மாய வினோதப் பரதேசி 1/5-வது அதிகாரம்

விக்கிமூலம் இலிருந்து
5-வது அதிகாரம்
மோகினி அவதாரம் - எதிர்பாரா விபத்து

சென்னப்பட்டனத்தின் வடமேற்குப் பாகத்திற்கு புரசைப் பாக்கம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அது சுமார் நான்கு மைல் சுற்றளவுள்ள பாகம். அந்தப் பேட்டையில் சாதாரண ஜனங்கள் வசிப்பதற்கு ஏராளமான தெருக்களும், பெரிய பெரிய ரஸ்தாக்களும், கடைத்தெருக்களும் இருக்கின்றன. அந்தத் தெருக்களை விட்டு விலகி நாலாபக்கங்களிலும் பெருத்த தனிகர்களும் உத்தியோகஸ்தர்களும், துரைமார்களும் வசிப்பதற்கு நூற்றுக்கணக்கான பெரிய பெரிய பங்களாக்கள் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் இருந்து பூந்தமல்லிக்குப் போகும் ராஜபாட்டையானது புரசைப்பாக்கத்தில் நுழைந்தே செல்லுகின்றது. ஆகையால், அந்தப் பாட்டையின் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான அழகிய பங்களாக்கள் வெகுதூரம் வரையில் அமைந்திருக்கின்றன. அவற்றின் முடிவில் இன்னமும் தனவந்தர்கள் லட்சக்கணக்கில் திரவியத்தைச் செலவிட்டுப் புதிது புதிதாக பங்களாக்களையும், மாட மாளிகைகளையும் கட்டிக்கொண்டே போகிறார்கள். அந்த ராஜபாட்டை சென்னையில் ஆரம்பமாகும் இடத்தில் இருந்து சிறிது தூரம் வரையில் வீடுகளும் பங்களாக்களும் அடுத்தடுத்து நெருங்கி இருக்கக் காணலாம். அது மேற்குத் திக்கில் போகப்போக, அதன் இருபக்கங்களிலும் உள்ள பங்களாக்கள் வெகு தூரத்திற்கு ஒன்றாக இருப்பதோடு நிரம்பவும் விசாலமான தோட்டம் உத்யானவனம் மதில் சுவர்கள் முதலியவற்றால் சூழப்பட்டனவாகவும் இருக்கின்றன. அவ்வாறு காணப்படும் ஒவ்வொரு வனமாளிகையும் ஒவ்வொரு பிரத்தியேகமான ஊர் என்றே நாம் அநேகமாய் மதிக்க வேண்டும். சென்னையில் பட்டப்பகலில் நேருக்கு நேர் மோசம், புரப்பட்டு, முடிச்சவிழ்த்தல், ஏமாற்றுதல் முதலிய செய்கைகள் நடைபெறுவது சகஜமாக இருந்தாலும், இரவில் கன்னம் வைத்தோ, கூரைமேல் ஏறியோ வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் கள்ளர்கள் அநேகமாய் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆதலால், ஜனங்கள் ஊர்க்கோடிகளில் தன்னந்தனியான வனமாளிகைகளில் பயமின்றி இருந்து வருகிறார்கள். அவ்வாறு வசித்தவர்களுள் சென்னை பெரிய கலெக்டர் பட்டாபிராம பிள்ளையும் ஒருவர். அவர் சர்க்கார் வேலையில் இருந்து 24-வருஷ காலம் கடத்திவிட்டார். ஆதலால், இன்னம் ஒரு வருஷகாலம் சேவித்துவிட்டு உபகாரச் சம்பளம் பெற்று வேலையில் இருந்து விலகிக்கொள்ள வேண்டிய நிலைமையில் இருந்தமையால், வேலையை விடுத்த பிறகு புரசைப்பாக்கத்திலேயே தமது சாசுவதமான வாசஸ்தலத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தேசத்தோடு, அவர் அவ்விடத்தில் விலைக்குக் கிடைத்த ஒரு பிரம்மாண்டமான பங்களாவை சற்று ஏறக்குறைய 75000 ரூபாய்க்கு வாங்கி அதில் இருந்து வந்தார். அந்தப் பங்களா பூந்தமல்லிக்குப் போகும் ராஜ பாட்டையின் பக்கத்தில் இருந்தது ஆனாலும், அதன் இரண்டு பக்கங்களிலும் சுமார் 1½-பர்லாங்கு தூரத்திற்கு அப்பாலேயே இதர பங்களாக்கள் இருந்தன. அவருடைய பங்களா பாட்டை ஒரமாக அகலத்தில் சுமார் கால் பர்லாங்கும், முன்னுக்குப் பின் நீளத்தில் அரை பர்லாங்கும் பரவி இருந்ததன்றி அதன் நாற்புறங்களிலும் ஒன்றரை ஆள் உயரம் கட்டப்பட்டிருந்த பெருத்த மதில் சுவர்களினால் சூழப்பட்டிருந்தது. அந்தச் சுவர்களின் மேல் ஏறி எவரும் உள்ளே வராதபடி அதன் மேற்புறங்களில் கூர்மையான கண்ணாடித் துண்டுகள் பதிக்கப் பெற்றிருந்தன. பாட்டையை ஒட்டினாற் போல இருந்த முன்பக்கத்து மதில் சுவரில் மேற்குப் பக்கம் நகர்ந்தாற் போல, ஒரு பெருத்த வாசற்படியும் இரும்புக் கம்பிக் கதவுகளும் காணப்பட்டன. அந்தக் கதவின் உள்பக்கத்தில் ஒரு பக்கத்தில் பலகைகளால் அமைக்கப்பட்ட ஒரு சிறிய காவல் வீடு காணப்பட்டது. அதன் முன்பக்கத்தில் எப்போதும் ஒரு பாராக்காரன் உட்கார்ந்திருப்பான். அந்த பங்களாவின் உட்புறத்தில் எங்கு பார்த்தாலும் மா, பலா, நார்த்தை, தென்னை, கமுகு, ஆல், நெல்லி முதலிய விருகூடிங்களும், வாழை மரங்களும் நிறைந்து பெருத்த தோப்புபோல அடர்த்தியாக இருந்தன. தரையில் நாட்டுப் புஷ்பங்களின் பாத்திகளும் சீமை குரோடன்களிருந்த தொட்டிகளும், சிவப்புக் கற்றாழை, மருதாணி முதலியவற்றின் வேலிகளும் அழகாகவும் ஒழுங்காகவும் காணப்பட்டன. அத்தகைய சிங்கார வனத்தின் இடையில் இருந்தும், மேன்மாடம் உள்ளதுமான கட்டிடம் வெள்ளைக்கார துரைகள் வசிக்கும் மாளிகைபோல அமைக்கப்பட்டிருந்தது. பாட்டையின் ஒரத்தில் இருந்த இரும்புக் கம்பிக் கற்களால் வழுவழுப்பாகவும் மேடு பள்ளமென்பது இல்லாமல் சமமாகவும் ஒரு பெரிய பாதை காணப்பட்டது. அந்தப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் சமதூரத்தில் தென்னை மரங்களும், கமுகு மரங்களும் காய்க்குலைகளைத் தாங்கி நின்றன. அவற்றின் அடியில் ஒரே அளவாக வெட்டிவிடப்பட்ட மருதாணி வேலியும், அதற்கு முன்னால் பல நிறங்களைக் கொண்ட வரிசையான ரோஜாப் புஷ்பத்தொட்டிகளும் காணப்பட்டன. அந்தத் தொட்டிகளை அடுத்தாற் போல அருகம்புல் வளர்ந்த தரை, பாட்டையில் வந்து முடிந்த இடத்தில், பீங்கான்களால் ஆன சிறிய சிறிய ஒடுகள், மருதாணி வேலியான மீசைக்குப் பக்கத்தில் பல்வரிசை போலப் பாட்டை ஒரத்தில் பதிப்பிக்கப் பெற்றிருந்தன. அந்தப் பாட்டையின் வழியாக உள்ளே சென்றால், நடுவில் இருந்த கட்டிடத்தின் முன்னால் கள்ளிக்கோட்டை ஒடுகள் போர்த்தப் பெற்றதும் கொட்டகைப் பந்தல் போல இருந்ததுமான மண்டபத்தின் கீழே போய்ப் பாதை முடிவடைந்தது. அந்த மண்டபத்தின் நான்கு பெரிய துண்களைச் சுற்றிலும் அழகிய பூத்தொட்டிகள் அழகு செய்து கொண்டிருந்தன. அந்த மண்டபத்தில் இருந்து படிக்கட்டின் வழியாகக் கட்டிடத்திற்குள் நுழைந்தால், முன் பக்கத்தில் பூத்தொட்டிகள் நிறைந்த விசாலமான ஒரு தாழ்வாரம் காணப்படும். மேற்படித் தாழ்வாரத்தின் மேற்கூரையில் இருந்து சிறிய சிறிய பூத்தொட்டிகளிலும், மின்சார விசிறிகளும் மின்சார விளக்குக் குண்டுகளும் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தத் தாழ்வாரத்தில் நான்கு டலாயத்துகள் வெள்ளி வில்லைகள், வெள்ளி ஜரிகை தைத்த டவாலிப் பட்டைகள் முதலியவற்றை அணிந்தவராய் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அந்தத் தாழ்வாரத்தை அடுத்தாற் போல உட்புறத்தில் ஒரு பெருத்த கூடம் இருந்தது. கலெக்டரைப் பார்ப்பதற்கு யாராவது நண்பர்களோ, அல்லது குமாஸ்தாக்களோ, அல்லது கட்சிக்காரர்களோ வருவார்களானால், அவர்களோடு பேசுவதற்கு அந்த இடம் ஒரு தர்பார் மண்டபம் போல உபயோகிக்கப்பட்டு வந்தது. ஆகையால், அந்த இடம் நிரம்பவும் அலங்காரமாகக் காணப்பட்டது. அவ்விடத்தில் பளபளப்பான விலை உயர்ந்த நாற்காலிகளும், சோபாக்களும், பூத்தொட்டிகளும், மேஜைகளும், சட்டப் புஸ்தகங்கள் நிறைந்த கண்ணாடி பீரோக்களும், அலமாரிகளும் காணப்பட்டன. சுவர்களில் மான் கொம்புகளும், படங்களும் நிறைந்திருந்தன. மேலே இருந்து மின்சார விசிறிகளும் விளக்குகளும் தொங்கிக் கொண்டிருந்தன. தரை முழுதும் வழுவழுப்பான பிரப்பம் பாயினால் மூடப்பட்டிருந்தது. அந்தக் கூடத்தில் இருந்து அப்பால் உள்ள விடுதிகளுக்குப் போக இரண்டு வாசல்கள் காணப்பட்டன. அவற்றின் கண்ணாடிக் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும், ஜரிகைப்புட்டாக்கள் நிறைந்த பனாரீஸ் பட்டுத் திரைச் சீலைகள் தொங்கவிடப்பட்டு வழிகள் மறைக்கப்பட்டிருந்தன. அந்த வாயில்களின் வழியாக நாம் உள்ளே சென்றால், அப்புறத்தில் சகலமான வசதிகளும் நிறைந்த பல அறைகளும், சிறிய கூடங்களும், தாழ்வாரங்களும் காணப்பட்டன. ஒரு தாழ்வாரத்தின் நடுவில் இருந்து மேலே சென்ற படிகளின் வழியாக ஏறிச் சென்றால், அது மேன்மாடத்தில் கொண்டு போய்விடுகிறது. அவ்விடத்தில் கட்டில் மெத்தைகள் நிறைந்த செளகரியமான சயனக்கிரகங்களும், புஸ்தக சாலை முதலிய அறைகளும் முன் பக்கத்தில் தாழ்வாரமும் அமைந்திருந்தன. அடிக்கட்டில் இருந்தது போல மேன்மாடத் திலும் பூத்தொட்டிகள், நாற்காலிகள், சோபாக்கள், மேஜைகள், நிலைக்கண்ணாடிகள், படங்கள் முதலிய அலங்காரங்கள் எல்லாம் சம்பூர்ணமாக நிறைந்திருந்தன. அவ்வளவு பிரம்மாண்டமான பங்களாவின் நடுவில் அத்தனை வைபவங்களோடு கூடியிருந்த மாளிகைக்குள் மேன்மாடத்தில் ஒரே ஒரு யெளவன மங்கை காணப்பட்டாள். அவள் இருந்த விடுதிக்குப் பக்கத்தில் அவள் கூப்பிடும் குரலுக்கு விடைகொடுக்க ஒரு பணிப்பெண் எப்போதும் ஆஜராய் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அந்தக் கட்டிடத்தின் அடிக்கட்டின் பின்பாகத்தில் வெகு துரத்திற்கு அப்பால் இருந்த அறையில் இன்னொரு வேலைக்காரி சமையல் சம்பந்தமான ஏதோ அலுவல்களைச் செய்து கொண்டிருந்தாள். அந்தக் கட்டிடங்களின் பின்புறத்தில் மதிலின் ஒரமாக வண்டிகள் நிற்பதற்காக ஒரு கட்டிடமும், தோட்டக்காரனும் அவனது மனைவியும் குடியிருப்பதற்காக ஒரு சிறிய விடும் காணப்பட்டன.

அத்தகைய லட்சணங்கள் வாய்ந்த ரமணியமான வன மாளிகைக்குள் நாம் சென்று பார்க்கும் தினம் சனிக்கிழமை. ஆதலால், கலெக்டர் பட்டாபிராம பிள்ளை சென்னை துறை முகத்திற்கு எதிரில் இருக்கும் தமது கச்சேரிக்குப் போயிருந்தார். அவரது ஏகபுத்திரியான மனோன்மணி என்ற மடந்தையே மேன் மாடத்தில் காணப்பட்டவள். அப்போது பகல் இரண்டு மணி வேளை. ஆதலால், அந்த மடந்தை காலை பத்தரைமணிக்கே தனது பகற் போஜனத்தை முடித்துக் கொண்டு மேன்மாடத்தில் தனது சயனக்கிரகத்தில் ஒரு கட்டிலின் மேல் உட்கார்ந்து கையில் ஒர் இங்கிலீஷ் புஸ்தகத்தை வைத்துப் படித்தபடி திண்டில் சாய்ந்திருந்தவள் அப்படியே துக்கத்தில் ஆழ்ந்திருந்து பகல் சுமார் இரண்டு மணிக்கு விழித்தெழுந்து உட்கார்ந்து கொண்டாள். மின்சார விசிறி சுழன்று, குளிர்ந்த காற்றோட்டத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. ஆனாலும், பகல் வேளையின் உக்கிரத்தைத் தாங்க மாட்டாதவளாய், அவள் துவண்டு துவண்டு திண்டில் சாய்ந்து கொட்டாவி விட்டுத் தலையைச் சொறிந்து கொண்டு இருந்தபடி புஸ்தகத்தை எடுத்துப் படிக்க முயற்சிப்பதும், கைகள் சோம்பிப் புஸ்தகத்தைக் கீழே நழுவவிடுவதால் அது பொத்தென்று மெத்தையின் மேல் விழுவதுமான காட்சி தென்பட்டது. அந்த மடந்தைக்கு சுமார் 17 அல்லது 18 வயது நிறைந்திருக்கலாம். அதிக உயரமாகவும், அதிகக் குள்ளமாகவும் இல்லாமல் அவள் நடுத்தர உயரம் உடையவளாய்க் கொடிபோல மெலிந்திருந்தாள். முகம் கோழி முட்டையின் வடிவம் போலச் சிறிது நீண்டு உருட்சியாக இருந்ததோடு சூட்சுமமான பகுத்தறிவும் வசீகரமும் வாய்ந்ததாகத் தென்பட்டது. ஆனால் அவள் ஓயாமல் இங்கிலீஷ் படிப்பதிலேயே தனது பொழுதை எல்லாம் போக்கி வந்தாள் ஆதலால், அதனால் அவளது மூளை பண்பட்டு வந்தது ஆனாலும், முகம் உடம்பு கை கால்கள் முதலியவற்றின் புதுத்தன்மையும், ஜொலிப்பும், தளதளப்பும் பரிபூர்ண நிலைமை அடையாமல் குறைவுபட்டுத் தோன்றின. அவளுக்குச் சகலமான செல்வங்களும் செளகரியங்களும் குறைவற இருந்தன. ஆனாலும், தேக உழைப்பு இல்லாமையாலும், உட்கார்ந்த இடத்திலேயே படித்து மூளையையும் தேகத்தையும் உருக்கிக் கொண்டிருந்தாள் ஆதலாலும், பசி ஜீரணசக்தி தேகபுஷ்டி முதலியவை குன்றிப் போனதாகத் தோன்றின. ஆகவே, அந்த மடந்தை படிப்பின் விஷயமாகச் செலவு செய்து வந்த தேகபலம், ஆகாராதிகளின் மூலமாக அவளது தேகத்திற்குக் கிடைத்த புஷ்டிக்கு அதிகப்பட்டதாகவே இருந்து வந்தது. ஆகவே அவள் சம்பூர்ணமான செல்வங்களுக்கு உரியவளாக இருந்தும், பக்குவ காலப் பெண்ணாக இருந்தும், தேகத்திற்கு உழைப்பைக் கொடுக்காமல் மூளைக்கு மாத்திரம் அதிக உழைப்பைக் கொடுத்து வந்ததால், அவள் ஊதினால் பறக்கும் தன்மை உடைய புஷ்ப இதழ் போலச் சிறிதும் பலம் இன்றி அழகொன்றையே உடையவளாய்க் காணப்பட்டாள். அந்த யெளவன மடந்தை அதிகமான ஆபரணங்களை அணியாமல், மிதமாகவே அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். அவளது காதுகளில் வைரக் கம்மல்கள் இருந்தன. மூக்கில் வைரத் திருகுகள் காணப்பட்டன. ஓயாமல் படித்துப் படித்துக் கண்களின் சக்தி குறைவுபட்டுப் போனமையால், அவளது முகத்தில் தங்க மூக்குக் கண்ணாடிகள் ஜ்வலித்துக் கொண்டிருந்தன. கைகளில் இரண்டு தங்க வளையல்களும், கழுத்தில் நல்ல முத்துமாலை ஒன்றும், உள்ளங் கழுத்தில் வைர அட்டிகை ஒன்றும் காணப்பட்டன. இடுப்பில் தங்க ஒட்டியானமும், மணிக்கட்டில் கைக்கடியாரம் ஒன்றும் தவறாமல் எப்போதும் இருந்து வந்தன. அவள் கட்டிலில் இருந்து கால்களை ஊன்றிக் கீழே இறங்கினால், அடியில் ஆயத்தமாகக் கிடந்த வெல்வெட்டு சிலிப்பரை மாட்டிக் கொண்டுதான் அவள் காலை அப்பால் எடுத்துவைப்பாள். அவள் அணிந்திருந்தது வெள்ளை வெளேரென்று துல்லியமாக வெளுத்திருந்த மஸ்லின் சேலையானாலும், அதன் தலைப்புகளிலும், ஒரங்களிலும், ஜரிகை பூக்கள் நிறைந்த வெல்வெட்டு கரைகள் வைத்துத் தைக்கப்பட்டிருந்தன. அந்தச் சேலையின் ஒரங்களிலும் அவள் அணிந்திருந்த இங்கிலிஷ் ஜாக்கெட்டுகளிலும் ஏராளமான தொங்கல்கள் (லேஸ்கள்) வைத்துத் தைக்கப்பட்டிருந்தன. அவளது தேகம் சதைப்பிடிப்பின்றி மெலினம் அடைந்திருந்ததானாலும், அவளது சிரத்திலிருந்த அளகபாரம் மாத்திரம் கன்னங்கரேல் என்று கருத்துப் பெருத்துச் சுருள்விழுந்து காடு போல அடர்ந்து கணைக்கால் வரையில் நீண்டதாக இருந்தது ஆகையால், வேலைக்காரி அதை அழகாகப் பின்னி விசாலமான ஜடை போட்டு, அதன்மேல் ஒரு ரோஜாப் புஷ்பத்தையும் வைர ஜடைபில்லை ஒன்றையும் சொருகி வைத்திருந்தாள். ஆதலால், அந்த ஜடை கட்டிலில் வெகு நீளம் நீண்டு கிடந்து அவளது பின் அழகை நிரம்பவும் சிறப்பித்துக் கொண்டிருந்தது. தான் படித்து வந்த கலாசாலையில் மற்ற எவரும் முகத்தில் மஞ்சள் பூசி நீராடுவதே இல்லை என்று அவள் உணர்ந்து கொண்டாள் ஆகையால், தான் மாத்திரம் அவ்வாறு செய்து கொண்டால், கலாசாலையின் தலைவியான வெள்ளைக்கார உபாத்தியாயினிக்கு அது ஒருவேளை அருவருப்பாக இருக்குமோ என்ற நினைவினால் அந்த மடந்தை மஞ்சள் பூசி நீராடுவதைப் பல வருஷங்களுக்கு முன்னிருந்தே நிறுத்திவிட்டு ரோஸ்பவுடர் முதலிய வஸ்துக்களை உபயோகித்து வந்தாள். கண்ணுக்கு மை திட்டிக் கொள்வதை வெள்ளைக்கார ஸ்திரிகள் அநாகரிகம் என்று மதிப்பதால், அதையும் நமது மனோன்மணி விலக்கிவிட்டாள். நெற்றியில் கருஞ்சாந்துத் திலகமிடுவதைக் கண்டு வெள்ளைக்கார உபாத்தியாயினிகள் சிறிதளவு பொறுமை காட்டினர் ஆதலாலும், மற்றப் பெண்கள் திலகமிட்டுக் கொண்டு வந்தனர் ஆதலாலும், மனோன்மணி அதை மாத்திரம் விலக்காமல் வைத்துக் கொண்டிருந்தாள். அது நிற்க, தாம்பூலந் தரிக்கும் வழக்கமே வெள்ளைக்காரரிடம் இல்லை. ஆதலால், நம்மவர் தாம்பூலம் தரித்து வாய், பல் முதலியவற்றைச் சிவக்க வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டால், அவர்கள் நம்மைக் காட்டு மனிதர்கள் என்று நினைப்பதால், மனோன்மணி தாம்பூலம் என்று ஒரு வஸ்து இருக்கிறது என்பதை மறந்து, தனது பற்களை வெள்ளை வெளேர் என்று துல்லியமாக வைத்துக் கொண்டிருந்தாள். அவளது பக்குவ காலத்திற்குத் தக்கபடி முகத்தில் சதைப்பிடிப்பு ஏற்படாமல் இருந்ததனால், அவள் வாயைத் திறந்த போதெல்லாம், பளிச்சென்று பிரகாசித்த பற்கள் முகத்திற்குத் தேவையான அளவிற்கு மிஞ்சிப் பெருத்திருப்பது போலத் தோன்றி விகாரப்படுத்தின. ஆனால், அவள் வாயைத் திறவாமல் மற்ற அலங்காரங்களோடு வெல்வெட்டு ஜோடு தரித்து நடக்கும்போது, பார்சீ தேசத்து ராஜகுமாரி போல அற்புத வனப்போடும் வசீகரத்தோடும் காணப்பட்டாள். தான் வித்தை கற்க வேண்டும் என்ற ஒருவித அறிவுத் தாகமும், மனோவேகமும் மாத்திரம் அவளிடம் மிதமிஞ்சி இருந்ததாகக் காணப்பட்டனவே அன்றி, யெளவன காலத்திற்குரிய பஞ்சேந்திரிய வேட்கை எல்லாம் வறண்டு மலினமடைந்து போனதாகவே தோன்றியது. ஆகையால், தான் ஒரு புருஷனை அடைய வேண்டும் என்ற தாகமாவது, குடும்ப வாழ்க்கையில் தான் ஈடுபட்டு அதன் சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்ற பிரேமையாவது அவளது மனதில் தோன்றி அவளை ஊக்கியதாகத் தோன்றவே இல்லை. தான் இங்கிலிஷ் பாஷையில் பி.ஏ., பட்டம் பெற்றவள் என்ற பெயர் வாங்க வேண்டும் என்பதும், அந்தப் பாஷையில் தான் வாக்கு வன்மையோடு அழகாக எவருடனும் பேசும் திறமையைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதும், அந்தப் பாஷையில் உள்ள சகலமான புஸ்தகங்களையும் கற்று மேதையாக வேண்டும் என்பதே அவளுடைய முழுமனதையும் கவர்ந்த பெரு வேட்கையாக இருந்தது. அதுவுமன்றி, இங்கிலீஷ் பாஷை படிக்காத மனிதர் மனிதரல்ல என்றும், அவ்வாறு இருந்து உழலும் நமது நாட்டு ஸ்திரீகள் எல்லோரும் அறிவில் நிரம்பவும் தாழ்ந்த நிலைமையில் இருப்பவர்கள் என்றும் இந்த நாட்டில் தன்னைப் போல ஒவ்வொரு ஸ்திரியும் இங்கிலீஷ் படித்து, மேல் நாட்டு கல்வியைக் கரைகாண வேண்டுவது அவசியம் என்றும் அவள் உறுதியாக எண்ணிக் கொண்டிருந்ததாகத் தெரிந்தது. பெண் பாடசாலைகளில் உள்ள உபாத்தியாயினிகளும், மாணவிகளும், தாமும் வெள்ளைக்கார ஸ்திரீகள் பேசுவது போல மிருதுவாகவும் அழகாகவும் பேச வேண்டும் என்ற கருத்தோடு தமிழ்ப் பாஷையில் ‘ஸ்’ என்ற எழுத்தை சகலமான இடங்களிலும் எதேஷ்டமாகப் பிரயோகிப்பது சர்வ சாதாரணமாகப் போய்விட்ட தாகையால், அவர்களிடம் பயின்ற நமது மனோன்மணியிடத்திலும் அந்த லட்சணம் பூர்த்தியாக நிறைந்திருந்தது. உதாரணமாக, அவள் தன்னுடைய வேலைக்காரியை அழைத்து ஏதாவது உத்தரவிட வேண்டுமானால், “அடீ லெம்பகம்! நம்முடைய தோட்டக்கார ஸொக்கலிங்கனிடம் போய் ஒரு ரோஸாப்பூ மாலை ஸெய்ய ஸொல்லு. நல்ல வாஸனையுள்ள புஸ்பமாய்ப் பார்த்து ஸேர்த்துக் கட்டஸொல்லு” என்று அவளது வார்த்தைகள் நம்முடைய செவிகளில் தொனிக்கும். அவள் நடை உடை பாவனை முதலிய வெளிப்படையான விஷயங்களில் அத்தகைய மாறுபாடுகள் உடையவளாகத் தோன்றினாலும், மனவுறுதி தேக பரிசுத்தம் முதலிய அடிப்படையான அம்சங்களில் நிஷ்களங்கமானவளாக இருந்தாள். அன்னிய மனிதரைக் கண்டு ஸ்திரீகள் நாணி மறைவது அநாவசியம் என்றும், அது அக்ஞான நிலைமையில் இருப்பவரே செய்யத் தகுந்த காரியம் என்றும் அவள் நினைத்திருந்தாள். தான் உண்மையாகவும் நேரான வழியிலும் நடக்க வேண்டும், தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உறுதியான கொள்கைகள் அவளிடம் வேரூன்றி இருந்தது நன்றாகத் தெரிந்தது. மற்றபடி அன்னியரைக் கண்டு தான் நாணுவதாவது, அஞ்சுவதாவது அநாகரிகமான செய்கை என்பது அவளுடைய உறுதியான கோட்பாடு. ஜாதிமதம் என்ற வித்தியாசங்களே தப்பான ஏற்பாடுகள் என்பதும் அவளுடைய எண்ணம். மனிதர் சுத்தமான உடை உடுத்தி பார்ப்பதற்கு விகாரம் இல்லாமல் இருந்தால், அவர்கள் எல்லோரும் சமமானவர்கள் என்ற நினைவையும் அவள் கொண்டிருந்தாள். தவிர, அவள் எப்போதும், செல்வத்திலும் செல்வாக்கிலும் இருந்து வளர்ந்தவள் ஆதலால், அவளது புத்தி அற்ப விஷயங்களில் எல்லாம் செல்லாமல் பெரும் போக்காகவே இருந்தது. அவள் வீணை முதலிய ஏதாவது சிறந்த சங்கீத வாத்தியத்தில் தேர்ச்சியடைய வேண்டும் என்பது அவளது தந்தையின் விருப்பம். ஆனாலும், அவளது கவனம் பொழுது முதலியவை முழுதும் இங்கிலிஷ் படிப்பிலேயே பூர்த்தியாகச் சென்று கொண்டிருந்தது. ஆகையால், சங்கீதம் அவளது மனதை அவ்வளவாகக் கவரவில்லை.

இத்தகைய குணாதிசயங்கள் வாய்ந்தவளாக நமது மனோன்மணியம்மாள் அலுத்து, முன் விவரிக்கப்பட்டபடி ஸொகுலான கட்டில் மெத்தைகளின் மேல் சாய்ந்து, புஸ்தகமும் கையுமாக உறங்கியும், இடையிடையில் கண்களை விழித்துப் பார்த்துக் கொண்டும் இருக்க, அந்த விடுதியின் வாசலில் உட்கார்ந்திருந்த வேலைக்காரி ஓசை செய்யாமல் உள்ளே வந்து அவளுக்கெதிரில் நிற்காமல் மறைவாக நின்று, “அம்மா! அம்மா!” என்று நிரம்பவும் பணிவாக அவளைக் கூப்பிட்டாள்.

அதைக் கேட்ட மனோன்மணி, “யார் அது? சண்பகம்! நான் கூப்பிடாவிட்டால் வரவேண்டாம் என்று சொல்லி இருந்தேனே! ஏன் வந்தாய்” என்றாள்.

அதைக் கேட்ட வேலைக்காரி, “வாசலில் யாரோ மனிதர் வந்திருக்கிறார்களாம். அவர்கள் உங்களோடு பேச வேண்டுமாம். டலாயத்து வந்து சங்கதியைச் சொல்லிவிட்டு இதோ வாசலில் நிற்கிறான்” என அந்தச் சிங்கதியைச் சொல்லி, “உங்களுடைய உத்தரவைக் கேட்டுக் கொண்டு போகலாம் என்று வந்தேன். வேறொன்றும் இல்லை” என்று மிகுந்த பணிவோடு கூறினாள்.

அதைக் கேட்ட மனோன்மணி நிச்சலனமாக இருந்தபடியே பேசத் தொடங்கி, “யாரோ வந்தால், அதை என்னிடம் ஏன் சொல்ல வேண்டும்? அப்பா கச்சேரிக்குப் போயிருக்கிறார்கள் என்று சொல்லி அனுப்புகிறது தானே? எனக்குத் திங்கள் கிழமை தினம் பரீட்சை. ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு விலை மதிப்பற்றதாக இருக்கிறது. இந்தச் சமயத்தில் நீங்கள் வந்து ஏன் இடையூறு செய்கிறீர்கள்?” என்றாள்.

வேலைக்காரி, “அவர்கள் பெரிய எஜமானைப் பார்ப்பதற்காக வந்தவர்கள் அல்லவாம்; உங்களைப் பார்த்து விட்டுப் போவதற்காக வந்திருக்கிறார்களாம்?” என்றாள். - -

மனோன்மணி சிறிது வியப்படைந்து, “என்னைப் பார்ப்பதற்காகவா வந்திருக்கிறார்களாம்? எனக்குப் பழக்கமானவர்கள் யார் இருக்கிறார்கள்? அவர்கள் ஆண்பிள்ளையா பெண்பிள்ளையா? அவர்கள் எங்கே இருந்து வந்திருக்கிறார்களாம்? அந்த விவரத்தை எல்லாம் டலாயத்து விசாரிக்கவில்லையா?” என்றாள்.

வேலைக்காரி, “அவன் விசாரித்துக் கொண்டுதான் வந்திருப்பான். நான் அவனிடம் எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டு வரவில்லை. அவனையே உள்ளே கூப்பிடட்டுமா? இல்லா விட்டால் நான் அவனிடம் போய் எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டு வரட்டுமா?” என்றாள்.

மனோன்மணி, “நீ வரும்போதே எல்லாச் சங்கதிகளையும் நன்றாக விசாரித்துக் கொண்டல்லவா வரவேண்டும். நான் கேட்பதற் கெல்லாம் நீ அடிக்கடி வெளியில் போய் சங்கதியைத் தெரிந்து கொண்டு வருவதென்றால், என் பொழுதெல்லாம் வினாயல்லவா போய்விடும். அவனையே இங்கே கூப்பிடு” என்று கூறிய வண்ணம் கட்டிலை விட்டு இறங்கி, அருகில் கிடந்த ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்து கொண்டாள்.

