மின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள்/முன்னுரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

முன்னுரை

1982இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறையிலே அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொற்களைத் தொகுக்கும் பணி தொடங்கியது. பேராசிரியர் முனைவர் இராம சுந்தரம் அவர்கள் தலைமையிலே செயலாற்றிய இந்தத் துறையில் கடந்த ஆண்டுகளில் பல்வேறு கலைச்சொல் தொகுதிகள் வெளிவந்தன. இத்துறையின் முதற்கட்டப் பணியாகப் பொறியியல் கலைச்சொற்களும் மருத்துவக் கலைச்சொற்களும் தொகுக்கப்பெற்றன. அந்த வகையில் பொறியியல் கலைச்சொற்களைத் தொகுக்கும் பணி என்னால் மேற்கொள்ளப்பட்டது. ஓராண்டுக் கால அளவில் கட்டடவியல், இயந்திரப் பொறியியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் ஆகிய மூன்று பொறியியல் துறைகளுக்கான சொற்கள் தொகுக்கப்பெற்றன. அவற்றுள் மின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்களே இந்தத் தொகுப்பு நூலில் இடம் பெறுகின்றன.

மின்னியல் மற்றும் மின்னணுவியல் என்ற இக்கலைச்சொல் தொகுப்பில் ஏறத்தாழ 4500 கலைச்சொற்கள் இடம்பெறுகின்றன. அதுகாறும் வெளிவந்த கலைச்சொல் தொகுப்புகளில் உள்ள கலைச்சொற்கள் இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அதாவது 1966இல் வெளிவந்த தமிழக அரசின் வெளியீடான நுட்பச் சொல்லகராதி முதல் 1981 வரையிலும் வெளிவந்த கலைச்சொல் தொகுதிகள் அனைத்தும் இத்தொகுப்பிற்குப் பயன்படுத்தப்பெற்றன. தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம், தமிழக அரசின் பல்வேறு தொழில்நுட்பத் துறைகள், பொறியியல் கல்லூரிகளின் தமிழ் மன்றங்கள் முதலான பல்வேறு நிறுவனங்களின் வெளியீடுகளிலுள்ள ஏறத்தாழ 4500 ஆங்கிலக் கலைச்சொற்கள் தொகுக்கப்பெற்றன. மேற்குறிப்பிட்ட வெளியீடுகளுள் கலைச்சொல் தொகுதிகள் மட்டுமன்றி அறிவியல் நூல்களும் அடங்கும். அவ்வாறு தொகுக்கும் போது ஒரே ஆங்கிலக்கலைச்சொல்லிற்கு இணையாகப் பல தமிழ்க் கலைச்சொற்கள் பயன்படுத்தப்பெற்றுள்ளது கண்டறியப்பட்டது. ஒரு ஆங்கிலச்சொல்லுக்கு இணையாக ஐந்து தமிழ்க் கலைச்சொற்கள் வரையிலும் பயன்டுத்தப்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டது. இவ்வகையான கலைச்சொல் வேறுபாடு ஒரே நூலில் கூட இடம்பெற்றது. காட்டாக, Commutator என்பதற்குத் துருவ மாற்றி, திசை மாற்றி ஆகிய இரு கலைச்சொற்கள் ஒரே நூலில் (2) இடம்பெற்றுள்ளன. இத்தமிழ்க்கலைச்சொற்கள் மூல நூல்களில் இடம் பெற்றுள்ளவாறே இத்தொகுப்பிலும் தரப்படுகின்றன. அவற்றில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரே தமிழ்க் கலைச்சொல் ஒன்றிற்கு மேற்பட்ட தொகுதிகளிலோ நூல்களிலோ இடம் பெற்றால் அந்த நூல்களின் எண்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன. காட்டாக, alternating current என்பதற்கு இணையாக மாறுதிசை மின்னோட்டம் என்ற கலைச்சொல் பல தொகுதிகளிலும் காணப்படுகின்றது. எனவே மாறுதிசை மின்னோட்டம் என்ற சொல்லிற்குப் பக்கத்தில் அடைப்புக்குறிக்குள் (1, 2, 14) ஆகிய எண்கள் தரப்பட்டுள்ளன. இவ்வெண்கள் அந்தந்த மூல நூல்களைக் குறிக்கும். கலைச்சொற்களைத் தரப்படுத்தும் பணி இந்தத் தொகுப்பில் மேற்கொள்ளப்படவில்லை. அறிவியல் நூல்கள் மற்றும் கட்டுரை படைப்போர்

தாம் கூறவந்த கருத்தினைத் தாங்கி நிற்கும் கலைச்சொல்லைத் தேர்வு செய்ய இந்தத் தொகுப்பு உதவ வேண்டும் என்ற நோக்கில் கலைச்சொற்கள் தொகுக்கப்பெற்றுள்ளன.

