உள்ளடக்கத்துக்குச் செல்

மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/செத்த எலியால் வியாபாரி ஆனான்

விக்கிமூலம் இலிருந்து

28
செத்த எலியால் வியாபாரி ஆனான்

சிறிய நகரம் ஒன்றில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அவன் பெற்றோர் இறந்து விட்டனர். உறவினர் எவரும் இல்லை. குடியிருக்க சிறிய வீடு மட்டும் இருந்தது. வேலையும் கிடைக்கவில்லை. ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்றால், பணமும் இல்லை.

அவனிடம் அனுதாபம் கொண்ட ஒருவர், ஒரு யோசனை கூறினார்: “பக்கத்து ஊரில், ஒரு செட்டியார் இருக்கிறார். வியாபாரம் செய்யக் கடன் கொடுப்பார். பிறகு, வட்டியோடு அசலையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். அவரிடம் சென்று கேட்டுப் பார்” என்று கூறினார்.

மறுநாள் மிகுந்த உற்சாகத்தோடு செட்டியாரைக் காணச் சென்றான் அந்த இளைஞன்.

அந்த நேரத்தில் செட்டியார், ஒருவனைக் கோபித்துக் கொண்டிருந்தார். அவன் செய்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், அசலும் வட்டியும் கொடுக்கவில்லை என்று பேச்சில் தெரியவந்தது.

மேலும், “முதலை இழக்கும்படியான வியாபாரத்தை எந்த முட்டாளாவது செய்வானா? திறமைசாலியாக இருந்தால், அங்கே கிடக்கும் செத்த எலியைக் கொண்டே பணம் சம்பாதித்து விடலாமே” என்று கடுமையாகப்பேசினார். அவனும் பிறகு வருவதாகக் கூறி போய் விட்டான்.

பிறகு செட்டியார், இளைஞனை ஒரு பார்வை பார்த்தார். “நீ எதற்காக வந்திருக்கிறாய்?” என்பது போலிருந்தது அவர் பார்வை. இளைஞன் புத்திசாலித்தனமாக, “எனக்குக் கடன் எதுவும் வேண்டாம். அங்கே மூலையில் கிடக்கின்ற செத்த எலியைக் கொடுத்தால் போதும்” என்றான். - “தாராளமாக எடுத்துச் செல்” என்றார் செட்டியார். இளைஞன், செத்த எலியை எடுத்துக் கொண்டு சென்றான். ஒரு கடலை வியாபாரி, தான் வளர்க்கும் பூனைக்கு இரை ஆகுமே என்று நினைத்து, செத்த எலியை வாங்கிக் கொண்டு ஒரு அழாக்கு கடலையைக் கொடுத்தான் இளைஞனுக்கு.

அதை வீட்டுக்குக் கொண்டுவந்து, வறுத்துப் பொட்டுக் கடலையாக்கினான். அதோடு, ஒரு குடத்தில், குடிதண்ணீர் எடுத்துக் கொண்டு போய் ஊருக்கு வெளியே மரத்தடியில் உட்கார்ந்தான்.

கடுமையான வெயிலில், விறகு வெட்டிக் கொண்டிருந்த விறகு வெட்டிகள் சிலர், களைப்புமிகுதியால், இளைப்பாற மரத்தடியில் அமர்ந்தனர்.

அவர்களுக்கு கொஞ்சம் கடலையும், ஒரு குவளை தண்ணீரும் கொடுத்தான்.

அவர்கள் மகிழ்ச்சியோடு, ஆளுக்கு இரண்டு விறகுக் கட்டைகளைப் கொடுத்து விட்டுச் சென்றனர்.

கிடைத்த விறகுக் கட்டைகளைச் சுமந்து சென்று, விறகுத் தொட்டியில் விற்றுப் பணம் பெற்றுச் சென்றான்.

இளைஞன் மீண்டும் அந்தப் பணத்துக்குக் கடலை வாங்கி, வறுத்து, அதையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்.

விறகு வெட்டிகள் பலரும் அவனுக்கு வாடிக்கையாளர்கள் ஆனார்கள்.

தினமும் அவனுக்குக் கிடைத்த விறகுகளில் ஒரு பகுதியை விற்று, மீதியை வீட்டில் சேமித்து வைக்கலானான். விறகுகள் வீட்டில் மலைபோல் குவிந்தன.

திடீரென்று அந்த ஊரில் அடைமழை பெய்யத் தொடங்கியது. விறகுத் தொட்டிகளில் இருந்த விறகுகள் எல்லாம் தீர்ந்தன. விறகுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. விலையும் அதிகமாகியது.

இளைஞன் தன் வீட்டில் சேமித்து வைத்திருந்த விறகுகள் அனைத்தையும் நல்ல நல்ல விலைக்கு விற்றதால், பணம் நிறையக் கிடைத்தது.

அந்தத் தொகையை மூலதனமாகக் கொண்டு, சிறிய வியாபாரம் ஒன்று தொடங்கினான் பிறகு, அது வளர்ந்து பெருகி, பெரிய வியாபாரி ஆனான்.

ஒரு நாள், யாரால் இந்த அளவுக்கு முன்னேறி, பணம் சம்பாதித்தோம் என்பதை நினைத்துப் பார்த்தான் இளைஞன்.

பிறகு, வெள்ளியினால் ஒரு எலி செய்து, அதை அந்தச் செட்டியாரிடம் கொண்டு போய்க் கொடுத்து வணங்கி நின்றான் இளைஞன்.


அதைப் பார்த்ததும் செட்டியாருக்கு ஒன்றும் புரியவில்லை. இளைஞன், தான் முதன்முதலில் வந்து, செத்த எலியைக் கொண்டு சென்றது முதல் எல்லாவற்றையும் விவரமாகக் கூறினான்.

அவனுடைய ஊக்கத்தையும், உழைப்பையும், நாணயத்தையும் கண்டு செட்டியார் அவனைப் பாராட்டி மகிழ்ந்தார்.

அதன்பின், தன்னுடைய ஒரே மகளை, அந்த இளைஞனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார் செட்டியார்.

ஊக்கமும், உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால், எப்படியும் முன்னேறலாம்.