மாய வினோதப் பரதேசி 1/4-வது அதிகாரம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

4-வது அதிகாரம்
பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை

மாசிலாமணியும் இடும்பன் சேர்வைகாரனும் உரையாடிக் கொண்டிருந்த தினமும், அதற்கு மறுதினமும் கழிந்தன. மூன்றாவது நாள் பிற்பகல் மூன்று மணி நேரம் இருக்கலாம். மன்னார்குடி சீமான் வேலாயுதம் பிள்ளையினது மாளிகையின் மேன் மாடத்தில் விரிக்கப்பட்டிருந்த வழுவழுப்பான ஒரு பிரப்பம் பாயின் மீது நமது மாது சிரோன்மணியான வடிவாம்பாள் தனிமையில் வீற்றிருந்தாள். அன்றைய தினம் காலையில் அவளது மாமி திரிபுரசுந்தரி அம்மாள் அணிந்திருந்த விலை உயர்ந்த ஒரு பட்டுச்சேலை ஆணியில் மாட்டிக் கிழிபட்டுப் போனது. ஆகையால், அன்றைய தினப்படி அலுவல்களை எல்லாம் முடித்துவிட்டு ஒய்ந்து உட்கார்ந்திருந்த வடிவாம்பாள் அந்தப் புடவையை எடுத்து வைத்து பயபக்தியோடு தைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அந்த மாளிகையின் கீழ்க்கட்டில் பாத்திரங்கள் சுத்தி செய்து கொண்டிருந்த வேலைக்காரி ஒருத்தியைத் தவிர, வேறே எவரும் காணப்படவில்லை. எல்லோரும் தமது பகற் போஜனத்தை முடித்துக் கொண்டு ஏதோ அலுவலை உத்தேசித்து வெளியில் போயிருந்தனர். வேலாயுதம் பிள்ளையும், அவரது மனைவியும், நாலைந்து மையில் துரத்தில் உள்ள பூவனூர் என்ற ஊரில் இருந்த தங்களது முக்கிய பந்துக்களான சில பெரிய மனிதர்களுக்குப் பாக்கு வைத்து நிச்சயதார்த்தத்திற்கு அழைத்து விட்டு வருவதற்காகப் புறப்பட்டுப் போயிருந்தனர். நடராஜ பிள்ளை நீடாமங்கலத்தில் இருந்த கீர்த்தி வாய்ந்த ஒரு தட்டானிடம் சென்றிருந்தார். கண்ணப்பா உள்ளுரில் ஜரிகைப் புடவைகள் நெய்வதில் மகா தேர்ச்சி அடைந்திருந்தவரான ஒரு பட்டுநூல்காரரது வீட்டிற்குப் போயிருந்தான். அவ்வாறு மற்ற எல்லோரும் நமது இளநங்கையைத் தனியளாய் விடுத்து வெளியிற் சென்றிருந்தனர். ஆதலால், அந்த மடமங்கை முன் கூறப்பட்டபடி தனது மாமியாரினது புடவையின் பிணியை நிவர்த்திப்பதான திருப்பணியைச் செய்து பொழுது போக்கத் தொடங்கினாள். அவள் எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்க வேண்டுமே அன்றி, ஒரு நிமிஷமும் சும்மா இருக்கக்கூடாது என்று அவளது மாமன் மாமியார் கட்டளையிட்டு இருந்ததால், அவள் அந்த வேலையைச் செய்தாளோ என்றாவது, அல்லது, கிழிபட்டுப் போகும் தங்கள் வீட்டு உடைகளைத் தையல்காரனிடம் கொடுத்துத் தைத்துக் கொண்டால், அதனால் வீண் செலவு ஏற்படும் என்ற சிக்கன புத்தியினால் அவர்கள் அந்த வேலையை அவளுக்குக் கொடுத்தார்களோ என்றாவது நமது வாசகர்கள் எண்ணிவிடக் கூடாது. அந்த உத்தம குண மாது தான் பெருத்த கோடீசுவரரது ஏகபுத்திரி என்ற மமதையையாவது, தனது மாமனாரினது வீட்டில் உள்ள எல்லோரும் தன்னை ஒரு தெய்வம் போல மதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செருக்கையாவது சிறிதும் கொள்ளாமல், தனது புக்ககத்து மனிதர்களோடு ஒன்றுபட்டு வேற்றுமையே பாராட்டாது மனமொத்து ஐக்கியம் அடைந்து பரஸ்பர வாத்சல்யமாகிய பெரும் பாசத்தினால் பிணிப்பட்டிருந்தாள். ஆதலால், அந்த அருங்குண நங்கை தனது மாமனார், மாமியார், புருஷன் ஆகிய எவருக்கும் எத்தகைய இழிவான பணிவிடையைச் செய்வதையும் கண்ணியக் குறைவாகக் கருதாமல், அதை ஒரு பெருத்த இன்பமாக மதித்து அளவற்ற உற்சாகத்தோடும் குதூகலத்தோடும் செய்து வந்தாள். ஆதலால், தனது மாமியாரினது புடவையைத் தைப்பதை அவள் ஒரு தெய்வத்திற்குப் பூஜை, நைவேத்தியம் முதலியவற்றைச் செய்து வைப்பது போன்ற பரிசுத்தமான ஒரு திருப்பணி போல மதித்து மிகுந்த பயபக்தி விநயத்தோடு அதைச் செய்து கொண்டிருந்தாள். எந்த நிமிஷத்திலும் அவளது சுந்தரவதனம் அப்போதே மலர்ந்த தாமரைப் புஷ்பம் போல இனிமை, குளிர்ச்சி, ஜிலு ஜிலுப்பானகளை, வசீகரம், மந்தஹாசம் முதலியவை சதா காலமும் குடிகொண்டதாக இருந்து வந்தது. அவளது முகம் வாட்டத்தையாவது, விசனக்குறியையாவது காட்டிய சந்தர்ப்பம் முற்றிலும் அரிதாகவே இருந்தது. ஆனால் சட்டைநாத பிள்ளை சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிவந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்ட பிறகு, மேகப்படலங்கள் தோன்றி நிஷ்களங்கமாக இருக்கும் பூர்ணசந்திரனை மறைப்பது போல, அப்போதைக்கப்போது, அந்த உத்தமியின் முகம் கவலையையும் சிந்தனையையும் காட்டி மாறி மாறி வாட்டமடைந்தும் தனது இயற்கை ஒளியை வீசிக்கொண்டும் இருந்தது. சட்டைநாத பிள்ளை முதலிய துஷ்டர்கள் தண்டனை அடைந்து சிறைச்சாலை புகுந்த பின்னர், அவள் அவர்களைப் பற்றிய நினைவையும், தான் தனது பதினாறாவது வயது வரையில் அவர்களது வசத்தில் இருந்து வளர்ந்து வந்த நினைவையும் அறவே மறந்து, துன்பமே கலவாத இன்பம் அனுபவித்து வந்தவள். ஆதலால், தங்களது பகைவர்களுள் முக்கியஸ்தரான சட்டைநாத பிள்ளை தப்பி ஓடி வந்து விட்டார் என்ற செய்தி, தேவாமிர்தம் நிறைந்திருந்த பாத்திரத்தில் காலகோடி விஷத்துளி ஒன்று வந்து கலந்து கொண்டது போல அவளது மனதின் நன்னிலைமையை முற்றிலும் சீர்குலைத்து விட்டது. அவளது மனதில் புதைபட்டு இருள் அடைந்து மறைந்து கிடந்த பழைய சம்பவங்களின் நினைவுகள் எல்லாம் பிரகாசமடைந்து ஒன்றன் பின் ஒன்றாய் அவளது அகக்கண்ணாகிய அரங்க மேடையின் மேல் தோன்றிக் காட்சிக் கொடுக்க ஆரம்பித்தன. தனது குழந்தைப் பருவம் தொட்டு, தான் திருக்கண்ணமங்கை என்ற ஊரில் அஞ்சலை, நமசிவாய பிள்ளை ஆகிய இருவரையும் முறையே தாய், தகப்பன் என்று மதித்து, அவர்களது கொடுங்கோன்மையில் இருந்து உழன்று வந்த நாட்களின் நினைவும், தான் மாசிலாமணிக்கு மனைவி ஆக மறுத்ததன்மேல் அவர்கள் தன்னை வைது அடித்துப் பட்டினி போட்டுப் பலவகையில் வருத்திய நினைவுகளும் கண்னெதிரில் அப்போதே நிகழும் நாடகக் காட்சிகள் போலத் தோன்றத் தொடங்கின. கடைசியில் தான் அவர்களது வீட்டைவிட்டு, ஒரு. நாள் இரவில் வெளிப்பட்டுத் தனிவழி நடந்து மன்னார்குடியை நோக்கிச் சென்றதும், இடைவழியில் சில முரடர்கள் தன்னைப் பிடித்து இறுகக் கட்டித் துக்கிக் கொண்டு போக முயன்றதும், அக்காலை திகம்பரசாமியார் என்ற புண்ணியவான் திடீரென்று தோன்றி அதியாச்சரியகரமாகத் தன்னை அந்தப் பயங்கரமான விபத்தில் இருந்து தப்பவைத்து அழைத்துக் கொண்டு போனதும், பிறகு சத்திரத்தில் மாசிலாமணி நமசிவாய பிள்ளை முதலியோர் வந்து மறுபடி தன்னைத் தூக்கிக்கொண்டு போக எத்தனித்ததும், அப்போது கண்ணப்பா என்ற புருஷ சிங்கம் தோன்றித் தன்னை மீட்டுத் தனது மனதையும் காதலையும் ஒருங்கே கொள்ளை கொண்டு போனதும், அதன் பிறகு தான் சொர்க்க போகத்தை அடைந்தது போல் வேலாயுதம் பிள்ளையினது மாளிகையில் செல்வமும் சீருமாய் இருந்து வந்ததும் நன்றாக நினைவிற்கு வந்தன. அந்தக் காலத்தில் சட்டைநாத பிள்ளை முதலியோர் ஏராளமான ஆட்களோடு திடீரென்று தோன்றித் தன்னைப் பலாத்காரமாக அபகரித்துக் கொண்டு போய்க் கும்பகோணத்தில் சிறை வைத்தது, அவ்விடத்தில் தான் மூன்று நாட்கள் வரையில் பட்டினி கிடந்தது, மாசிலாமணி, அஞ்சலை முதலியோரது கொடுமையைச் சகிக்கமாட்டாது உயிர் துறக்க எண்ணி முடிவில் கிணற்றிற்குள் வீழ்ந்தது, பிறகு உயிர் பெற்றது, அதன் பிறகு திகம்பரசாமியார் தபால்காரனாக வேஷத்தரித்து வந்து தனக்குக் கடிதம் கொடுத்து எச்சரித்துப் போனது, கலியான தினத்தன்று தான் கூரைத் திறப்பின் வழியாக மேலே ஏற்றப்பட்டு வெளியேறி மோட்டார் வண்டியில் அமர்ந்து கண்ணப்பாவிடம் சென்றது முதலிய பயங்கரமான காட்சிகளின் நினைவெல்லாம் தோன்றித் தோன்றி மறைந்தது. ஆதலால், அவளது உடம்பு அடிக்கடி திடுக்கிட்டு நடுங்கியது. முகம் பயத்தினால் வெளிறடைந்து விகாரப்பட்டது. மயிர் சிலிர்த்து நிமிர்ந்து நின்றது. அந்த மடவன்னத்தின் மனம் முழுதும் அவ்வாறு இந்த இடத்தில் இல்லாமல் வேறு பல இடங்களில் எல்லாம் சென்று அலைந்து திரிந்து மாறி மாறித் துன்பமும் துயரமும் திகிலும் கொண்டதாய் இருந்தது. ஆனாலும், அவளது கைகள் மாத்திரம் தாமாகவே புடவையைத் தைத்துக் கொண்டிருந்தன. கண்கள் தையலை நிரம்பவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருந்தன. அவளது உடம்பு ஸ்தம்பித்து அசைவற்று சித்திரப்பதுமை போலக் காணப்பட்டது. பழைய சம்பவங்களின் நினைவுகளைத் தொடர்ந்து சட்டைநாத பிள்ளை சிறைச்சாலையில் இருந்து தப்பி வெளிப்பட்ட செய்தியும், தாம் இனி எச்சரிப்பாக இருக்க வேண்டும் என்று திகம்பரசாமியார் கண்ணப்பாவிடம் சொல்லி அனுப்பிய செய்தியும் அவளது செவிகளில் கணீர் கணீர் என்று ஒலித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றின. நிரம்பவும் கண்ணியமான பதவியில் சகலமான செல்வத்தோடும் இருந்து வந்த சட்டைநாத பிள்ளை என்றைக்கும் நீங்காத இழிவை அடைந்து தஞ்சையில் கைதியின் விலங்கோடு எண்ணெய்க்குடம் தூக்கி ஜனங்களின் இடையில் செல்ல நேர்ந்த அவமானத்தை ஒருகாலும் மறக்க மாட்டார் என்றும், அவர் மகா கொடிய துஷ்டராகையால் அவர் திகம்பர சாமியாரிடத்திலும், தங்களிடத்திலும் எப்படியும் பழிவாங்க எத்தனிப்பார் என்றும், அதனால் கண்ணப்பா முதலிய அரிய மனிதர்களுக்கு எந்த நிமிஷத்தில் எவ்விதமான பொல்லாங்கு நேருமோ என்றும் அந்த மடமயிலாள் எண்ணி எண்ணி நிலை கலங்கி ஆவிசோர உட்கார்ந்து நெடுமூச்செறிந்து கொண்டிருந்தாள். அப்போது அவளது கண்கள் தையலை மாத்திரம் கவனித்துக் கொண்டிருந்தனவே அன்றி, அந்த மேன்மாடத்தில் வேறே எதையும் அவைகள் பார்க்கவில்லை. அவளது கவனம் முழுதும் வேறு எங்கேயோ சென்றிருந்தது. அத்தகைய சஞ்சல நிலைமையில் அவள் இரண்டு மூன்று நாழிகை காலம் வரையில் மெய்மறந்து வீற்றிருக்க, யாரோ ஒருவர் வந்து தனக்குப் பின் பக்கத்தில் நின்றபடி கைகளால் தனது கண்களைப் பொத்தியதை உணர்ந்த பிறகே, அந்த மின்னற் கொடியாள் திடுக்கிட்டு மருண்டு தனது சுய உணர்வை அடைந்தாள். தங்களது ஜென்ம விரோதியான சட்டைநாத பிள்ளையினால் தங்களுக்கு ஏதேனும் பொல்லாங்கு நேருமோ என்று அவள் எண்ணித் திகில் கொண்டிருந்த நிலைமையில், அவள் சிறிதும் எதிர்பார்க்காதபடி யாரோ ஒருவர் தனது கண்களைப் பொத்தவே, தங்களது பகைவர்தான் ஏதோ துன்மார்க்கமான நினைவோடு அங்கே வந்திருக்கிறார் என்ற சந்தேகமும் பீதியுமே அவளது மனதில் சடக்கென்று உதித்தன. அவளது கைகால்கள், உடம்பு முதலிய அங்கங்கள் எல்லாம் வெடவெட என்று நடுங்கத் தொடங்கின. மயிர்காலுக்கு மயிர்க்கால் வியர்வை குபிரென்று வெளிக்கிளம்பி தந்தம் போல இருந்த அவளது சுந்திரமேனியில் முத்து முத்தாகத் துளித்து நின்றது. ஆனாலும், அடுத்த நிமிஷத்தில் அவளது திகிலும் சஞ்சலமும் விலகிப் போயின. அப்படி வந்தவர் தமது கைகளை மிருதுவாகவும் மரியாதையாகவும் உபயோகப்படுத்தினார் என்பது அவளுக்கு எளிதில் புலப்பட்டது. ஆகையால், அவர் பலாத்காரமாகத் தனக்குத் தீங்கிழைக்க வந்த பகைவர் அல்ல என்ற நிச்சயம் ஏற்பட்டது. மேன்மாடத்திற்கு ஏறிவரும் படிக்கட்டின் வாசற்படி இருந்த பக்கம் தனது முதுகுப் பக்கத்தில் இருந்தது. ஆனாலும், தான் இருந்த இடம் அந்த வாசற்படியில் இருந்து சுமார் 10-கஜ தூரம் இருந்தது. ஆகையால், அவர் அவ்வளவு தூரம் வரையில் நடந்து தனக்கருகில் வந்ததைக்கூட உணராது தான் அவ்வளவு அதிகமாக மெய்மறந்து போயிருந்திருக்க வேண்டும், அல்லது, அவர் வேண்டும் என்றே தமது கால் விரல்களை ஊன்றி ஒசை செய்யாது தனக்கருகில் வந்திருக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள். ஆனாலும் தன்னிடம் அவ்வளவு அதிகமான உரிமை பாராட்டி அப்படி விளையாடக்கூடிய மனிதர் யாராக இருக்கலாம் என்று அவள் எண்ணிப் பார்த்ததெல்லாம் வீணாயிற்று. தனது கண்ணைப் பொத்திப் பிடித்துக் கொண்டிருந்த கைகள் நிரம்பவும் மிருதுவாக இருந்தன. ஆகையால், அவர் ஆண் பிள்ளையா, அல்லது, பெண் பிள்ளையா என்பதைக்கூட அவள் நிச்சயிக்கமாட்டாதவளாய்த் தத்தளித்து நயமாகவும் அன்பாகவும் பேசத் தொடங்கி, “யார் அது? இப்படித்தானா அக்கிரமம் செய்கிறது? மனிதர் வருகிறார்கள் என்கிற குறியே இல்லாமல் திடீரென்று வந்து என்னை இப்படித்தானா பயமுறுத்தி விடுகிறது? என் உடம்பெல்லாம் நடுக்கம் எடுத்து விட்டதே?” என்று வீணாகானம் செய்வது போல அதிமாதுரிய மான குரலில் பேசினாள்.