உடனே வேலைக்காரி அங்கிருந்தபடியே, “டலாயத்தையா! இங்கே வாரும்” என்று மிருதுவான குரலில் கூப்பிட, அவன் உள்ளே வந்து குனிந்து வணங்கி மனோன்மணிக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் பணிவாக நின்றான்.

உடனே மனோன்மணி, “டலாயத்! வாசலில் யார் வந்திருக்கிறது? அவர்கள் ஆண் பிள்ளைகளா, பெண் பிள்ளைகளா? எங்கே இருந்து வந்திருக்கிறார்களாம்? தாங்கள் இன்னார் என்று அவர்கள் சொன்னார்களா? அப்பா கச்சேரிக்குப் போயிருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்லவில்லையா?” என்றாள்.

உடனே டலாயத், “அம்மணி அவர்கள் கோமளேசுவரன் பேட்டையில் இருந்து வந்திருக்கிறார்களாம். அம்மாள் ஒருவரும், ஐயா ஒருவரும் வந்திருக்கிறார்கள். அவர்களோடு ஒரு வேலைக்காரப் பெண் ஒருத்தி ஒரு தாம்பளத்தில் ஏதோ சாமான்களை வைத்து அதை ஒரு பீதாம்பரத்தால் மூடி வைத்துக் கொண்டிருக்கிறாள். அவர்கள் ஒரு பெட்டி வண்டியில் வந்திறங்கினார்கள். அந்த ஐயாவுக்கு சுமார் 25 வயசிருக்கலாம். அம்மாளுக்கு 20 வயசிருக்கலாம். பார்ப்பதற்கு அவர்கள் தக்க பெரிய இடத்து மனிதர்கள் போல இருக்கிறார்கள். வண்டி நம்முடைய வாசலில் வந்து நின்ற உடன், யாரும் கீழே இறங்கவில்லை. அந்த ஐயா வண்டியில் இருந்தபடி என்னைக் கூப்பிட்டு பெரிய எஜமான் இருக்கிறார்களா? என்று கேட்டார். அவர்கள் கச்சேரிக்குப் போயிருப்பதாக நான் சொன்னேன். பிறகு அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு ‘அம்மாள் உள்ளே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று கேட்டார்கள். நீங்கள் மெத்தையில் படித்துக் கொண்டிருப்பதாக நான் சொன்னேன். உடனே அந்த ஐயா தமக்குப் பக்கத்தில் இருந்த அம்மாளைப் பார்த்து நான் வெளியில் இருக்கிறேன். நீ மாத்திரம் வேலைக்காரியை அழைத்துக் கொண்டு மெத்தைக்குப் போய்ப் பெண்ணைப் பார்த்துக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்து சேர். மறுபடி நான் இன்னொரு நாள் பெரியவர் இருக்கும்போது வந்து அவர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து ‘அப்பா டலாயத்து! நீ மெத்தைக்குப் போய், மன்னார்குடியில் உள்ள இவர்களுடைய புதிய சம்பந்தியம்மாளின் தங்கை பெண்ணைப் பார்த்துவிட்டுப் போகிறதற்காக வந்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு வா’ என்றார். அவர்கள் வண்டியிலேயே இருக்கிறார்கள். உங்களுடைய சந்தர்ப்பத்தை அறிந்து கொண்டு வருவதாக நான் சொல்லிவிட்டு வந்தேன்” என்றான்.

மனோன்மணியம்மாள் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்த பின், “திங்கட் கிழமை தினம் பரீட்சை; அதற்காக நான் சாப்பாட்டைக் கூட நினைக்காமல் படித்துக் கொண்டிருக்கிறேன். இந்தச் சமயத்தில் இவர்கள் என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள். வருகிறவர்கள் முன்னால் தெரிவித்து வரக்கூடாதா? அப்படித் தெரிவித்திருந்தால், அப்பா இங்கே இருக்கும் நேரத்தைத் தெரிவித்திருக்கலாம். அல்லது, திங்கட்கிழமைக்குப் பிறகு வரும்படி எழுதி இருக்கலாம். அப்படி வந்திருந்தால் நம்முடைய வேலையும் கெடாது. அவர்களுடைய எண்ணமும் நிறைவேறும். அப்படிச் செய்யாமல், தாங்கள் நினைத்துக் கொண்டவுடனே புறப்பட்டு வந்து விட்டார்கள். இப்படி வருவதனால் எதிராளியை அசெளகர்யத்துக்கு ஆளாக்குகிறோமே என்பதை உணர்கிறதே இல்லை; இது தான் இந்தக் கருப்பு மனிதர்களுக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் உள்ள தாரதம்மியம். எந்த விஷயத்திலும் வெள்ளைக்காரர்கள் ஒழுங்காகவும், முன்யோசனையான தக்க ஏற்பாடுகளுடனுமே நடந்து கொள்வார்கள். அவர்களுக்குப் பொருளைக் காட்டிலும் பொழுதே நிரம்பவும் முக்கியமானது. அநாவசியமாக அவர்கள் ஒரு நிமிஷப் பொழுதைக்கூட வீணாக்க மாட்டார்கள்; அவர்கள் தங்களுடைய செளகரியத்தையும் பிறருடைய செளகரியத்தையும் கலந்து இரண்டிற்கும் கெடுதல் இல்லாமல் எந்தக் காரியத்தையும் செய்வார்கள். இப்போது வந்திருக்கும் அம்மாள் இங்கே வந்தால் இலேசில் என்னை விட்டுப் போவார்கள் எனத் தோன்றவில்லை. அவர்கள் படிப்பின் யோக்கியதையையும், காலத்தின் அருமையையும் அறிந்தவர்களாக இருந்தால், என்னுடைய அவசர சந்தர்ப்பத்தை உணர்ந்து உடனே போய்விடுவார்கள். அந்த அம்மாள் அநேகமாகப் படிக்காதவர்களாகத்தான் இருக்க வேண்டும். வந்தால் சாயுங்காலம் வரையில் அநாவசியமான விஷயங்களை எல்லாம் பேசி என் பொழுதை எல்லாம் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவார்கள் என்பது திண்ணம் ஆகையால், நான் இவர்களை, இப்போது பார்ப்பதைவிட, பார்க்காமல் இருப்பதே நல்லதென்று நினைக்கிறேன். பெண்ணை இவர்கள் பார்த்து என்ன செய்யப் போகிறார்கள்? வாசிக்காத முட்டாளாக இருந்தால், பெண்ணைப் பார்த்து அதன் குணா குணங்களை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். நான் பி.ஏ. வகுப்பில் படிக்கிறேன் என்பது இவர்களுக்கு எப்படியும் தெரிந்திருக்கலாம். அதில் இருந்தே என்னுடைய யோக்கியதையை இவர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். நான் அழகாக இருக்கிறேனா என்று பார்க்க இவர்கள் ஒருவேளை ஆசைப்படலாம். அதைப் பார்ப்பதற்கு என் புருஷர் ஆசைப்படுவது நியாயமேயன்றி, இவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து நான் எப்படி இருக்கிறேன் என்று என் புருஷரிடம் தெரிவிக்கப் போகிறார்களோ? நாம் ஒரு காரியம் செய்யலாம். தபால் கார்டு அளவில் எடுக்கப்பட்ட என்னுடைய போட்டோகிராப் படம் நாலைந்து இருக்கின்றன. ஒரு படத்தை ஒரு காகிதத்தில் வைத்து மடித்துத் தருகிறேன். அதை எடுத்துக் கொண்டு நீ போய், அந்த ஐயாவிடம் எனக்குத் திங்கட்கிழமை முக்கியமான ஒரு பரீட்சை இருக்கிறது. அதற்காக நான் அநேகம் புஸ்தகங்கள் படிக்க வேண்டும். திங்கள் கிழமைக்குப் பிறகு ஒரு நாள் குறித்து எழுதினால் அன்று தயாராக இருக்கிறேன். இப்போது அவர்களோடு சம்பாஷிக்கும் படியான இன்பத்தை மறுக்க நேர்ந்ததைப்பற்றி வருந்துகிறேன். நான் அவர்களுக்கு என் நன்மதிப்பைத் தெரிவிப்பதற்கு அடையாளமாக இந்தப் படத்தைக் கொடுக்கச் சொன்னேன்’ என்று நீ சொல்லி, அவரிடம் இந்தப் படத்தைக் கொடுத்து அவர்களை அனுப்பிவை. திங்கட்கிழமைக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறிய வண்ணம் எழுந்து, பக்கத்தில் இருந்த மேஜையின் சொருகு பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்த தனது புகைப்படம் ஒன்றை எடுக்கத் தொடங்கினாள்.

அவள் தெரிவித்த முடிவு டலாயத்துக்கும் வேலைக்காரிக்கும் அவ்வளவு உசிதமானதாகத் தோன்றவில்லை ஆதலால், அவர்கள் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மனோன்மணியின் சொல்லுக்கு வேறாக நடக்க டலாயத்து அஞ்சினான் ஆதலால், அவன் மெளனமாக நின்றபடி வேலைக்காரிக்கு ஏதோ சைகை செய்தான். உடனே வேலைக்காரி நயமாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கி, “அம்மா! வந்திருக்கிறவர்கள் நம்முடைய புது சம்பந்திகளின் நெருங்கிய பந்துக்களாக இருக்கிறார்கள். நல்லகாலம் பார்த்து அவர்கள் பெண்னைப் பார்த்துவிட்டுப் போக வந்திருக்கிறார்கள். இது நல்ல சுபகாரியம்; இதைத் தடுப்பது அபசகுனம் போல் இருக்கும். அவர்கள் புதிய மனிதர்கள்; தங்களை நாம் அவமதித்ததாகவும் எண்ணிக் கொள்வார்கள். ஆகையால், வந்த மனிதருக்கு மரியாதை செய்யாமல் அவர்களை இப்படித் திருப்பி அனுப்புவது ஒழுங்கல்ல என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. எல்லாவற்றிற்கும் நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். இதோ டெலிபோன் இருக்கிறதல்லவா. இதை எடுத்து கச்சேரியில் இருக்கும் பெரிய எஜமானரைக் கூப்பிட்டு இன்னார் வந்திருக்கிறார்கள் என்ற சங்கதியையும், நீங்கள் செய்ய உத்தேசிக்கும் காரியத்தையும் அவர்களுக்குத் தெரிவியுங்கள். அவர்கள் அதை ஒப்புக் கொண்டால், அப்படியே செய்து விடுவோம். பிறகு பெரிய எஜமான் வந்து நீங்கள் செய்த காரியத்தைப்பற்றி ஒன்றும் சொல்லமாட்டார்கள்” என்றாள்.

அதைக் கேட்ட மனோன்மணி தனது பொழுது அநாவசியமாய்க் கழிவதை நோக்கி அதிருப்தியும் அவசரமும் காண்பித்தவளாய், “இவர்கள் நினைத்தபோது சொல்லாமல் வருகிறது. உடனே, நான் என்னுடைய அவசர வேலையை எல்லாம் போட்டுவிட்டு இவர்களோடு உட்கார்ந்து பேசவேண்டும். இதனால் என்னுடைய பரீட்சையில் நான் தவறிப்போய், இன்னொரு வருஷம் இதே வகுப்பில் இருந்தாலும் பாதகமில்லை. எப்படியாவது இவர்களுடைய இஷ்டப்படி நான் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நான் இவர்களை அவமரியாதைப் படுத்துகிறதாக எண்ணிக் கொள்ளுகிறதோ? நியாயம் நன்றாய் இருக்கிறது. என்னுடைய சந்தர்ப்பம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இவர்கள் வந்தது என்னை அவமரியாதையாக நடத்துகிறது என்பது இவர்களுக்கு ஏன் தெரியவில்லை? வெள்ளைக்காரராய் இருந்தால், நாம் இப்படிச் சொல்லி அனுப்புவதைப் பற்றி கொஞ்சமும் வருத்தமே பாராட்ட மாட்டார்கள். முதலில் அவர்கள் இப்படி திடும்பிரவேசமாக வரவே மாட்டார்கள். அதுவும் தவிர, சகுனம், அபசகுனம் என்பதிலேயே எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. நம்முடைய ஜனங்களிடம் காணப்படும் மூடநம்பிக்கைகளில் சகுனம் பார்ப்பதென்பது பெரிய முட்டாள்தனம். அவர்கள் வரும்போது நான் தயாராக இல்லாவிட்டால், அது அபசகுனம். அவர்கள் வரும் போது பூனை குறுக்கே வந்தால் அது அபசகுனம். இதை எல்லாம் நினைக்க நினைக்க, எனக்குச் சிரிப்பு வருகிறது. பூனை வயிற்றுப் பசியைத் தாங்க மாட்டாமல், எங்கேயாவது எலி அகப்படாதா என்று நினைத்துத் தேடிக்கொண்டு போகிறது. அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. மனிதன் மூக்கில் காற்று சிக்கிக் கொள்வதால் தும்முகிறான். அதற்கும் நாம் நினைத்துப் போகும் காரியத்துக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. ஒவ்வோரிடத்திலும் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு மனிதருக்கும் இப்படி ஊமை ஜாடை காட்டிக் கொண்டிருப்பதுதான் கடவுளுக்கு வேலை போல் இருக்கிறது. இப்படிக் கடவுள் செய்வதாக இருந்தால், அவர் நேரிலேயே வந்து அதைச் சொல்லிவிட்டுப் போவது சுலபமான வேலை அல்லவா? மற்ற எந்த தேசத்தாரும் சகுனம் என்பதையே பார்க்கிறதில்லையே. அங்கே பூனைகள் குறுக்கே போய்க் கொண்டுதான் இருக்கின்றன. மனிதர் ஒரு காரியம் செய்யத் தொடங்குகையில், மற்றவர் தும்முவதும் உண்டு. ஆனால் கடவுள் அந்தத் தேசங்களில் அப்போது அங்கே இருந்து சைகை காட்டுகிறதில்லை போலிருக்கிறது. நம்முடைய தேசத்தில்தான் கடவுள் வேண்டும் என்று இந்த வேலையைச் செய்து வருகிறார் போல் இருக்கிறது. இந்தப் பைத்தியக்கார நினைவெல்லாம் நம்முடைய தேசத்தை விட்டு எப்போது போகிறதோ அப்போதுதான் இந்தத் தேசம் கூேடிமமடையும். ஜனங்களும் உண்மையான அறிவாளிகள் என்று அன்னிய தேசத்தாரால் கருதப்படுவார்கள். அது போகட்டும். நீ சொல்லுகிறபடி டெலிபோன் மூலமாக அப்பாவோடு பேசி வேண்டுமானால், சங்கதியை அவர்களிடம் சொல்லிப் பார்க்கலாம்” என்று கூறிய வண்ணம் படத்தை மேஜையின் மீது வைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த டெலிபோனண்டை போய், தனது தந்தையிருந்த கலெக்டர் கச்சேரியின் டெலிபோனுடன் அதைச் சேர்க்கச் செய்து, அவருடன் பேசத்தொடங்கி, விவரங்களை எல்லாம் அவரிடம் தெரிவித்து, தான் செய்ய உத்தேசித்த காரியத்தையும் கூறினாள்.

அவள் தெரிவித்த வரலாறுகளைக் கேட்ட பட்டாபிராம பிள்ளையினது மனதில் ஒருவித வியப்பும் சந்தேகமும் உண்டாயின. அவர் மன்னார்குடியில் அடிஷனல் மாஜிஸ்டிரேட்டாக இருந்த காலத்தில் வேலாயுதம் பிள்ளையினது குடும்ப வரலாறுகளை நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தார். அதன் பிறகு, இரண்டொரு வருஷ காலமாகத் தமது புதல்வியைக் கந்தசாமிக்கு மணம்புரிவிக்க வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருந்த காலத்தில், அவர் தமது புதிய சம்பந்தியின் குடும்ப வரலாறுகளையும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்கள் யார் யார் எந்தெந்த ஊரில் இருக்கின்றனர் என்ற விஷயங்களையும் நன்றாக அறிந்திருந்தார். அதுவுமன்றி, தமக்கு மாப்பிள்ளையாக வரப்போகும் கந்தசாமி கோமளேசுவரன் பேட்டையில் தனியான ஜாகை வைத்துக் கொண்டு வேலைக்காரியின் மூலமாகத் தனது போஜனத்தைச் செய்து கொண்டு படித்துவருகிறான் என்ற விவரமும் அவருக்கு நன்றாகத் தெரியும். வேலாயுதம் பிள்ளையின் சம்சாரத்துக்குத் தங்கை ஒருத்தி இருப்பதாகவே எவரும் அவரிடம் தெரிவித்ததில்லை. ஆதலால், மனோன்மணி தெரிவித்த செய்தி நிரம்பவும் புதுமையாக இருந்ததன்றி, அப்படிப்பட்ட சிறிய தாய் ஒருத்தி கோமளேசுவரன் பேட்டையில் இருந்தால், கந்தசாமி அவளிடம் இராமல் தனியாக இருக்க மாட்டான் என்ற ஒர் ஐயமும் தோன்றியது. ஆனாலும், அதற்குப் பலவித சமாதானங்களும் புலப்பட்டன. அவள் தனது சிறிய தாயாக இருந்தாலும், தான் அவளுடைய வீட்டில் நெடுங்காலம் போஜனம் செய்து வருவது இரு திறத்தாருக்கும் அசெளகரியம் என்று நினைத்துக் கந்தசாமி தனியாக இருந்து வருகிறானோ என்ற எண்ணமும் தோன்றியது. ஆகவே, பட்டாபிராம பிள்ளை தமது புதல்விக்கு அடியில் வருமாறு மறுமொழி கூறினார். “வந்திருப்பவர்கள் தக்க கண்ணியமான மனிதர்கள்; அவர்களுடைய சம்பந்தத்தை நாம் அடையப் போகிறோம். நீ அவர்களுடைய வீட்டில் போய் வாழ்க்கை நடத்தப் போகிறாய். அவர்களை நாம் தக்க மரியாதை செய்து வரவேற்று உபசரித்து அனுப்புவதே நியாயமன்றி, நமக்கு அதனால் அசெளகரியம் ஏற்படுகிறதென்று நினைத்து அவர்களைப் பார்க்காமல் அனுப்புவது முற்றிலும் தவறான விஷயம். இப்படி நாம் நடந்து கொண்டால், நாம் மரியாதை தெரியாத சுத்த அநாகரிகர்கள் என்ற பெயரெடுக்க நேரும். இந்தப் பரீட்சை தவறிப் போவதனாலும் பாதகமில்லை. அல்லது; இன்று, நாளை இரவுகளில் இரண்டொரு மணி நேரம் அதிகமாகப் படித்தால், இப்போது செலவாகும் காலத்தைச் சரிப்படுத்திக் கொள்ளலாம். ஆகையால், நீ வேலைக்காரியின் மூலமாய் அவர்களை வரவேற்று அவர்களோடு வந்திருக்கும் உன் சிறிய மாமியாரை உபசரித்து வைத்து சம்பாவித்துக் கொண்டிரு. என்னுடைய கச்சேரி இன்று சனிக்கிழமை ஆகையால், 4 மணியோடு மூடப்படும். நான் உடனே புறப்பட்டு வந்து சேருகிறேன். நான் வருகிற வரையில் இருக்கும்படி நான் கேட்டுக் கொண்டதாக அவர்களிடம் தெரிவித்து, அவர்களை இருக்கச் செய். நான் கச்சேரியை விட்டுப் புறப்பட, இன்னம் 3 மணி காலம் இருக்கிறது. இதற்குள் நான் மன்னார்குடிக்கு ஓர் அவசரத் தந்தி அனுப்பி, இவர்களைப் பற்றிய வரலாறு முழுதையும் மறுதந்தி மூலமாய் விவரமாகத் தெரிந்து கொண்டு வந்து சேருகிறேன். அவர்களிடம் அசட்டையாக இராமல், ஜாக்கிரதை யாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்” என்று மறுமொழி கிடைக்கவே அதைப் பெற்ற மனோன்மணி அரை மனதோடு அதை ஏற்றுக் கொண்டு வேலைக்காரியிடம் அதைத் தெரிவித்து, வண்டியில் வந்திருக்கும் மனிதர்களை உபசரித்து உள்ளே அழைத்து வரும்படி தெரிவிக்க, அவளும் டலாயத்தும் உடனே வெளியில் சென்றனர்.

பட்டாபிராம பிள்ளை தமது புத்திரிக்குத் தெரிவித்தபடி மன்னார்குடிக்கு ஒர் அவசரத் தந்தியை உடனே அனுப்பியதோடு, மறுமொழிக்கும் பணம் கட்டி அதை அனுப்பி வைத்தார்.

கால் நாழிகை காலம் கழிந்தது. விருந்தாக வந்த வேஷக்காரர்களை அழைத்துக் கொண்டு வேலைக்காரி மேன் மாடத்திற்கு வந்து சேர்ந்தாள். அவர்களோடு வந்த வேலைக்காரப் பெண் ஒருத்தி ஒரு தட்டில் ரவிக்கைத் துண்டுகள், பழம், பாக்கு, வெற்றிலை, மஞ்சள் முதலிய வஸ்துக்களை சுமந்து வந்தாள். தனது இளைய மாமியார் திவ்ய தேஜோமயமான அழகும் அலங்காரமும் வாய்ந்த மகா வசீகரமான யெளவனப் பெண்மணியாக இருந்ததைக் கண்ட மனோன்மணியம்மாள் அளவற்ற பிரமிப்பும் ஆச்சரியமும் ஒருவித சந்தோஷமும் அடைந்தவளாய் மாறினாள்.

கந்தசாமி இயற்கையிலேயே அற்புதமான தேக அமைப்பும் வசீகரமான முகத்தோற்றமும் வாய்ந்த யெளவனப் புருஷன் ஆதலாலும், அவன் தனது கலாசாலையில் நடத்தப்பட்ட நாடகங்களில் பல தடவைகளில் ஸ்திரி வேஷந் தரித்து அவ்விஷயத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தான் ஆதலாலும், அவன் மனோன் மா.வி.ப.I-14 மணியைப் பார்க்க வந்த தினத்தில் முன் தடவைகளைக் காட்டிலும் பன்மடங்கு அதிக விசேஷமாகவும் ஜாக்கிரதையாகவும் தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தான் ஆதலாலும், அவன் வேஷந் தரித்து வந்திருக்கிறான் என்று எவரும் சிறிதும் சந்தேகிக்காதபடி அவன் தத்ரூபம் யெளவன ஸ்திரீ போலவே காணப்பட்டான். உண்மையில் அவனுக்கு இருபது வயதிற்கு அதிகம் ஆயிருந்தது. ஆனாலும், ஸ்திரீ வேஷத்தில் அவனது வயது இரண்டு மூன்று குறைந்தே தோன்றியது. நாடகங்களில் வேஷங்களுக்குத் தேவையான உயர்ந்த பனாரீஸ் புடவைகள், பளபளப்பான நகைகள் முதலியவைகளை சில வியாபாரிகள் வாடகைக்குக் கொடுத்து வாங்கிக் கொள்வது வழக்கம் ஆதலால், அவர்களிடம் பழகியிருந்த கோபாலசாமி அன்றைய தினம் கந்தசாமிக்கு வேண்டிய ஆடை ஆபரணங்களை எல்லாம் அந்த வர்த்தகர் ஒருவரிடம் வாடகைக்கு வாங்கிக் கொண்டு வந்திருந்தான். கந்தசாமி அந்த ஆடை ஆபரணங்களில் தனது ஆண்வடிவத்தை முற்றிலும் மறைத்து மனதை மயக்கும் சுந்தரமும் வசீகரமும் பரிபூர்ணமாக நிரம்பப் பெற்ற மடமங்கை போல மாறி உண்மையிலேயே ஸ்திரீயாகப் பிறந்தோர் அனைவரும் நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்ற அரிய குணங்களைத் தன்னிடம் கற்றுக்கொள்ளத் தக்கபடி அழகாக நாணிக் கோணி அன்னநடை நடந்த மான்போல மருண்டு புடவைத் தலைப்பை அடிக்கடி இழுத்திழுத்துத் தனது உடம்பை மூடிக்கொண்டு காலின் கட்டை விரலைப் பார்த்தபடி நடந்து வந்த காட்சி கண்கொள்ள வசீகரக் காட்சியாக இருந்தது. அப்போதே மலர்ந்து விரிந்த ரோஜாப் புஷ்பத்தைத் தாங்கிய பூங்கொம்பு தென்றல் காற்றில் அசைந்து துவளுவது போல, அவனது பொற்கொடி போன்ற மேனி அழகாகத் துவண்டு நெளிந்து, காண்போர் மனதைக் கொள்ளை கொண்டது. அவனோடு கூடவே சதாகாலமும் இருந்து பழகியவனும், அவன் பெண் வேஷந் தரிக்கையில் பக்கத்திலேயே இருந்தவனுமான கோபாலசாமியே அவனது மாறுபட்ட கோலத்தைக் கண்டு பிரமித்து, அவன் உண்மையில் ஸ்திரீதானோ என்று சந்தேகித்ததன்றி, அவனைக் கட்டிப்பிடித்து ஒருதரமாவது ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை அடைந்தான் என்றால், மற்றவர்களது திருஷ்டிக்குக் கந்தசாமியின் கட்டழகும் வடிவமும் எவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்பது கூறாமலே விளங்கும். அவன் ஸ்திரீ வேஷந்தரிக்கும் போதெல்லாம், பெரிய கண்ணாடி ஒன்றில் அவன் தனது அற்புத வடிவத்தைக் கண்டு தனக்குத் தானே பூரிப்பும் ஆனந்தப் பெருக்கும் அடைந்து, அத்தகைய அழகு வாய்ந்த மனைவி தனக்கு வாய்க்கப் போகிறாளா என்று பன்முறை நினைத்து நினைத்து உருகி இருக்கிறான். அதுவுமன்றி, அவன் வேஷந் தரித்திருக்கும் காலத்தில் அவனைக் காண்போர் எல்லோரும், அவனது அற்புத எழிலைக் குறித்து அபாரமாகப் புகழ்ந்து, அவன் ஆண்பிள்ளை என்று எவரும் சந்தேகிக்க இடமே இல்லை என்று பன்முறை உறுதி கூறியதை அவன் கேட்டிருந்தவன் ஆதலால், அவன் மனோன்மணியைப் பார்க்க வந்த காலத்தில், தான் ஆண்பிள்ளை என்பதை எவரேனும் கண்டு கொள்ளுவார்களோ என்ற கவலையையே அவன் சிறிதும் கொள்ளாமல், நிரம்பவும் மனோதிடத்தோடும் துணிகரத்தோடும் அளவற்ற உற்சாகத்தோடும் வந்திருந்தான். அதுவுமன்றி, பெட்டி வண்டியிலேயே போய்ப் பெட்டி வண்டியிலேயே வந்துவிட வேண்டும் என்றும், மனோன்மணியிடம் அரைமணி நேரத்திற்கு அதிகப்படாமல் இருந்து, அவள் சந்தேகப்படாதபடி சம்பாவித்து விட்டுத் திரும்பி வந்துவிட வேண்டும் என்றும் அவர்கள் தீர்மானித்து இருந்தார்கள். ஆதலால், தான் வேஷம் போட்டுக் கொண்டு வந்திருப்பதைப் பிறர் கண்டுபிடிக்கவே சந்தர்ப்பம் ஏற்படாது என்ற உறுதியைக் கொண்டவனாய் வந்திருந்தான் ஆதலால், கந்தசாமி இயற்கையிலேயே பெண்ணாய்ப் பிறந்து பெண் தன்மைகளில் பழகினவன் போல நிரம்பவும் திறமையாக நடித்தவனாய் மனோன்மணி இருந்த விடுதியை அடைந்தான். ஒருகால் மனோன்மணியம்மாள் கேட்பாளாகில், அவனது பெயர் கொடி முல்லையம்மாள் என்று சொல்வதென்று கந்தசாமியும் கோபாலசாமியும் தங்களுக்குள் தீர்மானம் செய்து கொண்டிருந் தனர். கோபாலசாமியோ உயர்ந்த சட்டை, தலைப்பாகை, ஜரிகை வஸ்திரங்கள், தங்க மூக்குக் கண்ணாடி, கைத்தடி, தங்கச் சங்கிலி உள்ள கடிகாரம் முதலிய அலங்காரங்களோடு நிரம்பவும் பெரிய மனிதன் போலக் காட்டிக் கொண்டு கொடிமுல்லை யம்மாளுக்குப் பின்னாகத் தொடர்ந்து வந்து சேர்ந்தான். கந்தர்வ ஸ்திரீ போன்ற மனமோகன ரூபம் உடையவளாய்த் தோன்றிய கொடிமுல்லை அம்மாளோடு கூட வருவதையும், தான் அவளது கணவன் என்று மற்றவர் கருதுவதையும் கோபாலசாமி நிரம்பவும் பெருமையாக மதித்ததன்றி, அதைப்பற்றி மிகுந்த உற்சாகமும், பூரிப்பும் அடைந்தவனாகக் காணப்பட்டான். அதற்கு முன்னரே, கோபாலசாமியும் கந்தசாமியும் பேசி முடித்த காலத்தில் கந்தசாமி மாத்திரம் மனோன்மணியண்டை போய் அவளுடன் பேசுவதென்பதும், கோபாலசாமி வெளியில் இருப்பதென்பதும் அவர்களது ஏற்பாடு. ஆனால், மனோன்மணி அம்மாள் எல்லோரையும் மேலே அழைத்து வரும்படி டலாயத்தினிடம் செய்தி சொல்லி அனுப்ப, அவன் கீழே சென்று அந்தச் செய்தியைத் தெரிவிக்க, தனது நண்பனுக்கு மனைவியாகப் போகும் யெளவனப் பெண் ஏகாந்தமாய் இருக்கும் மேன் மாடத்திற்கு வர கோபாலசாமி விரும்பாமல், தான் கீழேயே இருப்பதாகக் கந்தசாமியிடத்தில் ரகசியமாகக் கூறினான் ஆனாலும், கந்தசாமி அவனையும் தன்னோடு கூட வரும்படி வற்புறுத்தி மேலே அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். இருவரும் மேன்மாடத்தை அடைந்து மனோன்மணி அம்மாளினது வடிவத் தோற்றத்தையும் நடையுடை பாவனைகளையும் பார்த்தவுடனேயே, அவள் எப்படி இருப்பாள் என்று அதற்கு முன் கடற்கரையில் அவர்கள் இருவரும் எதிர்பார்த்தது போலவே அவள் சகலமான அம்சங்களிலும் இருக்கிறாள் என்ற அபிப்பிராயமே அவர்களது மனதில் பட்டது. அவள் இந்திய ஸ்திரீகளின் நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்ற குணங்கள் இன்றி வெள்ளைக்கார ஸ்திரீகளைப் போல எல்லோரிடமும் தாராளமாகவும் கூச்சம் இன்றியும் நடந்து கொள்வதைக் காண கோபாலசாமியின் மனம் பெரிதும் கிலேசம் அடைந்தது. கந்தசாமி அடக்கம், பணிவு, நாணம் முதலிய குணங்கள் சம்பூர்ணமாக நிறைந்துள்ளவளையே தான் அடைய விரும்புவதாகப் பன்முறை கூறியிருந்தான் ஆதலால், அந்தக் குணங்கள் எல்லாம் இல்லாதவளாய் அந்தப் பெண் காணப்பட்டமையால், கந்தசாமி அவளை மணக்கச் சம்மதிக்க மாட்டான் என்பது நிச்சயமாகத் தோன்றியதன்றி, வந்திருப்பது தனது கணவன் என்பதை அறியாமல் அவள் தாறுமாறாக நடந்துகொண்டு விடுவாளோ என்று கவலையுற்று, அவள் பேச ஆரம்பித்த போதெல்லாம் அவனது மனம் ஒருவித அச்சத்தையும் கூச்சத்தையும் அடைந்தது. அவர்கள் இருவரும் சம்பாஷிக்கும்போது தான் அவ்விடத்தில் இருப்பது தவறென்றும், எப்படியாவது தான் கந்தசாமியைத் தனிமையில் விட்டுப் பிரிந்து கீழே போய்விட வேண்டும் என்றும் அவன் தனக்குள்ளாகவே தீர்மானித்துக் கொண்டான். தனது நண்பன் அவனது மனைவியின் நடை நொடி பாவனைகளைப் பரீட்சிக்கையில், அவள் ஏதாவது தவறாக நடந்து கொண்டால், அப்போது கந்தசாமி மாத்திரம் இருந்தால், அது அவனது மனதில் அதிகமாய் உறைக்காதென்றும், அதை அவன் அதிகமாய்ப் பாராட்டமாட்டான் என்றும் அவர்களோடு பிறரும் பக்கத்தில் இருந்தால் அப்போது அந்தத் தவறு கந்தசாமிக்குப் பன்மடங்கு பெரிதாகவும் மன்னிக்கத் தகாத பெரிய குற்றமாகவும் தோன்றும் என்றும் கோபாலசாமி நினைத்தான். ஆகவே மனோன்மணியின் குணாதிசயங்கள் அதிகமாய் வெளியாகும் முன் தானும் வேலைக்காரப் பெண்ணும் அவர்களை விட்டுப் பிரிந்து கீழே போய்விடுவதே நலமானதென்றும், அவர்களுக்கு ஒருவேளை கலியாணம் முடிவதாக இருந்தாலும், தாங்கள் இருப்பதால், அது தவறிப் போனாலும் போகக்கூடும் என்றும், கோபாலசாமி தனக்குள் நினைத்து ஒருவிதமாக முடிவு செய்து கொண்டிருந்தான்.

