உள்ளடக்கத்துக்குச் செல்

முக்கனி/கனி—2

விக்கிமூலம் இலிருந்து

கனி2


தோழர்களே!

நான் பேசப்போகும் "நல்ல தீர்ப்பு" ஆசிரியருக்கும் மாணாக்கர்களுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியதன்று. ஆனால், அது என்னைப்பற்றிய தீர்ப்பேயாகும். தலைவர் அவர்கள், ஏதோ எனக்கு இங்கு பேச 144 போடப் பட்டதாகச் சொன்னார்கள். ஆசிரியர்களுக்கு என்னிடம் உள்ள அசூசையோ அல்லது ஆத்திரமோ இதற்குக் காரணம் அன்று; ஆனால், அவர்கள் என்னை சரியாகப் புரிந்து கொள்ளாததே காரணமாகும். மேலும், நான், நாட்டிலே புதுயுகப் புரட்சிக் கருத்துக்களைக் கொண்ட ஓர் இயக்கத்தோடு தொடர்பு கொண்டுள்ளேன். என்னைப்பற்றி நீங்கள் தவறாக அறிந்தீர்கள்; அறிவிக்கப் பட்டீர்கள்! ஆனாலும், இன்று நாம் ஒன்று கூடியுள்ளோம், ஊடலுக்குப் பின் கூடல்போல. ஆகவே, இளந்தோழர்கள் இன்று நான் கொண்டுள்ள கருத்துக்களைக் கேட்டு, அவற்றின் வாதப் பிரதிவாதங்களைக் கேட்டு, அவைகள் சரியா தவறா என்று ஒரு 'நல்ல தீர்ப்பு' வழங்கவேண்டும். அது எனக்காக அல்ல; உங்களுக்கு, உங்கள் நாட்டின் நலனுக்கு, உங்கள் நாட்டு சமுதாயத்திற்கு நீங்கள் அளிக்கும் 'நல்ல தீர்ப்பா'கும்.

தீர்ப்பு என்றால் பலவிதம் உண்டு. ஆண்டவன் அடியார்க்கு அளிக்கும் தீர்ப்பு ஒருவிதம்; அரசன் குடிகளுக்கு அளிக்கும் தீர்ப்பு மற்றொரு விதம்; சட்டசபைத் தீர்ப்பு மற்றொரு தன்மையானது; வலியோர் எளியோருக்கும், முதலாளி தொழிலாளிகளுக்கும் அளிக்கும் தீர்ப்பு பிறிதொரு தன்மையானது. இவையாவும் நல்ல தீர்ப்பு என்றே அவரவர் நவிலுவர். ஆனால் தீர்ப்பு காலத்திற்குத் தக்கவாறும்-நிலைமைக்குத் தக்கவாறும் கருத்துக்குத் தக்கவாறும் மாறும்-மாறித்தான் தீரும்; மாறித்தான் தீரவேண்டும். ஒரு காலத்திலே நல்ல தீர்ப்பாக விளங்கியது பிறிதொரு காலத்திலே நல்ல தீர்ப்பு அல்ல என்று எள்ளி நகையாடப்படும்.

நம் நாட்டிலே பசுவின் கன்றைக் கொன்ற மகனை தேர்க்காலில் வைத்து மடித்தான் மனுநீதி கண்ட சோழன். இது அவனுக்கு, அவனது கருத்துக்கு, அக்கால நிலைமைக்கு ஏற்றபடி நல்ல தீர்ப்பு. ஆனால் அவ்விதம் செய்ய, இக்கால தந்தையர்கள், தாய்மார்கள், சகோதர சகோதரிகள் ஒருப்படுவார்களா? அந்த காலத்து நல்ல தீர்ப்பு இந்த காலத்திற்குப் பொருந்துமா? கிரேக்க நாட்டிலே, பகுத்தறிவாளன் சாக்ரடீஸ் நாட்டிலே பகுத்தறிவை வளர்த்தான்; மக்கள், நாட்டின்—சாதாரண மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அழகு, சத்தியம், ஆண்டவன் முதலியவைகளைப்பற்றி ஒருவித உணர்ச்சியை எழுப்பி உண்மையை உள்ளபடி உணர ஊக்கினான். ஆனால், அக்கால உலகம் அவனுக்கு அளித்த தீர்ப்பு, அவனைச் சிறையிலே அடைத்துச் சிந்தனையைச் சிதைக்க முயன்றது; நஞ்சை நாவால் சுவைக்கவைத்து நமனுலகுக் கனுப்பியது. இதுவும் அப்போது "நல்ல தீர்ப்பு" தான்.

இங்கிலாந்திலே சுதந்திரத்தை நாடி உழைத்த பொயடீஷியா என்னும் மாதை உரோமானியர் மகா கொடுமைப்படுத்தினர். அது அவர்களுக்கு அப்போது "நல்ல தீர்ப்பே."

அரசனின் தெய்வீக உரிமை கொண்டாடிய சார்லஸ் மன்னன் தன் அரண்மனை முன்னிலையிலே தூக்கிலிடப் பட்டான். இதுவும் "ஒரு நல்ல தீர்ப்பே."

பிரான்சிலோ நாட்டு மக்களை அடைக்க உதவிய (பாஸ்டில்) சிறையை வீழ்த்தி புரட்சியைப் போற்றி நாட்டோர் நன்மையை நாடி, சீமான்களையும் பூமான்களையும் அதே பாஸ்டில் சிறையில் அடைத்தோரை அந்நாடு தூக்கிலிட்டு "நல்ல தீர்ப்பு" செய்தது. அது ஒரு காலம்.

ஆனால், ரஷ்யாவிலோ மன்னன் முதல் மடாதிபதிகள் வரை மக்கள் நலனுக்கு மாறானோரை மட்டந்தட்டிச் சுட்டு வீழ்த்தி—நாட்டிலே சமத்துவத்தை நிலை நாட்டின புரட்சி வீரர்களைப் போற்றாதார் யார்? இது அந்த காலத்துக்கேற்ற ஒரு "நல்ல தீர்ப்பு" என அவர்கள் கருதுகின்றனர்.

நான் மறுமுறையும் கூறுகின்றேன்; தீர்ப்பானது—காலத்தையும் தீர்ப்பளிப்போரின் தன்மையையும் தழுவியதாகவே இருக்கும்.

சான்றாக, ஆசிரியர்கள் என்னை அழைக்க அலட்சியம் செய்தது அவர்கள் நிலைக்கு, தன்மைக்கு நல்ல தீர்ப்பாகலாம்! இது மாணவரின் நல்ல தீர்ப்புக்கு மாறாக இருந்திருக்கலாம். ஆனால் என்னைச் சரியாக அறியாமல் தீர்ப்பளித்தது "நல்ல தீர்ப்பு" என நான் கருதமாட்டேன்.

சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் தீர்ப்பு எதுவானாலும் அதுதான் "நல்ல தீர்ப்பு;" நல்ல தீர்ப்பு நல்லவர்கள் செய்யும் தீர்ப்பாக என்றும் இருக்காது. ஏனெனில், நல்லவர்கள் தீர்ப்பு, என்றும், இரக்கமுடையதாகவே இருக்கும்.

