மாய வினோதப் பரதேசி 1/6-வது அதிகாரம்
திகம்பரசாமியாரைப் பாம்புகள் கடித்துவிட்டன என்ற செய்தி காட்டுத் தீ பரவுவது போல அதிதுரிதத்தில் மன்னார்குடிப் பட்டணம் முழுதும் பரவி, அதற்கு நாலா பக்கங்களிலும் இருந்த கிராமங்களுக்கும் எட்டியது. எவரும் சிறிதும் எதிர்பார்க்காத அந்த விபரீதச் செய்தியைக் கேட்ட ஜனங்கள் முற்றிலும் பிரமிப்பும் திகிலும் அடைந்து திடுக்கிட்டுப் போயினர். திகம்பரசாமியார் சகலமான அம்சங்களிலும் மற்ற சாதாரண ஜனங்களைவிட மேம்பட்ட அதிமாதுவடி சக்தி வாய்ந்த தெய்வீகப் புருஷர் என்ற அபிப்பிராயமே ஜனங்களது மனதில் நிலைத்து நாளுக்கு நாள் வேருன்றி வந்திருந்தது ஆகையால், சாதாரண மனிதருக்கு நேரக்கூடிய பாம்பு கடி முதலிய அருவருக்கத்தக்க அபாயங்கள், பரிசுத்த ஸ்வரூபியும், எக்காலத்திலும் திரிகரண சுத்தியாய்ப் பாவ வழியில் நடக்காதவருமான அந்த மகானுக்கு நேருமா என்ற ஐயமும் மலைப்பும் எல்லோரது மனதிலும் தோன்றி, அந்தச் செய்தி உண்மையானது தானோ, அல்லது, அவரது பகைவர் எவரேனும் கற்பனையாக வெளியிட்டுப் பரப்பிய பொய்யான வதந்தியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை உண்டாக்கின. திகம்பரசாமியார் ஆதியில் பெருத்த தனிகராய் இருந்து, தமது செல்வம் முழுதையும் ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் அநாதைகளுக்கும் உபயோகித்து அதனாலேயே வறுமை அடைந்தவர் என்ற செய்தியும், அதன்பிறகு அவர் கெளரவப் போலீஸ் உத்தியோகம் வகித்து, தமது தேகத்தைக் கொண்டும் அபாரமான அறிவையும் மனோபலத்தையும் கொண்டும் தமது உடல் பொருள் ஆவி ஆகிய மூன்றையும் பரோபகாரத்திற்கே அர்ப்பணம் செய்து வருகிறார் என்ற செய்தியும், அவர் அவ்வாறு உத்தியோகம் வகித்த பிறகு துஷ்டர்கள் எல்லோரும் நாசம் அடைந்து விட்டார்கள் என்ற செய்தியும் சிறிய குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்திருந்தமையால், எவ்விதமான கைம்மாறும் கருதாமல் மழையாகிய அமிர்தத்தைப் பெய்து உலகத்தோரைக் காப்பாற்றி ரகூஜிக்கும் மேகம் போலத் தங்களுக்கெல்லாம் கணக்கில் அடங்காத நன்மைகளைச் செய்து வரும் புண்ணிய மூர்த்தியான திகம்பர சாமியாரினது உயிருக்கே ஹானி ஏற்படக்கூடிய மகா விபரீதமான சம்பவம் நேர்ந்து விட்டதே என்ற பெருத்த துக்கமும் கலக்கமும் தோன்றி எல்லோரது மனத்தையும் புண்படுத்தி உலப்பத் தொடங்கின. அத்தகைய புனித குண புருஷரைத் தாம் இழந்து விடப் போகிறோமே என்ற ஏக்கமும், அவரில்லாவிடில் மறுபடியும் துஷ்டர்களும் துன்மார்க்கர்களும் தலையெடுத்து விடுவார்களோ என்ற கவலையும் தோன்றி வதைக்கலாயின. அவ்வாறு பரப்பப்பட்ட விபரீதச் செய்தி மெய்யானதோ பொய்யானதோ என்பதை நேரில் கண்டு அறிந்து நிச்சயிக்கவும், அவரைப் பாம்புகள் கடித்தது உண்மையாய் இருக்குமாயின், தெய்விகத் தன்மை வாய்ந்த அந்த உத்தம புருஷரது அருள் வழிந்த முகத்தைக் கடைசியாக ஒருமுறை தரிசித்து வரவும் எண்ணி, ஆண் பெண்பாலார் அனைவரும் தத்தம் இருப்பிடங்களை விட்டுப் புறப்பட்டு மன்னார்குடியை நோக்கி விரைந்து சென்று திகம்பர சாமியாரினது பங்களாவைச் சூழ்ந்து கொள்ளலாயினர். பற்பல சுற்றுக் கிராமங்களில் இருந்தும் ஜனங்கள் ஏராளமாகப் புறப்பட்டு ஓடிவந்த காட்சி, கடலை நோக்கிச் செல்லும் எண்ணிக்கை அற்ற ஆறுகளின் பெரு வெள்ளக்காட்சி போல இருந்தது. அவ்வாறு சாமியாரினது பங்களாவின் அருகில் வந்த ஜனங்களுள் ஒவ்வொருவரும் உள்ளே சென்று அவரைப் பார்க்கவும், தம் தமக்குத் தெரிந்த மருந்துகளைப் பிரயோகிக்கவும் ஆவல் கொண்டு உள்ளே நுழையத் தொடங்கினர். அவ்வாறு வந்து கூடிய ஜனத்திரளின் தொகை பல்லாயிரக் கணக்கில் பெருகி விட்டது. ஆகையால், உட்புறத்தில் எல்லோரும் ஒரே காலத்தில் நுழைவது சிறிதும் சாத்திய மற்ற காரியமாகி விட்டது. திகம்பரசாமியாரைப் பார்க்க வேண்டும் என்ற தடுக்க இயலாத ஆவலில், பெரும்பாலோர் மதில் சுவரின் மீது ஏறி உள்ளே குதித்தனர். மற்றவர் பங்களாவின் முன்புறத்தில் இருந்த இரும்புக் கதவுகளின் மேல் விழுந்து தள்ளவே, கதவுகள் சுவரோடு பெயர்ந்து விழுந்து விட்டன. அந்தப் பங்களாவின் வாசலில் எப்போதும் காவலாகவும், சாமியாரினது குற்றேவல்களைப் புரியவும் இருந்து வந்த ஐந்தாறு போலீஸ் ஜெவான்கள் ஜனங்கள் உள்ளே வராமல் தடுத்து வெளியிலேயே இருக்கும்படி செய்யத் திறமையற்றவராய்க் கடைசியில் டெலிபோன் மூலமாக அந்த ஊர்ப் போலீஸ் ஸ்டேஷனுக்குச் செய்தி அனுப்ப, கத்தி துப்பாக்கி முதலிய ஆயுதங்களோடு மேலும் பதினைந்து ஜெவான்களும் ஒரு சப் இன்ஸ்பெக்டரும் அங்கே தோன்றி ஜனங்களைக் கண்டித்தும் தடுத்தும் எல்லோரையும் வெளியிலேயே நிற்கச் செய்வதும் பகீரதப் பிரயத்தனமாக முடிந்தது. பங்களாவின் உட்புறத்தில் சாமியார் படுக்க வைக்கப்பட்டிருந்த விடுதியின் கதவு மூடப்பட்டிருந்தது. அவருக்கருகில், பிரபலமான பல இங்கிலீஷ் வைத்தியர்களும், நாட்டு வைத்தியர்களும், மாந்திரீகர்களும் கூடி அவருக்குரிய சிகிச்சைகளைச் செய்து கொண்டிருப்பதாகவும், சாமியார் ஸ்மரணை தப்பி ஒரே மயக்கமாய்ப் படுத்திருப்பதாகவும், அவரது நிலைமையில் எவ்வித குணமும் தெரியவில்லை என்றும், அவர் பிழைப்பது சந்தேகம் என்றும் போலீசார் ஜனங்களுக்கு அப்போதைக் கப்போது தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அந்த விவரங்களைத் தெரிந்து கொண்ட ஜனங்கள் மிகுந்த கவலையும், கலக்கமும் அடைந்து கடவுளைத் தொழுவோரும், பலவிதமான மருந்துகளைச் சொல்வோருமாய், இருக்கை கொள்ளாமல் துடிதுடித்து நின்றனர். அத்தகைய தருணத்தில் நமது கண்ணப்பாவும், அவளது மனையாட்டியான வடிவாம்பாளும் அவ்விடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் கலங்கிய மனதும், கண்ணீர் சொரிந்த வதனமும், பதறிய அங்கமும், மார்பில் வைத்த கரங்களும், அவிழ்ந்து அலங்கோலமாகத் தொங்கிய கேசமும் உடையவர்களாய் ஒட்டமும் நடையுமாக அவ்விடத்திற்கு ஓடி வந்து சேரவே, கண்ணப்பாவின் அடையாளத்தைக் கண்டு கொண்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜனங்களை வேண்டி வழிவிடும்படி செய்து அவர்கள் இருவரை மாத்திரம் உள்ளே அனுப்ப முயற்சி செய்தார். அவரிடம் மிகுந்த நன்றி செலுத்திய கண்ணப்பா, “ஐயா! சுவாமியாருடைய நிலைமை இப்போது எப்படி இருக்கிறது? அவர் பிழைத்துக் கொள்வாரா? அவரோடு கூட யார் யார் இருக்கிறார்கள்? யாராவது தக்க வைத்தியர், மாந்திரீகர்கள் வந்து சிகிச்சை செய்கிறார்களா?” என்று விநயமாகக் கேட்க, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், “ஐயா! இப்போது நாம் எந்த விஷயத்தையும் நிச்சயமாகச் சொல்லமுடியாது. அவர் பிழைத்தால், புனர் ஜென்மம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பாம்பு கடித்தாலே மனிதன் உடனே மாண்டு போய் விடுவதை நாம் பார்த்திருக்கிறோம். நான்கு சிறிய கருநாகங்கள் ஒரு மனிதரைக் கடித்தால், அவருடைய கதி என்ன ஆகும் என்பதை நாமே யூகித்துக் கொள்ள வேண்டியதுதான். அவர் கண்களைத் திறக்காமல் அப்படியே கட்டை போலப் படுத்திருக்கிறார். வைத்தியம் மாந்திரீகம் எல்லாம் நடக்கின்றன. முடிவு எப்படி இருக்குமோ தெரியவில்லை” என்றார்.
கண்ணப்பா கவலையும் கலக்கமுமே வடிவமாக மாறிப் போய், “ஐயா! இப்போது தக்க வைத்தியர் யாராவது உள்ளே இருக்கிறாரா?” என்றான்.
சப் இன்ஸ்பெக்டர், “நம்முடைய இங்கிலீஷ் வைத்தியர் புஜங்கராவ் நாயுடு இருக்கிறார். அவர் நல்ல திறமைசாலி. அவருடைய வைத்தியத்தில், சாமியார் பிழைத்தால் உண்டு. மற்றவரால் ஒன்றும் சாயாதென்று நினைக்கிறேன்” என்றார்.
அதைக் கேட்ட பக்கத்தில் இருந்த பலர் ஒரே காலத்தில் பேசத் தொடங்கி பற்பல அபிப்பிராயங்களையும் ஷராக்களையும் கூறலாயினர். அவ்விடத்தில் இருந்த ஒரு கிழவன், “ஆமா இந்த இங்கிலீஷ் வைத்தியர் பாம்பு கடிக்கு என்ன மருந்தைக் கொடுக்கப் போகிறார். அவர்கள் ஆடுகள் வெட்டுவது போல மனிதருடைய உடம்புகளை வெட்டி ஒட்டு வேலைகள் செய்வதில் திறமை சாலிகள்தான். அவர்களிடம் பாம்பு கடி, குஷ்டம், கூடியம், நீர் ரோகம், யானைக்கால், குன்மம் முதலிய வியாதிகளுக்கு மருந்தே இல்லையே. இந்த அபாயகரமான சமயத்தில் இங்கிலீஷ் வைத்தியரான புஜங்கராயரையும் அஜங்கராயரையும் கூப்பிட்டுக் கொண்டிருந்தால், நோயாளியை நாமே கொன்ற பாவம் வந்து லபிப்பது நிச்சயம்” என்று நிரம்பவும் அலட்சியமாக அபிப்பிராயம் கூறினான்.
அதைக் கேட்ட இன்னொரு மனிதன் முன்னவனைக் காட்டிலும் அதிக புரளியாகப் பேசத்தொடங்கி, “ஏன் ஐயா அப்படிச் சொல்லுகிறீர்? இங்கிலிஷ் வைத்தியர்கள் பாம்புகடி முதலிய பிணிகளுக்கு வைத்தியம் செய்வதில்லையா என்ன? மந்திரம் கால், மதி முக்கால் என்கிறபடி, அவர்களிடம் நல்ல மருந்துகள் இல்லாவிட்டாலும், சமயோசிதமான தந்திரங்கள் அதிகமாக உண்டு. பாம்பு கடித்த உடனே, அந்த இடத்தை நெருப்பைக் கொண்டு தீய்த்து விடுவார்கள், அல்லது, அந்த இடத்திலேயே வெட்டி எறிந்து விடுவார்கள். விஷம் உடம்பில் பரவாமல் தடுக்கப்பட்டுப் போகும். அதுவும் நல்ல சிகிச்சை தானே” என்றார்.
அதைக் கேட்ட பலர் “பலே பலே” என்று கைகொட்டி நகைத்தனர். இன்னொருவன் பேசத் தொடங்கி, “ஆம், ஐயா! பாம்பு கடித்து கால் நாழிகைக்குள் விஷம் உடம்பு முழுதும் பரவி தலைக்கேறி விடுமே; அதற்குள், மனிதன் டாக்டரைத் தேடி, நெருப்பைத் தேடி, கத்தியைத் தேடி விஷத்தைத் தடுப்ப தென்றால் அது சாத்தியமான காரியமா? பாம்பு கடித்து கொஞ்சம் காலதாமதமாய்விட்டால், அவர்களுடைய சிகிச்சை உபயோக மற்றதாகி விடுகிறது. பாம்பு கழுத்து, முகம், வயிறு, முதலிய இடங்களில் கடித்து விட்டால், அந்த இடங்களை அறுத்து எறிவதுதான் சாத்தியமான விஷயமா? வைத்தியம் என்றால் மனிதருடைய உடம்பில் எந்த இடத்தில் விஷம் திண்டினாலும், திண்டி இரண்டொரு நாழிகைக்காலம் கழிந்திருந்தாலும், அந்த விஷத்தை நிவர்த்திக்கத்தக்க வைத்தியமாக இருக்க வேண்டும். அது இங்கிலிஷ் வைத்தியரால் முடியாத காரியம். அவர்களுடைய வைத்தியம் நிரம்பவும் படாடோபமானது; வீண் செலவு பிடிக்கக்கூடியது. குணம் உண்டாக்குவதிலோ முழுப்பூஜ்யமானது. உடம்பில் ஒரு கட்டி உண்டாயிருந்தால், அதை அறுத்து குணப்படுத்த மாதம் ஒன்றாகும். அதற்கு ரூ 200 செலவு பிடிக்கும். ஒரு பைசாகூடச் செலவில்லாத ஒரு மூலிகையைக் கொண்டு நாம் இரண்டே நாளில் கட்டியைப் பழுக்க வைத்து, உடையச் செய்து ஆற்றிவிடலாம்” என்றான்.
இன்னொருவன், “ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்? சர்வ சாதாரணமான ஒரு விக்கலை எடுத்துக் கொள்ளுவோம். நம்முடைய இங்கிலீஷ் வைத்தியர் ஒர் அற்ப விக்கலை நிறுத்துவாரா, முதலில் சொல்லட்டும். அதன் பிறகு அவர் பாம்பு கடிக்கு மருந்து கொடுக்கட்டும்” என்றார். அதைக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர், “அடே! ஏன் ஐயா வீணாக அளக்கிறீர்? நீங்கள் இங்கிலீஷ் வைத்தியர்களை மாத்திரம் துரவிக்கிறீர்களே. உங்களிடத்தில் மாத்திரம் விக்கலுக்கு என்ன மருந்திருக்கிறது? விக்கல் கொண்டவன் அவஸ்தைப்பட்டுத்தான் தீரவேண்டி இருக்கிறது. அல்லது கொஞ்சம் தண்ணீர் குடித்தால் கொஞ்ச நேரத்தில் அது நின்று போகிறது” என்றார்.
முன் பேசியவன் புரளியாக நகைத்து, “விக்கலென்றால், பல திணிசு விக்கல்கள் இருக்கின்றன. அவைகளை எல்லாம் நம்மவர்கள் கண்டுபிடித்து எழுதி இருக்கிறார்கள். சிலருக்கு விக்கல் வந்தால், அது ஒரு வாரம் வரையில் போகாமல் இருந்து ஆளைக் கூடக் கொன்று விடும். அது நிரம்பவும் அபாயகரமான வியாதி: அப்படிப்பட்ட வியாதி ஒன்று இருப்பதாக இங்கிலீஷ் வைத்தியர் களுக்குத் தெரியவே தெரியாது. இந்தச் சாதாரணமான அற்ப விக்கலைப் போக்கவே அவர்களால் முடியாத போது பெரிய விக்கல்களுக்கு, என்ன மருந்தைக் கொடுக்கப் போகிறார்கள்” என்றான். சப் இன்ஸ்பெக்டர், “நம்முடைய வைத்தியத்திலும், விக்கலுக்கு மருந்திருப்பதாகத் தெரியவில்லை” என்றார்.
கும்பலில் இருந்த இன்னொருவன், “சப் இன்ஸ்பெக்டர் ஐயா எந்த வைத்தியப் புஸ்தகத்தைப் படித்து இப்படிச் சொல்லுகிறாரோ தெரியவில்லை. விக்கல் மருந்தைப்பற்றி சொல்லப் பட்டுள்ள கவி குழந்தைக்குக்கூடத் தெரியுமே.
“எட்டுத் திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும்
விட்டுப் போகும்; விடாவிடில் புஸ்தகம்
சுட்டுப் போடும்; சொன்னேனிது சத்தியம்”
என்ற பாட்டை இப்போதாவது இன்ஸ்பெக்டர் ஐயா பாடம் செய்து கொள்ளட்டும்” என்று பலத்த குரலில் கூறிவிட்டு கும்பலில் மறைந்து கொண்டான்.
அதைக் கேட்ட மற்ற ஜனங்கள் இங்கிலீஷ் வைத்தியத்தைப் பற்றி ஒருவித இழிவான அபிப்பிராயமும், நமது நாட்டு வைத்தியத்தைப் பற்றி மேலான அபிப்பிராயமும், தற்பெருமையும், உற்சாகமும் கொண்டு, தாம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரோடு, பேசுகிறோம் என்ற எண்ணத்தையும் மறந்து மூலைக் கொருவராய்த் தாறுமாறாகப் பேசத் தொடங்கினர்.
ஒரு மனிதன், “ஐயா! இந்த இங்கிலீஷ் வைத்தியரை முதலில் அனுப்பிவிட்டு, இதோ வலங்கைமானுக்குப் பக்கத்தில் உள்ள பாடாச்சேரியில் இருக்கும் அம்பட்ட மூக்கனை அழைத்துக் கொண்டு வாருங்கள். அவனிடம் ஒரு வேர் இருக்கிறது. அதை வேப்பெண்ணெயில் இழைத்து நாக்கில் தடவின மறு நிமிஷம் பாம்பின் விஷம் எல்லாம் பறந்து போகும் என்றான்.