தமிழ்க் கலைச்சொற்களை ஆய்வு செய்தபோது அறிவியல் ஆசிரியர்களின் பல்வேறு கலைச்சொல்லாக்கக் கொள்கைகள் வெளிப்பட்டன. சில ஆசிரியர்கள் வழக்குச் சொல்லுக்கு முதன்மை கொடுக்க மற்று சிலரோ மொழிபெயர்ப்புச் சொல்லை வழங்கினர்.

Single coil transformer ஒற்றைச் சுரணை மின்மாற்றி (1)

ஒற்றைச் சுற்றல் மின்மாற்றி (4)

ஒலிபெயர்ப்புச் சொல்லை ஒரு சாராரும் மொழிபெயர்ப்புச் சொல்லை மற்றொரு சாராரும் பயன்படுத்தியுள்ளனர்.

induction motor தூண்டல் மோட்டார் (14)

தூண்டல் இயக்கி (4)

சில கலைச்சொற்களில் புணர்ச்சி விதிகள் பின்பற்றப்பட்டுள்ளன. காட்டாக, கேளலைவெண் (25) என்ற சொல்லும் கேள் அதிர்வெண் என்ற சொல்லும் காணப்படுகின்றன. ஒரே ஆங்கிலக் கலைச்சொல்லுக்குப் பல மொழிபெயர்ப்புகள். arc என்பது பல்வேறு முறைகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

automatic arc welding தானியல் சுடர் பற்றவைப்பு (1)

தானியல் மின் பற்றவைப்பு (4)

தானியங்கு மின்வில் பற்றவைப்பு (14)

முதல் சொல்லில் arc என்பதற்கு சுடர் என்ற மொழிபெயர்ப்பு உள்ளது. இரண்டாவது சொல்லில் மின் என்ற கருத்து மொழிபெயர்ப்பு உள்ளது. மூன்றாவது சொல்லில் மின்வில் என்ற சொல் பயன்படுத்தப்பெற்றுள்ளது. அது போன்றே auto-matic என்பதும் தானியல், தானியங்கு என பெயர்ச்சொல்லாகவும் பெயரடையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இக்கலைச்சொல் தொகுப்பு தரப்பாட்டுப் பணிக்கு மிகவும் துணை செய்யும். ஒரே ஆங்கிலக் கலைச்சொல்லிற்கு இணையாகத் தரப்பட்டுள்ள பல்வேறு தமிழ்க் கலைச்சொற்களுள் , மிகப் பொருத்தமான ஒன்றைக் கண்டறிய இயலும். அன்றி ஒரே கலைச்சொல் பல மூலங்களிலும் காணப்பட்டால் வழக்குக்கு முதன்மை அளிக்கும் நோக்கில் அக்கலைச் சொல்லையே தரப்பாட்டுச் சொல்லாக்கத் தேர்வு செய்யலாம்.

இந்தக் கருவிநூல் தொகுப்பு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைக் கருத்துக்களைத் தமிழிலே தர விரும்பும் கட்டுரை ஆசிரியர்களுக்கும் நூலாசிரியர்களுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்பட்டது. அறிவியல் கட்டுரைகளை எழுதுவோர் குறிப்பிட்ட ஒரு கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் ஏற்கனவே வழக்கில் உள்ளதா அல்லது புதிதாக ஆக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய விரும்புவர். அதற்காக அவர்கள் அந்தத் துறையில் அதுகாறும் வெளிவந்துள்ள கலைச்சொல் தொகுதிகளையும் நூல்களையும் அவர்களுக்கு ஒரு சேரக் கிடைக்கவும் வாய்ப்பில்லை. ஏனென்றால் அவற்றுள் பலவும் இன்று மறுபதிப்பு பெறாதவை. எனவே மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைக்கருத்துக்களைத் தமிழிலே படைக்க விரும்புவோருக்கு இக்கருவி நூல் உதவும். இந்தக் கருவி நூலை நல்ல முறையில் வெளியிட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்புநிறை முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்களுக்கும், பதிப்புத்துறை இயக்குநர் (பொறுப்பு) முதுமுனைவர் ம.சா. அறிவுடைநம்பி அவர்களுக்கும், என் மாணவர் உல. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும் என் உளம் கனிந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

முனைவர் இராதா செல்லப்பன்