இன்றைய சமுதாயம் செல்லரித்து, சீர்கெட்டுச் சின்னபின்னப்பட்டுச் சிதறிக் கிடக்கிறது. எனவே, இன்று நல்ல தீர்ப்பு, சமுதாயப் புரட்சி புரிந்து—சமுதாயத்தையே உருக்கி வேறு அச்சில் வார்ப்பதாகத்தான் இருக்கும். இது புரட்சி வேகத்தால் தான் முடியும். இத்தகைய சமுதாயப் புரட்சியை இளந்தோழர்கள் ஈவு இரக்கமின்றி, மாறுதலுக்குக் கட்டுப்பட்டு நடத்த வேண்டும். மக்கள் மாறுதலை எதிர்த்து வாழ முடியாது. ஒன்று, மாறுதலோடு ஒன்றி வாழ முடியும். இன்றேல் மாறுதலோடு மோதி மடிய வேண்டும். இன்றைய சமுதாயம் வழுக்கு நிலம் போன்றது. வழுக்கு நிலத்திலே ஒருவன் எத்தனைக் காலம் விழிப்போடு நடக்க முடியும்? கனத்த காற்றடித்தால் அவன் வழுக்கி விழுவது திண்ணம். ஆகவே அவன் வழுக்கு நிலத்தைச் செம்மைப்படுத்துவதுதான் சிறந்த வழி; மாற்றியமைப்பதுதான் மனதிற்குகந்த மார்க்கம்; அதுதான் என்றும் வழுக்கி விழாதிருக்கும் வழி.

நம்நாட்டு சமுதாயம் ஜாதி வேற்றுமையினாலும் பொருளாதார மாறுபாட்டினாலும் செல்லரித்துக் கிடக்கிறது. மேலும் செல்லரித்துக்கொண்டே வருகிறது. தீண்டாதார் என்போரைச் சகல துறைகளிலும் சாதியின் பேரால் என்றென்றும் தீண்டாதாராக்கியுள்ளோம்; அடிமைப் படுத்தியுள்ளோம்—இது நல்ல தீர்ப்பா?

இதற்குச் சில தோழர்கள், இந்த நிலை பிற நாட்டிலும் இருக்கிறது எனக்கூறிக் கவலையை மாற்ற முயல்வர். ஆனால் அந்நாட்டு சமுதாயத்தைவிட இந்நாட்டுச் சமுதாயம் சிறப்பற்று—சீர்கேடுற்றிருப்பதேன்? இங்கு ஒரு ஜாதியான் மற்றொரு ஜாதியானைத் தொட்டால் தீட்டு, தலை முழுக வேண்டும். ஆனால், இன்று ஒருவரையொருவர், வெட்டு குத்து, அடி என்று ஆர்ப்பரிக்கும் ஹிட்லரோ, சர்ச்சிலோ, ரூஸ்வெல்ட்டோ அல்லது அந்த நாட்டு மக்களோ சாதாரணமாக ஒருவரையொருவர் தொட்டால் தீட்டு, தலை முழுகவேண்டும், மதம் மாசற்றது என மனம் பதைக்க மாட்டார்கள். அங்கு மக்கள் இனம்—எல்லோருக்கும் மரியாதை. இங்கு தில்லைத் திருத்தல ஜோதியிலே கலந்த நந்தன் காலம் முதல் அம்பேத்கார் வைசிராய் ஜோதியிலே கலந்த இன்றுவரை ஒரே தீர்ப்பு; தீண்டாதே என்ற தீர்ப்பு. இது நல்ல தீர்ப்பா?

அமெரிக்காவிலே நீக்ரோ இயற்கையிலேயே அழகற்று அமைக்கப்பட்டான். அதை மாற்ற முடியாது. ஆனால், நம் நாட்டு சகோதரர் யாவரும் நம்மைப் போன்றவர்களே என்பதை எவராலும் மறுக்க முடியுமா? அமெரிக்காவிலே நீக்ரோவோடு உண்ணல், உறவாடல் உண்டு; கலப்பு மணம் உண்டு; கல்விக்கலையுண்டு; ஆனால் இங்கோ?

நம் நாட்டுத் தலைவர்கள் ஆப்ரிக்காவிலே, ஆப்ரிக்கர் இடத்திலே வாழும் கடல் கடந்த கருப்பர் உரிமைக்காகப் போராடுவர். ஆனால், இந்த நாட்டிலே பிறந்து, இந்த நாட்டிலே உழைத்து, இனப்பற்று, உணவு—உடை—உறைவிடமற்று—வறுமையால் வாடி, நலிந்து, மெலிந்து, நசித்து இந்த நாட்டிலேயே என்றென்றும் தீண்டாதானாகவே மரிக்கும் தோழர்களைப் பற்றிக் கவனித்ததுண்டா? மேற்கண்ட அநாகரிகத்தின் அடிப்படையை, அஸ்திவாரத்தை, ஆணிவேரை அறுத்தெறிய முற்பட்டதுண்டா? ஏன் இல்லை இளந் தோழர்களே! இதுபற்றி நீங்கள் நல்ல தீர்ப்பு அளிக்க வேண்டுகிறேன். இன்றில்லாவிட்டாலும் நாளை, நாளை இல்லாவிட்டாலும் நாட்பல கடந்தாகிலும், கல்லூரியை விட்டகன்ற பிறகாவது சிந்தித்து ஒரு நல்ல தீர்ப்பு அளியுங்கள்! ஊருக்குழைப்போராகிய எங்களை வீணே தடுக்காது வாளாவிருப்பதே நீங்கள் நாட்டுக்கு நல்கக்கூடிய நல்லறமாகும். நாங்கள் ஒன்றும் எங்களைச் சகலகலா வல்லவர்கள் என்றோ, பண்டிதர்கள் என்றோ பறைசாற்றவில்லை. அறிவுக்கு அறம் என்று பட்டதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறோம். அல்லாததை அக்கணமே அடாதது என்று அறிவுறுத்துகிறோம். உதாரணமாக—திருமணக் காலங்களிலே, பட்டப் பகலிலே, பகலவன் ஒளியிலே நம்மவர் விளக்கு ஏற்றி வைக்கின்றனர். இந்த விளக்கு ஏன்? எதற்காகவென்று கேட்கிறோம்? ஆண்டவன் அளித்த அருணனிருக்கும்போது ஏன் இந்த விளக்கு என்று கேட்கிறோம்; சீர்தூக்கிப் பாருங்கள் என்று. சீர் தூக்கிப் பார்த்து உங்கள் சொந்த முடிவுக்கு வாருங்கள்.

மற்றும் கடவுளே இல்லை என்றோ, கடவுள் இருக்கிறாரென்றோ நான் கூறவில்லை—அறிவோடு, ஆற்றலோடு, ஆபாசமற்ற கடவுள் இல்லை நமக்கு, இருக்கவில்லை நமக்கு என்றுதான் கூறுகிறேன். மாசுமருவற்ற மதம் இல்லை நமக்கு. இனப்பற்று மிகுந்த இலக்கியம் இல்லை நமக்கு. அன்பு தரும், அறிவூட்டும் சமுதாயம் இல்லை நமக்கு. மனிதர் மனிதத் தன்மையோடு வாழச் சுயேச்சை சுதந்திரம் இல்லை நமக்கு.