இன்னொருவன், “ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும். இதோ கோட்டுருக்குப் பக்கத்தில் பனையூர் என்று ஒர் ஊர் இருக்கிறது. அங்கே காளி கோவில் பூசாரி ஒருவன் இருக்கிறான். அவனை அழைத்துக் கொண்டு வாருங்கள். அவன் விபூதியை எடுத்து தலையில் இருந்து கால் வரையில் 3 தடவை தடவி விட்டால் உடனே விஷம் இறங்கிப் போகும். அவன் எத்தனையோ மனிதருக்குப் பாம்புகடிக்கு விபூதி போட்டு சொஸ்தப்படுத்தி இருக்கிறான். மனிதன் செத்துப் போய்விட்டால் கூட அவன் அந்தப் பிணத்தை எழுப்பி உட்காரவைத்துப் பேசச் செய்வான். வேறே யாரையும் கூப்பிட்டு அநாவசியமாகப் பொழுதைப் போக்காமல் உடனே ஒட்டமாக ஒர் ஆளை அவனிடம் முடுக்குங்கள். அவன் ஒருத்தன் வந்தால், அதுவே போதுமானது” என்றான்.
இன்னொருவன், “அவர்கள் எல்லோரும் வருகிற வரையில், உயிர் நிற்குமோ என்னவோ. அதெல்லாம் வேண்டாம். சிறியா நங்கைச் செடியைக் கொண்டு வந்து அதோடு கொஞ்சம் மிளகை வைத்து அரைத்து உடனே உள்ளுக்குக் கொடுங்கள். கால் நாழிகையில் சாமியார் தூங்கி விழிப்பவர் போல எழுந்து உட்கார்ந்து கொள்வார். இது நிச்சயம்” என்றான்.
இன்னொருவன், “நாம் நினைத்த மாத்திரத்தில் சிறியாநங்கை அகப்பட்டு விடுமா. அது அபூர்வமான மூலிகையல்லவா. யாராவது தோட்டங்களில் வைத்து வளர்த்திருந்தால்தான், அது எளிதில் கிடைக்கும். அது இப்போது எங்கே அகப்படப் போகிறது; அது வேண்டாம். வெப்பாலை குத்துப்பாலை என்று ஒரு செடி இருக்கிறது. அது சாதாரணமாக நம்முடைய ஆற்றோரங்களில் அகப்படும். அதன் இலையையும், மிளகையும் சேர்த்துக் கொஞ்சம் தண்ணி விட்டரைத்து உடனே கொடுங்கள். அதுவே போதுமானது” என்றான்.
வேறொருவன், “அந்தப் பச்சிலைக்குக் கூட நாம் அதிக தூரம் போக வேண்டும். அது வேண்டாம். குப்பமேனித்தழை, அப்பக் கோவத்தழை, மிளகு மூன்றையும் அரைத்துக் கொடுங்கள். இந்த மூலிகைகள் அநேகமாய் இந்த பங்களாவிலேயே கிடைக்கலாம்: கிடைக்காவிட்டால், விழும்பிப் பழமும் பச்சைவெண்ணெயும் சேர்த்து அரைத்துக் கொடுக்கலாம்” என்றான்.
அவர்களது சொற்களை எல்லாம் கேட்ட சப் இன்ஸ்பெக்டர், இப்படி நீங்கள் எல்லோரும் வாயில் வந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டே போனால் எதைச் செய்கிறது என்பதே தோன்றாமல் பிரமிப்பு உண்டாகிவிடும். நீங்கள் சொல்லும் சாமான்கள் எல்லாம் அவசரத்துக்கு அகப்படக்கூடியவைகளாகவே தோன்றவில்லை” என்றார்.
வேறொருவன், “அவைகள் எல்லாம் அகப்படாவிட்டால், கடையில் கிடைக்கக்கூடிய மயில் துத்தத்தை வாங்கிப் பொடி செய்து மூக்கால் இழுக்கச் செய்யுங்கள். அதோடு சாமியாருடைய தலையில் ஜலத்தை விட்டுக்கொண்டே இருக்கச் சொல்லுங்கள். அவர் குளிர்கிறதென்று சொல்லுகிற வரையில், ஜலத்தை விட்டுக் கொண்டிருக்க வேண்டும்” என்றான்.
சிறிது தூரத்தில் நின்ற வேறொருவன் ஓங்கிய குரலாகப் பெசத் தொடங்கி, “அதெல்லாம் ஒன்றும் வேண்டாமையா! நான் சொல்வது இன்னும் சுலபமானது. நம்முடைய புகையிலை இருக்கிறதல்லவா. அது பச்சைப் புகையிலையாகக் கிடைக்குமானால், அது நிரம்பவும் சிலாக்கியமானது. அதன் சாறைப் பிழிந்து அரைக்கால் படி அல்லது வீசம்படி குடிக்கும்படி செய்யுங்கள்; உடனே வாந்தி உண்டாகும். விஷம் எல்லாம் வெகு சீக்கிரத்தில் பிரிந்து வெளிப்பட்டுவிடும். பச்சைப் புகையிலை அகப்படாவிட்டால், காய்ந்த புகையிலையைத் தண்ணி விட்டுச் சாறு பிழிந்து கொஞ்சம் வேப்ப எண்ணெய் கலந்து உள்ளுக்குக் கொடுத்தால், அதுவே போதுமானது” என்றான்.
அவனுக்குப் பக்கத்தில் இருந்த மற்றொருவன், “அதுகூட முரட்டு வைத்தியம்; வேறொன்றும் வேண்டாம். பெருங்காயம், உள்ளிப் பூண்டு, அரிதாரம், மிளகு, இந்துப்பு இவைகளைச் சமமாகச் சேர்த்து அரைத்துக் குளிகையாக்கி முலைப்பால் விட்டுக் கண்ணில் கலிக்கம் போட்டால், விஷம் எல்லாம் ஒரு நிமிஷத்தில் நிவர்த்தியாகி விடும். வேறு மருந்தே தேவையில்லை” என்றான்.
இப்படி ஜனங்கள் மழை பெய்வது போல மருந்து வகைகளையும் உண்ணும் முறைகளையும் சொல்லிக்கொண்டே போனதன்றி, ஒவ்வொருவரும் உள்ளே சென்று தத்தம் வைத்திய முறைகளைக் கையாள வேண்டும் என்ற ஆவலினால் தூண்டப்பட்டுத் துடிதுடித்து முன்னுக்கு வந்தனர். அவற்றை எல்லாம் கேட்டபடி சிறிது நேரம் அவ்விடத்தில் நின்ற பிறகு கண்ணப்பா வடிவாம்பாளை அழைத்துக் கொண்டு பங்களாவிற்குள் நுழைந்தான். வேலாயுதம் பிள்ளையின் குடும்பத்தாருக்கும் திகம்பர சாமியாருக்கும் அன்னியோன்னியமான நட்பு உண்டென்பது போலீஸ் ஜெவான்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விஷயம் ஆதலால், கண்ணப்பாவும் அவனது மனையாட்டியும் உள்ளே செல்வதை எவரும் தடுக்காமல், அவர்களை மரியாதையோடு உட்புறம் அனுப்பினர். .
உள்ளே சென்ற அவ்விருவரது மனமெய்களின் நிலைமை விவரிப்பதற்கு முற்றிலும் அரிதாக இருந்தது. சட்டைநாத பிள்ளை என்ற பெரிய கொடிய காட்டு விலங்கின் பயங்கரமான குகைக்குள் அகப்பட்டு, வேறு எவராலும் மீட்க இயலாத பரம சங்கடமான நிலைமையில் இருந்த பெண்மானான வடிவாம்பாளை, அரும்பாடுபட்டு அற்புதச் செயல்களை முடித்து விடுவிக்கவும், அவளைக் கண்ணப்பா மணக்கவும் காரண பூதராக இருந்த திகம்பர சாமியாரை அவர்கள் இருவரும் சதா காலமும் வாழ்த்தி, தெய்வம் போல மதித்து வணங்கி, அவரது விஷயத்தில் அளவற்ற பயபக்தி விசுவாசத்தை வளர்த்து வந்தவர்கள் ஆதலால், அத்தகைய உயிருக்குயிரான மனிதர் இறந்துபோகப் போகிறார் என்ற செய்தியானது, அவர்களைக் கட்டுக்கடங்காது தத்தளிக்கச் செய்து, அவர்களது உயிரை முற்றிலும் ஆட்டிவிட்டது. அந்த விபரீதமான சந்தர்ப்பத்தில் தாம் என்ன செய்வது என்பதையும், அவரை எப்படிப் பிழைக்கச் செய்வதென்பதையும் சிறிதும் உணரமாட்டாதவராய், சித்தப்பிரமை கொண்டு மதிமயக்கம் அடைந்து பைத்தியக் காரர்களைப் போல மருள மருள விழித்துக் கொண்டே உள்ளே நடந்தனர். வெளியில் நின்ற ஜனங்கள் பாம்பு கடியை வெகு சுலபமாக மதித்து, அதற்குப் பல மருந்துகளைச் சொன்னார்கள் ஆனாலும், பாம்பு விஷந் தீண்டப்பெற்ற மனிதர் தப்பிப் பிழைப்பது மகா துர்லபமான விஷயம் என்ற நினைவு அவர்களது மனதில் முக்கியமாக எழுந்தெழுந்து வதைத்துப் புண்படுத்திக் கொண்டிருந்தது ஆகையால், அவர் அநியாயமாக இறந்து போய் விடுவாரோ என்ற பயமே மும்முரமாய்த் தோன்றி மேலாடிக் கொண்டிருந்தது. அவர் ஒருகால் மரித்து விடுவாரானால், அது தங்களுடைய ஆயிசு காலம் முழுதும் மாறாத பெருந் துயரமாக இருக்குமே என்றும், அதன் பிறகு உலகமே பாழ்த்துப் போனது போலாகிவிடுமே என்றும், அதன் பிறகு என்ன செய்வது என்றும், எப்படி உய்கிறதென்றும் அப்போதே நினைத்து நினைத்து அபாரமான திகிலும் ஏக்கமும் சஞ்சலமும் கொண்டு நெருப்புத் தனல்களின் மேல் நடந்து செல்வோர் போலத் தத்தளித்துத் தயங்கித் தயங்கி உட்புறம் சென்றனர். அவர்களது தேகம் கட்டுக்கடங்காமல் பதறிப் படபடத்து ஒய்ந்து ஒரே தவிப்பு மயமாக இருந்தது. தாம் உள்ளே போனவுடன் எவ்விதமான கெட்ட செய்தியைக் கேட்க நேருமோ என்ற நினைவும், சாமியாரை எத்தகைய பரிதாபகரமான நிலைமையில் காணவேண்டி இருக்குமோ என்ற அச்சமும், கவலையும் தோன்றி அவர்களது கால்களைப் பின்புறம் இழுத்தன. ஆனாலும், அவர் பக்கத்தில் இழுத்துக் கொண்டே போனது. அத்தகைய நிலைமையில் தமது தாய் தந்தையர்கள் இல்லாமல் வெளியூருக்குப் போயிருக்கிறார்களே என்ற நினைவும், அவர்கள் வருவதற்குள் ஒருகால் ஏதாவது விபரீதம் நேர்ந்துவிடுமோ என்றும், கண்ணப்பா பெரிதும் கவலையுற்றுக் கலங்கி உருகினான். தாம் ஓடிவந்த கலவரத்தில், வடிவாம்பாளின் தாய் தகப்பன்மார்களான சிவக்கொழுந்தம்மாளுக்கும், சுந்தரம் பிள்ளைக்கும் அந்தச் செய்தியைச் சொல்லி அனுப்ப மறந்து வந்து விட்டோமே என்ற விசனமும் ஒரு புறத்தில் மனதை உலப்பியது. அத்தகைய பரம சங்கடமான நிலைமையில் அவ்விரு இளையோரும் பங்களாவின் உள்புறக் கட்டிடத்தை அடைந்து, முன் தாழ்வாரத்தில் ஏறினர். அவ்விடத்தில் ஐந்தாறு போலீஸ் ஜெவான்கள் மிகுந்த கவலையும் மனக்குழப்பமும் பிரமையும் தோற்றுவித்த முகத்தினராய் நின்றனர். அவர்கள் கண்ணப்பர் இன்னான் என்பதைக் கண்டுகொண்டு, யாதொரு தடையும் செய்யாது அவர்கள் இருவரையும் நேராக உள்ளே போக அனுமதித்தனர். திகம்பரசாமியார் அந்த பங்களாக் கட்டிடத்தின் நடுமத்தியில் பல அறைகளுக்குள் அறையாக அமைந்திருந்த அந்தரங்கமான ஒரு விடுதியிலேயே எப்போதும் இருப்பது வழக்கம் என்பது கண்ணப்பாவுக்குத் தெரிந்த விஷயம் ஆதலால், அவ்விடத்திலே தான் அவர் இருக்க வேண்டும் என்று அவன் அனுமானித்துக் கொண்டான். ஆனாலும், அவன் போலீசாரை நோக்கி, “ஐயா! சாமியார் எந்த இடத்தில் படுத்திருக்கிறார்?” என்று வினவினான்.
ஒரு போலீஸ்காரன், “அவர் எப்போதும் இருந்து அலுவல் பார்க்கும் அறையிலேதான் இருக்கிறார்; நீங்கள் நேராக அங்கே போகலாம்” என்றான்.
கண்ணப்பா, “அங்கே வேறே மனிதர் யார் யார் இருக்கிறார்கள்? இப்போது அவருடைய நிலைமை எப்படி இருக்கிறது?” என்றான்.
போலீஸ்காரன், “அந்த அறைக்குள் அவருடைய சம்சாரமும் வேலைக்காரியும் நிரம்பவும் திறமைசாலிகளான நாலைந்து வைத்தியர்களும் மந்திரவாதிகளும் இருக்கிறார்களாம். அவருடைய வேலைக்காரிதான் அடிக்கடி வெளியில் வந்து அவருடைய நிலைமை எப்படி இருக்கிறதென்ற விவரங்களை எங்களுக்குத் தெரிவித்துவிட்டுப் போகிறாள். கடைசியாக அவள் இப்போதைக்குக் கால் நாழிகைக்கு முன்னேதான் வந்து நாங்கள் கடையில் இருந்து வாங்கி வந்த சில மருந்து சாமான்களை உள்ளே எடுத்துக் கொண்டு போனாள். வைத்தியர்கள் நிரம்பவும் பிரயாசைப்பட்டுப் பலவிதமான சிகிச்சைகளும் தந்திரங்களும் செய்கிறார்களாம். சாமியார் முற்றிலும் பிரக்ஞை இல்லாமல் கிடக்கிறாராம். அவர் பிழைத்தால், அது புனர்ஜென்மம் என்று வைத்தியர்கள் எல்லோரும் சொல்லுகிறார்களாம். என்ன செய்கிறது. இந்தக் கலிகாலத்தில் கிடைத்த அருமையான உத்தம புருஷருக்கு இப்படிப்பட்ட எதிர்பார்க்காத கொடுமை சம்பவித்திருக்கிறது. என்னவோ தெய்வந்தான் அந்த உத்தமியின் மாங்கலியத்தைக் காப்பாற்ற வேண்டும். அவர் இதுவரையில் செய்துள்ள புண்ணியம் அபாரமானது. அதுவாவது அவரைக் காக்காதா பார்க்கலாம். அவருடைய உயிருக்கு ஏதாவது ஹானி நேர்ந்து விடுமானால், முக்கியமாக எங்கள் இலாகாவுக்கே அசாத்தியமான நஷ்டமும் அசெளகரியங்களும் ஏற்படும். போலீஸ் இலாகாவிற்கே ஒரு சிரோரத்னம் போல விளங்கி வரும் இந்த மகான் போய் விட்டால், எங்கள் இலாகாவின் பெயரும் கீர்த்தியும் பெருமையும் அமாவாசையின் இரவு போல இருளடைந்து மங்கிப் போவது நிச்சயம். சட்டைநாத பிள்ளையாகிய பரமதுஷ்டன் சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடிவந்திருக்கிறான், அவனைக் கண்டுபிடிப்பது முதலிய அரிய காரியங்களை முடிக்க வேண்டிய இந்த மகா இக்கட்டான வேளையில் இவர் போய்விடுவாரானால், எங்கள் பாடுதான் திண்டாட்டமாகிவிடும். நீங்கள் சீக்கிரம் உள்ளே போய், எப்படியாவது பாடுபட்டு சுவாமியாரைப் பிழைக்கச் செய்யுங்கள். போங்கள்” என்று நிரம்பவும் உருக்கமாகக் கூறினான்.
அவனது சொற்களைக் கேட்ட உடனே கண்ணப்பா வடிவாம்பாள் ஆகிய இருவரது மனமும் கண்களும் நிரம்பவும் கலங்கின. அவர்கள் இருவரும் அதற்கு மேலும் அவ்விடத்தில் நின்று காலஹரணம் செய்ய சகியாதவராய் அவ்விடத்தை விட்டு உள்ளே நுழைந்து பல தாழ்வாரங்களையும் அறைகளையும் கூடத்தையும் கடந்து விரைவாக நடந்து திகம்பர சாமியாரினது ரகசிய விடுதியின் வாசலை அடைந்தனர். எங்கும் நிசப்தமே மயமாக நிறைந்திருந்தது. இடைவழி முழுதும் நிர்மாதுஷ்யமாகக் காணப்பட்டது. அந்த நிலைமை பின்னால் நேரப்போகும் விபரீதமான சம்பவத்திற்கு முன்னறிகுறியோ என்ற நினைவே அவ்விருவரது மனதிலும் தோன்றித் தோன்றி மறைந்தது ஆனாலும், அத்தகைய அசுபமான நினைவை அவர்கள் தங்களது மனதைவிட்டு விலக்க முயன்று கொண்டே செல்ல, திகம்பரசாமியாரது அந்தரங்க விடுதியான வாசலில் துயரமே வடிவாகத் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அவரது வேலைக்காரி அவர்களது திருஷ்டியில் பட்டனள். அவளது பரிதாபகரமான தோற்றத்தைக் கண்டவுடனே
மா. வி. ப.I- 19 அவர்களது மனம் கட்டில் அடங்காமல் அபாரமாகப் பொங்கி எழுந்தது. கண்களில் இருந்து கண்ணீர் பொங்கிக் கன்னங்களின் மீது தாரை தாரையாக வழிந்து இறங்க ஆரம்பித்தது. வடிவாம்பாள் மிகுந்த ஆவலோடு அவளண்டை ஒடி, “நாச்சியாரம்மா! ஐயா பிழைத்துக் கொள்ளுவாரா? நீ ஏன் வெளியில் உட்கார்ந்திருக்கிறாய்? எஜமானியம்மாள் எங்கே இருக்கிறார்கள்? கதவு சும்மாதானே மூடப்பட்டிருக்கிறது?” என்றாள்.
அவர்கள் இருவரும் வந்ததைக் கண்டு வடிவாம்பாள் கூறிய சொற்களைக் கேட்ட வேலைக்காரி கட்டிலடங்கா மீன உணர்ச்சியும் சங்கடப் பெருக்கும் அடைந்து சரேலென்று எழுந்து, “அம்மா! வாருங்கள்! வாருங்கள்! ஐயாவுக்கு இப்படிப்பட்ட அபாயம் நேரும் என்று நாங்கள் சொப்பனத்தில் கூட நினைக்கவில்லையம்மா! இன்று காலையில் வழக்கம் போல எழுந்து, ஸ்நானம் செய்து நியம நிஷ்டை அநுஷ்டானங்களை எல்லாம் முடித்துக் கொண்டவர்கள் தாகத்துக்குத் தண்ணீர்கூடச் சாப்பிடவில்லை. அதற்குள் இப்படிப்பட்ட அவகேடு வந்து விட்டதே! இந்த அநியாயக் கொடுமையை என்னவென்று சொல்லுகிறது! ஆண்டவன் என்ன வழிவிடுவாரோ தெரிய வில்லையே! உள்ளே நாலைந்து வைத்தியர்கள் இருந்து படாத பாடெல்லாம் படுகிறார்கள். ஐயா இன்னமும் கண்ணைத் திறந்து கூடப் பார்க்கவில்லை. மனிதர் கூப்பிடுவதுகூட உறைக்காமல் ஸ்மரணை தப்பிப் போயிருக்கிறது. எஜமானியம்மாள் அழுதழுது அப்படியே உட்கார்ந்து போய்விட்டார்கள். ஐயாவுக்கு முன் அம்மாளுடைய உயிரே போய்விடும் போலிருக்கிறது. அடிக்கடி பலர் உள்ளே வந்து பேச்சுக் கொடுப்பது கூடாதென்று வைத்தியர்கள் சொன்னார்கள் ஆகையால், கதவு உள் பக்கத்தில் தாளிடப்பட்டிருக்கிறது. யாராவது வந்தால் தகவல் தெரிவித்து உள்ளே அனுப்பவோ வெளியில் அனுப்பவோ ஆக வேண்டு வதைச் செய்கிறதற்காக என்னை இங்கேயே உட்கார வைத்திருக்கிறார்கள். உங்களை எல்லாம் அழைத்து வரும்படி ஆள்களை அனுப்பும்படி எஜமானியம்மாள் சொன்னார்கள். கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான், நான் சேவகர்களிடம் அந்தச் செய்தியைத் தெரிவித்து ஆள்களை அனுப்பச் சொல்லிவிட்டு வந்தேன். நல்ல வேளையாக அதற்குள் நீங்களே வந்து விட்டீர்கள்” என்றாள்.
