உள்ளடக்கத்துக்குச் செல்

முக்கனி/கனி—3

விக்கிமூலம் இலிருந்து

கனி3

தோழர்களே !

நான் குடந்தை வந்து நெடு நாட்களாகின்றன குடந்தை வாசிகள், மகாமக காலத்தில்—மாபாதகங்களைத் தீர்த்து வைக்கும் மகிமை பெற்ற மகாமக குளத்தில் மூழ்கித் தத்தமது பாபங்களை எல்லாம் போக்கிவிட்டிருக்கும் புனிதமான காலத்திலே வந்துள்ளேன். ஆம்; முன் வந்த முறைக்கும் இப்போது வந்த முறைக்குமிடையே பலப்பல மாறுதல்கள். அப்போது சண்டை வெகு மும்முரமாக நடந்துகொண்டிருந்தது; இப்போது சண்டை நின்று சமாதானம் நிலவுகிறது. அன்று நாட்டிலே ஆகஸ்ட் கலவரம் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இன்று கலவரம் நின்று, காங்கிரஸ் சர்க்கார் ஆட்சி ஏற்பட்டிருக்கிறது. இப்படி நானாவித மாறுதல்கள் நடந்துள்ளன; நடக்கின்றன. மாறுதல்கள் இயற்கையாக நிகழும்; நிகழ்ந்தேதீரும். இதில் ஒன்றும் தவறில்லை.

காங்கிரஸ் சட்டசபை பிரவேசத்தால் சந்தோஷமோ, சலிப்போ இல்லை நமக்கு. அதிகாரத்தில் அமர்வதால் அகமகிழ்வோ, அழுக்காறோ அடைபவர்களல்லர் நாம்; அந்த சட்டசபை, அதிகாரம் யாவும் நம் கட்சி கண்டவைதான்! ஒரு பதினேழு ஆண்டுகள் அனுபவித்தவைதான்; இன்று அவை வேண்டாம் நமக்கு—வேறுபல வேலைகள் இருப்பதால், இன்று நம் வேலைகள், நாட்டிலே இன உணர்ச்சியைத் தட்டி எழுப்புவது, இன இழிவைப் போக்குவது, திராவிட நாட்டுக் கிளர்ச்சிக்கான ஆக்கம் தேடுவது, திராவிடப் பண்பை மக்களிடைப் பக்குவமாகப் பரப்புவது, புதுமை காண்பது, பூசல்களை ஒழிப்பது, புத்துலகம் சமைப்பது, இன்னபிற.

நம் எதிர்கால வேலை மகத்தானது, மட்டற்றது, மடமையைப் போக்குவது, கடமையைக் கடைப்பிடிக்கச் செய்வது; இன உணர்ச்சி. திராவிடர் நாம் என்ற எழுச்சியை ஏற்படுத்துவதுதான்; திராவிட நாட்டைத் தனி நாடாகக் காண்பதுதான்; இதுதான் நம் திட்டம்; குறிக்கோள். நாங்கள் சொல்வதை சற்றே கேளுங்கள்! பரிசீலனை செய்து பாருங்கள் பகுத்தறிவுடன்! கூர்ந்து நோக்குங்கள் குறையுள்ளதா என்று. பின்னர் பின்பற்றுங்கள் எம்மை, எம் திட்டத்தை, குறிக்கோளை. எமக்காக அல்ல, உங்களுக்காக! உங்கள் நாட்டின், சமுதாயத்தின் உயர்வுக்காக; திராவிடத்தின் சீரும் சிறப்பும் ஓங்குவதற்காக, அல்லல்கள் அழிந்தொழிவதற்காக, ஏழ்மை போவதற்காக; இன்பவாழ்வு வாழ்வதற்காக.

சட்டசபையின் சிறப்பை, மந்திரி மண்டலத்தின் மாண்பை, நிர்வாக சபையின் நிம்மதியை, அதிகாரத்தின் ஆனந்தத்தை — காங்கிரஸ் வேண்டுமானால் கண்டு களிக்கட்டும்; பெற்று பெருமிதமடையட்டும். நாம், மறந்த இன உணர்ச்சியை மறுபடி தேடவும், இழந்த இன்பத்தைத் திரும்பப் பெறவும், தேய்ந்த இலட்சியத்தைப் புதுப்பிக்கவும், மருண்ட மனதை மலர்விக்கவும், கொண்ட கருத்தை முடிக்கவும்— அதன் பின்னால் நம்மைப் பார்க்கத் தேடிவருவார்கள், அவர்கள் — இது நிச்சயம்.

எல்லா மாகாணங்களிலும் கொட்டு முழக்குடன் கொடியேந்திக் கோலாகலத்துடன் பதவி ஏற்றது காங்கிரஸ்! குறைந்தது ஒரு நூற்றாண்டுக்கு எங்களை எவரும் அசைக்க முடியாது என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்தது அப்போது. ஆனால் நடந்தது என்ன? இரண்டு ஆண்டுகட்கெல்லாம் தானே வலிய ஓடிப்போக நேர்ந்தது.

நம் மாகாணத்தில் மட்டுமென்ன — ஆச்சாரியார் அடைந்த அல்லல்கள், கேட்ட நிபந்தனைகள். குறைவற்றவைகளா? அவர் சென்ற இடமெல்லாம், கருப்புக் கொடியுடன் — கண்டனக் கூட்டங்கள், திரும்பிப் பார்த்தால், செய்த தீச்செயல்களைப்பற்றிய கண்டனக் கூச்சல்; புகையிலை வரி, விற்பனை வரி, இன்னபிற — எல்லாவற்றிலும் எதிர்ப்பைக் கண்டார். அவர் புகுத்தின கட்டாய இந்தியும், நம்மை நாம் உணர்ந்து உணர்ச்சி பெற்று, உறுதியுடன் உழைக்கத்தான் உதவிற்று; திராவிட உணர்ச்சி தலையெடுக்க உதவிற்று. அவர் அடக்குமுறையால் நம் உணர்ச்சி மாறவில்லை; மாறாக உத்வேகம் பெற்று ஓடியது ஊற்றுப்போல. இன உணர்ச்சி பொங்கி வழிய, நம்முடைய தியாகம் தெரிய, உண்மை வெளிப்பட, உழைப்பு பலனளிக்க — கட்டாய இந்தி நல்ல வாய்ப்பாக விளைந்தது. நம்மில் எத்தனை எத்தனை தாய்மார்கள், சிறைக்கோட்டம் புகத் தயார் என்பதை அது எடுத்துக் காட்டிற்று. எத்தனை வாலிபர்கள் இப்போராட்டத்திற்கு இசைந்துள்ளார்கள் என்பதை அது விளக்கிற்று — தால முத்து, நடராசன் போல் தமது உயிரையும் தரும் மணிகளின் ஒளி தெரிய அது உதவிற்று. ஆயிரத்தொருவர் அன்று சிறையில் அவதிப்பட வைத்தது. அதன் பலன் இன்று ஐயாயிரவருக்கு மேல், நான் — நீ என்று, சிறை செல்வதற்கு முந்தும் உணர்ச்சியைத் திராவிட இனத்திலே தட்டியெழுப்பியுள்ளது; இன எழுச்சித் தீ நாடெங்கும் பரவியுள்ளது. இதைக் கண்டு தேசீயவாதிகள் சலிப்புறலாம். விசாரமும் அடையலாம். நமக்கென்ன அதைப் பற்றி! நம் வேலை நமக்கு. நாடோடிகளல்ல நாம். நாடு இல்லையே என்று நாதியற்று நலிய. தொடை நடுங்கிகளல்ல நாம். தோல்வி கண்டு தேம்பியழ. நம்மிடம் தைரியமுண்டு; போராட நெஞ்சுரமுண்டு — காரணம்? துடுக்குத்தனமா? துன்மார்க்கமா? அல்ல, பத்திரிகை பலமா; பிரசார பலமா? அல்ல. அவை எல்லாம் காங்கிரசுக்குத்தான் அமோகமுண்டு. நம்மிடம் அமைப்பு இல்லை, பத்திரிகை இல்லை, பிரசாரமில்லை, பணம் இல்லை, பதவி இல்லை. பின் எதனால் இத்தனை வீரம் — தீரம் — நெஞ்சுரம் — எல்லாம்? நம்மிடம் நீதி நிறைந்திருக்கிறது! மானிட உரிமை மட்டற்று விளங்குகிறது, ஜீவசக்தி இருக்கிறது என்ற காரணங்களால்.

காற்று வீசாதபோது வேண்டுமானால் விசிறி கொண்டு காற்றைப் பெறலாம். விசிறினால் வரும் காற்றைத் தடுக்கலாம் — விசிறியை வீசி எறிவதால். ஆனால், இயற்கையாக வீசுவதைத் தடுக்க, ஏன் என்று கேட்க, எவரால் முடியும்?

கணக்கற்ற காலமானாலும் தொடர்ந்து போராட்டத்தை நடத்த நெஞ்சிலே உரம் வேண்டும், தியாகம் செய்ய திட்டம் வேண்டும். நெஞ்சு நினைவற்றிருக்கும், மனம் மறந்திருக்கும், அறிவு அசட்டையாக இருக்கும் — இந்த நேரத்திலே, இனப்பற்றை, இலட்சியத்தை, குறிக்கோளைச் சற்றுத் தேடித் தடவி நினைவூட்டுகிறேன் — உணர்ச்சி கொள்ளுங்கள், எழுச்சி பெறுங்கள் என்று.

இன்று இன உணர்ச்சி, எதிர்காலத்திலே எதற்கும் சலியாத, சரியாத அளவுக்கு எழுச்சி பெற்று வளர்ந்துள்ளது. ஆம்! நமது இயக்கத்திலே அறுபதினாயிரம் அங்கத்தினர்கள் சேர்ந்துள்ளனர். இத்தகைய எண்ணிக்கை — பனகால், தியாகராயர், நாயர் போன்ற பெருமக்கள் காலத்திலேகூட கிடையாது. ஒரு சமயம், பனகால் ஒரு கூட்டத்திலே பேசும்போது "உங்கள் நீதிக்கட்சியில் எத்தனை அங்கத்தினர் உளர்" என்று ஒரு காங்கிரஸ் தோழர் கேட்டார். அதற்குப் பனகால் அரசர், காங்கிரசில் எத்தனைப் பேர் என்று கேட்க, ஒன்றரை லட்சம் என்று அவர் கூறினார் — அந்த ஒன்றரை லட்சம் போக, மற்றப் பேர் நீதிக் கட்சிக்காரர்தானே! என்று பனகால் விடையிறுத்தார் என்று, சிலர் ஏளனம் செய்தனர். அந்த நிலையில் நாம் இல்லை. நமக்குப் பத்திரிகை, பிரசாரம், அமைப்பு என்பன எவையும் இல்லை. இப்படியிருந்தும் ஒரு சில மாதங்கட்குள்ளே அறுபதினாயிரம் பேர் சேர்ந்துள்ளனர் நம் கழகத்திலே. இது நீதிக்கட்சியின் வரலாற்றிலேயே பெருமையான கட்டம் என்றால் மிகையல்ல. எண்ணிப் பாருங்கள். எப்படிப்பட்ட அங்கத்தினர்கள் இவர்கள் என்று. இவர்களை அங்கத்தினர்கள் என்பது அவ்வளவு பொருத்தமல்ல, தொண்டர் படை என்பது மிகப் பொருந்தும். எதற்குத் தொண்டர் படை? தேர்தல் வேலைக்கா? எடுபிடி ஆட்களாகவா? மலர்மாலை சூட்டி ஆரவாரம் செய்யவா? கவர்னரின் கைலாகு பெறுவதற்கா? மன்னர் பேட்டிக்காகவா? இல்லவே இல்லை. பின் எதற்கு? இனத்துக்காக இரவு பகலும் பாடுபட, அவசியமானால் சிறைக் கதவுகளையும் சென்று தட்டுவதற்குத் தயாராக இருக்கும் காளைகள் இவர்கள். எனவே, நம் எதிர்கால வேலைத் திட்டங்களெல்லாம், காங்கிரசின் கபடத்தினின்றும் விலகி, கருத்தோடு கடமையைச் செய்து, வெற்றி—தோல்வி பற்றிக் கவலையின்றி, நம் நிரந்தரப் பிரச்னையைத் தீர்க்க, திராவிட நாட்டைத் தனி நாடாகக் காண, உறுதியுடன்—ஊக்கத்தோடு உழைப்பதற்கே.

