உள்ளடக்கத்துக்குச் செல்

மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/அன்பு வழியே சிறந்தது

விக்கிமூலம் இலிருந்து
27
அன்பு வழியே சிறந்தது

தட்சசீலம் என்ற நாட்டை கலிங்கதத்தன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவன் புத்தமதத்தைத் தழுவியவன்.

புத்த மதமே உலகில் சிறந்தது என்ற கருத்தோடு மிகுந்த பற்றுதல் கொண்டு, அந்த மார்க்கத்தின் குருமார்களில் ஒருவனாக விளங்கி வந்தான்.

அந்த நகரத்தில் விசாகன் என்ற செல்வந்தன் பெரிய வணிகனாக இருந்தான். அவனும் புத்த மதத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு இரத்தினம் என்ற பெயருடைய மகன் ஒருவன் இருந்தான்.

இளைஞனான அவனுக்கு தன் தந்தை பின்பற்றும் புத்த மதத்தில் வெறுப்புக் கொண்டவன். அதனால் புத்த மதத்தையும் தன் தந்தையையும் எப்பொழுதும் இகழ்ந்து பேசிக் கொண்டு இருந்தான்.

ஒரு நாள், “தந்தையே! பழமையான வேதங்களை உடைய நம்முடைய இந்து மதத்தை மறந்து விட்டீர்கள். அந்தணர்களை வெறுத்து, மற்றவர்களை மதித்து வருகிறீர்கள். புத்த மதக் கொள்கைகளை பெரிதாக மதித்துப் போற்றிப் புகழ்கின்றீர்கள், கீழ் மக்களுக்கு அடைக்கலம் தரும் இருப்பிடம் புத்த மதம். பிராமணியச் சடங்குகளை மறுப்பதே அதன் கொள்கை. அருள் நெறி மறந்து, இந்து மதத்துக்குத் துரோகம் விளைவிக்கிறீர்கள்.” என்று பலவாறு உரக்கப் பேசலானான் விசாகனின் மகன் இரத்தினம்.

தந்தை விசாகன், மகனுக்கு பல கருத்துக்களை எடுத்துக் கூறி, சமாதானப்படுத்த முயன்றான்.

“உலகம் முழுவதும் பரவித் தழுவும் புத்த மதத்திற்கும், இதர மதத்திற்கும் வேறுபாடு தெரியவில்லையா? புத்த மதம் காமகுரோத பாவங்களை வெறுக்கிறது, உறவினருடன் காரணம் இல்லாத சச்சரவுகளை விரும்பவில்லை. அனைத்து உயிர்களுக்கும் பாதுகாப்பு அளித்து, அன்புவழி ஒன்றையே நிலைநிறுத்தக் கூடிய தாயகமான புத்த மதத்தை, அவமதித்துப் பேசாதே. ஜீவகாருண்யத்தை உயிர்நாடியாகக் கொண்டது அது. உயர்ந்த கோட்பாடு களைக் கொண்டது புத்த மதம். மரண பயத்தை ஒழிப்பதோடு, உயிர் வதைகளையும் தடுக்கிறது” என்று பலவாறு கூறினான்.

இளைஞனாகிய உனக்கு அறிவு வளர்ச்சி போதாது. உனக்குத் தெரிந்ததோ கடுகு அளவு, தெரிய வேண்டியதோ கடல் அளவு. ஆகையால், உன்னுடைய அற்ப அறிவைக் கொண்டு எதையும் மதிப்பிடும் தகுதி உனக்கு இருப்பதாக எண்ணுவது அறிவீனம்” என்று மேலும் விளக்கிக் கூறினான்.

என்ன சொல்லியும் அவன் புரிந்து கொள்ளாமல், வெறுப்பே அவனிடம் மிகுதியாகக் காணப்பட்டது.

அதனால் வெறுப்படைந்த விசாகன் வேதனையோடு அரசனிடம் சென்று, தன் மகனின் போக்கைப் பற்றிக் கூறினான்.

அரசன், இரத்தினத்தை அழைத்து வரச் செய்து, அவன் ஒரு மதவெறுப்பாளன், நாட்டின் நயவஞ்சகன் என்று குற்றம் சாட்டி, அவனுக்கு மரண தண்டனை விதித்தான்.

மகனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையைக் கேட்டதும் விசாகன் அதிர்ச்சி அடைந்தான். தன்னுடைய ஒரே மகனான அவனுக்குக் கருணை காட்டுமாறு அரசனிடம் மன்றாடினான்.

விசாகனின் கோரிக்கையை ஏற்று, சிறிது கருணைகாட்டி, மரணதண்டனையை மூன்று மாதங்களுக்குத் தள்ளி வைத்து. அதுவரை அவனை விசாகன் பொறுப்பில் வைத்துக் கொண்டு அதன்பின், தன்முன் கொண்டு வந்து நிறுத்துமாறு உத்தர விட்டான் அரசன்.

தன் தந்தையுடன் வீட்டுக்குச் சென்ற இரத்தினம், உண்ணாமலும், உறங்காமலும் கலக்கம் அடைந்தான்.