அவளது கண்களைப் பொத்திக் கொண்டிருந்த மனிதர் உடனே தமது குரலை மாற்றிக் கொண்டு கீச்சுக்குரலில் பேசத் தொடங்கி, “நான் யார் என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னால்தான், நான் விடுவேன். இல்லாவிட்டால், இப்படியே கண்களை மூடிக் கொண்டுதான் இருக்கப் போகிறேன்” என்றார்.

அதைக் கேட்ட வடிவாம்பாள் அந்தக் குரல் இன்னாருடையது என்ற அடையாளம் கண்டு கொள்ள மாட்டாதவளாய் இரண்டொரு நிமிஷ நேரம் மெளனம் சாதித்து யோசித்து யோசித்துப் பார்க்கிறாள். அதுவரையில் எவரும் தன்னிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை ஆதலாலும், அப்படி நடந்து கொள்ளக் கூடிய அவ்வளவு அன்னியோன்னியமான சிநேகிதை வேறே யாரும் இருப்பதாக நினைவு உண்டாகவில்லை. ஆகை யாலும், அந்தப் பெண்மணி முற்றிலும் குழப்பமும் கலக்கமும் அடைந்து சிறிது நேரம் தடுமாற்றம் உற்றபின் மிருதுவாகப் பேசத் தொடங்கி, “நீங்கள் யார் என்பது கொஞ்சங்கூடத் தெரிய வில்லையே! போதும் விட்டுவிடுங்கள்” என்று நயமாகக் கூறினாள்.

அந்த மனிதர், “இவ்வளவுதானா உன் சாமர்த்தியம்! இந்த அற்ப விஷயத்தைத் தெரிந்து கொண்டு சொல்ல உன்னால் முடிய வில்லையே! சரி; விட்டுவிடுகிறேன், நீ தோற்றுப் போய்விட்டதாக ஒப்புக்கொள்; உடனே நான் என் கைகளை எடுத்து விடுகிறேன்” என்று முன்போலக் கீச்சுக் குரலிலேயே பேசினார். அதைக் கேட்ட பெண்ணரசி சந்தோஷமாகப் புன்னகை செய்து, “ஆம், நான் உண்மையில் தோற்றுத்தான் போய்விட்டேன். கண்ணுள்ளவளான என்னை நீங்கள் கண்ணில்லாக் குருடியாக்கி விட்டால், நான் தோற்றுப் போகாமல் எப்படி ஜெயமடைய முடியும்?” என்றாள்.

அந்த மனிதர் நகைத்த வண்ணம், “கண்ணில்லா விட்டால், காது கூடவா இல்லை?” என்றார்.

வடிவாம்பாள், “காதுகள் இருந்து என்ன செய்கிறது? குரல் பழைய குரலாய் இருந்தால் அல்லவா காதுகள் அடையாளம் கண்டுபிடிக்கும்” என்றாள்.

வந்தவர், “வாஸ்தவம் தான். ஆனாலும் கண்களைப் பொத்திக் கொண்டிருக்கும் இந்தக் கைகள் உடம்பில் படுகிறதனால் உண்டாகும் உணர்ச்சியில் இருந்து தெரிந்து கொள்ளலாம் அல்லவா?” என்றார்.

வடிவாம்பாள், “அதுகூட என்னால் முடியவில்லை. என் அறிவு அவ்வளவு மந்த அறிவாக இருக்கிறது. நீங்கள் இன்னார் என்பதைத் தெரிந்து கொள்ள ஏதாவது ஒரு சூசனை இருந்தால் இந்நேரம் நான் சும்மா இருப்பேனா?” என்றாள்.

வந்தவர், “அப்படியானால் நீ தோற்றுப்போன குற்றத்தோடு இப்போது இன்னொரு பெரிய குற்றமும் செய்திருக்கிறாய். அது என்னவென்றால், உன்னுடைய அறிவு அபார சக்தி வாய்ந்த மகா சூட்சுமமான அறிவு. அதை நீ அலட்சியமாக எண்ணி அது மந்த அறிவென்று சொல்லுகிறது சாதாரணமான குற்றமல்ல. அது பெருத்த அபராதம். இந்த இரண்டு குற்றங்களுக்கும் நான் முதலில் உன்னைத் தக்கபடி சிகூரித்து விட்டு அதன் பிறகு நான் என் கைகளை எடுக்கப் போகிறேன்” என்றார்.

அந்த விபரீத வார்த்தையைக் கேட்ட வடிவாம்பாளினது முகம் சடேரென்று மாறுபட்டது. அவளது சந்தோஷம் எல்லாம் பறந்தோடியது. அவ்வாறு தன்னிடம் தாறுமாறாகப் பேசக்கூடிய மனிதர் யாராக இருக்கலாம் என்று அவள் பன்முறை ஆழ்ந்து யோசித்த தெல்லாம் பயன்படாமல் போயிற்று. ஆனால், அவர் பேசியது நிரம்பவும் சிநேகப்பான்மையைத் தோற்றுவித்தது ஆகையாலும், அவர் இன்னார் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் தான் கோபிப்பது ஒழுங்கல்ல எனத் தோன்றியது ஆகையாலும், அவள் நிரம்பவும் பாடுபட்டுத் தன்னை அடக்கிக் கொண்டு புன்னகை வழிந்த முகத்தோடு பேசத் தொடங்கி, “நான் உங்களுடைய அடையாளத்தைக் கண்டுபிடிக்க மாட்டாமல் தோற்றுப் போனது என்னுடைய குற்றமன்று. என்னுடைய ஸ்தானத்தில் வேறே யார் இருந்தாலும் தோற்றுத்தான் போவார்கள். இந்த விஷயத்தில் குற்றம் உங்களுடையது என்று சொல்லுவதே பொருத்தம் உடையதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் நல்ல அறிவுடையவளாக இருந்து, மந்த அறிவினள் என்று சொல்லுவது இன்னொரு பெருத்த குற்றம் என்று சொல்லுகிறீர்கள். நான் நல்ல அறிவுடையவள் என்று நீங்கள் கொடுக்கும் பெருமையை நான் வகித்துக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும், அப்படிப்பட்ட நல்ல அறிவை உபயோகப்படுத்தி உண்மையை அறிந்து கொள்ளமாட்டாமல் என் அறிவு மழுங்கிப் போகும்படி செய்வதும் நீங்களே. ஆகையால் இரண்டு வகையிலும் குற்றம் உங்களுடையதே அன்றி என்னுடையதல்ல. அப்படி இருக்க நீங்கள் என்னைத் தண்டிக்கப் போவதாகச் சொல்வது நியாயமாகுமா என்று யோசித்துப் பாருங்கள். என்னைத் தண்டிக்கும் அதிகாரம், என் தாயார், தகப்பனார், மாமனார், மாமியார், என் பர்த்தா ஆகிய ஐவருக்குமே உண்டு. அதுவுமன்றி, நான் ஏதாவது பெருத்த தவறு செய்துவிட்டால், நியாயாதிபதிகள் தண்டிப்பார்கள். அப்படிப் பட்ட அதிகாரம் வாய்ந்தவர்கள் கூட நீங்கள் சொல்லும் இந்த இரண்டு குற்றங்களுக்கும் என்னைத் தண்டிக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். என்மேல் இப்படிப்பட்ட விபரீதமான பாத்தியம் பெற்ற நீங்கள் யார் என்பதே எனக்கு இன்னமும் விளங்கவில்லை. நீங்கள் எனக்கு என்ன விதமான தண்டனை கொடுக்க உத்தேசிக்கிறீர்கள் என்பதும் விளங்கவில்லை” என்றாள். அதைக் கேட்ட மற்றவர் சந்தோஷமாகப் புன்னகை செய்து, “ஒஹோ! நீ இப்படி எல்லாம் சாமர்த்தியமாகப் பேசினால், உன்னை தண்டிக்காமல் நான் விட்டுவிடுவேன் என்று எண்ணிக் கொண்டாயா? நீ யாதொரு குற்றமும் செய்யவில்லை என்ற உறுதியை வைத்துக் கொண்டு பேசுவதும் தவறு; உன்னோடு எப்போதும் இருந்து பேசிப் பலவிதமாக நெருங்கிப் பழகிய ஒரு மனிதரை நீ முற்றிலும் முகமறியாதவர் போல மதித்து அன்னிய மனுஷி போல நடந்து கொள்வது சாதாரணமான குற்றமா? அதற்குத் தக்க தண்டனை இதுதான்” என்று கூறிய வண்ணம் தமது முகத்தை நீட்டி அவளது கன்னத்தில் ஒரு முத்தங் கொடுத்த பின் தமது கைகளை எடுக்கவே, அதைக் கண்டு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த பெண்மணி, தனது ஆருயிர் நாயகனான கண்ணப்பாவே தனக்கருகில் வந்து நின்றதைக் கண்டு, உடனே வெட்கித் தலை குனிந்தவளாய், “ஆகா! என் கண்ணம்மாவின் சாமர்த்தியமே சாமர்த்தியம்! கொஞ்சங்கூட அடையாளந் தெரியாத படி குரலை மாற்றிக்கொண்டு ஒரு நிமிஷத்தில் என்னை ஏமாற்றி விட்டீர்களே! யாரோ பெண்பிள்ளை என்றல்லவா நான் கடைசி வரையில் எண்ணிக் கொண்டிருந்தேன்” என்று கூறிய வண்ணம் தனது கையில் இருந்த புடவையை ஒரு பக்கமாகப் பாயின் மீது வைத்து விட்டு எழுந்து நாணத்தோடு குனிந்து நின்றாள்.

உடனே கண்ணப்பா அந்த இடத்திற்கருகில் போடப்பட்டிருந்த வழுவழுப்பான விசிப்பலகையண்டை வடிவாம்பாளை அழைத்துக்கொண்டு சென்று, அதன்மேல் உட்கார்ந்தான். அந்த விசிப்பலகையின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெரிய சன்னகாரைத் துண்கள் இருந்தன. அந்த விசிப்பலகையின் மீது பெருத்த பெருத்த திண்டுகள் பல கிடந்தன. கண்ணப்பா இரண்டொரு திண்டுகளை வைத்துத் தலைப் பக்கத்தில் இருந்த துணண்டை வைத்து அதன்மேல் “அப்பாடா” என்று சாய்ந்து, கால்களை நீட்டி எதிர்ப் பக்கத்தில் இருந்த துணில் உதைந்து கொண்டான். வடிவாம்பாள் கரைபுரண்டு ஒடிய வாத்சல்யத்தோடு அவனது கால் பக்கத்தில் நின்று, “ஏது என் கண்ணம்மாவுக்கு இன்று இவ்வளவு அலுப்பு! வெயிலில் அதிக தூரம் போய் அலைந்துவிட்டு வந்தீர்கள் போலிருக்கிறது! முகம் நிரம்பவும் வாட்டமடைந்திருக்கிறதே! ஏதாவது பலகாரம் கொஞ்சம் சாப்பிடுகிறீர்களா? போய் எடுத்துக் கொண்டு வரட்டுமா?” என்று கூறிய வண்ணம் அவனது பாதங்களை மிருதுவாகவும் இன்பகரமாகவும் பிடித்து வருடத் தொடங்கினான்.