அடிப்படையை அடைவதைத் தவிர நமக்கு வேறு வேலை இல்லை. திரவிட நாடுதான் நம் எதிர்கால வேலைத் திட்டம், அதை அடைந்தே தீருவோம். எனவே, நாம்—நம்மில் எவரும், எக்காலத்தும், எந்நிலையினும் "நான் திராவிடன்" என்று சொல்லவும்—எண்ணவும் தயங்கக் கூடாது, அது பிழை என்று பின்வாங்கக் கூடாது.

ஆம்! திராவிடர் என்ற இனஉணர்ச்சி நம்மிடை எழுச்சியடையவேண்டும். எனவேதான் ஜஸ்டிஸ் கட்சியைத் திராவிடர் கட்சி என அழைக்கிறோம். இது நம்முடைய மாற்றுத் தோழர்களிடையே மாற்றத்தையும், கூட்டுத் தோழர்களிடையே கொந்தளிப்பையும் உண்டாக்கியது. அடிப்படையில் மாற்றம் செய்தோம் என்று. அன்று நீதிக்கட்சி ஆரம்ப காலத்திலே, நீதி கேட்கும் சபையாக, ராஜி பேசும் சபையாக, இன்னும் சொல்ல வேண்டுமானால், ஒரு வகுப்பாரின் பஞ்சாயத்துச் சபையாக விளங்கியது. நூற்றுக்குத் தொண்ணூற்று ஏழு பேர் பாடுபடுபவர்கள் நாங்கள்; மூன்று பேர்களாக உள்ள ஆசிரியர்கள் உயர்ந்த பதவிகளிலே அமர்ந்து ஆளுகின்றீர்களே இது நீதியா? பெரும் பெரும் உத்தியோகங்களில் ஆரியர்களே அதிகம்; மற்றவர்கள் மிகமிகக் குறைவு. இது முறையா? எங்களுக்கும் அதிகாரத்தில் பங்கு வேண்டும், தாருங்கள் என்று, நீதிக் கட்சி கேட்டது அன்று. நாங்கள் உழைக்க, வேறு ஒருவர் உண்டு களிப்பதா? இது நல்லதா என்று நீதி கேட்டது? கூக்குரலிட்டது. ஆனால் பலன்? ஆள்வது ஆங்கில சர்க்கார்; ஆனால் அதை ஆட்டி வைப்பது ஆரியம், நீதி கிடைக்குமா அங்கு? நாம் ஏன் அவரிடம் நீதி கேட்க வேண்டும்?

புலியிடம் மான் மன்றாடி மனம் வைத்து உயிர்ப் பிச்சை அளிக்கும்படி வேண்டுவது இயற்கை; நடக்கக்கூடியது. ஆனால், புலி மானிடம் பயந்து, அடங்கி ஒடுங்கி, நடுங்கி உயிர்ப்பிச்சை கேட்பதென்றால் இது விவேகமுள்ள செயலா? மிக விசித்திரமானதல்லவா? அது போலத்தான் அன்று பார்ப்பனரல்லாதார், பார்ப்பனரிடம், தம்மை நல்ல முறையிலே நடத்தித் தம் வகுப்புக்கு நீதி வழங்கும்படி கேட்டனர். இது விசித்திரமான காரியம். ஏன்? பெரும்பான்மையோர் சிறுபான்மையோரிடம் பதுமை வேண்டி நின்றது விசித்திரம்; எனவே வழங்கப்படவில்லை நீதி. ஏன் இன்னும் அந்த இழிநிலை நம்மிடம்? இந்த நாட்டுக்கு உரிமையாளரான இனம், நாகரீக மிகுந்த இனம், நாடாண்ட இனம், நாடாளப்போகும் இனம், சரித்திரப் பிரசித்தி பெற்ற திராவிடர் இனம், இலக்கியத்திலே இன்பம் கண்ட இனம், வீரமிக்க இனம், வீணர்களிடம் வாது புரிந்து ஏன் நீதி கேட்க வேண்டும்? கேட்டும் ஏன் நீதி கிடைக்கவில்லை? என்று துருவித்துருவி ஆராய்ந்தோம்—நாம் திராவிடர், நம் இனம்—திராவிட இனம்; நம்முடைய நாடு திராவிட நாடு என்று கண்டோம். நம்மை நமக்காக உழைக்கும் கட்சியை நம் இனப் பெயரால், குழுஉக்குறிச் சொல்லால் அழைக்கலானோம். அதுதான் நீதிக் கட்சி என்னும் திராவிடர் கழகம்.

வீடு இடிந்து தாறுமாறாகக் கிடந்தது; அழகு இழந்திருந்தது. அதைப் புதுப்பித்தோம். எப்படி? இனி எக்காலத்திலும்—எதற்கும் ஆடாது அசையாது நின்று ஈடுகொடுக்கும்படி அத்தனை உறுதியாக அமைத்தோம்; அமைக்குமுன் அஸ்திவாரத்தைக் கொஞ்சம் கெட்டிப்படுத்தினோம்; அவ்வளவுதான். அடிப்படை, ஆணிவேர் போல் ஊன்றி விடவே, அதன் மேலுள்ள வீடு அற்புதமாக அமைந்தது. பொச்சரிப்பையும் பூசல்களையும் கண்டு மருளாது, புகழையும் நிந்தனையையும் பொருட்படுத்தாது, அடிப்படையைப் பலப்படுத்தினோம். பொச்சரிப்புக்காரர்களைப் போவென்றோம். 'புதையல் கிடைக்கும், பூமான்களாய் வாழலாம்' என்றிருப்போரை, உங்களுக்கு வேலையில்லை நடவுங்கள் என்றோம். பட்டம் பதவிப் பித்தர்களை விரட்டியடித்தோம்.

ஆம்! இடிந்த வீட்டைச் செப்பனிட்டோம். அஸ்திவாரத்தைப் பலப்படுத்தி, கூரை வேய்ந்து, சுற்றுச் சுவர் எழுப்பி கூடகோபுரமாகக் கட்டினோம். அந்த வீட்டைக் கட்டுங்கால், எங்கள் நரம்பையுங்கூட நாராகக் கொடுத்திருப்போம். எங்கள் உழைப்பால் வந்த வியர்வைகூடச் சேறாகப் பயன்பட்டிருக்கும். அத்தகைய அல்லல்களை அடைந்தோம். நாங்கள் ஈடற்ற இடுக்கண்களோடு இடிபட்டோம். அதன் பலன்—இன்று இடிந்த வீடு (ஜஸ்டிஸ் கட்சி) செப்பனிடப்பட்டது செம்மையாக. வீடு இடிந்த அன்று, எட்டு அடிக்கூட கிட்ட வராமல் எட்டிப் போனவர்கள், இன்று, இடிந்த வீடு புதுப்பிக்கப் பட்டு, பூச்சு வேலை செய்யப்பட்டு, புது மெருகுடன் விளங்குவதைக் கண்டு—விரைவாக, வேகமாக, வெற்றி முழக்குடன் வீறாப்புப் பேசிக்கொண்டு, பூர்ணகும்பத்தைக் கையிலேந்தி உள்ளே நுழைய மந்திரம் ஜபிக்கப் புறப்பட்டு விட்டனர். பூரிப்போடு நாங்கள் அவர்களை வரவேற்கிறோம் வாருங்கள்! உள்ளே வந்து பாருங்கள்!! வீடு எவ்வளவு விசாலமானது, விரிவானது, காற்று எவ்வளவு நன்றாக வீசுகிறது. உள்ளே நுழைந்து வீட்டின் வாடைபட்ட உடனே கோழைக்கும் வீரம் பிறக்கும், துணிவும் நிமிரும், நரம்பிலே விசை அதிகமாகும், எண்ணத்திலே எழுச்சி ஏற்படும் என்று எடுத்துச் சொன்னோம். என்ன செய்தனர் பூர்ண கும்பமேந்திகள் உள்ளே வந்து யாவற்றையும் உற்றுத் துருவிப் பார்த்தனரா? இல்லை! பின் என்ன செய்தனர்? நாங்கள் உள்ளே வரமாட்டோம்; பயமாக இருக்கிறது. நீங்கள் என்ன என்னவோ செய்து வீட்டைக் குட்டிச்சுவராக்கி விட்டீர்கள். நீங்கள் செய்த மாறுதல் பிடிக்கவில்லை என்று பலப்பல பேசினர். அடிப்படையை அறியாததால், உள்ளே வந்து உள்ளத்தை உள்ளபடி அறிய பயம், ஆனால் குடியிருக்க மட்டும் ஆவல் அதிகம். பூர்ண கும்பேந்திகட்காக உழைப்பாளிகள் வீட்டைவிட்டுப் போக வேண்டுமா? எப்படி முடியும் அது? எனவே, சென்று வாருங்கள் என்று செப்பினோம் அவர்களை. நம்முடைய கட்சியின் பெயர் மாற்றம் ஏன் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டோம். நம்முடைய தோழர்கள் இனியும் இனத்தை எழுச்சி பெறச் செய்யாதிருந்தால் அது இரங்கற்பாலதே!

குடந்தை, அறிவாளிகள் நிறைந்த இடம். அறிவாளிகள்—அதிலும் பார்ப்பன அறிவாளிகள், படித்த அறிவாளிகள் அதிகம். நான் கேட்கிறேன் அவர்களை; நினைத்துப் பாருங்கள்! சிந்தித்துப் பாருங்கள் சற்றே; ஆரியம்—திராவிடம் இரண்டும் ஒன்றா? ஆரிய நாகரிகத்திற்கும், திராவிட நாகரிகத்திற்கும் வேற்றுமை இருக்கிறதா இல்லையா என்று. வேற்றுமை—எதிலும் வேற்றுமை. எல்லாவற்றிலும் வேற்றுமை. எதற்கெடுத்தாலும் வேற்றுமை இல்லையா? கலையில், இனப்பண்பில், நடை முறையில், வாழ்வில், வாழ்க்கை முறையில், உழைப்பில், உண்டு களிப்பதில் வேற்றுமையில்லையா? வேற்றுமை மிகத் தெளிவாக விளங்குகிறதே; இல்லை என்று நெஞ்சாரக் கூற முடியுமா?

இவ்வித வேற்றுமை ஏன்? அதை மாற்றுங்கள்—உங்கள் போக்கை மாற்றுங்கள், மறுமலர்ச்சி கொள்ளுங்கள்; அகம்பாவத்தை அகற்றுங்கள்; அறிவைக் கொள்ளுங்கள்; ஊரார் உழைப்பை உறிஞ்சாதீர்கள், உழைத்து மற்றவர்போல உண்ணுங்கள். பூதேவர்களாய் வாழாதீர்கள்; அது அறமல்ல; அறிவுடைமையல்ல; அற்பத்தனம்; அயோக்கியத்தனம்; அதைவிட்டு நீரும் மனிதர்களாய், மனிதத் தன்மையோடு வாழ்வதே வகையான செயல் என்று, வேண்டுகோள் விடுத்தோம். வேண்டுதல் விழலுக்கிறைத்த நீராயிற்று. ஆரியம் அதன் போக்கை, வாழ்க்கை முறையை, ஊரை உறிஞ்சும் உலுத்தர் வேலையை விடவில்லை, மாற்றவுமில்லை. மாறாக, இன்று தேசியத்தின் பெயரால் உருமாறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறது; ஏ ஆரியமே! நீ உருமாற வேண்டாம். உன் போக்கை மாற்றவும் வேண்டாம். வேண்டுகோள் விடுத்த வேளை போய்விட்டது. நீ, நன்றாகப் பஞ்சகச்சம் வைத்து உடுத்து, பூதேவனென்று புகழ்ந்துகொள்! தர்ப்பைப் புல்லை காட்டிக் காசு பறி; அந்தரலோகத்திற்கு அழைத்துச் செல்வேனென்று ஆசைகாட்டி அகப்பட்டதைச் சுருட்டு! அதுபற்றிக் கவலையில்லை நமக்கு. ஏன்? ஆரிய சூழ்ச்சியை இன்று மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர். ஆரிய உருத்தாங்கி—தர்பாயுதத்துடன் வெளிவந்தால், பிழைப்பு இருக்காது—வருங்காலத்தில். இவன் ஆரியன் என்று அறிந்து நடக்க, உன் உருவம் உதவட்டும்! என்பதே எனது ஆசை!

