உள்ளடக்கத்துக்குச் செல்

மாய வினோதப் பரதேசி 1/3-வது அதிகாரம்

விக்கிமூலம் இலிருந்து

3-வது அதிகாரம்
போலீஸ்புலி- நொண்டிதுரை-இடும்பன்
சேர்வைகாரன்

க்கீல் சட்டைநாத பிள்ளை தண்டனை அடைந்து சிறைச் சாலைக்குச் சென்ற காலத்தில் அவருக்கு ஏராளமான சொத்துகள் இருந்தன. கும்பகோணத்திற்குப் பக்கத்தில் உள்ள திருநாகேசு வரம் என்ற ஊரில் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ளதும், மூன்று போகம் விளைவுள்ளதுமான நன்செய் நிலம் இருந்தது. அதை அவர் குத்தகைக்கு விட்டிருந்தார். அது நிற்க, அவர் ரொக்கமாக ஐந்து லட்சம் ரூபாய் சில பெரிய ஜெமீந்தார்களிடம் வட்டிக்குக் கொடுத்திருந்தார். கும்பகோணத்தில் அவர் வசித்து வந்த பெரிய மாளிகையைத் தவிர, இன்னும் மூன்று மச்சு வீடுகள் இருந்தன.

இவைகள் நிற்க, அவரது கைவசத்தில் நகைகளாகவும், தட்டுமுட்டு சாமான்களாகவும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமானம் உடைய பொருட்கள் அவரது சொந்த மாளிகையில் இருந்தன. கடைசியாக மன்னார்குடி முதல் வகுப்பு மாஜிஸ்டிரேட்டு அவரையும் மற்றவர்களையும் தண்டித்து சிறைச்சாலைக்கு அனுப்பிய பின், அவர் ஒரு பிரபல வக்கீலை நியமித்து தமக்காகவும் மற்றவருக்காகவும் மேல் நியாயஸ்தலங்களில் அப்பீல் செய்தார். அவ்விடங்களிலும் அவருக்குப் பிரதிகூலமே ஏற்பட்டது. அவர் உடனே நீதிபதிக்கு ஒரு விண்ணப்பம் செய்து கொண்டார். தமது ஜாகையில் உள்ள சகலமான சொத்துக் களையும் அப்படியே வைத்து வெளிக்கதவைப் பூட்டி முத்திரை போட்டு வாசலில் ஒரு ஜெவானைக் காவல் போட்டு வைக்க வேண்டும் என்றும், அந்த ஜெவானுக்குரிய சம்பளம் முதலிய செலவுகளைத் தாமே கொடுப்பதாகவும், தமது தம்பியான மாசிலா மணி அவனுக்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு வருஷ தண்டனைக்காலம் முடிந்த பின் சிறைச்சாலையில் இருந்து வெளிப்பட்டு வந்தவுடன் அந்தச் சொத்துக்களை எல்லாம் அவனிடம் ஒப்புவித்துவிட வேண்டும் என்றும், அந்த விண்ணப்பத்தில் கண்டிருந்தார். அதுவும் அன்றி, மாசிலாமணி வெளியில் வந்த காலத்தில், தமது நிலங்களில் இருந்து வர வேண்டிய நெல் முதலிய தானியங்களையும், கடன் காரர்களிடத்தில் இருந்து வரவேண்டிய வட்டித் தொகை களையும், வீட்டு வாடகைகளையும் மாசிலாமணியே வசூலித்துத் தனது பிரியப்.டி. ஆண்டு அனுபவித்துக் கொள்ளலாம் என்று ஓர் அதிகாரப் பத்திரம் எழுதி, சப் ரிஜிஸ்டிராருக்கு அதிகமான கட்டணம் கட்டி, அவரைச் சிறைச்சாலைக்கே வரவழைத்து, அந்த தஸ்தாவேஜை ரிஜிஸ்டர் செய்து அதை மாசிலாமணியிடம் கொடுத்தனுப்பி வைத்தார்.

ஆகவே, மாசிலாமணி சிறைச்சாலையை விட்டுத் திரும்பித் தனது சொந்த ஊராகிய கும்பகோணத்திற்கு வந்தவுடனே, அந்த ஊர்ப் பெரிய தெருவிலிருந்த அவனது பெருத்த மாளிகையும் அதற்குள் இருந்த சகலமான பொருட்களும் அப்படியே அவனிடம் ஒப்புவிக்கப்பட்டன. ஒரு வருஷ காலமாக வசூலிக்கப் படாமல் பாக்கி நின்ற குத்தகைத் தானியங்கள், வட்டிப் பணம், வாடகைப் பணம் முதலிய யாவும் ஒரே மொத்தமாக அவனிடம் வந்து சேர்ந்தன. அவன் சகலமான செல்வங்களுக்கும் அதிபதி ஆகையினால் எல்லாக் காரியங்களையும் சுயேச்சையாக நடத்திக் கொண்டு வந்தான். அவன் தண்டனை அடைந்ததற்கு முன் உல்லாச புருஷனாய் நினைத்த இடத்திற்குப் போய்த் தலைகால் தெரியாது பணச் செலவு செய்து சந்தோஷமாகப் பொழுதைப் போக்கி வந்தது போல இப்போது நடந்து கொள்ளாமல் புது மனிதனாக மாறிப்போனவன் போலத் தோன்றினான். எவ்வளவோ மானமாகவும் பெருமையாகவும் கண்ணியமாகவும் இருந்து, எல்லோரது வணக்கத்தையும் மரியாதையையும் பெற்று வந்த தங்களுக்கு என்றைக்கும் மாறாத பெருத்த மானபங்கமும், பழிப்பும் ஏற்பட்டு விட்டதே என்ற ஆராத்துயரமாகிய பெருத்த சுமை அவனது மனதில் சதாகாலமும் ஒரு பெருத்த மலை போல அழுத்திக் கொண்டிருந்தது என்பதை அவனது குன்றிய முகத்தோற்றமே எளிதில் புலப்படுத்தியது. அவன் சிறைச் சாலைக்குள் இருந்த காலத்தில் அந்த அவமானத்தையும் இழிவையும் அவ்வளவாக உணரவில்லை. அவ்விடத்தை விட்டுத் தனது சொந்த ஊர்ச் சனங்களின் இடையில் வந்த பிறகே, அவன் தனது சிறுமையையும் மானக்கேட்டையும் நன்றாக உணர்ந்தான். அவன் பகற்பொழுதில் தனது மாளிகையை விட்டு வெளியில் வராமல் உள்ளேயே இருந்தான். திரும்பிவந்த பிறகு சுமார் ஒரு மாத காலம் வரையில் அவன் தனது சொந்த வேலைக்காரர்களினது முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கும் வெட்கினான். அவ்வாறு இரண்டு மாத காலம் கழிந்தது. அந்தக் காலத்தில் அவன் எப்போதும் ஏகாந்தமாகவே இருந்திருந்து தனது நெஞ்சோடு சதாகாலமும் சம்பாஷணை புரிந்து வந்தான் ஆகையால், அவன் தங்களது பழைய பெருமையையும் உன்னத நிலைமையையும் இப்போதைய பாழடைந்து மழுங்கிப் போன நிலைமையையும் ஒத்திட்டுப் பார்க்கப் பார்க்க, அவனது விசனமும் வேதனையும் மலை போலப் பெருகிக் கொண்டே போயின. தங்களுக்கு அத்தகைய மீளாத பெருத்த தீங்கையும் மானக்கேட்டையும் இழைத்தவர்களான திகம்பரசாமியார் முதலிய தங்களது பகைவர்களுக் கெல்லாம் தான் ஒன்றுக்குப் பத்தான பெரும் பொல்லாங் கிழைத்துப் பழி தீர்த்து எல்லோரையும் வேறுத்து விட்டுத்தான், மறுவேலை பார்ப்பது என்ற உறுதி அவனது மனதில் தோன்றித் தோன்றி நொடிக்கு நொடி உறுதிப்பட்டு பலத்து வந்தது. அவன் ஒரு மாதகாலம் வரையில் இரவு பகல் ஆழ்ந்து யோசனை செய்து செய்து தான் இன்னவிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டான். திகம்பரசாமியார் நிரம்பவும் தந்திரம் வாய்ந்த சௌரியவான் ஆதலால், அவரிடம் தான் முன் போல அலட்சியமாக நடந்து கொள்ளாமல், அவரைவிட அதிகத் தந்திர மாகவும் கபடமாகவும் ரகசியமாகவும் சகலமான விஷயங் களையும் நிறைவேற்ற வேண்டும் என்று அவன் தீர்மானித்துக் கொண்டான். திகம்பரசாமியாரானாலும், அல்லது, அவரைவிடப் பதினாயிரம் மடங்கு சிரேஷ்டமான யூகமும் சாமர்த்தியமும் வாய்ந்த அதிமேதாவியானாலும் எவ்வளவு முயன்றாலும், தனது ரகசியம் எதையும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்க வேண்டும் என்ற அபாரமான கருத்தோடும் ஆழ்ந்த யோசனையோடும் அவன் தனது ஏற்பாடுகளை அதியந்தரங்கமாகச் செய்து வந்தான். ஒரு மனிதன் தண்டனை அடைந்து சிறைச்சாலையில் இருந்து விடுபட்டு வந்தால், அவனைப் பற்றிய விவரம் முழுதும் உடனே போலீசாருக்கு வந்துவிடும். ஆதலால், அவர்கள் அவனை அடிக்கடி பார்த்தும், அவனது நடவடிக்கைகளைக் கவனித்தும் வருவது வழக்கம். அதுபோல, கும்பகோணம் போலீசார், பெரிய மனிதனாகிய மாசிலாமணியிடம் அடிக்கடி பணம் கறப்பதற்கு நல்ல சந்தர்ப்பம் வாய்த்ததென்று நினைத்து ஒவ்வொரு நாளும் அவனது வீட்டிற்கு வந்து அவனை ஆஜர் பார்த்துவிட்டுத் தமது வாய்மூட்டுகளைப் பெற்றுக்கொண்டு போயினர். அவர்கள் அவ்வாறு அடிக்கடி வந்து பார்த்து, தான் நல்ல நடத்தையோடு இருப்பதாக எழுதிக்கொண்டு போனதை அவன் ஒரு நன்மையாக மதித்து, பிறர் சந்தேகிக்காதபடி உள்ளுற பற்பல ஆழ்ந்த சதி ஆலோசனைகளையும் முஸ்தீபுகளையும் செய்து வந்தான். தனக்கு உதவிக்குத் தேவையான சாமர்த்தியசாலியான பல மனிதர்களின் சிநேகத்தையும் அவன் சம்பாதித்துக் கொண்டான். அவன் வசித்து வந்த மூன்று கட்டுகள் உடைய பெருத்த மாளிகையின் மேல் பாகத்தில் அழகான இரண்டு உப்பரிகைகள் அமைத்ததன்றி அதில் வேறு பல மாறுதல்களையும் அமைத்தான். அந்த மாளிகையின் பின்புறத்தில் இருந்த தோட்டத்தின் வழியாகப் பின்புறத் தெருவில் இருந்த அவர்களது இன்னொரு வீட்டுக்குப் போகும் பாதையை அடைத்து குறுக்கில் ஒரு பெரிய மதில் எழுப்பி இப்புறத்தில் இருந்து அப்புறமும் அப்புறத்தில் இருந்து இப்புறமும் மனிதர் போக வழியில்லாதபடி தடுத்ததும் அன்றி, அப்புறத்தில் இருந்த வீட்டில் யாரோ ஒரு குடும்பத்தாரைக் குடி வைத்தான். அவன் அத்தனை மாறுபாடுகளையும், ஏற்பாடு களையும் செய்து முடிப்பதற்கு சுமார் பதினொரு மாதகால மாயிற்று. அவன் பகற் பொழுதில் வெளியில் போகாமல் இருந்த தன்றி இரவிலும் உள்ளே இருந்தபடியே இதர மனிதர்களின் உதவியைக் கொண்டு தனது விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு வந்தான். போலீஸ் ஜெவான்கள் தினந்தினம் பகற்பொழுதிலும் இராக் காலத்திலும் வந்து வந்து அவனை ஆஜர் பார்த்து, அவனோடு சந்தோஷமாகப் பேசிச் சிறிது நேரம் இருந்துவிட்டுச் சென்றனர், அவன் அவர்களது நட்டம் உதவியும் தனக்கு எப்போதும் தேவையாக இருக்கும் என்ற கபட எண்ணத்தோடு, அவர்களிடம் நிரம்பவும் பிரியமாகவும், நட்பாகவும் நடந்து அடிக்கடி ஏராளமான சன்மானங்களை அள்ளிக் கொடுத்து! அவர்களுடைய பரஸ்பர பிரியத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்து வந்தான், அவ்வாறிருந்த காலத்தில் ஒரு நாள் பகல் சுமார் 1-மணி சமயத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாவையங்கார் ஆயுத பாணிகளான ஆறு ஜெவான்கள் தொடர வந்து, சட்டைநாத பிள்ளையினது மாளிகையின் வாசற் கதவை இடிக்க, உடனே வேலைக்காரன் கதவைத் திறந்தான்.

இன்ஸ்பெக்டர் வேலைக்காரனைப் பார்த்து "அடேய்! உள்ளே மாசிலாமணிப் பிள்ளை இருக்கிறாரா?" என்று அதிகாரத்தோடு கேட்க வேலைக்காரன், "இருக்கிறார்; இப்போதுதான் சாப்பிட்டு கூடத்தில் சோபாவின் மேல் உட்கார்ந்து தாம்பூலம் போட்டுக் கொண்டிருக்கிறார்" என்றான்.

அதைக் கேட்ட அண்ணாவையங்கார் அதற்கு மேல் வேலைக் காரனோடு வார்த்தையாடாமல், வாசலில் உருவிய கத்தியோடு இரண்டு ஜெவான்களை நிறுத்திவிட்டு, இரட்டைக்குழாய்த் துப்பாக்கி பிடித்த நான்கு ஜெவான்களைத் தம்மோடு கூட அழைத்துக் கொண்டு தடதடவென்று உள்ளே நுழைந்தார். நுழைந்தவர் கூடத்தை அடைந்து, அவ்விடத்தில் வேலைக்காரன் கூறியது போல மாசிலாமணி வெற்றிலை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்ததைக் கண்டு அவனிடம் நெருங்கினார். நெருங்கிய போது, அவர் பின்னால் திரும்பி, "அடேய்! இரண்டு பேர் பின் பக்கம் போய், வாசற்படியண்டை ஜாக்கிரதையாக நில்லுங்கள். நான் மறுபடி கூப்பிடும் போது வரலாம். இரண்டு பேர் என்னோடு கூடவே இருங்கள்" என்று கூறிய வண்ணம் மாசிலாமணியிடம் நெருங்கினார். அவரது உத்தரவின்படி இரண்டு ஜெவான்கள் உடனே விரைவாக நடந்து மூன்றாவது கட்டின் கடைசி வாசலுக்குப் போய் அவ்விடத்தில் பாராக்கொடுத்து நின்றனர்.

இன்ஸ்பெக்டரும் ஜெவான்களும் திடீரென்று தமக்கருகில் வந்ததைக் கண்டு திடுக்கிட்டுக் குழப்பமடைந்தவன் போலத் தோன்றிய மாசிலாமணி உடனே ஒருவாறு சமாளித்துக் கொண்டு தனது முகத்தில் புன்னகையை உண்டாக்கிக் கொண்டு சரேலென்று எழுந்து வணக்கமாகக் கைகுவித்து நின்று நிரம்பவும் மரியாதையாகப் பேசத் தொடங்கி, "சுவாமிகளே! நமஸ்காரம், வரவேண்டும்; வரவேண்டும். இந்த சோபாவின் மேல் தயவு செய்யுங்கள்" என்று அன்பாகக் கூறி இன்ஸ்பெக்டரை உபசரித்து வரவேற்க, அவர் மாசிலாமணியின் உபசரணைகளைச் சிறிதும் பொருட்படுத்தாதவராய், "என்ன மாசிலாமணிப் பிள்ளை! என்ன விசேஷம்? எல்லாம் சௌக்கியந்தானே?" என்று கேட்டு அவனது முகமாறுதலை உற்றுக்கவனித்த வண்ணம் அவனுக்கு முன்னால் கிடந்த ஒரு நாற்காலியின் மேல் உட்கார்ந்து கொண்டார். துப்பாக்கி களோடு வந்த மிகுதியான இரண்டு ஜெவான்களும் மாசிலாமணியின் பின்னால் இரண்டு பக்கங்களிலும் போய் வளைத்துக் கொண்டனர். அதற்கு முன் ஒவ்வொரு நாளும் வந்து தனது தோழர்கள் போலத் தன்னோடு நெடுநேரம் இருந்து வேடிக்கையாகப் பேசிவிட்டுப் போய்க் கொண்டிருந்த ஜெவான்கள் அப்போது இன்ஸ்பெக்டருக்கெதிரில், முற்றிலும் முகமறியாத அன்னியரைப் போல நடந்து, சமயம் வாய்த்தால், துப்பாக்கியைத் தன்மீது உபயோகிக்கவும் தயாராக இருப்பவர் போல் பயங்கரமான தோற்றத்தோடு தனக்கருகில் வந்து நின்றதைக் கண்ட மாசிலாமணி, போலீஸாரின் நட்பு சிறிதும் நம்பத்தகாதது என்று தனக்குள் எண்ணிக்கொண்டான். ஒருகால் அவர்கள் தன்னைப்பிடித்து சிறைப்படுத்த வந்திருப்பார்களோ என்ற திகில் அவனது மனதில் உதித்துக் கலக்கியது ஆனாலும், அவன் மிகுந்த மனோதிடத்தோடும் குவித்த கையோடும் நின்று இன்ஸ்பெக்டரை நோக்கி, அவர் கடைசியாகக் கேட்ட (கேள்விக்கு நயமாக மறுமொழி கூறத் தொடங்கி, "எல்லாம் தங்கள் தயவினால் சௌக்கியந்தான். எஜமானே! நான் என்ன விசேஷத்தைச் சொல்லப் போகிறேன்! எங்களுக்கு நேரிட்ட பெருத்த அவமானத்துக்குப் பிறகு, நான் வீட்டை விட்டு வெளியில் போகிறதையே விட்டு விட்டேனே! இதோ இந்த ஜெவான்கள் எல்லோரும் தினந்தினம் இராத்திரி பகல் வந்து என்னைப் பார்த்துக் கொண்டு போகிறார்களே! நான் சிவனே என்று பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது இவர் களுக்கெல்லாம் தெரிந்த விஷயந்தானே! நான் சமாசாரப் பத்திரிகைகளைக்கூட பிரித்துப் பார்க்காமல் வந்தபடியே போட்டிருக்கிறேன். தாங்கள் ஏது இந்த வெய்யிலில் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்டு இந்த ஏழையின் குடிசைக்கு விஜயம் செய்தது?" என்று நிரம்பவும் விநயமாகப் பேசினான்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் புரளியாகப் புன்னகை செய்து கண்சிமிட்டி மாசிலாமணியின் முகத்தை முன்னிலும் அதிக கூர்மையாக உற்று நோக்கியபடி, "என்ன மாசிலாமணிப் பிள்ளை! ரகசியத்தை உம்முடைய முகமே நன்றாக வெளியிடுகிறதே! அப்படி இருக்க, ஒன்றையும் அறியாதவரைப் போல இப்படி மறைத்து மறைத்துப் பேசுகிறீரே! நான் எப்போதும் உங்கள் குடும்பத்துக்கு அனுகூலமாக இருந்து வந்தவன். உமக்குக் கலியாணம் நடத்த ஏற்பாடு செய்திருந்த காலத்தில் உம்முடைய எதிரிகள் வந்து என் மனசை எவ்வளவோ கலைக்க முயன்றார்கள். அதற்கெல்லாம் நான் கொஞ்சம்கூட அசையவில்லை. கடைசி வரையில் நான் உங்கள் பக்கத்திலேயே உறுதியாக இருந்து, உங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்று படாத பாடெல்லாம் பட்டேன். கடைசியில் உம்முடைய தமையனாரே வந்து, அந்தப் பெண்ணின் விஷயத்தில் இனி யாதொரு நடவடிக்கையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதன் பிறகு தான் நான் பேசாமல் இருந்தேன். உங்கள் தமையனாருக்கும் உமக்கும் ஏதோ கால வித்தியாசத்தினால் சிறைவாசம் ஏற்பட்டதென்ற எண்ணத்தையே நான் இதுவரையில் கொண்டு உங்கள் விஷயத்தில் பட்சம் மறவாமல் இருந்து வந்திருக்கிறேன். அதுவுமன்றி உம்மிடம் கடுமை காட்டாமல் நிரம்பவும் மரியாதையாகவே நடந்து கொள்ளும்படி இந்த ஜெவான்களுக்கெல்லாம் நான் கண்டிப்பான உ..த்தரவு பிறப்பித்திருக்கிறேன். ஆகையால் என்னை நீர் விரோதி என்றாவது, போலீஸ் இலாகாவைச் சேர்ந்த ஓர் உத்தியோகஸ்தர் என்றாவது எண்ணிக் கொள்ளாமல், எப்போதும் உமக்கு நன்மை செய்யக் கூடிய அந்தரங்க சிநேகிதர் என்று நினைத்துக் கொள்ளும். இப்போதும் உமக்கு யாதொரு கெடுதலும் வராமல் பார்த்துக் கொள்ளுகிறேன். நடந்ததை நடந்தபடி என்னிடம் சொல்லிவிடும், மற்ற விஷயங்களை நான் பக்குவப்படுத்திக் கொள்ளுகிறேன்" என்றார்.

மாசிலாமணி முன்னிலும் அதிக வியப்புற்றவன் போலத் தோன்றி, "எஜமான் பேசுவது எனக்கு நன்றாக விளங்க வில்லையே! தாங்கள் பேசுவதைப் பார்த்தால், ஏதோ விஷயம் நடந்திருப்பதாகத் தோன்றுகிறது! நான் வீட்டுக்கு வந்த இந்தப் பதினோரு மாத காலமாய் நான் எந்தச் சங்கதியையும் காதில் போட்டுக் கொள்ளாமல் உலகத்தையே வெறுத்த பரதேசி போல இருந்து வருகிறேன். வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்பதே எனக்குக் கொஞ்சமும் தெரியாது. ஏதாவது புதுமையான சங்கதி நடந்திருந்தால், அதைத் தாங்கள் சொல்லத்தான், நான் தெரிந்து கொள்ள வேண்டும். தாங்களும், இந்த ஊரில் உள்ள எல்லாப் போலீஸ் உத்தியோகஸ்தர்களும் எங்களிடம் எப்போதும் மாறாத அபிமானமும் மதிப்பும் உடையவர்கள் என்பது பிரசித்தியான விஷயம். அதை நானே சொன்னால் முகஸ்துதி செய்கிறேன் என்று எஜமான் நினைத்துக் கொள்ளப் போகிறீர்களே என்ற எண்ணத்தினால், நான் அந்தப் பிரஸ்தாபத்தை எடுக்க அஞ்சினேன். அதுவுமன்றி தாங்கள் இப்போது பலமான பந்தோபஸ்தோடு வந்திருப்பதைப் பார்த்து, "நாம் எவ்விதக் குற்றமும் செய்யவில்லையே.! இவர்கள் இவ்வாறு பிரயாசை எடுத்துக் கொள்ள வேண்டிய காரணம் என்ன?" என்ற ஒருவித மலைப்பு என் மனதில் ஏற்பட்டது! ஆகையால் இந்தச் சமயத்தில் நான் தங்களிடம் உரிமை பாராட்டுவது ஒழுங்கான காரியமல்ல என்ற எண்ணமும் உண்டாயிற்று. என் வீட்டில் உள்ள வேலைக்காரர் யாராகிலும் ஏதாவது திருட்டு முதலிய குற்றத்தைச் செய்து விட்டார்களா? அப்படி இருந்தால் சொல்லுங்கள்; நான் உடனே அந்த ஆளைப் பிடித்து ஒப்புவிக்கிறேன், ஏதாவது திருட்டுச் சொத்தை அவர்கள் ஒருவேளை இங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறார்களா? அதற்காகத் தாங்கள் சோதனை போட வந்தீர்களா? விஷயம் எதுவாக இருந்தாலும், தாங்கள் வெளியிடலாம்" என்று நிரம்பவும் விநயமாகக் கூறினான்.

