முக அழகைக் காப்பது எப்படி/முக அழகு மூன்று விதம்

விக்கிமூலம் இலிருந்து
5. முக அழகு மூன்று விதம்

ஒவ்வொருவர் உடலின் உள்ளேயும் 37 டிகிரி செல்சியஸ் அளவு உஷணம் வியாபித்துக் கிடக்கிறது.

அந்த அளவு உஷணம் அதிகமாகிப் போனாலும். அல்லது குறைந்து போனாலும், உடல் தனக்குரிய உன்னதமான பணியை செய்ய முடியாமல் திணறிப் போய்விடும். அந்தத் திணறலுக்குப் பெயர்தான் வியாதி. நோய்.

நோய் என்றால் என்ன பொருள்?

மனதின் ஆசைக்கும் வேகத்திற்கும் ஈடுகொடுக்க முடியாமல், உடல் ஸ்டிரைக் செய்கிறது. அதாவது வேலைநிறுத்தத்தை மேற்கொள்கிறது என்பதே அர்த்தம்.

ஆகவேதான். ஒழுக்கத்துடன் வாழ்கிற ஒழுங்கான வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும், என்ற கட்டாயத்திற்கு அனைத்து மனிதர்களும் ஆட்பட்டிருக்கின்றார்கள்.

அந்த உஷ்ணத்தின் அளவு காக்கும் அற்புதக் காரியத்தைத்தான், தோல் எனும் உறுப்பு. சீராகச் செய்து காக்கிறது.

சுற்றுப்புறம் குளிராக இருக்கிறபோது. தோல் பகுதியானது உடல் மேற்பகுதியில் சிறு புடைப்பை (Bump) உண்டுபண்ணி விடுகிறது. அப்பொழுது, தோலின் மேற்புறத்தில் இருக்கின்ற முடிகள் எல்லாம் நிலைக்குத்தி நின்று, தோலுக்கடியில் உள்ள காற்றை உடலானது வெப்பப்படுத்திவிட அதுவே குளிரிலிருந்து காத்து வெப்பப்படுத்துகிறது.

தோலுக்கு அடியில் உள்ள இரத்தக் குழாய்கள் இறுக்கம் பெற்று. இரத்தமானது வெப்பத்தை இழந்து போகாமல் காக்கிறது.

அதேபோல் உடலானது வெப்பத்தில் இருக்கிற சமயத்தில், இரத்தக் குழாய்கள் விரிவடைந்து கொண்டு. வெப்பத்தை வெளியேற்றுவதால் வியர்வை ஏற்பட்டு தோலின் நுண்மையான துவாரங்கள் வழியே வெளியேற்றி. வெப்பத்தைக் குறைத்து விடுகிறது.

இதுதான் தோலானது தேகத்திற்குச் செய்கிற பாதுகாப்புப் பணிகள் ஆகும். இந்த முறைதான் முகத்திற்கும் பொருந்தும் என்பதால்தான். தோலின் மகிமையை மேலும் விரிவாக இங்கே குறித்துக் காட்டினோம்.

ஒவ்வொருவரின் உடல் நலத்திற்காகவும். தோலானது மிகவும் சிரத்தையுடன் மிகுந்த சிரமத்துடன் செயலாற்றி வருகிறது என்று முன்னரே கூறியிருந்ததை இங்கே நினைவு படுத்துகிறோம்.

ஆகவே, உங்கள் கடமை என்னவென்று யோசித்தால், அந்த அற்புதப் படைப்பான தோல் பகுதியை ஆர்வத்துடன் பார்த்துக் கொள்வதும் தலையாய கடமை என்றே தோன்றிவிடும்!

தோலின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் பாதுகாத்துக் கொண்டு பராமரிப்பது அன்றாடம் செய்ய வேண்டிய அவசியப் பணியாகும்.

அதிகமாக காய்கறி உணவு பழவகைகளை உட்கொள்வதும். தினந்தோறும் தேகப் பயிற்சிகள் தொடர்ந்து செய்து வருவதும். வேண்டிய அளவுக்கு உயிர்க்காற்றை சுவாசித்து விடுவதும் தேவையான நேரம் தூங்கி எழுவதும், நல்ல தோல் அமைப்பை உண்டாக்கும். உருவாக்கும்.