முஸ்லீம்கள்—தங்களை முஸ்லீம்களென்றும், பார்சியர்—தங்களை பார்சியர் என்றும், சீக்கியர்—தங்களை சீக்கியர் என்றும் ஆப்ரிக்கர் தங்களை ஆப்ரிக்கர் என்றும் அழைக்க, அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லையே; நீ ஏன் அவனைவிட கருப்பா? ஆரியன் என்று கூறிக் கொள்ள, வெட்கப்பட? அல்லது சிவப்பு இந்தியன் போல அவ்வளவு சிவப்பா? அதனால், "நான் ஆரியன்" என்று அறிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறாய்? உள்ளதை உள்ளபடி கூறுவதிலென்ன அபசாரம் உனக்கு? நீ ஆரியன் என்பதை மறைக்கிறாயே, ஏன்? அதனை அறியோமா நாங்கள்? கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர், மாக்ஸ்முல்லர் வந்தபோது, ஆரிய வேதம்—எங்கள் வேதம், வடமொழி — எங்கள் மொழி, அது தேவ பாஷை என்று கூறி குதூகலமடையவில்லையா பூரிப்படையவில்லையா நீங்கள்? அதுகண்டு, சென்னை மயிலையும் திருவல்லிக்கேணியும் திருநடனமாடவில்லையா? சின்னாட்களுக்கு முன்னருங்கூட மாணவரின் பள்ளிகளிலே ஆரியமத உபாக்யானம் என்றும், ஆரியதர்மமென்றும் பாடபுத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கவில்லையா? எதனால் அகமகிழ்ந்தீர் அப்போது, ஆரியர் நீங்கள்; ஆகையால்தானே ஆனந்தம்! ஜெர்மானியர் போரில் ஜெயித்துக் கொண்டிருக்கும் போது என்ன ரொம்பப் பேசினீர்கள்? 'அவாளும் ஆரியன், என்று அகங்குழையவில்லையா? ஆரியத்தின் உயர்வைக் கண்டு ஆனந்த நடனமாடுகின்றீர்; ஆனால், 'நாங்கள் ஆரியர்' என்று கூறிக் கொள்ள நீங்கள் அச்சப்படுகிறீர்களே, ஏன்? வெட்கமா, துக்கமா, மர்மமென்ன? மக்களை ஏமாற்றத்தானே! செல்லாது அது இனி.

ஜெர்மானிய நாட்டிலே ஜெர்மானியர் அதிகம் ஆங்கில நாட்டிலே ஆங்கிலேயர் அதிகம்; சீன நாட்டிலே சீனர் மிகுதி. கிரேக்க நாட்டில் கிரேக்கர் எண்ணிக்கை மேம்பட்டது. எனவே, அந்தந்த நாடு அவரவர்களுக்குச் சொந்தமாக உள்ளது. திராவிட நாட்டிலே யார் பெருவாரி? உழைப்பவர்கள் யார்? இது யாருக்குச் சொந்தம்? எங்களுக்கு—எங்கள் திராவிட இனத்திற்குச் சொந்தம். இது ஆரிய நாடல்ல; அல்லது ஆரியர் ஆதிக்கத்திற்கு அடங்கும் நாடுமல்ல. ஆரியருக்கு நாடில்லையே என்ற எண்ணம் ஏற்படலாம், அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை.

உலகிலேயே இரு இனங்களுக்குச் சொந்த நாடு கிடையாது. இது வரலாற்றுச் சான்று. ஆனால், வருங்காலத்திலே திராவிட நாட்டிலே ஆரியருக்கென்று தனி இடமுண்டு அக்ரகாரத்திலே. ஆரியம் அன்றும் இருக்கும்; ஆனால் சற்று பேதமுண்டு, இன்றைய நிலைக்கும் அன்றைய நிலைக்கும். ஆரியம் வாழும் பிறரைச் சுரண்டியல்ல; பூதேவர்களாகவல்ல; விளைக்காது அறுக்கும் வஞ்சகர்களாக அல்ல; உழைப்பாளிகளாய் — மனிதர்களாய் ஆரியம் விளங்கும் அன்று. ஆரியம் தன் இடத்தை விட்டு வெளிப் போந்தால் ஊர்காவலர் ஒரு கேள்வி கேட்பார், பதிலளித்த பின்னர்தான் வெளிப்படலாம். எங்குப் புறப்பட்டீர்? எதற்காக? மக்களுடன் எவ்வகையில் கலக்கக் கருத்துக்கொண்டிருக்கிறீர்? என்ற வினாக்களுக்கு விளக்கமாக விடை வேண்டும். அவர்கள் கூறும் பதிலிலிருந்து அவர்கள் செயல் விவேகமான செயல், வஞ்சக வேலையல்ல என்று தெரிந்த பிறகுதான் வழிவிடுவார். ஏன்? ஆரியம் அத்துணை அறிவு படைத்துளது தாங்கள் முன்னேறுவதில்.

சிலர் கேட்கலாம் ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று பலப்பல பேசுகிறீர்; திராவிடத்திலே கூடப் பள்ளர், பறையர் என்றும் முதலியார், நாயுடு, சைவ, வைணவர், வேளாளர் என்றும் பல பிரிவுகள் உள்ளனவே, இது உங்கள் கண்ணில் உறுத்தவில்லையா? வீணே ஆரியத்தை மட்டும் ஏன் தூற்றுகிறீர் என்று ஒப்பாரி வைக்கலாம்.

நான் கூறுகிறேன் அத்தகைய தோழர்களுக்கு ஆரியத்தின் அக்ரமச் செயல்களால் உண்டான பிழைகள் இவை—வேறுபாடுகள் இவை. திராவிடத்திலே உள்ள இத்தகைய வேறுபாடுகளை நீக்கிக்கொள்ள முடியும். ஆரியத்திற்கும் திராவிடத்திற்குமிடையே அளவற்ற முரண்பாடுகள் உள்ளன. வேறுபாட்டை நீக்கிக்கொள்ளமுடியும். ஆனால் முரண்பாடு நீக்கமுடியாது. சான்றாக, திராவிடத்திலுள்ள வேறுபாடு தண்ணீருக்கும் பன்னீருக்கும் உள்ளதை ஒத்தது. தண்ணீரோடு பன்னீரைக் கலக்கலாம்; கெடுதியில்லை; தண்ணீரும் பன்னீரும் மனத்தில் பங்குபெறும். இதில் முரண்பாடு இல்லை; வேறுபாடு தான் உளது. இன்னும் இந்த வேறுபாடு தண்ணீருக்கும் இளநீருக்கும் உள்ள வேறுபாட்டைப் போன்றது. இளநீர் சற்று இனிப்பாக இருக்கும்; தண்ணீர் சுவையற்று இருக்கும். வேற்றுமை அவ்வளவே. இளநீரோடு தண்ணீர் கலந்தால் உபயோகமற்றதாகி விடாது. இதுவும் முரண்பாடல்ல — வேற்றுமைதான். இத்தகைய வேற்றுமைகளை விவேகமிருந்தால் விலக்கிக் கொள்ளலாம்; அறிவு இருந்தால் அகற்ற முடியும்; ஆனால் ஆரியத்திற்கும் திராவிடத்திற்குமுள்ள முரண்பாடு — பார்த்த அளவிலேயே முரண்பாடு உடையவை என்பது தெள்ளிதில் விளங்கும்.

ஆரிய — திராவிட முரண்பாடுகளை நாம் வாழ்க்கையிலேயே காணலாம். கலையிலே, கருத்திலே இன்ன பிற எல்லாவற்றிலும் காணலாம். எடுத்துக்காட்டாக ஒரு சில உரைக்கிறேன்; உள்ளத்திலே ஊற்றுங்கள். ஆரியர்களின் கடவுள்கள் அனந்தம் கோடி, அநேக அவதாரங்கள், அற்புத வடிவங்கள். ஆனால், திராவிடர், "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற பண்பைப் பெற்றிருந்தனர். ஆரியரிடையே ஜாதி வேற்றுமை உண்டு; திராவிடரிடம் இல்லை. ஆரியம் — பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமன் என்ற படிப்படியான உயர்வு தாழ்வு தரும் சாதிகளைக் கொண்டது. திராவிடம் — அரசர், வணிகர், வேளாளர் என்ற முறையிலே பாகுபாடு உடையதாக இருந்தாலும் உயர்வு தாழ்வைக் கொண்டதல்ல. உலுத்தரை உயர்த்தி - உழைப்பாளியை உறிஞ்சும் முறை இல்லை. ஆரியன் பிறரைத் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, என்று பலப்பல பேசுவர். இங்கு, திராவிடத்தில் அது இல்லை. ஒரு சில இருப்பினும் அது விலக்கக்கூடியதே.

ஆரிய மொழி வேறு, திராவிட மொழி வேறு. ஆரிய மொழியைத் தேவமொழியென்று, ஆரியர் கூறிக் கொள்வர், வழக்கத்திலே இல்லாதிருப்பினும். அவர்களது வீரமெல்லாம் நம்ப முடியாதவை; அதிலும் ஆண்டவனுடைய அவதார லீலைகளை அடிப்படையாகக் கொண்டவை. நம்முடைய வீரமோ, கலிங்கத்துப் பரணியில், சிலப்பதிகாரத்தில் காணக் கிடக்கிறது. ஆரியக்கலை கற்பனை நிறைந்தது; திராவிடக் கலை பகுத்தறிவுக் கேற்ற - உண்மைகள் நிறைந்தது.

சான்றாக, ஒரு நிகழ்ச்சியைக் காண்மின். சங்க நூலிலே ஒரு செய்யுள் - வில்வீரன் ஒருவன் வில்லிலே நாணேற்றி, அம்பைப் பூட்டி, விசையாக விடுகிறான் - ஒரு புலியைக் குறிபார்த்து. அம்பு-வில்லினின்றும் விடுபட்டது. மிகவேகமாகப் புலியின் உடலிலே ஊடுருவிச் சென்று — அருகிலிருந்த வாழைமரத்திலே பாய்ந்து நின்று விட்டது. இந் நிகழ்ச்சி உண்மையானது. உருவகப்படுத்தியதன்று. அம்பு-புலியின் உடலைத் துளைத்துச் சென்றது என்பது அம்பின் கூர்மையையும், வேகத்தையும், அதை எறிந்தோனுடைய சக்தியையும், குறி தவறாத் திறமையையும் குறிக்கிறது. புலியைத் துளைத்த பின் அம்பின் வேகம் குறைகிறது. தடை ஏற்பட்டதால். எனவே, புலியைத் துளைத்த அம்பு வாழையைத் துளைத்துச்செல்ல முடியாமல் அதிலேயே பதிந்து நின்றுவிட்டது. வில்வீரனின் செய்கை இவ்விதம் கூறப்படுகிறது — திராவிடக் கலையிலே.

இத்தகைய நிகழ்ச்சியை—ஆரியம் கலந்த காவியத்திலே எவ்வாறு கூறப்படுகிறது என்பதைக் காண்போம். இராமனது அம்புறாத் தூணியிலிருந்து அம்பு புறப்பட்டது; புறப்பட்டு இராவணனது உடலெங்கும் "சீதை என்னும் சிந்தனை எங்கே—எங்கே! என்று தேடித்தேடி திரிந்து, அங்கெல்லாம் மாய்ந்த பின், வெளிப்பட்டுக் கடலிலே சென்று குளித்துப் புனிதமாகி மீண்டும் இராமனது அம்புறாத்தூணியில் வந்தமர்ந்தது" என்று இயம்பப்படுகிறது. இத்தகைய செயல்கள் கவைக்கு உதவுமா? ஆராய்ச்சிக்குத்தான் நிற்குமா? கற்பனை என்று காணும்போதே கருத்திற்படவில்லையா? இதுதான் வீரமா?