இன்ஸ்பெக்டர் வேடிக்கையாக நகைத்து, "மாசிலாமணிப் பிள்ளை! இவ்வளவு சாதுரியமாகப் பேச எப்போது கற்றுக் கொண்டீர்? ஜெயிலில் இருந்த போது கற்றுக்கொண்டீரா? அல்லது, அவ்விடத்தை விட்டு வந்த பிற்பாடு கற்றுக் கொண்டீரா? அப்படிக் கற்றுக்கொண்டவர். அதை முதலில் மற்றவர்களிடம் உபயோகிக்காமல், எங்களிடமே உபயோகிக் கிறீரே! அது தான் சந்தோஷமாக இருக்கிறது. இது எப்படி இருக்கிறதென்றால், கொல்லன் உலையில் ஊசி விற்பது போல் இருக்கிறது. நேற்றுப் பிறந்த குழந்தைப் பிள்ளையான நீர் எனக்குக் காது குத்துகிறீரே! நான் இந்தப் போலீஸ் இலாகாவில் 9 ரூபாய் சம்பளமுள்ள ஜெவான் வேலையிலிருந்து 250 ரூபாய் சம்பளமுள்ள பெரிய இன்ஸ்பெக்டர் வரையில் வந்திருக்கிறேன். இதற்குள் எத்தனையோ மனிதர்களுடைய தந்திரங்களும் புத்தி சாதுர்யங்களும் என்னிடம் வந்து அற்றுப் போயிருக்கின்றன. அத்தனை பெயரையும் நான் ஒரு வாழைப்பழத்தை விழுங்குவது போல அபக்கென்று ஒரு நிமிஷத்தில் வாயில் போட்டுக் கொண்டு விட்டேன். ஆகையால் நீர் என்னிடம் குள்ளநரியின் வேலையைக் காட்டினால் தப்ப முடியாது. நல்ல மாதிரியாய் ஒழுங்கான வழியில் வந்தால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும்படி ஏதாவது என்னால் ஆன சகாயம் செய்வேன். மறுபடியும் உமக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுக்கிறேன். நீர் நன்றாக யோசனை செய்து நிஜ சங்கதி எதையும் மறைக்காமல் என்னிடம் சொல்லிவிடும். நீரும் நானும் தனியாக இருந்து பேச வேண்டும் என்ற பிரியம் ஒரு வேளை உமக்கிருந்தால், அதன்படியும் நான் நடக்கத் தடையில்லை. பேசுவதை, அவசரப்படாமல் நிதானமாகவும் ஐந்திரண்டுக்குப் பழுதில்லாமலும், பேசுவது எப்போதும் நலமானது. முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைத்துப் பேசுவதில், யாதொரு பிரயோசனமும் ஏற்படப் போகிறதில்லை. அதை மூடன் கூ... ஒப்புக்கொள்ள மாட்டான்" என்றார். மாசிலாமணி முன்னிலும் டன் மடங்கு அதிகரித்த வியப்பும் பிரமிப்பும் தோற்றுவித்து இன்ஸ்பெக்டரை நோக்கிக் கைகூப்பிப் பணிந்தவனாய், "எஜமான் என்னைப் பார்த்து இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்வது என்னுடைய கால வித்தியாசத்தின் பலன் என்றே நினைக்கிறேன். ஏதோ சங்கதி நடந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு ஒன்றையும் அறியாதவன் போல் தங்களிடம் நான் பாசாங்கு செய்து தங்களை ஏய்க்கிறதாகத் தாங்கள் அபிப்பிராயப்படுகிறீர்கள் போல் இருக்கிறது. நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் மனப்பூர்வமாகச் சொல்லப் பட்ட உண்மையான வார்த்தைகளே அன்றி, கொஞ்சமும் வித்தியாசமே கிடையாது. நான் ஜெயிலுக்குப் போகிறதற்கு முன்பாவது என் மனசில் ஒருவித இறுமாப்பும், தான் என்ற ஆணவமும், பணத்திமிரும், நாம் அதிக புத்திசாலி ஆகையால் மற்றவர்களை ஏமாற்றி விடலாம் என்ற ஒருவித அசட்டுத் துணிவும் இருந்தன. ஜெயிலில் ஒரு வருஷகாலம் இருந்து வந்த பிறகு அந்தத் துர்க்குணங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. உலகத்தில் ஒவ்வோர் அம்சத்திலும் நம்மைவிட மேலான மகாதுபாவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்ற அச்சமும், நாம் சற்குணத்தோடு நேரான வழியில் நடக்கிறதற்கு மிஞ்சின மனோபலமும், ஜெயமும் வேறு எதிலும் உண்டாகா என்ற உறுதியான அபிப்பிராயமும் என் மனதில் பலமாக ஊன்றி நின்றுவிட்டன. அதற்கிணங்கவே நான் இப்போது நடந்து வருகிறேன். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறதோ என்றும், எந்த மனிதரிடத்தில் எப்படிப்பட்ட சிரேஷ்டமான யோக்கிய தாம்சம் நிறைந்திருக்கிறதோ என்றும் அஞ்சி என் சிறுமையை உணர்ந்தே நான் இப்போது அற்ப மனிதரிடத்தில் கூட நிரம்பவும் ஜாக்கிரதையாக நடந்து கொண்டு வருகிறேன். நான் தங்களிடத்தில் வித்தியாசமாக நடந்து கொள்வேனோ? தங்களை நான் இன்று நேற்றா பார்க்கிறேன். தாங்கள் சொல்லுகிறபடி தங்களுக்கும் எனக்கும் ஒத்திட்டுப் பார்த்தால், நான் கேவலம் ஒரு குழந்தைக்கே சமம் என்பதை நான் நன்றாக அறிவேன். இந்தப் போக்கிரிப் பட்டனத்தில் உள்ள அயோக்கியர்களுக்கு எல்லாம் தங்களுடைய பெயர் என்றாலே சிம்ம சொப்பன மல்லவா. இமயமலைக்கு அருகில் உள்ளவர்கள் கூட கும்பகோணம் என்ற பெயரைக் கேட்டால், இந்த ஊரில் இருந்து வரும் மனிதரை விஷம்போல வெறுக்கிறார்கள். அப்படிப்பட்ட என்றைக்கும் மாறாத இழிவையும் அவமானத்தையும் இந்த ஊருக்குத் தேடி வைக்கும் அயோக்கிய சிகாமணிகள் எல்லாம் தங்களுடைய ஆளுகையில் பஞ்சாய்ப் பறந்து போய் விட்டார்களே! எப்படிப்பட்ட திறமை சாலிகளான போலீஸ் இன்ஸ்பெக்டர்களாலும் அடக்க முடியாத பரம துஷ்டர்களும், துன்மார்க்கர்களும் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாய்ப் போகும்படி செய்தது தாங்கள் அல்லவா? அந்த விவரம் எல்லாம் எனக்குத் தெரியாதா? அப்படிப்பட்ட போலீஸ் புலியாகிய தங்களிடத்தில் நான் வாலையாட்டத் துணிவேனா? ஒரு நாளுமில்லை. ஆகையால் தாங்கள் இந்த ஏழையின் மேல் தப்பான அபிப்பிராயம் கொள்ளவே முகாந்திரமில்லை. தங்களை நான் அற்பசொற்பமாக மதித்துப் பேசவில்லை. சர்வமும் தெரிந்த சர்வ வல்லமையுள்ள ஒரு கடவுளின் முன்னால் நின்று பேசுவதைப் போலவே நான் எண்ணிப் பேசுகிறேன். இது பிரமான மான வார்த்தை. இப்போது என்ன கருத்தோடு தாங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதை நான் இன்னமும் ஓர் எள்ளளவுகூட யூகிக்கக் கூடவில்லை. அப்படி இருக்க, நான் எவ்விதமான நிஜத்தைப் பேசுகிறதென்பது தெரியவில்லை. எஜமான் என் மேல் கோபிக்காமல் விஷயத்தைச் சொன்னால், அதற்குச் சம்பந்தப்பட்ட சகலமான உண்மையையும் எனக்குத் தெரிந்த வரையில் திரிகரண சுத்தியாக நான் உடனே வெளியிடுகிறேன்” என்று நிரம்பவும் நிதானமாகவும் பணிவாகவும் கூறினான்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் மிகுந்த ஆச்சரியம் அடைந்து தம் மனதில் பொங்கியெழுந்த கோபத்தையும் வெறுப்பையும் வெளியில் காட்டாமல் அடக்கிக் கொண்டு, “பிள்ளையவாள்! நீர் பேசுவதெல்லாம் கேட்பதற்கு அழகாயிருக்கிறது என்பது வாஸ்தவமே. ஆனால் அதனால் மனசில் மாத்திரம் கொஞ்சமாவது திருப்தி என்பதே உண்டாகவில்லை. அதுதான் சங்கடமாக இருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும். நீர் மற்ற எந்த விவரத்தையும் என்னிடம் சொல்ல வேண்டாம். உம்முடைய தமையனார் இப்போது எங்கே இருக்கிறார் என்பதை மாத்திரம் நீர் நிச்சயமாகச் சொல்லிவிட்டால், அதுவே போதுமானது. நான் உடனே போய்விடுகிறேன். இந்த விஷயத்தில் நான் உம்மைச் சம்பந்தப்படுத்தாமல் தப்ப வைக்கிறேன்; அவரை மாத்திரம் பிடித்துக்கொண்டு போய்விடுகிறேன். அவர் ஆயிசு காலம் முடிய மறைந்து இந்த உலகத்தில் இருக்க முடியாது. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் அவர் அகப்பட்டுக் கொள்வது நிச்சயம். அவருடைய தண்டனைக் காலம் ஒன்றுக்கு இரண்டாகப் பெருகுவதும் நிச்சயம். ஆனால் நாங்களே சிரமப் பட்டு அவரைக் கண்டு பிடித்தால், அவரோடு அவரை விடுவித்த மற்றவர்களும் அவருக்குத் துணையாக ஜெயிலுக்குப் போக நேரும். அதில் நீரும் ஒருவர்தான் என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால், நீரே உம்முடைய தமையனாரை மாத்திரம் காட்டிவிட்டால், நீர் தப்பித்துக் கொள்ளலாம். நான் சொல்வதில் உமக்கு ஏற்படக்கூடிய லாப நஷ்டங்களைச் சீர் துக்கிப் பார்த்து சரியான வழியில் நடந்து கொள்ளும்” என்றார்.

அவரது சொற்களைக் கேட்டு முற்றிலும் பிரமிப்படைந்து திடுக்கிட்டவன் போலத் தோன்றிய மாசிலாமணி, “எஜமானே! தாங்கள் சொல்வது ஆச்சரியத்திலும் பரம ஆச்சரியமாக இருக்கிறது. என் தமயனார் சிறைச்சாலையில் இருக்கிறார் என்றே நான் இந்த கூடிணம் வரையில் எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது தாங்கள் சொல்வதைக் கேட்கவே, அவர் அங்கே இருந்து தப்பி ஓடிப்போய் விட்டதாக நான் அர்த்தம் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. இது என்னால் தாங்க முடியாத மகா புதுமையான சங்கதியாகவே இருக்கிறது. அவர் என்றைய தினம் தப்பித்துப் போனார்? அப்போது அவரோடு வார்டர்கள் யாரும் இல்லையா? தஞ்சாவூர் ஜெயில் என்ன சாதாரணமான கட்டிடமா? அவ் விடத்தில் காவல் இல்லையா? என் தமையனார் என்ன யெளவனப் பிராயத்து விடபுருஷரா? அத்தனை மனிதர்களையும் அவர் ஏமாற்றிவிட்டு எப்படிப் போனார் என்பது விளங்கவில்லையே!” என்றான்.

இன்ஸ்பெக்டர் சிறிது கோபமாகப் பேசத்தொடங்கி, “ஐயா! நீர் இன்னமும் இந்த மாதிரியே பேசிக் கொண்டு போனால், பிறகு நான் சட்டப்படி நடக்க வேண்டியதாகவே முடியும். அநாவசியமான துன்பத்தை ஏன் விலைக்கு வாங்கிக் கொள்ளுகிறீர்? உம்முடைய சிறுபிள்ளை விளையாட்டெல்லாம் இந்த வெள்ளைக்காரர் துரைத்தனத்தில் செல்லப் போகிறதில்லை. ஒருவர் ஜெயிலில் இருப்பதற்குப் பதிலாக இப்போது பலர் ஒன்றாகச் சேர்ந்து அங்கே போகும்படியான காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள், வேண்டாம். நான் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல, ஒரு தடவைக்குப் பத்துத் தடவையாகச் சொல்லுகிறேன். சிறு பிள்ளைத் தனத்தினால், வீண் பிடிவாதம் செய்யாதேயும்” என்றார். மாசிலாமணி, “சுவாமிகளே! நான் எவ்வளவு தூரம் சொன்னாலும், அது தங்களுக்கு நம்பிக்கைப்படமாட்டேன் என்கிறதே. இனி நான் உங்கள் மனம் திருப்தி அடையும்படி வேறு எந்த விதமாகச் சொல்லப் போகிறேன்? மறுபடியும் திருப்பித்திருப்பி, எனக்கு யாதொரு தகவலும் தெரியாது என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது என்பது என் மனசுக்குப் புலப்படவில்லை. முன்பு எனக்கு நேர்ந்த தண்டனையாவது, நான் நிஜமாகவே செய்த குற்றத்திற்காகக் கிடைத்தது. இப்போது கால வித்தியாசத்தால் மறுபடி எனக்கு ஏதாவது எதிர்பார்க்காத துன்பம் நேருமானால், அதையும் நான் கடவுளின் கருணை என்றே தான் மதிக்க வேண்டும். நான் சிறைச்சாலையில் இருந்து விடுபட்டு வந்த பிறகு ஒவ்வொரு தினம் தங்களுடைய ஜெவான்கள் இங்கே வந்து என்னை ஆஜர் பார்த்து நான் ஒழுங்கான வழியில் நடப்பதாக எழுதிக் கொண்டு போயிருக்கிறார்கள் என்ற விஷயம் தங்களுக்குத் தெரியாததல்ல. அப்படி இருந்தும், தாங்களே என்மேல் சந்தேகம் கொள்வது தெய்வ சம்மதமாகுமா என்பதை எஜமான்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்” என்றான்.

இன்ஸ்பெக்டர், “அதுதான் சாமர்த்தியம். போலீசாருடைய கண்ணுக்கு எதிரிலேயே திருடுகிறவன்தான், உண்மையில் திருட்டு உத்தியோகத்துக்கு யோக்கியம் வாய்ந்தவன். மறைவில் திருடுகிறவன் எதற்கு உபயோகப்படுவான். அவனை சுத்தப்பேடி என்று தான் சொல்ல வேண்டும். போலிஸ் ஜெவான்கள் உம்மைப் பற்றி அப்படிப் புகழ்ச்சியாக ஒன்றும் எழுதிவிட வில்லையே. உம்முடைய நடத்தையைப் பற்றி அவர்கள் சந்தேகமாகத் தான் எழுதி இருக்கிறார்கள். நீர் இருப்பது ஏகாங்கி; ஏற்கனவேயே இருந்த மாளிகையே உமக்கு எதேஷ்டமானது. இதை நீர் மாற்றி உப்பரிகைகள் வைத்து வேறுவிதமாகப் புதுப்பித்து இவ்வளவு அவசரமாக வேலை செய்ததை எல்லாம் அவர்கள் உடனுக்குடன் எழுதி அனுப்பி இருப்பதன்றி, நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் பரம ரகசியமாகவும், சந்தேகாஸ்பதமாகவும் இருக்கின்றன என்றும், தாங்கள் ஒவ்வொரு நாளும் இங்கே வந்து கவனித்துப் பார்த்துக் கொண்டிருப்பது அவசியம் என்றும், தாங்கள் உம்மிடம் அந்தரங்க சிநேகிதர் போலவே நடித்து உம்மோடு சந்தோஷமாகவே இருந்து உம்முடைய ரகசியங்களைக் கிரகிப்பதாக அல்லவா ஜெவான்கள் எழுதிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் எழுதிக் கொண்டு வந்ததற்குத் தகுந்தபடி தானே இப்போதும் காரியமும் நடந்திருக்கிறது” என்றார்.

மாசிலாமணி, “ஒகோ! அப்படியா எழுதி இருக்கிறார்கள்! இப்படிப்பட்ட ஜெவான்கள் இருப்பதனால் தான் இந்தப் போலீஸ் இலாகாவைக் கண்டு ஜனங்கள் தாறுமாறாக தூஷிக்கிறார்கள். உண்மையாகவும் நாணயமாகவும் பாடுபடு, தங்களைப் போன்ற மேல் உத்தியோகஸ்தர்களுடைய பெயரும் அகாரணமாய் கெட்டுப் போகும்படி இவர்கள் செய்துவிடுகிறார்கள். இந்த ஜெவான்கள் எல்லோரும் ஒவ்வொரு நாளும் வந்து என்னோடு கூடவே நெடுநேரம் இருந்து, பலவகையில் தங்களுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து கொண்டு, என்மேல் யாதொரு சந்தேகத்திற்கும் இடமில்லை என்று நேருக்குநேர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் எனக்குத் தெரியாமல் எனக்கு விரோதமான சங்கதிகளை எழுதி இருப்பதாகத் தெரிகிறது. நான் என் வீட்டின் மேல் உப்பரிகைகள் வைத்துக் கட்டினால் அதில் என்ன சந்தேகம் இருக்கிறது? இப்படியானால் மனிதர் சாப்பிடுவது, துங்குவது, நடப்பது முதலிய சர்வ சாதாரணமான காரியங்களைப் பற்றியும் இவர்கள் சந்தேகங்கொள்வார்கள் போல் இருக்கிறதே! ஆம், அதிருக்கட்டும். நான் உப்பரிகை கட்டியதைப் பற்றி, என்ன விதமான சம்சயம் கொள்கிறார்களாம்? அதை எழுதி இருக்கிறார்களா? ஒருவேளை இப்படி இருக்கலாம். சந்தேகம் ஒன்றுமில்லை என்று எழுதினால், இவர்கள் இங்கே அடிக்கடி வர ஏதுவில்லாமல் போய்விடும் என்ற எண்ணத்தினால் அப்படி எழுதி இருக்கலாம். இவர்களுக்கு வயிறு இருக்கிறதல்லவா. இவர்களும் பிழைக்க வேண்டாமா? சர்க்காரார் கொடுக்கும் சொற்ப சம்பளம் எந்த மூலைக்குக் காணப்போகிறது!” என்று நிதானமாகக் கூறினான்.

அதைக் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் நிரம்பவும் கோபம் கொண்டவராய், “ஓய் !மாசிலாமணிப் பிள்ளை! பார்த்திரா, நீர் மறுபடியும் உம்முடைய சிறுபிள்ளைத் தனத்தையே காட்டுகிறீரே.! ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தபிறகு ஏதோ புத்திசாலியாகிவிட்டேன் என்று கொஞ்ச நேரத்துக்கு முன் சொன்னீரே! அதை மறுநிமிஷத்திலேயே பொய்யாக்கிவிட்டீரே! எனக் கெதிரிலேயே போலிஸ் இலாகா சிப்பந்திகளைப் பற்றி அவதூறாகப் பேச ஆரம்பித்து விட்டீரே. லஞ்சம் கொடுப்பது என்றால், வாங்குகிறவர் பேரில் மாத்திரம்தான் குற்றம் என்று நினைத்துக் கொண்டீரா? வாங்குகிறவரைக் காட்டிலும் கொடுக்கிறவர் பேரில்தான் அதிக தவறு இருக்கிறது. போலீஸ் ஜெவான்கள் அற்ப சம்பளமுள்ள ஏழை மனிதர்கள். அவர்களுக்கு சர்க்காரில் கொடுக்கும் சம்பளம் அவர்களுடைய பெரிய குடும்பத்தை சவரகூரிக்கப் போதுகிறதில்லை. சம்பளம் குறைவாக இருக்கிறதே என்று அந்த உத்தியோகங்களுக்குப் போகாமல் இருந்துவிடலாம் என்றால், நம்முடைய நாட்டில் பிழைப்புக்கு மார்க்கம் அகப்படுவது அரிதாய் இருக்கிறது. எளியவர்களான அவர்கள் பணக் கொழுப்பெடுத்த உங்களைப் போன்றவர்களிடத்தில், தங்கள் உத்தியோக கடமையைச் செலுத்த வந்தால், நீங்கள் சுயநலங் கருதி, அவர்களுக்குப் பலவிதமான பொருட்களைக் கொடுத்து அவர்களுடைய மனசைக் கெடுத்து, அவர்கள் தங்களுடைய கடமைகளில் இருந்து வழுவும்படியான மார்க்கத்தைச் செய்கிறீர்கள். லட்சம், பத்து லட்சம் சொத்து வாய்ந்துள்ள நீங்கள் மேன் மேலும் பணத்தாசை பிடித்து, அதைக் கோடியாக்கப் பிரயத்தனப்படுகிறீர்களே. முழு வயிறும் நிறையும் படியான போஜனம் கூட அகப்படாமல் நடைப்பினங்களாய்த் திரியும் இந்த எளிய சிப்பந்திகள் பணத்தின் மேல் ஆசைப்பட்டு, நீங்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்வது ஓர் அரிய விஷயமா? நீரே சுதாவில் கொடுத்திரன்றி, இவர்கள் கேட்டு நீர் கொடுக்கவில்லையே. அப்படி இருக்க இவர்களை என்னிடம் காட்டிக் கொடுத்து இவர்களைப் பற்றி இழிவாகப் பேசுவது பெரிய மனுஷத்தனமாகுமா? ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால், இவர்கள் பரம ஏழைகளாய் இருந்தாலும் உண்மையில் நாணயமுள்ள வர்கள் என்றே சொல்ல வேண்டும். நீங்கள் எவ்வளவு தான் இவர்களுக்கு லஞ்சம் கொடுத்தாலும் உம்முடைய தாக்ஷண்யத்துக்காக அதை வாங்கிக் கொண்டு, தம்முடைய நாணயத்துக்கு யாதொரு பழுதும் ஏற்படாமல், தங்கள் உத்தியோகக் கடமைகளையும் சரியாக நடத்தி இருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட இவர்களுடைய நடத்தையை நீர் இப்போது இழிவுபடுத்திப் பேசுவது சிறுபிள்ளைத்தனமே அன்றி வேறல்ல. அப்படிச் சொல்வதனால் நீர் தப்பித்துக் கொண்டுவிடலாம் என்று நினைத்துக் கொண்டீரா? அது ஒருநாளும் பலியாது. நான் உம்மோடு அதிகமாகப் பேசி வீண் பொழுது போக்கிக் கொண்டிருக்க, எனக்கு நேரமில்லை. நீர் சிநேக பாவத்தில் வழிக்கு வருகிறீரா, அல்லது, நாங்கள் எங்கள் உத்தியோக தோரணைப்படி நடத்திக் கொள்ளலாமா? ஒரே வார்த்தையில் பதில் சொல்லும், இன்று காலை சுமார் 9½ மணிக்கு உம்முடைய தமையனார் வார்டர்களோடு எண்ணெய் விற்க, ஊருக்குள் போனவரை, யாரோ ஒரு பெண் பிள்ளையும் சில ஆட்களும் சேர்ந்து பலவந்தமாக விடுவித்துக் கொண்டு போய்விட்டார்களாம். அதைப்பற்றி எனக்கு இப்போது தான் தந்தி வந்தது. உடனே புறப்பட்டு வந்தேன். உம்முடைய தமையனார் இருக்கும் இடத்தை நீரே சொல்லுகிறீரா? அல்லது, நாங்களே தேடிப் பார்க்கலாமா? என்ன சொல்லுகிறீர்?” என்றார்.