ஆனால் கந்தசாமியின் மனநிலைமையோ இன்னதென்று விவரிக்க இயலாத குழப்ப நிலைமையாக இருந்தது. மனோன்மணி பி.ஏ. வகுப்பில் படிக்கிறாள் என்று கேள்வியுற்ற முதலே, அவள் வெள்ளைக்காரர் நாகரிகத்தைப் பூர்த்தியாகப் பின்பற்றினவளாகத் தான் இருப்பாள் என்று அவன் நிச்சயித்துக் கொண்டான். ஆனாலும், தான் எப்படியாவது முயற்சித்து அவளைப் பார்த்து அவளுடன் பேசி அவளது மன நிலைமையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒருவித அவாவினால் தூண்டப்பட்டு அவ்விடத்திற்கு வந்தவன் ஆதலால், அவள் வெள்ளைக்காரி போல இருந்தது அவனுக்கு வியப்பாகவாவது புதுமையாகவாவது தோன்றவில்லை. ஏனெனில், அவள் அப்படித்தான் இருப்பாள் என்று அவன் முன்னரே நிச்சயித்து இருந்தான். ஆகையால், எதிர்பார்க்காத விஷயம் உறைப்பது போல எதிர்பார்த்த விஷயம் மனதில் அவ்வளவாக உறைக்காது அல்லவா. ஆனால் ஆடை ஆபரணங்களிலும், அலங்காரத்திலும், நடை நொடி பாவனைகளிலும் அவள் எவ்வளவுதான் வெள்ளைக்காரி போலத் தோன்றினாலும், அவளிடம் பலமான மன உறுதியும், தேகபரிசுத்தமும், ஒருவிதமான மிருதுத் தன்மையும், உள்ளும் புறமும் ஒத்த கபடமற்ற நடத்தையும் ஸ்பஷ்டமாகத் தென்பட்டன. பிறருக்குத் தான் கீழ்ப்படிந்து நடப்பது அநாவசியம் என்ற எண்ணத்தை அவள் உறுதியாகக் கொண்டிருந்தாள் என்பது எளிதில் விளங்கியது. ஆனாலும், தான் தனக்கு மரியாதை செய்து எவரையும் அன்பாகவும் மிருதுத் தன்மையோடும் உபசரித்து நடத்த வேண்டும் என்ற மேலான குனம் அவளிடம் நிரம்பி இருந்ததாகக் கந்தசாமி உணர்ந்தான். அவளது யெளவன காலத்திற்குரிய செழிப்பும், அவளது இயற்கை அழகிற்குரிய பரிபூர்ணமான மலர்ச்சியும் அவளிடம் காணப்படாவிட்டாலும், அவளது அலங்காரமும் பக்குவகால வனப்பும் ஒருவாறு காந்த சக்தி போலக் கந்தசாமியின் மனதைக் கவர்ந்தன. அவள் தன்னை மணக்க நிச்சயிக்கப்பட்டிருக்கிறவள் என்ற நினைவு அவனது மனத்திலிருந்து அதை ஒருவாறு இளக்கி அவளது விஷயத்தில் அன்பையும் இரக்கத்தையும் உண்டாக்கிக் கொண்டிருந்தது. ஆகையால், அந்த நினைவும், அவளிடம் காணப்பட்ட மேலே குறிக்கப்பட்ட வசீகர சக்தியும் ஒன்றுகூடி அவளது வெளித்தோற்றமான குற்றங்கள் அவனது மனதில் அவ்வளவாக உறைக்காதபடி செய்து கொண்டிருந்தன. மனோன்மணியம்மாளினது மனதில் அப்போது எவ்விதமான உணர்ச்சிகள் உண்டாயின என்பதை நாம் கவனிப்போம். முன்னரே விவரிக்கப் பட்டுள்ளபடி, அவள் இங்கிலீஷ் கல்வியைக் கரைகான வேண்டும் என்றும், பெரிய பெரிய பரீட்சைகளில் தேறிப்பட்டங்கள் பெற வேண்டும் என்றும், அதனால் தனக்கு மிகுந்த பூஜிதையை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவள் ஒரே உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டிருந்தவள் ஆதலால், அவளது மனம் கலியானத்தில் அவ்வளவாகச் செல்லவில்லை. ஆனால் அவள் பக்குவகாலம் அடைந்து சில ஆண்டுகள் சென்று விட்டமையால், அவளது தந்தை அவளது மனத்தை எப்படியாகிலும் சீக்கிரத்தில் முடித்துவிட எண்ணித் தமது எண்ணத்தை அவளிடம் வெளியிட, அவள் அதற்கு இணங்காமல் மேலும் சில வருஷகாலம் கழிந்த பிறகு கலியான விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்றும் கூறினாள். தந்தை அதை ஒப்புக் கொள்ளாமல் அவ்வளவு வயதிற்கு மேல் இந்திய மாதர் கலியாணம் இன்றி இருப்பது துஷணைக்கு இடமாகும் என்று கூறிப் பலவகையில் நற்புத்தி புகட்டியதன்றி, கந்தசாமி என்பவன் சகலமான அம்சங்களிலும் அவளுக்குத் தக்க கணவன் என்றும், மன்னார்குடி வேலாயுதம் பிள்ளை வீட்டாரின் சம்பந்தம் எப்படிப்பட்டவருக்கும் கிடைப்பது அரிது ஆகையால், அதைத் தாம் தள்ளக் கூடாதென்றும், பின்னால் அவ்வளவு ஏற்றமான சம்பந்தம் கிடைக்காது என்றும், ஆகையால் தாம் உடனே கலியானத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து அவளை நிரம்பவும் நயமாக வற்புறுத்தித் தமது கருத்திற்கு இணங்கும்படி செய்திருந்தார். அது முதல் அவளது மனதில் அடிக்கடி கந்தசாமி என்ற யெளவனப் புருஷனது நினைவு தோன்றவே, அவனே தனக்குக் கணவனாகப் போகிறான் என்ற எண்ணம் உண்டான போதெல்லாம், இன்னதென்று விவரிக்க இயலாத ஒருவித இன்ப ஊற்று அவளது மனதில் சுரக்கத் தொடங்கியது. அவன் கருப்பாய் இருப்பானோ, அல்லது, சிவப்பாய் இருப்பானோ, அழகாய் இருப்பானோ, அல்லது விகாரமாய் இருப்பானோ என்ற ஆயிரக்கணக்கான சந்தேகங்களும் கேள்விகளும் அவளது மனதில் பிறந்து, அவனைத் தான் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற விலக்க இயலாத ஒருவித வேட்கையை உண்டாக்கிக் கொண்டிருந்தன. ஆனாலும், அதைத் தனது தந்தையிடம் வெளியிட லஜ்ஜைப்பட்டுத் தனது படிப்பு மும்முரத்தில் அதன் பாதையை அவ்வளவாக உணராமல் இருந்து வந்தான். ஆனால், அவள் கலியாணம் செய்து கொள்வதென்றால், தானும் தன் கணவனும், வெள்ளைக்காரர்கள் இருப்பது போல, சம அதிகாரம் சுயேச்சை முதலியவற்றோடு இருந்து வாழ்வோம் என்றே எண்ணி இருந்தாளன்றி, இந்திய மாதர்கள் நடப்பது போலத் தான் புருஷனிடம் பணிவாகவும் அவனது மனதிற்குகந்த விதமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று கனவிலும் நினைத்தவளே அன்று. அது நிற்க, தனது புருஷனால் வணங்கப்படும் அவனது பெற்றோர் பெரியோர்களிடத்தில் தானும் பணிவாக நடந்து அவர்களுக்கு எல்லாம் சிச்ருஷை செய்ய வேண்டும் என்ற சங்கதியை அவள் காதாலும் கேட்டவளே அன்று. பொதுவாக இந்திய மாதர் படிக்காத மூடர்களாக இருப்பது பற்றி, புருஷர்கள் அவர்களைக் கேவலம் அடிமைகள் போல இழிவாக நடத்துகிறார்கள் என்றும், எல்லா ஸ்திரீகளும் இங்கிலிஷ் பாஷை கற்று அறிவாளிகளாய்த் தங்களது புருஷர்களால் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவள் நினைத்திருந்தாள். கந்தசாமி நன்றாய்ப் படித்தவன் என்றும் நற்குண நல்லொழுக்கம் வாய்ந்தவன் என்றும் அவள் கேள்வியுற்றிருந்தவள் ஆகையால், தானும் அவனுக்குச் சமதையாகப் படித்திருப்பதால், அவன் தன் மீது அதிகாரம் செலுத்த மாட்டான் என்ற உறுதியைக் கொண்டிருந்தாள். ஒயாப் படிப்பினால், அவளது மனோமெய்களின் சக்தி ஒருவாறு மலினம் அடைந்திருந்தது. ஆனாலும், அவளது பருவகால லக்ஷணப்படி இன்னதென்று விவரிக்க முடியாத ஒருவித தாகம் அவளது மனதின் ஒரு மூலையில் இருந்து வருத்திக் கொண்டிருந்தது. தனக்கு மற்ற சகலமான விஷயங்களிலும் குறைவே இல்லாதிருந்தாலும், ஏதோ ஒரு குறை மாத்திரம் இருந்து வந்ததாகவும், அது பூர்த்தியாகாத வரையில் தனது மனம் சாந்தம் அடையாதென்றும், தனது வாழ்க்கை சந்துஷ்டி அற்றதாய் இருக்கும் என்றும், கனவுபோல ஒரு நினைவு தோன்றிக்கொண்டே இருந்தது. தான், எவ்வளவு தான் இங்கிலீஷ் பாஷையைப் படித்துக் கரைகண்டாலும், அபாரமான செல்வத் திற்கு உரியவளாக இருந்தாலும், சகலமான செல்வாக்கும் உடையவளாக இருந்தாலும், நல்ல படிப்பாளி என்றும், பட்டதாரி என்றும் சகலராலும் அபாரமாகப் புகழப் பெற்றாலும், தன்னிடம் வாஞ்சை உள்ள எத்தனையோ உறவினரும், நண்பர்களும் தனக்கு இருந்தாலும், புருஷன் என்ற அந்த அற்புதக் கவர்ச்சி வாய்ந்த ஒரு துணைவன் தனக்கு ஏற்பட்டாலன்றி, தன் மனதிலிருந்த விவரிக்க முடியாத தாகம் தீராதென்று அவள் தனக்குத் தானே உணர்ந்து கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கும் மற்ற ஸ்திரீகளுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. ஒரு பெண் தனது புருஷனிடம் அபாரமான பிரேமையும் பாசமும் உடையவள் ஆகிவிடுவதால், அவள் தனது புருஷனைச் சேர்ந்த மனிதர் எவரைக் காணினும் அவர்களிடத்தில் அபாரமான வாஞ்சை மரியாதை முதலியவற்றை இயற்கையிலே காட்டுவது உலக அனுபவம் அல்லவா. அத்தகைய குணம் மனோன்மணி இடத்தில் காணப்படவில்லை. அவளது மனதில் புருஷனைப் பற்றித் தோன்றிய ஒருவிதமான பிரேமை கந்தசாமி ஒருவனோடு நின்று விட்டதே அன்றி, அவனைச் சேர்ந்த மற்ற மனிதர்கள் வரையில் எட்டவில்லை. ஆகவே, தனது சிறிய மாமியாரும், அவளது புருஷரும் வந்திருப்பதாகக் கேள்வியுற்றவுடனே, அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையாவது ஆவலாவது, அவர்களை உபசரித்து அன்பாக நடத்தி மரியாதை செய்து விருந்தளித்து அனுப்ப வேண்டும் என்ற பிரியமாவது உண்டாகவில்லை. தமக்கு எவ்விதச் சம்பந்தமும் இல்லாத அன்னிய மனிதர் வந்தால், வெளிப் பார்வைக்காக மரியாதை வார்த்தை கூறி உபசரித்து அனுப்புவது போல, அவர்களது விஷயத்திலும் தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டானதே அன்றி அவர்களது விஷயத்தில் ஆழ்ந்த பற்றாவது அன்பாவது தோன்றவில்லை. ஆனாலும், அவள் தனது ஆசனத்தை விட்டெழுந்து சிறிது தூரம் எதிர்கொண்டு வந்து மலர்ந்த முகத்தோடு கொடிமுல்லை அம்மாளைப் பார்த்து, “வாருங்கள். இதோ இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று அன்பாகக் கூறிவிட்டு கோபாலசாமியை நோக்கி, “நீங்களும் அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று கூறி உபசரித்தாள். அவள் தன்னோடு தாராளமாகப் பேசியதைக் கேட்க, கோபாலசாமியின் மனது கூசியது. அவனது உடம்பு குன்றிப் போயிற்று. ஆனாலும் அவன் அதைக் காட்டிக் கொள்ளாமல், தனது கடைக்கண் பார்வையைச் செலுத்தி கந்தசாமியின் முகமாறுபாட்டைக் கவனித்தபடி சிறிது தூரத்தில் இருந்த ஒரு நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொண்டான். கொடி முல்லையம்மாள் தனது புருஷன் பக்கத்தில் இருப்பதைக் கருதி நாணிக் குனிந்து வந்தவள் நிமிர்ந்து மனோன்மணியம்மாளை நோக்கி சந்தோஷமாகப் புன்னகை செய்து , “வருகிறேன். அம்மா!” என்று நிரம்பவும் மிருதுவான குரலில் உத்தம ஜாதி ஸ்திரீ போல மறுமொழி கூறினாள். ஆனால், அவள் நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொள்ளாமல், பக்கத்தில் இருந்த கட்டிலண்டை போய் கோபாலசாமியின் திருஷ்டியில் படாதபடி நாணிக்கோணி மறைவாக நின்று கொண்டாள்.

அதைக் கண்ட மனோன்மணியம்மாள் வியப்படைந்து, “ஏனம்மா நிற்கிறீர்கள்? நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொள்ளுங்களேன்” என்று நயமாகவும், அன்பாகவும் வற்புறுத்திக் கூறிய வண்ணம் கொடிமுல்லையம்மாளை உற்று நோக்கினாள். பெண் வேஷந்தரித்து வந்திருந்த கந்தசாமியை நாம் கந்தசாமி என்று குறிப்பிடுவது சுவைக்குறைவாகத் தோன்றும் ஆதலால், நாம் அவனைக் கொடிமுல்லையம்மாள் என்று குறிப்பிடுகிறோம் என்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். ஆதலால், அதுபற்றி நாம் எவ்வித சமாதானமும் கூறவேண்டிய அவசியம் இராதென்று நினைக்கிறோம்.

நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்று மனோன்மணியம்மாள் மறுபடியும் கூறி உபசரித்ததைக் கேட்ட கொடி முல்லையம்மாள் முன்னிலும் பன்மடங்கு அதிக கிலேசம் அடைந்தவள் போல நடித்து மனோன்மணி அம்மாளை இனிமையாகப் பார்த்து, “பரவாயில்லை. நாங்கள் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போகப் போகிறவர்கள் தானே. நான் இப்படியே நிற்கிறேன். இந்நேரம் வண்டியில் உட்கார்ந்து தானே வந்தேன். நிற்பதே காலுக்குச் சுகமாக இருக்கிறது. நீங்கள் நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று மறுமொழி கூறிய வண்ணம் அடிக்கடி கோபாலசாமியினது முகத்தைப் பார்த்தாள். தனது புருஷனுக்கு எதிரில் தான் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளக் கூடாது ஆகையால், தான் அவ்வாறு நிற்கிறாள் என்பதைத் தனது பார்வை எளிதில் காட்டும்படி அவள் செய்து கொண்டாள். அந்தக் குறிப்பை அறிந்து கொள்ளாத மனோன்மணி அம்மாள் மிகுந்த வியப்பும் ஒருவித அருவருப்பும் அடைந்தாள். வெளிப் பார்வைக்கு நல்ல அழகும் நேர்த்தியான அலங்காரமும் வாய்ந்து பகட்டாக இருக்கும் கொடி முல்லையம்மாள் அவ்வாறு அநாகரிகமாகவும் மூடத்தனமாகவும் நடந்து கொள்ளுகிறாளே என்றும், அவள் பட்டிக்காட்டு மனிஷி என்றும், எழுத்து வாசனை அறியாத ஞான சூன்யமாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டவளாய், மனோன்மணி மறுபடி அவளை நோக்கி, “ஏனம்மா! விருந்தாளியாக வந்த நீங்கள் நிற்க, நான் உட்காரலாமா? நீங்கள் சொல்லும் வார்த்தை என்னை அவமதிப்பது போல் இருக்கிறதே, நீங்கள் இந்நேரம் வண்டியில் உட்கார்ந்து வந்தது உண்மையே! அதனால் இப்போது நிற்பது காலுக்குச் சுகமாக இருக்கிறது என்பதும் உண்மையாக இருக்கலாம். ஆனாலும் எங்களுடைய மரியாதையையும் கொஞ்சம் கவனிக்க வேண்டாமா? எங்களுடைய வீட்டைத் தேடிவந்த மனிதரை நிற்க வைத்துப் பேசி அனுப்புவது ஒழுங்காகுமா? அல்லது, நீங்கள் நிற்கும் போது நான் உட்கார்ந்து கொள்வதுதான் மரியாதையாகுமா?” என்றாள்.

கொடி முல்லையம்மாள் சந்தோஷமாகப் புன்னகை செய்து, “உங்கள் மனசை ஏன் வருத்த வேண்டும். இதோ நான் உட்கார்ந்து கொண்டேன். தயவு செய்து நீங்களும் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று கூறிய வண்ணம் கோபாலசாமியை மறைத்துக் கொண்டிருந்த ஒரு சோபாவின் பக்கத்தில் போய் மிகுந்த கிலேசத்தோடு சுருட்டி முடக்கிக் கொண்டு தரையில் உட்கார்ந்து கொண்டாள்.

அதைக் கண்ட மனோன்மணி அம்மாளினது வியப்பு அளவிடக் கூடாததாய்ப் பெருகியது. தான் கலியாணம் செய்து கொள்ளப் போகும் கந்தசாமியின் சிறிய தாயார் வெளிப்பார்வைக்கு அவ்வளவு வசீகரமாக இருந்தும், நடத்தையில் சுத்த கர்னாடக மனிஷியாக இருக்கிறாளே என்ற நினைவும், அவளைப் போலவேதான் தனது மாமியார் முதலிய மற்ற எல்லோரும் இருப்பார்களோ என்ற கவலையும், அவர்களைப் பற்றி ஒர் இழிவான அபிப்பிராயமும் மனோன்மணியம்மாளினது மனதில் உண்டாயின. அவ்வாறு முற்றிலும் அநாகரிகமாகவும் தாறுமாறாகவும் நடந்து கொள்ளும் மனிஷியைத் திருத்தி அவளை நாற்காலியில் உட்காரச் செய்யும் வரையில் தான் நிற்பது சாத்தியம் இல்லாத காரியம் என்று நினைத்த மனோன்மணியம்மாள் தனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலியின் மீது மெதுவாக உட்கார்ந்தவளாய்க் கொடி முல்லையம்மாளை நோக்கி, “அம்மா! நீங்கள் நல்ல உயர்வான பட்டுப்புடவை கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்; அதோடு தரையில் உட்கார்ந்து கொள்ளுகிறீர்களே, புடவை அழுக்கடைந்து அசுசியாய்ப் போய்விடாதா? மனிதர்கள் வந்தால் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தோடு தானே இத்தனை நாற்காலிகள் போட்டு வைத்திருக்கிறார்கள். இது வரையில் எத்தனையோ விருந்தாளிகள் இங்கே வந்திருக்கிறார்கள். யாரும் உங்களைப் போல இப்படித் தரையில் உட்கார்ந்ததே இல்லை. நீங்கள் ஒருவர்தான் இப்படிச் செய்தது. எங்களோடு சரி சமானமாக உட்கார்ந்து பேச உங்களுக்கு யோக்கியதை இல்லை என்று நினைத்துத் தரையில் உட்கார்ந்தீர்களா? நீங்கள் செய்வது நிரம்பவும் வேடிக்கையாக இருக்கிறதே!” என்றாள்.

அவள் வார்த்தைகளைக் குத்தலாக மதியாதவள் போலவும், நிரம்பவும் பெருந்தன்மையோடு நடப்பவள் போலவும் காட்டிக் கொண்ட கொடி முல்லையம்மாள் வேடிக்கையாகவும் இனிமையாகவும் புன்னகை செய்து, “அம்மா! நான் ஒரு சாதாரணக் குடியானவருடைய வீட்டில் பிறந்தவள். அவ்விடத்தில் ஆண் பிள்ளைகள் கூட நாற்காலியில் உட்கார்ந்து அறியார்கள். நான் புகுந்த இடத்திலும் நாற்காலியைப் பார்த்தறியேன். நான் பிறந்த இடத்திலும் சரி புகுந்த இடத்திலும் சரி, நான் எப்போதும் வீட்டுக் காரியங்களைச் செய்துகொண்டே இருப்பேன். உட்கார்ந்து கொள்வதற்கே எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறதில்லை. தப்பித் தவறி உட்கார்ந்து கொண்டாலும் தரையில் தான் உட்கார்ந்து கொள்வேன். ஆகையால் நாற்காலியில் எப்படி உட்காருகிறதென்பதே எனக்குத் தெரியாது. முன் காலத்தில் காளிதாசர் என்று ஒருவர் இருந்தார் என்றும் அவர் ஒரு வேடிக்கை செய்தார் என்றும், என் பாட்டி ஒரு கதை சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை நீங்கள் புஸ்தகங்களில் படித்திருக்கலாம். ஒரு மகாராஜனுடைய மகளின் கருவத்தை அடக்க வேண்டும் என்று மந்திரி மகன், நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளையை வெட்டிக் கொண்டிருந்த சுத்த மடையனான காளிதாசன் என்ற ஒர் ஆட்டிடையனைப் பிடித்துக் கொணர்ந்து வேஷம் போட்டு அந்த ராஜகுமாரியை அவனுக்குக் கட்டிக் கொடுத்து விட்டானாம். அவனோடு சயனக் கிரகத்துக்குப் போன ராஜகுமாரி அவனை நாற்காலியின் மேல் உட்காரச் சொன்னாளாம். நாற்காலியின் உபயோகம் என்ன என்பதே அவனுக்குத் தெரியாது. ஆகையால், அவன் அந்த நாற்காலியைத் தூக்கித் தன்னுடைய தலையின் மேல் வைத்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து கொண்டான் என்று என் பாட்டி கதை சொல்ல, நான் கேள்வியுற்றிருக்கிறேன். நீங்கள் என்னை நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளச் சொல்வதைக் கேட்க எனக்கு அந்தக் கதை ஞாபகத்துக்கு வருகிறது. மனிதர்களுக்கு எதெது பழக்கமோ, அது அவர்களுக்கு இன்பமாகத் தோன்றுகிறது. நீங்கள் நாற்காலியிலேயே உட்கார்ந்து பழகியவர்கள் ஆகையால் அதுவே உங்களுக்கு இயற்கையாகப் போய் விட்டது. அதுவே உங்களுக்குச் சுகமாக இருக்கிறது. அதை விட்டுத் தரையில் உட்காருவது கஷ்டமாகவும் அகெளரதையாகவும் தோன்றுகிறது. என் விஷயம் அதற்கு நேர் விரோதமாக இருக்கிறது. நானும் என்னைப் போன்ற மற்ற குடும்ப ஸ்திரீகளும் நாற்காலியில் உட்கார்ந்து பழகியதே இல்லை; தரையிலே தான் உட்கார்ந்து பழகி இருக்கிறோம். நாற்காலியில் உட்காருவது தொழுக்கட்டையில் மாட்டிக் கொள்வது போல எங்களுக்குத் தோன்றுகிறது. பூமா தேவியின் மடியாகிய தரையில் உட்கார்ந்து கொள்வதே எங்களுக்கு பிரம்மானந்தமாகவும், பெருமையாகவும் தோன்றுகிறது. நாற்காலியில் உட்காருவதைவிடத் தரையில் உட்காருவதில் பல அனுகூலங்கள் இருக்கின்றன. தரையில் உட்காருவதில் முதலில் பணச் செலவில்லை; இரண்டாவது விஷயம், வியாதி எதுவும் உண்டாக இடமில்லை. எங்கள் வீடுகளில் நாங்கள் தரையை நன்றாக மெழுகிக் கண்ணாடி போல வைத்திருப்போம். அவ்விடத்தில் உட்காருவது குளிர்ச்சியாகவும் சுகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். தரையில் கை கால்களுக்கு வேண்டிய அளவு இடம் இருக்கும். ஒருவர் உட்கார்ந்த இடத்தில் மற்றவர் உட்கார வேண்டும் என்பதில்லை. நாற்காலியின் விஷயமோ அப்படிப்பட்டதல்ல. அதன் இடம் சொற்பமானது. கால்களை எப்போதும் தொங்கவிட்டுக் கொண்டே உட்கார்ந்திருப்பதால், உடம்பு முழுதிலும் இரத்தம் சமமாக ஓடாமல் சில இடங்களில் இரத்தப் போக்கு தடைப்பட்டு வியாதிகளை உண்டாக்குகிறது. உடம்பு எப்போதும் மரத்தில் உராய்ந்து கொண்டே இருப்பதால் தோலின் மிருதுத்தன்மை போய் அது காய்த்துப் போகிறது. தரையில் உட்காரும் போது உடம்புக்கு ஏற்படும் செளகரியம் நாற்காலியில் உட்காரும் போது ஏற்படுகிறது இல்லை. நாற்காலியில் வியாதியஸ்தரும் உட்காருகிறார்கள். அமிதமான சூடுள்ளவரும் உட்காருகிறார்கள். ஆண் பிள்ளைகளும் உட்காருகிறார்கள், பெண் பிள்ளைகளும் உட்காருகிறார்கள். அதனால் ஒரு மனிதருடைய வியாதி மற்றவருக்குப் பரவுகிறதன்றி, ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்னும் பயிர்ப்பென்ற குணம் அதனால் குறைந்து கொண்டே வருகிறதற்கு அது ஒர் ஏதுவாக இருக்கிறது. இந்தக் காரணங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க, இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது.