இவ்விதம் திராவிடத்திற்கும்—ஆரியத்திற்கும் உள்ள முரண்பாடுகளை விளக்கமாக எடுத்துக் கூறப்புகின் ஏடு இடந்தராது.

அண்மையில் நாட்டில் நடந்த செயல்களைக் காண்மின்; அவை எதைக் குறிக்கின்றன என்பதைக் கூறுங்கள். பத்திரிகைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மலையாளத்திலே ஒரு குளம், சிலர் நீராடினர்—அதில். அவரும் மனிதர்தான் ஆனால், சுக ஆண்டவனுடைய அபிஷேகத்திற்கென்று அமைக்கப்பட்ட திருக்குளமாம். அதில் அவர்கள் நீராடியது தவறு; ஆடு,மாடு முதலிய அறிவற்றவைகள் அதிலே ஆனந்தமாக நீராடலாம். ஆனால், அறிவு படைத்த மனிதன் நீராடக் கூடாது. ஏன்? அவர்கள் ஈழவர்கள்; ஆலயத்திலே நுழையத் தகாதவர்கள். அதுமட்டுமல்ல; மனித ஜாதியில் மிக மட்டமாகக் கருதப்படுகின்றவர்கள் சமூகத்தால். குளத்திலே நீராடியதற்காகக் குற்றம் சாட்டப்பட்டனர்; குளத்தைப் புனிதமாக்கச் செய்யப்படும் பூஜை கைங்கர்யங்களுக்கு வேண்டிய பொருள் கொடுத்துத் தீர வேண்டுமென்று கட்டளையிடப்பட்டனர். சட்டம் செய்தது இவ்விதம் என்று சன்மார்க்கம் பேசலாம். ஏன் அவ்விதச் சட்டம்? அசட்டுச் சட்டம்! அறிவுக்குப் பொருந்தாத சட்டம் ஆட்சியிலே அமைந்துள்ளது? அதிலும் இருபதாம் நூற்றாண்டிலே, இந்த ஆங்கில அரசாங்கத்தில்? அன்று ஆரியம் செய்த அநேக சூழ்ச்சிகளில் இதுவுமொன்று. இத்தகைய செயல்களிலே அறிவு, அன்பு, அல்லது ஆரிய அகம்பாவம், எது உளது, உரையுங்கள்!

மற்றொரு மன்னர் சின்னாட்களுக்கு முன்னர், கோவிலுக்குச் சென்றார் ஆண்டவனை அர்ச்சிக்க. அவர், தாம் ஆண்டவனை உள்ளே சென்று தரிசிக்க வேண்டும், பூஜிக்க வேண்டும் என்று வேண்டினார் அர்ச்சகரை. அய்யர் அனுமதிப்பாரா இதனை! அரசரும் அசாதாரணமானவர் தான். உண்ணாவிரதமிருந்தார், உலகைப் படைத்தோனை உள்ளே சென்று உபாசனை செய்ய. என்ன செய்தும் என்ன? அவர் கடைசிவரை அனுமதிக்கப்படவே இல்லை. பின் அவர் மணலிலே இலிங்கம் செய்து பூஜித்து வீடு திரும்பினாராம். ஆண்டவனைத் தங்கள் உடைமை, தங்கள் உயர்வுக்கான ஊன்றுகோல் என்று கருதும் உலுத்தர்களைக் கொண்ட நாடு இது.

மற்றொரு செய்தி, மனதை வாட்டும் செய்தி, மனிதத் தன்மையைப் பரிகசிக்கும் சேதி, சில கிழமைகட்கு முன் பத்திரிகையிலே பார்த்தோம். ஆம்; குவாலியர் சமஸ்தானத்திலே நடந்தது. வருடா வருடம் நடந்து வருகிறது. அங்கொரு பண்டிகையுண்டு, மதத்தின் பெயரால். ஜம்ஸா பண்டிகையென்று அதற்குப் பெயர். அன்று உயர் ஜாதி மக்கள் அனைவரும் கூடி, விழாக் கொண்டாடுவர், ஆடிப் பாடிக் கேளிக்கைகள் புரிவர். அதுபற்றி அக்கறையில்லை நமக்கு. ஆனால், அந்த விழாவிற்கு ஆதித் திராவிடர்கள் தங்கள் பெண் மக்களை அனுப்ப வேண்டுமாம், எதற்கு? விழாவிலே பங்கெடுக்கவா? அல்ல. அந்தப் பெண்களைக் கேலியாகப் பேசுவர், தூற்றுவர்—உயர் சாதியினர் தாம் இன்புற. இது நடப்பது மதத்தின் பெயரால். விழா கொண்டாடி அதிலே பெண்களை, அதிலும் ஒரு குலத்தவரைத் தூற்றுவதா? எத்துணை நாள் அறிவுற்றிருப்பர் அக்குல மக்கள்! தன்மானம் பெற்றனர்—அவர்களும் இவ்வாண்டு. தருக்கர் கொட்டத்தைச் சட்டை செய்யவில்லை. விழாவிற்குப் பெண்களை அனுப்ப முடியாது என அறிவித்துவிட்டனர். இது அறமல்லவா? அறிவுடைமை தானே! மானம் அவர்களுக்கும் உண்டல்லவா? இதன் விளைவு சாதி இந்துக்கள் ஆத்திரமடைந்தனர். தொன்று தொட்டு நடந்து வரும் சம்பிரதாயத்தை எப்படி மீறலாம் என்று கொதித்தெழுந்தனர். தடியெடுத்தனர் கையில், புகுந்தனர் சேரியில், அடி அடியென்று அடித்தனர்—அங்குள்ள மக்களை, மமதை கொண்டு. இதன் விளைவாக இரண்டு உயிர்ச் சேதங்களும் விளைந்தனவாம். என்ன இழிமதி இன்னும் நாட்டில்? மக்களை, அதிலும் பெண் மக்களைத் தூற்றுவதற்கு ஒரு திருவிழாவா? அதுவும் மதத்தின் பேரால். மானங் கெடவில்லையா இதனால்? என்ன நயவஞ்சகம் மதத்தின் பேரால்!

மதம் மக்களுக்கு மாசு தராதது என்று மகாத்மாக்கள் மனங்குழைந்து பேசும் இந்த காலத்திலே, மதத்தின் பேரால் இத்தகைய அநீதியும் அட்டூழியங்களும் நாட்டில் நடப்பதா? இது தெரியாதா அந்தராத்மாவுக்கு? பண்டித ஜவஹர் போன்றோர் வாழும் நாட்டிலே நடக்கும் நியாயம் இது. ஒரு குலத்தோர் ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பதுமல்லாமல், எங்களுக்கும் மானம் உண்டு என்று கூறும் காரணத்தால் கொடுமைக்குள்ளாவதா? இதைப் பார்க்கா விட்டாலும் காதால் கேட்டும் கண்டியாமல் இருக்கிறார்களே! ஆனால், அலங்கார ஆர்ப்பாட்டத்துடன்—அகில உலக தேசீயம் பேசப் புறப்பட்டு விடுவார். இதனைத் தடுக்க ஏதாவது செய்தார்களா? இந்த தேசீயவாதிகள்—மதக் கட்டுப்பாட்டை, மதிகொண்டு மாற்றினார்களா? இல்லை—தங்கள் சிறு விரலையும் அசைக்கவில்லை இதுபற்றி சமுதாயக் குறைபாட்டை நீக்க முற்படவில்லை தேசீயவாதிகள். மாறாக சனாதனத்திற்கு சப்பைக்கட்டுக் கட்டிச் சபையில் சிந்து பாடுகின்றனர். உண்மையை வெளிப்படுத்த, உலுத்தரை உழைப்பாளராக்க உரமில்லை நெஞ்சில். கேட்டை நீக்க உள்ளம் இல்லை. உலக உத்தமர் என்ற விளம்பரத்திற்கு வேண்டுமானால் இவர் செய்கை பயன்படலாம். இதுவா தேசீயத் தொண்டு?

ஆரிய—திராவிட முரண்பாடுகள் அளவிறந்தன ஆரியம் மிகத் தந்திரமுள்ளது. இல்லாவிட்டால் இன்று சட்டசபையிலும்கூட அதன் ஆட்சி செல்லுமா? இன்று நாட்டில் நம் போன்ற திராவிடர்கள் இந்துமதச் சட்டத்திலே நான்காவது சூத்திர சாதியாகத்தானே பொறிக்கப் பட்டிருக்கின்றனர். இந்த இழிவைப் போக்க முற்பட்டவர் யார்? இது என்று நீங்கும்? தனி இன உணர்ச்சி—ஆரியத்தினின்றும் அடியோடு முரண்பட்டவர் நாம், அதை உணர்த்த, தெரிந்துகொள்ள, திராவிடர் என்ற இன எழுச்சி பெறவேண்டும். இன்றேல் ஆரிய மாயை நம்மை விட்டு அகலாது.

இந்த உண்மை இந்த நாட்டு மக்களுக்குச் சுலபத்தில் புரியாது. ஆம்! இதுதானா வாழ்க்கையில் நடப்பவை? எவற்றையுமே புரிந்து கொள்ள முடியாத நாடு இது. நீங்கள் வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள் — நாட்டிலே பெரும்பான்மையான கிராமத்தாரை, ஆகாயத்திலே விமானம் பறப்பது எப்படி என்று? வரும் — பதில் — தெரியாது, புரியாது, என்று. இதே போன்று கப்பல் போவது எப்படி? என்றால் — தெரியாது. தண்ணீரின் அடியிலே ஒரு கப்பல் போகிறதே தெரியுமா? அமெரிக்காவின் அகல — நீளம் தெரியுமா? இந்தியா எத்தனை மாகாணம் சொல் என்றால், தெரியாது என்பதே பதில். மற்றும் தந்தி, டெலிபோன், இரயில் இன்னபிற இயங்கும் முறை யாவும் தெரியாது என்றே கிராமத்தான் கூறுவான். ஆனால், அவனைக் கேளுங்கள் — எமனுக்கு என்ன வாகனம் என்று, உடனே பதில் வரும், எருமைக் கடா என்று. எப்படித் தெரியும் அவனுக்கு இது? நாட்டின் நிலை இவ்விதம் நலிந்துள்ளது; அறியாமை அரசோச்சுகிறது; உலுத்தர்கள் ஊராள்கின்றனர்; உழைப்பாளிகள் உதாசீனம் செய்யப்படுகின்றனர். இதை விட்டுப் பலப்பல பேசுகிறோம். அடிவயிறு வலிக்கக் கூச்சலிடுகிறோம்.