நமக்கிருக்கும் இலக்கியமெல்லாம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் முதலியோரின் அற்புத லீலைகளைப்பற்றியவைகளாகவும், ஆண்டவனின் பத்தவதாரங்களை விளக்கி—அதிசய, அநாகரிகமான, அற்புதங்கள் நிறைந்தவைகளாகவும், கலையின் பெயரால் இனக்கொலை செய்பவைகளாகவுமேதான் இருக்கின்றன. அறிவுக்குப் பொருந்தாதவையும், ஆராய்ச்சிக்கு நிற்காதவையும், அறிவையே அகற்றி மடைமையை மக்கள் மனதில் புகுத்தும் போலிகளாகவே—நமக்கிருக்கும் இலக்கியங்கள் உள்ளன.

கிறித்தவனுக்கோ ஒரே ஒரு பிதா பரமண்டலத்திலே உண்டு. இஸ்லாமியனுக்கோ ஒரே கடவுள்; அதுவும் உருவமற்ற அரூபி. ஆனால் நமக்கோ, மூலக் கடவுளர் மூவர், அவருக்குக் குடும்பங்கள் பல; அதிலும் நிரந்தரக் குடும்பங்கள் சில; தற்காலிகக் குடும்பங்கள் பல. உதாரணமாக, சிவனாருக்குப் பார்வதியும் கங்கையும் நிரந்தரக் குடும்பங்களாகும். தற்காலிக குடும்பங்களோ தாருகாவன ரிஷிபத்தினிகளைப்போல சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு இருக்கும். ஏன் இதைக் கூறுகிறேன்? நமக்கும், கிறித்தவனுக்கும், இஸ்லாமியனுக்கும் கடவுள் உணர்ச்சியில், தன்மையில் உள்ள வேற்றுமையைக் காட்டத்தான். நம்முடைய கடவுட்டன்மை கயமைத்தனமாக உள்ளது, கபோதித்தனமாக உள்ளது என்பதை உறுத்திக் காட்டத்தான். இவ்விதக் கயமைத்தனத்தையும். கபோதிக் குணத்தையும் விடுத்து கடவுளை 'சர்வ வியாபகன், உருவ மற்ற அரூபி, அருளுடையவன், என்று மட்டும் ஏன் கூறலாகாது? இதற்குப் புராணமேன்? மதம் ஏன்? மக்களிடை மாற்றம் (சாதிபேதம்) ஏன்? கடவுளைப் பற்றிய இந்தத் தீர்ப்பு "நல்ல தீர்ப்பா" நவிலுங்கள் நாட்டோரே!

நமக்குக் கடவுள் வேண்டும்; நல்ல கடவுள் வேண்டும்; அறிவுக்குப் பொருத்தமான, ஆராய்ச்சிக்குட்பட்ட, நிகண்டிலே நீசத்தன்மையற்ற கடவுள் உணர்ச்சி வேண்டும் என்றுதான் கூறுகிறேன். நல்ல தீர்ப்பு அளிக்கும் கடவுள்தான் வேண்டும். இங்கே ஒன்று கூற ஆசைப்படுகிறேன். சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். சிவன் பார்ப்பனரல்லாதாருக்கே உரித்தானவரென்று; அவர்களையே அவர் உயர்வாக மதித்தாரென்று; காரணம், கண்ணப்பரைத்தான் — பார்ப்பனரல்லாத ஒரு வேடுவரைத்தான் — எம்பெருமான் — அப்பா! அம்மா! என்று அழைத்து அன்பு கூர்ந்தாராம்; மற்றும் செட்டிகுல மங்கையாகிய காரைக்கால் அம்மையாரைத்தான் அம்மே! அம்மே! என்று தம் அமுதவாக்கால் அழைத்தாட் கொண்டாராம். மற்றெவருக்கும் இப்பேறு கிடைக்கவில்லையே! என்னே நம்பால் நம் சிவனார் கருணை! என்று எண்ணி எண்ணி இறும்பூ தெய்துகின்றனர். சற்று சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே, கண்ணப்பர், 'அப்பா' என்ற அழைப்புப் பெறத் தம் கண்களைப் பெயர்த்து அப்ப நேர்ந்த கஷ்டத்தை! காரைக்கால் அம்மையார், 'அம்மே' என்ற ஆசீர்வாதம் பெற, பேயாகி, உடலை வருத்தி, நாடி நரம்பற்று, உருக்குலைய நேர்ந்ததை; இப்பேறு பெற இவர்கள் பட்ட துன்பம் எவ்வளவு? ஆனால், அதே சிவனைப் பார்ப்பனர் எத்துணை எளிதில் அடைகின்றனரென்பதைத் திருவிளையாடல் புராணத்திலே பாருங்கள்! பார்த்துக் கைலாயத் தீர்ப்பு நல்ல தீர்ப்பா என்று கூறுங்கள்.

மதுரையில் சொக்கர் ஆலயத்தில் அம்மையும் அப்பனும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருக்கின்றனர். திடீரென்று அப்பன் எழுந்தார். அம்மை கேட்க, 'ஒரு பக்தன் நம்மை நாடி வருகிறான்; அவனை ஆட்கொள்ள வேண்டும்' என்று கூறி விடையேறி அம்மையோடு விண்ணிலே சென்றார்—அவனது பக்திக்கு மெச்சி பக்தன் செய்த பாபங்களுக்குப் பிராயசித்தம் கூறினார். அது என்ன? 'பொற்றாமரைக் குளத்திலே மூழ்கு! பசுவுக்கு அறுகம் புல்லைப் போடு! ஆலயத்தை மும்முறை வலம் வா! நீ செய்த பாவம் தீர்ந்து எம்மை அடைவாய்!' என்றார். பக்தன் அவ்வாறே செய்து பரமன் அருள் பெற்றான். எப்படிப்பட்ட பக்தன்! பஞ்சமா பாதகங்களைச் செய்த பக்தன்; தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பக்தன்; இப்படிப்பட்ட பக்தனுக்கு அரனின் அருள் அரைக் கணத்திலே கிட்டும்! ஏன்? அவன் பார்ப்பனன். இது கைலாயத் தீர்ப்பு! இது பக்தியாசாரத் தீர்ப்பா? ஜாதியாச்சாரத் தீர்ப்பா?

கிறித்துவன் ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலுக்குப் போவதால் பொருளுண்டு. ஏனெனில், அவனுடைய இயேசுநாதர் அவனுக்காகத் தம் இரத்தத்தைச் சிந்தினார். அதிலே அவனுக்குப் பெருமைகூட, தனக்காக உயிர்துறந்த உத்தமனைக் காணச் செல்வதிலே.

முஸ்லீம் ஒரு நாளைக்கு ஐந்துமுறை தொழுகிறான் என்றால், அதுவும் அவனுக்குப் பெருமைதான். ஏன்? அவன் கடவுள் உருவம் அற்ற அரூபி, அவனுடைய வழிகாட்டி முகம்மது நபி, மக்களுக்காக மக்காவிலிருந்து மதினாவரை ஓடினார்; அஞ்ஞானத்தை நீக்கி அறிவைப் புகட்டினார். ஆனால் நம்முடைய கண்ணன் காட்டிய வழியோ! சிறு வயதிலே வெண்ணெய் திருடி மத்தடி உண்டான்; சற்றுப் பெரியவனான போது கோபிகளுடனே பற்பல லீலைகள் புரிந்தான்; சேலைகள் திருடினான்; பின் இராதை, ருக்மணி முதலியோரை மணந்தான்; கடைசியாக பாரதப் போரிலே சிறந்த இராஜ தந்திரத்தைக் கண்டான். நான்கு வருணத்தை நான் தான் படைத்தேன் என்று கீதை செய்தான். இந்த வழி நல்லதா? நமக்குத் தேவையா?

