மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/தங்கையின் பரிவு
அக்காளும் தங்கையும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை உண்டாகும்.
ஒரு நாள் இருவருக்கும் சச்சரவு அதிகமாயிற்று. அப்பொழுது தங்கையின் தலைமயிரைப் பிடித்து இழுத்து அடி அடி என்று பலமாக அடித்து விட்டாள் அக்காள்.
அதை அறிந்த பெற்றோர் அவளைத் திட்டி, ஒரு அறையில் தள்ளி, பூட்டி வைத்தனர், மேலும்,அவளுக்குப் பகல் உணவு அளிக்காமல் பட்டினி போட வேண்டும் என்று தீர்மானித்தனர்.
அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை. அப்பளம், வடை, பாயசத்துடன் எல்லோரும் வயிறு நிறைய உண்டு மகிழ்ந்தனர்.
அக்காள் பட்டினியாக கிடப்பாளே என்று இரக்கப்பட்டு, பெற்றோருக்குத் தெரியாமல், உணவை எடுத்துச் சென்றாள் தங்கை.
தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பி, சாப்பிடச் செய்தாள். தங்கை தன்னிடம் கொண்டிருந்த அன்பையும், தான் அவளிடம் நடந்து கொண்ட மூர்க்கத்தனத்தையும் உணர்ந்தாள். அவள் கண்களில் நீர்மல்கியது.
“இனி, உன்னோடு ஒரு போதும் சண்டையிட மாட்டேன், இது உறுதி!” என்றாள் அக்காள்.
- ரத்த பாசம் என்பது இதுதான்!