முடியரசன் தமிழ் வழிபாடு/026-049

விக்கிமூலம் இலிருந்து

26. நானொரு குழந்தை


குடும்பம் எனக்கோர் நடைவண்டி - நல்ல
          கொள்கை வெறிதான் தொடர்வண்டி
இடும்பை தவிர்த்திடும் முப்பாலே - என்னை
          இனிதே வளர்த்திடும் தாய்ப்பாலாம்.

ஆயும் மொழியே சிறுகோலி - அதனை
          அறிவால் தெறிப்பேன் குழிகோலி
பாயும் குழியோ கவியாகும் - ஆடல்
          பார்த்து மகிழ்வது புவியாகும்.

பாமலர் என்றன் மழலைமொழி - பாட்டில்
          பாவும் பொருளே குவளைவிழி
மாமழை வானந் தவழும்வழி - அங்கே
          மதியம் உருள்பந் தெனதுவழி.

காவியம் என்றன் மணல்வீடு - பொங்கும்
          கற்பனை யதுதான் சிறுசோறு
வாவினி அம்மா மகிழ்வோடு - நெஞ்சின்
          வாழை விரிப்பேன் பரிவோடு.

உலகின் நிலையே தெரியவிலை - அங்கே
          உண்மையும் பொய்யும் புரியவிலை
அலகில் விளையாட் டாடிவேன் - என்னோ
          டாரும் வரவிலை கூடிடவே.

உள்ளஞ் சுடுசொல் பொறுப்பதிலை - சொன்னால்
          உடனே அழுவேன் வெறுப்பதிலை
கள்ளங் கவடந் தரிப்பதிலை - நீயேன்
          கனிவாய் மலர்ந்தே சிரிப்பதிலை?

அழுக்கா றாசை வெகுளியெனும் - நெஞ்சின்
          அழுக்குகள் யாவுங் கழுவினை நீ
இழுக்கா மானம் அருளறிவு - அணிகள்
          எத்தனை எத்தனை அருளினை நீ!

நின்னருள் மாமழை பொழிந்திடுவாய் - நானும்
          நீங்கா ததனுள் நினைந்திடுவேன்
என்னுயிர் நீதான் தமிழம்மா - என்னை
          எடுத்தொரு முத்தம் அருளம்மா.

[பாடுங்குயில்]