சர்க்கஸ் பார்க்கிறோம். அதில் ஒரு மனிதன் சிங்கம், புலி முதலிய மூர்க்கப் பிராணிகளையும் அடக்கி ஆட்டுவிக்கிறான் ஒரு சிறு கோலைக் கையிலேந்தி. அதுகண்டு ஆச்சரியப்படுகிறோம் நாம். அதிலென்ன விசித்திரமுள்ளது — விந்தையுற? ஐந்தறிவு படைத்த மிருகத்தை ஆறறிவு படைத்த மனிதன் ஆட்டுவிப்பதில் அற்புதமில்லை. அசம்பாவிதமுமில்லை. அவன், தன் ஆறாவது அறிவால் ஆட்டுகிறான் ஐந்தறிவை. இதைவிட ஆச்சரியமானது, அசம்பாவிதமானது, அன்றாட வாழ்வில் நடைபெறுவது என்ன? அதுதான் ஆறு அறிவு படைத்த மனிதன் அதே தன்மையுள்ள பிறிதொரு மனிதனுக்கு அடங்கி நடப்பது. ஆம்; திராவிடன் ஆரியனைக் கண்டதும் அடிபணிகிறான் ஏன்? பார்ப்பனன் நம்மைத் தெருவில் கண்டால் — விலகிப்போ என்று கட்டளை இடுகிறான்; கோவிலில் விலகி நில் என்ற உத்தரவு. கல்யாணமானால் முதலில், அய்யருக்கு முதல் தாம்பூலம்; அவரில்லாமல் ஆகாது எதுவும் என்ற பேச்சு; அய்யர் அடே என்பதற்குள் 'ஆமாம் சாமி, அடியேன் இருக்கேனுங்க' என்ற பணிவு. எங்கும் அய்யருக்கு ஏகபோக உரிமை. எவரும் அவருக்குத் தாழ்வு; இவை யாவும் ஏற்படுவது வெறும் பிறப்பினால். ஏன் இவை எல்லாம்? எதனால் மனிதன் — மனிதனுக்குப் பணிகிறான்? இது அர்த்தமற்ற போக்கு; அறிவுக்கு அப்பாற்பட்ட அநாகரிகம். ஒருவருக்கு மற்றொருவர் அடங்குவது அவசியத்தைப் பொறுத்தது, காரணத்தோடு கூடியது என்றால் குற்றமில்லை. படுத்திருக்கும் நோயாளியிடம் மருத்துவர் வருகிறார். நாக்கை நீட்டு என நவில்கிறார் — நோயாளி நாக்கை நீட்டுகிறான். எதனால்? இது அவனுக்கு அவசியமானது. நோயைத் தீர்ப்பவர் மருத்துவர் என்ற காரணத்தால். இது முறை — முற்றிலும் அவசியம்கூட. ஆனால் ஆரியனிடம் தாசனாக அடங்கிக் கிடப்பதற்கு ஆதாரம் என்ன? அன்றிப் பலன்தான் என்ன? ஒன்றுமில்லை. பின் ஏன் நாம் அவனுக்கு அடங்கவேண்டும் என்று, நம்மவர் எண்ணிப் பார்ப்பதில்லை. இன்று ஆரியர்கள் ஆங்கிலேயனைக் கண்டு சீறுகின்றனர். நான் அதைப் பாராட்டுகிறேன். ஏன்? ஒரு சிறிய கும்பல், நாட்டிலே அன்று தொட்டு இன்றுவரை — குறுக்கில்லாத இனம், மோட்ச நரக உலகைக் காட்டி வயிறு வளர்க்கும் கும்பல் வீறாப்பு பேசுகிறது, வீர உணர்ச்சி கொள்கிறது இந்நாளில். அன்று முதல் இன்றுவரை, வீரர் வழிவந்த இனம், கனக விசயரைக் கல் சுமக்க வைத்த இனம், இமயத்தில் இனக் கொடியை நாட்டிய இனம், வீரமே வடிவாகிய இனம், வீரமற்று வீணர்களாய்த் திரியும் அந்தக் கும்பலுக்கு அடங்கிக் கிடக்கிறதே! இது என்ன அற்புதம்? இதற்குக் காரணம் என்ன? ஏன் அடங்க வேண்டும்? அறிவுள்ள காரணம் உண்டா? இல்லை. நீ என்ன உயர்வு என்று கேட்டால், மறுவைக் காட்டுகிறான்—மாந்தாதாவைக் காட்டுகிறான். சட்டத்தைக் காட்டுகிறான், சம்பிரதாயத்தைக் காட்டுகிறான், சாஸ்திரத்தைக் காட்டுகிறான். பழக்க வழக்கத்தை வழிவழி முறையே பாட்டன் தீட்டின ஏட்டை, புராணத்தைக் காட்டுகிறான். ஒன்றில்லாவிட்டால் ஒன்று என்று பலப்பல சூழ்ச்சிகள் செய்கிறான்; அதனால் நம்மினம் அறிவிழந்து, சூடு சுரணையற்று ஆரியனுக்குத் தாசனாக அடிமைப்பட்டுக் கிடக்கிறது. துப்பாக்கியைக்கூடத் துச்சமாகக் கருதும் இனம். தர்ப்பையைக் கண்டு தத்தளிக்கிறது.

அறிவு, ஆற்றல், செல்வம், சிறப்பு முதலிய எதிலே சிறந்தவர்கள் ஆரியர்கள் நம்மைவிட? படிப்பில் சிறந்தவராக நம்மிடை சர். இராமசாமி இல்லையா? நிர்வாகத் திறமையில் சர். சண்முகத்தை மிஞ்சுபவர் யார்? மருத்துவத்தில் சிறந்தவர்களாக சர். இலட்சுமணசாமி, குருசாமி முதலியோர் இல்லையா? பணத்தில் ராஜா சர். அண்ணாமலை இல்லையா? இன்னும் மன்னவர்கள்தான் குறைவா? எது இல்லை நம்மிடம்? படிப்பு, பணம், பலம், அறிவு, ஆற்றல், அரசு எல்லாம் இருக்கின்றன நம்மிடம். ஆனால், ஒன்று தான் இல்லை! பக்குவமில்லை; அது இருந்தால் ஆரியக்கொட்டம் அடங்கும். எனவேதான் இன உணர்ச்சி வேண்டும் என்கிறோம்; படித்த கூட்டம் பக்குவம் பெறவேண்டுமென்கிறோம். பாராண்ட இனம் பராரியாய் வாழ்வதா? கனக விசயரைக் கல் தூக்க வைத்த இனம் கயவரின் காலடியில் கிடப்பதா? என்று கேட்கிறோம். இன உணர்ச்சி ஒடுக்கியுறுகிறது இன்று. ஆடிக்காற்றிலும் கூட அசையாத அளவுக்கு அஸ்திவாரம் பெற்றுத் தூண்டா விளக்காய்த் துலங்குகிறது; அதை உணருங்கள்! அதன் வழி நடவுங்கள்.

நாட்டிலே ஒரு குலம் பாடுபடாது உண்டு உறங்கிக் கிடக்க, மற்றவர் உடல் தேய, உள்ளமும் உணர்வும் தேய, உழைத்துக் கெடுவதா? இன்று தோழர்கள் நெசவில் நெய்வது நூற்றுக்கு நூறு, அறுபதுக்கு அறுபது என்ற நயமான (நூல்) துணிகள். பொள்ளாச்சி பார்டர், பெங்களூர் டிசைன் என்ற, புது மாதிரிகள்; ஆனால், அவர்கள் அணியும் ஆடையின் தரமோ முப்பதுக்கும் குறைவானது; பண்ணையில் பாடுபட்டுப் பயிர் செய்வது சீரகச் சம்பா, கிச்சிலிச் சம்பா. ஆனால் அவன் உண்பது கால் வயிற்றுக் கஞ்சி, அதுவும் கம்பங்கூழோ, கேழ்வரகுக் கஞ்சியோதான். பாட்டாளி பாடுபட்டுக் கட்டுவது, மாடமாளிகைகள் — கூடகோபுரங்கள் போன்ற கட்டிடங்கள். நான்கடுக்கு — ஐந்தடுக்கு அரண்மனைகள். அவைகளை நிமிர்ந்து நோக்கினால் கழுத்து வலிக்கும். ஆனால், அவன் அண்டியிருப்பது — குனிந்து நுழைய வேண்டிய குடிசை! ஏன் இந்த பேதம், இந்த நாட்டிலே!

வளமில்லாத நாடு—வறுமையுடனிருந்தால் ஆச்சரியமில்லை; பாங்கற்ற நாட்டிலே பஞ்சம் மிகுந்துள்ளது என்றால்—குற்றம் கூறுவோர் இல்லை; அரபு நாட்டுப் பாலைவனத்தில், ஐஸ்லாந்தில் எஸ்கிமோ நாட்டுப் பனிக் காட்டில் வளமிராது. இங்கு நீர்வளத்திற்கும், நிலவளத்திற்கும், குடிவளத்திற்கும் குறைவில்லை, மக்கள் மனவளம் ஒன்று தவிர, வற்றாத ஜீவ நதிகள், அவைகளால் வளர்க்கப்படும் வயல்கள், அவைகளில் விளையும் வகை வகையான மணிகள், நஞ்சை புஞ்சை ஆகியவைகள் ஏராளமுண்டு இந்த நாட்டில்.

நாடெங்கும் சாலைகள்-சோலைகள், அவற்றில் கனிகள் குலுங்கும். அதைக் கண்டு கவிகள் பல தீட்டுவர்; மண்ணுக்கடியில் பொன்; கடலுக்குள்ளே முத்து; காட்டிலே சந்தனம், கஸ்தூரி வகைகள். இத்தனை இயற்கை எழிலுடன் விளங்கும் இந்த நாட்டில்—இல்லாமை இருக்கக் காரணம் என்ன? மக்கள் உழைத்து உழைத்துத் தேய்ந்து உற்சாகமிழந்திருப்பதேன்? அந்த இல்லாமையும் அதன் பயனாக ஈனத் தொழில் புரியும் நிலைமையும் திராவிடரை மட்டும் தாக்குவானேன்?

இந்நாள், நம் திருநாட்டில் ஒருசிலர் கிளம்பி இருக்கின்றர், பொது உடைமையெனும் போர்வையைப் போர்த்திக் கொண்டு. அவர்கள் முதலாளி யார் என்று தெரியாமலே முதலாளிகளை ஒழிக்கப் புறப்பட்டு இருக்கிறார்கள். பாவம்! பணக்காரர்களை எல்லாம் முதலாளிகளென்று, அவர்கள் தவறாகக் கருதிக்கொண்டு, வீண் வேலையில் ஈடுபடுகின்றனர். பார்ப்பனப் பிறவி முதலாளியை அவர்கள் கண்டிப்பதில்லை; கண்டு கொள்வதுமில்லை. ஆண்டவன் பெயரால் ஆயிரமாயிரம் வேலி நிலங்களும், கோடானுகோடி பொருள்களும் குவிந்து கிடப்பதை அவர்கள் காண்பதில்லை. ஏன்? அவர்கள் விழிப்புற்று எழுச்சியுறும், நம் இனத் தோழர்களின் கவனத்தை வேறு திசையில் திருப்ப முயல்கின்றனர். அத்தகைய முயற்சியல்லாமல் வேறென்ன இது? உண்மை முதலாளிகளை, பிறர் உழைப்பை உறிஞ்சும் உலுத்தர்களை, கண்மூடிக் கடவுட்கொள்கையில் கருத்தழியாது, மதமயக்கத்தில் வீழாது ஒழிக்க முயலும் போது அவர்கள் அதை மறைத்து வேறு மார்க்கத்திலே, மக்கள் மனதைத் திருப்பப் பாடுபடுகிறார்கள். சமதர்மம் என்று சனாதனத்திற்குச் சிறப்புத் தேடுகிறார்கள். பொது உடைமை என்று அதற்குப் பெயர் கூறுகிறார்கள். ஆனால், மானிடரின் பிறப்பும் பொது—உயர்வு தாழ்வற்றது என்பதை அவர்கள் மறுக்கின்றனர். இந்த ஏமாற்றுவித்தை இன்னும் எத்தனை நாட்களுக்குச் செல்லும்?

இவர்கள் செய்கையை எண்ணும்போது, ஒரு சம்பவம் என் நினைவிற்கு வருகிறது. சென்னையில்—சைனா பஜார் தெருவில்—போவோர் வருவோரின் சட்டைப் பையைக் கத்தரிக்கும் ஓர் எத்தனால்-பணம் பறிகொடுத்தவர் பதறுவார், திருடனைத் தேடி ஓடுவார், உடனிருப்பவரும் உதவுவார் அவருக்கு. ஆனால், அந்த எத்தனின் பங்காளர்கள் கூட்டத்தின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி, குற்றவாளியைக் காப்பாற்றவேண்டி, வேறு திசையை நோக்கி—இதோ திருடன், அதோ கள்ளன் என்று இரைச்சலிடுவர். அது கேட்டு அனைவரும் உண்மை வழியை—திருடனை—விட்டு. உலுத்தர் பேச்சைக் கேட்டுத் தவறான திசையிலே திருடனைத் தேடி-ஓடி-அலுத்துத் திரும்புவர். அத்தகைய எத்தனுக்குத் துணை புரியும் கயவனின் கருத்துப் போன்றதுதானே, இந்நாள் பொதுவுடைமையாளரின் போக்கு.

