உள்ளடக்கத்துக்குச் செல்

முடியரசன் தமிழ் வழிபாடு/024-049

விக்கிமூலம் இலிருந்து

24. செந்தமிழ்ச் செல்வி


கேளார் தமிழ்மொழி கேடுறச் சூழ்ந்திடுங்
          கீழ்மதியை
வாளால் அரிந்ததன் வேரைக் களைந்துநம்
          வண்டமிழைத்
தாளால்[1] வளர்த்தனை; தண்புனல் வார்த்தனை;
          நின்குறிக்கோள்
சூளாக் குறித்தனை தொண்டுசெய் கின்றனை
          தூமொழியே.

செல்வியுன் தாளிற் சிலம்பும் பரலும்
          செவிகுளிர
நல்கிடும் அவ்விசை நாள் முழு தும்பெற
          நாடுகின்றோம்;
மெல்விரல் நீவி மிழற்றிய யாழொலி
          போலஇதழ்
சொல்லிய பாடலிற் சொக்கிநின் றேஉனைச்
          சுற்றுதுமே.

நடைஎழில் காட்டுவை, நல்லறி வூட்டுவை,
          நாண்மலரால்
தொடை எழில் காட்டுவை, தோகையுன் சாயலில்
          தோய்ந்துணரார்
உடைஎழில் ஒன்றே உவந்தன ராகி
          உணர்விலராய்க்
கடைவழி ஏகுவர் காரிகை உள்ளெழில்
          காண்கிலரே.

புகழ்மலை உச்சியில் போற்றிட வாழ்ந்தவர்
          பூவுலகில்
இகழ்நிலை எய்தினர் எம்மவர் என்றுளம்
          ஏங்குகையில்
தகவுடன் மீண்டுந் தலைநிமிர்ந் தோங்கிடத்
          தாளெடுத்தே
அகவிடுந் தோகையென் றாடவந் தாயெங்கள்
          ஆரணங்கே.

முந்தையர் தந்தநன் னுால்மலர் மொய்த்ததன்
          தேனருந்திச்
சந்தனத் தென்மலைச் சாரலின் செந்தமிழ்
          தந்தநலம்
சிந்தையுள் தேக்கிநற் செல்வழிப் பண்தரும்
          தும்பியென
வந்திடுஞ் செந்தமிழ்ச் செல்விபல் லாண்டுகள்
          வாழியவே.

[தாய்மொழி காப்போம்]

  1. தாளால்-முயற்சியால்