முடியரசன் தமிழ் வழிபாடு/034-049
Appearance
தனிமையில் உழலு கின்றேன்
தளர்ச்சியும் உடலிற் கொண்டேன்;
எனினுமுன் நினைவால் நெஞ்சில்
எழுச்சிமீக் கூர்தல் கண்டேன்.
கனிவுடன் அம்மா என்றன்
கற்பனைத் தேன்நி றைந்த
தனிமலர் தூவி நின்றன்
தாள்மலர் வாழ்த்து கின்றேன்.
இடர்பல சூழ்ந்த போதும்
என்னுடல் தளர்ந்த போதும்
மிடியெனைத் தின்ற போதும்
விழியொளி குறைந்த போதும்
கடமையில் தவறேன் அம்மா;
கனிந்துனைப் பாடிப் பாடி
இடுபணி புரித லன்றி
இனியெனக் கென்ன வேலை?
[நெஞ்சிற் பூத்தவை]