நலம் காக்கும் தோல் பகுதியுடன் யாருமே உலகத்தில் பிறக்கவில்லை. பிறப்பில் இல்லை. யார்யார் தோலின் மேல் அக்கறை கொண்டு. கவனத்துடன் பராமரிப்புக் காரியங்களைப் பக்குவமாகச் செய்கின்றார்களோ, அவர்களே அழகாகத் தோன்றுவார்கள். கவர்சிகரமாக விளங்குவார்கள்.

உடல் முழவதும் பரந்திருக்கும் தோலினைப் பாதுகாக்க சுகமான முறைகள் உண்டு.

ஒவ்வொரு நாளும் தோலின் மேற்பரப்பை தூசியும் கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளும் அழுக் கடைந்த பொருட்களும் தாக்கிக் கொண்டிருக்கின்றன.

அவற்றைக் கழுவி அகற்றாவிடில் தூசிகள் அழுக்காக மாறும் அழுக்குகள் பிசுக்காக ஒட்டும். பிசுக்குகள் கசடுகளாகிப் போகும். கசடுகள்தான். பல கஷடங்களையும் உண்டாக்குகிற கொடிய சக்திகளாய் உருக்கொள்கின்றன.

ஆகவேதான். அழுக்குகளைக் கழுவி தோலைத் தூய்மைப்படுத்துகின்ற செயலை தினந்தோறும் செய்யவேண்டும். அதாவது கட்டாயம் செய்தாக வேண்டும்.

உடலின் மேல் பரப்பில் தினம் தினம் மடிந்து போகிற செல்களை அப்புறப்படுத்தவும் தோலின் மேற்பரப்பில் உள்ள துவாரங்களை அடைத்துக் கெடுக்கிற அழுக்குகளை தூய்மைப்படுத்தவும். காற்றில் கலந்து தோலில் படிகின்ற மாசுகளை எண்ணெய் பசை போன்றவைகளை நீக்கவும் தினம் குளிப்பதால் முடிகிறது.

அதனால்தான் காலையில் குளிக்கும் பழக்கம் வேண்டும். முடிந்தவரை மேற்பரப்பைக் கழுவித் துடைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவாளர்கள் கூறுகின்றார்கள்.

இத்தனை காரியங்களுக்கும் மேலாக முகத்திற்கும் செய்ய வேண்டும் என்பதைத்தான் நீங்கள் முக்கியமானதாக கருத்தில் கொள்ள வேண்டும்.

உடலில் உள்ள தோலுக்கும் முகத்தில் உள்ள தோலுக்கும் ஒரு நுண்மையான வேற்றுமை உண்டு.

முகத்தை மூடியிருக்கும் தோல் மென்மையானது. உடல் முழுதும் உள்ள தோல் பரப்பை விட நுண்மையானது. புலன்களுக்கு இனிமையானது.

எப்படி? ஐம்புலன்களின் சங்கமமே அங்குதானே குடிகொண்டிருக்கின்றன.

கண், காது, மூக்கு, வாய், தோல் என ஐந்து பிரிவுகளும். முகத்தில் அழகு படைக்கும் அவயவங்கள்தானே!

இப்போது நாம் மொத்தமாக முக அழகு பற்றி பார்ப்போம்.

முகப் பகுதியில் உள்ள தோலானது மென்மையானது. நுண்மைத் தன்மை கொண்டது என்று கூறினோம் அல்லவா!

அந்தத் தோல் பகுதியானது சீக்கிரமாக உலர்ந்து போய் விடும். ஏனென்றால் முகமானது மறைக்கப்படாமல் முழுநாளும் வெளியிலும் வெய்யிலிலும் காய்கிறதல்லவா!

ஆகவே, முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறையேனும் கழுவிக் கொள்வது சிறந்தது. இரண்டு முறைக்கு மேல் என்றால் அவ்வளவு நல்லதல்ல என்பது உடற்கூறு வல்லுநர்களின் அபிப்பிராயமாகும்.

முகப்பகுதியை எப்படிக் கவனிக்க வேண்டும் என்பதற்கு முன்பாக, முகத்தை மூடிய தோல் பகுதியானது மூன்று விதமாக அமைந்திருக்கிறது என்பதை நாம் அறிந்து கொண்டாக வேண்டும்.