நிரம்பவும் வாஞ்சையோடு அந்த மிருது பாஷிணியின் முகத்தை நோக்கிய கண்ணப்பா,“ வடிவூ! நீ கால்பிடித்து விடுவது இருக்கட்டும். இப்படி வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து கொள்” என்று கூறிய வண்ணம் ஆசையோடு அவளைப் பிடித்திழுத்துத் தனது வயிற்றின் பக்கமாகப் பலகையின் மேல் உட்கார வைத்து அனைத்துக் கொண்டு, “நீ என்னுடைய முகம் வாடி இருக்கிறதென்று சொல்லி எனக்கு உபசாரம் செய்வது இருக்கட்டும். உன்னுடைய முகம் என்றைக்கும் இல்லாதபடி நிரம்பவும் வாட்டம் அடைந்து சந்தோஷமற்றுக் காணப்படுகிறதே. அதன் காரணம் என்ன? எனக்குத் தெரியாமல், உன் மனசில் என்ன விதமான கவலை அல்லது விசனம் ஏற்பட்டது? பாதி ராத்திரியில் எல்லோரும் படுத்துத் துங்குகையில் எங்கேயாவது ஒரு பல்லி நகர்ந்தால் கூட, அதை உணர்ந்து விழித்துக் கொள்ளக்கூடிய அவ்வளவு அதிக ஜாக்கிரதையுடைய நீ இந்தப் பட்டப்பகலில் நான் மெத்தைப் படியிலிருந்து இவ்வளவு தூரம் நடந்து வந்து உன் கண்களைப் பொத்துகிற வரையில் மெய்ம்மறந்து சிந்தனையில் ஆழ்ந்து உட்கார்ந்திருந்தாயே! அவ்வளவு பலமாய் உன் மனசைக் கவர்ந்து கொள்ளக்கூடிய விபரீதமான காரியம் ஏதாவது நேர்ந்ததா? நான் நிரம்பவும் சாமர்த்தியமாக என் குரலை அடியோடு வேறாக மாற்றிக் கொண்டதாகச் சொல்லி நீ என்னைப் புகழ்ந்ததைக்கூட நான் ஒப்புக்கொள்ள முடியாது. என் குரலின் அடையாளத்தை நீ கண்டு கொள்ளாததற்கு உன் கவனம் பூர்த்தியாக வேறிடத்தில் சென்று கலவரப்பட்டிருந்ததே முக்கியமான காரணமன்றி, நான் பிரமாதமான சாமர்த்தியம் செய்துவிட்டேன் என்று நினைப்பது சரியல்ல. நான் உனக்குப் பின்னால் வந்து கொஞ்ச நேரம் நின்று பார்த்தேன். நீ எதையோ சிந்தனை செய்தபடி கல் சிலைபோல அசையாமலும், மூச்சுவிடாமலும் உட்கார்ந்திருந்தாய். திடீரென்று நான் உனக்கெதிரில் வந்தால், நீ பயந்து கலங்கிக் குழப்பமடைந்து சங்கடப்படுவாய் என்று நினைத்தே நான் உன் கண்களைப் பொத்தினேன். அப்படிப் பொத்தினால், யாரோ ஒருவர் வந்திருக்கிறதாக நீ நினைத்துக் கொள்ளுவாயே அன்றி, நான் வந்திருப்பதாக எண்ணி அதிக திகில் கொள்ள மாட்டாய் அல்லவா. நான் உன் கண்களைத் திறந்து விடுவதற்குள் வேறிடத்தில் சென்றிருந்த உன்னுடைய சுய உணர்வும் கவனமும் நன்றாகத் திரும்பி விடும் என்று நினைத்தே நான் அப்படிச் செய்தேன். நான் உன் கண்களைப் பொத்தியதிலும், உன் மனசில் பயமும் குழப்பமும் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், அப்படிச் செய்யாமல் நான் திடீரென்று உனக்கெதிரில் வந்தால், உன்னுடைய திகிலும் சஞ்சலமும் பன்மடங்கு அதிகமாக இருக்கும் ஆகையால், உனக்கு ஏற்பட இருந்த பெரிய துன்பத்தை இந்த அற்பமான துன்பத்தால் விலக்கினேன்” என்று கூறிய வண்ணம் அவளது முதுகையும், கன்னத்தையும் அத்யந்தப் பிரேமையோடு தடவிக் கொடுத்தான். அவனது சொற்களைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்த பெண்மணி, “ஒகோ! அப்படியா சங்கதி! என் கண்ணம்மாவின் பிரியத்துக்கு இந்த ஈரேழு பதினான்கு லோகமும் ஈடாகுமா இப்படி என் உயிர்க்குயிராகவும் ஜீவதாரக் கடவுளாகவும் இருக்கிற தங்களுக்கும், அப்பா அம்மா முதலியோர்க்கும், அந்தத் துஷ்டன் சட்டைநாத பிள்ளையால் ஏதாவது கெடுதல் நேரிடுமோ என்ற கவலை தானாகவே என் மனசில் தோன்றி என் நினைவை எல்லாம் கவர்ந்து கொண்டது. எப்பேர்ப்பட்ட கடுமையான காவலிலிருந்து தந்திரம் செய்து தப்பித்துக் கொண்டு வந்து ஒளிந்து கொண்டிருக்கிற அந்தத் துஷ்டன் தன்னை மானபங்கப்படுத்திய மனிதர்களுக்கெல்லாம் ஏதாவது கெடுதல் செய்ய வேண்டும் என்று நினைப்பது சகஜமே. நாம் எல்லோரும் நம்முடைய உயிர்த் தெய்வம் போல மதித்து வரும் நம்முடைய சுவாமியாரை அந்தத் துஷ்டன் ஒரு நாளும் மறக்கவே மாட்டான். ஆகையால், யானைக்கும் அடிசறுக்கும் என்ற நியாயப்படி, அவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், இராப்பகல் எவ்வளவோ எச்சரிப்பாக இருந்தாலும்,

அவன் ஏதாவது தந்திரம் செய்து அவரை உடத்திரவிக்க முயற்சி மா.வி.ப.1-11 செய்வானே என்ற கவலையும் என் மனசில் உண்டாயிற்று. இதை எல்லாம் நினைத்துக் கொண்டே நான் முழுதும் மெய்ம்மறந்து கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன். அப்படி இருந்த தவறுக்காக எனக்குச் சரியான தண்டனையே கிடைத்தது” என்று கூறிக் கண்ணப்பாவின் புஜத்தின்மேல் தனது கன்னத்தை வைத்துச் சாய்ந்து கொண்டு “அப்பாடா ஜில்லென்று எவ்வளவு சுகமாக இருக்கிறது ஆகா இந்த ஆனந்தம் வேறே யாருக்குக் கிடைக்கும்! என் பாக்யமே பாக்யம்!” என்று கூறி மகிழ்ச்சியே வடிவாக மாறினாள். இணைமிகை இல்லாத அந்த மங்கையர்க்கரசியின் கரைபுரண்டோடிய பிரேமையைக் கண்டு ஆனந்த மயமாக நிறைந்து பூரித்துப் போன கண்ணப்பா தந்தக் குச்சிகள் போல அழகை வழியவிட்ட அவளது கைவிரல்களைப் பிடித்து ஏதோ விஷமம் செய்தபடி நிரம்பவும் உருக்கமாகப் பேசத் தொடங்கி, “வடிவூ! என்ன நீ கூட அறியாதவள் போல இப்படிப்பட்ட கவலைகளுக்கெல்லாம் இடங்கொடுத்து விட்டாயே! நம்முடைய சுவாமியார் சாதாரண மனிதரா? அவருக்கில்லாத யூகமும் தீர்க்கதரிசனமும் வேறே யாருக்கு இருக்கப் போகிறது? சட்டைநாத பிள்ளை முதலிய எதிரிகள் வெளியில் வந்து சுயேச்சையாக இருக்கிறார்கள் என்பதை அவர்தானே தெரிந்து கொண்டு நம்மை முதலில் எச்சரித்தார். அப்படிப்பட்டவர் அயர்ந்து அஜாக்கிரதையாக இருந்து துன்பத்தில் அகப்பட்டுக் கொள்வாரா? அது ஒரு நாளும் நடக்காது. அவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதோடு முக்கியமாக நம் எல்லோரையும், கண்மணிகளை இமைகள் காப்பது போல ஜாக்கிரதையாக கண்காணித்துக் கொண்டே தான் இருப்பார். நமக்கு எவ்விதமான கெடுதலும் நேராதென்றே நினைக்கிறேன். அப்படி நேர்ந்தாலும் அவர் அதை நிவர்த்திக்க வழி தேடுவார். அதையும் மிஞ்சி நமக்கு ஏதாவது அபாயம் நேருவதாகவே வைத்துக் கொண்டாலும், அதைப்பற்றி நாம் இப்போது முதல் கவலைப்பட்டுக் கலங்குவதனால் என்ன உபயோகம் இருக்கிறது? நாம் நம்முடைய நல்ல மனசைக் கெடுத்துக் கொள்வது தான் மிஞ்சுமே அன்றி, வருவது வந்தே தீரும். பரீக்ஷித்து மகாராஜன் தன்னைப் பாம்பு கடிக்கப் போகிற தென்பதைத் தெரிந்து கொண்டு அதைத் தடுப்பதற்காக சமுத்திரத்தின் நடுவில் போய் இருந்த கதையை நீ படித்தாயே, அதை மறந்துவிட்டாயா? அவன் அவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தும் அந்த விபத்தை விலக்க முடியாமல் போய்விட்டதல்லவா? ஆகையால் நாம் எதைப் பற்றியும் முன்னால் கவலைப்பட்டு மனசைப் புண்படுத்திக் கொள்வதே மதியீனம் என்பது என்னுடைய கைகண்ட அனுபவம். வருங்காலத்தில் நமக்கு என்ன நேரப்போகிறதென்பது நமக்குத் தெரிந்தால் நாம் அதைப்பற்றி அஞ்சிக் கலங்கி அநாவசியமான மனோபாதைக்கு ஆளாவோம் என்று தெரிந்து கொண்டுதான் கடவுள் நமக்கு எதிர்கால ஞானம் இல்லாமல் மறைத்து வைத்திருக்கிறார்கள். இனி என்ன நடக்கப் போகிறது என்று நாம் ஜோசியத்தின் மூலமாவது, நம்முடைய சுய யூகத்தின் மூலமாவது தெரிந்து கொண்டு அவஸ்தைப்படுவதெல்லாம் வீண் பிரயாசையே அன்றி வேறல்ல. நமக்கு மிஞ்சி என்ன துன்பம் வந்தாலும், அதை நாம் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு அனுபவிக்கக் கடமைப்பட்டவர்கள் என்ற உறுதியோடும் நாம் எதைக் குறித்தும் கவலைப்படாமல் எல்லாப் பொறுப்பையும் கடவுளின் மேல் போட்டு விட்டு இருந்தால், பிறகு நடப்பது நடக்கட்டும். இனி இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டு நல்ல மனசைப் புண்படுத்திக் கொள்ளாதே” என்று கூறி அவளது மனதை திடப்படுத்துபவன் போல, அவளது முதுகில் அன்பாகத் தட்டிக் கொடுத்தான்.

அதைக் கேட்ட பெண்பாவையின் கண்கள் கலங்கின. மனமும் முகமும் இளகின. அவள் நிரம்பவும் கொஞ்சலாகப் பேசத் தொடங்கி, “கவலைப்பட வேண்டாம் என்று நீங்கள் சுலபமாக உத்தரவிட்டு விட்டீர்கள். உங்களுடைய உத்தரவை சிரசாக வகிக்க வேண்டும் என்ற உறுதியும் ஆசையும் என் மனசில் பரிபூரணமாக உண்டாகின்றன. ஆனால், இந்தப் பாழும் மனசு நம்முடைய கட்டில் நில்லாமல் எதைக் குறித்தாவது நினைத்துக் கவலைப்பட்டு எப்போதும் சஞ்சலமடைந்து கொண்டபடியே தான் இருக்கிறது. நாம் வேறே எதை அடக்கினாலும் அடக்கலாம் போலிருக்கிறது, எவ்வளவு அரிய காரியத்தைச் சாதித்தாலும் சாதிக்கலாம் போலிருக்கிறது, இந்த மனசை அடக்கி ஒரு நிலையில் நிறுத்தி நாம் எதை விரும்புகிறோமோ அதைப்பற்றி நினைக்கவும், எதை விலக்குகிறோமோ அதைப்பற்றி நினைக்காமல் விட்டுவிடவும் செய்வது சாத்தியமற்ற காரியமாக அல்லவா இருக்கிறது. அந்தத் துஷ்டன் சட்டைநாத பிள்ளை வெளியில் வந்துவிட்டான் என்ற சங்கதியைக் கேட்ட பிறகும், நாம் எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சுவாமியார் செய்தி சொல்லி அனுப்பியதைக் கேட்ட பிறகும், இந்தக் கவலை அடிக்கடி என் மனசில் தோன்றி வதைத்துக் கொண்டிருக்கிறது. நான் எவ்வளவு பாடுபட்டாலும், இந்தக் கவலை விலகமாட்டேன் என்கிறது. அந்தத் துஷ்டனை மறுபடி பிடித்துச் சிறைச்சாலையில் அடைக்கிற வரையில் இந்தக் கவலை இருந்து கொண்டுதான் இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றாள்.

கண்ணப்பா, “வாஸ்தவம் தான். நம்முடைய சுவாமியார் அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு எத்தனையோ முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார். எப்படியும் அவன் கூடிய சீக்கிரம் பிடிபட்டு மறுபடி சிறைச்சாலைக்குப் போய்ச் சேர்ந்து விடுவான். அவனால் நமக்கு அதிக கெடுதல் ஒன்றும் நேராதென்றே நான் நினைக்கிறேன். இருந்தாலும், உன்னைத் தனிமையில் விட்டிருப்பதும் தவறென்று நினைக்கிறேன். நானாவது, அம்மாளாவது எப்போதும் உன்னோடு கூடவே இருந்தால் உன் மனம் வேறே விஷயங்களில் சென்று கொண்டிருக்கும். இதைப்பற்றி நீ நினைக்காமல் நாங்கள் உன் மனசுக்கு வேறே வேலை கொடுத்துக் கொண்டிருப்போம். உன்னுடைய கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் உனக்குத் துன்பம் கொடுக்கும் உன் மனசை அடக்க அதுதான் சரியான வழி. இனி நான் அப்படியே செய்கிறேன். இந்த விஷயத்தை அம்மாளிடம் சொல்லி எச்சரித்து வைக்கிறேன். அது போகட்டும். எனக்குத் தாகமாக இருக்கிறது. நீ கீழே போய்க் கொஞ்சம் சுத்த ஜலம் எடுத்துக் கொண்டுவா?” என்று நிரம்பவும் நயமாகவும் அன்பாகவும் கூறினான். அதைக் கேட்ட மாதரசி பலகையை விட்டு சடக்கென்று கீழே இறங்கி விரைவாக நடந்து படிக்கட்டை அடைந்து, படிகளின் வழியாகக் கீழே இறங்கி மறைந்து போனாள். அவ்வாறு கீழ்க்கட்டுக்குச் சென்றவள் கால் நாழிகையில் மறுபடி மேலே ஏறி வந்தாள். அதற்குள் தனது கண்களை மூடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த கண்ணப்பா தனது மனையாட்டியான பேடன்னத்தின் பாதசரங்கள் கலீர் கலிரென்று ஒசை செய்ததைக் கேட்டுப் புன்னகையும் குதூகலமும் தோற்றுவித்த முகத்தோடு அவளது வருகையை எதிர்பார்த்திருந்தான். இன்பமே வடிவெடுத்தது போலவும் லக்ஷ்மி விலாசம் தாண்டவமாடும் அற்புத தேஜசோடும் தேவாமிருதத் துளிகளையும் குளிர்ச்சியையும் அள்ளி வீசிய முகாரவிந்தத்தோடும் திரும்பி வந்த பெண்மணி ஒரு வெள்ளித் தட்டில் கமலாப்பழம், மலை வாழைப்பழம், அதிரசம், சீடை, திரட்டுப்பால், தாம்பூலம் முதலிய வஸ்துக்களையும், இன்னொரு கையில் ஜிலுஜிலென்று குளிர்ச்சியாக இருந்த தண்ணீர் நிறைந்த கூஜாவையும் எடுத்துக் கொண்டு தோகை விரித்த மயில்போலக் கண்கொள்ள அழகோடு வந்து தனது கையில் இருந்த நிவேதனப் பொருட்களை எல்லாம், பலகையின் மேல் பள்ளிகொண்டிருந்த தெய்வத்தின் பக்கத்தில் மட்டுக்கடங்கா பயபக்தி விசுவாசத்தோடு வைக்க, அதைக் கண்ட கண்ணப்பா சந்தோஷ மலர்ச்சியடைந்து, “என்ன இது? நான் தாகத்துக்குத் தண்ணீர் கேட்ட்ால், எனக்குப் பெருத்த விருந்து தயாரித்துக் கொண்டு வந்திருக்கிறாயே! இவ்வளவு சாமான்களையும் போட என் வயிற்றில் இடம் எங்கே இருக்கிறது? நீயும் வந்து உட்கார்ந்துகொள். யார் சுறுசுறுப்பாகவும் அதிக சாமர்த்திய மாகவும் இந்த வேலையைச் செய்கிறார் என்பதைப் பார்க்கலாம்” என்று கூறிய வண்ணம், வடிவாம்பாளை அழைத்துத் தனது பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு, தட்டில் இருந்த அதிரசம் ஒன்றை எடுத்த அதை ஒடித்து அவளது வாயில் ஆசையோடு போட முயன்றான்.

