முக அழகைக் காப்பது எப்படி/முகத்தின் அமைப்பும் சிறப்பும்

விக்கிமூலம் இலிருந்து
4. முகத்தின் அமைப்பும் சிறப்பும்

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பார்கள்.

சிரசு என்பது தலையாக மட்டும் அமையாமல், தலைமை பீடமாகவும், முதன்மைத் தன்மை கொண்டதாகவும் விளங்குகின்றது.

தலையின் அமைப்பானது. ஏறத்தாழ 29 எலும்புகளால், உருவாக்கப்பட்டிருக்கிறது.

29 வித்தியாசமான எலும்புகளால், தலைப் பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. மூளையை பத்திரமாகப் பாதுகாக்கிற மூளைப் பெட்டியானது (Brain Box) 8 எலும்புகளாலும்; முகப் பகுதியானது 14 எலும்புகளாலும்; தாடைப் பகுதி 2 எலும்புகளாலும் ஒவ்வொரு காதுப் பகுதியும் 3 எலும்புகளாலும் ஆக்கப்பட்டிருப்பதாக, விஞ்ஞானிகள் வெளிப்படுத்திக் காட்டுகின்றார்கள்.

14 எலும்புகளாலும், 30 தசைத்துண்டுகளாலும், ஆக்கப்பட்டிருப்பதுதான் முகமாகும். அந்த 30 தசைத் துண்டுகளிலே, சில தசைத் துண்டுகள் ஒரு அங்குலத்திற்கும் சிறிய அளவிலே உள்ளன. ஒரு சிறு துண்டின் நீளமானது 2.5 செ. மீட்டருக்கும் குறைவாகக் கூட இருக்கிறது. இப்படிச் சிறு சிறு துண்டுகளாக முகத் தசைகள் இருப்பதால்தான், முகத்திலே ஏற்படுகிற அசைவுகள் யாவும் அக உணர்வுகளின் பாவங்களை, அருமையாக வெளிப்படுத்திக் காட்டுகின்றன.

மிருகங்களின் முகத்திலே பாவங்கள் ஏன் வெளிப் படவில்லையென்றால், அவைகளின் முகமானது, நீளமான தசைகளால் அமையப் பெற்றிருப்பதால்தான். நீளத் தசைகளில் நெகிழ்ச்சி இல்லாததும் ஒரு காரணமாகும்.

இப்படி 14 எலும்புகளாலும், 30 தசைத் துண்டுகளாலும் ஆக்கப்பட்டிருக்கும் முகத்திற்குப் போர்வைபோல அமைந்திருப்பது தான் தோல் ஆகும்.

தோலானது உடலின் உள்ளுறுப்புக்களைக் காக்கிற கவசம் போன்றது. முக அழகைப் பற்றி, நாம் தெரிந்து கொள்வதற்கு முன், தோல் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் நாம் கட்டாயம் தெரிந்து கொண்டாக வேண்டும்.

தோல்:

தோல் என்றாலே அழகு என்றுதான் அர்த்தம். இது எட்டு வகை வனப்பினுள் ஒன்று என்று மேம்படுத்திப் பேசுவாரும் உண்டு.

அற்புதமான ஐம்புலன்களில், தோலும் ஒன்று, உலகைப் பற்றிய உண்மைநிலையை உணர்ந்து கொள்ள உதவும் உன்னதமான அறிதற் கருவியாகும்.

உயிர் வாழ்கிற தடைவேலி (Living Barrier) என்று தோலினைப் புகழ்வார்கள். இது ஒரு அழகான காப்பு. மேலுறை (Leather Jacket) என்றும் கூறுவார்கள்.

உடம்பைக் காக்கிற கவசம் என்பதோடு மட்டும் கூறாமல், அதன் எடை பற்றியும் அளவு பற்றியும் கூட ஆய்வறிஞர்கள் கண்டறிந்திருக்கின்றார்கள்.