நான் ஒரு வார்த்தை கேட்கிறேன் பொது உடைமைத் தோழர்களை; பொது உடைமை பேசும் புனிதர்களே! பஞ்சம், பஞ்சமென்று பறை சாற்றுகிறீர்களே! அந்தப் பஞ்சம் யாவருக்கும் பொதுவா? ஏன் ஒரு குலத்தைப் பஞ்சம் பீடிப்பதில்லை? உங்களுக்கு நல்லெண்ணமிருந்தால்—உங்கள் நெஞ்சில் தோன்றாமலிருக்குமா இது? பஞ்சத்தால் சம்மட்டி ஏந்தும் பார்ப்பானை பார்ப்பதில்லை, ஏன்? கல்லுடைக்கும் பார்ப்பானைத்தான் கண்டதுண்டா நீங்கள். ஏன்? அந்தக் குலம் மட்டும் குனியாது-வளையாது குந்திக் குதிர்போல் பெருகுகிறது, ஏன்? அவர்கள் கட்டை வண்டி ஓட்டுவதில்லை? கனமூட்டை சுமப்பதில்லை; மலத்தைக் கூட்டுவதில்லை; பஞ்சம்கூட பார்ப்பானுக்கு ஒருவிதம், பாட்டாளிக்கு வேறுவிதம், பார்த்துத் தான் வருமா? ஏன் நம்மவர் மட்டும் உச்சிவேளையிலே உழைக்கின்றனர் மாடுபோல், நம்முடைய மகளிர் அனிச்சம் பூவினும் மென்மையார் என்று புலவரால் புகழப்படும் பூவையர்கள் மட்டும் காடேறி, மேடேறி—நாடு சுற்றிச் சுள்ளி பொறுக்குகின்றனர். கவிகள் பாடும் கரும் குவளை மலர்போன்ற கண் படைத்த நம் இனக்காரிகைகள் கடு வெயில் நேரத்தில் கல் உடைக்கக் காணலாம். ஆனால், பார்ப்பனக் கும்பலில் ஒருவர்கூட செய்யவில்லை எந்த வேலையும்! பார்ப்பனப் பெண் ஒருத்திக்கூடப் பிறர் வீட்டில் பணிப்பெண்ணாக இருக்கக் காணோமே? ஏ, பொதுவுடைமை வாதிகளே! ஏன் இதைக் கவனிப்பதில்லை? இது எந்தப் பொருளாதாரப் பேதத்தில் அடங்கியது? எவரும் இது வரை ஏற்படுத்தாத தந்திர முதலாளி ஏற்பாடல்லவா இது? பலர் உழைப்பை—ஒரு சிலர் உறிஞ்சி உண்டு களிப்பது உத்தமம் என்று எண்ணுகிறீர்களா? ஏன் மௌனம் இதுபற்றி? முதலாளிகள் ஒழிந்தால் யாவும் நன்கு நடக்கும் எனப் பொதுவுடைமை வாதிகள் நவில்கின்றனர். ஆனால், இந்த நாட்டுப் பொதுவுடைமையாளர்கள் உண்மை முதலாளியைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.

குடந்தையில், எப்படிப் பார்த்தாலும் கும்பேஸ்வர நாதரைவிடப் பெரிய முதலாளி எவருமில்லை. உண்மையுந்தான். மனித முதலாளியைவிட அவர் மிகமிகப் பெரிய முதலாளி. மனிதனுக்கு இல்லாத சௌகர்யங்கள் அவருக்கு உண்டு. அவருடைய ஆட்சியோ இப்பூமண்டலமெங்கும் பரவும்; குடி படைகள் குவலயத்தோரெல்லாம்; அவரது இருப்பிடமோ கோவில்; கோட்டை போன்றது, கொத்தளங்களோடு கூடியது; பணம் பலகோடி; நிலம் ஏராளம்; பண்ணையாட்கள் பலப்பலர்; வாகனங்கள் வகை வகையானவை; வெள்ளி, தங்கம் முதலியவற்றால் ஆனவை; ஊர் சுற்றிவர உன்னதத் தேர்; உல்லாசத்திற்குப் பல்லக்குச் சவாரி; ஆம். இத்தனைக்கும் அவர்தம் கைவிட்டுச் சல்லிக் காசும் செலவிடார்; மாறாக அவரிடம் பணம் மலைபோல் மேலும் மேலும் குவியும்; தம்முடைய பணம் போகுமோ, குறையுமோ, பெருக வேண்டுமே என்ற கவலை அவருக்கில்லை. அவருக்கு வழக்கில்லை, தொல்லையில்லை. கிண்டி குதிரைப் பந்தயமில்லை. திருமணமும் வருடாவருடம் தவறாமல் பக்தகோடிகள் செய்து வைக்கக் காத்திருக்கின்றனர். இத்தகைய முதலாளியைப் பொதுவுடைமைவாதிகள் கண்டிப்பதில்லை. ஏன்? அவர்கள் 'பொது உடைமை—பொது உடைமை' என்றுகூறி தங்கட்குப் 'புதுவுடைமை' தேடுகின்றனர் போலும்! இது போழ்து ஒன்று என் நினைவிற்கு வருகிறது. பொது உடைமைத் தோழர்கள், அண்மையில் இங்கு, பஸ் தொழிலாளர் குறைகளைத் தீர்த்துக்கட்ட ஒரு மாநாடு நடத்தினராம். நல்ல வேளை, நான் பாராட்டுகிறேன் அதை. அதோடு ஒரு செய்தி — இதே குடந்தையில் அடிக்கடி இருபது டன் நிறையுள்ள இரதத்தில், கால் டன், அரை டன் எடையுள்ள சாமிகளை வைத்து, அத்துடன் கோயில் பட்டாச்சாரியையும் இன்னும் அவர் அத்திம்பேர், அம்மாமி குழந்தை குட்டிகளையும், அக்கப்போர் ஆசாமிகளையும் அமரவைத்து நம் இனத் தோழர்கள் வீதி வீதியாய், நெஞ்சு உடைய, மார்பு விரிய இழுத்துச்செல்லுகின்றனரே! இது படவில்லையா அவர்கள் கண்களில்? என்று தீரும் இவர்கள் குறை-மடமை? அதற்கு மருந்து — மாற்று பொதுவுடைமைவாதிகள் தேடார். ஏன்? அவர்களுக்குச் சங்கம் அமைத்துச் சந்தா செலுத்தத் தெரியாது என்பதாலா? சமுதாயத்தைச் சீர்திருத்த, செப்பனிட, உண்மையிலேயே பொதுவுடைமையாளருக்கு உறுதி இருக்குமானால் அவர்கள் செய்யவேண்டிய வேலையே வேறு. முதலில் பிறவி முதலாளியை ஒழிக்க வேண்டும்.

நான் கூறுகிறேன், இந்தப் பொது உடைமை வாதிகளுக்கு முதலாளி யார் என்பது தெரியவில்லை, புரியவில்லை, சரிவரத் தெரிந்து புரிந்துகொள்ள மனமில்லை. பணக்காரன்தான் முதலாளி என்று அவர்கள் தவறாகக் கருதுகின்றனர். பணக்காரனுக்கும் முதலாளிக்கும் உள்ள பேதத்தை அவர்கள் அறியவில்லை. பணக்காரன் முதலாளி அல்ல. எப்படி எனில், பங்களா வைத்திருப்பவன் — பங்களாக்காரன், ரிக்ஷா இழுப்பவன் — ரிக்ஷாக்காரன் — கூலி வேலை செய்பவன் — கூலிக்காரன், கடை வைத்திருப்பவன் — கடைக்காரன். அதுபோலவே பணம் வைத்திருப்பவன் — பணக்காரன் ஆகிறான், அழைக்கப்படுகிறான்.

நான் மறுமுறையும் கூறுகிறேன், பணக்காரன் முதலாளி அல்ல என்று. ஆனால், பணக்காரன் யார் என்று பார்ப்போம். குடந்தையில் ஒருவர் பணக்காரராய் இருப்பார். ஐந்தாவது மைலில் அவரைவிடப் பெரிய பணக்காரர் இருப்பார். அதற்குமேல் நண்பர் நாடிமுத்து இருப்பார். அவரைவிட வட நாட்டில் பிர்லா, அதற்குமேல் தலால், அதைவிட டாட்டா என்று போகும். அதையும் கடந்தால் ஆங்கில நாட்டில் பல பணக்காரர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் மேல் மற்றொரு பணக்காரன் இருப்பது சகஜம். இயற்கையும் கூட. இன்று வண்டி யோட்டி. அதனால் அவன் வண்டிக்காரன். நாளை கிண்டி குதிரைப் பந்தயத்தில் அல்லது பகுத்தறிவு போட்டிப் பந்தயத்தில் ரூபாய் அறுபதினாயிரம் அதிர்ஷ்டம் அடிக்கும், அப்போது புதுப் 'பணக்காரன்' பழைய வண்டியோட்டியாய் மாறிவிடுகிறான். எனவே, பணக்காரன் முதலாளியல்ல; ஆனால் பணம் உண்டு பண்ணும் இயந்திரத்தை, பண உற்பத்தி ஸ்தாபனத்தை வைத்திருப்பவன்தான் முதலாளி.

பணக்காரன் குளம் — குட்டைகளுக்குச் சமமானவன்; முதலாளி ஊற்றுக்குச் சமமானவன். மழை பெய்தால் தான் குளம் — குட்டைகளில் நீர் இருக்கும்; இன்றேல் வறண்டுவிடும். ஆனால், ஊற்றோ என்றும் நீர் சுரந்து கொண்டே இருக்கும். இத்தகைய பேதம் இருக்கிறது பணக்காரனுக்கும் முதலாளிக்கும்.

ஐந்து கோடி வைத்திருப்பவன் அதனை ஆறு கோடி, பத்து கோடி என்று பெருக்கும் முறையை, தொழிலை, இயந்திரத்தை, சிமிட்டி ஆலையை, இரும்புத் தொழிற்சாலையை, பருத்தி ஆலையை, வட்டிக் கடையை வைத்திருப்பவன் முதலாளி. அதிலும் சிறந்த முதலாளி—வடிகட்டின அசல் பிறவி முதலாளி—ஆரியன்.

கோயில் என்றும், குடமுழுக்கு என்றும், கும்பாபிஷேகம் என்றும் செல்வத்தைக் கொட்டி அழுகிறோம். பூரிதட்சணையாகப் படைக்கிறோம்; எதற்கும் பீசு உண்டு. ஏன் என்று கேட்பார் எவருமில்லை. இந்த எதேச்சதிகாரம் எத்தனை நாளைக்கு? இத்தனை விதங்களில் பணம் போகிறதே! இது மக்களுக்குத் தெரியவில்லையா? அடாதது என அறியவில்லையா? ஏன் என்று எவரும் கேட்கவில்லை, அன்று முதல் இன்றுவரை. காரணம் மக்கள் மனத்தில் இவை மடமை என்று படாதது, கருத்தில் கண்மூடி வழக்கம் ஆகியவையே என்று கூறலாம் துணிந்து.

வர்ணாச்சிரம தர்மம் வேண்டும் என்று பேசுகின்றனரே இந்நாளும்! வகையான மார்க்கமா அது? உழைக்க ஒரு குலம். அதனை உறிஞ்சப் பிறிதொரு குலம் என்ற நியதி நியாயமா? மற்றவர் மாடென உழைக்கும்போது ஒருசிலர் மட்டும் உட்கார்ந்து உல்லாசமாகக் காலம் தள்ள வேண்டுமா? இதுவே தன் விதியா? நாதன் கட்டளையா? நயவஞ்சகச் சூழ்ச்சியா? நவிலுங்கள்! பாடு படுவதற்குப் பரமன் கட்டளை வேண்டுமா? வேண்டாம். பலரும் பாடு பட்டுத்தான் ஆகவேண்டும் பாங்கான வாழ்க்கை நடத்த. ஆனால், இந்த வேதன் விதி ஒரு பெரிய சதி; நாதன் கட்டளை நாணயமற்ற செய்கை. ஏன்? ஒரு குலம் மட்டும் பாடுபடவே தன் விதியில்லை ஏன்? அவர்களையும் உழைப்பாளிகளாக்க உரமில்லை அந்த உத்தமனுக்கு (கடவுளுக்கு). ஒருவனைப் பிறப்பால் உயர்ந்தவனாகவும் உல்லாசியாகவும், குருவாகவும் படைத்து, மற்றவனைத் தாழ்ந்தவனாகவும், உழைப்பாளியாகவும், அடிமையாகவும் அமைக்கிறார், அந்த ஆண்டவன். எல்லோரையும் தன் குழந்தைகள் என்று கருதும் ஆண்டவன், ஒருவனை வேதமோதுபவனாகவும், மற்றவனை அவன் திருவடி தொழுபவனாகவுமா படைப்பார்? அவருக்கு அறிவில்லையா? அன்பில்லையா? அறம் அறியாரா அவர்? அத்தகைய ஆண்டவன் உண்மையில் இருந்தால் அதைவிட நயவஞ்சகப் பொருள் இந்த அகில உலகிலும் இல்லை; இருக்க முடியாது.