எப்படி மூன்று பிரிவாக பிரிந்து கொள்கிறது. என்றால், முகத்திலே தோலுக்கு அடியில் உள்ள கொழுப்புச் சுரப்பிகள் எந்த அளவுக்குச் சுரக்கிறதோ அந்த அளவுக்குத்தான் முகத்தின் தோல் அமைந்திருக்கும்.

காக்கும் சுரப்பிகளின் பெயர் மயிர்ப்பை கொழுப்புச் சுரப்பி (Sebaceous Glands) அதாவது தோலுக்கு அடியில் அமைந்திருக்கும் குறிப்பிட்ட சில தோல் சுரப்பிகள். அவை சுரக்கின்ற சுரப்பானது கொழுப்பு போன்ற திரவம். பாதியளவு கொழுப்புத்திடம் கொண்ட ஒருவித திரவம். அது எண்ணெய் போன்று இருக்கும் தன்மை கொண்டது. இனி அந்த மூன்று வகை முக அம்சத்தைப் பார்ப்போம்.

1. வறட்சியான முகம் (Dry Skin)

முக அமைப்பைக் காட்டும் தோலானது, கொழுப்புத் திரவமானது கொஞ்சம் கூட முகத்தில் இல்லாமல் வறண்டு போய் உலர்ந்த மாதிரி வறட்சியாகத் தோன்றும் தன்மையில் இருப்பது.

ஏனென்றால். அந்தக் கொழுப்புத் திரவமான எண்ணெய் பசையுள்ள வளம் இல்லாமல் போய் இருப்பதுதான். அப்படி இருப்பதனாலேயே. அது சூரிய ஒளியால் பாதிக்கப்படுகிற தன்மை கொண்டதாக விளங்குகிறது.

ஆகவே, அப்படிப்பட்ட தோல் வறட்சியை ஈரப்பசையுள்ளதாக ஆக்கிக் கொண்டாக வேண்டும். எந்தெந்த முறையில் செய்து கொள்ளலாம் என்பதை அதற்குரிய ஆக்கபூர்வமான முறையை விளக்கும் பகுதியில் காணலாம்.

2. எண்ணெய் வழியும் முகம் (Oily Skin)

எண்ணெய் வழியும் தோற்றத்தை அளிக்கும் கொழுப்புச் சுரப்பிகள், கொஞ்சம் கூடுதலாக கொழுப்புத் திரவத்தைச் சுரந்து விடுவதால் ஏற்படுத்துகிற கோலம்தான் இது.

இந்த எண்ணெய் பசை, தோல் பகுதியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்கிறபோது பளபளத்து மினுமினுக்கும் தன்மை உடையதாகவும் மாறிவிடுகிறது.

முகத்தில் அதிகமான எண்ணெய் பசை ஏற்படும் இடங்களில் குறிப்பிடப்படும் உறுப்புகள் நெற்றிப் பகுதியின் மையப்பரப்பு, மூக்குப் பகுதி மற்றும் தாடைப்பகுதி (Chin). அதற்கான காரணம் என்னவென்றால் அதிகமான மயிர்ப்பை கொழுப்புச் சுரப்பிகள் அங்கேதான் இருக்கின்றன.

3. வறட்சியுடன் எண்ணெய் வழியும் முகம்

முற்றிலும் வறட்சியான தோலமைப்பு கொண்ட முகம் ஒருவகை; முற்றிலும் எண்ணெய் பசைகொண்ட முகம் இன்னொருவகை. இது இரண்டும் கலந்ததாகக் காணப்படும் தோல் அமைப்பு கொண்ட இரண்டுங் கெட்டான் முகமாகும்.

இந்த வகை முகத் தோற்றத்தில் தோலின் அமைப்பானது எண்ணெய் பசையுடன் திட்டுத் திட்டாகத் தோற்றம் அளிக்கும். அத்தகைய திட்டுகள் முகத்தின் மையப்பரப்பு. நெற்றி, தாடைப் பகுதி. மூக்குப் பகுதி சுற்றியும் அமைந்திருக்கும்.

முகத்தின் மற்ற பகுதி முழுவதும் வறட்சியாகவே தோன்றும். இப்பகுதியினை எப்படி சமாளித்து சரிசெய்வது என்கிற குறிப்புகளை ஒப்பனை என்ற பகுதியில் காணலாம்.