அதைக் கேட்ட மாசிலாமணி முற்றிலும் பிரமிப்படைந்தவன் போலக் காணப்பட்டு நடுநடுங்கி, “எஜமானே! பிரமாணமாகச் சொல்லுகிறேன். என் தமையனார் இப்படிச் செய்தார் என்பது எனக்கு இப்போது நீங்கள் சொல்லத்தான் தெரிந்தது. நான் சொல்வதைத் தாங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, இந்தச் சதி ஆலோசனையில் நான் ஒரு அனுப்பிரமாணமும் சம்பந்தப்படவே இல்லை. என் தமையனார் இப்படி நடந்து கொள்ளுவார் என்று நான் கனவிலும் நினைக்கவே இல்லை. நான் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஏதாவது அற்ப ருஜூவிருந்தாலும், நான் என் ஆயிசு காலம் முடிய சிறைச்சாலையில் இருக்கச் சம்மதிப்பதாக இப்போதே தங்களுக்கு எழுத்து மூலமான உறுதி வேண்டுமானாலும் எழுதிக் கொடுக்கிறேன். அவர் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. தங்களுக்குப் பிரியமானால், தாங்கள் இந்த வீட்டைச் சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அவர் காலை 9½ மணிக்கு விடுவிக்கப்பட்டதாகச் சொல்லுகிறீர்கள் இப்போது மணி ஒன்றாகிறது. இதற்குள் ரயில் வருவதற்குக் கூட அவகாசம் இல்லையே. ஆகையால், அவர் ஒருவேளை தஞ்சாவூரிலேயே எங்கேயாவது இருப்பார், அல்லது, அதற்கும் இதற்கும் நடுவில் உள்ள ஏதாவது ஓர் ஊரில் இருப்பார்; இந்த ஊருக்கு வந்தே இருக்கமாட்டார். தேவையானால், தாங்கள் வீடு முழுவதையும் சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இதோ இருக்கிறது கொத்துச் சாவி. சில அறைகள் பூட்டப் பட்டிருக்கும். அவைகளை எல்லாம் திறந்து ஓரிடம் விடாமல் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறி, பக்கத்தில் இருந்த மேஜையின் மீது கிடந்த கொத்துச் சாவியை எடுத்து நீட்டினான். இன்ஸ்பெக்டர்”சரி, நீர் உமக்கு ஒன்றும் தெரியாதென்றே கடைசி வரையில் சொல்லிக்கொண்டிரு. நான், இது உம்மால்தான் ஆயிருக்கிறதென்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். தஞ்சாவூரில் இருந்து ரயில் இந்த ஊருக்கு இந்நேரம் வர முடியாதென்பது நிஜந்தான். ஆனால், இவ்விடத்தில் இருந்து அந்த ஊர் சுமார் முப்பது மைல் தூரம் இருக்கலாம். மோட்டார் வண்டி சாதாரணமாக இரண்டு மணி நேரத்தில் இங்கே வந்து சேர்ந்துவிடும் என்பது உமக்குத் தெரியாதா? ஆகையால், அவர் இங்கே வந்திருக்கமாட்டார் என்றே நாம் எப்படி எண்ணிக் கொள்ளுகிறது. சரி வாரும். வீடு முழுவதும் பார்த்துவிடுவோம். நீரே முன்னால் போய் ஒவ்வோரிடமாகக் காட்டும். நாங்கள் பின்னால் வருகிறோம்” என்றார்.

மாசிலாமணி நிரம்பவும் துடியாக நடந்தவனாய், “வாருங்கள் காட்டுகிறேன். மடியில் கனம் இருந்தால் அல்லவா வழியில் பயம். இந்த வீட்டையும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் எங்களுக்குள் இருக்கும் மற்ற வீடுகளையும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிய வண்ணம் போலீசார் மூவரையும் அழைத்துக் கொண்டு போய் முதற்கட்டில் இருந்த சகலமான அறைகளையும் மறைவான இடங்களையும் காட்டிய பிறகு அது போலவே இரண்டாவது மூன்றாவது கட்டுகளுக்குள்ளும் நுழைந்து ஓரிடம்விடாமல் அவர்களுக்குக் காட்டினான். அதன் பிறகு எல்லோரும் மேன் மாடத்தில் ஏறி இரண்டு உப்பரிகைகளுக்குள்ளும் நுழைந்து நன்றாக ஆராய்ச்சி செய்தனர். சட்டைநாத பிள்ளையும் எவ்விடத்திலும் காணப்படவில்லை. அதுவுமன்றி மாசிலாமணி அந்தச் சதி ஆலோசனையில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதைக் காட்டக் கூடிய தஸ்தாவேஜியாவது, வேறு எவ்வித அறிகுறியாவது காணப்படவில்லை. இன்ஸ்பெக்டர் நிரம்பவும் கூர்மையான பகுத்தறிவும் யூகமும் வாய்ந்தவர் ஆதலால், புதிதாகக் கட்டப்பட்ட உப்பரிகைகளில் ஏதாவது மறைவான இடம், சூட்சுமமான வழிகள் முதலியவை எங்காகிலும் இருக்கின்றனவோ என்று நிரம்பவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டே போனார். வீட்டின் உச்சியில் மொட்டைமெத்தை தான் இருந்தது. அதற்குப் போக வழி வைக்கப்படாமல் இருந்தமையால், கீழே வீதியிலிருந்து பார்த்தாலே, உச்சியில் ஒன்றுமில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. ஆகையால், போலீசார் மேலே ஏறி உச்சியில் போய்ப் பார்ப்பது அநாவசியம் என்று தீர்மானித்துக் கொண்டு மாசிலாமணியோடு கீழே இறங்கினார்கள்.

கீழே வந்த உடனே இன்ஸ்பெக்டர் மாசிலாமணியை நோக்கி, “என்ன ஐயா இது மாயமாக இருக்கிறதே! ஆசாமி எங்கேயும் காணப்படவில்லையே! எங்கேயோ தந்திரமாக ஒளிந்து கொண்டு இருக்கிறாரே! எங்கேயாவது சுவருக்குள் சந்துவைத்துக் கட்டி மறைத்திருக்கிறீரா?” என்று புன்னகையோடு கேட்க, மாசிலாமணி ஆத்திரமாகப் பேசத் தொடங்கி, “என்ன, எஜமானே! நான் வயிற்றைக் கிழித்துக் காட்டினால் கூட, அதைக் கண்கட்டு வித்தை என்றால், பிறகு நான் எப்படித்தான் தங்களைத் திருப்தி செய்கிறது? சுவருக்குள் இடைவெளி விட்டிருப்பதாகத் தாங்கள் சந்தேகித்தால், அதையும் ஆராய்ந்து பார்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு சுவரின் கனத்தையும் அளந்து பார்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு கனம் இருக்க வேண்டுமோ அதற்கு மேல் அதிகமாக எவ்விடத்திலாவது இருக்கிறதா என்று பாருங்கள். சுவர்களில் இருந்த அலமாரிகளை எல்லாம் கூடத் திறந்து காட்டிவிட்டேன். இன்னம் தங்களுக்குத் திருப்தி ஏற்படாவிட்டால் தாங்கள் உத்தரவு கொடுங்கள். உடனே ஆயிரம் ஆட்களை விட்டு, இரண்டு உப்பரிகையுள்ள இந்த மாளிகையின் மூன்று கட்டுகளையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடச் செய்கிறேன். இதை மறுபடிகட்ட சுமார் 50-ஆயிரம் ரூபாய் பிடிக்கும் தங்களுடைய சந்தேகம் நிவர்த்தியாவதே எனக்குப் பெரிய காரியமன்றி, இந்த 50-ஆயிரம் ரூபாய் ஒரு பொருட்டல்ல. என்ன சொல்லுகிறீர்கள்? அப்படியே செய்யட்டுமா?” என்று நிரம்பவும் துடியாகப் பேசினான்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் மகிழ்ச்சியாகவும் அவநம்பிக்கை யோடும் நகைத்து, “பேஷ்! நல்ல யோசனை சொல்லுகிறீர்! இப்படி எல்லாம் சொன்னால், நீர் குற்றமற்றவர் என்று நான் எண்ணிக் கொள்வேன் என்று தடயுடலாகப் பேசுகிறீரா? அந்த மாதிரியே வீட்டை இடித்துவிட்டுப் பார்க்க வேண்டும் என்று துரைத்தனத்தார் உத்தரவிட்டால், அதை யார் தடுக்க முடியும்? ஒருவராலும் முடியாது. அது இருக்கட்டும். பிறகு பார்த்துக் கொள்வோம்; நாம் இன்னும் பின்புறத் தோட்டத்தைப் பார்க்கவில்லை அல்லவா, அங்கே போய்ப் பார்ப்போம் வாரும்” என்றார்.

உடனே மாசிலாமணி, “ஆகா! அதையும் பாருங்கள். இதோ காட்டுகிறேன். வாருங்கள்” என்று கூறிய வண்ணம், அவர்களை நடத்தி அழைத்துக்கொண்டு பின்புறத்தில் இருந்த விசாலமான தோட்டத்தை அடைந்து, அங்கே இருந்த இரண்டு இடுக்குகள் மறைவிடங்கள் முதலிய சகலமான பாகங்களையும் காட்டினான். தோட்டத்தின் முடிவில் பெருத்த மதில் குறுக்கில் எழுப்பப்பட்டு இருந்தது.

அதைப் பார்த்த இன்ஸ்பெக்டர், “ஏன் ஐயா! இந்த மதில் இப்போது தான் புதிதாகக் கட்டப்பட்டது போல் இருக்கிறதே! உம்முடைய கலியாணத்தின் போது இந்த இடத்தில் வழி இருந்ததே. அதன் வழியாகத்தானே நீங்கள் வடிவாம்பாள் என்ற பெண்ணைப் பக்கத்துத் தெருவில் உள்ள உங்களுடைய இன்னொரு விட்டில் கொண்டுபோய் ஒளித்து வைத்திருந்தீர்கள். இந்த வழியை ஏன் அடைத்துவிட்டீர்?” என்றார்.

மாசிலாமணி, “ஆம். எஜமானே! இங்கே இருந்த வழியை நான் இப்போது தான் அடைந்தேன். இந்த மதில் சமீப காலத்தில் கட்டப்பட்ட புதிய மதில்தான்” என்றான்.

உடனே இன்ஸ்பெக்டர் அந்த மதிலுக்கு அப்பால் ஏதாவது அறை முதலிய மறைவான இடம் இருக்குமோ என்றும், அதற்குள் சட்டைநாத பிள்ளை ஒளிந்து கொண்டிருப்பாரோ என்றும் சந்தேகித்தவராய், அந்த மதிலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கொய்யா மரத்தின் மேல் ஏறி மதிலின் உச்சியை அடைந்து அப்புறத்தில் பார்த்தார். அவ்விடத்தில் இன்னொரு தோட்டம் காணப்பட்டது. அது பக்கத்துத் தெருவில் இருந்ததும், வடிவம் பாள் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததுமான சட்டைநாத பிள்ளையின் இன்னொரு வீட்டின் பின்புறத் தோட்டம் என்ற அடையாளம் நன்றாகத் தெரிந்தது. அந்தத் தோட்டத்தில் எவ்வித மான புதிய கட்டிடமும் காணப்படவில்லை. அவர் ஏறி நின்ற மதில் சுவரின் ஓரமாக அப்புறத்தில் சந்தேகாஸ்பதமான எவ்வித கட்டிடமும் காணப்படவில்லை. மதிலின் அகலமும் சுமார் ஒன்றரை அடிதான் இருந்தது. அதைக் கண்ட இன்ஸ்பெக்டர் அவ்விடத்தில் சம்சயப்படக்கூடிய குறிப்பு எதுவும் இல்லை என்று தீர்மானித்துக் கொண்டு கொய்யாமரத்தின் வழியாகக் கீழே இறங்கினார். உடனே மாசிலாமணி, “இந்த மதிலை நான் கட்டியிருப்பதைக் கண்டு எஜமான் ஏதோ சந்தேகங் கொள்ளுகிற மாதிரி இருக்கிறது. இன்ன காரணத்தினால் இந்த மதில் கட்டப்பட்டதென்பதை நான் சொன்னால், உங்கள் சந்தேகம் உடனே விலகிப் போகும்,” என்றான். இன்ஸ்பெக்டர், “ஏன் எதற்காக இந்த மதில் போட்டீர்? பின்பக்கத்துத் தெருவில் இருந்த வீடு இப்போதும் உங்களுக்குத் தானே சொந்தம்? அல்லது, அதை வேறே யாருக்காவது விற்றுவிட்டீரா?” என்றார்.

மாசிலாமணி, “எங்களுக்கு வேண்டும் என்று வாங்கின வீட்டை நான் ஏன் விற்கிறேன்! அதுவுமன்றி என் தமையனார் பேரில் இருக்கும் வீடு நிலம் முதலிய ஸ்தாவர சொத்துக்களை நான் விற்க எனக்கு அதிகாரம் ஏது? நான் விற்றால்கூட, ஒருவரும் வாங்க மாட்டார்களே! இந்தச் சொத்துக்களை எல்லாம் அவர் வருகிறவரையில் நிர்வாகித்து இவைகளில் இருந்து வரும் வருமானத்தை என்னுடைய இச்சைப்படி செலவு செய்து கொள்ளலாம் என்று மட்டும் என் தமையனார் எனக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்” என்றார்.

இன்ஸ்பெக்டர், “அப்படியானால், இரண்டு வீட்டுக்கும் நடுவில் இருந்த வழியை ஏன் அடைத்தீர்?” என்றார்.

மாசிலாமணி, “பின்பக்கத் தெருவில் உள்ள எங்களுடைய வீட்டை இதுவரையில் காலியாகவே வைத்திருந்தோம். நான் ஜெயிலில் இருந்து வந்த பிறகு அதை வாடகைக்கு விட ஏற்பாடு செய்தேன். அதை நான் ஐம்பது ரூபாய் வாடகைக்கு விடத் தீர்மானித்தேன். எத்தனையோ பேர் வீட்டைப் பார்த்துவிட்டுப் போனார்கள். அவர்களுடைய மதிப்பெல்லாம் முப்பது ரூபாய்க்கு மேல் போகவில்லை. கடைசியில் ஒரு சாயப்பு வந்து அந்த வீட்டை வாடகைக்குக் கேட்டார். அவர் ஹைதராபாத் நவாப்பின் அரண்மனையின் ஏதோ தக்க உத்தியோகத்தில் இருந்தவராம். இந்த ஊருக்குப் பக்கத்தில் உள்ள ராஜகிரியிலோ, அல்லது, பண்டார வாடையிலோ, அவருக்குத் தெரிந்த சாயப்பு யாரோ ஒருவர் இருக்கிறாராம். அவர் அந்த ஊரில் நிலம் வாங்கிக் கொண்டு இந்த ஊரிலேயே இருக்க வேண்டும் என்பது அவருடைய எண்ணம். இந்த வீடு அவருக்குத் திருப்திகரமாக இருக்கிறதென்று 50-ரூபாய் வாடகை கொடுத்து எடுத்துக் கொண்டு, இதில் குடி இருந்து வருகிறார். அவரோடு அவருடைய கோஷா மனைவியும் இருக்கிறாள். அவள் தோட்டப் பக்கத்துக்கு வந்தால் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருப்போர் அந்த அம்மாளைப் பார்க்க நேரும் என்ற நினைவினால், அவர் தாம் இருக்கும் வரையில் இவ்விடத்தில் குறுக்குச்சுவர் ஒன்று போட்டுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்தச் சுவர் போட செலவு ஒன்றும் பிரமாதமாகப் பிடித்துவிடவில்லை. அவர் கொடுத்த ஒருமாத வாடகைப் பணத்தைப் போட்டு இதை எழுப்பிக் கொடுத்தேன். அவ்வளவு தான் விவரம். இதில் தாங்கள் சந்தேகப் படும்படியான விஷயம் ஒன்றுமில்லை” என்றான்.

அந்த வரலாற்றைக் கேட்டவுடனே இன்ஸ்பெக்டரது மனதில் ஒரு விதமான சந்தேகம் தோன்றியது. மாசிலாமணி சட்டைநாத பிள்ளையைக் கொணர்ந்து அந்த வீட்டில் ஒளித்து வைத்திருப்பான் என்றும், அதற்குள் கோஷாஸ்திரீ இருக்கிறாள் என்றால் எவரும் உள்ளே போகமுடியாது என்று நினைத்து அப்படிப்பட்ட கட்டுக்கதையை உற்பத்தி செய்திருப்பான் என்றும் அவர் சந்தேகித்து, தாம் உடனே அந்த வீட்டிற்குப் போய், உள்பக்கம் முழுதும் நுழைந்து பார்த்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டவராய், “மாசிலாமணிப் பிள்ளை! நான் ஏதோ உம்மீது ஒவ்வொரு விஷயத்திலும் சந்தேகப்படுகிறேன் என்று நீர் என்னைப்பற்றி நிஷ்டுரமாகப் பேசுகிறீர். எனக்கு உம்மீதாவது, இந்த உலகத்தில் வேறே எந்த மனிதர் மீதாவது பகைமையே கிடையாது. வேண்டும் என்று மனிதருக்குக் கெடுதல் உண்டாக்க வேண்டும் என்பது எங்களுடைய கருத்தல்ல. எங்களுடைய உத்தியோக லட்சணம் இப்படிப்பட்டது. யாராவது ஏதாகிலும் குற்றம் செய்துவிட்டால், அவர்கள் எங்க்ளுடைய சொந்தத் தகப்பனாராய் இருந்தால்கூட, நாங்கள் தாட்சணியம் பார்க்க முடியாது. தாட்சணியம் பார்த்தால், நாங்கள் இதே வேலையில் நீடித்து இருக்க முடியாது. ஆகையால் யாராய் இருந்தாலும் நாங்கள் செய்ய வேண்டிய சாங்கியங்களைச் செய்துதான் தீர வேண்டும். உம்முடைய விஷயத்தில் மாத்திரம் நாங்கள் இப்படிச் செய்கிறோம் என்று நினைக்காதேயும். இப்போது இந்த ஊர் மாஜிஸ்டிரேட் இருக்கிறாரே, அவர் மற்ற எல்லோரையும் தண்டிக்கிறார், நாங்கள் எல்லோரும் அவரிடம் போய்க் கைகட்டிக் கொண்டு பணிவாக நிற்கிறோமே. அவரே கச்சேரியில் உள்ள சர்க்கார் பொருளை சொந்த உபயோகப்படுத்திக் கொள்ளுவதாக வைத்துக் கொள்ளும். நாங்கள் தாட்சணியம் பாராமல் அவருடைய வீட்டைச் சோதனை போடுவோம். அவரைப்பிடித்து விலங்கிட்டு எங்களுடைய சிறைச்சாலையில் அடைத்து விடுவோம். அவரேன்? என்னையே எடுத்துக் கொள்ளும். நானே ஒரு கைதியிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவனை விட்டுவிடுவதாக வைத்துக் கொள்வோம், இப்போது என் சொல்படி நாய் போலப் படிந்து நடக்கும் இதே ஜெவான்கள் எனக்கு விலங்கிட்டு நிர்த்தாட்சண்யமாக என்னைக் கொண்டு போய் அடைத்து விடுவார்கள். ஆகையால், எங்களுடைய உத்தியோகக் கடமையில் மனிதருடைய முக தாட்சணியத்தைப் பார்க்கவே முடியாது. ஆகையால், நீர் அநாவசியமாக என்மேல் நிஷ்டுரப்படுவதில் என்ன பிரயோசனம்? நீர் இப்போது ஒருவனுடைய பொருளை அபகரித்துக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். உம்மிடம் நான் லஞ்சம் வாங்கிக் கொண்டு உம்மைத் தப்பவைத்து விடுகிறேன். அப்போது உமக்கு சந்தோஷமாக இருப்பது நிச்சயம். உம்முடைய பொருளை இன்னொருவன் திருடிவிடுகிறான். அவனிடம் நான் லஞ்சம் வாங்கிக்கொண்டு, அவனை விட்டுவிட்டால், அப்போது உம்முடைய மனம் எவ்வளவு தூரம் பதறும். பணத்தைப் பறி கொடுத்த உம்முடைய வயிறு எப்படி எரியும்! ஆகையால், நீங்கள் உங்களுடைய சுயநலத்தை மாத்திரம் கருதக்கூடாது. பொது ஜன நன்மையையும் கருதவேண்டும். நாங்கள் எல்லா ஜனங்களுடைய உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாக்கப் பாடுபடுகிறவர்கள். ஒருவர் விஷயத்தில் இன்னொருவர் அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்கிறவரைத் தண்டனைக்குக் கொண்டு வரும் ஜனோபகாரமான காரியத்திற்கு உதவியாய் இருந்து நீதி வழுவாமல் பரிபாலனம் செய்யப் பயன்படுகிறவர்கள். உங்களுடைய தமையனார் ஜெயிலில் இருந்தால், எங்களுக்கென்ன? வெளியில் இருந்தால் எங்களுக்கென்ன? நாங்கள் ஏதாவது அவருக்குச் சாப்பாடு போடுகிறோமா? ஒன்றுமில்லை. இந்த விஷயமெல்லாம் உமக்குத் தெரியாததல்ல. ஆகையால் இந்த விஷயத்தில் எங்களுக்கு ஒவ்வொருவரும் தங்களால் ஆன உதவியைச் செய்ய வேண்டும். நீரும் அப்படியே செய்ய வேண்டும் என்று தான் நான் வந்தது முதல் உமக்குச் சொல்லுகிறேன். அப்படிச் செய்தால் அதில் உமக்கு அனுகூலமும் இருக்கிறது. எப்படி என்றால் நீர் இதில் சம்பந்தப்படவில்லை என்று உம்மை நான் தப்ப வைத்துவிடலாம். நீர் கடைசி வரையில் ஒரே பிடிவாதமாகப் பேசிக்கொண்டே போனால், இதற்காக நான் இப்போது உமக்கு எதுவும் செய்யாவிட்டாலும் இன்னம் இரண்டொரு தினத்தில், எப்படியும் எங்களுக்குத் தேவையான புலமும் சாட்சியமும் கிடைத்துவிடும். அதன் பிறகு உமக்குக் கெடுதல் நேரும். தஞ்சை ஜில்லா சூபரின்டென்டெண்டு உடனே ஒரு விளம்பரம் தயாரித்து, உம்முடைய தமையனார் இருக்கும் இடத்தைத் தெரிவிப்பவருக்கு ஐயாயிரம் ரூபாய் சன்மானம் கொடுப்பதாக வெளியிட்டிருக்கிறார். அந்தத் தொகையும் உமக்குக் கிடைக்கும்படி நான் செய்கிறேன். ஆனால் நீர் பணக்காரர்; அந்தத் தொகை உமக்கு ஓர் லட்சியமல்ல. ஆனால், மற்றவருக்கு அது போவதைவிட, உமக்குத்தான் வரட்டுமே. நீர் அதை வாங்கி, பரதேசிகளுக்குச் சாப்பாடு போடலாம் அல்லவா” என்றார்.