அந்தப் பெண்மணி அவனைத் தடுத்து கையிலிருந்த அதிரசத் துண்டைத் தனது கரத்தில வாங்கி, “என்ன இது? நீங்கள் செய்வது பெருத்த அக்கிரமமாக இருக்கிறதே. சுவாமிக்கு நிவேதனம் ஆவதற்கு முன் சமையல்காரன் சாப்பிடுவது எங்கேயாவது நடக்கிற காரியமா? அப்படிச் செய்வது அடுக்குமா? முதலில் சுவாமி நிவேதனம் ஆகட்டும். எனக்கென்ன அவசரம்? நான்தானா வெயிலில் போய் அலைந்து பிரயாசைப் பட்டுவிட்டு வந்திருக்கிறேன்? நான் நிழலிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். மத்தியானம் சாப்பிட்டது ஜீரணமாவதற்குக்கூட இன்னம் நேரமாகவில்லையே” என்று கூறிய வண்ணம் அந்த அதிரசத் துண்டை அந்தரங்க அன்போடு அவனுடைய வாயில் போட்டுவிட்டு அவனுக்கருகில் நின்றுகொண்டு தட்டிலிருந்த வஸ்துக்களை எடுத்தெடுத்து அவனுடைய வாயில் ஊட்டி உண்பிக்கத் தொடங்கினாள். அவனும் ருசி பார்க்காமல், தான் மாத்திரம் உண்பதைப்பற்றி ஒருவாறு கிலேசமடைந்து வருந்திய கண்ணப்பா சலிப்பாக பேசத்தொடங்கி, “வடிவூ! உன்னிடம் எல்லா குணமும் பொருந்தி இருந்தும் இந்த ஒரு விஷயத்தில் தான் நீ பிடிவாதம் பிடிக்கிறாய். ஆண் பிள்ளைகளுக்கெதிரில் பெண் பிள்ளைகள் எதையும் சாப்பிடக்கூடாதென்ற தப்பான கொள்கையை நீ வைத்துக் கொண்டிருக்கிறாய். அதனால் என் மனம் எவ்வளவு தூரம் புண்படுகிறதென்பது உனக்குத் தெரிகிறதில்லை. நீயும் என்னோடுகூட இப்போது சாப்பிட்டால், அது என் மனசில் எப்படிப்பட்ட ஆனந்தத்தை உண்டாக்கும் தெரியுமா?” என்றான்.

அதைக் கேட்ட வடிவாம்பாள் சந்தோஷமாகப் புன்னகை செய்து கண்ணப்பாவின் அதிருப்தியை விலக்க முயன்றவளாய், “ஏது என் கண்ணப்பாவுக்கு ஒருநாளும் இல்லாமல் என்மேல் இவ்வளவு கோபம் உண்டாகிறது. எல்லாப் பலகாரங்களையும் செய்கிறவர்களாகிய நாங்கள் எங்களுக்கு வைத்துக் கொள்ளாமல் ஏமாறிப் போவோம் என்று பார்த்தீர்களா? எங்களுக்கு மடப்பள்ளி நாச்சியார் என்ற பெயர் ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியாத சங்கதியா? எங்களுக்கு வைத்துக் கொண்டது போக மிச்சந்தானே உங்களுக்கு வருகிறது. அப்படி இருக்க, நாங்கள் இங்கேயும் பங்குக்கு வந்துவிட்டால், பிறகு உங்களுக்கு ஒன்றுமில்லாமல் போய்விடுமே என்று கூறிய வண்ணம், அவனது கோபத்தைத் தணிக்க முயற்சிப்பவள் போல ஒரு கையால் அவனது மோவாயைத் தடவிக் கொடுத்து இன்னொரு கையால் பலகாரங்களை எடுத்து மேன்மேலும் வாயில் ஊட்ட ஆரம்பித்தாள். அதைக் கண்ட கண்ணப்பா, “நீ சாப்பிட்டால், எனக்கு இல்லாமல் போய்விடப் போகிறதே என்ற பயத்தினால் நீ சாப்பிடமாட்டேன் என்கிறாயா? எனக்கு இல்லாமல் போனாலும் போகட்டும். அதைப்பற்றி எனக்குக் கொஞ்சமும் விசனமில்லை. எப்டியாவது நீ சாப்பிட்டால், அது தான் எனக்கு ஆனந்தம். உடனே என் பசி தாகம் முதலிய எல்லா உபாதைகளும் நிவர்த்தியாய் மனம் குளிர்ந்து போகும்” என்றான்.

வடிவாம்பாள்:- மனித சுபாவம் உங்களுக்குத் தெரியாததல்ல. நான் எதையும் சாப்பிடாதிருக்கிற வரையில் நீங்கள் என்னை வற்புறுத்துவீர்கள்; நான் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள்; நான் சாப்பிடுவதைக் கண்டு ஆனந்தமும் அடைவீர்கள். நான் உங்களோடு கூட உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டால், அதன் பிறகு அது சர்வசாதாரணமான காரியம் ஆகிவிடும். அதனால் உங்கள் மனசில் ஆசையாவது இன்பமாவது உண்டாகப் போகிறதில்லை. அரைக்காசு கொடுத்து அழச்சொல்லி, ஒரு காசு கொடுத்து ஓயவைக்க வேண்டும் என்று ஜனங்கள் சுலோகம் சொல்லுவார்கள். அதுபோல, கொஞ்ச நாளான பிறகு இவளை ஏனடா சாப்பிடச் சொன்னோம். இவள் நம்மைத் தனியாக விட்டுப்போக மாட்டாளா என்று ஆகிவிடும் — என்று வேடிக்கையாகக் கூறி நகைத்தாள்.

அதைக் கேட்ட கண்ணப்பாவும் சந்தோஷமாகச் சிரித்து, “என்ன வடிவூ! நீ கூட இப்படிப் பைத்தியக்காரி போலப் பேசுகிறாயே! நம்முடைய வீட்டில் சாமான்களுக்கு ஏதாவது குறைவுண்டா? அதிக சாமான்கள் செலவாகிப் போகின்றனவே என்று உன்னை யாராவது கேட்கப் போகிறார்களா? நீ சாப்பிட்டுக் குறைந்து போய்விடுமா? அப்படித்தான் நீ என்ன ராக்ஷசியா? நீ எவ்வளவு சாப்பிடக்கூடியவள் என்ற நிதானம் தெரியாதா? நம் இருவருக்கும் எவ்வளவு தேவையோ, அவ்வளவு எடுத்து வந்து வைத்துக் கொண்டால், அது சரியாய்ப் போகிறது. அப்படி இல்லாமல், அதனால் எனக்குக் குறைவுபட்டாலும், அல்லது, இல்லாமல் போனாலும், அதை நான் ஒரு பொருட்டாக எண்ணுகிறவனல்ல என்பது உனக்கு நன்றாகத் தெரியாதா. ‘ஏனடா இவளைச் சாப்பிடச் சொன்னோம். இவள் ஓயமாட்டாளா என்று நான் நினைக்கக் கூடியவனல்ல என்பது உனக்குத் தெரியாதா? அப்படிப்பட்ட அற்ப புத்தி என் கால் தூசியை மிதித்த மனிதனுக்குக் கூட இருக்காதே. அதை நீ நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தும் கொஞ்சமும் யோசனை செய்யாமல் சொல்லிவிட்டாயே! உயிருக்குயிராக மதிக்கும் அன்னியோன்னிய மான பந்துக்கள் ஆயிரங்காலம் ஒருவரோடு ஒருவர் கூட இருந்து சாப்பிட்டு வந்தாலும், அவர்கள் சாப்பிடுகிறார்களே என்ற பொறாமை ஏற்படுமா? மற்றவர் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் ஆசையுமே ஒவ்வொருவருக்கும் இருக்குமன்றி, அது ஒருநாளும் குறையாது. கஷணச்சித்தம் கூடினப்பித்தமாக நடக்கும் குணம் உடையவர்களும், உண்மையான பற்றில்லாதவர்களுமே அப்படிப்பட்ட அற்ப புத்தியோடு நடந்து கொள்ளுவார்கள். இப்போது ஒரு வீட்டில் பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் ஆயிசுகாலம் வரையில் சமையல் செய்து தங்களுடைய புருஷருக்கும் குழந்தைகளுக்கும் போட்டு உண்பித்து வருகிறார்களே, எவ்வளவு காலமானாலும் அவர்களுடைய அன்பு, பயபக்தி விசுவாசம், பணிவு, உருக்கம் முதலிய எதிலாவது குறைவு ஏற்படுகிறதா? ஒருநாளும் ஏற்படுகிறதில்லை. உலக அனுபவத்தைப் பார்க்கப்போனால் காலக்கிரமத்தில் அந்தக் குணங்கள் அதிகரித்து முற்றிக் கனிந்து கொண்டே போவதையே நாம் காண்கிறோம். ஆனால் அதற்கு நீ ஒரு சமாதானம் சொல்ல வருவாய். பெண்பிள்ளைகள் மாத்திரம் அப்படித்தான் நடந்து கொள்ளுவார்கள் என்றும் அது எல்லா ஆண்பிள்ளைகளுக்கும் பொருந்தாது என்றும் நீ சொல்லுவாய். அதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். பெருந்தன்மையும், உண்மையான வாஞ்சையும், தினந்தினம் அதிகரிக்கும் பாசமும் உடையவர்களான எல்லா ஆண்பிள்ளைகளும் தம்முடைய பெண்டு பிள்ளைகளிடத்தில் அதே மாதிரிதான் நடந்து கொள்வார்கள். என் விஷயத்தில் நீ இப்படிப்பட்ட தப்பான வார்த்தையை உன் மனப்பூர்வமாகச் சொல்லி இருக்கமாட்டாய் என்பது நிச்சயமே. நீ வேடிக்கைக்காக இப்படி பேசுகிறாய் என்பது நன்றாகத் தெரிகிறது. ஆகையால் நான் உன் மேல் கோபிப்பது சரியல்ல. ஆனாலும் இப்படிப்பட்ட கொடூரமான வார்த்தையை வேடிக்கைக்காக உபயோகப்படுத்தினால் கூட, அது என் மனசை நிரம்பவும் புண்படுத்துகிறது” என்றான்.

வடிவாம்பாள்:- (சந்தோஷமாகப் புன்னகை செய்து நிரம்பவும் கொஞ்சலாகப் பேசத் தொடங்கி) எப்படி இருந்தாலும் நாங்கள் மூடப் பெண்பிள்ளைகள் தானே. நாங்கள் வேடிக்கையாகப் பேச நினைத்தால் கூட, ஏதாவது தவறு ஏற்பட்டு விடுகிறது. உங்களைப் போன்ற ஆண்சிங்கங்கள் அதை எல்லாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். சகலமான விஷயங்களிலும் நாங்கள் புருஷர்களுக்கு அடங்கிக் கீழ்ப்படிந்து அவர்களுடைய பிரியப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது ஸ்திரீ தர்மம். ஆனாலும், இரண்டொரு சிறிய விஷயங்களில் எங்களுக்கு சில கொள்கைகள் இருக்கின்றன. அவைகளில் நாங்கள் உறுதியாகவும் பிடிவாதமாகவும் இருக்கத்தான் வேண்டும். முன்காலத்தில் இருந்து என்றும் அழியாக் கீர்த்தி வாய்ந்த உத்தம ஸ்திரீகள் எல்லாம் அப்படிப்பட்ட கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடித்து வந்தார்கள் என்றும், அவை அவசியமானவைகள் என்றும் நான் சில சாஸ்திரப் புஸ்தகங்களில் படித்திருக்கிறேன். நல்ல குலத்தில் உதித்த ஸ்திரீகள் அநேகர் அந்த மாதிரி நடப்பதையும் நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அப்படி நடந்துகொள்வதுதான் உத்தம ஜாதி ஸ்திரீகளுடைய லட்சணம் என்று அம்மாள் முதலியோர்களும் எனக்குப் பல தடவைகளில் சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் நான் எந்த விஷயத்திலும் நீங்கள் காலால் இடும் வேலையைத் தலையால் செய்கிறவளாய் இருந்தும் இந்த விஷயத்தில் மாத்திரம் அவர்கள் சொல்லுகிறபடி நடக்கிறேன்.

கண்ணப்பா:- (வியப்படைந்து) ஒகோ இது உன்னுடைய சொந்தப் பிடிவாதம் என்றல்லவா நான் இதுவரையில் நினைத்தேன். இதற்கு நீ சாஸ்திர ஆதாரத்தையும் பெரியவர் களுடைய கட்டளையையும் மேற்கோளாகக் கொண்டுவர ஆரம்பிக்கிறாயே. நீ குறிக்கும் கொள்கை இன்னதென்பதே எனக்கு இன்னமும் விளங்கவில்லை. பலகாரம் சாப்பிடும் விஷயத்தில், ஸ்திரீகள் புருஷரோடு சாப்பிடக் கூடாது என்று எந்த சாஸ்திரம் சொல்லுகிறதோ தெரியவில்லையே!

வடிவாம்பாள்:- (வேடிக்கையாக நகைத்து) சாஸ்திரங்கள் பல காரத்தை மாத்திரமா குறித்துச் சொல்லும். அப்படி இல்லை. உத்தம ஜாதி ஸ்திரிகள் தங்களுடைய பசி, தாகம், தேகப்பிணி முதலிய எந்த விதமான உபாதையையும் புருஷருக்கு எதிரில் நிவர்த்தித்துக் கொள்வதும் கூடாது. அப்படிப்பட்ட பாதைகள் ஸ்திரீகளுக்கு உண்டாகின்றனவா என்பதாவது, அதை அவர்கள் எப்போது நிவர்த்தி செய்து கொள்ளுகிறார்கள் என்பதாவது புருஷருக்குத் தெரியவே கூடாது. பாதை என்றால், பஞ்சேந்திரியங்களாலும் ஸ்திரீகளுக்கு ஏற்படக்கூடிய சகலமான உபாதைகளும் அதற்குள் அடங்கியவைகளே. தேவர்களுக்கு எப்படிப் பசி, தாகம், பிணி முதலியவை இல்லை என்று நாம் கருதுகிறோமோ, அதுபோல, ஸ்திரீகளும் புருஷர்களால் கருதப்பட வேண்டும். அந்த விதமாக ஸ்திரீகள் நடந்து கொண்டால், அவர்களுக்கும் சுகிர்தம், அதனால் புருஷர்களுடைய மனசிலும் நிம்மதியும் ஆனந்தமும் உண்டாகும். அப்படி உண்டாகும் நிலைமையே நீடித்து சாசுவதமாக நிற்கக் கூடியது. இப்போது தாங்கள் பிரியப்படுகிறீர்கள் என்று நான் உங்களோடு கூட உட்கார்ந்து உண்ணத் தொடங்கினால், அதனால், இப்போது நீங்கள் மிகுந்த சந்தோஷம் அடைவீர்கள் என்பது நிச்சயமானாலும், இது நீடித்து நிற்காது. இதனால் பற்பல கெடுதல்கள் உண்டாவதோடு, ஸ்திரீகளிடத்தில் புருஷருக்கு நீடித்து நிற்க வேண்டிய சாசுவதமான பற்றும் பாசமும் சரியானபடி ஏற்படாமல் குறைவுபட்டுப் போகும். நீங்கள் எங்களுக்கு இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் சமத்துவம் கொடுத்துக் கொண்டே போனால், அதற்கு ஓர் எல்லை இராது. படிப்படியாக ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் சமத்துவம் கொடுத்துக் கொண்டே போக நேரும். முடிவில் அது இருவருக்குள்ளும் அதிருப்தியையும், அருவருப்பையும், வேற்றுமையையும், சச்சரவையும், துன்பங்களையும், துயரத்தையும் உண்டாக்கிக் கொண்டே போகும். ஸ்திரீகள் புருஷர்களுடைய மனசில் சாசுவதமான நீடித்த வேரூன்றிய அன்பையும் மனோலயத்தையும் திருப்தியையும் சந்தோஷத்தையும் உண்டாக்க வேண்டுமானால், தங்களுடைய சுயேச்சையையும் சுயத்தேவைகளையும் வெளியில் காட்டாமல் அடக்கி, புருஷர்களுக்கு எப்படிப்பட்ட அற்ப மனசஞ்சலமும் உண்டருக்க ஆஸ்பதமாக இராமல் எப்போதும் சந்தோஷம், இன்பம், பணிவு, சேவை முதலியவைகளின் அவதாரம் போலவே இருந்து வரவேண்டும் என்பது இதற்கு முன்னிருந்து சென்றவர் களான உத்தமஸ்திரீ ஜாதிகளின் கொள்கை. அது போலவே நடந்து வரவேண்டும் என்பது என்னுடைய பிடிவாதமான மனஉறுதி. ஆகையால் என் கண்ணம்மா இந்த அற்ப விஷயங்களில் எல்லாம் என்மேல் கோபமாவது அருவருப்பாவது கொள்ளக் கூடாது; நான் கைக்கொண்டிருக்கும் ஸ்திரீ தர்மத்துக்கு யாதொரு பங்கமும் ஏற்படாமல் நீங்கள் என்னை வைத்துக் காப்பாற்ற வேண்டும். அதுவே அடியாளுடைய ஜீவாதாரமான வேண்டுதலை — என்று நிரம்பவும் பணிவாகவும் அடக்கமாகவும் கூறினாள்.