மேலும், மரணபயம் அவனைச் சூழ்ந்தது. துடியாய்த் துடிக்கலானான். ஏக்கத்தால் உடல் மெலிந்தது; உள்ளம் வெதும்பி நோய் வாய்ப்பட்டான்.

அரசன் அளித்திருந்த மூன்று மாதக் கெடு தீர்ந்தது. மறுநாள், அரசன்முன் வந்து இரத்தினம் நின்றான். அவனைப் பார்த்து, “ஏன் இப்படி எலும்பும் தோலுமாய் இளைத்து விட்டாய்? உண்ணாதே, உறங்காதே என்று நான் கட்டளை இடவில்லையே?” என்றான் அரசன்

“மரணம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கும் போது, உண்பதிலும், உறங்குவதிலும் மனம் செல்லவில்லை” என்றான் இரத்தினம்

அரசன் பலமாகச் சிரித்தான். “இரத்தினா! ஒவ்வொரு ஜீவராசிக்கும் உயிர் எவ்வளவு உத்தமமானது என்பதை இப்பொழுதாவது உணர்ந்து கொண்டாயா? அந்த உயிர் வதைக்காக ஜீவகாருண்யம் காட்டும் கொள்கை எவ்வளவு உயர்வானது என்பதை உணர்கிறாயா? மற்றும், மரண பயம் எவ்வளவு கவலை அளிக்கக் கூடியது, என்பதையும் அனுபவித்து விட்டாய். இத்தகைய மரண பயத்திலிருந்து தெளிவடையக் கூடிய வழியைக் காட்டும் புத்த மதக் கொள்கைகள் எத்தகைய சிறப்பு உடையவை என்பதை எண்ணிப்பார்! புத்த மதத்தில் நம்பிக்கை கொண்டு முக்தி அடைய வழிபடுவாயாக!” என்றான்.

“அரசே! நான் குற்றம் நீங்கியவனாகி விட்டேன். வீடுபேறு அடைவதில் எனக்கு ஆவல் உண்டாகிறது, அதைப் பற்றி அறிவுரை அருள வேண்டிக் கொள்கிறேன்” என்று வேண்டிக் கொண்டான் இரத்தினம்.

அதைக் கேட்டதும் அரசன் புன்முறுவலுடன், ஒரு சட்டி நிறைய எண்ணெய் கொண்டு வந்து இரத்தினத்திடம் கொடுக்கும் படி உத்தரவிட்டான்.

“இரத்தினா! இதோ உன் கையில் உள்ள சட்டியின் விளிம்பு வரையில், எண்ணெய் உள்ளது. அதைக் கையில் ஏந்தியபடியே, இந்த நகரத்தைச் சுற்றி வரவேண்டும். ஒரு துளிகூட கீழே சிந்தக் கூடாது, சிந்தினால், வாள் ஏந்தி உன்னுடன் வருகின்ற சிப்பாய்கள் அந்த இடத்திலேயே, உன்னைக் கொன்று விடுவார்கள்” என கட்டளையிட்டான் அரசன்.

உருவிய வாளுடன் சிப்பாய்கள் பின் தொடர்ந்து வர, இரத்தினம் மிகவும் கவனத்தோடு எண்ணெய்ச் சட்டியை ஏந்தி, ஒரு துளி எண்ணெய் கூட சிந்தாமல், நகரம் முழுவதையும் சுற்றி வந்து, அரசன் முன் நின்றான்.

“இரத்தினா! நகரத்தைச் சுற்றி வந்ததில், ஏதேனும் சிறப்பைக் கண்டாயா?” என்று கேட்டான் அரசன்.

“அரசே! எண்ணெய் சிந்திவிடக் கூடாதே என்ற கவனத்தில், சிந்தினால் உயிர் போய் விடுமே என்ற அச்சத்தினால், எந்தப் பகுதியிலும், என் கண்களுக்கு எதுவுமே தென்படவில்லை. மனதை எதுவும் கவரவும் இல்லை” என்றான் அவன்.

“இப்பொழுது தெரிந்து கொண்டாயா? ஒரே உறுதியான எண்ணத்தால் அருகில் உள்ளவற்றை நீ மறந்தாயே. அந்த ஒரு எண்ணமே தியானம் என்பது. அத்தகைய சிந்தனை சிதறாத தியானத்தில் இருப்பவன் உலக ஆசைகளிலும் பந்தங்களிலும் மீண்டும் சிக்கிக் கொள்வதில்லை.” என்றான் அரசன்.

அறிவுரையும், அறஉரையும் உணர்த்திய அரசனின் அன்பு வழியைக் கேட்ட இரத்தினம், அருள்வழி எது என்பதை தெரிந்து கொண்டான்.

மகனின் அருள்வழி நோக்கை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான் விசாகன்.

இக்கதை சிறுவர் சிறுமியர்க்கு சற்று கடினமாக இருக்கலாம். என்றாலும், இப்பொழுதே தெரிந்து கொள்வது நல்லது தானே