அதாவது நாம் தரையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது பெரியவர்கள் யாராவது வந்தாலும், அவர்களை அவமரியாதைப் படுத்துவதாகாது. நாம் நாற்காலியிலேயே உட்கார்ந்து பழகி விட்டால், நாம் பணிவாக நடந்து கொள்ள வேண்டிய மனிதர்களுக்கு எதிரிலும் நாம் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ள நேரும். அதன் பிறகு எல்லோரும் சமமாகப் போய்விடும். புருஷன், மாமனார், மாமியார், வயதான பெரியவர்கள் முதலியவர்களுக்குச் சமமாக நாம் ஒருபோதும் உட்காரக் கூடாது. ஆகையால் அதற்குத் தரைதான் நிரம்பவும் அனுகூலமானது, அதுவுமன்றி நாற்காலி முதலிய வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க, நாம் நம்முடைய வீட்டுத் தரையைச் சுத்தமாகவும் வழுவழுப்பாகவும் வைத்துக் கொள்ளாமல் அசட்டையாக விட்டுவிட நேருகிறது. அதனால் வியாதிகள் உண்டாக ஏது ஏற்படுகிறது. ஆனால் உங்கள் தகப்பனார் பெரிய உத்தியோகம் வகிப்பதால், வெள்ளைக்காரர்கள் இங்கே வந்து போவதற்கு அனுகூலமாக நீங்கள் நாற்காலி முதலியவைகள் போட்டு வைத்திருப்பது அவசியந்தான். அதனால் ஏற்படும் தீங்குகளைக் கவனிக்காமல் கெளரவத்தைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியமே. வெளியூர்களிலும் கிராமங்களிலும் உள்ள எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் நாற்காலியில் உட்காரும் பழக்கம் அநாவசியமானதே. அதனால் பல தீமைகள் உண்டாகின்றன. நீங்கள் பி.ஏ. பரீட்சைக்குப் படிப்பதால், இதெல்லாம் உங்களுக்குத் தெரியாததல்ல. நீங்கள் நிரம்பவும் நாகரிகம் வாய்ந்தவர்கள். ஆதலால் உங்கள் வீட்டுத் தரையை நீங்கள் அசுத்தமாக வைத்திருக்கமாட்டீர்கள் ஆகையால், கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போகும் வரையில் நான் தரையில் உட்காருவதால், என் புடவை அதிகமாய்க் கெட்டுப் போகாது. முக்கியமாக இன்னொரு விஷயம் இருக்கிறது. அதோ வந்து உட்கார்ந்திருப்பது என்னுடைய எஜமானர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்களுக்கு எதிரில் நாங்கள் தரையில்கூட உட்கார்ந்திருப்பது வழக்கமில்லை. அப்படி இருக்க, அவர்களுக் கெதிரில் நாற்காலியில் உட்காருவதென்றால், அதைப் போல ஒழுக்கத் தவறான காரியம் வேறு ஒன்றும் இராதென்று நினைக்கிறேன். ஆகையால், நான் உங்களுடைய பிரியப்படி நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளாததைப் பற்றி நீங்கள் வருத்தப் படக்கூடாது. மனிதர் எங்கே உட்கார்ந்தால் என்ன? அதனால் தானா மனிதருக்குப் பெருமையும் சிறுமையும் ஏற்படப் போகிறது? அடக்கம் அமரருள் உய்க்கும் என்று நம்முடைய பெரியோர்கள் கண்டுபிடித்து அதை சிறந்த தருமமாகக் கடைப்பிடித்து வந்திருக்க, அன்னிய நாட்டார் வேறுவிதமாக நடந்து கொள்ளுகிறார்கள் என்று நாம் அதைப் போல மாறுபட்டுப் போவது நாம் சுயமதிப்பும் ஆழ்ந்த விவேகமும் இல்லாத குழந்தைகள் என்று நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வது போலாகும் அல்லவா. சாரமற்ற சருகு ஆகாயத்தில் பறக்கிறது. கனமான தங்கம் வெள்ளி முதலியவைகள் எல்லாம் பள்ளத்தில் போய் கிடக்கின்றன. அதனால் அததன் பெருமை சிறுமை மாறுபட்டுப் போகுமா? ஒரு நாளும் இல்லை” என்று சிரித்துக் கொண்டே இனிமையாகக் கூறினாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட மனோன்மணியம்மாள் மிகுந்த வியப்பும் திகைப்பும் கொள்ளலானாள். பார்ப்பதற்கு வசீகரமாகவும் நாகரிகம் வாய்ந்தவளாகவும் தோன்றிய கொடிமுல்லையம்மாள் நாற்காலியில் உட்காராமல் கீழே உட்கார்ந்ததைக் கண்ட உடனே, அவள் படிக்காத முட்டாள் என்று மனோன்மணியம்மாள் நினைத்துக் கொண்டாள் அல்லவா. பிறகு, நாற்காலியில் உட்காருவதைவிடத் தரையில் உட்காருவதே சிறந்ததென்று கொடி முல்லையம்மாள் தனக்கு புத்திமதி கூறியதைக் கேட்கவே, மனோன்மணியம்மாள், “ஆகா! நம்முடைய தேசத்து ஜனங்கள் அநாகரிகர்களாகவும், அடிமைகளாகவும் இருப்பது தான் உத்தமமானது என்பதற்குப் பல காரணங்களையும் தெரிந்து கொண்டு, அதே துறையில் பிடிவாதமாகச் சென்று கொண்டிருக்கிறார்களே! இவர்களுடைய மூட புத்தி எப்போதுதான் தெளிவுபடுமோ. இவர்கள் மற்ற நாட்டாருக்குச் சமதையாக உயரும் காலம் எப்போதுதான் வருமோ” என்று தனக்குத் தானே எண்ணிக் கொண்டவளாய்க் கொடி முல்லையம்மாளைப் பார்த்து, “சரி; பிறகு உங்களுடைய இஷ்டம். நாற்காலியில் உட்காருவது வெள்ளைக்காரருடைய நாகரிகம் என்று நீங்கள் கருதுகிறதாகத் தெரிகிறது. நம்முடைய தேசத்தில் எப்போதும் தரையைத் தவிர உயர்வான மர ஆசனங்கள் இருந்ததே இல்லையா? நான் மன்னார்குடி முதலிய வெளியூர்களில் இருந்த காலத்தில் ஜனங்கள் விசிப்பலகைகளில் உட்காருவதைப் பார்த்திருக்கிறேனே. அது மாத்திரம் நல்லது தானா? விசிப்பலகை என்பது நாலைந்து பேர் சேர்ந்து உட்கார்ந்து கொள்ளும்படி பெரிதாக இருக்கிறது. நாற்காலி ஒவ்வொருவர் தனித்தனி உட்காரும்படி சிறிது சிறிதாக அமைக்கப்பட்டிருக்கிறது. பேதம் இவ்வளவுதானே. நாற்காலி என்றால், நீங்கள் பெரிய பூச்சாண்டியைக் கண்டு பயப்படுவது போலப் பேசுகிறீர்களே! இதனால் அவரவர்களுக்கு ஏற்படக்கூடிய மரியாதை குறைந்து போய் விடுமா? வெள்ளைக்காரர்களிடத்தில் மாத்திரம் மரியாதை என்பது கிடையாதா? தகப்பனாரிடத்தில் பிள்ளையும் புருஷனிடம் பெண்ஜாதியும் மரியாதைக் குறைவாகவா நடந்து கொள்ளுவார்கள். அப்படி ஒரு நாளும் அவர்கள் நடந்து கொள்ளுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் ஒருவரிடத்து ஒருவர் அன்பும் மரியாதையும் வைத்தாலும், அதை இந்த அற்ப விஷயங்களில் எல்லாம் காட்டுகிறதில்லை. சாப்பாடு தேகசெளகரியம் முதலிய விஷயங்களில் எல்லோரும் சமம் என்பது அவர்களது கொள்கை. நம்முடைய தேசத்தில், ஆண் பிள்ளைகள் தான் மேலான ஆசனத்தில் உட்கார வேண்டும், பெண் பிள்ளைகள் காற்றில்லாத இருண்ட மூலை முடுக்குகளிலும், அழுக்கடைந்த தரையிலும் உட்கார வேண்டும், மழை பெய்தாலும், வெயில் காய்ந்தாலும் நம்முடைய ஸ்திரீகள் குடை பிடித்துக் கொள்ளக் கூடாது, காலில் பாதரட்சை போட்டுக் கொள்ளக் கூடாது. வெயிலில் வெறுங்காலோடு நடப்பதால், அவர்களுடைய கால் வெதும்பிக் கொப்புளித்துப் போனாலும் பாதகமில்லை. அவர்கள் ஆண்பிள்ளைகளுக்குச் சமமாகப் பாதரட்சை அணியக் கூடாது! யாராவது ஒரு பெண்பிள்ளை செருப்பு குடை முதலியவற்றை உபயோகித்துக் கொண்டு போனால், நம்முடைய ஜனங்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். ஏன் அப்படிச் செய்கிறார்கள்? வெள்ளைக்காரரில் குடை பிடிக்காத அல்லது செருப்புப் போடாத ஸ்திரீயுண்டா? ஸ்திரீகளுடைய காலிலும் தலையிலும் வெயிலின் வெப்பம் உறைக்காதா? அவர்கள் அந்தச் சூட்டைப் பொறுத்துக் கொண்டால் தான் அவர்கள் புருஷர்களை விடத் தாழ்ந்தவர்கள் என்ற அந்தஸ்து நிலைக்குமா? இல்லாவிட்டால் நிலைக்காதா? இப்படி எல்லாம் நம்முடைய தேசத்துப் புருஷர்கள் சுயநலம் கருதி ஸ்திரீகளை அடக்கி அடிமைகளைப் போல நிரம்பவும் கொடூரமாக நடத்துவதெல்லாம் எப்போது ஓழியுமோ தெரியவில்லை. இந்த விஷயத்தில் நாம் நம்முடைய ஸ்திரீகளின் மேல் குறை கூறுவதற்கு இடமில்லை. ஏனென்றால், அவர்கள் யுகம் யுகமாகச் செயலற்றுப் புருஷருடைய கொடுங்கோன்மையில் ஆழ்ந்து அடங்கிக் கிடந்து உழலுகிறார்கள். நரகத்திலேயே ஆயிசுகாலம் முடிய இருந்து இருந்து பழகுவோருக்கு அதுவே மா.வி.ப.I-15 இன்பமாகத் தோன்றும் போலிருக்கிறது. அதுபோல நம்முடைய தேசத்து ஸ்திரீகள் தங்களுடைய அடிமை நிலைமையே உத்தமமானது என்று நினைக்கும்படி நம்முடைய மனிதர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். இதை எல்லாம் ஒழிப்பதற்கு இங்கிலீஷ் படிப்புதான் முதல் தரமான மருந்து. இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் இரண்டொரு தலைமுறைகளில் இந்த இங்கிலீஷ் படிப்பு சாதாரண ஜனங்களுக்கெல்லாம் பரவிவிடும். அவர்கள் இப்போது கொண்டுள்ள அநாகரிகமான பற்பல விஷயங்கள் மாறுபட்டுப் போகும் என்பது நிச்சயம். நம்முடைய தேசத்து ஆண்பிள்ளைகள் ஸ்திரீகளின் விஷயத்தில் இவ்வளவு கொடுமை செய்து வருவது எவ்வளவு காலந்தான் கடவுளுக்குச் சம்மதமாயிருக்கும். இதை எல்லாம் ஓழிப்பதற்குத் தான், இரண்டாயிரம் மைல் தூரத்துக்கு அப்பால் ஒரு சிறிய தீவில் இருக்கும் இந்த இங்கிலீஷ்காரரைக் கொண்டு வந்து விட்டு அவர்கள் நம்முடைய ஆண் பிள்ளைகளை எல்லாம் அடக்கி ஆளும்படியும், அவர்களுடைய பாஷையும் நாகரிகமும் கட்டாயமாக நம்முடைய தேசத்தில் பரவும்படியும் கடவுள் தந்திரம் செய்திருக்கிறார். இப்போதே இங்கிலீஷ் படித்த நம்முடைய ஆண்பிள்ளைகளில் பெரும்பாலோர் சரியான கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கி எல்லோரும் சமம் என்ற தர்மத்தை அனுபவத்தில் நடத்திக்காட்ட ஆரம்பித்து விட்டார்கள். கூடிய சீக்கிரம் நம்முடைய தேசத்துக்கு நல்லகாலம் பிறக்கும். அதைப்பற்றி சந்தேகமே இல்லை” என்றாள். அதைக் கேட்ட கொடி முல்லையம்மாள் இரண்டொரு நிமிஷ நேரம் மெளனமாக இருந்தாள். தான் வந்தவுடனேயே மனோன்மணியம்மாளோடு பெருத்த வாக்குவாதத்தில் இறங்கிவிட்டால் அவளது மனம் கசந்துபோம் என்றும், அதன் பிறகு ஒருகால் அவள் தங்களை வெளியில் அனுப்பினாலும் அனுப்பி விடுவாள் என்றும், அதன் பிறகு அவளது குணாதிசயங்கள் முழுவதையும் நன்றாக அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும் என்றும் நினைத்த கொடி முல்லையம்மாள் இனிமையும் சந்தோஷமும் அன்பும் ததும்பிய முகத்தோடு மனோன்மணியம்மாளை நோக்கி, “அம்மா! நான் இங்கிலீஷ் பாஷை கற்காதவள். ஆகையால் அந்தப் பாஷையின் பெருமையும், அதைக் கற்பதால் உண்டாகும் நலன்களும் எப்படிப்பட்டவை என்பது எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இங்கிலீஷ் புஸ்தகங்களைப் படித்து, இங்கிலிஷ்காரரோடு பழகி, அந்தத் தேசத்தாருடைய நாகரிகங்களை எல்லாம் அறிந்தவருக்கு அன்றி, எங்களைப் போன்றவருக்கு, நீங்கள் சொல்வதின் உண்மை அவ்வளவாகத் தெரியாது. பாலின் நிறம் எப்படி இருக்கும் என்று பிறவிக் குருடனிடம் சொன்னால், அவன் அதை எப்படித் தெரிந்து கொள்ளப் போகிறான். ஆனால் நான் பொதுவாக ஒரு நியாயம் சொல்லுவேன். எந்த மனிதரும் சாதாரணமாகத் தம்முடைய பெரியோர்கள் பெற்றோர்கள் எப்படிப்பட்ட நடையுடை பாவனை பழக்க வழக்கங்களைப் பின்பற்றி நடக்கிறார்களோ அவைகளையே இயற்கையில் பின்பற்றி நடக்கிறவர்களாய் இருக்கிறார்கள். புதிதாக உலக வாழ்க்கையை நடத்த ஆரம்பிக்கிறவர்கள் அதற்கு முன் இருந்தவர்கள் ஏற்படுத்தியுள்ள ஒவ்வொரு விஷயத்திற்கும் காரணத்தையாவது, அதன் உசிதா உசிதத்தையாவது ஆராயாமல் குருட்டுத்தனமாகப் பின்பற்றியே நடக்கிறவர்களாக இருக்கிறார்கள். இந்த நியாயத்தை அனுசரித்தே நம்முடைய தேசத்து ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் தங்களுடைய ஆசார ஒழுக்கங்களைப் பின்பற்றி நடந்து வருகிறார்கள். இப்போது அன்னிய தேசத்தாருடைய சம்பந்தமும், அன்னிய தேச பாஷையின் அறிவும் நம்முன் சிலருக்கு ஏற்பட்ட உடனே, அவர்கள் தங்களுடைய நடையுடை பாவனை பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டு புதுமாதிரியாக நடக்க எத்தனிக்கிறார்கள்; இங்கிலீஷ் கற்காத இதர ஜனங்கள் செய்வதெல்லாம் தவறென அவர்களுடைய மனசுக்குப்படுகிறது. அவர்களுக்கு அது உண்மையாகவே இருக்கலாம்; ஆனால் அவர்கள் சொல்வதை மாத்திரம் கேட்டு மற்றவர்களும் அம்மாதிரி மாறிப்போவதுதான் சாத்தியமில்லாத விஷயமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் உங்களைப் போலப் புது விஷயங்களை அறிந்து அனுபவித்துத் தீர ஆராய்ந்து மாறுபட வேண்டுமே அன்றி, ஒருவர் சொல்வதை மாத்திரம் கேட்டு மற்றவர்கள் திருந்தி விடுகிறதுதான் நிரம்பவும் அரிது. நீங்கள் சொல்வது போல இன்னம் இரண்டொரு தலைமுறை காலத்தில் இங்கிலீஷ் பாஷை நம்முடைய நாடு முழுதிலும் நன்றாகப் பரவிவிடும் பக்ஷத்தில், எல்லோரும் அந்தப் பாஷையின் பெருமையையும், இங்கிலீஷ்காரருடைய பழக்க வழக்கங்களின் உசிதா உசிதங்களையும் தமக்குத்தாமே கண்டு தங்களை அவசியம் திருத்திக் கொள்வார்கள். ஆனால், இதில் இன்னொரு விஷயமிருக்கிறது. ஏதாவது ஒரு புதிய விஷயமோ, அல்லது, இன்பமோ மனிதருக்கு நேர்ப்படுமானால், சிலர் அவசரப்படாமல் நன்றாக ஆராய்ந்து அந்தப் புதிய விஷயத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு அடிமையாய்ப் போய் அதனினின்றும் மீண்டு வரமாட்டாமல் ஆயிசுகால முற்றும் வருந்தித் தவிக்கிறார்கள். வேறு சிலர் சிறிது காலத்தில் புதிய பிரமையை விலக்கிக் கொண்டு பழைய வழிக்கே வருகிறார்கள். இப்போது நாம் சாதாரணமாக ஒரு குடிகாரனை எடுத்துக் கொள்வோம். ஆரம்பத்தில் அவனுக்கு அந்த நடத்தைதான் சிறந்ததாகத் தோன்றும். குடிப்பதுதான் தேவேந்திர போகம் என்று அவன் நினைப்பான். குடிக்கக்கூடாதென்ற கண்டிப்பை ஏற்படுத்தியிருக்கும் மற்ற அறிவாளிகளை அவன் சுத்த முட்டாள்கள் என்றே மதிப்பான். மற்ற ஒவ்வொருவரும் தன்னைப் போலக் குடித்துப் பார்த்தால் அல்லவா அதன் சுகம் தெரியும் என்றும், அந்த இன்பத்தை அனுபவித்துப் பார்க்காமல் ஜனங்கள் சுத்த ஞானசூனியர்களாய் நடப்பதோடு மற்றவர்களையும் தடுக்கிறார்களே என்றும் நினைப்பான். ஆனால் காலக்கிரமத்தில், அவனுடைய பொருள், தேக ஆரோக்கியம், மானம் முதலிய எல்லாம் அந்தக் குடியினால் அழிந்து போகின்றன. அதன் பிறகு அவன் உண்மையை உணர்ந்து அந்தப் பெரும் பேயின் இடத்தில் இருந்து மீள மாட்டாமல் நடைப்பினமாகக் கிடந்து உழலுகிறான். இங்கிலீஷ் நாகரிகத்தை தான் குடிக்கு உவமானமாகச் சொல்லுகிறேன் என்று நீங்கள் வருத்தப்படக் கூடாது. அதை விட்டு இன்னும் எத்தனையோ உவமானங்கள் சொல்லலாம். ஒரு குழந்தையை எடுத்துக் கொள்வோம். அது தன்னுடைய தாயார் ஊட்டும் சாதத்தை உண்ண மாட்டேன் என்கிறது. கீழே கிடக்கும் மண்ணை எடுத்து நிரம்பவும் ஆனந்தமாகத் தின்கிறது. மற்றவர் அதை எவ்வளவு தான் கண்டித்தாலும், அதற்கு நற்புத்தி புகட்டினாலும், அதை அந்தக் குழந்தை கவனிக்கிறதில்லை. புதிய சுவையாகத் தோன்றும் மண்ணின் சுவைதான் அதற்குப் பரம இன்பமாகத் தோன்றுகிறது. அது நிரம்பவும் ஆவலோடு மண்ணையும் சாம்பலையும் எடுத்துத் தின்று சந்தோஷப்படுகிறது. அதற்கு ஒவ்வொரு வேளையும் ஆகாரம் ஊட்டுவது பெரும் பாடாய்ப் போய் விடுகிறது. ஆனால் அதற்குக் கொஞ்சம் அறிவு முதிர்ச்சி அடைந்துவிடுமானால், அதன் பிறகு உண்மை விளங்கி விடுகிறது. தாயார் கொடுத்த ஆகாரமே உடம்புக்கு உகந்தது என்றும், மண் முதலிய இதர வஸ்துக்களை உண்பதால் கெடுதல்கள் உண்டாகும் என்றும் அது தானாகவே உணர்ந்து கொள்ளுகிறது. கைக்குழந்தைகளை விட்டு, வயதான பையன்களை நாம் எடுத்துக் கொள்வோம். பெற்றோர் அவர்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிக் கல்வி கற்று வருமாறு ஏவுகிறார்கள். கல்வி கற்பது அவர்களுக்கு விஷத்தை விழுங்குவது போல இருக்கிறது. துஷ்டப் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடித் தம்முடைய பொழுதை எல்லாம் வீணாக்குவதே அவர்களுக்கு அத்யந்த சுகமாகத் தோன்றுகிறது. தம்முடைய பெற்றோர் தம்மை வருத்தி வதைக்கிறார்களே என்ற நினைவும், அவர்களைக் கொன்று விடலாமா என்ற எண்ணமும் அப்படிப்பட்ட பையன்களுடைய மனசில் தோன்றுகின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுடைய தேக ஆரோக்கியத்தைக் காப்பாற்றுவதற்காக அவர்களுக்கு அடிக்கடி விளக்கெண்ணெய் முதலிய விரோசன மருந்துகளைக் கொடுக்கப் பிரயத்தனப்படுகிறார்கள். அது அவர்களுக்குப் பிடிக்கிறதில்லை. எப்போதும் தின்பண்டங்களைத் தின்று உடம்பை மேன்மேலும் கெடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளுடைய தேகத்தைச் சுத்தமாக வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு அடிக்கடி எண்ணெய் ஸ்நானம், சாதாரண நீராட்டம் முதலியவற்றைச் செய்விப்பதோடு, சுத்தமான உடைகளை அணிவிக்க விரும்புகிறார்கள். பையன்கள் அவைகளை எல்லாம் பெருத்த உபத்திரவமாக மதித்துத் தம்முடைய போஜனம், ஸ்நானம், உடை முதலிய யாவற்றையும் அசட்டை செய்து விளையாட்டி லேயே புத்தியைச் செலுத்துகிறார்கள். இன்னம் அவர்கள் பணிவாக நடத்தல், உண்மை பேசுதல், உழைத்து வேலை செய்தல், சன்மார்க்கங்களில் நடத்தல் முதலிய காரியங்களில் அவர்களைப் பழக்கப் பெற்றோர் முயல்கிறார்கள். அவைகள் எல்லாம் பையன்களுக்குப் பெருத்த துன்பமாகத் தோன்றுகின்றன. எவ்விதமான கட்டுப்பாட்டுக்கும் அடங்காமல் தம்முடைய இச்சைப்படி நடந்து கொள்வதே அவர்களுக்கு சுகமாகத் தோன்றுகிறது. பையன்கள்தான் இப்படி என்றால், இன்னம் அதிக வயசான யெளவனப் பருவத்தினரை எடுத்துக் கொள்வோம். அவர்களில் எத்தனை பேர் அன்னிய மாதர், தாசிகள், வேசைகள் முதலியவர்களிடம் சிநேகமாக இருப்பதே சுவர்க்க போகம் என்று எண்ணி மதியிழந்து மானம் இழந்து கெட்டழிகிறார்கள். பெற்றோர், பெரியோர், உற்றார், உறவினர் முதலியோர் சொல்லும் நல்ல புத்தி எல்லாம் அவர்களுக்குக் கன்ன கடூரமாகத் தோன்றுகிறது. அவர்களுடைய நன்மையை நாடி உண்மையைச் சொல்லுகிறவர்கள் எல்லோரும் அவர்களுக்குச் சத்துருக்கள் போலத் தோன்றுகிறார்கள். யெளவனப் பருவத்தினருள் மேற்சொன்னபடி துர்ப்புத்தி பிடித்து அலைவோரைத் தவிர, புதிதாகக் கலியானம் செய்து கொள்ளும் சிறியவர்கள் தம்முடைய புதிய மனைவியின் மையலில் அழ்ந்து மதியிழந்து அவர்களையே தெய்வமாக மதித்து அவர்களுக்கு அடிமையாகி, அதுவரையில் தங்களைக் காப்பாற்றிய தாய் தந்தையரை அசட்டை செய்து, அவர்களுடைய பேச்சைக் கேளாது அவர்களைப் பட்டினி போட்டு அடித்துத் துரத்தி விடுகிறதை நாம் எத்தனையோ இடங்களில் பார்க்கவில்லையா? இப்படிப்பட்ட புதிய மோகமும் பித்தமும் எப்போதும் நீடித்து நிற்கின்றனவா? சில வருஷகாலத்தில் அந்த மோகமும், மன உக்கிரமும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றன. அதற்கு முன் தெய்வம் போல மதித்து வணங்கப்பட்ட ஸ்திரீகள் கொஞ்ச காலத்தில் வாடிப்போகும் புஷ்பங்கள் போலக் காலால் மிதித்து அவமதிக்கப்படுகிறார்கள். இப்படி மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரையில் உள்ள ஒவ்வொரு பருவத்திலும் அவனுடைய மனசை மயக்குவதற்கு ஒவ்வொரு புது விஷயம் ஏற்பட்டிருக்கிறது. அந்தந்தச் சமயத்தில் அதது நிலைத்ததாகவும் உண்மை போலவும் தோன்றுகிறது. காலக்கிரமத்தில் அது பொய்யாகி விடுகிறது. ‘அடாடா! நாம் அப்படி மூடத்தனமாக நடந்து கொண்டோமே என்று அவர்களே பழைய சங்கதிகளை நினைத்து விசனப்படுகிறார்கள். இந்த உலகத்தில் கோடாது கோடி மனிதர்கள் இருக்கிறார்கள். எல்லா உடம்பிலும் ஒரே விதமான அவயவங்களே இருக்கின்றன. ஆனாலும் ஒருவனுடைய முகம் போல இன்னொருவனுடைய முகம் இல்லை. ஒருவனுடைய உடம்பின் அமைப்பைப் போல இன்னொருவனின் உடம்பின் அமைப்பு இல்லை. இரண்டு முகங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கின்றனவோ, அது போல இரண்டு மனங்கள் ஒன்று போல இருப்பதில்லை. ஒரு மனிதனுடைய மனம் போல இன்னொரு மனிதனுடைய மனம் இருக்கிறதே அரிது. எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோடி முகவேறுபாடும், மனவேறுபாடும் இருக்கின்றன. மனசு கண்ணாடி போன்றது. சுத்தமாக அமைந்த கண்ணாடி எந்த வஸ்துவையும் உள்ளப்படி காட்டுகின்றன. சில பெரிதாக்கிக் காட்டுகின்றன. அதுபோல சில மனிதர்கள் மதங்கள், உலக அனுபவங்கள், உலக சுகங்கள், உலகப் புதுமைகள் முதலியவற்றைக் கண்டு மயங்காமல், அவற்றில் உண்மை எவ்வளவு இருக்கிறது என்றும், பொய் எவ்வளவு இருக்கிறது என்றும் சீர்தூக்கிப் பார்த்து வெகு சீக்கிரத்தில் சரியான முடிவுக்கு வந்து விடுகிறார்கள். சிலர் புதிய விஷயங்களின் அனுகூல பிரதிகூலங்களை அறிய மாட்டாமல் மயங்கி க்ஷணச்சித்தம் க்ஷணப்பித்தமாய் உழன்று அவஸ்தைப்படுகிறார்கள். பனம்பழத்தைப் புதிதாகத் தின்பவன் இது ருசியாய் இருக்கிறதே. இதை மனிதர் தின்னாமல் அலட்சியமாக விட்டிருக்கிறார்களே; மனிதர்கள் மூடர்கள் என்று எண்ணிக் கொண்டு, மேன்மேலும் பனம்பழத்தைத் தின்கிறான். மறுநாள் அதன் பித்தம் அவனுடைய உடம்பை வதைக்க ஆரம்பிக்கும் போது அவன் அதன் உண்மைக் குணத்தைத் தெரிந்து கொள்வான். கெட்டுப்போன தன்னுடைய உடம்பை அவன் நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவதற்குள் பனம் பழத்தைப் பற்றியும் ஜனங்களைப் பற்றியும் அவன் கொண்ட அபிப்பிராயம் முற்றிலும் மாறிப் போவது நிச்சயம். இந்த இங்கிலீஷ் நாகரிகமும் பழக்கவழக்கங்களும் பனம் பழம் தின்பது போல முடியுமோ என்னவோ. அது காலக்கிரமத்தில் தான் தெரியும். இப்போது சில வருஷங்களாகத் தானே இந்தப் புதிய கல்வியும் நாகரிகமும் நம்முடைய தேசத்தில் கையாளப்படுகின்றன. வெகு சீக்கிரத்தில் உண்மை தெரிந்துவிடும். அது எப்படியாவது போகட்டும்; அதைப்பற்றி நாம் ஏன் வாக்குவாதம் செய்ய வேண்டும். அற்ப விஷயமாகிய நாற்காலியைப் பற்றிய பிரஸ்தாபம் இவ்வளவு தூரம் பேச்சை வளர்த்து விட்டது. நீங்கள் ஏதோ ஒரு பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருப்பதாகக் கீழே இருந்த வேலைக்காரர்கள் சொன்னார்கள். ஆகையால் எங்களோடு அதிகமாய்ப் பேசிக் கொண்டிருக்க உங்களுக்கு அவகாசம் இராது. நிரம்பவும் அரிதான உங்களுடைய பொழுதை நாங்கள் அபகரித்துக் கொள்வது அக்கிரமமான காரியம். ஆகையால் நாற்காலியைப் பற்றிய பிரஸ்தாபத்தையும், புதுநாகரிகத்தைப் பற்றிய பிரஸ்தாபத்தையும் நாம் இவ்வளவோடு விட்டு விடுவோம். நான் நாற்காலியில் உட்கார வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டது ஒன்றே போதுமானது. என்னை நீங்கள் பெருத்த சிம்மாசனத்தில் வைத்து உபசரிப்பது போல எண்ணிக் கொள்ளுகிறேன்” என்று நயமாகவும் சிரித்த முகத்தோடும் கூறிவிட்டு, அந்த விடுதியின் வாசற் கதவின் அருகில் நின்று கொண்டிருந்த வேலைக்காரப் பெண்ணைப் பார்த்துக் கண் ஜாடையில் அழைக்க, அவள் கொடி முல்லையம்மாளின் அருகில் வந்து, தனது தலை மீது வைத்திருந்த பெருத்த தாம்பாளத்தைக் கீழே இறக்கி வைத்து அதன் மேலே மூடப்பட்டிருந்த போர்வையை விலக்கினாள். அதற்குள் விலை உயர்ந்த இரண்டு பனாரீஸ் ரவிக்கைத் துண்டுகள், சீமை இலந்தைப் பழங்கள், ஆரஞ்சுப் பழங்கள், செவ்வாழைப் பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் முதலிய வஸ்துக்கள் காணப்பட்டன. தான் அவ்விதமான வஸ்துக்களைக் கொணர்ந்ததைப் பற்றி மனோன்மணியம்மாள் ஏதாவது தாறுமாறாகக் கூறுவாள் என்று கொடி முல்லையம்மாள் எதிர் பார்த்தாள். ஆனாலும், அவ்வாறு அவள் பற்பல விஷயங்களைப் பற்றி அபிப்பிராயங் கூறுவதைக் கேட்பதால், அவளது குணாதிசயங்களையும் மனப்போக்கையும் நன்றாக அறிந்து கொள்ளலாம் என்றும் எதிர்பார்த்தாள் ஆதலால், அவள் தனது வேலைக்காரப் பெண்ணையும் மனோன்மணியம்மாளினது முகத்தையும் மாறிமாறிப் பார்த்துக் புன்னகை தவழ்ந்த முகத்தோடு பேசத் தொடங்கி, “நாம் நம்முடைய பட்டிக்காட்டு வழக்கப்படி ஒருவரை ஒருவர் பார்க்கும் போது கொண்டு போகிறது போல இந்தச் சாமான்களை எல்லாம் கொண்டு வந்திருக்கிறோம். நம்முடைய மரியாதையையும், பிரியத்தையும், நாம் சந்திப்பது சுட காரியம் என்பதையும் காட்ட வேண்டும் என்று வெளியூர்களில் வழக்கமாக வைத்துக் கொண்டிருக் கிறார்கள். அப்படிப் போகாமல் வெறுங்கையோடு போனால், அதை ஜனங்கள் அவமரியாதையாக மதிப்பார்கள். ஆனால் நாம் இதை எல்லாம் இங்கே கொண்டு வந்தது மனோன்மணியம்மாளுக்கு எப்படி இருக்குமோ தெரியவில்லை; இருந்தாலும் இதைப்பற்றி கோபங் கொள்ளாமல் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறிய வண்ணம் தனது வேலைக்காரியைப் பார்த்து, “இந்த வீட்டு வேலைக்காரி அதோ வெளியில் நிற்கிறாள்; அவளைக் கூப்பிட்டுக் கொண்டு வா. அவள் இந்தச் சாமான்களை எடுத்து உள்ளே கொண்டு போய் வைக்கட்டும்” என்று கூறினாள்.