அதைக் கேட்ட மாசிலாமணி, “எஜமானே! தாங்கள் சொல்வதெல்லாம் நியாயமான விஷயங்கள் என்பதற்குத் தடையில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் மாத்திரம் தாங்கள் ஒரே பிடிவாதமாக ஓர் அபிப்பிராயம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் அவருடைய தம்பி ஆகையால், நான் தான் கட்டாயமாக அவரை விடுவித்திருக்க வேண்டும் என்ற முடிவை நீங்கள் வைத்துக் கொண்டு பேசுகிறீர்கள். அதுவுமன்றி, என்னைத் தவிர, இவ்வளவு அக்கறையாக அவரை விடுவிக்கக்கூடிய பந்துவாவது, சிநேகிதராவது அவருக்கு யாருமில்லை என்று நீங்கள் ஒருவேளை எண்ணிக்கொண்டும் இருக்கலாம். அதுதான் தவறு. எனக்கும் என் அண்ணனுக்கும் எப்போதும் ஜென்மப் பகை. அவருக்கு அநேக வருஷங்களாக சம்சாரம் இல்லை. ஆகையால், அவர் எப்போதும் ஏராளமான பொருளைச் செலவு செய்து அநேகம் தாசிகளைப் போஷித்து வந்தவர். ஒவ்வொருத்தியும் அவரிடத்தில் மாசத்தில் ஆயிரம் இரண்டாயிரம் பற்றுகிறவர்கள். அவருக்குத் தஞ்சாவூர் கீழ வீதியில் சாரதா என்ற ஒரு தாசி நிரம்பவும் அன்னி யோன்னியமான பழக்கம் உடையவள். அவர் சதாகாலமும் அவள் வீடே கதியாக இருந்து, லட்சக் கணக்கில் பொருளை அழித்திருக்கிறார். அவர் ஜெயிலுக்குப் போனதில் அவளுக்குத் தான் பெருத்த நஷ்டம். அவளைப் போன்றவர்கள் ஏதாவது தந்திரம் செய்து அவரை விடுவித்திருக்கலாம். அவர் இங்கே இருந்த வரையில், நான் ஒரு காசுகூடச் செலவு செய்ய, அவர் பார்த்துச் சகிக்கமாட்டார். என் விஷயத்தில் மாத்திரம் அவர் பரமலோபி. நான் அவரிடம் வெளிக்கு மாத்திரம், மகா பணிவாகவும் பயபக்தி விசுவாசத்தோடும் நடந்து வந்தேனே அன்றி, என் மனசுக்குள் அவர் எப்போது தொலைவார் என்ற எண்ணமே இருந்து வந்தது. இப்போது நான் ஜெயிலில் இருந்து வந்த பிறகுதான் நான் என் சுயேச்சையாகப் பணத்தைச் செலவு செய்கிறேன், இன்னும் எட்டு வருஷத்திற்கு நான் வைத்தது சட்டமாக இருந்து ஏராளமான பொருளைச் செலவு செய்து, என் இஷ்டம் போல இருக்கலாம் என்பதே என்னுடைய பிரியம். அப்படியன்றி, அவரை நான் விடுவித்தால், மறுபடியும் அவர் எல்லாப் பொருள்களுக்கும் எஜமானராகி விடுவார். பிறகு என் பாடு திண்டாட்டமே. இதை எல்லாம் தாங்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் சிறைச்சாலையிலேயே இன்னம் 8 வருஷம் இருப்பது எனக்கு அநுகூலமா, அல்லது, அவர் இங்கே வருவது அநுகூலமா என்பதை யோசித்துப் பாருங்கள். அவரை விடுவிப்பதில் நான் எள் அளவும் சம்பந்தப்படவில்லை என்பது இப்போதாவது தங்கள் மனசில் படும் என்று நினைக்கிறேன். நான் இப்போது இன்னொரு காரியம் செய்ய உத்தேசித்திருக்கிறேன். என் அண்ணனைப் பிடித்துத் தருபவருக்கு சர்க்காரில் 5000 ரூபாய் கொடுக்கிறதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள் அல்லவா. அப்படிப் பட்டவருக்கு நானும் ஒரு பதினாயிரம் ரூபாய் சன்மானம் கொடுக்கிறேன். எப்படி யாவது ஜனங்கள் முயற்சி செய்து அவரைப் பிடித்து மறுபடி சிறைச்சாலையில் அடைத்து விடட்டும். எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். ஆனால், என் அந்தரங்க எண்ணத்தை எஜமானரிடம் மாத்திரம் வெளியிட்டுவிட்டேன். இதைத் தாங்கள் வெளியிடக் கூடாது. சன்மான விஷயத்தை மாத்திரம் நானே பத்திரிகையில் வெளியிட்டுவிடுகிறேன்” என்றான்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் ஒருவித வியப்படைந்து, அவன் கூறியது உண்மையாக இருக்குமோ அல்லது கபடமான வார்த்தையோ என்று சிறிதளவு சந்தேகித்து, “ஓகோ! அப்படியா! நீர் சொல்வது உண்மைதானா? உம்முடைய தமையனார் சிறைச் சாலையிலேயே இருக்கவேண்டும் என்று நீர் மனப்பூர்வமாகவே ஆசைப்படுகிறீரா? என்றார்.

மாசிலாமணி, “அதில்கூட சந்தேகமா? அதை நீங்களே யோசித்துப் பார்த்துக் கொண்டாலே தெரியுமே; எவனாவது ஓர் அபார சம்பத்துக்குத் தானே சுயேச்சாதிபதியாக இருக்கப் பிரியப்படுவானா, அல்லது, வேறொருவருக்கு அடிமை போல இருந்து தனக்கு நேரும் ஒவ்வொரு செலவுக்கும் அவரிடம் பணம் கேட்டுக் கொண்டிருப்பதை நாடுவானா?” என்றான்.

போலிஸ் இன்ஸ்பெக்டர், “சரி நீர் இவ்வளவு தூரம் உண்மையைச் சொன்னபிறகு, இன்னமும், நாம் உம்மைப்பற்றி சந்தேகமான எண்ணங்கொள்வது ஒழுங்கல்ல. உம்முடைய தமயனார் வெளியில் வருவதைவிட சிறைச்சாலையில் இருப்பதே உமக்கு அனுகூலமாக இருக்கும் என்று நீர் சொல்வது ஒரு விதத்தில் ஒப்புக் கொள்ளக்கூடிய சங்கதியாக இருந்தாலும், அதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அவர் சிறைச் சாலையில் இருந்து இப்போது திருட்டுத் தனமாக வந்திருக்கிறார். ஆதலால், அவர் இனி ஆயிசுகாலம் வரையில் பிறருக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு உம்முடைய தயவு அவருக்கு அவசியம் தேவை. உம்முடைய பண உதவி இல்லாமல், அவர் எங்கே இருக்க முடியும்? சாரதா என்னும் தாசி அவரை விடுவித்திருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவர் அவளுக்கு இனி உம்முடைய உதவி இல்லாமல் பணம் கொடுக்க முடியாது. அவர் பணம் கொடுக்காவிட்டால், தாசி அவரை இலட்சியம் செய்யமாட்டாள்; சேர்ந்தாற் போல, ஒரு மாசத்திற்குக் கூட வைத்து சவரகூடினை செய்யமாட்டாள். பிறருடைய தயவினால், மறைந்திருக்க வேண்டிய நிலைமையில் உள்ள சட்டைநாத பிள்ளை இங்கே வந்திருந்தால் கூட, அவர் எந்த அதிகாரத்தையும் வகிக்க முடியாது. உங்களுடைய நிலம் முதலிய சொத்துக்களின் நிர்வாகத்தையும் அவர் நேரில் வகிக்க முடியவே முடியாது. ஆகையால், அவர் உம்மிடத்தில் முன்பு நடந்து கொண்ட மாதிரி லோபித்தனமாகவாவது, அதிகார தோரணையாக வாவது நடந்து கொள்ள முடியாது. அவர் இன்னம் 8 வருஷ காலம் சிறைச்சாலையில் இருந்து வந்தால், அதன் பிறகு அவர் பகிரங்கமாக எல்லா நிர்வாகத்தையும் ஏற்றுக்கொள்ள முடியும். இப்போது அவர் திருட்டுத்தனமாக வந்துவிட்டார் ஆகையால், அவர் இனி தம்முடைய ஆயிசுகாலம் முடிய ஒளிந்திருந்து உம்முடைய தயவினாலேயே ஜீவிக்க வேண்டியவராகிவிட்டார். ஆகையால் 8 வருஷங் கழிந்த பின், உம்முடைய அதிகாரம் போய்விடும் என்ற கவலைகூட இப்போது இல்லாமல் போய்விட்டது. ஆகவே, அவர் சிறைச்சாலையில் இருப்பதை விட, வெளியில் வந்ததே, ஒருவிதத்தில் அனுகூலமானது என்பது தெரிகிறதல்லவா. இருந்தாலும், பரவாயில்லை. நான் உம்மை இதற்கு மேல் அதிகமாக இப்போது வற்புறுத்த விரும்பவில்லை. உடனே நான் தஞ்சைப் போலீசாருக்கு ஒரு தந்தியனுப்பி சாரதா என்ற தாசியைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கிறேன். அதுவுமன்றி, உமக்கு இந்த ஊரில் இன்னம் எத்தனை வீடுகள் இருக்கின்றனவோ, அவைகளை எல்லாம், நான் கிரமப்படி சோதனை போட்டுப் பார்த்துவிட வேண்டும். இல்லாவிட்டால், பிற்பாடு, அதைப்பற்றி ஏதாவது கேள்வி பிறக்கும். ஆகையால் உம்முடைய வீட்டு விலாசங்களைக் கொடும். இதோ இருக்கும் வீட்டில்தான் யாரோ சாயப்பு இருக்கிறார். அந்த வீட்டை நான் இப்போதே சோதனை போட்டுப் பார்த்துவிடுகிறேன். பிறகு மற்றவைகளுக்குப் போகிறேன்” என்றார்.

உடனே மாசிலாமணி, தங்களுக்குச் சொந்தமான மற்ற இரண்டு வீடுகளின் விலாசத்தையும் சொல்ல, இன்ஸ்பெக்டர் தமது கை நோட்டுப் புஸ்தகத்தில் குறித்துக் கொண்டபின் தம்மோடு வந்திருந்த இரண்டு ஜெவான்களை நோக்கி, “அடேய், நீங்கள் இரண்டு பேரும் இந்த மதிலடியிலேயே நின்று கொண்டிருங்கள். நான் மற்ற ஜெவான்களை அழைத்துக் கொண்டு உடனே போய், சாயப்பு இருக்கும் இந்த வீட்டைச் சோதனை போட்டுப் பார்க்கிறேன். நாங்கள் இங்கே இருந்து, அங்கே போய்ச் சோதனை போடுவதற்குள், சட்டைநாத பிள்ளை அந்த வீட்டிற்குள் இருந்து ஒருவேளை இந்த வீட்டிற்குள் வந்தாலும் வந்திருக்கலாம் என்ற சந்தேகம், நம்முடைய மனசிலேயே பின்னால் உதித்து வதைக்கும். அதற்கு இடங்கொடுக்காமல், செய்வதைத் திருந்தச் செய்துவிடுவோம்” என்று கூறிவிட்டு மாசிலாமணியின் முகத்தை உற்று நோக்கினார். சாயப்பு இருக்கும் வீட்டை தாம் சோதனை போடப் போவதாகச் சொல்வதைக் கேட்டு, அவன் ஒருவேளை அஞ்சிக் கலங்குகிறானோ என்பதைக் கவனித்தார். அவனது முகம் நிச்சலனமாகவும், எந்தக் குறிப்பையும் தோற்றுவியாமலும் இருந்தது. இன்ஸ்பெக்டர் அதற்கு மேல் மாசிலாமணியோடு யாதொரு வார்த்தையும் பேசாமல் ஜெவான்களை மதிலண்டை நிறுத்திவிட்டு மாசிலாமணியை அழைத்துக் கொண்டு, வந்த வழியாகவே திரும்பி அவனது மாளிகைக்குள் போய், அவ்விடத்தில் முன்பக்கத்திலும், பின் பக்கத்திலும் நிற்க வைக்கப் பட்டிருந்த நான்கு ஜெவான்களையும் அழைத்துக் கொண்டு, வெளியில் நின்ற மோட்டார் வண்டியில் ஏறி உடனே பின்பக்கத் தெருவை நோக்கி விரைவாகச் சென்றுவிட்டார்.

அதன் பிறகு ஒரு நாழிகை அவகாசம் கழிந்தது. தனது மாளிகையில் இருந்த மாசிலாமணி மறுபடியும் பின்புறத் தோட்டத்தை அடைந்து, மதில் பக்கம் நோக்கினான். அவ்விடத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த ஜெவான்கள் இருவரும் காணப்படவில்லை. அது அவனது மனதில் ஒருவித ஆச்சரியத்தை விளைவித்தது. ஆனால் அவன் அடுத்த கூடினத்தில் தனக்குள் ஒருவித சமாதானம் செய்து கொண்டான். போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிலுக்கு அப்பால் இருந்த வீட்டைச் சோதனை செய்து பார்த்துவிட்டு, ஜெவான்களை மதிலின் வழியாக அப்புறத்திற்கு அழைத்துக் கொண்டு போயிருக்கலாம் என்ற எண்ணம் அவனது மனதில் உதித்தது. அவன் உடனே தோட்டத்திற்குள் போய் மதிலண்டை நெருங்கி, அவ்விடத்திலிருந்த கொய்யாமரத்தின் மேலேறி அப்பால் நோக்கினான். அப்புறத்தில் மனிதர் எவரும் காணப்படவில்லை. உடனே மாசிலாமணி அவ்விடத்தை விட்டுத் தனது மாளிகையை அடைந்து முன்வாசல் பின்வாசல் ஆகிய இரண்டின் கதவுகளையும் மூடி உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டு முதல் கட்டில் இருந்தபடி, மேன்மாடத்தில் ஏறி அதன் கூடத்தில் ஊஞ்சற் பலகை போல, சங்கிலிகளால் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு சப்பிர மஞ்சத்தில் உட்கார்ந்து அதன்மேல் தலையணைகளில் உல்லாசமாகச் சாய்ந்து கொண்டு, சிறிது தூரத்திற்கப்பால் இருந்த உத்திரத்திற்கும் சங்கிலிக்குமாய்ப் பிணைக்கப்பட்டிருந்த ஒரு மணிக்கயிற்றின் நுனியை அவிழ்த்துக் கையில் பிடித்து இழுக்கத் தொடங்கினான். உடனே அந்தத் தொட்டில் மஞ்சம், மனிதர் நின்று ஆட்டிவிடுவது போல அங்கும் இங்கும் போய்வந்து, ஊஞ்சல் போல ஆடத் தொடங்கியது. அவ்வாறு அவன் ஆனந்தமாகச் சாய்ந்து ஆடிக்கொண்டு சந்தோஷமாக இருக்க, மஞ்சத்தின் சங்கிலிகள் மேலே இருந்த நாகபாசங்களில் உராய்வதால் ஏற்பட்ட ஓசை கீச்சு மூச்சென்று பலமாக உண்டாக்கிக் கொண்டிருந்தது. அவ்வாறு கால் நாழிகை காலம் கழிந்திருக்கலாம். பக்கத்தில் இருந்த சுவரில் ஓர் ஆள் உயரத்திற்கு மேல், வெளிச்சத்திற்காக மூன்றடி சதுரத்தில் விடப்பட்டிருந்த திறப்பை மறைத்துக் கொண்டிருந்த பச்சைக் கண்ணாடிக் கதவு திறந்து கொண்டது. அடுத்த நிமிஷத்தில் ஒரு மனிதன் அந்தத் திறப்பின் வழியாகத் தனது சரீரத்தை உள்ளே நுழைத்துப் பின்புறமாகத் திரும்பி உள்பக்கத்தில் பொத்தென்று குதித்து எழுந்து நின்றான். திறப்பின் கண்ணாடிக் கதவு தானாகவே மூடிக்கொண்டது. அவ்வாறு தோன்றிய மனிதன் மாசிலாமணி உட்கார்ந்து ஆடிக்கொண்டிருந்த மஞ்சத்தருகில் சுவரோரமாகப் போடப்பட்டிருந்த ஒரு விசிப்பலகையண்டை வந்து அதன் மேல் உட்கார்ந்து கொண்டான். உடனே மாசிலாமணி மஞ்சம் ஆடாம்ல் நிறுத்திவிட்டு விசிப்பலகையில் உட்கார்ந்தவனை நோக்கிப் புன்னகை செய்து, “என்ன சேர்வைகாரரே! நீர் வந்து நிரம்பவும் நேரமாகிறதோ?” என்றான்.

இடும்பன் சேர்வைகாரன்:- இல்லை எசுமானே! நான் வந்து கால் நாழிகை நேரந்தான் இருக்கும். செந்தலைப் பூச்சிகள் இங்கே வந்து விட்டுப் போனதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்குள் நீங்கள் மஞ்சத்தில் ஆடிய சத்தம் கேட்டது. நீங்கள் என்னோடு பேச ஆயத்தமாய் இருப்பதாக நிச்சயித்துக் கொண்டு மேலே ஏறிவந்தேன். இங்கே ஏதாவது விசேஷம் உண்டா? — என்றான்.

மாசிலாமணி சந்தோஷமாகப் புன்னகை செய்து, “இங்கே வேறே என்ன விசேஷம் நடக்கப்போகிறது! இந்தப் போலிஸ் நாய்கள் வந்து குலைத்துவிட்டுப் போகும் என்று நாம் எதிர்பார்த்தது தானே; அப்படித்தான் நடந்தது. நம்முடைய வெண்ணெய் வெட்டி சிப்பாயி அண்ணாவையங்கார் இருக்கிறான் அல்லவா, அவன் தான் வந்து உப்பில்லாமல் கலக்கஞ்சி குடித்துவிடுவதாக ஆடம்பரம் செய்துவிட்டுப் போனான். இந்த வீட்டை எல்லாம் பார்த்தான்; பின்பக்கத்து வீட்டையும், மற்ற வீடுகளையும் சோதனை போடுவதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான். வீட்டுக்கு எதிரிலும், என்னுடைய மற்ற விடுகளுக்கு எதிரிலும் ஜெவான்கள் நிற்க வைத்திருக்கிறான் போலிருக்கிறது” எனக் கூறினான்.

இடும்பன் சேர்வைகாரன், “இந்த போலீஸ் நாய்களுக்கு வேறே என்ன தெரியும் செத்த பிணங்களை அடிப்பதில் அவர்கள்தான் அசகாய சூரர்கள் ஆயிற்றே! அதுவும் நம்முடைய அண்ணாவையங்கார் இருக்கிறான் அல்லவா அவனை பிரகஸ்பதி என்று தான் சொல்ல வேண்டும். என்னவோ அவனும் காக்கை பிடித்துப் பிடித்து இவ்வளவு பெரிய உத்தியோகத்துக்கு வந்துவிட்டான். வாய் உருட்டல் தான் பலமாயிருக்குமே யொழிய, அவனால் ஒரு காரியம் கூடச் சாய்கிறதில்லை. அவன் வந்து கொஞ்ச நேரம் கத்தி விட்டுப் போனால் போகட்டும். அதனால் நமக்கு என்ன நஷ்டம்? ஒன்றுமில்லை” என்றான்.

மாசிலாமணி ஏளனமாக நகைத்து, “இந்த அண்ணாவையங்கார் இடத்தில் இன்னொரு திறமை இருக்கிறது பார்த்தீரா? நான் நிமிஷத்துக்கு நிமிஷம் புதிய புதிய சலவை வேஷ்டிகள் மாற்றி மாற்றிக் கட்டுகிறேன். அதில் எப்படியோ அழுக்கு அடைந்து விடுகிறது. இந்த இன்ஸ்பெக்டருடைய உடுப்பும் பூட்சுகளும் எப்போது பார்த்தாலும் ஒரே மாதிரியாக ஓர் அற்ப மாசுகூடப் படியாமல் மினுமினுப்பாக மின்னுகின்றன பார்த்தீரா? அந்த விஷயத்தில் இந்த இன்ஸ்பெக்டருக்கு நிகர் யாரும் சொல்ல முடியாது” என்றான்.

இடும்பன் சேர்வைகாரன், “மற்ற யோக்கியதை எதுவும் இல்லாவிட்டாலும், அதாவது இல்லாவிட்டால், அவனை யார் மதிக்கப் போகிறார்கள். அவன் ஆடம்பரமான உடைகளை அணிந்து மேலே நிமிர்ந்தபடி அமர்த்தலாகவும் அலட்சியமாகவும் பார்த்தபடி மற்றவரிடம் பேசுவதைக் கண்டாலே, அவனிடம் ஏதோ பிரமாதமான சரக்கு இருக்கிறதென்று எல்லோரும் நினைத்து அவனைக் கண்டு பயப்படுவார்கள். இந்தப் போலீஸ் முக்கால் வாசிப்பேர் அப்படிப்பட்ட வெளிப்பகட்டு ஆள்கள்தான் என்பது பிரசித்தமான விஷயந்தானே” என்றான்.

மாசிலாமணி, “இருந்தாலும் அரை வாயன் கால் வாயன் எல்லாம் இந்த அண்ணாவையங்காரோடு பேசி வெல்வது கஷ்டந்தான். நான் எவ்வளவோ தந்திரமாகப் பேசுகிறேன். அவன் மடக்கி மடக்கி ஆளைக் கலக்கிவிடுகிறான். இருந்தாலும், அவனுடைய ஆடம்பரம் எல்லாம் என்னிடம் சாயவில்லை. பேசாமல் வாயை மூடிக்கொண்டு போய்விட்டான். இரண்டொரு தினங்களில் ஏதோ துப்பு விசாரித்து உண்மையைத் தெரிந்துகொண்டு அதன்மேல் என்னைப் பிடித்துக்கொள்ளப் போகிறதாகவும் பயமுறுத்தினான்” என்றான்.

இடும்பன் சேர்வைக்காரன், “அப்படியே செய்து கொள்ளட்டும்! யார் அவனைத் தடுத்தார்கள்!” என்றான்.

