மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/முட்டாள் மகன்
ஒரு நகரத்தில் பணக்கார வியாபாரி ஒருவன் இருந்தான்.
அத்தியாவசியப் பொருள்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு, ஒரு தீவுக்குச் சென்று விற்று வருவது அந்த வியாபாரியின் தொழில்.
வியாபாரிக்கு ஒரு மகன் இருந்தான். அவன் படிக்கவில்லை. இளைஞனாக இருக்கும் போதே தன் மகனுக்கு தன்னுடைய வியாபாரத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தான் தந்தை.
பொருள்களைச் சேகரித்துக் கொண்டு தீவுக்குப் புறப்படத் தயாரானான் வியாபாரி.
அப்போது விலை உயர்ந்த ஒருவித வாசனை மரக் கட்டைகளையும் கொண்டு சென்றால், நல்ல விலைக்கு விற்கலாம் என்று நினைத்து, நிறையக் கட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு, கூடவே மகனையும் அழைத்துச் சென்றான் வியாபாரி.
தீவில், வழக்கம் போல் கொண்டுபோன பொருள்கள் யாவும் விற்பனை ஆயின! ஆனால், புதிய வாசனை மரக்கட்டைகளை மட்டும் தீவில் உள்ள மக்கள் விரும்பவில்லை.
அதனால் அவற்றைத் திரும்பக் கொண்டு வரத் தீர்மானித்திருந்தான் வியாபாரி.
வேறு பொருள் ஏதாவது வாங்கி, தன்னுடைய ஊருக்குக் கொண்டு போய் விற்கலாமே என்ற எண்ணத்தில் பல பகுதிகளுக்கு அலைந்தான் வியாபாரி.
வியாபாரி வெளியே போயிருந்த சமயம் மகன் மட்டும் இருந்தான். தீவுவாசிகள் கரிமூட்டை வாங்கிச் செல்வதைப் பார்த்தான்.
விற்பனை ஆகாமல் கிடந்த வாசனைக் கட்டைகளைச் சுட்டு கரியாக்கி விற்றுவிட்டான் மகன்.
மேலும் புத்திசாலித்தனமாகத் தான் செய்து விட்டதாக நினைத்து மகிழ்ந்து போனான் வியாபாரியின் மகன்.
வியாபாரி திரும்பி வந்தார். “அப்பா! மிகவும் புத்திசாலித் தனமாக வாசனைக் கட்டைகளை வாங்காத இந்தத் தீவு மக்களிடம் கரியாக்கி விற்று விட்டேன்” என்று பெருமையாகக் கூறினான்.
“அடமுட்டாளே! நல்லவிலைக்கு விற்க வேண்டிய வாசனைக் கட்டைகளைக் கரியாக்கி நஷ்டம் ஏற்படுத்தி விட்டாயே?” என்று தலையில் அடித்துக் கொண்டு வருந்தினான் வியாபாரி!