அதைக் கேட்ட கண்ணப்பா முன்னிலும் அதிக வியப்படைந்து நகைத்து, “ஓகோ! அப்படியா சங்கதி! இப்போதுதான் உண்மை விளங்குகிறது. இதற்கு முன்னிருந்த ஸ்திரீகள் எல்லோரும் சேர்ந்து புருஷரைத் தம்முடைய வசப்படுத்தி அடிமைகள் ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்திருக்கும் இந்தச் சதி ஆலோசனையில் நீயும் சேர்ந்து கொண்டிருப்பவள் என்பது இப்போது தான் தெரிந்தது. உன்னுடைய மன உறுதியையும், விவரத்தையும் நான் ஏன் கெடுக்க வேண்டும். உன் பிரியம் போல நடந்து கொள். ஸ்திரீகள் புருஷர்களிடம் அதிகப் பணிவாகவும் அடிமைகள் போலவும் நடப்பதெல்லாம், அவர்களைத் தங்களுக்கு அடிமை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தோடு செய்யப்படும் சூட்சுமம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. இருந்தாலும், இந்தக் காலத்தில் அன்னிய தேசத்துப் படிப்பும் நாகரிகமும் நம்முடைய தேசத்தில் பரவப் பரவ, அந்த சூட்சுமம் எல்லாம் இருந்த இடந்தெரியாமல் போய்க் கொண்டே இருக்கிறது. நீ வேறே எங்கும் போக வேண்டாம். சென்னப் பட்டணத்திற்கு போய்ப் பார். அங்கே வெள்ளைக்காரப் புருஷர்களும் ஸ்திரீகளும் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்று பார். அவர்களைப் போலவே நடந்து கொள்ள வேண்டும் என்று, இங்கிலீஷ் படித்த பெரிய மனிதர்களில் எண்ணிறந்தவர்கள் அவர்களைவிட ஒன்பது படி அதிகமாகவே தாண்டி தத்ரூபம் சீமை மனிதர்களைப் போல நடந்து கொள்ளுகிறார்கள். ஸ்திரீகள் தத்தம் புருஷர்களோடு சேர்ந்து கடற்கரைக்குப் போவதும், பலகாரக் கடைகளில் ஒன்று சேர்ந்து உண்பதும், இன்னும், பயாஸ்கோப், நாடகம் முதலிய இடங்களில் அன்னிய புருஷருக்கிடையில் தம்முடைய மனைவியைக் கொண்டுபோய்த் தமக்கருகில் உட்கார வைப்பதும், இது போன்ற எத்தனையோ புதுமைகளைக் காணலாம். தம்பி கந்தசாமியின் நிச்சயதார்த்தம் நெருங்கிவிட்டது. நாம் எல்லோரும் பட்டணம் போகப் போகிறோமே. அப்போது எல்லா விநோதங் களையும் நீ பார்க்கத்தான் போகிறாய். பட்டணத்தில் நம்முடைய சம்பந்தி வீட்டாரும் புதிய நாகரிகப்படி நடப்பவர்களாகத் தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நீ ஒருத்தி தான் அங்கே இருப்பவர்களுள் சுத்த கர்நாடகமாகவும் பட்டிக்காட்டு மனுவதி யாகவும் விளங்கிப் போகிறாய். அந்தப் பழிப்புக்கெல்லாம் நீ ஆளாக இஷ்டப்பட்டால், நீ உன்னுடைய பிரியப்படியே நடந்து கொள்” என்றான்.

வடிவாம்பாள்:- பட்டணத்துக்கு வந்தால், நான் கவனிக்க வேண்டிய நம்முடைய வீட்டுக்காரியங்களைப் பார்ப்பதிலேயே என் பொழுதெல்லாம் போய்விடப் போகிறது. மற்ற விநோதங் களை எல்லாம் நான் எதற்காகக் கவனிக்கப் போகிறேன். அப்படிக் கவனித்தாலும், அதற்காக நான் என்னுடைய ஒழுங்கை மீறி நடக்கப் போகிறதில்லை. புது நாகரிகக்காரர்கள் என்னை எப்படி தூஷித்தாலும் தூஷிக்கட்டும். கட்டுப்பாடுகளுக்கு அடங்கி நடக்கும் மனிதர்களைக் கண்டால், கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாக நடந்து எதை வேண்டுமானாலும் செய்கிறவர்களுக்குப் புரளியாகத்தான் இருக்கும். ஒரு குடும்ப ஸ்திரீ கொண்ட புருஷனுக்கும், மாமியார் மாமனார் முதலியோருக்கும் அடங்கிப் பணிவாக நடந்து, வீட்டு அலுவல்களை எல்லாம் செய்யும் விஷயத்தில் எவ்வளவோ பாடுபட்டு இரவு பகல் உழைத்து நல்ல பெயர் எடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு தாசி எல்லாக் கட்டுப்பாட்டையும் விலக்கிவிட்டு எவருக்கும் அடங்காமல் சுயேச்சையாக நடந்து கண்டது காட்சி கொண்டது கோலமாக இருக்கிறாள். குடும்ப ஸ்திரீயாய் இருப்பதைவிட தாசியாய் இருப்பது சுலபமானது; இன்பமுடையதாகத் தோன்றுவது. அப்படி இருந்தும் நூற்றுக்குத் தொண்ணுற்றென்பது பேர் சகல கஷ்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உள்பட்டு குடும்ப ஸ்திரீயாக இருப்பதையே நலமாகக் கொள்கிறார்கள். அற்பத்திலும் அற்பமான எண்ணிக்கை உள்ளவர்களே தாசியாக மாறுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? உலகத்தில் பெரும்பாலோரான ஸ்திரீகள் புருஷருக்கு அடங்காமல் அவர்களைக் கட்டிக்கொள்ளாமல் சுயேச்சையாக இருந்து வாழ்வதை மேற்கொள்ளக் கூடாதா? தாசிகளின் சுயேச்சையான வாழ்வு போலி வாழ்வே அன்றி வேறல்ல. தாசியாகப் போனாலும் விபசார குணமுள்ள புருஷர்களுடைய சேர்க்கை அவர்களுக்கு இன்றியமையாததாக இருக்கிறது. குடும்ப ஸ்திரீகள் தாலிகட்டின ஒரு புருஷனுடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டியவளாக இருக்கிறாள். தாசியோ தன்னை நாடிவரும் நூற்றுக்கணக்கான புருஷர்களுக்கு எல்லாம் அடங்கி நடக்க வேண்டியவள் ஆகிறாள். ஒரு கட்டுப்பாட்டுக்குப் பயந்து அதைவிட்டு விலகிப் போனால், அதைவிட நூறுமடங்கு அதிகமான கஷ்டமும் துன்பமும் வந்து சேருகின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. அப்படி இருந்தும், கட்டுப்பாட்டை அலட்சியம் செய்து தங்களுடைய பிரியப்படி காரியங்களை நடத்துகிறவர்களை எல்லாம், நாம் தடுக்க முடியாது. எந்தக் காலத்திலும் அப்படிப்பட்டவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்; அவர்கள் நம்மைப் பார்த்து துரஷனைதான் செய்வார்கள். அதனால் எல்லாம் நாம் மனத்தளர்வு அடையலாமா? அதை எல்லாம் நாம் பொருட்படுத்துவதே நம்முடைய யோக்கியதைக்குக் குறைவு. அன்னிய தேசத்தாரைப் பார்த்துக் கெட்டுப் போகிறவர்கள் போகட்டும். அவர்களுடைய தாட்சணியத்துக்காக, நாம் நம்மைத் திருத்திக் கொள்ள முடியுமா? எத்தனையோ யுகம் யுகமாக இருந்து அழியாப் புகழ்பெற்று வரும் நம்முடைய நாட்டின் ஸ்திரீ தர்மங்களை நாம் கைவிடவும் முடியாது. அப்படிக் கைவிட்டால், இந்த நாடு வெகு சீக்கிரம் சீர்கெட்டு அழிந்து போவது நிச்சயம்” என்றாள்.

