மின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள்/அணிந்துரை
அணிந்துரை
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் ஐரோப்பியக் கல்வி முறை அறிமுகமாயிற்று. 1770-1780ஆம் ஆண்டுகளில் தஞ்சை, இராமநாதபுரம், இலங்கை ஆகிய இடங்களில் ஸ்வாட்ஸ் (Schwartz) பள்ளிகள் தொடங்கப்பட்டு, இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. 1817இல் கல்கத்தாவில் இந்துக் கல்லூரியும் 1927இல் பம்பாயில் எல்மின்ஸ்ட ன் இன்ஸ்டிடியூட்டும் தோன்றி ஆங்கிலக் கல்வியை வளர்த்தன. அக்கால ஆங்கிலக் கல்வி முறைக்கேற்பப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அடிப்படை அறிவியல் பாடங்களும் மானிடவியல் பாடங்களும் ஆங்கிலவழியே கற்பிக்கப்பட்டன. பின்னாளில், தமிழகத்தில் தமிழ் வழிக்கல்வி பற்றிய சிந்தனை தோன்றியது.
தமிழில் அறிவியல் மற்றும் மானிடவியல் பாடங்களைக் கற்பிக்கும் சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் நூற்களும் கட்டுரைகளும் வெளிவரத் தொடங்கின. கலைச்சொற்களை உருவாக்கிக் கருத்தைத் தெளிவுறுத்தும் நிலைகளும் தோன்றின.
தமிழிலே அறிவியல் கருத்துக்களைக் கூறும் முயற்சி 1830ஆம் ஆண்டு முதலாகவே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. செய்தி இதழ்கள் மூலமாகவும் நூல்களின் பின்னிணைப்பாகவும் பரவிய கலைச்சொற்கள் பின்னாளில் கலைச்சொல் தொகுதிகளாக வெளிவரத் தொடங்கின. 1932 ஆம் ஆண்டில் சென்னை அரசு முதன் முதலில் கலைச்சொற்களைத் துறை வாரியாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பல தமிழ்ச் சங்கங்கள், கலைச்சொற்குழுக்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றின் மூலம் பல கலைச்சொல் தொகுதிகள் வெளிவந்தன.
1973ஆம் ஆண்டில் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் பொறியியல் - தொழில் நுட்பவியல் கலைச்சொற்பட்டியல் ஒன்றை வெளியிட்டது. இதில், பொதுவியல், இயந்திரவியல், மின்னியல் துறைச் சொற்கள் (2794. சொற்கள்) இடம்பெற்றுள்ளன.
1982இல் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நிகழ்த்தப்பெற்ற பொறியாளர் கருத்தரங்கு மற்றும் மருத்துவர் கருத்தரங்குகளைத் தொடர்ந்து கலைச்சொல்லாக்க முயற்சிகள் தொடங்கப் பெற்றன. பல்துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு கலைச்சொல்லாக்க நெறிமுறைகள், கலைச்சொல்லாக்க முயற்சிகள், பொறியியல், மருத்துவவியல், அறிவியல் கலைச்சொற்களின் பயன்பாடு போன்றவை ஆராயப்பெற்றதன் விளைவாகத் துறைவாரியாகக் கலைச்சொற்களைத் தொகுக்கும் பணி இங்கு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வகையில் தொகுக்கப்பட்ட இயந்திரவியல், இயந்திரப் பொறியியல் கலைச்சொற்கள் (சுமார் 6000 கலைச்சொற்கள்) தொகுப்பு நூல் இப்பொழுது வெளியிடப்பெறுகின்றது.
இத்துறை தொடர்பான ஒரு குறிப்பிட்ட கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பை இத்தொகுப்பு நல்குகிறது.
அறிவியல் கருத்துக்களைத் தமிழிலே அளிக்க விழையும் ஆய்வாளர் மற்றும் மாணாக்கர்கள் அனைவருக்கும் இத்தொகுப்பு மிகவும் பயனுடையதாகும். இத்தகைய கலைச்சொல் தொகுதிகளை அச்சாக்கி வெளியிடுவதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் பெருமை கொள்கிறது.
இத்தொகுப்பினை அரிதின் முயன்று தொகுத்து அளித்துள்ள பேராசிரியர் முனைவர் இராதா செல்லப்பன் அவர்களின் நன்முயற்சியைப் பாராட்டுகின்றேன். அறிவியல் தமிழ்த்துறை வளர்ச்சிக்கென உருவாக்கப்பெற்ற இக்கலைச்சொல் தொகுப்பு தமிழ்கூறு நல்லுலகத்தின் வரவேற்பைப்பெறும் என்று நம்புகின்றேன்.
இதனை உருவாக்கிய தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறையினருக்கு இனிய பாராட்டுதல்கள்.
20-12-2002
சுந்தரமூர்த்தி