மாசிலாமணி, “யாரும் தடுக்கவில்லை. இப்போது இருக்கும் நிலைமையில் நாம் இவர்களைப் பற்றிக் கொஞ்சம் கூட பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள் எவ்வளவுதான் பகீரதப் பிரயத்தனம் செய்து தலைகீழாய்க் குட்டிக்கரணம் போட்டாலும், என் அண்ணன் தப்பிய விஷயத்தில் இவர்கள் என்னைச் சம்பந்தப்படுத்த முடியவே முடியாது. கடைசி வரையில் நான் இந்த ஊர்த் தந்தி ஆபீசைப் பற்றித்தான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், அது நாம் எதிர்பார்த்தபடியே நிறைவேறிவிட்டது. தஞ்சாவூரில் அவர்கள் காலை சுமார் 10 அல்லது 10-30 மணிக்குத் தந்தி கொடுத்திருக்கலாம். அது இங்கே 11 மணிக்குள் வந்திருக்க வேண்டும். அப்படி இருக்க, இது சுமார் 1 மணிக்கு வந்ததைப்பற்றி, எப்படியும் இவர்கள் சந்தேகங் கொள்ளாமலா இருப்பார்கள். அந்த விஷயத்தில் இவர்கள் சந்தேகங்கொண்டு அதன் காரணம் என்னவென்று விசாரித்தாலும் விசாரிப்பார்கள். விசாரித்தால், அதில் உண்மை வெளிப்படப் போகிறதில்லை. பார்த்துக் கொள்ளலாம். இந்த விஷயம் இருக்கட்டும். மன்னார்கோவில் சங்கதிகள் எல்லாம் எப்படி இருக்கின்றன? விசாரித்துக் கொண்டு வந்தீரா? நம்முடைய ஆள்கள் இரண்டு பேரும் எதிரிகள் சந்தேகப்படாதபடி இருந்து எல்லாச் சங்கதிகளையும் கிரகித்து வருகிறார்களா” என்றான்.

இடும்பன் சேர்வைகாரன், “ஆகா! நம்முடைய ஆள்கள் இரண்டு பேரும் சாதாரண ஆள்கள் அல்ல. அந்த திகம்பரசாமியார் அல்ல, அவரைவிட ஆயிரம் மடங்கு அதிக திறமைசாலி ஆனவர்களையும் ஏமாற்றிவிடக் கூடியவர்கள். அவர்களைப் பற்றி எதிரிகள் இது வரையில் கொஞ்சமும் சந்தேகப்படவே இல்லை. உங்களுடைய தமயனார் வெளியில் வந்து விட்டதைக் கேட்டவுடனே திகம்பர சாமியார், கண்ணப்பா முதலிய எல்லோரும் பெரும் பீதியடைந்து எந்த நிமிஷத்தில் தமக்கு எப்படிப்பட்ட அபாயம் நேருமோ என்று நினைத்து நிரம்பவும் பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள். அப்படி இருந்தபடியே திகம்பரசாமியார் உங்கள் அண்ணனைப் பிடிப்பதற்காக ஏதேதோ யோசனையும் சூழ்ச்சிகளும் செய்து கொண்டிருப்பதோடு, தஞ்சை சூபரின்டென்டெண்டுக்கும் இந்த அண்ணா வையங்காருக்கும் ஓயாமல் ஏதோ தந்தி அனுப்பிக் கொண்டே இருக்கிறாராம். அது நிற்க, அடுத்த வெள்ளிக்கிழமை பட்டணத்தில் நிச்சயதாம்பூலம் மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள். வேலாயுதம் பிள்ளை ஒரு லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள வரிசைகளோடு போய் நிச்சயதார்த்தம் முடிக்கப் போகிறாராம். புதன்கிழமை ராத்திரி 6 முதல் வகுப்பு வண்டிகளில் சுமார் 50 ஜனங்கள் பட்டணம் போகப் போகிறார்களாம். சென்னப் பட்டணம் கலெக்டர் பட்டாபிராம பிள்ளையினுடைய மகள் தெய்வ ரம்பை போலவே அவ்வளவு சொகுசாக இருக்கிறாளாம். வடிவாம்பாளைக் காட்டிலும் அந்தப் பெண் அதிக அழகுடையவளாம். அவளுடைய பெயர் மனோன்மணியாம். அவள் பி.ஏ. வகுப்பில் படிக்கிறாளாம். அந்தக் கலெக்டருக்கு ஆண் சந்ததியே இல்லையாம். அவருக்கு இரண்டு லட்சத்துக்குச் சொத்திருக்கிறதாம். அதுவும் கடைசியில் கந்தசாமியைத்தான் சேருமாம்” என்றான்.

மாசிலாமணி, “ஓகோ! அப்படியா சங்கதி அந்தப் பட்டாபிராம பிள்ளை என் அண்ணனைக் கடைசி வரையில் ஏமாற்றி மூன்று நாள் தூங்காமல் கண்விழிக்கச் செய்து கடைசி தினம் அழைத்து வைத்துக் கொண்டு ரகசியங்களை எல்லாம் கிரகித்தான் அல்லவா? அப்போது அவன் செய்த தந்திரம் என்ன என்பது உமக்குத் தெரியுமா? தனக்கு ஒரே பெண் இருப்பதாகவும், அந்தப் பெண்ணை எனக்குக் கட்டிக்கொடுத்துத் தனது சொத்துகளை எல்லாம் பெண்ணுக்கு எழுதிவைத்து விடுவதாகவும் சொல்லி அண்ணனை ஏமாற்றினான் அல்லவா அந்த மோசக்காரன். அந்தப் பெண் அவனுடைய வாக்குப்படி என்னுடைய பெண்சாதி அல்லவா. வடிவாம்பாளை நான் கட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளை நாங்கள் கடைசி வரையில் வளர்த்தோம். அவளைக் கண்ணப்பா அபகரித்துக் கொண்டான். பட்டாபிராம பிள்ளை தானாகவே என் அண்ணனைக் கூப்பிட்டு, பரிச்சயம் செய்து கொண்டு, தன் மகளை எனக்குக் கொடுப்பதாக வாக்குறுதி சொல்லி எங்களைப் படுகுழியில் இறக்கினான். அவன் விஷயத்திலும் பழிதீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை என் மனசில் இருந்து வருகிறது. அதற்கு இதுதான் சந்தர்ப்பம். அவன் எனக்குக் கொடுப்பதாகச் சொன்னபடி அவளை நான் எப்படியும் கொண்டு வந்து கற்பழித்து மானபங்கம் செய்து கொஞ்ச காலம் வைத்திருந்து துரத்திவிட்டால் அவர்கள் செருக்குக்கு அதுவே போதுமான தண்டனையாகும். பரிசம் போடுவதற்காக இவர்கள் தயார் செய்திருக்கும் சாமான்களையும் நாம் அப்படியே அபகரித்துவிட வேண்டும். இவர்கள் சகலமான ஏற்பாடுகளையும் செய்து முடிவில் ஏமாறி அவமானப்பட்டுப் போக வேண்டும். இன்னார் கொண்டு போனார்கள் என்ற குறிப்பே தெரியாமல் நாம் அந்தப் பெண்ணை அபகரித்துக் கொண்டு வந்துவிட வேண்டும். இதனால் இரண்டு வீட்டாருக்கும் பெருத்த துயரமும் மானக் கேடும் உண்டாவது நிச்சயம்! முதலில் நாம் இந்தக் காரியத்தை முடிப்போம். இது நிறைவேறியவுடனே, திகம்பரசாமியார், கண்ணப்பா முதலியோரை ஒவ்வொருவராகப் பிடித்து வந்து காளி கோவிலில் பலிகொடுத்து விடுவோம். நாம் செய்வதை எல்லாம் ஒரே முட்டாகச் செய்தால், நமது பேரில் உடனே சந்தேகம் உண்டாகிவிடும். ஒரு காரியத்தை முடிப்பது; பிறகு கொஞ்சம் ஆறப்போடுகிறது; பிறகு இன்னொன்றைச் செய்வது. இப்படியே நாம் நம்முடைய பகைவரை எல்லாம் ஒருவர்பின் ஒருவராய் வெகு சீக்கிரத்தில் வேரறுத்து விடவேண்டும். போலீசார் இந்திரஜாலம், மகேந்திரஜாலம் செய்து குட்டிக்கரணம் போட்டால் கூட, இவைகளை எல்லாம் நாம்தான் செய்தோம் என்பதற்கு ஓர் அனுப்பிரமாணங்கூட ருஜூ இருக்கக்கூடாது. அவ்வளவு தந்திரமாக நாம் காரியங்களை முடிக்க வேண்டும்” என்றான்.

இடும்பன் சேர்வைகாரன் சிறது யோசனை செய்தபின், “ஒரு காரியம் எனக்கு நிரம்பவும் உசிதமாகத் தோன்றுகிறது. அந்த திகம்பரசாமியார் சுயேச்சையாக இருக்கையில், நாம் எந்தக் காரியம் செய்தாலும், அவன் அதற்குத்தக்க மார்க்கம் தேடி நம்மை எப்படியாவது பிடித்துவிடுவான். ஆகையால், அவனை நாம் பிடித்து முதல் பலி கொடுத்துவிட்டால், பிறகு மற்றவர்களைப் பிடிப்பது வெகுசுலபமான காரியம். அதுவுமன்றி, மற்றவர்கள் அவ்வளவு அக்கறையாகப் பாடுபட்டு குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கவும் மாட்டார்கள். நாம் கொண்டு வருவோரை விடுவிக்கவும் அவ்வளவாக முயற்சி செய்யமாட்டார்கள்” என்றான்.

மாசிலாமணி:- அது வாஸ்தவம் தான். அவன்தான் எப்போதும் தக்க பந்தோபஸ்தோடு இருக்கிறான் என்கிறீரே; அவனை நாம் எப்படி முதலில் பிடிக்கிறது?

இடும்பன் சேர்வைகாரன்:- அவன் எப்போதும் பந்தோபஸ்தோடு தான் இருக்கிறான். அவன் இருக்கும் ஜாகையில் எப்போதும், 7, 8 ஜெவான்கள் கத்தி துப்பாக்கிகளோடு பாராக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவன் ஏதாவது ஒரு குறித்த நேரத்தில், எங்கேயாவது வெளியில் போகிறான் என்ற நிச்சயம் ஏற்பட்டால், நாம் ஆள்களோடு மறைந்திருந்து அவனைப் பிடித்துக் கொண்டு வந்துவிடலாம். அவன் வெளியில் போகிறதும் தெரிகிறதில்லை; வருகிறதும் தெரிகிறதில்லை. அவனுடைய ஜாகையில் ஒரு மோட்டார் வண்டியும் ஒரு பெட்டி வண்டியும் இருக்கின்றன. பெட்டி வண்டியில் இருப்பது போல, மோட்டார் வண்டியிலும் மனிதர் - உட்காரும் இடம் மறைக்கப்பட்டு இருக்கிறது. எப்போதோ வண்டி போகிறது; எப்போதோ வருகிறது. அதற்குள் இன்னார் இருக்கிறார்கள் என்பது தெரிகிறதில்லை. ஒருமாச காலமாக நான் நேரில் ஒளிந்திருந்தும், ஆள்களை வைத்தும் பார்த்தேன். ஒரு சமயம் நானே ஒரு குடுகுடுப்பாண்டி போல வேஷம் போட்டுக் கொண்டு போய், அவனுடைய பங்களாவிற்குள் நுழைந்து, உள்பக்கத்தின் அமைப்பு எப்படி இருக்கிறது என்று பார்த்தேன். இன்னொரு நாள் நான் ஒரு பெரிய மிராசுதார் போல விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு பங்களாவிற்குள் நுழைந்து அவனைக் கண்டு ஒரு கும்பிடு போட்டு பெரும் புளுகாக ஒரு புளுகு புளுகினேன். அதாவது, நான் இருப்பது குத்தாலம் என்றும், அவனுடைய மைத்துனனான குமாரசாமி பிள்ளை எனக்கு ஆப்த நண்பன் என்றும், நான் ஒரு காரியமாக மன்னார் கோவிலுக்கு வந்தேன் என்றும், அவனைப் பார்த்து அவனுடைய குடும்ப கூேடிமச் செய்தியைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வரும்படி குமாரசாமி பிள்ளை சொன்னதாகவும், அவனுடைய பெரும் புகழையும், நற்குணங்களையும் கேட்டு, அவனை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை நெடுநாளாக இருந்தது ஆகையால், அதையும் உத்தேசித்து அவனை ஒரு தடவை பார்த்துவிட்டுப் போக எண்ணி வந்ததாகவும் சொன்னேன். அவன் என்னை அத்யந்த பிரமையோடு உபசரித்து எனக்குப் போஜனம் அளித்து நெடுநேரம் வரையில் என்னிடம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்து என்னை அனுப்பி வைத்தான். அப்போது நான் அவனுடைய ஜாகையின் உள் பக்கங்களை எல்லாம் நன்றாகப் பார்த்தேன். அவனுடைய நடவடிக்கைகளையும் குண விசேஷங்களையும் உற்றுக் கவனித்தேன். அவனிடம் நெருங்கி நான் பார்த்ததில், நான் அவன் விஷயத்தில் அதற்கு முன் கொண்டிருந்த பகைமையும், குரோதமும், அருவருப்பும் தானாகவே மாறிப்போய் விட்டன. அவன் பார்வைக்குச் சர்வ சாதாரணமான மனிதனைப் போலக் காணப்பட்டாலும், அவனுக்குள் தெய்விகமான சக்தி ஏதோ இருக்கிறதென்பது நன்றாகத் தெரிகிறது. அவனுக்குள் மறைந்திருக்கும் ஆத்மா சகலமான அம்சங்களிலும் பரிபக்குவமடைந்த ஒரு மகரிஷியின் ஆத்மா என்பது. வைரக்கற்களைப் போல ஜிலுஜிலுவென்று மின்னும் அவனுடைய கண்களில் இருந்து, எளிதில் வெளிப்படுகிறது. அவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் திரிகால ஞானியின் தீர்க்கதரிசனம் போல த்வனிக்கிறது. அவன் தனக்கென்று எந்தக் காரியமும் செய்யப் பிரியப்படுவதாகத் தோன்றவில்லை. உலகத்தில் உள்ள சகலமான ஜனங்களின் துயரத்தையும் துன்பங்களையும் விலக்கும் விஷயத்தில் தன்னால் இயன்ற வரையில் உதவி செய்யவேண்டும் என்ற கொள்கையையும், தான் ஜென்மம் எடுத்திருப்பது அதற்காகத்தான் என்ற உறுதியையும் விடாமல் கடைப்பிடித்தவனாய் இருக்கிறான். தனக்குப் பொருள் தேட வேண்டும் என்றாவது, தனது உடம்பைப் போஷிக்க வேண்டும் என்றாவது அவன் கொஞ்சமும் கவலைப்படுவதாகவே தோன்றவில்லை. அவனுடைய சம்சாரமும் அவனைப் போலவே பெருத்த தத்துவ ஞானியாக இருக்கிறாள். அதுவுமன்றி, அவர்கள் இருவரும் தங்களுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற கவலையே கொண்டவர்களாகத் தோன்றவில்லை. தாங்கள் எவ்வளவு காலம் இந்த உலகில் ஜீவித்திருக்க வரம் வாங்கி வந்திருக்கிறோமே அவ்வளவு காலம் எப்படியும் இருப்போம் என்றும், பிறருக்கு உதவி செய்வதில் தங்களுடைய உயிர் போனால் கூட அது ஒரு பொருட்டல்ல என்றும், அவர்கள் எனக்கெதிரில் இரண்டு மூன்று தடவைகள் சொல்லிவிட்டார்கள். அவர்கள் போஜனம் செய்வதும் நிரம்பவும் மிதமாகத்தான் இருக்கிறது. அவர்கள் எப்போது போஜனம் செய்கிறார்கள், எதைப் போஜனம் செய்கிறார்கள் என்ற விவரம் அவர்களோடு இருப்பவர்களுக்குக்கூடத் தெரிகிறதில்லை. நான் வெகுநேரம் வரையில் அவர்களோடு இருந்து பழகிவிட்டுக் கடைசியில் வந்துவிட்டேன். அவர்கள் உலகத்தில் யார் மீதும் பகையாவது, பற்றாவது வைத்திருப்பவராகவே தோன்றவில்லை. உலகத்தில் அக்கிரமமான வழிக்குப் போகாமல் ஒழுங்காக நடக்கும் மனிதர் யாராக இருந்தாலும் அப்படிப்பட்டவர்களுக்கு அவர்கள் பந்துக்கள்தான். அக்கிரமம், துன்மார்க்கம், துஷ்டத்தனம் முதலியவை உடையவர்கள் அவர்களுக்குப் பகைவர்கள். மற்றபடி யாராக இருந்தாலும், அவர்களுக்கு வித்தியாசம் கிடையாது. அந்தக் கண்ணப்பாவே ஏதாவது துன்மார்க்கமான காரியத்தில் பிரவேசிப்பானானால், அவனுக்குக்கூட, அவர்கள் விரோதியாகி விடுவார்கள். அதுபோல, நீங்கள் நல்ல வழியில் நடந்து, பிறர் உங்களுக்கு ஏதாவது தீங்கு செய்தால், அவர்கள் உங்களுக்கும் உதவி செய்ய முன் வருவார்கள். அவனும் அவன் மனைவியும் இப்படிப்பட்ட பற்றற்ற சந்நியாசிகளாக இருக்கிறார்கள். அவனைப் பிடித்து வதைப்பதற்கு என் மனம் இடந்தரவே இல்லை. ஆனாலும் அவனை நாம் அசட்டை செய்து விட்டுவிடவும் முடியவில்லை. நான் யோசித்து யோசித்துப் பார்த்துக் கடைசியில் அவனை மாத்திரமாவது நாம் எப்படியும் பிடித்துக்கொண்டு வந்து நாம் எண்ணியபடி செய்து தான் தீர வேண்டும் என்ற முடிவையே செய்து கொண்டேன். ஆனாலும், அவனை எப்படிப் பிடிக்கிறது என்ற யோசனைதான் திருப்திகரமாகப் புலப்படவில்லை.

மாசிலாமணி:- (சிறிது நேரம் ஆழ்ந்த யோசனை செய்து) ஏது சேர்வைகாரரே நீர் கூட அந்த ஆண்டிப்பயலுடைய வலையில் வீழ்ந்து விட்டீர் போல் இருக்கிறதே! உமக்கு அவன் ஏதாவது சொக்குப்பொடி போட்டு விட்டானா? அவன் எப்போதும் ஏழைக் குறும்பன் ஆயிற்றே! அவனைப் பார்த்து நீர் இரக்கங் கொள்கிறீரே! அவன் வெளிக்கு இப்படி ஆண்டி வேஷம் போடுகிறானே அன்றி அவனைப் போன்ற ஆணவமும் ஆங்காரமும் மூர்க்கமான ஆசா பாசங்களும் உடையவன் இந்த உலகத்தில் வேறே யாரும் இருக்கவேமாட்டான் என்பது என்னுடைய எண்ணம். ஊரில் யார் யாருக்குத் தீங்கு செய்தால் அவனுக்கு என்ன? அவன் என்ன நம்மை எல்லாம் படைத்த ஈசுவரனிடம் சர்வ அதிகாரமும் பெற்ற ஏஜண்டா? உலகத்தில் துஷ்டநிக்ரகம் சிஷ்ட பரிபாலனம் செய்ய மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்ததாகக் கேள்விப்பட்டு இருக்கிறோம். இவன் என்ன? மகாவிஷ்ணுவின் பதினோராவது அவதாரமா? மனிதருக்கு மனிதர் ஆயிரம் சச்சரவுகளும் மனஸ்தாபங்களும் இருக்கும். ஒருவருக்கொருவர் எத்தனை நன்மைகளையோ தீமைகளையோ செய்து கொள்ளுவார்கள். அதில் எல்லாம் அவன் தலையிட்டு ஒருவனுக்காகப் பரிந்து இன்னொருவனைப் பகைத்துக் கெடுதல் செய்வதென்றால், அவன் உண்மையில் பெரிய மனிதனாகமாட்டான். ஒருவன் வாஸ்தவத்தில் சாத்விக புருஷன் ஆகவேண்டுமானால், அவன் சகலமான மனிதரையும் சமமாக பாவிக்க வேண்டும். அவனுக்கு வெறுப்பு விருப்பு என்ற வேற்றுமையே இருக்கக் கூடாது. நம்முடைய மகரிஷிகள் எல்லாம் காட்டில் தவம் செய்யும் போது, சிங்கம், புலி, பாம்பு முதலியவை அவர்களோடு வேற்றுமை இன்றிப் பழகி அவர்களுக்கு யாதொரு திங்கும் செய்யாமல் பக்கத்திலேயே இருக்கும் என்று சொல்லுவார்களே! அதுபோல, அவன் நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தாலும், எல்லோரையும் சமமாக பாவித்து, அன்பென்ற மருந்தினால் கெட்டவனையும் நல்வழிக்குத் திருப்ப முயல வேண்டும். அது முடியாவிட்டால், தன் ஜோலியைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்துவிட வேண்டும். அப்படிப்பட்ட மேன்மைக் குணம் அவனிடம் மருந்துக்குமில்லை. குற்றம் செய்தவனை மன்னித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்ற சுத்தசாத்விக குணம் அவனிடத்தில் எள்ளளவும் கிடையாது. குற்றம் செய்தவனை எப்பாடு பட்டாவது எவ்வித தந்திரம் செய்தாவது தண்டிக்க வேண்டும் என்ற ராஜஸ குணமே அவனிடம் எப்போதும் மேலாடி நிற்கிறது. ஆகையால், அவனை மகான் என்று கருதவே இடமில்லை. அவனுடைய விஷயத்தில் நாம் இரக்கம் கொள்வதற்கும் அவன் அருகமானவன் அன்று. பார்ப்பதற்கு அவன் பரம சாதுவைப் போல இருந்தாலும், அவனுடைய உடம்பில் மயிர்க்காலுக்கு மயிர்கால் விஷம் மறைந்து நிற்கிறது. ஒரு பாம்பு தேள் முதலிய விஷஜெந்துவைக் கண்டால், அவற்றினிடம் கொஞ்சமாவது தயை தாகூடிணியம் பாராமல் நாம் எப்படி நசுக்குகிறோமோ, அப்படியே நாம் அவன் விஷயத்திலும் நடந்து கொள்ள வேண்டும். ஆகையால், நீர் அவன் விஷயத்தில் கொஞ்சமாவது இரங்காமல் காரியத்தை நிறைவேற்ற வேண்டும். இப்படி எல்லாம் பலவகைப்பட்ட தந்திரங்களைச் செய்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப் பதை விட ஒரே ஒரு காலத்தில் எல்லாரையும் ஒழித்துவிடலாம் என்று நினைக்கிறேன். பல திட்டுகளுக்கு ஒரே முழுக்கா முழுகுவது போல எல்லோருடைய பகைமையையும் தீர்த்துக் கொள்ள அது ஒரே மருந்தாக இருக்கும். அப்படியே செய்வது உசிதமான காரியம் என்று நினைக்கிறேன்.