அவள் கூறிய உருக்கமான சொற்களைக் கேட்கவே, வந்த இருவர்களினது இருதயமும் துக்கத்தினால் பொங்கிப் படீரென்று வெடித்து விடுமோ என்ற அஞ்சத்தகுந்த நிலைமையை அடைந்துவிட்டது. இருவரும், “ஆ! தெய்வமே! இப்படியும் சோதனை செய்வாயா!’ என்று வாய்விட்டுக் கதறி அங்கலாய்த்துக் கொண்டனர். இருவரது தேகமும் தள்ளாடிக் கீழே வீழ்ந்து விடுமோ என்று தோன்றக்கூடிய நிலைமையை அடைந்தது. அவர்களுக்குத் தாம் என்ன மறுமொழி சொல்வதென்பதை அறியாது, அவர்கள் இருவரும் மெளன ரூபமாய் இருந்த கரைகாணாத பெருத்த துக்கசாகரத்தில் அழுந்திப் போய் வேதனையாகிய நூறாயிரம் முதலைகளால் அல்லல்படுத்தப் பெற்று நிற்க, உடனே வேலைக்காரி கதவண்டை மெதுவாகப் போய் அதை இரண்டொரு முறை தட்டி, “அம்மா! அம்மா! வடிவாம்பாள் அம்மாவும் அவர்களுடைய எஜமானரும் வந்திருக்கிறார்கள். கதவைத் திறவுங்கள்” என்று தணிவான குரலில் கூறினாள். அடுத்த நிமிஷத்தில் உட்புறத்தில் இருந்து ஒரு மிருதுவான குரல் உண்டாயிற்று, “அவர்களோடு இன்னம் வேறே யார் வந்திருக்கிறார்கள்?” என்று திகம்பர சாமியாருடைய மனைவி கேட்பதாகத் தெரிந்தது. உடனே வேலைக்காரி, “அவர்கள் இரண்டுபேர் மாத்திரம்தான் வந்திருக்கிறார்கள். வேறே யாருமில்லை” என்றாள்.
அடுத்த கூடிணத்தில் உள் தாழ்ப்பாள் மெதுவாக விலக்கப் பட்டது. கதவும் சிறிதளவு திறந்து கொண்டது.
தாங்கள் குலதெய்வம் போலவும் உயிருக்குயிராகவும் மதித்துள்ளதிகம்பர சாமியார் உயிருக்கு மன்றாடிக் கிடக்கும் சகிக்க இயலாத பரம சங்கடக் காட்சியைத் தாம் அடுத்த கூடிணத்தில் கண்ணால் பார்க்க வேண்டுமே என்ற எண்ணம் உடனே அவர்கள் இருவரது மனதிலும் உதிக்கவே, அவர்களது துக்கமும் வேதனையும் மலைபோலப் பெருகி அவர்கள் இரண்டொரு நிமிஷ நேரம் தலை சுழன்று மயங்கி நிற்கும்படி செய்தது. அவர்களது தேகம் ஆகாயத்தில் பறப்பது போலத் தோன்றியதே அன்றி, தாங்கள் பூமியில் நடக்கிறோம் என்ற எண்ணமே அவர்களுக்குத் தோன்றவில்லை. “கதவு திறந்திருக்கிறது. உள்ளே போங்கள்” என்று வேலைக்காரி கூறிய வார்த்தையைக் கேட்ட பிறகே, அவர்களுக்குத் தங்களது சுயநினைவு சிறிதளவு தோன்றியது. அவர்கள் இருவரும் மடை திறந்து விட்டது போலத் தமது கண்களில் இருந்து வெள்ளமாகப் பெருகி வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் தமது வஸ்திரத் தலைப்பினால் துடைத்தபடி தமது முகத்தை மூடிக்கொண்டு மெதுவாக உள்ளே நுழைந்தனர். அவர்கள் மார்பில் இருந்து கிளம்பிய துக்கப் பெருக்கை அடக்க இயலாது அவர்கள் இருவரும் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினர். ஒரு பக்கத்தில் காணப்பட்ட கட்டிலின் மேல், சாமியார் முற்றிலும் பிரக்ஞையற்று பினம் போலப் படுத்திருந்த காட்சி, அவர்களது கண்ணில் படவே, அவர்களது மனதில் எழுந்த சொற்கள் வெளிப்படாமல் தொண்டையில் விக்கிப் போயின. கால்கள் தள்ளாடத் தொடங்கின; உடம்பு கை முதலிய அங்கங்கள் எல்லாம் வெட வெடவென்று நடுங்கிப் பதறுகின்றன. இருவரும் கன்றைப்பிரிந்து கூடிய பசுவைப் போல ஒலமிட்டு அலறத் தொடங்கி, “ஐயோ! தெய்வமே! என்ன காரியம் செய்து விட்டாய்! எங்களுக்கெல்லாம் உயிர்த் தெய்வமாக விளங்க வேண்டும் என்று அவதாரம் எடுத்து வந்து இதுவரையில் இருந்து திடீரென்று எங்களை எல்லாம் துக்கக்கடலில் ஆழ்த்திவிட்டுப் போய்விட நினைத்தாயா? ஐயோ! தெய்வமே! இது தருமமா இது உனக்கு அடுக்குமா?” என்று கூறித் தவித்தவர்களாய்க் கட்டிலண்டை பாய்ந்தனர். அவர்களது அபாரமான துயரப் பெருக்கில் அந்த அறையில் இன்னும் யார் யார் இருக்கிறார்கள் என்பதையாவது, தங்களுக்குக் கதவைத் திறந்துவிட்ட அவரது மனையாட்டியான சிவகாமியம்மாளை அவர்கள் அவ்வளவாகக் கவனிக்கவில்லை. மறுபடியும் கதவு மூடி உட்புறத்தில் தாளிடப்பட்டது. அவ்வாறு தாளிட்ட சிவகாமியம்மாள் வந்தவர்களோடு பேசாமல் அவ்விடத்தை விட்டு பக்கத்தில் இருந்த வேறோர் அறைக்குள் போய்விட்டாள்.
அவ்வாறு இரண்டொரு நிமிஷ நேரம் கழிந்தது. கண்ணப் பாவும், வடிவாம்பாளும் ஒருவாறு தங்களது சுயநினைவை அடைந்து தங்களது முகத்தில் இருந்த துணியை விலக்கிவிட்டு திகம்பரசாமியாரையும், அந்த அறையையும் கவனித்துப் பார்க்கலாயினர்.
திகம்பரசாமியார் அசைவற்றுப் பிணம் போலவே கிடந்தார். ஆனால் அந்த அறையில் வேறே மனிதர் எவரும் தென்படவில்லை. போலீசாரும், வேலைக்காரியும் கூறியபடி வைத்தியர்களாவது மந்திரவாதிகளாவது காணப்படவே இல்லை. தங்களுக்குக் கதவைத் திறந்து விட்டது சிவகாமியம்மாள் என்ற நினைவு அவர்களது மனதில் நன்றாக உண்டானது ஆனாலும், அவள் தங்களோடு பேசாமல் எங்கே போயிருப்பாள் என்ற சந்தேகமும் ஆச்சரியமும் உண்டாயின. யாரும் அவ்விடத்தில் இருந்து சந்தடி செய்யக்கூடாதென்றும், சாமியார் நிச்சலனமாகப் படுத்திருக்க வேண்டும் என்றும் வைத்தியர்கள் ஒருகால் கண்டித்துச் சொல்லி ஏதாவது மருந்து கொடுத்துவிட்டு அப்பால் போய் உட்கார்ந்திருப் பார்களோ என்ற சந்தேகம் உதித்தது. விஷயம் அப்படியாக இருந்தால், சிவகாமியம்மாள் அந்தத் தகவலை தங்களுக்கும் தெரிவித்துத் தங்களையும் அப்பால் கூட்டிக்கொண்டு போவதே சகஜமாக நடக்கக்கூடிய காரியமன்றி, தங்களோடு முகங் கொடுத்துக்கூடப் பேசாமலும், தங்களுக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்காமலும் அப்பால் போகவே முகாந்திரம் இல்லை என்ற எண்ணம் அவர்களது மனதில் உதித்தது. உண்மை இன்னதென் பதைத் தெரிந்து கொள்ளாமல் தாம் அவ்விடத்தில் பேசிச் சந்தடி செய்தால், அது சாமியாருக்கு உபத்திரவமாக முடிந்தாலும் முடியலாம் என்ற நினைவும் தோன்றியது ஆகையால், தாங்கள் அப்போது என்ன செய்வதென்பதை அறியாமல் அவர்கள் இருவரும் அசைவற்றுத் தயங்கிச் சிறிது நேரம் அப்படியே நின்றனர். சாமியாரது தேக நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும், அவர் பிழைக்கக் கூடிய சின்னம் ஏதாவது உண்டாயிருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பெரிதாக எழுந்து வருத்தலாயிற்று. கண்ணப்பா சந்தடியின்றி மெதுவாக நடந்து கட்டிலை அணுகி சாமியாரினது முகத்தை உற்று நோக்கினான். அவர் அயர்ந்து சுரணையற்று ஆழ்ந்து தூங்குவது போன்ற தோற்றம் தென்பட்டது. தாம் அவ்விடத்தை விட்டுப் பக்கத்தில் இருந்த கதவைத் திறந்து கொண்டு சிவகாமியின் இடத்திற்காவது அல்லது தாம் வந்த வாசற்படியின் கதவு திறந்து கொண்டு வெளியில் உள்ள வேலைக்காரியின் இடத்திற்காவது போய், உண்மையைத் தெரிந்து கொள்ளலாமா என்ற யோசனை தோன்றியது. ஆனாலும், தாம் கதவைத் திறந்து ஒசை செய்வது ஒருவேளை சாமியாருக்குத் துன்பகரமாக இருக்குமோ என்ற நினைவும் உண்டானது ஆகையால், எதையும் செய்ய மாட்டாமல் அவர்கள் தயங்கிக் கற்சிலைகள் போல அப்படியே நின்றனர். அவ்வாறு கால் நாழிகை காலம் கழிந்தது.
சாமியாரது தூக்கம் கலைவது போலத் தோன்றியது. அவர் தமது கைகளை அசைக்கவும் உடம்பை அப்புறம் இப்புறம் புரட்டவும் ஆரம்பித்தார். ஆனால் கண்கள் மாத்திரம் மூடப்பட்டபடி இருந்தன. அவர் தாமாகவே கண்களைத் திறந்து கொள்வார் என்றும், அதன் பிறகே தாம் அவரோடு பேச வேண்டும் என்றும், கண்ணப்பாவும் வடிவாம்பாளும் நினைத்துக் கொண்டு அசையாமலும் ஒசை செய்யாமலும் சாமியாரை உற்று நோக்கியபடி நின்றனர். அவரது உடம்பு மறுபடியும் அசையாமல் ஒய்ந்து அசைவற்றுப் போயிற்று. மேலும் கால் நாழிகை காலம் கழிந்தது. அவர் திரும்பவும் தமது கைகளைத் துக்கி அப்புறம் இப்புறம் போட்டு உடம்பைத் திருப்பினார். அவ்வாறு அவர் செய்ததில் இருந்து, அவர் சொற்ப பாகம் பிரக்ஞையோடு இருந்ததாக அவர்கள் இருவரும் யூகித்துக் கொண்டனர். சாமியாரது உண்மையான தேக நிலைமையை அறிந்து கொள்ளாமல் அதற்கு மேலும் அப்படிப்பட்ட சம்சயமான நிலைமையில் இருக்க அவர்களது மனம் இடங்கொடுக்காமல், ஆவல் கொண்டு பதறியது ஆதலால், தாம் அவரோடு பேச்சுக் கொடுத்துப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் சைகை செய்து கொண்டனர். உடனே கண்ணப்பா தணிவான குரலில் பேசத்தொடங்கி, “சுவாமீ. சுவாமீ உடம்பு எப்படி இருக்கிறது?” என்று நிரம்பவும் மிருதுவாக வினவினான். அந்த வார்த்தைகளைக் கேட்ட திகம்பரசாமியார் தமது கண்களை மெதுவாக திறந்து பார்த்து, கண்ணப்பாவும் வடிவாம்பாளும் வந்திருப்பதை உணர்ந்து உடனே தமது பார்வையை நாற்புறங்களிலும் செலுத்திக் கதவுகளைக் கவனித்தார். பிறகு அவர் தமது முழு வாத்சல்யமும் முகத்தில் தோன்ற, அவர்களை நோக்கி, “வாருங்கள் தம்பி வா குழந்தை! இப்படி என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள் தம்பி” என்று கூற, உடனே கண்ணப்பா அவருக்கருகில் போடப் பட்டிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். வடிவாம் பாள் அவனுக்குப் பின்னால் போய் நாணிக்குனிந்து நின்ற வண்ணம் பேசத் தொடங்கி, “சுவாமிகளே உடம்பு இப்போது என்ன செய்கிறது? விஷம் குறைந்து கொண்டு வருகிறதா? எங்கே வைத்தியர்கள் ஒருவர்கூட இல்லையே? எல்லோரும் எங்கே போய்விட்டார்கள்?” என்று நிரம்பவும் உருக்கமான குரலில் கூறினாள்.
அதைக் கேட்ட சுவாமியார் தணிவாக ஹீனக் குரலில் பேசத் தொடங்கி, “குழந்தாய்! மனிதருடைய உடம்பு என்றைக்காவது ஒரு தினம் இறந்துபோகக் கூடியதே அன்றி, எப்போதும் நிலைத்து நிற்கக் கூடியதல்லவே. மனித ஜென்மம் நம்முடைய அனுமதி இல்லாமல் தானாக உண்டாகிறது; கொஞ்ச காலத்தில் நாம் எதிர்பார்க்காத போது தானாகவே அது போய்விடுகிறது. மாயமாகிய திரைக்கு மறைவில் எவனோ ஒருவன் இருந்து கொண்டு தன்னுடைய ஆக்ஞையாகிய ஒரு சக்தியால் மனிதன் உற்பத்தியாகும்படி செய்கிறான். “நான் நான்” என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொரு மனிதரும், இந்த உலகத்தில் பிறக்கும் முன் எங்கே இருந்தார்கள்! தாய் வயிற்றில் எப்படிப் புகுந்து, யாருடைய தயவினால் பத்துமாத காலம் இருந்து வளர்ந்து, பிறகு வெளிப்பட்டார்கள் என்பதையே தெரிந்து கொள்ள முடிகிறதில்லை. “நான் நான்” என்று சொல்லிக் கொள்ளும் இந்த உடம்பில் என்னென்ன வஸ்துக்கள் சேர்ந்து, ரத்தம், மாமிலம் முதலிய ஏழுவகை தாதுக்களாக மாறியிருக்கின்றன என்பதும் தெரிகிறதில்லை. மண்ணில் இருந்து விளையும் அரிசியும், தண்ணிரில் இருந்து வரும் உப்பும், ஆகாயத்தில் இருக்கும் காற்றும், மரஞ்செடிகளில் இருந்து வரும் காய்கறிகளும் ஒன்றாகக் கூடி மனிதருடைய உடம்பாக மாறி இருக்கின்றன என்பது நமக்குப் பிரத்தியகூஷமாகத் தெரிகிறது. உலகத்தில் உள்ள அரிசி உப்பு முதலிய வஸ்துக்கள் எல்லாம் இப்படி ஒன்று கூடி வேறு புதுமையான ரூபமடைந்து நான் நான் என்று பாத்தியங் கொண்டாடிக் கொஞ்ச காலத்தில் அழிந்து போவதைத் தவிர நாம் வேறே எதையும் பார்க்க முடிகிறதில்லை. அவைகள் அழிந்து போவதைத் தடுக்கவும் நம்மால் ஆகிறதில்லை. நாம் பூலோகத்தில் உதிப்பதும், வளர்வதும், இறப்பதும் நம்முடைய சக்தியில் அடங்கிய காரியங்கள் அல்ல. அவை யாருடைய சக்தியினால், என்ன உத்தேசத்தோடு நடைபெறுகின்றன என்பதும் தெரிகிறதில்லை. இப்படி ஏற்படும் தேகம் நம்முடையது நம்முடையது என்று நாம் அறியாமையினால் உரிமை பாராட்டி, அது அழிந்து போவதைப்பற்றி விசனப்படுகிறோம். இப்படி நாம் விசனமாவது, கவலையாவது கொள்வதனால், ஏதாவது உபயோகம் உண்டா? மாயத்திரையின் மறைவில் இருந்து நடைபெறும் ஆக்ஞா சக்கரத்தின் வேலை நடந்துகொண்டுதான் போகிறது. மனிதன் விசனப்படுவதெல்லாம் வியர்த்தமாகத்தான் முடிகிறது. அவன் தனக்கு அருமையான இன்னொரு மனிதன் போய்விடுகிறானே என்று கண்ணிர் விட்டுக் கதறியழுவது நம்மைப் படைத்து ஆட்டிவைக்கிறவனுக்குத் தெரியாமலா இருக்கிறது? அப்படித் தெரிந்தும், அவன் அந்த மனிதனிடத்தில் இரக்கமாவது அனுகாபமாவது கொள்ளவில்லை என்று நினைப்பதுதான் பொருத்தமாகுமா? பிறகு எதனால் இப்படி நடக்கிறது? மனிதருக்கு மனிதர் உரிமை கொண்டாட யாதொரு பாத்தியமும் இல்லை. தனக்கு எவ்விதச் சம்பந்தமும் இல்லாத ஒரு வஸ்துவை இவன் தன்னுடையது என்று தப்பாக உரிமை கொண்டாடி, அது போவதைப் பற்றி விசனப்படுவது அவனுடைய தவறேயன்றி வேறல்ல. அவனிடம் கடவுள் இரக்கங் கொள்ளவில்லை என்று நினைப்பதே தவறு. ஒரு ஸ்திரீ தன் தகப்பன் இறப்பதைப் பற்றி வருத்தப்பட்டு அழுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது? தகப்பனுடைய தேகத்தை அவள் உற்பத்தி செய்தாளா? அவளுக்கு அந்தத் தேகத்தில் உள்ள உரிமையைவிட, அவன் உண்டு வந்த அரிசி, உப்பு முதலியவைகளுக்கே அவனுடைய தேகத்தில் அதிக பாந்தவ்வியமும் உரிமையும் உண்டு என்று நினைப்பதே நிரம்பவும் பொருத்தமானது. அப்படி இருக்க, இந்த உடம்பைப்பற்றி நாம் கவலைப்படுவதே அநாவசியம். மனிதன் சாதாரணமாகத் தனது உடம்புக்கு ஏற்படும் பசி தாகம் முதலிய பாதைகளை நிவர்த்திக்கவும், அதை சுத்தமாக வைத்திருக்கவும் கடமைப்பட்டிருக்கிறான். அதற்கு மேல் அவனால் தடுக்க முடியாமல் அந்த உடம்புக்கு ஏற்படும் பாம்புகடி, மரணம் முதலிய பெருத்த விஷயங்களில் அவன் என்ன செய்ய முடியும்? அதற்கு மேல் அவன் கடவுளுடைய அருளை எதிர்பார்த்திருந்து, வருவதை அனுபவிப்பதைத் தவிர அவன் செய்யக்கூடியது வேறொன்றும் இல்லை ஆகையால், நான் இன்றைய தினம் என்னைப் பாம்புகள் கடித்த பிறகு என் உடம்பை கவனிக்காமலேயே இருந்து வருகிறேன். மருந்துகள் சாப்பிட வேண்டும் என்றும், மாந்திரீகத்தினால் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றும் ஜனங்கள் தொந்தரவு செய்வார்கள் என்று நினைத்து நான் கதவை மூடி உள்பக்கம் தாளிடச் செய்து படுத்துக் கொண்டிருக்கிறேன். யாராவது கேட்டால், வைத்தியர்கள் இருந்து மருந்துகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும்படி சொல்லி எச்சரித்து வைத்திருக்கிறேன். அதுதான் உண்மையான சங்கதி” என்று மிகவும் நிதானமாகவும் தட்டித் தடுமாறியும் கூறினார்.
