உள்ளடக்கத்துக்குச் செல்

மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/புத்திசாலி பிழைப்பான்

விக்கிமூலம் இலிருந்து
54. புத்திசாலி பிழைப்பான்

ஒரு ஊரில் நான்கு இளைஞர்கள் இருந்தனர். அவர்களில் மூன்று பேர் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள். ஆனால் அவர்களுக்குப் புத்தி என்பது கொஞ்சம் கூட இல்லை. அவர்களில் மற்றொருவன் போதிய கல்வி அறிவு இல்லாதவன். ஆனால் புத்திசாலித்தனம் உடையவன்.

ஒரு நாள் நான்கு இளைஞர்களும் கூடி ஆலோசித்தனர். வேற்று நாட்டுக்குச் சென்று அங்குள்ள அரசனை மகிழ்வித்து பொருள் தேட வேண்டும் இல்லையானால், கற்ற கல்வியின் பயன் என்ன? என்று யோசித்து வெளிநாடு செல்லத் தீர்மானித்தனர்.

ஒரு நாள் நால்வரும் ஊரைவிட்டுப் புறப்பட்டனர். வழியில், நம் “நால்வரில் மூவரைத்தவிர, மற்றொருவன் கல்வி அறிவு இல்லாதவன். ஆனால் அவன் புத்திசாலி, கல்வி இல்லாமல் புத்திசாலித்தனத்தால் அரசனை மகிழ்வித்துவிட இயலாது. நாம் தேடும் பொருளில் அவனுக்கு எப்படி பங்கு கொடுக்க இயலும். எனவே அவன் திரும்பி வீட்டுக்குப் போகட்டும்” என்றான் முதலாமவன்.

அப்பொழுது இரண்டாவது நண்பன், அறிவற்றவனே, உனக்குக் கல்வி அறிவு இல்லையாதலால், நீ எங்களுடன் வர வேண்டாம். நீ வீட்டுக்குத் திரும்பி செல்வாயாக" என்று கூறினான்.

மூன்றாவது நண்பன், இவ்வாறு கூறுவது நியாயம் இல்லை. ஏனெனில் இளமைப் பருவம் தொடங்கி இதுவரை ஒன்றாகப் பழகி, விளையாடி வந்திருக்கிறோம். இப்பொழுது அவனைப் புறக்கணிப்பது சரியல்ல. நண்பா, நீ எங்களுடன் வரலாம். நாங்கள் சம்பாதிப்பதில் உனக்கும் ஒரு பங்கு தருகிறோம்.” என்று ஆதரவாகக் கூறினான்.

எல்லோரும் சம்மதித்துப் புறப்பட்டனர்.

வழியில் ஒரு சிங்கத்தின் எழும்புக் கூட்டைப் பார்த்தனர். அவர்களில் ஒருவன், “நாம் கற்றுக் கொண்ட கலைகளையும், கல்வியையும் சோதித்துப் பார்த்துக் கொள்ள இப்பொழுது ஒரு சந்தர்ப்பம் நமக்கு வாய்த்து இருக்கிறது. ஆகையால் இங்கே இறந்து கிடக்கும் மிருகத்தை நம் வித்தையின் பெருமையால் உயிர்பெற்று எழச் செய்வோம்” என்றான்.

அப்பொழுது ஒருவன், “எனக்கு எலும்புகளை ஒன்று சேர்க்கத் தெரியும்” என்றான்.

“தோலும், சதையும், இரத்தமும் அளிக்க என்னால் இயலும்” என்றான் மற்றொருவன்.

“அதற்கு உயிர் அளித்து என்னால் எழச் செய்ய இயலும்” என்றான் இன்னொருவன்.

“பிறகு ஒவ்வொருவரும் சொன்னபடி, ஒருவன் எலும்புகளை எல்லாம் இணைத்துப் பொருத்தினான். அடுத்தவன் தோல், சதை, இரத்தத்தை நிரப்பினான். மூன்றாவது நண்பன், அதற்கு உயிர் கொடுக்க ஈடுபடும் பொழுது, அவனைத் தடுத்து, “நண்பனே, இது சிங்கம்! இதற்கு நீ உயிர் ஊட்டி எழச் செய்தால், அது நம்மைக் கொன்று தின்றுவிடும். ஆகையால் உயிர் அளிக்க வேண்டாம்” என்று கூறினான் புத்திசாலியான நான்காவது ஆள்.

“முட்டாளே, மற்ற இருவரும் தங்கள் வித்தையைக் காட்டிவிட்டனர். ஆனால் நான் கற்ற வித்தையை பயனற்றதாக்க விரும்பவில்லை.” என்றான் மூன்றாவது நண்பன்.

”அப்படியானால் ஒரு கணம் பொறுத்துக் கொள். அதற்குள் நான் இந்த மரத்தின் மீது ஏறிக் கொள்கிறேன்.” என்று கூறி, அவ்வாறே மரத்தில் ஏறிக்கொண்டான் புத்திசாலி நண்பன்.

மூன்றாவது நண்பன், சிங்கத்துக்கு உயிர் உண்டாகச் செய்தான்.

உயிர் பெற்று எழுந்தது சிங்கம். எதிரே மூன்று மனிதர்களைப் பார்த்தது, உடனே அவர்கள் மீது பாய்ந்து மூவரையும் கொன்று தின்று விட்டது.

புத்திசாலி மட்டும் உயிர் பிழைத்து ஊருக்குச் திரும்பினான்.