மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/முதலாளி சொல்லாத வழி

விக்கிமூலம் இலிருந்து

22
முதலாளி சொல்லாத வழி

பம்பாயில் வியாபாரம் செய்யும் ஒரு பணக்காரர், தன்னுடைய கிராமத்திலிருந்து வீட்டுவேலைக்காக, ஒரு இளைஞனை பம்பாய்க்குக் கூட்டிச் சென்றார்.

அவனுக்கு தன் கிராமத்தைத் தவிர வேறு ஊர் எதுவும் தெரியாது. அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

பம்பாய் சென்றதும் அவனிடம், “அடே! இது பெரிய நகரம்; கார்கள், ஸ்கூட்டர்கள், டிராம், பஸ்கள் நிறைய போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருக்கும். கடைகளுக்குப் போகும் போது, மிகவும் கவனமாகப் போய் வரவேண்டும். இடது பக்கம் கார், ஸ்கூட்டர் முதலியன வந்தால், வலது பக்கம் போக வேண்டும், வலது பக்கம் கார் முதலியன வந்தால், இடது பக்கம் போக வேண்டும்” என்று சொன்னார் வியாபாரி.

அவனும் கவனமாகக் கேட்டுக் கொண்டான்

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒருநாள் காலையில், வியாபாரி வீட்டுக்கு ஒரு காவலர் வந்து உங்கள் “வேலைக்காரன் கார் விபத்துக்கு உள்ளாகி, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறான்” என்று தெரிவித்தார்.

வியாபாரி உடனே மருத்துவ மனைக்குச் சென்று, அவனைப் பார்த்து ஆறுதல் கூறினார். “நான் சொன்னபடி நீ நடந்து கொண்டிருந்தால், இப்படி விபத்துக்கு ஆளாகி இருக்கமாட்டாயே” என்றார்.

படுக்கையில் படுத்திருந்த வேலைக்காரன், “முதலாளி! நீங்கள் சொல்லியபடி நடந்து கொண்டதால் தான் இப்படி விபத்து நடந்தது. இடதுபக்கம் ஒரு கார் வந்தது, வலது பக்கமும் ஒரு கார் வந்தது, நான் நடுவில் சென்றேன்” என்றான்.

முதலாளி சொல்லாத வழியில் அவன் சென்றான் போலும்