அதைக் கேட்ட கண்ணப்பா, வடிவாம்பாள் ஆகிய இருவரது தேகமும் பதறியது. மனம் துடித்தது. கண்களில் இருந்து கண்ணிர் பொங்கி வழிந்தது. இருவரும் தமது வஸ்திரத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழத் தலைப்பட்டனர். வடிவாம்பாள் கலங்கி உருகி அழுத வண்ணம் நிரம்பவும் பணிவாகப் பேசத் தொடங்கி, “சுவாமிகளே இந்தச் சமயத்தில் தாங்கள் இப்படி வேதாந்தம் பேசுவதைக் கேட்க, எங்களுக்குச் சகிக்கவே இல்லை. மனிதர் தம்முடைய சுய அனுமதியும் சம்மதமும் இல்லாமல் கடவுளின் செயலால் பிறக்கிறார்கள் என்பது நிஜமாய் இருந்தாலும், பிறந்த பிறகு ஒரு மனிதனுக்கும், மற்றொரு மனிதனுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாமல் எல்லோரும் தனித்தனியாக இருந்து இறந்து போனால், அதைப் பற்றி மற்றவர் விசனம் பாராட்டமாட்டார்கள். மனிதன் பிறந்த பிறகு அவன் மற்ற சில மனிதரை அன்னியோன்னியமாக பாவிப்பதும், அவர்களும் பரஸ்பரம் அவனை நேசிப்பதும் ஏற்படுகின்றன. மனிதனை உற்பத்தி செய்த கடவுள் அன்பு, வாத்சல்யம், பாசம், சிநேகம், பாந்தவ்வியம் முதலிய குணங்களையும் அவனிடம் ஏற்படுத்தி, ஒருவரோடு ஒருவர் சம்பந்தப்பட்டு வாழ்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும், ஒருவரால் மற்றவர் நன்மைகளையும் சுகங்களையும் அடைகிறவர்களாகவும் அமைத்து வைத்திருக்கையில், ஒருவரிடத் தொருவர் சொந்தமும் உரிமையும் கொண்டாடுவது ஒழுங்கல்ல என்றும், அதனால்தான், மனிதன் விசனிப்பதைக் கண்டு கடவுள் இரக்கங் கொள்வதில்லை என்றும் தாங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. மனிதனைக் கடவுள் சிருஷ்டிக்கும் போதே, அவனுடன்கூட, முதலில் உடல் அபிமானம், உறவபிமானம், பொருளபிமானம் ஆகிய மூன்றையும் உற்பத்தி செய்தனுப்புகி றாரே. அதாவது, மனிதன் பிறந்த முதலே, எப்பாடுபட்டாவது தன்னுடைய உடம்பையும் உயிரையும் ஊட்டி வளர்த்துக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தடுக்க முடியாத ஒரு பேரவா அவனிடம் இயற்கையிலேயே இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக, தாய் என்றும், தகப்பன் என்றும், சகோதரன் சகோதரி என்றும், சிநேகிதர் என்றும் ஒருவிதமான பாசமும், வாஞ்சையும் அவனது மனதில் உண்டாகின்றன. பிறகு மண் பொன் பெண் என்ற பொருளாசை ஏற்படுகிறது. இப்படி இயற்கையிலேயே அவனுடைய மனசில் இப்படிப்பட்ட மூன்று வித அபிமானங்கள் தோன்றுகின்றனவே. இந்த அபிமானங்களை எல்லாம், உலகைத் துறந்த தபசிகள் கூட முற்றிலும் விலக்க முடிகிறதில்லையே. எங்களுக்கும், இந்த உலகத்தில் உள்ள சிஷ்டர்களுக்கும் எவ்வளவோ அருமையானதும் விலை மதிப்பற்றதுமான தங்களுடைய உயிரைத் தாங்கள் இவ்வளவு அசட்டையாக மதித்து, பாம்பின் விஷத்தை விலக்கத்தக்க மருந்தை உண்ணாமல் இப்படி இருப்பது நியாயம் ஆகுமா? இப்போது தாங்கள் நன்றாகப் பேசியதில் இருந்து பாம்பின் விஷம் மெதுவாகவே உடம்பில் உறைக்கும் போலத் தோன்றுகிறது. ஆகையால் இப்போது கூட நாம் வைத்தியர்களை அழைத்து வந்து மருந்துகள் கொடுக்கச் செய்து தங்களுடைய உயிருக்கு ஹானி ஏற்படாமல் தடுத்துவிடலாம். தயை செய்து தாங்கள் அனுமதி கொடுங்கள். உடனே தக்க வைத்தியரை வரவழைக்கிறோம். இதோ தாங்கள் பங்களாவின் வாசலில் பதினாயிரக் கணக்கில் ஜனங்கள் வந்து தங்களைத் தரிசிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களுள் இந்தப் பாம்பு கடிக்கு மருந்துகள் தெரிந்த பல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டே தக்க சிகிச்சை செய்யலாம். தாங்கள் பங்களா வாசலைப் பார்த்தால் இத்தனை ஆயிரம் ஜனங்களும் தங்களுடைய உயிரை எவ்வளவு விசேஷமாக மதித்திருக்கிறார்கள் என்பது ஸ்பஷ்டமாக உடனே விளங்கிப் போகும். தங்களைப் போன்ற பெருத்த பரோபகாரிகளின் உயிர் பொதுவாக சகலருக்கும் உரியதான ஒரு நிதிக் குவியல் என்றே மதிக்க வேண்டும். அதைத் தாங்கள் இப்படி அசட்டை செய்திருப்பது கொஞ்சமும் தர்மமல்ல. தயை செய்து அனுமதி கொடுங்கள். உடனே மருந்துகள் கொடுக்க ஏற்பாடு செய்யலாம்.” என்றாள்.
அவளைத் தொடர்ந்து கண்ணப்பா நிரம்பவும் அடக்கமாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கி, “சுவாமிகளே! தங்களுக்குத் தெரியாத நியாயம் ஒன்றுமில்லை. தங்களை உயிர்த்தெய்வமாக மதித்துள்ள நாங்களும் இத்தனை ஆயிரம் ஜனங்களும் துயரக் கடலில் ஆழ்ந்து மனமாழ்கிக் கிடக்கவும், நம்முடைய பகைவர்களும், மற்றுமுள்ள துஷ்டர்களும், துன்மார்க்கர்களும் களிப்படைந்து சுயேச்சையாகக் கெட்ட காரியங்களைச் செய்து உலகத்தாரை இம்சிக்கவும் விடுத்துத் தாங்கள் உலகை நீத்துப் போவது நியாயமாகுமா? தங்களைக் கொண்டு உலகத்தோருக்குப் பெருத்த நன்மைகளைச் செய்து வைக்க வேண்டும் என்று கடவுள் திருவுளம் பற்றித் தங்களை சிருஷ்டித்து அனுப்பி இருக்க, அப்படிப்பட்ட அரிதினும் அரிதான தங்களுடைய உயிரைத் தாங்கள் கேவலம் திரணமாக மதித்து இப்படிப்பட்ட மகா அபாயகரமான சந்தர்ப்பத்தில், தேகத்தை அசட்டையாகப் போட்டிருப்பது சரியல்ல. எப்படியாவது தாங்கள் வைத்தியம் செய்து கொண்டுதான் ஆகவேண்டும். முக்கியமாக எங்களைக் கருதியாவது தாங்கள் தங்களுடைய உயிரைத் தப்ப வைத்துக் கொள்ள வேண்டும். தாங்கள் இல்லாவிட்டால், நம்முடைய எதிரிகள் எங்கள் எல்லோரையும் ஒரு நிமிஷத்தில் அழித்து நாசப்படுத்தி விடுவார்கள். தாங்களே ஏற்றிவைத்த விளக்கைத் தாங்களே அனைத்து விடலாமா? எல்லாவற்றையும் அறிந்த தங்களுக்கு நான் அதிகமாக எடுத்துச் சொல்வதற்கு அச்சமாக இருக்கிறது. நாம் இப்போது தாமதித்திருக்கும் ஒவ்வொரு விநாடி நேரமும் நிரம்பவும் அபாயகரமானது. நான் போய் வைத்தியர் களை அழைத்து வரட்டுமா?” என்று நிரம்பவும் உருக்கமாகவும் பணிவாகவும் கூறி வேண்டிக் கொண்டான்.
அவர்கள் இருவரும் கூறிய சொற்களை திகம்பர சாமியார் தமது கண்களை மூடியபடியே கேட்டுக் கொண்டிருந்தார். கண்ணப்பா பேசி முடித்தவுடன், அவர் மறுபடியும் மெதுவாகப் பேசத் தொடங்கி, “தம்பி கண்ணப்பா குழந்தை வடிவூ! நீங்கள் இருவரும் மகா புத்திசாலிகள். நீங்கள் தவறான விஷயங்களை ஒருநாளும் சொல்லக் கூடியவர்களே அன்று. நீங்கள் இப்போது சொன்ன நியாயங்கள் எல்லாம் ஒருவிதத்தில் நியாயமானவைகள் தான் ஆனாலும், ஒரு விஷயம் இருக்கிறது. எத்தனையோ ஆயிரம் ஜனங்களுக்கு நான் நன்மை செய்வதாகவும், ஏராளமான துஷ்டர்களை அடக்கி இருப்பதாகவும் சொல்லி, அதற்காக நான் இறக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களே! இன்று நான் மருந்து சாப்பிட்டு இந்த அபாயத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளுகிறதாகவே வைத்துக் கொள்வோம். அதன்பிறகு நான் சிரஞ்சீவியாகவே உலகத்தில் எப்போதும் இருந்து விடுவேனா. இப்போது எனக்கு ஏறக்குறைய ஐம்பது வயசாகிறது. எப்படியும், இன்னம் 15, 20 வருஷத்தில் நான் இந்த உலகை விட்டுப் போகவேண்டும் அல்லவா? அதன்பிறகு துஷ்ட நிக்கிரகம் சிஷ்டபரி பாலனம் எப்படி நடக்கப் போகிறதென்பது தான் தெரியவில்லை. இதே தொழிலை மேற்கொண்டு வாழையடி வாழையாகவும் காலுக்குக் காலாகவும் மனித கோடிகளை சிருஷ்டி செய்து அழித்துக் கொண்டிருக்கும் கடவுளுக்கு எனக்குப் பின்னால் என் அலுவலைச் செய்ய, வேறொருவன் வேண்டும் என்பது தெரியாமலா போய்விடும். இந்த உலகம் தோன்றிய நாள் முதலாய் ஒவ்வொரு தேசத்திலும், எத்தனையோ மகான்களும், தீரர்களும், அவதார புருஷர்களும் தோன்றி இருக்கிறார்களே. அவர்கள் எல்லோரும் சிரஞ்சீவியாகவா இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் எந்தப் பணியைச் செய்ய உத்தரவு பெற்று வந்தார்களோ அது முடிந்தவுடன் போய் விட்டார்கள் அல்லவா. மகா விஷ்ணுவின் அவதாரங்களாகிய ராமன், கிருஷ்ணன் முதலியவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களுடைய சரித்திரங்களை இப்போது நாம் வாசித்துப் பார்த்தால், அவர்கள் பூலோகத்தைவிட்டு முடிவில் சுவர்க்கம் போனதாகச் சொல்லப்பட்டிருக்கும் இடத்தைப் படிக்கும்போது, நம்முடைய மனசில் உண்டாகும் துக்கத்திற்கும், ஏக்கத்திற்கும் அளவு சொல்ல முடியுமா? அவர்கள் பிறந்த பிறகு எத்தனையோ ஆயிரம் வருவடிங்களுக்குப் பின்னால் வந்துள்ள நாம் அவர்களுடைய தீரச் செயல்களையும் உத்தம குணங்களையும் புஸ்தகத்தில் படித்துவிட்டு, இவ்வளவு தவிப்புத் தவிக்கிறோமே. அவர்களுடைய காலத்திலேயே பிறந்து, அவர்களை நேரில் கண்ட மனிதருக்கு அவர்களை இழக்கும் விசனத்தினால் மனம் எவ்வளவு அதிகமாக உருகித் தவித்திருக்கும். ஈசுவராம்சம் பொருந்திய பெரிய பெரிய அவதார புருஷர்களே உலகில் நிலைத்து நிற்காமல் இறந்து மண்ணில் மறைந்து கனவில் கண்ட காட்சி போல் ஆகிவிட்டார்கள். அது நிற்க, இந்த உலகத்தில் மனிதன் பிறக்கும்போது அறிவு கல்வி முதலியவை இல்லாதவனாகக் காணப்படுகிறான். காலக்கிரமத்தில் அவனது உடம்பு வளர வளர அவனது அறிவு, கல்வி, திறமை முதலியவைகள் எல்லாம் விருத்தி அடைகின்றன. மனிதன் தன் மனைவி மக்கள், சிநேகிதர் முதலியவர்களோடு பழகப்பழக, வயசாக ஆக, ஒவருவருக் கொருவர் ஏற்படும் பாசம், வாத்சல்யம் முதலியவைகள் எல்லாம் அபாரமாகப் பெருகிப் போகின்றன. அதுவுமன்றி, ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு துறையில் அரும்பாடுபட்டுத் தனது ஆயிசு காலம் முழுதையும் செலவிட்டு ஒவ்வொரு விதமான திறமையையோ, பாண்டித்தியத்தையோ, நிபுணத்துவத்தையோ சம்பாதித்துக் கொள்ளுகிறான். நம்முடைய கம்பர், காளிதாசர், திருவள்ளுவர், அவ்வை முதலியவர்கள் எல்லோரும் இறக்கும் போது, அவர்களது அறிவும் குணங்களும் எவ்வளவு பரிபக்குவம் அடைந்திருக்கும். அதுபோல, வீணை முதலிய அரிய வாத்தியங்களில் இரவு பகல் உழன்று அவற்றிலிருந்து தேவாமிருத ஊற்றை உண்டாக்கி மழை போலப் பொழியும் சக்தியை உடையவர்களாக இருந்தோர் எத்தனைபேர். சகலமான நூல்களையும் பரிபூர்ணமாகக் கற்று வாக்கு வன்மையோடு பிரசங்கம் செய்யும் சக்தியை சம்பாதித்துக் கொண்டவர்கள் அநந்தமானவர்கள். அதுபோல சட்ட விவகாரங்களையும் வேதாந்த விவகாரங்களையும் சாஸ்திரங்களையும் கசடறக் கற்று அதிமேதாவிகளாக விளங்கினவர்கள் எத்தனையோ கோடிக்கணக்கான மனிதர்கள். இப்படி ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு துறையில் மகா அற்புதமான சக்தி வாய்ந்த வர்களாய் மாறி வயசு முதிர்ச்சி அடையும் காலத்தில், எமன் சிறிதும் தாகூடினியமாவது ஈவிரக்கமாவது காட்டாமல், எல்லோரையும் சமமாகக் கொண்டு போகிறதை நாம் பார்க்க வில்லையா? அப்படி ஒவ்வொருவரும் சம்பாதித்துக் கொண்ட வித்தையோ, அல்லது, நிபுணத்துவமோ, அல்லது அவர்கள் மற்றவர்களிடம் வைத்த பிரியமோ அநியாயமாய் அழிந்து பாழாய்ப் போகின்றனவே என்பதையாவது எமன் எண்ணிப் பார்க்கிறானா? மனிதனும், மனிதருடைய மனசும், அதன் குணங்களும், அவன் சம்பாதித்துக் கொள்ளும் வித்தைகளும், எல்லாம் ஈசுவர சிருஷ்டி ஆகையால், அவைகள் எல்லாம் அழிந்து போகின்றன என்பது சர்வக்ஞனான கடவுளுக்குத் தெரியாமலா இருக்கும். உலகத்தில் உள்ள சகலமான பொருளும் அழிந்து போகிறது போலத் தென்படுகிறதே அன்றி, உண்மையில் எதுவும் அழிகிறதே இல்லை. ஒரு மரம் பிரம்மாண்டமாக வளர்ந்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஜீவித்திருந்து கடைசியில் பட்டு வீழ்ந்து நாசமடைந்து விடுகிறது. ஆனால், அந்த மரத்தின் சக்தி முழுதும் அடங்கிய கணக்கில் அடங்காத விதைகளை அந்த மரம் உண்டாக்கி வைத்து விட்டுப் போகிறது. செடியாகி, மரமாகி, கிளைகள் விட்டு, இலைகள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், பழங்கள், விதைகள் முதலியவற்றை நிறைத்து அபிவிருத்தியாகக் கூடிய சக்தி முழுதும் ஒர் அற்ப விதைக்குள் அடங்கி இருக்கிறது. அதுபோல ஒவ்வொரு மனிதனுடைய ஸாரம் முழுதும் திரண்டு அவனுடைய குழந்தைகளாக உதிக்கின்றன; ஆனால், சிலர் குழந்தைகளையே பெறாதவராய் இறந்து போகிறார்களே, என்ன ஆகிறதென்று நீங்கள் சந்தேகிக்கலாம். அவர்களுடைய உடம்பு மாத்திரம் அழிகிறதே அன்றி, ஜீவாத்மா அழிகிறதே இல்லை. அது கண்ணுக்குத் தெரியாத சூட்சும வடிவம் உடையது. அது மறுபடியும் இன்னொருவருடைய வயிற்றில் வந்து ஜனித்துக் குழந்தையாகி மனிதனாகி அபிவிருத்தி அடைகிறது. சில குழந்தைகள் மகா விவேகிகளாகவும், வித்தைகளை வெகு சிக்கிரம் கற்றுக்கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய தந்தையரோ சாதாரண அறிவுடையவராய் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அந்தக் குழந்தைகள் முன் ஜென்மத்தில் அபாரமான அறிவும் நிபுணத்துவமும் வாய்ந்தவராய் இருந்தவர்கள் ஆதலால், மறக்கப்பட்ட பழைய நினைவெல்லாம் உண்டாவது போல, அவர்களுக்கு எல்லாம் சுலபத்தில் வந்துவிடுகிறது. ஆகவே, உலகத்தில் மனிதன் இறப்பதனால், அவனுடைய குணங்கள், அபாரசக்தி, நிபுணத்துவம் முதலியவைகள் எல்லாம் அழிந்து போவதாகவே நாம் எண்ணக்கூடாது. இன்றைக்கு நான் இறந்தால், வெகு சீக்கிரத்தில் நான் இன்னொரு தாய் வயிற்றில் வந்து பிறப்பேன். என்னிடம் இப்போது காணப்படும் குணங்களோ, திறமையோ அப்போதும் அபிவிருத்தி அடைந்து வெளிப்படும். இப்படி நான் சொல்வதைக் கேட்டு, நீங்கள் இன்னொரு கேள்வி கேட்பீர்கள். நீங்கள் வேறே எங்கேயோ போய்ப் பிறந்தால், அதனால் எங்களுக்கு என்ன லாபம், நாங்கள் உங்களை இழப்பது நிச்சயம் அல்லவா என்று நீங்கள் கேட்பீர்கள். இதற்கு மனிதனுடைய குறுகிய அறிவே