்கு மருந்ததே இல்லையா? என்று சிலர் கேட்கக் கூடுமல்லவா? ஆந்தராக்ஸ் என்ற நோய் கண்ட ஆடோ - மாடோ பிழைப்பதே அரிது. அந்த வியாதி வந்த ஆடு, மாடுகள் முதலில் மூச்சு விடவே முடியாது; திணறும்; உடனே அவை ரத்த வாந்தி எடுக்கும். நடை தளரும் நடக்க முடியாமல் தரையில் உடல் தளர்ந்து வீழும்; பிறகு சாகும். இதுதான் ஆந்த்ராக்ஸ் நோய் காணும் கால்நடைகளின் நிலை. என்வே அந்த நோய் என் வருகிறது? என்ன காரணம் என்பதே அன்று வரை எவராலும், எந்த விஞ்ஞான வித்தகராலும் கண்டறியப்பட வில்லை.

ஆந்தாராக்ஸ் என்ற நோய் வந்தால், விவசாயப் பெருமக்கள்தான் அல்லோல கல்லோலப் பட்டு - சிகிச்சை தேடிை எங்கெங்கோ ஓடுவார்கள். காரணம்; அவர்கள்தானே கால்நடை களை நம்பி வாழும் ஏழைகள்? அதனால், அவர்கள்தான் ஆடு, மாடுகளுக்கு ஆந்த்ராக்ஸ் வந்தால், முதலில் பீதியடைவார்கள்; கிலி கொள்வார்கள்; காரணம், விவசாய நஷ்டம் அவர்களுக்குத் தானே போய் சேரும்.

எனவே, ஆடு, மாடுகளுக்கு வரும் நோய், விவசாயிகளைத் தான் வாட்டி வதைக்கும்; நாளுக்கு நாள் நட்டங்களைப் பெருக்கும்; கடனாளிகளாகி விவசாயத்தை வீணாக்கும்; பாதிக்கும் படிப்பறிவில்லாத ஏழை விவசாயிகள் - இந்த நோய் ஏதோ ஒரு தெய்வ குற்றத்தால் வரும் கோமாரி போன்ற நோயாக எண்ணி, அவர்கள் வழிபடும் தெய்வங்களுக்கு வழிபாடு செய்வார்கள்.

எனவே, இந்த நோய் ஆண்டாண்டு தோறும் ஏழை விவசாயிகளை வீடு தேடிவந்து, உறுமி உடுக்கை மேள தாள பறையொளி களுடன் பேயாட்டக் கூத்தாடும் கேழ்வரகுக் கூழைக் குடிக்கும். ஆடு-மாடு மக்களும் அலைவார்கள் - தெருத் தெருவாக!

ஏழை விவசாய மக்கள் இவ்வாறெல்லாம் ஆந்த்ராக்ஸ் நோய் வந்தால்; அவதிகள் பட்டு அலைமோதி அழிவதையும், அலை வதையும் லூயி பாஸ்டியார் கண்டார். இதற்கு நாம் என்ன உதவிகளைச் செய்ய முடியும் இந்த உழவர்களுக்கு, என்று சிந்தித்தார்.

ஆந்த்ராக்ஸ் நோய்க் கிருமிகளைக் கொண்டு வந்து ஆராய்ச்சி நடத்தினார். ஆந்த்ராக்ஸ் கிருமிகள் வேகமாக வளர்வதை லூயி மைக்ரோஸ்கோப் கருவி மூலம் கண்டார்.

அந்தக் கிருமிகள் எந்தெந்த வகையில், வழியில், ஆடு மாடுகள் உடலுக்குள் செல்கின்றன என்பதைச் சோதனை செய்தார். எனவே, ஆந்த்ராக்ஸ் நோயினால் ஆடு, மாடுகள் தாக்கப் படாமலிருப்பதற்கான வழி முறைகளை - லூயி விவரமாகக் கூறினார். ஆனால், அந்த நோயைக் குணப்படுத்த என்ன வழி? அதை அவரால் கூற முடியவில்லை. பல மாதங்கள் இந்த முயற்சியிலே ஈடுபட்டார்.

இறுதியாக, லூயி பாஸ்டியருடைய கடுமையான ஆராய்ச்சி யால் மருந்தொன்றைக் கண்டு பிடித்தார். என்ன மருந்து அது?

அதே ஆந்த்ராக்ஸ் கிருமிகள்தான் அந்த மருந்து என்னடா இது ஆந்த்ராக்ஸ் என்ற கொடிய கால் நடைகள் வியாதிக்கு, அதே ஆந்த்ராக்ஸ் கிருமிகளாக மருந்து? வியப்பல்லவா இது ஆம், ஆந்த்ராக்ஸ் கிருமிகளைத்தான் அந்த நோய்க்குரிய மருந்து என்கிறார் லூயி பாஸ்டியர்! அதெப்படி?

ஆந்த்ராக்ஸ் என்ற நோய் பிடித்த ஆடு, மாடுகளிலே இருந்து, ஆந்த்ராக்ஸ் கிருமிகளை எடுத்தார். அந்தக் கிருமிகளை வளர்த்தார். பிறகு அந்தக் கிருமிகளையே ஆந்த்ராக்ஸ் நோய் கண்ட ஆடு, மாடுகளின் உடலில் ஊசி மூலம் ஏற்றினார். என்னவாயிற்று தெரியுமா முடிவு?