இ. சேர்வைகாரன்:- ஏது எஜமான் என்மேல் கூட சந்தேகங் கொள்ளுகிறது போல் இருக்கிறதே. நான் நேரில் கண்ட சங்கதியையும், அப்போது என் மனசு நினைத்ததையும் உள்ளபடியே உங்களிடம் வெளியிட்டேன் அன்றி, அவன் விஷயத்தில் நான் இரக்கங்கொண்டு அவனை விட்டுவிடப் போவதாகச் சொன்னேனா? அப்படி ஒன்றும் சொன்னதாக ஞாபகமில்லையே. காரியத்தை எப்படி முடிக்க வேண்டும் என்று நீங்கள் உத்தரவு கொடுக்கிறீர்களோ, அப்படியே நான் நிறைவேற்றி வைக்கத் தடை இல்லை. அதனால், என் உயிரும், என் ஆட்களின் உயிரும் போனால் கூட நான் பார்க்கக் கூடியவனல்ல. உங்களுக்கு ஏதோ ஓர் யோசனை தோன்றிய தாகச் சொன்னீர்களே, அதை வெளியிடுங்கள். அதன்படி நான் நடந்து கொள்ளுகிறேன்.

மாசிலாமணி:- வேறொன்றும் இல்லை. இப்போது நீர் சில சங்கதிகள் சொன்னீர் அல்லவா, வருகிற புதன்கிழமை அன்று மன்னார்குடியார் நிச்சயதார்த்தத்திற்காக சென்னைப் பட்டணம் போகிறார்கள் என்று சொன்னர் அல்லவா? அப்போதே நாம் நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றிவிடலாம் என்பது என் எண்ணம்.

இ. சேர்வைகாரன்:- எந்த விதமாய் நிறைவேற்றுகிறது?

மாசிலாமணி:- அவர்கள் அன்றைய தினம் இரவில் போட் மெயிலில் அல்லவா போகப் போகிறார்கள்?

இ. சேர்வைகாரன்:- ஆம்; அப்படித்தான் சொல்லக் கேள்வி.

மாசிலாமணி:- சரி; அவர்களுக்காக மன்னார் குடியில் ஆறு முதல் வகுப்பு வண்டிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் அல்லவா? -

இ. சேர்வைகாரன்:- ஆம்.

மாசிலாமணி:- அந்த வண்டிகள் எல்லாம் மன்னார்குடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்தே அவர்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு போகும். அவர்கள் நீடாமங்கலம், திருவாரூர், மாயூரம் ஆகிய மூன்று ஜங்ஷன்களின் வழியாக ரயில் மாறிக் கடைசியில் போட் மெயிலில் ஏற வேண்டும். ஆனால், அவர்களை இறக்கமாட்டார்கள். ஒவ்வொரு ஜங்ஷனிலும் அந்த ஆறு வண்டிகளையும் ஒரு ரயிலில் இருந்து கழற்றிக் கொண்டு போய் அப்படியே இன்னொரு ரயிலில் சேர்த்து விடுவார்கள். முடிவில் அவர்கள் மாயூரத்தில் போட்மெயிலை அடையும் போதும், அந்த ஆறு வண்டிகளும், போட்மெயிலில் கோர்க்கப்பட்டு விடும் என்று நினைக்கிறேன்.

இ. சேர்வைகாரன்:- ஆம், அப்படித்தான் செய்வார்கள்.

மாசிலாமணி:- எந்த வண்டியிலும் இஞ்சினுக்குப் பக்கத்தில் தான் முதலாவது, இரண்டாவது வகுப்பு வண்டிகள் பிணைக்கப் பட்டிருக்கும். அவைகளுக்குப் பின்னால் தான் மற்ற சாதாரண ஜனங்களுள்ள மூன்றாவது வகுப்பு வண்டிகள் இருக்கும்.

இ. சேர்வைகாரன்:- ஆம்; வாஸ்தவந்தான்.

மாசிலாமணி:- அந்த ஆறு வண்டிகளில், அவர்களுடைய ஜனங்கள் சுமார் 50-மனிதர்கள் அல்லவா போகப் போகிறார்கள். திகம்பரசாமியார், அவருடைய பெண்ஜாதி, வேலாயுதம் பிள்ளை, அவருடைய பெண்ஜாதி, கண்ணப்பா, வடிவாம்பாள், நடராஜ பிள்ளை, சுந்தரம்பிள்ளை, அவருடைய பெண்ஜாதி முதலிய நம்முடைய பகைவர்கள் எல்லோரும் அந்த 50 ஜனங்களுள் அடங்கியவர்கள் என்பது நிச்சயம். இன்னும் எங்களுடைய வழக்கில், எங்களுக்கு விரோதமாக சாட்சி சொன்னவர்களும், அவர்களுக்கு வேண்டியவர்களுமான வேறு பலரும் அவர்களோடுகூடப் போவார்கள் என்பது நிச்சயம். அத்தனை பேரும் ஒரே அடியாய் மாண்டு போகும்படியான ஒரு காரியத்தை நாம் செய்துவிடலாம் என்று நினைக்கிறேன். அந்தக் காரியத்தை முடிப்பதற்கு அதிகப்படியான ஆள்களும் தேவையில்லை. இரண்டொரு மனிதரை உதவிக்கு வைத்துக் கொண்டு நீர் ஒருவரே போனால், அதுவே போதுமானது. காரியம் எளிதாய் முடிந்து போகும்.

இ. சேர்வைகாரன்:- நாங்கள் எங்கே போகிறது? எப்படிக் காரியத்தை முடிக்கிறது? உங்களுடைய யோசனையை நன்றாகத் திறந்துதான் சொல்லுங்களேன்.

மாசிலாமணி:- நான் இதுவரையில் பேசிய குறிப்புகளில் இருந்து, என்னுடைய கருத்து இன்னதென்பதை நீர் இன்னமும் கிரகித்துக் கொள்ளவில்லையா?

இ. சேர்வைகாரன்:- ஒருவிதமாகக் கிரகித்துக் கொண்டேன். இருந்தாலும் நீங்கள் உங்கள் வாயால் சொல்லுகிறதுதானே.

மாசிலாமணி:- உம்முடைய ஆள்களில் இரண்டொருவர் இதற்கு முன் ரயில்வே லைன் வேலை செய்தவர்கள் என்று நீர் முன்னொரு தடவை சொன்னது எனக்கு நினைவிருக்கிறது.

இ. சேர்வைகாரன்:- ஓகோ! சரி; இப்போது நிச்சயமாகத் தெரிந்தது. அந்த போட்மெயில் போவதற்கு முன், எங்கேயாவது ஓரிடத்தில் தண்டவாளத்தைப் பெயர்த்து வைக்கலாம் என்பது உங்களுடைய யோசனை போல் இருக்கிறது.

மாசிலாமணி:- ஆம்; ஆனால், நீங்கள் தண்டவாளத்தை எடுக்கும் இடம் சாதாரணமான இடமாய் இருக்கக் கூடாது. வண்டிகள் கீழே விழுந்தால் ஜனங்கள் மறுபடி உயிரோடு மீண்டு வர முடியாமல் போய்விட வேண்டும். அப்படிப்பட்ட இடமாகப் பார்த்துத் தண்டவாளத்தை எடுக்க வேண்டும். ஆம்; அப்படிச் செய்யலாம். சிதம்பரம் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் கொள்ளிடம் என்ற பெரிய ஆறு போகிறதல்லவா, அந்த ஆற்றில் இப்போது பிரமாதமான வெள்ளம் போய்க் கொண்டிருக்கிறதாக, நான் சமீபகாலத்தில் பத்திரிகைகளில் படித்தேன். அந்த ஆற்றுப் பாலத்தில், முக்கால் பங்கு தூரம் விட்டு அதற்கு அப்பால் உள்ள தண்டவாளம் ஒன்று, அல்லது, இரண்டைப் பெயர்த்து எடுத்துவிட்டால், அதுவே போதுமானது. அந்த முக்கால் பங்கு தூரத்திற்குள் முதல் வகுப்பு வண்டிகள் அவசியம் இருக்கும். அப்படி இல்லாவிட்டாலும், இஞ்சின் முதலிய முன் வண்டிகள் அதிமிதமான வேகத்தோடு போய் விழும்போது பின் வண்டிகளையும் இழுத்துக் கொண்டே போகும். சாதாரணத் தரையாக இருந்தால், முன் வண்டிகள் விழுந்த இடத்தில் கவிழ்ந்து நின்றுவிடும். பின் வண்டிகள் கொஞ்சம் அப்புறம் இப்புறம் நகர்ந்து கீழே விழுந்துவிடும். அந்த ஆற்றில் கனத்த வெள்ளம் போகிறது. ஆகையால் இஞ்சின் முதலிய முன் வண்டிகள் வெள்ளத்தில் இழுத்துவிடுவது நிச்சயம். நம்முடைய பகைவர்கள் எல்லோரும் கூண்டோடு கைலாசம் போவது நிச்சயம். அதன் பிறகு சென்னைப் பட்டணத்தில் அந்தப் பட்டாபிராம பிள்ளை இருக்கிறான். அவன் ஒருவன் தானே. அவனைத் தொலைப்பது ஒரு பெரிய காரியமல்ல. அவனுடைய மகளை அபகரித்துக் கொண்டு வருவதும் ஓர் அரிய காரியமல்ல. முக்கியமாக அந்தப் பரதேசி நாய் ஒழிந்ததென்றால், அதன் பிறகு நமக்கு எவ்வித பயமுமில்லை. நம்முடைய அண்ணன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கக் கூடியவன் அவன் ஒருவனே. மற்ற சாதாரணப் போலீசாரால் அந்தக் காரியம் இயலாது. ஆகையால், அவன் தொலைந்தால் அண்ணன் பத்திரமாக இருக்கலாம். அவரைப் பற்றி நாம் கொஞ்சமும் கவலைப்பட வேண்டியதே இல்லை — என்றான்.

இ. சேர்வைகாரன்:- (சிறிது நேரம் யோசனை செய்த பிறகு) நீங்கள் சொல்லுகிற யோசனை ஒரு விதத்தில் நல்ல யோசனை யாகத்தான் தோன்றுகிறது. அப்படித்தான் செய்ய வேண்டும். என்று நீங்கள் ஆசைப்பட்டால் நான் அதை நிறைவேற்றி வைக்கத் தடையில்லை. ஆனால் அதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. அவர்கள் புதன்கிழமை இரவு வண்டியில் போகப் போகிறார்கள் என்று தான் நம்முடைய ஆள் சொன்னான். அது போட்மெயிலாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவனுடைய யூகமேயன்றி வேறல்ல. அவர்கள் அந்த வண்டியில் போகாவிட்டால், நாம் செய்வதால், அவர்களுக்கு யாதொரு கெடுதலும் இல்லாமல் போய்விடும். அன்றைய தினம் போகும் போட்மெயில் விழுவதனால், நிரபராதியான வேறே ஜனங்கள் மாண்டும் காயப்பட்டும் போவார்கள். அதனால், வீண் கூக்குரல் அதிகரிக்கும்; காவல் அதிகரிக்கும்; அதன் பிறகு மறுபடியும் நாம் அந்தக் காரியத்தைச் செய்வது சாத்தியம் இல்லாமல் போய்விடும். ஆகையால் நாம் அவர்கள் போகும் வண்டி இன்னது தான் என்பதை முதலில் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித் தெரிந்து கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், அவர்கள் ஏறிப்போகும் ஆறு முதல் வகுப்பு வண்டிகளை இஞ்சினுக்குப் பக்கத்தில் தான் கோர்க்கிறார்கள் என்பது என்ன நிச்சயம். பின்னால் கார்ட் வண்டிக்குப் பக்கத்திலும், தபால் வண்டிகளுக்குப் பக்கத்திலும் சில சமயங்களில் முதல் வகுப்பு இரண்டாவது வகுப்பு வண்டிகளைச் சேர்ந்திருப்பதையும் நான் பல தடவைகளில் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லோரும் நல்ல அதிர்ஷ்டசாலிகள். அதற்குத் தகுந்த படி அன்றைய தினம் தற்செயலாக அவர்களுடைய வண்டிகள் பின்பக்கத்தில் கோர்க்கப்பட்டுப் போனால், பின்பக்கத்து வண்டிகளுக்கு அவ்வளவு கெடுதல் உண்டாகும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் நினைக்கிறபடி ரயில் வண்டிகள் வெள்ளத்தில் மிதந்து போகும் என்று நான் எண்ணவில்லை. இஞ்சின், வேகமாய்ப் போய்த் தண்ணிருக்குள் புகுந்து மண்ணில் புதைந்து போகும். அதற்கு மேல் சில வண்டிகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து விழும். எல்லாவற்றிலும் வாசல், ஜன்னல் முதலியவை இருப்பதால், உள் பக்கத்தில் தண்ணீர் நுழைந்து கொள்ளும். ரயில் வண்டிகள் அதிக கனமாக இருக்கும். ஆகையால், ஒன்றன் மேல் ஒன்றாக எல்லாம் தண்ணீரில் அப்படியே உட்கார்ந்து கொள்ளும். பின்வண்டிகள் அநேகமாய் அப்படியே பாலத்தின் மேலேயே நின்றாலும் நின்றுவிடும். அல்லது அதன் மேலேயே சாய்ந்து விழுந்து, கிடந்தாலும் கிடக்கும். ஆகையால், நம்முடைய எதிரிகள் கட்டாயம் மாண்டு போவார்கள் என்பதை நாம் இப்போது திட்டமாக நிச்சயிக்க முடியாது. ஆனால் ஒரு விஷயம் மாத்திரம் நிச்சயம். ஒரு போட்மெயிலில் எல்லா வகுப்பு ஜனங்களும் சேர்ந்து சுமார் 1000 நபர்களாவது இருப்பார்கள். எத்தனையோ பெண்பிள்ளைகளும், குழந்தைகளும் இருப்பார்கள். நம்முடைய பகைவர்களான சுமார் ஏழெட்டு மனிதரைத் தண்டிப்பதற்காக நிரபராதியான ஆயிரம் ஜனங்களுக்குப் பெருத்த நாசத்தை விளைவிக்கும்படியான அவசியம் என்ன? எத்தனை ஜனங்கள் காயம்பட்டு ஓலமிட்டு அலறுவார்கள். அவர்களுள் நல்லவரும் இருப்பார்கள்; கெட்டவரும் இருப்பார்கள். அத்தனை பெயரும் வயிறெரிந்து கதறி அழும்படி செய்வது நியாயமாகுமா? நம்முடைய விரோதிகளுக்கு மாத்திரம் நாம் கெடுதல் விளைப்பதற்கு ஒருவித நியாயம் இருக்கிறது. அதைக் கருதி நாம் கசாப்புக் கடைக்காரர்களைப் போல பெருத்த படுகொலையில் இறங்கலாமா? எதிலும் மிதமாக நடந்து கொள்ள வேண்டும். எதிலும் நிர்ணயம் இருக்க வேண்டும். திருட்டு, கொலை முதலியவைகளைச் செய்வதில் கூட, நாம் கொஞ்சம் நியாயத்தை அனுசரித்தே காரியத்தை நடத்த வேண்டும். திருடப்போகிறவர்கள் கூட சாமிக்கு ஆடு வெட்டிக் கோழி வெட்டி, சாராயம், அவல், கடலை வைத்துப் படைத்துப் பூசை போட்டுவிட்டுப் புறப்படுகிறார்கள். அப்படிப்பட்ட கொடியவர்கள் கூட சுவாமிக்குப் பயந்து, அவனுடைய உதவியை நாடியே தங்கள் தொழிலை நடத்துகிறார்கள். நாம் அவர்களிலும் கேவலமானவர்கள் அல்ல. ஆகையால், நாம் இப்படிப்பட்ட பெருத்த படுகொலையில் இறங்குமுன், அதற்கு சுவாமியின் சகாயம் கிடைக்குமா என்பதை யோசித்துச் செய்ய வேண்டும். அதுவுமன்றி, நாம் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அவர்கள் நிச்சயதார்த் தத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பெறுமானம் உடைய சொத்துக்களோடு போகப் போகிறார்கள். அவ்வளவு பெரிய சொத்து ஆற்றோடு போவது யாருக்கு உபயோகப்பட போகிறது. நாம் வேறு விதமாக ஏதாவது தந்திரம் செய்து, நம்முடைய பகைவர்களைப் பிடிப்பதோடு அந்தச் சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டால், ஏழைகளான என்னுடைய ஆள்கள் தலைக்குக் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு பிழைத்துப் போவார்கள். அந்த நன்றி விசுவாசத்தை அவர்கள் மறக்காமல், நம்மிடம் இன்னம் அதிகப் பணிவாகவும் உறுதியாகவும் உண்மையாகவும் நடந்து கொள்வார்கள். இந்த விஷயங்களை, நாம் கவனிக்காவிட்டாலும், இன்னொரு முக்கியமான அம்சத்தை நாம் அசட்டையாக எண்ணக் கூடாது. அதாவது, இந்த ரயில்வே லைனில் இரவு பகல் அங்கங்கே ஆள்கள் காவல்காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் முக்கியமாக ஆற்றுப் பாலங்களுக்குப் பக்கத்தில் காவலாளிகள் இருப்பது நிச்சயம். ஒவ்வொரு வண்டியும் வருவதற்கு முன் இன்ஸ்பெக்டர் முதலியோர் வந்து பாலங்கள் சரியாய் இருக்கின்றனவா என்று தணிக்கை பார்த்துப் போவதுண்டு; நாங்கள் போய் தண்டவாளத்தைப் பெயர்ப்பதென்றால், இன்ஸ்பெக்டர் முதலியோர் வந்து பார்த்துவிட்டுப் போனபிற்பாடும், போட் மெயில் வருவதற்குள்ளும் அதை வெகு துரிதமாகச் செய்ய வேண்டும். தண்டவாளத்தைப் பெயர்ப்பதென்றால், அது எளிய காரியமல்ல. அதற்கு அதிக நேரமும் பிரயாசையும் பிடிக்கும். அப்போது பக்கத்திலிருந்து காவல்காரன் வந்தால், அவனை அடித்து வதைத்து, அவனுடைய உயிரை வாங்க வேண்டும். இவ்வளவு காரியத்தையும் நாம் திருப்திகரமாக முடித்தால், அப்போதும், நம்முடைய விரோதிகள் எல்லோரும் அழிந்து போவார்கள் என்ற நிச்சயம் கிடையாது. இந்தச் சங்கதிகளை எல்லாம் நன்றாக தீர்க்காலோசனை செய்து நீங்கள் உத்தரவு கொடுங்கள். அதன்படி நான் நிறைவேற்றத் தடை இல்லை.

மாசிலாமணி:- என்ன சேர்வைகாரரே! நான் எண்ணிய ஏற்பாட்டுக்குப் பெருத்த பெருத்த ஆட்சேபனைகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டீரே!

இ. சேர்வைகாரன்:- நீங்களே யோசித்துப் பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கு உசிதமாகப் படாவிட்டால் தள்ளி விடுங்கள்.

மாசிலாமணி:- (சிறிது யோசனை செய்து) சரி; அப்படியானால் இந்த உத்தேசத்தை இப்போது நிறுத்தி வைப்போம். வேறே என்ன விதமான யோசனை செய்யலாம் என்று நீர் எண்ணுகிறீர்? நீர் ஏதாவது ஒரு யோசனை சொன்னால், அதன்படி இப்போது நடப்போம். அதெல்லாம் பலிக்காமல் போகுமானால், இதைக் கடைசி அம்பாக வைத்துக் கொள்வோம். இந்தக் கலியாணம் அநேகமாய் சென்னைப் பட்டிணத்தில் தான் நடக்கும். இவர்கள் எல்லோரும் மறுபடி கலியாணத்திற்கு அங்கே போக நேரும். அப்போது வேண்டுமானால், ரயிலைக் கவிழ்க்கும் யோசனையை உபயோகப்படுத்திக் கொள்வோம். இப்போது வேறே ஏதாவது நல்ல யோசனையாகத் தோன்றினால் சொல்லும். அதை முடிப்போம். முதலில் திகம்பரசாமியாருடைய வேலை ஒழிய வேண்டும். இரண்டாவது, பட்டணத்தில் உள்ள மனோன்மணியம்மாள் சில தினங்களுக்குள் என்னிடம் வந்து சேர வேண்டும். மூன்றாவது, வேலாயுதம் பிள்ளை தயாரித்துள்ள வரிசைகளைச் சேர்ந்த நகைகள், பவுன்கள், புடவை ரவிக்கை முதலிய விலை பெற்ற முக்கிய சாமான்கள் எல்லாம் இங்கே வந்துவிட வேண்டும். இந்த மூன்று காரியங்களும் இப்போது இரண்டு மூன்று தினங்களுக்குள் நிறைவேறினால், பிறகு மற்றவர்களுடைய காரியத்தை ஒழுங்குப்படுத்திக் கொள்ளலாம்.

இ. சேர்வைகாரன்:- அதற்கென்ன, அப்படியே செய்து விடுவோம். நீங்கள் சொல்வது போல மற்ற ஏற்பாடுகள் பலிக்காமல் போகுமானால், பிறகு ரயில் வண்டியைக் கவிழ்க்கும் காரியத்தைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம். இப்போது உங்களுக்கு அவசரமாய் முடிய வேண்டிய காரியங்கள் மூன்று. முதலாவது திகம்பரசாமியார் இந்த உலகத்தை விட்டுப்போய் விடும்படி செய்ய வேண்டியது. அதற்கு ஒரு யோசனை தோன்றுகிறது; அப்படிச் செய்து விடலாமா?

மாசிலாமணி:- என்ன யோசனை?

இ. சேர்வைகாரன்:- ஒரு சிறிய பெட்டி தயார்செய்து, அதற்குள் நாலைந்து நாகப்பாம்புகளைப் போட்டு மூடி திகம்பரசாமியாருக்கு அனுப்பிவிட்டால், நமக்குப் பதில் பாம்புகள் வேலை செய்து விடும் என நினைக்கிறேன்.

மாசிலாமணி:- (ஏளனமாகப் புன்னகை செய்து) நல்ல யோசனை சொன்னீர்! காரியம் வெகு சீக்கிரம் பலிக்கும் எந்த விஷயத்திலும் ஆழ்ந்து யோசனை செய்து, பலிதமாகக்கூடிய திறமையான யோசனை சொல்லக்கூடிய நீர்கூட ஏது இப்படிப்பட்ட பைத்தியக்கார யோசனையைச் சொல்ல முன்வந்தது?

இ. சேர்வைகாரன்:- என்ன எஜமானே! நான் சொல்வது எப்படிப் பைத்தியக்கார யோசனையாகும்? அதனால் நம்முடைய எண்ணம் நிறைவேறாதா?

மாசிலாமணி:- எப்படி நிறைவேறும்? முதலில் நமக்குப் பாம்புகள் வேண்டுமே! அதற்கென்ன செய்கிறது? நம்முடைய ஊரில் பிச்சை வாங்கவரும் தொம்பர்கள் கொண்டு வருகிற பாம்புகள் விஷப்பல் சுடப்பட்ட உபயோகமற்ற பாம்புகள் அல்லவா? இவைகள் தானே நமக்குக் கிடைக்கும். இவைகளை வைத்துக் கொண்டு நாம் என்ன காரியத்தைச் சாதிக்கிறது?