உத்தரவாதியன்றி, கடவுள் உத்தரவாதியல்ல. உலகத்தில் காணப்படும் மனிதர் முதல் எறும்பு, பூச்சி, புழுக்கள், மரஞ்செடி கொடிகள் மண் கல் வரையில் உள்ள சகலமான வஸ்துக்களும் கடவுளுடைய பிரதிபிம்பமே அன்றி, ஒன்றுக் கொன்று சம்பந்தம் இல்லாத தனித்த வஸ்துக்கள் அல்ல. தண்ணீரையும், காற்றையும், மண்ணில் இருந்து உற்பத்தியாகும் தானியங்களையும் காய்கறிகளையும் நாம் உண்டு நம்முடைய உடம்பை வளர்க்கிறோம். அவைகள் இல்லாவிட்டால், நாம் இறந்து போய்விடுவோம். தண்ணிருக்கும், காற்றுக்கும் ஜீவாதாரமான சம்பந்தம் உண்டென்பது நிச்சயமாக விளங்குகிறது. நமக்கும் காற்றுக்கும், தண்ணீருக்கும் வித்தியாசமே இல்லை. எல்லாம் ஒன்றுக்கொன்று பாந்தவ்வியம் உடையது. மண் தானியமாகி மனிதனுடைய உடம்பாக மாறுகிறது. மனிதன் இறந்த பிறகு அது மடிந்து மறுபடி மண்ணோடு மண்ணாகி விடுகிறது. குயவன் எப்படி லாரமான மண்ணை எடுத்துப் பிசைந்து தண்ட சக்கரத்தில் வைத்துச் சுழற்றிச் சுழற்றி பலவிதமான பாண்டங்கள் செய்கிறானோ, அதுபோல பூமியின் ஸாரத்தைக் கடவுளாகிய குயவனுடைய ஆக்ஞாசக்கரம் அழகான புஷ்பங்களாகவும், செடி கொடிகளாகவும், காய்கறிகளாகவும் உற்பத்தி செய்து அவற்றின் ஸாரத்தில் இருந்து மனிதனைப் படைக்கிறது. ஆகவே மனிதன் இரண்டு தரம் வடிகட்டி எடுக்கப்பட்ட மண்ணே அன்றி வேறல்ல. இப்படிப்பட்ட உலகத்தில் உயிர் உள்ளதும் உயிர் இல்லாதது போலத் தோன்றுவதுமான எல்லா ஜெந்துக்களும் ஒன்றிலிருந்து ஒன்று உண்டாவது: ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையது. இந்த உண்மையைக் கடவுள் நிதரிசனமாகக் காட்டிக் கொண்டே இருக்கிறார். மனிதன் அதை உணராமல் தனக்கும் மற்ற ஜெந்துக்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்றும், தான் மற்றவைகளைவிட சிரேஷ்டமானவன் என்றும் நினைத்துக் கொண்டிருப்பதல்லாமல், இன்னம் குறுகிய நோக்கங்கொண்டு, தான் தன் பெண்ஜாதி பிள்ளைகள், தன் உறவினர் ஆகிய சிலரைத் தவிர மற்ற ஜனங்கள் எல்லோரும் தனக்குச் சம்பந்தமற்றவர்கள் என்று நினைத்து, தனக்கென்று பிரத்தியேகமாகப் பொருள் தேட முயற்சிப்பதோடு, தனது ஆசாபாசங்களையும் மேற்படி சொற்ப மனிதர் வரையில் குறுக்கிக் கொள்கிறான். இதனால் உலகத்தில் பலவகைப்பட்ட குரோதங்களும், பகைமையும், மோசங்களும், துஷ்டத்தனங்களும், துஷ்கிருத்தி யங்களும் நிறைந்து, இந்த பூலோகமே ஒரு நரகம்போலக் காணப்படுகிறது. இந்த உலக சிருஷ்டியே ஒரு பெருத்த குடும்பம் என்பதையும், அதில் உள்ள ஒவ்வொரு அணுவும் கடவுளுடைய அம்சம் வாய்ந்த சமமான வஸ்து என்பதையும், ஒர் அணுவுக்கும், மற்றொன்றுக்கும் யாதொரு பேதமும் இல்லை என்பதையும், ஒன்றுக்கொன்று விலக்க முடியாத சம்பந்தமுடையது என்பதையும், எதுவும் அழிகிறதில்லை என்பதையும், இறப்பதெல்லாம் மறுபடி பிறக்கிறது அல்லது பரமாத்மாவிடம் ஐக்கியப்பட்டுப் போகிறது என்பதையும் மனிதன் உணர்ந்து விடும் பட்சத்தில் இந்த உலகத்தில் துக்கம் என்பதே இருக்காது. ஒரு மனிதன் தன் குழந்தை இறந்து போவதைப் பற்றி அபாரமாக விசனப்படுகிறான். தன் பக்கத்து வீட்டுக்காரனுடைய குழந்தை இறந்து போனால், அவனுக்கு அவ்வளவு அதிகமாக விசனம் உண்டாவதில்லை. இரண்டொரு அனுதாப மொழிகளோடு அந்த விசனம் தீர்ந்து போகிறது. இன்னம், அடுத்த ஊரில் உள்ள மனிதர்களுடைய குழந்தைகள் இறந்து போனால், இந்த ஊரில் இருப்பவனுடைய மனசில் அது உறைக்கிறதே இல்லை. மனிதருக்கு மனிதர் அப்படி இருக்கிறது. இன்னும் மிருக பட்சிகளை எடுத்துக் கொண்டால், அவற்றைக் கொன்று அவற்றின் மாமிசத்தை உண்ணலாம் என்ற பெருத்த சந்தோஷத்தை மனிதன் கொள்ளுகிறான். இப்படித் தன்னுடையது பிறருடையது என்ற வேற்றுமை மனிதன் தன்னுடைய குறுகிய திருஷ்டியினாலும் சூனிய அறிவினாலும் உண்டாக்கிக் கொண்டு துன்பங்களையும் துயரங்களையும் சண்டை சச்சரவுகளையும் பெருக்கிக் கொண்டே போவதனால் தான் இது சகிக்க முடியாத துன்ப உலகமாகத் தோன்றுகிறது.
மா.வி.ப.I-20 நம்முடைய முன்னோர்கள் உலகம் அநித்தியம் என்றும், கடவுள் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமியாய் எங்கும் நிறைந்திருக்கிறார் என்றும், நான், நீ என்ற பேதமே இல்லை என்றும், மனிதர் மண்ணுலகப் பற்றையும் சிற்றின்பப் பாசத்தையும் கூடிய வரையில் குறைத்துக் கொண்டு தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்து, இறப்பு பிறப்பாகிய பெருங்கடலை நீக்கித் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சதாகாலமும் கடவுளைப் பஜித்து வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட உண்மையான கொள்கைகளை எல்லாம் நம்மவர்கள் அநுஷ்டானத்திற்குக் கொண்டு வந்து இன்ப துன்பங்களைக் குறைத்துக் கடவுளைத் தியானம் செய்வதையே பொழுது போக்காகவும் மறுமைக்கு ஆஸ்தியாகவும் மதித்து வந்திருக்கிறார்கள். அதற்கு இப்போது பெருத்த பல இடையூறுகள் வந்து சேர்ந்திருக்கின்றன. நம்முடைய தேசத்தில் ஒருவர்பின் ஒருவராக வந்து சேர்ந்திருக்கும் அன்னிய மதத்தினர் ஒவ்வொருவரும் தங்களுடைய கடவுள் வேறு மற்றவருடைய கடவுள் வேறு என்ற கொள்கையைப் பரப்பி விட்டனர். மனிதரில் நான் வேறு நீ வேறு என்ற கொள்கை உண்டாகி மனித சமூகத்தில் விளைத்திருக்கும் தீங்குகளுக்குப் போதாக்குறையாக மகம்மதியரைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுள் வேறு, வெள்ளைக்காரரைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுள் வேறு, இந்துக்களைப் படைத்துக் காத்து அழிக்கும் கடவுள் வேறு, இன்னும் இது போன்ற எண்ணிறந்த இதர மதஸ்தர்களைப் படைத்துக் காத்து அழிக்கும் தெய்வங்கள் வெவ்வேறு என்ற ஒரு நம்பிக்கையும், என் கடவுள்தான் உண்மையானவர், உன் கடவுள் பொய்யானவர் என்ற வாத தர்க்கங்களும், மதச் சண்டைகளும் ஏராளமாக மலிந்து போய் விட்டன. இத்தனை மதஸ்தர்களுடைய தனித்தனியான கடவுள்களுடைய ராஜ்யங்களும் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதுதான் தெரியவில்லை. இது போதாமல், வெள்ளைக் காரர்கள் உலகத்தில் ஏராளமாகப் பொருள் தேடி, பூமியில் மறைந்துள்ள சகலமான சக்திகளையும் ரகசியங்களையும் கண்டுபிடித்து மனிதன் அனுபவிக்கக் கூடிய சுகங்களையும் செளகரியங்களையும் அபாரமாக விருத்தி செய்து, ஒவ்வொரு மனிதனும், எவ்வளவு அதிகமாகப் பொருள் தேட முடியுமோ அவ்வளவையும் தேடி, அவன் எவ்வளவு அதிகமான சுகங்களை அனுபவிக்க முடியுமோ அவ்வளவையும் அனுபவிப்பதே முக்கியமான புருஷார்த்தம் என்ற கொள்கையை அனுபவத்தில் காட்டி வருவதால், நம்மவர்கள் மதிமயங்கி மறுமை என்று ஒன்று இருப்பதாகவே எண்ணாமலும், இம்மையின் அநித்தியத் தன்மையைக் கருதாமலும், மண் பெண் பொன்னாசைகளுக்கு அடிமை முறி எழுதிக் கொடுக்கத் தலைப்பட்டு விட்டார்கள். நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்துக் கையாடி வந்த தத்துவங்கள் எல்லாம் மறைந்து போய்விடுமோ என்று அஞ்சத் தகுந்த நிலைமை ஏற்பட்டுப் போயிருக்கிறது. உலகத்தில் துன்பங்களும் துயரங்களும் சண்டை சச்சரவுகளும் வரவரப் பெருகிக் கொண்டேதான் போகும் போலத் தோன்றுகிறது. என்னைப் போன்ற அற்பசக்தி வாய்ந்த மனிதர்கள் இருப்பதும் ஒன்றே இறப்பதும் ஒன்றே. கடவுளை நாம் சர்வ வல்லமை உள்ளவர் என்றும், எல்லாவற்றையும் அறிந்தவர் என்றும் நினைக்கிறோம். அவர் படைத்துள்ள சூரியன், சந்திரன், பூமி, நகூடித்திரங்கள், தண்ணீர், மனிதருடைய தேகம் முதலிய சகலமான ஜீவ ஜெந்துக்களையும் அண்டாண்ட பிரமாண்டங்களையும் நாம் கவனித்துப் பார்த்தால், இவை அனைத்தும் படைத்த கடவுள் நிகரற்ற சக்தியையும் அறிவையும் உடையவர் என்பது பிரத்தியகூஷமாகத் தெரிகிறது. ஆனால், அப்பேர்ப்பட்ட நிகரற்ற பரமாத்மாவின் சிருஷ்டியிலும் குற்றமும் குறைகளும் இருக்கின்றனவே என்பதுதான் ஆச்சரியத்திலும் பெருத்த ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாவற்றையும் படைத்துக் காத்து அழிக்கிறவர் கடவுள் என்ற விஷயம் மிருக பட்சி விருகூடிங்களுக்கு எல்லாம் தெரியுமோ தெரியாதோ அதை நாம் நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால் மனிதரில் பெரும் பாலாருக்கு அந்த உண்மை தெரிந்திருக்கிறது. சிலருக்கு அதுகூட அவ்வளவு நன்றாகத் தெரியாமல் இருக்கிறது. நம்மை எல்லாம் படைத்த கடவுள், சிருஷ்டியின் உண்மை இப்படிப்பட்டது என்பதையும், எல்லோரையும் படைப்பது யார் என்பதையும், கடவுளுக்கும் மற்றவருக்கும் உள்ள சம்பந்தமும் இன்னது என்பதையும், மனிதர் முதலிய சகலமான ஜெத்துக்களும் எதற்காகப் பிறந்து பிறந்து இறக்கின்றனர் என்பதையும், ஒரு தரம் பிறந்து இறப்பவனுடைய உயிர் எங்கே போகிறது என்பதையும், அதன் முடிவென்ன என்பதையும், மனிதனிடத்தில் கடவுள் எவ்விதமான குணத்தையும் நடத்தையையும் எதிர்பார்க்கிறார் என்பதையும் எல்லா மனிதரும் சுலபத்தில் தெரிந்து கொள்ளும்படியாக அவர் ஏன் செய்திருக்கக்கூடாது? மனிதன் தன்னுடைய பாவச் செய்கைகளுக்குத் தகுந்தபடி புதிய ஜென்மங்களை எடுத்துத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டே போகிறான் என்று நாம் நினைக்கிறோம். மற்ற மதத்தினர் வெவ்வேறு விதமாக நினைக்கின்றனர். எப்படி இருந்தாலும், கடவுள் மனிதனை முதன் முதலாகப் படைக்கும் போதே, அவன் சகலமான நற்குணங்களும் பொருந்தி ஒழுங்கான வழியில் நடக்க வேண்டும் என்ற சங்கற்பத்தை உண்டாக்கி அவனைப் படைத்திருந்தால், அவன் ஏன் துன்மார்க்கங்களில் சென்று பாவக் கிருத்தியங்களைச் செய்கிறான்? எல்லாவற்றையும் அறிந்த கடவுள், மனிதன் காலக்ரமத்தில் இப்படிக் கெட்டுப் போவான் என்பதை நினைக்கமலா மனிதருக்கு ஆரம்பத்தில் சுயேச்சாதிகாரத்தைக் கொடுத்துப் படைத்தார்? இதற்கு ஜனங்கள் திருப்திகரமான சமாதானம் சொல்ல மாட்டாமல், இதைக் கடவுளின் லீலா விநோதம் என்ற அழகான சொல்லால் சுலபமாக மறுமொழி சொல்லிவிடுகிறார்கள். அண்ட பகிரண்டங்களை எல்லாம் இச்சாமாத்திரத்தில் படைத்துக் காத்து அழிக்க வல்ல அபாரசக்தி வாய்ந்த கடவுள், மனிதன் பேராசை, பொறாமை, கோபம், பகைமை, அகங்காரம் முதலிய துர்க்குணங்களைப் பெருக்கி, உலகத்தில் அக்கிரமங்கள் செய்வதையும், அதற்காக மறு ஜென்மங்களில் துன்பப்படுவதையும் பார்த்து சந்தோஷப்படுவதை லீலா விநோதமாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால், அப்படிப்பட்ட கடவுளின் மனப்போக்கையும், பெருந்தன்மையையும் என்ன்வென்று சொல்லுகிறது. ஆகவே, கடவுளின் சிருஷ்டி அரை குறையான தாகவும், குற்றங்குறைபாடுகளுக்கு இலக்கானதாகவும் தோன்றுகிறது. இந்தக் குறையை நிவர்த்திக்கக் கூடிய அவதார புருஷன் ஒருவன் தோன்றும்படி கடவுள் செய்ய வேண்டும். அப்பேர்ப்பட்ட அவதாரப் புருஷன் எந்தக் காலத்தில் தோன்றுகிறானோ அப்போது தான் இந்த உலகம் க்ஷேமப்படும். அவன் உண்மையிலேயே கடவுளின் பிரதிநிதி என்பது சகலமான மதஸ்தருக்கும், பலவகைப்பட்ட கொள்கையை உடையவருக்கும் இயற்கையிலேயே தெரிய வேண்டும். எல்லோரையும் படைக்கும் கடவுள் எங்கே இருக்கிறார் என்பதையும், மனிதருக்கு மனிதர் என்ன சம்பந்தம் என்பதையும், கடவுளுக்கும் மனிதருக்கும் மற்ற சிருஷ்டிப் பொருள்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும், மனிதர் சாசுவதமாக எதை நாட வேண்டும் என்பதையும், இம்மையில் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அந்தப் பிரதிநிதி எல்லோரது மனசும் திருப்தி அடைந்து நம்பும்படி நிரூபிக்க வேண்டும். அப்போது தான் மனிதர் எல்லோரும் திருந்தி நல்வழிப்பட்டு வேற்றுமையை விட்டு ஒற்றுமையைக் கடைப்பிடித்து உண்மையான வழியைப்பற்றி நடப்பார்கள். உலகில் சாசுவதமான கூேடிமமும் அமைதியும் நிலைபெற்று நிற்கும். அதை விட்டு என்னைப் போன்ற அற்ப சக்தியுள்ள மனிதன் இவ்வளவு பெரிய உலகில் துஷ்டநிக்கிரகம் சிஷ்டபரிபாலனம் செய்வ தென்றால் அது சாத்தியமாகுமா? காமம் குரோதம் முதலிய மும்மலங்களும் மனிதனிடம் வேரூன்றி இருக்கையில் எத்தனையோ சட்டைநாத பிள்ளைகளும், சர்வோத்தம சர்மாக்களும் தோன்றிக் கொண்டே தான் இருப்பார்கள். ஒவ்வொருவரையும் வெல்வதற்கு ஒவ்வொரு திகம்பரசாமியார் தோன்றிக் கொண்டே இருக்க, வேண்டும் என்றால், அதற்கு எல்லையே இராது. இது வெள்ளைக்காரருடைய வைத்தியத்தைப் போல இருக்கிறதே அன்றி வேறல்ல. மனிதனுடைய இரத்தம் கெட்டுப் போய் உடம்பில் கட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாய்ப் பல இடங்களில் தோன்றிக் கொண்டே இருந்தால், அவர்கள் ஒவ்வொன்றையும் கத்தியால் அறுத்து சத்திரம் வைத்துக் கொண்டே போவார்களன்றி, மூலகாரணமாகிய அதன் இரத்தத்தைச் சுத்தி செய்ய மருந்து கொடுத்தால், எந்த இடத்திலும் கட்டியே உண்டாகாது என்று அவர்கள் எண்ணுவதில்லை. சென்ற மாசம் ஒன்றரை வயசுக் குழந்தை ஒன்றுக்கு அப்படித்தான் சூட்டினால் கட்டிகள் வந்து கொண்டிருந்தன. அந்தக் குழந்தையின் உடம்பில் அந்த இங்கிலிஷ் வைத்தியர் 27-இடங்களில் சத்திரம் வைத்ததாகக் கேள்வியுற்றேன். இந்த வைத்தியத்தைப் போலத்தான் இருக்கிறது என்னைப் போன்றவர்கள் துஷ்ட நிக்கிரகம் செய்ய எண்ணுவது. ஆகவே, நான் இறக்கப் போவதைக் குறித்து நீங்கள் விசனித்து வருந்துவதை விட்டு, கடவுளைத் தியானித்து, இந்த உலக சிருஷ்டியின் உண்மையை ஜனங்களுக்குத் தெரிவித்து எல்லோரையும் சன்மார்க்கத்தில் திருப்பக்கூடிய ஒரு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்” என்றார்.