அதைக் கேட்ட மனோன்மணியம்மாள், “நம்முடைய நாட்டு வழக்கம் ஒவ்வொன்றும் இப்படித்தான் குழந்தைப் பிள்ளை விளையாட்டாக இருக்கிறது. வயசு முதிர்ந்த பெரியோர்கள் கூட மனம் கூசாமல் இந்தக் காரியங்களை எல்லாம் செய்வதோடு இதை ஒரு பெருமையாகவும் சுபகாரியமாகவும் மதிக்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது எனக்குச் சிரிப்பு வருகிறது. இந்தச் சாமான்களை எல்லாம் கொண்டு வருவது எங்களை மரியாதைப் படுத்துவதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். உண்மையில் எப்படி அர்த்தம் ஆகிறதென்றால், இந்தச் சாமான்கள் எல்லாம் எங்களிடம் இல்லை என்றோ, அல்லது, இவைகளை நாங்கள் பெறமுடிய வில்லை என்றோ நினைத்து நீங்கள் இவைகளைக் கொண்டு வந்து எங்களைச் சந்தோஷப்படுத்த முயற்சிப்பது போல இருக்கிறதே அன்றி வேறல்ல. இது மரியாதைப் படுத்துகிறதா அவமரியாதைப்படுத்துகிறதா என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். மனிதருக்குள் பரஸ்பரம் அந்தரங்கமான மரியாதையும் அன்பும் இருக்க வேண்டுமே அன்றி, இந்த வெளிப்படையான காரியம் எல்லாம் மனசின் உண்மையான நிலைமையை ஒரு நாளும் காட்டாது. உண்மையில் அன்பும், மரியாதையும் இல்லாதவர்கள் கூட இந்தச் சாமான்களை எல்லாம் கொண்டு வந்து வைத்துப் பார்த்து விட்டுப் போகிறார்கள். அது தான் போகட்டும் என்றால், இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. இப்படி வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் முதலியவற்றைக் கொண்டு வருவது சுபக்குறி என்று நீங்கள் கருதுகிறீர்களே நம்முடைய தேசத்தில் நடக்கும் ஒவ்வொரு கலியாணத்திலும், அதன் சம்பந்தமாக மனிதர் ஒருவரை ஒருவர் பார்க்கும் போதும், வெற்றிலை, பாக்கு, மஞ்சள் முதலிய மங்கலக் குறிகளை வைத்தே காரியங்களை நடத்துகிறார்களே! அப்படியிருந்தும் சிலர் விஷயத்தில் அசுபமும், சண்டையும், பூசலும், துக்கமும், விபரீதங்களும் நேராமலா இருக்கின்றன. ஆகையால் இவைகள் எல்லாம் அர்த்தம் இல்லாத அநாவசியமான காரியங்கள் என்பது நிச்சயமான சங்கதி. ஏதோ பழைய வழக்கத்தை அனுசரித்து நீங்கள் இந்தச் சாமான்களை எல்லாம் கொண்டு வந்தீர்கள் ஆகையால், அதைப்பற்றிப் பாதகம் ஒன்றும் இல்லை. ஆனாலும் நீங்கள் கொண்டு வந்துள்ள சாமான்களில் எதுவும் இங்கே உபயோகப்படக் கூடியதாக இல்லை. வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் முதலியவைகளை எல்லாம் நான் உபயோகிக்கிறதே இல்லை. அவைகள் வேண்டும் என்ற ஒர் ஆவலும் என் மனசில் உண்டாகிறதில்லை. நமக்கு உண்மையில் தேவையில்லாத பொருட்களை எல்லாம் நாம் ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்பதும், அதனால் நம்முடைய செலவுகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுமே சந்தேகம். நீங்கள் கொண்டு வந்திருக்கும் ரவிக்கைத் துண்டுகள் நிரம்பவும் படாடோபமாகவும் சிவப்பு பச்சை முதலிய நிறங்களே மயமாக நிறைந்ததாகவும் தோன்றுகின்றன. நான் துல்லியமான சாதாரண வெள்ளை உடைகள் உடுத்துவதே வழக்கம். அதுவே ஆரோக்கியமானது என்பது என்னுடைய அபிப்பிராயம். ஆகையால் இந்த ரவிக்கைகளும் எனக்கு உபயோகப்படப் போகிறதில்லை. இவைகளைத் தவிர இந்தத் தட்டில் சில பழங்களும் இருக்கின்றன. அவைகளை நான் கையால் கூடத் தொடப் போகிறதில்லை. எங்கள் வீட்டில் இன்னம் பல வகைப்பட்ட ஏராளமான பழங்கள் கிடந்தழிகின்றன. அவைகளைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு, அருவருப்பு உண்டாகிவிட்டது. இப்போது இவைகளைக் கண்ணால் பார்த்தாலே வயிற்றில் அஜீரணம் உண்டாகும் போல் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமையில் இருக்கும் என்னிடம் நீங்கள் இந்தப் பொருள்களைக் கொண்டு வந்து வைப்பதால், என் மனசில் ஏதாவது சந்தோஷமாவது, பெருமையாவது உண்டாகப் போகிறதா என்று யோசித்துப் பாருங்கள். இதர நாடுகளில், இப்படிப்பட்ட சாமான்களை எல்லாம் கொண்டு போய் ஒருவரை ஒருவர் பார்க்கிற வழக்கமே இல்லை. மங்கலகரமான மஞ்சள், வெற்றிலை பாக்கு இவைகள் இல்லாமலே அங்கே கலியாணங்கள் நடக்கவில்லையா? புருஷன் பெண்ஜாதிகள் சந்தோஷமாகவும் மங்கலகரமாகவும் காலம் தள்ளவில்லையா? நம் நாட்டில் தான் இந்த அநாவசியமான வேஷங்கள் எல்லாம் நடைபெறுகின்றன” என்றாள். அவள் கூறிய வார்த்தைகள் விபரீதமாகத் தோன்றினாலும், வந்திருந்தவரிடம் அவள் குரோத புத்தியோடு நடந்து கொள்ளவில்லை என்பதும், அவர்களை அவமரியாதைப்படுத்த எண்ணவில்லை என்பதும் நன்றாகத் தெரிந்தன. ஆனாலும் அவளது மனப்போக்கும் கந்தசாமியின் மனப்போக்கும் ஒன்றுக்கொன்று சிறிதும் பொருந்தாது என்பது கோபாலசாமிக்கு நன்றாகத் தெரிந்தது. திகம்பரசாமியார், வேலாயுதம் பிள்ளை முதலியோர் பெண்ணின் குணாதிசயங்களை அறிந்து கொள்ளாமல் பட்டாபிராம பிள்ளையின் சிநேகம் ஒன்றை மாத்திரம் கருதி அந்தக் கலியாணத்தை நிச்சயித்து விட்டார்களோ என்றும், பெரியோர் சொல்லை மீறி நடந்தறியாத சற்புத்திரனான கந்தசாமி தன் மனதிற்குப் பிடிக்காத அந்தப் பெண்ணை எப்படிக் கலியாணம் செய்து கொள்வான் என்றும் கோபாலசாமி நினைத்துப் பலவாறு கவலைகொண்டு சஞ்சலம் அடைந்ததன்றி, மனோன்மணியின் குண விசேஷங்களை மேலும் அறிந்து கொள்ளப் பிரியப்படாதவனாய், தான் எப்படியாவது தந்திரம் செய்து அவ்விடத்தைவிட்டு வெளியில் போய்விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். ஆனால், வந்து உட்கார்ந்த உடனே தான் எழுந்து அவ்விடத்தை விட்டுப்போக விரும்பினால், அது மனோன்மணியம்மாளின் மனதில் சந்தேகத்தை உண்டாக்குவது அன்றி, அவளது நடத்தை தனக்குப் பிடிக்காமையால் எழுந்து போய்விட்டதாகக் கந்தசாமியும் எண்ணிக் கொள்வான் என்று கோபாலசாமி நினைத்தான். அந்த முக்கியமான விஷயத்தில் கந்தசாமி தானாகவே எவ்விதமான முடிவிற்கும் வரவேண்டுமே அன்றி, அவனுக்குத் தான் எந்த வகையிலும் வழிகாட்டியாக நடந்து கொள்ளக் கூடாதென்று நினைத்த கோபாலசாமி எதையும் கவனியாதவன் போலத் தரையைப் பார்த்தபடி மேலும் சிறிதுநேரம் பொறுமையாகத் தனது ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். மனோன்மணியம்மாள் கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கேட்ட கொடி முல்லையம்மாள் சிறிதும் மனவருத்தம் அடையாதவள் போலக் காட்டிக்கொண்டு சந்தோஷமாகவும் முகமலர்ச்சியோடும் பேசத்தொடங்கி, “நம்முடைய தேசத்தில் இதைப் போன்ற பைத்தியக்காரத்தனமான காரியங்கள் எத்தனையோ அனுசரிக்கப்படுகின்றன என்பது உண்மைதான். மனிதருக்கு மனிதர் உள்ளார்ந்த உண்மையான அன்பு வைப்பது முக்கியமே அன்றி, வெளிப்படையான இந்தக் காரியங்கள் எல்லாம் அர்த்தம் இல்லாதவை என்றும், இவைகளால் நம்முடைய செலவை நாம் அதிகரிக்கச் செய்கிறோம் என்றும் நீங்கள் சொல்வது ஒரு விஷயத்தில் உண்மை தான். ஆனால் நாம் இன்னம் ஆழ்ந்து யோசித்துப் பார்க்கப் போனால், நமக்கு இந்தச் சாமான்கள் எப்படித் தேவையில்லையோ, அது போல, மற்ற மனிதருடைய அன்புதான் எதற்காகத் தேவை? அதனால் நமக்கு ஏதாவது அனுகூலமாவது உபயோகமாவது உண்டா? ஒரு மனிதருக்கும் இன்னொரு மனிதருக்கும் சிநேகமாவது அன்பாவது வேண்டும் என்ற அவசியமே இல்லை. மனிதருக்குத் தேவையான பணம் இருந்துவிட்டால், அவர்களுடைய தேக போஷணைக்கு எது தேவையோ அது எளிதில் வந்து விடுகிறது. அது ஒன்றே போதுமானது. மற்ற மனிதருடைய அன்பாவது உறவாவது இருந்தாலும் இல்லாவிட்டாலும், இரண்டும் ஒன்று தானே. இன்னும் ஆழ யோசித்துப் பார்த்தால், ஒரு ஸ்திரீ ஒரு புருஷனை எதற்காகக் கலியாணம் செய்து கொண்டு அநாவசியமான தொந்தரவை விலைக்கு வாங்க வேண்டும்? புருஷன் இல்லாவிட்டால், நம்முடைய காரியம் எல்லாம் நடைபெறாதா? புருஷனைக் கட்டிக் கொள்ளாமலே தமது வாழ்நாளைக் கழிக்கும் ஸ்திரீகளும், புருஷனைக் கட்டிக்கொண்டு இழந்து தமது வாழ் நாளைக் கடத்தும் ஸ்திரீகளும் உலகத்தில் இல்லையா? அவர்களுக்கெல்லாம் பொழுது போகமாட்டேன் என்கிறதா? இல்லை அல்லவா? நீங்கள் சொல்வது போல, கூடியவரையில் மனிதர் தங்களுடைய தேவைகளையும் செலவுகளையும் குறைத்துக் கொண்டே போவது தான் உத்தமமான காரியம். நம்முடைய தேசத்தில் சந்நியாசம் வாங்கிக் கொள்வதென்று அதைத்தான் சொல்லுகிறார்கள். உலகப்பற்றையும், மனிதர் பற்றையும், உடல் அபிமானத்தையும், உயிர் அபிமானத்தையும் அடியோடு ஒழித்து தமது ஆசாபாசங்களை எல்லாம் அடக்கி, பசி உண்டானால், கையில் அகப்பட்ட காயையோ சருகையோ தின்று பரமாத்மாவோடு ஐக்கியப்படுவது ஒன்றையே நாடி நிற்பது இந்த உலகத்தில் பிறந்தவர் அடையக்கூடிய மகா அரிதான சித்தி என்றும், அதுவே கைவல்ய நிலைமை என்றும், ஜனங்கள் சொல்லிக்கொள்ளுகிறார்கள். அது எல்லோராலும் சாதிக்கக் கூடியதல்ல என்றும் சொல்லக் கேள்வியுற்றிருக்கிறேன். ஆனால் இப்போது உங்களோடு பேசிப் பழகியதில், நம் தேசத்தார் இங்கிலீஷ் பாஷையைப் படித்து, அந்தத் தேசத்து நாகரிகத்தை அறிந்து கொண்டால், அவர்கள் வெகு சுலபத்தில் மேற்படி கைவல்ய நிலைமையை அடைந்து இந்த உலகப்பற்றைத் துறந்துவிடுவார்கள் என்பது நிச்சயம். நம் தேசத்துத் துறவிகள் பூலோகத்தின் பற்றையே ஒழித்துப் பரமபதம் ஒன்றையே நாடிச் செல்கிறார்கள். ஆனால் அந்தப் பரமபதத்தை நாம் பார்க்க முடிகிறதில்லை. பார்த்தவர் திரும்பி வந்து அது எப்படி இருக்கிறதென்று சொன்னதும் இல்லை. இப்போது நம்முடைய வெள்ளைக் காரருடைய சீமை இருக்கிறதல்லவா. அதுதான் நாம் கண் முன் காணக்கூடிய பரமபதமாக இருக்கிறது என்பதைப்பற்றி யாரும் ஆக்ஷேபனை சொல்ல முடியாது. இங்கிலீஷ் படிக்கிறவர்கள் எல்லோரும் ஒருவித துறவிகள். அவர்கள் தம்முடைய இந்தியா தேசத்தையும், இந்திய மனிதருடைய பற்றையும், இந்தியாவில் உள்ள வஸ்துக்களின் பற்றையும், பழக்க வழக்கங்களையும் அடியோடு துறந்து, வெள்ளைக்காரரின் பரமபதத்தில் உள்ள தெய்வங்களின் பாத தூளியாக இருக்கும் பாக்கியம் கிடைத்தாலும் போதும் என்று தபசு பண்ணுகிறார்கள். அவ்விடத்தில் இருந்து வரும் சாமான்கள் எல்லாம் தெய்வப் பிரசாதத்துக்கு சமதையாக இருக்கின்றன. ஆனால் ஒரு விஷயம். இந்த வெற்றிலை பாக்கு மஞ்சள் முதலிய உபயோகமற்ற அற்ப சாமான்கள் எல்லாம் நம்முடைய நாட்டில் தான் விளைகின்றன. இவைகளை உபயோகித்தால் தேக ஆரோக்கியம், சுறுசுறுப்பு, முகக்களை முதலிய குணங்கள் ஏற்படும் என்று நம்முடைய முன்னோர்கள் கண்டுபிடித்து, இவைகளை உபயோகித்து வந்திருக்கிறார்கள். இவைகள் வெள்ளைக்காரரின் சீமைகளில் உற்பத்தியாகிறதில்லை. உற்பத்தியானால் இவற்றின் குணம் அவர்களுக்கும் அவசியம் தெரிந்திருக்கும். அவர்களும் இவைகளை நாம் உபயோக்கிப்பது போலப் பயன்படுத்துவார்களே என்னவோ. ஆனால் அவர்களுடைய ஊரில் ஒரு புட்டி ரூ 20, 25 விலையுள்ள அற்புத சக்தி வாய்ந்த பலவகைப்பட்ட பிராந்திகளும், ஒயின்களும் உற்பத்தி ஆகின்றன. ஐயாயிரம் பதினாயிரம் விலையுள்ள மோட்டார் வண்டிகளும், ஐம்பதினாயிரம் லட்சம் விலையுள்ள ஆகாய விமானங்களும் தயாராகின்றன. அவைகளை எல்லாம் வெள்ளைக்காரர்கள் ஏராளமாக உபயோகப்படுத்துகிறார்கள். நாம் எப்போதும் ஏழ்மை நிலைமையில் இருப்பவர்கள். “உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்” என்ற கொள்கைப்படி நாம் நம்முடைய தேவைகளைச் சுருக்கிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய வருமானமோ சொற்பத்திலும் சொற்பமானது. வெள்ளைக் காரர்களோ “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்ற கொள்கைப் படி இந்த உலகம் முழுமையும் கைப்பற்றி சகலமான தேசத்திலும் உள்ள பொருட்களையும் திரட்டிக் கொண்டு போய்த் தம்முடைய பட்டணத்தைக் குபேர பட்டணத்துக்குச் சமதையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நகைகளை அணிவதில்லை; ஜரிகை ஆடைகள், நம்முடைய ஆடைகளைப் போன்ற பட்டாடைகள் முதலியவற்றை உபயோகிப்பதில்லை. அவர்களுடைய வீட்டில் இருக்கும் சாமான்களோ, பீங்கான் சாமான்கள், கண்ணாடி சாமான்கள், மரச் சாமான்கள் முதலியவை; அவர்கள் ஒவ்வொருவரும் லட்சம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். கல்யாணம் முதலிய சடங்குகளில் எல்லாம் அவர்களுக்கு அதிகச் செலவு கிடையாது. நம்மைப் போல இப்படிப்பட்ட அநாவசியச் செலவுகளையும் அவர்கள் செய்கிறதில்லை. ஆனால் அவர்கள் பதினாயிரம் இருபதினாயிரம் போட்டு மோட்டார் வண்டி வாங்குவார்கள். மாதம் ஆயிரக் கணக்கில் செலவு செய்து அற்புதமான சக்தி வாய்ந்த ஒயின் தினுசுகளைக் குடிப்பார்கள். அதன் பிறகும் மிச்சப்படும் பணத்தை சூதாடித் தோற்பார்கள். அவர்கள் உலகத்தை எல்லாம் கட்டியாளுவதால், அடிக்கடி பிற தேசங்களோடு யுத்தங்கள் விளைந்து விடும். அப்போது வெடிகுண்டுகள், நீர் முழுகிக் கப்பல்கள், ஆகாய விமானங்கள் முதலிய யுத்த தளவாடங்களைச் சேகரிக்க, இமாலய பர்வதத்தின் உயரம் குவிக்கப்பட்ட பொன் செலவு செய்வார்கள். தெய்வ லோகத்தில் சங்கநிதி பதுமநிதி என்ற நாணயங்கள் செலாவணியில் இருப்பது போல வெள்ளைக்காரர் தேசத்தில் தங்கப்பாளங்களும், வைரக் கட்டிகளும் நாணயமாக உபயோகிக்கப்பட்டால் அன்றி, அவர்களுடைய தேவைகளைத் தீர்ப்பது சாத்தியம் இல்லாத காரியமாக இருக்கிறது. ஆகையால் வெள்ளைக்காரர் வெற்றிலை பாக்கு மஞ்சள் பனரீஸ் ரவிக்கைத் துண்டு முதலியவற்றை உடயோகிக்கவில்லை என்பதில் இருந்தே நிரம்பவும் சிக்கனமாக நடக்கிறார்கள் என்றாவது, அவர்கள் சகலமான விஷயங்களிலும் மேதாவிகள் என்றாவது நாம் நினைத்துவிட முடியாது. அவர்கள் செய்வதை எல்லாம் நாமும் செய்ய வேண்டும் என்ற நியதியும் இல்லை. நம்முடைய தேசத்தில் இயற்கையிலேயே உண்டாவதும், நம்முடைய தேக ஆரோக்கியத்துக்கு உகந்ததும், முற்றிலும் சாத்விகமாக இருப்பதும், அற்ப விலை உள்ளவைகளுமான பொருள்களை நாம் உபயோகிக்கிறோம். நாம் காலணா விலை உள்ள இயற்கைப் பொருளான சீயக்காயை உபயோகிக்கிறோம். அவர்கள் நாலனா விலையுள்ள செயற்கைப் பொருளான சோப்பை உபயோகிக்கிறார்கள். நாம் ஒரு தம்பிடி விலையுள்ள இயற்கைப் பொருளான மஞ்சளை முகத்திற்குப் பூசிக் குளிக்கிறோம். அவர்கள் ஒரு ரூபாய் விலையுள்ள ரோஸ் பவுடரை முகத்திற்குப் பூசிக் கொள்ளுகிறார்கள். நாம் ஒரு காசு விலையுள்ள இயற்கைப் பொருளான தாம்பூலத்தை உபயோகப்படுத்தி ஜீரண சக்தியையும் உடம்பின் சுறுசுறுப்பையும் முகக்களையையும் உண்டாக்கிக் கொள்ளுகிறோம். அவர்கள் நூற்றுக் கணக்கில் விலை உள்ள செயற்கைப் பொருள்களான ஒயின்களையும் சாராயங்களையும் உபயோகித்து முகக்களை, ஜீரணசக்தி, சுறுசுறுப்பு முதலியவைகளை உண்டாக்கிக் கொள்ளுகிறார்கள். நம்முடைய ஸ்திரீகள் 25 ரூபாய் விலையுள்ள இரண்டு புடவைகளையும், 5 ரூபாய் விலை உள்ள நான்கு ரவிக்கைகளையும் வைத்துக் கொண்டு ஒரு வருஷகாலத்தைக் கடத்தி விடுவார்கள். அது வெள்ளைக்கார ஸ்திரீகளுடைய ஒருகால் பூட்சின் விலைக்குக் காணாது. அவர்கள் ஒருமணி நேரத்துக்கு ஒருவித சில்க் ஆடை அணிவார்கள். அவர்கள் மணிக்கட்டில் கட்டி இருக்கும் கடிகாரத்தின் விலையை, நம்மவர்களுடைய எல்லா நகைகளின் விலையையும் சேர்ந்து எட்டாது. இப்படி இருக்க, நம்மவர்கள் அநாவசியமாக நம்முடைய செலவுகளை அதிகப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்பதும், வெள்ளைக்காரர் செலவுகளைக் குறைக்கிறார்கள் என்பதும் உண்மையல்ல. ஆனால் நீங்கள் சம்பந்தப்பட்ட வரையில் இந்த வெற்றிலை பாக்கு மஞ்சள் முதலியவற்றின் செலவுகளைக் குறைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இவைகளுக்குப் பதிலாக வெள்ளைக்காரர்கள் உபயோகிக்கும் சாமான்களை எல்லாம் நீங்கள் உபயோகப்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் இரண்டு நாகரிகத்திலும் ஒட்டாமல் நடுமத்தியமாக இருப்பது நிரம்பவும் மெச்சத் தகுந்ததே. இதைப்பற்றி கந்தசாமி கேள்விப்பட்டால் நிரம்பவும் சந்தோஷம் அடைவான். ஏனென்றால் உங்களால் அவனுக்கு வெற்றிலை பாக்கு மஞ்சள் முதலிய செலவுகள் எல்லாம் மிச்சப்படும். பட்டுப் புடவை ரவிக்கைகள் முதலிய அபாரச் செலவுகள் எல்லாம் இல்லாமல் போகும். நல்ல வேளையாக நான் உங்களை இன்று பார்க்க வந்தேன். இங்கே வந்ததில், சில சங்கதிகளை நான் தெரிந்துகொள்ளச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. மன்னார்குடியில் இருந்து இன்று தான் எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. வருகிற வெள்ளிக்கிழமை நடக்கப் போகும் நிச்சயதார்த்தத்தன்று கந்தசாமி வீட்டார் ஏராளமான வரிசைகளைக் கொண்டுவர உத்தேசித்திருப்பதாக எனக்குச் சங்கதி எட்டி இருக்கிறது. முழுதும் தங்க ஜரிகையும் நற்பவழங்களும் நல்முத்துக்களும் வைத்திழைத்த புடவை, ரவிக்கை, வெற்றிலை இருநூறு கவுளி, பாக்கு 2 மூட்டை, ரஸ்தாளி வாழைப்பழம் ஒருவண்டி, மஞ்சள் ஒரு மூட்டை, குங்குமம் ஒரு மூட்டை முதலிய சாமான்களை எல்லாம் அவர்கள் வரிசையாக வழங்க உத்தேசித்திருக்கிறார்களாம். அவைகள் எல்லாம் உங்களுக்கு உபயோகப்படப் போகிறதில்லை என்று நாங்கள் உடனே எழுதி விடுகிறோம். நிச்சயதார்த்தத்துக்கும், கலியாணத்துக்கும், புடவைக்குப் பதிலாக இரண்டு பீஸ் மஸ்லின் துணி மாத்திரம் வாங்கி வந்தால் அதுவே போதுமானது என்று எழுதித் தெரிவித்து விடுகிறேன். அது தங்களுக்குச் சம்மதந்தானே? நாம் இப்போது இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பிரஸ்தாபம் செய்வதில் எனக்கு இன்னொரு சந்தேகமும் உதிக்கிறது. நம்முடைய தேச வழக்கப்படி கலியாணம் என்றால், அன்றைய தினம் புரோகிதர் வந்து ஹோமம் முதலியவை நடத்தித் திருமாங்கலிய தாரணம் செய்விக்கிறது வழக்கம். அந்த வழக்கம் உங்களுக்குப் பிடிக்காவிட்டால், நாமும் கோவிலில் போய் மோதிரம் மாற்றிக்கொண்டு வருவதுதான் நல்லதாகத் தோன்று கிறது. அந்த விஷயத்திலும் உங்களுடைய அபிப்பிராயத்தை இப்போதே வெளியிட்டு விடுங்கள்” என்றாள்.

அவள் கூறிய வார்த்தைகள் எல்லாம் குத்தலானவை என்பதை மனோன்மணியம்மாள் எளிதில் உணர்ந்தாள் ஆனாலும், கொடி முல்லையம்மாள் வேடிக்கைப் போலப் பேசினாள் ஆதலால், மனோன்மணி அதிக கோபமாவது ஆத்திரமாவது கொள்ளாமல் சாதாரணமாகவே பேசத் தொடங்கி, “வெள்ளைக்காரருடைய துஷ்டச் செய்கைகள் ஒருபுறம் இருக்கட்டும். அவைகளை எல்லாம் நாம் ஏன் கவனிக்க வேண்டும்? அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை மாத்திரம் கிரகித்துக் கொண்டு அவ்வளவோடு நின்று விடுவோமே. என் சுயேச்சைப்படி காரியம் நடப்பதாய் இருந்தால், நான் கோவிலில் போய் மோதிரம் மாற்றிக் கொள்வதே போதும் என்று சொல்லி விடுவேன். என் தகப்பனார் ஒருவர் இருக்கிறார். இன்னம் பிள்ளை வீட்டார் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் அதற்கு இணங்கமாட்டார்கள். எத்தனையோ யுகம்யுகமாக நம்முடைய மனிதர்களின் இரத்தத்தில் ஊறி இருக்கும் இந்தப் பழைய பழக்க வழக்கங்களும் மூடநம்பிக்கைகளும் நம்மில் படித்தவரையும் விட்டு எளிதில் போகிறதில்லை அல்லவா? அதற்கு நாம் கொஞ்சம் இடங்கொடுக்க வேண்டி இருக்கிறது. இதனாலேதான் நம்முடைய முன்னேற்றம் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது. என்ன செய்கிறது” என்றாள்.

அதற்குள் கொடி முல்லையம்மாளின் வேலைக்காரி சென்று மனோன்மணியம்மாளின் வேலைக்காரியை அழைத்துக் கொண்டு வந்தாள் ஆகையால், அந்த வேலைக்காரி ரவிக்கைத் துண்டுகள் முதலியவை இருந்த தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த ஓர் அறைக்குள் சென்றாள். வந்திருப்பவர்களை மரியாதையாக உபசரித்து வைத்திருக்கும்படி பட்டாபிராம பிள்ளை டெலிபோன் மூலமாகச் சொல்லியது நினைவிற்கு வந்தது. ஆகையால், மனோன்மணியம்மாள் கொடி முல்லையம்மாளை நோக்கி, “அம்மா இப்போது பலகாரம் முதலியவை சாப்பிடும் நேரமாகிறதே. உங்களுக்கெல்லாம் ஏதாவது சிற்றுண்டிகள் தருவிக்கட்டுமா?” என்றாள்.

அந்த வார்த்தையைக் கேட்டுக் கொடி முல்லையம்மாள் நிரம்பவும் சந்தோஷம் அடைந்தவள் போலத் தனது முகத்தை இனிமையாகவும் மலர்ச்சியாகவும் வைத்துக் கொண்டு பேசத் தொடங்கி, “நீங்கள் சொல்வதைக் கேட்டு சந்தோஷமடைந்தேன். நாங்கள் பழம் பாக்கு வெற்றிலையைக் கொண்டு வந்ததைக் கண்டு, நீங்கள் எங்களுக்குப் புத்தி கற்பித்தீர்களே, அப்போது என் மனசில் ஒரு சந்தேகம் உதித்தது. நீங்கள் ஒருவேளை எங்களுடைய வீட்டுக்கு வந்தால், அப்போது நாங்கள் உங்களுக்கு உபசரித்தால், அதைக்கூடத் தாங்கள் அவமரியாதைப் படுத்துவதாக நினைத்துக் கொள்வீர்களோ என்ற சந்தேகம் உதித்தது. ‘எங்கள் வீட்டில் பகஷணங்கள் இல்லையா? நாங்கள் சாப்பிடாமல் பட்டினியாகவா உங்கள் வீட்டுக்கு வருவோம்? எங்கள் வீட்டில் பகஷனங்கள் இல்லை என்று எண்ணிப் பேசுகிறீர்களா? அல்லது நாங்கள் பகஷனங்கள் சாப்பிடாதவர்கள் என்று நினைத்துப் பேசுகிறீர்களா? இது மரியாதைப்படுத்துகிறதா, அவமரியாதைப்படுத்துகிறதா என்று நீங்கள் ஒருவேளை கேட்பீர்களோ என்று நான் சந்தேகித்தேன். இப்போது நீங்கள் பலகாரம் சாப்பிடும்படி எங்களை உபசரித்ததில் இருந்து, நீங்கள் அப்படிச் செய்ய மாட்டீர்கள் என்பது நிச்சயமாகிறது. வெள்ளைக்காரர் நாகரிகத்தில் இந்த உபசரணைக்கு மாத்திரம் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது போலும்! நல்ல வேளைதான். ஆனால், உங்களுடைய வீட்டுச் செலவு இதனால் அநாவசியமாக அதிகரிக்கிறதே என்ற கவலை தான் எனக்கு உண்டாகிறது. ஆனால் நாங்கள் உங்கள் வீட்டில் பலகாரம் சாப்பிடுவதால், உங்கள் வீட்டுச் செலவு அதிகரிக்கிறதானாலும், இந்த இரண்டாவது வேளைச் சிற்றுண்டிச் செலவு எங்கள் வீட்டில் லாபமாய் போகிறதல்லவா? ஆதாயமும் செலவும் சரியாய்ப் போகும். நாங்கள் கொண்டு வந்த சாமான்களின் விஷயம் அப்படிப்பட்டதல்ல. அது அநாவசியமானது தான். அவைகள் இல்லாமலேயே காரியம் நடந்து போகும். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆனாலும், நாங்கள் இப்போது தான் ஆகாரம் பார்த்துக் கொண்டு வந்தோம். வயற்றில் கொஞ்சங்கூட இடமில்லை. நீங்கள் இவ்வளவு தூரம் உபசாரம் செய்ததைக் காண எங்கள் மனம் குளிர்ந்தது. உங்களுக்கு நேரமாகிறது. உங்களுக்கு மாத்திரம் பலகாரங்கள் தருவித்துச் சாப்பிடுங்கள். நாங்கள் இருப்பதைக் கருதி நீங்கள் அந்த வேலையை நிறுத்த வேண்டாம்” என்றான்.

அந்தச் சமயத்தில் மனோன்மணியம்மாளின் வேலைக்காரி தாம்பாளத்தில் இருந்த சாமான்களை எல்லாம் பக்கத்தில் இருந்த ஓர் அறைக்குள் வைத்துவிட்டுத் திரும்பிவந்தாள் ஆதலால், அவளைக் கண்ட மனோன்மணியம்மாள், “அடி அமிர்தம்! நீ போய் எனக்குக் கொஞ்சம் காப்பியும் பிஸ்கோத்தும் கொண்டு வா” என்றாள். அமிர்தம் என்றும் பெயருடைய அந்த வேலைக்காரி உடனே அவ்விடத்தை விட்டு வெளியில் போய் மேன்மாடத்தை விட்டுக் கீழே இறங்கி சமையலறைக்குப் போய் ஒரு சிறிய கூஜாவில் காப்பியும், ஒரு தட்டில் ஏழெட்டு பிஸ்கோத்துகளையும் எடுத்துக் கொண்டு மேலே வந்து சேர்ந்தாள். அது வரையில் நிரம்பவும் பொறுமையோடு தன்னை அடக்கிக் கொண்டு அவ்விடத்தில் உட்கார்ந்திருந்த கோபாலசாமிக்கு அதற்கு மேல் அவ்விடத்தில் இருக்கை கொள்ளவில்லை. கந்தசாமியும் மனோன்மணியும் ஒருவர்க்கொருவர் மேன்மேலும் குதர்க்கமாக சம்பாஷித்துக் கொண்டு போகும்படி விடுத்தால் அவர்கள் இருவருக்கும் கலியாணம் நடைபெறாமல் போய் விடுவது நிச்சயம் என்ற நினைவு தோன்றியது. ஆகையால், தான் கந்தசாமியை அழைத்துக் கொண்டு போய்விடுவது உசிதமாகத் தோன்றியது. ஆகவே அவன் கந்தசாமியைப் பார்த்து, “என், நாம் வீட்டுக்குப் போகலாமா? மனோன்மணியம்மாள் பரீட்சைக்கு படிக்கிறபடியால், நாம் அநாவசியமாக அதிக நேரம் இங்கே தங்கி அவர்களுக்கு இடைஞ்சல் செய்வது சரியல்ல. அதனால் நமக்கு யாதொரு அனுகூலமும் இல்லை. ஆனாலும், இவர்களுக்குத் தொந்தரவாக முடியும். இவர்கள் பலகாரம் சாப்பிட்டுவிட்டு வாசிக்கட்டும். முக்கியமாக நாம் கோரிவந்த காரியம் ஆகிவிட்டது. நாம் இதே ஊரில் பார்க்காமல் இருப்பது மரியாதைக் குறைவு என்ற எண்ணத்தினால் நாம் வந்தோம். வந்து பார்த்து சந்தோஷம் அடைந்தோம். இனி கலியாணம் ஆகிவிடுமானால், அதன் பிறகு அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போவோம். அதற்குள் இவர்களுக்குப் பரீட்சையும் தீர்ந்து போயிருக்கும். அதன் பிறகு இருதிறத்தாரும் சாவகாசமாக இருந்து பேசி சந்தோஷம் அடையலாம், மனோன்மணியம்மாளிடம் சொல்லிக் கொண்டு புறப்படு. போகலாம்” என்றான்.

அதைக் கேட்ட மனோன்மணியம்மாள், “என் தகப்பனார் அவருடைய கச்சேரியில் இருக்கிறார். இன்றைய தினம் அவருடைய கச்சேரி 4-மணிக்கு மூடப்படுமாம். உடனே புறப்பட்டு 4½ மணிக்குள் அவர் இங்கே வந்து விடுவார்; தாம் வருகிற வரையில் இங்கேயே இருக்கும்படி உங்களிடம் கேட்டுக் கொள்ளச் சொன்னார். ஆகையால் நீங்கள் தயைசெய்து இன்னம் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போக வேண்டும். இப்போது மணி மூன்றுக்கு மேல் ஆகிறது. இன்னம் ஒருமணி நேரத்தில் அவர் வந்துவிடுவார் “ என்றாள்.