அழகான கதைகளோடு, அற்புதங்கள் நிறைந்த புராணங்களோடு, இலக்கியங்களோடு கடவுளை ஒட்ட வைத்து, கடவுளுக்குக் கயமைத்தனத்தையும், கபோதித்தனத்தையும் கற்பித்து நாட்டை நல்குவது நல்லதா? அது மட்டுமல்ல; ஆண்டவனுக்கு அழகான மோகினி ரூபம் முதல் அழகற்ற வராகம்வரை படைத்துள்ளோம். ஏன் இவ்விதம் கடவுளை கபோதித்தனமாகக் கயமைத்தன்மைக்கு உட்படுத்த வேண்டும்?

பாருங்கள்—இன்று திருவரங்கத்திலே நடக்கிறது மட்டையடித் திருவிழா. அன்று ஆண்டவன் அரங்கநாதன் அக்காலத்திலே ஆலயத்திற்கு வருவார். கதவு மகாலட்சுமியினால் அடைக்கப்பட்டிருக்கும். பகவான் கதவைத் தட்டுவார், பட்டாச்சாரி ரூபத்திலே. அம்மை உள்ளிருந்து சிறிது கதவை திறந்து (இன்னொரு பட்டாச்சாரி ரூபத்திலே) பார்த்து கணவன் மேல் சந்தேகப்பட்டுத் திறக்க மறுப்பார். உலகம் உண்ட மாதவன் உத்தமி லட்சுமியைக் கதவை திறக்க வேண்டுவார்; அம்மை வெளியே வந்து ஆண்டவனை மட்டையால் தட்டி உள்ளே அழைத்துப் போவார். இது எவ்வளவு மடத்தனம் என்று மனதில் சிந்தியுங்கள் மாணவர்களே! இவ்விழா ஒரு முறையல்ல; ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகிறது.

தூய கடவுளுணர்ச்சி பெற விரும்பும் நாம் இத்தகைய கயமைத்தனமான, காலித்தனமான, கபோதித்தனமான திருவிழாக்களைக் கடவுள் பெயரால் கொண்டாட விட்டு வைப்பது நல்லதா? அது கடவுளையே கயவனாக்குகிறதல்லவா? இவ்விதம் நடப்பது நல்ல தீர்ப்பா?

நமக்கும் கிராமங்களிலே உள்ள மக்களுக்கும் இருக்கும் வித்தியாசங்களைக் கவனியுங்கள். நாம் எல்லோரும் பூமி உருண்டை வடிவம் என்று நன்றாய் அறிவோம். தந்தி, டெலிபோன், வயர்லஸ் முதலியவைகளைப்பற்றி நன்றாய் அறிவோம். ஆனால், கிராமத்திலே சென்று கிராம மணியக்காரனைப் பார்த்து, பூமி உருண்டையா தட்டையா என்று கேட்டால், பூமி என்னமோ தட்டைதான். அது, நம்ம பெரியவர்கள் எல்லாம்கூட எழுதி வைத்திருக்கிறார்கள். இரண்யன் தம்பி இரண்யாட்சதன்கூடப் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போனானாம். அதை மகாவிஷ்ணு பன்றியாகப் போய் திரும்பக் கொண்டுவந்தாராம். அதுதான் உண்மை என்று நம் அய்யர், அர்ச்சகர், புராணிகர் எல்லாம் சொல்கிறார்கள். ஆனால், இப்ப என்னமோ நம்ம பையன் பூமி உருண்டை என்று படிக்கிறான். அது கிறித்தவ படிப்பில்லையோ என்று பதில்சொல்வான். மேலும் அவனைப் பார்த்து, டெலிபோன், தந்தி, ரயில் ஓடுவது எப்படி என்றெல்லாம் கேட்டால் அவைகளைப் பற்றித் தனக்கொன்றும் தெரியாது என்பான். இவைகள் தற்கால வாழ்வுக்கு வேண்டியவை, தெரிந்து நன்கு புரிந்துகொள்ள வேண்டியவை. ஆனால், தெரியுமா என்று கேட்டால்—தெரியாது என்பான். இவ்வாறு தெரிந்துகொள்ள வேண்டியவை அவனுக்குத் தெரியாது. ஆனால், அவனைப் பார்த்து உலகம் எத்தனை என்றாலோ, பூலோகம், புவர்லோகம், சுவர்க்கலோகம், நாகலோகம், நரகலோகம் என்று சொல்வான். நம்ப ராஜா யார் என்றால் தெரியாது; எங்கோ சீமையில் இருக்கிறாராம் என்பான். ஆனால், தேவலோக ராஜா யார் என்றால் உடனே தேவேந்திரன் என்றும், எமனுக்கு என்ன வாகனம் என்றால், எருமைக்கடா என்றும், பூலோகமா இது பரலோகமய்யா! சுவர்க்கலோகம்தான் சுகலோகம், நரகலோகமா அப்பா! பயங்கரம் என்றும் பதில்கள் மிக வேகமாகக் கிடைக்கும். இப்படிப்பட்ட புரிந்துகொள்ள முடியாத, அவசியமற்ற விஷயங்கள் அவனுக்கு அனுபவித்தவன் போல மனப்பாடம். ஆனால் அறிவு வளர்ச்சிக்கும், அன்றாட வாழ்க்கைக்கும் வேண்டியவற்றில் அவன் அரைக்கால் பங்குகூட அறிந்திருக்கமாட்டான். ஏன் இவ்விதம் நகரிலே ஒரு நீதியும்—நாட்டில் ஒரு நீதியும் வழங்கப்படுகிறது? இந்த நீதி வருணாசிரம தருமம் வானுறவோங்கி வளம் பெற்ற காலத்தில் நல்ல தீர்ப்பாக இருந்திருக்கலாம்; இன்று இருக்க முடியுமா? மேலும், நீதி என்றும் நிலை பெற்றதா? நீதி நிலைமைக்குத் தக்கபடி மாறும், நிகண்டுக்குக் கட்டுப்பட்டு நிற்காது. சான்றாக, ரயிலுக்குத் தாமதமாகச் செல்பவன் ரயில் தவறினால் ரயில் சீக்கிரம் போய் விட்டதென்று குறை கூறுகிறான். அது அவன் நிலைக்கேற்ற நீதி. ஆனால், அதே ரயிலில் அரைமணி முன்னதாகச் சென்று அமர்ந்திருப்பவன் அதைக் கட்டை வண்டிக்கும் கூட்ஸ் வண்டிக்கும் ஒப்பிடுகிறான். இது இவனது நிலைக்கேற்ற நீதி.