கண்ணப்பா:- நீ சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனாலும் இப்போது நம்முடைய நாடு இருக்கும் நிலைமையைப் பார்த்தால், வெகு சீக்கிரத்தில் நம்முடைய மனிதர்களுடைய நடையுடை பாவனைகளில் பெருத்த பெருத்த மாறுபாடுகள் உண்டாகிவிடும் என்ற ஒரு நிச்சயம் என் மனசில் உண்டாகிவிட்டது. இங்கிலீஷ் படிப்பு நம்முடைய நாட்டில் பரவுவது வருஷத்துக்கு வருஷம் அதிகப்பட்டுக் கொண்டே போகிறது. அந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய பெண் மக்களுக்குள்ளும் நுழையத் தலைப்பட்டுவிட்டது. இங்கிலீஷ் படித்தவர்களுள் பெரும்பாலோர் தம்முடைய பழைய தர்மங்களை எல்லாம் அடியோடு மறந்து புது மனிதர்களாக மாறிப் போயிருக்கின்றனர். முக்கியமாக நம்முடைய நாட்டில் உள்ள பிராமணர்களை எடுத்துக் கொள்வோம். மற்ற ஜாதியாரைவிட, பிராம்மணர்களே இங்கிலீஷ் பாஷையை அதிகமாக நாடுகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அதனால் பிழைப்புக்கு நல்ல மார்க்கம் ஏற்படுகிறதென்று அதை நாடுகிறார்கள். ஓர் ஊரில் பிராம்மணர் வீடுகள் இருபது இருந்தால் அத்தனை வீட்டுப் பிள்ளைகளும் இப்போது இங்கிலீஷ் பாஷை கற்றுக் கொள்ளுகிறதையே வேதபாராயணம் செய்வதைவிட அதிக சிரத்தையாகச் செய்யத் தலைப்படுகிறார்கள். அநேகமாய் எல்லோரும் ஏதாவது உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டு வெளியூர்களுக்குப் போய் விடுகிறார்கள். போன தலைமுறையில் இருந்த பிராம்மன அக்கிரஹாரங்கள் எல்லாம் இந்தத் தலைமுறையில் பாழ்த்துக் குட்டிச்சுவர்களாய் நிற்கின்றன. நம்முடைய வேத சாஸ்திரங்களைப் படிப்பதெல்லாம் அடியோடு இல்லாமல் போய்விட்டது. வைதிகப் பிராம்மணர்களுடைய வயிற்றில் உதித்த கீழ்க்கடைகள் எல்லாம் இங்கிலீஷ் பாஷையில் தேறி பெரிய பெரிய பட்டணங்களில் போய் அடைந்து கொண்டு, உத்தியோகத்தில் மேன்மேலும் அபிவிருத்தி அடைந்து அதிகப் பொருள் தேடுவதையே புருஷார்த்தமாகக் கைக்கொண்டு நம்முடைய பழைய ஆசார ஒழுக்கங்களை எல்லாம் விட்டு சமபந்தி போஜனம், ஜாதி மத சமத்துவம் முதலிய கொள்கைகளை எல்லாம் அனுபவத்தில் நடத்திக் காட்டுகிறார்கள். சென்னப் பட்டணத்திலும் சரி, மற்ற ஊர்களிலும் சரி, நூற்றுக்கணக்கான காப்பிக் கடைகள் ஏற்பட்டுவிட்டன. நம்முடைய ஊரில் உள்ளயாக — எக்ஞங்கள் செய்த மகா மகா சிரேஷ்டர்களுடைய பிள்ளைகள் எல்லாம் தலை மயிரை வெள்ளைக்காரர்களைப் போல வெட்டி விட்டுக் கொண்டு காப்பி ஓட்டல்களில் எல்லோருடனும் ஒரே மேஜையில் உட்கார்ந்து பலகாரங்கள் சாப்பிடுகிறார்கள். அதில் இன்னொரு வேடிக்கை நடக்கிறது. நாம் எல்லோரும் நம்முடைய வீட்டில் சிறிய குழந்தைகள் சாதம் சாப்பிடும் தட்டை எச்சில் தட்டு என்று இழிவாக நினைத்து, அதை ஒதுக்குப்புரமான ஒரு மூலையில் வைக்கிறோம். ஒரு குழந்தையின் தட்டை இன்னொரு குழந்தைக்குப் போடக்கூடாதென்று நினைப்பதோடு அதை வேறே யாரும் தொடவும் கூடாதென்று வைத்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா; அதுபோல பட்டணத்தில் சொந்த வீடுகளில் பெண்டுகள் குழந்தைகளின் சாப்பாட்டுத் தட்டுகளை விலக்கி தூரத்தில் வைக்கிறார்கள். புருஷர்களோ காப்பிக் கடைகளில் எச்சில் என்பதையே கவனிப்பதில்லை. மற்றொருவன் வாயில் வைத்து சப்பிக் குடிக்கும் குவளையை, உடனே கொண்டு போய் ஒரு தொட்டியில் வைத்திருக்கும் தண்ணீரில் போட்டு அலம்பி, அதிலேயே காப்பி எடுத்து இன்னொரு பிராம்மணருக்குக் கொண்டு போய் வைக்கிறார்கள். அதை அவர் தம்முடைய திருவாயில் வைத்து சப்பிக்குடிக்கிறார். அது இன்னொருவருக்குப் போகிறது. இம்மாதிரி ஒரு பாத்திரத்தின் ஆயிசு முடிவதற்குள், அது கோடாது கோடி மனிதர்களின் வாய்க்குள் புகுந்து புறப்படுகிறது. இம்மாதிரி செய்து செய்து பழகிப் போனபடியால், இப்படிச் செய்வதில் ஜனங்கள் எள்ளளவும் லஜ்ஜையாவது கிலேசமாவது கொள்ளுகிறதே இல்லை. சமீபத்தில் நான் சென்னப் பட்டனம் போயிருந்த காலத்தில் நல்ல நல்ல வைதிகர்கள் எல்லாம் காப்பி ஓட்டலுக்குள் போய் சங்கை இல்லாமல் குடித்துவிட்டு வந்ததை நான் என் கண்ணால் கண்டேன். பிறருடைய கண்ணுக்கெதிரில் சாப்பிட்டால், கண் திருஷ்டி தோஷம் வந்துவிடும் என்று சொல்லி, இதுவரையில் எவ்வளவோ ஜாக்கிரதையாகவும் ஒழுங்காகவும் நடந்து வந்தவர்கள் எல்லாம் அடியோடு மாறிவிட்டார்கள். ஒரே ஜாதியைச் சேர்ந்த மனிதர்களில் ஒருவர் கொஞ்சம் மட்ட ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தால், அவரை மற்றவர் தம்மோடு கூட வைத்துக் கொண்டு போஜமை செய்வதில்லை என்ற கட்டுப்பாடு பட்டிக்காடுகளில் இன்னமும் இருந்து வருகிறதே. பட்டணங்களில் காப்பிக் கடைகளில் அந்த விதிகள் எல்லாம் போன இடத் தெரியாமல் பறந்து போகின்றன. இங்கிலீஷ் படிப்பும், காப்பிக் கடைகளும் எப்படிப்பட்ட மனிதர்களையும் புது மனிதர்களாக மாற்றிவிட்டன. எச்சில், விழுப்பு, தீட்டு என்ற எந்த விஷயத்தையும் ஜனங்கள் பொருட்படுத்துவதையே அடியோடு விட்டுவிட்டார்கள். ஒரு நாள் நான் ஹைகோர்ட்டுக்கு வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன். நம்முடைய ஊரில் உள்ள ஒரு சாஸ்திரியின் பிள்ளை அங்கே வக்கீலாக இருக்கிறார். அவர் ஒரு மூலையில் இருந்து கையில் ஒரு சிகரெட்டை வைத்துக் குடித்துக் கொண்டு நின்றார்; என்னைக் கண்டவுடன் அதை எறிந்துவிட்டுக் கையை இடுப்புத் துணியில் துடைத்துக் கொண்டார். நான் அதைக் கவனிக்காதவன் போல இருந்துவிட்டேன். அவர்தான் அப்படி இருந்தார் என்றால் பக்கத்து ஊரில் உள்ள இன்னொரு தாதாசாரியாருடைய பிள்ளையும் வக்கீலாக இருக்கிறார். அவர் என்ன செய்தார் என்றால், எப்போதும் கையில் ஒரு குண்டூசியை வைத்துப் பல்லைக் குத்தித் தமது கையை தலைமுகம் முதலிய இடங்களில் எல்லாம் துடைத்துக் கொண்டே இருந்தார். அவரைப் பற்றி நான் இன்னமொரு செய்தியும் கேள்விப்பட்டேன். அவர் தங்கப் பதுமை போல இருக்கும் தம்முடைய சம்சாரத்தை அலட்சியம் செய்துவிட்டு, பறைச்சிக்கும், வெள்ளைக்காரனுக்கும் பிறந்த ஒரு சட்டைக்காரியோடு சகவாசம் செய்து வருகிறாராம்; அவளுக்குச் சொந்த வீடு முதலிய செளகரியங்களை எல்லாம் ஏற்படுத்திக் கொடுத்து அவளுக்கு அடிமை போல இருந்து வருகிறாராம். இவைகளை எல்லாம் நான் சொல்வதில் இருந்து, நான் பிராம்மணர்களையாவது மற்றவர்களையாவது தூவிக்கிறேன் என்று நீ நினைத்துவிடக் கூடாது. இவைகளுக்கு எல்லாம் இங்கிலீஷ் பாஷை கற்பதே முதன்மையான காரணம் என்று நினைக்கிறேன். அப்படிக் கற்பதனால், ஜனங்கள் வித்தை கற்கவும் உத்தியோகம் பார்க்கவும் பெரிய பட்டணங்களில் போய் அடைகிறார்கள். சிறிய கிராமங்களாக இருந்தால், அவ்விடத்தில் ஜனங்கள் கொஞ்சமாக இருப்பதால், கட்டுப்பாடு இருக்கும். கட்டுப்பாட்டை மீறி நடப்பவர்களை மற்றவர்கள் இகழ்வார்கள். பொது ஜனங்களின் அபிப்பிராயத்துக்காக பயந்து எல்லோரும் ஒழுங்கான வழியில் தத்தம் மதாசாரக் கிரமப்படி நடப்பார்கள். பெரிய பட்டனங்களில், ஒருவனுடைய செய்கைகள் மற்றவன் கவனிக்கிறதில்லை; கவனிப்பதற்கு அவகாசம் இருப்பதும் இல்லை. கவனித்துக் கண்டிக்கப் போனாலும், ஒருவனுடைய நடத்தையாவது செய்கையாவது இன்னொருவன் துவித்தால், அது அவதூறுக் குற்றம் என்று இங்கிலீஷ் சட்டம் சொல்லுகிறது. ஆகையால், அது குற்றமாக முடிகிறது. மனிதரில் பெரும்பாலோர் எப்போதும் மற்றவருடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கியே ஒழுங்காக நடக்கும் சுபாவம் உடையவர்கள். எவரும் தம்மைக் கண்டிக்கிறதும் இல்லை என்ற ஒரு தைரியம் ஏற்பட்டுவிடுகிறது. ஆகையால், நல்ல உயர்குலத்தில் உதிக்கிறவர்கள் கூட படிப்படியாகக் கெட்டு ஹீனமார்க்கங்களில் நடந்து விடும்படிபட்டன. வாழ்க்கை, காப்பிக் கடைகள் முதலியவைகளால் எத்தனையோ யுகங்களாக நமது ரிஷிகளும் முன்னோர்களும் ஏற்படுத்தி ஸ்தாபித்து வைத்திருந்த மதாசார ஒழுக்கங்கள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்து போய்விட்டதை நாம் கண்ணால் பார்க்கிறோம். அந்த இங்கிலீஷ் படிப்பு நம்முடைய தேசத்தில் 100-க்கு 6 பேருக்குத் தான் ஏற்பட்டிருக்கிறது என்றும், இன்னும் மற்றவருக்கும், முக்கியமாக நம்முடைய பெண் பிள்ளைகளுக்கும், அது கற்பிக்கப்பட வேண்டும் என்றும், நம்முடைய தலைவர்கள் கோஷித்து வருகிறார்கள்; சில பட்டணங்களில் கட்டாயப்படிப்பு ஏற்படுத்திவிட்டார்கள். காலக்கிரமத்தில் எல்லா ஊர்களிலும் கட்டாயப் படிப்பு பரவிவிடும். இன்னம் இரண்டொரு தலைமுறைகளில் நம்முடைய நாட்டில் உள்ள ஒவ்வோர் ஆண் பிள்ளையும் ஒவ்வொரு பெண் பிள்ளையும் அவசியம் இங்கிலீஷ் பாஷை கற்க நேரிடும். அதன் பிறகு நம்முடைய தேசம் எந்த நிலைமையில் இருக்கும் என்பதை நாம் இப்போதே ஒருவிதமாக யூகித்துக் கொள்ளலாம். இந்தக் காலத்தில் இங்கிலீஷ் படித்த ஆண் பிள்ளைகள் மாறி இருப்பது போல, இங்கிலீஷ் படித்த பெண் பிள்ளைகளை எடுத்துக் கொண்டால், அவர்களுள் பெரும் பாலோர் விபரீதமான நோக்கங்களையும் நடையுடை பாவனைகளையும் உடையவர்களாக மாறிப் போயிருக்கிறார்கள். உன்னைப் போல, பழைய காலத்து வழக்கப்படி நடக்கும், ஸ்திரீகள் எல்லாம் அக்ஞான இருளில் அழுந்தி அடிமை நிலைமையில் இருப்பதாக அவர்கள் கருதி, உங்களை இந்த நிலைமையில் இருந்து கைதுக்கி விடுவதற்காக சில சங்கதிகளையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்தால், நம்முடைய தேசம் வெகு சீக்கிரத்தில் சகலமான விஷயங்களிலும் வெள்ளைக்காரர் தேசம் போலவே மாறிவிடும் என்ற உறுதி நிச்சயமாக ஏற்படுகிறது. இப்படி நம்முடைய தேசமே அடியோடு தலைகீழாக மாறிக் கிடக்கும் இந்தக் காலத்தில், நீ புருஷனுக்கெதிரில் பலகாரம் சாப்பிடமாட்டேன் என்பது நிரம்பவும் அநாகரிமாகத் தோன்றுகிறது. ஆண் பிள்ளைகளுக்கெதிரில், ஸ்திரீகள் எவ்விதமான தேக பாதையையும் காட்டிக்கொள்ளக் கூடாதென்று நீ சொல்வது சர்வ சிலாக்கியமான கொள்கைதான். அப்படியேதான் நம்முடைய பூர்வீக ஸ்திரிகள் நடந்து வந்தார்கள். இன்னமும் அநேகர் நடந்து வருகிறார்கள். அப்படி நடந்தால், புருஷர்களுடைய கண்களுக்கு, ஸ்திரிகள் தத்ரூபம் தேவதைகள் போல இன்ப வடிவமாகத் தோன்றுவார்கள் என்பது நிச்சயமே. அப்படிப்பட்ட அருமையான கொள்கை களை எல்லாம் நம்முடைய ஸ்திரீகள் சுத்தமாக விட்டொழிக்க வேண்டும் என்று நவீன நாகரிகத்தார் படும்பாடு அற்ப சொற்பமல்ல. அந்தக் கொள்கை வெள்ளைக்காரர்களுடைய கொள்கைக்கு நேர் விரோதமானது. இப்போது எல்லா விஷயங்களிலும் வெள்ளைக்காரருடைய நாகரிகமே தலையெடுத்து இந்நாட்டில் பரவி வருகிறது. ஆகையால், வெகுசீக்கிரத்தில் உன்னுடைய கொள்கைகள் எல்லாம் அழிந்து போய்விடுமே என்ற ஒரு பெருத்த ஏக்கம் என் மனசை வாட்டுகிறது. உன்னைப் பற்றி நான் பயப்படவில்லை. யார் என்ன விதமாக நடந்து கொண்டாலும் நீ உன்னுடைய மனவுறுதியில் தளர்வடைய மாட்டாய் என்பது நிச்சயம். ஆகையால், நாம் நம்மைப்பற்றி வருந்தவில்லை. இனி வரப்போகும் சந்ததியாரின் நிலைமை எப்படி இருக்குமோ என்பதுதான் நிரம்பவும் கவலையை உண்டாக்குகிறது. பதினைந்து வருஷ காலத்துக்கு முன் இருந்த நிலைமைக்கும் இப்போதைய நிலைமைக்கும் நூறு மடங்கு வேறுபாடு ஏற்பட்டுப் போய்விட்டது. இன்னம் நம்முடைய ஆயிசு கால முடிவுக்கும் நாம் என்னென்ன மாறுபாடுகளைப் பார்க்க நேருமோ தெரியவில்லை. இதோ நம்முடைய கந்தசாமிக்கு நாம் பார்த்திருக்கிற பெண் மனோன்மணி இருக்கிறாளே, அவள் பி.ஏ., வகுப்பில் படிக்கிறாளாம். அவள் தன்னுடைய புருஷனிடத்தில் எப்படி நடந்து கொள்வாளோ என்னவோ தெரியவில்லை. நம்முடைய கந்தசாமியோ மகா கண்டிப்பான குணம் உடையவன்; எப்படிப்பட்ட மாசற்ற நடத்தை உடைய மனிதர்களிடத்திலும் குற்றங் கண்டுபிடித்துக் கண்டிக்கக்கூடிய மகா நுட்பமான மனசை உடையவன். அவனும் மனோன்மணியும் எப்படி ஒற்றுமையாக இருந்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இதுவரையில் இருந்து இறந்து போனவர்கள் எல்லாம் நல்ல புண்ணியசாலிகள் தான். அவர்களுக்கு எல்லாம் நல்ல பணிவான பதிவிரதா சிரோன்மணிகள் எல்லாம் பெண்ஜாதிகளாக வந்து வாய்த்து, அவர்களுடைய பிரியப்படி நடந்து கொண்டார்கள். இனி ஏற்படப் போகும் தலைமுறையில் உள்ள மனிதர்கள் தங்களுடைய பெண்ஜாதிகளோடு எப்படித்தான் ஒற்றுமையாக இருந்து குடும்பம் நடத்தப் போகிறார்களோ தெரியவில்லை” என்றான். அவன் சொன்னதை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நற்குண மடந்தையான வடிவாம்பாள், “இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை எல்லாம் ஏற்படுத்திய நம்முடைய முன்னோர்கள் மதியினர்கள் அல்ல. அவர்கள் சகலமான சூட்சு மங்களையும் தந்திரங்களையும் தெரிந்து கொண்ட மேதாவிகள் என்பதைப்பற்றி சந்தேகமே இல்லை. குடும்ப வாழ்க்கையின் மர்மங்களையும் ஸ்திரீ புருஷர்கள் ஒருவரிடத்தொருவர் நடந்து கொள்ள வேண்டிய உத்தமமான தர்மங்களையும் அவர்கள் கடைந்து வெண்ணெய் போலத் திரட்டி எடுத்துக் காட்டி இருக்கிறார்கள். அது எப்போதும் அழியாத சாசுவதமான தர்மம். அதற்கு ஒருநாளும் கெடுதல் நேராது. கலியுகம் 5000-ம் வருஷத்துக்கு மேல், உயர்குலத்து மனிதர்களுடைய ஆசார தர்மங்கள் எல்லாம் சிதைவடைந்து போகும் என்றும், நீசர்களுடைய தர்மங்களே தலையெடுத்து நிற்கும் என்றும் நம்முடைய முன்னோர்கள் தம்முடைய தெய்வீக சக்தியினால் தீர்க்க தரிசனமாகச் சொல்லி முன்னரே எழுதி வைத்திருக்கிறார்கள். அதுபோலவே தான் இப்போது அனுபவத்தில் மனிதர்கள் நடக்கிறார்கள். இப்போது ஜனங்கள் மாறுபட்டு நடப்பது எனக்கு அவ்வளவு விநோதமாகத் தோன்றவில்லை. இப்படி ஜனங்கள் மாறுபடுவார்கள் என்று எத்தனையோ லட்சம் வருஷங்களுக்கு முன்னிருந்த நம்முடைய முன்னோர்கள் கண்டு புராணங்களில் எழுதினார்களே அதைப்போன்ற அற்புதமும் ஆச்சரியமும் வேறே இருக்கப் போகிறதா? இதற்கு முன் இரணியன், இரணியாகூடின், இராவணன் முதலிய எத்தனையோ துஷ்டர்கள் கடவுளுடைய ஆதிக்கத்தையே மறுத்து, தம்மையே கடவுளாக மதித்து மமதை பேயினால் பீடிக்கப்பட்டு உலகை ஆட்டி வைக்கவில்லையா? இந்த உலகம் தோன்றிய முதல், எத்தனையோ விதமான புதிய புதிய மதஸ்தர்களும் நாஸ்திகர்களும் தோன்றி ஜனங்களின் மனப்போக்கையும் நினைவுகளையும் கொள்கைகளையும் கலக்கி மாற்றவில்லையா? இப்படிப்பட்ட கோடாது கோடி மாறுதல்களும், நூதன சக்திகளும், நூதன கோட்பாடுகளும் உலகில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன; மனிதருடைய மனத்தை மாற்றிக் கொண்டே போகின்றன; அப்படி ஒவ்வொன்றும் கொஞ்ச காலம் இருந்து அழிந்து போகிறது. கடைசியில் மரத்திற்குள் ஆணி வைரம் உறுதியாக நிலைத்து நிற்பது போல கடவுளின் சனாதன தர்மம் என்றைக்கும் அழியாமல் நிலைத்து நின்று துல்லியமாகப் பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது. நம்முடைய தேசமோ எத்தனையோ கற்ப காலங்களையும், யுகங்களையும் கண்டு கணக்கு வைத்துக் கொண்டு வருகிற மகா அற்புதமான தேசம். வெள்ளைக்காரருடைய தேசத்தில் சுமார் 2500 ௵ த்திற்கு முன் என்ன இருந்தது என்பதே எவருக்கும் தெரியாது. இந்த 2500-௵ காலத்தில் பிறந்து இறந்த அரசர்களின் செய்கைகளையும், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை முதலிய துர்க்குணங்களாலும் மதவைராக்கியத் தாலும் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மடிந்த