முடியரசன் தமிழ் வழிபாடு/035-049
Appearance
ஆடகக் குழைகள் ஆட
அடியினிற் சிலம்பும் ஆடப்
பாடமை வளைகள் ஆடப்
பையமே கலையும் ஆடக்
கூடெழில் மணிகள் ஆடக்
குலவியே எனது நெஞ்சுள்
நாடகம் ஆடும் நங்காய்
நற்றமி ழன்னாய் வாழ்க
முதுமைவந் துற்ற போதும்
முழுவலி யற்ற போதும்
கதுவுபல் பிணிகள் பற்றக்
கலங்கியே நின்ற போதும்
எதுதுயர் நேர்ந்த போதும்
எவர்பழி செய்த போதும்
புதுமையோ டிளமை பூண்டு
பொலிவுடன் ஆடு கின்றேன்
உற்றுளே கலந்து நீயென்
உயிருடன் உறைத லாலே
கற்றவன் போல யானும்
களிநடம் ஆடு கின்றேன்
குற்றமொன் றுறுமேல் நின்றன்
குறையலால் என்பா லில்லை
சற்றுநீ விழித்து நின்பின்
சாருமோ குற்ற மிங்கே
[இளம்பெருவழுதி]]