ஆந்த்ராக்ஸ் வியாதிக்கு அதே ஆந்த்ராக்ஸ் கிருமிகளே மருந்தாக அவற்றின் உடல்களிலே ஏற்றியதால், நோய் கண்ட மாடு, ஆடுகள் அந்த நோயிலே இருந்து மீண்டன; விடுதலை பெற்றன; குணமாயின. ஆடு, மாடுகளுக்கும் மட்டுமல்ல; இதே மருந்தைத்தான் பன்றிகளுக்கு வந்த ஆந்த்ராக்ஸ் நோயைப் போக்குவதற்குப் பாஸ்டியர் பயன்படுத்தினார். ஆடு, மாடு, பன்றிக்கு பிடித்த ஆந்த்ராக்ஸ் நோய்களுக்குப் பயன்படுத்திய ஆந்த்ராக்ஸ் மருந்தையே, கோழிகளுக்கு வரும் கழிச்சல் நோய்க்கு; அதாவது - கோழி கால்ரா நோயிக்கும் - ஊசி மூலம் பயன்படுத்தி அந்த நோயை அகற்றினார் லூயி பாஸ்டியர்!

லூயி பாஸ்டியர் இந்த ஆந்த்ராக்ஸ் நோய்க்குரிய ஆந்த்ராக்ஸ் மருந்தால், இலட்சக் கணக்கான ஆடு, மாடு, பன்றி, கோழிகள் ஆந்த்ராக்ஸ் நோய் கொடுமைகளிலே இருந்து காப்பாற்றப்பட்டன; மீட்கப்பட்டன; உயிர் மீண்டன!

இலட்சக் கணக்கான ஏழை விவசாயிகள்; தங்களது கால்நடைச் செல்வங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள்! ஆந்த்ராக்ஸ் என்ற பேய் நோயை அடித்து விரட்டினார்கள்! நாட்டில் விவசாயமும் பெருகியது! விவசாயிகள் தங்களை வாட்டிய கால்நடை நோய்க் கொடூரத்திலே இருந்து தப்பிப் பிழைத்ததற்குக் காரணம் லூயி பாஸ்டியர் தானே!

ஆந்த்ராக்ஸ் நோய்க்கு மருந்து கண்டு பிடிதகது உழவர்களைக் காப்பாற்றிய லூயி பாஸ்டியரை ஃபிரான்ஸ் நாடு மட்டுமன்று; உலகமே அவரை வாழ்த்தியது! உலக அரங்குகளி லிருந்து எண்ணற்றப் பட்டங்கள் லூயி பாஸ்டியரைத் தேடி ஓடி வந்தன, பாராட்டுதல்களும் வரிசையாக வந்து கொண்டே, இருந்தன.

பிரெஞ்சு விஞ்ஞானக் கலைக் கழகம், அவருக்கு உறுப்பினர் பதவியை வழங்கியது. அறிவியல் வித்தகர்கள், விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் எண்ணற்றோர் லூயி பாஸ்டியரை நேரில் சென்று சந்தித்துப் பாராட்டினார்கள்; பரிசுகளை வழங்கி மகிழ்ந்தார்கள்!

விவசாயத் தொழிலால் நட்டமடைந்த கால்நடை இழப்பாளர்கள் ஒன்றுகூடி, லூயி பாஸ்டியருக்கு உருவச் சிலைகளை நிறுவினார்கள் - அவரவர் விரும்பிய இடங்களிலே - ஊர்களிலே பிரெஞ்சு விஞ்ஞானக் கழகம், லூயியை வீடு தேடிச் சென்று, பதக்கம் பரிசளித்ததோடு நில்லாமல், அந்த ஊர் மக்களைத் திரட்டி பாராட்டுக் கூட்டமும் நடத்திப் புகழாரம் சூட்டியது.

இலண்டன் மாநகர், லூயி பாஸ்டியரை வரவேற்றது; பாராட்டியது; பரிசளித்தது; பட்டங்கள் அளித்தது. இலண்டன் நகருக்கு வருகை தந்த லூயி பாஸ்டியரைக் கண்ட வியாபார நிறுவன மக்கள் 500 பவுன்களைப் பல்கலைக் கழகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்கள். எல்லாவற்றுக்கும் சிகரமாக, பிரெஞ்சு அரசு லூயி பாஸ்டியருக்கு வழங்கி வந்த உதவித் தொகையை இரண்டு மடங்கு அதிகமாக்கியது. உலகம் அதைக் கண்டு பெருமை பட்டது.

அதே இரு மடங்கு உதவித் தொகையை, பிரெஞ்சு அரசு லூயி பாஸ்டியர் மறைவுக்குப் பிறகும் கூட அவரது துணைவியாரான ஜீன் எடினட் ரோக்யீக்கும் - அவரது மக்களுக்கும் வழங்கிட உத்தரவிட்டது.

வெறி நாய் கடிக்கு : வெறி நாய் —
மூளையே மருந்து லூயி கண்டுபிடிப்பு!

நல்ல பாம்பு கடித்தால் மனிதன் இறந்து விடுகிறான்! காரணம், அதனிடம் உள்ள நஞ்சுதான்! அதனால்தான், பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழி உள்ளது. பாம்பு கடித்த மனிதனுக்கு சாவு நிச்சயம் என்ற நம்பிக்கை மனித குலத்திலே ஆதி நாள் முதல் வேரூன்றி விட்டதால் தான் - பாம்பு என்றதும் பயந்து சாகிறோம்!

நாயை நமது வீட்டிலே கண்டால் நாம் அஞ்சுகிறோமா? இல்லையே! மாறாக, அதனிடமே கொஞ்சுகிறோம்; விளையாடுகிறோம்! நம்மோடு உறங்கவும் வைத்துக் கொள்கிறோம்! அந்த நாயை ஆயிரக்கணக்கான ரூபாயைக் கொடுத்து விலைக்கு வாங்கி, அதற்கு புலால், ரொட்டி, பிஸ்கட், பால் சோறு, பால் போன்றவற்றை உணவாகக் கொடுத்து உறங்க வைக்கிறோம்!

பணக்காரன் வளர்க்கும் நாய் என்றாலே அதற்குத் தனி மரியாதை உருவாகின்றது. சங்கிலியால் அதைக் கட்டி இழுத்துக் கொண்டு அதனோடு தெருதோறும் அலைகிறான்! அதை சோபா, மெத்தை, திண்டு, நாற்காலி, கட்டிலிலியே படுக்க வைத்து அழகு பார்க்கிறான்.

