மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/துறவியின் பொறுமை
கங்கை நதிக்கரையில் துறவி ஒருவர் கடினமான தவத்தில் ஈடுபட்டிருந்தார்.
அவருடைய தவத்தின் நோக்கம், தேவலோகம் போகவோ, பெரிய பதவி பெற வேண்டும் என்பதோ அல்ல! அதற்கு மாறாக, தமக்குப் பயன்படாத இந்த உடல், பிராணிகளுக்காகவாவது பயன்படட்டுமே என்ற எண்ணம் கொண்டிருந்தார்.
அவரைச் சுற்றிலும் கழுகுகளும், கோட்டான்களும் வட்டம் இட்டுக் கொண்டிருந்தன.
சற்று தொலைவில் உள்ள நகரத்தின் அரசன், தன் ராணிகளுடன், ஆற்றுக்கு அருகில் இருந்த மலர்ச்சோலைக்குச் சுற்றுலா வந்து இருந்தான்.
அப்போது, அரசன் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டதால், போதையில் அங்கேயே விழுந்து கிடந்தான்.
அந்த நேரத்தில் அரசனின் ராணிகள் பொழுது போக்குவதற்காக மலர்ச் சோலையின் வனப்பைக் களிக்கச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அருகில் துறவி தவத்தில் இருப்பதைக் கண்டனர்.
அவரை நெருங்கிப் பார்த்தபோது, அவருடைய முகப்பொலிவு, ராணிகளுக்கு மரியாதை உணர்வை ஊட்டியது. அதனால் அவர்கள் துறவியைச் சுற்றி உட்கார்ந்திருந்தனர்.
ராணிகளைக் காணாமையால் தேடி வந்தான் அரசன்.
துறவியைச் சுற்றி, அவருடைய முகப் பொலிவைப் பார்த்துக் கொண்டு ராணிகள் தங்களை மறந்தபடி இருந்தனர்.
அந்த நிலையைப் பார்த்த அரசன், சினம் கொண்டான். பொறாமை அவனை உலுக்கியது.
ஆத்திரம் அடைந்த அரசன், தன் உடைவாளைக் கொண்டு துறவியின் அங்கங்களைச் சிதைத்தான்.
அந்தச் சமயத்தில் அங்கே ஒரு பேய் உருவம் தோன்றியது. “துறவியே! உத்தரவிடு உன் அங்கங்களைத் துண்டித்த அந்தக் கொடுமைக்கார அரசனைக் கொன்று விடுகிறேன்.” என்றது. துறவி அதற்குச் சம்மதிக்கவில்லை.
“உன் கருணைக்கு நன்றி! அரசன் எனக்கு கெடுதல் செய்யவில்லை. என் அங்கங்களை அவன் வெட்டியதால், சுற்றிவட்டமிடும் பிராணிகளுக்குப் பேருதவி செய்திருக்கிறான். ஆகையால் நன்மை செய்துள்ள அவனை ஒன்றும் செய்யாதே” என்று கனிவுடன் சொன்னார் துறவி.