விவரங்களையும், அந்தத் தேசத்தில் சட்டங்களும் நீதி ஸ்தலங்களும் ஒவ்வொன்றாக விருத்தியாகிக் கொண்டே போன விவரங்களையும் எழுதி அதற்குத் தேச சரித்திரம் என்று பெயர் கொடுத்து வெள்ளைக்காரர் பெருமை பாராட்டி அதைப்போன்ற தேசசரித்திரம் நம்முடைய நாட்டில் இல்லை என்று சொல்லி நம்மை அநாகரிகமான மனிதர்கள் என்று சொல்லி இகழ்கிறார்கள். எத்தனையோ லட்சம் லட்சம் ஆண்டுகளாக இருந்து நாகரிகம் அடைந்து வந்திருக்கும் நம்முடைய தேசத்தில் இருந்து ஆண்டு வந்த அரசர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதைவிட, கடலின் நீர்த்துளிகளைக் கணக்கெடுத்து விடுவது சுலபம் என்று நினைக்கிறேன். அத்தனை அரசர்களின் செய்கைகளையும் சரித்திரங்களையும் புஸ்தகமாக எழுதினால், அவைகளை வைப்பதற்கு இந்த உலகத்தில் போதுமான இடம் இருக்குமா என்பதே சந்தேகம். அவைகளை ஒரு மனிதன் படித்து முடிப்பதென்றால், அவன் எத்தனை கோடி கற்பகாலம் ஜீவித்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. அந்தச் சரித்திரங்களை எல்லாம் படித்து மனிதர்கள் புதுமையான சங்கதி எதைத்தான் தெரிந்து கொள்ளப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை. எந்தத் தேசத்தின் சரித்திரத்தை எடுத்துக் கொண்டாலும் அது மண்ணாசை பெண்ணாசை, பொன்னாசை, மதப்போர் முதலிய விஷயங்களிலும், அவை சம்பந்தமான சச்சர்வுகளிலுமே போய் முடிகிறது. எத்தனை கதைகள் படித்தாலும், சரித்திரங்கள் படித்தாலும், புராணங்கள் படித்தாலும், எல்லாவற்றிற்குள்ளும் நிற்கும் சாராம்சம் ஒரே மாதிரியானது தானே. அதுவுமன்றி வெள்ளைக்காரர்கள் சுமார் 2000 வருஷங்களுக்கு முன்பு நாகரிகமற்ற காட்டு மனிதர்களாய் இருந்ததாக அவர்களுடைய சரித்திரங்களே சொல்லுகின்றன. அப்போது அவர்களிடம் ராஜாங்க நிர்வாக முறைகளும் சட்டங்களும் நீதி ஸ்தலங்களும் இருந்ததில்லை. அவைகள் படிப்படியாக வளர்ந்து தற்கால நிலைமையை எப்படி அடைந்ததென்ற விவரமெல்லாம் அவர்களுடைய தேச சரித்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அப்படிப்பட்ட அபிவிருத்தியைக் காட்டிய தேசசரித்திரம் நம்மிடம் இல்லையாம். அதனால் நாம் நாகரிகமற்றவர்களாம். இந்த மாதிரி ஒரு புஸ்தகம் சொல்லுகிறது. அவர்களுடைய தேசத்தில் சமீபகாலம் வரையில் ஒன்றும் இல்லாமல் இருந்து பிறகு எல்லாம் வளர்ந்து வந்திருப்பதால், அவர்களுடைய தேச சரித்திரத்தில் அந்த விவரம் இருப்பது சகஜமே. நம்முடைய தேசம் எத்தனையோ யுகங்களுக்கு முன்பே சகலமான துறைகளிலும் பரிபூர்ணமான நிலைமையை அடைந்து, அதற்குமேல் போக முடியாது என்ற ஓர் எல்லை முடிவை அடைந்து அது சர்வ சாதாரணமான பழைய சங்கதியாக இருந்து வருகிறது. சகலமான ராஜாங்க நீதிகளும், அரசன், பிரஜைகள், தகப்பன், தாய், பிள்ளை, சகோதரன், மருமகள் முதலிய ஒவ்வொரு வகுப்பினரும் எவ்வித தர்மத்தைக் கடைப்பிடித்து, மற்றவரிடம் எப்படி ஒழுக வேண்டும் என்ற சகலமான முறைகளும் நீதிகளும் பரிபக்குவ நிலைமை அடைந்து கற்கண்டுக் கட்டி போலத் திரட்டிவைக்கப்பட்டிருக்கின்றன. நம்முடைய இராமாயணம், பாரதம் ஆகிய இரண்டு பெரிய பண்டக சாலைகளில் புகுந்து பார்த்தால், மனிதர் தெரிந்து கொள்ளக் கூடிய சகலமான நீதிகளும் தர்மங்களும் அவற்றில் அடங்கி இருக்கின்றன. வேதாந்த விஷயமாகப் பார்க்க வேண்டுமானால் பகவத்கீதை என்ன, உபநிஷத்துகள் என்ன இவைகளில் கண்டுள்ள முடிவைவிட அதிகமாக மனிதர் எட்ட முடியாது. மனிதர் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள் அரசன் முதல் சகலமானவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் முதலியவைகள் இன்னின்னவை என்ற விஷயத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காண வேண்டுமானால், நம்முடைய திருவள்ளுவருடைய திருக்குறளுக்கு மிஞ்சிய நூல் இந்த உலகத்திலேயே இராதென்று சொல்ல வேண்டும். இன்னும் மற்றப்படி வான சாஸ்திரம், கவிகள், தர்க்கங்கள், மதவிஷயங்கள் முதலிய சகலமான துறைகளிலும் ஒப்பும் உயர்வும் அற்ற நூல்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டு ஆகாயத்தில் தனிச்சுடர் விட்டெரிந்து நிற்கும் சூரிய சந்திரர்கள் போல எக்காலத்திலும் அழியாமல் மணித்திரள்கள் போல இருந்து மங்காமல் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. அவைகளை எல்லாம் நம்மவர்கள் படிக்காமல் அலட்சியம் செய்து, மேல் நாட்டில் இருந்து வரும் குப்பைகளைப் படித்து அவற்றில் காட்டப்பட்டுள்ள போலி நாகரிகத்தைக் கண்டு மதிமயங்கி, தங்களுடைய குல ஆசாரம் மத ஆசாரங்களை அறவே விலக்கிவிட்டு இரண்டுங்கெட்ட மூடர்களாய் உழலுகிறார்களே என்பதுதான் என் மனசை வதைக்கிறது. மனிதனுக்கு இந்த உலகத்தில் பொருள் ஒன்றே பிரதானம் என்று சொல்ல முடியாது. ஒரு குறித்த மனிதனை எடுத்துக் கொண்டால், அவன் மற்ற சகலமான மனிதருக்கும் தான் சமம் என்று பாவித்து கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் சுயேச்சையாக நடக்க எண்ணுவது ஒருநாளும் சாத்தியமான காரியமல்ல. உலகத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தேதான் தீரும். வெள்ளைக்காரர்கள் புருஷன், பெண்ஜாதி, பிள்ளைகள் முதலிய எல்லோரும் சமமானவர்கள் என்ற கொள்கைளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பணம் உள்ளவன் பெரியவன்; அவனே பலிஷ்டன். அவனுக்கு மற்றவர் அடிமைகளாக நடக்க வேண்டும் என்ற கொள்கையை அவர்கள் அனுபவத்தில் கையாண்டு வருகிறார்கள். நம்முடைய நாட்டின் கொள்கை அதுவல்ல; பொருள் நிலைத்து நிற்பதல்ல. ஒரு மனிதன் தன்னுடைய ஆயிசு காலத்திற்குள் எத்தனையோ கோடி ரூபாய்களைச் சம்பாதித்து வைத்தாலும், அவன் கடைசிக் காலமடைந்து அவனை நடைத் திண்ணையில் தூக்கிப் போடுவதற்கு முன் அவனுடைய சொத்துகளை எல்லாம் அவனுடைய வார்சுதார்கள் பங்கு போட்டுக் கொள்ளுகிறார்கள். அவனுடைய தேகபலம் ஒடுங்குகிற வரையில்தான் பொருள் அவனுடையது என்று கருதப்படுகிறது. அவன் கடைசிக் காலம் அடைந்து பலவீனப்பட்டுப் போகும் காலத்தில் அவனுடைய பொருள் மற்றவருக்குச் சொந்தமாகிவிடுகிறது. ஆகையால், பொருள் மனிதனுடைய தேகத்தோடு சம்பந்தப்பட்டதே அன்றி, அவனுக்குள் இருக்கும் என்றைக்கும் அழியாத ஜீவாத்மாவுக்கும் அந்தப் பொருளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. மனிதருடைய உடம்பு எப்படி அற்ப காலத்தில் அழியும் தன்மை உடையதோ, அதுபோல, அதோடு சேர்ந்த பொருளும் விலகிப்போகும் தன்மை உடையது. மனிதன் என்றால் அது முக்கியமாக ஜீவாத்மாவைக் குறிக்குமே அன்றி, மூப்புப் பிணி சாக்காடு முதலியவற்றிற்கு இலக்கானதும், நீர்க்குமிழி போன்றதுமான உடம்பைக் குறிக்காது. ஆகையால் மனிதருக்குப் பொருள் பிரதானமல்ல. அவர்களுக்கு இன்றியமையாத தேக பாதைகளுக்கும் தேவைகளுக்கும் அற்ப பொருள் வேண்டும் என்பது அவசியமானாலும், உண்மையான தேவைக்கு மிஞ்சின அதிகப் பொருளைத் தேடுவதும், அதன் பொருட்டு மனிதர் தமது ஆயிசு காலத்தை வீணாக்குவதும் மதியீனமாய் இருப்பதோடு, பெருத்த நஷ்டமாகவும் முடிகிறது. உலகத்தில் உள்ள மனித கோடியை நாம் ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு மனிதருக்குள் இருக்கும் ஜீவாத்மாவும் படிப்படியாக முதிர்ச்சி அடைந்து பரிபக்குவ நிலைமையை நோக்கிக் கனிந்து கொண்டே போகிறது. கடவுளை நாம் நேரில் காணவே முடியாது. ஆனால் கடவுளின் தன்மையை அடைந்து கொண்டே போகும் ஜீவாத்மாக்களை நாம் மனித ரூபமாகக் கண்ணுக்கெதிரில் பர்ர்க்கிறோம். தகப்பன் என்றும் தாய் என்றும், பிள்ளை என்றும், அரசன் என்றும், பிரஜைகள் என்றும், குரு என்றும், சிவடியன் என்றும் ஜீவாத்மாக்கள் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டு, ஒன்றிடத்தொன்று பயின்று, ஒன்றுக்கொன்று துணையாயிருந்து, ஒவ்வொன்றும் சிறுகச் சிறுகப் பரிபக்குவ நிலைமையை அடைந்து கடவுளின் தன்மை பெற்று முடிவில் பரமாத்மாவோடு ஐக்கியப்படும் காலத்தை எதிர்நோக்கிச் செல்லுகிறது. எல்லா ஜீவாத்மாக்களும் ஒரே நிலைமையான பக்குவ நிலைமையில் இருக்கிறதென்று நாம் சொல்ல முடியாது. ஒன்று அபாரமான முதிர்ச்சி அடைந்ததாக இருக்கிறது. ஒன்று அக்ளுான நிலைமையில் இருக்கிறது. எல்லோரும் கல்விகற்றுக் கொண்டதனாலேயே எல்லோரும் சமமான முதிர்ச்சி அடைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. மனப்பக்குவம் அடைந்தவன் ஒருவனும் பெரிய பரீட்சையில் தேறுகிறான். பக்குவம் அடையாத ஒருவனும் அதே பரீட்சையில் தேறுகிறான். முன்னவன் நீதிநெறி வழுவாதவனாகவும் மனோதிடம் உடையவனாகவும் இருப்பான். பின்னவன் நாஸ்திகனாகவும் துன்மார்க்கங்களில் அஞ்சாது பிரவர்த்திப்பவனாகவும் நடத்தைத் தூய்மை அற்றவனாகவும் இருப்பான். ஆகையால் மனிதனுடைய ஜீவாத்மாவின் பிரம்ம ஞானத் தேர்ச்சிக்கும், மனிதன் இங்கிலாந்து தேசத்துச் சரித்திரத்தைக் குருட்டு நெட்டுருப் போட்டுப் பரீட்சையில் தேறுவதற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே கிடையாது. நம்முடைய தேசத்தவர் கடவுளை அடைவதற்குக் கடவுளுடைய துணையை அடிப்படையாக வைத்துக் கொண்டிருந்தாலும், முதிர்ச்சி அடையாத ஒரு ஜீவாத்மா தன்னோடுகூட இருக்கும் முதிர்ச்சி அடைந்த இன்னொரு ஜீவாத்மாவைப் பணிந்து அதன் துணையைக் கொண்டே வழி தெரிந்து முன்னுக்குச் சென்று முதிர்ச்சியடைய வேண்டும் என நிர்ணயித்திருக்கிறார்கள். ஒரு ஸ்திரீ ஒரு புருஷனை மணந்து கொண்டால், அந்த புருஷனுக்குள் இருக்கும் ஜீவாத்மா லிதிரீக்குள்ளிருக்கும் ஜீவாத்மாவைவிட அதிக முதிர்ச்சி அடைந்திருப்பதாகவே பொதுவாக நம்முடைய பெரியோர்கள் கருதி பெரியதை அடுத்துச் சிறியது முன்னேற்றம் அடைந்து உய்ய வேண்டும் என்ற சுலபமான வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுபோலவே, குருவுக்கு சிஷ்யர்களும், அரசனுக்குப் பிரஜைகளும், பெற்றோருக்குப் பிள்ளைகளும் அடங்கிப் பணிவாக நடக்க வேண்டும். இதுவே மனித தர்மம். இதனால் சாசுவதமான ஜீவாத்மா மறுமையில் முதிர்ச்சி அடைவது முக்கியமான நோக்கம். அதுவுமன்றி இகலோகத்தில் ராஜ்ய பாரத்திலும், குடும்பங்களிலும், ஒற்றுமை, இன்பம், க்ஷேமம், நல்லொழுக்கங்கள் முதலியயாவும் தாமாகவே பெருகும். இந்த சூட்சுமங்களை எல்லாம் நம்முடைய தேசத்து முன்னோர் எத்தனையோ யுகங்களுக்கு முன்பாகவே கண்டுபிடித்து அதற்குத் தகுந்தபடி தர்ம சாஸ்திரங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஸ்திரீகள் தம்முடைய புருஷர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அருமையான சூட்சுமங்களை எல்லாம் நம்முடைய முன்னோர்கள் அனுபவ பூர்வமாய்க் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றின்படியே நாம் நடக்க வேண்டுமேயன்றி, மேல்நாட்டுப் போலி நாகரிகங்களை எல்லாம் தாட்சணியம் பாராமல் குப்பையில் தள்ள வேண்டும். இப்போது மேல்நாட்டு நாகரிகம் நம்முடைய தேசத்தின் சனாதன தர்மங்களை எல்லாம் இன்னும் கொஞ்ச காலத்தில் கபளிகரம் செய்துவிடுமோ என்று நீங்கள் கொஞ்சமும் கவலைப்படவே வேண்டாம். இதற்கு முன் இருந்த நம்முடைய ரிஷிகளின் விதைகளும், மேதாவிகளின் விதைகளும், மற்ற மிருக பட்சி விருகூடிங்களின் விதைகளைப் போல சிரஞ்சீவியாகவே இருந்து கொண்டிருக்கின்றன. ஏதோ இரண்டொரு வருஷங்களில் ஒரு வயலில் விளையும் நெல், பூச்சி அரிப்பதனால் கெட்டுப் போகிறதில்லையா, அப்படி இருந்தாலும், உலகத்தில் உள்ள நெல் விதையின் இயற்கையான குணம் முழுதும் மாறியா போகிறது. இல்லை அல்லவா. அதுபோல நம்முடைய தேசத்து மனிதர்களுடைய பூர்வீக அறிவு முதிர்ச்சியும் பரிபக்குவ ஞானமும் மாறிப்போய் போலி மார்க்கங்களைப் பின்பற்றும் என்று நீங்கள் கனவிலும் நினைக்க வேண்டாம். தட்டானுடைய பட்டறையில் உருமாறிக் கெட்டுப்போய்ப் பலவிதமாகச் சிதறிப் போகும் தங்கத் துண்டுகள் எல்லாம் முடிவில் குகைக்குள் வைத்து உருக்கப்பட்டு எப்படி மணித்திரளாக மாறிப் பழைய பிரகாசத்தோடு புனர்ஜென்மம் எடுக்கிறதோ, அதுபோல காலமாகிய தட்டானுடைய பட்டறையில் சின்னாபின்னப்பட்டு சிதறிப்போகும் தர்மங்களும் கொள்கைகளும் மனிதருடைய அனுபோகமாகிய குகைக்குள் நுழைந்து நல்ல அறிவாகிய அக்னியால் உருக்கப்படுமானால், எவை உண்மையான வைகளோ, எவை நிரந்தரமானவைகளோ அவை பூரண தேஜஸோடு நிலைத்து நின்று பிரகாசிக்கும். அதைப் பற்றி கொஞ்சமும் சந்தேகமே இல்லை. பொருள் உள்ள பணக்காரர்களே பெரியவர்கள், பூசனைக்கு உரியவர்கள் என்பது அயல் நாட்டாரின் கொள்கை. நம்முடைய நாட்டாரின் கொள்கை சகலத்தையும் துறந்து ஆசாபாசங்களை அகற்றி, தமக்கென்று ஓர் அற்பப் பொருளையும் வைத்திராத துறவிகளையே நாம் பெரியவர்கள் என்றும், பூசனைக்கு உரியவர்கள் என்றும் மதித்து வணங்குகிறோம். நமக்கு மனிதர் ஒரு பொருட்டல்ல. அவருடைய ஜீவாத்மாவின் நடத்தைத் தூய்மையும், குணத் தூய்மையும் பரிபக்குவ நிலைமையுமே நமக்கு முக்கியமானவை. மனிதரை மனிதர் வணங்குவதை நாம் அவருக்குள்ளிருக்கும் தெய்வாம்சம் பொருந்திய ஜீவாத்மாக்களை வணங்குவதாகக் கருதுகிறோம் ஆதலால், அப்படி வணங்குவதை நாம் ஓர் இழிவாகக் கருதுகிறதில்லை. கீழ்ச்சாதியாரான நந்தனிடத்தில் பரிபக்குவ நிலைமை இருந்ததைக் கண்டு பிராம்மணர் அவருடைய காலில் விழுந்து உபதேசம் பெற்றுக் கொள்ளவில்லையா. அதுபோல நம்முடைய நாயன்மார்களிலும், ஆழ்வார் ஆசாரியர்களிலும், கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்களும், பரம ஏழைகளும் எத்தனைபேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நாம் அவர்களுடைய ஜாதி முதலியவற்றின் இழிவைக் கவனியாது தெய்வங்களாக எண்ணிப் பூஜிக்கவில்லையா. அப்படி நாம் செய்வது எதனால்? அவர்களுடைய ஜீவாத்மாக்களின் முதிர்ச்சியைக் கருதியே நாம் அவர்களை நமக்கு வழிகாட்டிகளாக மதித்து வணங்குகிறோம். அயல்நாட்டார் இப்போது நாளடைவில் இந்தக் கொள்கைகளை எல்லாம் சேர்த்துக் கொண்டு தம்முடைய மனப்பான்மையைத் திருத்திக் கொண்டு வருவதாகத்தான் தெரிகிறது. நம்முடைய தேசத்தை அவர்கள் மாற்றுகிறார்களா, அல்லது, அவர்களுடைய தேசம் மாறப்போகிறதா என்பது காலக்கிரமத்தில் நன்றாகத் தெரிந்து போகும். கடவுள் சிருஷ்டிக்கு எது பொருத்தமானதோ, அவருக்கு எது உகந்ததோ அது எப்படியும் நிலைத்து நிற்கும். எப்படிப்பட்ட மனிதர்களானாலும் அதை அழிக்க முடியாது. மனிதரை மனிதர் பணியாமல் ஒவ்வொருவரும் தன்னரசாய் எஜமானத்துவம் வகித்தால், அவர்களைப் பணிவதற்கே மனிதர் இல்லாமல் போய்விடுவது நிச்சயம். அப்படிப்பட்ட நிலைமை கடவுளுக்கு விருப்பமானதாக இருந்தால், அதுவே ஏற்படட்டும். அந்தக் காலம் நம்முடைய தலைமுறையில் உண்டாகாதென்பது நிச்சயம். அதுவரையில் நான் நம்முடைய பெரியோர்களுடைய கொள்கைப்படியே நடந்து காலத்தைத் தள்ளிவிடுகிறேன். இனி வரும் பெண்ஜாதிகள் புருஷரோடு சமதையாக வெளியில் உத்தியோகம் பார்க்கட்டும். வீட்டிற்கு வந்தவுடன் இரண்டு பேரும் சேர்ந்து சமையல் செய்து சாப்பிடட்டும். அவரவர் தம் தம் வேலையைத் தாமே செய்து கொள்ளட்டும். அப்போது வேலைக் காரியும் தான் எஜமானியாய் இருக்க வேண்டும் என்று பிரியப்படுவாள். ஆகையால், எல்லோரும் தனித்தனியாகப் பிரிந்திருந்து எல்லோரும் எஜமானர், எல்லோரும் தமக்குத் தாமே வேலைக்காரர் என்று காரியங்களை நடத்திக் கொள்ளட்டும்” என்றாள்.