என்ன காரணம் இதற்கு? நாகப் பாம்புவிடம் நஞ்சு உள்ளது? நாயிடம் விஷமில்லை. அதற்கு மரியாதை பணக்காரனிடம்?

அந்த மரியாதையை அவன் ஏன் நாய்க்குத் தருகிறான் தெரியுமா? அவனது பணப் பெட்டியை எவனாவது திருட வந்தால், இந்த நாய் அவனைக் குரைத்து விரட்டி விடும் என்ற ஒரு சுயநல பணப் பாதுகாப்புப் பண்புதான்! ஆனால், நாயிடமும்,கொடிய விஷமிருக்கிறது! ஆம்! வெறிபிடித்த நாயிடம், ஏன் உடலெல்லாம் சொறி சிரங்கு பிடித்த நாயிடம் கூட விஷமிருப்பதாக “The Dog” என்ற நூல் கூறுகின்றது.

வெறி நாய் கடித்தால், கடிபட்டவனுடைய தொப்பூழைச் சுற்றி பதினான்கு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் நாயைக் கண்டு இன்று பயப்படுகிறான் இன்றும் அந்த பயம் மனிதனிடம் இருக்கிறது. அதுமட்டுமன்று கடித்த நாய் வீட்டு நாயா? ரோட்டு நாயா? என்றும் கேட்டு விட்டு, கடித்த நாய் செத்துவிடப் போகிறது. பத்திரமாகப் பார்த்துக் கொண்டிருங்கள் - நாய்க்கடி சுகமாகும் வரை என்றும் அறிவுரை கூறிப் பயப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

சில பணக்காரர்கள் ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்ற அறிவிப்புப் பலகையை அவரவர் வீடுகளிலே தொங்க விட்டுக் கொள் கிறார்கள். நாய்க்கு உண்டாகும் வெறி நோயை ரேபியீஸ் (Rabies) என்று குறிப்பிடுவார்கள். வெறிநாய் மனிதனைக் கடிக்கும்போது அவனுக்கு வெறிநோய் போன்ற ஒருவகை நோய் உண்டாகிறது. அந்த நோய்க்கு நீர்ப் பைத்தியம்; நீர் வெறுப்பு நோய் என்றும் பெயர்.

ஆங்கிலத்தில் அந்த நோயை Hydrophobia என்பார்கள். இதனை Fear of Water என்றும், அதாவது தண்ணீரைக் கண்டால் பயப்படும் படியான வியாதி, அதாவது ஜலபீதி என்பார்கள்.

இந்த நோயை நீர்ப் பைத்தியம் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?

நாய் கடித்து, அந்த நோய் கண்டவருக்கு அடிக்கடி தண்ணீர்த் தாகம் உண்டாகும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அவர்களால் ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்க முடியாமல் நீர்கிலி, ஜலபீதி ஏற்பட்டு, தண்ணீரைப் பார்த்தாலே பயந்து ஒடுவார்கள். இதன் முடிவு என்ன தெரியுமா? சாவு! மரணம்! இறப்பு! தான்!

லூயி பாஸ்டியர் வாழ்ந்த காலத்தில் வெறி நாய் கடியால் உண்டான ‘நீர்ப் பைத்தியம்’ என்ற நோய்க்கு மருந்தே இல்லை. இல்லை என்பதை விட கண்டுபிடிக்கப்பட வில்லை என்பதுதான் உண்மை. நாய் கடித்த இடத்தில், பழுக்கக் காய்ச்சிய, இரும்பால் சுடுவார்கள். நாய் கடிப்பட்டவன் அலறுவான்; கதறுவான்; பதறிப் பதறி பதைப்பான். பாவம்! இவைதான் அக்கால நாய்க் கடிக்கு வைத்தியம்.

இந்த கொதிக்கும் கனல் இரும்புச் சிகிச்சைக்குத் தப்பிப் பிழைத்து மீண்டு வந்தால் வாழ்க்கை உண்டு! இல்லையானால் சுடுகாடுதான்! வேறு மருந்தேதுமே இல்லை.

வெறி நாய்க் கடி வேதனை ஒருபுறம், பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சூடு இன்னொரு புறம். இந்த இரண்டு கொடுர வேதனைகளிலே எண்ணற்றோர் ஒவ்வொரு நாட்டிலும் மரணமடைந்து வந்தார்கள்.

இவ்வளவு கொடுமையான சிகிச்சைக்குப் பிறகும் நாய்க் கடிப் பட்டவன் மீளா விட்டால், அதைப் பயங்கர நோய் என்று கூறாமல் பரிவுடைய வியாதி என்றா மக்கள் கூறுவர்?

இந்த நாய்க்கடி வேதனைகளை எல்லாம் நேரில் கண்ட, சொல்லக் கேட்ட - லூயி பாஸ்டியர், இதற்கு ஏதாவது ஒரு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமே என்று எண்ணினார். அதனால், அவரது முழுக் கவனமும் ரேபியீஸ் என்ற நோய் மீதே சென்றது.

வெறி நாய்களைக் கொண்டு வரச் சொல்லி அவற்றை ஆராய்ந்தார். வெறி நாயினுடைய உமிழ்நீர், ரத்தம் இவை களையும் ஆராய்ச்சி செய்தார். பல தடவை மைக்ராஸ்கோப் மூலமாக உற்று நோக்கினார்! அவற்றில் எந்த விதமான கிருமிகளும் அவருக்குத் தென்பட வில்லை.

நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் நாயினுடைய உமிழ் நீரில்; நோய்க்கான விஷம் இருக்கலாம் என்று அவர் கேள்விப்பட்டதால் அதையும் சோதனை செய்ய விரும்பினார். எப்படி அதைச் சோதித்தார் என்று நினைக்கிறீர் களா? இதோ அவர் சோதனை:

ஒரு கண்ணாடிக் குழாய்! அதில் இருபுறமும் திறந்துள்ள சந்துகள்! குழாய் முனை ஒன்றை வெறிநாயின் வாயிலே வைத்தார்! மறு முனையைத் தனது வாயில் வைத்து உமிழ் நீரை உறிஞ்சி எடுத்தார்! வெறி நாயின் உமிழ் நீர் நச்சுடையது என்று தெரிந்த பிறகும், அதைத் தன் வாயாலே உறிஞ்சி எடுத்தார் என்றால், லூயியின் தைரியத்தை எவ்வாறு பாராட்டுவது?

அது போகட்டும், வெறிநாய் வாயிலே கண்ணாடிக் குழாயை சொருகினாரே, அப்போது அந்த வெறி நாய் கடித்திருந்தால், லூயி கதி என்ன? இந்தச் செயல்களை எல்லாம் கேட்பவர்களுக்கு உடல் புல்லரிப்பு ஏற்படுமல்லவா?

இவ்வளவு அரும்பாடுபட்டு எடுத்து உமிழ்நீரை, லூயி மைக்ரோஸ்கோப் கருவி மூலம் சோதனை செய்தார். பல விதமான அழுக்குகள், தூசிகள் அந்த உமிழ் நீரில் காணப்பட்டன. அதனால் லூயி அதை ஆராய்ச்சி செய்யவில்லை. வெறிநாயின் ரத்தத்தை எடுத்தார். அதை நல்ல நாய் உடலிலே ஊசி மூலமாக ஏற்றினார். நல்ல நாய்க்கு அதனால் எந்தவித உடல் பாதிப்பும் உண்டாகவில்லை. இரண்டாவது முயற்சியையும் கை விட்டார். அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒரு முறைக்கு இருமுறை வெறி நாய் உடல் உறுப்புக்களைச் சோதித்தாகி விட்டது. அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்தபடியே இருந்தார்!

நாய் நோய் மூளையைத் தாக்குவதால் தானே, வெறிநோய் பிடிக்கிறது? அப்படியானால், நோய்க்கு காரணமான கிருமிகள் வெறிபிடித்த நாயின் மூளையில்தானே இருக்க வேண்டும் என்று எண்ணிய லூயி பாஸ்டியர், வெறி நாயின் மூளையை மைக்ரோஸ்கோப் மூலமாக ஆராய்ந்தார். ஒன்றும் அவருக்கு அதிலேயிருந்தும் புலப்படவில்லை.

இருந்தாலும், கொஞ்சமும் மனம் தளராமல் அந்த வெறி நாய் மூளையே எடுத்து திரவ வடிவமாக்கினார். நல்ல நாய் ஒன்றைக் கொண்டுவரச் செய்து; அதன் மூளையுள்ளே, அந்த திரவ வடிவமான பொருளை ஊசி மூலம் செலுத்தினார். என்ன ஆயிற்று தெரியுமா - அதன் முடிவு?

நல்ல நாய் வெறி நாயானது; இடைவிடாது குறைத்தவாறே காணப்பட்டது. அதன் வாயும் நாக்கும் கோரமாக அலை மோதின. நல்ல நாயின் உடலில் ரேபியீஸ் நோயை உண்டாக்கும் வழி என்ன என்பதை லூயி பாஸ்டியர் தெரிந்து கொண்டார். இரண்டு மூன்று முறைகள் வெறி நாயையும், நல்ல நாயையும் சோதித்து; தொடர்ந்து அந்த ஆய்வுக்கு வந்த வெற்றியாக அமைந்தது லூயியின் இந்த மூன்றாம் முறை முயற்சி.

நல்ல நாயை வெறி நாயாக்க முடியும் என்ற ஆய்வில் வெற்றி பெற்றுவிட்ட லூயி, வெறி நாயை நல்ல நாயாக்குவதற்கு என்ன மருந்து என்பதையும் கண்டுபிடிக்க முயன்றார்.

வெறி நாயின் மூளையையே மீண்டும் மீண்டும் ஆராய்ச்சி செய்யத் துவங்கினார். ரேபியிஸ் நோயால் இறந்து போன ஒரு வெறி நாயின் மூளையை அறுத்து எடுத்தார்.

அந்த மூளையை கயிற்றால் கட்டினார். கண்ணாடிக் குழாய்க்குள்ளே அதை நுழைத்து தொங்க விட்டார். அந்தக் குழாய்க்குள்ளே அந்த மூளை பல நாட்களாக காய்ந்தது. காய்ந்த மூளையை எடுத்து; தூளாக்கினார். பொடி போல நைந்து போன அந்தத் துளை, தண்ணில் கரைத்துக் கலவையாக்கினார். அந்தக் கலவையை ஊசிமூலம் எடுத்து வெறிபிடித்த சில நாய்கள் உடலினுள்ளே ஏற்றினார். இந்த சிகிச்சை சில நாள்கள் தொடர்ந்தது. இறுதி முடிவு என்ன தெரியுமா?

வெறி நாய்கள் எல்லாம் நல்ல நாய்களாக மாறின. வெறி நோய்களிலே இருந்து அந்த நோய்கள் விடுதலையாயின. இதனால், லூயிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. லூயி பாஸ்டியரின் ஆராய்ச்சியால் வெறி நாயைக் குணமாக்கும் மருந்து மட்டும்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் என்ன பயன்? நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மையில்லையே என்று லூயி பாஸ்டியர் கவலைப்பட்டார்.

மனிதனை வெறி நாய் கடித்தால், அதனால் உண்டாகும் ஜலபீதி அதாவது நீர்ப் பைத்திய வியாதியிலே இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதுதானே லூயியின் இலட்சியம்?