அதைக் கேட்ட கோபாலசாமியும் கொடி முல்லையம்மாளும் திடுக்கிட்டு திகில் அடைந்தனர். தாம் வந்திருப்பதாய் டலாயத்தின் மூலமாகக் கேள்வியுற்றவுடன் மனோன்மணியம்மாள் டெலி போன் மூலமாய்த் தனது தகப்பனாரோடு பேசி இருக்கிறாள் என்பது நிச்சயமாகத் தெரிந்தது. அவருடைய கண்ணில் படாமல் தாங்கள் அவ்விடத்தை விட்டுப் போய்விட வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டு வந்தவர்கள் ஆதலால், அது அவர்களால் எதிர்பார்க்கப்படாத சம்பவமாக இருந்தது. அவளது தந்தை வந்து தங்களோடு பேசினால், அவர் ஒருகால் உண்மையைக் கண்டு கொள்வாரோ என்ற அச்சமும் கவலையும் தோன்றி அவர்களது மனதைக் கலக்கத் தொடங்கின. ஆனால் கொடி முல்லையம்மாள் அன்னிய புருஷருக்கு எதிரில் வராமல் நாணிக் கோணி மறைவாக இருக்கும் கர்னாடக ஸ்திரீ ஆதலால், பட்டாபிராம பிள்ளை கொடி முல்லையம்மாள் தனக்குள் ஒர் பிள்ளையை ஒளிய வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கண்டு கொள்ள இயலாது என்ற எண்ணம் அவர்களது மனதில் தோன்றியது. பெண்ணைப் பார்க்க வந்த தாம், வீட்டின் தலைவர் வருவதற்குள் அவசரப்பட்டுக் கொண்டு போவது சந்தேகத்திற்கு இடங்கொடுக்கும் என்ற எண்ணமும் அவர்களது மனதில் தோன்றியது. ஆகவே, தாம் பட்டாபிராம் பிள்ளை வரும் வரையில் இருந்து அவர் சந்தேகப்படாதபடி சொற்ப நேரம் பேசிச் செலவு பெற்றுக் கொண்டு போய்விடுவதே உசிதமானதென்று அவர்கள் இருவரும் நினைத்தனர்.

அந்தச் சமயத்தில் வேலைக்காரி காப்பி முதலியவற்றைக் கொணர்ந்து மனோன்மணி அம்மாளுக்கருகில் போடப்பட்டிருந்த ஒரு மேஜையின் மீது வைத்தாள். ஆதலால், அவளது கவனமும் பார்வையும் அவ்விடத்தில் சென்றன. அதுவே சமயம் என்று நினைத்த கொடி முல்லையம்மாள் தான் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டுச் சிறிது அப்பால் நகர்ந்து கோபாலசாமியைப் பார்த்துத் தனது கையாலும் கண்களாலும் ஜாடை காட்டி, அவன் உடனே அவ்விடத்தை விட்டுக் கீழே போய் இருக்கவும், பட்டாபிராம பிள்ளை வந்தால், அவரை மேலே அனுப்பாமல், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் வேலைக்காரியைத் தன்னிடம் அனுப்பவும், தான் கீழே வருவதாகவும், உடனே புறப்பட்டுப் போகலாம் என்றும் அவனிடம் தெரிவித்தாள். கோபாலசாமி உடனே அதை உணர்ந்து கொண்டவனாய், உரத்த குரலில் மனோன்மணிக்குக் கேட்கும்படி பேசத் தொடங்கி, “சரி; மனோன்மணியம்மாளுடைய தகப்பனாரைப் பார்க்கக் கிடைக்க வில்லையே என்று நான் நினைத்தேன். நல்ல வேளையாக அவர்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் வரப்போகிறார்கள். நாம் அதுவரையில் இருந்து அவர்களையும் பார்த்துக் கொண்டு போகலாம். நாம் உடனே திரும்பிப் போய்விடலாம் என்ற எண்ணத்துடன் குதிரையை வண்டியில் கட்டியபடி நிறுத்தி வைக்கச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். ஆகையால் நான் கீழே போய்க் குதிரையை அவிழ்த்துவிடச் செய்துவிட்டு நான் கீழேயே இருக்கிறேன். மனோன்மணியம்மாள் பலகாரம் சாப்பிடட்டும். நீ அவர்களோடு பேசிக் கொண்டிரு. நான் இருந்தால், மனோன்மணியம்மாளுக்குக் கூச்சமாக இருக்கும்” என்று கூறினான்.

கொடி முல்லையம்மாள், “சரி; அப்படியே செய்யுங்கள்” என்றாள்.

உடனே கோபாலசாமி எழுந்து வேலைக்காரப் பெண்ணையும் கூட அழைத்துக் கொண்டு கீழே போய்விட்டான். காப்பி முதலியவற்றைக் கொணர்ந்து வைத்த மனோன்மணி அம்மாளுடைய வேலைக்காரியும் அவ்விடத்தை விட்டு அந்த விடுதியின் வாசலுக்குப் போய்விட்டாள். அவ்வாறு கொடிமுல்லை அம்மாளோடு தனியாக விடப்பட்ட மனோன்மணியம்மாள் தனக்கருகில் வைக்கப்பட்டிருந்த பிஸ்கோத்தில் ஒன்றைத் தனது இடது கையில் எடுத்து வைத்துக் கொண்டாள். அவளுக்கு அதிக பசி உண்டாகி இருந்ததாகவாவது அல்லது அந்தப் பொருட்களை உண்ண அவள் நிரம்பவும் ஆவல் கொண்டதாகவாவது தோன்றவில்லை. அவள் பகற் போஜனம் உண்ட பிறகு நெடு நேரம் கழிந்து விட்டது. ஆகையாலும், அவள் ஓயாமல் படித்தும் உறங்கியும் இருந்தாள் ஆகையாலும், அவளது உடம்பில் ஒருவிதத் தளர்வும் சோம்பலும் மேலிட்டிருந்ததாகத் தென்பட்டதே அன்றி, கூர்மையான பசி இல்லாமல் இருந்தது. ஆகையால், அவள் வேண்டா வெறுப்பாய் அந்த வேலையைச் செய்ய எத்தனித்து, ஒரு பிஸ்கோத்தை மேற்சொன்னபடி எடுத்த வண்ணம் புன்னகை செய்த முகத்தினளாய்க் கொடி முல்லை யம்மாளை நோக்கி, “ஏனம்மா பிஸ்கோத் சாப்பிடுகிறீர்களா? இது நல்ல முதல்தரமானது. சீமையில் இருந்து பிரத்தியேகமாய்த் தருவிக்கப்பட்டது. அதிகமாய்ச் சாப்பிட வேண்டாம். ஒன்றே ஒன்று மாதிரி பாருங்களேன்” என்று அன்பாகக் கூறினாள். அவள் அந்தரங்க விசுவாசத்தோடு கூறிய மாதிரி கொடிமுல்லையம்மாளின் மனதில் ஒருவித இளக்கத்தை உண்டாக்கியது. மனோன்மணியம்மாள் இங்கிலீஷ் படிப்பினாலும் புதிய நாகரிகப் பற்றினாலும் எவ்வளவுதான் மாறுபட்டுப் போயிருந்தாலும், ஒவ்வொரு விஷயத்திலும் எவ்வளவுதான் குதர்க்கமாகப் பேசினாலும், அவளிடம் உள்ளும் புறமும் ஒத்த உறுதியான நடத்தையும், நிரம்பவும் லலிதமான குணமும் இருப்பது நன்றாகத் தெரிந்தது. ஆகவே கொடிமுல்லை அம்மாள் அவளது விஷயத்தில் ஒருவித அனுதாபம் அடைந்தாள். ஆனாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மறைத்து, “அம்மா! எனக்கு வேண்டாம். உங்கள் காரியம் ஆகட்டும். நாங்கள் மத்தியான வேளைகளில் காப்பி பலகாரம் முதலிய வஸ்துக்கள் எதையும் சாப்பிடுகிற வழக்கமே இல்லை. தண்ணிர் விட்டு வைத்திருக்கும் பழைய சாதம் கொஞ்சம் சாப்பிடுகிறதே வழக்கம். அது தான் உடம்புக்கு ஒத்தாற் போல ஆரோக்கியமாக இருக்கிறது. மற்ற பதார்த்தங்கள் எல்லாம் வாய்க்கு ருசியாக இருந்தாலும் உடம்பை வெகு சீக்கிரத்தில் கெடுத்துவிடும். நான் மாத்திரம் அல்ல. எங்கள் வீட்டில் உள்ள எல்லோரும் அப்படியே தான் சாப்பிடுவார்கள். மன்னார்குடியில் உள்ள என் தமக்கை வீட்டில் உள்ள எல்லோரும் அதையேதான் சாப்பிடுவது வழக்கம். உங்களுக்குப் புருஷராக ஏற்படுத்தப்பட்டிருக்கும் கந்தசாமிக்குப் பழைய சாதத்தில் நிரம்பவும் பிரியம். ஒரு நாளைக்கு அது சரியான பக்குவப்படி இல்லாமல் போய்விட்டால், அவன் அன்று பட்டினிதான் கிடப்பான். காப்பி என்ற பேச்சே எங்களுடைய வீட்டில் கிடையாது. ஏதாவது விசேஷ தினங்கள் வருமானால், அன்றுதான் பகூடிணங்கள் செய்வார்கள். பகூடிணங்களை நாம் தினம் தினம் செய்தால் அதன் ருசியும் நாக்குக்கு உறைக்கிறதில்லை. உடம்பும் கெட்டுப் போகும். அதற்காகத்தான், அவைகளை விசேஷ தினங்களில் மாத்திரம் செய்வதென்று முன்னோர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதனால் நமக்கு அதிகச் செலவு ஏற்படுகிறதென்ற எண்ணத்தினால் அப்படிச் செய்கிறதில்லை. முக்கியமாய் உடம்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அதன் கருத்து. என் தமக்கையின் வீட்டில் ஏராளமான செல்வமும், சகலமான சாமான்களும் கணக்கில்லாமல் கிடந்து இறைப்படுகின்றன. ஆனாலும், பெருந்தீனி பெரும் ரோகம் என்பது கைகண்ட விஷயம். ஆகையால், ஆகார விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம் என்பது நம்முடைய பெரியோரின் கொள்கை. இந்தக் காப்பி பலகாரங்கள் எல்லாம் உண்டான பிறகு மனிதருக்கு வியாதிகள் அதிகரித்து விட்டன. முக்கியமாய் அஜீரணம், வயிற்றுவலி, நீர்ரோகம் முதலிய வியாதிகள் பெருகி விட்டன. மனிதர் ஐம்பது அறுபது வயசுக்கு அதிகம் இருப்பதில்லை. நம்முடைய முன்னோர் இரண்டே வேளை திருப்தியாகப் போஜனம் செய்து வந்தார்கள். அடிக்கடி கண்ட வஸ்துக்களைத் தின்பதற்கு அவர்கள் நச்சுத்தீனி என்று பெயர் கொடுத்திருந்தார்கள். நச்சு என்றால் நஞ்சு அல்லது விஷம் என்று பொருள் அல்லவா. அது விஷமாக முடியும் என்பது நம் முன்னோருடைய கொள்கை. குழந்தைகள் இடைவேளைகளில் பழைய அமுது உண்பார்கள். எல்லோரும் நன்றாக உழைத்து வேலை செய்வார்கள். நல்ல பசியும் உண்டாகும். உடம்பு ஆரோக்கியமாக இருக்கும். ஒவ்வொருவரும் தொண்ணுறு வயசு, நூறு வயசு இருந்து எள் பேரன் கொள் பேரன்களைக் கண்டு இறந்து போயிருக்கிறார்கள். இந்தக் காலத்து மனிதர் தங்களுடைய சொந்தப் பிள்ளைகள் தலையெடுப்பதற்குள் இறந்து போய்விடுவார்கள். அப்படிப்பட்ட மாறுதல் இப்போதைக்கு சுமார் இருபது வருஷகாலமாகத்தான் ஏற்பட்டிருக்கிறது. காப்பி முதலிய உணவுகள் பரவியும் அவ்வளவு காலந்தான் ஆகிறது. இதோ உங்களுடைய உதாரணத்தையே பாருங்கள். உங்களுக்கு இப்போது பதினாறு அல்லது பதினேழு வயசிருக்கலாம். நீங்கள் தேகத்துக்கு உழைப்பே கொடுக்காமல் மூளைக்கு மாத்திரம் உழைப்பைக் கொடுப்பதோடு, நம்முடைய பூர்வீகர்கள் உண்டு வந்த உணவுகளை எல்லாம் விட்டு, அன்னிய வஸ்துக்களை உண்பதால், உங்கள் உடம்பு எப்படி இருக்கிறதென்று பாருங்கள். ஆகாரத்தைக் காணும்போதே உங்களுடைய முகம் ஒருவித அருவருப்பைக் காட்டுகிறது. உடம்பில் சதைப்பிடிப்பு என்பதே காணப்படவில்லை. இதற்கு முன் இருந்த நம்முடைய நாட்டு ஸ்திரீகள் நிரம்பவும் திடசாலிகளான குழந்தைகளாய் சுமார் பத்துக்குக் குறையாமல் பெற்று வெகு காலம் வரையில் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்து வந்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு குழந்தை பெறுவதற்குள் குடுகுடு கிழவியாய் விடுவீர்கள் என்பது நிச்சயம். ஆனால் அதை எல்லாம் நான் சொன்னால், நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். இன்னொரு விதமாக வாதிக்கவும் ஆரம்பிப்பீர்கள். ஒவ்வொருவரும் மிதம் இல்லாமல் பத்துப் பதினைந்து குழந்தைகளைப் பெற்று விட்டதால்தான் நம்முடைய தேசத்தின் ஜனத்தொகை அபாரமாகப் பெருகி விட்டது என்றும், நம்முடைய நாட்டு சாமான்களின் விலை வாசிகள் எல்லாம் அதிகரித்து விட்டன என்றும் ஒருவேளை சொன்னாலும் சொல்வீர்கள் ஆகையால், அதைப் பற்றி நாம் வீண் வாக்குவாதம் செய்வது நல்லதல்ல. முக்கியமாக இந்த பிஸ்கோத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது சீமையில் இருந்து வந்திருக்கிறது என்பது ஒன்றே நமக்குத் தெரிகிறது. ஆனால் அவ்விடத்தில் இதை எவன் செய்தான் என்பதும், இதில் என்னென்ன வஸ்துக்கள் சேர்ந்திருக்கின்றன என்பதும் நமக்குத் தெரியாது. இந்த பிஸ்கோத்தில் கோழி முட்டை முதலிய மாம்ச வஸ்துக்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கேள்வியுற்று இருக்கிறேன். சுத்த சைவர்களாகிய நாம் இதை எல்லாம் சாப்பிட்டால், இதற்குள் சம்பந்தப்பட்டிருக்கும் அசுசியான வஸ்துக்கள் எல்லாம் நம்முடைய தேகத்தில் சேரும் அல்லவா? அதை நாம் யோசிக்க வேண்டாமா? நம்முடைய ஊரில் பிராம்மணர்கள் சுத்தமான மரக்கறி பதார்த்தங்களைக் கொண்டு செய்துள்ள பலகாரங்களை வாங்குவதற்குக்கூட நாம் யோசிக்கிறோம். மற்ற ஜாதியார் செய்து விற்கும் பதார்த்தங்களை நாம் கண்ணாலும் பார்ப்பதில்லை. அப்படி இருக்க, இன்னவனால் இன்னின்ன பதார்த்தங்களைக் கொண்டு செய்யப் பட்டது என்ற விவரத்தையே தெரிந்து கொள்ளாமல் வெளி தேசத்தில் இருந்து வரும் கண்ட பதார்த்தங்களை எல்லாம் நாம் வாங்கித் தின்பது உசிதமல்ல என்பது என்னுடைய அபிப்பிராயம். இதைத் தின்னும் நாம் ஏன் ஒரு வெள்ளைக்காரனுடைய வீட்டில் சாப்பிட மறுக்கிறோம்? இந்த வஸ்துக்களை வைத்துக் கொண்டு தானே அவன் போஜனம் செய்கிறான். அவனால் தயாரிக்கப்பட்ட வஸ்துவை அவனோடுகூட உட்கார்ந்து உண்பது மாத்திரம் தவறு போலிருக்கிறது. நான் பிஸ்கோத்தைப் பற்றி இழிவாகப் பேசுகிறேனே என்று நினைத்து நீங்கள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். நான் அதைச் சாப்பிடாததற்குக் காரணம் இன்னதென்றுதான் சொல்லுகிறேனே அன்றி வேறல்ல. உங்களுடைய அபிப்பிராயம் வேறு விதமாக இருக்கலாம். அதுவுமன்றி, நீங்கள் நெடுங்காலமாக அதைச் சாப்பிட்டுப் பழகியவர்கள் போல் இருக்கிறது. ஆகையால், உங்கள் காரியம் நடக்கட்டும்” என்றாள்.

அதைக்கேட்ட மனோன்மணியம்மாள், “நீங்கள் இங்கிலிஷ் பாஷையே தெரியாதென்று சொல்லுகிறீர்கள். இங்கிலீஷ் காரருடைய விஷயங்களை எல்லாம் நன்றாகத் தெரிந்து கொண்டு இருக்கிறீர்கள். அதுவுமன்றி, இங்கிலிஷ்காரருடைய சம்பந்தமே கொஞ்சங்கூட நமக்கு உதவாதென்ற அபிப்பிராயமும் கொண்டவர்களாக இருக்கிறீர்கள்! இங்கிலீஷ்காரருடைய பெருமை, நாணயம், திறமை முதலியவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளாததே இதற்கெல்லாம் காரணமன்றி வேறல்ல. அவர்களுடைய புஸ்தகங்களை நீங்கள் படித்து அவர்களுடைய அரிய செய்கைகளை உணர்ந்திருந்தால், அதன்பிறகு உங்களுக்கு அவர்களிடத்தில் சரியான மதிப்பும் மரியாதையும் ஏற்படும். ஒருவரை ஒருவர் சரியானபடி அறிந்து கொள்ளாமல், காரணம் இல்லாமல், அன்னிய நாட்டார் என்கிற ஒரு முகாந்திரத்தை வைத்துக் கொண்டே அவர்கள் விஷயத்தில் அருவருப்புக் கொள்வது அறிவாளிகளுக்கு அழகல்ல. அன்னிய நாட்டு வஸ்துக்கள் உங்களுக்குப் பிடிக்காவிட்டால், விட்டுவிடுங்கள்; அதைப்பற்றி நான் உங்களை வற்புறுத்துவது சரியல்ல என்பது எனக்குத் தெரியாததல்ல. வெள்ளைக்காரர் எல்லா விஷயத்திலும் நிரம்பவும் சுத்தமாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்கக் கூடியவர்கள். முக்கியமாய் ஆகார விஷயத்தில் அவர்கள் மகா கண்டிப்பாய் இருப்பவர்கள். சீமையில் ரொட்டிக் கடைகள் முதலியவைகளைத் தணிக்கை செய்வதற்கு எத்தனையோ சர்க்கார் சிப்பந்திகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தேக ஆரோக்கியத்தை பாதிக்கத்தக்க வஸ்து ஏதாகிலும் இருந்தால், கடைக்காரர்கள் தண்டனைக்கு ஆளாவார்கள். இந்த பிஸ்கோத்துகள் இந்த உலகம் முழுதும் பரவி விற்கப்படுவதால், இவைகளைச் செய்து இதனால் அபாரமான லாபத்தைச் சம்பாதிப்பவர்கள் தங்களுடைய பிழைப்பு அழிந்து போகக்கூடிய காரியத்தை ஒரு நாளும் செய்ய மாட்டார்கள். இதில் ஆட்சேபகரமான வஸ்துக்கள் சேர்ந்திருக்கும் என்று நினைப்பது மனப்பிரமையே அன்றி வேறல்ல. நீங்கள் நம்முடைய தேசத்து நாகரிகத்தைப் பற்றி அபாரமாகப் புகழ்ந்து கொள்கிறீர்களே. இந்த பிஸ்கோத்து, பெப்பர்மெட் முதலிய தின்பண்டங்களைப் போல நீடித்த காலம் கெடாமல் இருக்கத் தக்கபடி செய்ய நம்மவருக்கு வழி தெரியுமா? நம்மவர்கள் செய்யும் பலகாரம் மறுநாளே ஊசிப்போகிறது; மூன்றாம் நாள் நூல் நூற்றுக் கொள்வதோடு காளான் நிறைந்து போகிறது. இப்படி உலகத்தில் உள்ள நாடு முழுதும் பரவி நெடுங்காலம் ருசி மணம் முதலியவை கெடாமல் எல்லோராலும் ஆசையாய் விரும்பப்படும் வஸ்து எதையாவது நம்மவர்கள் செய்கிறார்களா? அதையாவது நீங்கள் யோசிக்க வேண்டாமா?” என்று கூறிய வண்ணம் தனது இடது கையில் இருந்த பிஸ்கோத்தை வாயில் வைத்து இரண்டு மூன்று தரம் கடித்து மிகுதியை தட்டில் வைத்துவிட்டு, காப்பி இருந்த பாத்திரத்தை எடுத்து வாயில் வைத்து சப்பி ஒர் இழுப்பு இழுத்துவிட்டு மறுபடி வேறொரு பிஸ்கோத்தை எடுத்து முன்போல அதில் ஒரு பாகத்தைக் கடிக்கத் தொடங்கினாள்.

அவள் போஜனம் செய்த மாதிரி கொடி முல்லையம்மாளுக்கு அருவருப்பை உண்டாக்கியது. மனோன்மணி அம்மாளின் தகப்பனார் நல்ல மேலான ஜாதியில் பிறந்த தக்க பெரிய மனிதராக இருந்தும், தமது புதல்வி அப்படிப்பட்ட மிலேச்ச செய்கைகள் செய்ய இடங்கொடுத்து வந்திருக்கிறாரே என்ற நினைவு தோன்றியது. ஆனால், அவள் சாப்பிடும் போது தான் தனது அருவருப்பைக் காட்டுவது அநாகரிகம் என்று நினைத்துத் தனது மன நிலைமையை வெளியில் காட்டாமல் நிச்சலனமான முகத்தோற்றத்தோடு பேசத் தொடங்கி, “இங்கிலீஷ் காரருடைய பெருமை, நாணயம், திறமை முதலியவற்றைப் பற்றி நான் எவ்வித ஆட்சேபனையும் சொல்லவில்லை. ஆனால், உங்களைப் போன்றவர்கள் அவர்களுடைய சங்கதிகளை மாத்திரம் தெரிந்து கொண்டு நம்முடைய நாட்டின் சங்கதிகளைக் கொஞ்சமும் தெரிந்து கொள்ளாமல் நம்மவரிடம் பெருமை, நாணயம், திறமை முதலியவை இல்லை என்று மதிப்பதைத் தான் நான் பலமாக ஆட்சேபிக்கிறேன். நம்மிடம் அப்படிப்பட்ட சிறப்புகள் இருந்தால், இரண்டாயிரம் மைல் துரத்துக்கு அப்பால் உள்ள ஒரு சிறிய தேசத்தார் இவ்வளவு தூரம் வந்து நம்மை எல்லாம் அடக்கி ஆள எப்படி சாத்தியப்பட்டது என்றும், சொற்ப மனிதரான அவர்களை ஒட்டிவிட நம்மவரால் முடியவில்லையே என்றும் நீங்கள் சொல்லுகிறீர்கள். இதற்கு நான் ஒரே ஒரு சிறிய திருஷ்டாந்தம் சொல்லுகிறேன். ஒரு கிராமத்தில் பதினாயிரம் ஜனங்கள் இருக்கிறார்கள். இரவில் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிற சமயத்தில் சுமார் பத்து முரடர்கள் திடீரென்று தோன்றி வீட்டிற்குள் புகுந்து ஜனங்களை அடித்து பயமுறுத்தி எல்லாச் சொத்துகளையும் அள்ளிக்கொண்டு போய் விடுகிறார்கள். பதினாயிரம் ஜனங்களும் விழித்துக் கொண்டு அவர்களைத் துரத்தினாலும், திருடர்கள் தப்பி ஓடிப்போகிறார்கள். இதில் இருந்து சொற்பத் தொகையினரான திருடர்கள், பதினாயிரம் ஜனங்களைக் காட்டிலும் திறமைசாலிகள் என்று நாம் மதிக்கலாமா? அப்படித் திருட வருகிறவர்கள் சமயத்தில் வேலிகளைத் தாண்டலாம்; மதிர் சுவர்களைத் தாண்டலாம்; வீட்டிற்குள் இருக்கும் மாடுகளின் கால்களைக் கட்டி கூரையின் மேலேற்றி அலாக்காக வெளியில் கொண்டு வந்துவிடலாம்; ஒரே ஒட்டமாக இருபது முப்பது மைல் தூரம் ஒடலாம்; முள்களின் மேலும், பாம்புகளின் மேலும் அலட்சியமாகக் காலை வைத்துக் கொண்டு போகலாம்; இன்னம் இவைகளைப் போன்ற அநேக காரியங்களைச் செய்யலாம். இவைகளைக் கொண்டே நம்முடைய பதினாயிரம் மனிதரும் திறமையற்றவர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அது போல, சொற்பத் தொகையினரான வெள்ளைக்காரர் அவ்வளவு துரத்தில் இருந்து வந்து நம்மை எல்லாம் அடக்கி ஆளுவதைக் கொண்டு நாம் திறமையற்ற பேடிகள் என்று மதிப்பது சரியல்ல; அதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது; அவர்களுடைய வேதாந்த தத்துவமும் நம்முடைய வேதாந்த தத்துவமும் நேர் விரோதமானது. நாம் கடவுளின் சரியான தன்மையையும், மனிதர்கள் முதலிய சகலமான ஜீவராசிகளின் சிருஷ்டி ரகசியத்தையும், அவைகளுக்குள் இருக்கும் ஜீவாத்மாக்களுக்கும், கடவுளான பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தம் இன்னது என்பதையும் கரை கண்டிருக்கிறோம். உலக சிருஷ்டியே மாயை என்பதும், ஒரு சிலந்திப்பூச்சி தனது இச்சாமாத்திரத்தில் தனது வாயிலிருந்து நூலை உற்பத்தி செய்து ஒரு கூடிணத்தில் எப்படி ஒரு கூடாரம் கட்டிவிடுகிறதோ, அது போல பரமாத்மாவே, தம

