உள்ளடக்கத்துக்குச் செல்

முடியரசன் தமிழ் வழிபாடு/023-049

விக்கிமூலம் இலிருந்து

23. தமிழன்னை பிள்ளைத்தமிழ்
(காப்புப் பருவம்)
(பன்னிருசீர் விருத்தம்)


உலகினில் முதன்முதல் நிலவிய மொழியெனும்
          உரைபெறுந் திருமகளாம்
உயர்தனி மொழியென அயலவர் புகன்றிட
          ஒளிதரு செம்மகளாம்.
அலைபல எதிரினும் நிலைபெறும் கலைமகள்
          அமுதெனும் மொழியினளாம்
அழகிய கழகமொ டுலவிய தமிழ்மகள்
          அணிநலம் புரந்திடவே

கற்பார் மனத்துணர்வை நற்பா படைத்துவளர்
          கவிவாணர் அடிப்பூவையும்
கனலால் எரிந்துசிறை புகலால் மடிந்துமொழி
          கருகாது வளர்த்தோரையும்
விற்போர் தொடுத்ததெனச் சொற்போர் நடத்திஉரம்
          விளைவாக உழைப்போரையும்
விதிரா மனத்துணர்விற் புதிதாய்த் தழைத்துவரும்
          விழைவோடு தொழுதேத்துவாம்.

மற்போர் புரிந்துநம திப்பார் புரந்தவரின்
          மடிமீது வளர்ந்தமகளை
மருவார் பகைத்தருகில் வருவார் பதைத்துவிழ
          மலைபோல நின்றமகளை
முப்பா லருந்திநலம் தப்பா திருந்தவளை
          முதலாக வந்தமகளை
முதிரா நலத்திளமை அதிரா தெடுத்துவரும்
          மொழியாளைப் புரந்தருளவே.

[தாய்மொழி காப்போம்)]