அந்த எண்ணம் எப்படி வெற்றி பெறும் என்று சிந்தித்தார்! இரவு பகலாக ஏதேதோ யோசனைகள் செய்தும் - அவரது புத்திக்கு அதுவரை ஒன்றும் புலப்படவில்லை. பல விதமான எண்ண மோதல்களுக்கு இடையே லூயி ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது, வெறி நாய் மருந்தையே மனிதனுக்கும் பயன் படுத்தினால் என்ன? என்ற வினாவைத் தனக்குள்ளே எழுப்பிக் கொண்டே அலை மோதினார்.

தம்முடைய குறிக்கோளுக்குரிய பலன் கிட்டுமா? அல்லது மனித உடலமைப்புக்கு ஏதாவது கேடு பாடுகள் விளையுமா? தீமைகள் உருவானால் உலகம் நம்மை உதாசினப்படுத்துமே! என்றெல்லாம் குழப்பமடைந்தார்.

இருந்தாலும், மனிதனுக்குப் பயன்படுத்தும் சமயம் வாய்த் தால் பயன்படுத்தித்தான் பார்ப்போமே என்ற சிந்தனையிலே லூயி ஆழ்ந்தார்.

ஜோசப் என்ற ஒரு சிறுவனை வெறி நாய் கடித்து விட்டது. ஒன்றிரண்டு இடத்தில் அல்ல; பதினான்கு இடத்தில் கடித்து விட்டது. கடி என்றால் ஏதோ சாதாரண கடிகளல்ல; பலமான கடிகள். வழக்கம் போல் வெறிநாய்க் கடிக்குப் போடும் இரும்பு சூட்டைப் போட்டால் அந்தச் சிறுவன் தாங்க மாட்டான் இறந்து போவான் என்று அவனது பெற்றோர்கள் எண்ணியதால், அங்கே இருந்த மக்களில் சிலர் பையனை லூயி பாஸ்டியரிடம் அழைத்துப் போகுமாறு வற்புறுத்தினார்கள்.

சிறுவனுடைய தாயார் அவனை அழைத்துக் கொண்டு பாரிஸ் நகருக்கு வந்தாள். பையனுடைய நாய்க்கடி விவரத்தைக் கூறி, எப்படியாவது எனது மகனைக் காப்பாற்ற வேண்டும் என்று அந்தத் தாய் அழுது அரற்றினாள் லூயியிடம்!

டாக்டர் பாஸ்டியர் சிறுவனது நாய்க் கடிகளை எல்லாம் பார்த்தார் பையனுக்கோ ஒரே வலி கதறல்! அலறல்! தாயோ தனது பிள்ளையின் வலி வேதனைகளைக் கண்டு அந்த அம்மையாரும் கோவென அழுது புலம்பும் பரிதாப நிலை. இவை அனைத்தையும் லூயி பார்த்துப் பரிதாபப் பட்டார்.

லூயி பாஸ்டியருக்குத் திடீரென ஒரு யோசனை தோன்றியது. என்ன சிந்தனை அது?

வைத்தியம் செய்தாலும் சிறுவன் பிழைக்க மாட்டான். கடிகளோ பதினான்கு இடங்களில் பதிந்துள்ளன. மருத்துவம் செய்யா விட்டாலோ அவன் நிச்சயமாக பிழைக்க மாட்டான்.

நம்மிடம் ஏற்கனவே தயாராக உள்ள வெறிநாய் மூளையின் பொடி மருந்தை நாம் ஏன் பயன்படுத்திப் பார்க்கக் கூடாது? என்று எண்ணிய லூயி பாஸ்டியர், என்ன ஆனாலும் சரி, நமது மருந்தைப் பயன்படுத்தித்தான் பார்போமே! என்ற முடிவுக்கு வந்தார். வெறிநாய் மூளை மருந்தை அந்தப் பையன் உடலுக்குள்ளே ஊசி மூலமாகச் செலுத்தினார்.

சில நாட்கள் தொடர்ந்த அந்த சிகிச்சைக் காலத்துக் குள்ளேயே, அந்தப் பையன் ஓடி விளையாட ஆரம்பித்தான். உணவை வேளா வேளைக்கு உண்டான். நிம்மதியாக உறங்கினான்; அவனுடைய உடல் தேறி வந்தது. புதியதொரு தெம்போடு அந்தப் பையன் நடந்தான்; ஓடினான்; ஆடினான்: பேசினான்; உண்டான்; உறங்கினான்! டாக்டர் லூயியிடம் நன்றாகப் பழகினான்.

அவனது தாயாருக்கோ அளவிலா மகிழ்ச்சி இருந்தாலும், லூயி பாஸ்டியருக்கோ சந்தேகம்! என்றைக்காவது ஒரு நாள் இந்தப் பையன் இறந்து விடக் கூடும் என்று நம்பியதால், அவர் கலகலப்பாக யாரிடமும் பேசாமல் ஊமையாக இருந்தார். ஒவ்வொரு நாள் இரவும்-பகலும் லூயிக்கு ஒரு எம யுகமாகவே அமைந்திருந்தது.

அவர் இன்று, நாளை, நாளை மறுநாள் என்று கணக்குப் போட்ட நாட்களிலே எல்லாம் அந்த சிறுவன் ஜோசப் வெற்றி பெற்றுக் கொண்டே வந்தான். டாக்டர் லூயி பாஸ்டியர் தனது கணக்கு தவறித் தவறி ஏமாந்தபடியே இருந்தார்.

நாய் கடிபட்ட பையன் இறக்கவில்லை; நீர்ப் பைத்திய வியாதியிலே இருந்து அந்தச் சிறுவன் தப்பித்து விட்டான். பையனது தாயார் அளவிலா மகிழ்ச்சி பெற்று, லூயியைக் கடவுளாகவே எண்ணிக் கையெடுத்து வணங்கினான்! ஆனந்தக் கண்ணீர் விட்டாள்!