அதைக் கேட்ட கண்ணப்பா நிரம்பவும் குதுகலமாகச் சிரித்து, “பலே! பலே! பேஷ்! நீ சொல்வதைப் பார்த்தால், இனிமேல் வரும் பெண்ஜாதிகள் ‘குழந்தை குட்டிகளைப் பெற்று வளர்க்கும்படியான சிரமம் எங்களுக்கு மாத்திரம் ஏன் இருக்க வேண்டும்? அதையும் ஆண்பிள்ளைகளே செய்து கொள்ளட்டும்’ என்று சொல்லி அந்த விஷயத்திலும் சமத்துவம் பாராட்டுவார்கள் என்று நீ சொல்வாய் போலிருக்கிறதே” என்றான்.

வடிவாம்பாள், “ஆம். வாஸ்தவம்தான். இனி புருஷர்கள் அதையும்தான் செய்ய வேண்டும். எல்லோரும் சமத்துவம் பாராட்டி ஒருவரை ஒருவர் அண்டாமல் இருக்கையில், ஸ்திரீகள் பிள்ளைப் பேறு முதலிய துன்பங்களில் அகப்பட்டுக் கொண்டு வீட்டில் படுத்திருந்தால், அந்தக் காலத்தில் மாத்திரம் அவர்களை ரஷிப்பதான இழிதொழிலை புருஷர் ஏற்றுக் கொள்ளுவார்களா? மானமுள்ள ஸ்திரீயாக இருந்தால், அவள் எந்தக் காலத்திலும் எந்த விஷயத்திலும் புருஷருடைய உதவியை நாடாமலேயே இருக்க வேண்டும் அல்லவா. நீங்கள் சொல்வதும் சரியான விஷயமே. அப்படித்தான் நடக்கும்” என்றாள்.

கண்ணப்பா வேடிக்கையாக நகைத்து, “இப்படிப் புருஷரும் ஸ்திரீயும் ஒத்துழையாக் கொள்கையை மேற்கொண்டு சமத்து வத்தை நாடினால், அதன் பிறகு பிள்ளை குட்டிகள் என்ற பேச்சே இல்லாமல் போய்விடுகிறது. அப்போது உலகமும் வெகு சீக்கிரத்தில் முடிவுக்கு வந்துவிடும் அல்லவா” என்றான்.

வடிவாம்பாள், “ஆம், அதற்குத் தடை என்ன” என்று கூறி மேலே ஏதோ பேச வாய் எடுக்கையில், “அம்மா! அம்மா ஒரு விபரீதச் சங்கதி வந்திருக்கிறது. சீக்கிரம் வாருங்கள்” என்று ஒரு குரல் உண்டாயிற்று. அந்த விபரீதக் குரலைக் கேட்ட கண்ணப்பாவும் வடிவாம்பாளும் திடுக்கிட்டு வேடனைக் கண்ட மான் போல மருண்டு விசிப்பலகையை விட்டுச் சடேரென்று கீழே இறங்கினார்கள். கீழ்க்கட்டில் பாத்திரங்கள் சுத்தி செய்து கொண்டிருந்த வேலைக்காரி மெத்தைப்படியில் நின்று அவ்வாறு கூக்குரல் செய்ததாக அவர்கள் உடனே உணர்ந்து கொண்டனர். கண்ணப்பா, “யார் அது? இப்படி வா? என்ன விபரீதச் சங்கதி வந்திருக்கிறது? சீக்கிரமாகச் சொல்” என்று பதைபதைப்பாக கேட்க, வேலைக்காரி உடனே மேலே ஏறிவந்து அவர்களுக்கு எதிரில் பணிவாக நின்று கொண்டு, “நான் குப்பையை வெளியில் கொண்டுபோய்க் கொட்டப் போனேன். ஜனங்கள் பிரமாதமாகப் பேசி ஆச்சரியப்பட்டுக் கொண்டு ஓடுகிறார்கள்” என்றாள்.

அதைக் கேட்ட கண்ணப்பா பெரிதும் திகைப்பும் வியப்பும் அடைந்து, “ஜனங்கள் எங்கே ஓடுகிறார்கள்? என்ன விசேஷம் நடந்ததாம்” என்றான்.

வேலைக்காரி, “நம்முடைய திகம்பர சாமியார் ஐயா இருக்கிறார்கள் அல்லவா. அவர்களின் மேல் நாலைந்து பாம்புகள் விழுந்து கடித்து விட்டு ஓடிப்போய் விட்டனவாம். அவர் ஸ்மரணை தப்பிப் போய் இறக்கும் நிலைமையில் இருக்கிறாராம். எல்லோரும் அலறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள் என்றாள்.

அந்தச் சொற்களைக் கேட்ட கண்ணப்பாவும் வடிவாம்பாளும் பிரமித்து ஸ்தம்பித்துத் துடிதுடித்துப் போயினர். தாங்கள் கேட்பது மெய்யோ பொய்யோ என்றும், ஒருவேளை அந்த வேலைக்காரிக்குப் பைத்தியம் பிடித்துப் போயிருக்குமோ என்றும் சந்தேகிக்கத் தொடங்கினரே அன்றி திகம்பர சாமியாருக்கு அத்தகைய பெருத்த அபாயம் நேர்ந்திருக்கலாம் என்ற எண்ணத்தையே கொள்ள மாட்டாதவராய்ப் பதைபதைத்துப் போயினர்.

மறுபடியும் கண்ணப்பா வேலைக்காரியைப் பார்த்து, “நீ சொல்வது நம்பத்தகாத விஷயமாக இருக்கிறதே. நம்முடைய சுவாமியாரை நாலைந்து பாம்புகள் கடித்து விட்டன என்கிறாய். அத்தனை பாம்புகளும் எங்கே கூடியிருந்தன? அவர் அந்த இடத்திற்கு எதற்காகப் போனார்? நாலைந்து நல்ல பாம்புகள் அவரைக் கடித்தால், அவர் அதே கூடிணத்தில் விழுந்து இறந்து போய்விடுவார். உடனே பாம்புகளும் ஓடிப்போய் விடும். அவர் தம்மைப் பாம்புகள் கடித்ததென்று எப்படி வெளியிட்டிருக்க முடியும்? ஜனங்கள் சொல்லும் விவரத்தையும் அவர்கள் அவருடைய ஜாகைக்கு ஒடுவதையும் கவனித்துப் பார்த்தால், அவருக்கு அந்த விபத்து அவருடைய பங்களாவிலேயே நேர்ந்திருக்க வேண்டும் என்றல்லவா நாம் நினைக்க வேண்டிருக்கிறது. அவருடைய பங்களாவில் அதிக அடைப்புகளாவது நெருக்கமான பூச்செடிகளாவது இல்லையே. அப்படி இருக்க, ஒரே காலத்தில் நாலைந்து பாம்புகள் அந்தப் பங்களாவுக்குள் எப்படி வந்திருக்கும்? ஒருவேளை அந்தப் பங்களாவில் ஏதாவது பாம்புப் புற்று இருந்து அதை அவர் வெட்டச் சொன்னால், அதற்குள் ஒன்றாகச் சேர்ந்திருந்த பாம்புகள் உடனே வெளிப்பட்டு அவரைக் கடித்திருக்கலாம் என்று நினைப்பதற்கு இடம் உண்டு. எனக்குத் தெரிந்த வரையில், அங்கே பாம்புப் புற்றே இல்லையே” என்றான்.

அதைக் கேட்ட வேலைக்காரி, “அந்த விவரம் எதையும் நான் கேட்கவில்லை. ஜனங்கள் ஓடுகிற அவசரத்தில், நான் கேட்டதற்குச் சரியான உத்தரமே சொல்லாமல் எல்லோரும் பறக்கிறார்கள். பாம்புகள் கடித்தது சாமியார் ஐயாவைத்தானா என்ற விஷயத்தை தெரிந்து கொண்டேன். பாம்புகள் கடித்த உடனே அவர் மயங்கிக் கீழே விழுந்துவிட்டாராம். பக்கத்தில் இருந்த ஜெவான் பாம்புகள் ஓடியதைக் கண்டும், அவருடைய உடம்பில் இருந்த பற்குறிகளைக் கொண்டும், அவைகள் அவரைக் கடித்துவிட்டன என்று தெரிந்து கொண்டு கூக்குரலிட்டானாம். அநேக மந்திரவாதிகளும், வைத்தியர்களும் வந்து கூடி வைத்தியம் முதலிய சிகிச்சைகள் செய்கிறார்களாம். ஆனால் அவர் பிழைக்க மாட்டாராம். இன்னம் கொஞ்ச நேரத்தில் பிராணன் போய்விடும் போலிருக்கிறதாம். மற்ற விபரம் எதுவும் தெரியவில்லை” என்றாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்கும் போதே வடிவாம்பாளின் கண்களில் இருந்து கண்ணீர் வெளிப்பட்டு இரண்டு கன்னங்களின் வழியாகத் தாரை தாரையாக வழிந்தோடத் தொடங்கியது. அங்கம் பதறியது; அவள் பைத்தியம் கொண்டவளைப் போல மாறித் தனது கைகளைப் பிசைந்து கொண்டு, “ஐயோ! தெய்வமே அப்படிப்பட்ட மகானுக்கு இவ்விதமான முடிவை ஏற்படுத்த உன் திருவுள்ளம் இடம் கொடுத்ததா? ஆகா! இதுவும் உன் சோதனையா?” என்று கூறிப் பிரலாபித்துக் கலங்கி அழத் தொடங்கினாள்.

உடனே கண்ணப்பா, “வடிவூ! நாம் இனியும் தாமதித்து இங்கே ஒரு நிமிஷங்கூட இருப்பது தவறு; வா, போகலாம். நாம் வண்டிக்காகக் காத்துக் கொண்டிருப்பதற்குள், காரியம் விபரீதத்துக்கு வந்துவிடும். நாம் இருவரும் நடந்தே அவருடைய ஜாகைக்குப் போவோம்” என்று கூறிவிட்டு வேலைக்காரியைப் பார்த்து, “நீ வாசற்கதவைப் பூட்டிக் கொண்டுபோய், நம்முடைய ஆள்களில் யாரையாவது ஒருவனை உடனே பூவனூருக்குத் துரத்தி அப்பாவுக்கும் அம்மாளுக்கும் இந்தச் சங்கதியைச் சொல்லும்படி செய்துவிட்டு, இங்கே வந்து இரு. அவர்கள் அதற்குள் திரும்பி வந்துவிட்டால், அவர்களுக்கு இந்தச் சங்கதியைச் சொல்லி, உடனே அவர்களை சுவாமியாருடைய பங்களாவுக்கு அனுப்பு” என்று கூறியவுடன் வடிவாம்பாளை அழைத்துக் கொண்டு விரைவாக வீட்டைவிட்டு வெளிப்பட்டு திகம்பர சாமியாருடைய ஜாகையை நோக்கி ஒட்டமும் நடையு மாய்ச் செல்லலானான்.

★ ★ ★