அருள் ஒளியை எங்கும் வியாபிக்கச் செய்து, அது பலவகைப் பட்ட சிருஷ்டிப் பொருள்களாகத் தோன்றும்படி செய்திருக்கிறார் என்பதும் நம்முடைய கொள்கை. இந்த பூலோக சிருஷ்டியும், இவ்விடத்தில் காணப்படும் சிற்றின்ப சுகங்களும் நிலைத்தவை அல்ல என்பதும், இவைகளில் எல்லாம் நாம் நமது புத்தியையும் கவனத்தையும் செலுத்துவது வியர்த்தம் என்பதும், இவைகளின் பற்றைக் கூடியவரையில் குறைத்துக் கொண்டு, இறப்பு பிறப்பாகிய துன்பத்தில் இருந்து விடுபட்டு, பரமாத்மாவோடு ஐக்கியப்பட்டிருப்பதே எல்லாவற்றிற்கும் மேம்பட்ட பேரின்பம் என்பதும் நம்முடைய முடிவு. ஆகையாlல் நமமுடைய முன்னோர்களான மகரிஷிகளின் காலத்தில் இருந்து நம்மவர்கள் இதே தத்துவங்களைக் கடைப்பிடித்து அவரவர்களுடைய சக்திக்குத் தகுந்தபடி அவைகளை அனுபவத்திற்குக் கொணர்ந்து இருக்கிறார்கள். அந்த நோக்கத்தோடு நம்மவர் தம்முடைய பஞ்சேந்திரிய பாசங்களைக் குறைத்துக் கொள்ளும் கருத்துடன் சாத்விகமான ஆகாரங்களைப் புசித்து, ஜீவஹிம்சை முதலிய வற்றை நிவர்த்தித்து, பரோபகாரத்தின் பொருட்டே இந்த சரீரம் உண்டாயிருக்கிறது என்ற சுயநலமற்றதான மனப்போக்கைப் பெருக்கி, உலக சிருஷ்டி முழுதும் பரமாத்மாவின் வியாபகம் ஆதலால் அதில் நமக்குப் பகைமையானதும், நம்மிலும் வேறுபட்டதுமான சிருஷ்டியே கிடையாது என்ற உறுதியைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இந்த உலகத்தில் முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பலாவர் என்றும், ஆதலால் மனிதன் உலகில் உள்ள உன்னத பதவியான அரசபதவியைக் கூட நாடாமல், எல்லாவற்றிற்கும் மேம்பட்டதும், என்றும் நிலைத்ததுமான மோட்ச பதவியையே நாட வேண்டும் என்றும் நம்மவர் முயன்று வந்திருக்கிறார்கள். நம்மவரில் நவகோடி திரவியம் படைத்த சீமானைக் காட்டிலும், கோவணத்தைக்கூடத் துறந்த ஆத்ம ஞானியே நிகரற்ற குபேர சம்பத்திலும் மேலான நிதியைப் படைத்தவன் என்பதே நம்முடைய உறுதியான கொள்கை. ஆகவே, நம்முடைய தேசத்தை ஆண்டு வந்த மன்னர்கள்கூட உலகைத் துறந்த மகான்களின் காலில் விழுந்து அவர்களது பாத துளியைத் தமது சிரசின்மேல் வகித்துக் கொண்டதாக நாம் படித்திருக்கிறோம். நம்மவர்கள் பேரின்ப நாட்டத்தையே முக்கியமாக மதித்தவர்கள். ஆதலால், இந்த உலகை ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற கொள்கையை எப்போதும் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். இந்த உலகத்தை ஆள்வதே புருஷார்த்தம் என்று நம்மவர்கள் சாசுவதமாக மனிதரை சிப்பாயிகளாக்கி, குண்டு பீரங்கி தளவாடங்களோடு எப்போதும் போருக்கு ஆயத்தமாக இருந்தவரே அன்று. பாரதப் போர் நடந்த காலத்தில், பஞ்ச பாண்டவர் தமது பாகத்திற்காக சண்டை போட நேர்ந்த காலத்தில் அர்ச்சுனன் பின்வாங்கியபோது கிருஷ்ண பகவான் பகவத் கீதையை உபதேசித்தது, ஆதிகாலத்திலிருந்து நம்மவருடைய மனப்போக்கு இந்த உலகப் பெருமையை நாடுவதல்ல என்பதை உறுதியாக மெய்ப்பிக்கும். சரியான தத்துவஞானம் இல்லாதவர்களும் மண்ணுலகப்பற்று ஒன்றையே நாடியவர்களுமான அன்னிய தேசத்து மன்னர்கள் நம்முடைய நாட்டின் மீது படை எடுத்து வந்து இதைப் பிடித்துக் கொள்ளத் தொடங்கிய பின்னரே நமது நாட்டில் போர்களும் அநர்த்தங்களும் உண்டாயின. எத்தனையோ அரசர்கள் தோன்றி அழிந்து போனார்கள். ராஜ்யத்தின் எல்லைகளில் எத்தனையோ மாறுபாடுகள் ஏற்பட்டன. இன்றையதினம் மொகலாயருடைய ராஜ்யமாக இருந்தது, நாளைய தினம் பிராஞ்சுக்காரருடையதாயிற்று; மறுதினம் இங்கிலீஷ்காரருடையதாயிற்று. பெயர் மாத்திரம் மாறியதே ஒழிய, ஜனங்களுடைய மனப்போக்கையும், தத்துவத்தையும் எவரும் மாற்ற முடியவில்லை. நம்மவர்கள் கண்டுபிடித்துள்ள தத்துவம் பரமாத்மாவின் குணங்கள் போல நிரந்தரமான உண்மை ஆகையால் அதற்கு ஒரு நாளும் அழிவு ஏற்படாது. இதர தேசத்தில் உள்ளோரும், நம்மிலும் நாகரிகம் அடைந்திருப்பதாய்ப் பெருமை பாராட்டிக் கொள்வோரும் உலகம் அநித்யம் என்ற தத்துவத்தை எந்தக் காலத்தில் கடைப்பிடிக்கிறார்களோ அப்போதுதான் உலகில் நிரந்தரமான கூேடிமமும் அமைதியும் ஏற்படும். அவர்களும் உண்மையில் நாகரிகம் வாய்ந்தவர் ஆவார்கள். அந்த விஷயத்தில் நம்முடைய இந்தியா தேசந்தான் மற்ற தேசங்களுக்கு குரு உபதேசம் செய்யும் பெருமையை அடையக் காத்திருக்கிறது. இதுவே உண்மையான பெருமை அன்றி இப்போது வெள்ளைக்காரர் நம்மை எல்லாம் அடக்கி ஆள்வது ஒரு பெருமையாகாது. இங்கிலீஷ்காரர்களுக்கு அவர்களுடைய தேசத்தில் அதிகமான விளைபொருள்களும் இல்லை. விலை உயர்ந்த செல்வங்களும் இல்லாதிருந்தன. அவர்கள் எப்போதும் கடலில் போய் மீன் பிடிப்பவராய் இருந்தவர்கள். இப்போதும் இங்கிலாந்து தேசத்து அரசனை வலையர்களின் அரசன் என்று ஹாசியமாகச் சொல்வது உண்டல்லவா? அவர்கள் ஆதிகாலத்தில் இருந்து ஊரைவிட்டுக் கடலில் போய்த் தமது ஆகாரங்களைத் தேடுவதையே தொழிலாகச் செய்து வந்தவர்கள். அவர்கள் இருக்கும் தீவுக்குப் பக்கத்தில் உள்ள கடலில் எப்போதும் புயல் காற்றும் அலைகளின் உக்கிரமும் நிரம்பவும் அதிகமாக இருப்பது வழக்கம். ஆதலால், அவர்கள் படகு முதலிய மரக்கலங்களை வரவர அபிவிருத்தி செய்து வருவது அத்யாவசியமாக இருந்தது. அனுபவம் ஏற்பட ஏற்பட, யோசனைக்கு மேல் யோசனை, யுக்திக்கு மேல் யுக்தி, தந்திரத்துக்கு மேல் தந்திரம் செய்து அவர்கள் தங்களுடைய படகுகளையும் கப்பல்களையும் அபிவிருத்தி செய்து கொண்டு போகப் போக, அவர்கள் முன்னிலும் அதிக தூரம் போகவும், கடலிலேயே பல நாள்கள் இருக்கவும் தக்க வசதிகள் செய்து கொண்டனர். அநேகமாய் எல்லோரும் அதே துறையில் வேலை செய்தனர் ஆதலால், ஏராளமான மரக்கலங்கள் ஏற்பட்டன. எல்லோரும் அவர்களது யுக்திக்கும் திறமைக்கும் தக்கபடி நடந்து பல திக்குகளிலும் சென்று பொருள்தேடத் தொடங்கினர். அவ்வாறு அவர்கள் சென்றதில் அவர்கள் அதற்குமுன் காணாத புதியபுதிய நாடுகளும் வஸ்துகளும் தென்பட்டன. அவர்கள் அவைகளை எளிதில் கைப்பற்றிக் கொண்டதன்றி அவ்வவ்விடங்களில் காணப்பட்ட அற்புதமான விலை உயர்ந்த புதிய புதிய வஸ்துக்களை எல்லாம் தமது தேசத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கத் தொடங்கியதோடு, இரத்தங் குடித்த புலிகள் போல புதிது புதிதான அன்னிய தேசங்களைக் காண்பதையும் அவ்வவ்விடத்தில் உள்ள பொருள்களைத் தமதாக்கிக் கொள்வதையுமே அவர்கள் தீராத பெருத்த தாகமாகக் கொண்டு மேன்மேலும் கப்பல்களை அபிவிருத்தி செய்து கொண்டு இந்த உலகம் முழுதிலும் பரவி, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய பெருத்த கண்டங்களை எல்லாம் கண்டு பிடித்துக் கொண்டு குடியேறியும், அவற்றின் பெரும் பாகத்தைச் சொந்தமாக்கிக் கொண்டும் மற்றவைகளுடன் பலவகைப்பட்ட வியாபார சம்பந்தங்கள் வைத்துக் கொண்டும், தமது சொந்த நாட்டின் செல்வத்தை அபாரமாகப் பெருக்கிக் கொண்டும் மகோன்னத தசையில் இருந்து வருகிறார்கள். அவ்வாறு வெளி தேசத்தை நாடி வந்த அவர்கள் நம்முடைய இந்தியாவுக்கும் தற்செயலாக வந்தார்கள். இவ்விடத்தில் பற்பல மன்னர்களோடும் சிநேகம் செய்து தமது வியாபாரங்களுக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் ஸ்தாபித்துக் கொண்டு வேரூன்றி நிலைத்தபிறகு கரடகன் தமனகன் வேலை செய்து ஒன்றன்பின் ஒன்றாக நம்முடைய ராஜ்ஜியம் முழுதையும் கைப்பற்றிக் கொண்டார்கள். நம்முடைய இந்தியா பல மன்னர்களால் ஆளப்பட்ட விஸ்தாரமான தேசம் ஆதலால், ஒருவருக்கொருவர் குடுமி முடிந்துவிட ஏராளமான சந்தர்ப்பம் கிடைத்தது. அதோடு ஜனங்கள் யுத்தம் செய்யும் தன்மையுடைய மூர்க்கர்கள் அன்று ஆதலாலும், அவர்கள் ராமன் ஆண்டாலும், ராக்ஷசன் ஆண்டாலும் வித்தியாசம் இல்லை என்ற கொள்கை, மனத்திருப்தி முதலிய குணங்கள் நிறைந்தவர்கள் ஆதலாலும், இங்கிலிஷ்காரர்கள் அதிக சிரமம் இன்றி நம்முடைய தேசத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். அவர்களுடைய தத்துவம் கண்டது காட்சி கொண்டது கோலம் என்பது. அவர்களுக்கு இந்த உலக இன்பத்துக்கு மேலானதும் நிலைத்ததும் வேறொன்று இருக்கிறது என்ற எண்ணமே கிடையாது. உலகம் முழுதையும் கட்டி ஆள்வது ஒன்றே புருஷார்த்தம் என்பது அவர்களுடைய உறுதியான கொள்கை. இரண்டாயிரம் மைல் துரத்தில் இருந்து எல்லா நாடுகளையும் ஆண்டு, அவைகளோடு சம்பந்தம் வைத்துக் கொண்டிப்பதற்குத் தக்க ஏராளமான பல செளகரியங்களை அவர்கள் கண்டு பிடிப்பது அவசியம் ஆகிவிட்டது. அதற்காக அவர்கள் அரிதினும் அரிதான கப்பல்கள், தந்திப் போக்குவரத்துகள், ஆகாய விமானங்கள் முதலியவற்றை எங்கு பார்த்தாலும் நிரப்பி வைத்திருக்கிறார்கள். நம்முடைய இந்தியாவில் இமாசலம் முதல் கன்னியாகுமரி வரையில் ரயில்களும் தந்திகளும் ஏற்பட்டிருப்பதற்கு முக்கியமான கருத்து ஒன்று இருக்கிறது. முப்பத்து முக்கோடி ஜனங்கள் நிறைந்த விஸ்தாரமான இந்தத் தேசத்தை அடக்கி ஆள்வதற்கு அவர்கள் சொற்பமான சேனைகளையே சிற்சில இடங்களில் வைத்திருக்கிறார்கள். எங்கேயாவது ஒரு மூலையில் கலகம் நடந்தால் ஒரு கோடியில்


மா.வி.ப.I-17 இருந்து இன்னொரு கோடிக்கு ஒரு மணியில் தந்தி போய்விடும். சிப்பாயிகள் துப்பாக்கிகளோடும் வெடி குண்டுகளோடும் ரயிலில் உடனே வந்துவிடுவார்கள். இதுவுமன்றி, இந்தியாவில் மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களில் உள்ள விளைப்பொருள் சுலபத்தில் வெளியேற்றப்படுவதற்கும், வெளிநாட்டுச் சரக்குகள் அக்கிராமங்களுக்கு பரவுவதற்கும் அனுகூலமாகவும் ரயில் அமைந்திருக்கின்றன. ரயில், தந்தி, தபால், ராணுவம் முதலியவைகளே நம்மை அடக்கியாளும் ஜீவாதாரக் கருவிகள். ஆனால் ரயில், தபால், தந்தி முதலியவை ஜனங்களுக்காக ஏற்படுத்தப் பட்டவை என்பது வெளிப்படையான கருத்து. ஏனெனில் அவை நடத்துவதற்குத் தேவையான திரவியம் வேண்டும் அல்லவா. அவைகளை ஜனங்களிடத்தில் இருந்தே வசூலித்துக் கொள்ள வேண்டும் என்பது கருத்து. இது நிற்க, அவர்களுடைய பாஷையை ஜனங்களிடத்திலும் பரப்பிவிட்டால், தங்களுடைய வேலை சுலபமாக நடைபெறும்; தங்களுடைய காளியாலயங்களில் நம்முடைய ஜனங்களே இருந்து சில்லரை வேலைகளை எல்லாம் பார்ப்பர். அவைகளுக்கு எல்லாம் சீமையில் இருந்து மனிதரைக் கொண்டு வருவதென்றால் அது சாத்தியமானதல்ல. இப்படி இங்கிலிஷ்காரர்கள் மீன் பிடிப்பதில் இருந்து ஆரம்பித்து உலகத்தையே பிடித்து ஆளும் வரையில் வந்திருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்திருக்கும் யந்திரங்கள் எல்லாம் அவர்களுடைய கொள்ளைத் தொழிலுக்கு அவசியமானவையாகத் தோன்றித் தோன்றி ஆழ்ந்த யோசனையின் மேல் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. நம்மவர்களுக்கு அவைகள் அவசியமே இல்லை. நம்மவர்கள் இந்த உலகப்பற்றை அதிகமாக நாடாதவர்கள்; உலக ஆசையைக் குறைத்து கடவுள் கடவுள் என்று தியானம் செய்திருப்பவர்கள். நம்மவர்களுக்குக் கடவுளை அடைவதே பிரதானம். இங்கிலீஷ்காரருக்கும் ஒரு கடவுள் இருக்கிறார். கடவுள் என்ற பதத்தைக்கூட அவர்கள் நம்மிடம் இருந்து தெரிந்து கொண்டார்கள் என்பது, அவர்கள் கடவுளுக்கு காட் (God) என்று பெயர் கொடுத்திருப்பதில் இருந்தே நிச்சய மாகிறது. நம்முடைய தேசத்தில் திருடர்கள் கொள்ளைக்குப் புறப்படும் முன் மதுரை வீரன் முதலிய தெய்வங்களுக்கு ஆடு வெட்டி கோழி வெட்டி கள்ளு சாராயம் வைத்து நைவேத்தியம் செய்து, “சாமி ஆண்டவனே! இதுவரையில் நாங்கள் எத்தனையோ வீடுகளில் கொள்ளை அடித்தோம். அதற்கெல்லாம் நீ துணையிருந்து, எங்களுக்கு ஏராளமான பொருள்களை சம்பாதித்துக் கொடுத்தது போல் இப்போது போகும் இடத்திலும் துணையிருந்து காப்பாற்றப்பனே” என்று வேண்டிக் கொள்வார்களாம். அது போல, வெள்ளைக்காரர் கடவுளை எதற்காக ஸ்தோத்திரம் செய்கிறார்கள் என்றால், இறப்பு பிறப்பாகிய சாகரத்தையும், பூலோக பற்றையும் விலக்கி, மோட்சத்தைக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகிறதில்லை. உலகத்தில் தங்களை நல்ல பதவியில் வைத்து, சூரிய, சந்திரர், நட்சத்திரங்கள், ஆடுமாடுகள், பறவைகள், தானியங்கள், பழங்கள், புஷ்பங்கள், தண்ணிர் முதலியவற்றைத் தங்களுடைய உபயோகத்துக்காகப் படைத்து வைத்திருப்பதற்காக நன்றி செலுத்துவதாகவும், அது போலவே ஒவ்வொரு நாளைக்கும் தேவையான ஆகாரங்களை எல்லாம் எப்போதும் கொடுக்க வேண்டும் என்றும், தாங்கள் செய்யும் குற்றங்களை எல்லாம் மன்னிக்க வேண்டும் என்றும் ஸ்தோத்திரம் செய்கிறார்கள். அவர்களுக்கும் கடவுளுக்கும் அவ்வளவே சம்பந்தம். கடவுள் எல்லோருக்கும் பிதாவாம். மனிதர்கள் எல்லோரும் ஒருவருக் கொருவர் சகோதரர்களாம். கடவுளைப் பற்றியும், உலக சிருஷ்டியைப் பற்றியும், அவை இரண்டிற்கும் உள்ள சம்பந்தம் இன்னது என்பதைப் பற்றியும் வெள்ளைக்காரர்கள் எவ்வளவு தூரம் உணர்ந்திருக்கிறார்கள் என்பது மேலே கூறப்பட்ட அவர்களது தத்துவங்களால் நன்கு விளங்கும். நமக்கும் அவர்களுக்கும் இப்படிப்பட்ட கொள்கை வேறுபாடு இருப்பதால், நாம் இந்த உலக விஷயங்களில் அபிவிருத்தி அடைய வேண்டும் என்ற நினைவையே கொள்ளாமல் அது விஷயத்தில் எவ்வித முயற்சியும் செய்யாமலும் இருந்து வருகிறோம். வெள்ளைக் காரர்கள் எப்போதும் உலகத்தை ஆண்டு எல்லோரையும் அடக்கி சகலமான சுகங்களையும் இம்மையிலேயே அனுபவிக்க் நினைப்பவர்கள் ஆதலால், அவர்கள் பலவிதமான யந்திரங்களையும் தந்திரச் சூழ்ச்சிகளையும் செய்து மாயாவித்தைகளை எல்லாம் கையாண்டு வர வேண்டாமா? அவர்கள் கப்பலிலும் ஆகாய விமானத்திலும் வெகுகாலம் பிரயாணம் செய்ய வேண்டி இருப்பதாலும், நிர்மாநுஷ்யமான தீவாந்தரங்களில் எல்லாம் போய்த் தங்க நேருவதாலும், கெடாமல் நெடுநாளைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் இப்படிப்பட்ட ஈரமற்ற பொருட்களான பிஸ்கோத்து முதலியவைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு அப்படிப்பட்ட சந்தர்ப்பமும் அவசியமும் ஏற்படவில்லை. நாம் புதிய புதிய பதார்த்தங்களை அப்போதைக்கப்போது செய்து ஆரோக்கியமாக உண்கிறோம். இப்படிப்பட்ட பிஸ்கோத்துகள் ஜீரணமாவது கடினம் என்று அவர்கள் பிராந்திகளையும்கூடக் கொண்டு போவார்கள்; அதனால் உடம்பைச் சரிப்படுத்திக் கொள்வார்கள். நாம் பிஸ்கோத்தை மாத்திரம் உண்டு பிராந்தியை விலக்குவதால், நம்முடைய உடம்பு கெட்டுப் போகிறதைத் தவிர நாம் கைகண்டது வேறொன்றும் இல்லை. இந்த பிஸ்கோத்து மாத்திரம் வெகுகாலம் வரும் என்றும், கெடாமல் இருக்கும் என்றும் நாம் சொல்ல முடியுமா? அதற்கும் ஒருகால வரம்புண்டு. அதில் சில மருந்துப் பதார்த்தங்களைச் சேர்த்திருப்பதால், கொஞ்சகாலம் வரையில் அது ஒரு மாதிரியாக இருக்கும். அதன் பிறகு அதுவும் புழுபுழுத்தும் காறல் எடுத்தும் கெட்டுத்தான் போகிறது. இங்கிலிஷ்கார வியாபாரிகள் இதனால் அதிக பணம் வருகிறது என்பதையும், ஜனங்கள் இதை அதிகமாக உபயோகிக்கிறார்கள் என்பதையும் கண்டு, விலை மட்டமான சாமான்களை உபயோகித்து அதிக லாபம் அடைய விரும்புவதே அநேகமாய் மனித சுபாவத்துக்கு ஒத்ததாக இருக்கிறது. முக்கியமாக இதன் விலையை கவனித்தீர்களா? இது உயர்ந்த தினுசு பிஸ்கோத்தல்லவா? ஒரு பவுண்டின் விலை ரூ. 1-8-க்குக் குறையாது. இதற்கு அரைக்கால்படி கோதுமை மா பிடித்திருக்கும். மற்ற சர்க்கரை, வெண்ணெய் முதலியவற்றின் செலவும் சேர்ந்து இரண்டனா கூடப்பிடித்திருக்காது. அதற்கு விலை ரூ.1-8-0 வைத்திருக்கிறார்கள். இது எவ்வளவு நாணயம் பார்த்தீர்களா? இதை நாம் ஏன் வாங்கி ஏமாற வேண்டும்: இம்மாதிரி அவர்கள் எத்தனையோ அற்ப சாமான்களை எல்லாம், ஒன்றுக்கு இருபதாய் விலை வைத்து நம்மிடம் கொள்ளை அடிப்பதோடு நம்முடைய தேக ஆரோக்கியத்தையும் ஆயிசையும் குடித்து விடுகிறார்கள். சீமையில் உள்ள வியாபாரிகள் செத்துப்போன குதிரை, நாய் முதலியவற்றின் மாமிசங்களை எல்லாம் பக்குவம் செய்து தேகபுஷ்டி மருந்துகள் என்று நம்முடைய தேசங்களுக்கு அனுப்பிப் பொருள் பறிக்கிறார்கள் என்றுகூடச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். நான் இப்போது சொன்ன இங்கிலீஷ்காரருடைய விருந்தாந்தம் எல்லாம் நம்முடைய கந்தசாமி சொல்ல, நான் கேள்வியுற்றதால், அதில் பொய் இருக்காது என்று நம்பி அதை நான் உங்களிடம் சொல்லுகிறேன். நான் முதலில் சொன்ன திருடர் உவமானம் நம்முடைய வெள்ளைக்காரருக்கு நன்றாகப் பொருந்தும் என்று நினைக்கிறேன். நித்திரை செய்யும் பதினாயிரம் ஜனங்களை சொற்பத் தொகையினரான திருடர்கள் ஜெயித்துப் பொருட்களை அபகரித்துக் கொண்டு போகிறார்கள் என்றேன் அல்லவா. அதுபோல, நம்முடைய தேசத்து முப்பத்து முக்கோடி ஜனங்களும் இந்த உலகப்பற்றை முதன்மையாக நாடாமல் இவற்றில் பற்றில்லாதவராய், அடுத்த உலகத்தின் பேரின்பத் தையே புருஷார்த்தமாக நினைத்திருக்கும் நிலைமையானது, இந்த உலகம் சம்பந்தப்பட்ட வரையில் நம்மவர்கள் துங்கும் நிலைமையில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம் அல்லவா. அந்த நிலைமையில் சொற்ப தொகையினரான அன்னிய நாட்டார் தகுந்த வசதிகளைச் செய்து தங்களை பலப்படுத்திக் கொண்டு நம்மை அடக்கி ஆண்டு நமது பொருள்களை அபகரித்துக் கொண்டு போவது எளிதல்லவா? இதில் இருந்து அவர்கள் நம்மை விட அதிக பெருமை, நாணயம், திறமை முதலியவைகளை உடையவர்கள் என்று நாம் நினைத்து, நம்மவர்களை வெறுத்து நமது பழக்கவழக்கங்களைத் துறந்து, நிரம்பவும் தாழ்ந்த மனப்போக்குடைய அவர்களது தத்துவங்களையும் பழக்க வழக்கங்களையும் நாம் பின்பற்றுவது தான் உசிதமாகுமா? ஆனால் ஒரு விஷயம். தப்பாகவோ, சரியாகவோ, நியாயமாகவோ, அநியாயமாகவோ, அவர்கள் நம்முடைய தேசத்தை ஆளும் நிலைமைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் ரயில், தந்தி முதலிய சில முக்கியமான வசதிகளை எல்லாம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ராஜாங்க நிர்வாக விஷயத்திலும் நீதி செலுத்தும் விஷயத்திலும் அவர்கள் பல ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். அவைகளினால் நமக்கு ஏராளமான பணச் செலவு ஏற்பட்டாலும், அவைகளால் உண்டாகும் நன்மையைக் கருதி அவைகளை மாத்திரம் நாம் ஏற்றுக் கொள்வதோடு நிற்க வேண்டுமே அன்றி, நம்முடைய தேசத்தில் உள்ள ஆண் பெண் பாலாராகிய எல்லோரும் அவர்களுடைய பாஷையைக் கற்று, அதையே எப்போதும் பேசி, அவர்களுடைய போஜனம், பழக்க வழக்கங்கள், மத தத்துவங்கள் முதலியவற்றை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கும் எவ்வித நியாயமும் இல்லை. அப்படிச் செய்ய முயற்சிப்போர் நம்முடைய நாட்டின் உண்மையையும் பெருமையையும் தூய்மையையும், நம்முடைய தேசத்தில் உள்ள நூல்களின் அருமையையும், நம்முடைய பழக்க வழக்கங்களின் மேன்மையையும், சிலாக்கியத்தையும் சரியானபடி உணராமல் செய்கிறார்கள் என்றே நினைக்க வேண்டும். அதெல்லாம் இருக்கட்டும். இப்போது நான் இங்கே வந்து உங்களைப் பார்த்து உங்களுடைய நடையுடை பாவனைகளைக் கவனித்தறிந்து பிறகு என் மனசில் சில சந்தேகங்கள் உண்டாகின்றன. அவைகளை உங்களிடம் கேட்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் உண்டாகிறது. ஆனாலும், வாய்விட்டுக் கேட்பதற்குக் கூச்சமாக இருக்கிறது. அதைப்பற்றி நீங்கள் ஒருவேளை மனவருத்தம் அடைவீர்களோ என்ற நினைவும் உண்டாகிறது. நீங்கள் அனுமதி கொடுத்தால், கேட்கிறேன்” என்றாள்.

அவ்வாறு கொடி முல்லையம்மாள் வெள்ளைக்காரரது நாகரிகத்தைத் தாழ்த்தியும், இந்திய நாகரிகத்தை சிலாகித்தும் பேசியது மனோன்மணியம்மாளின் மனதை ஒருவாறு புண்படுத்தி விட்டது. ஆனாலும், அதற்கு எவ்வித மறுமொழி அல்லது சமாதானம் சொல்வது என்பதை சிந்தித்தபடி தனது சிற்றுண்டியை முடித்துக் கொண்டு தனது இடையில் சொருகப் பட்டிருந்த ஒரு முழ நீள அகலம் உள்ள ஒரு பட்டுச் சவுக்கத்தை எடுத்துத் தனது கைவாய் முதலியவற்றை நன்றாகத் துடைத்துக் கொண்டு எழுந்து வந்து வேறொரு சோபாவின் மேல் உட்கார்ந்து கொண்டு, “உங்கள் மனசில் என்ன சந்தேகங்கள் உண்டாகின்றன? சொல்லுங்கள்” என்றாள்.