சராசரி ஒரு மனிதனுக்குரிய தோலின் எடை 6 பவுண்டாகும். அதாவது 2.7 கிலோகிராம் ஆகும். இதன் எடை அளவானது ஒரு சராசரி மனிதனின் மூளை எடையை விட, இரண்டு மடங்கு அதிகமாகும். மனித மூளையின் எடை 3 பவுண்டாகும்.

இதனுடைய பரப்பளவு 18 சதுர அடியாகும். (1.7மீ)

தோலானது, உடலின் ஒவ்வொரு உறுப்பையும். மூடி மறைத்து வெளியுலகத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுகிறது. அது ஒரு வலிமை வாய்ந்த நீர்க்காப்புக் கவசமாக (Water Proof Wrapping) செயல்படுகிறது.

குளிருக்கும் வெப்பத்திற்கும் ஈடு கொடுத்துக் காக்கின்ற இணையற்ற கேடயமாகப் பயன்படுகிறது. இறுக்கிப் பற்றிக் கொண்டு உறுப்புகளுடன் தோலானது படிந்திருந்தாலும். எந்தத் திசைப் பக்கமாக உறுப்புக்கள் இயங்க வேண்டுமானாலும், எளிதாக விடுவித்து இயக்கத்திற்குத் தடையூட்டாமல், தாராளமாக உதவுகின்ற சிறப்பம்சம் கொண்டு விளங்குகிறது.

இதனுடைய முக்கியமான கடமையே பாதுகாப்புத் தருவதுதான் என்றே கூறிவிடலாம். குளிரிலிருந்து காக்கிறது. வெப்பத்திலிருந்து விடுவிக்கிறது. அடிக்கும் காற்றில், தூவி விழுகின்ற தூசியில், அதில் பதுங்கிப் பாய்ந்து வருகின்ற கிருமிகளில் இருந்தும் காக்கிறது.

உடலின் உள்ளே உணர்ச்சி பூர்வமாக, உற்சாகமாக ஒருமித்த செயல்பாடுகளுடன் இயங்கி வருகின்ற உள்ளுறுப்புகளுக்கும், அதே ரீதியில் இயங்குகின்ற ஐம்பூதங்களின் அளப்பறிய ஆற்றல்களுக்கும் இடையிலே தடுப்பாக (தோலானது) இருந்து எடுப்பாகவே செயல்பட்டுக் காக்கின்றது.

இப்படி எடுப்பாக, சோர்வு இல்லாமல் செயல் படுவதற்காகத் தோலானது, மூன்று பகுதிகளாகப் பிரிந்து கொள்கின்றது.

மனித தேகத்தில் அதிகமாகவும், விரைவாகவும் வளரக்கூடிய ஆற்றல் தோலுக்குத்தான் உண்டு.

1. வெளிப்புறத்தோல் (Epidermis) மென்தோல்

2. உட்புறத் தோல் (Dermis) மெய்த்தோல்

3. அடிப்புறத்தோல் (Subcutaneous layer)

1.வெளிப்புறத்தோல்:

வெளிப்புறத் தோலை மென்தோல் என்பார்கள். இந்தப் பரப்பில் மரிக்கும் தோல் செல்கள் (Dead Skin Cells) இருக்கின்றன.

நாள் ஒன்றுக்கு மில்லியன் கணக்கான செல்கள். தோலின் மேற்பகுதியிலிருந்து உதிர்ந்து போகின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல. புதிய செல்களாக வந்து தோலின் பாரம்பரியத் தன்மையைப் புதுப்பித்துக் கொள்வதும் அன்றாடம் நடைபெறுகிற ஆச்சர்யமான காரியமாகும்.

இந்த மேற்புறத் தோலிலே. உள்ள கெராட்டின் (Kerotene) எனும் கெட்டியான உயிர்ச்சத்துப் பொருளால்தான். வெளிப்புறத் தோலில் மேலே முடிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் கெராட்டின் சத்துதான் தோலைப் புதுப்பித்து ஈரப்பதத்தைக் காத்துக் கொண்டும் பணியாற்றி வருகிறது.