கண்ணகி காலத்தில் கோவலன் நடத்தை நீதியாக இருக்கலாம். ஆனால் அது இக்காலத்திற்குச் செல்லாது. இக்காலக் கண்ணகி—கோவலனை சும்மா விடமாட்டாள். அல்லது அவன் தாய் தகப்பனும் சும்மா விடமாட்டார். அது போலத்தான் ராமன்—சீதை, நளாயனி, நளன்—தமயந்தி முதலியோர் காலத்து நீதி, அவ்வக் காலத்திற்கேற்றதாக இருந்தது. அது இப்போது செல்லாது. நீதியின் சக்கரம் சதா உருண்டு கொண்டே இருக்கும். அதனை நாம் நம் அறிவைக்கொண்டு—நம் நிலைக்கேற்பத் திருப்ப வேண்டும்.

கடவுளைப் பற்றிய நீதியும் காலத்திற்கும் கருத்திற்கும் ஏற்றபடிதான் இருக்கவேண்டும். முற்காலத்திலே கடவுளைப் பற்றிய நீதி அவரவர் நிலைமைக்கு ஏற்றபடிதான் இருந்திருக்கிறது. சான்றாக, சைவம் தழைத்தோங்கத் தொண்டாற்ற வந்த சமயாச்சாரியர்களுள் ஒருவரான திருநாவுக்கரசரால் உருவம், நிறம் அற்றவனாகக் (இத்திறத்தான் இவ்வண்ணத்தான் எடுத்தியம்ப வொண்ணாத) காணப்படும் கடவுளை, மற்றொரு சமயாச் சாரியாராகிய சம்பந்தர், தோடுடைய செவியனாக்கி, விடையேற்றி, தூவெண்மதிசூட்டி, காடுடைய சுடலைப் பொடி பூசி, உள்ளங்கவர் கள்வனாக்கிக் காண்கிறார். இதில் எவருடைய தீர்ப்பு நல்ல தீர்ப்பு? இதில் எவருடைய தீர்ப்பைப் பின்பற்றுவது? கூறுங்கள்!

துறவறத்தைப்பற்றித் தாயுமானவர் கூறும்போது "கனியோ, காயோ, உதிர்சரகோ, கந்த மூலமோ, அதுவும் இன்றேல் நீரோ அருந்தி உயிர் வாழ்!" என்று கூறுகிறார். அவர் துறவியாயினும் முதலில் நினைப்பது நம்மைப்போலவே கனிவகை. இதிலென்ன துறந்த தன்மையுள்ளது? துறவறத்தைப்பற்றி பட்டினத்தடிகள், "இருக்குமிடந்தேடி என் பசிக்கு உருக்கமுடன் உணவு தந்தால் உண்பேன் இன்றேல் என்தேகம் இளைத்தாலும் ஏகேன். சிவன் மேல் ஆணை!" என்று மடாதிபதி மனப்பான்மையோடு பாடுகிறார். இதில் எந்தத் துறவறம் துறந்த நிலையில் உள்ளது?

நமக்குக் கடவுளுணர்ச்சி வேண்டும்; அது மாற்றி அமைக்கப்படல் வேண்டும்; கயமை—கண் மூடித்தனமற்றதாக இருக்க வேண்டும். எல்லாம் வல்ல எம்பெருமானுக்குக் கோயில் ஏன்? குளம் ஏன்? பூமி ஏன்? மதம் ஏன்? சாஸ்திர சம்பிரதாயச் சடங்குகள் ஏன்? என்று நான் கேட்கிறேன். இவைகளால் எவ்வளவு பணம் பாழ்! பகுத்தறிவு பாழ்! கருத்துப் பாழ்!

பொருளாதாரத் துறையில் கல்வி கற்கும் மாணவர்களே! உங்களுக்கு ஓரு வேண்டுகோள். உங்கள் வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் சிந்தியுங்கள்! இந்தக் கோயில், மதம், சாஸ்திரம், சம்பிரதாயச் சடங்குகளின் பேரால், நாட்டு மக்கள் செய்யும் செலவு எவ்வளவு என்று; அது நாட்டின் சமுதாயத்திற்கு எவ்வித நலனுமின்றி எவ்விதம் நாசமாக்கப்படுகிறது என்றும், கோயில்களின் பேரால் எத்தனைக் கோடி பணம் முடங்கிக்கிடக்கிறது என்றும், அதைக் கொண்டு எத்தனை எத்தனை பிர்லா திட்டம் போட்டு நிறைவேற்றலாம் என்றும் சிந்தியுங்கள்! சிந்தித்து அவை சரியா என்று ஒரு நல்ல தீர்ப்பு அளியுங்கள்!

நாட்டிலே நஞ்சை அதிகம். அதனால் ஆண்டவனுக்காக அதே நிலத்தைப் பண்படுத்திப் பாடுபடும் பண்ணையாளுக்கு அந்த பரமசிவன் பாதி வயிற்று கஞ்சி அளிக்கிறானா? இல்லை, ஏன்? தங்கம் விளையும் நாடு நந்தமிழ்நாடு. ஆகவே, தில்லை தாண்டவ மூர்த்திக்குத் தங்க ஓடு போட்ட சன்னிதானம். சரி; ஆனால் பாறை வெடிப்புக்கும் மணலின் சரிவுக்கும் அஞ்சாது பூமியிலிருந்து தங்கம் வெட்டி எடுப்பவன் தொழிலாளி. அவன் அறிவானா தங்க நகை? அணிய அவனுக்கு வசதியுண்டா? அல்லது அரை வயிற்றுக் கஞ்சிக்காவது இல்லாமல் இருக்கிறதா? அதுதான் இல்லை. அவன் தன் குடும்பத்தை அரைவயிறாவது நிரப்ப என்றும் அலைந்தாக வேண்டும். தான் எடுக்கும் தங்கத்தின் தரமும் அவனுக்குத் தெரியாது; மதிப்பை அவன் மனத்தாலும் அறியான். அவன் பாடுபடுவதெல்லாம் — வற்றின அரை வயிற்றுக் கஞ்சிக்குத்தான். அவன் அறிந்ததெல்லாம் கந்தல் ஆடை, பொத்தல் குடிசை, இருண்ட வீடு, சுவையற்ற கஞ்சி, ஒட்டிய வயிறு, குழி விழுந்த கன்னம் முதலியவைகளே. நாட்டிலே ஏன் இந்த வேற்றுமை? ஏன் இந்த நிலைமை?

சமீபத்தில் நான் ஒரு பேசும் படக்காட்சியைப் பார்த்தேன். அதில் ஒரு ஆங்கில நாட்டு பெவின் திட்டத்திலே ஒரு பகுதியைச் செய்திப் படமாகக் காண்பித்தனர். அதில் ஒரு கையற்றவனுக்கு இடுப்பிலே கை செய்து வைத்து மற்றொரு கையில் அரம் கொடுத்து அசைத்துத் தொழிற்சாலைகளிலே தொழில் செய்யக் கற்பிக்கின்றனர்; காலில்லாதவனுக்குச் செயற்கைக் கால்களை ஈடு செய்கின்றனர் தம் அறிவைப் பயன்படுத்தி.