அவரது சொற்களைக் கேட்ட கண்ணப்பாவும் அவனது மனைவியும் மிகுந்த குழ்ப்பமும் கலக்கமும் அடைந்து இரண்டொரு நிமிஷ நேரம் மெளனமாக இருந்தனர். பிறகு கண்ணப்பா நயமாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கி, “சுவாமிகளே! இந்த உலகத்தில் நிறைந்துள்ள அக்ஞானம், காமம், குரோதம், மதம், மாற்சரியம், துக்கம் முதலிய சகலவிதமான துன்பங்களையும் போக்கி, இதை சன்மார்க்கமே நிறைந்த உலகமாக்குவதற்குத் தாங்கள் சொல்லுவது நல்ல சிறந்த யுக்தி தான். இந்த யுக்தி நமக்கே தெரியும் போது, நம்மைப் படைத்த கடவுளுக்குத் தெரியாமலா போய்விடும். அப்படி இருந்தும் கடவுள் அம்மாதிரியான உபாயத்தைத் தேடாமல் இந்த உலகம் இதே நிலையில் இருந்து வரும்படி விட்டிருக்கிறார் ஆகையால், ஏற்கெனவே இருக்கும் நிலைமைக்குத் தகுந்தபடி தான் நாம் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இந்த உலகத்தை அடியோடு சன்மார்க்கத்தில் திருப்பும் சக்தி தங்களிடத்தில் இல்லை என்று நினைத்து, அதற்காகத் தாங்கள் தங்களுடைய உயிரை விட்டுவிட நினைப்பதால், எங்களைப் போன்றவருக்கு உள்ளதும் போய்விடும் அல்லவா. அக்கிரமங்களும், துன்பங்களும், துயரங்களும், நிறைந்த இந்த உலகத்தில் தங்களைப் போன்ற மகான்கள் அப்போதைக்கப்போது தோன்றி, நல்வழி காட்டிப் போகாவிட்டால், இது அடியோடு கெட்டு நாசமடைந்து விடும் அல்லவா. ஆதிகாலந்தொட்டே உலகத்தில் இப்படித்தான் பெரியவர்கள் தோன்றி ஒவ்வொரு வகையில் அரிய செய்கை களை முடித்து உலகத்திற்கு உபகாரம் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அதற்கினங்கவே தாங்களும் உதித்திருக்கிறீர்கள். தங்களுடைய பெருமையும், அருமையும், மதிப்பும் தங்களுக்கு உள்ளபடி தோன்றாமல் அற்பமாகத் தோன்றினாலும் எங்களுக்கெல்லாம் அவை விலை மதிப்பற்றவையாகவே தோன்றுகின்றன. கிடைக்கக்கூடாத ஏதோ ஒர் அபாரமான விஷயத்தை எதிர்பார்த்து, ஏற்கெனவே உள்ள அரிய பொருளை இழந்துவிட எங்களுடைய மனம் இடம் தரவில்லை. அதுவுமன்றி, பாம்பு கடியானது தாங்கள் நினைப்பது போல மனிதரால் தடுக்கமுடியாத சம்பவமல்ல. தாங்கள் உத்தரவு கொடுங்கள். உடனே நான் இதற்குத் தக்க மனிதரை அழைத்து வைத்தியம் செய்யச் சொல்லுகிறேன். தெய்வத்தின் திருவருளை முன்னிட்டு நாம் நம்மால் ஆன முயற்சிகளை எல்லாம் செய்து பார்த்து விடுவோம். இதுவரையில் தாங்கள் இந்த உலக விஷயங்களில் ஈடுபட்டு துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனஞ் செய்து வந்து, இந்த அபாயகரமான வேளையில் தங்களுடைய கொள்கையை மாற்றி இப்படிப்பட்ட பெருத்த விரக்தியை உண்டாக்கிக் கொண்டு, பாம்பின் விஷம் தங்களுடைய உடம்பில் பரவும்படி விட்டிருப்பதைக் காண, எங்களால் கொஞ்சமும் சகிக்க முடியவில்லை. தங்களுடைய பிராணனுக்கு அபாயம் நேரும் பட்சத்தில், வயசான என் தகப்பனார் அதைத் தாங்கமாட்டாமல் இறந்து போய்விடுவார் என்பது நிச்சயம். அதன் பிறகு என் தாயார் பிழைத்திருப்பது சந்தேகம். இத்தனை பேரையும் இழந்த பிறகு நாங்களும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்ள வழி தேட வேண்டுமே அன்றி, எங்களால் இப்படிப்பட்ட பெருத்த விசனத்தைத் தாங்கவே முடியாது. தன் சொந்தத் தகப்பனாரைவிட தங்களை ஆயிரம் மடங்கு விசேஷமாக மதித்து உயிருக்குயிராக எண்ணியிருக்கும் நம்முடைய வடிவாம்பாள் தங்களுடைய உயிருக்கு ஏதாவது அபாயம் நேர்ந்து விடும் பட்சத்தில், அதன் பிறகு தண்ணீர்கூட அருந்தாமல் அதே விசனத்தில் கிடந்து தன் உடம்பைச் சித்திரவதை செய்து தன்னை வெகு சீக்கிரத்தில் கொன்று கொள்வாள். எங்களை எல்லாம் தவிர, இன்னும் தங்களுடைய சம்சாரம் இருக்கிறார்கள். அவர்கள் முன் தடவை தங்களை விட்டுப் பிரிந்து பட்டயாடுகள் எல்லாம் தங்களுக்குத் தெரியாதவை அல்ல. மறுபடி தங்களை இழக்க நேருமானால், அவர்களும் உயிர் வாழமாட்டார்கள் என்பது நிச்சயம். தங்களுடைய உயிரைத் தாங்கள் காலத்துக்கு முன் மாய்த்துக் கொள்ளும் பாவத்தோடு, இத்தனை பேரையும் கொன்ற பழியும் தங்களைத்தான் வந்து சுற்றும். ஏதடா இவன் நம்மிடம் இவ்வளவு தூரம் துணிந்து பேசுகிறானே என்று தாங்கள் நினைப்பீர்கள். தாங்கள் என்மேல் எவ்வளவுதான் கோபித்துக் கொண்டாலும் பாதகமில்லை. இந்த அபாயகரமான சந்தர்ப்பத்தில் நான் உண்மையை எடுத்துச் சொல்லாமல் இருக்க முடியவில்லை” என்று மிகவும் இளக்கமாகவும் நடுக்கத்தோடும் கூறினான். அவனது சொற்களைக் கேட்ட திகம்பரசாமியாரது முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. அவர் மெதுவாக எழுந்து பக்கத்தில் கிடந்த திண்டின்மேல் சாய்ந்து கொண்டவராய், “தம்பி என் பொருட்டு நீங்கள் எல்லோரும் இறந்து விடுவீர்கள் என்று நீங்கள் சொல்வதில் இருந்து நீங்கள் எல்லோரும் என்மேல் வைத்திருக்கும் வாஞ்சையும் மதிப்பும் எவ்வளவு என்பது நன்றாகத் தெரிகிறது. நீங்கள் எல்லோரும் என்னை உங்களுடைய உயிரைவிட சிரேஷ்டமாக எண்ணுகிறீர்கள் என்பதும் தெரிகிறது. இப்படிப்பட்ட அரிய நண்பர்களின் அன்பு ததும்பிய சொற்களைக் கேட்கும்போதே எனக்கு நூறு யானையின் பலம் உண்டாகி விட்டது போல நான் உணருகிறேன். பாம்பு விஷத்துக்கு மருந்து போட்டதைவிட அதிகமான குணம் ஏற்கனவேயே உண்டாகி விட்டது. இது வரையில் எழுந்து உட்கார முடியாமல் மயங்கிப் படுத்திருந்த என்னை உங்களுடைய அனுதாபச் சொற்கள் எழுப்பி உட்கார வைத்து விட்டன. இனி எனக்கு மருந்தே தேவையில்லை. நான் முடிவில் பிழைத்துக் கொள்வேன் என்பது நிச்சயமானாலும், நான் கொஞ்ச காலம் இறந்துபோய், அதன் சுகம் எப்படி இருக்கிற தென்று பார்க்கத் தீர்மானித்திருக்கிறேன்” என்றார்.
அவர் கூறிய சொற்களைக் கேட்ட மற்ற இருவரும் மிகுந்த குழப்பமும் திகைப்பும் அடைந்தனர். படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்ததைக் காண, அவர்கள் இருவரது மனதிலும் அவர் பிழைத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையும் சந்தோஷமும் உண்டாயின. ஆனாலும், அவர் கூறிய வார்த்தைகளின் கருத்து நன்றாகத் தெளிவுபடவில்லை. ஆகவே கண்ணப்பா மறுபடி பேசத்தொடங்கி, “சுவாமிகளே! தங்களுடைய கருத்து அவ்வளவு நன்றாக விளங்கவில்லை. தாங்கள் கொஞ்ச காலத்துக்கு இறந்திருப்பதாவது, அதன் பிறகு பிழைக்கிறதாவது, நாங்கள் சொன்ன அனுதாப மொழி தங்களுடைய விஷத்தை நிவர்த்திப்ப தாவது; எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை. தயைசெய்து தங்களுடைய கருத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்” என்றான்.
சாமியார், “என் கருத்தை நான் விளக்குவது இருக்கட்டும். ஊரில் உள்ள ஜனங்கள் என்னைப் பாம்புகள் கடித்த வரலாற்றை எப்படிச் சொல்லிக் கொள்ளுகிறார்கள்? இந்தச் செய்தியை உங்களிடம் யார் தெரிவித்தார்கள்? உங்கள் இரண்டு பேருடைய தாய் தகப்பன்மார்களும் இப்போது எங்கே இருக்கிறார்கள்? இதை எல்லாம் முதலில் சொல்லுங்கள்” என்றார்.
கண்ணப்பா, “ஜனங்களுக்கு அதிகமான விவரம் எதுவும் தெரியாது. என் தகப்பனாரும் தாயாரும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு பட்டணத்தில் நடக்கப் போகும் நிச்சயதார்த்தத்திற்கு சிலரை அழைத்துவிட்டு வருவதற்காக பூவனுாருக்குப் போனார்கள். நாங்கள் இப்போது புறப்பட்டு இங்கே வந்த வரையில் அவர்கள் திரும்பிவரவில்லை. நானும் வடிவாம்பாளும் மேன்மாடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஏதோ அலுவலாக வீட்டு வாசலுக்குப் போன வேலைக்காரி உடனே உள்ளே ஒடி வந்து தங்களை நாலைந்து பாம்புகள் கடித்து விட்டன என்றும், தாங்கள் பிரக்ஞையற்று மயங்கி விழுந்து கிடப்பதாகவும் ஜனங்கள் சொல்லிக்கொண்டு தாறுமாறாகத் தங்களுடைய ஜாகையை நோக்கி ஓடுகிறார்கள் என்று சொன்னாள். அதைக் கேட்ட உடனே எங்களுக்கு நம்பிக்கை உண்டாகவில்லை ஆனாலும், அத்தனை ஜனங்களும் சொல்லிக் கொண்டு போவதைப் பொய் என்று நினைக்கவும் மனம் இடங் கொடுக்கவில்லை. ஆகையால் உடனே புறப்பட்டு நானும் இவளும் நேராக வந்து சேர்ந்தோம். பங்களாவின் வாசலில் ஆயிரக்கணக்கில் ஜனங்களும் போலீசாரும் திரளாக இருக்கிறார்கள். எல்லோரும் தங்களைப்பற்றி நிரம்பவும் கவலையும் விசனமும் கொண்டு துடிதுடித்து நிற்கிறார்கள். அவர்கள் நிற்பதைக் கண்டு அவர்கள் சொன்னதைக் கேட்க, பாம்புகடித்ததென்பது நிஜமான செய்தி என்று ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு உள்ளே வந்தோம். இந்த அறைக்கு வெளியில் உட்கார்ந்திருக்கும் தங்களுடைய வேலைக்காரியும் அதை உறுதிப்படுத்தினாள். இதைத் தவிர உண்மையான விவரம் எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. வடிவாம்பாளின் தாய் தகப்பன்மார்கள் அநேகமாய் அவர்களுடைய பங்களாவில்தான் இருப்பார்கள். நாங்கள் புறப்பட்டு வந்த அவசரத்தில், அவர்களுக்குச் செய்தி சொல்லி அனுப்பமாட்டாமல் வந்து விட்டோம். வேறே யாரிடத்திலாவது சங்கதியைத் தெரிந்து கொண்டு அவர்களும் அநேகமாய் வெகு சீக்கிரம் இங்கே வந்து சேருவார்கள் என்று நினைக்கிறேன். இந்த பங்களாவில் அதிக அடைசலே இல்லையே! பாம்பு எங்கிருந்து கடித்தது? ஒரே காலத்தில் நாலைந்து பாம்புகள் கடிக்கும்படியான நிலைமை எப்படி ஏற்பட்டது? அப்படிக் கடித்திருக்கையில், தாங்கள் மருந்தே சாப்பிடவில்லை என்கிறீர்களே! விஷகடியினால் ஏற்படும் மயக்கம் எப்படி விலகியது? இந்த விவரங்களை எல்லாம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. தயை செய்து சொல்ல வேண்டும். இந்த அறையின் தாழ்ப்பாளைத் திறந்துவிட்ட தங்கள் மனைவியார் எங்களோடு பேசாமல் எங்கேயோ போய் விட்டார்கள். அதன் காரணமும் இன்னதென விளங்கவில்லை. தயை கூர்ந்து எல்லாவற்றையும் சொல்ல வேண்டுகிறேன்” என்றான். சாமியார் சந்தோஷமாகப் புன்னகை செய்து நாற்புறங்களிலும் தமது பார்வையைச் செலுத்தி நிரம்பவும் தணிவான குரலில் பேசத் தொடங்கி, “தம்பி பயப்பட வேண்டாம்; என்னைப் பாம்புகள் கடிக்கவில்லை. ஓர் எண்ணத்தை மனசில் வைத்துக் கொண்டு நான் இப்படிப்பட்ட விபரீதச் செய்தி ஊரில் பரவும்படி செய்திருக்கிறேன். உண்மையிலேயே நாலைந்து நாகப் பாம்புகள் கூடி ஒரு மனிதனைக் கடிக்குமானால், அவனுடைய பிராணன் அதே நிமிஷத்தில் போய்விடாதா? மருந்தாவது மந்திரமாவது! அதெல்லாம் நாகப் பாம்பின் விஷத்துக்கு முன் நிற்குமா என்ன? வரியன் முதலிய மற்ற பாம்புகளின் விஷமானால், மருந்து முதலிய சிகிச்சைகளைக் கொண்டு நிவர்த்திக்கலாம்” என்றார். அவர் கூறியதைக் கேட்டவுடன் கண்ணப்பா, வடிவாம்பாள் ஆகிய இருவரது மனதையும் அபாரமாக அழுத்தி வதைத்துக் கொண்டிருந்த பெருத்த ஆவலும், கவலையும், துயரமும், சஞ்சலமும் ஒரு நொடியில் விலகின. அவர்களது மனம் சந்தோஷப் பெருக்கினால் பூரித்துப் பொங்கியது. முகம் மலர்ந்து இனிமையாக மாறியது. உடனே வடிவாம்பாள் அளவற்ற மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கி, “சுவாமி எங்களுக்கெல்லாம் இப்போது தான் உயிர் வந்தது. இந்தச் சங்கதியை நாம் நம்முடைய மனிதர்களுக்கு எல்லாம் ரகசியமாக உடனே சொல்லி அனுப்புவது நல்லதென்று நினைக்கிறேன். இந்த அரை நாழிகை சாவகாசத்திற்குள் எங்களுடைய மனம் பட்டபாடு அந்தக் கடவுளுக்குத் தான் தெரியும். அதுபோலவே, அவர்களும் விசனமும் கவலையும் கொண்டு பதறிப்போய் இங்கே ஒடி வருவார்கள் ஆகையால் நம்முடைய மனிதர்களுக்கு உடனே ஓர் ஆளை அனுப்பலாம்” என்றாள்.
சாமியார், “உஸ், ஒங்கிப் பேசாதே! ஒருவேளை யாராவது கதவிற்கு வெளியில் வந்திருந்து நாம் பேசுவதைக் கேட்டாலும் கேட்பார்கள். நான் உங்களிடம் வெளியிட்ட ரகசியம் வேறே எவருக்கும் தெரியக்கூடாது. உங்கள் இருவருடைய தாய் தகப்பனார்களுக்கு நாமே ரகசியத்தில் இதைத் தெரிவிக்க வேண்டும். ஆளிடம் இதைச் சொல்லி அனுப்பினால் அவன் ஒரு வேளை இதை வேறே யாரிடமாவது சொல்லி விடுவான். அதில் இருந்து விஷயம் நெடுகப் பரவிவிடும். நீங்கள் இந்தச் செய்தியைக் கேட்டு உண்மை என்று நம்பி எப்படி இங்கே ஓடி வந்தீர்களோ, அது போலவே, உங்கள் தாய் தகப்பன்மார்களும் தவித்துக் கொண்டு ஓடி வரவேண்டும். அப்போதுதான் ஜனங்கள் எல்லோருக்கும் இது உண்மை போல இருக்கும். நம்மவர்கள் உள்ளே வந்தவுடன் நாமே நேரில் சங்கதியைச் சொல்லிக் கொள்ளலாம். இந்தக் கதவுக்கு வெளியில் இருந்து உங்களுக்குத் தகவல் தெரிவித்த வேலைக்காரிக்குக்கூட உண்மை தெரியாது. என் சம்சாரம் ஒருத்திக்கும், உங்களுக்கும்தான் தெரியும். நீங்கள் எல்லோரும் கொஞ்ச காலத்திற்கு மிகவும் எச்சரிப்பாக நடந்து கொள்ள வேண்டும். ஜாக்கிரதை" என்றார்.
கண்ணப்பா:- சரி. தங்களுடைய பிரியப்படியே எல்லா விஷயமும் நடக்கட்டும். நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் விரும்புகிறீர்களோ, அது போலவே நாங்கள் நடந்து கொள்ளத் தடையில்லை. முக்கியமாக பாம்புகளின் விஷயம் முற்றிலும் பொய்யானது போதுமானது.
சாமியார்:- பாம்புகளின் விஷயம் முற்றிலும் பொய்யல்ல. அவைகள் என்னைக் கடித்தது என்ற விஷயம் மாத்திரம் பொய். மற்றபடி நான் இன்றைய தினம் தப்பிப் பிழைத்தது மாத்திரம் புனர்ஜென்மந்தான்.
கண்ணப்பா:- (திடுக்கிட்டு) ஆ! அப்படியா உண்மையில் தங்களை இன்று பாம்பு கடிக்க இருந்ததா?
சாமியார்:- பாம்பு என்று ஒருமையாக ஏன் சொல்லுகிறீர்கள்? பாம்புகள் என்று சொல்லுங்கள். . கண்ணப்பா:- (முன்னிலும் அதிக வியப்பும் ஆவலும் அடைந்து) இந்த பங்களாவில் தப்பித்தவறி பாம்பு வந்தால் ஒரு பாம்பு தான் வரும். பல பாம்புகள் ஒன்றாக எப்படி வரும்? பாம்புப் புற்றை ஒருவேளை யாராவது வெட்டினார்களா? அங்கே தாங்கள் போனிகளா?
சாமியார்:- நன்றாக இருக்கிறது. யாராவது போய்ப் பாம்புப் புற்றை வெட்டுவார்களா? அப்படியே தெரியாமல் யாராவது வெட்டினாலும், அங்கே நான் ஏன் போகப் போகிறேன்? அதெல்லாம் இல்லை. நீங்களே இன்னம் நன்றாக யோசித்துப் பாருங்கள். நாலைந்து பாம்புகள் எப்படி ஒன்றாகச் சேர்ந்து வந்திருக்கும் என்று யோசனை செய்யுங்கள்.
கண்ணப்பா:- (சிறிது நேரம் யோசனை செய்து) ஒரு வேளை யாராவது பாம்பாட்டி நாலைந்து பாம்புகளை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்க வந்தானா? அவனிடம் இருந்த பாம்புகள் எல்லாம் ஒரு வேளை தப்பி ஓடிவந்து தங்கள் மேல் விழுந்திருக்குமோ?