கெராட்டின் சத்துப் பொருள்தான், தோலை கடுமையானதாக உருவாக்கி உள்ளேயிருக்கும் இரத்தக் குழாய்கள், நரம்புகள், எலும்புகள் போன்றவற்றைக் காத்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காலின் உள்ளங்கால் தோலினைக் (Soles) கூறலாம்.

மேற்புறத்தோலில் சிறுசிறு நுண்துளைகள் உண்டு. இவற்றை மயிர்க்கண் என்றும் கூறுவார்கள். உடம்பின் உள்ளேயிருந்து ஊறி வருகின்ற வியர்வை போன்ற திரவத்தை வெளியேற்ற உதவுகின்ற வடிகாலாகவே இவை அமைந்திருக்கின்றன.

2. உட்புறத்தோல்:

உட்புறத்தோல் அமைப்பை ஆங்கிலத்தில் Dermis என்பார்கள். இதில்தான் இரத்தத் தந்துகிகள். அதாவது சிறுசிறு நுண்மையான இரத்தக் குழாய்கள் இருந்து தோலுக்கு இரத்தத்தை ஏந்திக் கொண்டு வருகின்றன. இந்தப் பரப்பில்தான் நரம்புகளும் இருக்கின்றன.

இந்த நரம்புகள், வெளிப்புறத்தால் ஏற்படுகின்ற உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்கின்றன. வெளியுலகில் ஏற்படுகிற வெப்பம் குளிர்; உடலில் ஏற்படுகின்ற தொடு உணர்வு படு உணர்வு. வலி, வேதனை, இதம் போன்றவற்றை மூளைக்கு எடுத்துச் செல்லும் முக்கியமான பணிகளை மேற்கொண்டிருக்கின்றன.

இந்த உட்புறத்தோலின் பரப்புகளில்தான் வியர்வைச் சுரப்பிகள் தோலுக்கு அடியில் இருக்கின்றன. அங்கே, முடி முளைக்கின்றன மூட்டுப் பைகளும் (Follicles) உண்டு.

இதற்கும் கீழே கொழுப்புச் சுரப்பிகள் இருக்கின்றன. இவற்றை மயிர்ப்பை நெய்மச் சுரப்பி (Sebaceous glands) என்பார்கள். இச் சுரப்பிகள் எண்ணெய் போன்ற திரவத்தைச் சுரப்பதால் அது மயிர்களுக்கும் தோலுக்கும் உதவும் வகையில் அமைந்து தோலின் மென்மைக்கும், நெகிழ்வுத் தன்மைக்கும் ஆக்கபூர்வமான பணிகளை ஆற்றுகின்றன.

3. அடிப்புறத்தோல்:

அடிப்புறத்தோல் பகுதியானது. கொழுப்பால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொழுப்புப் பொருளானது தசைகளுக்கும், எலும்புகளுக்கும், மற்றும் உள்ளுப்புகளுக்குப் பாதுகாப்பாக அமைந்திருக்கின்றது.

இதுவே உடம்பை வெப்பமுள்ளதாக வைத்திருக்க உதவுகிறது. தோலுக்கு அடியிலுள்ள கொழுப்பானது சக்தியை கொடுத்துக் கொண்டிருப்பதுடன், தேவையான போது எரிந்து, அதிக சக்தியையும் அளிக்கிற சூழ்நிலையையும் உண்டாக்கித் தருகிறது.

தோலைப்பற்றி இப்படி விரிவாகவும் விளக்கமாகவும் எழுதுவதற்குக் காரணம் என்னவென்றால், உடல் முழுதும் பரந்திருக்கிற தோல்பகுதிதான் முகத்திலும் மூடியிருக்கிறது.

உடலைச் சுற்றியுள்ள தோலுக்கும், முகத்தை மூடியிருக்கிற தோலுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசம்தான் முக அழகை நிறைவாக்கிக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால் முகத்தோல் பற்றிய சூட்சமத்தை அடுத்துத் தெரிந்து கொள்வோம்.