ஆனால் நம் நாட்டிலே! ஒரு மதவாதி ஓட்டலுக்குள் சென்று வயிறு புடைக்கத் தின்றுவிட்டு, வாயில் வெற்றிலை மென்றுகொண்டே வெளியே வருவார். வெளியே கையற்ற, காலற்ற, கண்ணற்ற பிச்சைக்காரர்கள் அவரிடம் காலணா வேண்டுவர். அதற்காக அவரை சாமீ என்பர்; மகாராஜா நீ நல்லாயிருக்கணும் என்று புகழ் மாலை பாடுவார். ஆனால் அவர்கள் நிலைகண்டு அவர் இரங்கார்; தாங்கள் செய்த கருமத்தை அவர்கள் அநுபவிக்கிறார்கள் என்று அவர் கருதிக்கொண்டு வறிதே செல்வார்; அவர்கள் அங்கம் பழுதுபட்டிருப்பதைப்பற்றிக் கவலைப்பட மாட்டார். ஆனால், அதே மதவாதி, கந்த கோட்டத்திலே உள்ள குதிரை வாகனத்தின் வாலோ, காளை மாட்டின் வாலோ, மயில் வாகனத்தின் தோகையோ ஒடிந்து விட்டதாகத் தெரிந்தால், அதற்காக மிக்க கவலைப்படுவார்; மனம் பதைப்பதைப்பார். உடனே ஒரு திருவோலை ஏந்திக் கொண்டு வீடு வீடாக, ஊர் ஊராக, நகர நகரமாகவேனும் சுற்றித் திரிந்து மக்களின் மடமையைத் துணைக் கொண்டு வாகனத்தைப் புதுப்பிக்கும் திருப்பணிக்காகத் திரவியம் சேர்த்து ஒடிந்த பாகத்தை ஈடு செய்வார். வாகனத்தின் வால் உடைந்தது என்று சொல்வது பிழை; ஆனால் உடைக்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை உரை; உறுதியும்கூட. இத்தகைய குறைமதியாளர்கள் மக்கள் கை காலற்றிருப்பதைக் கண்டு கவலையுறார்; அவர் தம் விதியை-இவர் தம் மதியால் மாற்ற முன் வருவார். ஆனால், எல்லாம் வல்ல எம்பெருமானின் எருதுவாகனம் பழுதுபட்டால் அதைப் புனருத்தாரணம் செய்யப் புறப்படுவார் புளகாங்கிதத்தோடு. என்னே இவர்தம் இழிநிலை! இத்தகைய மக்கட் சமுதாயம் முற்போக்கடையுமா? அல்லது பெவின் திட்டப்படி கை காலற்றோரைக் கருத்துடன் கவனித்து ஆவன செய்யும் நாடு முன்னேறுமா? நல்ல தீர்ப்பு அளியுங்கள் தோழர்களே! மக்களை மக்களாகக் கருதி, மகேஸ்வரனுக்கு மண்டபங்கள் கட்டும் மக்கள், மடமையை விட்டு என்றாவது மதியைப் பெறுவார்களா? நம் உழைப்பு, ஊதியம், அறிவு, ஆற்றல், சிந்தனை, சிறப்பு, கருத்து, கல்வி யாவும் இனத்திற்கு இம்மியும் பயன்தராத இழிமுறையிலே சென்றால், இத்தாலி நாட்டைக் கண்டு டாண்டன் என்னும் கவி 'எழிலுள்ள நாடே! எடுத்தாள்வோர் நாடானாயே!' என்று இரங்கியதுபோல் நாமும் நாட்டைக் கண்டு இரங்கத்தான் வேண்டும்.

மற்றும் நமது இலக்கியங்கள் நமக்குத் தேவையா? அவற்றால் மதி பெருகுமா? மடமை மறையுமா? என்று ஒரு நல்ல தீர்ப்புக்கு வரவேண்டும்.

புராண இதிகாசங்களைப் பாடும் இலக்கியங்களின் அவசியத்தைப்பற்றிக் கூறி, அவற்றைப் படிக்க வேண்டும் என்று பறைசாற்றினோர் யாவரும் வெவ்வேறு காரணங்கள் கூறினர். அதில் எதை நம்புவது? எதைப் பின்பற்றுவது? அதுதான் முடிவா? முதலாவதாக, "அவைகள் புண்ணிய சரித்திரங்கள். அதனால் அவற்றை அறியவேண்டும்' என்றனர். இது திரு. மறைமலையடிகள் காலமாகும். பின்னர், "அவற்றில் உள்ள பாத்திரங்கள் சற் பாத்திரங்கள்; ஆகவே அவற்றைப் படிக்கவேண்டும்" என்றனர். இது, திரு. வி. கலியாணசுந்தரனார் காலம். அடுத்தபடியாக "அவ்விலக்கியங்களிலே, காவியரசம், கலை உணர்வு, பண்பாடுகள் சொட்டுகின்றன. அதனால் அவற்றைப் படிக்க வேண்டும்" என்றனர். இது, திரு. ரா. பி. சேதுப்பிள்ளையவர்கள் காலமாகும். இதனை இன்னும் சிலர் வேறு மொழிகளிலே கூறுவர். அதாவது "அவைகளிலேயுள்ள பாவத்திற்காகப் படியுங்கள்" என்று. இது, டி. கே. சிதம்பரநாத முதலியார் காலம். இவை யாவற்றையும் கடந்து 'மேலே கூறப்பட்டவைகட்காவது படிக்கா விட்டாலும் அவைகளிலுள்ள நீதிகட்காகப் படியுங்கள்" என்கின்றனர். இது, திரு. சோமசுந்தர பாரதியார் போன்ற புராணமும் பகுத்தறிவும் கலந்தோர் காலம்.

புண்ணிய சரிதம், சற்பாத்திரங்கள் நிறைந்த சரிதம், காவியரசம், கலையுணர்வு, பண்பாடு பொருந்திய காவியம், பாவமுள்ள காவியம் என்ற நிலைகளெல்லாம் கடந்து நீதிக்காகவாவது இவைகள் நிலைத்திருக்க வேண்டும் என்ற நிலைமைக்கு வந்துள்ளது இன்றைய இலக்கியங்களுடைய நிலை மற்றும் சில பகுத்தறிவாளர் கேட்கும்போது மட்டும் இவர்கள் சில தத்துவார்த்தங்கள் கூறித் தகிடுதத்தம் செய்கின்றனர். இவர்கள் கூறும் தத்துவார்த்தங்கள் நாட்டு மக்களிடை பரவியுளதா என்றால், இல்லை, இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படியிருக்க, இவர்கள் கூறும் தத்துவங்களால் யாருக்கு என்ன பயன்? சான்றாக, புலவர்கள், "இராவணனுக்குப் பத்துத்தலைகள் இல்லை. அது கவியின் கற்பனைத் திறன். இராவணன் பத்துப்பேர் ஆற்றலையுடையவன். பத்துவித குணமுள்ளவன். ஆகவே, அதனைப் பத்து முகங்கள் என்று பாடியுள்ளார். அதிலுள்ள பண்பாடு, பாவம்தான் என்னே! என்னே!" என்று இறும்பூ தெய்துவர். நான் கேட்கிறேன் உங்களை, நீங்கள் கிராமத்திற்குச் சென்று கிராமத்தானிடம், "இராவணனுக்குப் பத்துத் தலைகள் இல்லை. அது வெறும் கற்பனை கருத்துக்குக் களிப்பூட்ட கையாளப்பட்ட கைத்திறன்! நாங்கள் இராமாயணத்தை நன்றாகப் படித்தோம்; பட்டம் பெற்றுள்ளோம்" என்று கூறுவீர்களா? பத்துத் தலைகள் என்பது பிழை என்பதைக் குறித்துப் பேசப் புகுந்த உங்களால் அவர்கள் கல்லடிகட்குப் 'பத்துப்' போட முடியுமா என்று தான் ஏங்குகிறேன். ஏன்? எதனால்? அவன் உங்கள் பேச்சை நம்பாததினால், ஏன் நம்ப மாட்டான்? அவன் ஏட்டிலே படிப்பது பத்துத் தலைகள் என்று; புராணப் பிரசங்கத்திலே கேட்பது இராவணனுக்கு பத்துத் தலைகள் என்று. ஆகவே உங்கள் தத்துவார்த்தத்தால் என்ன பயன் என்று கேட்கிறேன். எனவே இவை மாற்றப்பட வேண்டுமென்றால் குற்றமா?

"பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே—வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே,"

என்று காலத்திற்கு ஏற்ற கருத்துடன் பாடிச் சென்றார் பாரதியார். அதைக் கண்டு உங்கட்கு உண்மை தெரியவில்லையா? நம்முடைய இலக்கியங்களிலே உள்ள நீதி நமக்குத் தகுமா? நமக்குத் தேவையா? என்று நல்ல தீர்ப்பு அளியுங்கள். எடுத்துக் காட்டாக, கம்ப ராமாயணத்திலே உள்ள நீதியைக் காண்மின். இராமனுக்கு முடிசூட்டுவிழா நிச்சயிக்கப்பட்டது. தசரதன் தன் மந்திரி சுமந்திரனை அழைத்து இராமனுக்கு அரச நீதிகளை அறிவுறுத்துமாறு ஆணையிட்டான். சுமந்திரன் இராமனுக்கு கூறுகிறான்; "அந்தணர் ஏவுகின்ற முறைப்படி நட" என்று. இது இந்த காலத்திற்கும் கருத்திற்கும் ஏற்றதா என்று சிந்தியுங்கள். இந்த தீர்ப்பு "நல்ல தீர்ப்பா?"

இங்கு நம் புலவர் குழாங்கள் ஒன்று கூற முன்வருவர் மிக ஆவலுடன். அதாவது கம்பன் கண்ட அந்தணர் பார்ப்பனக் குலத்தைக் குறிப்பதல்ல—ஆனால்,

"அந்தண ரென்போர் அறவோர்-மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்"

என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக உள்ள அறிவாளரையே அண்டும் என்பர். அந்தணர் என்னும் சொல் இங்கு அறிவாளரைக் குறிப்பதன்று! குலத்தை குறித்ததேயாகும் என்றே துணிதல் வேண்டும். எடுத்துக் காட்டாக வேண்டுமானால் சுந்தரர் பாடிய திருத்தொண்ட திருவந்தாதிக்கு வாருங்கள். அதிலே,

'தில்லைவாழ் 'அந்தணர்’தம்
அடியார்க்கும் அடியேன்'

என்ற அடியிலே அந்தணர் என்பது நம் புலவர் பெருமக்கள் புகலும் புனிதரையே குறிக்கிறதா என்று பாருங்கள். இல்லை! அது குலத்தைத்தான் குறிக்கிறது என்பதுன் முக்காலும் உண்மை. அவ்விதம் குலத்தைக் குறிக்கவில்லை என்றால், அறிவாளராகிய தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று கூறிய அதே வாயால் அடுத்த அடியிலேயே "திருநீலகண்ட 'குயவனார்க்கும்' அடியேன்" என்று கூறி குயவனார்க்கு என்ற குலத்தைக் குறிக்கும் சொல்லை வைத்திருக்கமாட்டார். ஏன்? 'அந்தணர்' என்பது செந்தண்மை பூண்டொழுகும் செம்மல்களையே குறிப்பதானால், திருநீலகண்டரையும் அந்தணரென்று குறித்திடுதல் வேண்டும். அவ்விதம் குறிக்காதது ஏன்? அவர் அந்தணர் என்று அழைக்கப்பட அவ்வளவு அருகதையற்றவரா? சிவநேசச்செல்வர் அல்லவா? அம்மையப்பனின் அருள்திரு திருவிளையாடல் அவரை அண்டவில்லையா? இல்லை என்று எவரும் மறந்தும் மறுக்க முடியாது. எனவே, இங்கு அந்தணர் என்பது குலத்தைக் குறிக்கும் சொல்லே என்று கொள்வதே முறை.

நிற்க, சுமந்திரன் இராமனிடம் 'அந்தணர் ஏவுகின்ற முறைப்படி நட; ஏன் எனில், விதியும் அவர் ஏவ நிற்கும், அவரால் அரசை ஆக்கவும் அழிக்கவும் முடியும்' என்று கூறுகிறான், இது நல்ல நீதியா? நடக்குமா? நடக்க விடலாமா? என்று சிந்தியுங்கள் எதிர்கால நீதிபதிகளே!

பிறிதொரு புலவர், 'கம்பன் காவியத்திலே தமிழ் நாட்டைக் கண்டான்' என்று கம்பன்பால் மாறாக் காதல் மிகக் கொள்கின்றார். ஆனால் தமிழ் நாட்டிலே கம்பன் கண்ட காட்சிகள் இருந்தனவா? பாருங்கள்! கம்பன் காவியத்திலே மாதர் வர்ணனை மிக மோசம். மனத்தாலும் நினைக்கொணாத மாசுடையது. மிதிலை, அயோத்தி முதலிய நகரங்களிலே மாதர்கள் மது குடித்து தம் நிலை மறந்து ஆடிக்கொண்டிருந்தனர்; பெண்கள் பந்தயம் வைத்து சூதாடினர். பந்தயத்தில் தத்தம் காதணி, கையணி முதலிய யாவற்றையும் தோற்றபின் தத்தம் மேலாடைகளையும் பணயம் வைத்து ஆடுகின்றனராம்! இதுதானா கம்பன் கண்ட தமிழ்நாட்டு மகளிர் மாண்பு? இத்தகைய இழிசெயல்கள் தமிழ்நாட்டிலே இருந்தனவா? இருந்தது என்று இயம்ப பண்டை ஏட்டில் இடம் உண்டா? அல்லது இத்தகைய தமிழ்நாடு நமக்கு வேண்டுமா? வேண்டும் என்று எவரும் விழையார் என்பது திண்ணம்.

மற்றும் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் மகா மோசம்; மற்றெங்கும் காணமுடியாத காமரசக் களஞ்சியம். எல்லாம் பாரீஸ் நிர்வாணப் படங்களைப் பாடும் பாசுரங்களாகவே பரிணமிக்கின்றன. சான்றாக 'அவருக்கு, மங்கையர் கழலடி வருடி கருத்தறிந்த பின் அரைதனிலுடைதனை அவிழ்த்து ஆங்குள அரசிலை தடவி' எனப் போகிறது. இவைகளை வேண்டாம் என விழைவோர் ஏன் இவைகளை விரித்துப் பாடவேண்டும்? இவைகள் பக்திப் பாடல்களா? கொக்கோக வைபவம் என்று கூறினால் மிகப் பொருத்தமாக இருக்கும். அதற்குத் தனித்தனி இலக்கியங்கள் இருக்க வேண்டும்.

நமக்குக் காமரசம் கலவாத, மதம் கலவாத, மதியை வளர்க்கும் இலக்கியங்கள் தேவை. காலத்துக்கும் கருத்துக்கும், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தொடர்புள்ள ஏடுகள் தேவை.

'ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்' என்ற மனப்பான்மை தேவை. அருளை மட்டும் கேட்கும் ஆண்டவன் தேவை, கோயில், குருக்கள், குடும்பம், கூத்தி, மானியம், அதிர்வெடி கேட்கும் ஆண்டவன் வேண்டாம் நமக்கு. கோயிலுக்கு வெளியே வறுமை, கொடுமை, இல்லாமை, கோயிலிலே மலைபோன்ற செல்வம், இன்பம் என்றிருக்கும்—நிலையற்ற நிலைமை வேண்டாம். கடவுளுக்கு பேசும் சக்தியிருந்தால் அவர் உங்களைப்பார்த்துக் கேட்பார், அடே அறிவற்றவனே! நான் இந்த அண்ட சராசரங்களைப் படைத்தேன், நீரைப் படைத்தேன், அதிலே முத்தைப் படைத்தேன், அறிவைப் படைத்தேன், எதையும் எண்ணிச் செய்ய, பகுத்துச் செய்ய உனக்குப் பகுத்தறிவைப் படைத்தேன். ஆனால், இவற்றிற்குப் பதிலாக நீ எனக்கு அரை வீசை வெண் பொங்கல் படைக்கிறாயா? நாட்டிலே உள்ள நலிந்தோரைப் பார் என்றுதான் கூறுவார், அவர் அறிவுள்ள கடவுளானால்.

கடவுளை நாங்கள்தான் குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். நெடுங்காலத்திற்கு முன்னரே உங்கள் இரட்டைப் புலவர்கள் கூறியுள்ளதை நினைவிற்குக் கொண்டு வாருங்கள். அவர்களில் ஒருவர் பாடுகிறார் பசியால் மிக நொந்து, 'தேங்கு புகழாங்கூர் சிவனே யல்லாளியப்பா நாங்கள் பசித்திருக்க ஞாயமோ' என்று. நாத்திகம் பேசி நாத்தழும் பேறிய நாங்கள் பசித்திருக்கலாம். ஆனால் சிவநேசர்களான இரட்டைப் புலவர்கள் பசித்திருக்கலாமா?

இதற்கு சிவனே விடையளிப்பது போன்று மற்றொரு புலவர் பாடுகிறார்.

—போங்காணும்

கூறுசங்கு தோல்முரசு கொட்டோசை யல்லாமற்
சோறுகண்ட மூளியார் சொல்—என்று!

மற்றும் அதே இரட்டையர்கள் வறுமையால் வாடி வருந்தினபோது பாடுகின்றனர்.

கேட்ட வரமளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள்!
கூட்டோடே எங்கு குடிபோனீர்—என்று.

அதுவும் கூட்டோடே—குடும்பத்தோடே எங்கே குடி போனீர்கள் என்று கேட்கின்றனர். இதற்குத் தெய்வத்தின் விடையாக மற்றவர் பாடுகிறார்.

—பாட்டாய் கேள்

செல்கால மெல்லாஞ் செலுத்தினோம் அல்காலங்
கல்லானோஞ் செம்பானோங் காண்—என்று.

இது எத்துணை உண்மை என்று சிந்தியுங்கள்!

மற்றும் சிலர். 'நம் நாட்டில் எல்லாம் உளது. நமது அதர்வண வேதத்தில் இருந்துதான் ஜெர்மானியன் பறக்கும் குண்டு, ஆகாய விமானம் முதலியவற்றைத் தெரிந்து கொண்டான். நம் நாட்டில் இல்லாத விமானமா? என்னென்ன அஸ்திரங்கள் இருந்தன. அக்கினியாஸ்திரம், வாயுவாஸ்திரம், வருணாஸ்திரம் என்று! இன்று என்ன புதுமையாய் வந்துவிட்டது?' என்று நாட்டைப் பற்றிப் பெருமையோடு பேசுகின்றனர். ஆனால், அந்த பழம் பெருமை எங்கே இப்போது? ஏன் அந்நியனுக்கு கோட்டைவிட்டு ஆந்தைபோல விழிப்பது? இதனால் உண்மையிலேயே நமக்குப் பெருமையா? இல்லை சிறுமைதான்; சுயமரியாதைக்குப் பங்கம்தான். இது, அந்நியனுடன் கொஞ்சிக் குலாவும் அழகிய அணங்கைக் கண்டு அருகில் இருப்பவனிடம், 'இவள் யாரோ என்று எண்ணாதேயும்; இவள் நம்முடைய மனைவியாக இருந்தவள்தான்! இப்போது இவளை அவன் ஏமாற்றி அழைத்துச் சென்றுவிட்டான். ஆனாலும் என்ன? என்னிடம் இருந்தவள்தானே! இதனால் எனக்கு எவ்வளவு பெருமை?' என்று கூறுவதற்குச் சமமாகும் என்பது திண்ணம்.

மக்கள் சமுதாயத்தைச் சீர்திருத்தப் பலப்பல அறிஞர்கள் அரிய பெரிய வேலை செய்தனர். ஆனால் அவர்கள் யாவரும் தோற்றனர், அடிப்படையை ஆராயாததால். எனவே, இளந் தோழர்களே! வருங்கால உலகம் உங்களைத் தான் நம்பி இருக்கிறது. ஆகவே, நீங்கள் உங்களுக்கு அளித்துக்கொள்ளும் 'நல்ல தீர்ப்பால்' இனத்தை எதிர் காலத்திலே எழுச்சியுறச் செய்வீர்களாக! பெரியோர்களை நம்பின காலம் போய்விட்டது. புதுமை, இளைஞர்களால்தான் நிகழவேண்டும்; நிகழமுடியும். சீனாவிலே சன்யாட்சென், இளைஞர்கள் உதவியால்தான் பழைய சீனாவை முடித்துப் புதிய சீனாவை உண்டாக்கினார். ஆண்களின் ஜடையைக் கத்தரித்தார். ஒரே ஆண்டவனை வழிபடும்படி செய்தார்.

'ஐரோப்பாவின் நோயாளி'யாகக்கருதப்பட்ட துருக்கி இன்று தலை நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் கமால்பாஷா இளைஞர்கள் உதவியை பெற்றதாலேதான்.

தோழர்களே! நீங்கள் "நல்ல தீர்ப்பு" அளியுங்கள். இன்று மக்கள் சமுதாயத்தை மாற்றவல்ல தீர்ப்பு, மனிதனை மனிதனாக வாழ வைக்கும் தீர்ப்பு, விதியை விரட்டும் தீர்ப்பு அளியுங்கள். அதை அமுலுக்குக் கொண்டு வாருங்கள்! அதற்குத் தடையாக கடவுளே வரினும் கலங்காதீர்! சிவனே வரினும் சிதறாதீர்! மதமே வரினும் மயங்காதீர்! கலை கலை என்று இனக்கொலை செய்தால்—கலைக் கொலை செய்யுங்கள்! மானமே பெரிதென மதியுங்கள்! சிந்தித்து நல்ல தீர்ப்புக் கூறுங்கள்! செயலில் காட்டுங்கள்!!

—நன்றி. வணக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=முக்கனி/கனி—2&oldid=1676677" இலிருந்து மீள்விக்கப்பட்டது