வேதன் விதி என்றும் நாதன் கட்டளையென்றும், பழக்கமென்றும், வழக்கமென்றும் அற்பத்தனங்களை அர்ச்சிக்கிறோமே! இது தகுமா நமக்கு, நம் இன நலனுக்கு? நம்மிடம் பட்டம் இருந்தென்ன? பதவி இருந்தென்ன? செல்வமும், சிறப்பும், அறிவும்—ஆற்றலும், உழைப்பும் ஊதியமும் இருந்தென்ன; பக்குவமிழந்தோம்—பராரியானோம், பகுத்தறிவு இழந்தோம்—பாரிழந்தோம். நாம் எதில் சிறந்திருந்தாலும் மதமெனும் மடமைக்குள் சிக்கி விடுகிறோம். மனிதனை பூதேவனாக, ஆண்டவன் தூதனாக, அர்ச்சித்து ஆனந்தமடைகிறோம். இத்தகைய இழி நிலைக்குக் காரணம் என்ன?

நம்முடைய முன்னோர்கள் மடமைக்கு முதன்மையளித்து முற்போக்கடையும்படி செய்து விட்டனர் கபடமறியாக் குணத்தினால், வஞ்சகமறியா மனத்தினால். ஆம்! மன்னர்கள் இதிகாசம் படித்தனர்—இனத்தை மறந்தனர்; புராணங்களைக் கேட்டனர்—புரோகிதர்களைப் போற்றினர், மதமகிமையைப் பாடினர்—மக்களை மறந்தனர், மடையர்களாக்கினர், பக்தியால் சித்தங்கலங்கிப் பித்துக் கொண்டனர். இதனால் இவர்கள் மட்டுமல்ல, இனமே இழிவுற்றது. எடுப்பார் கைப் பிள்ளையானது, ஏய்ப்போர் ஏறினர் அரியணை! உழைப்போர் தாழ்ந்தனர் உளப் பண்பற்றதால்.

நமது மன்னன் ஒருவன், வரகுணன் என்று நினைக்கின்றேன். காட்டுக்குச் சென்று வேட்டையாடி வீட்டுக்குத் திரும்புகிறான். வழியில் ஓர் குளம்—தவளைகள் காகா வென்று கத்துகின்றன; மன்னனோ மகா சிவ பக்தன். அவன் காதில் இந்தக் காகா என்ற ஓசை அரகர என்று வீழ்ந்தது, சிவநேசர் அல்லவா! உடனே மன்னன் மந்திரிக்குக் கட்டளையிட்டான்—அரண்மனை ஐஸ்வர்யத்தைத் தடாகத்தில் கொண்டுவந்து கொட்டும்படி. ஏன்? குளிரால் வாடுகின்றாராம் சிவனடியார் திருக்கூட்டங்கள். எங்கு? திருக்குளத்தில்! இருக்குமா அவ்விதம்? நடக்குமா அந்தச் செயல்? நடக்கத்தான் முடியுமா? ஆனால், அதைப் பற்றி ஆராய அறிவில்லை அவனுக்கு. ஆண்டவன் அடியார்க்குப் பணி புரிவதே பரமபதமடைய மார்க்கம் என்று கருதினான்; மதியூக மிருந்தால் செய்வானா இப்படி? மாணிக்கத்தைக் குளத்தில் வாரியிறைக்கும் மதியற்ற மன்னர்கள் வாழ்ந்த இந்த நாடு அழியாமலிருக்குமா? மத மயக்கமல்லவா இது? அறிவியுங்கள் தோழர்களே!

பிறிதொரு மன்னன் கான மயிலாடக் கண்டான், கார்மேகத்தைக் கண்ட களிப்பின் மிகுதியால். கண்ட மன்னன் மயில் குளிரால் வாடுகிறது என்று நினைத்தான்; அளித்தான் அதற்கோர் ஆடை; அதிலும் பட்டுப் பீதாம்பரம். மன்னர் அவர்; எதுவும் தரமுடியும் அவரால். அவரது செயல் கருணையுள்ளதாக இருக்கலாம்; கவைக்குதவுமா? அன்பு மிகுந்ததாகக் காணப்படலாம். ஆனால்—அறிவு தொக்கியுளதா அதில்?

இந்த வகையிற்றானே இன்று மக்களிடம் உள்ள செல்வம், சிந்தனை, சிறப்பு, யாவும் ஆண்டவனுக்குச் செலவிடப்படுகின்றன. இந்த அகில உலகைப் படைத்தவனுக்குக் கோவில் கட்டுவதிலும், கும்பாபிஷேகம் செய்வதிலும், அவற்றின் வாலறுந்தால், காதறுந்தால், காலொடிந்தால் அவற்றை ஈடுசெய்வதிலுந்தான், இன்று, மக்கள் அறிவையும் பணத்தையும் பயன்படுத்துகின்றனர். படிக்கும் மக்கள் ஹாஸ்டல் வசதியற்றிருக்கும் போது, படிக்கப் பள்ளியில் இடமில்லாது ஏங்கித் தவிக்கும் போது. பரந்த—இந்தத் திருநாட்டின் நிலையைப் பாருங்கள்! படிக்கப் பள்ளியில்லை—ஹாஸ்டல் வசதியில்லை—பணமில்லை புதிய கட்டிடம் கட்ட; ஈரமில்லை மக்கள் நெஞ்சில் கொடையளிக்க. ஆனால், ஏட்டில் தீட்டிய ஆரிய முறைப்படி கோயிலிலே பணம் கோடி கோடியாகப் போய்ச் சேருகிறது. பாடுபட்டு மக்கள் பஞ்சையாய் வாழும்போது, பரமனுக்குப் பல லட்சத்தில் பதக்கங்கள். வாகனங்கள். என்ன அறியாமை மக்களிடம்? மக்கள் மாக்களாக மாறி, மனமுடைந்து, வாழ வழியின்றித் திகைக்கின்றனர். ஆனால் மகேஸ்வர பூஜைக்குத் தட்டில்லை, தடங்கலில்லை. காரணம் என்ன? மக்கள் மதத்துறையிலே தவறான கருத்துக் கொண்டிருக்கின்றனர், ஆம்! மக்களை மறந்து மகேஸ்வர பூஜையை மேலாகப் பாவிக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். எவரும் தாழாது தன்மானத்துடன் வாழ வேண்டும் என்பதுதான் எமது எண்ணம், எதிர்கால வேலைத் திட்டம்.

குந்த குடிசையின்றி, உண்ண உணவின்றி, அணிய ஆடையின்றி மக்கள் நிர்க்கதியாய் நிலவும்போது, ஆண்டவன் பேரால் கோட்டைகள் போன்ற கோயில்களையும், வாகனங்களையும், மண்டபங்களையும் கட்டுகிறீரே! இது அந்த அன்புடைய ஆண்டவனுக்கு, அருள் படைத்த தந்தைக்கு, உவந்த செயலா? இது அறமெனப்படுமா, அன்றி அசட்டுச் சொல் எனப்படுமா என்று ஓர் அரைக்கணம் ஆராயுங்கள் தோழர்களே—உம் அறிவைக் கொண்டு!

ஆண்டவனுக்குப் பேசும் சக்தி இருந்து அவன் உங்களிடம் பேசுவதானால், அது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும். ஆண்டவன் நயவஞ்சகமற்றவரானால், அறிவுடைய, அன்புடைய, அறம் மிகுந்த தந்தையரானால், அவர் கேட்டிருப்பார் உங்களை: "அப்பா! நான் இந்த அகில உலகை, அண்ட சராசரங்களைப் படைத்தேன், அதிலே ஜீவராசிகளைப் படைத்தேன், நெல்லைப் படைத்தேன், நீரைப் படைத்தேன், கடலைப் படைத்தேன், அதிலே முத்தைப் படைத்தேன், முத்தெடுக்கும் முறையைப் படைத்தேன், உன்னிடம்—அதைத் தடுக்க திமிங்கிலத்தைப் படைத்தேன்; எதையும் எண்ணிச் செய்ய, பகுத்துச் செய்ய, பகுத்தறிவைப் படைத்தேன் உனக்கு. அதன் மூலம் பாராள்வாய், பலரும் வாழ வகை செய்வாய் என நினைத்தேன். அதைவிட்டு நீ எனக்கு அரை வீசை வெண் பொங்கல் தந்து வரம் வேண்டுகிறாயே! வகையற்ற மூடனே! அறிவைக் கொண்டு ஆவன செய்!" என்று தான் கேட்பார்.

ஆனால், ஆண்டவன் அவ்விதம் கேட்பதில்லை உங்களை. ஏன்? அவர் எப்பொழுதும் பேசினதில்லை. எப்பொழுதும் வெளிப்படையாக, விவேகத்துடன் பேசிப் பழக்கமுமில்லை அவருக்கு. அவர் பேசி இருப்பதெல்லாம்—தம் திருத்தூதர் வாயிலாக சித்தர்கள்—ஆச்சாரியர்கள்—அந்தணர் வாயிலாகத்தான்; ஒன்றுக்கொன்று முரண்பட்ட குணங்கள், கூறக் கூசிடும் குடிகாரச் செயல்கள், கடவுளைக் குணமற்ற கயவனாக, கபோதியாகக் காட்டும் கதைகள், இவைதானா மக்களை இன்பபுரிக்கு இழுத்துச் செல்லும் மார்க்கம்?

கோயில் உள்ளே சிலை, இடையே திரை, அதன் பின்னே ஐயர். அவர் தயவு வைத்தால் திரை விலகும்; தயவுக்குத் தட்சிணை தரவேண்டும். தயாபரனைக் காணவா இத்தனை தடைகள்? என்ன நயவஞ்சகம் பொதுவிடத்தில்? அன்று, ரஸ்புடீன், ஜார் முதலானோரின் கொடுமைகளும் கூட மதத்தை முன் வைத்து, ஆண்டவன் ஆணை என்று, அலங்கார ஆர்ப்பாட்டங்கள் செய்துதான் நடந்தேறின. இன்று அதே முறையில் நம் நாட்டில் நடந்து வருகின்றன; எத்துணை நாள் இந்த இழிநிலை நம்மிடம்?

பணம் கோயில்களிலே நகையாய், வாகனமாய், நிலமாய் முடங்கிக் கிடக்கிறது. இந்த முடக்கு வாதம் தீர்ந்தால் முடிவுறும் வறுமை, கொடுமை, இல்லாமை என்பனவெல்லாம். இது எதை உணர்த்துகிறது? இந்த நாடு ஏழை என்பதையா? எப்படி ஏழை என்று கூற முடியும் இந்த நாட்டை? தில்லைக் கூத்தரின் தங்க ஒடு வேய்ந்த சன்னிதானத்தையும், வரதரின் வைர நாமத்தையும், காஞ்சி காமாட்சியின் வைடூரியக் கற்களையும், அரங்கனாதரின் அற்புத ரத்தினங்களையும், வேங்கடத்தானின் பத்து லட்சம் பெறும் வைர முடியையும் காணும்போதும் கேட்கும்போதும்—அதிலும் இந்தத் திரவியம் எவ்வித நலனுமின்றி மூலையில் முடங்கிக் கிடக்கிறது—ஒரு சில சாமி (ஆசாமி)களின் உல்லாச வாழ்வைக் கருதி என்பதை அறிந்த பிறகு—இந்த நாட்டை ஏழை நாடென்று எவராவது கூற முடியுமா? பொருளில்லையா இந்த நாட்டில்? இருக்கிறது. யாரிடம் பொருள் உளது? மதத்தின் பெயரால் கோயிலாகவும், வாகனமாகவும், ஆண்டவன் சொத்தாகவும் அடைந்து கிடக்கிறது. அந்தப் பொருள் பிறவி முதலாளிகளைக் (ஆரியரை) கொழுக்க வைக்கப் பயன்படுகிறது. பரமன் பேரால் உள்ள பணம் அதிர்வெடிக்கும், அலங்கார ஆர்ப்பாட்ட பூஜைக்கும், தேருக்கும் திருவிழாவிற்கும் உபயோகமாகிறது அநாவசியமாக, அர்த்தமற்று. இது நீதியா? முறையா? என்று கண்டிக்கிறோம். இதில் தவறென்ன?