லூயி பாஸ்டியர் வெற்றிக் களிப்பில் இங்குமங்கும் நடந்தார்! பையன் முகத்தைப் பார்த்துப் பார்த்துப் பரவச மடைந்தார்! வெறி நாய் கடியாலே அவதிப்படும் மனித குலத்தின் உயிரைக் காப்பாற்றிட ஒரு மருந்தைக கண்டுபிடித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியிலே அவர் மிதந்தார்.

ரெபியீஸ் என்ற வெறி நாய்க் கடியினால் உண்டாகும் நீர்ப் பைத்தியத்திற்கு லூயி பாஸ்டியர் மருந்து கண்டுபிடித்து விட்டார் என்ற செய்தி உலகெங்கும் பரவிவிட்டது.

மக்கள், அறிஞர்கள், அறிவியல் நிபுணர்கள், இளம் விஞ்ஞானிகள், லூயி பாஸ்டியரின் விஞ்ஞான மாணவர்கள், பேராசிரியப் பெருமக்கள், அரசு நல்வாழ்வுத் துறை அமைச் சருக்குட்பட்ட அதிகாரிகள் அனைவரும், லூயி பாஸ்டியர் இருக்கும் இடத்தைத் திருக்கோயிலாகக் கருதி தேடி வந்து தரிசனம் செய்தார்கள்.

நாய்க் கடிகளால் வேதனைப் பட்ட நீர்ப் பைத்திய நோயாளிகள், லூயி பாஸ்டியரிடம் சிகிச்சைப் பெற்று, அவரது ஆராய்ச்சி நிரூபணத்துக்குச் சான்றானார்கள்.

அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலே இருந்தும், இங்கிலாந்து ஜெர்மனி நாடுகளிலே இருந்தும் பாஸ்டியரிடம் சிகிச்சைப் பெற்று நீர்ப் பைத்திய நோயைக் குணப்படுத்திக் கொண்டு அவரவர் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

லூயி பாஸ்டியர், இந்த ரேபியீஸ் நோய் சிகிச்சையை, ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் அனைவருக்கும் செய்தார். நோய் குணமானவர்கள் லூயி பாஸ்டியரைப் போற்றிப் புகழ்ந்தார்கள். உலகம் முழுவதும் லூயி பாஸ்டியர் புகழ் நாடளாவப் பறந்து கொண்டிருந்தது.

அறிவியல் மேதை லூயி பாஸ்டியர் மறைந்தார்!

மனித குலத்தையும், மற்ற உயிரினங்களையும் நோய்கள் வருத்தித்தான் சாகடிக்கின்றன. அந்த நோய்கள் பல வகைகளாக அமையலாம். அவற்றைக் குணமாக்கிட பல மருந்துகளும் கண்டு பிடித்திருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் அறிவியல் துறைகளின் வெற்றிகளே என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

அத்தகைய கொடுமையான வியாதிகளுக்கு மூல காரணம் எது? அதை உலகில் முதன் முதல் கண்டுபிடித்த நாடு ஃபிரான்ஸ் நாடுதான்.

அந்த நாட்டில் தோன்றிய அறிவியல் மேதை லூயி பாஸ்டியர்தான்; அந்த மூலக் கரானத்தைக் கண்டுபிடித்து உலகுக்கு கூறியவர் என்றால் - அது மிகையாகாது.

கண்ணுக்குத் தெரிகின்ற பகைவன் யார் என்று தெரிந்தால் அவனோடு போரிடலாம். பார்வைக்கே புலப்படாத பகைவனை எப்படிக் கண்டுபிடித்துப் போரிடுவது? இது மிக அரிய செயலல்லவா?

ஒரு வேளை அந்தப் பகைவன் கண்ணுக்குத் தெரிந்தாலும், அவனோடு போராடி வெற்றி பெறுவது மிக மிகச் சிரமமான பணிகளல்லவா?

இத்தகைய ஒரு போராட்டத்தில்; உலகில் முதன்முதல் போராடிய, செயற்கரிய செயலாற்றியவர் லூயி பாஸ்டியர் என்ற மனிதகுல மேதையாகும்.

லூயி பாஸ்டியர், பார்வைக்குத் தெரியாத நோய் எதிரிகளைக் கண்டு பிடித்தார். அந்த எதிரிகளை அழித்து ஒழித்தார். அதற்கான ஆராய்ச்சிகளை அல்லும்-பகலும் செய்து வழி வகைகளைக் கூறினார்.

யார் அந்த எதிரிகள்? நோய்களை மனித குலத்தில் உருவாக்கி மக்களை அழித்துக் கொண்டிருந்த அந்தப் பகைவர்கள் யார்? நோய்களை உருவாக்கும் நோய்க் கிருமிகளே என்பதை உலகுக்கு உணர்த்தினார் லூயி பாஸ்டியர்

இந்த நுண்ணியக் கிருமிகளைக் கடும் உழைப்பிற்குப் பிறகே அவர் அடையாளம் காட்டினார். அந்தக் கொடூரமான நோய்க் கிருமிகளிடமிருந்து மனித குலம் தப்பி பிழைப்பதற்கு - ஒரு புது மார்க்கம் கண்டார்.

அவர் அவ்வாறு நோய்க் கிருமிகளை கண்டுணர்ந்த பிறகு, மருத்துவத் துறையில் பெரும் மாற்றங்களும், முன்னேற்றங்களும் உண்டாயின. அத்தகைய சான்றோர்தான் லூயி பாஸ்டியர்.

லூயி பாஸ்டியர் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தார். அதற்கான கல்வி வளர்ச்சியை அரும்பாடு பட்டுக் கற்றார். அறிவியல் ஆராய்ச்சில் ஈடுபட்டார். சில புதிய உண்மைகளைக் கண்டு பிடித்தார். அவற்றை உலகுக்கு அவர் அறிவித்தபோது பலர் பாராட்டினார்கள்.