இ. சேர்வைகாரன்:- இவ்வளவு தூரம் யோசனை செய்து காரியத்தை முடிக்க எத்தனிக்கையில் விஷப்பல் இல்லாத பாம்பையா வாங்குகிறது. அதை எல்லாம் நான் யோசிக்காமலா இந்த ஏற்பாட்டை உங்களிடம் தெரிவிப்பேன். இதோ பக்கத்தில் உள்ள உப்பிலியப்பன் கோவிலில் ஒரு பாம்புப் பிடாரன் இருக்கிறான். அவன் எனக்கு ஒருவிதத்தில் தெரிந்தவன். அவனிடம் நான் ஏற்கனவே போய் இந்த விஷயமாகப் பேசிவிட்டு வந்திருக்கிறேன். அவன் பாம்பு பிடிப்பதில் நிரம்பவும் கெட்டிக்காரன். மகா கொடுமையான விஷமுடைய சில கருநாகங்கள் அங்கே உள்ள காட்டில் இருக்கின்றனவாம். அந்த ஜாதிப்பாம்பு அதிக பருமனாக இருக்காதாம். இரண்டு விரல் பருமன், ஒரு முழ நீளம் இருக்குமாம். பார்ப்பதற்கு கருப்பாகவும் பளபளப்பாகவும் இருக்குமாம்; அவற்றின் மூச்சுப்பட்டால்கூட மனிதர் உடனே மயங்கி ஸ்மரணைதப்பிப் போய்விடுவார்களாம். அந்தப் பாம்புகள் ஆச்சரியகரமான வேகமும் சுருசுருப்பும் உடையவை களாம். அவைகளுக்கு மனிதரைக் கண்டால் ஆக்கிரோஷமும் மூர்க்கத்தனமும் அதிகமாகக் கிளம்புமாம். பெட்டியைத் திறக்கும் முன் அவைகள் பட்சிகள் பறப்பது போல குபிரென்று கிளம்பி வெளியில் வந்து பக்கத்தில் உள்ள மனிதரைக் கடித்துவிட்டுப் போய்விடுமாம். அப்படிப்பட்ட பாம்புகளில் 4 பாம்புகள் பிடித்துத் தருவதற்கு அவன் இருபது ரூபாய் பணம் கேட்டான். அதை முதல் நாள் கொடுத்தால், மறுநாள் காலையில் பாம்புகளைப் பிடித்துக் கொடுப்பதாக அவன் ஒப்புக் கொண்டான். அந்தப் பாம்புகளை நாம் கொடுக்கும் பெட்டியில் அவனே வைத்துப் பத்திரப்படுத்திக் கொடுத்துவிடுவான். பெட்டியை நாம் அப்படியே வாங்கி அனுப்ப வேண்டியது ஒன்றே நாம் செய்ய வேண்டிய காரியம்.

மாசிலாமணி:- அது சரிதான். அந்த மனிதனை நாம் நம்பலாமா? இதுவோ பிரமாதமான காரியம். நாளைக்கு அந்தப் பெட்டி திகம்பரசாமியாரிடம் போகிறதாகவே வைத்துக் கொள்வோம். பாம்புகள் அவனைக் கடிக்கின்றனவோ இல்லையோ அது வேறே விஷயம்; ஆனால், யாரோ பாம்பை ஒரு பெட்டியில் வைத்தனுப்பினார்கள் என்ற சங்கதி எப்படியும் பகிரங்கத்துக்கு வரும். போலீசார் பெட்டியை வைத்துக்கொண்டு விசாரணை செய்வார்கள். ஒரு வேளை பாம்புப் பிடாரர்களை எல்லாம் தேடிப் பிடித்து விசாரணை செய்வார்கள். சன்மானம் கொடுப்பதாக விளம்பரம் செய்வார்கள். தற்செயலாக அந்த விவரமெல்லாம் நம்முடைய பாம்புப் பிடாரனுக்குத் தெரிந்தால், அவன் பணத்தாசை பிடித்து, இன்னார்தான் தன்னிடம் பாம்புகளை வாங்கிக் கொண்டு போனது என்ற சங்கதியை வெளியிட்டுவிட மாட்டானா? அவன் இப்போது நம்மிடம் உறுதியாய் இருப்பதாக ஆயிரந்தான் சொன்னாலும் அப்படிப்பட்ட காதறுந்த நாய்களை எல்லாம், நாம் கடைசிவரையில் நம்பி இருப்பது அபாயகரமானது. பணம் என்றால், அந்த அன்றாங்காய்ச்சி நாய் எதையும் செய்து விடுமே! அந்த விஷயத்தில் நாம் நிரம்பவும் ஜாக்கிரதையாக நடந்துகொள்வது அத்யாவசியமானது அல்லவா?

இ. சேர்வைகாரன்:- ஆம்; அது நிரம்பவும் முக்கியமான விஷயந்தான். அதை நான் யோசித்தே ஜாக்கிரதையாகக் காரியத்தைச் செய்திருக்கிறேன். நான் என்னுடைய சுய ரூபத்தோடு போய் அவனிடம் பழக்கம் செய்து கொள்ளவில்லை. நான் ஒரு சாயப்புவைப் போல உடைகளைத் தரித்து தாடி முதலியவைகளை வைத்துக் கொண்டு போய் அவனை இரண்டு மூன்று தடவை பார்த்துப் பேசி, இந்த ஏற்பாட்டைச் செய்து விட்டு வந்திருக்கிறேன். நான் உண்மையில் யாரோ ஒரு சாயப்பு என்றே அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆகையால், ஒருவேளை பின்னால், அவன் ஏதாவது சங்கதியை வெளியில் விட்டால்கூட, யாரோ ஒரு சாயப்பு தான் பாம்புகளை வாங்கிக் கொண்டு போனார் என்று அவன் சொல்லப் போகிறான். அதற்கும் நமக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாமல் போகிறது.

மாசிலாமணி:- அதெல்லாம் சரிதான். நீர் பெட்டியை அனுப்பினால், அதை திகம்பர சாமியார் எதற்காக உடைத்துப் பார்க்கப் போகிறான்? அப்படியே உடைத்துப் பார்க்கப் பிரியப்பட்டாலும், அவனுக்கு வேறே ஆள்கள் இல்லையா? எவனையாவது விட்டுப் பெட்டியைத் திறந்து பார்க்கச் சொல்லப் போகிறான். அப்படி எவன் திறக்கிறானோ, அவனுக்குத்தான் தலைச்சீட்டுக் கிழிந்துவிடப் போகிறது. இதெல்லாம் நிச்சயமற்ற ஏற்பாடுதான். ஒரு யோசனை செய்தால், அதன் குறிப்பு கொஞ்சமும் தவறக்கூடாது. எந்த மனிதரை நோக்கி நாம் அம்பைச் செலுத்துகிறோமோ, அந்த மனிதரின் மேல் அந்த அம்பு தவறாமல் போய்த் தாக்க வேண்டும். அதுதான் பழுத்த யோசனை. அதைவிட்டு, இப்படிப்பட்ட நிச்சயமற்ற காரியத்தில் எல்லாம் இறங்குவது என் மனசுக்குப் பிடிக்கவில்லை.

இ. சேர்வைகாரன்:- நான் என்னுடைய யோசனை முழுதையும் சொல்லுகிறேன். அதன் பிறகு நீங்கள் ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்கள்.

மாசிலாமணி:- சரி; சொல்லும்.

இ. சேர்வைகாரன்:- அந்தப் பாம்புகளை ஒர் அடி சதுரமுள்ள ஒரு சிறிய மூங்கில் பெட்டிக்குள் வைத்துவிடச் செய்கிறது. அதன் மேல் கச்சேரியில் உபயோகிக்கப்படும் உயர்வான காகிதங்களைப் போட்டு அழகான டொயின் கயிற்றைக் கொண்டு பார்வைக்கு லட்சணமாகக் கட்டிவிடுகிறது. அதன் பக்கங்களில் நாலைந்து இடங்களில் காற்று உள்ளே போகவும் வரவும் சிறுசிறு துளைகள் விட்டுவிடுகிறது. அதுவுமன்றி, அப்படிக் கட்டியவுடனே அதிக நேரம் தாமதிக்காமல், ஒரு வண்டியில் அவசரமாகப் போய் மன்னார் குடியில் உள்ள அந்த மனிதரிடம் சேர்த்துவிட்டால், அவைகள் அதிகமாகச் சோர்ந்து போகாமல், மூர்க்கமாகவும் கோபமாகவும் பலமாகவும் வெளிக்கிளம்பும். என்னிடம் இருக்கும் உடைகளில் போலிஸ் எட்கான்ஸ்டேபிலின் உடுப்பு ஒரு ஜதை இருக்கிறது. அதைப் போட்டுக் கொண்டு பெட்டியை நானே நேரில் எடுத்துக் கொண்டு போய் அவருடைய பங்களாவில் சேர்த்து விட்டு வெளியில் வந்து வேஷத்தைக் கலைத்து விட்டு எங்கேயாவது ஒளிந்திருந்து மெதுவாக நழுவி வந்து விடுகிறேன். அந்தப் பெட்டியோடு ஒரு கடிதமும் தயார் செய்து கொண்டு போய்க் கொடுக்கப் போகிறேன். அந்தக் கடிதம் தஞ்சாவூர் ஜில்லா போலீஸ் சூப்பரின்டென்டெண்டு துரை திகம்பரசாமியாருக்கு அனுப்பியது போலத் தயாரிக்கப் போகிறேன். இப்போதிருக்கும் துரையினிடம் நான் போலீஸ் வேலையில் இருந்தவன். ஆகையால், அவருடைய கையெழுத்து இன்ன மாதிரி இருக்கும் என்பது. எனக்கு நன்றாகத் தெரியும். நான் உடனே தஞ்சாவூரில் உள்ள போலீஸ் சூப்பரின்டெண்டெண்டு துரையின் ஆபீசுக்குப் போய், அந்த ஆபீஸ் பெயர் அச்சடித்த சில காகிதங்களைச் சம்பாதித்துக் கொண்டு வந்துவிடுகிறேன். உள்ளே எழுத வேண்டிய விஷயங்களையும் டைப்ரைட்டிங் மிஷினைக் கொண்டு அடிக்கச் செய்து கீழே துரையின் கையெழுத்தைப் போல நானே கையெழுத்திட்டு ஒர் உறையில் போட்டு ஒட்டிக் கையில் எடுத்துக் கொள்ளுகிறேன். அந்தக் கடிதத்தில் என்ன விஷயம் எழுதுகிறதென்றால், அந்த துரை உங்கள் அண்ணன் காணாமல் போன விஷயத்தில் ரகசியமாக விசாரணை செய்ய கும்பகோணம் வந்ததாகவும், வந்த இடத்தில், சட்டைநாத பிள்ளை அணிந்திருந்த சில உடைகளும், வேறு பல முக்கியமான சாமான்களும், கடிதங்களும் கிடைத்திருப்பதாகவும், அவைகளின் உதவியைக் கொண்டு, சட்டைநாத பிள்ளை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் திகம்பரசாமியார் ஏதாவது யோசனை சொல்ல முடியும் என்று தாம் அந்தச் சாமான்களை ஒரு பெட்டியில் வைத்து, ஒரு ஹெட்கான்ஸ்டேபில் வசம் கொடுத்து அனுப்பி இருப்பதாகவும், அது நிரம்பவும் ரகசியமான விஷயம் ஆகையால், பெட்டிக்குள் இருக்கும் சாமான்களை மற்றவருக்குக் காட்டாமல், சாமியார் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கடிதத்தில் டைப் அடித்து உறையில் போட்டு ஒட்டி, அதையும் பெட்டியையும் வாசலில் நிற்கும் ஜெவானிடம் கொடுத்து, சூப்பரின்டெண்டெண்டு துரை அவசரமாகக் கொடுக்கச் சொன்னதாக சொல்லி அவனை உள்ளே அனுப்பி விட்டு, நான் ஒட்டமாக வந்து மறைந்து போகிறேன். சாமியார் கடிதத்தைப் பார்த்தவுடனே அதை உண்மை என்றே நம்பி விடுவான். அவன் எந்த விஷயத்தையும் பிறர் அறியாமல் மறைவாகச் செய்கிறவன். பெட்டிக்குள் என்ன சாமான் இருக்கிறது என்பதைத் தன்னுடைய சேவகன் கூடத் தெரிந்து கொள்ளக்கூடாது என்று நினைத்து தனியான ஒர் அறைக்குள் போய் கதவை மூடிக்கொண்டு பெட்டியைத் திறந்து பார்ப்பான். உடனே அவனுடைய சிநேகிதர்கள் பெட்டிக்குள் இருந்து வெளியில் வரப் போகிறார்கள். அதற்குமேல் அவனுடைய தலைவிதிப்படி முடிவு ஏற்படட்டும்.

மாசிலாமணி:- (மிகுந்த களிப்பும் திருப்தியும் அடைந்து) பேஷ்! சேர்வைகாரரே! நல்ல முதல்தரமான யோசனை! இது அவசியம் பலிக்கும் என்பதைப்பற்றி கொஞ்சமும் சந்தேகமே இல்லை. முழு விவரத்தையும் நீர் சொன்ன பிறகுதான், எனக்குத் திருப்தி ஏற்பட்டது. முதலில் இது பைத்தியக்கார யோசனையாகத் தோன்றியது. எந்தக் காரியத்தையும் ஆழ்ந்து யோசித்து, யாரும் ஆட்சேபனை சொல்ல முடியாதபடி அவ்வளவு அழுத்தம் திருத்தமான யோசனை சொல்லக்கூடிய நீர், அப்படிச் சொல்லுகிறீரே என்று நினைத்து நான் உம்மை ஏளனமாகப் பேசிவிட்டேன். அதை மனசில் வைக்க வேண்டாம். இந்த ஏற்பாட்டின்படியே காரியத்தை முடித்துவிடும். இதோடு அந்தப் பரதேசி நாய் ஒழிந்து போவது நிச்சயம். நீர் செய்வதை அதிக தாமதம் இன்றி உடனே செய்து விட்டால் அவர்கள் நிச்சயதார்த்தத்துக்கு சென்னைப் பட்டணம் போவதைக்கூட நிறுத்தி னாலும் நிறுத்திவிடுவார்கள். அங்கேயுள்ள பெண்ணை நாம் அபகரித்துக் கொண்டு வருவதற்கு நமக்கு வேண்டிய அவகாசம் நிரம்பவும் கிடைக்கும். ஆனால் நீர் பாம்புப் பெட்டியைக் கொண்டு போகும்போது மிகவும் ஜாக்கிரதையாய்ப் போக வேண்டும். பெட்டியின் மேல் பல இடங்களில், காற்று உள்ளே போய் வருவதற்காகத் தொளைகள் விட்டிருக்க வேண்டும் அல்லவா. பாம்புகள் ஒருவேளை நாக்கை வெளியில் நீட்டினால், அது கையில் பட்டாலும் படும். அதுவுமன்றி அவைகளுடைய மூச்சுக்காற்றை நாம் சுவாசித்தால், உடனே மயக்கம் வரும் என்று சொன்னரே, அதனாலும் உமக்கு எவ்விதத் தொந்தரவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இ. சேர்வைகாரன்:- பாம்புகளுக்குக் காற்றே அதிகம் தேவை இல்லை. பாம்பாட்டிகள் சாணியால் மெழுகப்பட்ட பெட்டிக்குள்ளும் குடத்துக்குள்ளும் பாம்பைப் போட்டு மூடித்தானே எப்போதும் வைத்திருக்கிறார்கள். பெட்டிக்குள்ளும் குடத்துக்குள்ளும் கொஞ்சமும் காற்று போகிறதற்கே மார்க்கம் இருக்கிறதில்லை. அப்படி இருந்தும் அது வெகுகாலம் ஜீவித்திருப்பதை நாம் பார்க்கவில்லையா. அதுவுமன்றி, பாம்புகள் புற்றிற்குள் பூமியின் கீழே உருண்டைப் போலச் சுருண்டு தானே எப்போதும் கிடக்கின்றன. உள்ளே காற்றே இராது. புற்று வாயின் வழியாக உள்ளே போகும் காற்று மகா சொற்பமாக இருக்கும். அதைக் கொண்டே பாம்புகள் ஜீவித்திருக்கின்றன. ஆகையால் பாம்புகளுக்கு நாம் தொளைகள் விடாவிட்டால்கூட, அவைகள் சாகப் போகிறதில்லை. ஆனாலும், அதிக எச்சரிப்பாக இருப்பதையும் கருதி, ஒரு கோணி ஊசி நுழையும்படியான துளைகள் ஐந்தாறு விட்டுவைப்போம். அதுவே போதுமானது. உள்ளே இருக்கும் பெட்டி இரண்டு விரற்கடை கனம் இருக்கும்படியாகச் செய்து கொண்டால், பாம்பின் நாக்கு வெளிவரையில் எட்டாது. அதுவுமன்றி, உள்ளே இருளில் கிடக்கும் பாம்பு நாம் வைத்திருக்கும் சிறிய தொளையைப் பார்த்து நாக்கை நீட்டவா போகிறது. அப்படி நீட்டினாலும், நாக்கில் அவ்வளவாக விஷம் இராது; அதுவுமன்றி, அந்தப் பெட்டியை நான் கையால் தொட்டே துக்கப் போகிறதில்லை. ஒரு கயிற்றைப் பெட்டியின் மேல் துக்குப் போட்ட மாதிரி கட்டி, கயிற்றைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போகப் போகிறேன். அதே மாதிரி, திகம்பர சாமியாருடைய பங்களாவில் இருக்கும் பாராக்காரனிடம் கொடுக்கப் போகிறேன். ஆகையால் அந்த விஷயத்தில் யாதொரு கெடுதலும் ஏற்படா தென்பதை நீங்கள் நிச்சயமாக நம்பலாம். நான் இதை உடனே முடிக்கிறேன். இப்போதே நான் புறப்பட்டு அடுத்த ரயிலில் ஏறி தஞ்சாவூருக்குப் போகிறேன். நேராக போலிஸ் சூப்பரிண்டெண்டெண்டின் கச்சேரிக்குப் போய், அங்கே உள்ள என்னுடைய பழைய சிநேகிதர்களைப் பார்த்து விட்டு வருகிறவன் போல, துரை கடிதம் எழுதும் காகிதத்தில் நாலைந்து எடுத்துக் கொண்டு அடுத்த வண்டியிலேயே திரும்பி இங்கே வந்து விடுகிறேன். நாளைய தினம் காலையில் நான் உப்பிலியப்பன் கோவிலுக்குப் போய் பாம்புப் பிடாரனைக் கண்டு, நாளைக்கு மறுநாள் காலையில் நான் பெட்டியோடு வருவதாகவும், பாம்புகளைச் சித்தமாக வைத்திருக்கவும் சொல்லிப் பணத்தைக் கொடுத்துவிட்டு வருகிறேன். உடனே பெட்டி முதலிய மற்ற சாமான்களையும், டைப் அடிக்க வேண்டிய கடிதம் முதலியவைகளையும் நாளைய தினமே முடித்து வைத்துக் கொள்ளுகிறேன். இதற்காகப் பிரத்தியேகமாக ஒரு குதிரை வண்டியும் அமர்த்திக் கொள்கிறேன். உப்பிலியப்பன் கோவிலில் பெட்டியை வாங்கிக் கொண்டு வெகு தூரத்திற்கு அப்பால் வந்த பிறகு அவ்விடத்தில் நிறுத்த ஏற்பாடு செய்திருக்கும் வண்டியில் ஏறிக்கொள்ளுகிறேன். உடனே வண்டியை விசையாக விட்டுக் கொண்டு மன்னார் கோயில் போய்ச் சேர்ந்து ஊருக்கு வெளியிலேயே இறங்கிக் கொண்டு, வண்டிக்காரனுக்குக் கூலி கொடுத்தனுப்பி விட்டு, எங்கேயாவது இருந்து போலீஸ் எட்கான்ஸ்டேபிளின் உடுப்பைப் போட்டுக் கொண்டு உடனே அவனுடைய பங்களாவுக்குப் போய்க் காரியத்தை முடித்துவிட்டு வந்து உடுப்புகளை அவிழ்த்து மூட்டையாகக் கட்டிக் கொண்டு வேறு குதிரை வண்டி வைத்துக் கொண்டு திருத்தருப் பூண்டிக்குப் போய் அங்கிருந்து ரயிலேறி திருவாரூர், மாயூரம் வழியாக இங்கே வந்து விடுகிறேன். யாரும் என்னைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இந்த வேலையை நான் வெகு தந்திரமாக முடிக்கிறேன். இதைப்பற்றி எஜமான் கொஞ்சமும் கவலைப்படவே வேண்டாம். ஆனால், நாம் சம்பந்தப்பட்ட வரையில் காரியத்திற்கு யாதொரு பழுதும் ஏற்படாமல் முடித்துவிட்டு வருவேன் என்பதை நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொள்ளலாம். ஆனால் நாம் எதிர் பார்ப்பது போல மற்ற காரியங்களும் நிறைவேற வேண்டும். திகம்பரசாமியார் நிரம்பவும் சூட்சுமமான புத்தியுடைய மனிதன். எதிலும் சுலபத்தில் ஏமாறுகிறவன் அல்ல. அவனே தனியாக இருந்து பெட்டியைத் திறக்க வேண்டும். பாம்புகள் வெளியில் வந்து பயந்து சிதறி நாலாபக்கங்களிலும் ஓடி விட்டால், அவன் தப்பி ஓடிவிடுவான். அதெல்லாம் ஒழுங்காய் நிறைவேற வேண்டும். என்னவோ பார்க்கலாம். காரியம் பலிப்பது முக்காலே மூன்று வீசம் பங்கு நிச்சயம். மாசிலாமணி:- வாஸ்தவமே, நாம் நேருக்கு நேர் இருந்து முடிப்பதானால் எல்லாம் நிச்சயமாகவே முடியும். மறைவில் இருந்து கொண்டே காரியங்களை நடத்த வேண்டி இருக்கிறது. ஆகையால், கொஞ்ச பாகத்தைச் சந்தேகத்தில்தான் விட வேண்டி இருக்கிறது, என்னவோ நாம் செய்யக் கூடியதைச் செய்து பார்ப்போம். பலித்தால் பலிக்கட்டும். பலிக்காவிட்டால் இன்னம் ஏதாவது தந்திரம் செய்வோம். நமக்கு இதோடு ஆயிசு முடிந்தா போகிறது. நாமும் இருக்கப் போகிறோம். அவனும் இருக்கப் போகிறான்; பார்க்கலாம் ஒரு கை.

இ. சேர்வைகாரன்:- (சந்தோஷமாகப் புன்னகை செய்து) அவனும் இருக்கப் போகிறான் என்று ஏன் சொல்லுகிறீர்கள்? அவன் இறக்கப் போகிறான் என்று சொல்லுங்கள்.

மாசிலாமணி:- (சந்தோஷமாக நகைத்து) ஒகோ அப்படியே வைத்துக் கொள்ளுமே! உமக்கேன் வருத்தம்? அதைத்தானே நாம் கோருகிறது.