செல்வமிக்க இந்த நாட்டில் வறுமையால் வாடி வதங்கி வெளிநாடு செல்லும் தோழர்கள் இந்த நாட்டை வாழ்த்தி இருப்பர் என்றா நினைக்கின்றீர்கள்! துக்கம் நெஞ்சையடைக்க—கண்ணீர் கடல் நீரிலே கலக்க, இந்த கதியற்றவர்கள் இந்நாட்டைப் பார்த்து, 'அளவற்ற செல்வம் உன்னிடம் இருந்தென்ன? நாங்கள் அனாதைகள் தானே! வற்றாத நதிகள் இங்கே பாய்ந்தென்ன? எங்கள் வாழ்க்கை பாலைவனம்தானே! நஞ்சையும் புஞ்சையும் இருந்தென்ன? நாங்கள் பஞ்சைகள்தானே! பணமிருந்தென்ன? பராரிகள்தானே நாங்கள்! ஒரு கவளம் சோறில்லாது ஓடுகிறோம் நாட்டைவிட்டு, தங்க ஓடு வேய்ந்த கோயில் உள்ள தில்லையான் வாழும் இந்த நாட்டில் வதியும் நாங்கள்! வள்ளல்கள் வாழ்ந்த நாடாம்! நாதியற்ற நாங்கள் வாழ வழியில்லை இந்த நாட்டில்! செல்வமுண்டு இந்த நாட்டில், எங்களுக்குச் சோறிட மக்களில்லை! ஈரமில்லை நெஞ்சில் ஈசனைப் போற்றியேத்தும் மக்களிடம் நாங்கள் வாழ வழி செய்யாமல் எங்களை வெளிநாட்டிற்குப் போகச் செய்யும் திருநாடே! அரசியலை அன்னியனிடமும், ஆத்மார்த்தத்தை ஆரியனிடமும் வாணிபத்தை வட நாட்டானிடமும் ஒப்படைத்து விட்டுக் கிடக்கும் ஏ அடைநாடே! சோறில்லை எங்களுக்கு, சொர்ணம் விளையும் இந்த நாட்டில். எங்களை இக்கதியில் விடும் நீ இருந்தென்ன! போயென்ன! அக்கருத்துக்கு இடமளித்து அனாதைகளைத் துரத்துகிறாய் அறிவிழந்து. ஏ, அறிவிழந்த நாடே! நீ அழிந்து படு! அழிந்து படு!, என்று தான் சபித்திருப்பர்; தம் நெஞ்சுக் குமுறுலைக் கொட்டியிருப்பர்.

இத்தகைய நிலைமை நாட்டிலே நிலவக் காரணம் என்ன? ஒரு குலம், அந்தப் பஞ்சமும் பிணியும் பீடையும் அண்டாது வாழ, அதற்காக மற்றவர் மாடென உழைக்க வேண்டுமென்பது ஆண்டவன் ஆணையா? இது நியாயமா? நெஞ்சில் கை வைத்து நினைத்துப் பாருங்கள்! உண்மையை உணர்வீர்கள், உலுத்தரை ஒடுக்க வழி காண்பீர்கள். நம்முடைய மன்னர்கள் இதிகாச புராணம் படித்து அடுத்த பிறவிக் கவலையில் ஆழ்ந்து ஆட்சியை மறந்தனர். அதனால் அந்தணர் புகுந்தனர் அரசியலில். அதன் பலன் இன்று நாம் சகல துறைகளிலும் வகையற்று, வாழ வழியின்றி வாடிக் கிடக்கின்றோம். மாற்றானுக்கு இடமளித்து மக்களை மறந்தோம். நாம் நல்வாழ்வு பெற, மாற்றனைத் தொலைக்க, மதியைப் பெற, விதியை விரட்ட, பஞ்சப் பிணியையும் பறக்கடிக்க, ஓர் இடம் தேடுகிறோம். நாம் வாழ, நம் குறிக்கோளுடன் வாழ ஒரு எல்லைக்கோடு வகுத்துள்ளோம். எனவே, திராவிட நாட்டைத் தனி நாடாகப் பிரிக்க வேண்டுமென்கிறோம். திராவிடக் கூட்டாட்சியிலே தெலுங்கரும், மலையாளரும் சேர்வர். ஏன்? தெலுங்குக்கும் மலையாளத்துக்கும் மூலம் தமிழ்மொழியே. தமிழுக்கு ஆதியாக இருப்பது திராவிடம். எனவே மூன்று மொழிகளும் சேர்த்த கூட்டரசு இங்கே நடைபெறும். அதிலே தமிழர் தனி மொழியோடு வாழ்வர். தெலுங்கரும், அவ்விதம், கேரளரும் அவ்விதமே. ஆனால், டெல்லி ஆட்சிக்குப் பதில் திராவிடக் கூட்டரசு நடக்கும்.

திராவிட நாட்டிலே எல்லோரும் ஓர் குலம் என்ற நியதி உண்டு. பாடுபடுவோர் பலனையனுபவிப்பவர்; பதைக்க மாட்டார்கள்; உழைப்பு வீணாகாது; உலுத்தர் உயரமாட்டார்கள்; சக்திக்கேற்ற உழைப்பு, தேவைக்கேற்ற வசதியுண்டு; கீழ்சாதி மேல் சாதி கிடையாது; குருமாரில்லை இன்றுபோல் குந்தியுண்ண; வேதமோதி வீணராய் வாழும் வகையுமிராது; ஆண்டவனிடையே தரகனாய் வாழ வகையிராது. அன்றும் ஆரியனிருப்பான்; எவ்விதம்? மக்களைச் சுரண்டியல்ல. பூதேவனாக அல்ல, ஆண்டவன் திருத்தூதனாகவும் அல்ல, பிறர் உழைப்பை உறிஞ்சுபவனாகவுமல்ல, ஆரியர் மனிதனாக வாழ்வான் அன்று. மனிதனுக்கு மனிதன் பிறப்பினால் தனிச் சலுகை பெறமாட்டான். நஞ்சு நீங்கிய நாகம் போல், பல்லில்லா பாம்புபோல், கூண்டிலடைக்கப்பட்ட புலிபோல், வெறி நீங்கிய நாய்போல், வஞ்சனை சூது, சுரண்டல் முதலிய பிறவிக் குணங்கள் நீங்கி, நீக்கப்பட்டு வாழ்வர், வாழ வேண்டும். வீணராய்த் திரிந்து, விருந்துண்டும் வகையிராது; இருக்க முடியாது, இருக்கக்கூடாது என்ற காரணத்தால். இன்றேல் ஆரியர் விலகுவர்—விலக்கப்படுவர் இந்த நாட்டைவிட்டு. இதுதான் திராவிட நாட்டில் ஆரியர் நிலை.

திராவிடநாட்டுப் பிரிவினை ஏன்? சமுதாயம் சந்தோஷமாக வாழ வழி வகுக்க என்பதை கூறினேன். மற்றும் நம் மக்கள் பொருளாதாரத்தில் எவ்விதம் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்பதையும், காணுங்கள். வாணிபம் முழுதும் வட நாட்டார் வசம்விட்டு, வாழ வழியின்றித் திண்டாடுகிறோம் நம்முடைய நாட்டில் (சென்னை மாநகரம்). இரும்புண்டு, தங்கமுண்டு, கட்டையுண்டு, கப்பல் கட்ட; பருத்தியுண்டு, பட்டுண்டு துணிநெய்ய; எல்லாம் இருக்கிறது. ஆனால் முதன்மையான வியாபாரிகள் யாவரும் வடநாட்டவரே. வைரம் வேண்டுமா; சுராஜ்மல்லுக்குப் போக வேண்டும். வெள்ளி தங்க நகைகளா! பாபாலால் இருக்கிறது. இரும்பு சாமான்களா! டாட்டாவை விட்டால் வேறு வழியில்லை, விதியில்லை, பருத்தி ஆடைகளா! தலாலிடம் தஞ்சமடையத்தான் வேண்டும். பட்டாடைகளா! செல்லாராமுக்குச் செல்லவேண்டும். சிமிட்டி வேண்டுமானால் டால்மியாவிடம் ஏஜெண்டாக அமரத்தான் வேண்டும். பல சரக்குச் சாமானுக்கோ குப்தாவிடம் செல்ல வேண்டும், மருந்து வகைகளா தாதாவிடம் தாளம் போட வேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம். முதலாளிகளாக வடநாட்டார் வகையாக அமர்ந்துவிட்டனர். நம்மவரெல்லாம் அவருடைய தரகர்களாய்த்தான் வாழ்க்கை நடத்த முடிகிறது, நடத்துகின்றனர்.

எனவே, நாம் நம் நிலையை உயர்த்திக்கொள்ள, தொழில்வளர பாதுகாப்பு (Protection) தேடுகிறோம். திராவிடநாடு பிரிந்து தனி நாடானால், திராவிட நாட்டில் ஒரு பத்து அல்லது இருபது ஆண்டுகட்கு வடநாட்டுப் பொருள்கள் தென்னாடு வரக்கூடாது என்று சட்டமிருக்கும். சான்றாக நம்மிடம் கிடைக்கும் சர்க்கரை, அரிசி முதலியவைகள் வெளிநாடுகளிலிருந்து வரக்கூடாது. இரும்பு, துணி முதலியவைகள் வந்தாலும் அவைகளுக்கு சுங்கம் (Tariff) போட்டுத் திராவிடநாட்டுத் தொழிலுக்கு ஊக்கந்தந்து ஆக்கம் தேடுவோம். வடநாட்டுப் பொருள் தென்னாடு வந்தால் தென்னாட்டு விலைக்குத்தான் விற்க முடியும். விளங்கக் கூறவேண்டுமானால் கிண்டியில் (Handicap Race) சலுகைப் பந்தயம் என்று ஒரு நாள் இருக்குமே அதையொத்தது இது. அன்று சாமர்த்தியமும் பலமுமுள்ள குதிரைகளைப் பின்னாலும் பலமற்றவைகளை முன்னாலும் நிற்கவைத்து ஓட்டம் விடுவர். அதனை நாம் தொழிலில்கையாளவேண்டும்.

தோழர்களே! இறுதியாக, உங்களுக்கு விடும் வேண்டுகோள்களை கேட்டுச் சிந்தனை செய்து பின்பற்றுங்கள்! மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ, நம்குறிக்கோள் குன்றாதிருக்க, உழைப்பாளி உண்டுகளிக்க, உலுத்தர் ஒழிய; ஆண்டவன் பேரால் ஆபாசம், அநீதி, சுரண்டல், சூது நடவாதிருக்க, ஆங்கிலேயனின் அரசியல் சூழ்ச்சியிலிருந்தும், ஆரியனின் ஆத்மார்த்தினின்றும், வடநாட்டு வாணிபப் பிடியினின்றும் விலகி, மனிதர் மனிதர்களாய் வாழ வழியிருக்கும் திராவிட நாட்டைப் பெறவேண்டும் என்று கொட்டுங்கள் போர்முரசு; "பெற்றே தீருவோம் திராவிட நாட்டை என்ற எழுச்சி கொள்ளுங்கள்!" சிந்தனை செய்து சீர் தூக்கிப் பார்த்துச் செயலில் காட்டுங்கள்! என்று விரும்பி கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=முக்கனி/கனி—3&oldid=1676688" இலிருந்து மீள்விக்கப்பட்டது