வேறு சிலர், மூடநம்பிக்கை உணர்வுகளால் எதிர்த்தார்கள். இருந்தாலும், அவைகளைத் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்கு லூயி உரமாக்கிக் கொண்டாரே ஒழிய - மனச்சோர்வோ, இலட்சிய தளர்வுகளோ பெற்றாரில்லை.

எதிர்ப்புகளும், தோல்விகளும்தான் ஓர் இலட்சிய வெற்றிக்குரிய படிக் கற்கள் என்பதை உணர்ந்து லூயி பாஸ்டியர் தனது ஆய்வுக் கடமைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்.

ஃபிரான்ஸ் நாட்டின் பீர் தொழில், ஒயின் தொழில், பட்டுத் தொழில், கால் நடைகளது நோய், ரேபீயஸ் என்ற நாய்க்கடி நீர்ப் பைத்திய நோய் ஆகியவற்றுக்கு அவர் செய்த கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கு மிகப் பெரிய அரிய பணிகளை அவர் செய்து வெற்றியும் பெற்றவர் ஆவார்.

மேற்கூறிய கண்டுபிடிப்புக்களை அவர்தான் உலகில் முதன் முதலாகக் கண்டு பிடித்தார். அவற்றைக் கொண்டு வணிகம் செய்து பணம் சம்பாதிக்கும் கோடீஸ்வரர் ஆனாரா? அதுதான் இல்லை. ஏழையாகப் பிறந்த அவர் எழையாகவே மறைந்தார்.

அவரது கண்டு பிடிப்புகளால் உலக மக்கள்தான் நோய்களிலே இருந்து மீண்டார்களே தவிர, லூயி பாஸ்டியர் எந்த வித வாழ்வியல் ஏற்றமும் பெற்றவரல்லர்!

காரணம், பணம் சம்பாதிப்பதன்று அவரது நோக்கம். மனித இனத்திற்கும் மற்ற உயிரினங்களுக்கும் உதவி செய்வதையே குறிக்கோளாகப் பெற்றிருந்தார். அதாவது உலக உயிரினங்களின் நோய்களை அழிப்பதையே, அந்த நோய்களை உருவாக்கும் கிருமி இனங்களை அழித்து ஒழிப்பதையே இலட்சியமாக எண்ணினார்.

அவற்றுடன் போராடி வெற்றிகளைக் கண்டு, மற்ற உயிர்களை மீட்பதிலே மகிழ்ச்சி பெற்றார் லூயி பாஸ்டியர்! அதனால்தான் உலகம் இன்றும் அந்த மா மேதையைப் போற்றி வாழ்த்துகின்றதைப் பார்க்கின்றோம்.

நோய்கள் எந்த உருவத்தில் வந்தாலும், அவற்றை அழிப்பதற்கான முயற்சி உலகில் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவரது உள்ளாசையாகும். அதற்காக லூயி பாஸ்டியர் ஒரு பெரிய ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என்று விரும்பினார்.

இந்த மனித நேய ஆசையை உலக மக்கள் உணர்ந்தார்கள். அவருடைய அந்த அவாவை நிறைவேற்றிட மக்கள் தாராள மாக நன்கொடைகளை வழங்கி உதவினார்கள். ஃபிரான்ஸ் நாட்டு மக்கள் மட்டுமல்ல; உலக நாடுகளிலே இருந்தெல்லாம் பணம் நன்கொடைகளாக வந்து குவிந்தன.

அந்த நன்கொடைகள்தான், இன்றும் பாரிஸ் நகரில், பாஸ்டியர் நிலையம் என்ற பெயரில் கம்பீரமான ஆராய்ச்சி நிலையமாக நின்று புகழ் பூத்து வருகின்றது.

அந்த பாஸ்டியர் நிலையம் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை, பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் திறந்து வைத்துப் பாராட்டி நன்றி கூறினார்.

அந்த விழாவிலே இலட்சக் கணக்கான மக்கள் திரண்டு வந்து பாஸ்டியர் சாதனைகளுக்குப் புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்கள். அந்த பாஸ்டியர் நிலையம் இன்றும் கூட நோய் ஒழிப்பு பணிகளைச் செய்து கொண்டே வருகின்றது.

ஃபிரான்ஸ் நாட்டிலே மட்டுமன்று; உலக நாடுகளிலே எல்லாம் பாஸ்டியர் பெயரால், பாஸ்டியர் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

டைபாயிடு, காலார, பிளேக் போன்ற மக்கட் கொல்லி நோய்களை, அந்த நிலையங்கள் அழித்து ஒழித்து விட்டன. அதற்கெலாம் அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா? பாஸ்டியர் முறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டுவரும் நோய் எதிர்ப்பு ஆராய்ச்சிப் பணிகளே ஆகும்.

லூயி பாஸ்டியர் இவ்வளவு செயற்கரிய செயல்களைச் செய்யக் கடுமையாக உழைத்தார். அதனால், அவர் ஒயா உழைப்பில் ஈடுபட்டார். நாளுக்கு நாள் உடல் வலிமை குன்றியது. ஒய்வு தேவை என்று லூயி பாஸ்டியருக்கு மருத்துவர்கள் அப்போது வற்புறுத்தினார்கள்.

லூயி பாஸ்டியர் மனைவி மரீ என்ற மாதரசி, கணவனது உழைப்பை எவ்வளவோ குறைத்துக் கொண்டுதான் வந்தார். மனைவி சொல்லைத் தட்டாமல், லூயி ஓய்வெடுத்துக் கொண்டு தான் வந்தார்.

ஆனால், தனது பெயரால் நிறுவப்பட்டு வந்த பாஸ்டியர் நிறுவனங்களுக்கு அவ்வப்போது அவர் தனது ஆராய்ச்சிக் குறிப்புகளை அறிவியல் தான்மாக வழங்கிக் கொண்டும் இருந்தார்.