கொடி முல்லையம்மாள் புன்னகை செய்து நயமாகப் பேசத் தொடங்கி, “வேறொன்றும் இல்லை. நீங்கள் இப்போது பி.ஏ. பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்கிறீர்களே! பரீட்சையில் தேறின பிறகு நீங்கள் ஏதாவது உத்தியோகம் வகிக்கப் போகிறீர்களா என்பது என்னுடைய முதல் சந்தேகம். உத்தியோகம் வகிக்கப் போகிறதில்லை என்றால், நீங்கள் கலியானம் செய்து கொண்டு புருஷன் வீட்டுக்குப் போன பிறகு இந்தப் பட்டத்தை எப்படி உபயோகப்படுத்தப் போகிறீர்கள் என்பது என்னுடைய இரண்டாவது சந்தேகம். தவிர, உங்களைப் பார்த்தால், எல்லா விஷயங்களிலும் வெள்ளைக்காரருடைய பழக்க வழக்கங்களை மெச்சி அவைகளைப் பின்பற்றி நடக்கிறவர்களாகத் தெரிகிறது. அவர்களுடைய தேசத்தில் கலியாணம் நிச்சயிக்கப்படுவதற்கு முன், மாப்பிள்ளை பெண் வீட்டிற்கு வரத்துப் போக்கு வைத்துக் கொண்டு, பெண் வீட்டாரோடும் பெண்ணோடும் நன்றாகப் பழகுவதும், பெண்ணும் மாப்பிள்ளையும் பல இடங்களுக்குத் தனிமையில் போய் வந்து ஒருவரது குணத்தை ஒருவர் உணர்ந்து, இருவரும் பரஸ்பரம் காதலை வளர்த்துக் கொள்வதும், அதன்பிறகு புருஷன் பெண்ணின் முன்னால் மண்டியிட்டுத் தனது காதலை வெளிப்படுத்தி, “நான் உன்னைக் காதலிக்கிறேன்; நீ என்னுடையவள் ஆகிறாயா?” என்பதும், அவள் தானும் அப்படியே அவனைக் காதலிப்பதாகக் கூறி அதற்கு இணங்குவதும், பிறகு அவர்கள் இருவரும் தங்களது முடிவை பெண் வீட்டாரிடம் தெரிவிப்பதும், அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதும், அதன்பிறகு அவர்கள் இருவரும் உண்மையில் புருஷன் பெண்ஜாதி ஆகிவிட்டவர்கள் போலவே நடந்து கொள்வதும், கோவிலில் மோதிரம் மாற்றிக் கொள்வது, கலியாணக் கணக்குப் புஸ்தகத்தில் பாதிரியாருக்கு முன்னால் இருவரும் கையெழுத்துச் செய்வது முதலிய கலியானச் சடங்குகளை அவர்கள் உடனேயோ, அல்லது, தங்களுடைய செளகரியம் போல சொற்பகாலம் கழித்தோ நடத்துவதும் வழக்கம் என்று நான் கேள்வியுற்று இருக்கிறேன். பெண்ணும், மாப்பிள்ளையும் கொஞ்ச காலம் பழகிய பின், ஒருவரது குணம் ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்தினால், அவர்கள் அதற்குமுன் பூர்வாங்கமாகத் தமக்குள் செய்து கொண்ட நிச்சயதார்த்தத்தை நிவர்த்தி செய்வதும் வழக்கமாம். அது போலவே ஒரு பெண் ஒருவர் பின் ஒருவராக பல மாப்பிள்ளை களோடு பழக நேர்வதும் சகஜமாம். நம்முடைய தேசத்தில் நம்மவர் அப்படிச் செய்கிறதில்லை. வயசு வந்த பெண் அன்னிய புருஷர்களோடு பழகுவதும், அவர்களை ஏறெடுத்துப் பார்ப்பதும் முற்றிலும் தவறு என்ற கொள்கையை நாம் கடைப்பிடிப்பவர்கள். வயசு வந்த பெண் அன்னிய புருஷரோடு பழகி, அவர்களில் யார் அழகுடையவர்கள், யார் நற்குணம் உடையவர்கள் என்று ஆராய்ச்சி செய்யும் படியான மனப்போக்கை உடையவர் களானால், அதனால் பிற்காலத்தில் பெருத்த அநர்த்தம் விளையும் என்பது நம்மவரின் கொள்கை. ஏனென்றால், அப்படிப்பட்ட மனப்போக்கை உண்டாக்கிக் கொண்டவளுக்கு வாய்த்த புருஷன் ஒருகால் அவளுக்குப் பிடிக்காமல் போய்விடும் பகூடித்தில், அவளது மனம் பிறபுருஷர்களிடத்தில் நாட்டமாக இருக்கும் என்று நம்முடைய பெரியோர்கள் அனுபவத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் அதற்கும் வெள்ளைக்காரர்கள் ஒரு மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது புருஷனுக்கும் பெண்ஜாதிக்கும் மன ஒற்றுமை ஏற்படாவிடில், நியாயஸ்தலத்தின் மூலமாக அவர்கள் தங்களுடைய கலியான பந்தத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்ற முறையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு ஸ்திரியோ புருஷனோ பல கலியானங்கள் செய்து ரத்து செய்து கொள்ளலாம். நம்மவர் அதை ஆண் தன்மையாகக் கருதவில்லை. தனக்கு மனைவியாய் இருந்த ஒரு ஸ்திரீ இன்னொருவனுக்கு மனைவியாய் இருப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆண்மைத் தனமல்ல என்பதும், கேவலம் பேடித்தனம் என்பதும் நமது கொள்கை. அதுவுமன்றி ஒரு புருஷனை ஒரு ஸ்திரீ மணந்து கொண்டால் இருவரில் ஒருவர் மாண்டால் அன்றி, அந்தக் கலியான பந்தம் வேறு விதத்தில் ரத்தாகிறதே இல்லை. புருஷன் மாண்ட பிறகு, அவனது விதவை மறுகலியாணம் செய்கிறதே வழக்கமில்லை. ஏனெனில் ஒருவனுக்கு மனைவியாய் இருந்து மனம் தேகம் முதலியவற்றில் களங்கம் அடைந்து கழிபட்டுப்போன ஒரு ஸ்திரியைப் போய்க் கலியாணம் செய்து கொள்வது கேவலம் இழிவான மோகத்தைக் காட்டும் என்றும் நிஷ்களங்கமான மனமும், தேகமுமுடைய ஸ்திரியை மணந்து, இருமனமும் ஒன்றுபடுவதே உண்மையான இல்லற வாழ்க்கை என்றும் நம்மவர் கருதுகிறார்கள். நம்மவரின் ஏற்பாடுகளும் வெள்ளைக்காரருடைய ஏற்பாடுகளும் முற்றிலும் விரோதமானவையாக இருக்கின்றன. நீங்கள் மற்ற சகலமான விஷயங்களிலும் வெள்ளைக்காரருடைய போக்கை அனுசரிப்பவராக இருந்தும், உங்கள் கலியான விஷயத்தில் மாத்திரம் அவர்களுடைய நடத்தைப்படி செய்யவில்லையே என்ற இன்னொரு சந்தேகம் உதிக்கிறது. நீங்கள் கந்தசாமியைக் கண்ணால்கூடப் பார்த்ததில்லை. அவன் கருப்பாய் இருப்பானோ விகாரமாய் இருப்பானோ என்ற சந்தேகங்கூட உங்களுக்கு உண்டாகவில்லை. அப்படி இருக்க, நீங்கள் உங்களுடைய தகப்பனாருடைய பேச்சை மாத்திரம் கேட்டுக் கொண்டு இதற்கு எப்படி இணங்கினிகள்? கந்தசாமி என்ற பையனோ உங்களைப் போல இங்கிலீஷ் படித்து, பி.ஏ. பரீட்சையில் தேறி இருக்கிறவன் ஆனாலும், அவன் சகலமான விஷயங்களிலும் நம்முடைய தேசத்துப் பழக்க வழக்கங்களையே கடைப்பிடித்து நடக்கிறவன். அவன் தனக்கு வரும் சம்சாரம் தனக்கும் தன் பெற்றோர் பெரியோருக்கும் கீழ்ப்படிந்து அடங்கி நடக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவன். குடும்ப ஸ்திரீகளுக்கு பி.ஏ. முதலிய பட்டங்கள் அவசியமில்லை என்றும், அவர்கள் எவ்வளவுதான் படிப்பாளியாகவோ, புத்திசாலியாகவோ இருந்தாலும், அவர்கள் அடக்கம், பணிவு, உழைப்பு, மிருதுவான சம்பாஷணை, படி தாண்டாமை, கற்பு முதலிய சிறந்த குணங்களால் பூஜிதை பெற வேண்டுமே அன்றி இங்கிலீஷ் புஸ்தகத்தைப் படித்து விட்டோம் என்ற நினைவினாலேயே புருஷருக்குச் சமமாகவோ அவரை மீறியோ நடப்பது தவறு என்பதும் அவனுடைய எண்ணம். வெள்ளைக் காரரில் பெண்கள் ஏதாவது பரீட்சையில் தேறி இருக்க வேண்டும், பாட்டு பாடுதல், தையல்வேலை செய்தல், சித்திரம் வரைதல், முதலியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். புருஷர் சந்தோஷப்படும்படி அவர்கள் புதிதுபுதிதான பல விஷயங்களைப் பற்றி எப்போதும் பேசும்படியான வாக்கு வண்மை உடையவர்களாக இருக்கவேண்டும். இந்த அம்சங்களில் ஒரு ஸ்திரீ அவசியம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோட்பாடு. நம்முடையது அப்படிப்பட்டதல்ல. நம்முடைய பெண்களுக்கு அவைகள் எல்லாம் தேவையில்லை. நம்மவர்கள் தங்கள் மனசையும் தேகத்தையும் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு புருஷன் மாமனார் மாமியார் முதலியோரது மனதிற்கு ஒத்தாற்போல அடங்கி நடந்து வீட்டின் காரியங்களைத் தன்னால் இயன்றவரை அன்போடு செய்து, கொண்டவனுடைய குடும்பத்தாரோடு ஐக்கியப்பட்டுப் போகும் குணம் ஒன்றே போதுமானது. நம்முடைய ஜனங்களின் தேவை நிரம்பவும் சொற்பமானது ஆகையால், குடும்பத்திற்குத் தேவையான பொருளை அதன் தலைவனே சம்பாதித்து விடுவான் ஆதலால் பெண்பாலார் வெளியில் போய் பிரத்தியேகமான் ஜீவனோபாயம் தேடவேண்டும் என்பதில்லை. வெள்ளைக்காரர்கள் கொள்ளை கொள்ளையாய்ப் பொருள் தேடினாலும், அவர்களுடைய பெண்பாலாரும் பட்சிகள் போலப் பறந்து வெளியில் போய் அரும்பாடு பட்டுப் பொருள் தேடிவராவிட்டால், அவர்கள் தங்களுடைய அபாரமான தேவைகளை நிவர்த்திக்க முடிகிறதில்லை. நாம் அரை வயிற்றுக்கு உண்டாலும், பட்டினி கிடந்தாலும், நமது பெண் மக்கள் போய் சம்பாதிக்க விடுவது ஆண்மைத்தனம் அல்ல என்பதும், அதைப் போல ஹீனத்தனம் வேறே இல்லை என்பதும் நம்மவரின் மனப்பான்மை. வெள்ளைக்காரருக்கு எப்படியாவது பெருத்த பொருள் தேடுவதொன்றே பிரதானம். ஸ்திரிகளும் சம்பாதிக்க வேண்டும் புருஷரும் சம்பாதிக்க வேண்டும். அப்படிச் செய்வதற்கு அவர்களுக்குப் பல செளகரியங்களும் இருக்கின்றன. அவர்களுடைய பெண் பிள்ளைகள் அடுப்பு மெழுகிப் பாத்திரந் தேய்த்து சமையல் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் உண்பது ரொட்டி ஆகையால், அவர்களுக்குத் தேவையான ரொட்டி, சாராயம் முதலியவற்றைக் கடையிலும், மற்ற பதார்த்தங்களை ஹோட்டலிலும் வாங்கிக் கொண்டால், அவர்களுடைய காரியங்களும் வசதிகளும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகின்றன. நம்முடைய காரியங்கள் எல்லாம் வேறு மாதிரியானவை. நீங்கள் கந்தசாமியின் வீட்டுக்குப் போனால், நீங்கள் இப்படி நாற்காலியில் உட்கார முடியாது; காப்பி பிஸ்கோத்து முதலியவற்றைச் சாப்பிட முடியாது. சாப்பிட்டாலும் எச்சிலைத் துணியில் துடைத்துக் கொள்ள முடியாது. துல்லியமான மஸ்லின் துணிகளே உங்கள் மனசுக்குப் பிடித்தவை என்றும், அவைகளையே நீங்கள் உபயோகித்து வருவதாகவும் சொல்லுகிறீர்களே. நீங்கள் கந்தசாமியைக் கலியாணம் செய்து கொண்டால் இம்மாதிரியான வெள்ளை உடைகளை அணிய முடியாதே. ஏனென்றால், நம் தமிழ்நாட்டில் வெள்ளை உடைகளை அமங்கலிகளும், தாசிகளுமே கட்டுவதென்ற வழக்கம் இருந்து வருவதால், நீங்கள் அப்படிச் செய்ய அவர்கள் இணங்க மாட்டார்கள். வெள்ளை நிறம் உள்ள ஆடைகளை சுமங்கலிகள் கட்டக்கூடாது என்ற விதி ஒரு புறம் இருக்க, ஆடைகள் அணியும் விஷயத்தில் நம்மவருக்கும், வெள்ளைக்கார ஸ்திரீகளுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் எவ்வளவு வயசு முதிர்ந்தவராக இருந்தாலும் மெல்லிய சிறுசிறு துணிகளைக் கொண்டு தைக்கப்பட்ட பாவாடை, கெளன் முதலியவைகளை மாத்திரம் அணிவதோடு, தங்களுடைய அங்க அமைப்பு முழுதும் அழகாக வெளியில் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு அதற்குத் தோதாகத் தைக்கப்பட்ட ஆடைகளை அணிகிறார்கள். அப்படி அணிவதால் தாம் வடிவழகியர் என்று பிறர் மதிக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம். அப்படிச் செய்வதால், ஸ்திரீகளின் கற்புக்கு இழுக்கு நேரும் என்ற எண்ணத்தோடு நமது ஸ்திரிகள் தம்முடைய உடம்பின் அமைப்பு வெளியில் தெரியாதபடி மறைக்க வேண்டும் என்ற கருத்துடன் பதினெட்டு முழமுள்ள தடித்த புடவைகளை அணிந்துகொள்ள வேண்டும் என்ற நற்பழக்கத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிச் செய்வதுமன்றி, தங்களுடைய முகத்தழகு, மார்பழகு முதலியவை எடுப்பாக வெளியில் தெரியாமல் இருக்கவேண்டும் என்ற கருத்தோடு, நம்மவர்கள் எப்போதும் நாணிக்குனிந்து கட்டை விரலைப் பார்த்தபடி நடக்க வேண்டும் என்ற அநுஷ்டானத்தை வைத்திருக்கிறார்கள். வெள்ளைக்கார ஸ்திரீகள் அவர்கள் அணியும் ஆடைக்குள் இரும்புக் கம்பியினால் ஆன கார்செட் என்ற உள்சட்டை ஒன்றை அணிந்து அதற்குமேல் கெளன் முதலியவற்றைத் தரித்துக் கொள்ளுகிறார்கள். உட்புறத்தில் சதைப்பிடிப்பு இல்லாவிட்டால் கூட அந்தக் கார்செட் என்ற கருவி ஒவ்வொரு பாகத்தையும் பிரமாதமாகத் தூக்கிக்காட்டி, ஒருவித வெளிப் பகட்டை உண்டாக்குகிறது. அது மாத்திரமல்ல. எந்தத் தேசத்திலும் ஸ்திரீகள் மிருதுவான தன்மை உடையவர்கள் ஆதலால், அவர்கள் இயற்கையிலேயே குனிந்து நடக்கக் கூடியவர்கள். இங்கிலீஷ்காரர் தம்முடைய ஸ்திரீகள் நாணிக் குனிந்து நடக்கக் கூடாதென்ற எண்ணத்தோடு, அவர்கள் காலில் அணியும் பூட்சின் பின்பக்கத்தை அதாவது குதிகாலுக்குக் கீழே இருக்கும் பாகத்தை அரைசாண் உயரம் உள்ளதாகவும், அதன் முன்பக்கம் சரிவாய் சாதாரண பூட்சுபோல இருக்கவும் செய்து விடுகிறார்கள். அப்படிச் செய்வதனால், அவர்களுடைய ஸ்திரீகள் முன் பக்கம் சாய்ந்து குனிந்து நடக்க வேண்டும் என்பது அவர்களுடைய கருத்தென்று நம்மவர்கள் சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. அந்த பூட்சை அணிந்து கொண்டு சாதாரணமாக நிற்பதே முடியாது. இன்னும் குனிந்தால் அது உடனே கீழே தள்ளி விட்டுவிடும். ஆகையால், அதை அணிந்து கொள்ளும் ஸ்திரீகள் தங்களுடைய முகம் மார்பு முதலிய பாகங்களை எப்போதும் நிமிர்த்தி நாற்காலியில் சாய்ந்திருப்பது போலப் பின்புறம் சாய்ந்திருந்தால் அன்றி, அவர்கள் நிற்கவும், நடக்கவும் முடியாது. இப்படி அவர்களுக்கும் நமக்கும் பல விதங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆகையால் நீங்கள் மன்னார் கோவிலார் வீட்டில் வாழ்க்கைப்படுவதென்றால், எந்த விஷயத்திலும் நம்முடைய தேசத்துப் பழக்கங்களை அனுசரித்து நமது ஆடை ஆபரணங்கள் முதலியவைகளை அணிந்தால் அன்றி, உங்களிடம் உங்கள் புருஷர் முதலியோருக்குப் பிரியம் ஏற்படாது. அவர்கள் வீட்டில் ஒரு கோடீசுவரருடைய பெண் மூத்த மருமகளாக வந்து இருக்கிறார்கள். அவள் இரவு பகல் சலிக்காமல் உழைத்து வேலை செய்கிறவள். அவளோடு கூட நீங்களும் உழைத்து வேலை செய்ய நேருமே அன்றி, நீங்கள் எஜமானத்துவம் வகித்து சும்மா உட்கார்ந்திருப்பது பார்ப்பதற்கே விகாரமாக இருக்குமே. நீங்கள் அவர்கள் சாப்பிடுகிற பழைய அமுது முதலிய ஆகாரங்களை எல்லாம் சாப்பிட வேண்டி வரும். அதற்கெல்லாம் உங்கள் மனம் இடம் தருமா? உங்களுடைய இங்கிலீஷ் பட்டத்தையும், இங்கிலீஷ் பழக்கவழக்கங்களையும் வைத்துக் கொண்டு நீங்கள் உங்கள் புருஷர் சந்தோஷப்படும்படி எப்படி நடந்துகொள்ளப் போகிறீர்கள் என்பது மற்ற சந்தேகங்களைவிடப் பெரிய சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை நாங்கள் கந்தசாமியிடம் பகைமை கொண்டவர்கள் ஆகையால், இப்படிப் பட்ட ஆட்சேபனைகளை எல்லாம் கிளப்பிவிட்டு உங்களை பயமுறுத்தி இந்தக் கலியாணம் நடைப்பெறாமல் செய்துவிட வேண்டும் என்ற கருத்தோடு வந்திருக்கிறோம் என்று நீங்கள் எண்ண வேண்டாம். அவனுடைய குணங்களும், மனப்போக்கும் எனக்குத் தெரியும் ஆகையால், பின்னால் காரியங்கள் இப்படித்தான் நடக்கும் என்பது எனக்கு நிச்சயமாகத் தோன்றுகிறதைப் பற்றி, இவைகளை எல்லாம் நான் சொல்லுகிறேன். ஏனென்றால், கலியானம் என்பது வெள்ளைக்காரர் நினைப்பது போல அற்ப சொற்பமானதல்ல. அவர்கள் இன்று கலியாணம் செய்து கொள்ளுவார்கள்; நாளைய தினம் அதை ரத்து செய்து வேறு கலியானம் செய்து கொள்ளுவார்கள். நாம் அப்படிச் செய்ய முடியாது. முடிச்சு விழுந்தால், கடைசி வரையில் அதை அவிழ்க்கக் கூடியவர் எவரும் இல்லை. ஆயிசு காலம் முடிய ஸ்திரி புருஷரை சந்தோஷப்படுத்துவதும் இந்தக் கலியானந்தான்; விசனத்தில் ஆழ்த்துவதும் இந்தக் கலியாணம்தான். ஆகையால், இதை ஆய்ந்தோய்ந்து சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு செய்வதே சர்வ சிலாக்கியமான காரியம். ஆகையால்தான் நான் துணிந்து என் மனசை வெளியிட்டேன். இது போலவே நீங்களும் உங்கள் மனசை வெளியிடும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்” என்றாள். கொடி முல்லையம்மாள் கூறின சொற்கள் மனோன்மணியம்மாளின் செவிகளில் ஈட்டிகள் போலப் பாய்ந்து அவளது மனதைப் புண்படுத்தின. அவள் அடக்க இயலாத மனக் கொதிப்பும், கோபமும், அருவருப்பும், விசனமும், வியப்பும், மனக் கலக்கமும் அடைந்தவளாய் இரண்டொரு நிமிஷ நேரம் மெளனமாக இருந்தபின் பேசத் தொடங்கி, “நீங்கள் இங்கிலிஷ் காரருடைய நாகரிகத்தையும் நடையுடை பாவனைகளையும் பழக்கவழக்கங்களையும் தூவிப்பது போல என்னைப் பழித்து அவமதிக்க வேண்டும் என்ற கருத்தோடு இங்கே வந்ததாகவே நினைக்கிறேன். உங்களுக்குச் சரியாக நானும் பேசக்கூடும் ஆனாலும், அம்மாதிரி உங்களோடு பேச்சை வளர்த்திக் கொண்டிருக்க எனக்கு அவகாசமும் இல்லை, விருப்பமும் இல்லை. மிஸ்டர் கந்தசாமியும் பி.ஏ. பரீட்சையில் தேறி இருப்பதாலும், அவர்கள் தக்க பெரிய மனிதர்களாக இருப்பதாலும், அவர்கள் என்னை என் அந்தஸ்துக்குத் தக்கபடி கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடத்துவார்கள் என்று நினைத்தே நான் இந்தக் கலியானத்துக்கு இசைந்தேன். முதலில் நான் கலியாணம் செய்து கொள்ளவே ஆசைப்படவில்லை. என் தகப்பனாருடைய வற்புறுத்தலுக்கு இணங்கி, நான் அரை மனசோடு இதை ஏற்றுக் கொண்டேன். இப்போது நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நான் அவர்களுடைய வீட்டில் கேவலம் ஓர் அடிமைப்போல நடந்துகொள்ள வேண்டும் போலத் தோன்றுகிறது. அப்படி நான் என் சுயமதிப்பையும் மரியாதையையும் சுயேச்சையையும் இழந்து, புழுக்கைச்சி போல அவர்கள் வீட்டில் கிடந்து உழன்று புருஷ சுகம் அடைவதைக் காட்டிலும், சுயமதிப்போடும், சுயேச்சையோடும் இருந்து பட்டினி கிடந்து மரிப்பதே சிலாக்கியம் என்பது என்னுடைய உறுதியான அபிப்பிராயம். ஆயைால் நீங்கள் சொல்லுகிறபடி அவர்கள் என்னை நடத்துவார்கள் என்பது உண்மையானால், இந்தக் கலியாணத்திற்கு நான் பிரியப்பட வில்லை. தயை செய்து நீங்கள் உங்களுடைய மனிதருக்கு எழுதி இந்தக் கலியான ஏற்பாட்டை ரத்து செய்து விடும்படி செய்து விடுங்கள். நான் என் தகப்பனாரிடம் இதை எல்லாம் சொன்னால் அவர் நம்பமாட்டார். ஆகையால் நீங்களே இதை நிறுத்த ஏற்பாடு செய்து விடுங்கள்” என்றாள்.

அவ்வாறு அவள் கூறி முடிப்பதற்குள், அந்த அறையின் வாசலில் இருந்து ஒருவர், “மனோன்மணி இந்த மனிதர்கள் நம்மை ஏமாற்ற வந்த வேஷக்காரர்கள்; இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு, நீ உன் மனசைக் கலங்க விடாதே” என்று கூறிக் கொண்டே, கலெக்டர் பட்டாபிராம பிள்ளை அந்த அறைக்குள் நுழைந்தார். திடீரென்று அவர் அவ்வாறு கூறிக்கொண்டு வந்ததைக் கண்ட மனோன்மணியம்மாள் திடுக்கிட்டு வியப்படைந்ததோடு, அவர்கள் யாராக இருப்பார்கள் என்றும், என்ன கருத்தோடு தன்னிடம் வந்திருப்பார்கள் என்றும் பலவித சந்தேகங்களைக் கொண்டவளாய்த் தனது தந்தை மேலும் என்ன விபரம் சொல்லப் போகிறார் என்பதை ஆவலோடு எதிர்பார்த்து அவரது முகத்தை உற்று நோக்கினாள். கொடி முல்லையம்மாள் பட்டாபிராம பிள்ளை நான்கு மணிக்கு வருவார் என்று எதிர்பார்த்தாள். ஆனாலும், அவர் அவ்வாறு சந்தடியின்றி வந்து சிறிது நேரம் வாசற்படியில் இருந்து, தாம் சம்பாஷித்ததைக் கேட்டுக் கொண்டிருப்பார் என்றாவது, தாங்கள் வேஷம் போட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டு கொள்வார் என்றாவது அவள் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. ஆதலால், அவளது மனதில் பெருத்த திகிலும் குழப்பமும் தோன்றி வதைக்கத் தொடங்கின. தாங்கள் வேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதை அப்போதே நேரில் கச்சேரியிலிருந்து வருபவரான பட்டாபிராம பிள்ளை எப்படி அறிந்திருப்பார் என்ற சந்தேகம் தோன்றி மனதைக் கலக்கியது. ஒருகால் கோபாலசாமி தங்களுடைய உண்மையை வெளியிடும்படியான சந்தர்ப்பம் ஏதாவது நேர்ந்திருக்குமோ என்ற எண்ணம் உதித்தது. ஆனாலும், அப்படி நேர்ந்திருக்காது என்ற நினைவும் தோன்றியது. ஏனென்றால், கோபாலசாமி உண்மையைத் தெரிவித்திருந்தால், தான் கந்தசாமி என்பதை அவர் தெரிந்து கொண்டிருப்பார் ஆதலால், தான் அவர்களை ஏமாற்ற வந்தவன் என்பது போன்ற விபரீதமான சொற்களை அவர் உபயோகப்படுத்தி இருக்க மாட்டார் என்ற எண்ணம் தோன்றியது. ஆகையால் வேறு வகையில் அவர் தம்மைப்பற்றித் தப்பான செய்தி எதையோ தெரிந்துகொண்டு வந்திருக்கிறார் என்ற நிச்சயமே ஏற்பட்டது. ஆகவே பெண் வேஷம் தரித்திருந்த கந்தசாமி அப்போதும் ஸ்திரியைப் போலவே நாணிக் கோணி திடுக்கிட்டு எழுந்து ஒரு மூலையில் போய் மறைந்து தலை குனிந்து நின்றான். அந்த மோகினி அவதாரத்தைக் கண்ட பட்டாபிராம பிள்ளை மிகுந்த பிரமிப்பும், ஆச்சரியமும் அடைந்தார். ஆனாலும், அவர் அவளை உண்மையில் ஒரு ஸ்திரி என்றே மதித்தார் ஆகையால், அவளுடன் பேச விரும்பவும் இல்லை; அவளை மேன்மேலும் உற்று நோக்கவும் இல்லை. அவர் தமது கையில் வைத்திருந்த ஒரு சிவப்பு காகிதத்தை மனோன்மணிக்குக் காட்டி, “இதோ பார்த்தாயா? இது மன்னார்குடியில் இருந்து வந்த தந்தி; இது இப்போதுதான் வந்தது. இதைப் பார்த்த உடன் எனக்கு நிரம்பவும் திகில் உண்டாகிவிட்டது. உடனே புறப்பட்டு அவசரமாக வந்தேன்’ என்றார். அவர் பேசிய போதே, அவரது முகம் கைகால்கள் எல்லாம் மிகுந்த படபடப்பையும் கோபத்தையும் காட்டின. அவர் சென்னதைக் கேட்ட அவரது புதல்வி தந்தியைப் படியுங்கள் என்றாள்.

உடனே பட்டாபிராம பிள்ளை அதைப் படிக்கலானார். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:

உங்கள் தந்தி ஆச்சரியத்தையும் கவலையையும் உண்டாக்கியது. என் சம்சாரத்துக்கு கோமளேசுவரன் பேட்டையிலாவது வேறு எந்த இடத்திலாவது தங்கை முதலிய உறவினர் இல்லை. சட்டைநாத பிள்ளை சிறையிலிருந்து வெளிப்பட்ட விவரம் பத்திரிகைகளின் மூலமாய் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவருடைய தம்பி முதலியோர் நம்மிடம் பகை வைத்திருப்பது சகஜமே. நம்முடைய பகைவர் ஏதாவது கெட்ட கருத்தோடு அவ்வாறு எங்கள் உறவினர் என்று சொல்லிக் கொண்டு வந்திருக்கலாம். நீங்கள் அவர்களிடம் எச்சரிப்பாக நடந்து கொள்ளுங்கள். பெண்ணினிடம் எங்களைப் பற்றி ஏதாவது அவதூறு சொல்லி அவளது மனதைக் கலைத்து இந்தக் கலியானத்தை நிறுத்தவோ, அல்லது, பெண்ணுக்கு ஏதாவது கெடுதல் செய்யவோ அவர்கள் வந்திருக்கலாம் என்ற சந்தேகமே தோன்றுகிறது. நீங்கள் எச்சரிப்பாக நடந்து கொண்டு முடிவைக் கடிதத்தின் மூலம் எழுதுங்கள். -

வேலாயுதம் பிள்ளை.

என்று எழுதப்பட்டிருந்த தந்தியைப் படித்தவுடனே மனோன் மணியம்மாளுக்கு, அவர்கள் இந்தக் கலியாணத்தைத் தடுத்துவிட வேண்டும் என்று வந்த பகைவராகத்தான் இருக்க வேண்டும் என்ற நினைவே உண்டாயிற்று. கொடி முல்லையம்மாளாக வேஷந் தரித்திருந்த கந்தசாமியும் அந்தத் தந்தியின் விஷயத்தைத் தெரிந்து கொண்டான் ஆதலால், அவன் பெருத்த குழப்பமும் கவலையும் அடைந்தான். தாங்கள் வந்திருக்கும் விஷயத்தை டெலிபோன் மூலமாய் அறிந்து கொண்ட பட்டாபிராம பிள்ளை உடனே மன்னார்குடிக்குத் தந்தி அனுப்பி இருக்கிறார் என்றும் அவன் உடனே யூகித்துக் கொண்டான் ஆனாலும், தங்களது நிலைமை நிரம்பவும் விகாரப்பட்டுப் போனதையும், தான் கந்தசாமி என்பது அவருக்குத் தெரிந்து போகுமானால், அவர் தன்னைப்பற்றி நிரம்பவும் இழிவான அபிப்பிராயம் கொள்வார் என்பதையும் அவன் உணர்ந்து அளவற்ற கிலேசமடைந்து குன்றிப் போனான். கூடுமானால் கடைசி வரையில் தான் கந்தசாமி என்பதை வெளியிடாமல் எப்படியாவது தந்திரம் செய்து அவ்விடத்தில் இருந்து போய்விட வேண்டும் என்ற எண்ணமே அவனது மனதில் தோன்றியது. கீழே இருந்த கோபாலசாமி, வேலைக்காரப் பெண் முதலியோரது கதி என்னவாயிற்றோ என்றும், அவர்கள் எவ்விதமான வரலாற்றை வெளியிட்டார்களோ என்றும் அவன் நிரம்பவும் கவலையுற்றான்.

உடனே பட்டாபிராம பிள்ளை தமது புதல்வியை நோக்கிக் கண் ஜாடை காட்டி அழைக்க அவள் எழுந்து பட்டாபிராம பிள்ளை வாசற்படியண்டை நின்ற இடத்திற்குப் போய்ச் சேர்ந்து திரும்பிப் பார்த்து, “கொடி முல்லையம்மா! இங்கிலீஷ்காரருடைய நாகரிகத்தையும் செய்கைகளையும் இழிவாகப் பேசினாயே!

மா.வி.ப.I-18 இப்போது பார்த்தாயா? இந்த டெலிபோனும் தந்தியும் எவ்வளவு பெருத்த உபகாரம் செய்தன என்பதை உணர்ந்தாயா? வெள்ளைக்காரர்கள் இப்படிப்பட்ட அற்புதமான யந்திரங்களைச் செய்து வைக்காவிட்டால், இந்தியர்கள் ஒருவரை ஒருவர் ஒரு நிமிஷத்தில் ஏமாற்றி வஞ்சகத்தில் அழுத்திவிட மாட்டார்களா! இறப்பு பிறப்பாகிய சக்கரத்தில் இருந்து விடுபட்டு பரமாத்மாவின் பாதத்தில் ஐக்கியம் அடைவதையே விரும்புகிறவர்களாகிய உங்களுடைய செய்கை எப்படி இருக்கிறதென்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்” என்று நிரம்பவும் குத்தமாகவும் ஏளனமாகவும் மொழிந்துவிட்டுத் தனது முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டாள்.

உடனே பட்டாபிராம பிள்ளை மனோன்மணியம்மாளை நோக்கி, “ஒகோ! அப்படியா இந்த அம்மாள் உன்னிடம் ஏதோ பெருத்த பிரசங்கம் செய்திருக்கிறாள் போலிருக்கிறது! இருக்கட்டும். இந்த அம்மாள் பெண் பிள்ளையாக இருப்பதால், நாம் எதையும் செய்வது சரியல்ல. கீழே இருந்த மனிதரை நான் கேட்டதற்கு அவர் சரியான தகவலே கொடுக்கவில்லை. இந்த அம்மாளும் உண்மையைச் சொல்லுவாள் என்று நான் நினைக்கவில்லை. நான் கச்சேரியில் இருந்து புறப்பட்டு வரும் முன் போலீசாருக்கு டெலிபோன் அனுப்பிவிட்டு வந்தேன். இன்னம் கொஞ்ச நேரத்தில் அவர்கள் இங்கே வந்துவிடுவார்கள். கீழே இருக்கும் ஆண்பிள்ளையை அவர்களிடம் ஒப்புவித்து விடுவோம். அவர்களே உண்மையைக் கண்டுபிடிக்கட்டும். அது வரையில் இந்த அம்மாள் இவ்விடத்திலேயே இருக்கட்டும். நாம் போவோம் வா” என்று கூறிய வண்ணம் மனோன்மணியம்மாளை அழைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியில் போய் அதன் கதவை மூடி வெளிப்பக்கத்தில் தாளிட்டுக் கொண்டு அப்பால் போய்விட்டார்.

அந்த அறையில் சிறை வைக்கப்பட்ட கந்தசாமியின் மன நிலைமையை யூகித்துக் கொள்வதே எளிதன்றி விஸ்தரித்துச் சொல்வது அசாத்தியமான விஷயமாகும். வெட்கம், துக்கம், அவமானம், இழிவு முதலிய உணர்ச்சிகள் அபாரமாக அவனது மனதில் பெருகி அவனை வதைக்கத் தொடங்கின. அவர்களே தங்களது வரலாற்றைக் கேட்டறிந்து கொண்டு தங்களை அனுப்பி விடுவார்கள் என்று நினைத்ததற்கு மாறாக அவர்கள் போலீசாரிடம் தங்களை ஒப்புவிக்கத் தீர்மானித்ததை நினைக்க நினைக்க, கந்தசாமியின் மனம் விவரிக்க இயலாதபடி தத்தளித்தது. போலீசார் வந்து கோபாலசாமியை விசாரித்தால், அவன் தங்களுக்கு அவமானம் ஏற்படாதபடி ஏதேனும் யுக்தி செய்வான் என்ற ஒரு தைரியமும் தோன்றியது ஆனாலும், எந்த நேரத்தில் தமக்கு எவ்விதமான இழிவு ஏற்படுமோ என்ற நினைவையே பிரதானமாகக் கொண்டு கவலையும் துயரமுமே வடிவெடுத்தது போல, அவன் ஒரு சோபாவின் மீது உட்கார்ந்து அப்படியே சாய்ந்துவிட்டான்.

அதன் பிறகு வெகு நேரம் கழிந்தது. எவரும் வந்து அந்த அறையின் கதவைத் திறக்கவே இல்லை. அஸ்தமன வேளையும் கடந்து, இரவிற்கு அறிகுறியான மங்கலான பிரகாசமும் இருளும் அந்த அறையில் சூழ்ந்து கொள்ளலாயின. அந்த அறையில் மின்சார விளக்கு இருந்ததை அவன் கண்டான் ஆதலால், அவன் எழுந்து ஒரு விளக்கைக் கொளுத்திவிட்டு, அதே சோபாவில் மறுபடி உட்கார்ந்து சாய்ந்தபடி சஞ்சலக் கடலில் ஆழ்ந்திருந்தான். இரவு மணி எட்டடித்தது. அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. ஒரு வேலைக்காரன் உள்ளே வந்து, “அம்மா! உனக்குச் சாப்பாடு அனுப்பி இருக்கிறார்கள். சாப்பிட்டுவிட்டு இங்கேயே படுத்துக்கொள். போலீசார் விசாரித்ததில் உன் புருஷர் இன்னும் நிஜத்தைச் சொல்லவில்லை. பொழுது விடிவதற்குள் அவர் உண்மையைச் சொல்லாவிட்டால் அதன் பிறகு அவர்கள் உங்களை ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போய் சிறையில் அடைக்கப் போகிறார்களாம். அது வரையில் நீயும் இங்கேயே இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு ஆகாரம் தண்ணிர் முதலியவற்றைக் கீழே வைத்துவிட்டு அறையின் கதவை மூடி வெளியில் தாளிட்டுக் கொண்டு போய்விட்டான். கோபாலசாமி அதுவரையில் போலீசாரிடம் உண்மையை வெளியிடாது இருந்தது ஒரு விதத்தில் நல்லதாகத் தோன்றினாலும், அவன் வேறு எவ்விதத்தில் தன்னைத் தப்புவிக்கப் போகிறான் என்ற கவலை தோன்றி வதைக்கத் தொடங்கியது. அவன் சோபாவில் சாய்ந்து சிந்தனை செய்தபடியே நெடு நேரம் இருந்து அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான். அவனுக்காக வைக்கப்பட்ட ஆகாரம் தண்ணிர் முதலியவை கையாலும் தொடப்படாமல் அப்படியே இருந்தன.

இரவு மணி பன்னிரண்டு இருக்கலாம். கந்தசாமி ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிக் கிடந்தான். தடதடவென்ற ஒரு பெருத்த ஒசை உண்டாயிற்று, அவன் இருந்த அறையின் கதவுகள் படேரென்று தரையில் விழுந்தன. கந்தசாமி திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். தான் இருந்தது இன்ன இடம் என்ற உணர்வுகூட அவனுக்குச் சரியாக உண்டாகவில்லை. அவன் தூக்கக் கலக்கத்தில் தனது கண்களைத் திறந்து பார்க்க, நிரம்பவும் விகாரமாக இருந்த நாலைந்து முரட்டு மனிதர்கள் கையில் கத்தி துப்பாக்கி முதலிய பயங்கரமான ஆயுதங்களோடு அந்த அறைக்குள் வந்திருப்பதாக அவன் உணர்ந்து, அது கனவோ உண்மையோ என்று சந்தேகித்தவனாய் அசையாது அப்படியே கண்களை மூடிப்படுத்திருந்தான். அவ்வாறு வந்த முரடர்களுக்கெல்லாம் முன்பாக வந்த நமது இடும்பன் சேர்வைகாரன் மற்றவர்களைப் பார்த்து, “மனோன்மணியம்மாள் அதோ இருக்கிறாள். அவள் விழித்துக் கொண்டு கூச்சலிட்டாலும் பாதகமில்லை. கீழே இருப்பவர்கள் எல்லாம் அப்படி இப்படி அசைய முடியாமலும் கூச்சலிட முடியாமலும் கட்டிப் போட்டிருக்கிறோம். சிசாவைப் பெண்ணின் மூக்கில் பிடியுங்கள்” என்றான்.

அந்தப் பயங்கரமான சொற்களைக் கேட்ட கந்தசாமி ஸ்தம்பித்து இன்னது செய்வதென்பதை உணராதவனாய் அப்படியே இருக்க, அடுத்த நிமிஷம் இரண்டு மூன்று முரடர்கள் அவனுக்கருகில் வந்து அவனை இறுகப் பிடித்துக் கொண்டு குளோரபாரம் என்ற மயக்கம் உண்டாக்கும் மருந்திருந்த ஒரு சீசாவைக் கந்தசாமியின் மூக்கிற்கருகில் பிடிக்க, சிறிது நேரத்தில் கந்தசாமி ஸ்மரணை தப்பிப் பிணம் போலச் சாய்ந்து விட்டான். உடனே இடும்பன் சேர்வைகாரனும், சில ஆட்களுமாக முனைந்து கந்தசாமியைத் தூக்கிக் கொண்டு மேன்மாடத்தை விட்டுக் கீழே இறங்கி வந்து, பங்களாவின் முன்னால் ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் வண்டியில் அவனைப் படுக்க வைத்தனர். உடனே இடும்பன் சேர்வைகாரனும் மற்றும் சிலரும் அதில் ஏறிக்கொள்ள, வண்டி அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுக் கும்பகோணம் போகும் பாட்டையில் வாயுவேக மனோ வேகமாய்ப் பறக்கத் தொடங்கியது. பெண் வேஷம் தரித்திருந்த கந்தசாமியை மனோன்மணி என்று தவறாக எண்ணி இடும்பன் சேர்வைகாரன் அவனை அவ்வாறு கும்பகோணத்திற்கு எடுத்துக் கொண்டு போய்விட்டான்.