சாமியார்:- (சிரித்துக் கொண்டு) அதெல்லாம் இல்லை. பாம்பாட்டி பாம்புகளின் விஷப்பல்லை அறுத்து அந்த இடத்தை நெருப்பால் தீய்த்த பிறகு தானே அதை எடுத்துக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு ஆட்டுகிறான். அவைகள் கடித்தாலும் விஷமில்லை. அதைப்பற்றி நான் பயப்படக் கூடியவன் அல்லவே.
கண்ணப்பா:- (முற்றிலும் குழப்பமும் பிரமிப்பும் அடைந்து) அதுவுமில்லை என்றால், பிறகு வேறு எந்தவிதமாகத்தான் தங்களுக்கு இந்த அபாயம் நேர்ந்தது? தாங்களே சொல்லி விடுங்கள். எனக்கு வேறே எதுவும் தோன்றவில்லை.
சாமியார்:- நம்முடைய விரோதிகள் நம்மேல் பாணந்தொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அன்றைய தினம் சட்டைநாத பிள்ளை சிறைச்சாலையில் இருந்து தப்பி வந்துவிட்டதாக, நான் உங்களிடம் சொன்ன காலத்தில், நாம் எல்லோரும் இனி நிரம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொன்னேன் அல்லவா. நான் எதிர்பார்த்தபடிதான் அவர்கள் செய்ய ஆரம்பித்து, முதல் பாணத்தை என்மேல் தொடுத்திருக்கிறார்கள். நல்ல வேளையாக தெய்வந்தான் என்னைக் காப்பாற்றியது. இல்லாவிட்டால் இந்நேரம் நான் மாண்டு போயிருப்பேன். இப்போது நான் தப்பிப் பிழைத்ததைப் பற்றிக்கூட நான் அவ்வளவாக சந்தோஷப்படவில்லை. என் விஷயத்தில் சும்மா இருக்கமாட்டார்கள். உங்களுக்கெல்லாம் கெடுதல் செய்ய நினைத்து ஏதாவது உபாயம் தேடி இருப்பார்கள். நீங்கள் எல்லோரும் அதில் இருந்து தப்பி கூேழ்மமாய் இருக்க வேண்டுமே என்ற கவலையே இப்போது என் மனசை அடியோடு கவர்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் எல்லோரும் கொஞ்ச காலம் எங்கேயாவது மறைவாக இருந்து, அவர்களுடைய சதியாலோசனையில் அகப்படாமல் தப்பித்துக் கொள்வதே உசிதமான காரியம் என்று நினைக்கிறேன்.
கண்ணப்பா:- (திடுக்கிட்டு ஆ என்ன ஆச்சரியம்! நம்முடைய எதிரிகள் பாம்புகளைப் பிடித்துத் தங்களுடைய பங்களாவில் கொண்டுவந்து விட்டார்களா? அப்படியும் செய்வதுண்டோ?
சாமியார்:- அப்படிச் செய்திருந்தால், பாதகமில்லையே! அவர்கள் நிரம்பவும் தந்திரமாகக் காரியங்களைச் செய்திருக்கிறார்கள். இன்று காலையில் நான் வழக்கப்படி ஸ்நானம் செய்து பூஜை முதலிய நித்திய கர்மாநுஷ்டானங்களை முடித்துவிட்டு இன்றைய தினம் காலையில் வந்த தபால்களை எல்லாம் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் வெளியில் இருந்த ஒரு ஜெவான் உள்ளே வந்து தஞ்சை போலீஸ் சூப்பரின்டெண் டெண்டு கும்பகோணத்தில் இருந்து ஓர் ஹெட்கான்ஸ்டேபில் வசம் கொடுத்தனுப்பி இருப்பதாக ஒரு கடிதத்தையும், ஒரு சிறிய பார்சலையும் கொடுத்தான். அந்தக் கடிதம் கெட்டியான ஒர் உறைக்குள் போடப்பட்டிருந்தது. அந்த உறை நன்றாக ஒட்டப் பட்டிருந்ததன்றி, அது போலீஸ் சூபரின்டெண்டெண்டின் கச்சேரியில் உபயோகிக்கப்படும் உறையாகவே இருந்தது. அதோடு வந்த பெட்டி நல்ல கெட்டியான காகிதத்தால் சுற்றப்பட்டு உயர்ந்த டொயின் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. அதன் மேல் அரக்கு முத்திரை காணப்பட்டது. அந்த அரக்கு முத்திரையின் மேல் இருந்த எழுத்துகள் நன்றாகத் தெரியவில்லை. அவைகளைப் பார்த்தவுடன், கும்பகோணத்தில் இருந்து வந்த ஹெட்கான்ஸ்டேபிலை நேரில் பார்த்து அவனிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அவனை உள்ளே அழைத்து வரும்படி என்னுடைய ஜெவானை அனுப்பினேன். அவன் வெளியில் போய்ப் பார்த்தால் கும்பகோணத்திலிருந்து வந்தவன் காணப்படவில்லை. அவன் போய்விட்டதாக என் ஜெவான் வந்து செய்தி சொன்னான். அதைக் கேட்க, என் மனசில் ஏதோ ஒருவித சந்தேகம் தோன்றத் தொடங்கியது. சூபரின்டெண் டென்டின் இடத்திலிருந்து வந்த மனிதன் நான் என்ன சொல்லுகிறேன் என்பதைக் கேட்டுக் கொண்டே போவான். அல்லது, தான் போவதாகவாவது செய்தி சொல்லி அனுப்பிவிட்டுப் போவான். அப்படிச் சொல்லாமல், அந்த மனிதன் போனதிலிருந்து என் மனசில் ஏதோ சந்தேகம் தோன்றிக் கொண்டே இருந்தது. உடனே நான் என் ஜெவானை வெளியில் அனுப்பிவிட்டு, சூப்பரின்டெண்டெண்டின் கடிதத்தை எடுத்துப் படித்தேன். அவர் கும்பகோணத்தில் முகாம் செய்திருப்பதாகவும், அவ்விடத்தில் சட்டைநாத பிள்ளையின் சில உடைகளும், அவற்றிலிருந்த கடிதங்களும், மற்றும் பல சாமான்களும் அகப்பட்டதாகவும், அவைகளை அந்தப் பெட்டிக்குள் வைத்து அனுப்பி இருப்பதாகவும், அவைகளை ஆராய்ச்சி செய்து, சட்டைநாத பிள்ளை ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தைக் கண்டு பிடிக்கும் விஷயத்தில் யோசனை சொல்ல வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் எழுதி இருந்தார். அதுவுமன்றி, இது நிரம்பவும் ரகசியமான விஷயம் ஆகையால் பெட்டிக்குள் இருக்கும் சாமான்களை மற்றவருக்குக் காட்டாமல் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அதில் எழுதப்பட்டிருந்தது. போலீஸ் இலாகாவில் எல்லாவற்றையும் பரம ரகசியமாக வைத்துக் கொள்ளுகிறது வழக்கம்; அதுவுமன்றி, நானே எல்லா விஷயங்களிலும் அதிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுகிறவன் என்று சூப்பரின்டெண்டெண்டு பல தடவைகளில் என்னிடம் நேரில் சொல்லி இருக்கிறதன்றி, அவர் அதற்குமுன் எந்த விஷயத்திலும் எனக்கு ஜாக்கிரதை சொல்லியதே இல்லை. ஆகவே, அவர் இந்த மாதிரி எழுதியதும் எனக்குப் புதுமையாக இருந்தது.
கண்ணப்பா:- ஆகா! தங்களுடைய புத்தி விசேஷத்தை என்னவென்று சொல்லுகிறது! நாங்களாக இருந்தால், முன்பின் யோசியாமல் அவசரப்பட்டு அந்தப் பெட்டியை உடனே திறந்து பார்த்திருப்போம். தாங்கள் அற்ப விஷயங்களைக் கொண்டு சந்தேகப்பட்டு பெட்டிக்குள் ஏதோ கெடுதல் இருப்பதாக உடனே தீர்மானித்துக் கொண்டீர்கள்! இப்படிப்பட்ட மகா கூர்மையான தீர்க்க தரிசனம் தங்களிடம் இருப்பதனால்தான் தங்களுக்கு இவ்வளவு அபாரமான கீர்த்தியும் பெயரும் உண்டாகி இருக்கின்றன.
சாமியார்- நான் இப்போது சொன்ன அற்ப விஷயங்களைக் கொண்டே நான் பெட்டிக்குள் ஏதோ கெடுதல் இருப்பதாக சந்தேகப்படவில்லை. தஞ்சை போலீஸ் சூபரின்டெண்டெண்டு இந்த ஜில்லா முழுதும் சுற்றுப் பிரயாணம் போய் வெளியூர்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களைத் தணிக்கை பார்க்க வேண்டியது அவருடைய உத்தியோகக் கடமை. அடுத்த வாரத்தில் அவர் எந்தெந்த ஊர்களுக்குப் போய் முகாம் செய்வார் என்பதற்கு அவர் இந்த வாரத்திலேயே ஒரு குறிப்பு எழுதி, அதன் நகலை முன்னாகவே அந்தந்த ஸ்டேஷனுக்கு அனுப்புகிறது வழக்கம். அதன் நகல் ஒன்று எனக்கும் வருவதுண்டு. ஏனென்றால், ஏதாவது அவசர சந்தர்ப்பம் நேரிடுமானால், நான் உடனே புறப்பட்டு அவர் இருக்கும் இடத்துக்குப் போகலாம் என்ற செளகரியத்தை உத்தேசித்து அந்த ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. அவர் இந்த வாரத்தில் முகாம் செய்ய உத்தேசித்து இருக்கும் ஊர்களைக் காட்டிய குறிப்பை எனக்குப் போன வாரத்திலேயே அனுப்பி இருந்தார். அதை நான் எப்போதும் என் மேஜையின் எதிரிலேயே வைத்திருப்பது வழக்கம். அதை நான் உடனே பார்த்தேன். பார்த்ததில் இந்த வாரம் முடிய அவர் பட்டுக் கோட்டைத் தாலுக்காவில் உள்ள ஊர்களில் முகாம் செய்யப் போவதாக எழுதி இருக்கிறார். அதைப் பார்க்க, என் மனசில் உண்டான சந்தேகம் அதிகரித்தது. அவர் எனக்கு அனுப்பும் சுற்றுப் பிரயாணக் குறிப்பில் கண்ட ஊருக்குப் போகாமல், ஏதாவது அவசர நிமித்தமாக வேறே ஊருக்குப் போனால், அவர் உடனே அந்தத் தகவலை எனக்குத் தெரிவித்து விடுவார். அந்தப் பெட்டியையும், கடிதத்தையும் கொண்டு வந்தவன், அவர் கும்பகோணத்தில் இருந்து அவைகளை அனுப்பியதாகச் சொன்னான் ஆகையால், அவர் எனக்கு அறிவிக்காமல் கும்பகோணம் போயிருப்பாரா என்ற சந்தேகம் உண்டாகிவிட்டது. நான் அந்தப் பெட்டியை உடைத்துப் பார்க்கப் பிரியப்படாதது என்னுடைய நல்ல காலந்தான் என்று நினைக்கிறேன். நான் என்ன செய்தேன் என்றால், உடனே கும்பகோணம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஓர் அவசரத் தந்தி அனுப்பி, போலீஸ் சூபரின்டெண்டெண்டு அந்த ஊருக்கு வந்திருக்கிறாரா என்று கேட்டேன். அங்கிருந்து உடனே மறுதந்தி வந்தது. சூப்பரின்டெண்டெண்டு அங்கே வரவே இல்லை என்றும், பட்டுக்கோட்டைத் தாலுக்காவில் முகாம் செய்து கொண்டிருப்பதாக நேற்று சாயுங்கால வண்டியில் தஞ்சாவூரில் இருந்து வந்த ஒரு ஜெவான் சொல்லுகிறான் என்றும், அந்தத் தந்தியில் தகவல் காணப்பட்டது. பெட்டியோடு வந்த கடிதத்தை நான் மறுபடியும் எடுத்துப் படித்தேன். அதில் இன்றைய தேதியும் கும்பகோண்ம் முகாம் என்ற தகவலும் காணப்பட்டன. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டன. ஆதலால், என் மனசில் உடனே பெருத்த சந்தேகம் உண்டாகிவிட்டது. பெட்டியில் ஏதோ கெடுதல் இருக்கிறதென்றும், கடிதத்தை யாரோ பொய்யாகத் தயாரித்து அனுப்பி இருக்க வேண்டும் என்றும் நான் யூகித்துக் கொண்டேன். அவைகளைக் கொண்டு வந்தவன் தஞ்சாவூர் முதலிய வேறே எந்த ஊரிலாவது இருந்து போலீஸ் சூப்பரின்டெண்டெண்டு அனுப்பியதாகச் சொல்லாமல், கும்பகோணத்தில் இருந்து அனுப்பியதாகச் சொன்னதைக் கொண்டும், பெட்டியில் வேறே ஏதாவது வழக்கைப் பற்றிய பொருள்கள் இருப்பதாகச் சொல்லாமல், சட்டைநாத பிள்ளையின் உடை முதலியவைகள் இருப்பதாகச் சொன்னதைக் கொண்டும் கும்பகோணத்தில் உள்ள சட்டைநாத பிள்ளையைச் சேர்ந்த மனிதர்தான், என் மேலுள்ள ஆத்திரத்தினால் ஏதோ தந்திரம் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் தோன்றியது. சட்டைநாத பிள்ளையும் அவனுடைய தம்பியும் என்மேல் தீராப்பகைமை வைத்திருப்பது இயற்கை அல்லவா; அதுவுமல்லாமல் நான் எப்படியும் பிரயாசைப்பட்டு, சட்டைநாத பிள்ளை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவனை மறுபடி சிறைச்சாலைக்கு அனுப்பி விடுவேன் என்ற பயம் அவர்களுக்கு இருக்கலாம் ஆகையால், எப்படியாவது என்னை ஒழித்து விட்டால், அதன் பிற்கு மற்றவர்களை எளிதில் சரிப்படுத்திவிட்டு எங்கேயாவது மறைந்து கொண்டு இருக்கலாம் என்ற நினைவோடு, அவர்கள் முதலில் என்னைக் கொன்றுவிட எண்ணுவதும் சகஜமே ஆகையால், அவர்கள் எனக்கு ஏதாவது தீங்கு செய்ய முயற்சிப்பார்கள் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். இந்தச் சந்தர்ப்பத்தில், சந்தேகாஸ்பதமான இந்தக் கடிதமும், பெட்டியும் வந்ததைக் காண, பெட்டியை உடனே உடைக்கக் கூடாது என்ற ஒர் எண்ணம் என் மனசில் உண்டாயிற்று. நான் இந்தப் பெட்டியில் பாம்புகள் இருக்கும் என்று நினைக்கவே இல்லை. சில வருஷங்களுக்கு முன் நடந்த ஜெர்மானியச் சண்டையில், அவர்கள் இங்கிலிஷ்காரர்களின் மேல், புதுமாதிரியான வெடிகுண்டு எறிந்ததாகப் படித்தோம் அல்லவா. அந்த குண்டு வெடித்தவுடன் அதிலிருந்து வந்த புகையை சுவாசித்த மனிதர் எல்லோரும் உடனே இறந்து போய்விட்டதாகக் கேள்வியுற்றோம் அல்லவா? அதுபோல, ஏதாவது விஷப்புகை தயார் செய்து இந்தப் பெட்டிக்குள் அடைத்து அனுப்பி இருப்பார்களோ என்ற எண்ணந்தான் என் மனசில் உதித்தது. என்னிடம் பூதக்கண்ணாடி ஒன்று இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு பார்த்தால் சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியாத மகா அற்பமான வஸ்துக்களும் பெரிது பெரிதாகத் தெரியும்; நான் அந்தக் கண்ணாடியை எடுத்து வைத்துக் கொண்டு, அந்தப் பெட்டியை நன்றாகத் திருப்பித் திருப்பி ஆராய்ச்சி செய்து பார்த்தேன். பெட்டியின் மேல் நாலைந்து இடங்களில் ஓர் ஈர்க்குக் குச்சி நுழையும்படியான துவாரங்கள் இருந்தது நன்றாகத் தெரிந்தது. நான் உடனே ஒர் ஈர்க்குக் குச்சியை எடுத்து ஒரு துவாரத்தில் விட்டுப் பார்த்தேன்; குச்சி நெடுக உள்ளே நுழைந்தது ஆகையால், துவாரம் உள்பக்கம் வரையில் போனதென்று நிச்சயித்துக் கொண்டேன். ஆகவே, பெட்டிக்குள் விஷப்புகை எதுவும் இல்லை என்பது உடனே நிச்சயப்பட்டது. பிறகு நான் மெல்லிய குடைக்கம்பி ஒன்றை எடுத்து ஒரு துவாரத்தில் வைத்து வேகமாய் உள்ளே சொருகினேன். உடனே பெட்டிக்குள் புஸ் என்ற சப்தம் உண்டாயிற்று. உண்டாகவே, என் மனசில் பெருத்த யோசனை உண்டாகிவிட்டது. அதற்குள் ஏதோ உயிருள்ள ஜெந்து இருக்கிறதென்ற எண்ணமும், அநேகமாய் அது பாம்பாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகமும் உண்டாகி விட்டன. ஆகவே, அந்தப் பெட்டியை உடைப்பதா, அல்லது, உடைக்காமல் அப்படியே பூமிக்குள் புதைத்து விடுவதா என்று நான் யோசனை செய்தேன். அதற்குள் இருப்பது இன்ன வஸ்து
மா.வி.ப. I -21 என்பதை எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விலக்க முடியாத ஒரு விருப்பம் தோன்றி வருத்தியது ஆகையால், அந்தப் பெட்டியில் உள்ள ஜெந்து என்னை உபத்திரவிக்காமல், அதை நான் எப்படி உடைத்துப் பார்க்கிறது என்று யோசனை செய்தேன். தண்ணி நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் அந்தப் பெட்டியை அழுத்தி அதை உடைத்துப் பார்க்கலாமா என்ற எண்ணம் தோன்றியது. உள்ளே இருப்பது பாம்பாக இருந்தால் அது ஒருவேளை தண்ணீரில் நீந்தி வெளியில் வந்து விடுமோ என்ற நினைவு உண்டானது ஆகையால், நான் வேறோர் உபாயம் செய்தேன். அந்தப் பெட்டியைத் தோட்டத்தின் பின் புறத்தில் எவரும் இல்லாத தனியான ஓரிடத்தில் கொண்டு போய் வைத்து, அதைச் சுற்றிலும் சக்கர வட்டமாக நாலைந்து கட்டு விறகுகளை வைத்து நெருப்பைப் போட்டுக் கொளுத்தித் தனலாக்கி, நெருப்புத் தணலைக் கரைபோலப் பெட்டியைச் சுற்றி அனைத்து வைத்துக் கொண்டு நான் நெருப்புக்கு வெளியில் நின்று ஒரு கடப்பாறையால் பெட்டியை அடித்து உடைத்தேன். மேலே மூடப்பட்டிருந்த காகிதம் போனவுடன் உள்புறத்தில் மூங்கில் பெட்டி ஒன்று காணப்பட்டது. அதன்மேல் கடப்பாறையில் இரண்டொரு குத்துகள் குத்த பெட்டியின் மேல்பக்கம் பொத்துப் போயிற்று. உடனே உள்பக்கத்தில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக நான்கு கரு நாகங்கள் புஸ் புஸ் என்று சீறிக் கொண்டு கிளம்பி வெளியில் பாய்ந்து அங்கும் இங்கும் ஒடத்தலைப்பட்டன. அவற்றைச் சுற்றிலும் நெருப்புத் தனலினால் கரைகட்டப்பட்டிருந்தது ஆகையால், அதைக் கடந்து வெளியில் வர மாட்டாமல் அந்தச் சக்கர வட்டத்திற்குள்ளாகவே அங்கும் இங்கும் தாறுமாறாக ஓட ஆரம்பித்தன. நான் என் கையில் இருந்த கடப்பாறையால் உடனே அந்தப் பாம்புகளை எல்லாம் அடித்துக் கொன்று தோட்டத்திற்கு வெளியில் துக்கி எறிந்து நெருப்புத் தணலையும் அனைத்துவிட்டு பங்களா விற்குள் வந்து, என் சம்சாரத்தை மாத்திரம் கூப்பிட்டு, நடந்த வரலாற்றை எல்லாம் தெரிவித்தேன்.