லூயி, தான் நிறுவிய ஆய்வு நிறுவனங்கள் ஆற்றும் நோய் எதிர்ப்பு ஆய்வுகளைக் கண்காணித்தும் வந்தார். நண்பர்களுடன் உரையாடி, மேற்கொண்டு என்னென்ன ஆய்வுகளைச் செய்யலாம் என்றும் திட்டங்கள் வகுத்தார்.

பாஸ்டியர் நிலையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களைக் கண்டு அவர்களுக்குரிய அறிவுரைகளை வழங்கினார். மக்களுக்கு எப்படியெல்லாம் நோய் குறைப்புச் சேவைகளை ஆற்றலாம் என்பதற்கான வழி வகைகளை பாஸ்டியர் வகுத்துக் கொடுத்து வந்தார்.

‘இளைஞர்களே! எதிர்கால டாக்டர்களே! எதற்கும் பயம் கொள்ளாதீர்! எந்தவொரு செயலையும் துணிவாகச் செய்திடும் மனவுறுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்! இன்று வரை மனித குலத்துக்காக என்ன சாதனை செய்திருக்கிறீர்கள் என்பதைத் தினந்தோறும் சிந்தனை செய்து பாருங்கள்! நீங்களும் ஒரு லூயி பாஸ்டியராவீர்கள். அதனால் மனித குலம்
முன்னேறும். எதிர்காலத்தில் உங்களது மனம் திருப்தி அடையும் என்றெல்லாம் அறிவியல் துறை பயிற்சி டாக்டர்களுக்கெல்லாம் அடிக்கடி அறிவுரை வழங்கிக் கொண்டே வந்தார்.

லூயி பாஸ்டியர் ஒர் அறிவியல் அறிஞராக மட்டுமே வாழவில்லை. சிறந்த ஒரு நாட்டுப் பற்றாளராகவும் வாழ்ந்தார். தான் பிறந்த நாட்டின் மானத்தைக் காத்திட, தனது எதிரி நாடுகள் வழங்கிய அறிவுப் பரிசுகளை, பட்டங்களை, பதவிகளை எல்லாம் அந்த நாடுகளது முகத்திலேயே துக்கி எறிந்தார் லூயி பாஸ்டியர்!

மனித நோய்களை மண்மூடச் செய்யும் அழிவுச் சக்திகளை லூயி பாஸ்டியர் வெறுத்தார். குறிப்பாக, ஒரு நாட்டை எதிர்த்து இன்னொரு நாடு, போர்க் கருவிகளைப் பெருக்கிட, அறிவியலைப் பயன்படுத்துவது அறிவீனம் என்று அறிவித்தார் லூயி, எப்போதும் அவர் உலக அமைதியையே விரும்பினார்.

இத்தகைய நேரத்தில், லூயி பாஸ்டியருடைய உடல் நலம் நாளுக்கு நாள் வளமிழந்து வந்ததால், எதையும் சிந்தித்துச் செயலாற்றிடும் மனநிலை உள்ள போதே லூயி பாஸ்டியர் என்ற அறிவியல் ஞானி திடீரென உயிர் நீத்தார்! அப்போது அவருக்கு வயது எழுபத்திரண்டாகும்.

மாவீரன் நெப்போலியன், பிரான்ஸ் நாட்டின் பெயரைத் தனது வீரத்தால் புகழடையச் செய்தார்.

அவருக்கு பிறகு, பிரான்ஸ் நாட்டிலேயே, நெப்போலியனையும் சேர்த்து, மிகச் சிறந்தவர் யார் என்ற மக்கள் வாக்கெடுப்பு நடந்ததது.

அந்த நாட்டு மக்கள் லூயி பாஸ்டியர் மிகச் சிறந்தவர் என்று முடிவு கூறினார்கள்.

ஃபிரான்ஸ் நாட்டின் முன்னேற்றத்தில், அதன் வளர்ச்சியில், அரசியல், பொருளாதாரம், சமுதாய மறுமலர்ச்சி. ராஜதந்திரம், சாம்ராச்சிய நிறுவல், மதத் தொண்டுகள், மனித உரிமை சீர்த்திருத்தங்கள், வீரச் செயல்கள், கலைத் துறை வளர்ச்சிகள், அறிவியல் துறைகளில் எண்ணற்றோர் தோன்றி அவரவர் உழைப்புகளை, சிந்தனைகளை தியாகம் செய்திருக் கிறார்கள்.

ஃபிரான்ஸ் நாட்டின் அந்த மா மேதைகளில் எல்லாம் “யார் மிகச் சிறந்தவர்கள்” என்ற மக்கள் வாக்கெடுப்பு நடைபெற்ற தில்லை.

ஆனால், லூயி பாஸ்டியர் ஒருவர்தான் ஃபிரான்ஸ் நாட்டிலேயே மிகச் சிறந்தவர் என்று மக்கள் தங்களது வாக்கெடுப்புகள் மூலம் அறிவித்திருக்கிறார்கள் என்றால், என்ன பொருள் இதற்கு? செயற்கரிய சான்றாண்மை அல்லவா?

லூயி பாஸ்டியர் தனது நோய் எதிர்ப்புப் போர் மூலமாக மக்கள் நெஞ்சிலே நிலைத்து நின்று விட்டார் என்பது பொருள் அல்லவா? இதைவிட வேறு மக்கள் புகழ் என்ன வேண்டும் ஒரு மனித நேய மேதைக்கு?

உலக நாடுகளிலே வேறு எந்த மா மேதைக்காவது, அல்லது ஃபிரான்ஸ் நாட்டிலேயே வேறு எந்த மேதைக்காவது, இப்படிப்பட்ட ஒரு மக்கள் வாக்கெடுப்பு பணி நடந்ததுண்டா.

வாழ்க! லூயி பாஸ்டியரின் அறிவியல் தொண்டுகள் வளர்க அவரது மனித நேயச் சேவைகள்.