இ. சேர்வைகாரன்:- நீங்கள் கோரிய மூன்று காரியங்களில் ஒன்று இப்படித் தீர்ந்தது. இரண்டாவது, கலெக்டருடைய பெண்ணை அபகரித்து இங்கே கொண்டு வந்து சேர்க்க வேண்டியது. அந்த விஷயந்தான் கொஞ்சம் சிரமப்படும் என்று நினைக்கிறேன். நான் இதற்கு முன் சென்னைப் பட்டணத்துக்குப் பல தடவைகள் போய் வந்திருக்கிறேன். ஆனாலும், அது நமக்குப் புதிய ஊர். நம்முடைய சொந்த ராஜ்யம் போலிருக்கும் இந்த ஜில்லாவில் நாம் எப்படிப்பட்ட அபாரமான காரியங்களையும் சுலபத்தில் சாதித்து விடலாம். அது அயல்நாடு. அங்கே நமக்கு வேண்டிய வசதிகளும் செளகரியங்களும் கிடைப்பது துர்லபம். ஆனாலும், நாம் எப்படியாவது பிரயத்தனப்பட்டு அந்தக் காரியத்தை முடிக்கத் தான் வேண்டும். ஒரு காரியம் ஆகவேண்டும் என்ற பிடிவாதமான எண்ணம் விழுந்து விடுமானால், அது லண்டன் தேசத்தில் செய்ய வேண்டிய காரியமாக இருந்தாலும் செய்துதான் தீரவேண்டும். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது. அதை எஜமானர் முதலில் தீர்த்து வைத்தால், நான் மற்ற ஏற்பாட்டைச் சொல்லுகிறேன். அந்தப் பெண்ணைக் கொண்டுவர வேண்டும் என்கிறீர்களே! அவளைக் கொண்டு வந்து கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உண்டா?

மாசிலாமணி:- அதெப்படி முடியும்? நாம் திருட்டுத்தனமாகவும் பலவந்தமாகவும் கொண்டுவரப் போகிறோம். அந்தப் பெண்ணை நாம் கொண்டு வந்தோம் என்பதே எவருக்கும் தெரியக்கூடாது. கலியானம் என்றால் பந்து ஜெனங்கள் அறிய பகிரங்கமாகச் செய்ய வேண்டிய சடங்கல்லவா. அப்படி இருக்க, அந்தப் பெண்ணைக் கொண்டு வந்து ஏகாங்கியாக வைத்துக் கொண்டு நாம் கலியாணம் செய்து கொண்டால், ஜனங்கள் அதைப்பற்றி சந்தேகிப்பார்கள். அது பற்பல கேள்விகளுக்கு இடங்கொடுக்கும். அதற்கெல்லாம் நாம் எவ்விதமான சமாதானம் சொல்லுகிறது? முதலில் அந்தப் பெண்ணே வாயை மூடிக்கொண்டு சாந்தமாக கலியாணத்தை நடத்திக் கொள்வாளா? ஒரு நாளும் அவள் இணங்கி வரமாட்டாள்; அல்லது நாம் முதலில் பெண்ணை அபகரித்து வந்து ஒளிய வைத்துக் கொண்டு தந்திரமாக அவளுடைய தகப்பனிடம் போய்ப் பேசி, எனக்கு அந்தப் பெண்ணைக் கட்டிக் கொடுக்க இணங்கினால், பெண் இருக்கும் இடத்தை நான் காட்டுகிறேன் என்று சொன்னாலும், அவன் நமக்கு மேல் அதிக தந்திரம் செய்வான். நம்முடைய பிரியப்படி செய்வதாக முதலில் ஒப்புக் கொண்டு பெண்ணை அடைந்த பிறகு நம்மை ஏமாற்றி விடுவான். ஜெயில் தண்டனை அடைந்தவன் என்ற இழிவு எனக்கு ஏற்பட்டிருக்கையில், அவன் பகிரங்கமாகத் தன்னுடைய பெண்ணை எனக்குக் கட்டிக்கொடுப்பானா? ஆரம்பத்தில் இருந்தேதான் நமக்கும் அவனுக்கும் ஜென்மப் பழியாய்ப் போய்விட்டதே; அப்படி இருக்க, அவன் தன்னுடைய பெண் போனாலும் போகட்டும் என்று விட்டு விடுவானே அன்றி, அவளை எனக்கு மாத்திரம் கட்டிக்கொடுக்கவே மாட்டான். ஆகையால் கலியாணம் என்ற எண்ணத்தையே மூட்டையாகக் கட்டி துரத்தில் வைத்துவிட வேண்டியது தான்.

இ. சேர்வைகாரன்:- இந்தச் சங்கதி எல்லாம் எனக்குத் தெரியாதா? பெண்ணும், தகப்பனும் கலியாணத்திற்கு இணங்க மாட்டார்கள் என்பதும், ஜனங்கள் கேள்விகள் கேட்பார்கள் என்பதும் எனக்குத் தெரிந்த விஷயம். நான் கருதியது வேறு மாதிரியானது; எப்பாடுபட்டாவது பெண்ணை நாங்கள் கொண்டு வந்து சேர்க்கத்தான் போகிறோம். பெண் நிரம்பவும் அழகாக இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். அவளைக் கண்டவுடன் உங்களுக்கு எப்படியும் பிரியம் உண்டாகும் என்றே நினைக்கிறேன். அவளை நீங்கள் எப்படியும் உங்கள் வசப்படுத்திக் கொள்ளத்தான் போகிறீர்கள். அப்படி வசப்படுத்திக் கொண்டு கொஞ்சகாலம் இருந்த பிறகு, அவளை அனுப்பிவிட உங்களுக்கு மனம் வராதென்றே நினைக்கிறேன். அப்படி இருக்க, அவளை நீங்கள் துரத்திவிடுவது எப்படி? அப்படியே நீங்கள் துரத்தி விட்டாலும், அவள் தன்னுடைய தகப்பனிடம் போய் எல்லாச் சங்கதியையும் வெளியிட்டால், அவர்கள் உங்கள் மேல் வியாஜ்ஜியம் தொடர்ந்தாலும் தொடரலாம், அல்லது, அந்தப் பெண் உங்களிடம் வந்து இருந்ததென்ற விஷயத்தையே அவர்கள் அடியோடு மறைத்து, அவளை வேறே யாருக்காவது கட்டிக் கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள். அதுவுமன்றி, அந்தப் பெண்னை நாம் இங்கே கொண்டு வந்தபின், நீங்கள் அவளிடம் போய், உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற எத்தனித்தால், அவள் அதற்கு சுலபத்தில் இடங்கொடுக்காமல் முரட்டுத்தனம் செய்தாலும் செய்யலாம். ஒருவேளை அவள் சாப்பிடாமலேயே பட்டினி கிடப்பாள்; அல்லது, எந்த வகையிலாவது அவள் தன்னை மாய்த்துக் கொள்ள வழி தேடினாலும் தேடுவாள். அதற்கெல்லாம் இடங்கொடுக்காமல் நாம் ஒரு காரியம் செய்து விடுவது நலம் என்று நினைக்கிறேன். அந்தப் பெண்ணின் மனசுக்கு விரோதமாக அவளை அடைவதைவிட, அவள் ஒரு விதமாக இணங்கி வரும்படி செய்து காரியத்தைச் சாதிப்பது உசிதமானதென்று நினைக்கிறேன். என்னவென்றால் நாம் பெண்ணைக் கொண்டு வந்து இரண்டொரு நாள் சும்மா வைத்திருக்கிறது. அந்தக் காலத்தில் நீங்கள் அவளிடம் நம்முடைய உள்கருத்தை வெளியிடாமலும், அவள் சந்தேகப்படாத படியும் நடந்து கொண்டு, அவளுடைய பிரியத்தை உங்கள் பேரில் திருப்ப முயற்சி செய்து பாருங்கள். அது முடியாவிட்டால், அவள் உங்கள் பேரில் வெறுப்பாவது கொள்ளாமல் செய்து கொள்வோம். பிறகு நாம் நம்முடைய ஆள்களில் முப்பது நாற்பது பேரைக் கொண்டு வந்து வைத்துக் கொள்ளுகிறது. அவர்கள் எல்லோரும் தக்க பெரிய மனிதர்களைப் போல் ஆடைகள் அணிந்து வரும்படி செய்தால், பார்வைக்கு அவர்கள் நம்முடைய பந்துக்கள் போலவும் சிநேகிதர்கள் போலவும் தோன்றுவார்கள். நானே பூனூல் விபூதிப் பட்டை முதலியவைகளைப் போட்டுக் கொண்டு நாணல்பில், பொரசங்குச்சி முதலிய சாமான்களை எடுத்துக் கொண்டு பஞ்சாங்கக்கார ஐயரைப் போல வருகிறேன். எல்லோரும் உட்கார்ந்து ஆடம்பரமாகக் கலியாணச் சடங்கை நடத்தி முடிவில் அந்தப் பெண்ணைப் பலவந்தமாகக் கொண்டு வந்து மணையில் உட்கார வைப்போம். நான் வாயில் வந்ததை உளறி ஏதோ மந்திரம் சொல்லுகிறது போல பாசாங்கு பண்ணுகிறேன். நீங்கள் பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டிவிடுங்கள். பிறகு நம்முடைய ஆள்கள் எல்லோரும் மெதுவாக வெளியில் நழுவி விடட்டும். அதன் பிறகு நீங்கள் அந்தப் பெண்ணைத் தனியாக அழைத்துக் கொண்டு போய் நல்ல வார்த்தையாகவே பேசி முயற்சி செய்யுங்கள். தான் அதற்குமேல் எதையும் செய்ய முடியாதென்ற எண்ணம் அவளுடைய மனசில் உண்டாகிவிடும். அதுவுமன்றி, அதற்கு மேல் தான் வேறே யாரையும் கட்டிக் கொள்ள முடியாது என்ற நினைவும் உண்டாகிவிடும். பிறகு அவள் அநேகமாய்ப் படிமானத்திற்கு வருவாள். பிறகு உங்களுக்குப் பிரியமானால், அவளை எப்போதுமே வைத்துக் கொள்ளுங்கள். அல்லது, கொஞ்ச காலத்துக்குப் பிறகு துரத்திவிட வேண்டும் என்று தோன்றினாலும், அப்படியே செய்துவிடலாம். அவள் உங்களோடு இருக்கும் வரையில், இது இன்ன ஊர் என்ற தகவலாவது, நீங்கள் இன்னார் என்ற விவரமாவது தெரியவே கூடாது. நாம் கடைசியில் அவளை அனுப்பிவிட வேண்டுமானால், இப்போது அவளை எவ்வளவு ரகசியமாகக் கொண்டு வரப் போகிறோமோ அதுபோலவே கொண்டு போய், அவளுடைய தகப்பன் இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் விட்டுவிட்டு வந்து விடுவோம். அவளை நீங்கள் அனுப்பும் போது, அவள் குறைந்தது, ஏழெட்டு மாசமாவது கர்ப்பம் தரித்திருக்கும்படி நீங்கள் செய்து விடுவீர்களானால், அது எல்லாவற்றிலும் உசிதமாக இருக்கும்.

மாசிலாமணி:- (சந்தோஷமாக நகைத்து) சேர்வைகாரரே! இது பேஷான யோசனை! நீர் சொல்லுகிறபடி செய்தால் கலியாணம் வெகு விநோதமாக இருக்கும். இவ்வளவு தூரம் யோசனை செய்து சொன்னரே கலியாணம் என்றால், மேளம் கிராமப் பிரதக்ஷிணம் முதலியவைகள் எல்லாம் வேண்டாமா?

இ. சேர்வைகாரன்:- (வேடிக்கையாகச் சிரித்து) மேளம் இல்லாமலா கலியாணம் நடக்கும். நாம் கலியாணத்தை மூன்றாவது கட்டில் வைத்துக் கொள்வோம். ஏதாவது ஒரு காரணம் சொல்லி, மேளக்காரர் சிலரைக் கூப்பிட்டு முதல் கட்டிலிருந்து கொஞ்ச நேரம் ஊதச் செய்து அனுப்பிவிட்டால் போகிறது. என்ன விசேஷம் என்று யாராவது கேட்டால், வீடு புதிதாகக் கட்டியது. ஆகையால் கிரகப்பிரவேசம் நடக்கிறதென்று சொல்லிவிட்டால், அதைக் கேட்டுக் கொண்டு போகிறார்கள். அல்லது, மேளமே இல்லாமல் கலியாணத்தை நடத்தி விட்டாலும், கலியாணம் நடந்து போய் விடுகிறது. மேளம் இல்லாததினால் இது கலியாணமாகாது என்று அந்தப் பெண் ஆட்சேபனை சொல்லப் போகிறாளா? அதொன்றும் இல்லை. அது போலவே கிராமப் பிரதக்ஷிணம் ஏன் செய்ய வில்லை என்றும் அந்தப் பெண் கேட்கப் போகிறதில்லை. கலியாணம் என்றால், தாலி கட்டுவது ஒன்று தான் எல்லா வற்றிலும் முக்கியமானது. அதை நாம் நிறைவேற்றி விடுவோம். எதற்காக என்றால், அந்தப் பெண் முதலில் படிமானத்திற்கு வருகிறதற்கும், நாம் திருப்பிக் கொண்டு போய்விட்ட பிறகு அவள் வேறே கலியானம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் இந்தச் சடங்கு அவசியமானதென்று நினைக்கிறேன்.

மாசிலாமணி:- சரி; உம்முடைய இஷ்டப்படியே எதை வேண்டுமானாலும் நடத்தும். ஆனால் ஒரு விஷயம் மாத்திரம் நீர் மனசில் நிச்சயமாக வைத்துக் கொள்ளும்; அந்தப் பெண் அழகாய் இருக்கிறாள் என்பதைக் கருதி நான் அவளை இங்கே கொண்டு வர ஆசைப்படவில்லை. அவளுடைய தகப்பன் செய்த படு மோசத்திற்காகப் பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே ஆவல்தான் என் மனசில் இருந்து துண்டுகிறது. ஆகையால் அவள் அழகாக இல்லாவிட்டால் கூட அவளைக் கொண்டு வந்து கெடுத்தனுப்ப வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. ஆகையால், அவளோடு கொஞ்சகாலம் பழகிய பிறகு அவளை அனுப்ப எனக்கு மனம் வராமல் போய்விடுமோ என்று நீர் கொஞ்சமும் சந்தேகப்பட வேண்டியதே இல்லை. அவள் விஷயத்திலாவது, அவளுடைய தகப்பன் விஷயத்திலாவது நான் ஒரு கடுகளவு இரக்கங் கொண்டால் கூட, எனக்குப் பெருத்த பாவம் சம்பவிக்கும். ஆகையால், எப்படி இருந்தாலும், அவளை நாம் கொஞ்ச காலம் வைத்திருந்த பின் அனுப்பிட வேண்டியதே முடிவு.

இ. சேர்வைகாரன்:- சரி; அது உங்களுடைய இஷ்டத்தைப் பொருத்தது. நான் எப்படியாவது சிரமப்பட்டு அந்தப் பெண்ணை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன். அதன் பிறகு நீங்கள் உங்களுடைய சாமர்த்தியத்தின் படியும், மனப்போக்கின் படியும் நடந்து கொள்ளுங்கள். ஆனால் இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. சென்னைப் பட்டணமோ, இங்கே இருந்து தொலை தூரத்தில் இருக்கிறது. அவ்வளவு துரத்தில் இருந்து அந்தப் பெண்ணை நாம் அதன் மனசுக்கு விரோதமாகவும் வலுக் கட்டாயமாகவும் இந்த ஊருக்கு எப்படிக் கொண்டு வருகிறது என்ற யோசனைதான் திருப்திகரமாக புலப்படவில்லை.

மாசிலாமணி:- ரயிலில் வைத்துக் கொண்டு வருவது சாத்தியம் இல்லாத காரியம்.

இ. சேர்வைகாரன்:- ஆம் ஆம்; ரயிலில் கொண்டுவர முடியாது. நாம் நம்முடைய மோட்டார் வண்டியைக் கொண்டு போய், அதற்குள் வைத்துத்தான் கொண்டு வர வேண்டும். அதைக்கூட நாம் நிரம்பவும் ஜாக்கிரதையாகத்தான் செய்ய வேண்டும். அதுவும் அபாயகரமானது தான். அவளை இங்கே கொண்டு வராமல், பட்டணத்திலேயே எங்கேயாவது மறைத்து வைத்துக் கொள்வதென்றால், அது வெகு சுலபமான காரியம். அப்படிச் செய்வதென்றால் நீங்களும் பட்டணத்தில் கொஞ்ச காலம் வாசம் செய்ய நேரும்.

மாசிலாமணி:- அது முடியாது. நான் எப்போதும் இங்கேயே இருக்க வேண்டும். வேறே எங்கேயாவது போனால், போலீஸ் நாய்கள், நம்ம போகிற இடத்தைக் கேட்டுக் கொண்டு, அங்கே இருக்கிற போலீசாருக்கு எழுதுவார்கள். அவ்விடத்திலும் அவர்களுடைய உபத்திரவம் ஏற்படும். இங்கேயாவது நாம் அந்தப் பெண்ணை எவரும் கண்டுபிடிக்க முடியாத ரகசியமான இடத்தில் ஒளித்து வைக்கலாம். அங்கே நாம் அப்படிச் செய்ய முடியாது. அதுவும் அல்லாமல், நான் இங்கே இருந்து வேறே முக்கியமான பல காரியங்களைக் கவனிக்க வேண்டியவனாக இருப்பதால், நான் அந்தச் சிறுக்கிக்காக சென்னைப் பட்டணத்தில் வாசம் செய்ய முடியவே முடியாது.

இ. சேர்வைகாரன் :- அப்படியானால், நான் என்ன செய்ய வேண்டும் என்றால் அந்தப் பெண்ணை அவர்களுடைய பங்களாவில் இருந்து அபகரித்த உடனே, அதற்கு மயக்கம் உண்டாகும் படியாக குளோரபாரம் முதலிய மருந்துகளைப் பிரயோகித்து, மோட்டாரில் வைத்துக் கொண்டு ஒரே விசையாக ரஸ்தா வழியாகவே இந்த ஊருக்கு வந்துவிட வேண்டும். நடுவழியில் அவள் மயக்கம் தெளிந்து விழித்துக் கொண்டால், மறுபடியும் அதே வஸ்துவைக் கொடுத்துக் கிழே வீழ்த்தி இங்கே கொண்டு வந்து சேர்க்க வேண்டும். வண்டியின் பின்பக்கத்தில் கோஷா ஸ்திரீகளுக்காக வைக்கும் மறைவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். யாராவது நடுவில் விசாரித்தால், தஞ்சாவூர் கலெக்டர் ஆமதுடீன் சாயப்புவின் கோஷா மனைவி போகிறாள் என்று சொல்லி விடுவோம். நல்ல வேளையாக தஞ்சாவூரில் அந்தப் பெயருடைய சாயப்பு கலெக்டராக இருக்கிறார்.

மாசிலாமணி:- (சந்தோஷமாகச் சிரித்து) சபாஷ் சேர்வைகாரரே! உம்முடைய சமயோசித தந்திர ஞானத்தை நான் எப்படிப் புகழப் போகிறேன். புத்திசாலித் தனத்திலும் செளரியத்திலும் திகம்பர சாமியார்கூட உம்முடைய காலில் ஒட்டிய தூசிக்கும் நிகர் ஆக மாட்டான். அதிருக்கட்டும், நீர் எப்போது பட்டணம் போகிறீர்? இ. சேர்வைகாரன் :- எஜமான் இப்போது அனுப்பினாலும் போகத் தடையில்லை. முதலில் திகம்பரசாமியாருடைய வேலையை முடிக்கச் சொன்னால், நாளைக்கு மறுநாள் வரையில் இங்கே இருந்து அதன் முடிவைப் பார்த்துக் கொண்டு போகிறேன். திகம்பரசாமியார் மாண்டு போனால், நிச்சயதார்த்தம் இப்போது நடக்காது. இவர்கள் அதை சில தினங்கள் ஒத்தி வைப்பது நிச்சயம். எல்லாவற்றிற்கும் இவர்கள் பட்டணம் வருவதற்குள், அதை முடித்துவிட்டால் நலம் என்று நினைக்கிறேன்.

மாசிலாமணி:- இந்த இரண்டு தினங்களில் இந்தப் பரதேசியின் வேலையை முடித்துவிட்டு அன்றைய தினமே நீர் ஆள்களோடு பட்டணம் போம். மோட்டார் வண்டியை ஒருவன் வசம் அனுப்புகிறேன். அங்கே போய் எப்படியாவது முயற்சி செய்து நிச்சயதார்த்தத்துக்குள் பெண்ணை அபகரித்துக் கொண்டு வந்துவிடும்.

இ. சேர்வைகாரன்:- அவர்கள் புரசைவாக்கத்தில் ஒரு பங்களாவில் இருப்பதாகக் கேள்வி. பங்களா ஒதுக்குப்புறமான ஒர் இடத்தில் இருக்கும். இரவில் நாலைந்து டலாயத்துகள் காவல் இருப்பார்கள். பங்களாவுக்குள் அப்பன் மகள், நாலைந்து வேலைக்காரிகள் அவ்வளவு பேர்தான் இருப்பார்கள். நாங்கள் சுமார் 25 பேர் போய், எல்லோரையும் அடித்துப் போட்டு விட்டு, பெண்ணைத் துக்கி மோட்டாரில் வைத்துக் கொண்டு வந்து விடுகிறோம். ஆள்கள் ரயிலில் வந்து விடட்டும். நிச்சயதார்த்த தினத்திற்குள், காரியம் முடியாவிட்டால், கந்தசாமி கொடுத்தது போலவும் கலெக்டர் கொடுத்தது போலவும், மன்னார். குடியாருக்கு இரண்டு தந்திகள் கொடுத்து, பெண் மாதவிடாய் ஆகிவிட்டதால், நிச்சயதார்த்தம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், தேதி பின்னால் அறிவிக்கப்படும் என்றும், அது வரையில் யாரும் புறப்பட்டுவர வேண்டாம் என்றும் தெரிவித்து விடுகிறேன். அதே தினம் உங்களுக்கும் ஒரு விவரமான தந்தி அனுப்புகிறேன். அதில் நான் பெயர்களையே குறிப்பிடாமல் பூடகமாக சங்கதிகளைத் தெரிவிக்கிறேன். அதன்படி நீங்கள் யாரையாவது மன்னார்கோவிலுக்கு அனுப்பி அங்கே இருந்து பட்டணத்தில் உள்ள கந்தசாமிக்கும் கலெக்டருக்கும் இரண்டு தந்திகள் கொடுத்து விடுங்கள். எப்படி என்றால், வடிவாம்பாள் மாதவிடாய் ஆகிவிட்டதால் நிச்சயதார்த்தம் ஒத்திவைக்கப் பட்டிருக்கிறது என்றும், மறுதேதி சில தினங்களில் தெரிவிக்கப்படும் என்றும் செய்தி அனுப்பிவிடுங்கள். அதற்குள் நான் காரியத்தை முடித்துக் கொண்டு வந்துவிடுகிறேன்.

மாசிலாமணி:- சரி. இது நல்ல யோசனைதான். இரண்டு வேலைகளையும் முதலில் முடியும். மிகுதி வேலையைப் பற்றி நாம் நடக்க நடக்க யோசித்துக் கொள்வோம்.

இ. சேர்வைகாரன்:- சரி. அப்படியே முடிக்கிறேன். எனக்கு நேரமாகிறது. இன்னும் அரை மணி நேரத்தில் தஞ்சாவூருக்கு ஒரு ரயில் போகிறது. நான் அதிலேயே போய் போலீஸ் ஆபீசில் ஆக வேண்டியதை முடித்துக் கொண்டு வந்து விடுகிறேன். உத்தரவு கொடுங்கள்.

மாசிலாமணி:- சரி, போய் வாரும்.

உடனே இடும்பன் சேர்வைகாரன் விசிப்பலகையை இழுத்துப் போட்டு, அதன்மேல் ஏறி, சுவரின் திறப்பின் வழியாக நுழைந்து அப்பால் போய்விட்டான்.