கண்ணப்பா:- என்ன ஆச்சரியம் இது மனிதர் இப்படிப்பட்ட அட்டுழியம் செய்யத் துணிவார்களா? தாங்கள் நிரம்பவும் முன் யோசனையோடு இருந்தபடியால் தப்பித்துக் கொண்டீர்கள். வேறே யாராக இருந்தாலும், அவசரப்பட்டுக் கொண்டு பெட்டியை உடனே திறந்திருப்பார்கள்; இந்நேரம் அவர்களுடைய உயிரும் போயிருக்கும்; என்னவோ, தெய்வந்தான் நல்ல மனிதர்களை எல்லாம் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால், மனிதன் எப்படித் தப்பி வாழ முடியும்? உலகம் என்றால், மனிதருக்கு யாராவது பகைவர் இல்லாமல் இருக்கமாட்டார்கள். அவர்கள் இப்படிப்பட்ட வஞ்சகமான சதியாலோசனை செய்தால், நாம் இரவு பகல் விழிப்பாகவும் எச்சரிப்பாகவும் இருந்தால்கூட, இதை எல்லாம் எப்படித் தடுக்க முடியும்? இவ்வளவு தூரம் அந்த மாசிலாமணிக்கு யோசனை எட்டியிருக்காது. இதுவரையில் அவன் மாத்திரம் தனியாக இருந்தானே, அவன் ஏதாவது கெடுதல் செய்தானா? எல்லாம் அந்தச் சட்டைநாத பிள்ளையினுடைய யுக்தியே அன்றி வேறல்ல. அவன் வந்தவுடனே அவர்கள் பாணந் தொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது. ஆம். அதிருக்கட்டும்; தாங்கள் தங்களைப் பாம்புகள் கடித்துவிட்டன என்ற செய்தியை எதற்காகப் பரப்பி விட்டீர்கள்.
சாமியார்:- நான் நன்றாகத் தீர்க்காலோசனை பண்ணியே இந்தத் தந்திரத்தைச் செய்திருக்கிறேன். இந்த மாதிரி பொய்க் கடிதமும், பாம்புகள் வைத்த டெட்டியும் வந்தன என்ற விஷயத்தை நான் வெளியிட்டால், அது ஜனங்களுக்கும் போலீசாருக்கும் பரவிவிடும். சட்டைநாத பிள்ளையைச் சேர்ந்த மனிதரே இப்படிச் செய்திருக்கிறார்கள் என்று உடனே எல்லோரும் யூகித்துக் கொள்வார்கள். அந்தச் சங்கதி சட்டைநாத பிள்ளை மாசிலாமணி முதலியோருக்கும் எப்படியும் எட்டும். இந்தக் கடிதமும் டெட்டியும் வந்த சங்கதியை நான் எவரிடமும் வெளியிடாமல் மறைத்து விடுவதாகவே வைத்துக் கொள்வோம். எந்த வகையிலும் சரி, நான் சாகாமல் உயிரோடிருக்கிறேன் என்பதையும், பாம்புகள் கடிக்காமல் நான் தப்பித்துக் கொண்டேன் என்பதையும் நம்முடைய எதிரிகள் வெகு சீக்கிரத்தில் தெரிந்து கொள்வார்கள். அவர்கள் என்மேல் வைத்திருக்கும் பகைமையும் ஆக்கிரோஷமும் இதனால் அதிகரிக்குமே அன்றிக் குறையப் போகிறதில்லை. என்னைக் கொல்வதற்காகப் பாம்புகளை அனுப்பியவர்கள் அவர்கள்தான் என்பதை நான் தெரிந்து கொண்டிருப்பேன் என்றும், அவர்களை வேரறுக்க நான் முயற்சிப்பேன் என்றும் அவர்கள் கட்டாயம் யூகித்துக் கொள்வார்கள். ஆகவே, நான் இப்போது அவர்களுக்குப் பெருத்த ஜென்மத் துரோகியும் பகைவனுமாய் விட்டேன் என்றும், என்னை உயிரோடு ஒரு நிமிஷமும் வைக்கக்கூடாது என்றும் அவசியம் நினைத்து, என்னை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று அவர்கள் வேறே பலவகையில் அவசரமான முயற்சிகள் செய்வார்கள். என்னைப் பாம்புகள் கடித்துவிட்டன என்ற செய்தியைப் பரப்பிவிட்டால், அது அவர்களுக்கும் எட்டும். அவர்கள் திருப்தி அடைந்து, என்மேல் கத்தி தீட்டுவதை அவ்வளவோடு நிறுத்திவிடுவார்கள். நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் விஷயத்தில் அதிகமாக என் கவனத்தையும் பொழுதையும் செலவிடாமல் நான் என் வேலையைப் பார்க்கலாம் அல்லவா? அதற்காகத்தான் நான் இந்த யுக்தி செய்தேன்.
கண்ணப்பா:- இது நல்ல யுக்திதான். ஆனால் பாம்புகள் கடித்து விட்டன என்று சொல்லிக் கொண்டு, தாங்கள் எத்தனை நாள்கள் உள்ளே இருக்க முடியும்? -
வடிவாம்பாள்:- இவர்கள் எப்போதும் உள்ளே இருக்கப் போகிறார்களா? பாம்புகள் கடித்துவிட்டன என்றும், மருந்துகள் பிரயோகிக்கப்படுகின்றன என்றும், இன்னம் உடம்பு தேற வில்லை என்றும் எல்லோரும் சொல்லிக் கொள்ளும்படி செய்து விட்டு, ரகசியமாக வெளியில் போய் இவர்கள் தங்கள் அலுவல்களைப் பார்ப்பார்களோ என்னவோ. அப்படிச் செய்வதுகூட அபாயகரமானதுதான். சுவாமிகள் வெளியில் போகாமல் வீட்டிலேயே இருப்பதுதான் உசிதமான காரியம் எனத் தோன்றுகிறது.
சாமியார்:- நான் அவர்களுக்குப் பயந்து வெளியில் போகாமல் எத்தனை நாளைக்குத் தான் ஒளிந்து கொண்டிருக்க முடியும். அப்படி இருந்தாலும், எதிரிகளுக்கு ஒரு விதமான அவநம்பிக்கை உண்டாகும். நாகப்பாம்புகள் கடித்தால், மனிதர் உடனே இறந்து போவார்களேயன்றி, நெடுநாள்கள் படுத்திருப்பது வழக்கமில்லை. மற்ற சாதாரணப் பாம்பு கடித்தால் அதற்கு மாதக் கணக்கில் வைத்தியம் செய்கிறதுண்டு. அப்படிப்பட்ட பாம்பினால் கடிக்கப் பெற்ற மனிதர் வீட்டிலேயே படுத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அதை ஜனங்கள் நம்புவார்கள் நான் நான்கு நாகப் பாம்புகளால் கடிக்கப்பட்டு நோயாளியாகப் படுத்திருக்கிறேன் என்று பல நாட்கள் வரையில் சொல்லிக் கொண்டு வந்தால், அதை எதிரிகள் உண்மை என்றே நம்பமாட்டார்கள். என்னைக் கடிக்கவில்லை என்றும், நான் தப்பித்துக் கொண்டு ஏதோ கபடமான கருத்தோடு பாசாங்கு செய்கிறேன் என்றும் எதிரிகள் உடனே கண்டு கொள்வார்கள் ஆகையால், அப்படிச் செய்வது சரியல்ல. என்னைப் பாம்புகள் கடித்துவிட்டதாகவும், நான் ஒரே மயக்கமாய்க் கிடப்பதாகவும், சில மாந்திரீகர்களும், வைத்தியர்களும் உள்ளே இருந்து என்க்கு சிகிச்சை செய்து கொண்டிருப்பதாகவும் ஜனங்களும் போலீசாரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? அப்படியே அவர்கள் இன்று சாயுங்காலம் வரையில் சொல்லிக் கொண்டிருக்கட்டும். நான் இருக்கும் இந்த இடத்திற்கு யாரும் வரமாட்டார்கள். இன்று சாயுங்காலம் நீங்கள் ஏதோ அலுவலாய்ப் போவது போல வெளியில் போங்கள். அப்போது ஜனங்கள் என்னுடைய தேக ஸ்திதி எப்படி இருக்கிறதென்று கேட்பார்கள். வைத்தியர்கள் மருந்துகள் கொடுத்த பிறகு நான் பலமாக வாந்தி எடுத்ததாகவும், மயக்கம் கொஞ்சம் தெளிந்திருப்பதாகவும், இன்றைய இரவுக்குள் முற்றிலும் குணம் ஏற்பட்டுவிடும் என்று நான் நம்புவதாகவும் சொல்லுங்கள். அதோ எல்லா ஜனங்களுக்கு நான் என்னுடைய நன்றியறிதலைத் தெரிவிக்கச் சொன்னதாகவும், அவர்கள் எல்லோரும் கவலைப்படாமல் தத்தம் வீட்டுக்குப் போய் இராப்பொழுதைக் கழிக்கவும், நான் கேட்டுக் கொண்டதாக நீங்கள் சொல்லுங்கள். பிறகு நீங்கள் உள்ளே வந்திருந்து கொஞ்சம் பொறுத்து மறுபடி வெளியில் போய், என்னுடைய நிலைமை முன்னிலும் அதிக தெளிவு அடைந்திருப்பதாகவும், போலீஸ்காரர்கள் எல்லோரும் தத்தம் வீடுகளுக்குப் போய்விட்டு மறுநாள் காலையில் இங்கே வரவும் நான் சொன்னதாகச் சொல்லுங்கள். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவேளை என்னோடு பேசப் பிரியப்பட்டால் அவரை உள்ளே அழைத்துக் கொண்டு வாருங்கள். நான் அவரோடு இரண்டொரு வார்த்தைகள் பேசி, அனுப்பி விடுகிறேன். அவர்கள் எல்லோரையும் அனுப்பிய பிறகு நீங்கள் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போய் உங்களுடைய தாயார் தகப்பனார் குழந்தை வடிவாம்பாளுடைய தாயார் தகப்பனார் இன்னும் நாலைந்து ஆள்கள் ஆகிய ஜனங்களை ரகசியமாக அழைத்துக் கொண்டு வந்துவிடுங்கள். அப்படி வருவதற்கு முன், ஒர் ஆளைச் சுடுகாட்டுக்கு அனுப்பி, நல்ல விறகாய்ப் பார்த்து ஒரு வண்டியும், எரு முட்டைகள் நாலைந்து கோட்டையும் கொண்டுவந்து ஒரு ஜதை அடுக்கி வைக்கச் சொல்லிவிட்டு, வரும்போது ஒரு டின் சீமை எண்ணெய் மாத்திரம் வாங்கிக் கொண்டு வந்துவிடுங்கள். அதற்குள் என் வேலைக்காரி முதலிய எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிடும்படி செய்கிறேன். நம்முடைய மனிதர்கள் எல்லோரும் வந்து சேர்ந்த பிறகு நாம் ஒரு பாடைகட்டி வைத்துக் கொண்டு தயாராக இருப்போம். இரவு சரியாய் ஒருமனி சமயத்தில், ஊரெல்லாம் அடங்கி நிச்சப்தமாயிருக்கும் காலத்தில், அந்தப் பாடையில் நான் படுத்துக் கொள்ளுகிறேன். நீங்கள் எல்லோரும் என்னைத் துக்கிக் கொண்டு சந்தடி செய்யாமல் மயானத்துக்குப் போய் அங்கே அடுக்கப்பட்டிருக்கும் ஜதையில் என்னை வைத்து, சீமை எண்ணெயை ஊற்றிக் கொளுத்திவிட்டு வந்துவிடுங்கள். நாளைய தினம் காலையில் ஜனங்களும் போலீசாரும் வந்து விசாரித்தால், அவர்கள் போன அரை மணிக்கெல்லாம் நான் இறந்து போய்விட்டதாகவும், எல்லோரும் சேர்ந்து தூக்கிக்கொண்டு போய்க் கொளுத்தி விட்டதாகவும் சொல்லி விடுங்கள். நாளை முதல் எனக்குக் கல்நட்டு பதினாறாவது தினக் கருமாந்திரம் முதலிய உத்தரகிரியைகளையும் நடத்தி விடுங்கள் - என்றார்.
அவர் கூறியதைக் கேட்ட வடிவாம்பாள் கண்ணப்பா ஆகிய இருவரும் பெருத்த திகைப்பும் குழப்பமும் விசனமும் அடைந்து கலங்கிப் போயினர். உடனே வடிவாம்பாள் திகம்பரசாமியாரை நோக்கி, “என்ன சுவாமிகளே! தாங்கள் இதுவரையில் பேசியதை எல்லாம் உண்மை என்றல்லவா. நாங்கள் நினைத்தோம். தாங்கள் கடைசியில் வேடிக்கையாகப் பேசி முடித்து விட்டீர்களே! தாங்கள் சொன்னது கொஞ்சமாவது நடக்கக்கூடிய காரியமா? பாம்பின் விஷத்தினால் தங்கள் உயிருக்கு அபாயம் நேர்ந்துவிடப் போகிறதே என்று நாங்கள் எவ்வளவோ கவலைப்பட்டோமே? அப்படி இருக்க, தங்களை உயிரோடு நாங்களே கொல்லுவ தென்றால், அது ஆகக்கூடிய காரியமா?” என்றாள். கண்ணப்பா:- வடிவூ! நீ இதற்குள் அவசரப்படுகிறாயே! சுவாமிகள் அவர்களுடைய யோசனை முழுவதையும் நன்றாக வெளியிடுவதற்குள், அரைகுறையாகத் தெரிந்துகொண்டு ஏன் அவஸ்தைப்படுகிறாய்? இறந்து போய்விட்டது போல பாவனை காட்டி, கொஞ்ச காலம் மறைந்திருக்க வேண்டும் என்று தாம் உத்தேசித்திருப்பதாக அல்லவா சொன்னார்கள். இவர்களை நாம் வைத்துக் கொளுத்தி விட்டால், அதன் பிறகு எப்படிப் பிழைத்து வர முடியும்? ஒருவேளை இப்படி இருக்கலாம். இரவில் நாம் எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லுகிற பாடையில் ஒருவேளை இவர்கள் படுத்துக் கொண்டு இறந்து போனது போலக் காட்டிக் கொண்டு, மயானம் போன பிறகு, தோட்டிகளை அப்பால் போகச் சொல்லிவிட்டு, இவர்கள் எழுந்திருந்து போய்விடலாம் என்ற உத்தேசம் இருக்கலாம். மற்ற மனிதர்கள் யாரும் கூட வரப்போகிறதில்லை அல்லவா?
வடிவாம்பாள்:- அப்படிப்பட்ட துணிகரமான வேலை செய்வது நல்லதல்ல. நாம் பாடையை எடுத்துக் கொண்டு போகும் போது மனிதர்கள் யாராவது விழித்துக் கொண்டு நம்மோடுகூடத் தொடர்ந்து வந்தால், நாம் அவர்களைத் தடுக்க முடியுமா? அப்படி வருகிறவர்களுக்கு எதிரில் இவர்கள் எழுந்து போக முடியாமல் போய்விடும் அல்லவா.
சாமியார்:- (அன்போடு புன்னகை செய்து) நான் உங்கள் இருவருடைய சந்தேகங்களை எல்லாம் தீர்ப்பதற்கு முன் நீங்கள் இருவரும் ஒரு காரியம் செய்யுங்கள். இதோ வலது பக்கத்தில் ஒரு கதவு தெரிகிறதல்லவா. அதன் தாழ்ப்பாளைத் திறந்து கொண்டு, உள்ளே போங்கள். அவ்விடத்தில் மெத்தைப் படிக்கட்டு இருக்கிறது. அப்படியே மேலே ஏறி எதிரில் இருக்கும் அறைக்குப் போய்விட்டுத் திரும்பி வாருங்கள். அதன் பிறகு நான் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறேன்” என்றார்.
உடனே கண்ணப்பாவும் வடிவாம்பாளும் அவ்விடத்தை விட்டு அவர் குறித்த கதவைத் திறந்து கொண்டு அப்பால் சென்றனர். அப்புறத்தில் அவர் கூறியது போல மேன்மாடப் படிக்கட்டு ஒன்று காணப்பட்டது. அதன் வழியாக அவர்கள் இருவரும் மேலே ஏறிச் சென்றனர். படிக்கட்டு முடிந்த உடனே எதிரில் ஒர் அறை காணப்பட்டது. அந்த அறை ஒரு சயனக்கிரகம் போல நிரம்பவும் அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுவர்களில் படங்களும், கண்ணாடி விளக்குகளும், மான்முகம் முதலிய அலங்காரப் பொருட்களும் காணப்பட்டன. தரை முழுதும் பிரப்பம் பாயினால் மூடப்பட்டு இருந்தது. அதன்மேல் நாலைந்து பளபளப்பான நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. வெளியில் இருந்து காற்று உள்ளே வருவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு ஜன்னலண்டை ஒரு பெரிய கட்டில் காணப்பட்டது. அதன் மேல் கனமான பஞ்சு மெத்தை, தலையணைகள், கொசுவலை, அஸ்மானகிரி முதலியவை பொருத்தப் பெற்றிருந்தன. அவைகளைப் பார்த்த உடனே கண்ணப்பாவின் மனதில் பெருத்த சந்தேகம் ஒன்று தோன்றியது. சாமியார் உலக சுகத்தை எல்லாம் துறந்து துறவி போல இடுப்பில் ஒரு சிறிய வஸ்திரத்தை மாத்திரம் அணிந்து சொற்ப ஆகாரம் உண்டு தரையில் துணியை விரித்து இரவு காலத்தைப் போக்குகிற சுபாவம் உடையவர் என்று அவன் பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தான். அதற்கு மாறாக அந்த இடத்தில் ஒரு பெருத்த சீமானுடைய சயன மாளிகை போல இருந்த ஏற்பாடுகள் எல்லாம் தோன்றவே, சாமியார்கூட அப்படிப்பட்ட சிற்றின்ப சுகங்களை நாடுகிறாரா என்ற சந்தேகம் பலமாகத் தோன்றியது. அவ்வாறு அவன் சந்தேகித்த வண்ணம் முதலில் செல்ல, அவனுக்குப் பின்னால் வடிவாம்பாள் சென்றாள். கட்டிலின் மேல் யாரோ ஒரு மனிதர் படுத்திருப்பது போன்ற நீளமான புடைப்பு நன்றாகத் தெரிந்தது. அந்தப் புடைப்பின் மேல் ஒரு பெரிய துப்பட்டி போட்டு மூடப்பட்டிருந்தது. உண்மையில் யாரோ மனிதர் அங்கே படுத்து, துப்பட்டியால் தலை முதல் கால் வரையில் மூடிக் கொண்டிருப்பது போல இருந்தது. அவர்கள் இருவரும் திடுக்கிட்டு, கட்டிலில் படுத்திருப்பது யாராக இருக்கும் என்று சிந்தனை செய்தவராய், சந்தடி செய்தால், படுத்திருப்பவருக்கு அது உபத்திரவமாக இருக்குமே என்று நினைத்து இரண்டொரு நிமிஷ நேரம் ஒய்ந்து அப்படியே நின்றனர். அந்த இடத்திற்குத் தங்களை என்ன கருத்தோடு சாமியார் அனுப்பி இருப்பார் என்ற யோசனை கண்ணப்பாவின் மனதில் தோன்றியது.